செவ்வாய், டிசம்பர் 10

அடுத்த கதை...? - ஆதவன் தீட்சண்யா



ங்களில் ஒருவரும் அறிந்திராத ஜக்லால் என்கிற இளந்தொழிலாளியை நானறிவேன். அறிவேன் என்றால் ஆதியோடந்தமாக அல்ல, முதலும் கடைசியுமாக ஒருமுறை பார்த்தது தான். அப்போதிருந்தே அவன் எனக்குள் தீராத தொந்தரவாகி எழுதத் தகுந்த கருப்பொருளாக உருப்பெற்று வந்திருக்கிறான். என்றாலும் அப்படி எழுதுவற்கு அவனைப் இன்னும் மேலதிகமாய் அறியவேண்டியிருந்தது. ஆனால் அது அப்படியொன்றும் எளிதெனத்  தெரியவில்லை.

அவனோடு ஒன்றாக வேலை பார்த்து, ஒரே ஷெட்டிலும் பின்பொரு லைன்வீட்டிலும் தங்கியிருந்த தொழிலாளர்கள் சிலர் இருப்பதாக தெரியவந்ததும் அவர்களிடம் விசாரிக்கப் போயிருந்தேன். பொதுவாக போலிஸோ, இதற்கு முன்பு வேலை பார்த்த கம்பனிக்காரர்களோ தான் ஏதாவது புகாரின் பேரில் இப்படி பையன்களை தேடிவருவார்களாம். அவர்கள் எல்லோரையும் நடுங்க வைத்த அச்சத்தின் கூட்டுக்குரல் போல ஒருவன் “ஏதும் பிரச்னையா சார்” என்றான். “அதெல்லாமில்லை, இந்த ஐ.டி.கார்டு வழியில கிடைச்சது. யாருதுன்னு விசாரித்து கொடுத்துட்டுப் போகலாம்னு... ”

“டைனமிக் மேன்பவர் சப்ளையர்ஸ்” என்கிற வேலையாள் ஒப்பந்த நிறுவனத்தின் முத்திரை பொறித்த அடையாள அட்டை அது. அதிலிருந்த ஆணின் புகைப்படத்தை உற்றுப்பார்த்த அவர்களில் சிலர் இப்படி ஒருவனை பார்த்ததாகவே நினைவில்லை என்றார்கள். ஆனால் அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஜக்லால் என்கிற பெயரில் ஒருவன் முன்பு எப்போதோ இங்கு தங்கியிருந்ததாகவும், ஜக்லால் என்று தன்னை யார் அழைத்தாலும் வேறு யாரையோ விளிப்பதாக மலங்கமலங்க வேடிக்கைப் பார்த்தபடி கடப்பான் என்றும் தாங்கள் கேள்விப்பட்டதை நினைவுகூர்ந்தார்கள். “ஏன், அவன் பேர் ஜக்லால்தானே” என்றேன். “இருக்காது” என்றான் ஒரு தொழிலாளி.

பொதுவாகவே எந்த ஒப்பந்ததாரனும் வேலையாட்களின் உண்மையான பெயரை அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் பதியவிடுவதில்லை. வேலை நிரந்தரமோ பணியிட அசம்பாவிதங்களில் பாதிப்புக்குள்ளாகிற போது நஷ்டஈடோ கேட்டு யாரும் சட்டச்சிக்கல் செய்தால் லகுவாக தப்பித்துக் கொள்ளவே இப்படி போலியான பெயர்களில் அவர்களைப் பதிவு செய்கிறார்கள். தொழிலாளர் நலத்துறையும் இந்த மோசடிக்கு உடந்தை. மீறி கேட்டால் “கவர்மென்ட் பாலிசியே அப்படிதான், மூடிக்கிட்டு வேலையப் பாருன்னு மிரட்டினால் நாங்கள் என்ன செய்யமுடியும்” என்று புலம்பினார்கள். பதிவேட்டின்படி தங்களுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதையே நினைவில் வைத்துக்கொள்ளாத பலரும் அங்கிருந்தனர். தவிரவும், இங்கு பெயருக்கென ஏதும் தேவையிருக்கிறதா என்று என்னையே கேட்டார்கள்.

