பார்ப்பனரல்லாதார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்ப்பனரல்லாதார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மே 9

பார்ப்பனரல்லாதார் சாதி இந்துக்களாக மாறிய கதை - வ.கீதா



டிசம்பர் 1917இல் பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியானது. இந்திய தேசிய இயக்கத்தின் ஒரு பிரிவாக அன்னி பெஸண்டின் தலைமையில் செயல்பட்ட ஹோம்ரூல் லீக் வெகுவீரியமாக இயங்கிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. இந்திய தேசியம் தொடர்பான சொல்லாடல்கள், குறிப்பாக இந்து சமுதாயத்தின் பழம் பெருமை பற்றிய பேச்சு தீவிரமாக முன்னெக்கப்பட்ட தருணம். இந்த சூழ்நிலையில் தான் பார்ப்பனரல்லாத சமுதாயங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் ஒன்றிணைந்து மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டனர். அறிக்கை வெளியானதை தொடர்ந்து 1917 ஆம் ஆண்டு முழுக்க சென்னை மாகாணம்தோறும் பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் கூட்டப்பட்டன. இந்திய தேசியம் குறித்த ஆழமான விமர்சனங்களை இந்த மாநாடுகளில் பேசியவர்கள் முன்வைத்ததோடு, வகுப்புரிமையின் தேவையையும் வலியுறுத்திப் பேசினர்.

சாதிகளாக பிரிந்திருக்கும் இச்சமுதாயம் எவ்வாறு ஒரு தேசமாக அமையமுடியும் என்ற கேள்வியை எழுப்பியதுடன் சாதிகளுக்கிடையே சமத்துவம் ஏற்பட்டாலொழிய இந்திய தேச உருவாக்கம் என்பது பார்ப்பனர்களின் நலத்தையும் மேலாண்மையையும் காப்பாற்றும் தேசியமாகத்தான் இருக்கும் என்றும் இவர்கள் கருத்துரைத்தனர்.  பண்டித அயோத்திதாசர் தான் இத்தகைய சிந்தனைகளை தமிழ் பொது சமுதாய வெளியில் முதன்முதலில் முன்வைத்தார். அவர் ஆசிரியராக இருந்து நடத்திய தமிழன் இதழில் சுதேசிய சீர்த்திருத்தம் என்ற தலைப்பில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவந்தார். திலகரின் தலைமையில் உருவாகியிருந்த தீவிர இந்திய தேசியத்தை குறித்த ஆழமான விமர்சனங்களை இக்கட்டுரைகள் உள்ளடக்கியிருந்தன. அவர் எழுதத்தொடங்கி 10 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருத்துகள் பொருளாதார, அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த பார்ப்பனரல்லாத சமுதாயங்களை சேர்ந்தவர்களால் அரசியல்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இவற்றை பரப்புரை செய்தவர்கள் அனைவரும் செல்வாக்குடையவர்களாக இருக்கவில்லை.

அறிவுத்தளத்திலும் அதிகார உலகத்திலும் பார்ப்பனர்கள் செலுத்திவந்த ஆதிக்கம், அதனூடாக வெளிப்பட்ட அறிவுதிமிர், சமத்துவத்தைமறுக்கும் மனப்பாங்கு, பிறரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக்கொண்டு அத்தகைய வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தேடிக்கொண்ட மேன்மை ஆகியவற்றை கண்டு சினமுற்ற பலருக்கும் - தலித்தலைவர்கள், சிந்தனையாளர்கள் பலருக்கும் – பார்ப்பனரல்லாதார் இயக்கம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. (தலித்துகளின் பங்கேற்பு, அவர்கள் நாடிய சமத்துவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர மறுத்தால் பார்ப்பனரல்லாத இயக்கத்தின் அடிப்படையான ஜனநாயக கொள்கைகள் சீர்க்கெட்டுப்போகும் என்று எம்.சி. ராஜா போன்ற தலித்தலைவர்களும் ஓ. கந்தசாமி செட்டி போன்ற தலித் அல்லாத அறிவாளர்களும் அன்றே எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.)

இன்றைக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் ஆகியுள்ள சூழ்நிலையில் பார்ப்பனரல்லாதார் என்று இனியும் பேசுவதில் நியாயமிருக்க முடியுமா என்ற கேள்வியை பலர் எழுப்பிவருகின்றனர்.  100 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய கேள்விகளை எழுப்பியவர்கள் பார்ப்பனர்களின் மேலாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டதை சகிக்கமாட்டாது பார்ப்பனரல்லாதார் இயக்கம் பேசிய நியாயங்களையும் விமர்சனங்களையும் எள்ளி நகையாடினர். இன்றோ தலித் அறிவாளர்கள் இந்த கேள்வியை எழுப்பி வருகின்றனர். பார்ப்பனரல்லாதார் நலம், உரிமைகள் என்று பேசிக்கொண்டு சாதி இந்துக்களின் மேலாதிக்கத்தை தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் நிறுவியுள்ளது என்று இவ்வறிவாளர்கள் வாதிடுகின்றனர். குறிப்பாக 1967இல் தொடங்கி இன்று வரை நடைபெற்றுவரும் திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலங்கள் இத்தகைய மேலாதிக்கத்துக்கான அரசியல், பொருளாதார அடிப்படைகளை உருவாக்கியுள்ளன என்றும் இவர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய விமர்சனம் முன்வைக்கப்படுவதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை.  காலம் கிளர்த்தியுள்ள வரலாற்று மாற்றங்கள் பார்ப்பனரல்லாத சாதிகளின் பொருளாதார பலம், சமூகத்தகுதி, பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பார்ப்பனர்களின் மேலாண்மையில் சிற்சில சேதாரங்கள் ஏற்பட்டிருப்பினும், அவர்களின் ஆதிக்கமானது பலநிலைகளில் இன்றுமே தொடர்கிறது. குறிப்பாக மதம், உயர்கல்வி, ஊடகத்துறை, மத்திய அரசுநிர்வாகம், வங்கித்துறை, தனியார் துறை – நமது பொருளாதார, பண்பாட்டு வாழ்வில் தீர்மானகரமான பங்கு வகிக்கும் துறைகளில் அவர்கள் தொடர்ந்து செல்வாக்கு செலுத்திவருகின்றனர். அதேசமயம், அவர்களின் மேலாண்மைக்கு சவால் விடுத்து அவர்களின் சாதி ஆணவத்தைச் சாடிய பார்ப்பனரல்லாத அறிவாளர்கள் சார்ந்திருக்கும் சமுதாயங்களும் சுதந்திர இந்தியாவின் அரசியல், பொருளாதார வாழ்வில் முக்கிய பங்காற்றவந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, நிலம், வர்த்தகம், அரசுநிர்வாகம், காவல்துறை, ஊடகத்துறை என்று எதை எடுத்துக்கொண்டாலும் இந்த சமுதாயங்களை சேர்ந்தவர்களின் பங்களிப்பும் அதிகாரமும் கூடியுள்ளன. குறிப்பாக இச்சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த அதிகாரமானது எல்லா பார்ப்பனரல்லாத சமுதாயங்களுக்கும் போய் சேரவில்லை என்பது உண்மைதான் என்றாலும்,  குறிப்பிட்ட சமுதாயம் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் அவர்களின் பிரதிநிதிகள் அரசியல் பலம் பொருந்தியவர்களாகவே இருக்கின்றனர்.

