எஸ்.வி.ராஜதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.வி.ராஜதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 1

ஒரு வாழைப்பழத்தை இருமுறை சாப்பிட முடியாது - ஆதவன் தீட்சண்யா

எல்லாவற்றையும் பொருளாதாரம் தீர்மானிக்கிறது என்று ஒரு மேற்கோளைப் போல சொல்லிக் கடப்பதை விடுத்து அது எப்போதிருந்து எவ்வாறு ஏன் தீர்மானிப்பதாகியது என்று விளங்கச் செய்வதே தேவையாகிறது. மட்டுமல்ல, எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக சொல்லப்படும் இந்தப் பொருளாதாரத்தை தீர்மானிப்பது எது / எவை என விளக்குவதும் இங்கே தேவையாக இருக்கிறது. இந்த விளக்கங்கள் தேவைப்படும் யாவரையும் தன் 13 வயது மகளாக உருவகப்படுத்திக்கொண்டு அல்லது அவளை முன்னிருத்திக்கொண்டு யானிஸ் வருஃபாகிஸ் தனது தாய்மொழியான கிரேக்கத்தில் எழுதியவை ‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ என்றொரு புத்தகமாக 2013ஆம் ஆண்டு உருப்பெற்று வெளிவந்தது. பின், ஜேக்கப் மோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்நூலை தோழர் எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்திருக்கிறார். ஆங்கில நூலின் அதே நேர்த்தியுடன் படிக்கத் தகுந்த பாங்குடன் க்ரியா வெளியிட்டுள்ளது. ஊரடங்கு நமக்குள் உண்டாக்கியுள்ள மந்தத்தை உதறித் தள்ளுவதற்குத் தோதாக இந்நூலை இக்காலத்தில் க்ரியா வெளிக்கொணர்ந்தது கவனம் கொள்ளத்தக்கச் செயலே.  

பொருளாதாரப் பேராசிரியரும் அரசியல் செயற்பாட்டாளரும் சிலகாலம் கிரிஸ் நாட்டின் நிதியமைச்சராகவும் இருந்த வருஃபாகிஸ், ஒரு தோற்றத்தில் பார்த்தால் பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு இந்நூலில் பதிலளிப்பது போல தோன்றினாலும் உண்மையில் அவர் பொருளாதாரம் பற்றிய கேள்விகளையே பெரிதும் எழுப்புகிறார். இதற்காக அவர் பொருளியாலாளர் என்போருக்குள் மேட்டிமையாக புழங்கும் சங்கேத மொழியையோ குழுவுக்குறிகளையோ வரைபடங்களையோ புள்ளிவிவரங்களையோ காட்டவில்லை. தனக்கும் தன் மகளுக்கும் தெரிந்த விசயங்களிலிருந்து பொருளாதாரம் தொடர்பான இழையைப் பிரித்துக்காட்டி அதை விவாதத்திற்கு உட்படுத்துகிறார். தொல்கதைகள், தற்கால திரைப்படங்கள், இலக்கிய ஆக்கங்கள், வாழ்வியல் அனுபவங்கள், கடந்துவந்த காட்சிகள் மற்றும் செய்திகள் ஆகியவற்றினூடாக உற்சாகமானதொரு நேர்ப்பேச்சில் பங்கெடுக்கும் தொனியில் தொடங்கும் புத்தகம் அதேவேகத்தில் ஓடி டி.எஸ்.எலியட்டின் கவிதையோடு முடிகிறது.  

என்னது, பொருளாதாரப் புத்தகத்தில் கவிதையா? ஆம், உபரி, உற்பத்திக் கருவிகள், சந்தை, சரக்கு, நாணயம், கடன், வட்டி, வங்கிகளின் உருவாக்கம், மூலதனத் திரட்சி, தொழில்விருத்தி, இயந்திரங்களின் பெருக்கம் மற்றும் செய்திறன் ஆகியவை உருவான வரலாற்றை ஒரு புனைவைப் போல எழுதிச் செல்லும் வருஃபாகிஸ் இவ்விசயங்களுக்கு இசைவாக பண்டைய இலக்கியங்களிலிருந்தும் தொன்மங்களிலிருந்தும் திரைப்படங்களிலிருந்தும் எடுத்தாளும் கவிதைகள், கதைகள், மேற்கோள்கள், உதாரணங்கள் மிகுந்த சுவாரஸ்மானவை. 

அடிக்குறிப்புகள், ஆதாரக்குறிப்புகள், கல்விப்புலம் அல்லது அரசியல் சார்ந்த புத்தகங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் எதுவும் தரப்படாமல் நான் எழுதியுள்ள புத்தகம் இது ஒன்றுதான் என்று அவர் சொன்னாலும் - அவர் எடுத்தாளும் பல சொற்களையும், சம்பவங்களையும் நாம் விளங்கிக் கொள்வதற்கு எஸ்.வி.ஆர் தரும் அடிக்குறிப்புகளே உதவுகின்றன. உனது உலகத்தை முழுமையாக பார்க்கவேண்டுமென்றால் அதிலிருந்து தொலைவான இடமொன்றுக்கு போய் அங்கிருந்து பார் என்று மகளுக்கு பரிந்துரைக்கும் அணுகுமுறையைத் தான் இந்நூலை எழுதுவதற்கான அணுகுமுறையாக கைக்கொண்டுள்ளார்.

ஒய்கோஸ் (வீடு), நோமோய் (சட்டங்கள், விதிகள், கட்டுப்பாடுகள்) ஆகிய கிரேக்கச் சொற்களின் இணைவில் உருவான ஒய்கொனோமியா என்பதுதான் பிற்பாடு எகானமி என்றாகியதை நிறுவும் வருஃபாகிஸ், தொடக்கத்தில் பொருளாதாரம் என்பது கூட்டுக்குடும்ப வடிவிலான ஒரு இல்லத்தை நடத்திச் செல்வதற்கு அல்லது நிர்வகிப்பதற்கு உருவான சட்டங்களே என்றும் அது வரலாற்றுப் போக்கில் உலகத்தையே நிர்வகிப்பதற்கானதாக எவ்வாறு வளர்ச்சியுற்றது என்றும் காட்டுகிறார்.  

ஒன்பது நாட்களில் எழுதப்பட்ட இப்புத்தகம் பொருளாதாரத்தின் 12ஆயிரம் வருட வரலாற்றைப் பேசுகிறது. 80ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குரல் நரம்புகளைப் பயன்படுத்தி மனிதர்கள் பேசவும் ஒலியெழுப்பவும் தொடங்கியதையும், 12000 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மையைக் கண்டடைந்ததையும் மனிதகுலத்தின் பெரும் பாய்ச்சல்களாக வரையறுக்கும் வருஃபாகிஸ், பொருளாதாரத்தின் தோற்றுவாய் இவ்விரு பாய்ச்சல்களின் இணைவில் இருப்பதைக் காட்டுகிறார். உணவுச் சேகரிப்பு கட்டத்திலிருந்து உணவை உற்பத்திச் செய்யும் கட்டத்திற்கு மனிதர்கள் நகர்ந்த போதுதான் பொருளாதாரம் உருவாகிறது. திட்டமிட்ட வகையில் அல்லாது, சாகுபடி செய்யாவிடில் உணவின்றி செத்துப்போவோம் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மனிதக்கூட்டம் வேளாண்மைக்கு வந்து சேர்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியினால், நிலத்தில் விளைந்தவற்றில் அவர்கள் உண்பதற்கும் பயிர் விளைச்சலுக்கு முதலில் பயன்படுத்திய விதைகளுக்கு ஈடான விதைகளை அளந்தெடுத்துக் கொண்டதற்கும் போக ‘மீதி’ இருந்த உபரி என்பதே பொருளாதாரத்தின் அடிப்படை. எதிர்கால பயன்பாட்டுக்கான இந்த உபரியை பாதுகாத்து வைப்பதற்கு ஒவ்வொரு  விவசாயியும் தனித்தனியாக தானியக்களஞ்சியம் கட்டுவதிலுள்ள இடர்ப்பாடுகளை கணக்கில் கொண்டு பொதுவானதொரு தானியக்களஞ்சியம் கட்டப்பட்டு அதில் விவசாயிகள் தத்தமது உபரியை சேமித்துள்ளனர். இந்தப் பொதுக்களஞ்சியத்தில் ஒரு விவசாயி சேமிக்கும் தானியத்தின் அளவை கணக்கு வைப்பதற்கும், அதற்கான பற்றுச்சீட்டை விவசாயிக்கு வழங்குவதற்குமே முதலில் எழுத்துமுறை (மெஸபடோமியாவில்) உருவாகியிருக்கிறது என்பது அரிய தகவல்தான். 

