கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 18

குலத்தொழில் 2.0 -ஆதவன் தீட்சண்யா

ஆரியர் கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் விஸ்வகர்மா. அவர் 4320000 ஆண்டுகளைக் கொண்ட கிருத (1728000 ஆண்டுகள்), திரேத (1296000 ஆண்டுகள்), துவாபர (864000 ஆண்டுகள்), கலி (432000 ஆண்டுகள்)  ஆகிய நான்கு யுகங்களிலும் கடவுள்களுக்காகவும் மன்னர்களுக்காகவும் இந்தியா, இலங்கை மற்றும் தேவலோகத்தில் பல நகரங்களையும் மாடமாளிகைகளையும் கூடகோபுரங்களையும் உருவாக்கிய கட்டுமானப் பொறியாளர் என்று புகழப்படுகிறார். கிருத யுகத்தில் சொர்க்கலோகத்தை இவர்தான் உருவாக்கியிருக்கிறார். நரகலோகத்தை யார் உருவாக்கினார்கள் என்கிற தரவேதும் கிடைக்கவில்லை. திரேத யுகத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது சிவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க தங்கத்தாலான லங்கா என்கிற அரண்மனையைக் கட்டுவித்திருக்கிறார். அதன் கிரஹப்பிரவேசத்திற்கு வந்திருந்த ராவணன் அரண்மனையின் அழகைப் பார்த்து வியந்து கிடந்திருக்கிறான். அந்நேரம் பார்த்து சிவனானப்பட்டவர் ராவணனிடம் ‘வேண்டியதைக் கேள்’ என்று தெரியாத்தனமாக கூறிவிட, ராவணனோ இதுதான் சாக்கென்று  அரண்மனையையே கேட்டிருக்கிறான். வேறுவழியின்றி சிவனும் கொடுத்துவிட வேண்டியதாயிற்று. பின்னாளில், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதை அங்குதான் தன் காலத்தைக் கழித்தாள்.  

இவையன்றி விஸ்வகர்மா, துவாபர யுகத்தில் மதுராவில் பிறந்து அங்கிருந்து புலம்பெயர்ந்து குஜராத் வந்து சேர்ந்த கிருஷ்ணன் கேட்டுக்கொண்டதற்கிணங்க துவாரகா என்கிற நகரை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார். சமுத்திரதேவனால் தானமளிக்கப்பட்ட 12 யோஜனை பரப்பளவில் (776 சதுர கி.மீ) அமைக்கப்பட்ட அந்நகரத்தின் அழகையும் விஸ்வகர்மாவின் கட்டுமான நுட்பங்களையும் காண விரும்புகிறவர்கள் அரபிக்கடலுக்கடியில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்படியே கலியுகத்திற்கு வந்தோமானால், விஸ்வகர்மா பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமாக ஹஸ்தினாபுரம் என்கிற நகரை அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் பங்காளிச்சண்டையினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பாண்டவர்கள் தமக்கென தானமாகப் பெற்ற இடத்தில் ஒரு தலைநகரை நிர்மாணித்துக் கொடுக்குமாறு விஸ்வகர்மாவிடம் வேண்டியுள்ளனர். அப்போது அவர் நிர்மாணித்த நகரம்தான் இந்திரபிரஸ்தா. அதாவது ஆரியக்கடவுளான இந்திரனின் நகரம். விஸ்வகர்மாவின் கட்டிடக் கலை நுட்பம் மற்றும் அழகுணர்வின் உச்சம் என்று போற்றப்படுமளவுக்கு அங்கு பளிங்குக்கற்களை இழைத்திழைத்துக் கட்டிய அரண்மனைக்கு வந்த துரியோதனன், தரை எது தண்ணீர் எது என்று பகுத்துணர முடியாத குழப்பத்தில் தவறிப்போய் குளத்தில் விழுந்துவிடுகிறான். இதுகண்டு பாண்டவர்களின் மனைவி திரௌபதி கெக்கலியிட்டு கேலியாக சிரித்துவிட்டதில் அவமானப்பட்டுப் போன துரியோதனனுக்கு குருஷேத்திரப் போரை நடத்துவதற்கு அதுவே போதுமான காரணமாகிப் போனது. இப்பேர்க்கொத்த விஸ்வகர்மாவின் பரம்பரையில் வந்தவர்கள் என நம்புவோரிடம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டித்தரும் பொறுப்பை  ஒப்படைக்காமல், டாடாவுக்கு சில ஆயிரம் கோடிகளைத் தூக்கிக் கொடுத்தவர் தான் பிரதமர் மோடி என்று கவனத்தில் வையுங்கள்.

