வ.கீதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ.கீதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 27

காஸாவின் காலமும் இஸ்ரேலின் மனசாட்சியும் - வ. கீதா



 2014இல் காஸா மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் 2000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படடனர். ஹமாஸ் மூன்று இஸ்ரேலிய பதின்பருவத்தினரை பிடித்துக்கொண்டு போய் கொலை செய்ததால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்டது. எத்தகைய உயிர்கள் புனிதமானவை, எத்தகைய இறப்புகளுக்காக நாம் வருந்தவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு ஒரு பதில்தான் இருக்கமுடியும் என்பதுபோல் அன்றும் சரி, இன்றும் சரி, இஸ்ரேல் நடந்துகொண்டுள்ளது. பாலஸ்தீனர்கள் மனிதர்கள் அல்ல என்பதுதான் இஸ்ரேலிய தேசியவாதிகளும் அரசும் சொல்லவருவது. எனவே அவர்களைக் கொன்று குவிப்பது யாருடைய மனசாட்சியையும் சலனப்படுத்த வேண்டியதில்லை என்பது இத்தகைய சொல்லாட்சியின் உட்பொருள். 2014இல் நடந்த தாக்குதல்களின் பின்னணியில் அச்சமயம் வ.கீதா எழுதிய சிறு கட்டுரை இது. 

இஸ்ரேலிய அரசும் இராணுவமும் காஸாவை சின்னாப்பின்னமாக்கி வருவதைப் பார்த்து வேதனைனயும், துயரமும் அடைந்து செயலற்றுப் போயிருக்கும் உலகின் மனசாட்சி நம் ஒவ்வொவாருவருக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. காஸாவின் மக்கள் அச்சத்தால் பீடிக்கப்படுள்ள போதிலும், இழப்புகளைக் கணக்கிடக்கூட முடியாதவர்களாக ஆக்கப்பட்டுள்ள நிலையிலும் அத்தனை மாண்புடன் தம்மீது தொடுக்கப்படுள்ள போரை எதிர்கொண்டு வருகின்றனர். வீராவேச பேச்சு இல்லை. புலம்பல் இல்லை. அழுத்தமான கோபம், இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல, எத்தனை முறை இப்படி எங்களை அழிக்கப் பார்த்திருக்கிறீர்கள் என்ற ரீதியில் சன்னமான ஆனால் வலுவான குரலில் அவர்கள் எழுப்பும் வினா. மறைந்த பாலஸ்தீனக் கவிஞன் மஹ்மூத் தார்விஷின் 2007 கவிதை வரிகள் சுட்டும் சித்திரமாகத்தான் காஸா இப்போதும் உள்ளது. 

“ஏனெனில் காஸாவில் காலம் பட்சபாதமற்றதல்ல. மக்களை அமைதியாக சிந்திக்கத் தூண்டுவதல்ல, மாறாக கொந்தளிப்பை, நிஜத்துடன் அவர்கள் முட்டிமோதுவதைத் தூண்டுவதாகும். காஸாவின் காலம் குழந்தைகளை கைப்பிடித்து அழைத்து குழந்தைப் பருவத்திலிருந்து வயோதிகத்துக்குக் கூட்டிச்செல்வதல்ல. மாறாக, அவர்கள் பகைவனை முதன்முதலில் எதிர்கொள்ளும்போது அவர்களை வயது வந்தவர்களாக்கிவிடும் காலமாகும். காஸாவின் காலம் பொழுதுபோக்குவதற்கானதல்ல - எரியும் நடுப்பகலை எதிர்கொள்வதற்கான காலம் அது. ஏனெனில் காஸாவின் மதிப்பீடுகள் வேறானவை, வேறானவை, வேறானவையே. தம்மைச் சூழ்ந்துள்ளவர்களுக்கு எதிராக சூழப்பட்டவர்கள் எந்தளவுக்கு எதிர்ப்பைக் காட்டுகின்றனர் என்பதில்தான் அவர்களின் மதிப்பு அடங்கியுள்ளது. அங்குள்ள ஒரே போட்டி இதுதான். இந்த குரூரமான, ஆனால் மாண்பான மதிப்பீடு காஸாவுக்கு நன்கு தெரிந்த, அதற்கு பழகின ஒன்று. புத்தகங்கள், அவசர அவசரமாக கூட்டப்பட்ட பள்ளிக் கருத்தரங்குகள், ஒலிவாங்கியின் மூலம் முழங்கும் பரப்புரைகள், பாடல்கள் ஆகியவற்றிலிருந்து காஸா இதைக் கற்று கொள்ளவில்லை. அனுபவத்தினூடாக, விளம்பரத்துக்காகவும் காட்சிப் பெருமைக்காகவும் செய்யப்படாத உழைப்பின் மூலமாக காஸா இதைக் கற்றுகொண்டுள்ளது.

காஸாவுக்குத் தொண்டை இல்லை. அதன் தேகத்தின் துளைகள் தான் பேசுகின்றன - வியர்வை, இரத்தம், ஆகியவற்றின் மொழியில். இதனால்தான் பகைவன் அதை வெறுக்கிறான், சாகடிக்க வேண்டும் என்றிருக்கிறான், அதற்கெதிராக குற்றம் புரியும் அளவுக்கு அதைக் கண்டு அச்சப்படுகிறான், அதை கடலில், பாலைவனத்தில், இரத்தத்தில் மூழ்கடித்துவிட முயற்சி செய்கிறான். இதனால்தான் அதன் உறவினர்களும் நண்பர்களும் காஸாவை காதலிக்கின்றனர், செல்லமாக, அசூயையுடன், ஏன் சில நேரங்களில் பயத்துடனும் கூட. ஏனெனில் காஸாதான் எல்லோருக்குமான பாடம், மூர்க்கத்தனமாக கற்பிக்கப்படும் பாடம், நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் ஒருங்கே ஒளிரும் ஆதர்சம்.

...