தலித் சமுதாயங்களை சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் ஒப்பீட்டளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அவர்கள் தனிப்பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்துள்ள நிலையிலும்கூட அவர்களின் இருப்புக்கும் உரிமைகளுக்கும் இன்றுமே சமூகத்தளத்தில் உத்திரவாதம் இல்லை. சட்டம் பேசும் உரிமைகளை மெய்யுலகில் செயல்படுத்த வருகையில் தலித்துகள் சந்திக்கும் சவால்களும் அவ்வுரிமைகளை நிலைநிறுத்த அவர்கள் மேற்கொள்ள வேண்டிய போராட்டங்களும் நாளுக்குநாள் கூடி வருகின்றனவேயொழிய குறைந்தபாடில்லை. அவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் அதிகரிக்க தலித்துகளின் உரிமைசார் செயல்பாடுகளே காரணங்களாக உள்ள அவலநிலையும் தமிழ்நாட்டில் தொடர்கிறது. பழைய தீண்டாமை வகைகள் ஆங்காங்கு குறைந்துள்ளபோதிலும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் கூடியுள்ளன. இன்னும் சொல்லப்போனால், பார்ப்பனரல்லாத சாதிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள், போட்டாபோட்டிகள் ஆகியன ஒருபுறம் இருந்தாலும், தலித் விரோத செயல்பாடுகள் என்ற இந்த ஒருபுள்ளியில் அவர்கள் இணையவே செய்கின்றனர்.  குறிப்பிட்ட பார்ப்பனரல்லாத சமுதாயத்திலுள்ள வர்க்க, வட்டார வேறுபாடுகளை சமன்படுத்தவும் ஈடுகட்டவும் இத்தகைய வன்செயல்களும் அவை முன்நிறுத்தும் சாதி பெருமித அரசியலும் உதவுகின்றன. 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்தல், சாதி மறுப்புத் திருமணங்களையும் காதல் உறவுகளையும் சாடுதல், அவற்றை சகிக்கமாட்டாது சம்பந்தப்பட்ட இளைஞர்களை துன்புறுத்தல், கொலைசெய்தல், தலித்துகளின் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்கமுடியாது அவர்களின் சொத்துகளை சூறையாடுதல் என்பன போன்ற செயல்களில் பார்ப்பனரல்லாத சமுதாயங்களை சேர்ந்தவர்களின் அரசியல், சமுதாய தலைமைகளாக தம்மை அறிவித்துக்கொண்டு செயல்படுபவர்கள் ஈடுபட்டு வருவதைக் காண்கிறோம். அவர்களின் அரசியல் தலைமையை ஏற்று சாதி பெருமிதங்களைக் காப்பாற்ற இச்சமுதாயங்களைச் சேர்ந்த வறிய பிரிவினரும் களம் இறங்குவதும் நடைபெற்று வருகிறது. இழப்பதற்கு சாதி அடையாளத்தைத் தவிர வேறு ஏதும் இல்லாத சூழ்நிலைதான் இவர்களை இவ்வாறு செயல்படவைக்கிறது – எல்லாவிதமான இயலாமைகளையும் ஈடுகட்ட சாதிப்பெருமிதம் கைக்கொடுக்கிறது.

தலைமைகள், கட்சிகளை கடந்து சமுதாய மனநிலையில் மாற்றங்களேஏ ற்படவில்லை என்று கூறிட முடியாது. மாற்றங்களுக்கான அறிகுறிகள்இருக்கவே செய்கின்றன – சாதி எல்லைகளைக் கடந்த தோழமை, காதல், அரசியல் இணைவு, அறிவுலகத்தில் நடைபெறும் சிற்சில உரையாடல்கள் என்று பலநிலைகளில் இவை தம்மை வெளிபடுத்திக் கொள்கின்றன. ஆனால் புதியதொரு அரசியல், சமுதாய இலக்கை நிர்ணயிக்க வல்லவையாக இம்மாற்றங்களை அடையாளப்படுத்தி, அத்தகைய இலக்கை நோக்கி சமுதாயத்தை நகர்த்தும் அரசியலோ சிந்தாந்தமோ இன்று இல்லை. சாதியை அழித்தொழிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்தால் மட்டுமே இத்தகை நகர்வு சாத்தியப்படும். ஆனால் திராவிட இயக்கமாக பரிணமித்து ஆட்சியதிகாரத்தை நோக்கிய நீண்ட பயணத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் இத்தகைய இலக்கை பற்றி சிந்திப்பதற்கான அரசியல் திண்மையையும் கற்பனையையும் இழந்துவிட்டது என்றே கூறவேண்டும்.

