CPIM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CPIM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 4

தமிழகத்தில் சாதியத்தின் தாக்கம் - ஆதவன் தீட்சண்யா


தேசாபிமானி மலையாள வார இதழில் (2019 ஜூன் 30) வெளியான எனது கட்டுரையின் தமிழ் வடிவம். இதிலுள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனெவே வாசித்திருக்கக்கூடும்.


1. தமிழகத்தின் சாதியப் படிநிலை குறித்து..

வரிசையாக எழுதிவைத்து  நாளொன்றுக்கு 12 மணிநேரம் என்று 355 நாட்கள் வாசித்தால் தான்  இந்தியாவிலுள்ள சாதிப்பெயர்களையும் உட்சாதிப் பெயர்களையும் வாசித்து முடிக்க முடியும் என்றொரு புள்ளிவிவரத்தை தருகிறார் நிதி ஆயோக் துணைத்தலைவர் அர்விந்த பனகாரியா. அந்தளவுக்கு 46,73,034 சாதிகளாகவும் உட்சாதிகளாகவும் பிரிந்திருக்கிறது இந்தியச் சமூகம். இதற்கு இசைவான விகிதத்தில்தான் தமிழகமும் பிரிந்துள்ளது. இங்கு பட்டியல் சாதிகள்- 76, பட்டியல் பழங்குடியினர்-36, பிற்படுத்தப்பட்ட சாதிகள்-136, (இஸ்லாமியரில்) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள்- 7, மிகவும் பிற்பட்ட சாதிகள் 41, சீர்மரபினர்-68, முற்பட்ட சாதிகள்- 79  என 443 சாதிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பல உட்சாதிகளாக மேலும் பிரிந்துள்ளன. இவற்றில் எந்தவொரு சாதியோ உட்சாதியோ இன்னொன்றை தனக்குச் சமதையாகக் கருதுவதில்லை. இவை தத்தமது சாதிக்கென தனித்துவமும் பெருமையும் இருப்பதாக நம்புகின்றன. அதற்கேற்ற தோற்ற வரலாற்றுக்கதைகளையும் தொன்மங்களையும் புனைந்து கொண்டுள்ளன.

சாதியத்தின் பொதுவான கூறுகளாகிய மேல்Xகீழ், தீட்டுXபுனிதம், ஒதுக்குவதுXஒதுங்குவது, எந்தவொரு சூழலிலும் மாற்றிக்கொள்ள முடியாதபடி மூடுண்ட இறுக்கம் உள்ளிட்டவை தமிழகத்திலும் கடுமையாக நிலவுகிறது. சாதியமைப்பின் உச்சத்தில் இருத்திக் கொண்டுள்ள - அதனாலேயே சமூக, அரசியல், பொருளியல், பண்பாட்டுத்தளங்களில் நீடிக்கும் பார்ப்பனர்களின் மேலாதிக்கம் இன்னமும் இங்கு பெருமளவில் மாற்றமின்றி நீடிக்கிறது. சமூக நீதிக்கான போராட்டங்களின் தாக்கத்தினால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பார்ப்பனர்களின் ஏகபோகம் தடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தான் உயர்வானவர்கள் என்கிற சமூக உளவியலை மாற்றியமைக்க முடியாத பலவீனம் நீடிக்கிறது.

சாதிப்படிநிலையை ஏற்றுக்கொண்டு அதில் பார்ப்பனர்களுக்கு அடுத்துள்ள நிலைக்கு உரிமை கோருவதிலும் அதை நோக்கி நகர்வதிலும் இங்கு ஒவ்வொரு சாதியுமே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அதன்பொருட்டு படிநிலையில் தனக்கு மேலுள்ள சாதியிடம் விசுவாசத்தையும் கீழே அடுத்துள்ள சாதியிடம் வெறுப்பையும் விலகுதலையும் எல்லாச் சாதிகளும் கடைபிடிக்கின்றன. இடையறாத இப்போக்கு சமீபகாலத்தில் அதிகரித்துவருகிறது.

வேறு பண்பாட்டுப் பின்புலம் உள்ளவர்கள் தமது அண்டையில் குடியிருப்பதை விரும்பாதவர்களுக்கான சர்வதேச கணக்கெடுப்பில் ஜோர்டானியர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் முன்னிலை வகிப்பதற்கு ஒரு காரணம் இங்கு  வாழ்விடம் திட்டவட்டமான சாதியப் பிரிவினையைக் கொண்டிருப்பதுதான். மன்னராட்சிக் காலங்களில் உருவாகி காலனியாட்சிக் காலத்திலும் சுதந்திரத்திற்குப் பின்னும்கூட அக்ரஹாரம், பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம் என்கிற தனித்த வாழ்விடங்களைக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் காலப்போக்கில் அதிகார மையங்களாகிய பெருநகரங்களுக்கும் அயல்நாடுகளுக்கும் பெருமளவில் நகர்ந்துவிட்டனர். அவர்கள் தங்களது புதிய வாழ்விடங்களுக்குள் பார்ப்பனரல்லாதார் குடியமர்வதை  நுட்பமான பல வழிகளில் தடுத்து விடுகின்றனர்.

வரலாற்றுக் காரணங்களால் தாங்கள் இழந்துவந்த தனித்த அடையாளங்களை மீட்டுக் கொள்ள உகந்த காலமாக பார்ப்பனர்களில் பலரும் பா.ஜ.க. ஆட்சியைக் கருதுகிறார்கள். அதாவது பௌத்த எழுச்சியால் பார்ப்பனர்கள் இழந்தவற்றை மீட்ட புஷ்யமித்திர சுங்கனின் ஆட்சிக்காலம் மீண்டுவந்தது போன்ற பெருமிதம் அவர்களுக்கிருக்கிறது. எனவே அவர்கள் அப்பளம், ஊறுகாய் தொடங்கி அக்ரஹாரம், பல்கலைக்கழகம் வரையாக எல்லாவற்றிலும் தமக்கென தனியானவற்றை இப்போது மீட்டுருவாக்கும் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். கல்வி வளர்ந்தால் சாதி ஒழிந்துவிடும் என்கிற வாதத்தைப் பொய்யாக்கும் விதமாக, தலைமுறை தலைமுறையாக கல்வியறிவு பெற்று வருகிற - அதிலும் உயர்கல்வி பெற்றுவருகிற பார்ப்பனர்களில் பலரும் சாதிய உணர்வு மற்றும் பாகுபாட்டின் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறார்கள்.

பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள சாதியினர் பார்ப்பனர்களைப் பார்த்தொழுகுகிறவர்களாக - போலச்செய்பவர்களாக வாழ்கிறார்கள். இவர்கள் சேர்ந்து வாழும் இடம் ஊர் எனச் சுட்டப்படுகிறது. இந்த ஊர் சாதியடிப்படையிலான தெருக்களாக பிரிந்திருக்கிறது. ஒரு சாதி வசிக்கும் தெருவில் இன்னொரு சாதி வசிப்பது விதிவிலக்காக  இருக்குமேயன்றி இயல்பாக நடக்கக்கூடியதல்ல.  பெருங்கோயில்கள், கல்விக்கூடங்கள், மத்திய மாநில அரசுகளின் அலுவலகங்கள், பேருந்து / ரயில் நிறுத்தங்கள், வாக்குச்சாவடிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,  நீர்த்தேக்கத் தொட்டிகள், நீர்நிலைகள் ஆகியவை இந்த ஊர்ப்பகுதியில்தான் இருக்கின்றன.