ஜக்லால் பற்றி தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசமுயன்றது வீண்வேலைதான். அவர்களைப் பொறுத்தவரை, தங்களுக்கும் இந்த வேலையாட்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று உதட்டைப் பிதுக்கியதே பெரிய விசயமாக இருந்தது. வேலையாட்களை விநியோகிக்கிற ‘டைனமிக் மேன்பவர் சப்ளையர்ஸ்நிறுவனத்துக்கும் தங்களுக்கும்தான் ஒப்பந்தமேயொழிய எந்தவொரு வேலையாளுடனும் நிர்வாகம் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்வதில்லை என்கிற பதிலைப் பெறுவதற்கே நான் நாலைந்து தடவை அங்கு அலைய வேண்டியதாயிற்று. 

தொழிற்பேட்டைக்குச் செல்லும் பிரதானச்சாலையின் வலப்புறத்தில் வாடகைக்கட்டடம் ஒன்றில் இயங்கிவரும் ‘டைனமிக் மேன்பவர் சப்ளையர்ஸ்என்கிற நிறுவனமே ஒரு தொழிற்சாலையைப் போல பரந்துவிரிந்ததாக இருந்தது. ஆமாம், அதை ஒரு தொழிற்சாலை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அங்கு தொழிலாளர்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள். பின்பு எல்லா இயந்திரங்களையும் உயிர்ப்பித்து உற்பத்திகளையும் செய்து குவிப்பதற்காக தொழிற்பேட்டையின் பலபாகங்களுக்கும் பிரித்தனுப்பப்படுகிறார்கள்.

அவ்வாறு இம்மாதம் 13ம் தேதி ஜிக்மா பார்மா என்கிற தொழிற்சாலைக்கு பிரித்தனுப்பப்பட்டவர்களில் ஒருவனான இந்த ஜக்லால் பற்றி விசாரிப்பதற்காக நான் ‘டைனமிக் மேன்பவர் சப்ளையர்ஸ்அலுவலகத்திற்குப் போனபோது ஒரு வடஇந்திய கிராமத்திற்குள் நுழைந்துவிட்டது போலிருந்தது எனக்கு. திரும்பிய பக்கமெல்லாம் வடஇந்திய முகங்கள். ‘வட இந்தியர்என்பதைவிடவும் ‘தென்னிந்தியரல்லாதார்என்பதே பொருத்தமான பொதுப்பெயராக இருக்கமுடியும். அதனுள்ளே மேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்களும் கணிசமாய் இருந்தார்கள். தொழிற்பேட்டைக்கு அருகாமையிலிருந்த பெருநகரத்திற்கு ரயில்முலம் நள்ளிரவில் வந்துசேர்ந்த அவர்கள் பிளாட்பாரத்திலேயே படுத்திருந்து விட்டு அதிகாலையில் பஸ்பிடித்து இங்கு கூட்டமாக வந்து இறங்கியிருந்தார்கள். ஜக்லாலும் இப்படித்தான் வந்திறங்கியிருக்கக்கூடும்.

பசப்பலான வார்த்தைகளைக் கூறி கங்காணிகள் மூலம் வஞ்சகமாகத் திரட்டி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட காலனியாட்சிக்கால கொத்தடிமைக்கூலிகளின் மங்கிய சித்திரத்தை நினைவூட்டும் விதமாக இருந்த அவர்களில் அனேகருக்கும் பதினாறிலிருந்து இருபதுக்குள்தான் வயதிருக்கும். தலை காய்ந்த, மெலிந்த, கண்கள் ஒடுங்கிய, ஏதோவொரு புகையிலை வஸ்துவை வாயிலிட்டு குதப்பியபடி காணப்பட்ட அவர்கள் எல்லோர்மீதும் நீண்டபயணத்தின் அலுப்பும் சலிப்பும் ரயிலின் வீச்சமும் கவிந்திருந்தன. தங்களது பயணம் இன்னும் முடியவில்லை என்பது போல அவர்கள் ஒருவிதமான ஆயத்த நிலையிலேயே இருப்பதாக எனக்குத் தெரிந்தார்கள். எப்போது வேண்டுமாயினும் எங்காவது கிளம்பிப்போக வேண்டியிருக்கும். பஸ், ரயில் என ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறிமாறி இங்கு வந்து இப்போதைக்கு இறங்கியிருக்கிறார்கள். குந்தியிருந்த அவர்களில் ஜக்லாலின் குடும்பத்தினர் வேறெவராவதும்கூட இருக்கக்கூடும்.

