ஞாயிறு, டிசம்பர் 29

விளக்கம் தர அமைச்சர், வில்லங்கம் செய்வது யார்? - ஆதவன் தீட்சண்யா

ம்பிக்கையுடனும் பயமின்றியும் பொதுத்தேர்வுகளையும் போட்டித்தேர்வுகளையும் எழுதுவதற்கான ஊக்கத்தை மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வழங்குவதாக கூறிக்கொண்டு அவர்களுடன் இந்திய பிரதமர் நேரடியாக உரையாடும் நிகழ்வு ஒன்று 2018ஆம் ஆண்டு முதல் நடந்துவருகிறது.  ‘பரிக்‌ஷா பி சார்ச்சாஎன்கிற பெயரில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் நடத்தப்படும் இந்நிகழ்வில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பங்கெடுக்க தகுதிபெற்றவர்கள். இவர்களிலிருந்து பங்கேற்பாளர்களைத் தெரிவு செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை போட்டியொன்றை நடத்துகிறது. இதற்குரிய இணையதளத்தில் பதிவு செய்துகொள்கிறவர்கள் மட்டுமே இப்போட்டியில் பங்கெடுக்க முடியும்.

தரப்படும் படம் ஒன்றிற்கு 150 எழுத்துகளுக்குள் பொருத்தமான வாசகம் / தலைப்பை உருவாக்குவது, மோடியின் நூலான ‘எக்ஸாம் வாரியர்ஸ்உள்ளிட்டவற்றிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிப்பது, ‘நான் எவ்வாறு உந்துதல் பெற்று தேர்வுகளை எதிர்கொண்டேன்என்று 60 நொடிகளில் காணொலியாகவோ அல்லது 500 சொற்களுக்கு மிகாமல் எழுதியோ அனுப்புவது- என்கிற அடிப்படையில், இப்போட்டி கடந்த இரண்டாண்டுகளாக நடந்திருக்கிறது. 2019இல் உள்நாட்டிலும் அயலிலுமாக இருந்த சுமார் 13.5 கோடி மாணவர்களில் 1,02,173பேர் மட்டும் இப்போட்டியில் பங்கெடுத்துள்ளதை கவனித்தால் மாணவர்களிடையே இந்நிகழ்வுக்கு அப்படியொன்றும் வரவேற்பில்லை என்பதை அறியமுடியும். ஒப்பீட்டளவில் சிறுவீதமான இம்மாணவர்களிருந்தும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 2000 பேர் அரசின் செலவில் டெல்லி சென்று பங்கேற்று திரும்பியுள்ளனர்.  இந்த நிகழ்வை அரசு சார்புடைய தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பு செய்திருந்தபோதிலும் பெரிதாக யாரும் பொருட்படுத்தவில்லை. இருந்தபோதிலும் இந்நிகழ்வு மூன்றாம் முறையாக Pariksha Pe Charcha 2020 என்ற பெயரில் வரும் 2020 ஜனவரி 16 ஆம் தேதி டெல்லியில் நடக்கவிருக்கிறது.

‘‘நன்றியுணர்வு மகத்தானது, உன் விருப்பார்வங்களைப் பொறுத்ததே உன் எதிர்காலம், தேர்வுகளின் தரத்தை சோதித்தல், கடமைகளும் உரிமைகளும், (பாடநூலுக்கு) வெளியேயுமுள்ள நல்லம்சங்களை கைக்கொள்ளுதல்’’ என்பதாக பொருள்கொள்ளத்தக்க ஐந்து விசயங்களை மையப்படுத்தி பரிக்‌ஷா பி சார்ச்சா 2020 நடக்கவுள்ளது. https://innovate.mygov.in/ppc-2020/ என்ற இணையத்தின் வழியே முன்பதிவு செய்து போட்டியிட்டு தேர்வாகி வருபவர்களுடன் இவ்வாண்டும் பிரதமர் உரையாடப் போகிறார்.

இத்தனை ஆண்டுகாலமாக யாருடைய அறிவுரையும் இல்லாமல்தான் மாணவர்கள் தேர்வுகள் பலவற்றையும் எழுதிவந்திருக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஒரு கல்வியாளராகவோ, தேர்வுகள் பலவற்றை தைரியமாக எழுதி அதில் வெற்றிகண்டவராகவோ, குழந்தைகளின் உளவியலை அறிந்தவராகவோ ஒருபோதும் வெளிப்பட்டிராதவரான பிரதமர் இத்தகைய அறிவுரைக்கும் உரையாடலுக்கும் எந்தளவுக்கு பொருத்தமானவர் என்கிற கேள்வி எழுகிறது. ஒரு பிரதமர் எல்லா தகுதிகளையும் திறமைகளையும் பெற்றிருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஜனநாயகவழிப்பட்ட ஒரு நாட்டை ஆள்வதற்கு கல்வித்தகுதி ஒரு முன்னிபந்தனையுமல்ல. ஆனால் அவற்றையெல்லாம் பெற்றிருப்பது போன்று தோற்றம் காட்டுவது பிழையானது. அதிலும், அவரும் அவரது அமைச்சரவை சகாக்களில் சிலரும் எங்கு எப்போது என்ன படித்தனர் என்பது பற்றி முரண்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியாகி ஏளனத்திற்கு ஆளாகிவரும் நிலையில் அவரிடமிருந்து மாணவச்சமூகம் கற்றுக்கொள்வதற்கு என்ன இருக்கிறது? தங்களோடு உரையாடுகிறவர் பற்றி அவர்கள் என்னவிதமான சித்திரத்தை தமக்குள் உருவாக்கிக்கொண்டு அவர் சொல்வதை கேட்பார்கள்? ஆனால் இப்படியான கேள்வி எதையும் எழுப்பிக்கொள்ள வாய்ப்பற்ற நிலையிலுள்ள கல்வித்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி இந்நிகழ்வை அதிமுக்கியமானதாக ஜோடித்துக்காட்டும் வேலை நடக்கிறது.



