ரங்கநாயகம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரங்கநாயகம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 10

நரகல் நாறுதேன்னா நக்கிப் பார்த்துட்டுச் சொல் என்கிறார்கள் - ஆதவன் தீட்சண்யா

ரங்கநாயகம்மா என்பவர் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை என்கிற நூலை எழுதியிருப்பதாக நண்பர் வெய்யில் சொல்லும் வரை, ரங்கநாயகம்மா என்பவரை நான் அறிந்திருக்கவில்லை. அவரை அறிந்து கொண்டேயாகவேண்டும் என்கிற தனித்தத் தேவை ஏதும் நமக்கில்லை. எவ்வாய் எப்பொருள் செப்பினும் அவ்வாயின் சாதியைக் காண்பதும் அறிவு என்பதால் இணையத்தில் தேடி அவரைப் பற்றி படித்துக்கொண்டிருந்த வேளையில்தான் ‘ரஜினி நடித்தப் படத்தில் வேலை செய்ததாலேயே ரஜினியை அம்பேத்கருக்கு அடுத்தத் தலைவராக ஏற்றிருப்பவர் என வசுமித்ர007 புலனாய்வில் கண்டறியப்பட்ட அதியன் ஆதிரை’ மூலம் புத்தகம் வந்து சேர்ந்தது. ( புத்தகத்தை டெலிவரி செய்த கூரியர் தொழிலாளிக்கு யார் தலைவர் என்கிற ரகசியமும் விரைவில் அம்பலமாகக்கூடும்) 

புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த போதே அது குறித்த பதிவொன்றை எனது வலைத் தளத்தில் எழுதியிருந்தேன். ‘நாம எது சொன்னாலும் கேட்டுக்கணும், எதை எழுதினாலும் படிக்கணும்கிறது தானே ஊர்வழக்கம், அதற்கு மாறாக இவனென்ன கருத்து சொல்லக் கிளம்பியிருக்கிறான்’ என்று மொழிபெயர்ப்பாளர் தரப்பு கடுப்பாகிவிட்டது போல. முழுதாகப் படிக்காமல் இப்படி எழுதுவது சரியா நெறியா என்றெல்லாம் ஆவேசப்படுகிறார்கள். நாலாம் பக்கத்தில் இருக்கிற தவறைச் சுட்டிக்காட்ட நானூற்றுச் சொச்சம் பக்கங்களையும் படித்துத் தானாக வேண்டும் என்று நிபந்தனை போடும் அவர்கள், அதற்கு உட்படாமல் அபிப்பிராயம் சொல்லுகிற உனக்கு ஒரு நூலை எப்படி படிக்கவேண்டும் என்பதே தெரியவில்லை என்று தீர்ப்பு சொல்கிறார்கள். ஆதவனுக்கு எழுதவே தெரியாது என்றொரு தீர்ப்பு போன வாரம் வெளியானது, இந்த வாரம் படிக்கவே தெரியலே என்று. வாராவாரம் வசைபட வாழ்கிறேன். 

விமர்சனம் என்றால் அது அறிவுப்பூர்வமாக இருக்கவேண்டும், ஆனால் அது ஆதவனுக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்று அறிவிக்கும் கொற்றவை, அதற்கான வரலாற்றுக் காரணத்தை கண்டறிகிறார். ‘...அம்பேத்கர் உங்களுக்கு அப்படி வழிகாட்ட முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. ஏனென்றால், எதையும் ஒழுங்காகப் படிக்காமல், அவசரகதியில் முன்முடிவுக்கு வந்து கண்மூடித்தனமாக நிராகரிக்கும் போக்கை அவர் கொண்டிருந்தார். அதனால்தான் மார்க்சியம் குறித்து எதையும் படிக்காமலேயே அதுபற்றிய முடிவுக்கு வந்தார். அதேபோல் நீங்களும் புத்தகத்தை முழுமையாகப் படிக்காமல் பதிவு எழுதியிருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் அவரிடமிருந்து அதை மட்டுமே கற்றுக்கொண்டுள்ளீர்கள் போலும்!’. 

