தொழிலாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழிலாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 21

இந்தியா: தொழிலாளர்களின் கண்ணீர்ப் பள்ளத்தாக்கு அல்ல! - ஆதவன் தீட்சண்யா

 ‘‘சோளத்தை அரைக்கும் கரங்களை விடுவித்துவிடுங்கள்,
மாவரைக்கும் சிறுமியர் அமைதியாகத் தூங்கட்டும்,
இந்த நாள் முடிவுக்கு வருகிறதென்று அதிகாலைச் சேவல் வெறுமனே ஒப்புக்கு கூவட்டும்! சிறுமிகளின் வேலையைத் தேவதைகள் செய்யவேண்டுமென திமிதா உத்தரவிட்டுள்ளார். இப்போது இவர்களது கரங்கள் சக்கரங்களின் மீது மெதுவாகத் தாவிச் செல்லட்டும், அதனால் அதிரும் அச்சுக்கள் கம்பிகளைச் சுழற்றட்டும்.
சுழன்றரைக்கும் அரவைக்கல் பளுவைச் சுழற்றிவிடட்டும்.
நாம் நமது தந்தையர் வாழ்வை வாழ்வோம்.
வேலையிலிருந்து ஓய்வெடுப்போம்.
தேவதைக்கடவுள் நமக்கு அனுப்பியுள்ள பரிசுகளை மகிழ்ந்தனுபவிப்போம்..’’ 

- சோளம் அரைக்கும் நீராலை இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதுமே உழைப்பிலிருந்து சிறுமியரை விடுவிக்கும்படியும் வேலையிலிருந்து ஓய்வெடுக்கும்படியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆன்டிபரோஸ் என்ற கிரேக்கக்கவிஞனால் இப்படி எழுத முடிந்திருக்கிறது. எனில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு உச்சத்தில் இருக்கும் காலத்தில் வாழும் நாம் ஏன் இன்னமும் ஓய்வின்றியும் நீண்டநேரம் வேலை செய்ய வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்?  

**

‘‘அன்றாடம் 18 - 20 மணிநேரம் பணியாற்ற முடிந்தவர்கள் மட்டும் என்னோடு இருங்கள். முடியாதவர்கள் அவரவர் வழியைப் பார்த்துக்கொண்டு விலகிச் செல்லுங்கள்’’ என்று யோகி ஆதித்யநாத் 2017ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றதுமே வெளியிட்ட அறிவிப்பு ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. ஒரு தொழிலாளியோ ஊழியரோ தனது ஒவ்வொரு நாளிலும் இயல்பான மனிதவாழ்க்கையை வாழ்வதற்கு ஏற்றாற் போல அவரது அன்றாடம் அறிவியல்பூர்வமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டங்கள், சிந்திய ரத்தம், செய்த தியாகம், நடப்பிலுள்ள சட்டப் பாதுகாப்பு - இவை எதையும் பொருட்படுத்தாமல் அப்படியொரு அறிவிப்பை அவர் வெளியிட்டார். அவ்வாறு அவர் சொன்னதின் நடைமுறைச் சாத்தியம், தேவை பற்றியெல்லாம் விவாதிக்காமல் வேலைக்கலாச்சாரத்தை மீட்கவந்த தேவதூதன் என்று அவருக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தன ஊடகங்கள்.  கூருணர்வற்ற இந்தக் கொண்டாட்டங்களைப் பார்த்து கடுப்பாகி அப்போது ‘காமிய தேசத்தில் ஒருநாள்’ https://aadhavanvisai.blogspot.com/2017/08/blog-post_92.html என்ற கதையை எழுதினேன். வேலைக்கென 20 மணிநேரத்தை ஒதுக்கியதுபோக எஞ்சியிருக்கும் நான்கு மணி நேரத்தையும் நொடிவாரியாக பிரித்து அதன்படி வாழ்ந்தாக வேண்டுமென்று அரசினால் கண்காணிக்கப்படும் குடிமக்களைப் பற்றிய அந்தக்கதை இந்தியாவில் மெய்யாகிவிடுமோ என்று கவலையாக உள்ளது.

வேலைநாள் என்பது 18 முதல் 20 மணிநேரம் என்கிற இந்த அறிவிப்புக்கான உந்துதலை யோகி மோடியிடமிருந்து பெறுகிறார். மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதும் அவரை அதீத திறன்கள் கொண்ட மாமனிதர் அல்லது அவரே பின்னாளில் சொல்லிக்கொண்டது போன்ற அமானுஷ்யர் என்று பிம்பப்படுத்துவதற்காக பரப்பப்பட்ட பலவிதச் செய்திகளில் ஒன்று, நாட்டை முன்னேற்றுவதற்காக உழைக்கும் அவர் அன்றாடம் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார் என்பதாகும். அந்தச்சமயத்தில் வெளியான ஒரு பேட்டியில் (பிஸினஸ் ஸ்டேன்டர்டு, 24 நவம்பர் 2014) அப்போதைய ஒன்றிய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பிரதமர் தானும் தூங்குவதில்லை, தனது அமைச்சர்களையும் தூங்கவிடுவதில்லை என்று கூறினார். இந்தக்கட்டத்தில் தான் 18-20 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்கிற யோகியின் அறிவிப்பு வெளியானது. 

அடுத்தடுத்த ஆண்டுகளில் மோடியின் வேலைநேரம் அதிகமாகி தூக்கநேரம் குறைந்து கொண்டே வருவதாக செய்திகள் வெளியாகின. ஊடகவியலாளர்கள் யாருக்கும் பேட்டி தந்திராத மோடியை ஏஎன்ஐ நிறுவனத்துக்காக 2019 ஏப்ரல் 23 அன்று பேட்டிகண்ட பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ‘வெறும் மூன்றரை மணிநேரத் தூக்கம் உங்களுக்குப் போதுமானதா?’ என்று வியப்புடன் கேட்டதற்கு, அந்த வியப்பை வற்றவிடாத வேகத்தில் ‘இதையேதான் ஒபாமாவும் என்னிடம் கேட்டார்’ என்று மோடியும் கூசாமல் பதிலளித்தார். 2022 நிலவரப்படி மோடி அன்றாடம் வெறும் 2 மணிநேரம் மட்டுமே தூங்கி மீதி 22 மணி நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் நாட்டுக்காக உழைப்பதாக பாஜக மகாராஷ்ட்ர மாநிலத் தலைவர் சந்தரகாந்த் பாட்டீல் அதிரடியாக தெரிவித்தார் (என்டிடிவி, 21 மே 2022).  மோடியின் புகழ்பரப்ப கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தப் புனைகதைகளையெல்லாம் வெளியிடுகிற ஊடகங்கள் இதெல்லாம் சாத்தியமா, தேவையா என்று கேள்வியெழுப்பி அம்பலப்படுத்தத் துணியவில்லை. இப்படியாக, நாட்டுக்காக உழைப்பதென்றால் மோடியைப் போல வாரத்தில் ஏழுநாட்களும் இருபதுமணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு நிமிடமும் உழைக்க வேண்டும், அது சாத்தியம் என்று கட்டமைக்கப்படும் மாயை, எழுபது வயதைத் தாண்டிய முதியவரான ஒரு பிரதமரே இப்படி உழைக்கும் போது உங்களுக்கென்ன கேடு என்கிற குத்தலான கேள்வியின் மூலம் ஒவ்வொரு உழைப்பாளி மீதும் உளவியல் தாக்குதலை நடத்துகிறது. மட்டுமன்றி, அது நாட்டின் சட்டப்பூர்வ வேலைநேரத்தை அதிகரித்துவிட வேண்டும் என்கிற சுரண்டல்வெறியை வெளிப்படுத்தும் அசட்டு தைரியத்தை இன்போசிஸ் நாராயணமூர்த்தி, எல்&டி சுப்ரமணியம் போன்ற தொழில் முதலாளிகளுக்கு வழங்குகிறது. 

அன்றாடம் 20 மணிநேரம் உழைக்கிற பிரதமர் உள்ள இந்தநாட்டில் அவரில் பாதியளவாவது நாட்டுமக்கள் உழைக்கவேண்டும் என்றெண்ணியோ என்னவோ எட்டு மணிநேரம் என்றுள்ள நாட்டின் சட்டப்பூர்வ வேலைநேரத்தை 10 மணி நேரமாக்கி வாரத்திற்கு 60 மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்று 2020ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தார் நாராயணமூர்த்தி. பிறகு பிரதமரே வாராந்திர ஓய்வு விடுப்பு எடுக்காமல் 140 மணிநேரம் உழைக்கிறபோது குடிமக்களுக்கு மட்டும் எதற்கு என்று நினைத்திருப்பார் போல, அதில் பாதியளவாக வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை பார்க்கவேண்டும் என்று 2023 அக்டோபரில் தனது கோரிக்கையை திருத்தினார். நாராயணமூர்த்தியின் இந்தக் கோரிக்கை அறிவியல்பூர்வமற்றது அபத்தமானது என்பதையும் தனது கோரிக்கைக்கு வலு சேர்ப்பதற்காக அவர் வைத்த வாதங்கள் உண்மைக்கு மாறானவை என்பதையும் அம்பலப்படுத்தும் ஏராளமான தரவுகளுடன் கண்டனங்கள் வந்தபோதும் அவர் ‘நல்லவர்களாலும், வெளிநாடுவாழ் இந்தியர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்ட’ தனது கோரிக்கையினை திரும்பப் பெறப் போவதில்லை என வீம்பாக அறிவித்தார்.  

தொழிலாளர்கள் அமெரிக்காவில் வாரத்திற்கு 36.4 மணிநேரமும், தென் கொரியாவில் 37.9 மணிநேரமும், ரஷ்யாவில் 37.6 மணிநேரமும், பிரிட்டனில் 36 மணி நேரமும் ஜெர்மனியில் 37 மணிநேரமும் வேலைசெய்துவரும் நிலையில் இந்தியர்கள் வாரத்திற்கு சராசரியாக 47.7 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இதன்மூலம் உலகின் அதிகப்படியான வேலைநேரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெறுவதாக  சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையொன்று தெரிவிக்கிறது. (முதல் நான்கு இடங்களில் இந்திய துணைக்கண்டத்தவர் பெரும்பான்மையாக புலம்பெயர் தொழிலாளர்களாக பணிபுரியும் காம்பியா, மங்கோலியா, மாலத்தீவு,  கதார் ஆகிய நாடுகள் உள்ளன.) இன்னொரு அறிக்கை 15-59 வயதுக்குட்பட்ட இந்திய நகர்ப்புறத் தொழிலாளர்கள் வேலை மற்றும் அதுசார்ந்து வாரத்திற்கு 60 மணி 47 நிமிடங்கள் அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 521 நிமிடங்களைச் செலவிடுவதாக தெரிவிக்கிறது. அதேவேளையில் வங்கதேசத்தைத் தவிர, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகக்குறைந்த சட்டப்பூர்வ ஊதியத்தைப் பெறுகிறவர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர் என்கிறது 2020-21 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஊதிய அறிக்கை. 

