மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 29

விளக்கம் தர அமைச்சர், வில்லங்கம் செய்வது யார்? - ஆதவன் தீட்சண்யா

நம்பிக்கையுடனும் பயமின்றியும் பொதுத்தேர்வுகளையும் போட்டித்தேர்வுகளையும் எழுதுவதற்கான ஊக்கத்தை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வழங்குவதாக கூறிக்கொண்டு அவர்களுடன் இந்திய பிரதமர் நேரடியாக உரையாடும் நிகழ்வு ஒன்று 2018ஆம் ஆண்டு முதல் நடந்துவருகிறது.  ‘பரிக்‌ஷா பி சார்ச்சா’ என்கிற பெயரில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் நடத்தப்படும் இந்நிகழ்வில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கெடுக்க தகுதிபெற்றவர்கள். இவர்களிலிருந்து பங்கேற்பாளர்களைத் தெரிவு செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை போட்டியொன்றை நடத்துகிறது. இதற்குரிய இணையதளத்தில் பதிவு செய்துகொள்கிறவர்கள் மட்டுமே இப்போட்டியில் பங்கெடுக்க முடியும்.

தரப்படும் படம் ஒன்றிற்கு 150 எழுத்துகளுக்குள் பொருத்தமான வாசகம் / தலைப்பை உருவாக்குவது, மோடியின் நூலான ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ உள்ளிட்டவற்றிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிப்பது, ‘நான் எவ்வாறு உந்துதல் பெற்று தேர்வுகளை எதிர்கொண்டேன்’ என்று 60 நொடிகளில் காணொலியாகவோ அல்லது 500 சொற்களுக்கு மிகாமல் எழுதியோ அனுப்புவது- என்கிற அடிப்படையில், இப்போட்டி கடந்த இரண்டாண்டுகளாக நடந்திருக்கிறது. 2019இல் உள்நாட்டிலும் அயலிலுமாக இருந்த சுமார் 13.5 கோடி மாணவர்களில் 1,02,173பேர் மட்டும் இப்போட்டியில் பங்கெடுத்துள்ளதை கவனித்தால் மாணவர்களிடையே இந்நிகழ்வுக்கு அப்படியொன்றும் வரவேற்பில்லை என்பதை அறியமுடியும். ஒப்பீட்டளவில் சிறுவீதமான இம்மாணவர்களிருந்தும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 2000 பேர் அரசின் செலவில் டெல்லி சென்று பங்கேற்று திரும்பியுள்ளனர்.  இந்த நிகழ்வை அரசு சார்புடைய தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்திருந்தபோதிலும் பெரிதாக யாரும் பொருட்படுத்தவில்லை. இருந்தபோதிலும் இந்நிகழ்வு மூன்றாம் முறையாக Pariksha Pe Charcha 2020 என்ற பெயரில் வரும் 2020 ஜனவரி 16 ஆம் தேதி டெல்லியில் நடக்கவிருக்கிறது.

‘‘நன்றியுணர்வு மகத்தானது, உன் விருப்பார்வங்களைப் பொறுத்ததே உன் எதிர்காலம், தேர்வுகளின் தரத்தை சோதித்தல், கடமைகளும் உரிமைகளும், (பாடநூலுக்கு) வெளியேயுமுள்ள நல்லம்சங்களை கைக்கொள்ளுதல்’’ என்பதாக பொருள்கொள்ளத்தக்க ஐந்து விசயங்களை மையப்படுத்தி பரிக்‌ஷா பி சார்ச்சா 2020 நடக்கவுள்ளது. https://innovate.mygov.in/ppc-2020/ என்ற இணையத்தின் வழியே முன்பதிவு செய்து போட்டியிட்டு தேர்வாகி வருபவர்களுடன் இவ்வாண்டும் பிரதமர் உரையாடப் போகிறார்.

இத்தனை ஆண்டுகாலமாக யாருடைய அறிவுரையும் இல்லாமல்தான் மாணவர்கள் தேர்வுகள் பலவற்றையும் எழுதிவந்திருக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஒரு கல்வியாளராகவோ, தேர்வுகள் பலவற்றை தைரியமாக எழுதி அதில் வெற்றிகண்டவராகவோ, குழந்தைகளின் உளவியலை அறிந்தவராகவோ ஒருபோதும் வெளிப்பட்டிராதவரான பிரதமர் இத்தகைய அறிவுரைக்கும் உரையாடலுக்கும் எந்தளவுக்கு பொருத்தமானவர் என்கிற கேள்வி எழுகிறது. ஒரு பிரதமர் எல்லா தகுதிகளையும் திறமைகளையும் பெற்றிருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஜனநாயகவழிப்பட்ட ஒரு நாட்டை ஆள்வதற்கு கல்வித்தகுதி ஒரு முன்னிபந்தனையுமல்ல. ஆனால் அவற்றையெல்லாம் பெற்றிருப்பது போன்று தோற்றம் காட்டுவது பிழையானது. அதிலும், அவரும் அவரது அமைச்சரவை சகாக்களில் சிலரும் எங்கு எப்போது என்ன படித்தனர் என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியாகி ஏளனத்திற்கு ஆளாகிவரும் நிலையில் அவரிடமிருந்து மாணவச்சமூகம் கற்றுக்கொள்வதற்கு என்ன இருக்கிறது? தங்களோடு உரையாடுகிறவர் பற்றி அவர்கள் என்னவிதமான சித்திரத்தை தமக்குள் உருவாக்கிக்கொண்டு அவர் சொல்வதை கேட்பார்கள்? ஆனால் இப்படியான கேள்வி எதையும் எழுப்பிக்கொள்ள வாய்ப்பற்ற நிலையிலுள்ள கல்வித்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி இந்நிகழ்வை அதிமுக்கியமானதாக ஜோடித்துக்காட்டும் வேலை நடக்கிறது.



மத்திய அரசு வெள்ளைத்தாளை அனுப்பிவைத்தால்கூட அதை நகலெடுத்து எல்லாத்துறையும் உற்று கவனிக்கும்படி உத்தரவிடும் விசுவாசத்தில் மூழ்கியுள்ள தமிழக ஆட்சியாளர்கள், டிசம்பர் 11, 16 ஆம் தேதிகளில் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தினை ஏற்று இந்த பரிக்‌ஷா பி சார்ச்சாவை இங்கு அமல்படுத்த களமிறங்கியுள்ளனர். இதன்பொருட்டு பள்ளிக்கல்வி இயக்குநரின் கையொப்பத்துடன் 27.12.19 அன்று வெளியாகியுள்ள ந.க.எண்.73708/எம்/இ1/2109 என்கிற சுற்றறிக்கை, கல்வித்துறையின் அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் 13.12.19, 20.12.19, 24.12.19, 26.12.19 ஆகிய நாட்களில் ஏற்கனவே அடுத்தடுத்து சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது. 2020 ஜனவரி 16ஆம் தேதி டெல்லியில் நடக்கும் இந்த நிகழ்வின் நேரலை ஒளிபரப்பை மாணவர்களை வரவழைத்து காண்பிக்கவேண்டும் என்றும் அதற்கான முன்தயாரிப்புச் செலவுகளுக்கான தொகையை சமாக்ரன் சிக்‌ஷா நிதியிலிருந்து எடுத்துக் கொள்ளுமாறும்  இந்தச் சுற்றறிக்கை தெளிவாக குறிப்பிடுகிறது.

ஜனவரி 16 அன்று மாணவர்களையும் ஆசிரியர்களையும் பள்ளிக்கு வருமாறு பணித்த இச்சுற்றறிக்கை தமிழர்களது தொன்மையான விழாவாகிய பொங்கல் விழாவை சீர்குலைக்கும் நோக்கமுடையது. பொங்கல் விடுமுறையில் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டு பயண ஏற்பாடுகளைச் செய்துமுடித்த வெளியூர்வாசிகள் இடையில் ஒருநாள் எப்படி பள்ளிக்குத் திரும்புவார்கள் என்கிற நடைமுறை அறிவு துளியுமற்று வெளியான இச்சுற்றறிக்கைக்கு பலத்த கண்டனம் கிளம்பியதும் ‘பள்ளிக்கு வரவேண்டிய கட்டாயமில்லை, விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு வரலாம்’ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.  