நகரங்களையும் கட்டிடங்களையும் நிர்மாணிப்பவராக மட்டுமன்றி தேர்களையும் போர்க் கருவிகளையும் வடிவமைத்து உருவாக்குவதிலும் வல்லவர் என விஸ்வகர்மா காட்டப் படுகிறார். அவர் சிவனுக்கென்று ஒன்றும் விஷ்ணுவுக்கென்று ஒன்றுமாக இரண்டு தெய்வீக விற்களைச் செய்திருக்கிறார். ஜனகன் வசமிருந்த சிவனின் வில்லை ராமன் ஒடித்துவிட்டதை அறிந்த பரசுராமன், தன்னிடமுள்ள விஷ்ணு வில்லை உடைத்துக் காட்டும்படி ராமனை அழைத்ததுடன் அவ்வாறு உடைத்துவிட்டால் ஒற்றைக்கு ஒற்றையாய் ராமனுடன் போரிடத் தயார் என்றும் அறிவித்தான் என்கிற குறிப்பு விஸ்வ கர்மாவின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. (பார்க்க: அம்பேத்கர் நூல்தொகுதி 8, பக்:99) 

இப்படி ஆரியக்கதைகள் நெடுகிலும் வந்து தமக்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கிக் கொடுத்த ஒருவரை விஸ்வகர்மா - உலகத்திற்கானவற்றை உருவாக்குபவர் என்று ஆரியர்கள் கொண்டாடினர். அந்த ஆரியக்கருத்தியலின் வழித்தோன்றல்கள் ‘உலகத்திற்கு ஏதேனுமொன்றை படைத்தளிக்கும் எவரொருவரும் தம்மை விஸ்வ கர்மாவின் ஒரு பகுதியாக உணரவேண்டும்’ என்று வாதிடுகின்றனர். தொழிலாளர் தினம் என்று மே ஒன்றாம் தேதியைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, விஸ்வகர்மாவின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதியைக் கொண்டாட வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு. 4320000 வருடங்களுக்கு முன்பிருந்து கன்ஸ்டரக்ஷன் ஒர்க் செய்துவரும் ஒருவருக்கு இப்போது எப்படி பிறந்தநாளைக் கண்டுபிடித்தார்கள் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, அந்த நாளில் எடக்குமடக்காக எதையாவது செய்வது அவர்களது வாடிக்கையாக உள்ளது. அந்தவகையில் இந்த 2023 செப்டம்பர் 17 அன்று பாஜக ஒன்றிய அரசு 13000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் விஸ்வகர்மா யோஜனா என்கிற திட்டமொன்றை மிகுந்த ஆரவாரத்துடன் அறிவித்துள்ளது. அதேநாளில்தான் பிரதமர் மோடியும் பிறந்தார் எனச் சொல்லப்படுவது எந்தளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. 

விஸ்வகர்மா யோஜனா திட்டம் தன்னளவில் தனித்த ஒன்றாக வெளித்தோற்றத்திற்குத் தெரிந்தாலும் உண்மையில் அது குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தம் 2016, மற்றும் தேசிய கல்விக்கொள்கை 2020 ஆகியவற்றுடன் உள்ளிழையாக பிணைக்கப்பட்டுள்ளது. விளையாடவும் படிக்கவும் உடல் மற்றும் மனரீதியாக வளரவும் உரிமையுடைய பருவத்தில் இருக்கின்ற இந்தியாவின் குழந்தைகளை மோடி அரசு யாராக வளர்த்தெடுக்க விரும்புகிறது என்பதை அறிய விரும்புகிற எவரொருவரும் இம்மூன்று விசயங்களும் எவ்வாறு ஒன்றுடனொன்று வலுவாக  தொடர்புபடுத்தப்பட்டுள்ளன என்பதை அறிய வேண்டியுள்ளது. 

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5-9 வயதுக்குட்பட்ட 11,08,808 குழந்தைகள் முழு நேரத் தொழிலாளர்களாகவும் 14,24,830 குழந்தைகள் பகுதிநேரத் தொழிலாளர்களாகவும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்றும் 9-14 வயதுக்குட்பட்ட 32,44,439 குழந்தைகள் முழுநேர தொழிலாளர்களாகவும் 43,50,586 குழந்தைகள் பகுதிநேரத் தொழிலாளர்களாகவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. உண்மை நிலவரம் இந்தப் புள்ளிவிவரங்களை விடவும் பன்மடங்குக் கூடுதலாக இருப்பதற்கே வாய்ப்பதிகம். இந்த அவலநிலையை மாற்றும் என்று ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தம் 2016 தன் பங்கிற்கு மேலும் பல கோடி குழந்தைகளைத் தொழிலாளர்களாக நெட்டித் தள்ளும் தந்திரத்துடன் வந்து சேர்ந்தது. இது, இதற்கு முந்தைய 1986ஆம் ஆண்டு சட்டம் குழந்தைகளுக்கு வழங்கியிருந்த பல சட்டப்பாதுகாப்புகளையும் ஒழித்துக்கட்டியுள்ளது என்று கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

* குடும்பத்தினர் (கேடுவிளைவிக்காத) தமது தொழிலிலும் வணிகத்திலும் குழந்தைகளை ஈடுபடுத்தலாம் என்று முந்தைய சட்டத்தைப் போலவே கூறும் இப்புதிய சட்டம் குடும்பம் என்பதற்கு மறுவரையறையை முன்வைக்கிறது. அதாவது குழந்தை, அதன் தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள், தாயின் சகோதரர்கள் சகோதரிகள், தந்தையின் சகோதரர்கள் சகோதரிகள் ஆகியோரைக் கொண்டதுதான் குடும்பம் என்கிறது. ஆகவே இவர்களில் யார்  ஒரு குழந்தையை உழைப்பில் ஈடுபடுத்தினாலும் அது குற்றமில்லை என்கிறது இச்சட்டம். இதன்படி, ஒரு நிறுவனம் நேரடியாக குழந்தையை வேலைக்கமர்த்தினால் தான் குற்றம்; அதே வேலையை குடும்பத்தவர் யாரிடமாவது கொடுத்து  அவர்கள் தமது குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக் கொண்டால் அதற்கு நிறுவனம் பொறுப்பில்லை. ஏற்கனவே பீடி சுற்றுதல், செங்கல் சூளை போன்ற முறைசாரா தொழில்கள் பலவற்றிலும் இவ்வாறு ஈடுபடுத்தப்பட்டுள்ள குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் கூடுவதற்கு இந்தத் திருத்தம் பயன்படும்.  