புரிகிறதா, ஆதவன் இப்படி அரைகுறையாக இருப்பதற்கு காரணம், அம்பேத்கர் என்கிற அரைகுறையைப் பின்தொடர்வதுதான். அதாவது ‘உங்களுக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் அறிவு வராது’ என்பதுதான் கொற்றவை சொல்லவரும் விசயம். கொற்றவையைப் போல நிறையறிவோடு இருப்பதற்கு குறைந்தபட்சம் அவரது சாதியில் பிறந்திருப்பது கட்டாயம் போல. ஒரு பறப்பயலா பிறந்துட்டு என்று சொல்லத் துடிக்கும் ஆத்திரத்தை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு ‘தலித்தாய் பிறந்ததாலேயே’, ‘பிறப்பால் நீங்கள் ஒரு தலித் என்பதாலேயே’  என்று திரும்பத்திரும்ப விளித்து கொற்றவை கூறும் அறிவுரைகளெல்லாம் அவரது சாதிய உளவியலையே காட்டித் தருகிறது. வன்கொடுமையின் வரம்புக்குள் வந்துவிடாமல் கவனமாக திட்டுவதற்கான நுட்பம் அவருக்கு வாய்த்திருக்கிறது. சரி, ஒரு வாதத்திற்காக கேட்கிறேன், எதை வைத்து என்னை  "தலித்தாய் பிறந்ததாலேயே" என்று கூறுகிறார்? அம்பேத்கரை பின் தொடர்கிற இவன் வேறு யாராகவும் இருந்துவிட முடியாது என்கிற பொதுப்புத்தியிலிருந்துதானே?
 
ரங்கநாயகம்மா என்பதற்கு பதிலாக ரங்கநாயகியம்மா என்று இருக்கும் தட்டச்சுப் பிழையையெல்லாம் ஏதோ தத்துவார்த்தப்பிழை போல காட்டி தாங்கள் எழுதியதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திட்டமிட்டே அம்பேத்கரைத் திருத்தி பிழைபட தாங்கள் எழுதியிருப்பவற்றை அறிவுநாணயம் என்று கொண்டாடிக் கொள்கிறார்கள். எனது எதிர்வினைக்காக காத்திருப்பதாக அறிவித்திருக்கும் அவர்கள் பின்வரும் எனது இரண்டு கேள்விகளுக்காவது பதிலளிப்பார்கள் என நம்புகிறேன்.

The Essential Writings of B.R. Ambedkar - p 400
1  ‘...தீண்டப்படாதவர்கள் தங்கள் சாதியை தாழ்வாகக் கருதவில்லை, பிராமணர்களை எட்டி உதைத்தார்கள் என்று எவரோ எழுத, உடனே அம்பேத்கர் புளகாங்கிதமடைந்து அந்தத் தகவலை பெரும் உவகையுடன் விவரித்தார்...’ என்கிறார் ரங்கநாயகம்மா ( பக்கம் 93). 

இப்படியொரு குறிப்பை அபே துபேயின் நூலில் காணலாம். 1906 ஆம் ஆண்டு வெளியான தஞ்சாவூர் கெஜட்டியரில் பக்கம் 80ல் அதன் ஆசிரியரான  ஹெமிங்ஸ்வே ‘தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பறையர் பள்ளர் சக்கிலியர் தங்களுக்குத் தீமை விளையும் என்று நம்புவதால் தங்களது குடியிருப்புகளுக்குள் பிராமணர் நுழைவதை அனுமதிப்பதில்லை’ என்று எழுதியிருக்கிறார். மைசூர் மாநிலத்தின் ஹஸன் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோலியரிடையே இதேபோன்ற வழக்கம் இருந்ததாக காப்டன் ஜே.எஸ்.எஃப்.மெக்கன்ஸியும் ( Indian Antiquary 1873) பதிவு செய்திருக்கிறார். (பார்க்க: தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும், தி.பெ.கமலநாதன், பக்கம்: 29,  எழுத்து வெளியீடு மற்றும் வலேரியன் ரோட்ரிக்ஸ் எழுதிய The Essential Writings of B.R. Ambedkar - p 400)