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கைகளும் ஆணைகளும் வெளியாவதும் எதிர்ப்பு கிளம்பியதும் அமைச்சர் விளக்கமளித்து அவற்றை திரும்பப் பெறுவதும் இங்கு தொடர்நிகழ்வாகி வருகிறது. விளக்கமளிப்பதும் திரும்பப் பெறுவதும் அமைச்சர் என்றால், அந்தச் சுற்றறிக்கைகளும் ஆணைகளும் யாருடைய தூண்டுதலின் பேரில் யார் வெளியிடுகிறார்கள்? இவ்விதமாக அமைச்சரை தொடர்ந்து சங்கடத்திற்குள்ளாக்குவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அல்லது அமைச்சரே மத்திய அரசுக்கு தன் விசுவாசத்தைக் காட்ட முயற்சித்து மக்கள் எதிர்ப்பால் பின்வாங்குகிறாரா என்பதான கேள்விகள் எழுகின்றன.

‘ஜனவரி 16 பிரதமருக்கும் பிற மாநிலத்தவருக்கும் எவ்வித தனித்துவமும் இல்லாததொரு நாளாக இருக்கலாம். ஆனால் தமிழர்களாகிய எமக்கு அது கொண்டாட்டத்திற்குரிய தொன்மையான பண்பாட்டுத் திருநாள். அன்றைய நாளின் சிறப்பையும் கொண்டாட்ட மனநிலையையும் குலைக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம்’ என்று சொல்லும் அரசியல் திராணி இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இருந்திருக்குமானால் இந்தக் குழப்படி நடந்திருக்காது. மொழி, இனம், பண்பாட்டுத்தனித்துவம் சார்ந்து மாறுபடும் மக்கள் சமூகங்களைக் கொண்ட இந்தியாவில் கல்விப்புலச் செயல்பாடுகள் அனைத்தும் இத்தகைய மாறுபடும் தன்மையை- பன்மைத்துவத்தை உள்வாங்கிக் கொள்வதாக அமைவது அவசியம். அதன்றி ஒற்றைமயக் கண்ணோட்டத்திலான எந்த உத்தரவும் இங்கு மக்களின் எதிர்ப்புக்குள்ளாகி திரும்பப் பெறப்பட்டே தீரும்.

நன்றி: தீக்கதிர் நாளிதழ், 29.12.2019

புதன், மே 18

மோடியடிப்பொடியரின் முகநூல் மோசடிகள்- ஆதவன் தீட்சண்யா


 இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் (UPSC), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போன்றவை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையிலிருந்து பிறந்தவை. பணிநியமனத்தில் நிலவும் சாதிரீதியான சாய்மானத்தையும் பாரபட்சத்தையும் தடுப்பதற்கான முதற்படியாக மத்திய மாநில அரசுகள் தத்தமக்கான தேர்வாணையங்களை அமைக்கவேண்டும் என்று அவர் எழுப்பிய கோரிக்கையே பிற்காலத்தில் செயல்வடிவம் பெற்றது. அரசியல் சாசன அவையில் அங்கம் வகிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் என்கிற அமைப்பை சட்டப்பூர்வமாக உருவாக்கவும் பயன்படுத்திக்கொண்டார். வயதுவரம்பு, தேர்வு எழுதும் எண்ணிக்கை ஆகியவற்றை தளர்த்தி பட்டியல் சாதியினர், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடும்கூட அவரது போராட்டத்தால் கிடைத்தவையே.

1950ல் இந்த இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் உருவாகிவிட்ட போதிலும் 2006ஆம் ஆண்டுதான் அதன் போட்டித்தேர்வில் ஒரு பிற்படுத்தப்பட்டவர் - ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முத்தியாலுராஜூ ரேவு மூன்றாவது தடவையாக தேர்வெழுதி - தேசிய அளவிலான முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது. அதற்கும் பத்தாண்டுகள் கழித்தே 2016ல் பட்டியல் சாதியைச் சார்ந்த ஒருவர் - டினா டபி - தேசிய அளவிலான முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். இந்த காலஇடைவெளி, சாதியடுக்கில் இவர்கள் வகிக்கும் இடத்தை சூசகமாக தெரிவிப்பது போலிருக்கிறது.

டினா டபியின் குடும்பப் பின்புலத்தை பரிசீலித்தால் அவர் மூன்றாம் தலைமுறை படிப்பாளியாக இருக்கக்கூடுமென யூகிக்கமுடிகிறது. எடுத்தயெடுப்பில் முதல் தடவை எழுதிய தேர்விலேயே அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெறுவதற்கு இந்த குடும்பப் பின்புலம் பெரிதும் அவருக்கு உதவியிருக்கிறது. எனவே அவர் தனது சாதிக்குரிய இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்ளும் அவசியமின்றி பொதுப்பட்டியலுக்குள் சென்றுவிட்டார். தன்னளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கப் பெறாமல் அடுத்தநிலையில் இருக்கிற பட்டியல் சாதிக்காரர் ஒருவர் இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள இதன்மூலம் வழிவிட்டிருக்கிறார். இடஒதுக்கீட்டினால் குறிப்பிட்ட குடும்பங்களே ஆதாயம் அடைகின்றன என்கிற குற்றச்சாட்டு எவ்வளவு பொய்யானது என்பதை முத்தியாலுராஜூ ரேவு போலவே டினாவும் தன்போக்கில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அந்த சாதிப் பிள்ளைங்கெல்லாம் ஒருவேளை பாஸ் பண்ணலாம், ஆனால் மெரீட்டிலோ டாப்பராகவோ வரமுடியாது என்கிற இளக்காரப் பேச்சுக்கிடையில் தான் ஒவ்வொரு தேர்விலும் பட்டியல் சாதியினர், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பலரும் பொதுப்பட்டியலுக்குரிய மதிப்பெண்களைப் பெற்று முன்னேறி வருகின்றனர். ஆனாலும் அவர்களை அவரவர் சாதிப்பட்டியலுக்குள் தள்ளியடைத்துவிட்டு பொதுப்பட்டியலில் உள்ள 50 சதவீத இடங்களையும் ‘உயர்த்திக்கொண்ட சாதியினர்’ தமக்குத்தாமே ஒதுக்கிக்கொள்கிற நுண்மோசடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் மீறிய ஒரு தீர்மானகரமான வெற்றியை ஈட்டியுள்ளார் என்பதால்தான் டினா கொண்டாடப்படுகிறார்.

டினாவின் இந்த வெற்றியை கவனம் குவித்து படித்த, கடினமாக உழைத்த ஒரு தனிமனித முயற்சிக்கு கிட்டிய பலன் என்று குறுக்கிப் புரிந்துகொள்ள முடியாது.  ஏனெனில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒட்டுமொத்த கூட்டுழைப்பே அதன் எந்தவொரு தனிமனித வெற்றிக்கும் வழியமைத்துக் கொடுக்கிறது. ( இந்தக் கூட்டுழைப்பின் பலனை அனுபவிக்கும் பலர், தமது சொந்த சமூகத்திற்கு எதையும் திருப்பியளிக்காதவர்களாக,  தமக்கு கிடைக்கவிருக்கிற அதிகாரத்தைக் தமது சொந்தநலனுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறவர்களாக சுருங்கி விடுவது பேரவலம்.)

பொது வெளியில் நடமாடுவதற்கும் கல்வி உரிமை உள்ளிட்ட சமூகநீதியை மீட்டுக் கொள்வதற்குமாக தலித்துகளும் பெண்களும் இடையறாது நடத்திவரும் நெடியப் போராட்டத்தினூடான வாய்ப்புகளால்தான் டினா போன்றவர்கள் ஆற்றலோடு வெளிப்படுகின்றார்கள். அறிவும் தகுதியும் நாடாளும் திறமும் குறிப்பிட்ட சாதிகளுக்கே/ ஆண்களுக்கே உரியது என்கிற பிறப்புவாத கற்பிதத்தை எதிர்த்து கருத்தியல்தளத்திலும் களங்களிலும் நீடிக்கும் போராட்டத்திற்கு நியாயம் சேர்த்து வலுப்படுத்துகிறது டினாவின் தேர்ச்சி.

சமத்துவத்திற்காகவும் மனித மாண்புகளுக்காகவும் களமாடிய அம்பேத்கர் என்கிற வெல்லற்கரிய போராளியின் தோள்மீது ஏறி நிற்பதாலேயே தன்னால் இன்று சமுகத்தின் கண்களுக்கு உயரமாகத் தெரியமுடிகிறது என்பதை டினா அறிந்தேயிருக்கிறார். அதனாலேயே அவரை ஒரு தலித்தாக அடையாளப்படுத்தி வெளியாகும் பாராட்டுதல்களை மறுப்பின்றி ஏற்பவராகயிருக்கிறார்.