உழைப்புடனும் உற்பத்தியுடனும் தொடர்புடைய எழுத்து இவ்விரண்டுக்கும் அப்பாற்பட்ட பகுதியினரின் கைக்கு எவ்வாறு போய்ச்சேர்ந்தது என்பதை தனித்து விவாதிக்கலாம். ஆனால், உற்பத்தி மற்றும் உபரியின் தேவையிலிருந்து எழுத்துமுறை உருவானதென்றால், உற்பத்தி செய்யும் கட்டத்திற்கு வந்து சேராத பழங்குடிகளுக்கோ எழுத்துமுறை தேவைப்படாததால் அவர்கள் இசையிலும் ஓவியம் தீட்டுவதிலும் கவனம் செலுத்தினர் என்கிற வருஃபாகிஸின் கூற்று, பாணர் விறலியர் மரபுக்கும் இன்ன பிற தொல்கலை வடிவங்களில் இயங்குவோருக்கும் பொருந்துகிறது. இதிலிருந்து நாம் இந்தியச் சூழலுக்குப் பொருந்தும் இன்னொரு முடிவுக்கு வந்து சேரமுடிகிறது. அதாவது, உழைப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டு ஓய்வுப்பொழுதை கொண்டிருப்பதால்தான் இங்கு சாதியடுக்கில் மேலே இருப்போர் கலை நாட்டம் கொண்டவர்களாகவும் அவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள். 

***

சமூகம் ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வுடன் இருக்கிறது என்று ஒரு சிறுமி எழுப்பும் கேள்விக்கு பொருளாதாரத்தின் வரலாறைத்தான் பதிலாக சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால் அவளுக்கு புரியும் விதமாக அதைச்சொல்வது அப்படியொன்றும் எளிதானதல்ல. எனினும் சொல்லாமல் நழுவ முடியாது. இளம் வயதினர் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் பொருளாதாரத்தை ஒருவரால் விளக்க முடியவில்லை என்றால், அவருக்குமே அது விளங்கவில்லை என்றுதான் பொருள் என்கிற கருத்துள்ளவராதலின் வருஃபாகிஸ் இந்தக் கேள்வியை மிகவும் பொருட்படுத்தி பதிலளிக்கிறார். உலக அளவில் நாடுகளுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், ஒவ்வொரு நாட்டிற்குள்ளேயும் சமூகக்குழுக்களிடையே நிலவுகிற ஏற்றுத்தாழ்வுகளையும் பட்டியலிடுவதற்கு பதிலாக, அவை எந்தெந்த வடிவங்களில் எவ்விதமாக உருவாகி நிலைநிறுத்தப்பட்டு தற்காலத்திலும் நீடிக்கின்றன என்பதை எளிய மொழியில் விவரிக்கிறார்.   

உபரி, சேமிப்பு, சேமிப்புக்கான பதிவேடு மற்றும் ரசீது என்று சொல்லத் தொடங்கும் வருஃபாகிஸ் பணத்தின் கதையை விவரிப்பது அலாதியானது. வயலில் உழைப்பைச் செலவிட்ட உழைப்பாளிகளுக்கு அறுவடையிலிருந்து கூலியாகத் தரவேண்டிய தானியத்தின் அளவு- அதாவது கொடுக்கப்பட வேண்டிய கடனின் அளவு- எண்ணாக குறிக்கப்பட்ட கிளிஞ்சல்கள்தான் பணத்தின் மூலவடிவம். அதாவது தொடக்கத்தில் பணம் - கிளிஞ்சல்- கொடுக்கல் வாங்கலுக்கு அல்லாமல் கொடுக்கப்பட வேண்டிய கடனைக் குறிப்பிடுவதற்காகவே பயன்பட்டுள்ளது. பணமும் கடனும் ஒன்றாக பிறந்திருந்தாலும் கடனின் கற்பித அடையாளமாகவே பணம் தனது பாத்திரத்தை இன்றளவும் வகிக்கிறது. மிக நவீனமானது என்று ஆரவாரமாக சொல்லப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை நிகழும் இக்காலத்திலும் கிளிஞ்சல் அல்லது உலோக நாணயம் புழக்கத்திற்கு வந்த தொடக்கக் காலத்திலும் பணத்தின் வகிபாகம் ஒன்றேதான். 

கடனுக்கு ஈடாக கொடுக்கப்படும் நாணயம், அதன் செல்லுபடித்தன்மைக்கு உத்தரவாதம் வழங்குவதற்கு அரசு, அரசின் உத்திரவாதத்தினை நம்புவதற்கான கருத்தியல் அடித்தளத்தை உருவாக்குவதற்கான மதம், ஆட்சியாளர்களை தெய்வத்தின் அவதாரங்களாக நம்ப வைப்பதற்கான முயற்சிகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து உருவாகிவந்த வரலாற்றினூடாக நாம் இப்போது ஒரு சந்தைச்சமுதாயத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். ஆம், சமூகத்தின் பண்டப் பரிமாற்றங்களுக்கு சந்தைகள் இருந்த நிலை மாறி ஒட்டுமொத்த சமுதாயமுமே சந்தையாக மாறிவிட்ட- எல்லாமே சரக்காக மதிப்பிடப்படுகிற முதலாளியச் சமூகத்திற்குள் இப்போது நாமிருக்கிறோம். இந்தச் சந்தைச்சமூகத்தில் உழைப்பும் ஒரு சரக்குதான் என்றாலும் அந்த உழைப்பிற்கு, மார்க்ஸ் கூறிய பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு ஆகியவற்றுடன் அனுபவ மதிப்பு என்கிற இன்னொரு பரிமாணத்தைச் சேர்க்கிறார் வருஃபாகிஸ். கூலியாகவோ வேறுவகை ஆதாயங்களாகவோ எதையும் பெறாமல் அன்பு, மரியாதை, பொதுநலப் பாங்கு ஆகியவற்றால் உந்தப்பட்டு செயலாற்றுவதனால் ஏற்படும் மகிழ்ச்சி, நிம்மதி, உற்சாகம் போன்றவறை இந்த அனுபவ மதிப்பாகச் சுட்டுகிறார். 

போர்க்கைதிகளின் மூகாம்களில் சிகரெட் கூட ஒரு நாணய அலகாக பரிவர்த்தனைக்குப்  பயன்படுத்தப்பட்டிருப்பதை படிக்கும் போது, இந்தியாவில் சில்லறை நாணயங்களுக்கு தட்டப்பாடு ஏற்பட்டபோது கடைக்காரர்கள் சில்லறைக்கு ஈடாக பாக்குப் பொட்டலம் அல்லது மிட்டாய்களை கொடுத்தது நினைவுக்கு வருகிறது. அதேபோல, ஐந்து ரூபாய்த்தாள் புழங்கமுடியாத அளவுக்கு நைந்துபோய் தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஒரு கடையில் கொடுக்கும் குறிப்பிட்ட  வடிவிலான பிளாஸ்டிக் வில்லைகளை மற்ற கடைக்காரர்கள் ஏற்றுக்கொள்ளும் வழக்கம் சில நகரங்களில் இருந்தது. நாணயங்கள் மீதான வங்கிகளின் கட்டுப்பாடுகளை தகர்த்து வங்கிகளின் அதிகார வரம்புக்குள் வராத நாணயங்களை புழக்கத்திற்கு கொண்டுவரும் இம்மாதிரியான தொடர்முயற்சிகளின் டிஜிடல் வடிவம்தான் ‘பிட்காய்ன்கள்’ என்று இந்நூலைப் படிக்கும்போது தோன்றுகிறது. 

ஒரு வாழைப்பழத்தை இருமுறை சாப்பிட முடியாது என்று வருஃபாகிஸ் கூறுவதன் பொருள், வலுத்தவர் முண்டியத்து ஓடிப்போய் வாழைப்பழத்தை விழுங்கிவிட வேண்டும் என்பதல்ல. எல்லாவற்றையும் ஜனநாயகப்படுத்து, பகிர்ந்தளி, இயந்திரங்களுக்கு அடிமையாகிவிடாமல் யாவற்றிலும் மனித அம்சத்தைச் சேர் என்பதாக விரிகிறது. பொருளாதாரம் ஒரு நாட்டின் இஞ்ஜின், கடன் அந்த இஞ்சினை இயக்குவதற்கான எரிபொருள் என்றால் உழைப்பு என்பது அந்த எரிபொருளை எரிப்பதற்கான  தீப்பொறி என்று வருஃபாகிஸ் பொருத்தமாகவே வருணிக்கிறார். அந்தத் தீப்பொறியானது, சந்தைச் சமூகத்திற்கு மாற்றாக ஒரு ஜனநாயகச் சமூகத்தை உருவாக்கும் தனது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்வதற்கு இந்நூல் பெரிதும் உதவக்கூடும் என்கிற கரிசனத்தாலேயே இதை தோழர் எஸ்.வி.ஆர். தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பார்ப்பனீயமும் கார்ப்பரேட்டியமும் பின்னிப்பிணைந்திருக்கும் பாசிசம் ப்ளஸ் என்கிற அபாயம் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தவும் செயலாற்றத் தூண்டவுமான விருப்பத்துடன் அவர் இந்நூலை நமக்குத் தந்துள்ளார்.  இனி நம் பொறுப்பு. 

 பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் 

- முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு

யானிஸ் வருஃபாகிஸ், தமிழில்: எஸ்.வி. ராஜதுரை

வெளியீடு: க்ரியா, விலை ரூ. 275



செம்மலர், 2020 செப்டம்பர் இதழ்


 

 

செவ்வாய், ஜனவரி 21

என் சமாதியில் நிற்கவும் அழவும் வேண்டாம் - மேரி எலிஸபெத் ஃப்ரைய்


என் சமாதியில் நிற்கவும் அழவும் வேண்டாம்
நான் அங்கு இல்லை,
 தூங்குவதும் இல்லை
நான் இருப்பது
 வீசுகின்ற ஆயிரம் காற்றுகளில்.

நான்
மிருதுவாக விழுகின்ற பனி
மென்மையான மழைப் பொழிவு
முதிர்ந்துகொண்டிருக்கும் தானியங்களின் வயல்
காலை நேர நிசப்தம்
வட்டமிட்டுப் பறக்கும் அழகிய பறவைகள்
 இரவு நேரத்தின் நட்சத்திர ஒளி
பூத்துக்குலுங்கும் மலர்கள்.

 நான் இருப்பது
நிசப்தமான அறையில்
 பாடுகின்ற பறவைகளில்
இனியவை ஒவ்வொன்றிலும்.
என் சமாதியில் நிற்கவோ அழவோ வேண்டாம்
நான் அங்கு இல்லை
 நான் இறப்பதில்லை.

தமிழில்: எஸ்.வி.ராஜதுரை



·  அமெரிக்கக் கவிஞர் மேரி எலிஸபத் ஃப்ரையின் ( Mary Elizabeth Frye -1905-2004)  இக்கவிதை,  தன் தாயை இழந்துவிட்டவரும் நாஜிகள் ஆட்சி செய்யும் ஜெர்மனிக்குத் திரும்பிச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டவருமான  ஒரு இளம் யூதப் பெண்ணுக்காக 1932இல் எழுதப்பட்டது. உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கானோரால் இக்கவிதை படிக்கப்பட்டு வருவதற்குக் காரணம் அவர்கள் தங்கள் துக்கங்களை இக்கவிதையின் மூலம் வெளிப்படுத்த முடிவதுதான். இக்கவிதையின் ஆங்கில மூலத்திற்கு: https://allpoetry.com/Mary-Frye

சனி, ஜனவரி 4

படிப்பறிவுள்ள பாட்டாளியின் கேள்விகள் - பெர்டோல்ட் ப்ரெஹ்ட்

ஏழு வாயில்களைக் கொண்ட தீப்ஸ் நகரைக் கட்டியது யார்?
புத்தகங்களில் நீங்கள் அரசர்களின் பெயர்களைப் படிப்பீர்கள்.
கட்டுவதற்குப் பாறாங்கற்களைச் சுமந்து வந்தார்களா அரசர்கள் ?

பாபிலோன் பலமுறை நிர்மூலமாக்கப்பட்டது, 
அதை மீண்டும் மீண்டும் நிர்மாணித்தவர்கள் யார்?

பொன்கதிர் வீசும் லிமா நகரத்தில் 
எவ்வித வீடுகளில் கட்டடத் தொழிலாளிகள் வாழ்ந்தனர்?
சீனப் பெருஞ்சுவர் 
கட்டி முடிக்கப்பட்ட மாலையில்
கொத்தனார்கள் சென்றது எங்கே?

மாபெரும் ரோம் நகரில் எங்கெங்கும் வெற்றி வளைவுகள்
அவற்றை எழுப்பியவர்கள் யார்?

எவரை வென்றனர் சீசர்கள்?

புகழ்ந்து பாடப்படும்  பைஸாண்டியத்தில் 
குடிமக்கள் மாடமாளிகைகளிலா வசித்தனர்?

இதிகாசப் புகழ்பெற்ற அட்லாண்டிஸிலும்கூட 
அதைக் கடல்கொண்ட இரவில் 
நீரில் மூழ்கியோர் கூக்குரல் இடவில்லையா 
தங்கள் அடிமைகளின் உதவியை நாடி?

இளம் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்றான்
அவன் தனியாகவா இருந்தான்?

சீசர் பிரெஞ்சுக்கர்களைத் தோற்கடித்தான்
அவனுடன் ஒரு சமையல்காரன் கூடவா இருக்கவில்லை?

ஸ்பெயின் மன்னன் பிலிப்
தனது  போர்க்கப்பல்கள் மூழ்கும்போது அழுதான்
அழுதது அவன் மட்டுந்தானா?

இரண்டாம் பிரெடெரிக் ஏழாண்டுப் போரில் வென்றான்.
அவனைத் தவிர வேறு யார் வென்றார்கள்?

ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வெற்றி
வெற்றிவிழா உணவைச் சமைத்தது யார்?

ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 
ஒரு மாமனிதன்
அவனது செலவை ஏற்றவர் யார்?

எத்தனையோ தகவல்கள்
எத்தனையோ கேள்விகள்.

தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

வெள்ளி, ஜனவரி 3

கேள்வித்தாள் - வெண்டெல் பெர்ரி


1. தடையற்ற சந்தை,  உலக வாணிபம் 
ஆகியவற்றின் வெற்றிக்கு
எவ்வளவு நஞ்சை
உண்ண விரும்புகிறீர்கள்?
தயைகூர்ந்து உங்களுக்கு விருப்பமான
நஞ்சுகளின் பெயர்களைச் சொல்லுங்கள்.

2. நன்மையின் பொருட்டு எவ்வளவு தீமைகளைச்
செய்ய விரும்புகிறீர்கள்?
உங்களுக்கு  விருப்பமான தீமைகள், வெறுப்புச் செயல்கள்
ஆகியவற்றின் பெயர்களைப்
பின்வரும் காலி இடங்களில் நிரப்புங்கள்.

3. பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும்
என்ன தியாகங்களைச் செய்ய
நீங்கள் தயாராக உள்ளீர்கள்?
நீங்கள் மிகுந்த விருப்பதோடு அழிக்கக்கூடிய
நினைவுச்சின்னங்கள், வழிபாட்டிடங்கள்,
கலைப்படைப்புகள்
ஆகியவற்றைப் பட்டியலிடுங்கள்.

4. நாட்டுப்பற்று, கொடி ஆகியவற்றின் பெயரால்
நமது நேசத்துக்குரிய நாட்டில்
நீங்கள் அசுத்தப்படுத்த விரும்பும் பகுதிகள் எவ்வளவு?
விரைவாக இல்லாமல் செய்ய நீங்கள் விரும்பும்
மலைகள், ஆறுகள், நகரங்கள், பண்ணைகள்
ஆகியவற்றின் பட்டியலைக்
கீழே உள்ள இடத்தில் குறிப்பிடுங்கள்.

5. ஒரு குழந்தையைக் கொல்வதற்காக
நீங்கள் வைத்திருக்கும் கருத்துகள், இலட்சியங்கள்
அல்லது நம்பிக்கைகள், எரிபொருள் மூலவளங்கள்,
பாதுகாப்பு வகைகள் ஆகியவற்றைச்
சுருக்கமாகச் சொல்லுங்கள்.
நீங்கள் கொல்ல விரும்பும் குழந்தைகளின் பெயர்களைத்
தயைகூர்ந்து சொல்லுங்கள்.


· வெண்டெல் பெர்ரி ( Wendell Berry) தற்கால அமெரிக்கக் கவிஞர்களிலொருவர். போர் எதிர்ப்பாளர். வியதநாமில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து அமைதிவழியில் போராடியவர்களிலொருவர். 2001 செப்டம்ப11 இல் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ‘உலக பயங்கரவாதத்தை ஒடுக்குதல்’ என்ற பெயரால் நடத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டனம் செய்தவர். மனித உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வரும் அவருக்கு இலக்கியத்துக்கான ஏராளமான விருதுகள் தரப்பட்டுள்ளன.