மத்திய அரசு வெள்ளைத்தாளை அனுப்பிவைத்தால்கூட அதை நகலெடுத்து எல்லாத்துறையும் உற்று கவனிக்கும்படி உத்தரவிடும் விசுவாசத்தில் மூழ்கியுள்ள தமிழக ஆட்சியாளர்கள், டிசம்பர் 11, 16 ஆம் தேதிகளில் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தினை ஏற்று இந்த பரிக்‌ஷா பி சார்ச்சாவை இங்கு அமல்படுத்த களமிறங்கியுள்ளனர். இதன்பொருட்டு பள்ளிக்கல்வி இயக்குநரின் கையொப்பத்துடன் 27.12.19 அன்று வெளியாகியுள்ள ந.க.எண்.73708/எம்/இ1/2109 என்கிற சுற்றறிக்கை, கல்வித்துறையின் அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் 13.12.19, 20.12.19, 24.12.19, 26.12.19 ஆகிய நாட்களில் ஏற்கனவே அடுத்தடுத்து சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது. 2020 ஜனவரி 16ஆம் தேதி டெல்லியில் நடக்கும் இந்த நிகழ்வின் நேரலை ஒளிபரப்பை மாணவர்களை வரவழைத்து காண்பிக்கவேண்டும் என்றும் அதற்கான முன்தயாரிப்புச் செலவுகளுக்கான தொகையை சமாக்ரன் சிக்‌ஷா நிதியிலிருந்து எடுத்துக் கொள்ளுமாறும்  இந்தச் சுற்றறிக்கை தெளிவாக குறிப்பிடுகிறது.

ஜனவரி 16 அன்று மாணவர்களையும் ஆசிரியர்களையும் பள்ளிக்கு வருமாறு பணித்த இச்சுற்றறிக்கை தமிழர்களது தொன்மையான விழாவாகிய பொங்கல் விழாவை சீர்குலைக்கும் நோக்கமுடையது. பொங்கல் விடுமுறையில் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டு பயண ஏற்பாடுகளைச் செய்துமுடித்த வெளியூர்வாசிகள் இடையில் ஒருநாள் எப்படி பள்ளிக்குத் திரும்புவார்கள் என்கிற நடைமுறை அறிவு துளியுமற்று வெளியான இச்சுற்றறிக்கைக்கு பலத்த கண்டனம் கிளம்பியதும் ‘பள்ளிக்கு வரவேண்டிய கட்டாயமில்லை, விருப்பமுள்ளவர்கள் பள்ளிக்கு வரலாம்என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.  

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சர்ச்சைக்குரிய சுற்றறிக்கைகளும் ஆணைகளும் வெளியாவதும் எதிர்ப்பு கிளம்பியதும் அமைச்சர் விளக்கமளித்து அவற்றை திரும்பப் பெறுவதும் இங்கு தொடர்நிகழ்வாகி வருகிறது. விளக்கமளிப்பதும் திரும்பப் பெறுவதும் அமைச்சர் என்றால், அந்தச் சுற்றறிக்கைகளும் ஆணைகளும் யாருடைய தூண்டுதலின் பேரில் யார் வெளியிடுகிறார்கள்? இவ்விதமாக அமைச்சரை தொடர்ந்து சங்கடத்திற்குள்ளாக்குவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அல்லது அமைச்சரே மத்திய அரசுக்கு தன் விசுவாசத்தைக் காட்ட முயற்சித்து மக்கள் எதிர்ப்பால் பின்வாங்குகிறாரா என்பதான கேள்விகள் எழுகின்றன.

ஜனவரி 16 பிரதமருக்கும் பிற மாநிலத்தவருக்கும் எவ்வித தனித்துவமும் இல்லாததொரு நாளாக இருக்கலாம். ஆனால் தமிழர்களாகிய எமக்கு அது கொண்டாட்டத்திற்குரிய தொன்மையான பண்பாட்டுத் திருநாள். அன்றைய நாளின் சிறப்பையும் கொண்டாட்ட மனநிலையையும் குலைக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம்என்று சொல்லும் அரசியல் திராணி இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இருந்திருக்குமானால் இந்தக் குழப்படி நடந்திருக்காது. மொழி, இனம், பண்பாட்டுத்தனித்துவம் சார்ந்து மாறுபடும் மக்கள் சமூகங்களைக் கொண்ட இந்தியாவில் கல்விப்புலச் செயல்பாடுகள் அனைத்தும் இத்தகைய மாறுபடும் தன்மையை- பன்மைத்துவத்தை உள்வாங்கிக் கொள்வதாக அமைவது அவசியம். அதன்றி ஒற்றைமயக் கண்ணோட்டத்திலான எந்த உத்தரவும் இங்கு மக்களின் எதிர்ப்புக்குள்ளாகி திரும்பப் பெறப்பட்டே தீரும்.

நன்றி: தீக்கதிர் நாளிதழ், 29.12.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...