யாரோ எவரோ போல காட்டப்படாமல் டினா ஒரு தலித் என்றும் சேர்ந்தே  பரவும் செய்தி, ‘உயர்த்திக்கொண்ட சாதி’யினரால் மட்டுமே டாப்பராக வர முடியும் என்று கட்டப்பட்டிருந்த பிம்பத்தை சிதறடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் எரிச்சலடைந்த மெரீட்மினுக்கிகளாகிய மோடியடிப்பொடியர்கள், அவரை ஏன் சாதிரீதியாக அடையாளப்படுத்தவேண்டும் என்று வினோதமாக கேட்கிறார்கள். தலித்துகளால் டாப்பராக வரமுடியாது என்று தாங்கள் சொல்லிவந்த வந்த பொய் அம்பலப்படுவதை தடுக்கவே இப்படி கேட்கிறார்கள்.  இவர்கள் இதற்காகவே முகநூலில் டினா டபி பெயரில் 35 போலிக் கணக்குகளைத் தொடங்கி மோசடியான பதிவுகளை எழுதிவருகிறார்கள்.

அப்படியான பதிவுகளில் ஒன்று - ‘என்னைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து நான் உண்மையில் வருத்தப்படுகிறேன். நானறிவேன், எனக்கு ஆதர்சமளிக்கக்கூடியவர் யாரென்று- அவர் நமது பிரதமர் நரேந்திரமோடிதான். நான் ஒரு எஸ்.சி என்பதாலேயே அம்பேத்கர்தான் எனது ஆதர்சம் என்று ஒப்புக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட வேண்டுமா? ஏன் எங்கு பார்த்தாலும் இந்த ‘ஜெய்பீம்’ வாசகங்கள்? நான் அம்பேத்கரை பெரிதும் மதிப்பவள். அவர் பின்தங்கிய பகுதியினருக்காக நிறைய செய்திருக்கிறார். தலித்துகளை முன்னேற்ற அவர் பாடுபட்டிருக்கிறார். ஆனால் அவர் ஒருபோதும் இடஒதுக்கீட்டை ஆதரித்தவரில்லை. நமது அரசியல் சட்டத்தால் மிகக்குறைந்த காலத்திற்கே பரிந்துரைக்கப்பட்ட இந்த இடஒதுக்கீட்டை வாக்குவங்கியைத் திரட்டும் கருவியாக அரசியல்வாதிகள் மாற்றிவிட்டார்கள்...’’

இந்த மோசடியைக் கண்டு மனம் வெதும்பிய டினா டபி, தனது பெயரில் 35 போலிக்கணக்குகளைத் தொடங்கி சில சமூகவிரோத சக்திகள் பரப்பிவரும் இத்தகைய அருவருக்கத்தக்க கருத்துகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தனது உண்மையான முகநூல் பக்கத்தில் விளக்கமளித்திருப்பதை அகில இந்திய மாணவர் சங்கம் மறுபதிவு செய்துள்ளது (https://www.facebook.com/officialaisa/photos/a.654051061305057. 1073741826.537869562923208/1107732979270194/?type=3&theater)

மோடியால் ஆகர்ஷிக்கப்பட்ட ஒருவர் போட்டோஷாப்பிலும் பொய்ச்சான்றிதழ் தயாரிப்பதிலும் கூட வல்லவராக முடியாது என்பது தொடர்ந்த அம்பலமாகி வருகிறது. ஆகவே டினா அம்பேத்கரால் ஆகர்ஷிக்கப்பட்டாரோ இல்லையோ, நிச்சயமாக மோடியால் ஆகர்ஷிக்கப்பட்டவராக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற உறுதிபட சொல்லலாம்.

இந்த மோடியடிப்பொடியர்கள் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் தங்களது குரூர ஆசைக்கு அம்பேத்கரையும் டினாவையும் பயன்படுத்தப் பார்த்திருக்கிறார்கள். சட்டமன்ற நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடஒதுக்கீட்டுக்குதான் பத்தாண்டு காலக்கெடுவை அரசியல் சட்டம் விதித்ததேயன்றி, கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எவ்வித காலக்கெடுவையும் அது விதிக்கவேயில்லை. இந்த உண்மையை மறுப்பதற்கான ஆதாரத்தை அரசியல் சட்டத்திற்குள் போலியாக உருவாக்கும் போட்டோஷாப் வேலையை அவர்கள் இந்நேரம் தொடங்கியிருக்கக்கூடும். 










திங்கள், ஜனவரி 12

பம்மாத்துகளின் மீது காறியுமிழும் கவிதைகள் – ஆதவன் தீட்சண்யா


திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின்
"ஒழுகிய வானத்தை நேற்றுதான் சரிசெய்தோம்"
தொகுப்புக்கு எழுதிய முன்னுரை

ஒழுகிய வானத்தை நேற்றுதான் சரிசெய்தோம் என்று இத்தொகுப்பிலுள்ள ஒரு வரி எனக்குள் விதவிதமான சித்திரங்களை விரித்துக்கொண்டேயிருக்கிறது. வாழ்க்கையை புகார்களால் நிறைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக அதை வாழத்தக்கதாக மாற்றிக்கொள்வதே சரி என்கிற மிகப்பெரும் போதம் இந்த ஒரு வரிக்குள் இறங்கி வழிநடத்துவதாகத் தோன்றுகிறது. இன்னும் இதுபோன்று மனதைக் கிளர்ச்சி கொள்ளவைக்கிற, உலகை புதுரீதியில் பார்த்திட அழைத்துப்போகும் கவிதைகள் இத்தொகுப்பில் நிறைந்திருப்பது தற்செயலானதல்ல. 

தான் வாழும் காலத்தின் சாட்சியமாக அல்லது பிரதிபலிப்பாக ஒருவரது இலக்கிய ஆக்கங்கள் வெளிப்படும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவரது ஆக்கங்களோ அதையும் மீறி காலத்தை இடைமறிப்பதை தன்னியல்பாகக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் நடப்புகளை அதன் போக்கில் அனுமதித்து அதுகுறித்து என்னத்தையாவது நாலுவரி எழுதித் தொலைக்க சூழல் அவர்களை அனுமதிப்பதில்லை. நித்தமும் நெருப்பாற்றை நீந்திக் கடக்க வேண்டியதுபோன்ற நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் அவர்கள் அதையல்லாமல் வேறெதை எழுத வாய்க்கும்? ஒடுக்குதலுக்கு எதிராக அவர்கள் எழுதுவது கைத்தட்டலை எதிர்பார்த்தல்ல, அது அவர்களது வாழ்க்கை. ஆமாம், அவர்களது இருப்பே ஒடுக்குமுறையை இடையறாது எதிர்ப்பதில் தான்  வேர் கொண்டுள்ளது. எனவே அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி எழுதுவதை ஒடுக்குமுறையாளர்கள் தமக்கெதிரான குற்றப்பத்திரிகையாக பொருள்மாற்றி வாசிக்கும்படியாக நேர்வது தவிர்க்கமுடியாதது. 

இவர்களால் என்ன எழுதிவிட முடியும் என்கிற இளக்காரமும் குறுகுறுப்பும் கலந்த முன்முடிவுகளுடன் தலித்துகளின் எழுத்துகளை அணுகும் ஒரு சாதிய மனம் தன்னிடமுள்ள மனிதத்தன்மையற்றக் கூறுகளை வாசிப்பினூடாக இனங்கண்டு ரகசியமாகவேனும் துணுக்குற்றுப் போவதைக் கண்டு ரசிப்பதல்ல தலித் எழுத்துகளின் நோக்கம், அந்தச் சிறுபொழுதில் சாதியமனம் வெளிப்படுத்திய மனிதத்தன்மையை வாழ்நாள் முழுமைக்குமானதாக வளர்த்தெடுப்பதன் மூலம் தான், அதாவது அண்டை அயலாரையும் மனிதர்களாக்குவதன் மூலமாகத்தான் தம்மை மனிதர்களாக தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்கிற தெளிவு பெற்றுள்ள ஒடுக்கப்பட்டவர்கள் அதன்பொருட்டே எழுதுகின்றனர். அதற்காக அவர்கள், மலக்கிடங்கில் முழுகி அடைப்பை நீக்கி மேலெழுந்தக் கையோடு எழுதப்படுகிற இக்கவிதைகளை மூக்கைப் பொத்திக்கொண்டுகூட படிக்க முடியவில்லை என்று அரற்றுகிற நாசூக்குப் பேர்வழிகளிடம் நயந்து பேசிகொண்டிருப்பதில்லை. இந்தக் கவிதைகளின் வழியே பரவும் நாற்றம் எழுதியவருடையதல்ல என்பதை உணர வைக்கிறார்கள்.  