இந்த இருவகை வாழ்விடங்களுக்கு வெளியே ஒதுக்கப்பட்டிருப்பவை சேரிகள் / காலனிகள் என்கிற பெயரிலான பட்டியல் சாதியினரின் குடியிருப்புகள். இயல்பாக குடிமக்களுக்கு அரசிடமிருந்து வந்து சேரவேண்டிய தேவைகள் இங்கு வசிப்பவர்களுக்கு இரண்டாம் பட்சமாகவே வழங்கப்படும். அரசின் வளர்ச்சிப்பணிகளையோ முதலீடுகளையோ இப்பகுதியில் காண்பதரிது. சாதியச்சமூகத்தின் பொதுஉளவியல்தான் அரசின் உளவியலாகவும் இயங்குகிறது. ஆகவே அது பட்டியல் சாதி அல்லாதாரின் அரசாக தன்னைத்தானே குணாம்சரீதியாக குறுக்கிக்கொள்கிறது.

பட்டியல் சாதிகளில் 76 பிரிவுகள் இருந்தாலும் ஏனைய பிரிவினரைக் காட்டிலும் பள்ளர், பறையர், அருந்ததியர் ஆகிய மூன்று பிரிவினரே பெரும்பான்மையினர். சாதிஇந்துக்களைப் பொறுத்தமட்டில் இவர்கள் அனைவருமே தீட்டுக்குரியவர்கள், ஒதுக்கிவைக்கப்பட வேண்டியவர்கள். ஆயினும், சாதியத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட இந்தச்  சேரிவாழ் மக்கள் தமக்குள் இணைந்து வாழாமல் தனித்தனியே வாழ்கின்றனர். 

சேரிவாழ் மக்களுக்கும் ஊர்வாழ் மக்களுக்கும் இடையே எவ்வித மனிதாய உறவுகளும் கிடையாது. வழிபாட்டுத்தலங்கள், தெய்வங்கள், பூசகர்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள், வாழ்க்கைவட்டச் சடங்குகள், பாதை, இடுகாடு, நீர்நிலைகள் என எதுவும் அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ளத்தக்க பொதுத்தன்மையுடன் இல்லை. விதிவிலக்காக பொதுவில் இருக்குமிடங்களில் பொது உரிமை கோரலும் மறுப்பும் மோதலுக்கும் வன்முறைக்கும் வழிவகுப்பதாக ஆக்கப்படுகின்றன.

'மனித வாழ்விற்கு மிக அடிப்படை ஆதாரமான நிலம் இங்கு நீதியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. இந்தியாவின் மக்கள்தொகையில் 56.4 சதம் குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு துண்டு நிலம்கூட இல்லை. இவர்கள், சொத்து வைத்துக்கொள்ள உரிமையற்றவர்கள் என்று சாதியத்தால் மறுக்கப்பட்ட சாதியினர். மறுபுறத்திலோ மொத்த விளைநிலத்தில் 32% வெறும் 5% பேரிடம் இருப்பதாக அரசின் புள்ளிவிவரமே தெரிவிக்கிறது. இந்த 5% பேரும் சாதியடுக்கின் மேலே இருத்திக்கொண்டவர்கள். இவர்களுக்கு மன்னராட்சிக் காலங்களில் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்ட இனாம்கள் மூலமாக இந்நிலக்குவிப்பு நடந்துள்ளது. செட்டில்மென்ட் ஆப் இனாம்ஸ் என்னும் பிரிட்டிஷ் ஆட்சியின் ஆரம்பகால ஆவணம் அக்ரஹாரம், பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம், திரிஷ்வாகம், தர்மாசனம், பட்டம், பொறுப்பு, அத்யாயனம், புராணம், பஞ்சாங்கம், தோப்பு, தொரப்பாடி, கர்ணம், மணியகாரர் போன்ற பெயர்களில் வளமான பெரும் நிலப்பரப்புகள் மேலடுக்குச் சாதிகளுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. இவ்வாறு இனாம் கொடுப்பதற்காக வேளாண் சாதிகளிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டதோடு, அந்த நிலங்களில் அவர்கள் கூலிகளாக உழைத்துக் கொடுக்கும்படியும் தாழ்த்தப்பட்டனர். இவ்வாறு பிறருக்கு மானியமாகவோ இனாமாகவோ கொடுப்பதற்காக அரசால் நிலம் பறிக்கப்பட்டவர்கள் குடிநீக்கிகள் என்று தமிழகக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளனர்...' (இது தொடர்பான எனது விரிவான கட்டுரையை பி.பி.சி.வலைதளத்தில் வாசிக்கலாம்.)

பட்டியல் சாதியினரைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு நிலப்பங்கீடு செய்து தரப்படவில்லை என்பதோடு அவர்களிடமிருந்த பஞ்சமி நிலமும் பறிபோய்விட்டது. அம்பேத்கர் பிறந்த அதே 1891ஆம் ஆண்டில், அயோத்திதாசர் முன்னெடுப்பில் நடந்த திராவிட மகாஜன சபை மாநாடு தரிசுநிலங்களை தீண்டப்படாதாருக்கு வழங்கவேண்டும் என்று கோரியது. அதன் தொடர்ச்சியில், 1892ல் DC லேண்ட் என்கிற வகைப்பாட்டின் கீழ் அன்றைய சென்னை மாகாணத்தின் தீண்டப்படாத சாதியினருக்கு 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு வழங்கியது. ஆனால் இன்றைக்கு அந்த நிலத்தில் சில ஆயிரம் ஏக்கரே அவர்களது அனுபோகத்தில் உள்ளது. எஞ்சிய நிலம் அவ்வளவும் அரசுத்துறை அதிகாரிகளின் துணையோடு சாதி இந்துக்களால் அபகரிக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கம் விரைந்து பரவும் மாநிலமான தமிழகத்தில் 12லட்சம் ஏக்கர் நிலம் என்பதன் சொத்துமதிப்பு அதற்குரியவர்களிடம் இல்லை.

ஏற்கனவே சாதி என்கிற சமூக  மூலதனத்தைக் கொண்டிருக்கிற உயர்த்திக் கொண்ட சாதியினர் வேளாண்மை, தொழில், வணிகம் ஆகியவற்றை தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். உலகமயமாக்கல் காலத்தில் அவர்கள் நிலம், மண், மணல், பாறை, கனிமங்கள், தண்ணீர், மரம் என இயற்கை வளங்களை பண்டமாக்கி விற்று பணமாக்கி வருகின்றனர். இவர்களுக்கு இடைநிலைச் சாதிகளில் ஒருபகுதியினர் பங்குதாரிகளாக உருவாகியுள்ளனர். இவ்விரு பகுதியினரது கட்டுப்பாட்டில்தான் இன்றைய தமிழக அரசு இயந்திரமும் அரசியல் களமும் சிக்கிக் கொண்டிருக்கின்றன.