தமிழ் அடையாளம் என்ற செக்யூலர் புள்ளியில் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தமிழ்பேசும் மக்களையும் இணைப்பதில் அவ்வியக்கம் வெற்றிகளை கண்டது என்பது உண்மைதான். மேலும் "தமிழ்" அடையாளம் என்பது சாதி இழிவை அகற்றி தலித்துகளுக்கும் பிறருக்கும் புதிய மனித வார்ப்புகளை அளிக்கவல்லது என்று அயோத்திதாசர் உள்ளிட்ட பலரும் நம்பினர். தலித்துகள்தான் ஆதிதமிழர்கள் என்று அவர் அறுதியிட்டுக் கூறியதற்கான நியாயங்களை மொழியிலும் இலக்கியத்திலும் தான் அவர் தேடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுமே "தமிழ், தமிழர் நலம்" என்ற பொதுக்கோரிக்கையை கனமானதாக திருமாவளவன் உள்ளிட்ட தலித் தலைவர்கள் முக்கியமானதாக கருதுகின்றனர். 
ஆனால் இந்த செக்யூலர் அடையாளமானது சாதி எதிர்ப்பு என்ற உள்ளீட்டை முதன்மைப்படுத்தும் போதெல்லாம், அதற்கான நியாயங்களை பேசியபோதெல்லாம் சாதி தமிழர்களுக்கு அது ஏற்புடையதாக இருப்பதில்லை. சாதிக்கு அப்பாற்பட்டதாக மொழி, பண்பாட்டு அரசியல் அமையவேண்டும் என்று அவர்களின் தலைமையும் ஏன் தொண்டர்களும்கூட இன்றுமே கூறிவருகின்றனர். அண்மையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது இத்தகைய மனநிலை வெளிபட்டது. தமிழ் அடையாளத்தை சாதி எதிர்ப்பு அடையாளமாக உருமாற்ற செய்யவேண்டிய வேலைகளை குறித்து நாம் ஆக்கப்பூர்வமாக உரையாடத் தயங்குவதற்கும் மறுப்பதற்கும் காரணம், தமிழ் என்று சொன்னாலே, அதனளவில் அது அதிகாரத்தை எதிர்க்கவல்ல, பொது நியாயம் பேசவல்ல அடையாளம் என்று கொண்டுவிடுகிறோம், அல்லது அவ்வாறு நினைப்பது என்பது நமக்கு வழமையாகிவிட்டது. மத்திய அரசையும், பார்ப்பன- பனியா அரசியல், சமுதாய ஆதிக்கத்தையும் இந்திய தேசியத்தையும் எதிர்க்க தமிழ் அடையாளம் முன்வைக்கப்பட்ட நாளிலிருந்தே இந்தபிரச்சனை இருந்துவந்துள்ளது. இந்த எதிர்ப்பின் மொத்த உருவமாக தமிழ் அடையாளம் பாவிக்கப்பட்டதேயொழிய, தமிழ் சமுதாயத்தில் நிலவும் சாதி, பாலின, வர்க்க வேறுபாடுகளை களைய வல்லதாக, அவற்றை கடந்த சமத்துவமான, நீதியான சமுதாயத்தை உருவாக்கவல்லதாக அறியப்படவில்லை. அப்படியே அறியப்பட்டாலும் பழம்பெருமை பேச்சிலும் சங்க இலக்கியங்களை கொண்டாடுவதிலும் தான் தமிழ் மரபுக்குரிய சமூகநீதி வெளிப்பாடு கண்டது.

இன்றுமே இந்துத்துவ எதிர்ப்பின் முக்கிய அறிகுறியாக தமிழ் அடையாளம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அவ்வடையாளத்தின் பெயரில் இந்துத்துவத்தை எதிர் கொள்ளமுடியுமா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அதன் பெயரில் எதைஎதையெல்லாம் காப்பாற்ற விரும்புகிறோம், எதை எதையெல்லாம் சரிக்கட்ட மறுக்கிறோம் என்பன குறித்தும் நாம் சிந்திக்க மறுக்கிறோம். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு வருகிறது என்ற எச்சரிக்கை மணியை அடிப்பது முக்கியம்தான் என்றாலும் அக்கட்சியானது நம் சமுதாய, அரசியல் வாழ்க்கையிலும் அறவியல் சிந்தனையிலும் புகுத்தியுள்ள சீர்குலைவுகளைப் பற்றி பேச நமக்கு வாய்வருவதில்லை. இந்திய அரசு, இந்துத்துவம் ஆகியவற்றை எதிர்க்கும் தமிழ் ஆர்வலர்கள் பாசிச அரசியலுக்கு வழிவகுத்த அதிமுகவின் கையூட்டு அரசியலையும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளையும் பற்றிய பொதுவிவாதத்தை ஏற்படுத்த தயாராக இல்லை. இது அரசியல் சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல – தமிழ் அடையாளம் என்பதன் உட்கூறுகள் குறித்து விமர்சனபூர்வமாக யோசிக்க நமக்கிருக்கும் தயக்கத்தையே காட்டுகிறது.

மற்றொரு முக்கியப் பிரச்சனை, பெண் விடுதலை தொடர்பானது. பெண்களின் உடல்களில் தான் சாதிகளின் அடையாளம் பொறிக்கப்படுகிறது. அவர்களின் கருவுறும் ஆற்றலின் மீது சாதி குடும்பமும் அதன் ஆணாதிக்கத்தலைமையும் இன்றுமே அதிகாரம் செலுத்திவரும் சூழ்நிலையில் பெண்களின் உடல் மாண்பு, சுய விருப்பம், காதல், மனவிழைவு, மணவாழ்க்கை, தாய்மை கடந்த வாழ்க்கையைத் தேர்தெடுத்துக் கொள்ள அவர்களுக்கு இருக்கவேண்டிய சுதந்திரம் ஆகியவற்றை தமிழ்ச்சமுதாயம் பொருட்டாக கருதாததோடு, இவை குறித்து அறிவுப்பூர்வமாக விவாதித்த சுய-மரியாதை இயக்க மரபையும் தொலைத்துவிட்டது அல்லது அதனை நினைவுகூர்வதை கவனமாக தவிர்த்து வந்துள்ளது. அப்படியே பேசினாலும் சாதிமறுப்பு திருமணங்களை ஆதரிப்பதுடன் தனது வேலை முடிந்துவிட்டது என்று கருதிவிடுகிறது. சாதி குடும்பம், சாதியால் கட்டமைக்கப்பட்ட பொதுவெளி, இவற்றை இயக்கும் ஆணாதிக்கச் சிந்தனை, மனப்பாங்கு ஆகியவற்றை குறித்து யோசிக்கக்கூட தயாராகவில்லை. சாதி அமைப்பை ஏற்காது அதன் பிடியிலிருந்து வெளியேற விரும்பிய பெண்களின் வாழ்வியலுக்கு ஆதரவாக நின்ற சுயமரியாதை இயக்க மரபின் நிழல் கூடு தம்மீது பட்டுவிடக்கூடாது என்ற அன்று முதல் இன்று வரை முற்போக்கு அரசியல் கருத்துகளை கொண்டுள்ள ஆண்களும் கவனமாக இருந்து வந்துள்ளனர்.