நாராயணமூர்த்தி உபதேசிப்பதற்கும் முன்பாகவே விவசாயிகள், வியாபாரிகள், சுயதொழில் முனைவோர், தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள், சேவைத்துறைகள் மற்றும் இணைய வர்த்தகம் போன்றவற்றைச் சார்ந்து ஒப்பந்தக்கூலிகளாக இயங்கும் தனிநபர்கள்/ குழுக்கள், பல்வேறு முறைசாரா துறைகளின் தொழிலாளர்கள் ஆகியோர் ஏற்கனவே 12 - 14 மணிநேரம் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களெல்லாம் நாராயணமூர்த்தி சொல்வதை விடவும் மிகக்கடினமாக உழைத்தும்கூட இவர்களது பொருளாதார நிலை உயரவில்லை. செயலி வழி இயங்கும் வாகனங்களின் ஓட்டுநர்கள் 14 மணிநேரம் பணியாற்றியும்கூட அவர்களது நாள் ஊதியம் 500 ரூபாயைத் தாண்டவில்லை என்றும், இணையவழி வர்த்தகப்பொருட்களையும் உணவுப் பண்டங்களையும் விநியோகிக்கும் ஊழியர்களும் சற்றேறக்குறைய இதேநிலையில்தான் அவதியுறுகின்றனர் என்றும் People’s Association in Grassroots Action and Movements, Indian Federation of App-based Transport Workers ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் வழி அறியமுடிகிறது. நாட்டில் நிலவும் வேலையின்மையையும் வறுமையையும் காட்டி இத்தொழில்களில் நிலவும் உழைப்புச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்டுவதற்காக, இந்தத் தொழில்களையும் தொழிலாளர் நலச்சட்டங்களின் வரம்புக்குள் கொண்டுவந்து இங்குள்ள தொழிலாளர்களுக்கும் 8 மணிநேர வேலை, கண்ணியமான பணியிடச்சூழல், பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்கிற குரல் எழத்தொடங்கும் இவ்வேளையில் ஒட்டுமொத்த தொழிலாளர்களது வாழ்வையும் காவுகேட்கிறார் நாராயணமூர்த்தி. 

கடினமாக உழைத்தால் வாழ்க்கை மேம்படும் என்கிற பசப்பலுக்கு எதிர்நிலையாக தொழிலாளர்களது வாழ்வனுபவம் கொடியதாக இருக்கும் இந்த நிலையில்தான் மேலும் கடினமாக வாரத்திற்கு 90 மணிநேரம் உழைக்குமாறு அறைகூவல் விடுத்திருக்கிறார் எல்&டி தலைவர் சுப்ரமணியன். அதாவது வாரத்தின் ஏழுநாட்களும் நாளொன்றுக்கு சுமார் 13மணிநேரம் வேலை செய்யவேண்டுமென்றார். ஆறுநாள் வேலைசெய்தால் ஓய்வுக்கென ஊதியத்துடன் ஒருநாள் ஒதுக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியாத சுப்பிரமணியன், ஞாயிற்றுக்கிழமைகளில் அப்படி எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று பொரிந்துத் தள்ளியிருக்கிறார். 

இந்தியப் பெண்கள் பிறப்பெடுப்பதே ஞாயிற்றுக்கிழமைகளில் புருசனுக்கு முகத்தைக் காட்டிக் கொண்டிருப்பதற்காகத்தான் என்பதான சுப்பிரமணியனின் பின்தங்கிய இந்த வக்கிரப் பார்வைக்கு மாறானதாக இருக்கிறது உண்மை நிலவரம். 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்களில் 32.8 சதவீதத்தினர் பெண்கள் என்கிறது ஒன்றிய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள Female Labour Utilization in India என்னும் அறிக்கை. பொருளீட்டுதல் மட்டுமன்றி, புருசனுக்கு முகத்தைக் காட்டிக்கொண்டிருப்பதை விடவும் வீட்டைப் பராமரித்தல், உணவுத்தயாரித்தல், குழந்தை வளர்ப்பு, முதியோரை பேணுதல் என்று ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட ஒவ்வொருநாளும் வேறுபல முக்கிய கடமைகள் பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன என்பதை சுப்ரமணியனின் ஆணாதிக்க மனம் பார்க்க மறுக்கிறது. சரி, அப்படி ஒரு ஆண்/ பெண் தொழிலாளி தன் இணையரின் முகத்தையே பார்த்து சொக்கிப்போய் ரசித்துக் கொண்டிருந்தால்தான் இந்த சுப்பிரமணிக்கு என்ன நோக்காடு வந்தது? அன்பும் காதலுமான ஒரு வாழ்க்கைக்காகத்தான் மக்கள் உழைக்கிறார்களேயன்றி உழைப்பதற்காக பிறக்கவுமில்லை, வாழவுமில்லை.  இயந்திரங்களுக்கே கூட ஓய்வு தேவைப்படும்போது மனிதர்களை இயந்திரங்களைவிடவும் கீழ்நிலைக்குத்தள்ளி இந்த நாராயணமூர்த்திகளும் சுப்பிரமணியன்களும் எட்ட விரும்பும் இலக்கும் வளர்ச்சியும் யாருக்கானவை? 

‘‘பனிரெண்டு மணிநேர வேலை மிகையானது, அதைப் பதினோரு மணி நேரமாகக் குறைக்க வேண்டும், மேலும் சனிக்கிழமை வேலை இரண்டுமணியோடு முடிந்துவிட வேண்டும்... கடந்த நான்காண்டுகளாக எங்கள் நிறுவனங்களில் நாங்கள் அவற்றை முயற்சி செய்தோம், அவை நன்றாகப் பயனளிப்பதை அறிகிறோம். சராசரி உற்பத்தி வீழ்ச்சியடைவற்குப் பதிலாக உயர்ந்துள்ளது’’ என்று 1860ஆம் ஆண்டில் ஒரு முதலாளிக்கு இருந்த தெளிவு இந்த 21ஆம் நூற்றாண்டின் இந்திய முதலாளிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. 

‘வேலை செய்யாமல் சோம்பலாக இருப்பதை ஒழிக்கும் பொருட்டும், பெருமிதம் மற்றும் விடுதலை உணர்வைத் திசைதிருப்புவதற்கும், ஏழைகளை ‘‘சிறந்த தொழிலகங்களில்’’ அடைக்க வேண்டும் என்று தொழிற்துறை குறித்த கட்டுரைகளின் ஆசிரியர் முன்மொழிகிறார். அந்தத் தொழிலகங்கள் பயங்கரமானவையாக இருக்கவேண்டும், அங்கு நாள் ஒன்றுக்குப் பதினான்கு மணிநேரம் வேலை வாங்கப்பட வேண்டும், உணவுக்காக கழித்தது போக, முழு பனிரெண்டு மணிநேரம் மீதமாக வேண்டும். நாள் ஒன்றுக்குப் பனிரெண்டு மணிநேர வேலை, அதுதான் 18ஆம் நூற்றாண்டு மனிதாபிமானிகள் மற்றும் நியாயவாதிகளின் இலட்சியமாக இருந்தது. இந்தத் தீவிர மனிதாபிமானிகளைவிட நாம் எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறோம் பாருங்கள்!’ என்று 19ஆம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் எழுதிய பால் லபார்க் ( பிரான்ஸ் கம்யூனிஸ்ட் மற்றும் கார்ல் மார்க்ஸின் மருமகன்), இந்த பூமி தொழிலாளர்களின் கண்ணீர் பள்ளத்தாக்காக இருப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றார். அது உலகின் பலபாகங்களில் ஓரளவுக்கு சாத்தியமுமானது. ஆனால் இந்திய முதலாளிகளும் ஆட்சியாளர்களும் இந்த நாட்டை தொழிலாளர்களின் கண்ணீர் பள்ளத்தாக்காகவே வைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டுள்ளனர்.  

முதலாளிய ஆதரவாளர்கள் நடப்புக்காலத்தை ஐந்தாம் தலைமுறை தொழிற்புரட்சிக்காலம் என்ற அலங்காரமாக சொல்லிக்கொண்டாலும் இந்திய முதலாளிகள் 18ஆம் நூற்றாண்டுக்குரிய - முதலாம் இரண்டாம் தொழிற்புரட்சிக் காலத்திய ஈவிரக்கமற்ற சுரண்டல் உரிமையையே விரும்புகிறார்கள். அதற்கிசைவாக ஆட்சியாளர்களை ஆட்டுவித்து தொழில் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களைத் திருத்துகிறார்கள். 18, 19ஆம் நூற்றாண்டுகளில்  இருந்ததைப் போன்ற - சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்த்தறியவே இயலாதபடி தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் கூட்ட வேண்டுமெனக் கொக்கரிக்கிறார்கள். 

உலகளாவிய அளவில், 2016ஆம் ஆண்டு வாரத்திற்கு 55 மணிநேரம் வேலைசெய்த தொழிலாளர்களில் 3,98,000 பேர் பக்கவாதத்தாலும் 3,47,000 பேர் இருதயநோய் பாதிப்பினாலும் மாண்டுபோனார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ள மறுத்து வேலைநேரத்தை இரட்டிப்பாக்க வேண்டுமெனும் கொடூரமான யோசனைகளை முன்வைக்கிறார்கள். எட்டுமணி நேர வேலை நாளுக்காக உலகெங்கும் போராடியவர்களின் தியாகத்தையும், இங்கு அந்த உரிமைக்கு வழியமைத்த அண்ணல் அம்பேத்கரின் பங்களிப்பையும் உதாசீனம் செய்யும் அவர்கள், அதிகப்படியான நேரம் வேலை செய்வதால் உண்டாகும் உடல்நலக்கேடு, உளவியல் பிரச்னைகள் காரணமாக நாட்டின் குடிமக்களில் பெரும்பகுதியினரை இயல்பான மனிதவாழ்வுக்கு தகுதியற்றவர்களாக மாற்றுவதற்கும் துணிந்திருக்கிறார்கள். 

வேலையையும் எஞ்சிய தனிப்பட்ட வாழ்வையும் (Work-Life Balance) ஒன்றுக்கொன்று முரணில்லாத வகையில் அமைத்துக்கொள்வதற்கான தொழிலாளர் உரிமை பற்றிய விவாதங்கள் உலகெங்கும் நடந்துவரும் காலமிது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இசைவான விகிதத்தில் வேலைநேரமும் வேலைநாட்களும் குறைக்கப்பட்டு தொழிலாளர்களது வாழ்க்கைத் தரம்  சமகாலத் தன்மையுடையதாய் மேம்பட வேண்டும் என்ற இலக்கையும் உள்ளடக்கியது இவ்விவாதம். வாழ்வின் அனைத்து இன்பங்களையும் துய்ப்பதற்கான கற்பனையும் விருப்பமும் வாய்ப்பும் சுதந்திரமும் தொழிலாளர்களுக்கு உண்டு. அதற்கிசைவாகவே எட்டு மணிநேரம் வாழ்வாதாரத்திற்காகவும் எட்டு மணிநேரம் வாழ்வதற்காகவும் எட்டு மணிநேரம் உறங்குவதற்காகவுமாக ஒவ்வொரு நாளையும் பகுத்துக்கொண்டுள்ளோம். இதில் நமது எந்தவொரு நொடியையும் யாரிடமும் இழக்கவும் கூடாது, இரவல்தரவும் முடியாது.

“ஓ! ஓய்வே,
வேலை என்னும் இந்த நீங்காத் துயரத்திலிருந்து மீள்வதற்குக் கருணை காட்டு!
ஓ! ஓய்வே,
கலைகளின் தாயே,
உயர்ந்த விழுமியங்களின் தாயே,
மனித இனத்தின் வலிகளுக்கு நீ தைலமாக இரு!” 