* 18 வயதுக்குட்பட்ட அனைவரையும் குழந்தைகள் என்று சிறார் நீதிச்சட்டம் சொல்லும் நிலையில் அதற்கிசைவாக 18 வயதுக்குட்பட்ட அனைவரும் குழந்தைகள் என்று குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டமும் திருத்தப்படுவதே ஏற்படையதாகும். ஆனால், புதிய சட்டம் 14வயதுக்கு கீழுள்ளவர்களை மட்டுமே குழந்தைகள் என்று வரையறுக்கிறது. ஆனால் அந்தக் குழந்தைகளை குடும்பத்தின் பாரம்பரியத் தொழில்களில்  வேலைக்கு அமர்த்திக்கொள்வதைத் தடுப்பதற்கு செயல்பூர்வமான அணுகுமுறை எதையும் இச்சட்டம் கொண்டிருக்கவில்லை. மேலும் இவ்வகையான குழந்தைத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் அடிநிலைச்சாதிகளைச் சார்ந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களது குடும்பத்திற்குரிய பாரம்பரியத் தொழில்கள் என்பவை சமூக இழிவுடனும் சாதிய ஒடுக்குமுறையுடனும் இணைக்கப் பட்டவையாகவே இருக்கின்றன.    

* 14 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பதின்பருவத்தினர் என்று வகைப்படுத்தும் புதிய சட்டம், அவர்கள் 18 வயதைக் கடக்கும் வரையிலும்கூட காத்திருக்கும் பொறுமையின்றி அவர்களின் உழைப்பை 14 வயது முடிந்ததிலிருந்தே உறிஞ்சிக்கொள்ள அனுமதிக்கிறது. 

* கேடு விளைவிக்கக்கூடிய 18 வகையான உற்பத்தித்தொழில்களிலும் 65 வகையான பதப்படுத்தும் தொழில்களிலும் 15-18 வயதினரை பயன்படுத்தக்கூடாது என்று குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1986, தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் 1987 (திருத்தப்பட்டது) ஆகியவை தடுத்திருந்தன. ஆனால் குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 2016, கேடு விளைவிக்கக்கூடிய தொழில்களின் பட்டியலை சுரங்கம், வெடிமருந்து தொடர்பான வேலைகள் மற்றும் தொழிற்சாலை விதிகள் 1948ல் ஆபத்தானவை என்று பட்டியலிடப்பட்டுள்ள பதப்படுத்தும் வேலைகள் என்று மூன்றாகச் சுருக்கிவிட்டது. இதன் மூலம் மற்றெல்லா வேலைகளிலும் பதின்பருவத்தினரை அமர்த்திக் கொள்ள முடியும். 

5-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளாயினும், 9-14 வயதுக்குட்பட்ட பதின் பருவத்தினராயினும் முழுநேரமாகவோ பகுதிநேரமாகவோ ஒரு வேலையில் அமர்த்தப்படும்போது அவர்கள் கல்வி கற்பதிலிருந்தும் குழந்தைப் பருவத்திற்கேயுரிய மற்ற செயல்பாடுகளிலிருந்தும்  முற்றாகவோ  மாறுபட்ட அளவுடனோ விலக்கப்படுகிறார்கள். ஆரம்பக்கல்வியில் சேரும் 100 மாணவர்களில் 33 பேர்தான் மேல்நிலைக்கல்விக்கு வந்து சேருகிறார்கள். மீதி 67 பேரை உழைப்புச்சந்தை விழுங்கிக்கொண்டிருக்கிறது.  2016-17ல் எடுக்கப்பட்ட இன்னொரு கணக்கின்படி, 6-17 வயது வரையான 3.22 கோடி குழந்தைகள் பள்ளிகளிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் உழைப்புச்சந்தைக்குச் செல்வதன்றி வேறென்ன வழி? இந்தக் கொடூரச்சுரண்டலை பாரம்பரியத் தொழிலை பழகுதல், குடும்பத்திற்கு ஒத்தாசையாக வேலை செய்தல் எனப் பசப்பி தீவிரப்படுத்துகிறது குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 2016. 