முற்போக்கு அரசியலின் முக்கிய கூறாக விளங்கும் இடதுசாரி இயக்கங்கள் சாதி எதிர்ப்பை கையில் எடுக்கத் தவறியதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தலித் தொழிலாளர்களின் பக்கம் நின்று பற்பல போராட்டங்களை நடத்தியபோதிலும், அவர்களின் சமூக மாண்பை நிலைநிறுத்த தீண்டாமையின் பல வடிவங்களை எதிர்த்து செயல்பட்டாலும், சாதி ஒழிப்பு என்பதை தமக்கான முக்கிய இலக்காக, வர்க்கப் போராட்டத்துக்கு இணையான, அதனுடன் சேர்ந்து நடைபெற வேண்டிய போராட்டமாக அண்மைக்காலம் வரை இவ்வியக்கங்கள் இனங்காணவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியவராகிறோம்.
----
கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலங்களின் செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்க்கவும் வேண்டியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற சூழ்நிலையில் இத்தகைய மதிப்பீட்டை நாம் மேற்கொள்வது என்பது பயனுள்ளதாக இருக்கும். திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலம் என்று நாம் கூறிக்கொண்டாலும், எம்.ஜி. ராமச்சந்திரனால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தான் அதிக நாட்களும் தொடர்ச்சியாகவும் ஆட்சி செலுத்தியுள்ளது.

திமுகவின் ஆட்சிக்காலத்தை எடுத்துக்கொண்டால் அது தொடக்கத்தில் மக்கள்நலம்சார் ஆட்சியாக அமையும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மாநில சுயாட்சி, நீதியான பொருளாதார வளர்ச்சி, வகுப்புரிமையைப் பாதுகாக்கத் தேவையான சட்டத்திட்டங்கள், சாதி நீக்கம் செய்யப்பட்ட பண்பாட்டு உருவாக்கம் என்று பல விஷயங்கள் இங்கு சாத்தியப்படும் என்று பலர் அன்று நினைத்தனர். 

பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்கொண்டால் முன் ஆட்சிப் புரிந்த காங்கிரஸ் ஆட்சி பின்பற்றிய வளர்ச்சி, உற்பத்திசார் திட்டங்களை திமுகவும் பின்பற்றியது. குறிப்பாக வேளாண்துறையில் தொடங்கப்பட்டிருந்த பசுமைப்புரட்சியை இக்கட்சியின் ஆட்சியுமே தொடர்ந்து வளர்த்தது, விரிவுப்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகார வலிமைக் கொண்டும் சமரச நடவடிக்கைகளின் மூலமும் இக்கட்சி எதிர்கொண்டது. விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை சமன்படுத்துவதிலும் நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் திமுகவினர் கைவிடவில்லை – வெண்மணி படுகொலை இதற்கு முக்கிய சான்று.

தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட காங்கிரஸ் கொள்கைகளைப் பின்பற்றிய அதேவேகத்தில் தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்கியொடுக்கவும் திமுகழக ஆட்சியாளர்கள் தயங்கவில்லை. அன்று முக்கிய தொழிலாளர் தலைவராக இருந்த வி.பி.சிந்தனுக்கு நேர்ந்த கதியை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. எந்த மாணவர்களின் போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு ஆட்சிக்கு வந்ததோ அதே மாணவர்களின் போராட்டங்களை மூர்க்கமாக கையாளவும் திமுக தயங்கவில்லை.

அதே சமயம் வளர்ச்சி, மக்கள்நலம் என்ற இரண்டு விஷயங்களிலும் தனக்குள்ள "அக்கறை"யை ஆட்சியாளர்கள் வெளிபடுத்திக் கொண்டும் வந்தனர். எடுத்துக்காட்டாக, சாலை, போக்குவரத்து துறைகளில் முதலீடு செய்தது, போக்குவரத்து துறையை அரசுடைமையாக்கியது. 1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை அமுலுக்கு வந்த பிறகு சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கத் தோதான திட்டங்களை திமுக தான் செயல்படுத்தியது. இதையெல்லாம் செய்த அதேவேளை, வகுப்புரிமையை உத்திரவாதப்படுத்தியது. குடிசை மாற்று வாரியத்தின் செயல்பாடுகளை விரிவுப்படுத்தி நகரப்புற வறிய பிரிவினருக்கான வீட்டு வசதிகளை செய்து கொடுத்தது. மாநில சுயாட்சி தொடர்பான விவாதங்களை பொதுவெளியில் தொடர்ந்து நடத்தியது.  முக்கியமாக தமிழ்ச் சமுதாயத்தில் பார்ப்பன அறிவாளிகள் செலுத்தி வந்த மேலாண்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து திராவிட அறிவாளர்களின் வளர்ச்சியை சாத்தியப்படுத்தியது. தமிழ் அடையாளத்துக்கு செக்யூலர் உள்ளீட்டை வழங்கியதன் மூலம் தலித்துகளையும் கூட தன்வசப்படுத்தியது.

கையூட்டு அரசியலுக்கு அது வழிவகுத்த போதிலும், உள்கட்சி ஜனநாயகத்தை வளர்க்கத் தவறியபோதிலும் தேவைப்பட்ட போது மத்திய அரசுடனும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடனும், ஏன் ஒரு கட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட அரசியல் கூட்டணி ஏற்படுத்திக்கொண்ட போதிலும் தன்னை தமிழர் நலம் காக்கும் கட்சியாக தொடர்ந்து நிலைநிறுத்திக்கொண்டது. – இத்தனைக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை சந்தர்ப்பவாத நிலைப்பாட்டினையே அதுமேற்கொண்டது.

