செவ்வாய், செப்டம்பர் 1

ஒரு வாழைப்பழத்தை இருமுறை சாப்பிட முடியாது - ஆதவன் தீட்சண்யா

ல்லாவற்றையும் பொருளாதாரம் தீர்மானிக்கிறது என்று ஒரு மேற்கோளைப் போல சொல்லிக் கடப்பதை விடுத்து அது எப்போதிருந்து எவ்வாறு ஏன் தீர்மானிப்பதாகியது என்று விளங்கச் செய்வதே தேவையாகிறது. மட்டுமல்ல, எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக சொல்லப்படும் இந்தப் பொருளாதாரத்தை தீர்மானிப்பது எது / எவை என விளக்குவதும் இங்கே தேவையாக இருக்கிறது. இந்த விளக்கங்கள் தேவைப்படும் யாவரையும் தன் 13 வயது மகளாக உருவகப்படுத்திக்கொண்டு அல்லது அவளை முன்னிருத்திக்கொண்டு யானிஸ் வருஃபாகிஸ் தனது தாய்மொழியான கிரேக்கத்தில் எழுதியவை ‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்என்றொரு புத்தகமாக 2013ஆம் ஆண்டு உருப்பெற்று வெளிவந்தது. பின், ஜேக்கப் மோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்நூலை தோழர் எஸ்.வி.ராஜதுரை தமிழாக்கம் செய்திருக்கிறார். ஆங்கில நூலின் அதே நேர்த்தியுடன் படிக்கத் தகுந்த பாங்குடன் க்ரியா வெளியிட்டுள்ளது. ஊரடங்கு நமக்குள் உண்டாக்கியுள்ள மந்தத்தை உதறித் தள்ளுவதற்குத் தோதாக இந்நூலை இக்காலத்தில் க்ரியா வெளிக்கொணர்ந்தது கவனம் கொள்ளத்தக்கச் செயலே.  

பொருளாதாரப் பேராசிரியரும் அரசியல் செயற்பாட்டாளரும் சிலகாலம் கிரிஸ் நாட்டின் நிதியமைச்சராகவும் இருந்த வருஃபாகிஸ், ஒரு தோற்றத்தில் பார்த்தால் பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு இந்நூலில் பதிலளிப்பது போல தோன்றினாலும் உண்மையில் அவர் பொருளாதாரம் பற்றிய கேள்விகளையே பெரிதும் எழுப்புகிறார். இதற்காக அவர் பொருளியாலாளர் என்போருக்குள் மேட்டிமையாக புழங்கும் சங்கேத மொழியையோ குழுவுக்குறிகளையோ வரைபடங்களையோ புள்ளிவிவரங்களையோ காட்டவில்லை. தனக்கும் தன் மகளுக்கும் தெரிந்த விசயங்களிலிருந்து பொருளாதாரம் தொடர்பான இழையைப் பிரித்துக்காட்டி அதை விவாதத்திற்கு உட்படுத்துகிறார். தொல்கதைகள், தற்கால திரைப்படங்கள், இலக்கிய ஆக்கங்கள், வாழ்வியல் அனுபவங்கள், கடந்துவந்த காட்சிகள் மற்றும் செய்திகள் ஆகியவற்றினூடாக உற்சாகமானதொரு நேர்ப்பேச்சில் பங்கெடுக்கும் தொனியில் தொடங்கும் புத்தகம் அதேவேகத்தில் ஓடி டி.எஸ்.எலியட்டின் கவிதையோடு முடிகிறது.  

என்னது, பொருளாதாரப் புத்தகத்தில் கவிதையா? ஆம், உபரி, உற்பத்திக் கருவிகள், சந்தை, சரக்கு, நாணயம், கடன், வட்டி, வங்கிகளின் உருவாக்கம், மூலதனத் திரட்சி, தொழில்விருத்தி, இயந்திரங்களின் பெருக்கம் மற்றும் செய்திறன் ஆகியவை உருவான வரலாற்றை ஒரு புனைவைப் போல எழுதிச் செல்லும் வருஃபாகிஸ் இவ்விசயங்களுக்கு இசைவாக பண்டைய இலக்கியங்களிலிருந்தும் தொன்மங்களிலிருந்தும் திரைப்படங்களிலிருந்தும் எடுத்தாளும் கவிதைகள், கதைகள், மேற்கோள்கள், உதாரணங்கள் மிகுந்த சுவாரஸ்மானவை. 