தமிழில்: எஸ்.வி.ராஜதுரை

புதன், ஜனவரி 1

என்வில்லும் அம்பும் - மார்ஷல் ஹெம்ப்ரோம்


இந்த நிலம்
குளம்
பண்ணை
நான் கட்டிய வீடு
எல்லாம் உண்மையில்
என்னுடையவை அல்ல என்று
நீ கூச்சலிடுகிறாய்
இவையனைத்தையும்
உடனடியாகக் கைவிட்டு
அறியாத இடமொன்றுக்கு
நான் போய்விட வேண்டுமென்று
நீ கோபத்துடன் கட்டளையிடுகிறாய்
கொடிகளுக்கும் மரங்களுக்கும்
இராச்சியமாக இருந்த
யாரும் வசிக்காத
அடர்ந்த காடாக இருந்தது
இந்த இடம்
உடலுழைப்பைக் கொண்டு
காடு திருத்தி
வாழ்வதற்கான ஒரு வீட்டைக் கட்டினேன்
மகிழ்ச்சியான ஓர் இல்லத்தை.
இந்த நிலமும்
குளமும் பண்ணையும் வீடும்
என்னுடையவை அல்ல என்று
நீ இப்போது கூறுவேயானால்
எனது வில்லையும் அம்பையும் எடுப்பதைத் தவிர
எனக்கு வேறு வழியில்லை.

தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை

செவ்வாய், மே 23

நான் விரும்புவது… யெவ்கெனி யெவ்டுஷெங்கோ

 யெவ்கெனி யெவ்டுஷெங்கோ (10.07.1933 -01.04.2017) அவர்களின் இக்கவிதை "உங்கள் நூலகம்" இதழில் வெளியாகியுள்ளது. தமிழாக்கமும் விளக்கக்குறிப்பும்: தோழர் எஸ்.வி.ராஜதுரை.