இந்தியாவை இந்தக்கணம் வரையிலும் அசுத்தப்படுத்தி வருகிற நரேந்திர மோடி தொடங்கி கமல்ஹாசன் வரையானவர்கள் திடுமென வெள்ளி ஸ்பூன் போல விளக்குமாறைப் பிடித்துக் கொண்டு தூய்மைப்போராளிகளாகிவிட்டனர். இவர்களில் ஒருவரேனும் ஒரு பொதுக் கழிப்பறையையோ திறந்தவெளி மலக்கிடங்காய் நாறும் ரயில்பாதையையோ சுத்தப்படுத்துவார்களா என்றால் அதுதான் இல்லை. ஏற்கனவே சுத்தப்படுத்தப்பட்ட தெருக்களை செயற்கையாக அசுத்தப்படுத்தி அதற்கப்புறம் கூட்டிக்கிழிக்கும் இந்த பம்மாத்துகளின் மீது காறி உமிழ்கிறது இக்கவிதைகள். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் அடுத்தக் கிரகத்திற்கு மங்கள்யான் அனுப்பிக்கொண்டே மலக்குழிக்குள்ளும் சாக்கடைக்குள்ளும் இறக்கிவிடப் படுகிறவர்கள் இந்த நாட்டின் பாரபட்சமான தொழில்நுட்ப அறிவின் மீது காறி உமிழாமல் வேறென்ன செய்வார்கள்? 

மனிதகுலம் அறிவியல் முன்னேற்றத்தால் அன்றாடம் விளைவித்துத்தரும் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் வாங்கித்துய்ப்பதன் மூலம் தன்னையொரு நவீனச்சமூகமாக காட்டிக்கொள்கிறது இந்திய/ தமிழ்ச்சமூகம். ஆனால் அது கருத்தியல்ரீதியாக மிகவும் பின்னோக்கிய காலத்திற்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரட்டை மனநிலையை அம்பலப்படுத்துவதோடு நில்லாமல் கருத்தியல்ரீதியாகவும் அதை மேலிழுத்துக் காப்பாற்றும் அக்கறைகொண்ட கவிதைகளை இத்தொகுப்பில் காணமுடிகிறது. நுகர்வியம், பணமீட்டும் வெறி, பெண்ணுடல் மீதான அதிகாரம், அரச பயங்கரவாதம், சூழலிய அழிவு என்று மிக நேரடியான அரசியல் பிரச்னைகள் கவிஞரின் பாடுபொருள்களாகியிருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் எப்படி கவிதையில் சொல்ல முடியும், இதையெல்லாம் சொல்வதா கவிதை என்கிற கேள்விகள் எழாதபடிக்கு எழுதிப்போகும் சவாலை கவிஞர் நேர்மையாக எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு ‘ஒருத்தி அறுத்தா’ உள்ளிட்ட அநேகக் கவிதைகளை உதாரணம் காட்டமுடியும்.

எனினும், தன்னுணர்வாக உள்வாங்கப்படாத எதுவும் கவிதையாக மாறாது என்பதற்கு இதிலுள்ள கவியரங்கக் கவிதைகள் சிலவற்றை சுட்டமுடியும். தலைப்புக்கேற்ப கவிதை செய்கிற நிர்ப்பந்தங்களிலிருந்து  விடுவித்துக்கொள்வதன் மூலம் இந்த பலவீனத்தைக் கடந்து விட முடியும். ஒரு கவிஞர், தான் ஆதரிக்கும் அரசியல் பிரச்னைகள் மீதெல்லாம் கவிதை எழுதியேதான் தனது நிலைப்பாட்டை தெரிவித்தாக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால் மக்களின் பாடுகளிலும் போராட்டங்களிலும் விடுதலையிலும் கொண்டாட்டங்களிலும் தன்னைக் கரைத்துக்கொள்ளும் ஒருவருக்கு அவையெல்லாவற்றையும் கவிதையாகவே எழுதிவிடுவதும்கூட சாத்தியமாகக்கூடும். என் தோழன் அந்த உயரங்களைத் தொடுவானாக. 

- ஆதவன் தீட்சண்யா
குழந்தைகளை கொண்டாடத் தெரியாத நாள் - 14.11.14, ஒசூர்



புதன், நவம்பர் 19

KOILET: கோய்லெட் - ஆதவன் தீட்சண்யா

சட்டப்பூர்வ எச்சரிக்கை

இந்தக்கதையைப் படிப்பது மனநலத்திற்கு மிகவும் தீங்கானது.
கதை கதையைக் கெடுக்கும், கதையைப் படிப்பவரோ ஊரைக் கெடுப்பார்.
ஊர் கெடுமானால் உலகம் கெடும், உலகம் கெட்டால் கதைகளும் கெடும்.
இந்தக்கதையைப் படிப்பது மனநலத்திற்கு தீங்
....


கோய்லெட் என்பது கட்லெட், சாக்லெட் போன்றதொரு தின்பண்டம்/ நொறுவாய் என்று நினைத்துக்கொள்கிறவர்கள் சரியான தீனிமுழுங்கிகளாகத்தான் இருக்க முடியும். டாய்லெட் என்பதன் முதலெழுத்துதான் மாறி இப்படி தவறுதலாக கோய்லெட்டாக அச்சாகிவிட்டதெனக் கருதி ‘செப்பம் செய் செம்மல்கள்’ பிழைத்திருத்தம் செய்ய கிளம்புவதும் அவசியமற்றது. ஆனால் கதையின் களம் கக்கா நாடாக இருப்பதால் இது டாய்லெட் பற்றியதாகத்தான் இருக்கும் என்கிற யூகம் கதைக்காரனை ஆதாரமாக கொண்டதுதானேயன்றி கதையைப் பற்றியதல்ல என்பதை மட்டும் சொல்ல வேண்டிருக்கிறது.

வீட்டோரம், தெருமுக்கு, ஆற்றங்கரை, வயல்வெளி, கோயில் வாசல், ரயில்ரோடு, பள்ளிக்கூடம் என்று கண்ட இடத்திலும் வருடத்திற்கு ஒன்பதுலட்சம் டன் அளவுக்கு பேழ்கிறவர்கள் நிறைந்த நாடு என்பதால் கக்கா நாடு என்கிற காரணப்பெயர் வந்ததென ருசுப்பிக்கும் பூர்வாங்க சரித்திரக் குறிப்புகளை அண்டார்டிகா ராயல் மியூசியத்தில் இப்போதும் காணமுடியும். கக்காநாட்டின் தொல்லியல் ஆய்வுத்துறையால் பாதுக்காக்கப்பட்டு வரும் பென்னம்பெரிய அரண்மனைகளில் கூட கழிப்பறை ஏற்பாடு இல்லாததை கண்டறிந்து ஆய்வாளர் ஒருவர் எழுதிய ‘அந்தக்காலத்தில் கக்கூஸ் இல்லை’ என்கிற கட்டுரையையும் இதற்கு ஆதாரமாக கொள்ளமுடியும். உப்பரிகை மஞ்சத்தில் உல்லாசமாய் புரளும் உலகாண்ட சக்கரவர்த்திகூட இங்கு வெட்டவெளியில் தான் கக்கா போயிருக்க முடியும் என்பதை நிறுவும் இக்கட்டுரை, அப்படி போனவர்களுக்குப் பின்னாலேயே தண்ணீரோடு அலைந்தவர்களை மனதில் வைத்தே அதிகாரத்துக்கு நெருக்கமானவர்களை ‘சொம்புத்தூக்கிகள்’ என்றழைக்கும் வழக்கம் இன்றும் நடப்பிலிருப்பதாக கூறுகிறது.