திமுகவின் ஆட்சிக்காலத்தில் தான் சாதி இந்து சமுதாயங்களைச் சேர்ந்தவர்களின் ஒரு பிரிவினரின் ஒப்பீட்டளவிலான பொருளாதார, அரசியல் வளர்ச்சி என்பது சாத்தியப்பட்டது. அதேசமயம், நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல, இந்த வளர்ச்சியானது இச்சமுதாயங்களின் சாதிய தன்னிலையை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தது. வரலாற்றுப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம், சாதி எதிர்ப்பு என்பதை வகுப்புரிமையுடன் மட்டும் தொடர்புபடுத்திய அரசியல் சிந்தனையும் செயல்பாடும் இத்தகைய வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம். மேலும், சாதியமைப்பை பத்திரப்படுத்தியுள்ள நிலவுடைமை முறை, சாதிய உளவியல், பண்பாடு, பொது வெளியில் சாதியைக் கடந்த உறவுகள் அவ்வப்போது சாத்தியப்பட்டாலும் பண்பாடு, காதல், குடும்பம் என்று வரும்போது சாதி அடையாளங்கள் தொடர்ந்து முன்நிறுத்தப்படுதல் ஆகியனவற்றை அரசியல்ரீதியாக அணுகுவதற்கான கருத்துநிலையும் அதையொட்டிய செயல்பாடும் முக்கியமானதாக கருதப்படவில்லை. எனவே, சாதி இந்துக்களின் வளர்ச்சியானது ஒப்பீட்டளவில் ஜனநாயகப் பரவலாக்கத்தை சாத்தியப்படுத்திய போதிலும் சமுதாய வெளியிலும் நமது அரசியல் ஊடாட்டங்களிலும் ஜனநாயகம் ஆழமாக வேர்க்கொள்ள வித்திடவில்லை – தலித்துகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்றுவரும் வன்முறைகளும், சுயவிமர்சனத்துக்கு இடங்கொடுக்காத "திராவிட" பெருமித அரசியல் சொல்லாடல்களும் ஒன்றுக்கு மற்றொன்று அரண் சேர்த்து உண்மையான ஜனநாயக வளர்ச்சியை தடுத்துள்ளன. முக்கியமாக தலித்துகளுக்கு எதிராக செயல்படும் சாதி இந்து சமுதாயத்தினருக்கு அரசின் பாதுகாப்பு தொடர்ந்து இருந்துகொண்டேவந்துள்ளது.

அடுத்து அதிமுகவின் ஆட்சிகாலங்களை எடுத்துக்கொண்டால், தமிழகத்தின் அரசியல், சமுதாய வெளிகளிலிருந்து ஜனநாயகப் பண்புகள் முற்றிலுமாக தூக்கியெறியப்பட்ட ஆட்சிக் காலங்களாக அவை இருந்தன என்று சொல்லலாம். மக்களுக்கான ஆட்சியாக தன்னை அறிவித்துக்கொண்டாலும் மக்களை மதிக்காத, அவர்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற அவ்வப்போது அவர்களுக்கு சலுகைகளை வழங்கும் ஆட்சியாகத்தான் ஆதி முதற்கொண்டே இக்கட்சியின் ஆட்சி அமைந்தது. அறிவுப்பூர்வமாக சிந்தித்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு திட்டமிடுதலுக்குப் பதிலாக மாநிலத்தின் நிதியாதாரங்களை கட்சித்தலைமையின் சொந்த கருவூலத்துக்குரிய சொத்தாக பாவித்தே அக்கட்சித்தலைமை செயல்பட்டு வந்தது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்ட முக்கிய மதிப்புரை ஒன்று அவரின் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி முடக்கப்பட்டதன் விவரங்களையும், அவரின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகள் மாநிலத்தின் ஜனநாயக வாழ்வில் ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளையும் பட்டியலிட்டுக் காட்டியது. அவரின் ஆட்சியில் நடந்த என்கவுண்டர் கொலைகள், ஊடகத்துறையை கட்டுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்ட சட்டமாற்றங்கள், சிவில் உரிமைகளுக்காக பாடுபட்ட அமைப்புகளும் அவற்றின் உறுப்பினர்களும் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டது தொடர்பான செய்திகள் ஆகியவற்றை அந்த மதிப்புரை உள்ளடக்கியிருந்தது.  

எம்.ஜி.ஆர் ஆட்சியின் முக்கிய சாதனை சத்துணவுத்திட்டம் தான். அதை சிலாகித்து பேசுபவர்கள் அதற்கு வித்திட்டவர் காமராஜர் என்பதையும் அவருக்கு முன் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சுப்பராயனின் அமைச்சரவை இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுவதில்லை. எம்.ஜி.ஆர். இத்திட்டத்தை பரவலாக்கினார் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதை செய்ததன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கான பெரும் வாய்ப்பையும் வெளியையும் அவர் ஏற்படுத்தினார் என்று கொண்டாலும், கல்வி தொடர்பான அவரின் பிற கொள்கைகளுடன் இதனை தொடர்புபடுத்தி பார்க்கவேண்டும் – குறிப்பாக உயர் கல்வி தனியார்மயமாவதற்கான திட்டத்தை தீட்டியவர் அவர்தான். தனியார் கல்லூரிகளில் வகுப்புரிமையை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், இங்குள்ள பிற்பட்ட, தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அரசுக்கு இருக்கவேண்டிய முக்கிய பொறுப்பை அரசு கைவிடவும் இந்த முடிவு காரணமாக இருந்தது. 
கையூட்டு அரசியல் வளரவும் விரிவடையவும் புதிய பொருளாதாரக் கொள்கை காரணமாக அமைந்தது (இதற்கு முன் ஆட்சிகளும் கட்சிகளும் கையூட்டு அரசியலை பின்பற்றவில்லை என்று கூறிட முடியாது – திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆணையத்தின் முடிவுகள் அக்கட்சித்தலைமைக்கு சாதகமாக அமையவில்லை என்பது வரலாறு). அக்கொள்கையை பின்பற்றி தமிழகத்தின் மூலவளங்களை சூறையாடும் மோசமான வளர்ச்சிப்போக்கை ஜெயலலிதா தலைமையில் பதவியேற்ற ஆட்சி முன்னெடுத்தது. இத்தகைய சூறையாடுதல் என்பது "இயல்பானதாக" ஆக்கப்பட்டு அதனால் இலாபம் ஈட்டிய தொழிற்குழாம்களும் குடும்பங்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக்கொள்ளவும் அவரின் ஆட்சி வழிவகுத்தது. இருந்தும் மக்களின் நல்லாசியையும் ஆதரவையும் பெற எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஏற்றம் பெற்ற சலுகை அரசியலை இவர் அருங்கலையாக உருமாற்றினர்ர் – குறிப்பாக ஏழைப்பெண்கள குறிவைத்து இவரின் சலுகை அரசியல் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.

அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் தான் குறிப்பிட்ட சாதியினரின் செல்வாக்கை ஆதாரமாகக் கொண்ட அரசியல் வளர்ச்சி என்பது உத்தியாக கையாளப்பட்டது. நமது ஜனநாயக அரசியலில் சாதி சமுதாயங்களின் நலனே மக்கள் நலனாக அறியப்பட்டடு வரும் நிலைமையுள்ள போதிலும், குறிப்பிட்ட சாதியினரின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை மையமிட்ட அரசியலை அதிமுகதான் வெற்றிகரமாகவும் பட்டவார்த்தனமாகவும் கையிலெடுத்தது. சாதி கட்சிகளின் வளர்ச்சிக்கான நியாயங்கள் எவ்வாறானதாக உள்ளபோதிலும், அவற்றுக்கான அரசியல்ரீதியான ஒப்புதலை அதிமுகவின் செயல்பாடுகள் பெற்றுத்தந்தன. இதை செய்த அதேவேளை தலித்துகளுக்கு எதிரான போக்கை அரசு மேற்கொள்வதையும் இக்கட்சிதான் "இயல்பா"க்கியது. தன் பங்கிற்கு திமுகவும் ஆட்சியில் இருக்கையில் இந்தப் போக்கைக் கடைபிடிக்கத் தவறவில்லை.

----
பார்ப்பனரல்லாதார் இயக்கம் கண்டுள்ள மாற்றங்கள், அந்த இயக்கம் வழி உருவான அரசியல் கட்சிகளின் ஆட்சிக்காலங்கள் சாதித்தவை, செய்யாதவை, காலம் கிளர்த்தியுள்ள வரலாற்றுப்பூர்வமான மாற்றங்கள் ஆகியவற்றை குறித்த துல்லியமான நுணுக்கமான ஆய்வுகள் நமக்குத் தேவை. அவற்றை மேற்கொள்ளும் மனநிலையும் அவசியம் – வரலாற்று பெருமிதங்களை கடந்து இத்தகைய ஆய்வுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

பெரியார் நமக்கு வலியுறுத்தியவற்றை இங்கு நினைவுகூர்வது அவசியம் - சாதி, பார்ப்பனியம், இந்துமதம், பணக்காரத்தனம் ஆகிய அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்துள்ளவையாகும் என்பதை அவர் சளைக்காமல் கூறிவந்தார். பார்ப்பனர்களின் மேலாண்மை, பணக்காரர்களின் ஆதிக்கம், இந்துமதம் சாற்றும் சாதிக்கொரு நீதி ஆகியவற்றை எதிர்ப்பதும், அவற்றுக்கு மாற்றீடாக பொதுவுடைமை, சமதர்மம், பகுத்தறிவு பேசும் அரசியல், சமுதாயச் செயல்பாடுகள் ஆகியன தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதும் அவசியம் என்பதை தன் வாழ்நாள் முழுக்க சுட்டிக்காட்டினார். அதற்கான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரின் வாதங்களை புதிப்பித்து அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதாக நமது ஆய்வுகளும் விவாதங்களும் அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

செவ்வாய், அக்டோபர் 11

சாதி ஒழியும் போது இந்துமதம் தானாக ஒழிந்துவிடும் -ஆதவன் தீட்சண்யா

1.தலித்துகள் மீது தாக்குதலுக்கான நோக்கம் என்ன?

தலித்துகள் தமக்கு சமமானவர்கள் அல்ல என்கிற இழிநோக்கும், தமக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற ஆதிக்க மனநிலையும் கொண்ட சாதி இந்துக்களால்  அவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். 

* கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தி முன்னேறுவது
*  ஒடுக்குமுறைகளை எதிர்த்து அமைப்புரீதியாக திரள்வது
* சமூகரீதியாகவும் சட்டரீதியாகவும் சமவுரிமை கோருவது  
- என தன்மதிப்போடு வாழ்வதற்கு தலித்துகள் மேற்கொள்ளும் எத்தனங்களை தடுப்பதற்காகவே தாக்கப்படுகின்றனர். இவ்வாறான எத்தனங்களை மேற்கொள்ளாத சாதிஇந்துக்களை அண்டியடங்கிய தலித்துகளும் இருக்கிறார்கள். அதேநிலையில் நீடிக்கச்செய்வதற்காக அவர்களும் கடும் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.  தலித்துகள் மீது எவ்வளவு கொடிய தாக்குதலை நடத்தினாலும் அதற்காக தண்டிக்கப்படமாட்டோம் என்கிற தைரியம் இதற்கெல்லாம் பின்புலமாகவுள்ளது.

2. இன்றைய நவீன யுகத்தில் தலித்துகள் மீது தாக்குதல் மற்றும் புறக்கணிப்பு எத்தகைய வடிவங்களில் நடைபெறுகிறது?

நவீன கருவிகளும் தொழில்நுட்பங்களும் புழக்கத்திலிருப்பதை வைத்து இதை நவீன யுகம் என்று அழைத்துவிட முடியாது. நவீன கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் வைத்துக்கொண்டு காலத்தால்  வெகுவாக பின்தங்கிய அல்லது எந்தக்காலத்திற்கும் ஒவ்வாத கருத்துகளை பரப்பி காப்பாற்றும் வேலைதான் இங்கு ஜோராக நடந்துவருகிறது.

தலித்துகள் மீதான தாக்குதலும் புறக்கணிப்பும் இன்று நேற்றல்ல, சாதியம் தோன்றிய காலம்தொட்டே நடந்து கொண்டுதானிருக்கின்றன. நாடு முழுவதும், நாடுகடந்து இந்துக்கள் உள்ள இடங்களிலும் இந்தத் தாக்குதலும் புறக்கணிப்பும் சில பொதுவான வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. கல்வியை மறுப்பது, வழிபாட்டுரிமையை பறிப்பது, பொதுவளங்களைப் பயன்படுத்துவதிலிருந்து தடுப்பது, நடமாட்டத்தையும் புழங்குவெளியையும் மட்டுப்படுத்துவது, அதிகார அமைப்புகளில் பங்கெடுக்கவிடாமல் செய்வது, நிலங்களையும் உற்பத்திப் பொருட்களையும் அபகரித்துக்கொள்வது, ஊரை எரிப்பது, உடைமைகளை கொள்ளையடிப்பது, மாட்டுத்தோலை உரித்தார்கள் என்று கல்லால் அடித்துக் கொல்வது, கட்டிவைத்து அடிப்பது, மாட்டுக்கறி உண்டிருப்பார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் பெண்களை வன்புணர்வுக்கு ஆளாக்குவது என்பதெல்லாம் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் வன்கொடுமை வடிவங்கள்தான். இவையன்றி, அந்தந்த வட்டாரம் சார்ந்த- பார்ப்பனர்கள் உண்ட எச்சில் இலையில் தலித்துகளை விழுந்து புரளச்செய்யும் மடஸ்நானா போன்ற - தனித்த வடிவங்களையும் கொண்டிருக்கின்றன.