மேற்கோள்கள்:

·         உழைப்பை ஒழித்தல், பால் லபார்க் & பாப் பிளாக்

·        Seventy-Hour Working Week: A Reflection of Capital's Essence, R Karumalaiyan


நன்றி: விகடன்.காம், 2025 ஜனவரி 13

 

புதன், ஏப்ரல் 26

சிஐடியு - ஏஐடியுசி மே தினச் சூளுரை



தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!  ஒன்றிய எதேச்சதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், ஏஐடியுசி மாநிலப் பொதுச்செயலாளர் ம.இராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுக்கும் கூட்டறிக்கை வருமாறு:

1886இல் சிகாகோவில் நடைபெற்ற 8 மணிநேர வேலைக்கான போராட்டம், துப்பாக்கிச்சூடு, மரண தண்டனை ஆகியவற்றின் நினைவாக மே தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 1889இல் பிரடெரிக் ஏங்கல்ஸ் தலைமையில் நடந்த இரண்டாம் அகிலம் இதை உலகத் தொழிலாளர் உரிமை நாளாகப் பிரகடனம் செய்தது.

சென்னை மேதினம்-100

இந்தியாவில் முதல்முதலாக தமிழகத்தில், சென்னை கடற்கரையில் சிந்தனைச்சிற்பி தோழர் சிங்காரவேலர் 1923 ஆம் ஆண்டு மே முதல் நாள் செங்கொடியேற்றி மே தினத்தைக் கொண்டாடினார். அது நிகழ்ந்து நூற்றாண்டு நிறைகிறது. பெருமைக்குரிய அந்த நிகழ்வை நினைவிலேந்தி தமிழ்நாட்டில் உழைக்கும் மக்கள் அனைவரும் மே தினத்தை, செங்கொடிகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டாடுவோம். வரலாறு காணாத உலக முதலாளித்துவ நெருக்கடியினால் வேலையிழப்பு, கதவடைப்பு, லேஆப், ஊதிய வெட்டு அதிகரித்து வருகிறது. நெருக்கடிச் சுமைகள் முழுவதும் சாதாரண உழைப்பாளி மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய சில முதலாளிகளுக்கு மீட்புத் திட்டங்கள் என்ற பெயரால் பெருமளவு சலுகைகள், தொழிலாளிகளுக்கோ துன்ப துயரங்கள்.  இக் கொடுமைகளுக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றிலும் அலைஅலையான வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. போராடும் உழைப்பாளிகளுக்கு மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் ஆர்எஸ்எஸ் - பாஜக அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள், கடந்த காலங்களை விட பெருமளவு அதிகரித்துள்ளன. தொழிலாளர் சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதலை தொடுக்கிறது. இந்தச் சட்டங்களை எதிர்த்து தொழிலா ளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களின் விளைவாக ஒன்றிய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் விதிகளை உரு வாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டு வருகின்றன. சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம், பணிப்பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு போன்றவை பறிக்கப்படுகின்றன. இதனை எதிர்த்துப் போராடும் உரிமைகளும் கூட தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. 

பெருகி வரும் வேலையின்மை

கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு பழைய உற்பத்தி நிலைக்குச் செல்ல முடியவில்லை. ஒன்றிய அரசு இந்தத் தொழில்களை செயலூக்கப்படுத்த எடுத்த நடவடிக்கைகள்  உருப்படியான பலன் எதையும்  தரவில்லை.  பெருகிவரும் மோசமான வேலையின்மை கவலை அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் வேலை இழப்பும், ஆலை மூடலும், தொழிற்சாலைகளில் மட்டுமின்றி ஐடி துறையிலும் பெருகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வேலை வாய்ப்புச் சந்தையில் 80 லட்சம் இளைஞர் கள் சேருகிறார்கள். வேலையின்மை 34 சதவீதம் என அதன் உச்சத்தை தொட்டுவிட்டது. கிராமப்புறப் பொருளாதாரத்தை ஓரளவுக்கு பாதுகாத்து வந்த தேசிய கிராமப்புற வேலை உறுதி அளிப்பு திட்டத் தொழிலாளர் களுக்கான நிதி 30 சதவீதம் அளவுக்கு வெகுவாக  குறைக்கப்பட்டதால் அவர்களது வேலை பெறும் உரிமையும் பறிக்கப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டில் 19 கோடியாக இருந்த வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை, 2022இல் 35 கோடியாக அதிகரித்துள்ளது. பசியின் கொடுமையால் 5  வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரண விகிதம் 65 சதவீதமாக பெருகி உள்ளது என ஒன்றிய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கிறது. அதேசமயம் நாட்டின் முதல் 10 பணக்காரர்களின் சொத்து 27.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதிலும் முதல் 5 பேரிடம் 72 சதவீத சொத்துக்கள் குவிந்துள்ளன.

அனைத்துத் துறையிலும் தோல்வி

அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் அதிகரிப்பு,  நிலக்கரி, தொழில்துறை உதிரி பாகங்கள், இயந்திரங்கள் மற்றும் மின்னணுப் பொருள்கள் ஆகியவற்றில் கட் டாய இறக்குமதி போன்றவற்றால் பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பற்றாக்குறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றின் உள்ளடக்கம் அபரிமிதமாக அதிக ரித்து; ஏற்றுமதியில் நாட்டிற்கு வர வேண்டிய பலனை முழுவதுமாக பறித்து அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு  ரூ.82 க்கும் மேல் எப்போதும் இல்லாத  அளவிற்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் தங்கக் கையிருப்புகள் கூர்மையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்தி யாவின் வெளிநாட்டு கையிருப்பு 564 பில்லியன் டாலர்களாக வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பெரும் தொகைகள் அதானி குழும நிறுவனத்திற்கு அள்ளி வழங்கப்பட்டுள்ள உண்மையை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. பிரதமர் தனிப்பட்ட ஆர்வத்துடன் அதானி நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சிக்கு பல்வேறு நாடுகளுடன் தொடர்பு கொண்டதும்,  தன்னுடன் கௌதம் அதானியை எப்போதும் அழைத்துச் சென்றதும் உலகம் முழுதும் அப்பட்டமாகத் தெரிகிறது. எல்லாத் துறைகளிலும் தோல்வி அடைந்த ஒன்றிய  அரசு நமது மதச்சார்பற்ற அரசியலமைப்பை முற்றிலுமாக சிதைக்க முற்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவை ஒரு பெரும் பான்மை வகுப்புவாத இந்து ராஷ்டிரம் ஆக மாற்றும் திசையில் வேகமாக முன்னேறி வருகிறது. டாக்டர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை ஆர்.எஸ்.எஸ் முழுமையாக எதிர்க்கிறது. அதோடு சட்டத்தை கையிலெடுத்துக் கொள்கிறது. ராமநவமி தினத்தன்று பல்வேறு இடங்களில் இக்கும்பல் நடத்திய வன்முறை  வெறியாட்டத்தை கூச்சமில்லாமல் மத நடவடிக்கை என்று பிரச்சாரம் செய்கிறது.  அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சிக் கொள்கை கடுமையாகத் தகர்க்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பின் நான்கு அடிப்படை தூண்க ளான மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூகநீதி மற்றும் பொருளாதார இறையாண்மை ஆகியவை கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. தேசிய சொத்துகளைக் கொள்ளையடிப்பது, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, தேசிய பணமாக்கல் திட்டம் இவை அனைத்தும் கார்ப்ப ரேட்டுகளுக்கு தேசத்தின் சொத்துகளை கொள்ளைய டிப்பதற்காகவே வழிவகுத்துள்ளது. கார்ப்பரேட்டுகளின் நலன்களை பாதுகாப்பது தேசத்தை அழிவுப்பாதைக்கு  இட்டுச்செல்லும்  மக்கள் விரோத,  தேச விரோத பாசிச அரசை அகற்றுவதே இந்த மே நாள் சபதமாகட்டும்.

தமிழ்நாட்டில்...

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 60 சதவீதம் பங்களிக்கின்ற மொத்த தொழிலாளர்களில் 94 சதவீதம்  தொழிலாளர்களை கொண்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.  மாநில நல வாரியங்கள் புரட்டிப் போடப்படுகின்றன. நல வரி வசூல் அதிகாரத்தையும் நிதி பலன் வழங்கும் திட்டங்களையும் ஒன்றிய அரசே எடுத்துக் கொள்கின்றது.  இதன் விளைவாக பல்வேறு மாநிலங்களில் கட்டிடத் தொழிலாளர் நலவாரிய நிதியாக வசூலிக்கப்பட்டு செலவிடப்படாமல் ரூ.38 ஆயிரம் கோடி ஒன்றிய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.  நாட்டிலேயே மிக அதிகமான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம்,  உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. சுமார் 2 கோடி தொழிலாளர்கள் நேர்முகமாகவும் இதர 2 கோடி பேர் மறைமுகமாகவும்  பணி செய்கிறார்கள். இவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையை தரக்கூடிய சம்பளத்தை வழங்குவதை உறுதி செய்வதும், சமூகப் பாதுகாப்பு தருவதும் அரசின் இன்றியமையாத கடமையாகும். நிலவும் வேலையின்மை பிரச்சனையில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து பணி புரிகின்றனர். அவர்கள் மீது  தாக்குதல் நடத்தப்படுவதாக பொய்யான வீடியோக்களை, தனது அரசியல் ஆதாயத்திற்கு பாஜக பயன்படுத்தியதையும் அதன் விளைவாக நாடு முழுவதும் அச்ச உணர்வை உரு வாக்கிய கொடூரத்தையும் நாம் நன்கு அறிவோம். 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?

பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்நாள் முழுக்க வேலை பார்த்தும் நிரந்தரம் செய்யப்படாமல் காண்ட்ராக்ட் என்ற பெயரிலும் அவுட்சோர்சிங் என்ற பெயரிலும் தினக் கூலிகளாகவே வைக்கப்பட்டி ருக்கிறார்கள். தமிழகத்தில் போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளை போன்ற கேந்திரமான நிறுவனங்களில் ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் போன்ற பெயரில் நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளுக்கு வேட்டு வைக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி,  தொழிலாளர் துறை போன்றவற்றில் கீழ் நிலையில் பணி புரியும் சி அன்ட் டி பிரிவு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் அந்த இடத்தில் புதிய ஆட்களை நியமிப்பதற்கு பதிலாக அவுட்சோர்சிங் என அரசாணை வெளியிடப்பட்டது என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று உள்ளது. உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேர உரிமை மறுக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு முன்மொழிந்துள்ள 87 மற்றும் 89 விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. ஆளும் வர்க்கமும் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. மீறி சங்கம் அமைத்தால் தொழிலாளர்கள் பணி நீக்கம்,  இட மாற்றம் பொய் வழக்கு என பழிவாங்கப்படுகிறார்கள். பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள், தலையிட வேண்டிய தொழிலாளர் துறையோ செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. தகவல் தொடர்புத்துறையில் தற்போது உலக மந்த நிலையை காரணம்காட்டி தமிழகத்தில் இளம் தொழிலாளர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் வேகப்படுத் தப்பட்டுள்ளது. இத்தொழிலாளர்களை வெளியேற்ற எந்தவிதமான சட்டவிதிகளையும் நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை. 