சப்ளையர்ஸின் மேலாளன் அவ்வளவொன்றும் நல்முகமாக என்னை வரவேற்கவில்லை. சட்டென என்னை அடையாளம் கண்டுகொண்டுவிட்ட அவன் அதைக் காட்டிக்கொள்ளாமல் எதிரில் உட்காரவைத்துவிட்டு, ஆனால் என்னோடு பேசுவதை தவிர்ப்பதற்காகவோ தள்ளிப்போடவோ, புதிதாக வந்திருப்பவர்களுக்கான கட்டளைகளை அறிவுரைபோல பிறப்பிக்கத் தொடங்கினான். நான் வித்தியாசமாக கருதிவிடக்கூடாதென்றோ என்னவோ அவனது குரலில் செயற்கையானதொரு கனிவு சேர்ந்திருந்தது. அது அழுகிய பழமொன்றின் அழுகாத சிறுபாகம் போன்ற காட்சியாகத் தோன்றி குமட்டியது எனக்கு. இந்தியில் மிகவும் சரளமான அவனது பேச்சு ஓரக்கண்ணால் என்னைப் பார்க்கும் போதெல்லாம் தடுமாறியது. நான் கேட்கப்போகும் கேள்விகள் என்று அவனாக சிலவற்றை யூகித்துக்கொண்டு அவற்றுக்கான பதில்போல பேசிக்கொண்டிருந்தான். “பணம் இன்னிக்கு வரும் நாளைக்குப் போகும், உடம்பும் உசுரும்தான் முக்கியம். அது இருந்திட்டா எப்ப வேணும்னாலும் எவ்ளோ வேணும்னாலும் சம்பாதிச்சிக்கலாம். ஷேப்டிதான் பர்ஸ்ட். உங்க ஒவ்வொருத்தர் குடும்பத்துக்கும் பதில் சொல்வது என் பொறுப்பா இருக்கு, புரியுதா?”

ஆனால் அவன் சொல்லிக்கொண்டதைப்போல அப்படியொன்றும் பாதுகாப்பாக வேலை செய்வதற்கென அவர்கள் இங்கு கொண்டு வரப்படவில்லை என்பதற்கு ஜக்லால்தான் பொருத்தமான சாட்சி. அங்கச்சேதமும் உயிரிழப்பும் எப்போதும் நிகழலாம் என்கிற கெடுநிலையில் பணிசெய்யவே அவர்கள் அழைத்துவரப்படுகின்றனர். முறையான படிப்போ பயிற்சியோ இல்லாமல் கண்பார்த்தால் கை செய்யும் என்கிற நம்பிக்கையில் ஆபத்தான பல வேலைகளை அவர்கள் அன்றாடம் செய்து மடிந்தார்கள். 

ஜக்லால் என்றொருவன் தங்களது ஆள்பட்டியலில் இல்லவே இல்லை எனச் சாதித்தான் மேலாளன். பெரியபெரிய பதிவேடுகளைக் காட்டி தன் வாதத்தை நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். பிறகு கணினியில் தீவிரமாக எதையோ தேடுவதுபோல போக்குக் காட்டினான். சட்டைப்பையில் வைத்திருந்த துண்டுச்சீட்டுகளையெல்லாம் எடுத்து மேசையின் மீது பரப்பி ஒவ்வொன்றாக உற்றுப்பார்த்து கசக்கிப் போட்டான். சுபாவத்துக்கு ஒம்பாத பொறுமையுடன் அவனது சேட்டைகளைக் கவனித்துக்கொண்டிருந்த நான் ஒருகட்டத்தில் இடைமறித்து “என்னிடம் உள்ள ஆதாரத்தை வேண்டுமானால் தரட்டுமா” என்றேன். “வெளியே போய் பேசுவோமே” என்றான் அவன்.

“வெளியே என்றால் எங்கே?”
“எங்க ஓனரோட ஃபார்ம் அவுசுக்குப் போவமா?”
“ஓ... எங்கே... ”
....
“ரொம்ப தூரமாச்சே... ”
“சரி, இங்கே பார்டர்ல எங்காச்சும்...?”
“ம். ”

ஆளோட்டம் அருகிப் போயிருக்கும் அந்த இடத்தை நான்தான் தேர்வு செய்து அவனை அழைத்து வந்திருந்தேன். அவன் சொல்லும் இடத்திற்கு நம்பிப் போகலாமா என்கிற சஞ்சலத்தில் நானாக முந்திக்கொண்டு சொன்ன இந்த இடத்தை அவன் எவ்வித யோசனையுமின்றி உடனே ஒப்புக்கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஜக்லால் தொடர்பாகப் பேச நான் எங்கு கூப்பிட்டாலும் வந்துவிடச் சித்தமாக அவன் இருந்தான் போல. ஆனால் எனக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பதாக நான் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக சற்றே அசட்டையான தொனியில் இருந்தது அவனது பேச்சு.

