திங்கள், ஆகஸ்ட் 3

பெறுநர்: மூடுண்ட சிறையின் கைதி ஆனந்த் டெல்டும்ப்டே, அனுப்புனர்: திறந்தவெளிச் சிறையின் கைதி ஆதவன் தீட்சண்யா


அன்பொளிரும் தோழருக்கு, வணக்கம். உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் இக்கடிதத்தைத் தாமதமாக எழுதுகிறேன். உங்களைத் தெரிந்து கொள்வதற்கு நானெடுத்துக் கொண்ட காலத்தை ஒப்பிடுகையில் இது குறைவானதே.

பனிமூட்டத்தில் மங்கிய சித்திரம் போல வேற்றார் அறியாத எங்கோ ஒரு தொலைதூர குக்கிராமத்திற்கு வெளியே பிறந்த நீங்கள், இன்று உலகறிந்த ஆளுமைகளில் ஒருவர். ஒளியை மிஞ்சும் வேகத்தில் அறிவுழைப்பையும் உழைப்பறிவையும் வெளிப்படுத்தி இந்த உயரத்தை எட்டியிருக்கிறீர்கள். வாழ்வின் நோக்கம் கல்வி, வேலை, வருமானம், சொகுசு என்கிற குடுவைக்குள் அடைந்து செட்டிலாவதல்ல என்பதை மெய்ப்பித்துக் காட்டியபடியே எழுபதாவது பிறந்தநாளைத் தொட்டுவிட்டீர்கள். சற்றுநேரம் உங்களது கரங்களைப் பற்றிக்கொண்டு நிற்க வேண்டுமென மனம் தேடுகிறது தோழர்.  

பாகுபாட்டையும் ஒடுக்குதலையும் எவ்வகையிலேனும் எதிர்கொண்டே வாழ்வின் ஒவ்வொரு அடியையும் நொடியையும் கடந்தாக வேண்டிய இந்தச் சூழலுக்குப் பணிவதா அல்லது அதை மாற்றியமைக்கத் துணிவதா? நீங்கள் இரண்டாவதை தேர்ந்து வெளிப்படுத்திய போர்க்குணமே சமத்துவத்தின் மீது நாட்டத்தை உண்டாக்கி, உங்களை அம்பேத்கரிடமும் மார்க்சிடமும் கொண்டு சேர்த்திருக்குமெனக் கருதுகிறேன். சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் நிலவும் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தின் முன்வரிசைக்கும் நீங்கள் இவ்விதமாகவே வந்து சேர்ந்திருப்பீர்கள்.

சாதி, வர்க்கம், மதம், அரசு, அதிகாரம், பொருளாதாரம், மனிதவுரிமை என்று நீங்கள் துறைதோறும் ஆழங்கால் பதித்துப் பெற்ற அனுபவங்களை பேச்சாக எழுத்தாக களத்தில் விளைந்த மாற்றங்களாக அறிவுலகம் கண்டுணர்கிறது. ஓர் இடைச்சொல்லைப்போல லேசாக செருமியபடியே நீங்கள் ஆற்றிய உரைகளும், தமிழுக்கு வந்த உங்களது நூல்களும் கட்டுரைகளும் எனது கருத்துலகத்தை வளப்படுத்திக்கொள்ள இன்றளவும் உதவுவதன் பொருட்டான நன்றி இன்னும் செலுத்தப்படாமல் நிலுவையிலேயே உள்ளது. எனது புத்தகங்களில் பலவும் அலமாரியில் இருக்கும்போது அம்பேத்கர் தொகுதிகளும் எஸ்.வி.ஆர் நூல்களும் உங்களது நூல்களும் கைக்கெட்டும் தூரத்தில் தலைமாட்டில் இருப்பது தற்செயலானதல்ல. எனக்கு எப்போதும் தேவைப்படுகிறவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கிறீர் தோழர்.