ஒவ்வொரு நாட்டிலும் பிறக்கவும்
அயல்நாட்டுத்துறை அலுவலகங்கள் அனைத்தையும் பீதியில் ஆழ்த்துவதற்கு அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டைப் பெறவும் விரும்புகிறேன் ஒவ்வொரு பெருங்கடலிலும் உள்ள ஒவ்வொரு மீனாகவும் தெருவோரப் பாதைகள் அனைத்திலும் திரியும் நாயாகவும் இருக்க விரும்புகிறேன் எந்த விக்கிரங்களுக்கும் முன்னால் தலைவணங்கவோ ஆர்த்தடாக்ஸ் திருச்சபையால் ஈர்க்கப்பட்ட ஹிப்பியாக இருக்கவோ எனக்கு விருப்பமில்லை ஆனால், பய்கால் ஏரியின் ஆழத்தில் குதித்து தண்ணீரிலிருந்து வேறெங்கேனும் மேலெழும்பி மூச்சுவிட விருப்பம் அந்த இடம் ஏன் மிஸிஸிப்பியாக இருக்கக்கூடாது? எனது நேசத்துக்குரிய பேரண்டத்தில் தன்னந்தனியான காட்டுச் செடியாக இருக்க விருப்பம், ஆனால் கண்ணாடியில் தனது முகத்தையே முத்தமிடும் நுண்ணய நார்ஸிஸாக அல்ல. கடவுளின் பல படைப்புகளில் ஏதோவொன்றாக இருக்க விரும்புகிறேன் அசிங்கமான கழுதைப்புலியாகவும்கூட ஆனால் ஒருபோதும் கொடுங்கோலனாக அல்ல கொடுங்கோலனின் பூனையாகக்கூட அல்ல. எங்கும் எந்த இடத்திலும் மனிதனாகவே மறுஅவதாரமெடுக்கக விரும்புகிறேன்: பாராகுவே நாட்டுச் சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளானவனாக ஹாங்காங் நகரக் குடிசைப் பகுதிகளிலுள்ள வீடற்ற குழந்தையாக பங்களாதேஷில் உயிருள்ள எலும்புக்கூடாக திபெத்த்தில் புனித யாசகனாக கேப்டவுனில் கறுப்பனாக. ஆனால் ஒருபோதும் ராம்போவின் படிமத்தில் அல்ல. என்னால் வெறுக்கப்படுபவர்கள் மாய்மாலவாதிகள் மட்டுமே, கெட்டியான இனிப்புத்திரவத்தில் ஊறவைக்கப்பட்ட கழுதைப் புலிகள் அவர்கள். உலகிலுள்ள அனைத்து அறுவை சிகிச்சை மருத்துவர்களின்கீழும் படுக்க விரும்புகிறேன் கூன் விழுந்தவனாய், பார்வையற்றவனாய், அனைத்து நோய்களாலும் புண்களாலும் தழும்புகளாலும் அவதிப்படுவனாய், போரால் பாதிக்கப்பட்டவனாய் சிகரெட் துண்டுகளை அள்ளிப் போடுபவனாய் இருக்க விரும்புகிறேன் அசுத்தமான நுண்ணுயிரியாக மேன்மையாவன் என்ற எண்ணம் என்னுள் புகாமலிருப்பதற்காக மேட்டுக்குடியினருடன் சேர்வதை நான் விரும்பவில்லை கோழைத்தனமான மந்தையுடன் இணைவதையும் அந்த மந்தையின் காவல் நாயாகவோ அந்த மந்தையால் பாதுகாப்பளிக்கப்படும் இடையனாகவோ இருப்பதையும் விரும்பவில்லை. மகிழ்ச்சியை விரும்புகிறேன் ஆனால் மற்றவர்களின் மகிழ்ச்சியை விலையாகக் கொடுத்து அல்ல சுதந்திரத்தை விரும்புகிறேன் ஆனால் சுதந்திரமற்றவர்களை விலையாகக் கொடுத்து அல்ல. உலகிலுள்ள எல்லாப் பெண்களையும் நேசிக்க விரும்புகிறேன் நானே ஒரு தடவையாவது பெண்ணாக இருக்கவும் விரும்புகிறேன் இயற்கை அன்னை ஆண்களுக்குக் குறையொன்றைக் கொடுத்துவிட்டாள்… ஆண்களுக்கு அவள் தாய்மையைக் கொடுத்திருந்தால்? மாசுமருவற்ற குழந்தை அவனது நெஞ்சுக்குக் கீழே அசையுமானால் ஆண் ஒருவேளை அத்தனை கொடூரமானவனாக இருக்கமாட்டான். மனிதனின் அன்றாட உணவாக இருக்க விரும்புகிறேன் சொல்லப் போனால் துக்கம் அனுட்டிக்கும் வியத்நாமியப் பெண்ணுக்குக் கைப்பிடிச் சோறாக நேப்பிள்ஸ் நகரத் தொழிலாளர்களின் உணவு விடுதியில் மலிவான மதுரசமாக மனிதனின் அன்றாட உணவாக அல்லது வளையம் போல் நிலாவைச் சுற்றிவரும் மிகச் சிறிய பாலாடைக்கட்டித் துண்டாக: அவர்கள் என்னை உண்ணட்டும் அவர்கள் என்னைப் பருகட்டும் எனது சாவு மட்டுமே சிறிது பயன்படட்டும். எல்லாக் காலங்களையும் சேர்ந்தவனாக இருக்க விரும்புகிறேன் எத்தகைய சாமர்த்தியசாலி நான் என்று வரலாறு அதிசயிக்கும் அளவுக்கு அதைத் திகைக்க வைக்க விரும்புகிறேன். நெஃபெர்டிட்டியை ட்ரொய்காவில் உட்கார வைத்து பூஷ்கினிடம் அழைத்துவர விரும்புகிறேன் ஒரு கணத்தின் வெளியைப் பன்மடங்கு பெருக்கி ஒரே நேரத்தில் சைபீரிய மீனவனுடன் வோட்கா பருகவும் ஹோமர், தாந்தே, ஷேக்ஸ்பியர் ஆகியோருடன் அமர்ந்து கோகா-கோலாவைத் தவிர வேறு எதனையேனும் அருந்தவும் காங்கோவில் முரசுகளின் ஒலிக்கு ஆடவும் ரெனோவில் வேலை நிறுத்தம் செய்யவும் கோபாகபானா கடற்கரையில் பிரேஸிலியப் பையன்களுடனும் தோல்ஸ்தாயுடனும் பந்தைத் துரத்திச் செல்லவும் விரும்புகிறேன். ஒவ்வொரு மொழியையும் பூமிக்கு அடியில் பாயும் இரகசிய நீரோட்டங்களையும் அறியவும் அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்யவும் விரும்புகிறேன் ஒரு யெவ்டுஷெங்கோ வெறும் கவிஞன்தான் இரண்டாவது யெவ்டுஷெங்கோ தலைமறைவுப் போராளி,ஏதோஓரிடத்தில் அது எந்த இடம் எனச் சொல்ல மாட்டேன், பாதுகாப்புக் காரணங்களுக்காக மூன்றாவது யெவ்டுஷெங்கொ பெர்க்ளி பல்கலைக் கழக மாணவன் நான்காமவன், ஜாலியான ஜார்ஜியக் குடிகாரன், ஐந்தாமவன் அலாஸ்காவில் எஸ்கிமோ குழந்தைகளின் ஆசிரியனாக இருக்கக்கூடும் ஆறாமவன், ஏதோவொரு நாட்டில், அடக்கத்தோடு சொல்லப்போனால், ஏன் ஸியராலியோனிலும்கூட இளம் குடியரசுத் தலைவனாக ஏழாமவன், தொட்டிலில் இன்னமும் கிலுகிலுப்பையை ஆட்டிக் கொண்டிருப்பவனாக பத்தாவது…. நூறாவது… நான் நானாக இருப்பது எனக்குப் போதுமானதல்ல படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் அதேபோன்ற இன்னொன்றுண்டு ஆனால், கார்பன் காகிதத்தைப் பயன்படுத்துவதில் கடவுள் கருமி அவரது விண்ணுலகப் பதிப்பகம் என்னை ஒப்பில்லாத ஒரே ஒரு பிரதியாக்கியது ஆனால், நான் கடவுளின் சீட்டுகளைத் தாறுமாறாகக் கலைத்துப் போடுவேன் அவரைக் குழப்பத்தில் ஆழ்த்துவேன் எனது வாழ்நாளின் இறுதிவரை ஆயிரம் பிரதிகளாக இருப்பேன் - என்னைக் கண்டு பூமியும் பரபரவென இயங்குவதற்கு, உலக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகையில் கணினிகளுக்குப் பித்துப் பிடிப்பதற்கு. மனிதகுலமே உனது தடையரண்கள் எல்லாவற்றிலும் போர் புரிவேன் - சக்தி தீர்ந்து களைத்துப் போன நிலவாக ஒவ்வொரு இரவிலும் மரணித்து, புதிதாகப் பிறந்த சூரியனாய் ஒவ்வொரு காலையிலும் மீண்டும் பிறப்பேன் என் மண்டையோட்டில் சாகாவரம் பெற்ற மென்புள்ளியொன்றைக் கொண்டவனாய். சாதுரியமான ஸைபீரிய ஃப்ரான்ஸுவோ வியோனாக நான் இறக்கும்போது பிரான்ஸிலோ, இத்தாலியிலோ மண்ணுக்குக் கீழே என்னைக் கிடத்தாதீர்கள் ஆனால், ரஷிய ஸைபீரிய மண்ணில் இன்னும் பசுமையாக இருக்கும் குன்றில் - ஒவ்வொருவரும் நானே என்பதை நான் முதன் முதலில் உணர்ந்தது அங்குதான். ~~~ 1.ஆர்த்தடாக்ஸ் திருச்சபை: ரஷியாவிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் செல்வாக்குப் பெற்றுள்ள கிறிஸ்தவ மதப் பிரிவு 2.பய்கால்ஏரி (Lake Baikal) : ரஷியநாட்டின் ஸைபீரியப் பகுதியில் உள்ள மிகப் பெரும் ஏரி. 3.அமெரிக்காவின் தென் மாகாணங்களிலொன்று. 4. நார்ஸிஸஸ் (Narcissus): மிக அழகானவன் என்று கிரேக்க இதிகாசங்களில் சொல்லப்படும் வேடனான நார்ஸிஸஸுக்குத் தனது அழகைப் பற்றிய கர்வம்அதிகம். அதனால்தான் அவன் தன்னைக் காதலித்தவர்கள் அனைவரையும் உதாசீனப்படுத்தி வந்தான். இதனால் ஆத்திரமுற்ற கிரேக்கக் கடவுளான நெமெஸிஸ், தனது மந்திரசக்தியால் நார்ஸிஸை ஒரு குளத்துக்கு வரச் செய்தான். அந்தக் குளத்து நீரில் பிரதிபலித்த தனது முகத்தின் அழகிலேயே லயித்து மயங்கிய நார்ஸிஸால் அங்கிருந்து வரவே முடியவில்லை. அந்த பிம்பத்துக்கு ஈடான அழகிய முகம் வேறெங்கும் இல்லை என்று கருதிய அவனுக்கு உயிர் வாழும் ஆசை இல்லாமல் போய்விட்டது. சாகும் வரை அந்தப் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்கிற சுயமோகிகளைக் குறிக்க ‘நார்ஸிஸஸ்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. 5. கேப்டவுன் (Cape Town): தென்னாப்பிரிக்காவின் தலைநகரம். 6. ராம்போ: அமெரிக்க ஆணாதிக்க, ஆண்-மைய, இராணுவ வல்லமைக்கான குறியீடு. ராம்போ பாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் ஸில்வஸ்டர் ஸ்டலோன் நடித்த படங்கள் 1960 முதல் 1980கள் வரைஅடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தன. 7. நெஃபெர்டிட்டி (Nefertiti): மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட அரசி. 8. ட்ரொய்கா(Troika): கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டு தொடக்கம்வரை ரஷியாவில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்த, மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட சக்கர வண்டி. 9. பூஷ்கின் (Alexander Pushin) உலகப் புகழ்பெற்ற 19ஆம் நூற்றாண்டு ரஷியக் கவிஞர். 10. ரெனோ (Renault): இதே பெயருடைய கார்களைத் தயாரிக்கும் பிரெஞ்சுத் தொழிற்சாலை. 11. கோபாகபானா கடற்கரை(Copacabana Beach): பிரேஸில் நகரமான ரியோ டி ஜெனிரோவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரை. 12. பெர்க்ளி பல்கலைக் கழகம்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள பெர்க்ளி நகரத்திலுள்ள பல்கலைக் கழகத்தின் சரியான பெயர் ‘கலிபோர்னியா பல்கலைக் கழகம்’.ஆனால், இது பொதுவாக ‘பெர்க்ளி பல்கலைக் கழகம்’ என்றே அழைக்கப்படுகின்றது. 13. ஸியராலியோன் (Sierra Leone) : மேற்கு ஆப்பிரிக்க நாடு. 14.இக்கவிதையின் ஆங்கில மொழியாக்கத்திலுள்ள ”the seventh would still be shaking a rattle in his stroller” என்பது “ ஏழாமவன், இன்னமும் தொட்டிலில் கிலிகிலுப்பை ஆட்டிக் கொண்டிருப்பவனாக” எனத் தமிழாககம் செய்யப்பட்டுள்ளது. ’ஸ்ட்ரோல்லெர்’ (stroller): என்பது குழந்தைகளை உட்காரவைத்து சிறிது நேரம் உலாவச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிறிய (சக்கர) தள்ளுவண்டி. ஏழாவது யெவ்டுஷெங்கோ, இன்னும் குழந்தையாகவே இருக்கிறான் என்பதற்காக இக்கவிதையில்’ ஸ்ட்ரோல்லெர்’ குறிப்பிடப்படுகிறது. நம் நாட்டில்குழந்தைகளுக்கான ‘ஸ்ட்ரோல்லெர்’ மிகஅரிதாகவேஉள்ளது. 15. ஃப்ரான்ஸுவா வியோன் (Francois Villon): 15ஆம்நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர்; துணிச்சலான குற்றச்செயல்களுக்காக சிறைவாசம் புரிந்தவர். 16. அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்திலுள்ள டுல்ஸா நகரத்தில் காலமான யெவ்கெனி யெவ்டுஷெங்கோவின் உடல் ரஷியாவின் சைபீரியப் பகுதியிலுள்ள அவரது சொந்த ஊரான ஸிமாவுக்கு (Zima) எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

திங்கள், நவம்பர் 28

வி.பி.சிங் நினைவாக - எஸ்.வி.ராஜதுரை

சுதந்திர இந்தியாவில் ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிரான போரைத் தொடங்கியவன் நானே என்று நரேந்திர மோடி மார் தட்டிக் கொள்கிறார். கடந்த 70 ஆண்டுக் கால இந்திய நிர்வாகம் செயல்பட்டு வந்ததைப் பற்றியப் புலனாய்வைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

நேருவின் ஆட்சிக் காலத்திலிருந்தே அரசியலிலும் அரசாங்கத்திலுல் ஊழல்களும் இலஞ்ச விவகாரங்களும் இருந்தன என்பது உண்மைதான். ஆனால்  நேருவோ அவரது நெருக்கமான சகாக்களோ இலஞ்சம் –ஊழல் கறை படிந்தவர்களாகச் சொல்ல முடியாது. எனினும், அரசியலில் குடும்ப வாரிசு முறையை உருவாக்குவதும்கூட ஊழல்தான் என்றால்  நேருவும் மறைமுகக் குற்றவாளிதான். தமக்குப் பின் தமது மகள் இந்திரா காந்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விருப்பம் எதனையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்ததில்லை என்றாலும்,   அவர் யாரைத் தமது அரசியல் வாரிசாகக் கருதுகிறார் என்று பலமுறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தட்டிக் கழித்ததும், அவர் உயிரோடு இருக்கும்போதே இந்திரா காந்தியை அனைத்திந்தியக் காங்கிரஸின் தலைவராக்க இசைவு தந்ததும், இந்திரா காந்தி தேர்தல் ஜனநாயகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையைக் கலைப்பதற்காக மதவாத, சாதியப் பிற்போக்குச் சக்திகளுடன் கைகோர்த்ததை எதிர்க்காமலிருந்ததும், இந்திய   ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் மாபெரும் ஊழல் என்று கூறலாம். ஊழலும் இலஞ்சமும் காசு வாங்குவதில் மட்டும் இல்லை.