***

இப்போது 2020 தேசிய கல்விக்கொள்கைக்கு வருவோம். அதன்படி ஒரு மாணவர் 3, 5, 8ஆம் வகுப்புகளில் ஒவ்வொரு பொதுத்தேர்வையும் 9-12 ஆம் வகுப்புகளில் 8 பொதுத் தேர்வுகளையும் அதாவது, 11 பொதுத்தேர்வுகளை எழுதியாக வேண்டும் என்கிறது. இதற்கும் மேலே பட்டம் படிப்பதெனில் அதற்கென தனியே தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை எழுதியாக வேண்டும். இத்தனைத் தேர்வுகளுக்கும் ஈடுகொடுத்து தேறிவருவதற்கு கற்கும் ஆர்வமும் திறனும் மட்டுமே போதுமானவையல்ல. கற்பதற்கு கிளம்பும் சூழல் சமமாக இல்லாத இச்சமூகத்தில் கற்றல் வாய்ப்பையும் தேர்வுகளையும் மட்டும் சமமாக கொடுப்பதனால் பெரும்பயன் விளைந்து விடாது. இடையறாத பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு பதற்றத்தையும் மன அழுத்தத்தையுமே உருவாக்கும். முன்பைக் காட்டிலும் இடைநிற்றல் அதிகரிக்கும். முறையான கல்வி பெறாமல் பள்ளிகளிலிருந்து வெளியேறுகிறவர்கள் தமது குடும்பத்தின் பாரம்பரிய வேலைகளில் அல்லது வேறு முறைசாரா தொழில்களில் போய்ச் சேர்வதன்றி வேறென்ன செய்யமுடியும்? 

இதன்றி, 6ஆம் வகுப்பிலிருந்தே பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக தொழிற்கல்வி முன்னிறுத்தப் படுகிறது. அதுபற்றி கொள்கையின் 4 மற்றும் 16ஆம் இயல்கள் விரிவாக பேசுகின்றன. மாணவர் ஒவ்வொருவரும் 6-8ஆம் வகுப்புகளின்போது 10நாட்கள் புத்தகப் பையில்லாமல் செல்வார்கள். இந்நாட்களில் அவர்கள் உள்ளூரிலுள்ள செய்தொழில் சார்ந்து - தச்சர்கள், தோட்டக்காரர்கள், குயவர்கள், கைவினைக் கலைஞர்கள்  போன்ற உள்ளூர்ச் செய்தொழில் வல்லுநர்களிடம் குரு சிஷ்ய முறையில் தச்சுவேலை, உலோக வேலை, தோட்ட வேலை, மட்பாண்ட வேலை, மின்சாதனங்கள் தொடர்பான வேலைகள் உள்ளிட்டவற்றை கற்றுக் கொண்டாகவேண்டும். இந்தச் சாதிய சமூகத்தில் இயல்பாகவே மாணவர்கள் என்ன தொழிலைக் கற்க விரும்புவார்கள் அல்லது வல்லுநர்கள் யாருக்கு எதை கற்றுத்தர முன்வருவார்கள்? சரி அப்படித்தான் என்ன தொழிலைக் கற்றுத்தந்து விடுவார்கள் என்று அறிய விரும்புகிறவர்கள் இந்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2021-2022 ஆண்டறிக்கையில் Vocational Education Programmes 1. Reimagining Vocational Education as per NEP2020 என்ற தலைப்பின் கீழுள்ள பகுதியை படித்துப்பார்க்கவும். பூத்தையல் (எம்ப்ராய்டரி), கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்தல், தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, சிகையலங்காரம், அழகுபடுத்தும் கலை, தையல், யோகா, கணினிப் பயிற்சி என்று நீள்கிறது இந்தப் பட்டியல். முறைசாரா அல்லது திறந்தநிலைப்பள்ளிகளில் நடக்கும் இந்தப் பயிற்சிகள் பள்ளிகளுக்குள் முறைசார் கல்வியாக கொண்டு வரப்படுகிறது. பாஜக பரிந்துரைக்கும் புகழ்பெற்ற வேலைவாய்ப்பான “பக்கோடா” போடும் வேலையை இந்தப் பயிற்சியில் ஏன் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை. 

9-12ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கு வெவ்வேறு தொழில்களைப் பற்றிய அறிமுகத்துடன், அவர்கள் தேர்வுசெய்யும் தொழிலில் நிபுணத்துவத்திறனை அடைவதற்குரிய உதவிகள் செய்யப்படுமாம். ஆனால் மாணவர் தெரிவு செய்யும் தொழில் உள்ளூரில் இருக்கக்கூடிய தொழில்களில் ஒன்றாக இருக்கவேண்டும். 12ஆம் வகுப்பை நிறைவுசெய்த பின் அவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்று கல்விக்கொள்கை முடிக்கும் இடத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்குகிறது. செய்தொழில் ஒன்றை ஆறாம் வகுப்பிலிருந்தே பழக்கி அதன்வழியே வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஒருபகுதி மாணவர்களை உயர்கல்விக்குச் செல்லாமல் பாரம்பரிய அல்லது உள்ளூர்த் தொழிலுக்குத் திருப்பிவிடும் பொறுப்பை கல்விக்கொள்கை ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்வாறு வருபவர்களை பாரம்பரியத் தொழிலைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்திவிடாதபடி இழுத்துப்போடும் பொறுப்பை விஸ்வகர்மா யோஜனா பார்த்துக் கொள்கிறது. 