உள்ளூரில் ஆள் தட்டுப்பாடு, வடமாநிலங்களில் இருந்து ஆட்களைத் திரட்டும் உத்திகள், அதிலுள்ள இடர்ப்பாடுகள், அழைத்து வருவதிலும் வேலைக்கு அமர்த்துவதிலும் பணியிடங்களில் சுமூகநிலையைப் பேணுவதிலும் கையாளும் முறைகள், எதிர்பாராத செலவினங்கள், முறைகேடுகளை மறைப்பதற்கு கொடுக்கப்படும் லஞ்சம் என்று அவன் பெரிய முறைப்பாட்டு பட்டியலை என்முன்னே விரித்துவைத்தான். அவன் சொன்ன இவ்வளவு விசயங்களில் எனக்கு தேவைப்பட்டதோ நான் எதிர்பார்த்ததோ ஒரு சொல்லுமில்லை. ஒருகட்டத்தில், கூடுதலாகப் பேசுகிறோமோ என்று அவனுக்கே தோன்றியிருக்கும்போல, சட்டென நிறுத்திக்கொண்டான். “அய்யோ நீங்க ஏதோ கேட்க வந்ததை மறந்துட்டு நான் என்னோட கோடுகொடுமையை சொல்லிக்கிட்டிருக்கேன்” என்று என் முகத்தைப் பார்த்தான். “சொல்லுங்க சார், என்னமோ லால்னு ஒரு பையனைப் பத்தி ஏதோ கேட்டீங்கில்ல... ”

“என்னமோ லாலா, ஜக்லால்...”

“சார், நீங்களே பாத்தீங்கில்ல, அன்னாடம் வண்டிவண்டியா வந்து இறங்குற இத்தனைப் பேர்ல எந்தப் பையனை ஞாபகம் வச்சுக்க முடியும்?”

“கொஞ்சம் வெளிப்படையா பேசுங்க, ஞாபகம் வச்சுக்காம அதுக்குள்ள மறந்துபோகும் அளவுக்கானவனா ஜக்லால்? ”

“என்னை வெளிப்படையா பேசச்சொல்லிட்டு நீங்கதான் சார் மூடுமந்திரமா பேசுறீங்க. எந்த

“ஜக்லால்... எந்த ஸ்பாட்ல வேலை பார்த்தவன்? ”
“ஜிக்மா பார்மா...”

“அந்தக் கம்பனிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார். ”
“தெரியும், அந்தக் கம்பனி பேர்ல நீங்க ஆள் அனுப்புறதில்ல. ஆனால் அதே காம்பவுண்டுக்குள்ள  மைக்ரோ பார்மசூட்டிகல்ஸ்னு வெறும் போர்டு தொங்குதே, அந்தக் கம்பனி பேருக்கு ஆட்களை அனுப்புறீங்க. ஆனால் வேலை இந்தக் கம்பனியில.”

அவன் பதிலேதும் பேசாமல் இருந்தான். பிறகு, “எந்தப் பேர்ல இன்டென்ட் கேட்குறாங்களோ அந்தக் கம்பனிக்கு நாங்க ஆட்களை அனுப்புறோம் சார். நீங்க சொல்ற இந்த உள்விசயமெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது சார்.”

“ஆனால் அன்னிக்கு ஆஸ்பத்ரில...?”

“சார், மெடிகல் கேஸ் ஏதாச்சும்னா கவனின்னு ஹெட்டாபீஸ்லருந்து தகவல் வரும். அப்படி
எதுக்காவது வந்திருப்பேன்...”

“மத்தபடி உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லேன்றீங்களா?”

ஆமாம் என்பதே அனாவசியம் என்பதுபோல அவன் வேறுபக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். பதற்றம் நிறைந்த அவனது முகத்தை நான் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவும் கூட அவன் அப்படி திரும்பி நின்றிருந்திருக்கலாம். நேருக்குநேர் முகத்தைப் பார்க்கத் தவிர்க்கும் இந்தத் தருணம்தான் சரியானது என்று தோன்றியது. “சரி, அந்தப் பையன் பற்றி இதுவரைக்கும் நான் எழுதியிருப்பதை படிச்சுப் பார்க்கிறீங்களா, உங்களுக்கு ஒருவேளை ஞாபகம் வரும்” என்று அவனிடம் தாள்களை நீட்டினேன். என்பக்கமாக திரும்பிய அவன் என் முகத்தைப் பார்க்காமலே கண்தாழ்த்தி அவற்றை வாங்கிக்கொண்டான்.

