திங்கள், நவம்பர் 3

அகமண முறை அபாயங்கள்: சாதி மறுப்புத் திருமணமும், மரபணு எனும் பதினோராம் பொருத்தமும் - ஆதவன் தீட்சண்யா


ஹாப்ஸ்பர்க் தாடை

சாதி என்கிற சமூகக் கட்டமைப்பின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பம் தான் ஒவ்வொரு சாதிக்கும் உரியவர்களைப் பெற்றெடுத்து அந்தந்தச் சாதிக்குரிய குணநலன்களுடன் வளர்த்தெடுக்கிறது. தனக்குள்ள இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் ஒரு குடும்பம் எந்தளவுக்கு முனைப்பாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்தக் குடும்பம் அதே சாதியைச் சேர்ந்த மற்ற குடும்பங்களால் மதிக்கப்படும். ஒவ்வொரு குடும்பமும் தனக்குள் இன்னொரு சாதியின் ரத்தம் (சரியாகச் சொல்வதெனில் விந்து) கலந்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் அந்தச் சாதியின் தூய்மை பாதுகாக்கப்படும் என நம்பப்படுகிறது. எனவேதான் இந்தியா முழுவதிலும் மிகப் பெரும்பான்மையான திருமணங்கள் (சுமார் 94%) குடும்பத்தாரால் சொந்த சாதிக்குள்ளேயே - அதிலும் உட்சாதிக்குள்ளேயே ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவ்விசயத்தில் மதமும் பொருளாதார நிலையும் சாதிக்கு இணையான பங்கை வகிக்கின்றன.  

ஏற்பாட்டுத் திருமணங்களில் பெரும்பாலானவை தமக்குள் முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண்ணையும் ஆணையும் இணைத்துவைப்பவை. ஒரு பெண் இன்னாரை தான் விரும்புவதாக முன்மொழிந்து அவரை தனக்கு மணம் முடித்துவைக்கும்படி கோரும் நிலை பொதுவாக இந்த ஏற்பாட்டுத் திருமணங்களில் இல்லை. ஒருவேளை ஒரு பெண் அவ்வாறு முன்மொழிவாரேயானால் அது ஒழுக்கக்கேடான நடத்யை£கப் பார்க்கப்படும் நிலைதான் இங்கே நிலவுகிறது. இந்திய மனிதவள மேம்பாட்டுக் கணக்கெடுப்பு நடத்திய ஆய்வொன்றில், 65% பெண்கள் திருமணத்தின் போதுதான் தனது வாழ்க்கைத் துணைவனை முதன்முதலில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். முன்பின் அறிமுகமற்ற அவர்களுக்குள் பரஸ்பர புரிதலும் இணக்கமும் உருவாகும் முன்பே அல்லது உருவாகாமலே உடலுறவு, கர்ப்பம், குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு என்று இல்வாழ்வின் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு நெட்டித்தள்ளுகிற இவ்வகைத் திருமணங்கள் தான் இங்கு இயல்பானவை எனப்படுகின்றன. வரதட்சணைச் சுரண்டல், குடும்ப வன்முறை, மணமுறிவுகள் ஆகிய பாதகங்களும் இவ்வகைத் திருமணங்களின் ஒருபகுதியாக ஏற்கப்படுகின்றன. இங்கு காதலுக்கு அவசியமேயில்லை. 

திருமண வயதை எட்டிய எவரொருவரும் தான் விரும்பியவரை வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்தாலும் நாடுதழுவிய அளவில் சுமார் ஆறு சதவீத திருமணங்கள் மட்டுமே சொந்தசாதிக்கு வெளியே நடக்கின்றன. எனவே, எங்கு பார்த்தாலும் சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்துகொண்டிருப்பதாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. சொந்த சாதிக்கு வெளியே திருமணம் நடப்பதற்கு முதன்மையான காரணமாயிருப்பது மனித சுபாவமான காதல். எனவே அந்தக் காதலையே நாடகக்காதல், லவ் ஜிகாத் என்று அவதூறு செய்து அதன் நம்பத்தன்மையைக் குலைப்பதன் மூலம் காதல் திருமணங்கள் பற்றிய ஒருவகை வெறுப்புணர்வு பரவலாக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் சாதி எல்லையைக் கடந்து காதல் திருமணங்கள் நடக்கவே செய்கின்றன. சாதி மறுப்புத் திருமணங்களில் மிகவும் அரிதாக ஒன்றிரண்டைத் தவிர ஏனையவை இயல்பானவையாக குடும்பத்தினராலும் உறவினர்களாலும் ஏற்கப்படுவதில்லை. கடுமையான எதிர்ப்பையும் தடுப்பையும் மீறி நடக்கும் இத்திருமணங்களில் ஒருபகுதி தொடத்தக்க இரு வேறு சாதிகளுக்குள் நடப்பவை. எஞ்சியவற்றில் இணையரில் ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். 