பகைவர்கள் காஸாவை வெற்றி கொள்ளலாம் (பொங்கு கடல் ஒரு தீவை வெல்லக்கூடும்...

அதன் மரங்களை அவர்கள் வெட்டி வீழ்த்தக்கூடும்).

அவர்கள் அதன் எலும்புகளை நொறுக்கக்கூடும்.

அதன் குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் உடல்களுக்குள் அவர்கள் டாங்கிகளை பொருத்தக்கூடும். அதை கடலில், மண்ணில், இரத்தத்தில் தூக்கி எறியக்கூடும்.

ஆனால் அது பொய்களைச் திரும்ப திரும்பச் சொல்லி படையெடுத்து வருவோருக்கு இசைவு தராது. அது தொடர்ந்து வெடித்துக் கொண்டேயிருக்கும்

 அது மரணமுமல்ல, தற்கொலையுமல்ல. தனக்கு வாழத் தகுதியுண்டு என்பதற்கான அறிவிப்பு. அது தொடர்ந்து வெடித்துக் கொண்டேயிருக்கும்.

அது மரணமுமல்ல, தற்கொலையுமல்ல. தனக்கு வாழத் தகுதியுண்டு என்பதற்கான அறிவிப்பு.

“ Source: Silence for Gaza, Translated into English, from the Arabic by Sinan Antoon, from Hayrat al-`A'id (The Returnee's Perplexity), Riyad al-Rayyis, 2007. http://www.frontline.in/static/html/fl2925/stories/20121228292505800.htm

காஸாவில் வாழும் பாலஸ்தீன எழுத்தாளர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள், நிர்வாகிகள் ஆகிரயார் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டிருந்தனர். 

"எங்களுடைய முதன்மையான அக்கறை எங்கள் சமுதாயங்களைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பும் சுகாதாரமும் மட்டுமல்ல. அவர்கள் வாழும் வாழ்க்கையின் தரம் குறித்தும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளளோம். அவர்கள் சுதந்திரமாகவும், எந்தவொரு சட்டவழிமுறையும் பின்பற்றப்படாமல் தாம் சிறையில் அடைக்கப்படலாம் என்ற அச்சமின்றியும், பயன்தரும் வேலை செய்து தங்களுடைய குடும்பங்களைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடனும் வாழ வேண்டும், அவர்களுடைய உறவினர்களைக் காணவும் மேல்படிப்பு படிக்கவும் தடையின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் அவர்கள் வாழ்வு அமைய வேண்டும். இவை அடிப்படையான மனித விருப்பங்கள். ஆனால் பாலஸ்தீனர்களுக்கோ 47 ஆண்டுகளாக இவை வரம்பிடப்பட்டுள்ளன. அதுவும் 2007 முதல் காஸாவாழ் பாலஸ்தீனர்களுக்கு இவை மிக அதிகமாக மறுக்கப்பட்டுள்ளன. சாதாரண மனிதனால் சகித்துக்கொள்ளக்கூடியவற்றின் எல்லைகளைக் கடந்த நிலையில் நாங்கள் உள்ளோம், சொல்லப்போனால், அந்த எல்லைகளுக்கப்பால் தள்ளப்பட்டுள்ளோம்.

மரணவாழ்க்கை

ஊடகங்களும், அனைத்துத்தரப்பு அரசியல்வாதிகளும் ஹமாஸ் அமைப்புதான் காஸாவின் குடிமக்களை ஊரை விட்டுப் போகவிடாது பிடித்து நிறுத்தி வைத்துள்ளது, அவர்களை மனித கவசங்களாகப் பயன்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இது உண்மையல்ல. அனைத்து தற்காலிக பாதுகாப்புத் தலங்களும் முகாம்களும் நிரம்பி வழிகின்றன. இஸ்ரேலிய இராணுவமோ கண்மண் தெரியாமல் குண்டுகளைப் பொழிந்துகொண்டிருக்கிறது. உண்மையில் காஸாவில் பாதுகாப்பான இடம் என்று ஏதுமில்லை. காஸாவில் வசிக்கும் யாரையும் கலந்தாலோசிக்காமல் இஸ்ரேலும் எகிப்தும் போர் நிறுத்த அறிவிப்பு ஹமாஸ் ஏற்க வேண்டும் என்று கூறியதை அந்த அமைப்பு ஏற்கவில்லை - காஸாவின் பெரும்பான்மை மக்களின் விருப்பமும் இதுவாகத்தான் இருந்தது. ஏற்கனவே உள்ள நிலைமைக்கு திரும்பச் செல்வதை ஏற்க முடியாது என்ற பெரும்பான்மை மக்களின் கருத்தை நாங்களும் உறுதி செய்கிறோம். ஏற்கனவே உள்ள நிலைமை இதுதான் - யார் காஸாவை விட்டு வெளியே செல்லலாம் யார் செல்லக்கூடாது என்பதை இஸ்ரேல்தான் தீர்மானித்து வருகிறது. என்ன மாதிரியான  உணவுப்பொருட்களும் பிற அத்தியாவசியப் பொருட்களும் ஊருக்குள் வரலாம் (கட்டுமானப் பொருட்கள் கொண்டு வரப்படுவதை இஸ்ரேல் அனுமதிப்பதில்லை) என்பதையும் அதுதான் நிர்ணயம் தெய்கிறது. அது போல காஸாவிலிருந்து எந்தப் பொருளும் ஏற்றுமதிச் செய்யப்படுவதை அது தடுக்கிறது, இதனால் காஸாவின் பொருளாதாரம் சுருங்கி ஒன்றுமில்லாமல் போயுள்ளது. ஒட்டுமொத்த அரபு நாடுகளையும் எடுத்துக் கொண்டால் காஸாவில்தான் மேலதிகமான வறுமையும் வேலையின்மையும் நிலவுகிறது.

மேற்கண்ட நிலைமைக்குத் திரும்பச் செல்லுதல் என்பது மரண வாழ்க்கைக்குத் திரும்புவதாகும்.