 நேருவுக்கு அடுத்தபடியாகப் பிரதமர் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரி தனிப்பட்ட முறையில் அப்பழுக்கற்றவர்; அதேபோலத்தான் காங்கிரஸ் அல்லாத முதல் மத்திய அரசாங்கத்தில் பிரதமர் பதவியை வகித்த  மொரார்ஜி தேசாயும்.
வாக்கு வங்கியைப் பெருக்குவதற்காக மதவாதத்தைப் பயன்படுத்துவதும் ஊழல்தான் என்றால்,  அந்தக் குற்றச்சாட்டு இந்திரா காந்திக்குப் பொருந்தும். ஏராளமான முறை அவர் முஸ்லிம் விரோதப் பேச்சுகளைப் பேசியிருப்பதை, அவரது மகன் ராஜிவ் காந்தி முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதை வரலாற்று அறிஞரும் சட்ட வல்லுநருமான ஏ.ஜி.. நூரானி ஆவணப்படுத்தியுள்ளார்.

அரசியலிலும் அரசாங்கத்திலுமுள்ள ஊழல்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்ற போர் முழக்கத்தை எழுப்பி வந்த ராம் மனோகர் லோகியாவும் ஜெயப்பிரகாஷ் நாராயணும்,  இந்திய பாசிச சக்திகளான ஜன் சங், ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு ‘அரசியல் கெளரவம்’ கிடைக்கச் செய்வதில் முக்கியப் பங்காற்றினர்.

காங்கிரஸ் அல்லாத மத்திய அரசாங்கத்தில் சிறிது காலமே பிரதமராக இருந்த ஐ.கே.குஜ்ரால் கறை படியாத மனிதராக இருந்தார் என்றால் கறைபடியாதவராக இருந்ததோடு மட்டுமின்றி கறைபடிந்த கரங்கள் அனைத்தையும் அரசியலிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் விரட்டியடிப்பதற்கான துணிச்சலான முயற்சியை மேற்கொண்டவர் வி.பி.சிங் ஒருவர் மட்டுமே.

ராஜிவ் காந்தியின் முதல் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுபேற்றுக் கொண்டவுடன், இந்தியாவில் ஊழலையும் இலஞ்சத்தையும் மேல்மட்டத்திலிருந்துதான் ஒழிக்கத் தொடங்க வேண்டும் என்னும் கூருணர்வுடன் செயல்பட்டார் வி.பி.சிங். அவரது ஆணையின் பேரில் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது  திடீர் சோதனைகளை மேற்கொண்டு ஆண்டுக் கணக்கில் செய்யப்பட்டு வந்த வரி ஏய்ப்புகளைக் கண்டறிந்தனர். அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் பெருந்தொழிலதிபர்கள் சிலர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். எனவேதான் கார்ப்பரேட் பெருச்சாளிகள் அவரை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றுவதற்கு திருபாய் அம்பானியின் (ரிலையன்ஸ்) தலைமையில் அணி திரண்டனர். இந்த உண்மை நரேந்திர மோடியின் புலனாய்வு ராடாரின் கீழ் வருமா? வராது. ஏனென்றால் அந்த ராடாரை இயக்குவதே அம்பானிகளும் அதானிகளும்தான்.

அந்தப் பெருச்சாளிகளின் நிர்பந்தத்தின் காரணமாகத்தான் ராஜிவ் காந்தி, விபி.சிங்கை நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவித்து,  பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார். வி.பி. சிங்கின் திறமை பாதுகாப்புத்துறைக்குத் தேவை என்று பசப்பினார் ராஜிவ். ஆனால், வி.பி.சிங், பாதுகாப்புத்துறையில் மலிந்திருந்த ஊழல்கள் மீது கவனம் குவிக்கத் தொடங்கினார். ஜெர்மனியிலிருந்து HSW  நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதில் பேரம் பேசப்பட்டதையும் ‘கமிஷன்’ வழங்கப்பட்டதையும் கண்டறிந்து முழு உண்மையையும் வெளிக்கொணர்வதற்கான விசாரணை ஆணையம் அமைக்க ஆணை பிறப்பித்தார். அதனால்தான் ராஜிவ் காந்தியும் காங்கிரஸ் தலைமையும் வி.பி.சிங்கை ஓரங்கட்டின. நீர்மூழ்கிக் கப்பல் ஊழலும் போஃபர்ஸ் ஊழலைப் போலவே சட்டத்திடமிருந்து தப்பித்துக் கொண்டது.

1989இல் நடந்த பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்  பெரும்பான்மை கிடைக்காதிருந்த சூழலில் பாஜக ஒருபுறமும் இடதுசாரிகள் மறுபுறமும் ‘வெளியே இருந்து’ தந்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட வி.பி.சிங், இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த படிநிலை சாதிய அமைப்பின் காரணமாக ‘உயர் சாதியினர்’ மட்டுமே அரசாங்கப் பதவிகளை வகித்து வந்த ஊழல் முறையின் மீது கை வைக்கும் மண்டல் குழு பரிந்துரைகள் பலவற்றை நடைமுறைப்படுத்தினார். இந்த சாதியப்படிநிலை ஊழல் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என்று விரும்பிய பாஜக, வி.பி.சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்த போது, அந்த கவிழ்ப்பு முயற்சிக்கு ராஜிவ் காந்தியின் காங்கிரஸும் துணை நின்றது – பின்னாளில் அயோத்தி ராமர் கோவில் ஷிலான்யாவுக்கு ராஜிவ் காந்தியும் பாபர் மசூதி இடிப்புக்கு நரசிம்ம ராவும் ஒத்துழைத்தது போல.

வி.பி.சிங் ஆட்சியிலிருந்த போதும் சரி, ஆட்சியில் இல்லாத போதும் சரி, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றின் தேர்தல் செலவுகளுக்கும் அரசாங்கமே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கொள்கையை இடைவிடாது வலியுறுத்தி வந்தார். இப்படிச் செய்வதன் மூலம் கார்ப்பரேட் சக்திகள் அரசியல் கட்சிகள் மேல் செல்வாக்கு செலுத்துவதைப் பெருமளவில் தடுக்க முடியும் என்று கருதினார்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய அரசியலிலும் மத்திய, மாநில அரசாங்கங்களிலும் உள்ள இலஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஒழிப்பது மேலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை. ஆனால், சாதிய ஊழலை நிலைநிறுத்துவதைத் தனது இலட்சியமாகக் கொண்டுள்ள சங்பரிவார பாசிச சக்திகளோ, இலஞ்சமும் ஊழலும் ஏழைகளிடம்தான்,  நடுத்தர வர்க்கத்திடமிருந்துதான்  ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றன.

இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்திய அதிகாரி வர்க்கம், பங்குச்சந்தையின் தலைமைப்பீடமான மும்பையின் தலால் ஸ்ட்ரீட், இந்தியக் கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ,  பாலிவுட், இந்திய இயற்கை வளங்களை, சுற்றுச்சூழலைச் சூறையாடும் அதானிகள், அம்பானிகள் முதலானோர் மீது நரேந்திர மோடியாலும் சங் பரிவாரத்தாலும் கைவைக்க முடியாது. ஏனெனில் சாதிரீதியான, வர்க்கரீதியான ஒடுக்குமுறை, சுரண்டல், ஊழல், இலஞ்சம் ஆகியவற்றைப் பாதுகாக்கின்றவர்கள் இவர்கள்தாம்.

இவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய ஒரே இந்தியப் பிரதமர் வி.பி.சிங் மட்டுமே. அவரது இறப்புச் செய்தி, மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களின் போது எவ்வாறு முக்கியத்துவம் அற்றதாகப் போனதோ, அதைவிட மோசமானதாக, ஊழல், இலஞ்ச ஒழிப்பு பற்றிய நரேந்திர மோடியின் சொல்லாடல்கள், அவற்றுக்கு எதிரான எதிர்-சொல்லாடல்கள் நடக்கும் காலத்தில் முற்றாக மறக்கப்பட்டுவிட்டது. இந்த வரலாற்று மறதிக்கு இந்தியாவிலுள்ள மதச்சார்பற்ற சக்திகளும் (அப்படி ஏதேனும் இருக்குமானால்) இடதுசாரி சக்திகளும்தான் பொறுப்பு.