இப்படி தனக்கு முந்தைய மற்றும் தன் காலத்தில் பொருட்படுத்தத்தக்கதாய் இருந்த ஆவணங்களை ஆதாரமாக கொண்டுதான் அம்பேத்கர் எழுதியிருக்கிறார். ஆனால் ரங்கநாயகம்மாவோ யாரோ எவரோ ஒரு அனாமதேயம் எழுதியதை அம்பேத்கர் எடுத்தாண்டு புளகிப்பதாக குற்றம்சாட்டுகிறார். இந்தத் திரிப்புவேலைச் செய்தாவது அம்பேத்கரை இழித்துக் கூறி உதாசீனப்படுத்துவதன் பின்னே உள்ள உளவியல் என்ன?

2. // முதலாளிகள் புத்திக்கூர்மை உடையவர்கள் அதனால்தான் அவர்கள் அந்நிலையில் இருக்கிறார்கள், தொழிலாளர்களுக்கு அந்தளவுக்கு புத்திக்கூர்மை இருந்தால் இந்நேரம் அவர்களும் அந்நிலைக்கு உயர்ந்திருப்பார்கள் என்று அம்பேத்கர் கூறுகிறாரே? இது குறித்து உங்கள் கருத்து என்ன? // என்கிறார் கொற்றவை.


உண்மையில் இந்தக் கருத்து 1921 ஜூன் 8 ஆம் நாளிட்ட நவஜீவன் இதழில் காந்தியால் சொல்லப்பட்டது. காந்தியின் இக்கூற்றை மறுக்கும் அம்பேத்கர் ‘சொத்துடைமை வர்க்கத்தை காந்திஜி பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்களுக்கு எதிரான இயக்கத்தைக்கூட எதிர்க்கிறார். பொருளாதார சமத்துவக் கோட்பாட்டில் அவருக்கு நம்பிக்கை இல்லை’  என்று சாடுகிறார். (ஆதாரம்: மு.வீரபாண்டியன் எழுதி என்.சி.பி.எச். வெளியிட்டுள்ள ‘அண்ணல் அம்பேத்கரின் கலை இலக்கியப் பார்வை’ என்கிற நூலின் 21, 22 ஆம் பக்கங்கள்). 

உண்மை இவ்வாறிருக்க, முதலாளிகள் தொழிலாளிகள் குறித்து காந்தி கூறியதை அம்பேத்கர் கூறியதாக எழுதிப் போகும் கொற்றவை, ‘நீங்களும் ஒரு மார்க்சிய கட்சியின் ஒரு வெகுஜனப் பிரிவில்தானே பொறுப்பில் உள்ளீர்கள்! அப்படியென்றால் நீங்கள் இன்னமும் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளவில்லையா? மார்க்சியத்தை ஒருவர் தவறாக சித்தரிக்கும்போது உங்களுக்கு கோபம் வராதா? உங்கள் சாதிய மனோபாவம் அதை மட்டுப்படுத்துகிறதா?’ என்றெல்லாம் தனது அடுத்தடுத்தக் கேள்விகளை என்னை நோக்கி அடுக்கிக் கொண்டே போகிறார். 

காந்தி எழுதியதை அம்பேத்கர் எழுதியதாக பொய் சொல்லி வசை பாடும் இந்த உத்தி கொற்றவையின் கட்டுரையிலும் அவர் மொழிபெயர்த்துள்ள நூலிலும் எவ்விதமாக எங்கெங்கு கையாளப்பட்டுள்ளது என்று துப்பறிந்து கொண்டிருப்பது நமது வேலையல்ல. ஆயினும் குறைந்தபட்சம் இந்த ஒரு ஆதாரத்தையாவது அவர் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எதுவொன்றையும் ஆழ்ந்துப் படித்து அறிவுநாணயத்தால் விகசிக்கும் அவர் இதற்கான ஆதாரங்களை கொடுக்காமலா போவார்? காத்திருக்கிறோம். 