அடிக்குறிப்புகள், ஆதாரக்குறிப்புகள், கல்விப்புலம் அல்லது அரசியல் சார்ந்த புத்தகங்களுக்கு வேண்டிய உபகரணங்கள் எதுவும் தரப்படாமல் நான் எழுதியுள்ள புத்தகம் இது ஒன்றுதான் என்று அவர் சொன்னாலும் - அவர் எடுத்தாளும் பல சொற்களையும், சம்பவங்களையும் நாம் விளங்கிக் கொள்வதற்கு எஸ்.வி.ஆர் தரும் அடிக்குறிப்புகளே உதவுகின்றன. உனது உலகத்தை முழுமையாக பார்க்கவேண்டுமென்றால் அதிலிருந்து தொலைவான இடமொன்றுக்கு போய் அங்கிருந்து பார் என்று மகளுக்கு பரிந்துரைக்கும் அணுகுமுறையைத் தான் இந்நூலை எழுதுவதற்கான அணுகுமுறையாக கைக்கொண்டுள்ளார்.

ஒய்கோஸ் (வீடு), நோமோய் (சட்டங்கள், விதிகள், கட்டுப்பாடுகள்) ஆகிய கிரேக்கச் சொற்களின் இணைவில் உருவான ஒய்கொனோமியா என்பதுதான் பிற்பாடு எகானமி என்றாகியதை நிறுவும் வருஃபாகிஸ், தொடக்கத்தில் பொருளாதாரம் என்பது கூட்டுக்குடும்ப வடிவிலான ஒரு இல்லத்தை நடத்திச் செல்வதற்கு அல்லது நிர்வகிப்பதற்கு உருவான சட்டங்களே என்றும் அது வரலாற்றுப் போக்கில் உலகத்தையே நிர்வகிப்பதற்கானதாக எவ்வாறு வளர்ச்சியுற்றது என்றும் காட்டுகிறார்.  

ஒன்பது நாட்களில் எழுதப்பட்ட இப்புத்தகம் பொருளாதாரத்தின் 12ஆயிரம் வருட வரலாற்றைப் பேசுகிறது. 80ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குரல் நரம்புகளைப் பயன்படுத்தி மனிதர்கள் பேசவும் ஒலியெழுப்பவும் தொடங்கியதையும், 12000 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மையைக் கண்டடைந்ததையும் மனிதகுலத்தின் பெரும் பாய்ச்சல்களாக வரையறுக்கும் வருஃபாகிஸ், பொருளாதாரத்தின் தோற்றுவாய் இவ்விரு பாய்ச்சல்களின் இணைவில் இருப்பதைக் காட்டுகிறார். உணவுச் சேகரிப்பு கட்டத்திலிருந்து உணவை உற்பத்திச் செய்யும் கட்டத்திற்கு மனிதர்கள் நகர்ந்த போதுதான் பொருளாதாரம் உருவாகிறது. திட்டமிட்ட வகையில் அல்லாது, சாகுபடி செய்யாவிடில் உணவின்றி செத்துப்போவோம் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட மனிதக்கூட்டம் வேளாண்மைக்கு வந்து சேர்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியினால், நிலத்தில் விளைந்தவற்றில் அவர்கள் உண்பதற்கும் பயிர் விளைச்சலுக்கு முதலில் பயன்படுத்திய விதைகளுக்கு ஈடான விதைகளை அளந்தெடுத்துக் கொண்டதற்கும் போக ‘மீதிஇருந்த உபரி என்பதே பொருளாதாரத்தின் அடிப்படை. எதிர்கால பயன்பாட்டுக்கான இந்த உபரியை பாதுகாத்து வைப்பதற்கு ஒவ்வொரு  விவசாயியும் தனித்தனியாக தானியக்களஞ்சியம் கட்டுவதிலுள்ள இடர்ப்பாடுகளை கணக்கில் கொண்டு பொதுவானதொரு தானியக்களஞ்சியம் கட்டப்பட்டு அதில் விவசாயிகள் தத்தமது உபரியை சேமித்துள்ளனர். இந்தப் பொதுக்களஞ்சியத்தில் ஒரு விவசாயி சேமிக்கும் தானியத்தின் அளவை கணக்கு வைப்பதற்கும், அதற்கான பற்றுச்சீட்டை விவசாயிக்கு வழங்குவதற்குமே முதலில் எழுத்துமுறை (மெஸபடோமியாவில்) உருவாகியிருக்கிறது என்பது அரிய தகவல்தான். 