வெள்ளி, ஜூன் 10

ஆவணப்படத்தின் நாயகனாக இருக்கும் தகுதி எனக்கு உள்ளதா? எஸ்.வி.ராஜதுரை



தமிழ் அறிவுலகின் தனித்துவமிக்க ஆளுமைகளில் ஒருவர் எஸ்.வி.ராஜதுரை. 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். ஆய்வுகள்,மனித உரிமைப் போராட்டங்கள் என பல தளங்களில் செயல்பட்ட பன்முக ஆளுமை. தந்தை பெரியாரின் எழுத்துக்களை ஆய்வு நோக்கில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியதில் வ.கீதாவும் இவரும் முக்கியமானவர்கள். பெரியாரை தமிழக எல்லை தாண்டி, இந்திய அளவிலும், உலக அளவிலும் ஆங்கில வழியில் கொண்டு சேர்த்ததில் ராஜதுரையின் பங்கு அளப்பரியது.

ராஜதுரையின் வாழ்க்கையை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்க்கும் பணியில் அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது. 'இடது' காலாண்டு இதழ் சார்பாக, தோழர். கண.குறிஞ்சி படத்தை இயக்கியிருந்தார்.

கடந்த ஜூன் 4ம் தேதி அன்று நடைபெறவிருந்த இந்த ஆவணப்படத்தின் திரையிடலை தமிழக அரசு கடைசி நேரத்தில் தடை செய்தது. படத்தின் திரையிடும் நிகழ்ச்சி நடைபெறவிருந்த தினத்தன்று, ராஜதுரை தோழர்களுக்கு ஒரு உரையைக் கடிதமாக எழுதியிருந்தார். தமிழ் சமுதாயத்திற்கு ராஜதுரை விடுத்திருந்த செய்தி அந்தக் கடிதம். தமிழ் வாசகர்களுக்காக மின்னம்பலம் அந்தக் கடிதத்தை இங்கு பதிவு செய்திருக்கிறது.

அன்புள்ள தோழர்களே,
எட்டாண்டுகாலமாக எனது இரண்டு கண்களிலும் அரைகுறை பார்வைதான். அதைக்கொண்டே தொடர்ந்து எழுதவும் படிக்கவும், ஓரிரு சந்தர்ப்பங்களில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் தோழர்களின் ஊக்குவிப்புடன் நவீன தொழில்நுட்ப சாதனங்களும் உதவின. சென்ற ஆண்டு எனது உடல்நிலையில் பெரும் சரிவு ஏற்பட்டு, சில மாதங்கள் படுத்த படுக்கையாகவே இருந்ததோடு, எனது இடதுகண் பார்வையையும் முற்றிலுமாக இழந்தேன். இந்தச் சூழலில்தான் எனது வாழ்நாளில் எனக்கு அறிவொளியூட்டிய–அது கடுகளவானதாகவோ, மலையளவானதாகவோ இருக்கலாம். கிட்டத்தட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து எனது கட்டுரைகளிலும் நூல்களிலும் அவர்களது பெயர்களைப் பதிவுசெய்யத் தொடங்கினேன். விட்டுப்போன பெயர்கள் விரைவில் வெளிவரும் மூன்று நூல்களில் இடம்பெறும்.

என்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் காட்டுகிற, எனது நீண்டகால நண்பர்களும் தோழர்களும் என்னைப்பற்றிய ஓர் ஆவணப் படத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியபோது, எனக்கு அது மகிழ்ச்சியை அல்ல, வெட்க உணர்வையே தந்தது. இந்த ஆவணப் படத்தின் இறுதி செய்யப்படாத வடிவம் எனக்குப் பல மாதங்களுக்குமுன்பே அனுப்பப்பட்டிருந்தது என்றாலும் அதை நான் இதுவரை பார்க்கவில்லை; என் குடும்பத்தினருக்கும்கூட அதைக் காட்டவில்லை. எனது சொந்த வாழ்க்கைக் குறிப்புகளை அனுப்புமாறு எனது அருமைத்தோழர் குறிஞ்சி எண்ணற்றமுறை என்னிடம் தொலைபேசி வழியாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் விடுத்துவந்த வேண்டுகோளுக்கு ஏதேதோ சாக்குப்போக்குகள் கூறி, உடனடியாக செவிமடுக்காவண்ணம் எனது வெட்க உணர்வு தடுத்து வந்தது. ஓர் ஆவணப்படத்தின் நாயகனாக இருக்கும் தகுதி எனக்கு உள்ளதா?

எனது அரசியல் வாழ்க்கை 13ம் வயதிலேயே தொடங்கியது. திமுக ஆதரவாளனாக, உறுப்பினனாக. 21ம் வயதில்தான் மார்க்ஸியம் என்னை ஈர்க்கத் தொடங்கியது. பொதுவுடைமை இயக்க அரசியல் வாழ்க்கையைத் தொடங்க மேலும் நான்காண்டுகள் தேவைப்பட்டன. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் அந்த இயக்கத்தில் கட்சி உறுப்பினனாகவோ, சக பயணியாகவோ, ஆதரவாளனாகவோ, ஏன், அந்த இயக்கத்தைச் சேர்ந்த ஓரிரு குழுவினரின் கருத்துப்படி ‘கம்யூனிஸ்ட் விரோதி’யாகவும், ’ஏகாதிபத்திய அடிவருடியாகவும்’கூட இருந்திருக்கிறேன். என்னைப்பற்றிய இத்தகைய சித்திரிப்புகளை வலதுசாரி இந்துத்துவச் சக்திகளும் பரப்பி வருவதைப் பார்த்திருக்கிறேன். சிலவேளை, என் மனம் புண்படுவதுண்டு. ஆனால், துவண்டுபோய் முற்றிலும் செயலற்றவனாக ஆகிவிடாமல் தடுத்தவை, மானுட குலத்தின் விடுதலைக்கான தத்துவங்களையும் செயல்பாட்டு முறைகளையும் நமக்கு வழங்கிச் சென்றுள்ள மாபெரும் புரட்சியாளர்களின் வாழ்க்கையும் அவர்களது பணிகளும்தான்.

எனது எழுத்து வாழ்க்கைக்கும் இப்போது வயது 50. எனது ஆக்கங்கள் நமது சமுதாயத்தின்மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தின? எனது வாசகர்கள் யார்? நமது இலட்சியங்கள் அடுத்தடுத்து தோல்விகளை மட்டுமே தழுவிக் கொண்டிருக்கையில், தொடர்ந்து எழுதுவதில் என்ன பயன்? என்ற கேள்விகள் என மனதைக் குடைந்து கொண்டிருக்கின்றன.

சோசலிச சமுதாயத்தை உருவாக்கப் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்துக்கும் ஏற்பட்டுள்ள தோல்விகள், பொதுவுடைமை இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவுகள், இந்தியப் பொதுவுடைமை இயக்க வாழ்வில் எனக்கேற்பட்ட கசப்பான அனுபவங்கள், மனித உரிமை இயக்கத்தில் இயன்றளவு செயலாற்றுவதற்கான வாய்ப்புகள், அம்பேத்கரும் பெரியாரும் கற்றுக்கொடுத்த பாடங்கள் ஆகியன என்னிடம் சகிப்புணர்வை வளர்த்தன. தனிப்பட்ட முறையிலோ, அரசியல்வகையிலோ வன்மமும் வெறுப்புணர்வும் என் உள்ளத்தில் வளர்வதைத் தடுத்தன. ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்தின், குறிக்கோளின் அடிப்படையில் பல்வேறு கருத்துநிலைகளைக் கொண்டிருப்பவர்களுடன் இணைந்து செயலாற்றுவதால் சமுதாயத்துக்கு ஏற்படும் நற்பயன்களை என்னால் உணர முடிந்திருக்கிறது. இந்த அணுகுமுறைக்கு அற்புதமான எடுத்துக்காட்டாக இருந்தவர் பெருஞ்சித்திரனார். இது எனக்கு நிறமாலை போன்ற நட்பு வட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

மிகுந்த மனசோர்வு ஏற்படும்போது இலக்கியத்திலும் இசையிலும் புகலிடம் தேடுவேன். நல்ல படைப்பிலக்கியவாதியாகவோ, இலக்கியத் திறனாய்வாளனாகவோ வளர வேண்டும் என்பதே எனது இளமைக்கால கனவாக இருந்தது. ஆனால், எனது இரத்தத்திலேயே கலந்திருந்த அரசியல் என்னை வேறு பாதையில் செலுத்தியது. முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என என்னால் விரும்பப்பட்ட பல செயல்பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. ஆனால், இதில் எனக்குக் கடுகளவேனும் வருத்தம் இல்லை. இதுதான் வாழ்க்கை.