2. சமகாலத்தில் தலித்துகள் மீதான வன்கொடுமை

தமிழக மக்கள் தொகையில் 20.01 சதவீதத்தினர் தலித்துகள். 1.10 சதவீதமான பழங்குடிகளைத் தவிர்த்துவிட்டால் (சில இடங்களில் பழங்குடிகளும் கூட)  எஞ்சியவர்கள் உயர்த்திக்கொண்ட சாதியினரும் இடைநிலைச் சாதிகளுமாவர். இவர்கள் இயல்பாக சுயசாதிப் பெருமிதம் கொண்டவர்கள். தங்கள் சாதி தனித்துவமானது, பிறசாதியின் கலப்பில்லாத தூய ரத்தம் கொண்டது என்கிற போலி கற்பிதத்தை நம்புகிறவர்கள். இந்தப் பெருமிதம், தனித்துவம், சாதித்தூய்மை ஆகியவற்றுக்கு தலித்துகளால் ஆபத்து என்கிற அவதூறையும் பீதியையும் கிளப்பி - ஆகவே தலித்துகள் அடக்கப்பட / அழிக்கப்பட வேண்டியவர்கள் என்கிற நஞ்சைப் பரப்புகிறார்கள். சாதியுணர்வை சாதி வெறியாக மாற்றுவதால் தத்தமது சாதியில் ஏற்படும் அணிதிரட்சியை தனிப்பட்ட ஆதாயங்களுக்கான மூலதனமாக அரசியல் களத்தில் பயன்படுத்துகிற மலிவான உத்தியை அந்தந்த வட்டார அளவிலான ஆதிக்கச்சாதியினர் சிலர் தொடர்ந்து முயற்சித்துவருகிறார்கள்.

இந்தச் சாதிகள் தமக்கு இணையாக சமத்துவமாக இன்னொரு சாதியை  கருதாத போதும் தலித் வெறுப்பு- தீண்டாமை- வன்கொடுமை என்கிற புள்ளிகளில் ஒன்றிணைகிறார்கள். அவ்வகையில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு சாதிய வன்கொடுமை என்கிற அகில இந்திய சராசரியுடன் பொருந்தும் விதமாகவே தமிழகத்திலும் சாதிய வன்கொடுமைகளை நிகழ்த்துகிறார்கள். இன்னமும் தேநீர்க்கடைகளில் இரட்டைக்குவளை, சலவைக்கடைகளிலும் சவரக்கடைகளிலும் அனுமதி மறுப்பு, இடுகாடு/ இடுகாட்டுக்கான பாதை மறுப்பு, வழிபாட்டுரிமை மறுப்பு, கல்வி வளாகங்களில் பாரபட்சம், பொது இடங்களில் புழங்கத்தடை, பள்ளிகளில் தலித் பெண் ஊழியர்கள் மதிய உணவு சமைப்பதற்கு எதிர்ப்பு, வாயிலே சிறுநீர் கழிப்பது/ மலத்தைத் திணிப்பது, தலித் குடியிருப்புகளை கொள்ளையடிப்பது / அழித்தொழிப்பது, தலித் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்களை நிகழ்த்துவது என மனிதத்தன்மையற்ற வடிவங்களில் வன்கொடுமை தமிழகத்தில் நிலவுகிறது. இத்தகைய வன்கொடுமைகளை நிகழ்த்துவதற்கு தங்குதடையற்ற சுதந்திரம் தேவை என்பதற்காக- வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக பழிபோட்டு அச்சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமெனக் கோருகிறார்கள்.

வன்னிய மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் நம்பிக்கை தரும் தலைமையாக உருவெடுப்பதற்கான வாய்ப்புகளையும் தேவையையும் தனது குடும்பத்தின் சுயநலத்திற்காக பலிகொடுத்து அன்னியப்பட்டுப் போனவர் ராமதாஸ். கடைசியில் அவர் தலித் வெறுப்பை முன்வைத்து வன்னியர் ஆதரவை மீட்டுக்கொள்ளும் இழிநிலைக்குத் தாழ்ந்தார். வெவ்வேறு அமைப்புகளின் பெயர்களில் தலித்தல்லாதாரை அணிதிரட்டி தனது அரசியல் வீழ்ச்சியை தடுத்துக்கொள்ள வெறிகொண்டு அலைந்தார். அதன் விளைவாகவே அவரது கட்சியினர் பொன்பரப்பியில் வன்கொடுமை செய்தார்கள். இளவரசனது பிணத்தின் மீது நின்று நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகனை இந்தத் தேர்தலில் தருமபுரி மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். என்றாலும், ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடவேண்டிய வன்னிய இளைஞர்கள் பலர் அவரது பிடியில் சிக்கி சாதிவெறியேறி வன்கொடுமை குற்றவாளிகளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவலையளிக்கும் உண்மை. இதே நிலைதான் மேற்கேயும் தெற்கேயும் உள்ள ஆதிக்கசாதியினர் நிலையும். தலித்துகளும் சாதியமறுப்பாளர்களும் இவர்களது வன்கொடுமைகளை எதிர்த்துக்கொண்டே இவர்களை சாதிய மனநோயிலிருந்து விடுவிக்கும் பொறுப்பையும் ஏற்கவேண்டியுள்ளது.

3. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயற்பாடுகள்

சாதிய வன்கொடுமைகளை தூண்டிவிடுகிறவர்களில்- நிகழ்த்துகிறவர்களில் பெரும்பாலானவர்கள்  அரசியல் செல்வாக்குள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அதாவது தனது சாதியை குறிப்பிடத்தக்க வாக்குவங்கியாக திரட்டி வைத்துக்கொண்டு தேர்தல் அரசியலில் முனைப்புடன் உள்ள கட்சிகளின் பொறுப்புகளில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுக்காதது மட்டுமல்ல, தமது கட்சியின் தலைமையைக்கூட இவ்விசயத்தில் கண்டுங்காணாமல் இருக்கும்படியாக விலக்கிவைக்கின்றனர். தலித்துகளுக்கு ஆதரவாக குரலெழுப்புவதன் மூலம் ஆதிக்கச் சாதியினரின் வெறுப்பைச் சம்பாதித்து அவர்களது வாக்குகளை இழக்க நேரிடுமோ என்கிற அச்சத்தில் கட்சித்தலைமைகளும்கூட விலகியிருக்கவே விரும்புகின்றன. எல்லாருக்கும் பொதுவான கட்சி என்று பசப்பலாக சொல்லிக்கொண்டு ஆதிக்கச்சாதியினரின் அட்டூழியங்களை சகித்துக்கொள்கிற அல்லது நியாயப்படுத்துகிற தலித்விரோத நிலைப்பாடு தான் பெரும்பாலான கட்சிகளுடையது. புற அழுத்தம் காரணமாக அதிகபட்ச நடவடிக்கையாக ஒரு கண்டன அறிக்கை வெளியானால் அதுவே பெரிய விசயம்தான்.  அதையும்கூட ஆளும் அதிமுகவிடமோ பா.ஜ.க.விடமோ எதிர்பார்க்க முடியாது.

சாதியத்தை ஓர் ஒடுக்குமுறை வடிவமென உணர்ந்து அதற்கெதிரான போராட்டங்களை தமது அன்றாட நிகழ்ச்சிநிரல்களின் பிரிக்கவியலாத பகுதியாக கொண்டிருக்கும் ஒரு கட்சியையும் இனங்காண முடியவில்லை. அதேவைளையில் வன்கொடுமை ஏதும் நிகழ்ந்துவிட்டால் இங்குள்ள அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சீய கட்சிகள்/ இயக்கங்கள்தான் எல்லாருக்கும் பொது என்று நழுவாமல் சார்புநிலை எடுத்து ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கின்றன. இதனால் ஆதிக்கச்சாதியினரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்று தெரிந்தேதான் இந்த நிலைப்பாட்டை மேற்கொள்கின்றன. பிற கட்சிகள், அமைப்புகளுக்கு கிடைப்பதுபோல செயல் மூலதனமோ நிதியுதவியோ அரசு இயந்திரத்தின் அனுசரணையோ கிட்டாத/ வேண்டாத போதும் தமது சொந்த சக்திக்குட்பட்டு இந்த அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகள்தான் பெயரளவுக்கேனும் சாதியம் பற்றி பிற அமைப்புகள் பேசியாக வேண்டிய அழுத்தத்தை உருவாக்குகின்றன. ஆனால் இந்த இயக்கங்களின் உள்ளடக்கமும் செயல் எல்லையும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை.

