கொலைப்பழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொலைப்பழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 7

பாட்டாளி மர்டரர் கட்சி

இளவரசனின் மரணத்தைப்போலவே பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்ட விதமும் பல சந்தேகங்களை உள்ளடக்கியுள்ளது. எப்பேர்ப்பட்ட விண்ணாதிவிண்ணன் எத்தனைத் தடவை மறுக்கூராய்வு செய்து பார்த்தாலும் எப்படி சாவு நேர்ந்தது என்றுதான் சொல்ல முடியுமே தவிர யாரால் சாவு நேர்ந்தது என்று சொல்ல முடியாது. யாரால் எதற்காக எப்போது சாகடிக்கப்பட்டார் என்கிற உண்மைகளை அரசியல் விருப்புவெறுப்புக்கோ வேறுவகைச் சாய்மானங்களுக்கோ அழுத்தங்களுக்கோ பணிந்துபோகாத ஒரு புலனாய்வுக்குழுவினால் தான் வெளிக்கொண்டுவர முடியும். அப்படியொரு புலனாய்வுக்குழுவை தமிழ்ச்சினிமாவில் மட்டுமே காணமுடியும் என்பதால் நடப்புலகில் தேடி நியமிக்க முடியாது. ஆகவே சுமாராக தீய்க்கும் கொள்ளியால் சொறிந்து கொள்வதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை. ரயிலில் சுண்டல் விற்கிறவர்களிடம் தண்டல் வசூலிப்பதில் மட்டுமே தன் சாமர்த்தியத்தை காட்டிவருகிற ரயில்வே போலிசிடமிருந்த இளவரசன் மரண வழக்கை உள்ளூர் போலிசுக்கு மாற்றியுள்ள அரசு, அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக இருந்து புலனாய்வு செய்வார் என நேற்று அறிவித்துள்ளது. ஒருவேளை மத்திய புலனாய்வுத் துறைக்கு இவ்வழக்கு மாற்றப்படுமானால், Congress Bearue of Investigation என்கிற இகழ்மொழியிலிருந்துதப்பிக்க அதற்கொரு வாய்ப்புள்ளது.
***
வன்னியப்பெண்ணை காதலிக்கிறவர்களுக்கும்  கல்யாணம் முடிக்கிறவர்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று காடுவெட்டி குருவும் மரம் வெட்டி மருத்துவரும் அறிவித்ததன் செயலாக்கமாகவே இளவரசனின் மரணத்தை கருதவேண்டியுள்ளது. இளவரசனின் மரணம் (இன்ப?) அதிர்ச்சியளிப்பதாக கூறிக்கொண்ட குட்டி ராமதாஸ் கூடவே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கணக்காக இந்த மரணத்திற்கும் தங்கள் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று அறிவித்துக்கொண்டார். அவர் எத்தனை பாசாங்கான மொழியில் பசப்பினாலும் திவ்யாவின் தந்தை திரு.நாகராஜ் அவர்களின் மரணம் தொடங்கி இளவரசனின் மரணம் வரையான  அவ்வளவு அழிமானங்களுக்கும் இழப்புகளுக்கும் காரணமானவர்களின் காலடித்தடங்கள் தைலாபுரம் தோட்டத்திலேயே முடிவடைகின்றன என்கிற உண்மையை மறைத்துவிடமுடியாது.

இளவரசனுடனான திவ்யாவின் காதலை தனிநபர் முடிவாக விட்டுவிடாமல் தங்களது சாதியின் மானத்தோடும் மண்ணாங்கட்டி வீரத்தோடும் தொடர்புபடுத்தி பா.ம.க ஏற்றிய வெறிக்கு முதல் பலி திவ்யாவின் தந்தை நாகராஜன். நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் குடியிருப்புகளை கொள்ளையழிக்க பா.ம.க.வுக்கு தேவைப்பட்ட பிணமாக அவர் மாற்றப்பட்டார். இந்த வன்கொடுமை மற்றும் கொள்ளையழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்றும் ஈனத்தனத்தில் பா.ம.க. மட்டுமே ஈடுபட்டது. தலித்துகளுக்கு எதிராக அனைத்து பிற்போக்கு பழமைவாத வெறியர்களையும் அணிதிரட்டுவதில் ராமதாசும் அவரது கட்சியினரும் காட்டிய ஈடுபாடு வன்மம் மிக்கது. திவ்யா - இளவரசன் தம்பதியருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்ட போது, இவர்களுக்கு ஆபத்து யாரால் நேரக்கூடும் என்பதை ஊருலகம் அறிந்தே இருந்தது. 

திவ்யா - இளவரசன் தம்பதியரை பிரித்தே தீர்வது என்று 2012 நவம்பரிலிருந்து பா.ம.க. செயல்படுத்தி வந்த  ஓரம்சத்திட்டம் இளவரசனின் மரணத்தோடு முற்றுப்பெற்றுள்ளது. இளவரசன் பிணமாக்கப்பட்டுவிட்ட நிலையில் இனி திவ்யாவே துணிந்தாலும் திவ்யாவின் தாயாரே சேர்த்துவைக்க ஆசைப்பட்டாலும் அதனால் பயனொன்றும் இல்லை. அதாவது பா.ம.க. மற்றும் வன்னிய மானத்திற்கு இனி எந்த பங்கமும் வரப்போவதில்லை. எனவே இவ்வளவு காலமும் திவ்யாவையும் அவரது தாயாரையும் நிழல்போல பின்தொடர்ந்து கட்டுப்படுத்தி வைத்திருந்த பா.ம.க.வினரும் அக்கட்சியின் வழக்கறிஞர்களும் இப்போது அவர்களை விட்டு ஒதுங்குவதுபோல காட்டத் தொடங்கியுள்ளனர். அதனடிப்படையில்தான் இப்போது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