Statement by Palestinian Academics, Public Figures, and Activists in Gaza: No Ceasefire Without Justice’, http://www.jadaliyya.com/pages/index/18671/statement-by-palestinian-academics-public-figures

உலக ஊடகங்கள் காஸாவில் நடைபெற்று வரும் போரின் பாதிப்புகள் குறித்து செய்திகளை வெளியிடுகையில் அம்மக்களின் கையறு நிலையை பற்றி பக்கம்பக்கமாக எழுதுகின்றன. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதை சுட்டிக்காட்டி காஸாவில் நடைபெறும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறி வருகின்றன. அமைதி அவசியம்தான் ஆனால் அது நீதியற்ற, நீதிக்கு வழி செய்யாத அமைதியாக இருக்கக்கூடாது என்று பாலஸ்தீனர்களும் அவர்களது ஆதரவாளர்களும் பதிலுரைத்து வருகின்றனர். பாலஸ்தீனப் பெண்ணியவாதிகள் "பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்" பாதிப்பு என்று மேற்கத்திய ஊடகங்கள் கூறி வரும் கருத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் அரசியலை விமர்சனம் செய்துள்ளனர். பெண்களும் குழந்தைகளும் செத்தால் அது போரின் கோர விளைவு, பாலஸ்தீன ஆண்கள், ஏன் இளைஞர்கள், விடலையர்கள் செத்தாலோ அத விபரீதமல்ல. காரணம், அவர்கள் பாவப்பட்ட மக்களல்ல, மாறாக அவர்கள் தீவிரவாதிகள், இஸ்ரேலைக் அழித்தொழிக்க திட்டமிடும் எதிரிகள் - இவ்வாறு, ஆண்களை அரசியல் வெறியர்களாகவும் பெண்களை பாவப்பட்ட ஜென்மங்களாகவும் சித்தரித்து, பாலஸ்தீனியர்கள் முன்வைக்கும் அரசியல் நியாயத்தை அங்கீகரிக்க மறுத்துச் செயல்படும் அரசியலின் நுணுக்கங்களை இப்பெண்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர். 'பெண்களுக்கு பாதிப்பு' ஏற்படக்கூடாது என்பதற்காகதான் நாங்கள் போர் புரிகிறோம் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாம்ல் பொய்க்கூறி தனது ஆப்கானிஸ்தான் போரை அமெரிக்கா நியாயப்படுத்தியதுடன் ஒப்பிட்டு, அதே நியாயமும் சொல்லாடல்களும் தற்சமயம் காஸாவில் நடக்கும் விஷயங்களுக்கு பொருத்தப் பாடுடைய வகையில் திரித்துக் கூறப்பட்டு வருவதையும் இவர்கள் விமர்சித்துள்ளனர்.

காஸாவில் துயரத்துக்கிடையே விவேகமான, மாண்பான அறநிலைப்பாட்டை எடுக்கக் கூடியவர்கள் இருக்க, இஸ்ரேலிலுள்ள ஏறக்குறைய எல்லா அரசியல் அமைப்புகளும், பல இடதுசாரி அமைப்புகள் உட்பட, இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஹமாஸ் தொடுத்த ஏவுகணைத்தாக்குதலால் தான் இஸ்ரேல் போர் தொடுக்க வேண்டியிருந்தது, அதன் இருப்புக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய செயலை அதனால் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என்று நிரூபிக்கப்படாத நிகழ்வைக் காரணம் காட்டி இவை போரை நியாயப்படுத்தி வருகின்றன. அதாவது 'இஸ்ரேலின் இருப்புக்கு ஆபத்து' என்ற வாதம் பிற நேரங்களில் நிலையிழக்காமல் செயல்படக்கூடிய அரசியல் அமைப்புகளைக் கூட நிலைத் தடுமாறச் செய்துள்ளதையை இது சுட்டிக் காட்டுகிறது.

ஒரு சில தீவிர இடதுசாரி அமைப்புகள் மட்டும் தொடர்ந்து இஸ்ரேலின் நடவடிக்கையை வன்மையாக கண்டித்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவே இஸ்ரேலில் சிறுபான்மையினராகக் கருதப்படும் குறிப்பிட்ட யூத சமுதாயங்களைச் சேர்ந்தவர்களினால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகள். 1940களிலும் 1950களிலும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களை அவர்களின் மண்ணிலிருந்த தூக்கி எறிந்ததற்கு பதிலடி கொடுக்கும் முகமாக பல அரபு நாடுகளின் அரசுகள் (ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள டுனீசியா, மொராக்கோ, லிபியா, எகிப்து போன்ற நாடுகளிள் அரசுகள் உட்பட) அவர்கள் மண்ணில் காலங்காலமாக வாழ்ந்து வந்த யூதர்களை வெளியேற்றின. இவ்வாறு வெளியேற்றம் செய்யப்பட்டவர்களில் பலர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர். சிலர் ஐரோப்பாவுக்குச் சென்றனர். அரபு-யூதர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் 'மிஸ்ராஹி' யூதர்கள் என்றும் அறியப்படுகின்றனர். ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்த யூதர்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன - குறிப்பாக, மொழி, பழக்கவழக்கங்கள், அவர்கள் பின்பற்றக்கூடிய சடங்குகள் ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. தற்காலத்தில் இந்த இரு யூதப் பிரிவினருக்குமிடையை கொடுக்கல் வாங்கல் உறவுகளும் மணவுறவுகளும் ஏற்பட்டுள்ள போதிலும் மிஸ்ராஹிகள் தாங்கள் இரண்டாம் நிலை குடிமக்களாக நடத்தப்படுவதாகவும் இன அடிப்படையில் ஒதுக்கப்படுவதாகவும் கூறி வருகின்றனர். இவர்கள் மத்தியிலிருந்து எழும்பியுள்ள இடதுசாரிக் குழுக்கள்தான் காஸாவில் இஸ்ரேல் தொடுத்துள்ள கொடூரத்தை கண்டனம் செய்துவருகின்றன, அதற்காக யூத வலதுசாரிகளின் தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளன.