மண், மரம், தங்கம் மற்றும் வெள்ளி, இரும்பு மற்றும் உலோகங்கள், தோல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானம், பாய்முடைதல், கயிறு திரித்தல் ஆகியவை சார்ந்த 18 வகையான பாரம்பரியத் தொழில்கள் முதற்கட்டமாக விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி தச்சர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர், பூட்டு தயாரிப்பவர், பொற்கொல்லர், குயவர், சிற்பி ( சிலை வடிப்பவர், கல் தச்சர், கல் உடைப்பவர்), காலணி தைப்பவர் (காலணி தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்), கொத்தனார், கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு திரிப்பவர், பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்), முடி திருத்தும் தொழிலாளி, பூமாலை தொடுப்பவர், சலவைத் தொழிலாளி, தையல்காரர் மற்றும் மீன்பிடி வலை தயாரிப்பவர் ஆகியோர் தமது தொழிலை பாரம்பரியமாக - குடும்பரீதியான சுய தொழிலாக - முறைசாரா வகையில்- கைகள் மற்றும் கருவிகளால் செய்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் அனைவரையும்  பி.எம்.விஸ்வகர்மாக்கள் என்று வகைப்படுத்தி புகழ்கிறது இத்திட்டம். அதாவது இவர்கள் ஒரிஜினல் விஸ்வகர்மாக்கள் இல்லை, பிரதமரின் விஸ்வகர்மாக்கள். விஸ்வகர்மா என்கிற பெயரில் உள்ள சாதியினர் ஒன்றிய அரசின் இந்தப் புதிய வகைப்படுத்தலை ஏற்கிறார்களா என்று தெரியவில்லை.  

பி.எம்.விஸ்வகர்மாக்கள் திட்டத்தின்படி குடும்பம் என்பது கணவன், மனைவி திருமணமாகாத-18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ஆகியாரைக் கொண்டது. இந்தக் குடும்பத்தில் 18 வயது நிரம்பிய ஒருவர் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் பயனாளியாக தன்னை பதிவுசெய்துகொள்ள தகுதி படைத்தவராகிறார். அவருக்கு பி.எம். விஸ்வகர்மா என்கிற சான்றிதழும் அடையாள அட்டையும் தரப்படும். அவற்றைக் கொண்டு அவர்கள் இந்தத் திட்டத்தின் பயன்களை அடையலாம். பயன்கள் என்றால் ஏதோ அதானிக்கும் அம்பானிக்கும் தூக்கிக்கொடுப்பது போல கொடுப்பார்களாக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். முதற்கட்டமாக அவர்களது தொழிற்திறனை மதிப்பிட்டு அதற்கேற்ப 5-7 நாட்களில் 40 மணிநேர அடிப்படைப் பயிற்சி தரப்படும். இந்தப் பயிற்சி இத்தொழிலில் வல்லுநர்களாக உள்ளவர்களால் குரு - சிஷ்ய முறையில் வழங்கப்படும். (தேசிய கல்விக்கொள்கையில் சொல்லப்படுகிற அதே குரு-சிஷ்ய முறை). இப்பயிற்சியின் முடிவில் 5-8% வட்டியில் ஒரு லட்ச ரூபாய் கடன் வழங்கப்படும். கடனை 18 மாதங்களில் திருப்பிச் செலுத்தவேண்டும். இதற்கு அடுத்த நிலையில் தொழிலை நவீனப்படுத்துவது, விரிவுபடுத்துவது, சந்தைப்படுத்துவது ஆகியவற்றுக்கான பாடங்களுடன் 15 நாட்களில் 120 மணி நேரத்திற்குரிய மேம்பட்ட பயிற்சியும்,  பயிற்சியின் முடிவில் ரூ.2 லட்சம் கடனும் வழங்கப்படும். 30 மாதங்களில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும். இரண்டு பயிற்சிகளின் போதும் நாளொன்றுக்கு ரூ.500 மதிப்பூதியமாக வழங்கப்படும். விமான நிலையங்களைப் பராமரிப்பதில் எவ்வித அனுபவமும் இல்லாத அதானியிடம் ஆறு விமான நிலையங்களையும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களையும் வாரிக் கொடுத்த மோடி அரசு, அடித்தள மக்கள் பரம்பரையாக செய்துவரும் தொழிலில் அவர்களுக்கே பயிற்சி கொடுக்கப்போவதாக அலட்டுகிறது. வெறும் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு ஊருலகத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறது. 

இதுபோன்ற பயிற்சிகள், கடன்கள் மற்றும் மானியங்களை ஏற்கனவே உள்ள நுண் சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வேறு நிதிநிறுவனங்கள் மூலமாகவோ கொடுத்து விட முடியும். ஆனால் அப்படி அறிவித்தால் யார் வேண்டுமானாலும் எந்தத் தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என்று பெயரளவிலேனும் ஏற்றுக் கொண்டதாகிவிடும். பார்ப்பனீயத்தின்படி சமூகத்தை மறுகட்டமைப்பு செய்யத்துடிக்கும் மோடி அரசு இதை எப்படி சகித்துக்கொள்ளும்? எனவேதான் இன்னின்ன சாதியினர் இன்னின்ன தொழிலைத்தான் பரம்பரையாகச் செய்யவேண்டும் என்று 1950களில் ராஜாஜி குலக்கல்வி திட்டத்தின் மூலம் திணிக்கப் பார்த்ததை, விஸ்வகர்மா யோஜனா என்கிற பெயரில் திரும்பவும் கொண்டு வந்துள்ளது மோடி அரசு.