காதலிப்பவர்களின் நோக்கம் சேர்ந்து வாழ்வதுதான். மற்றபடி சாதியை மறுப்பதோ ஒழிப்பதோ அவர்களது நிகழ்ச்சிநிரலில் இல்லை. சேர்ந்து வாழும் அவர்களது இயல்புணர்வை அவர்களுடைய  குடும்பம், உறவுகள், சாதி ஆகியவை தடையாகி மறிக்கும்பட்சத்தில் வேறுவழியின்றி அவற்றை மீறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவ்வாறு மீறுவதால் உண்டாகும் இழப்புகளை தமது அன்பினால் ஈடுகட்டிக்கொண்டு வாழ்வதென இரண்டு தனிமனிதர்களாகிய அவர்கள் எடுக்கின்ற முடிவு அவர்களுக்குமப்பால் அவ்விருவருடனும் தொடர்புடைய குடும்பங்கள், உறவுகள், சாதிகள் ஆகியவற்றின்மீது பெரும் தாக்கம் செலுத்துகிறது. சாதிக்கு விசுவாசமான குடும்பம் என்று சொந்த சாதியினரிடையேயுள்ள கௌரவத்திற்கு பங்கம் நேர்வதற்கும் வேறுபட்ட பழக்கவழக்கங்கள் கொண்ட ஒருவரை இழுத்து வந்து தமக்குள் கலந்து மாசடையச் செய்வதற்கும், சொந்த சாதிக்குள் விரும்பியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையேகூட மறுக்கப்பட்டுள்ள பெண்கள் தமது வாழ்க்கைத் துணையைச் சுதந்திரமாக தேர்வுசெய்வதன் மூலம் குடும்பத்தின் மீது நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆணாதிக்கத்தை தகர்ப்பதற்கும் வழிவகுக்குமென்ற அச்சத்துடன் இம்முடிவு எதிர்கொள்ளப்படுகிறது. தவிரவும் சாதியடுக்கில் தனது சாதிக்குள்ள இடம், பழக்கவழக்கங்கள், அதிகாரம், சொத்துரிமை, இயற்கை வளங்களையும் பொதுச்சொத்துக்களையும் பயன்படுத்தும் உரிமை, பண்பாட்டு நிலை ஆகியவற்றை திடுமென இன்னொருவருடன் பகிர்ந்தாக வேண்டிய நெருக்கடியையும் உருவாக்குகிறது. இவ்விசயத்தில் படிப்பு, செல்வந்த நிலை ஆகியவை பெரிய மனமாற்றங்களைக் கொண்டுவந்துவிடவில்லை என்பதை சில ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. தாமல்லாத இன்னொரு சாதியினரை தம்மவராக ஏற்கமுடியாத மனத்தடைக்குப் பின்னே இப்படியான காரணங்கள் உள்ளதால்தான், முடிந்தமட்டிலும் காதல் திருமணங்கள் நடவாமல் தடுப்பது, கைமீறிப் போனால் ரத்த சம்பந்தம் தவிர மற்ற சம்பந்தம் இல்லை என்று எழுதி வாங்கிக்கொண்டு ஒதுக்கிவிடுவது, அதற்கும் பணியாத நிலையில் கொன்றொழிப்பது என்கிற நிலையை குடும்பத்தினர் மேற்கொள்கின்றனர். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு எதிராக குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் இத்தகைய கொடிய முடிவினை மேற்கொள்வதற்கான புற அழுத்தத்தை உறவினர்களும் சாதியமைப்பினரும் உருவாக்குகின்றனர் என்பதை பல்வேறு  தருணங்களில் நீதிமன்றங்கள் கண்டித்துள்ளன.   