நன்றி: ஆதாரங்களைத் தேடித்தந்த தோழர்கள் திருவாசகம், ஈஸ்வரன் ஆகியோருக்கு. 



சனி, ஆகஸ்ட் 6

மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா - ஆதவன் தீட்சண்யா


தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் சாதிகள் பற்றி எழுதிய முதல் ஆய்வாளர் தானல்ல என்றும் தனக்கும் முன்பாகவே பலரும் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள் என்றும் அம்பேத்கரே பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர்களில் எவரையும் இந்த ரங்கநாயகியம்மா  தனது ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியதாக தெரியவில்லை. எனில் அம்பேத்கரை மட்டும் இவ்வளவு வன்மமாகவும் குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய தேவை அவருக்கு என்ன வந்தது?. ‘பள்ளு பறையெல்லாம் புத்தி சொன்னா நாங்க பாத்துக்கிட்டு சும்மா இருப்போம்னு நினைச்சியா?’ என்று பல்லைக் கடிக்கும் அப்பட்டமானதொரு சாதிவெறியரின் உளவியலுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த ஒருவரால் மட்டுமே இப்படி எழுத முடியும்.
‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற  அம்பேத்கரின் ஆய்வுரையை தேவைக்கேற்ப ஒட்டியும் வெட்டியும் வலிந்து பொருள்கொள்ளும் ரங்கநாயகம்மா, அதுதவிர அம்பேத்கரின் கூற்றுக்கு வேறு அர்த்தமில்லை என்று நிறுவும் வெறிகொண்டு ஆடுகிறார். அம்பேத்கர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. ஆனால், ரங்கநாயகியம்மா விமர்சனம் என்கிற பெயரில் அம்பேத்கரை சிறுமைப்படுத்துவதிலேயே முனைப்பாக இயங்கியிருக்கிறார். சாதியம் பற்றிய அம்பேத்கரின் பார்வையை குழந்தைத்தனமானது, மிகையுணர்ச்சி கொண்டது, நகைப்புக்குரியது என்றெல்லாம் பரிகாசம் செய்யத் துணிந்த இவரால் சாதியம் குறித்தோ சாதியொழிப்பு குறித்தோ எதையும் திட்டவட்டமாக கூறமுடியவில்லை என்பதுதான் அவலம்.
அம்பேத்கருக்கு முன்பாகவே அரசியலரங்குக்கு வந்துவிட்ட கம்யூனிஸ்ட்களில் ஒரு சாரார், சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட தங்களது அகநிலைக்கும் செளகரியங்களுக்கும் குந்தகம் வராமல்தான் இன்றைக்கும் மார்க்சீயம் பேசிவருகின்றனர். சாதியத்திற்கு எதிரான போராட்டம் வர்க்கப்போராட்டத்தை நோக்கிய தங்களது பயணத்தை திசைமாற்றிவிடும் என்று அஞ்சுவதாய் பாசாங்கு செய்யும் இவர்கள், வர்க்கப்போராட்டம் வெற்றியடைந்ததற்கு மக்கியாநாள் அதிகாலையில் தீர்ப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள அநேகப் பிரச்னைகளில் ஒன்றாகவே சாதியையும் கருதுகின்றனர். அதுவரையிலும் சாதியத்திற்கு எதிராக சொந்த வாழ்க்கையிலோ, அமைப்புரீதியிலோ எதையும் செய்துவிட வேண்டியதில்லை என்கிற ‘தத்துவத் தெளிவோடுள்ளவர்களிடையே’  இந்தப் புத்தகம் பெரும் வரவேற்பை பெறுவதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் நிலவும் சகலவிதமான ஏற்றத்தாழ்வுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் காரணமாக