ஜூலை 2 அன்று, அதாவது காஸாவில் இஸ்ரேல் குண்டு பொழிய  ஆரம்பித்ததற்கு முன்பாக, பாலஸ்தீன இளைஞன் முகமத் அபு கெதிர் என்பவர் யூத வெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டு மிகக் குரூரமாகக கொல்லப்பட்ட போது பல இடதுசாரி அமைப்புகள் (இன்று காஸாவில் நடக்கும் தாக்குதலை ஆதிரிக்கும் அமைப்புகள் உட்பட) அந்தச் செயலைக் கண்டித்தன. மிஸ்ராஹிகள் அதிக எண்ணிக்கையில் அங்கம் வகிக்கும் மேற்சொன்ன அமைப்பின் கண்டன அறிக்கையில் இடம்பெற்ற வரிகளை மொழிபெயர்த்து தந்துள்ளோம். இஸ்ரேலிய மக்களின் மனசாட்சி முழுமையாக தெத்துப் போகவில்லை என்பதற்கு இந்த வாசகங்கள்தான் சாட்சி.

நமது கரங்கள் இரத்தம் சிந்தியவை, எனவே, நினைனத்துக்கூடப் பார்க்க முடியாத இழப்பைச் சந்தித்துள்ள முஹமத் அபு கெதிரின் குடும்பத்தாருக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் 'நாங்களும் உங்களுடன் சேர்ந்து துக்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்' என்பதை தெரிவித்துக் கொளள விரும்புகிறோம். இந்த அரசின் ஆக்கிரமிப்புக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். இஸ்ரேலிய சமுதாயத்தில் காணப்படும் வன்மம், இனவெறி, வன்முறைக்குத் தூண்டும் காழ்ப்புணர்வு என்பன போன்றவற்றையும் நாங்கள் எதிர்க்கிறோம். எங்களுடைய யூதத்தன்மையை இத்தகைய கொள்கைளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவும் நாங்கள் மறுக்கிறோம். - எங்களுடைய யூத மனநிலை திரிபோலி, அலெப்போ நகரங்களில் வாழ்ந்த சான்றோரான ஹெஸிகையா ஷப்தாய் அவர்களின் இந்தச் சொற்களில் சுட்டப்படும் மனநிலையன்றி வேறல்ல- "உன்மீது அன்பு செலுத்துவதைப் போபுன் அயலான் மீதும் அன்புக்காட்டு" (லெவிடிகஸ் 19.18). இந்த வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அன்பானது ஒரு யூதனோ ஒரு இஸ்ரேலியோ மற்றொரு யூதனிடத்தும் மற்றொரு இஸ்ரேலியிடத்தும் ஒருவர் காட்ட வேண்டிய அன்பைக் குறிப்பது மட்டும்ல்ல - யூதர்கள் அல்லாத நமது அயலவர்களை நேசிப்பதையும் இது குறிக்கிறது. அவர்களிடம் அன்பு செலுத்தி உடன் வாழ வேண்டும் என்றும் அவர்களுடைய சேமநலங்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் இந்த வாசகம் நமக்குக் கட்டளையிடுகிறது. நமது பொதுப்புத்தி மட்டுமின்றி நமது புனித நூலான டோராவும் இதைத்தான் கூறுகிறது. நமது அரசின் செயல்கள் எவ்வாறாக உள்ள போதிலும், நமது அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகள் என்ன கூறினாலும், நல்ல வழிமுறைகளை எடுத்துரைக்கும் நமது புனித நூல் சுட்டும் வழியில் ஒழுகுவதுதான் சரி என்று அந்த நூலை நமக்கு கட்டளையிட்டுள்ளது.

(From Orit, Bashkin, The Other Israelis’, http://www.jadaliyya.com/pages/index/18739/the-other-israelis)

மிக மோசமான வன்மத்தை ஏவிவிட்டு அதற்குப் பொருந்தாத, பொய்யான நியாயத்தை இஸ்ரேல் கற்பித்து வரும் இவ்வேளையில் இந்த வரிகளை அந்நாட்டு குடிமக்கள் எழுதுவதும் கூட இன்று தேச துரோகமாகக் கருதப்படலாம்.

திங்கள், மே 4

வில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா


எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர்களில் வில்லியம் ப்ளேக்கும் (William Blake)  ஒருவர். 18ஆம் நூற்றாண்டு. அவர் ஓவியர், டிசைனர், அச்சாளர். அவரின் எழுத்துகளும் ஓவியங்களும் அவர் காலத்தில் ஏற்கப்படவில்லை. ஆனால் பிறகு முக்கியமானவையாக கருதப்பட்டன.

ஒரு விமர்சகருக்கு அவர் எழுதிய கடிதத்திலிருந்து ஒரு சிறுபகுதி. கூடவே அவருடைய Auguries of Innocence என்ற நெடுங்கவிதையிலிருந்து சில வரிகள். 


கடிதத்திலிருந்து...

“கேளிக்கை எனக்கு பிடிக்கும். ஆனால் அளவு மிஞ்சும் போது வெறுப்படையச் செய்கிறது. சிரித்திருப்பது கேளிக்கையை காட்டிலும் மேல். மகிழ்ச்சி கொள்வது சிரிப்பைவிட மேல். ஒரு மனிதனால் இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது. கற்பனைக்கும் தரிசனத்துக்கும் இவ்வுலகில் இடமுண்டு. நான் இவ்வுலகில் காணும் அனைத்தையும் ஓவியமாக்குகிறேன். ஆனால் எல்லோரும் ஒன்றுபோல உலகத்தைப் பார்ப்பதில்லை. ஒரு கஞ்சனுக்கு சூரியனைவிட காலணா அழகானதாக தோன்றுகிறது. திராட்சைக்குலையின் வடிவழகைக் காட்டிலும் பணம் அடைக்கப்பட்டு அடைக்கப்பட்டு பட்டுப்போன பையின் வடிவத்தை அவன் அழகு என்று ரசிக்கிறான். மரத்தைப் பார்த்ததும் சிலர் பரவசமடைந்து கண்ணீர் உகுக்கின்றனர். பிறருக்கோ மரம் என்பது அவர்களின் வழியை மறித்து நிற்கும் பச்சை, அவ்வளவுதான். சிலர் இயற்கையில் குறையையும் குற்றத்தையுமே காண்கின்றனர். பிறர் இயற்கையை காண்பதுகூட இல்லை. ஆனால் மனிதனின் கண்களுக்கு இயற்கைதான் கற்பனை, கற்பனைதான் இயற்கை. ஒருவன் எப்படியோ அப்படியே அவனது பார்வையும்.”