***

அதுவொரு ஞாயிற்றுக்கிழமை. தொழிற்பேட்டையின் வாரவிடுமுறை. ஆள்நடமாட்டம் மந்தமான  பிற்பகல்வேளை. பார்டருக்குப் போய் தண்ணியடித்துவிட்டு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி காயங்களுடன் தூக்கிவரப்பட்ட இருவரைத் தவிர வேறு நோயாளிகள் யாரும் இல்லை. அவர்களுக்கான சிகிச்சையை முடித்து வீட்டுக்கு கிளம்பும் வேளையில்தான் அந்த ஆம்புலன்ஸ் வந்தது. யாருடைய கவனத்தையும் ஈர்த்துவிடக்கூடாது என்கிற கவனத்தில் சைரன் சத்தமின்றி பூனையைப்போல வந்து நின்ற அந்த வண்டியிலிருந்து பாலிதீன் உறைகள் இரண்டு இறக்கப்பட்டன. ஒன்றில், மனித உடலின் எந்தப்பகுதி என்று சொல்லிவிட முடியாதபடி கொத்தி கூறு போட்டது போல சதைக்குவியல். இடுப்புவரை துண்டிக்கப்பட்ட இரண்டு கால்கள் மற்றொன்றில். இடுப்பு வரையிலும் இதில் இருந்ததனால் முந்தைய உறையில் இருந்தது கால்களைத் தவிர்த்த எஞ்சிய பகுதி என யூகிக்க முடிந்தது. மருத்துவரும் நானும் இன்னபிற பணியாளர்களும் இந்தக் கொடூரமான காட்சியைக் கண்டதனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தத்தளித்தோம். எப்படி ஆயிற்று என்பது போல மருத்துவர் உடன் வந்த ஆட்களையும் காவல் ஆய்வாளரையும் பார்த்தார்.

காவல் ஆய்வாளரை சரிக்கட்டி கூட்டிவந்திருப்பார்கள் போல, அவர் மருத்துவரை தனியே அழைத்தார் பேசி முடித்துக்கொள்ள. மருத்துவர்தான் என்னையும் உடனழைத்துப் போனார். போஸ்ட் மார்ட்டம், ரிப்போர்ட் அதுஇதுவென என் தயவு தேவை என்பதால் ஆய்வாளன் நான் உடனிருப்பதை ஒன்றும் சொல்லவில்லை. “ஜிக்மா பார்மாவுக்குள் ஆக்சிடென்ட். மருந்து மாத்திரை செய்ற ரா மெட்டீரியல் பெரியபெரிய கட்டியா வருமாம். அதை சீவி அரைச்சு மாவாக்குற மிஷினுக்குள்ள விழுந்திருக்கான். இன்டிமேஷன் வந்ததுமே ஸ்பாட்டுக்குப்  போயிட்டேன். வாரி வழிச்சு எடுத்துக்கிட்டு வர இவ்ளோ நேரமாயிடுச்சு.”

தான் சொன்னதை மருத்துவர் நம்பவில்லை என்று நினைத்தோ என்னவோ அந்தாள் மேற்கொண்டும் சொன்னார். விபத்து நடக்கும்போது உடனிருந்து பார்த்தது போன்ற தோரணையில் இருந்தது அவரின் விவரணை. “இந்தப் பையன் யார்னு பிளாண்ட்டுல யாருக்குமே தெரியல. வேறெங்கோ இருந்து ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் இங்க வந்திருக்கான்.  அதிலும் இன்னிக்கு சிக்கிக்கிட்ட மிஷின்ல ரெண்டு நாளாகத்தான் வேலை பார்த்திருக்கிறான். கலவை கலக்குற மிக்ஷர் மாதிரியான மிஷின், அதுக்குள்ள ஆறு பிளேடு. ரெண்டு பெரிய கொப்பரைக் கிண்ணங்கள ஒன்னுமேல இன்னொன்னை பொருத்தி மூடினா எப்படி இருக்கும்? அந்த மாதிரி இருக்கு. ஓடிக்கிட்டிருந்த மிஷின் திடீர்னு எதனாலயோ நின்னுப் போயிருக்கு. இந்த முட்டாப்பய சூபர்வசைர் யார்க்கிட்டயாவது சொல்லியிருந்தா தப்பிச்சிருப்பான். இவன் கவனமில்லாம தானே திறந்து கீழ் கிண்ணத்து மேல கவுந்து நல்லா அழுத்திக்கிட்டு உள்ளுக்குள்ள குனிஞ்சு எதையோ நோண்டியிருக்கான். உடம்பு எடை அழுத்தினதாலயா இல்ல வேற என்ன காரணமோ, தடைபட்டிருந்த மிஷின் சுத்த ஆரம்பிச்சிருக்கு. பிடிமானமில்லாம படார்னு அடிச்சு மூடியிருக்கு மேல் கிண்ணம். அந்த வேகத்துல உடம்பு முழுக்க துண்டாகி உள்ளுக்குள்ள சிக்கிருச்சு. கால்பகுதி மட்டும் துண்டாகி வெளிய விழுந்திருக்கு. வித்தியாசமான சத்தம் கேட்டு மத்த ஆளுங்க ஓடிவந்து மிஷினை நிறுத்துறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிப் போச்சு. அவ்வளவு பெரிய மருந்துக்கட்டியவே தூள்தூளா சீவிக் கொட்டுற பிளேடுக்கு மனுச உடம்பு சிக்கினால் என்னத்துக்காகும் டாக்டர்? எல்லாம் விதி...”