எனினும், தற்போதைய இந்திய, தமிழகச் சூழல் என் உள்ளத்தில் பெரும் பீதியை ஏற்படுத்துகிறது. முதலாளிய சமுதாயத்தில் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் உரிமைக் குரலை மிகவும் வரம்புக்குட்பட்டவகையில் மட்டுமே எதிரொலிப்பதற்கான அரங்குகளில், அரசியல் களங்களில் ஒன்று என்பதற்குமேல் சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் நான் எவ்வித முக்கியத்துவமும் தருவதில்லை. எனினும், அண்மைய தேர்தல் முடிவுகள், ஒட்டுமொத்த தலித் மக்களுக்கு எதிராக தமிழகத்தின் மிகப் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கின்றனர் என்னும் உணர்வை எனக்கு ஏற்படுத்துகின்றன. தமிழக மக்களின் உளவியலில் ஆதிக்கம் செலுத்தும் சாதிய உணர்வை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது? இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ், தமிழக அளவில் திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தால்போதும் என்று கார்ப்பரேட், வணிக, ரியல் எஸ்டேட், சாராயச் சக்திகள் விரும்புகின்றன.

இந்தியாவில் அரசியல் மேலாண்மையைப் பெற்றுள்ள பாசிச சக்திகளைப் பற்றி பேசுகிறோம். பண்பாட்டுத் தளத்தில் அவை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளுக்கு மட்டுமே நாம் கூடுதல் கவனம் செலுத்துவதாகத் தோன்றுகிறது. இந்திய பாசிசம், அமெரிக்காவின் தலைமையிலுள்ள உலக ஏகாதிபத்தியத்தின் கைகளை வலுப்படுத்துவதில், மன்மோகன் வகுத்த பாதைக்குக் கான்கிரீட் போட்டுவருகிறது. மன்மோகன் சிங் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட அணு உலை ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதில் தொடங்கி, உலக அளவிலான ஏகாதிபத்திய இராணுவ தொலைநோக்குத் திட்டத்தில் இந்தியா முக்கியப் பாத்திரம் வகிக்கும்வகையில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் இரு தரப்பு, முத்தரப்பு இராணுவ ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதிலும், அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனுடன் மிக நவீன, வலுவான ஆயுத உற்பத்தியை மேற்கொள்வதிலும் இன்றைய பாசிச அரசாங்கம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. சீனாவைத் தனிமைப்படுத்தி, அதன் கடல் மார்க்கங்களை அடைத்து, கடல், வான், தரை வழியாக அதன் மீதான ஆக்கிரமிப்பை நடத்துவதற்கும், தேவைப்பட்டால் அதன்மீது அணு ஆயுதங்களை ஏவவும் அமெரிக்கா உருவாக்கியுள்ள திட்டத்தில் இந்திய பாசிச அரசாங்கம் மிகுந்த விருப்பத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு வருகிறது.

சீனாமீதான போர் வெடிக்குமானால், அந்த நாட்டில் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் ஏற்படும் கொடூரமான பின்விளைவுகளை அதிலும் குறிப்பாக, உழைக்கும் மக்களுக்கு ஏற்படும் பாரதூரமான பாதிப்புகளை எண்ணிப் பாருங்கள்.

எனவேதான், தமிழகத்திலும் இந்திய அளவிலும் பரந்துபட்ட பாசிச - ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியைக் கட்டவேண்டிய உடனடித் தேவை எழுந்துள்ளது. இந்த இரண்டு சக்திகளையும் எதிர்ப்பவர்கள் யாரோ அவர்களுடன் மட்டுமே நாம் அரசியல், சமூக, பண்பாட்டுக் கூட்டணிகள் அமைக்க வேண்டும். இது தேர்தல் கூட்டணி அல்ல; அரசியல் கூட்டணி.

தோழர்களே, இடதுசாரி கண்ணோட்டமும் பாசிச எதிர்ப்புணர்வும் கொண்டிருந்த காலஞ்சென்ற பிரெஞ்ச் திரையுலக மேதை ழான் ரெனுவா (Jean Renor), மிகுந்த தயக்கத்துடனேயே தன்–வரலாற்றை எழுதினார். அதில் அவர் ’நான் யார்?’ என்ற கேள்விக்குப் பதில் தருகிறார்: "நாம் மிகவும் பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்த தனிநபருக்குள் இருப்பவர்கள் மழலையர் பள்ளியில் படிக்கும்போது அவனுக்குக் கிடைத்த நண்பர்கள்; அவன் வாசித்த முதல் கதையின் நாயகன் ஏன், அவனது ஒன்றுவிட்ட சகோதரன் யூஜினின் நாயும்தான். நாம், நம் ஊடாக மட்டுமே வாழ்வதில்லை; நமது சூழல் நம்மை வடிவமைக்கிறது. நான் இப்போது யாராக இருக்கிறேனோ, அவனை உருவாக்குவதில் ஒரு பாத்திரம்வகித்த மனிதர்களையும் நிகழ்வுகளையும் நினைவுகூர முயன்றுள்ளேன்”.

நினைவுகூரும் செயலை எனக்குப் பதிலாக, இந்த ஆவணப்படம் மேற்கொண்டுள்ளதாகக் கருதி, உங்கள் அனைவரையும் தலைசாய்த்து வணங்குகிறேன்.

கோத்தகிரி எஸ்.வி.ராஜதுரை
01.06.2016

திங்கள், பிப்ரவரி 8

மார்க்ஸிய அறிஞர் மார்ஸெல்லொ முஸ்ட்டோ - சென்னை வருகை


1976இல் இத்தாலியில் பிறந்த மார்ஸெல்லொ முஸ்ட்டோ, கனடாவின் டொரோன்டோ நகரிலுள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில்   சமூகவியல் கற்பிக்கிறார். இளந்தலைமுறையைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற மார்க்ஸிய அறிஞர்களிலொருவரும் இத்தாலிய, ஆங்கில, பிரெஞ்சு, ஸ்பானிய, போர்ச்சுகீசிய, ஜெர்மன் மொழிகளில் புலமை பெற்றுள்ளவருமான இவரது நூல்களும் கட்டுரைகளும் இருபத்தி இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளன. தென் கொரியா, சீனா, ஆர்ஜென்டினா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் மார்க்ஸிய ஆய்வு ஏடுகளின் ஆசிரியர் குழுவில் உறுப்பியம் வகிக்கும் மார்ஸெல்லோ முஸ்ட்டோவின் நூல்களில் மறு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ளவைகளில் சில பின்வருமாறு: Karl Marx’s ‘Grundrisse’: Foundations of the Critique of Political Economy 150 Years Later (2008) - Indian Edition, New Delhi, Manohar Publications, 2013); Marx Today and the International after 150 Years: Labour Versus Capital, Then and Now, 2015). இவை ரூட்லெட்ஜ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் அவர், ஆங்கிலத்தில் முதன் முறையாக வெளிவருகின்றதும் முதல் அகிலம் எனப்படும் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் முக்கிய ஆவணங்களை உள்ளடக்கியதுமான Workers’ Unite! The International 150 Years Later (Bloomsbury 2014) என்னும் நூலைப் பதிப்பித்துள்ளார்.  இந்த நூலில், முதல் அகிலத்தின் வரலாற்றைக் கூறும் பகுதி எஸ்.வி.ராஜதுரையால் தமிழாக்கம் செய்யப்பட்டு, ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும்’ என்னும் தலைப்பில் நியூ செஞ்சுரி புக்  ஹவுஸால் 2015 பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இந்திய மொழிகளில் மார்ஸெல்லோ முஸ்ட்டோவின் ஆக்கங்களிலொன்று முதன்முதலில் வெளிவந்தது தமிழில்தான். அவர் இத்தாலிய மொழியில் மார்க்ஸ் பற்றி எழுதியுள்ள ஆய்வுரையின் ஆங்கில மொழியாக்கம் ‘Rethinking Marx’ என்னும் தலைப்பில் விரைவில் வெளிவரவுள்ளது.

மார்ஸெல்லொ முஸ்ட்டோ தனது  இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னையில் இருநிகழ்வுகளில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். 
 
1. 2016 பிப்ரவரி 23 மாலை சென்னை அண்ணாசாலை உமாபதி அரங்கம். ( முன்னாள் ஆனந்த் திரையரங்க வளாகம்) ஏற்பாடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

2. 2016 பிப்ரவரி 24 சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனம் ( MIDS)

 


துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...