இப்போது நாட்டை ஆண்டுகொண்டிருப்பது முசோலினி, ஹிட்லர் காலத்துப் பாசிஸத்தைவிடவும் கொடிய “பாசிசம்+” என்கிற உங்களது வரையறுப்பு மேலும்மேலும் மெய்யாகிக்கொண்டிருக்கிறது. ஜனநாயக அரிதாரங்களை களைந்துவிட்டு தானொரு ஒடுக்குமுறை கருவிதான் என்று அரசு முன்னிலும்  அப்பட்டமாக வெளிப்படுகிறது. மனிதமனங்களின் கீழ்மையான எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாகவே அரசு தனது நிகழ்ச்சிநிரலை வடிவமைக்கிறது. வெறுப்பும் மோதலும் பதற்றமும் மோசடியும் அடித்துப் பிடுங்கும் அராஜகமுமாக சமூகத்தை மாற்றிவிட்டு சங்கிகளும் கார்ப்பரேட்டுகளும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்து தத்தமது செயல்திட்டங்களை போர்க்கால வேகத்தில் நிறைவேற்றி வருகின்றனர். “எனது இந்தியா வீழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில்” என்று நீங்கள் எழுதியதன் இப்போது மேலும் விளங்குகிறது.

கண்ணாடியில் தனக்கு எதிராக தெரிவதால் தனது பிம்பத்தையே கூட தேசவிரோதி என முத்திரை குத்துமளவுக்கு மோடியின் சகிப்பின்மை தலைவிரித்தாடும் போது, அவரது ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து விமர்சிக்கும் உங்களை அவர் சகித்துக்கொள்ளாததில் வியப்பில்லை தோழர். இம்மென்றால் சிறைவாசம் என்பதெல்லாம் பழைய கதை, இப்போது இம்மென நினைத்தாலே கைது செய்யுமளவுக்கு போலிசும் புலனாய்வு அமைப்புகளும் மட்டுமீறிய அதிகாரத்துடன்  ஏவப்பட்டுள்ளன என்பதை அன்றாடம் நடக்கும் கைதுகளும் சித்திரவதைகளும் உறுதி செய்கின்றன. அமர்ந்தபடியே விசாரணை செய்யவும் தீர்ப்பு வழங்கவும் நீதிபதிகளை சட்டம் அனுமதிக்கிறது என்றாலும் முதுகெலும்போடு உட்கார்ந்தால் சற்றே நேராக தெரிவார்கள் என்று பரவலாக எழும் விமர்சன்ம் பொருட்படுத்தப்படுவதேயில்லை. ‘நீதிபதிகள் அரசு ஊழியர்கள் அல்ல, அவர்கள் அரசியல் சாசனத்தின் ஊழியர்கள்; சுதந்திரமாக செயல்பட வேண்டும்” என வற்புறுத்துகிறவர்கள் மிரட்டப்படுவதை நீங்களே அறிவீர்கள். ஜனநாயகத்தின் பிற தூண்கள் வளையும்போது ஊடகங்கள் மட்டும் நேராக செஞ்செவிக்க நிற்குமென எதிர்பார்ப்பது அறிவீனம்தான்.

நிலைமை இவ்விதமே நீடிக்குமானால் நாம் நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு சமீபத்தில் கிட்டாதென்றே நினைக்கிறேன் தோழர். அடுத்துவரும் சில பிறந்தநாள்களில்கூட நீங்கள் சிறையிலேயே தான் இருக்கவேண்டிவருமோ என்று எண்ணுவது எனது அதீத பயத்தினால் அல்ல தோழர். உங்களுக்கு சற்றும் தொடர்பற்ற ஒரு பொய்வழக்கில் உங்கள் பெயரை திட்டமிட்டே சேர்த்தது முதல் உங்களை கைது செய்து சிறையில் அடைத்தது வரையான சம்பவங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது அதில் வெளிப்படும் ஆட்சியாளர்களது வன்மமும் பழிவாங்கலும் அவ்வாறான யூகத்தின் பின்னே ஓடும்படி என்னை விரட்டுகின்றன.

சிறையிலே உங்களுக்கு கைவிலங்கிட்டு அடைப்பதற்கு போலிசார் அனுமதி கோரியதை இதற்கானதொரு அளவீடாக நான் கொள்கிறேன்.  உள்ளுக்குள்ளிருக்கும் காலத்தில் நீங்கள் ஏதாவது எழுதிவிடக் கூடாதென்கிற அச்சத்திலிருந்து அவர்கள் அவ்வாறு கேட்டதாக என்னால் சமாதானமடைய முடியவில்லை. அண்ணல் அம்பேத்கரது குடும்ப உறுப்பினர், அரசியல் விமர்சகர், மனித உரிமைச் செயற்பாட்டாளர், எழுத்தாளர், கல்வியாளர், நாட்டின் குறிப்பிடத்தக்க தொழிற்துறை மற்றும் நிர்வாக மேலாண்மைத் திறனுடையவர் என்று உங்களது ஆளுமையின் அத்தனை பரிமாணங்கள் மீதும் வரலாற்றுரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பகைமை கொண்டுள்ளவர்களின் கூட்டுக்கோரிக்கையது.