பணி நிரந்தரமின்மை

பல்லாயிரக்கணக்கான இளம் தொழிலாளர்களை வேலையை விட்டு வெளியேற்றுவதை மாநில அரசு வேடிக்கை பார்ப்பதோடு அல்லாமல் வாய்மூடி மௌ னியாகவும் இருக்கிறது. அதே போன்று ஆப் மூலமாக பணிபுரியும் கீக் ஊழியர்கள் பணி பாதுகாப்பற்ற சூழலில் குறைந்த வருவாயில் பணியாற்றுகிறார்கள். இத்தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர் சட்டங்கள் இவர்களுக்குப் பொருந்தாதாம். இவர்களை தொழிலாளர் சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டிய தொழிலாளர் துறை இவர்களது முதலாளி யார் என்று தேடுகிற தாம். இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் போனால் அனைத்து தொழில்களிலும் உள்ள தொழிலாளர்களை கீக் தொழிலாளியாக மாற்றும் ஆபத்து உள்ளது.  தமிழகத்தில் திட்ட ஊழியர்களாக பணியாற்றும் அங்கன்வாடி, ஆஷா,  மக்களை தேடி மருத்துவம், என்சிபிஎல் போன்ற ஊழியர்களை பணி வரன்முறைப்படுத்த எந்த முயற்சியும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசின் நிரந்தரத் தகுதி அளித்தல் சட்டம் 1982 கூறுகிறது. இந்த மானியக் கோரிக்கையில் கூட அந்த சட்டப்படி 237 தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்த தீர்ப்பளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் அவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டார்களா என்பது பற்றி சட்டமன்ற கொள்கைக் குறிப்பில் தகவல் எதுவும் இல்லை.

குறைந்தபட்ச ஊதியம்...

இந்தியாவிலேயே மிக குறைவாக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்று ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன.  எல்ஐசி முடிவுப்படி தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்கான தொகையை குறைந்தபட்ச ஊதியமாக வழங்கிடல் வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தையும் வழங் காமல் வேலை அளிப்பவர்கள் நீதிமன்றம் சென்று இழுத்தடிப்புச் செய்கிறார்கள். இவைகளுக்கு சிறந்த உதாரணம் மருந்து விற்பனை பிரதிநிதிகளின் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து மூன்றாண்டுகளுக்கு மேலாகியும், உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றுவரை தொழிலாளர் துறையினால் அமலாக்க முடியவில்லை. தோட்டம் போன்ற துறைகளிலும் இதே நிலை நீடிக்கிறது. தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதாரரீதியாக  வளர்ந்த மாநிலங்களில் இரண்டாமிடத்தை வகித்தாலும், தொழிலாளர்களின் ஊதியம் இந்தியாவின் சராசரி யிலிருந்து ரூ.2500 குறைவாக உள்ள போதும் சமூக நீதி பொருளாதாரக்கொள்கை என்பது வாய் வார்த்தையாகவே உள்ளது. ஒன்றிய அரசின் பொதுத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கும் அதே வேளையில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை  தனியார் மயமாக்கும் நடவடிக்கை களில் முனைப்புக் காட்டுவது தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கே விரோதமானதாகும். 

சட்டமீறல்கள் பெருமிதமா?

தமிழக போக்குவரத்துத்துறைக்கு நெடிய வரலாறு உண்டு இத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க அதிமுக முயற்சித்தபோது அதை எதிர்த்து நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பாதுகாத்தோம். மின்வாரியத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் வேண்டுமென்றால் தனியார்மயத்தை ஏற்க வேண்டும் என நிர்பந்திப்பதும் ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கைகளுக்கு ஒத்திசைவாகவே உள்ளது.  மாநில அரசை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களிலும் உள் ளாட்சி மற்றும் இசேவை துறைகளிலும் தொழிலாளர் சட்டங்கள் அமலாக்கப்படுவதில்லை. இந்த சட்ட மீறல்கள் செய்வதை அதிகாரிகள் பெருமிதமாக கருது கிறார்கள். ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொய்வின்றி வாதாடுகிறது. இவைகளை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் ஒன்றிய அரசு பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் தொழிலாளர்களின் உரிமையை பறிப்ப தற்கும் 44 சட்டங்களை சுருக்கி நான்கு சட்டத் தொகுப்பு, வெளியிட்டது. ஒன்றிய ஆளும் கட்சியின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இதனை எதிர்க்கின்றன. தமிழ்நாடு அரசு இயல்பாகவே சட்ட தொகுப்புகளை எதிர்க்க வேண்டும். ஆனால் இந்த சட்ட தொகுப்புக ளுக்கு வரைவு விதிகளை தமிழ்நாடு அரசு தொழி லாளர் துறை வெளியிட்டது.  அந்த விதிகளை உறுதி செய்யாமல் தடுக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துச் சங்கங்களும் ஒரே குரலில் அரசுக்கு எடுத்துரைத்தது. ஆனால் ஒன்றிய அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைமைகள் சட்டத்தொகுப்பு இதுவரை அமல் நடத்தப்படவில்லை என்பதால், அதிலுள்ள வேலை நேரத்தில் மாறுதல்

உள்ளிட்ட விசயங்களை முன்னதாகவே செயல்படுத்தும் வகையில் தொழிற்சாலைச் சட்டத்தை திருத்துவதற்கான மசோதா 12.04.2023இல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.  இதன் மூலம் தொழிலாளர்களின் வேலைநேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து பன்னிரெண்டு மணி நேரமாக்கிட, முதலாளிகளின் முப்பது ஆண்டு கால கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. 75 ஆண்டுகாலம் எந்த அரசும் செய்யத் துணியாத தொழிற்சாலை சட்டத்திருத்தத்தை முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செய்து தமிழக உழைப்பாளிகளுக்கு ஊறு விளைவித்துள்ளது.  

மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் உட்பட பல்வேறு முத்தரப்புக் குழுக்கள் உள்ளன. கடந்த காலத்தில் பத்து ஆண்டுகளாக இந்த குழுக்கள் அனைத்தும் கூட்டப்படாமலேயே இருந்தன. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இந்த குழுக்களின் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. தொழிலையும், தொழிலாளர்களையும் பாது காப்பதற்கான பல்வேறு கருத்துக்கள் இவற்றில் முன்வைக்கப்பட்டன. அவற்றை பரிசீலிப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் உரிய முயற்சிகள் உண்டா எனில் கேள்விக்குறியே. எனவே ஒன்றிய,மாநில அரசுகளிடமிருந்து  தொழிற்சங்க இயக்கத்தின் கூட்டுபேர உரிமை, ஜனநாயக  உரிமை, சுதந்திர  உரிமைகளை மீட்டெடுப்போம். தொழிலாளர், விவசாயிகள், மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம். ஒன்றிய சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று  இந்த மே நாளில் சபதமேற்போம்.

தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! 

தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக!

மே தினம் நீடூழி வாழ்க! புரட்சி ஓங்குக!


நன்றி: https://theekkathir.in

திங்கள், ஏப்ரல் 24

சூரியனையே பார்க்கமுடியாதபடி செய்துவிடாதீர் - ஆதவன் தீட்சண்யா

தமிழ்நாட்டில் தனியார் தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களது வேலைநேரத்தை 8மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை ஏப் 21 அன்று திமுக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. அன்றைக்கு காலை சிபிஐஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி போன்ற தோழர்கள் முதலமைச்சரைச் சந்தித்து இந்தச் சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டாமென்றும், பொருளாய்வுக்குழுவுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதலமைச்சரும் சம்மதித்திருந்த நிலையில் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களிடமிருந்தும் தோழமைக்கட்சியினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்தச் சட்டத்திருத்தம் பற்றி இன்று தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப் போவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வந்து அரசுடன் கலந்துபேசியதை மட்டும் வைத்துக்கொண்டு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிவிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப்போவதாக அறிவித்திருப்பதானது மிகவும் காலந்தாழ்த்தி மேற்கொள்ளப்படும் பொருத்தமற்ற நடவடிக்கை. எதிர்ப்புக்கு செவிமடுக்கிற ஜனநாயகப்பண்பு இந்த அரசிடம் எந்தளவுக்கு உள்ளது என்பதற்கு இந்த அழைப்பை ஓர் அளவுகோலாக கருதமுடியாது. அது பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தது.  

 முதலீட்டாளர்களுக்கு அரசு கொட்டிக்கொடுக்கிற சலுகைகளையெல்லாம் இங்கிருக்கிற ஒரு எருமைக்குக் கொடுத்தால்கூட அது தொழிலதிபராகிவிடும். அதற்கு மேலும் முதலீட்டாளர்கள் இப்படியானதொரு சட்டத்திருத்தத்தை கோரியதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. வாயும் வயிறுமின்றி உடல்முழுக்க கை முளைத்தவர்களாக தொழிலாளர்கள் இருந்துவிட்டால் உற்பத்தியைப் பெருக்கி குமித்துவிடலாமே என்கிற அங்கலாய்ப்பு அவர்களுக்கு எப்போதுமே இருந்து வருவதுதான். நாளையே அப்படியொரு கோரிக்கையை வைத்தால், தொழிலாளிகளை ஆய்வுமேசையில் கிடத்தி அறுவைச்சிகிச்சையைத் தொடங்குமா அரசு?

எட்டு மணி நேர வேலைநாள் என்பதில் இருக்கும் அறிவியல் மற்றும் அரசியல் அடிப்படைகளைத் தெரிந்தே அதை தகர்த்ததன் மூலம் திமுக அரசு தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கே துரோகம் செய்துள்ளது. இதைச் சொன்னதுமே சீனாவில் இல்லையா என்கிற கேள்வி சாமர்த்தியமாக முன்வைக்கப்படுகிறது. சீன அரசு தொழிலாளர் விரோதப் பாதையில் செல்லுமானால் அதை அந்நாட்டின் தொழிலாளிகள் எதிர்ப்பார்கள். ஒருமைப்பாட்டுணர்வில் நாமும் எதிர்ப்போம். தொழில் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமென சீனாவிலிருந்து பின்பற்றத்தக்க எத்தனையோ திட்டங்கள் இருக்கும்போது அங்கு தோல்வியடைந்த அல்லது விரட்டியடிக்கப்பட்ட ஒரு விசயத்தைத்தான் திமுக அரசு பின்பற்ற வேண்டுமா? (இந்த ஆண்டு அங்கு மேதினக் கொண்டாட்டத்திற்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது)   

996 வேலைநாள் – அதாவது காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை – 6 நாட்கள் - என்கிற கருத்தாக்கம் சீனாவில் அறிமுகமானது. இது, நாளொன்றுக்கு எட்டுமணி நேரம், அதிகப்படியாக வாரத்திற்கு 44 மணிநேரம் என்கிற சீனாவின் வேலைநாள் சட்டத்திற்கு விரோதமானது, தாராளவாதக் கொள்கையை நோக்கி சீன அரசு சரிகிறது என்று அறிமுக நிலையிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் இந்த 996 வேலைமுறையை ஏற்கவிரும்பும் நிறுவனம் அதன் தொழிலாளர் அமைப்புகளுடன் பேசி இந்த முடிவை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. 996 வேலைமுறையை ஏற்றுக்கொண்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பல்வேறு பணப்பயன்கள் உறுதிசெய்யப்பட்டிருந்த போதும் பணிச்சுமையின் காரணமாக கடும் மனச்சோர்வுக்கும் உடல்ரீதியான பல துன்பங்களுக்கும் ஆளாகிவந்தனர்.  நான் மிகவும் களைப்படைந்துவிட்டேன், சூரியவெளிச்சத்தை கடைசியாக எப்போது பார்த்தேன் என்று நினைவிலில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 996ஐசியூ.காம் போன்ற இணையதளங்கள் (996 வேலைநாள் என்பது தொழிலாளர்களை ஐ.சி.யூ. சிகிச்சைக்கு அனுப்புவதுடன்தான் முடிகிறது என்பதைச் சுட்டும்விதமாக இப்பெயர்) எதிர்ப்புணர்வுகளை ஒருங்கிணைத்தன. கடைசியில், தொழிலாளர்களின் உடல், மனநலப் பிரச்னைகளில் சமரசமில்லை என்று பாதுகாப்புச் சட்டங்களை தீவிரமாக செயல்படுத்தப் போவதாக சீன அரசு அறிவிக்கவேண்டிவந்தது. இந்தச் சூழலில்தான் அங்கிருந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்துகொண்டு சீனாவின் 996 போல இங்கும் வேலைநாளை மாற்றும்படி கோருகிறார்கள். கார்ப்பரேட்டுகள் காலால் இட்ட வேலையை தலையால் செய்துமுடிக்கும் பாஜக அரசு ஆளைக் கொல்லும் இந்தத் திட்டத்தை நெகிழ்வான வேலைநாள் என்று வஞ்சகமாக ஏவியுள்ளது.      