கவிதை வரிகள்...

மணற்துகளில் உலகத்தைக் காண
காட்டுப்பூவில் சொர்க்கத்தைக் காண
எல்லையற்றதை
காலமற்ற காலத்தை
உன் உள்ளங்கையில் தாங்கு.

கூண்டில் அடைபட்ட சிகப்புச் சிட்டு
சொர்க்கத்தை சினமுறச் செய்யும்
மணிப்புறாவும் மாடப்புறாவும் உள்ள பொந்து
நரகத்தையே மெய்சிலிர்க்க வைக்கும்
எசமானனின் வீட்டு வாசலில்
பசித் தீர்க்கப்படாத நாய்
அரசின் வீழ்ச்சிக்கான ஆருடம்
சாட்டையால் அடிக்கப்பட்ட குதிரை
இரத்தத்துக்கு இரத்தம் வேண்டி
சொர்க்கத்தை இறைஞ்சும்
வேட்டையாடப்பட்ட முயலின் அவலக்குரல்
மூளையின் ஒவ்வொரு பகுதியையும் பிடித்து இழுக்கும்

இறகு கிழிக்கப்பட்ட வானம்பாடி
வான்தேவதைகள் பாடாது அமைதி காக்கின்றனர்
இறகு வெட்டப்பட்டு கட்டப்பட்ட சண்டைச்சேவல்
உதயசூரியன் கலக்கமுறுகிறான்
ஓநாயின், சிங்கத்தின் ஓலம்
நரகத்தில் உழலும் மனிதர்கள் துள்ளி எழும்புகிறார்கள்.


வியாழன், ஜனவரி 2

பிற்காலத்தில் பிறந்தவர்களுக்கு - பெர்டொல்ட் ப்ரெஹ்ட்


1
உண்மையில்
நான் இருண்டகாலத்தில்தான் வாழ்கிறேன்.
வஞ்சகமற்ற சொல் மடமை
கவலைக்கோடுகளற்ற நெற்றியோ
கூருணர்வற்ற மனநிலைக்கான அறிகுறி.
ஒருவன் சிரிக்கிறான்
கெட்ட செய்தி எதுவும்
அவன் காதுக்கு எட்டவில்லை என்பதால்.

என்ன காலமிது -
மரத்தைப்பற்றிப் பேசுவதுகூடக் குற்றமாகிறது
பிற கொடுமைகளைப் பேசாது நாம் மௌனம் சாதிப்பதால் -
அதோ தெருவை அமைதியாகக்
கடந்து செல்லும் அந்த மனிதன்
தேவைகளுடன் காத்திருக்கும் நண்பர்கள்
அணுகமுடியாதபடிக்கு
எட்டிச் சென்றுவிட்டானோ?
எனக்கு, இன்னமும்
பிழைக்க வழி இருக்கிறது
உண்மைதான்.
ஆனால், பாருங்கள்,
இது ஒரு தற்செயல் நிகழ்வே
நான் செய்யும் எதுவும்
வயிறு முட்ட உண்ணும்  உரிமையை
எனக்கு வழங்கவில்லை.
விதிவசமாக எனக்கு ஏதும்  நிகழவில்லை
ஆனால் அதிர்ஷடம் தப்பினால்
நானும் காணாமல் போய்விடுவேன்

அவர்கள் சொல்கிறார்கள் -
சாப்பிடு, குடி
இவையாவது இருக்கிறதே
என்று சந்தோஷப்படு.
ஆனால் நான் உண்ணும் உணவு
பசித்தவரிடமிருந்து பறிக்கப்பட்டதாக இருக்குமானால்
நான் குடிக்கும் ஒரு குவளைத் தண்ணீர்
தாகத்தால் தவித்து சாகவிருக்கும்
ஒருவரிடமிருந்து பிடுங்கப்பட்டதாக இருக்குமானால்
நான் எப்படி உண்பது, குடிப்பது?
இருந்தாலும்
நான் உண்கிறேன், குடிக்கிறேன்.

நான் விவேகியாக இருக்க விரும்புகிறேன்
பழைய நூல்களில் விவேகம் இவ்வாறு விளக்கப்படுகிறது:
உலகை உலுக்கும் சண்டைகளைத் துறந்து
கொடுக்கப்பட்டுள்ள அற்பக்காலத்தை
பயமின்றிக் கழி
அடுத்து, வன்முறையின்றி வாழ்க்கையை வாழப்பார்
தீயது நடந்தாலும் நல்லதையே திரும்பச் செய்,
ஆசாபாசங்களை நிறைவேற்றப் பார்க்காதே
அவற்றை மறந்துவிடு

2
கலகக்காலத்தில்
நான் நகரங்களை வந்தடைந்தேன்.
கலகம் செய்யும் மனிதர்களிடையே
வந்து சேர்ந்தேன்
அவர்களுடன் சேர்ந்து
நானும் கலகம் செய்தேன்.
இந்த பூமியில் வழங்கப்பட்ட காலத்தை
இவ்வாறு கழித்தேன்.