“இதில் அவன் விதின்னு என்ன இருக்கு? மற்ற எல்லாரும் செய்த விதிமீறல்கள்தான் அவனை கொன்னிருக்கு”. மருத்துவர் இப்படி சொல்வாரென எதிர்பார்க்காத ஆய்வாளர் சற்றே தடுமாறிப் போனார். “நமக்கென்ன டாக்டர், பி.எம். முடிச்சமா பாடியை கொடுத்தமான்னு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான். மற்றதையெல்லாம் நாம் பேசி என்ன ஆகப் போவுது?”என்றார் சுதாரிப்புடன்.

“குடும்பத்துக்கு தகவல் போயிருக்கா?

“அவனோட அண்ணன் வந்திருக்கார். போஸ்ட்மார்ட்டம் முடிச்சுக் கொடுத்தா ஊருக்கு கொண்டு போயிருவார்.”

“இன்னிக்கு சண்டே. இந்நேரத்துக்கு மேல் பி.எம். செய்ய முடியாதுனு உங்களுக்குத் தெரியாதா? அதுவுமில்லாம ஆள் வேணுமில்ல? காலையில முதல் கேஸா எடுத்துக்குவம்...”

“பி.எம். செய்ய அதுல என்ன இருக்கு டாக்டர்? அதான் ஏற்கனெவே கொத்துக்கறியாட்டம் கூறு போட்டு வகுந்துதானே இருக்கு? ”

“அதுக்காக நீங்க சொன்ன கதையை அப்படியே பி.எம். ரிப்போர்ட்டா எழுதி கொடுக்கவா?”

சற்றைக்கெல்லாம் யார் யாரிடமிருந்தெல்லாமோ மருத்துவருக்கு போன். வழக்கத்திற்கு மாறான நேரத்தில் போஸ்ட்மார்ட்டம் முடிந்தது.

இறந்துபோனவனின் அண்ணன் என்று கையெழுத்திட்டு சடலத்தை வாங்கிக்கொண்டவன் உண்மையில் அண்ணன் இல்லை என்கிற சந்தேகம் என்னைப் போலவே மருத்துவருக்கும் இருந்தது. அடுத்தவாரத்தில் ஒருவேலையாக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நான் சென்றிருந்தபோது, வலதுகை பெருவிரல் துண்டான ஒரு இளம் தொழிலாளியின் சித்தப்பனாக அங்கு அவனை அழைத்து வந்திருந்தான். என்ன ஜோடனை இது என்று நான் உள்ளுக்குள் பொறுமிக்கொண்டிருக்கும் போதே அங்கிருந்த பணியாள், “இவனுக்கு இதே வேலை... இத்தனை பசங்கள இப்படி மொண்டி மூக்கரையா மூளிக்கோலம் பண்ணி தொரத்திவிடுற பாவம் இவனை சும்மா உடாது சார். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது” என்று சபித்தார். அந்த பணியாள் மூலமாகத்தான் இவன், டைனமிக் மேன்பவர் சப்ளையர்ஸ் மேலாளன் என்பது எனக்கு தெரியவந்தது.