இந்தியாவில் ஏற்கனவே முறைசாரா தொழில்களிலும், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் தொழிலாளர்கள் சற்றேறக்குறைய 12 மணிநேரம் வேலை பார்த்துவருகின்றனர். நாட்டின் சட்டப்பூர்வ வேலைநாளுக்கு விரோதமான இந்த உழைப்புச்சுரண்டல் பற்றிய பிரக்ஞையும் எதிர்ப்புணர்வும் போர்க்குணமும் அமைப்புரீதியாக திரளும் வாய்ப்பும் அற்றவர்களாக உள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு 12 மணிநேர வேலைநாளுக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு பொருளற்றதாகவும் நகைப்புக்குரியதாகவும் தெரியக்கூடும். 8 மணி நேர வேலைநாள் என்பதன் வரலாற்றையோ அதற்கான தியாகத்தையோ அறியாதவர்களுக்கு அது தேவையற்றதாகக்கூட தோன்றலாம். நியோ நார்மல் என்கிற பெயரில் எல்லா ஒழுங்கீனங்களையும் விதிமீறல்களையும் நியாயப்படுத்திக் கொண்டு அதற்குள் சாதகமானதைத் தேடியடைந்து  சமாதானமடைகிற, பீயிலே பொறுக்கிய அரிசியில் பிரியாணி ஆக்கித் தின்பதை பெருமிதமிதமாய் பேசியலைகிறவர்களும் கூட மனிதர்கள்தான். அவர்களது உடல்/மனநலனுக்கும் இந்த 12 மணிநேர வேலைநாள் என்பது கெடுதலானதே. எட்டு மணி நேர வேலை, பணிப்பாதுகாப்பு, ஓய்வு போன்ற அடிப்படையான கோரிக்கைகள் இவர்களுக்கும் தேவையானவையே.

8மணிநேர வேலை என்பதே 8 மணிநேரத்துடன் முடிந்துபோவதில்லை. உணவுத் தயாரிப்பது, -பணியிடத்திற்கு சென்று திரும்புதல் உட்பட அதற்கான முன்தயாரிப்புக்கென கூடுதலாக சிலமணி நேரங்களை – உறக்கத்திற்கும் ஓய்வுக்குமென இருக்கும் தமது சொந்த நேரத்திலிருந்து செலவிட வேண்டியிருக்கிறது. ஒருவர் எட்டுமணி நேரம் உழைப்பதனால் இழக்கும் ஆற்றலைத் திரும்பப் பெறுவதில் ஓய்வும் உறக்கமும் முக்கிய பங்கு வகிப்பதை அறிவியல்பூர்வமாக உணர்ந்தே அவற்றுக்கென தனியாக நேரப்பங்கீடு செய்யப்பட்டது. ஆனால் நடைமுறை வாழ்வில் உறக்கம் என்பதே ஓய்வு என்று திரிக்கப்பட்டுவிட்டதால் உழைப்புக்கும் உறக்கத்திற்கும் அப்பால் இன்னொரு வாழ்வு இருப்பதையே அறியாதவர்களாக அல்லது அறிந்தும் துய்க்கும் வாய்ப்பற்றவர்களாக தொழிலாளர்கள் நிலையிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 12 மணிநேரம் வேலை என்பது 12 மணிநேரத்துடன் முடியக்கூடியதா? முதலீட்டாளர்களின் லாபவெறிக்கு ஒவ்வொரு தொழிலாளியின் சொந்த நேரத்திலிருந்தும் மேலும் நான்கு மணிநேரங்களை அபகரித்துக்கொடுக்கப் போவதாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது அவசியம்.

மூன்றாவது ஷிப்ட் என்பதே இல்லாமல் போகும் நிலையில் ஒரு ஷிப்டுக்குத் தேவையான தொழிலாளர்கள் பணியமர்த்தப்படாமலே போகும் நிலையில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கதி என்ன என்பது ஒருபுறமிருக்க, அந்த ஷிப்டுக்கென தற்போதுள்ள தொழிலாளர் எண்ணிக்கை குறையுமா நீடிக்குமா? இரண்டு ஷிப்டு தொழிலாளர்களைக் கொண்டே நிறுவனத்தை இயக்கிவிட முடியும் என்கிற வகையில் அரசின் செல்லப்பிள்ளைகளான முதலீட்டாளர்களுக்கு ஒரு லாபம். வாரத்தில் மூன்று நாட்கள் நிறுவனத்தை மூடிவைப்பதனால் அந்த நாட்களில் (உணவு, வாகனம், மின் கட்டணம், தண்ணீர், இயந்திரத் தேய்மானம் போன்ற  நடைமுறைச் செலவுகள் மிச்சம் என்கிற வகையில் மற்றொரு லாபம் என்பதும் உண்மைதான். ஆனால் வாராவாரம் மூன்றுநாட்களுக்கு ஆலையை மூடிவைக்கவா முதலீட்டாளர்கள் ஆலைகளைத் திறப்பார்கள்? அது அவர்களின் வர்க்க இயல்புக்கு ஏற்புடையதல்ல. எனில் அந்த மூன்று நாட்களிலும் வேறு வகையாக ஆலையை இயக்குவதற்கான திட்டம் அவர்களுக்கு இருக்கும். 12 மணிநேரம் அமலானால் அப்போது அந்தத் திட்டமும் தன் கோரமுகத்துடன் வெளிப்படக்கூடும். ஒருவேளை நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளர்களையும் எஞ்சிய மூன்றுநாட்களில் தற்காலிக/ ஒப்பந்த/ பயிற்சி/ தொழிலாளர்களையும் கொண்டு ஆலையை இயக்குவது அவர்களது திட்டமாக இருக்கலாம். வேலையின்மையைக் காட்டி தற்காலிகத் தொழிலாளர்களையும் அவர்களைக்காட்டி நிரந்தரத் தொழிலாளர்களையும் பணியவைத்துச் சுரண்டுவதில் இந்திய முதலாளிகள் ஏற்கனவே மோசமான பல முன்னுதாரணங்களை உருவாக்கியுள்ளதை மறந்துவிட வேண்டாம்.   

ஒவ்வொரு வாரமும் வேலையற்று இருக்கப்போகிற மூன்றுநாட்களையும் என்னவிதமான ஆக்கப் பணிகளில் தொழிலாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்கிற முன்கணிப்பு ஏதும் அரசுக்கு இருக்கிறதா? நான்குநாள் உழைப்பின் அலுப்பை சேர்த்துவைத்து மூன்றுநாட்களில் தீர்த்துக் கொள்வது சாத்தியமா? இவ்விசயத்தில் ஒசூர் தொழிற்பேட்டையின் அனுபவம் ஒன்றினை பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

 ***

கனப்படுப்பை ஏன் மூட்டவில்லை? 

வீட்டில் நிலக்கரி இல்லை.

ஏன் நிலக்கரி இல்லை?

நிலக்கரி வாங்க பணமில்லை

ஏன் பணமில்லை?

அப்பாவுக்கு வேலை இல்லை.

அப்பாவுக்கு ஏன் வேலையில்லை?

அவர் வேலை செய்யும் சுரங்கத்தில் அதிகப்படியான நிலக்கரி கையிருப்பில் இருக்கிறதாம்.

-குழந்தைக்கும் தாயுக்குமிடையே மார்க்ஸ் காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த உரையாடல் காலங்கள் தாண்டி 21ஆம் நூற்றாண்டுக்கும் பொருந்தக்கூடியதே. முதலாளிகள், தொழிலாளிகளை வதைத்து அதிகப்படியான உற்பத்தியைப் பெற்றுவிடுவார்கள். சந்தையின் தேவையை விடவும் கூடுதலாக கையிருப்பில் உள்ள சரக்கு தேங்கிவிடும் பட்சத்தில் அந்தச் சுமையைத் தொழிலாளிகள் மீது ஏற்றிவிடும் தந்திரமாக கதவடைப்பு செய்து உற்பத்தியை முடக்கிவிடுவார்கள். அம்மாதிரியான நேரங்களில் “ஆஹா, மூடிய ஆலையைத் திறக்கும் வரை வேலையே இல்லை… ஜாலியோ ஜாலி…” என்று எந்தத் தொழிலாளியும் கும்மாளம் போடுவதில்லை. உழைப்பிலிருந்து அந்நியமாக்கப்பட்ட அந்த நாட்களைக் கடப்பது பற்றிய அச்சம் அவர்களை நிலைகுலையச் செய்கிறது.