 விஸ்வகர்மா யோஜனாவின் பயனாளி என 18 வயது நிரம்பிய ஒருவர் வருகிறாரே, அவர் யார்? அவர் பள்ளிக்கூடத்தையே எட்டிப்பார்க்காதவராகவோ அல்லது கல்வியைத் தொடரமுடியாமல் இடைநின்றவராகவோ தான் இருக்கமுடியும். அவரது ஆளுமைப் பண்புகள் திறன்கள் ஆர்வங்கள் புறந்தள்ளப்பட்டு அவரை அவரது குலத்தொழிலுக்குள் தள்ளி நிரந்தரப்படுத்த வழிகோலுகிறது இந்தத் திட்டம். ஒருவேளை அவர் படித்துக் கொண்டிருப்பவரானால் 18 வயது என்பது அவர் 12ஆம்வகுப்பு முடிந்து உயர் கல்விக்காக கல்லூரிக்கு நுழையவேண்டிய வயது அது. ஆனால் அவர் திசை திருப்பப்பட்டு பாரம்பரியத் தொழில்சார் பயிற்சி, பயிற்சி நாட்களுக்கு மதிப்பூதியம், பயிற்சிக்குப் பிறகு கடன், சுயதொழில் என்று உயர்கல்விக்குச் செல்லாமல் குலத்தொழிலுக்கு விரட்டப்படுகிறார். நவீன கல்வி, நவீனத் தொழில், நவீன வாழ்க்கை முறை என்று தற்காலத்திற்குள் வாழ விரும்புவோரை வழிமறிக்கும் விஸ்வகர்மா யோஜனாவை எதிர்த்துப் போராடி வீழ்த்துவதைத் தவிர நம் இருப்புக்கு என்ன நியாயம் இருக்கிறது? 

ஆதாரங்கள்:

https://www.right-to-education.org/blog/one-step-forward-two-steps-back-amendments-child-labour-legislation-india 

Flawed Child Labour Law Amendment - Komal Ganotra, EPW 2017 Aug 27 

https://pmvishwakarma.gov.in/FileHandling/GetPdf/MiscFiles%5Ceng_28.0_PM_Vishwakarma _Guidelines_final.pdf 

https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/nep_achievement.pdf 

«îCò è™M‚ªè£œ¬è 2020 

கல்வியைத் தேடி: தேசியவாதக் கல்வி - எதிர் சமுதாய உந்துவிசைக் கல்வி - லெ. ஜவகர்நேசன்

தமிழில்: கமலாலயன், பாரதி புத்தகாலயம் வெளியீடு


நன்றி: நீலம் நவம்பர் 2023 இதழ்

வெள்ளி, டிசம்பர் 31

ரைட்டர்: வாழ்வை அதிகாரம் சூறையாடும் போது நீங்கள் பார்வையாளரா பங்குதாரியா? -ஆதவன் தீட்சண்யா



சைரனை அலறவிட்டபடி தலைதெறித்தோடும் காவல்துறை/ ராணுவ வாகனங்கள் யாரையோ காப்பாற்றவோ ஏதோவொரு குற்றத்தை தடுத்திடவோ தான் ஓடுகின்றன என்று நம்பிவிடாதீர்கள். ஒருவேளை அவை உங்களது அப்பாவி பிள்ளைகளை கண்காணா இடங்களுக்குக் கடத்திப்போய் குற்றவாளிகள் என்று பொய்முத்திரை குத்தி என்கவுண்டரில் சுட்டுத்தள்ளவும் ஓடக்கூடும்.

என்கவுண்டரில் போலி அசல் என்கிற பகுப்புகள் அர்த்தமற்றவை. அனேகமான  என்கவுண்டர்கள் இட்டுக்கட்டப்பட்டகுற்றச்சாட்டுகளின்பேரிலான படுகொலைகளே. 20 இலட்சம் ரூபாய் விருதுத்தொகையைப் பெற்றுவிடும் பேராசையில் காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் அப்பாவி இளைஞர்கள் மூவரை சுட்டுக்கொன்றுவிட்டு ‘தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை’ என்று ராணுவத்தார் நாடகமாடினர். நாகாலாந்தில் பணிமுடித்துவந்த சுரங்கத்தொழிலாளர்கள் தீவிரவாதிகள் என ராணுவத்தாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பனிமூட்டத்தில் மங்கலாக கண்ணுக்குத் தென்பட்ட மாத்திரத்திலேயே தேசவிரோதி என்று துப்பறிந்து உயிரெடுத்துவிடுகிறார்கள்.

குடிமக்களுக்கு எதிராக எந்த பழிபாவத்தையும் செய்துவிட்டு நாட்டின் பாதுகாப்புக்காக என்று சொல்லிவிட்டால் நியாயமாகிவிடும் என்கிற தைரியம் போலிசாருக்கும் ராணுவத்தாருக்கும் எங்கிருந்து வருகிறது? ‘உரிமைகளுக்காகப் போராடும் குடிமைச்சமூகம் நாம் முறியடித்தாக வேண்டிய புதிய போர்முனையாக உருவெடுத்துள்ளது’ என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகரால் வெறியேற்றி அனுப்பப்படும் போலிஸ் அதிகாரிகள் மக்களை தேசவிரோதிகளாகவும் குற்றவாளிகளாவும்தானே அணுகுவார்கள்? குடிமக்கள் தமது உடல்மீது முழுவுரிமை கோரமுடியாது என்று கொக்கரிக்கும்  ஓர் அரசின் ஏவல்படையினர் இவ்வாறு துள்ளுவதில் வியப்பேது! 