***

அவனுக்கு இப்போது நான் யார் என்பது தெரிந்திருந்தது. இனி மறைக்கமுடியாது என்பதான தொனியில், “சார் நீங்க எழுதியிருக்கிறதெல்லாம் உண்மைதான். இப்ப உங்களுக்கு என்ன வேணும்? ”

“அந்த பாடிய என்ன செஞ்சீங்க?”

“இங்கயே எரிச்சிட்டோம்.”
“அந்தப் பையன் குடும்பத்துக்கு தகவல் தந்தீங்களா? ”

“இல்லை. அவன் குடும்பம் பீகார்ல இருக்கு. பீகார்லயும் நேபாள் பார்டர்ல ஜோக்பானிங்கிற ஊருக்குப் பக்கத்தில் என்னமோ ஒரு வில்லேஜ். நேரடியா ரயில்கூட கிடையாதாம் சார்,  பெங்களூரு ஏஜன்ட்கிட்ட கேட்டோம். உடனே தகவல் கொடுத்தால் கூட வந்து சேர நாலுநாள் ஆகுமாம். அப்படியே தகவல் கொடுத்து பெத்தவங்க வந்தால் எதை அவங்கக்கிட்ட காட்டுறது? என்னன்னு அந்த சதைக்கூழை ஒப்படைக்கிறது? ”

“அதுக்காக தகவல்கூட தரமாட்டீங்களா... பிள்ளைய காணலன்னு அவங்க தேடி வரமாட்டாங்களா?”

“மாட்டாங்க சார். சம்பள வாரத்துல பணம் வர்றதை வச்சு பையன் எங்கயோ இருக்கான்றது அவங்க நம்பிக்கை.”

“இப்ப அவன் குடும்பத்துக்கு பணம் நின்னிருச்சில்லையா?”

“அதுக்காக செத்துப் போயிருப்பான்னு நினைச்சுக்குவாங்களா சார்? சம்பளம் வந்திருக்காது இல்லன்னா அவன் செலவுக்கே போதாத சம்பாத்தியமா இருக்கும்னு சமாதானம் ஆயிடுவாங்க.  இங்க இருக்குற அவங்க கூட்டத்துக்குள்ளயே கல்யாணம் முடிக்கிற பசங்கள்ல பலரும் குடும்பச்செலவை சமாளிக்க முடியாம ஊருக்குப் பணம் அனுப்புறதை நிறுத்திடுவானுங்க. வீட்டாள்களும் சிரமத்தைப் புரிஞ்சிக்கிட்டு பாவம் குடும்பஸ்தனாயிட்டான், அவன் பாடே திண்டாட்டம்னு விட்டுருவாங்க.”

“நீங்க சொல்ற லாஜிக் சரி போல தெரியுது. ஆனா வருசக்கணக்கா பிள்ளை ஊருக்கு திரும்பலேன்னா தேடி வரமாட்டாங்களா?”

“எங்கேன்னு தேடுவாங்க? ஏஜன்டுங்க கேரளாவுல வேலைன்னு ஆள் சேர்ப்பாங்க. ஆனா கர்நாடகாவுக்கோ தமிழ்நாட்டுக்கோ தான் அனுப்பிவைப்பாங்க. உள்ளூர்லயும் அப்பப்ப இந்த மாதிரி இடம் மாத்திப் போடறதும் உண்டு. வேலை செய்யுமிடம் நிரந்தரம் இல்லேன்னா முகவரியும் நிரந்தரமா இருக்காதில்லையா? திரும்பி வந்தால் பிள்ளைன்னு தானே இத்தனாயிரம் மைலுக்கு அப்பால துணிஞ்சு அனுப்புறாங்க...”

“அதைத்தான் நானும் சொல்றேன். பிள்ளைய பத்திரமா திருப்பி அனுப்புவீங்கன்னு நம்பித்தானே இத்தனாயிரம் மைலுக்கு அப்பால அனுப்புறாங்க...”

“நீங்க என்ன சார், நாங்கென்னமோ அவனைக் கூட்டியாந்ததே கொல்றதுக்குத்தான்ற மாதிரி வாதாடுறீங்க... ”

“நான் அப்படிதான் நம்புறேன். பயிற்சி கிடையாது பாதுகாப்பு கிடையாது. ஆபத்தான வேலை மலிவான கூலி..”