 ஒசூரில் கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்று, 2008-09ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார மந்தநிலை காரணமாக போதுமான விற்பனை இல்லை என்றும் கையிருப்பு தீரும்வரை உற்பத்தியை முடக்கி வைப்பதாகவும் கூறிக்கொண்டு வாரத்தில் மூன்றுநாட்கள் கதவடைப்பு செய்தது. தொடக்கத்தில் சொந்தவேலைகள் சிலவற்றை முடித்துக் கொள்ள இந்த விடுமுறை நாட்கள் தொழிலாளிகளுக்கு பயன்பட்டதென்னவோ உண்மை தான். ஆனால், அடுத்தடுத்த வாரங்களும் அதேநிலை என்றபோது தொழிலாளிகள் சேர்ந்தாற்போல மூன்று நாட்களை ஒவ்வொரு வாரமும் எவ்வாறு கழிப்பது என்று தடுமாறிப்போயினர். எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையும் வேலையின்றி வெறுமனே இருப்பதனால் தாறுமாறாக யோசிப்பதுமாக தொழிலாளர்கள் கடும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகினர். ஆலை வளாகத்திலேயே சில தற்கொலை முயற்சிகள் நடந்தன. சிறந்த தொழிலாளி என்று பணிக்காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட விருதுகள் சான்றிதழ் ஆகியவற்றை நிர்வாகத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டு தொடர்ந்து வேலை தருமாறு கதறியவர்களும் உண்டு. உறக்கமின்றி அகாலத்தில் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் உலாத்துவது, மின்கம்பத்தை அல்லது ஓடும் சாக்கடையை வெகுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது என்றெல்லாம் சமனிலை இழந்த தொழிலாளர்களை   வீட்டுக்கு அழைத்துப்போய் படுக்க வைக்கும் பணியை தொழிற்சங்க ஊழியர்கள் இரவுதோறும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆலை நிரந்தரமாக இயங்கிய பின்னும்கூட இயல்புக்குத் திரும்ப அவர்களுக்கு காலம் தேவைப்பட்டது. (அந்த ஆண்டில் கையெழுத்தாக வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர் தரப்பை பலவீனப்படுத்த இந்த அச்சவுணர்வையும் நிச்சயமற்றத்தன்மையை நிர்வாகம் பயன்படுத்தப் பார்த்தது)

ஒரு தற்காலிக கதவடைப்பின் மூலம் வாராவாரம் வந்த மூன்றுநாள் விடுமுறையே தொழிலாளிகளின் ஆளுமையைச் சிதைக்குமென்றால் நிரந்தரமாகவே வாராவாரம் மூன்றுநாள் விடுமுறையில் அவர்கள் என்னவாகப் போகிறார்கள்? சும்மா இருக்கவொட்டாமல் வேறு இன்னுமொரு நிறுவனத்திற்கு தங்களை விற்றுக்கொள்ளும்படி அரசு விரட்டுகிறதா? அல்லது முதல் நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளியாகவும் அடுத்த நாட்களில் அத்துக்கூலியாகவும் வேலை பார்க்கும்படி நெட்டித்தள்ளுகிறதா? அப்படியும்தான் வேலை பார்த்து சம்பாதிக்கட்டுமே என்றும் கூட இன்றைய பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் சொல்லக்கூடும். ஆனால் சம்பாதித்துக் கொண்டேயிருந்தால் வாழ்வது எப்போது என்று தொழிலாளர்கள் நெடுங்காலமாய் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு விடையைத் தேடி கண்டையும் வரை வேலைநேரத்தை மாற்றமாட்டோம் என்கிற நிலைப்பாட்டை அமைச்சர்கள் இன்றைய கூட்டத்தில் அறிவிப்பது குடிமக்களுக்கும் ஆட்சிக்கும் நல்லது. இல்லையானால் சீனத் தொழிலாளி சொன்னதையே அமைச்சர்களுக்கும் முதல்வருக்கும் சொல்வோம்: சூரியனையே பார்க்க முடியாதபடி செய்துவிடாதீர். 

நாட்டையே நாம் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தங்கள் கட்சியின் சின்னம் என்பதற்காகவேனும் சூரியனை அன்றாடம் பார்க்கும்படியாக தொழிலாளிகளின் வேலைநேரம் மாற்றமின்றி நீடிப்பதை உறுதிசெய்யவேண்டும். அல்லது இன்னும் கூடுதல் நேரம் சூரியனைப் பார்க்கும்விதமாக வேலைநேரத்தை ஆறுமணிநேரமாகக் குறைத்து தன் தந்தையின் கனவை நனவாக்கவேண்டும். 

சனி, மார்ச் 18

ஒசூர் : தன் சதையைத் தானே அறுத்துத் தின்னும் அவலம் - ஆதவன் தீட்சண்யா

"ஒசூர் எனப்படுவது யாதெனின்" தொடர், scroll.in என்ற இணைய இதழில் வெளியான எனது நேர்காணல் (http://scroll.in/article/815373/interview-there-is-no-political-idea-this-is-what-happens-when-a-society-has-been-sedated) ஆகியவற்றால் உந்தப்பட்ட பத்திரிகையாள நண்பர் ஒருவர் தான் பணியாற்றும் நாளிதழுக்காக என்னிடம் எடுத்த நேர்காணல் இது. மிக நீண்ண்ண்ண்ண்ட பரிசீலனைக்குப் பிறகு இதை வெளியிடவியலாது என்கிற தகவல் அவருக்கு சொல்லப்பட்டதை  மிகுந்த சங்கடத்துடனும் வருத்தத்துடனும் பகிந்துகொண்டார்.  அதனாலென்ன, நீங்கள் வாசியுங்கள்...
1.     ஒசூர் எந்தக் காலகட்டத்தில் எந்தச் சூழலில் தொழில் நகரமாக மாறியது? ஒசூர் மக்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி கூறுங்கள்?

ஒசூர் என்பது குறிப்பிட்ட ஓர் ஊரின் பெயராக குறுகாமல் நிலவியல்தன்மை, தட்பவெப்பம், வாழ்நிலை மற்றும் பண்பாட்டு ஒருமையால் பிணைந்துள்ள ஒரு வட்டாரத்தின் பொதுப்பெயராக விரிந்துள்ளது. தற்போதைய ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய முன்று வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய இந்நிலப்பரப்பு கடல்மட்டத்திலிருந்து 3300 அடி முதல் 4500 அடி வரையான உயரத்தில் அமைந்த மலைப்பகுதி. மிதமான வெப்பமும் கடுங்குளிரும் கணிசமான மழைப்பொழிவும்  எங்கு பார்த்தாலும் ஏரிகள் நிறைந்த நீர்வளமும் கொண்ட பகுதி இது. பல்வேறு தமிழக மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்துவந்திருந்த போதிலும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியின் பெரும்பாலான மக்கள் தெலுங்கு அல்லது கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள். புதிய ஊர் என்பதை குறிக்கும் ஒச ஊரு என்கிற கன்னடச்சொற்களே ஒசூர் என மருவியது. 

திப்புவின் ஆளுகையில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை கைப்பற்றிய பிரிட்டிஷார், தங்கள் நாட்டின் தட்பவெப்பமே நிலவும் இப்பகுதிக்கு லிட்டில் இங்கிலாந்து எனச் செல்லப் பெயரிட்டு கொண்டாடினர். அப்போதைய சேலம் மாவட்டத்தின் தலைநகராக ஒசூர் மாற்றப்பட்டதற்கும் இதுவே காரணம். தங்களது உணவுத்தேவைக்கான புன்செய் தானியங்கள், மலர்வகைகள், மல்பரி ஆகியவற்றை பாரம்பரியமாக விளைவித்துவந்த இப்பகுதி மக்கள் காலப்போக்கில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கேரட் பீட்ருட் பீன்ஸ் காலிஃபிளவர் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிச் சாகுபடிக்கு மாறினர். 1824 ஆம் ஆண்டு ஒசூர் மத்திகிரியில் தொடங்கப்பட்ட குதிரைப்பண்ணை பிறகு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பண்ணைகளில் ஒன்றாக மாறி உள்ளூர் மக்களில் பலருக்கும்  வேலை வாய்ப்பளித்து வந்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்தொட்டு இப்பகுதியில் பணியாற்றுவதற்கென்று  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலரும் தங்களது பணிக்காலத்தின் முதற்கட்டத்தை இங்கேதான் தொடங்கவேண்டியிருந்தது. தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலிலிருந்து தட்பவெப்பம், மொழி, பண்பாட்டுச்சூழல், வாழ்க்கைத்தரம் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட இப்பகுதியில் பணியாற்றுவதை கடும் தண்டனையாகவே இவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். இங்கிருந்து மாற்றலாகிப் போனால் போதும் என்கிற கவலையால் பீடித்திருந்த இவர்களில் பலரும் உள்ளூர் சமூகத்தோடு ஒன்றாமலே இருந்திருக்கிறார்கள்.

***

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கென 1971ல் உருவாக்கப்பட்ட சிப்காட் நிறுவனம், ராணிப்பேட்டைக்கு அடுத்தபடியாக தனது இரண்டாவது தொழிற்பேட்டையை ஒசூரில் 1974 ஆம் ஆண்டு 1236 ஏக்கரில்  தொடங்கியது. (பிறகு 1980ல் 457 ஏக்கர், 1997ல் 179 ஏக்கர், 2004ல் 239 ஏக்கர் என விரிவடைந்தது.) மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சியோட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கை இதுவென சொல்லிக் கொள்ளப்பட்டாலும் பெங்களூருக்கு அருகாமை என்பதே ஒசூர் தேர்வானதற்கு முக்கிய காரணம். உள்கட்டமைப்பு வேலைகள் நிறைவடைந்து அடுத்துவந்த சில ஆண்டுகளில் ஒசூர் நகரத்திலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை ஆகிய ஊர்களுக்கான சாலைகளின் இருமருங்கிலும் ‘குண்டூசி முதல் குட்டி விமானம் வரை’ செய்வதற்கான நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உருவாகின. ஆயினும் இவற்றில் ஒன்றுகூட உள்ளூர் மக்களின் உழைப்பையும் ஆற்றலையும் உள்வாங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தன்மையையோ நோக்கத்தையோ கொண்டிருக்கவில்லை. மாவட்டத்தின் அப்போதைய சராசரி எழுத்தறிவே 29 சதவீதம் என்றிருந்த நிலையில் அதன் கட்டக்கடைசியான ஒசூர் பகுதியிலிருந்து இந்த நவீனத் தொழிற்சாலைகளுக்கு தேவைப்பட்ட கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதியோடு தயார்நிலையில் யாரிருப்பார்கள்? தங்களது மண்ணை விழுங்கி உருப்பெற்றுள்ள இத்தொழிற்பேட்டை தங்களுக்கானவை அல்ல என்கிற கடும்பாடத்தை உள்ளூர் மக்கள் எடுத்தயெடுப்பிலேயே விளங்கிக்கொண்டார்கள். தோட்டக்காரர், துப்புரவுப் பணியாளர் அல்லது காவலர் போன்ற கடைநிலை ஊழியங்கள்தான் அவர்களில் சிலருக்கு கிடைத்தன.  

2.  ஓசூர் தொழில்மயமானபோது, அங்கு தொழிலாளர்களாக புலம்பெயர்ந்தவர்கள் நிலை எப்படி இருந்தது? பிறகு அங்கே மாறிய சமூக, சாதிய சூழ்நிலைகள் பற்றி சொல்லுங்கள்?

எவ்வளவுதான் அதிநவீன இயந்திரமாயினும் மனிதக்கரங்கள் தான் அவற்றை தொட்டு உயிர்ப்பிக்கின்றன என்கிற பார்வை இங்கு மங்கலாகக்கூட அரசாங்கத்திற்கு கிடையாது. அதனால்தான், தொழிற்சாலைகளை அமைத்துக்கொள்ளத் தேவையான மூலதனம், இடம், தண்ணீர், மின்சாரம், சாலை, போக்குவரத்து, வரிவிலக்கு, சட்டப்பாதுகாப்பு என அனைத்தையும் முதலாளிகளுக்கு வழங்கிவிட்டு, அவற்றில் பணியாற்ற வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அடிப்படைத்தேவைகள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டாமல் ஒதுங்கிக்கொண்டது.  நாடு முழுவதுமிருந்து இங்கு வந்து குமிந்த தொழிலாளர்கள் தங்குமிடம் கழிப்பறை தண்ணீர் உணவு என்று ஒவ்வொன்றுக்கும் அலைய வேண்டியிருந்தது. முதலாவதாக, இங்கு நிலவிய தட்பவெப்பம் அவர்களில் பலருக்கும் புதிது. ஜூனில் தொடங்கி நவம்பர் வரையிலும் மழை. டிசம்பர் முதல் பிப்ரவரி கடைசிவரை பனி. அதிகாலையில் பகல் வேலைக்கு (டே ஷிஃப்ட்) கிளம்பினாலும் இரவுப்பணிக்குப் போய் திரும்புவதாயிருந்தாலும் வருடத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாட்களில் குளிரால் நடுங்க வேண்டியிருந்தது. 1984ல் நான் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் அலுவலகத்தின் அறைகளில் மின்சார சூடேற்றி (ஹீட்டர்) பகலிலும் கனன்றுகொண்டிருக்கும். வீட்டிலும் வெளியிலும் குளிர்கால ஆடைகளோடு நடமாட வேண்டியிருந்தது. ஏப்ரல் மே மாதங்களில் கூட மின்விசிறியின் தேவை உணரப்படாத காலமது. வெயிலடிக்கும், ஆனால் உறைக்காது, வியர்வையே வராது. எளிதில் களைப்படைய - ஆனால் ஒருவிதமான மந்தத்தன்மையை உருவாக்குவதாக இருந்தது இந்தத் தட்பவெப்பம். 