அரசியல் தெளிவுள்ள தலித்தல்லாத சிலர் விடுதலைச்சிறுத்தை கட்சியில் இருக்கிறார்கள் என்பதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் பெரும்பாலான அம்பேத்கரிய இயக்கங்களுக்குள் திரண்டிருப்பவர்கள் தலித்துகள் மட்டுமே. இன்னும் நுணுகிச் சொல்வதெனில் இந்த அமைப்புகள் தலித்துகளில் ஏதேனுமொரு உட்சாதிப் பிரிவுக்கானதாக சிதறுண்டு உட்பிரிவுகளைக் கடந்த ஒரு தலித் இயக்கமாகக்கூட உருவெடுக்க முடியாத நிலையில் கிடக்கின்றன. பரந்த தலித் ஒற்றுமையை ஒரே கட்சியின் கீழ் திரட்ட முடியாத நிலையில் ( இது அம்பேத்கர் காலத்திலேயே சாத்தியப்படவில்லை), கட்சிகளுக்குள்ளாவது ஒரு  குறைந்தபட்ச செயல் ஒற்றுமையை உருவாக்க முடிந்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அமைப்புரீதியான இந்தப் பிரச்னையைக் கடந்து, சாதிகளுக்குள் சமத்துவம் சாத்தியமில்லை, சாதிகடந்தே சமத்துவம் சாத்தியம் என்கிற தங்களது அரசியல் நியாயத்தை இந்த அமைப்புகளால் தலித்தல்லாத பகுதியினரிடம் பேசமுடியாத நிலை நீடிக்கிறது. அனைத்து மக்களுக்குமான பிரச்னைகளுக்காக இவ்வியக்கங்கள் போராடினாலும் கூட இவற்றை தலித் அடையாளத்திற்குள்ளேயே குறுக்கி முடக்கிவிடுவதற்கு சாதி இந்துக்கள் செய்யும் கபடத்தை எதிர்த்தும் போராடியாக வேண்டியுள்ளது.

அடையாளப்பூர்வமாக சில பிரச்சார நடவடிக்கைகளை எப்போதாவது நடத்திவிட்டு சுருக்கம் கொள்பவை, சாதி ஒடுக்குமுறை- பண்பாட்டு ஆதிக்கம்- மூட நம்பிக்கை ஆகியவற்றுக்கு எதிராகவும் பகுத்தறிவையும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் பரப்பவும் கருத்தியல் தளத்திலும் களத்திலும் தீவிரமாக செயல்படுபவை என பெரியாரிய அமைப்புகளை பகுத்தறியலாம். 

மார்க்சீய அமைப்புகளைப் பொருத்தவரை சாதியின் தோற்றம் இருப்பு அழிப்பு பற்றி ஒருமித்தக் கருத்து இல்லையாயினும் அது ஓர் ஒடுக்குமுறை வடிவம் என்கிற புரிதல் உள்ளது. ஆகவே ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கவேண்டும் என்கிற நியாய உணர்விலிருந்து தலித்துகளுக்கு ஆதரவான நிலையை எடுக்கிறார்கள். அப்படியான பணிகளை மேற்கொள்வதற்கென்றே சிபிஐஎம் உருவாக்கிய அமைப்புதான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி. இதேபோன்ற அமைப்புகளை சிபிஐ, மா.லெ.கட்சிகளும் கூட தொடங்கியுள்ளன.   தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான வேலைகளை இம்மாதிரியான அமைப்புகளுக்கு ஒதுக்கிக் கொடுத்துவிட்டு கட்சிகளும் அவற்றின் வர்க்க அமைப்புகளும் “மாரிக்கால அரண்மனையைக் கைப்பற்றும் போராட்டத்தை” மட்டுமே நடத்தப் போகின்றனவா என்கிற விமர்சனம் ஒருபுறமிருக்க   இந்த அமைப்புகளின் தேவை களத்திலே உணரப்படுகிறது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடங்கப்பட்டதிலிருந்து சாதிய வன்கொடுமைகள், சாதி ஆணவப் படுகொலைகள், அரசியந்திரத்தின் அத்துமீறல்கள், சமூகநீதி மறுப்பு ஆகியவற்றை எதிர்த்த களப்போராட்டங்களில் சமரசமற்று ஈடுபட்டுவருகிறது. சமூகரீதியாகவும் சட்டரீதியாகவும் தலித்துகளுக்கு பாதுகாப்பு, அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் மூலமான பயிற்சி வகுப்புகள், பஞ்சமிநில மீட்பு நடவடிக்கைகள் என அதன் செயற்களம் விரிவடைகிறது. அது வரும் ஆகஸ்டில் மாநில மாநாட்டை நோக்கி செல்லவிருக்கும் நிலையில் சாதியம் பற்றிய ஓர் உரையாடலை தமிழ்ச்சமூகத்திற்குள் நிகழ்த்திப் பார்க்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. மேடை நிகழ்ச்சிகளாக அல்லாமல் நேருக்கு நேர் ஒருவரோடு ஒருவர் அருகிருந்து உரையாடுவதன் மூலம் தனிநபர்களின் சாதியக் கண்ணோட்டத்தில் குறுக்கீடு செய்யும் முயற்சி இது.

4. தோழர் அசோக் கொல்லப்படுவதற்கு இட்டுசென்ற சூழல் குறித்து

சாதிய வன்கொடுமை என்கிற விசயத்தில் தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியை விடவும் தென் தமிழ்நாடு சளைத்தல்ல. தென்மாவட்டக்கலவரங்கள் என்று தனியாக குறிக்கப்படுமளவுக்கு கொடூரமான கொலைகளும் தாக்குதல்களும் நடந்துவந்த பகுதிதான் அது. முதல் தாக்குதல் தொடுத்துவந்த முக்குலத்தோர் மீது தலித்துகள் தொடுத்த பதில் தாக்குதல் வன்முறையை ஒரு சமநிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியது. மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் மீதான துப்பாக்கிச் சூடு, இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு வந்த தலித்துகள் மீது பரமக்குடியில் துப்பாக்கிச்சூடு என அரசும் தன் பங்கிற்கு தன் சாதிய சார்புநிலையை வெளிப்படுத்தியுள்ளது.

முன்பளவுக்கு இல்லை என்பதுபோல தோற்றம் காட்டிக்கொண்டே சாதியவாதிகள் தங்களது வெறியாட்டங்களை தொடரவே செய்கின்றனர் என்பதற்கு கச்சநத்தம் படுகொலைகள் பதற வைக்கும் சாட்சியமாகும். இதே காலத்தில் சாதி ஆணவப்படுகொலைகள் பல இப்பகுதியில் நடந்துவந்துள்ளன. தற்கொலை அல்லது தனிப்பட்ட காரணங்கள் என்று காவல்துறையின் துணையுடன் மூடிமறைக்கப்பட்ட அக்கொலைகளை வெளிக்கொண்டு வருவதிலும் நீதிக்காகவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் முன்னணியில் நின்றன.