உழைப்புடனும் உற்பத்தியுடனும் தொடர்புடைய எழுத்து இவ்விரண்டுக்கும் அப்பாற்பட்ட பகுதியினரின் கைக்கு எவ்வாறு போய்ச்சேர்ந்தது என்பதை தனித்து விவாதிக்கலாம். ஆனால், உற்பத்தி மற்றும் உபரியின் தேவையிலிருந்து எழுத்துமுறை உருவானதென்றால், உற்பத்தி செய்யும் கட்டத்திற்கு வந்து சேராத பழங்குடிகளுக்கோ எழுத்துமுறை தேவைப்படாததால் அவர்கள் இசையிலும் ஓவியம் தீட்டுவதிலும் கவனம் செலுத்தினர் என்கிற வருஃபாகிஸின் கூற்று, பாணர் விறலியர் மரபுக்கும் இன்ன பிற தொல்கலை வடிவங்களில் இயங்குவோருக்கும் பொருந்துகிறது. இதிலிருந்து நாம் இந்தியச் சூழலுக்குப் பொருந்தும் இன்னொரு முடிவுக்கு வந்து சேரமுடிகிறது. அதாவது, உழைப்பிலிருந்து விலக்களிக்கப்பட்டு ஓய்வுப்பொழுதை கொண்டிருப்பதால்தான் இங்கு சாதியடுக்கில் மேலே இருப்போர் கலை நாட்டம் கொண்டவர்களாகவும் அவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள். 

***

சமூகம் ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வுடன் இருக்கிறது என்று ஒரு சிறுமி எழுப்பும் கேள்விக்கு பொருளாதாரத்தின் வரலாறைத்தான் பதிலாக சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால் அவளுக்கு புரியும் விதமாக அதைச்சொல்வது அப்படியொன்றும் எளிதானதல்ல. எனினும் சொல்லாமல் நழுவ முடியாது. இளம் வயதினர் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் பொருளாதாரத்தை ஒருவரால் விளக்க முடியவில்லை என்றால், அவருக்குமே அது விளங்கவில்லை என்றுதான் பொருள் என்கிற கருத்துள்ளவராதலின் வருஃபாகிஸ் இந்தக் கேள்வியை மிகவும் பொருட்படுத்தி பதிலளிக்கிறார். உலக அளவில் நாடுகளுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், ஒவ்வொரு நாட்டிற்குள்ளேயும் சமூகக்குழுக்களிடையே நிலவுகிற ஏற்றுத்தாழ்வுகளையும் பட்டியலிடுவதற்கு பதிலாக, அவை எந்தெந்த வடிவங்களில் எவ்விதமாக உருவாகி நிலைநிறுத்தப்பட்டு தற்காலத்திலும் நீடிக்கின்றன என்பதை எளிய மொழியில் விவரிக்கிறார்.   

உபரி, சேமிப்பு, சேமிப்புக்கான பதிவேடு மற்றும் ரசீது என்று சொல்லத் தொடங்கும் வருஃபாகிஸ் பணத்தின் கதையை விவரிப்பது அலாதியானது. வயலில் உழைப்பைச் செலவிட்ட உழைப்பாளிகளுக்கு அறுவடையிலிருந்து கூலியாகத் தரவேண்டிய தானியத்தின் அளவு- அதாவது கொடுக்கப்பட வேண்டிய கடனின் அளவு- எண்ணாக குறிக்கப்பட்ட கிளிஞ்சல்கள்தான் பணத்தின் மூலவடிவம். அதாவது தொடக்கத்தில் பணம் - கிளிஞ்சல்- கொடுக்கல் வாங்கலுக்கு அல்லாமல் கொடுக்கப்பட வேண்டிய கடனைக் குறிப்பிடுவதற்காகவே பயன்பட்டுள்ளது. பணமும் கடனும் ஒன்றாக பிறந்திருந்தாலும் கடனின் கற்பித அடையாளமாகவே பணம் தனது பாத்திரத்தை இன்றளவும் வகிக்கிறது. மிக நவீனமானது என்று ஆரவாரமாக சொல்லப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை நிகழும் இக்காலத்திலும் கிளிஞ்சல் அல்லது உலோக நாணயம் புழக்கத்திற்கு வந்த தொடக்கக் காலத்திலும் பணத்தின் வகிபாகம் ஒன்றேதான். 