அடுத்தது, இவர்கள் அவ்வளவு பேரையும் தங்கவைத்துக் கொள்ளும் அளவுக்கான எண்ணிக்கையில் இப்பகுதியில் வீடுகள் இல்லை. ஒசூர் பகுதி மக்கள் தமக்கென கட்டி வாழ்ந்துவந்த பூர்வீக வீடுகளில் ஒரு பகுதியை ஒதுக்கி தொழிலாளர்களுக்கு வாடகைக்கு கொடுத்தார்கள். தேவையின் தீவிரத்தை ஒருவாறு யூகித்துக்கொண்ட சிலர் வாடகைக்கு விடுவதற்கென்றே அவசரடியாக வீடு போன்றவற்றை கட்டினார்கள். தொழிலாளர்களில் பலரும் படித்து முடித்தக் கையோடு வேலைக்கு கிளம்பி வந்தவர்கள். அவர்களுக்கு தனியாக அறையோ வீடோ தேவைப்படவில்லை அல்லது கிடைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க அவ்வாறு எடுத்து தங்குமளவுக்கு அப்போது அவர்களது வருமானமில்லை. எனவே அவர்கள் சின்னஞ்சிறு அறையைக் கூட நாலைந்து பேராக பகிர்ந்துகொண்டார்கள். வீடு என்றால் பத்து பதினைந்து பேர் வரை கூட நிறைந்திருப்பார்கள்.

சாதி மதம் வட்டாரம் என்பதெல்லாம் அவரவர்களுக்குள் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அவை அவர்கள் பிறரோடு கலந்து ஓரிடத்தில் வாழ்வதற்கு தடையாக இருக்கவில்லை. முன்பின் தெரியாத ஊரில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்துகொள்ளும் பக்குவத்திற்கு அவர்கள் அனிச்சையாக வந்த சேர்ந்தார்கள். பணி நேரத்தில் சில ஆலைகள் உணவு வழங்கினாலும் ஒருவேளையாவது வெளியில் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம், ஆனால் போதுமான உணவகங்கள் கிடையாது. நிரந்தரமாக கடையில் சாப்பிடுவதற்கு அவர்களது வருமானமும் ஒத்துழைக்கவில்லை. எனவே கூட்டாக சமைத்து உண்டார்கள். சாப்பாட்டில் அவர்கள் எதையும் விலக்கிவைத்ததில்லை. சம்பளம் வாங்கும் வாரத்தில் ஆட்டுக்கறியில் தொடங்கி கோழி மீன் பன்றி என்றாகி மாதக்கடைசியில் மாட்டிறைச்சி வாங்கி சமைத்துண்பது என்பதாக இருந்தது அவர்களது தெரிவு.

வாழிடம் பணியிடம் சார்ந்து தொழிலாளிகளிடம் முகிழ்த்துவந்த உணர்வு வர்க்க உணர்வாக மாறவேண்டிய கட்டாயத்தை தொழிற்சாலை நிர்வாகங்கள் உருவாக்கிவந்தன. புதிதாக தொடங்கப்பட்டவை என்று முதல் பத்தாண்டுகளுக்கு வரிமான வரி கட்டுவதிலிருந்தும், பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை கடைபிடிப்பதிலிருந்தும் தொழிற்சாலைகள்  விலக்கு பெற்றிருந்தன. இதனால் வேலை நேரம், ஊதிய மாற்றம், போனஸ், மருத்துவச் சிகிச்சை, விபத்துக் காப்பீடு, பணி நிரந்தரம், விடுமுறை, வாராந்திர ஓய்வு போன்றவற்றை நிர்வாகங்கள் மறுத்துவந்தன. சலுகைக்காலம் முடிந்தப்பின்னும் கூட நிர்வாகங்கள் இந்த நிலையை நீட்டித்து வந்தன. சங்கம் வைப்பதற்கும்கூட அனுமதிக்காத போக்கு. குறைந்தக்கூலியில் அதிக உழைப்பைப் பெற்றுவிட வேண்டும் என்கிற லாபவெறிக்கும், செலுத்திய உழைப்புக்கு நியாமானதொரு ஊதியத்தைப் பெற்றுவிட வேண்டும் என்கிற இயல்பெண்ணத்திற்கும் இடையேயான மோதல் பல்வேறு தொழிற்சாலைகளில் அமைதியின்மையை உருவாக்கியது. மக்கள்தொகைப் பெருக்கம், கடும் வாடகை, விலைவாசி, உழைப்புச்சுரண்டல், குறைந்தக் கூலி  என்பதான பல்முனைத் தாக்குதலை எதிர்த்துப் போராடும்படியான நெருக்கடிக்குள் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.

அரசு ஊழியர்களைப் போல மாற்றல் வாங்கிக்கொண்டு வேறெங்கும் போய்விடுவதற்கான வாய்ப்பேதும் தொழிலாளர்களுக்கு இல்லை. இங்குதான் இனி வாழ்க்கை என்றான பிறகு இடர்ப்பாடுகளையும் குறைபாடுகளையும் பெரிதுபடுத்தி புகாரிட்டுக்கொண்டிருப்பதை விட, இப்பகுதியை வாழத் தகுந்ததாக மாற்றிக்கொள்வது அவசியமாயிருந்தது. அடுத்துவந்த ஆண்டுகளில் தொழிலாளர்கள் நடத்தியப் போராட்டங்கள் அவர்களது சொந்தவாழ்க்கையில் மட்டுமல்லாது ஒசூர் பகுதியிலும் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்கின.

18-20 வயதில் வேலைக்குச் சேர்ந்து கூட்டாக ஓரிடத்தைப் பகிர்ந்துகொண்ட தொழிலாளர்கள் அடுத்துவந்த சில ஆண்டுகளில் திருமணத்தை நோக்கி நகர்ந்த போது தனித்தனி வீடுகள் தேவைப்பட்டன. அவர்களுக்கு வாடகைக்கு விடவும் விற்கவும் புதிதுபுதிதாக குடியிருப்புப் பகுதிகள் உருவாகின. பூர்வீகத்திலிருந்த சொத்து எதையேனும் விற்றோ அல்லது கடன்பட்டோ இங்கு சொந்த வீடுகளைக் கட்டினார்கள். தொடக்க ஆண்டுகளில் அரிதாக ஒன்றிரண்டு நிறுவனங்களில் மட்டுமே சில பெண்கள் வேலைக்கு அமர்த்திக்கொள்ளப்பட்டார்கள். திருமணமாகி இங்கு வந்தப் பெண்களில் ஒருபகுதியினர் குடும்பச்செலவுக்கு ஒத்தாசை என்கிற அளவில் தத்தமது கல்விக்கேற்ப சிறு குறு தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். அதுவரை ஆண்களின் தொழிற்பேட்டை என்றிருந்த ஒசூரின் முகம் இருபாலருக்குமானதாக மாறத்தொடங்கியது. தொழிலாளர்கள் தமது வருமானத்தை சுண்டுவிசையாக வைத்து மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், திரையரங்குகள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், வாகன விற்பனை நிலையங்கள் போன்றவற்றை இங்கு வரவைத்தார்கள். அதுவரை இப்பகுதிக்கு பெரிதும் அறிமுகமாகியிருக்காத தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொழுதுபோக்குகள், கலைவடிவங்கள், தெய்வங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், உணவுவகைகள் ஆகியவற்றை கொண்டுவந்து சேர்த்தவர்களும் தொழிலாளர்கள்தான். 


தனிப்பையன்களாக இருந்தவரையிலும் யாவரோடும் கலந்துண்டு வாழ்ந்த தொழிலாளர்களை திருமணம் மீண்டும் அவரவரது சொந்த சாதிக்குள் கொண்டு போய் திணித்தது. ஒண்ணும் மண்ணுமாய் உருண்டுபுரண்ட நட்பும் தோழமையும் முடிவுக்கு வந்தன. பொது இடங்களில் அல்லது பணித்தளத்தில் மட்டுமே  சந்தித்துக்கொள்கிறவர்களாக நண்பர்கள் மாறினர். எத்தனை பேர் வந்தாலும் ஏற்று இடமளிக்கும் விசாலத்தை சின்னஞ்சிறு அறைகள் கொண்டிருக்க, பென்னம்பெரிய தனித்த வீடுகளோ சொந்த சாதி மட்டுமே புழங்கும் இடமாக சுருங்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் தான் வெவ்வேறு தொழிற்சாலைகளில் சிதறுண்டிருக்கும் தத்தமது சாதியினரை அடையாளம் கண்டு ஒருங்கிணைக்கும் சாதிய அமைப்புகள் உருவாகின. ஒவ்வொருவருக்குள்ளும் உருவாகிவந்த தொழிலாளி என்கிற நவீன அடையாளத்தை சாதியம் என்கிற நச்சுணர்வு காத்திருந்து காவு கொண்டது. இதே காலக்கட்டத்தில் நாடு தழுவிய அளவில் அஞ்சத்தக்கவிதமாக வளர்ந்தவந்த மதவாதத்தில் கரைவதற்கு அது தொழிலாளர்களை தகவமைத்தது.

3. 90களில் உலகமயமாதலின் தாக்கம் ஒசூரை எப்படி பாதித்தது?

தொழில் நகரம் என்கிற அடையாளத்தை உலகமயமும் புதிய தொழிற்கொள்கையும் போக்கடித்தன.

* பெங்களூருக்கு அருகாமை, இதமான பருவநிலை, ஏறுமுகமான நிலமதிப்பு ஆகியவற்றுக்காக இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கறுப்புப்பணத்தால் வாங்கி கம்பிவேலிக்குள் அடைக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் சொந்தமண் மீதிருந்த பாத்யதையை முற்றுமுழுதாக இழக்கத் தொடங்கினர்.

* கட்டற்றச் சந்தை உலகளாவிய வாய்ப்புகளை நல்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனவலு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைக்கு ஒசூர் நிறுவனங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. விற்பனைத்தேக்கம், உற்பத்திக்குறைப்பு, ஆட்குறைப்பு, கதவடைப்பு, ஆலைமூடல் என நெருக்கடி மூண்டது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இயந்திரங்களைக் கொண்ட தொழிற்சாலைகளை திறந்துப் போட்டுவிட்டு தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது. புதிய தொழிற்பேட்டைக்குரிய சலுகைக்காலம் முடிவடைந்தபடியால் இதேபோன்ற சலுகை கிடைக்கின்ற வேறு இடத்துக்கு சில நிறுவனங்கள் ஓடிப்போயின. கடனையும் லாபத்தையும் வேறு துறைகளுக்கு திருப்பிவிட்டு நஷ்டக்கணக்கு காட்டிவந்த நிறுவனங்களும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டன.     