அன்றாடம் தீண்டாமைக்கும் வன்கொடுமைகளுக்கு ஆளாகிவரும் பள்ளர் சமூக மக்கள் அவற்றுக்கெதிரான போராட்டக்குணத்தை காத்திரமாக வெளிப்படுத்தக் கூடியவர்கள். இவர்களை மழுங்கடிக்கும் விதமான நாசகார வேலை இப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. ‘வேளாண்குடிகளாகிய நாம் தலித்துகளே அல்ல. நம்மை பட்டியல் சாதியென  வகைப்படுத்தியிருப்பதால் தான் தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளாகிவருகிறோம். ஆகவே தேவேந்திர குல வேளாளர் என்கிற பெயர் மாற்றமும் பட்டியல் வெளியேற்றமும் தான் தீர்வு. அதற்காக இட ஒதுக்கீடே இல்லை என்றாலும் பரவாயில்லை’ என்கிற மோசடியான பிரச்சாரத்தை மருத்துவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட சிலர் செய்து வந்தனர். இந்தப் பிரச்சாரத்திற்குப் பின்னால் சங் பரிவாரம் இருக்கிறது என்கிற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக இவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் தேர்தல் கூட்டும் அமைந்தன.

பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையின் பேரில் பள்ளர் சமூகத்தில் கவலை தரத்தக்க பெரும் குழப்பமும் பிளவும் ஏற்பட்டுள்ளன. புதிய தமிழகம் கட்சியைத் தவிர வேறெந்த அமைப்பில் இருப்பவர்களும், பட்டியல் சாதியாக தொடரவேண்டும் என்கிற நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளவர்களும் கடுமையான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களும் ஆளாகும் நிலையை கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்களும் அவர்களது புதிய கூட்டாளிகளும் உருவாக்கியுள்ளனர். இத்தகைய சூழலாலும்கூட ஊக்கம் பெற்றுதான் ஆதிக்கச்சாதியினர் தோழர் அசோக்கை கொன்றிருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. அசோக் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியராக இருந்ததனால் அவர் கொலையுண்டது இந்தளவிற்கு வெளியே வந்து குற்றவாளிகள் கைதுசெய்யப்படும் நிலை உருவானது. இல்லையானால் அது தனிப்பட்ட மோதலாக வழக்கம்போல் முடித்து வைக்கப்பட்டிருக்கும்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியராக இருந்ததற்காக அசோக் கொல்லப்பட வேண்டியவர்தான் என்றும் பள்ளர்கள் பட்டியல் சாதியாகவே நீடிக்க வேண்டும் என்று கோரும் இவர்களெல்லாமும் கூட கொல்லப்பட வேண்டியவர்களே என்று சமூகச் செயற்பாட்டாளர்களின் பெயர்ப்பட்டியலை பரப்பும் அளவுக்கும் ‘பட்டியல் வெளியேற்றத்தினர்’ காட்டிக் கொடுக்கும் துரோகிகளாகியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் 17பேர் கொல்லப்பட்ட அன்று மாலையும் கூட எதுவும் நடவாவதுபோல இயல்பாக அல்வா தின்று கொண்டிருந்த திருநெல்வேலிக்காரர்களின் மனசாட்சியை அசோக்கின் கொலை உலுக்கிவிடப் போவதில்லை. ஆனால் அதை என்றாவதொரு நாள் உலுக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கையுடன் பொறுமையாகவும் போர்க்குணத்துடனும் பணியாற்றும் எந்தவொரு அசோக்கையும் இழந்துவிடாமல் காக்கும் பொறுப்பு இடதுசாரி இயக்கங்களுக்குண்டு.



ஞாயிறு, ஜனவரி 1

ஏன் தோழர்களே இப்படி அடிபட்டுச் சாகிறீர்...? - ஆதவன் தீட்சண்யா


மக்களை வாட்டிவதைக்கும் மோடுமுட்டியின் செல்லாக்காசு திட்டம் தோல்வியடைந்துவிட்டதை அம்பலப்படுத்தி  31.12.2016 அன்று ஏ.டி.எம். முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய DYFI, CPIM தோழர்கள் பள்ளிக்கரணை போலிசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள இவ்வேளையில் 2010 ஜூலையில் எழுதப்பட்ட இக்கட்டுரை சட்டென நினைவுக்கு வந்தது.
நடுரோட்டில் தள்ளி அடித்து உதைத்து மண்டையைப் பிளந்து குண்டுக்கட்டாகத் தூக்கி போலிஸ்காரர்கள் வேனுக்குள் வீசுகிறார்கள். அப்போதும்கூட கோஷம் என்ன வேண்டிக் கிடக்கிறது இந்த மார்க்சிஸ்ட்டுகளுக்கு? தூக்கிக்கிட்டுப் போனாலே அய்யோ அம்மா கொல்றாங்களே அய்யய்யோ கொல்றாங்களே என்று கூப்பாடு போட பழகியிருக்க வேணாமா இந்நேரத்தில்? அல்லது அப்படி தூக்கிவீசுவதை லைவ்வாக படம்பிடித்து திரும்பத்திரும்ப ஒளிபரப்பி அனுதாபத்தை கிளறிவிட்டு வாக்குகளாக மாற்றி ஆட்சியைப் பிடிக்கத் தோதாக ஏழெட்டு தொலைக்காட்சி குடும்பங்கள் அல்லது குடும்பத் தொலைக்காட்சிகளையாவது இந்த மார்க்சிஸ்ட்டுகள் கைவசம் வைத்திருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. இப்படி எந்த முன்னேற்பாடுமே இல்லாத இவர்களை யார் போராடச் சொன்னது? ஊடகங்களை சரிக்கட்டி ஆதரவாக வைத்துக்கொள்ளத் தெரியாத இவர்கள் போராடுவதையெல்லாம் எப்படி ஒரு நியூஸ் என்று வெளியிட முடியும்? வெறும் நியூசென்சாக பாவித்து ஒதுக்கித்தள்ளத்தான் முடியும். (அதனால்தான் 12.07.2010 அன்று உத்தபுரம் தலித்துகள் மீதான கொடுமைகளை எதிர்த்துப் போராடிய மார்க்சிஸ்டுகள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதல் பற்றிய செய்தியை பல நாளிதழ்களும் தொலைக்காட்சிகளும் வெளியிடவே இல்லை. வெளியிட்ட தினமணியோ பொதுமக்களுக்கு அவதி என்று புலம்பியிருக்கிறது. நாலைந்து சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், அவர்களோடு அணிதிரண்டு வந்திருக்கிற ஆயிரக்கணக்கான மக்களையெல்லாம் பொதுமக்கள் என்று ஒப்புக்கொள்ள தினமணிக்கு கிறுக்கா பிடித்திருக்கிறது? அவர்கள் போராட்டக்காரர்கள். போராட்டக்காரர்களை பொதுமக்கள் என்று சொல்வது பத்திரிகை தர்மத்துக்கே இழுக்கென்று இந்த மார்க்சிஸ்ட்டுகள் எப்போதுதான் விளங்கிக் கொள்ள போகிறார்களோ? தெரியாவிட்டால் தினமணியிடமாவது கேட்டால், மிஸ்டர் அண்ட் மிஸஸ் பொதுஜனம் பொதுவில் புணர்ந்து பொதுவிலேயே பெற்றெடுத்து பொதுவிலேயே வளர்ந்தும் வாழ்ந்தும் வருகிற அந்த பொதுஜனத்தின் புகைப்படத்தை வெளியிட்டுத் தொலைக்கும்).