மட்ட மத்தியானத்தில் பட்டப்பகலில் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை ராகுகாலம் எமகண்டம் பார்த்து நட்டநடுராத்திரியில் வாங்கிக்கொண்டு ‘நாயும் பேயும் உறங்கும் இந்த நடுநிசி வேளையில் நாம் விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெறுகிறோம்’ என்று வீரவுரையாற்றிய அந்த நாட்டின் முதல் பிரதமரது கொள்ளுப்பேரன் காலமிது. மன்னராட்சி ஒழிந்து குடியாட்சி ஏற்பட்டிருந்த போதிலும் அந்த முதல் பிரதமரது வாரீசுகள்தான் பரம்பரையாக ஆண்டுவருகிறார்கள். இடையிடையே சில அத்தக்கூலிகள் பிரதமராக இருந்திருந்தாலும் பெரும்பாலான காலம் அந்த நாற்காலியைத் தேய்க்கும் தேசியக்கடமையை அந்தக் குடும்பமே நிறைவேற்றிவருகிறது. இதுகுறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாகாமல் தடுக்கும் பொருட்டு தனது தொலைக்காட்சியான டூப்தர்ஷன் மூலமாக ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்கிற முழக்கத்தை  பிரபலமாக்கியது அந்தக்குடும்பம். ஆனாலும் பேருக்குத்தான் எல்லோரும் மன்னர், ஊருக்கு அவர்களே மன்னர் என்று ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பினை அடக்கும் தந்திரமாக ‘யார் வேண்டுமானாலும் பிரதமராகும் உரிமைச்சட்டம்’ என்கிற சட்டம் ஒன்றை கக்காநாட்டு அரசு நிறைவேற்றியது.

‘யார் வேண்டுமானாலும் பிரதமராகும் உரிமைச்சட்டத்தின்’ படி கக்கா நாட்டின் குடிமக்கள் எல்லோருக்குமே ஒரே பெயர்தான்- பிரதமர் வேட்பாளர். ஆண் பெண் திருநங்கை திருநம்பி என்று யாராயிருந்தாலும் கக்கா நாட்டைப் பொறுத்தவரை பிரதமர் வேட்பாளர் என்பதுதான் அவரது பெயர். பிரதமரே ஆகிவிட்டாலும் அவரது பெயர் பிரதமர் வேட்பாளர்தான். முதலாம் ஜார்ஜ், ஏழாவது போப், பதினெட்டாம் ஆதீனம், இருபத்திநான்காம் தீர்த்தங்கரர் என்று மன்னர்களுக்கும் மதப்பெரியவர்களுக்கும் இருப்பது போன்று முதலாம் பிரதமர் வேட்பாளர், முப்பதாம் பிரதமர் வேட்பாளர் என்று எண் மட்டும்தான் மாறுமே தவிர பெயர் ஒன்றுதான். ‘ஏய்/ டேய் பிரதமர் வேட்பாளர்’ என்று கூப்பிட்டால் கக்கா நாட்டு குடிமக்கள் அத்தனைப்பேருமே திரும்பிப் பார்ப்பார்கள்.

சாக்ரடீஸ், இங்கர்சால், காரல் மார்க்ஸ், ஆப்ரகாம் லிங்கன், நைட்டிங்கேல் போன்ற பெயர்கள்  நாடுகளைக் கடந்து பிரபலமடைந்து உலகெங்கும் பலராலும் சூட்டிக்கொள்ளப்படுவதைப் போன்று  கக்கா நாட்டு மக்களின் பெயரை வேறுநாட்டவர் எவரும் சூட்டிக்கொள்ளாதிருந்த நிலை கி.பி.2013ல் திடுமென மாறியது. ஆசியாக்கண்டத்தின் இந்தியாவைச் சேர்ந்த நரேந்திர மோடி என்பவர் தன்னை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துக்கொண்டு உலகத்தையே ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். இதைக் கேள்விப்பட்ட கக்காநாட்டு மக்களோ நேரடியாக பிரதமரை தேர்ந்தெடுக்காத ஒரு நாட்டில் தன்னை பிரதமர் வேட்பாளர் என்று ஒருவர் அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அவர் நிச்சயமாக தங்களது வம்சாவளியைச் சேர்ந்தவராகத்தான் இருக்கமுடியும் என்றும் புலம்பெயர்ந்து இந்தியாவுக்குப் போய்விட்ட பின்னும்கூட தனது பூர்வீகத்தை மறக்காமல் இருப்பதால்தான் பிரதமர் வேட்பாளர் என்று தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்றும் எண்ணி புளகாங்கிதமடைந்தனர். தங்களது பெயரை கடல்கடந்தும் பிரபலமாக்கியவர் என்கிற அடிப்படையில் நரேந்திர மோடி இந்தியாவைவிடவும் கக்காநாட்டில் வெகுவாக பிரபலமடைந்துகொண்டிருந்தார்.

அடக்கம் செய்யும்போது திருப்பித்தருவதாக அடமானப்பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டு பிணத்தின் நெத்திக்காசை பிடுங்கிக்கொண்டுபோய் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிற மோசடியை பொருளாதாரச் சீர்திருத்தம் என்று ஆதரிப்பவர்தான் நரேந்திரமோடியும். ஒரேவாரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சவப்பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான தேவையை உருவாக்கி தொழில்வளர்ச்சிக்கும்கூட அனுசரணையானவர்தான் அவர் என்பதும்கூட கி.பி.2002ஆம் ஆண்டே நிரூபிக்கப்பட்ட விசயம்தான். அவர் நீராராடியா, டாடா போன்றவர்களுக்கு நெருக்கமாயும் அம்பானிகளுக்கு அணுக்கமாயும் இருப்பவர் என்கிற விசயமெல்லாம் அனுமார் போல நெஞ்சைப் பிளந்துக் காட்டாமலே ஊரறிந்த விசயம்தான். அகமதாபாத் ஜேட் புளு டிசைனர் குர்தாவில் ஆப்பிரிக்காவின் மோன்ட் பிளாங்க் பேனாவை சொருகிக்கொண்டு அமெரிக்காவின் மோவாடோ கடியாரமும் இத்தாலியின் புல்காரி குளிர்கண்ணாடியும் அணிந்து பன்னாட்டு ப்ராண்டுகளின் நுகர்வாளராக ஆடம்பரத்தில் திளைத்துக்கொண்டே சிந்தனையிலும் செயலிலும் தன்னையொரு சுதேசிவெறியராக காட்டிக்கொள்கிற வேடதாரி என்கிற விமர்சனத்திற்கு அவர் ஆளாகியிருந்தார்.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளி ராமருக்கு கோயில் கட்டுவது போன்ற விசயங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார் என்றும் அவர் மீது வலுவானதொரு குற்றச்சாட்டு பரவிக்கொண்டிருந்தது. நாட்டையே பின்னுக்குத் தள்ளுவதுதான் இந்தியாவில் வளர்ச்சி என சொல்லப்படுகிறது என்கிற உண்மை ஒருபுறமிருக்க, அப்பேர்ப்பட்ட வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளுகிறவனாக தன்னைப்பற்றிய சித்திரம் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகள் மனதில் படிவதை உடனடியாக தடுக்க வேண்டும் என்கிற பதற்றத்திற்கு ஆளான மோடி அவசரமாக சில முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. கோயிலை முன்வைத்து ஆட்சிக்கு வரமுடிந்தால் கோயிலை முன்வைப்பது, கோயிலை முன்வைத்தால் எடுபடாது என்று தெரிந்தால் கோயிலைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டதாக காட்டி ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பது என்கிற தந்திரத்தை அரசியலாகப் பயின்றவர் இந்த மோடி. எனவே வளர்ச்சிக்காகவே வாழ்கிறவராக தன்னைக் காட்டிக் கொள்கிற வேகத்தில் ‘‘கோயில்களைவிட கழிப்பறைகளைக் கட்டுவதற்கே நான் முன்னுரிமை அளிப்பேன்’’ என்று அதிரடியாக அறிவித்தார். 

கோயிலை விட கழிப்பறைகளே முக்கியம் என்று இதற்கு முன்பு இந்தியாவின் இலாகா உள்ள அமைச்சர்களில் ஒருவராகிய ஜெயராம் ரமேஷ் சொன்னபோது எகிறிகுதித்த மதவாதிகளெல்லாம் இப்போது மோடி சொன்னதைக் கேட்டு ஆரவாரம் செய்து ஆதரித்தார்கள். கோயில், கழிப்பறை  என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்தி மோடி எப்போதோ பேசியதற்கெல்லாம் இப்போது பதவுரையும் பொழிப்புரையும் எழுதினர் அவரது சீடக்கோடிகள். கையால் மலமள்ளுவதை கடவுளுக்கு ஆற்றும் பணி என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பினாத்திய மோடி இப்போது கோயிலைவிடவும் கழிப்பறையே முக்கியம் என்று சொல்லியிருப்பதை புரட்சிகர மாற்றம் என்று ஊடகங்கள் வர்ணித்தன. 13 ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாநிலத்தின்  முதல்வராக இருந்தும் அங்கு இன்னமும் முக்கால்வாசிப்பேருக்கு கழிப்பறைத்தேவையை நிறைவேற்றித் தராதவர் இந்த மோடி என்கிற உண்மையும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. சராசரியாக ஒரு வினாடிக்கு ஒரு கழிப்பறை என்கிற வீதத்தில் ஓராண்டு முழுவதும் கட்டிமுடித்தால்தான் 2015க்குள் அனைவருக்கும் கழிப்பறை என்று ஐ.நா.அறிவித்துள்ள புத்தாயிரமாவது ஆண்டின் இலக்கை இந்தியாவால் எட்டமுடியும் என்ற நிலையில் (http://www.downtoearth.org.in/content/toilet-second/Richard Mahapatra, 15.11.2011)  அதற்காக மோடியிடம் என்ன திட்டம் இருக்கிறது என்று போரடிக்கிற புள்ளி விவரங்களைக் காட்டி அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். உத்தரகாண்ட் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்களில் பத்தாயிரக்கணக்கான குஜராத்தியர்களை ஒற்றையாளாக காப்பாற்றிய மோடிக்கு இதெல்லாம் ஜூஜூபி மேட்டர் என்று அவரது சீடர்கள் அசால்டாக பதிலளித்தனர்.