இருக்கும் சாதியத்திற்கு எந்த பங்கமும் வராமல் பயின்றொழுகிக் கொண்டே புரட்சியாளர்களாகவும் காட்டிக்கொள்கிற மோசடிப் பேர்வழிகளுக்கு இந்நூல் பெருந்தைரியத்தையும் தத்துவபலத்தையும் தரவல்லது. இந்நூலை ஒருமுறை படிப்பதன் மூலம் அவர்கள் தம்மைத்தாமே ஆயுசுக்கும் பாராட்டிக்கொண்டு பெருமிதத்தில் துள்ளக்கூடும். அம்பேத்கரது கண்ணோட்டத்தை அறிவுப்புலத்திலிருந்து அகற்றுவதன் மூலம் சாதியத்திற்கெதிரான போராட்டத்தை மட்டுப்படுத்தவும் மழுங்கடிக்கவும் முடியும் என்று நம்புகிறவர்களின் குரலாக ரங்கநாயகம்மா பேசுகிறார்.  இந்தப் புத்தகத்தோடு ஒப்பிடும்போது, அம்பேத்கரை அவமதிக்கும் தலித் விரோத சாதிவெறியர்கள் மிக கண்ணியவான்களாகத் தெரிகின்றனர். ஒருவேளை அவர்கள் இதுகாறும் அம்பேத்கரது சிலைகளை உடைத்து செருப்பு மாலை போட்டு அவமதிப்பதால் உணரும் மனக்கிளர்ச்சியை இனி இந்நூலை வாசிப்பதன் மூலமே கூட அடையமுடியும். ஆகவே சாதியவாதிகள் பலரும் இந்நூலை மிகத் தாராளமாக வாங்கிப் படித்து கொண்டாடி இன்புறுகிறார்கள் என்கிற செய்தி ஓரிரு நாட்களில் வரக்கூடும்.
சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் இணைத்து நடத்துவதன் தேவையை உள்வாங்கி மார்க்சீய அமைப்புகளை அது நோக்கி உந்தித்தள்ள பணியாற்றி வருபவர்களை பின்வாங்கச் செய்கிற தந்திரம் இப்புத்தகத்தில் துருத்திக்கொண்டு இளிக்கிறது. அம்பேத்கரையும் மார்க்சையும் எதிரெதிர் பகைமுகாம்களாக நிறுவிக் காட்டுவதன் மூலம் ரங்கநாயகம்மா போன்றவர்கள் யாருக்கு சேவகம் செய்யத் துடிக்கிறார்கள்? நூற்றாண்டைத் தொட்டிருக்கும் ‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற அம்பேத்கரின் ஆய்வுரை மீதான வெகுஜன கவனத்தை சிதறடிக்கும் நோக்கத்துடனேயே இந்நூல் இப்போது தமிழுக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறதோ என்கிற சந்தேகமும் எழாமலில்லை. நேர்த்தியான தாளில் ராயல் டம்மி அளவில் 416 பக்கங்களைக் கொண்ட இந்நூலை வெறும் 80 ரூபாய்க்கு வெளியிட்டிருப்பதற்கு வாசகரின் வாங்கும் சக்தி மீதான அக்கறையை விடவும் வாங்கத் தூண்டும் தந்திரமே காரணமாக இருக்க முடியும்.
ம.வெங்கடேசன் என்கிற காவிக்கூலி எழுதிய ‘இந்துத்வ அம்பேத்கர்’ என்கிற நூலைப் படித்தபோது ஏற்பட்ட அதே அவமானமும் ஆத்திரமும் ரங்கநாயகியம்மாவின் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போதும் ஏற்படுகிறது. அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் புள்ளியில் வியக்கத்தக்க வகையில் வலதுசாரிகளோடு கைகோத்திடும் ரங்கநாயகம்மா போன்றவர்கள் எழுதிக் குமிக்கிற இந்தக் குப்பைகளையெல்லாம் வாசித்து என்ன ஆகப்போகிறது என்று எரிச்சலாகி தூக்கி தூர எறிந்துவிட வேண்டும் போலிருக்கிறது. உண்மையில் அப்படி எறிந்துவிட வேண்டும் என்று எதிர்பார்த்துதான் இப்படி எழுதுகிறார்கள். அதற்காகவே எறிந்துவிடாமல் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...