நண்பன் என்று சொல்லிக்கொண்டு இளவரசனின் இறுதிநாட்களில் பாரதிபிரபு என்பவன் உடனிருந்ததும், அவனது அலைபேசி அழைப்பின் பேரில் வெளியே சென்ற இளவரசன் பிறகு பிணமாக கண்டெடுக்கப்பட்டதும், இளவரசனை வரவழைத்த அந்த திடீர் நண்பன் அதற்குப்பிறகு ஏன் காணாமல் போனான் என்பதும், இளவரசனின் சடலம் கிடத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் அருகாமையில் திவ்யாவின் பெரியம்மாவுடைய வீடு இருப்பதும் தற்செயலானவையல்ல. இளவரசனின் பிணம் இருந்த நிலையை வைத்து அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான சாத்தியங்கள் மிகமிக நுண்ணிய அளவில்கூட இல்லை என்றான நிலையிலேயே அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாகியுள்ளது. எனில் அவரை ஒரு தொல்லையாகவும் எதிரியாகவும் கருதிய பா.ம.க. தலைவர்கள்தான் அவரது உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. ஆனால் நஷ்டஈட்டுக்கு ஆசைப்பட்டு தருமபுரியிலும் பாச்சாரப்பாளையத்திலும் மரக்காணத்திலும் தலித்துகள் தங்களது வீடுகளை தாங்களே கொளுத்திக்கொண்டார்கள்  என்று பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்ட அதே உத்தியில் இளவரசன் தன்னுயிரை தானே மாய்த்துக்கொண்டதாகச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

பா.மா.க தலைவர்கள் என்ன பசப்பினாலும் இளவரசனின் குடும்பத்தார் அவர்களையே குற்றம்சாட்டியுள்ளனர். ஊரார் கண்களும் அவர்களையே உற்றுநோக்குகின்றன. கடலில் மிதக்கிற பிணங்கள் எல்லாம் கப்பல் மோதி செத்தவர்களுடையது என்று சொல்வது எந்தளவிற்கு பொய்யோ அதேயளவு பொய்தான் ரயில்ரோட்டில் கிடக்கிற பிணங்கள் எல்லாம் ரயில் மோதி செத்தவர்களுடையது என்று சொல்வதும் என்பதை வெகுமக்கள் அறிந்தே வைத்துள்ளனர். எனவேதான் இளவரசன் பிணமாகக்கிடப்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் சடாரெனச் சொன்னார்கள்- இளவரசனை அடித்துக்கொன்று ரயில்ரோட்டில் கிடத்திவிட்டார்கள் என்று. இயல்பான தமது உள்ளுணர்விலிருந்தும் நடப்புலகத்தை அவதானிப்பதிலிருந்தும் எடுத்தயெடுப்பில் உண்மையைப் பேசிவிடுகிற வெகுமக்களுக்கு இது கொலையா தற்கொலையா என்கிற சந்தேகமோ குழப்பமோ எழவேயில்லை.


தன் சாவுக்கு யாரும் காரணமல்ல என்று இளவரசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக ஃபிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்தலையை தானே இப்படி வெட்டிக்கொண்டு ஒருவர் தற்கொலை செய்துகொள்வது சாத்தியமா? பாதி தலையை மட்டும் ரயில் சிதைக்குமா? ரயிலைவிட வலுவானதா இளவரசனின் உடல்?
 கொலைப்பழியிலிருந்து தப்பிக்கும் விசயத்தில் பா.ம.க.வினரின் எண்ணம் பொய்த்துப் போனாலும்  வன்னியப்பெண்ணை மணம் முடிக்கத் துணிகிற யாருக்கும் இளவரசனுக்கு நேர்ந்த கதிதான் நேரும் என்கிற அச்சத்தை பொதுஉளவியலுக்குள் பதியவைப்பதில் வெற்றிபெற்றுள்ளனர். இந்தவகையில் இளவரசனின் மரணத்தோடு தாங்கள் தொடர்புபடுத்தி பார்க்கப்படவேண்டும் என்று உண்மையிலேயே அவர்கள் விரும்புகின்றனர். ( முகப்புத்தகம் போன்றவற்றை கருகடித்து தீய்க்கும் இந்த ‘அக்னிப்புத்திரர்கள்’ இளவரசனின் மரணத்தை கொண்டாடித் தீர்ப்பதும்கூட இந்த விருப்பத்தின் ஒருபகுதிதான்).

இளவரசனை ‘காணாப்பிணமாக’ போக்கடிப்பதற்கான சாத்தியங்களை வேண்டுமென்றே நழுவவிட்டு முழுப்பிணமாக ரயில்ரோட்டில் கிடத்தியதற்கு காரணம், ரயில்ரோட்டில் கிடத்தப்பட்டிருந்த பிணத்தின் பிரதியை ஒவ்வொருவரது மனதிலும் கிடத்துவதுதான். உள்ளிருந்து வாழும் அந்தப்பிணத்தின் பிரதி சாதியை மறுத்து காதலிக்கத் துணிகிற எவரொருவரையும் எச்சரித்து தடுத்துவிடும் என்று பா.ம.க. தலைவர்களும் வன்னிய  வெறியர்களும் நம்புகின்றனர். ஆனால் வாழத்துணிந்த மக்கள் பிணங்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...