மன்மோகனாமிக்ஸ் பயின்றவரும் சிக்கனத்தின் உதாரணமாய் விளங்குகிறவருமான திட்டக்குழுவின் உதவித்தலைவர் மான்டோக்சிங் அலுவாலியா 35 லட்சம் ரூபாயில் தனது கழிப்பறையை எளிமையாக புதுப்பித்துக்கொண்டிருக்கும் நிலையில் மோடியானவர் குடிமக்களுக்கு கட்டித்தரப் போவதாக சொல்லும் கழிப்பறைகளுக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு என்கிற கேள்வியை யாரும் எழுப்பவேயில்லை. அனைவருக்கும் கழிப்பறை கட்டித்தருவதற்காக ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிர்மல் பாரத் அபிக்யான் திட்டத்தை செயல்படுத்த குறைந்தபட்சம் 50ஆயிரம் கோடி ரூபாயாவது ஒதுக்கீடு செய்தாக வேண்டும் என்பதை கணக்கிட்ட சில தொழில் நிறுவனங்கள் கோயிலைவிட கழிப்பறை கட்டுவதற்கே முன்னுரிமை என்கிற மோடியின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் ஒருலட்சம் கோடியளவுக்காவது ஊழல் செய்வதற்கு வாய்ப்பில்லாத இந்த திட்டத்தில் ஈடுபடுவது தங்களது அந்தஸ்துக்கு இழுக்கானது என்று கருதிய முன்னணி தொழிற்குழுமங்கள் ஒதுங்கி நின்றதில் வியப்பேதும் இல்லை.

இக்கட்டான ஒரு கேள்வியைத் தாண்டிச்செல்வதற்காக கோயிலைவிட கழிப்பறைக்கே முன்னுரிமை என்று தான் சொன்னதை இப்படி ஆளாளுக்கு ஊதி பெரிதுபடுத்தியதைக் கண்டு பேதலித்துப் போன நரேந்திர மோடி நேரு, படேல், இந்தியா ஹவுஸ் என்று தப்புந்தவறுமாக எதையாச்சும் சொல்லி சர்ச்சைகளை கிளப்பிவிட்டு இந்த விசயத்தை மறக்கடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். ஆனால், கோயிலை விட கழிப்பறையே முக்கியம் என்று பிரதமர் வேட்பாளர் மோடி சொன்னதைக் கேட்ட கக்காநாட்டு மக்களும் அதன் ஆட்சியாளர்களுமாகிய பிரதமர் வேட்பாளர்கள் ‘நம்ம வம்சாவளியில வந்த புள்ளாண்டான் என்னமா யோசிக்கிறான் பாரு’ என்று வியந்தனர். கண்ட இடத்தில் பேண்டுவைக்கும் கக்காநாட்டு மரபணு மோடிக்குள் செயல்படுவதால்தான் கழிப்பறையின் முக்கியத்துவத்தை அவரால் உணர முடிந்திருக்கிறது என்று கருதிய கக்கா நாட்டு குடிமக்களாகிய பிரதமர் வேட்பாளர்கள், இந்தத் திட்டம் இந்தியாவைவிடவும் தங்கள்நாட்டுக்கே அவசரமாக தேவைப்படுவதாக கருதினர். நாலு செல்போனும் ஏழு சிம்கார்டும்  வைத்திருக்கிற குடும்பம்கூட பேழ்வதற்கு ஒரு கழிப்பறை இல்லாதிருக்கும் அவலத்தை உணரச்செய்த மோடிக்கு நன்றி சொன்னார்கள். ‘கோயிலுக்கு பதிலாக கழிப்பறை’ என்கிற மோடியின் முழக்கத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திய கக்காநாட்டு பிரதமர் வேட்பாளர்கள் தங்கள் நாட்டில் ஏற்கனவே இருக்கின்ற கோயில்கள் அனைத்தையும் கழிப்பறையாக்குவது என்கிற முடிவுக்கு வந்தனர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீட்டை உத்திரவாதப்படுத்தி அதில் கழிப்பறையை கட்டுவதைவிடவும் ஏற்கனவே இருக்கிற கோயில்களை கழிப்பறையாக மாற்றுவதுதான் எளிதானது - செலவும் குறைந்தது என்று கணக்கிட்ட ஆளுங்குடும்பம், இதைக்காட்டியே இன்னும் நாலைந்து தேர்தலை சந்தித்துவிட துணிந்தது.

கோயில்களை கழிப்பறையாக்கும் திட்டம் பற்றிய பேச்சு கிளம்பியதுமே, இது தங்களது மதத்தை இழிவுபடுத்தும் செயல், கோயிலை கழிப்பறையாக்கினால் கடவுள் எங்கே போவார்? கடவுள் நிந்தனை நாட்டையே தண்டித்துவிடும் என்பதான கூச்சல் கிளம்பியது. இந்தியாவிலிருக்கிற மோடியைவிட நீங்கள் பெரிய மதவாதியா என்று ஆளுங்கட்சி கேட்க, கோயிலுக்கு பதிலாக கழிப்பறை என்பதும் கோயிலையே கழிப்பறையாக மாற்றுவது என்பதும் ஒன்றல்ல என்று டிங்கராச்சாரியார், டிக்கி லூசுதேவ் போன்ற பன்னாட்டு மதவாதிகள் மறுக்க வாயுக் கோளாறுள்ளவனின் வயிறுபோல  கக்கா நாடு முழுவதும் கடாமுடாவென பெருஞ்சத்தம் எழும்பியது. ‘‘சாமிக்கெதுக்கு பூமி? வசிப்பிடம் இல்லாமல் உங்களது சாமி அவதிப்படுமென நீங்கள் கவலைப்படும் பட்சத்தில் மடத்துக்காக வளைத்துப்போட்டிருக்கும் பெரும்பரப்புக்கு கூட்டிப்போய் வைத்துக்கொள்ளுங்கள் என்று கடவுள் மறுப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கைக்கு கக்காநாட்டுக்கு சம்பந்தமேயில்லாத  சுசாமி, சோசாமி போன்ற ஆசாமிகள் கண்டனம் தெரிவித்தனர். 

‘‘ஆதியந்தமில்லாத கடவுளை, ஒரு மனிதராக கருதிக்கொண்டு, கடவுள் பிறந்த இடம் இது, பேண்ட இடம் அது என்று காட்டுவது அறிவீனம். அற்பமனிதர்கள் கட்டிய கோயில்தான் கடவுளின் வசிப்பிடம் என்று வாதிடுவது ஏழேழு லோகத்தையும் படைத்தக் கடவுளை அவமதிப்பதுமாகும். கடவுள் நினைப்பது எதுவோ அதுவே லோகத்தில் நடக்கிறது. கக்காநாட்டு கோயில்கள் கழிப்பறைகளாக மாறவேண்டுமென்பது கடவுளின் சித்தம். கடவுளின் சித்தம் நமது பாக்கியம்.