தலித்துகளின் வாழிடங்களில் குடியேறி வசிப்பதை 100 சதவீதம் தவிர்ப்பது, உலகின் எந்த மொழியில் வெளியாகிற அரசியல் அறிவியல் பொருளாதாரம் தத்துவம் சார்ந்த நூல்களையும் உடனுக்குடனே படித்துவிடக்கூடியவர்கள்கூட இன்னமும் அம்பேத்கர் நூல்களை படிக்காமல் ஒதுக்கி வைத்திருப்பது, அம்பேத்கரைப் பற்றி பேசுவதற்கு தலித்துகளையே அழைப்பது (உங்க ஆளைப் பற்றி நீயே வந்து பேசிவிட்டுப் போ என்பது போல), அமைப்புகளில் துணை இணை உதவி என்கிற நிலையைத் தாண்டி வேறு பொறுப்புகளுக்கு வராமல் பார்த்துக் கொள்வது என தீண்டாமை பலவடிவங்களைக் கொண்டிருக்கிறது. ஒரு வடிவத்தை ஒழித்தால் அதனிலும் நுட்பமும் மூர்க்கமுமான மற்றொரு வடிவம் வெளியாகி ஒடுக்குகிறது.

3. சாதியத்திற்கு எதிராக வெஞ்சமர் புரிந்த பெரியார் பிறந்த மண்ணில் சாதிய சக்திகள் தங்கள் தாக்குதல்களை வெளிப்படையாக நடத்துவதற்கான துணிச்சல்  எவ்வாறு வந்தது?

பெரியார் தன் காலத்தில் சாதியத்தை ஒழித்துவிடவில்லை, அதன் ஒடுக்குமுறையையும் பாரபட்சத்தையும் பார்ப்பன மேலாதிக்கத்தையும் தனது முன்னுவமையற்ற போராட்டங்களால் கட்டுக்குள் நிறுத்தினார். பார்ப்பரனரல்லாத சாதியினரின் புழங்குவெளியை விரிவுபடுத்தினார். அவர்களது உள்ளக ஆற்றலை வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை திறந்துவிட்டார். அதேவேளையில் பார்ப்பனரல்லாதார் என்கிற அடையாளத்தின் கீழ் திரண்டவர்களிடம் புரையோடிக் கிடந்த சாதியவாதத்தை அம்பலப்படுத்தி அவர்களை மனிதர்களாக்குவதற்கான போராட்டத்தை தன்னால் இயன்றமட்டிலும் நடத்திப் பார்த்தவர் பெரியார். ஒரு தனிமனிதர் தான் மேற்கொண்ட லட்சியங்களுக்காக தன் ஆயுட்காலத்தில் செய்யத்தகுந்தது எவ்வளவோ அவ்வளவையும் செய்துவிட்டே அவர் மறைந்தார்.

பெரியாரின் கருத்தியல் வாரிசாக தம்மை அறிவித்துக்கொண்ட பலரும் அவரிருந்த போதே சாதியத்தை எதிர்த்தப் போராட்டத்தை முன்னெடுக்காதது மட்டுமல்ல, சாதியச்சக்திகளோடு சமரசமும் செய்து கொண்டார்கள். பெரியாரது கருத்தியல் மற்றும் களப்போராட்டங்களால் உந்துதல் பெற்று பல்வேறு சாதிகளிலிருந்தும் உருவாகிவந்த சாதியெதிர்ப்பு- பகுத்தறிவுச்சக்திகளை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக, வாக்காளர்கள் என்கிற பெரும்பான்மையின் பின்தங்கிய உணர்வுகளோடு- அதாவது சாதி மதம் கடவுள் மூடநம்பிக்கை பெண்ணயடிமைத்தனம் போன்றவற்றை கடைபிடிக்கிறவர்களோடு தம்மை இணைத்துக்கொண்டார்கள். ஏற்கனவே சாதியம் கொடுத்திருந்த அதிகாரத்தின் பெயரால் பார்ப்பனர்களைப்போலவே வன்கொடுமைகளை நிகழ்த்திவந்த பார்ப்பனரல்லாத சாதிஇந்துக்கள் கைக்கு அரசியல் அதிகாரத்தையும் கொண்டு சேர்ப்பது திராவிடக்கட்சிகளின் நிகழ்ச்சிநிரலில் இல்லையென்றாலும் நடப்பில் அதுவே நிகழ்ந்தது. கிட்டத்தட்ட இதேகாலகட்டத்தில்தான் இந்தியா முழுமையிலும்கூட இந்த நிலை ஏற்பட்டது. ஊராட்சிமன்ற உறுப்பினர் தொடங்கி மத்திய மாநில அமைச்சரவை வரையான அதிகாரமையங்கள் அனைத்தையும் ஓரளவுக்கு அரசு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ள அவர்கள் நடத்தும் தாக்குதலை பெரியாரின் ஆவி வந்து தடுக்கும் என்று எதிர்பார்த்திருக்க முடியாது. எனினும் இன்னமும் ஒருபகுதி பெரியாரியவாதிகள் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை தொடரவே செய்கிறார்கள். ஆனால், இங்கு கவனப்படுத்த வேண்டியது என்னவென்றால் சாதியத்தை எதிர்ப்பது, மறுப்பது, ஒழிப்பது என்பதெல்லாம் வெறுமனே பெரியாரியத்தின் நிகழ்ச்சிநிரல் மட்டுமல்ல என்பதுதான்.  

4. அரசாங்கமும் அரசு இயந்திரமும் சாதி ஆதிக்கச்சக்திகளுக்கு எந்த வகையில் துணைபோகின்றன?