“ஆமா சார், அந்தக் கூலிக்கும் அங்கே வழியில்லாம தான் இங்கே வர்றாங்க... ”
“அதுக்காக கொன்னு காணாப்பொணமா ஆக்கிருவீங்களோ... ”

“கூட்டியாந்த அத்தனை பேரையும் நாங்க கொன்னுட்ட மாதிரி எதுக்கு இப்படி டென்சனாகுறீங்க? ஒன்னு ரெண்டு இப்படி தவறுறது சகஜம்தான்... உங்க ஆஸ்பத்திரில வைத்தியம் பார்க்க வர்றவங்கள்ல சிலபேர் செத்துப்போறதில்லையா..”

***
ஒரு உயிரைக் காப்பாற்ற ஆனமட்டும் போராடிப் பார்த்தும் கைமீறிப் போகிற நோயாளியின் சாவும், உழைத்து வாழ்வதற்கு வந்த ஜக்பால் மாதிரியான இளைஞர்களை இவர்கள் அரைத்துக் கூழாக்குவதும் ஒன்றா? ஜக்லாலின் சாவுக்கு நீதி கேட்கும் வலுவான ஆதாரமொன்று என் கையில் சிக்கியிருப்பது அறியாமல் இவன் என்னவெல்லாம் பேசிவிட்டான்? துண்டாகி விழுந்து ரத்தத்தில் சொதசொதவென ஊறிக்கிடந்த ஜக்லாலின் இடுப்புக்குக்கீழான பகுதியிலிருந்த உடைகளைக் கத்தரித்து களையும் போது அவனது காற்சட்டைப் பையில் கிடந்த இந்த அடையாள அட்டை ஒன்று போதாதா இந்த குற்றத்தை அம்பலப்படுத்த? இது எப்படி என் கைக்கு வந்திருக்கும் என்று திடுக்கிட்டுப் போகும் அவனது முகத்தைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவேசத்துடன் இந்த அடையாள அட்டையை அவன் முன்னே தூக்கிப் போட்டேன். அவனானால் வெகு குத்தலான தொனியில் “இதை வச்சிக்கிட்டுதான் இவ்ளோ தூரம் வந்தீங்களா? அவனை ஆஸ்பத்ரிக்கு தூக்கி வர்றப்ப இந்தக் கார்டை அவன் பாக்கெட்டில் போட்டுவிட்டதே நான்தான்” என்றான்.

வசமாக மாட்டிக்கொண்டதால் அவன் இப்படி ஏதோ சொல்லி தப்பிக்கப் பார்க்கிறான் என்று தோன்றியது. அவனோ உங்க கதையை விட நிஜத்தில் தான் ட்விஸ்ட் அதிகம் கதாசிரியரே என்றபடி தன் தோள்பையிலிருந்து ஐந்தாறு அடையாள அட்டைகளை எடுத்து என் முன்னே போட்டான். எல்லாவற்றிலும் ஜக்லாலின் படம், ஆனால் ஒவ்வொன்றிலும் வேறுவேறு பெயர். இன்னொரு உறையிலிருந்து சில கார்டுகளை எடுத்து பரப்பினான். அவற்றில் வேறொருவர் படம், ஆனால் இதேபோல வெவ்வேறு பெயர்கள். குழம்பிப்போன எனது முகவோட்டத்தை ரசித்தபடி அவன் “எப்பவோ எங்கோ செத்துப்போன இவனுங்க படத்தை வச்சு தயாரிச்ச இந்த கார்டுகள இப்ப இப்படி சாகுறவங்களோட அடையாள அட்டையா காட்டினால் கதை முடிந்தது. நீங்கதான் உங்க கதையை முடிக்கமுடியாம ஜவ்வா இழுக்குறீங்க” என்றான் எகத்தாளமாக. என் திணறலைக் காட்டிக் கொள்ளாமல், “போலிசுக்கு போனால் என்னாகும் தெரியுமா” என்றேன். “இப்படி ஏதாச்சும் சிக்கல் வந்தால் பொருத்தமான வசனம் எழுதி கதையை முடிக்கிறதே அவங்கதான். போங்க சார் போய் ஆஸ்பத்ரி டூட்டிய பாருங்க இல்லேன்னா வேற ஏதாச்சும் கதை எழுதுங்க” என்று அவன் கிளம்பினான்.

செத்த பின்னும் அடையாள அட்டையாக இருந்து இவர்களுக்காக உழைக்கும் அந்த அனாமதேயங்களைப் பற்றி ஒரு கதையை எழுதும் யோசனையுடன் நான் அங்கேயே அமர்ந்திருக்கிறேன் வெகுநேரமாய்.

நன்றி: ஆனந்த விகடன், 2019 டிசம்பர் 11
ஓவியங்கள்: ஷியாம் சங்கர்


1 கருத்து:

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...