கடனுக்கு ஈடாக கொடுக்கப்படும் நாணயம், அதன் செல்லுபடித்தன்மைக்கு உத்தரவாதம் வழங்குவதற்கு அரசு, அரசின் உத்திரவாதத்தினை நம்புவதற்கான கருத்தியல் அடித்தளத்தை உருவாக்குவதற்கான மதம், ஆட்சியாளர்களை தெய்வத்தின் அவதாரங்களாக நம்ப வைப்பதற்கான முயற்சிகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து உருவாகிவந்த வரலாற்றினூடாக நாம் இப்போது ஒரு சந்தைச்சமுதாயத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். ஆம், சமூகத்தின் பண்டப் பரிமாற்றங்களுக்கு சந்தைகள் இருந்த நிலை மாறி ஒட்டுமொத்த சமுதாயமுமே சந்தையாக மாறிவிட்ட- எல்லாமே சரக்காக மதிப்பிடப்படுகிற முதலாளியச் சமூகத்திற்குள் இப்போது நாமிருக்கிறோம். இந்தச் சந்தைச்சமூகத்தில் உழைப்பும் ஒரு சரக்குதான் என்றாலும் அந்த உழைப்பிற்கு, மார்க்ஸ் கூறிய பயன் மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு ஆகியவற்றுடன் அனுபவ மதிப்பு என்கிற இன்னொரு பரிமாணத்தைச் சேர்க்கிறார் வருஃபாகிஸ். கூலியாகவோ வேறுவகை ஆதாயங்களாகவோ எதையும் பெறாமல் அன்பு, மரியாதை, பொதுநலப் பாங்கு ஆகியவற்றால் உந்தப்பட்டு செயலாற்றுவதனால் ஏற்படும் மகிழ்ச்சி, நிம்மதி, உற்சாகம் போன்றவறை இந்த அனுபவ மதிப்பாகச் சுட்டுகிறார். 

போர்க்கைதிகளின் மூகாம்களில் சிகரெட் கூட ஒரு நாணய அலகாக பரிவர்த்தனைக்குப்  பயன்படுத்தப்பட்டிருப்பதை படிக்கும் போது, இந்தியாவில் சில்லறை நாணயங்களுக்கு தட்டப்பாடு ஏற்பட்டபோது கடைக்காரர்கள் சில்லறைக்கு ஈடாக பாக்குப் பொட்டலம் அல்லது மிட்டாய்களை கொடுத்தது நினைவுக்கு வருகிறது. அதேபோல, ஐந்து ரூபாய்த்தாள் புழங்கமுடியாத அளவுக்கு நைந்துபோய் தட்டுப்பாடு ஏற்பட்டபோது ஒரு கடையில் கொடுக்கும் குறிப்பிட்ட  வடிவிலான பிளாஸ்டிக் வில்லைகளை மற்ற கடைக்காரர்கள் ஏற்றுக்கொள்ளும் வழக்கம் சில நகரங்களில் இருந்தது. நாணயங்கள் மீதான வங்கிகளின் கட்டுப்பாடுகளை தகர்த்து வங்கிகளின் அதிகார வரம்புக்குள் வராத நாணயங்களை புழக்கத்திற்கு கொண்டுவரும் இம்மாதிரியான தொடர்முயற்சிகளின் டிஜிடல் வடிவம்தான் ‘பிட்காய்ன்கள்என்று இந்நூலைப் படிக்கும்போது தோன்றுகிறது. 

ஒரு வாழைப்பழத்தை இருமுறை சாப்பிட முடியாது என்று வருஃபாகிஸ் கூறுவதன் பொருள், வலுத்தவர் முண்டியத்து ஓடிப்போய் வாழைப்பழத்தை விழுங்கிவிட வேண்டும் என்பதல்ல. எல்லாவற்றையும் ஜனநாயகப்படுத்து, பகிர்ந்தளி, இயந்திரங்களுக்கு அடிமையாகிவிடாமல் யாவற்றிலும் மனித அம்சத்தைச் சேர் என்பதாக விரிகிறது. பொருளாதாரம் ஒரு நாட்டின் இஞ்ஜின், கடன் அந்த இஞ்சினை இயக்குவதற்கான எரிபொருள் என்றால் உழைப்பு என்பது அந்த எரிபொருளை எரிப்பதற்கான  தீப்பொறி என்று வருஃபாகிஸ் பொருத்தமாகவே வருணிக்கிறார். அந்தத் தீப்பொறியானது, சந்தைச் சமூகத்திற்கு மாற்றாக ஒரு ஜனநாயகச் சமூகத்தை உருவாக்கும் தனது வரலாற்றுப் பாத்திரத்தை உணர்வதற்கு இந்நூல் பெரிதும் உதவக்கூடும் என்கிற கரிசனத்தாலேயே இதை தோழர் எஸ்.வி.ஆர். தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பார்ப்பனீயமும் கார்ப்பரேட்டியமும் பின்னிப்பிணைந்திருக்கும் பாசிசம் ப்ளஸ் என்கிற அபாயம் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தவும் செயலாற்றத் தூண்டவுமான விருப்பத்துடன் அவர் இந்நூலை நமக்குத் தந்துள்ளார்.  இனி நம் பொறுப்பு. 

 பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் 

- முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு

யானிஸ் வருஃபாகிஸ், தமிழில்: எஸ்.வி. ராஜதுரை

வெளியீடு: க்ரியா, விலை ரூ. 275செம்மலர், 2020 செப்டம்பர் இதழ்


 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா

  2021 ஏப் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளன்று சென்னையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை நடத்திய “மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கம்” கருத்தரங்கில...