இதே பொய்வழக்கில் உங்களுக்கும் முன்பாக கைதுசெய்யப்பட்ட 81 வயது  தோழர் வரவரராவ்,    மூப்பும் பிணியும் வாட்டும் நிலையில் நினைவுபிறழ்ந்து கிடக்கும்போதும் அவரை மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையளிப்பதற்கு ஆட்சியாளர்கள் மறுத்தது கண்டு உலகமே குமுறியது. பலரது கண்டனத்திற்குப் பிறகு மருத்துவமனைக்கு மாற்றியபோதும் அவரை பிணையில் விட மறுக்கிறது அரசு. வயதையும் கொரானவையும் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு பிணை பெறுவதற்கு அவர் முயற்சிக்கிறார் என்கிற வாதத்தில் வழியும் அரசின் குரோதம் பிணை பெறுவதற்கான உங்களது முயற்சிகளையும் தடுக்கும் என அஞ்சுகிறேன் தோழர்.

நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கெளரி லங்கேஷ் போன்ற மாற்றுக் கருத்தாளர்களை கொன்றொழிப்பது அவர்களது அழித்த்தொழிப்பின் ஒருவகை என்றால் உங்களைப் போன்ற தோழர்களை இந்தக் கொரானா காலத்தில் சிறையில் அடைத்து சாகவிடுவது மற்றொரு வகையாக இருக்கக்கூடுமோ என்றெழும் ஐயம் எனக்கு ஸீக்ரிப்ட் லென்ஸின் “நிரபராதிகளின் காலம்” நாடகத்தை நினைவூட்டுகிறது. உங்களுக்கு அந்தக் கதை நினைவுக்கு வருகிறதா தோழர்?

ஆட்சியாளனின் அரசியல் எதிரி சிறையில் அடைக்கப்பட்டிருப்பான். அவனிடம் ஒரேயொரு தகவலை மட்டும் விசாரித்துச் சொல்லிவிட்டால் அந்த நிமிடமே உங்களுக்கு விடுதலை என்று சிலரை வம்படியாக பிடித்துவந்து அவனோடு சேர்த்து அடைத்து வைப்பார்கள். இவர்கள் அவனிடம் போலிசுக்கு பதிலாக விசாரணை செய்வார்கள். அவன் பதிலளிக்க மறுப்பான். தங்களை விடுவித்துக்கொள்ளும் பதைப்பில் பொறுமையிழக்கும் அவர்கள் ஒருகட்டத்தில் ஒவ்வொருவருமே அவனிடம் கடுமை காட்டுவார்கள். ஒரு அதிகாலையில் அவன் பிணமாகக் கிடப்பான். அவர்கள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள். தனது அரசியல் கைதியை கொல்லவேண்டும் என்கிற விருப்பத்தை இப்படி பிறத்தியாரை பிடித்தேவி நிறைவேற்றிக் கொண்ட அந்த ஆட்சியாளனைப்போல இங்குள்ளவர்கள் கொரானாவைப் பயன்படுத்திக்கொள்ளும் துராசையில் அலைகிறார்களோ எனப்படுகிறது. இவ்வாறு நினைப்பது எனக்கே பெரும் வாதையாக இருக்கிறதென்றால் உங்களது இணையரும் மகள்களும் எத்தகைய உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதை உணர்கிறேன் தோழர்.

கைதாகும் முன் நீங்கள் நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் “உங்கள்முறை வரும் முன் பேசுங்கள்” என்றீர்கள். உலகெங்கும் உங்கள் விடுதலை பற்றி நாங்கள் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் அது வெறும்பேச்சாக தேய்ந்துவிடக்கூடாது, பலனளிக்கும் பேச்சாக வலுப்பெற வேண்டும் என்கிற எனது விருப்பத்தை சிறைக்குள்ளிருந்தாலும் உங்கள் மனமறியும் என்று நம்புகிறேன் தோழர்.      

நன்றி: செம்மலர், 2020 ஆகஸ்ட் 


 

 

 

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...