அச்சுறுத்தலையும் புறக்கணிப்பையும் மீறி சுதந்திரமாக தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் காதலர்களைப்  பாதுகாக்கும் பொறுப்பு அரசியல் சாசனத்தின் கீழ் இயங்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உண்டு.  ஆனால் அரசு நிர்வாகத்திலும் நீதித்துறையிலும் அரசியல் கட்சிகளிலும் மனிதவுரிமை அமைப்புகளிலும்கூட புரையோடிப் போயிருக்கும் சாதியமானது, சாதிமறுப்புத் திருமணங்களுக்கு எதிரானவையாக இவ்வமைப்புகளை கீழிறக்கம் செய்துள்ளது. காதலர்களை மிரட்டி பிரித்தனுப்புவது தொடங்கி ஆணவக்கொலைகளை தற்கொலைகளாக திரித்து மறைப்பது வரை இவ்வமைப்புகளின் செயல்பாடுகள் சாதியமாக உள்ளன. ரோமியோ ஸ்குவாட் என்ற படையை ஒரு அரசே உருவாக்கியிருப்பதெல்லாம் காதலை தடுப்பதற்காக அரசியல் சாசனத்திற்கு விரோதமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கைதான். 

இந்தச் சூழலில் சாதியொழிப்பை முதன்மை நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டு இயங்கும் அமைப்புகள் தான் காதலர்கள் சேர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையைத் தரமுடியும். காதல் திருமண இணையருக்கான பாதுகாப்பு, வசிப்பிடம், தன்மதிப்புடன் இல்வாழ்க்கையைத் தொடங்குவதற்கான வாழ்வாதார  உதவிகள், திருமணத்திற்காக சாதியை மீறிய அவர்களைச் சாதியற்றவர்களாக வளர்த்தெடுக்கும் சமூகக்கல்வி, அவர்களது சந்ததியினருக்கு சிறப்பு ஒதுக்கீடு என தம்மளவிலும் அரசின் மூலமாகவும் செய்வதற்குரிய திட்டங்களை  இவ்வமைப்புகள் வகுக்கவேண்டியுள்ளது.  ஏற்கனவே இப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்குள் ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது. 

இருக்கும் சட்டங்களின்படி காதலர்கள்- சாதிமறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்வதும், தேவைப்படும் புதிய சட்டங்களை உருவாக்கப் போராடுவதும் அமைப்புகளின் பொறுப்பாகிறது. நடப்பிலுள்ள இந்துத் திருமணச் சட்டம் சாதிமறுப்பு மற்றும் காதல் திருமணங்களுக்கு ஏற்பு வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.  சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி மணம்புரிய விரும்புகிறவர்களின் விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முப்பது நாட்களுக்கு அறிவிக்கைச் செய்யப்படும் நடைமுறையானது, அவர்களது குடும்பத்தினராலும் மதவாத அமைப்பினராலும் அவர்கள் அச்சுறுத்தப்படுவதற்கும் பிரித்துவிடப்படுவதற்குமான ஆபத்தைக் கொண்டுள்ளது. எனவே இந்த நடைமுறையைத் தடுக்கும் விதமாக சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது. 

தமிழ்நாடு திருமணச் சட்டம், சாதி மறுப்பு மற்றும் காதல்  திருமணம் செய்து கொள்வோருக்கு உகந்ததாக இருக்கிறது. சார்பதிவாளர், விண்ணப்பிக்கும் இணையர்கள் மற்றும் சாட்சிகளிடம் தீர விசாரித்து பதிவு செய்வது இச்சட்டத்தின்படி போதுமானதாயிருக்கிறது. எனினும் பின்னாளில் ஏதேனும் சட்டச் சிக்கல் வந்தால் நீதிமன்றங்களிடம் தான் மாட்டிக்கொள்ளக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையில், மணமக்களின் பெற்றோர்களை சாட்சியாக அழைத்துவரும்படி சார்பதிவாளர் நிபந்தனை விதிக்கின்றார். சட்டத்தில் கோரப்படாத இந்த நிபந்தனை இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானதாக அமைந்து விடுவதை தடுக்கும் விதமாக சார்பதிவாளர்கள் முறையாக அறிவுறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பான வழக்குகளில் சார்பதிவாளர்களைப் பொறுப்பாக்குவதற்கு பதிலாக, பிறழ்நிலையாக உள்ளவர்களை நீதிமன்றம் பொறுப்பாக்க வேண்டும். 