அ தொடங்கி ஃ வரைக்கும் எத்தனையோ கட்சிகள் இருக்கு இந்தநாட்டில். அவையெல்லாம் இப்படி போராடிக்கொண்டா இருக்கின்றன? அவ்வப்போது அறிக்கைகள் விடுவது, ஆளுயர கட்அவுட்கள் வழியாக மக்களுக்கு காட்சி தருவது, பிரம்மாண்டமான விழா, மாநாடு, பேரணி என்று எதையாவது நடத்தவது என்று இருந்தாலே இங்கு போதுமானது. அல்லது தலைவருக்கு பிறந்தநாள் விழா எடுத்து தலைவர் பிறந்ததையே சாதனையாக முன்னிறுத்தியதையெல்லாம் இந்த மக்கள் ஏற்காமலா போய்விட்டார்கள்? அதையெல்லாம் விட்டுவிட்டு கட்சி என்றால் போராடத்தான் வேண்டும் என்று ஏன் இந்த மார்க்சிஸ்டுகள் மட்டும் தப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்? அவசியமேயில்லை. சுதந்திரத்துக்கப்புறம் காங்கிரஸ் கட்சி எதற்காவது போராடியிருக்கா? இல்லையே, திண்டுமீது ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு காரியக்கமிட்டி கூட்டம் நடத்தியே அந்தக் கட்சியெல்லாம் இத்தனைக்காலம் நீடிக்கவில்லையா? அதுகளைப் பார்த்து ஏன் அடக்கஒடுக்கமா கட்சி நடத்தத் தெரியவில்லை இந்த மார்க்சிஸ்டுகளுக்கு?

அதுவுமில்லாமல், போராடத் தேர்ந்தெடுத்த நேரமும் சரியில்லை. செம்மொழி மாநாட்டின் வெற்றியை எப்படியாவது கொண்டாடியே தீர்வது என்று முதல்வரும் அவரது குடும்பமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழைக் காப்பாற்றுவார்களா கேவலம் தமிழர்களைக் காப்பாற்றுவார்களா? போதாக்குறைக்கு ஜெயலலிதா வேறு சும்மாயிருக்காமல், வரும் தேர்தலில் வெற்றிபெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றப் போவதாக அறிக்கைவிட்டு தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிவிட்டார். நாம் ஆட்சி நடத்துகிற லட்சணத்தால் அப்படியொரு நிலை உருவாகிவிடுமோ என்ற பயத்தில் அந்தக் கட்டிடத்தை இடித்து நிரவி கழுதைபூட்டிய ஏரால் உழுது எள் விதைப்பதா அல்லது வேறு எதுவும் செய்யலாமா என்று யோசித்து கடைசியில் அதை செம்மொழி மையத்திற்கான அலுவலகமாய் மாற்றுவதென்று தீர்மானித்த கருணாநிதி அதற்கான வேலையில் மும்முரமாக இருக்கிறார். அந்த வளாகத்திற்குள் புத்தகங்களை எங்கே வைப்பது பூச்செடியை எங்கே வைப்பது என்ற கொள்கை முடிவுகளையெல்லாம் ஒரு முதல்வர் என்ற முறையில் அவர்தானே எடுத்தாக வேண்டியுள்ளது? அப்புறம் மைனாரிட்டி திமுக அரசு என்று ஜெயலலிதாவால் நொடிக்கொரு தடவை இடித்துரைக்கப்படும் அவமானத்திலிருந்து மீள்வதற்காக எப்படியாவது மெஜாரிட்டியாக்கிக் காட்டுகிறேன் பார் என்று எல்லாக்கட்சியிலிருந்தும் பிள்ளை பிடிக்கிற வேலையையும், அதற்காக அவரைப் பாராட்டி நடத்தப்பட வேண்டிய விழாவுக்கான எற்பாடுகளையும் அவரே பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படி அதிமுக்கிய வேலைகளில் இருக்கிற ஒரு முதல்வர் இந்த மார்க்சிஸ்ட்டுகளின் போராட்டத்தையோ தலித்துகளின் கோரிக்கைகளையோ உடனே எப்படி கவனிக்க முடியும்?

சரி ஆளுங்கட்சிதான் அப்படியென்றால் எதிர்க்கட்சி மட்டும் சும்மாவா இருக்கிறது? என்னதான் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தினாலும் கொங்குமண்டலம் இன்னமும் எங்கள் கோட்டைதான் என்று காட்டுகிற தேவை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. ஆகவே அது பிபிரரம்ம்மமாண்ண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி முடிப்பதில் முனைப்பாயிருந்தது. நேற்று நடந்த அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா உத்தபுரம் பிரச்னை பற்றியோ மார்க்சிஸ்டுகள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதல் பற்றியோ ஒரு சொல்லும் உதிர்க்கவில்லை. இப்படியான பிரச்னையிலெல்லாம் வாய் திறந்து ஆதிக்கசாதிகளின் மனஸ்தாபத்தை சம்பாதித்துக் கொள்ளவா அவர் பங்களாவில் ரூம் போட்டு யோசித்து கட்சி நடத்துகிறார்? காட்டில் ஆயிரம் மிருகங்கள் இருந்தாலும் எலிக்குப் பூனையும் பூனைக்கு எலியும்தான் எதிரிகள் என்று எல்லோருக்கும் தெரிந்த பழமொழிதான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் பொருந்துகிறது. இரண்டில் எது எலி எது பூனை என்பதில் மட்டும் அவ்வப்போது காட்சிப்பிழைகள் தெரியுமெயன்றி உண்மையில் இரண்டுமே ஒன்றுதான்.

போகட்டும், போராடித்தான் தீர்வோம் என்றால் எதற்காகப் போராடுவது என்பதில் ஒரு தெளிவு வேண்டாமா இந்த மார்க்சிஸ்டுகளுக்கு? போயும் போயும் சாதிப்பிரச்னைக்குள் தலையைக் கொடுக்கலாமா? அப்படித்தான் தலையைக் கொடுத்தார்களே, அதிலாவது கொஞ்சம் சாமர்த்தியத்தோடு ஆதிக்கசாதிக்காரர்கள் பக்கம் நிற்கவேண்டும் என்று தோன்றியதா இவர்களுக்கு? அங்கே போய் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம்தான் நிற்போம் என்று ஏன் அடம் பிடிக்க வேண்டும்? பிரச்னை வரும்போது “மண்ணா இருந்தா நிலம், ஒன்னா இருந்தா நலம்”னு எதையாவது உளறித் தள்ளிவிட்டு ஒதுங்கிக்கொள்ளாமல் இந்த தலித்துகளை தலையில் தூக்கிவைத்து ஆடினால் மற்ற சாதிக்காரர்களின் மனம் எவ்வளவு கொந்தளிக்கும்? கடைசியில் இப்ப என்ன ஆச்சு? போலிஸ்காரன் உதைக்கிறான், அவனோடு போட்டோ எடுக்க வந்தவனும் உதைக்கிறான். காங்கியனூரில் உதைக்கிறான், செட்டிப்புலத்தில் உதைக்கிறான், மதுரையில் உதைக்கிறான், நாளைக்கு மன்னார்குடியிலோ மணப்பாறையிலோ கூட உதைவாங்க வேண்டிவரும்.