போர்களுக்கு இடையே
உணவு உண்டேன்
கொலைகாரர்களுக்கு அருகே
படுத்துறங்கினேன்.
அக்கறையற்ற வகையில்
காதலித்தேன்
பொறுமையின்றி
இயற்கையை அணுகினேன்
இப்படியாகவே
இந்த பூமியில்
எனக்கு வழங்கப்பட்டகாலத்தைக் கழித்தேன்

எனது காலத்தில்
எல்லாப்பாதைகளும் சகதிக்கே இட்டுச் சென்றன
எனது நாக்கு
கொலையாளிகளிடம் என்னைக் காட்டிக் கொடுத்தது
என்னால் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை
ஆனால்
நான் இல்லாததால்
அதிகாரத்தில் உள்ளவர்கள்
மேலும் பாதுகாப்புடன் இருந்தனர் -
இதை நான் நம்பினேன்.
இப்படியாகவே
இந்த பூமியில்
எனக்கு வழங்கப்பட்ட காலத்தைக் கழித்தேன்

நமது இலக்கு வெகுதொலைவில்
ஆனால் தெளிவாகத் தெரிகிறது
ஆனால் என்னால் அங்கு
சென்றடைய முடியும் என்று தோன்றவில்லை
இப்படியாகவே
இந்த பூமியில்
எனக்கு வழங்கப்பட்ட காலத்தைக் கழித்தேன்

3
எங்களை அடித்துச் சென்ற
வெள்ளத்திலிருந்து தப்பி வரவிருக்கும்  நீங்கள்
எங்களின் தோல்விகளைப்பற்றிப் பேசுகையில்
நீங்கள் தப்பிக்க நேரிட்ட
அந்த இருண்ட காலத்தையும்
சேர்த்துப் பேசுங்கள்
காலணிகளை அடிக்கடி மாற்றிக்கொள்வதைப் போல
ஏன் அதைவிட அதிகமாக -
வர்க்கப் போர்களினூடாக -
நாங்கள் அடிக்கடி நாடுகள் மாறினோம்.
கலகங்கள் நடவாமல்
அநீதி மட்டுமே எஞ்சியிருக்க
துக்கமுற்றோம்.

ஆனாலும் எங்களுக்குத் தெரியும்
வெறுப்பு, ஏன் சிறுமையுங்கூட
முக அமைப்பை மாற்றும் என்று
கோபம்
அது அநீதிக்கு எதிரானதாக இருந்தாலும்
குரலைக் கரகரப்பாக்கும் என்று,
தோழமை தழைப்பதற்காக
இந்த மண்ணைப் பண்படுத்த விரும்பிய
எங்களால் நட்புணர்வுடன்
இருக்க இயலவில்லை.

ஆனால், நீங்கள்
மனிதனுக்கு மனிதன்
சகாயமானவனாக இருக்கக்கூடிய
காலம் வரும்போது
எங்களை
அருளிரக்கத்துடன்
நினைவுகூருங்கள்.

ஆங்கிலம் வழி தமிழில் : வ.கீதா

ஞாயிறு, நவம்பர் 27

ஃபிடலுக்கு ஒரு பாடல் - செ குவாரா



சூரியன் உதிப்பான் என்றாய் நீ 
வா, யாரும் செல்லாத பாதையில்
போகலாம் நாம்
உனக்குப் பிரியமான
அந்தப் பச்சை முதலையை விடுவிக்க.
கிளர்ச்சி என்னும் தூமகேது
முட்டிச் செல்லும் நம் நெற்றியைக்கொண்டு
அவமானங்களைத் துடைத்தெறிந்துகொண்டே
செல்வோம் வா
வெற்றி பெறுவோம் அல்லது
சாவைக் கடந்து செல்வோம்.
முதல் துப்பாக்கி வேட்டில்
புதிய வியப்புடன்
கானகம் முழுவதும் விழித்தெழும்
அங்கே அப்போது அமைதியாக உனது படை
உன்னருகே நாங்கள்.
உனது குரல் நாற்றிசைக் காற்றைத் துளைத்து
நிலச் சீர்திருத்தம், நீதி, உணவு, விடுதலை
என முழங்கும் போது
சேர்ந்து குரல் கொடுக்க
உன்னருகே நாங்கள்.
கூபாவின் அம்பு முனை துளைத்த காயங்களை
அக்கொடிய விலங்கு நக்கும் வேளையில்
பெருமித நெஞ்சத்துடன்
உன்னருகே நாங்கள்.
வெகுமதிகள் பெற்றுத் தத்தித் தத்திக் குதிக்கும்
அந்த அலங்கரிக்கப்பட்ட அற்பப் பூச்சிகளால்
எங்கள் நேர்மை குலைந்து விடும் என எண்ணாதே
எங்களுக்கு வேண்டியது
அவர்களது துப்பாக்கிகள், தோட்டாக்கள்,
ஒரு பாறாங்கல்
வேறேதும் அல்ல.
உருக்கு எங்களை வழிமறிக்கும்போது
நாங்கள் கேட்கப் போவது
கூபாவின் கண்ணீரால் நெய்த போர்வை
அமெரிக்க வரலாறு நோக்கிப் பயணிக்கும்
எங்கள் கெரில்லாக்களின் சடலங்கள் மீது போர்த்த
வேறேதும் அல்ல.

ஆங்கிலம் வழித் தமிழாக்கம்: வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை( (Our Word: Guerrilla Poems from Latin America, Cape Goliard press, London, 1968  என்னும் நூலிலிருந்து)


செவ்வாய், பிப்ரவரி 9

புதுவிசை 45வது இதழ்



 எலினா ஃபெர்ரான்டெ : ஓர் இலக்கிய அதிசயம் - எஸ்.வி.ராஜதுரை

மோடி அரசின் தவறான முன்னுரிமைகள்
- முனைவர் ஜீன்ஸ் ட்ரெஸே தமிழில்: செ.நடேசன்

சங்க காலத் தமிழக வரலாற்றுக்கு ஓர் புதிய வெளிச்சம் - பு.ஜார்ஜ்

வரலாறும் மறதியும் - நாடு விட்டு நாடு சென்ற  
தொழிலாளர்களை முன்வைத்து - வ.கீதா

தமிழ்நாட்டின் விளிம்புநிலைச் சமூகங்கள் எதிர்கொள்ளும்  சிக்கல்கள்
- முனைவர் சி. மகேசுவரன்

பற்றியெரியும் சென்னை பரிதவிக்கும் மக்கள் - ஜி.செல்வா

மாவோ -மலேரியா –மருந்து - த.வி. வெங்கடேஸ்வரன்
த. தங்கவேல் - மீண்டும் ஆரியரைத்தேடி முனைவர் எஸ்.தினகரன்

தீண்டாமைப் பிரச்சினை குறித்து பகத்சிங்
- தேவேஸ் கடார்கர் தமிழில் : இரா.சிசுபாலன்

இரா.முருகவேளின் இரண்டாவது நாவல்
.முகிலினியிலிருந்து..