இங்கு தேசப்பாதுகாப்பின் பெயரால் நிறைவேற்றிடும் சட்டங்கள் யாவும் தேசத்தைப்  பாதுகாப்பதற்கானவையல்ல. அச்சட்டங்கள் ஆளும் வர்க்கத்தினரின் குறுகிய நலன்களை பாதுகாப்பதற்காகவோ அவர்களது தனிப்பட்ட பகைமைகளை தீர்த்துக் கொள்ளவோ கருத்தியல் எதிராளிகளை "அப்புறப்படுத்தவோ" நிறைவேற்றப்பட்டதாகவும் இருக்கலாம்.

ஆள்தூக்கிச் சட்டமான ஊபாவின் கீழ் சிறையில் வாடும் ‘பிகே16’ குற்றவாளிகள் இந்நாட்டின் மதிக்கத்தக்க மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் கல்வியாளர்களுமாவர். முன்னதாக, அவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும்படியான கோப்புகள் அவர்களது கணிணிகளிலும் செல்பேசிகளிலும் ஊடுருவிய மர்மநபர்களால் ஊன்றப்பட்டன. பின் அக்கோப்புகளை அவர்களுக்கெதிரான சான்றுகளாக்கி தேசியப்புலனாய்வு நிறுவனம் கைது செய்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, கல்விவளாக உரிமைகளுக்காக, ஊடகச் சுதந்திரத்திற்காகப் போராடிய பலரையும் இந்த ஊபாவின் கீழ் கைதுசெய்து சொல்லொணா கொடூரங்களுக்கு ஆட்படுத்துவதெல்லாம், "கருத்தியல் எதிராளிகளை அப்புறப்படுத்துவது" தானே!. அன்றாட பரபரப்புகளாக நம்மைக் கடக்கும் இத்தகைய நடப்புண்மைகளை நினைவூட்டும் விதமான கதையமைத்து, சகமனிதர்களின் வாழ்வை அதிகாரம் சூறையாடும் போது நீங்கள் பார்வையாளரா அல்லது பங்குதாரியா என்கிற கேள்வியை  எழுப்பி் நம் காலத்தின் அரசியல் படமாக உருவெடுத்துள்ளது ரைட்டர்.

ரைட்டர், தனிமனிதரிடமும் சமூக நிறுவனங்களிலும் அரசியந்திரத்திலும் வெவ்வேறு அளவிலும் வடிவிலும் நிலைகொண்டுள்ள அதிகாரமானது, தம்மிலும் எளியோர்க்கு எதிராக இயங்கும் நுண்தளங்களின் நேர்சித்திரமாகும். ஆணாதிக்கமும், சாதியாதிக்கமும், பதவியாதிக்கமும் காவல்துறைக்குள் இயங்கும் விதமானது, அத்துறைக்குள்ளேயே அடுத்தடுத்த படிநிலைகளில் கீழேயுள்ளவர்களுக்கும் குடிமக்களுக்கும் எதிராக எத்தகைய கொடூரங்களை நிகழ்த்தும் என்பதை துணிவுறப் பேசி் தனது கலையாற்றல் அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவதற்கானதே என உணர்த்தியுள்ளார் ப்ராங்க்ளின். தமிழ்த் திரையுலகிற்கு புத்தூட்டம் ஏற்றிட தோழர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுகமான இயக்குநர்கள் மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை வரிசையில் இப்போது ப்ராங்க்ளின்.

குற்றங்களுக்கும் அத்துமீறல்களுக்கும் தனிமனிதர்களைப் பொறுப்பாக்கிவிட்டு இந்தச் சமூக அமைப்புக்கு முட்டுக்கொடுக்கும் அவலத்திற்குள் சிக்காதிருக்கும் அரசியல் தெளிவு கொண்ட இக்கதையை திரையில் உயிர்ப்பித்திட கலைஞர்களும் தொழில்நுட்பர்களும் பேருழைப்பை நல்கியுள்ளனர்.   

ரைட்டரின் கதைமாந்தர்கள், சுதந்திரமடைந்த ஒரு நாடு ஏற்றுக்கொண்டுள்ள மக்களாட்சியின் மாண்புகளை உள்வாங்கிச் செயல்படுத்தும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தோல்வியிலிருந்து உருவானவர்கள். ஒப்புரவோடும் மனிதத்தன்மையோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குத் தகுதியற்றதாக இந்தச் சமூகம் பாழ்பட்டிருப்பதை அவர்கள் அம்பலப்படுத்துகிறார்கள். நிலவரத்தை அம்பலப்படுத்துவதானது, அச்சமூட்டி அடிபணியச் செய்வதற்காக அல்லாமல் இந்த இழிநிலைக்கு எதிராக இயன்றளவில் போராடுங்களென பார்வையாளர்களின் பொதுமனசாட்சியை அவர்கள் தூண்டுகிறார்கள்.