ஒரே சாதிக்குள், நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்கிற அகமண முறையால் ஏற்படும் மரபணு குறைபாடுகள், சந்ததியினருக்கு வரும் பரம்பரை நோய்கள், கருச்சிதைவுகள், இறந்து பிறத்தல், பிறந்ததும் இறத்தல்,  குறைவளர்ச்சியுடன் பிறத்தல் பற்றிய அறிவியல் பூர்வமான கண்ணோட்டத்தை சமூகத்தில் பரவலாக்கும் பொறுப்பு அரசுக்கும் சமூகநல அமைப்புகளுக்கும் இருக்கிறது. ஸ்பானிஷ் ஹாப்ஸ்பர்க் அரச குடும்பத்தவர் தமக்குள்ளேயே தலைமுறை தலைமுறையாக நடத்திக்கொண்ட மணவுறவினால் மரபணுவில் ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள் அனைவருமே விசித்திரமாக மேல்தாடையைவிட கீழ்தாடை பெரிதாகவும் நீண்டும் வாயை மூட முடியாதபடியும்  பற்களும் ஈறுகளும் விகாரமாக வெளித்தெரியும் படியும் பிறந்தார்கள். இவர்களது “ஹாப்ஸ்பர்க் தாடை” மரபணு ஆய்வாளர்களிடையே பிரபலமான ஆய்வுப் பொருளாக உள்ளது. இவர்களது மரபணுவில் நீடித்த குறைபாட்டின் காரணமாக ஒருகட்டத்தில் இனப்பெருக்கத் திறனின்றி வாரீசற்று  முடியாட்சி வீழ்ச்சியடைந்தது. 

மரபணுக் குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வு உலகெங்கும் அதிகரித்துள்ளது. எனவே மரபணுப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் பரவலாகிக் கொண்டுள்ளது. பத்து பொருத்தம் பார்த்து கல்யாணம் முடிப்பதாக பீற்றிக்கொள்ளும் இந்தியாவிலும்கூட “ஜீன் பத்ரிகா” என்ற பெயரில் இந்த மரபணுப் பொருத்தம் பார்த்துக் கொடுக்கும் நிறுவனங்கள் வந்துவிட்ட இந்நேரத்தில் சாதியாணவக் கொலைகளைத் தடுப்பதற்கான போராட்டத்தை நடத்திக்கொண்டே சாதிக்குள்ளேயே முடங்கி நடக்கும் அகமண முறையை ஒழித்துக்கட்ட வேண்டியதற்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.  

நமது எதிர்காலச் சந்ததியினர் குறைபாடற்ற ஆரோக்கியமான மரபணுக்களைக் கொண்டவர்களாகவும்  பரம்பரை நோய்களால் பீடிக்கப்படாதவர்களாகவும் அறிவுக் கூர்மையுள்ளவர்களாகவும் இனப்பெருக்க ஆற்றல் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமென  விரும்புகிற எந்தவொரு அரசும் அமைப்பும் தனிமனிதரும் சாதிக்குள் முடங்கி நடக்கும் அகமண முறைக்கு எதிராக இயங்குவதே அறமாகும்.

நன்றி: விகடன்.காம், 30.08.2025 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அகமண முறை அபாயங்கள்: சாதி மறுப்புத் திருமணமும், மரபணு எனும் பதினோராம் பொருத்தமும் - ஆதவன் தீட்சண்யா

ஹாப்ஸ்பர்க் தாடை சா தி என்கிற சமூகக் கட்டமைப்பின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பம் தான் ஒவ்வொரு சாதிக்கும் உரியவர்களைப் பெற்றெடுத்து அந்தந...