பா.ராஜா கவிதைகள்

இரவில் உதிரும் விண்மீன்கள்
தாய்: மனோப் தனோம்சீ ஆங்கிலத்தில்: மார்செல் பராங்தமிழில்: ச.ஆறுமுகம்

கோயில் இருக்கும் ஊரில் குடியிருக்க முடியாது- ஆதவன் தீட்சண்யா
பேசாமல் இருத்தல் - பாப்லோ நெரூடா தமிழில்: வ.கீதா

மார்க்ஸிய அறிஞர் மார்ஸெல்லொ முஸ்ட்டோ கடிதம் 

தனி இதழ்: ரூ. 40, ஆண்டுசந்தா : ரூ.150
தொடர்புக்கு: ந.பெரியசாமி 9487646819















ஞாயிறு, ஜூன் 24

ஜெயமோகனின் புளுகுகளை அம்பலப்படுத்தும் விடியல் சிவா

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு,
உங்கள் வலைத்தளத்தில் (Jeyamohan.in) 23.5.2012 அன்று எஸ்.வி.ராஜதுரைக்கு எழுதியுள்ள பதிலில், கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறீர்கள்'

“உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு.”
“இதை புதியதாகவும் சொல்லவில்லை. தமிழகமெங்கும் பெரும் முன்பணம் திரட்டப்பட்டு வெளியிடப்பட்ட பெரியார் பற்றிய நூலுக்கு, தமிழகச் சிந்தனையாளர் ஒருவரைப்பற்றிய நூலுக்கு, எதற்காக அன்னிய நிதியுதவி என நான் முன்னரும் எழுதியிருக்கிறேன்.”
எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் எழுதிய ‘பெரியார்:சுயமரியாதை' நூலின் முதல் பதிப்பு ‘விடியல் பதிப்பக'த்தால் 1996இல் வெளியிடப்பட்டது. அந்த நூலை எழுதிய இருவருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்.கோதண்டராமன் (பொற்கோ) அவர்கள் தலைமையில் தோழர் வே.ஆனைமுத்துவின் தலைமையில் மார்க்ஸிய- பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டு  பாராட்டுச் சான்றிதழுடன் நூலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ 5000 சன்மானமாகத் தரப்பட்டது. ஆனால், அந்த சன்மானத்தை தோழர் வே.ஆனைமுத்துவின் ‘சிந்தனையாளன்' ஏட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் இருவரும் தந்துவிட்டனர்.

இந்தக் கட்டுரையில் உங்களால் போற்றப்படும் தோழர் வே.ஆனைமுத்துவாலேயே விழா எடுக்கப்பட்ட ஒரு புத்தகத்தை நீங்கள் ‘குப்பைக்கட்டு' என்று சொல்வது உங்கள் உரிமை.

அந்தப் புத்தகத்திற்கு முன்விலைத் திட்டமொன்று அறிவிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டதும் விற்பனை செய்யப்பட்டதும் உண்மை. ஆனால் “தமிழகமெங்கும் பெரும் முன்பணம் திரட்டப்பட்டு வெளியிடப்பட்ட பெரியார் பற்றிய நூலுக்கு, தமிழகச் சிந்தனையாளர் ஒருவரைப்பற்றிய நூலுக்கு, எதற்காக அன்னிய நிதியுதவி என நான் முன்னரும் எழுதியிருக்கிறேன்.” என்று எழுதியுள்ளீர்கள்.   அதாவது இந்தக் கருத்தை ஏற்கனவே பரப்பி வந்திருக்கிறீர்கள் என்பதை நீங்களே ஒப்புக்கொண்டுள்ளீர்கள். எனினும் இதற்கு முன்பு எப்போது, எங்கு இந்தக் கருத்தை  எழுதினீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்.

வெளிநாட்டு பணத்தைப் பெற்றுக்கொண்டு, பணம் கொடுத்தவர்களின் நிபந்தனைக்குட்பட்டு எஸ்.வி.ராஜதுரை எழுதுகிறார் என்று 20.6.2012லும் பின்னர் அதே விமர்சனத்தை வ.கீதா மீது 23.6.2012லும் உங்கள் வலைத்தளத்தில் எழுதியுள்ளீர்கள். என்னோடும் என் பணிகளோடும் தொடர்புடையவர்கள் என்பதால் அவர்கள் இருவரைக் குறித்தும் சில தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என விரும்புகிறேன்.  

கடந்த 2011ஆண்டில் மட்டும் மூன்று விருதுகளும் அவற்றுடன் சேர்ந்து பெருந்தொகைகளும் தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கு தரப்பட விருந்தன. எழுத்தாளர்கள் பாமா, மனுஷ்யபுத்திரன் ஆகியோருடன் சேர்த்து எஸ்.வி.ராஜதுரைக்கும் பாராட்டு விருதும் எஸ்.வி.ராஜதுரைக்கு ரூ.30000 பணமும் வழங்க சமயபுரம் எஸ்.ஆர்.வி.மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி முன்வந்தது. விருதையோ பணத்தையோ ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இதை நீங்கள் மதிப்புக்குரிய பத்திரிகையாளர் பரீக்ஷா ஞாநியிடமிருந்தும் தெரிந்துகொள்ளலாம்.