இரண்டுமே தலித்தல்லாதாரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எனவே அவை ஊரும் சேரியும்  நிரந்தரமாக பிரிந்திருப்பதை உறுதிசெய்கின்றன. தலித்துகளின் வாழிடத்தில் அரசு சார்ந்த அலுவலகமோ தொழிற்சாலையோ கல்விக்கூடமோ வணிகவளாகமோ குறைந்தபட்சம் டாஸ்மாக் கூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்கின்றன. தலித்துகள் வன்கொடுமைக்கு ஆளாகும் போது அப்பட்டமாக வன்கொடுமையாளர்களுக்கு ஆதரவாக தத்தமது அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன. தலித்துகளுக்கு சட்டப்பூர்வமாக உள்ள இட ஒதுக்கீடு, கட்டுமான ஒப்பந்தங்கள், பெட்ரோல் நிலையங்கள், மானியங்கள் உள்ளிட்ட உரிமைகள் நடப்புண்மையாக மாறுவதைத் தடுக்கின்றன. தலித்துகளுக்குரிய பஞ்சமி நிலங்களை வகைமாற்றம் செய்தும் மோசடிகள் மூலமாக அபகரிப்பதற்கும் துணைபுரிகின்றன. துணைத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கென ஒதுக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவழிக்காமலே திருப்பி அனுப்புகின்றன அல்லது தலித்துகளுக்கு தொடர்பற்ற திட்டங்களுக்கு திருப்பிவிடுகின்றன.

5. தமிழகத்தில் சாதி வெறி இயக்கமாவதை எப்படி எதிர்கொள்வது?

தங்களது சாதியினரால் தலைமை தாங்கப்படக்கூடிய இந்த இயக்கமாவது தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்து கண்ணியமான  வாழ்க்கையை அமைத்துக்கொடுத்துவிடாதா என்கிற ஏக்கத்துடன் தான் சாமானிய மக்கள் சாதிய அமைப்புகளுக்குள் அணிதிரள்கிறார்கள். ஆனால் சாதிய அமைப்புகளோ இவர்களது சக்தியை இந்த விருப்பார்வங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான போராட்டங்களை நோக்கித் திருப்பாமல் சாதிப்பெருமை என்னும் கற்பிதத்திற்குள் மூழ்கடிக்கின்றன. அன்னாடங்காய்ச்சியான எதார்த்தம் ஆண்ட பரம்பரை, மேல்சாதி என்பதான கற்பிதத்தால் மறைக்கப்பட்டு சாதியுணர்வு சாதி வெறியாக்கப்படுகிறது. தமது குலப்பெருமை மற்றும் சாதித்தூய்மையைப் பாதுகாப்பதை விடவும் உயர்வானது எதுவுமில்லை என்று உசுப்பேற்றப்படுகிற இவர்களுக்கு தலித்துகளைத் தவிர வேறெவரும் எதிரியாக காட்டப்படுவதில்லை.

சாதி இயக்கங்கள் உங்களுக்கு எதையும் செய்யப்போவதில்லை என்று பிரசங்கம் அல்லது உபதேசம் செய்வதனால் இம்மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டுவிட மாட்டார்கள்.  அவர்கள் தமது இயல்பான வாழ்வை நடத்திச் செல்வதற்குத் தேவையான உடனடி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களை முன்வைத்து அதற்காக ஓர் அணிதிரட்டலை வேறெந்த அமைப்பும் சக்தியாக நடத்தாதவரை அவர்கள் சாதிய இயக்கங்களில் அணிதிரண்டு சாதிவெறியர்களாக மாறிக்கொண்டுதானிருப்பார்கள்.

7. தலித் மக்களின்  விடுதலைக்கான தீர்வு எது? அதை நோக்கிய போராட்டம் எத்தகையது?

சாதியொழிப்புதான். சாதியத்திலிருந்து ஒட்டுமொத்த சமூகமும் விடுபடாமல் தலித்துகள் மட்டும் தம்மைத்தாமே விடுவித்துக்கொள்ள முடியாது. ஆனால் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்தால் கூட சாதி இந்துக்களின் ஆதரவை இழந்துவிடுவோம் என்று நடுங்கிச்சாகிற அமைப்புகள் மலிந்து கிடக்கும் இச்சமூகத்தில் சாதியொழிப்பு என்பது அதன் முழுப்பொருளில் இன்று யாருடைய அல்லது எந்த அமைப்பினுடைய நிகழ்ச்சிநிரலிலாவது இருக்கிறதா?

சாதியை மட்டும் தனியாக ஒழித்துவிடவும் முடியாது. ஏனென்றால் அது, இங்கு நிலம், சொத்து, தொழில், வணிகம், மதம், அதிகாரம், பண்பாடு ஆகியவை வழிவழியாக யாருடைய கையில் இருக்கவேண்டும் அல்லது இருக்கக்கூடாது என்பதை தீர்மானிப்பதாக இருக்கிறது. ‘இந்த வழிவழியாக’ என்பதை உறுதிப்படுத்தவே சாதியம் அகமணமுறையை கைக்கொண்டிருக்கிறது. எனவே சாதியை ஒழிப்பது என்றால் அதனோடு தொடர்புடைய அனைத்தையும் ஒழிப்பதே என்று விளங்கிக்கொண்டோமானால், அதற்கோர் தொடக்கமாக அகமணமுறையை ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கும். இதை தனிநபர்கள் தமது சொந்த வாழ்விலிருந்து தொடங்கலாம். இயக்கங்கள் தமது உறுப்பினர்களின் வாழ்முறையாக மாற்றலாம். அரசாங்கம் ஒரு சட்டத்தின் மூலம் குடிமக்களிடையே இதை சாத்தியப்படுத்தலாம். ஆனால் அப்படியொரு சட்டத்தினை நிறைவேற்றும் அரசியல் விருப்புறுதி கொண்ட ஓர் அரசாங்கத்திற்காக காத்திருக்கப் போகிறோமா அல்லது  இருக்கின்ற அரசாங்கத்தையே அதுநோக்கி நெட்டித்தள்ளும் போராட்டங்களை முன்னெடுக்கப்போகிறோமா என்பது நம்முடைய அரசியல் விருப்புறுதி சார்ந்தது.

( இந்துமதம் பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்கிற கேள்வி எழலாம், சாதி ஒழியும் போது இந்துமதம் தானாக ஒழிந்துவிடும். சாதிய சமூகத்தில் நீங்கள் எத்தனை மதங்களுக்கு மாறினாலும் அங்கெல்லாமும் சாதியாகவே அடையாளம் காணப்படுவீர்கள்.)

நன்றி: இளைஞர் முழக்கம் , அக்டோபர் 2016 


துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...