பிற்காலத்தில் இப்படியொரு மாற்றம் நடக்கும்போது தண்ணீர் தேவைப்படும் என்பதை முன்னுணர்ந்துதான்  நமது முன்னோர்கள் கோயிலுக்கு அருகில் குளத்தை வெட்டியிருக்கிறார்கள், குளம் வெட்ட முடியாத ஊரில் கோயிலை ஆற்றங்கரையில் கட்டியிருக்கிறார்கள். கழிப்பறை இல்லாத ஊரும் கழுவிக்கொள்ளாத ஆளும் சமூகத்திற்கு பெருங்கேடு என்பதை- கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம், ஆறில்லாத ஊர் அழகுக்கு பாழ் என்று சூசகமாக சொல்லிச் சென்ற அந்த தீர்க்கதரிசிகளை இவ்வேளையில் கக்கா நாடு நினைவுகூர்கிறது. ‘மோட்சவீடு பற்றி முழங்கும் மதங்கள் / மோட்சக் கழிப்பிடம் குறித்து மூச்சுவிடுவதேயில்லை / கடவுள் / சாத்தான் ஆசீர்வதிப்பில் / இப்பிறவியிலேயே எமக்கு கழிப்பிடம் கிடைக்க / தியான மண்டபங்களும் தேவாலயங்களும்/ அவ்வாறே மாறுவதாகுக’ என்று கி.பி.2003ல் ஒரு தமிழ்க்கவிஞன் கண்ட கனவை கக்கா நாட்டு மக்கள் இப்போது நிறைவேற்றுகிறார்கள்....’’ என்று பத்திரிகை விளம்பரத்தின் மூலம் தனது முடிவை நியாயப்படுத்திய கக்கா நாட்டு அரசாங்கம் இத்திட்டத்திற்கு பொருத்தமான பெயரை வைப்பதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கக்கா நாட்டின் மொழியியல் அறிஞர்கள், கலைஇலக்கியவாதிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள், தூய்மைப்பணியாளர்கள், தி.ம.க.மு.ச (திறந்தவெளி மலம் கழிப்போர் முன்னேற்றச் சங்கம்), வெ.ம.ஜ.க.க ( வெட்டவெளி மலஜலம் கழிப்போர் கழகம்) போன்ற சிவில் அமைப்புகள் பங்கேற்ற அக்கூட்டம் பல்வேறு பெயர்களையும் விவாதித்தது. கோயில், கழிப்பறை என்கிற இரண்டு சொற்களையும் வெட்டி ஒட்டி முன்பின்னாய் வைத்து ஏதேதோ சொல்லுருவாக்கம் செய்தும் எதுவும் திருப்தியளிக்காமல் கூட்டம் கலையும் தருவாயில் கோயில் + டாய்லெட் = கோய்லெட் என்று எழுத்தாளர் ஒருவர் சொன்ன யோசனை பெருத்த ஆரவாரத்துடன் ஏற்கப்பட்டது. Koilet என்று ஆங்கிலத்தில் எழுதுவதும்கூட எளிதாகவும் பொருள்தரக்கூடியதாகவும் இருந்தது. கோயில் போன்ற கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு பதிலாக கழிப்பறைக் கோப்பை இருப்பது போன்ற  வடிவில் கோய்லெட் திட்டத்திற்கான இலச்சினையும் பொருத்தமுற வடிவமைக்கப்பட்டது.

இதுவரை கோயில்களனைத்தையும் நிர்வகித்துவந்த அறநிலையத்துறை ‘கோயிலகற்று மற்றும் கழிப்பக மாற்றுத்துறை’ என்று திருத்தியமைக்கப்பட்டது. அந்தந்த கோயிலில் உறைந்திருக்கும் கடவுள் எதுவோ அதன் பெயரிலேயே கோய்லெட்டுகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் மதவாதிகள் சமாதானமடைந்தனர். அதன்படி முதற்கட்டமாக ‘‘அருள்மிகு ஸ்ரீ----------கோய்லெட்’’ என்று எல்லாக் கோயில்களின் பெயர்ப்பலகைகளும் மாற்றப்பட்டன. கோயில் வளாகத்திற்குள் தனித்தனியாக எழுந்தருளியிருந்த துணைக்கடவுள்களின் சந்நிதிகளுக்கும் இவ்விதி பொருந்தும். பெண்தெய்வங்களின் பெயரால் உள்ள கோயில்களை மட்டும் பெண்களுக்கான கோய்லெட்டுகளாக மாற்றினால் போதும் என்கிற முடிவை பெண்ணுரிமை இயக்கங்களின் எதிர்ப்பினால் கைவிட்ட அரசு, எல்லா கோய்லெட்டுகளிலும் ஆண்களுக்கு 47%, பெண்களுக்கு 47%,  எஞ்சிய 6% இடங்கள் சிறப்பு பிரிவினருக்கு என ஒதுக்கி உத்தரவிட்டது. பெண்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த கோயில்களும் கோய்லெட்டாக மாறுவதால் இந்த இடஒதுக்கீட்டுள் வருவதாகவும் அந்த உத்தரவு தெளிவுபடுத்தியது.

தேசிய அளவில் பிரசித்தி பெற்றிருந்த பெருங்கோயில்களுக்கு நாடு முழுவதுமிருந்து பெருங்கூட்டம் வருமென்பதால் அவற்றை அதிகப்படியான கழிப்பறைகளைக் கொண்ட கோய்லெட்டுகளாக மாற்றியமைக்கும் பொறுப்பு அந்தந்த தேவஸ்தான கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்பெஷல் தரிசனம், வி.ஐ.பி.தரிசனம் என்று முன்பிருந்ததைப் போன்ற சலுகைகளை கோய்லெட்டுக்கும் விரிவுபடுத்துவதால் கிடைக்கும் உபரி வருமானமும், மலத்தை திடக்கழிவு உரமாக்கி விற்பதன் மூலம் வரக்கூடிய தொகையும் இந்தக்கமிட்டிக்கே உரியது. கோயிலுக்குச் சொந்தமான குளங்களையே கோய்லெட்டுக்கான நீராதாரமாக பயன்படுத்திக் கொள்ளவும் குளமில்லாத கோய்லெட்டுகளுக்கு பெக்டெல் மாதிரியான பன்னாட்டு கம்பனிகளிடமிருந்து தண்ணீரை வாங்கிக்கொள்ளவும் வழிசெய்யும் வகையில் தேசிய தண்ணீர் கொள்கையில் தேவையான மாற்றங்களைச் செய்வதெனவும் அரசு தீர்மானித்திருந்தது.

அந்தந்த கோயிலின் தலைமை அர்ச்சகரே அங்கு உருவாகவிருக்கும் கோய்லெட்டின் தலைமை அதிகாரியாக - கோய்லெட்டராக நியமிக்கப்படுவார். கக்கா நாட்டின் பேருந்துநிலையங்களில் உள்ள கட்டணக் கழிப்பிடங்களில் ஒருமாத இலவசப் பயிற்சிக்குப் பிறகு பணியில் சேர்த்துக்கொள்ளப்படவிருக்கும் இவரது ஊதியவிகிதம் 17407- 330- 31024 கக்காடாலர். இதரபடிகள் தனி. டோக்கன் தருவது, பக்கெட்டுக்கு தண்ணீர் ஊற்றுவது, ‘ஆச்சா... வெளியே வா’ என்று துரிதப்படுத்தி அவ்வப்போது குரல் கொடுப்பது, அடைப்புகளை நீக்கி கோய்லெட் தடையின்றி செயல்படுவதை உத்தரவாதப்படுத்துவது என்று கோய்லெட் வளாகத்தின் அனைத்துப்பணிகளுக்கும் இவரே பொறுப்பு. லகுவாக மலங்கழித்தல், மலச்சிக்கல் சீராதல், வயிற்றோட்ட தடுப்பு, மூத்திரக்கடுப்பு நிவர்த்தனம் போன்றவற்றுக்காக மந்திரம் ஓதுதல், மந்தரித்துக்கொடுத்தல், சிறப்பு வழிபாடுகள் செய்தல் ஆகிய உபதொழில்களின் மூலம் இந்த அர்ச்சகர் பெறும் காணிக்கை/ தட்சணை பற்றிய கணக்குவழக்குகளை இதற்கு முன்பு போலவே இனியும் அரசுக்கு காட்டவேண்டியதில்லை.

அர்ச்சகரது சாதியைச் சார்ந்தவர்கள் கர்ப்பகிரகத்தில் அமைக்கப்படும் கழிப்பறையிலும் அவர்களுக்கு அடுத்தடுத்த நிலையிலுள்ள சாதியினர் ஏற்கனவே கோயிலில் எந்தெந்த எல்லைவரை வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனரோ அந்தந்த பகுதிக்குள் அமைக்கப்படும் கழிப்பறைகளையும் பயன்படுத்திக் கொள்ள உரிமைபெற்றவராவர். ஏற்கனவே கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சாதியினர் கோய்லெட் நுழைவுப்போராட்டங்களை நடத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காளாகி போலிஸ் கோர்ட் என்று அலைவதற்கு பதிலாக தங்களுக்கென்று தனியாக கோய்லெட்டுகளை கட்டிக்கொள்வதற்கு அரசு ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. கழிப்பறைக்கு முன் யாவரும் சமம் என்கிற உயரிய லட்சியத்தை உடனடியாய் நடைமுறைப்படுத்த முடியாத தனது இயலாமைக்கு வருத்தம் தெரிவித்த கக்கா அரசு, எங்கு பேண்டாலும் போய்ச்சேரும் இடம் ஒன்றுதான் என்கிற ஆன்மிகத் தெளிவுடைய தமது குடிமக்கள் அந்தந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விடுத்து அத்துமீறி வேறொன்றுக்கு ஆசைப்படமாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது. 