மற்ற கட்சிக்காரனெல்லாம் சட்டை மடிப்பு கலையாமல் மக்களுக்கு அருந்தொண்டாற்றிக் கொண்டிருக்கும் போது இந்தக் கம்யூனிஸ்டுகள் மட்டும் ஏன் ஊரூருக்கு உதை வாங்கிச் சாகவேண்டும்? அதுவும் யாரெல்லாம் உதைபடுகிறார்கள் என்று பாருங்களேன்? தொண்டர்கள் அடிஉதை வாங்கலாம். அதற்காகத்தான் அவர்கள் பெரும்பாலான கட்சிகளில் பயன்படுத்தப்படுவது மரபு. இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளில் என்னடாவென்றால் தலைவர்களும் உதைபட வேண்டியிருக்கிறது. சரி அதைக்கூட ஒத்துக்கொள்ளலாம். மற்ற கட்சிகளின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் எல்லாம் தொகுதிக்குள்ளேயே வராமலிருக்கும்போது இந்த கட்சிகளின் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மட்டும் என்ன வெங்காயத்துக்கு தெருவுக்குத்தெரு வரவேண்டும்? நத்தையைப் தூக்கி மெத்தையில் போட்டாலும் அது செத்தைக்குள் நெண்டுவதற்குத்தானே ஓடும் என்று மற்ற கட்சிக்காரர்கள் இவர்களை இளக்காரம் பேசுவதைக் கேட்டாவது திருந்தக்கூடாதா? கத்த புத்தி செத்தாத்தான் போகும் என்று சொல்வது இவர்களுக்குத்தான் பொருந்தும்போல.

மக்களுக்கு எப்பவும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அதையெல்லாம் தீர்க்கப் போராடுகிறேன் என்று ஒரு மக்கள் பிரதிநிதி கிளம்பிவிடணுமா என்ன? காண்ட்ராக்ட் எடுத்தோமா கமிஷன் வாங்கினோமா என்று இருப்பதுதான் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகு. அல்லது கல்லூரி தொடங்கி பிற்காலத்தில் கல்வித்தந்தையாக முயற்சிக்கலாம். பினாமி பெயர்களில் சொத்து சேர்க்கலாம். கம்பனி தொடங்கலாம். ஊரிலுள்ள புறம்போக்கு நிலத்தையெல்லாம் வளைத்துப்போடலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு லாட்டரியில் லட்சரூபாய் பரிசு கிடைத்தால் தங்கத்தில் திருவோடு செய்துகொள்வேன் என்று சொன்னாராமே யாரோ ஒரு பிச்சைக்காரர், அதைப்போல இந்தக் கம்யூனிஸ்டுகள் எங்களை எம்.பி, எம்.எல்.ஏ ஆக்கினாலும் தெருவில் கிடந்துதான் போராடுவோம் என்று சொன்னால் அதில் என்ன நியாயம் இருக்கிறது? காங்கியனூரில் லதா வயிற்றில் மிதி வாங்கியதைப் பார்த்தே நன்மாறனும் மகேந்திரனும் ரங்கராஜனும் சுதாரித்து மதுரையில் ஜகா வாங்கியிருக்க வேண்டாமா? இந்த மாதிரி அக்கப்போரெல்லாம் எதுக்கு என்றுதான் எஸ்சாயிட்டேன் என்று சந்தடிசாக்கில் கோவிந்தசாமி சொன்னாலும் சொல்வார். பார்த்துக்குங்க.

ஏதோவொரு சமூகக்கடமையை ஆற்றிவிட்டோம் என்று சுயதிருப்தி கொள்வதற்கும், பிரபலமாவதற்கும், பரபரப்பாக இயங்குவதாக காட்டிக்கொள்வதற்கும் இங்கு எவ்வளவோ எளிய வழிமுறைகள் இருப்பதை இத்தனை வருடங்களாக கட்சி நடத்தும் இவர்கள் இன்னமும் அறிந்திருக்கவேயில்லை. ஆளில்லாத களத்தில் அட்டைக் கத்தி வீசி வீராதி வீரன் வெண்ணெய்வெட்டி சூரன் என்று பட்டம் கட்டிக்கொள்ள துப்பில்லாத தலைவர்களை வைத்துக்கொண்டிருக்கிற இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருகாலத்திலும் விளங்கப்போவதேயில்லை.

கம்யூனிஸ்டா இருந்தால் போராடணும் என்பதும்கூட அவர்களது பழமைவாதத்தையே காட்டுகிறது. தானும் ஒரு கம்யூனிஸ்ட்தான் என்று சொல்லிக் கொள்கிற கருணாநிதி போராடிக்கொண்டா இருக்கிறார்? போலி கம்யூனிஸ்ட்கள் என்று சிலரை குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதன் மூலமாகவே தங்களை உண்மையான கெட்டிச்சிவப்பு கம்யூனிஸ்டுகள் என்று நம்பிக்கொண்டிக்கிறவர்கள் கழுத்தில் சயனைடு குப்பியைக் கட்டிக்கொண்டா போராடுகிறார்கள்? பென்சில் சீவக்கூட இதுவரை பிளேடு எடுக்காதவர்களெல்லாம் இப்போது தாங்களும் மாவோஸ்ட்தான் என்று அலட்டிக்கொள்கிற புதுமோஸ்தரையும் கூட நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்? இது எதுவுமே இல்லாமல் இணையதளம் ஒன்றைத் தொடங்கி சகட்டுமேனிக்கு எல்லாரையும் விமர்சனம் செய்துவிட்டு தம்மை முழுப்புரட்சியாளர்களாக கருதிக் கொண்டிருக்கிற என்னைப் போன்றவர்கள் எத்தனை பேரில்லை? இவர்களில் யாரைப்போலாவது இருந்துவிட்டுப் போகாமல் எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் மறியல் உண்ணாவிரம் ஊர்வலம் என்று போரட்டம் நடத்தி புண்ணாக்கிக் கொள்கிறீர்கள் உடம்பை என்று இந்த மார்க்சிஸ்ட்டுகளுக்கு நல்ல புத்தியைக் கொடுக்குமாறு எல்லாம் வல்ல மார்க்சையும் இன்னபிற நமது குலசாமிகளையும் வேண்டிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.

ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தான் இப்படியென்றால் தலித்துகளின் தலைவர்களும் சும்மா இல்லை. சாதியை ஒழிக்க விரும்புகிற ஒருவர் தனது சொந்த சாதிக்கு துரோகம் செய்தாகணும் என்று ஆதிக்கசாதிக்காரர்களிடம் வெகுகாலமாக சொல்லிப் பார்த்தார்கள். இவங்க அறிவுரையை யாருமே கேட்கவில்லை. அந்த ஆதங்கத்தில் சரி, நம்ம வார்த்தையை நாமாச்சும் மதிப்போம்னு அவங்க அந்த வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். திருமாவளவன் இலங்கைத் தூதரகத்தை மூடச் சொல்லி குரல் கொடுப்பாரா அல்லது உத்தபுரம் பிரச்னையை தீர்க்காமல் சிக்கலாக்கிக் கொண்டிருக்கும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை மூடச்சொல்லி குரல் கொடுப்பாரா? அவர் என்ன தசாவதானியா அல்லது சதாவதானியா ஒரே நேரத்தில் ஒன்பது பிரச்னைக்கு குரல் கொடுக்க? ஈழப்பிரச்னையில் அவர் டிராமாவளவனாகிவிட்டார் என்ற புலிக்குட்டிகளின் குற்றச்சாட்டியதிலிருந்து மீள்வதற்கு அவர் இப்படி என்னமும் செய்யத்தானே வேண்டியிருக்கிறது? தவிரவும் உத்தபுரம் தலித்துகள் தேவேந்திரர்கள். ஆதிதிராவிடருக்கான கட்சியை நடத்தக்கூடிய திருமாவளவன் தேவேந்திரர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு அநியாயம்? நீங்கள் ஏன் தலித்துகளுக்காக குரல் கொடுக்கக்கூடாது என்று வன்னியர் சங்க ராமதாசிடமோ அல்லது சேதுராமனிடமோ கேட்பது எந்தளவிற்கு அபத்தமோ அதுபோன்றதுதான் இதுவும். அப்படியானால் கிருஷ்ணசாமியாவது தனது சொந்த ரத்தங்களுக்காக குரல் கொடுக்கலாமே என்ற கேள்வி வரலாம். தலித் விடுதலை என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த திருமாவளவன் எதற்கு உள்ளூரில் வம்பு என்று தமிழ் தமிழன் என்று பொத்தம்பொதுவாகப் பேசிக்கொண்டு சாமர்த்தியமாக கட்சி நடத்தும்போது நான் மட்டும் இளிச்சவாயனா இதிலெல்லாம் தலையிட என்பதுதான் அவரது இப்போதைய நிலைப்பாடு. ஆனால் அதற்காக அவர் உத்தபுரம் பிரச்னையில் ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்ல முடியாது. அங்கிருக்கிற தீண்டாமைச்சுவர் இயல்பான ஒன்றுதான் என்றும் அங்குள்ள ஆதிக்கசாதியினரை கண்ணியமானவர்கள் என்றும் அங்குள்ள எல்லாச் சாதியினரும் இணங்கி வாழ்வதாகவும் நற்சான்றுப் பத்திரம் வழங்கிய அவரிடம் மீண்டும் எதை எதிர்பார்க்கிறீர்கள்? உத்தபுரம் தலித்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் கொடுமைகளை எதிர்த்து சீமான் நெடுமாறன் திருமா போன்றவர்ளை பேசவைக்க எளிதான ஒரு வழியும் இருக்கிறது. அதாவது முதலில் உத்தபுரத்தை பெயர்த்துக் கொண்டு போய் இலங்கையின் வடபகுதியில் சேர்த்துவிட வேண்டும். பிறகு, அங்குள்ள ஆதிக்கசாதியினரை சிங்களவர்கள் என்றும் தலித்துகளை தமிழர்கள் என்றும் ( சும்மா ஒரு பேச்சுக்குதான், மற்றபடி தலித்துகளை எவன் தமிழன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறான்? ) சொல்லிவிட வேண்டும். அதற்குப்பிறகு பாருங்கள், கழுத்து நரம்பு புடைக்க இந்தத் தலைவர்கள் எப்படி பேசுவார்கள் என்று.

இந்தக் கட்டுரையை முடிக்கும் தருவாயில் உத்தபுரம் தலித்துகளின் பிரச்னை, மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் குறித்து கருணாநிதி வாய் திறந்திருக்கிறார். ஒரு பொய்யை இவ்வளவு விரிவாகச் சொல்ல முடியுமா என்ற வியக்கவைக்கும் வகையில் அவரது அறிக்கை பத்திரிகைகளில் நீண்டு நெளிகிறது. ஏன் இந்த ஆளின் மூக்கை கடித்தாய் என்று ஒருவரிடம் விசாரிக்கப்பட்டதாம். அந்த நபர் தன் மூக்கை தானே கடித்துக்கொண்டு என்மீது பழிபோடுகிறார் என்று பதில் சொன்னாராம் குற்றம்சாட்டப்பட்டவர். அதெப்படி ஒருவர் எப்படி தன் மூக்கை தானே கடித்துக்கொள்ள முடியும்? அவருக்கு அவர் மூக்கு எட்டாதே என்று அடுத்தக்கேள்வியில் மடக்கப்பார்த்தாராம் விசாரித்தவர். ஆமாம் ஐயா முதலில் அவருக்கு அவர் மூக்கு எட்டவில்லைதான், பிறகு ஸ்டூல் மீது ஏறிநின்று கடித்துக்கொண்டார் என்று பதிலுரைத்தாராம். இப்படித்தான் இருக்கிறது கருணாநிதியின் அறிக்கை. உத்தபுரத்தில் எந்தப் பிரச்னையுமேயில்லை, இந்த மார்க்சிஸ்டுகள் வீணாக தலித்துகளைத் தூண்டிவிட்டு மோதவிடுகிறார்கள். மதுரையில் அவர்களை போலிஸ் தாக்கவேயில்லை, தடியடியே நடத்தவில்லை என்றெல்லாம் வெகுசரளமாக பொய்யுரைத்திருக்கிறார். தடியடியும் நடக்கவில்லை தாக்குதலும் நடக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கட்சியினரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் தங்களைத்தாங்களே தாக்கிக் கொண்டார்களா? கருணாநிதி தீக்கதிரை நம்பவேண்டாம், குறைந்தபட்சம் சன்/ சன் இன் லா தொலைக்காட்சியில் வெளியானதையாவது நம்பக்கூடாதா? உத்தபுரத்தில் எல்லாச்சாதியினரும் ஒற்றுமையாக வாழ்வதாகவும், தீண்டாமைச்சுவரை தான் இடித்துத் தள்ளிவிட்டதாகவும், ஆனாலும் மார்க்சிஸ்ட் கட்சி திமுக அரசுக்கு கெட்டப்பெயரை உருவாக்கவேண்டும் என்ற உள்நோக்கோடு திட்டமிட்டே செயலாற்றுகிறதென்றும், தலித்துகளை தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்கிறதென்றும் குற்றம்சாட்டி இருக்கிறார். திமுக அரசின் பெயரைக் கெடுக்க வெளியிலிருந்து யாரும் வரணுமாக்கும்? நல்ல தமாஷ்தான்.

சுவற்றில் 15 அடி மட்டும்தான் இடிக்கப்பட்டது. எஞ்சிய சுவர் இன்னும் இறுமாப்போடும் சாதித்திமிரோடும் செஞ்செவிக்க நின்று கொண்டிருக்கிறது. 15 அடியை இடித்து உருவாக்கப்பட்ட பாதையையும்கூட தலித்துகள் பயன்படுத்த முடியாதபடி அங்கு பதற்றமான சூழலை ஆதிக்கசாதி வெறியர்கள் தொடர்ந்த உருவாக்கியுள்ளனர். தலித்துகள் பகுதியில் நிழற்குடை அமைக்கத் தேவையான தொகையை மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கிய பின்னும் அதை நிறைவேற்ற மறுக்கிறது மாவட்ட நிர்வாகம். அரசமர வழிபாட்டுரிமையும் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இப்படி எந்தப் பிரச்னையும் தீர்க்கப்படவில்லை. ஆனால் தலித்துகள் நிம்மதியாக இருக்கிறார்கள்... மற்ற சாதியினரெல்லாம் அவர்களோடு கொண்டான் கொடுத்தான் உறவோடு இருக்கிறார்கள்... என்ற ரீதியில் அவர் உண்மைகளைத் திரித்து விஷமத்தனமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். பொறுத்திருங்கள் நண்பர்களே, உத்தபுரம் என்ற கிராமமும் மதுரை என்ற நகரமும் தமிழ்நாட்டுக்குள்ளேயே கிடையாது என்ற அறிக்கையை அவர் நாளை வெளியிடக்கூடும்.

(இடதுசாரிகளை - குறிப்பாக- மார்க்சிஸ்ட் கட்சியைத் தாறுமாறாக தாக்கவேண்டும் என்று இணையதளங்களில் வளர்த்தெடுக்கப்படும் மரபுக்கியைந்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது ) 


துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...