இரண்டாவதாக 2011ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு' இலக்கிய விருதையும் அதனுடன் சேர்ந்து வரும் ரூ.50000த்தையும் பெற்றுக் கொள்ள தோழர் எஸ்.வி.ராஜதுரை -அவரால் பெரிதும் மதிக்கப்படும் அவரது நண்பர் ‘வெளி' ரங்கராஜன் போன்றவர்கள் வற்புறுத்திய போதும்கூட -மறுத்துவிட்டார்.

காலஞ்சென்ற அறிஞர் பழ.கோமதிநாயகம் பெயரால்  நிறுவப்பட்டுள்ள விருதும் அத்துடன் சேர்த்து  ஒரு இலட்சம் ரூபா பணமும் தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கு வழங்க வேண்டும் என அந்த விருதுக்குழுவால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதையும் ஏற்றுக் கொள்ள தோழர் எஸ்.வி.ஆர். மறுத்துவிட்டார். இதை அண்ணன் பழ.நெடுமாறனிடமிருந்தோ, டாக்டர்.ஜீவானந்தம் அவர்களிடமிருந்தோ தெரிந்து கொள்ளலாம்.

மூன்று  இருத அறுவை சிகிச்சைகள், கிட்டத்தட்ட  கண்பார்வை இல்லாமல் போன நிலை ஆகியவற்றுடன், புற்றுநோயும் மூட்டு வலிகளும் கண்ட தனது துணைவியாருடன் ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு வாழ்க்கைப் போராட்டம் நடத்திவரும் தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கு பண உதவி எவ்வளவு அவசியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அவருக்குப் பணம்தான் முக்கியம் என்றால் எந்த நிபந்தனையுமில்லாமல், தரப்பட்ட மேற்சொன்ன விருதுகளையும் பண முடிப்புகளையும் எந்தப் புத்தகத்தையும் எழுதாமல் வாங்கியிருக்கலாமே? அவர் வெளிநாட்டு உதவிகளை நாட வேண்டிய தேவையே இல்லையே?

அமெரிக்காவில் கிடைத்த பிரகாசமான வாய்ப்புகள், புகழ் ஆகியவற்றை உதறித் தள்ளிவிட்டு சொந்த நாட்டு மக்களுக்காக எழுத வேண்டும், செயல்பட வேண்டும் எனத் தாயகம் திரும்பி வந்தவர் தோழர் வ.கீதா. அன்னிய நிதியை அவரால் அன்னிய நாடுகளிலேயெ பெற்றிருக்கலாம் அல்லவா?

இதுபோன்ற அவதூறுகளைச் சந்தித்துப் பழகிவிட்ட அவர்கள் பொருட்டு நான் செய்ய வேண்டியது ஏதும் இல்லை.

ஆனால், உற்றார் உறவினர்களைத் துறந்து, வசதியான நிலப்பிரபுத்துவ வாழ்க்கையை உதறித் தள்ளி, திருமணம்கூட ஒரு பந்தமாகிவிடுமோ என்பதனால் அதையும் வேண்டாம் என்று முடிவு செய்து இடதுசாரி, பெண்ணிய, தலித்தியக் கருத்துகளைப் பரப்புவதற்காகவே என் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தோழர் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா போன்றோருடன் செலவிட்டுள்ள என்னையும் என்னால் நிறுவப்பட்டு தமிழகத்திலுள்ள மிகச் சிறந்த, நேர்மையான நூல் பதிப்பகங்களிலொன்று எனப் பெயர் பெற்றுள்ள ‘விடியல் பதிப்பக'த்தையும் அவதூறு செய்வதற்காக ‘பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' புத்தகம் அன்னிய நிதி உதவியால் வெளியிடப்பட்டது என்னும் அபாண்டமான, அபத்தமான, உங்கள் மனசாட்சியை சிறிதும் உறுத்தாத பொய்யைக் கூறியிருக்கிறீர்கள். அன்னிய நிதி உதவி பெற்றதற்கான சான்று உங்களால் ‘குப்பைக்கட்டு' என்று என்றோ கடாசப்பட்டதாக நீங்கள் சொல்லும் அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பின் நான்காம் பக்கத்தில் இருப்பதாக, உங்கள் ‘ நினைவி'லிருந்து சொல்கிறீர்கள்.

இந்தக் கருத்தை இதற்கு முன்பே சொல்லி வந்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.

உங்களது இந்த அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டு, நுரையீரல் புற்று நோயால் தாக்கப்பட்டு, மரணத்துடன் போராடி வரும் எனக்கு பெரும் மன உளைச்சலைத் தந்துள்ளது. எனது நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.

எனவே நீங்கள் ‘பெரியார்' சுயமரியாதை சமதர்மம்' நூல் குறித்துக் கூறியவை அப்பட்டமான பொய் என்றும் அதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் உங்கள் வலைத்தளத்திலேயே ஓரிரு நாட்களில்  நீங்கள் பதிவு செய்ய வேண்டும். எனக்கு இன்னும் விட்டு வைக்கப்பட்டுள்ள நாட்களில் இன்னும் சில நல்ல ஆக்கங்களைத் தமிழ் வாசகர்களுக்குத் தர வேண்டும் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உழைத்து வரும் எனக்கு உங்கள் அவதூறுகள் கடும் மன வேதனையை, சொல்லொணா மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளன. ஒருவேளை நான் விரைவில் முடிவு எய்திவிட்டாலும்,  என் மீதும் நான் நிறுவிய ‘விடியல் பதிப்பக'த்தின் மீதும் நீங்கள் சுமத்தியுள்ள களங்கத்தைப் போக்க, உயிருடன் இருந்தால் நானோ, இல்லாவிட்டால் என்னால் நிறுவப்பட்டுள்ள ‘விடியல் அறக்கட்டளை' பொறுப்பாளர்களோ தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

பெ.சிவஞானம் (விடியல் சிவா)



துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...