கோயிலுக்கு முன்பாக பூசனைப்பொருட்களை விற்றுவந்தவர்கள் இனி ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற நாற்ற அமுக்கிகளோடு பினாயில், ஆசிட், துடைப்பம், குச்சம் போன்றவற்றையும் சேர்த்து விற்று வருமானத்தை தக்கவைத்துக்கொள்ளலாம், மாற்றுத்தொழிலையும் தேர்ந்தெடுக்கலாம். கோயிலுக்கு வந்தவர் மனநிலையும் கோய்லெட்டுக்கு வருகிறவர் மனநிலையும் ஒன்றாக இருக்காது. கோய்லெட்டுக்குள் நுழையும் அவசரத்தில் வருகிற ஒருவர் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களை கவனிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. அவரது அவசரம் அவருக்கு. திரும்பும் போதாவது அவர் இயல்புக்கு திரும்பி கருணையை வெளிப்படுத்துவார் என்பதற்கும் எந்த உத்தரவாதமுமில்லை. எனவே இதுவரை கோயில் வாசலில் பிச்சை எடுத்துவந்தவர்கள் வேறு பொருத்தமான இடங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது என்று அறிவுறுத்திய கக்கா நாட்டு அரசு, இவர்கள் தங்களது நலன் கருதி காவல் நிலையம் உள்ளிட்ட அரசாங்க அலுவலக வாயில்களை தேர்ந்தெடுக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டிருந்தது.

கோய்லெட் திட்டத்திற்கென மேற்கண்ட நடைமுறை விதிகள் வகுக்கப்பட்ட பிறகு சின்னதும் பெரியதுமாக கக்கா நாடு முழுவதும் இருந்த கோயில்கள் கணக்கெடுக்கப்பட்டன. அந்தந்த கோயிலைச் சுற்றி வசிக்கும் மக்கள் தொகைக்கேற்ப அதில் ஆண், பெண், மாறிய பாலினத்தவர், உடல் மாறுபாடு கொண்டோர் என நால்வகை கழிப்பறைகளை அரசாங்கம் அமைக்க வேண்டியிருந்தது. இதற்காக தயாரிக்கப்பட்ட திட்ட முன்வரைவின்படி தொடக்க நிலைச் செலவுக்குத் தேவைப்பட்ட 58 பில்லியன் கக்கா டாலரை கொடுப்பதற்கு உலக கந்துவட்டி வங்கி தானாக முன்வந்திருந்தது. சவப்பெட்டி தயாரிப்பது, வாக்கரிசி வழங்குவது, சாம்பல் ஏற்றுமதி, கிட்னி வியாபாரம் போன்றவற்றுக்காக மட்டுமே இதுவரை கடன்கொடுத்து வந்த அந்த வங்கி முதன்முறையாக கழிப்பறை கட்டுவதற்கு கடன்வழங்க முன்வந்திருப்பதை உலகம் ஆச்சரியத்தடன் பார்த்தது. இவ்வளவு பெரும்தொகை புழங்கப்போவதால் கக்காநாடு  உலகின் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக வளரப்போகிறது என்று பிசினஸ் மந்த்ரா, தி நியூ எகானாமிஸ்ட், மார்க்கெட் குரு போன்ற பத்திரிகைகள் புகழராம் சூட்டின.

நாட்டுமக்களுக்கு கழிப்பறைகளை கட்டுவதைவிடவும் உலக கந்துவட்டி வங்கியிடம் நாட்டை அடமானம் வைப்பதில்தான் அரசு அதிகமும் ஆர்வம் காட்டி வருகிறது என்று இடதுசாரிகள் கடும்/ பலத்த ஆட்சேபம் தெரிவித்தனர். வெறுமனே ஆட்சேபம் என்று சொன்னால் அது சாதாரணமாக இருக்கும் என்பதால் அவர்களாகவே இப்படி ‘கடும்/ பலத்த’ போன்ற வார்த்தைகளைச் சேர்த்து அறிக்கைவிட்டாலும் அதை ஆட்சியாளர்கள் ஒருபோதும் பொருட்படுத்துவதேயில்லை. ஐந்துரூபாய் கடன் கொடுப்பதற்கே ஆயிரத்தெட்டு கன்டிசன் போடும் காலத்தில் 58 பில்லியன் கக்காடாலரை எந்த கண்டிஷனும் இல்லாமல் சும்மா தூக்கி கொடுத்துவிடுவார்களா? ஏதாச்சும் நொட்டை சொல்வதே இந்த இடதுசாரிகளுக்கு வேலையாப் போச்சு என்று கக்காநாட்டு பிரதமரான முன்னூற்றி பத்தாம் பிரதம வேட்பாளர் சலித்துக்கொண்டார். “திறந்தவெளியில் கழித்தவற்றை சுத்தப்படுத்தி வருகிற துப்புரவுத் தொழிலாளிகள் அனைவரையும் கோய்லெட் தொடங்கப்படும் நாளிலிருந்து பணிஓய்வு பெற்றவர்களாக கருதி ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். இவ்வளவுகாலமும் இப்படியொரு வேலையில் ஈடுபடுத்தியமைக்காக கக்கா நாட்டு மக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு அவர்களை கேட்டுக்கொள்வதோடு, அதற்குரிய தண்டனைத்தொகையை அவர்களது வாரீசுகளின் பெயரில் வைப்புநிதியாக வழங்கவும் அரசு உறுதியளிக்க வேண்டும்” என்கிற கோரிக்கை அவரை மேலும் எரிச்சல்படுத்தியது.

உலக கந்துவட்டி வங்கியின் நிதியுதவியோடு (கடன்தான்) கக்காநாட்டு கோயில்கள் அனைத்தும் கோய்லெட்டாக மாற்றப்பட்டுவிட்டதை முன்னிட்டு அதன் தொடக்கவிழா வெகு விமர்சையாக நடந்தேறியது. கடன் கொடுத்த வங்கியின் நிபந்தனைக்கேற்ப அரசின் திட்டம் பற்பல மாற்றங்களைப் பெற்று நடைமுறைக்கு வந்தது. இதன்படி கோய்லெட்டில் மட்டுமே மலஜலம் கழிக்க வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது. எக்காரணத்தை முன்னிட்டும் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பது தேசிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. இதுவரை தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்பு கேமராவுடன் டோல்கேட் போட்டு சுங்கம் வசூலித்த உலக கந்துவட்டி வங்கி இனி கோய்லெட்டின் நுழைவாயிலிலும் டோல்கேட் போட்டு சுங்கம் வசூலிக்கும் என்கிற அரசாங்க உத்தரவை எதிர்ப்பது சர்வதேச குற்றமாக அறிவிக்கப்பட்டது. கோய்லெட்டுக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்குரிய வருமானத்தை திரட்டிக்கொள்ள எல்லாவித குற்றங்களும் சட்டப்பூர்வமாக்கப்பட்டன.

சாலைகளுக்கும் கழிப்பறைகளுக்கும் எவ்வித உறுத்தலுமின்றி கட்டணம் செலுத்துவதற்கு தனது குடிமக்கள் பழகிவிட்டதையடுத்து அவர்களுக்கு மேம்பாலங்களுக்கடியில் படுக்கையறைகளை கட்டித்தருவதற்கான திட்டத்தை தொடங்கவுள்ளது கக்காநாட்டு அரசு. மேம்பாலம், படுக்கையறை, உலக கந்துவட்டி வங்கி, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய டோல்கேட்- ஆகியவற்றை உள்ளடக்கி கோய்லெட் என்பது மாதிரி பொருத்தமான பெயர் ஒன்றை யோசித்துச் சொல்லுங்கள். முடியாவிட்டால் மோடியிடம்கூட கேட்டுச்சொல்லுங்கள், கக்கா நாட்டு பிரதமர் வேட்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.


12.11.2013

நன்றி: உயிர் எழுத்து, டிசம்பர் 2013

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...