திங்கள், மே 4

வில்லியம் ப்ளேக் கடிதமும் கவிதையும் - வ. கீதா


எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர்களில் வில்லியம் ப்ளேக்கும் (William Blake)  ஒருவர். 18ஆம் நூற்றாண்டு. அவர் ஓவியர், டிசைனர், அச்சாளர். அவரின் எழுத்துகளும் ஓவியங்களும் அவர் காலத்தில் ஏற்கப்படவில்லை. ஆனால் பிறகு முக்கியமானவையாக கருதப்பட்டன.

ஒரு விமர்சகருக்கு அவர் எழுதிய கடிதத்திலிருந்து ஒரு சிறுபகுதி. கூடவே அவருடைய Auguries of Innocence என்ற நெடுங்கவிதையிலிருந்து சில வரிகள். 


கடிதத்திலிருந்து...

“கேளிக்கை எனக்கு பிடிக்கும். ஆனால் அளவு மிஞ்சும் போது வெறுப்படையச் செய்கிறது. சிரித்திருப்பது கேளிக்கையை காட்டிலும் மேல். மகிழ்ச்சி கொள்வது சிரிப்பைவிட மேல். ஒரு மனிதனால் இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது. கற்பனைக்கும் தரிசனத்துக்கும் இவ்வுலகில் இடமுண்டு. நான் இவ்வுலகில் காணும் அனைத்தையும் ஓவியமாக்குகிறேன். ஆனால் எல்லோரும் ஒன்றுபோல உலகத்தைப் பார்ப்பதில்லை. ஒரு கஞ்சனுக்கு சூரியனைவிட காலணா அழகானதாக தோன்றுகிறது. திராட்சைக்குலையின் வடிவழகைக் காட்டிலும் பணம் அடைக்கப்பட்டு அடைக்கப்பட்டு பட்டுப்போன பையின் வடிவத்தை அவன் அழகு என்று ரசிக்கிறான். மரத்தைப் பார்த்ததும் சிலர் பரவசமடைந்து கண்ணீர் உகுக்கின்றனர். பிறருக்கோ மரம் என்பது அவர்களின் வழியை மறித்து நிற்கும் பச்சை, அவ்வளவுதான். சிலர் இயற்கையில் குறையையும் குற்றத்தையுமே காண்கின்றனர். பிறர் இயற்கையை காண்பதுகூட இல்லை. ஆனால் மனிதனின் கண்களுக்கு இயற்கைதான் கற்பனை, கற்பனைதான் இயற்கை. ஒருவன் எப்படியோ அப்படியே அவனது பார்வையும்.”

கவிதை வரிகள்...

மணற்துகளில் உலகத்தைக் காண
காட்டுப்பூவில் சொர்க்கத்தைக் காண
எல்லையற்றதை
காலமற்ற காலத்தை
உன் உள்ளங்கையில் தாங்கு.

கூண்டில் அடைபட்ட சிகப்புச் சிட்டு
சொர்க்கத்தை சினமுறச் செய்யும்
மணிப்புறாவும் மாடப்புறாவும் உள்ள பொந்து
நரகத்தையே மெய்சிலிர்க்க வைக்கும்
எசமானனின் வீட்டு வாசலில்
பசித் தீர்க்கப்படாத நாய்
அரசின் வீழ்ச்சிக்கான ஆருடம்
சாட்டையால் அடிக்கப்பட்ட குதிரை
இரத்தத்துக்கு இரத்தம் வேண்டி
சொர்க்கத்தை இறைஞ்சும்
வேட்டையாடப்பட்ட முயலின் அவலக்குரல்
மூளையின் ஒவ்வொரு பகுதியையும் பிடித்து இழுக்கும்

இறகு கிழிக்கப்பட்ட வானம்பாடி
வான்தேவதைகள் பாடாது அமைதி காக்கின்றனர்
இறகு வெட்டப்பட்டு கட்டப்பட்ட சண்டைச்சேவல்
உதயசூரியன் கலக்கமுறுகிறான்
ஓநாயின், சிங்கத்தின் ஓலம்
நரகத்தில் உழலும் மனிதர்கள் துள்ளி எழும்புகிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா

  2021 ஏப் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளன்று சென்னையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை நடத்திய “மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கம்” கருத்தரங்கில...