* பல உற்பத்திப்பிரிவுகளை மூடிவிட்டு ‘அவுட் சோர்சிங்’ முறைக்கு சென்றதால் அந்தந்த ஆலைமட்டத்தில் ஆட்குறைப்பு நடந்தது.

* வீட்டு உபயோகப் பொருட்களும் அதிக ஓடுதிறன் கொண்ட வாகனங்களும் இறக்குமதியாகப் போவதாய் கிளம்பிய வதந்திக்கே உள்ளூர் வியாபாரமும் தொழிலும் சுருண்டு விழுந்தன. ‘இந்தியர்களின் உடல்வாகு, மனோநிலை, சாலைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சுதேசி பைக்குகளையே வாங்குங்கள்’ என்று அநாமதேய துண்டறிக்கை மூலம் கெஞ்சும் நிலைக்கு தொழிற்சாலைகள் கீழிறங்கின. 

 4. சிறுதொழில் நிறுவனங்களின் நிலை என்னவாகியது?

* உதிரி பாகங்களை உள்ளூர் சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்தே அதுகாறும் கொள்முதல் செய்துவந்த பெருநிறுவனங்கள் ‘திறந்தச்சந்தையில் தரமிக்கப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதாய்’ அறிவித்தன. இதனால் உற்பத்திச்செலவை விடவும் குறைந்த விலைக்கு கொடுத்தாவது பெருநிறுவனங்களின் ஆர்டரைப் பெறவேண்டியிருந்தது. அதற்குரிய தொகை இழுத்தடித்தே கொடுக்கப்பட்டதால் கடனும் வட்டியும் சிறு-குறு தொழில் முனைவோரை நெறித்து தொழிலை நடத்தவிடாமல் விரட்டின. கடன்தொல்லையால் நடந்த தற்கொலைகளும் காணாமல் போதலும் உலகமயத்திற்கென கொடுக்கப்பட்ட பலிகள்தான்.

5. தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கம் பற்றி சொல்லுங்கள்?

* குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற பெரும் செலவினங்களை எதிர்கொள்ளும் வயதில் தொழிலாளிகள் வேலையிழந்தனர். சிலர் சொந்த ஊருக்குத் திரும்பினர்.  சிலர் இடம்பெயர்ந்து எங்கோ சென்று மறைந்தார்கள். முன்பு சீருடை அணிந்து மிடுக்காக தொழிற்சாலைக்கு சென்றுவந்த பலர் தள்ளுவண்டி வியாபாரம், நடைபாதைக் கடை, சைக்கிளில் தேநீர் விற்பது, நிலத்தரகு என முன்பின் அறிந்திராத தொழில்களில் உதிரிகளாகி அலைந்தார்கள். ஆட்குறைப்பின் மூலம் வெளித்தள்ளப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் அதே நிறுவனத்தில் குறைந்தக்கூலிக்கு தற்காலிகங்களாகினர். தற்காலிகங்களைக் காட்டி நிரந்தரத் தொழிலாளர்களின்  உரிமைகள் மறுக்கப்பட்டன.

* கடைவீதிகள் வெறிச்சோடிப் போயின. ‘வாடகைக்கு’ ‘விற்பனைக்கு’ என்கிற அட்டைகள் தொங்கும் வீடுகள் பெருகின. சொத்துகள் கைமாறின. வெளியேறுகிறவர்களுக்கான ஒருவழிப்பாதையானது ஒசூர். 

6. தொழிற்சங்கங்கள் சிறப்பாக செயல்பட்ட பொற்காலச்சூழல் ஒசூரில் இருந்துள்ளது. அதில் எப்படியான மாற்றங்கள் ஏற்பட்டன?

உலகமயத் தாக்குதலால் தொழிற்சங்கங்கள் பேதலித்துப் போயின. ஆட்குறைப்பை தடுக்கவியலாமல் எண்ணிக்கை குறித்த பேரங்களில் அவை ஈடுபட்டன. வேலையில் நீடிப்பவர்கள், வேலை இழந்தவர்கள், வேலையிழந்து தற்காலிகமாக வந்தவர்கள் எனத் தொழிலாளர்கள் சிதைக்கப்படுவதை தொழிற்சங்கங்களால் தடுக்க முடியவில்லை. சுமங்கலித் திட்டம் போன்றவற்றால் நிரந்தரமாக தற்காலிகமாக்கப்பட்டோரை திரட்டும் வழியறியாது அவர்கள் சுரண்டப்படுவதை அனுமதிக்கும் நிலைக்குச் சென்றன.

தொழிலாளர்களின் ஊதியம், வருங்கால வைப்புநிதியைக் கூட தராமல் தொழிற்சாலைகளை மூடிவிட்டு நிர்வாகங்கள் ஓடிப்போயின. இயந்திரங்களை எடுத்துப் போகவாவது நிர்வாகத்தினர் வருவார்கள், பிடித்துக்கொள்ளலாம் என்று மூடப்பட்ட ஒரு பஞ்சாலையின் வாயிலில் கொட்டைகைப் போட்டு காத்திருந்த தொழிலாளர்கள் ஒருகட்டத்தில் பொழுதைப்போக்க சீட்டாடத் தொடங்கினார்கள். மாதக்கணக்காகியும் யாருமே வராத நிலையில் அவர்கள் சீட்டாடுவதற்காகவே அங்கு  கூடுகிறவர்களாக மாறினர். மரபான போராட்டங்களில் நம்பிக்கையிழந்த சிலர் செல்போன் கோபுரங்களில் ஏறி தீக்குளிக்கவும், சாலை மறியல் செய்யவும் தலைப்பட்டனர்.
 
7. இதிலிருந்து ஒசூர் மீளவேயில்லையா?

பேரழிவின் முதல் அலை ஓய்வதற்குள் உலகப் பொருளாதார நெருக்கடியும் மின்வெட்டும் அடுத்தடுத்த அலைகளாகி வீழ்த்தின. நெருக்கடியால் பாதிக்கப்படாத நிறுவனங்கள்கூட வாரத்தில் நான்குநாள் ஓய்வு என்கிற தந்திரத்தைக் கையாண்டன. மனஉளைச்சலிலும் அச்சத்திலும் தொழிலாளர்கள் தூக்கமிழந்து அகாலங்களில் உலாத்தத் தொடங்கினர். தொழிற்சங்க நிர்வாகிகள் முறைவைத்து ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு அவர்களை வீடுகளுக்கு கொண்டு சேர்த்தனர்.  

பசியாற ஏதுமற்ற நிலையில் தன் சதையைத் தானே அறுத்துத் தின்னும் அவலமாக ஒசூர் பகுதி மறுபடியும் தன்னிடம் மிச்சமிருந்த நிலப்பரப்பை விற்றுக்கொள்ளத் தொடங்கியது. இம்முறை பெரும் கட்டுமான நிறுவனங்கள் வந்திறங்கின. பெங்களூரின் மென்பொருள் பணியாளர்கள் ஒசூரில் பெருமளவு குடியேறி தூங்கியெழுந்துப் போகத் தொடங்கினர்.

8. இன்றைய தொழிற்பேட்டை எப்படியுள்ளது?

மூடிக்கிடப்பவற்றையும் சேர்த்து 2015 டிசம்பர் வரை 811 தொழிற்சாலைகள் பதிவு செய்துகொண்டுள்ளன. 5000 தொழிலாளர்கள் பணியாற்றுவதாக கணக்குக் காட்டும் ஒரு வாகனத் தொழிற்சாலையில் 647 பேர் மட்டுமே நிரந்தரம். பிறவற்றிலும் இதே நிலைதான். எனில் ஒசூர்பகுதி தொழிலாளர்கள் எனக் காட்டப்படும் 90195 பேரில் 85 சதமானவர்கள் தற்காலிகங்களே. பதிவுபெற்ற 900 ஒப்பந்ததாரர்களால் ‘சப்ளை’ செய்யப்படும் இவர்களில் பெரும்பாலோர் முறையான படிப்போ பயிற்சியோ அற்ற வடமாநில இளைஞர்கள். சட்டத்திற்குட்பட்ட கொத்தடிமைகளாக இறக்கிவிடப்பட்டுள்ள இவர்கள்தான் இன்றைக்கு  ஒசூரின் இயங்குச்சக்தி. நடைபாதை வியாபாரத்தில் இந்தியும் ஒரு பரிவர்த்தனை மொழியாக மாறியிருப்பதன் மூலம் இவர்களுக்கான ஒசூர் ஒன்று இங்கு உருவாகிவிட்டதை உணர முடிகிறது.

9. ஒசூரின் வளர்ச்சி?

‘இங்கு ஜூனிலிருந்து நவம்பர் வரையிலும் மழை. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனி. வருடத்தின் பெரும்பகுதி குளிர்காலம்தான். எங்கள் அலுவலகத்தின் அறைகளில் மின்சார சூடேற்றி பகலிலும் கனன்றுகொண்டிருக்கும். கோடை வெயில்கூட உறைக்காது வியர்க்காது’ என்பதெல்லாம் பழங்கதை. மழைமோடத்தின் குளிரில் நடுங்கவேண்டிய இந்த ஐப்பசியில் அதிகபட்ச வேகத்தில் சுழலும் மின்விசிறியின் கீழே அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதே இப்போதைய ஒசூர். 

ஊரை குளுமையில் ஆழ்த்திய ஏரிகளைத் தூர்த்தது யார்? ஆயிரம் அடிக்கு கீழேயும் நிலத்தடி நீர் ஏன் கிடைப்பதில்லை? தொல்லியல் சான்றுகள் நிறைந்த மலைகள் வரலாற்றுப் பிரக்ஞையற்று யாருக்காக பாளம்பாளமாக வெட்டப்படுகின்றன? குடும்ப உறவுகளுக்கிடையே வன்முறையும்  கொலையும் அதிகரித்துவருவதில் நிலத்தின் பங்குண்டா? நிலக்கொள்ளையர்கள் ஊரையே கட்டுப்படுத்தும் அதிகாரம் பொருந்தியவர்களாக மாறுவது எங்ஙனம்? அடுத்த பத்தாண்டுகளில் ஒசூர் எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்கிற அமைப்புகளோ ஆளுமைகளோ இல்லாமல் போனது ஏன்? ஒசூர் பகுதியை தமது வாழிடமாக தேர்ந்துள்ள வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலமுள்ள மக்களை ஒரு சமூகமாக ஒன்றிணைக்கும் சாத்தியமுண்டா? கற்பிதங்களின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் சாதிய மதவாத அமைப்புகளின் செல்வாக்கை தடுத்திடத்  தேவையான அணுகுமுறை என்ன?  என்கிற கேள்விகளை எழுப்பிக்கொள்ளவும் சக்தியற்று ஒசூர் திணறிக்கொண்டிருக்கிறது. உழைப்புச்சக்தியை விற்று கண்ணியமாக வாழ்வதற்கான வழிகள் அடைபட்டுவரும் ஒரு சமூகம் சந்திக்க வேண்டிய வீழ்ச்சியைத்தான் ஒசூரும் இப்போது சந்தித்துவருகிறது என்பது சமாதானமல்ல, உண்மை.


24.10.16



துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...