கல்விக்கூடங்களில்நிலவும் சாதியத்தடைகள் ரோஹித்வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா என பலரை காவுகொள்வதைப் போலவே அத்தடைகளையும் தாண்டி கல்வி பயின்று வேலைக்கு வருவோரில் பலரை பணியிடங்களில் நிலவும் பாகுபாடுகள் காவுகொள்கின்றன.  அப்படி காவல்துறையின் ‘நிறுவனப்படுகொலை’க்கு ஆளான விஷ்ணுப்ரியா உள்ளிட்டோரின் கூட்டுமுகமே ரைட்டரில் வரும் பெண்போலிஸ் சரண்யா.

குதிரையேற்றத்தில் வல்லவரான சரண்யாவின் திறமைக்கும் ஈடுபாட்டுக்கும் ஏற்ற பணியை- அவரது சாதியின் மீதான வெறுப்பினால் மறுத்து குதிரையின் லத்தியை அள்ளவைக்கும் உயரதிகாரி சர்மாவின் குரூரம், பட்டியல் சமூக மாணவர்களை கல்விக்கூடத்தின் துப்புரவுப்பணிகளில் ஈடுபடுத்தும் வன்கொடுமையை நினைவூட்டுகிறது. சர்மாவின் சாதிவெறியையும் ஆணாதிக்கத்தையும் நிலைகுலையச் செய்யும் பதிலடியைக் கொடுத்துவிட்டு சரண்யா செத்துப்போகிறாள்.  

தேவகுமார் என்கிற ஆய்வுமாணவர், எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால்கள் என்பது போன்ற நுண்மான் நுழைபுலமிக்கத் தலைப்பிலோ, ஆய்வுப்புலத்தை மடக்கி அக்குளில் செருகிக்கொள்ள விரும்பும் சங்கிகளுக்கு உவப்பானதொரு தலைப்பிலோ ஆய்வை மேற்கொண்டிருந்தால் எளிதாக முனைவராகியிருப்பார். தொந்தரவில்லாத இந்தச் செக்குமாட்டுத்தனத்திற்குள் முடங்காத தேவகுமாரோ, ‘போலிஸ்துறையில் தொடரும் தற்கொலைகள்’ பற்றி ஆய்ந்திட முனைகிறார். சரண்யாவை தற்கொலைக்குத் தூண்டிய தனது அட்டூழியங்கள், தேவகுமாரின் ஆய்வினால் வெளிப்பட்டுவிடக்கூடாது என்றஞ்சும் சர்மா, அதற்காகவே தேவகுமாரை தேசவிரோதியாக சித்தரித்து வேட்டையாடுகிறான். நடுக்குறும் நம் மனம், இக்கொலையில் தானுமொரு கூட்டாளியாக சிக்கிக்கொண்டது குறித்த குற்றவுணர்வில்  வாதையுறும் ரைட்டர் தங்கராஜ், அதிலிருந்து விடுபட மேற்கொள்ளும் எத்தனங்களால் ஆசுவாசமடைகிறது.    

எந்தவொரு ரைட்டரை விடவும் ஸ்டேசன் ரைட்டர்கள் நம்பத்தகுந்த புனைவுகளை எழுதக்கூடியவர்கள் என்பதை தங்கராஜியும் பலவாறாக உறுதிப்படுத்துகிறார். ஆனால் அந்தப் புனைவுத்திறனை அப்பாவி தேவகுமாரின் உயிரைப் பறித்திட தனது மேலதிகாரியான சர்மா பயன்படுத்திக்கொண்டதை உணரும் ஆவேசத் தருணத்தில்தான், தங்கராஜ் சர்மாவை சுட்டுக்கொன்றுவிட்டு சிறையேகுகிறார். அதிகாரக்கொடுக்கினால் சூழலையே விஷமயமாக்கி வந்த  சர்மாவின் சாவு பொருத்தமானதொரு குறியீடுதான்.

இந்துமதக் கொடுங்கோன்மையிலிருந்து தப்பித்திட கிறிஸ்தவம் தழுவி பிற்படுத்தப்பட்டோராகிவிட்ட தலித்துகளின் வாழ்நிலை, காவல்நிலையத்திற்கு வெளியேயுள்ள ரகசிய கொட்டடிகள், போலிஸ் அத்துமீறல்களுக்கு உடந்தையாகும் நீதித்துறை என படம் தொட்டுச்செல்லும் பிரச்னைகள் கவனம்கொள்ளத்தக்கவை.

நாகரீகச் சமூகத்தின் இருப்புக்கு போலிஸ் கடும் அச்சுறுத்தலாகிவிட்ட நிலையில், “போலிஸ் இல்லாத உலகம்” என்கிற முழக்கம் பரவலாகி வருகிறது. இதனிடையே போலிஸ்காரர்களுக்கு சங்கம் வேண்டும் என்கிற கோரிக்கை, அவர்களும் இயல்பான மனிதவாழ்க்கைக்கு உரிமையுடையவர்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டது. அதற்கான போராட்டத்தை, தேவகுமாரை ஒருமுறை கைநீட்டி அடித்துவிட்டதற்காக அரற்றியழும் அந்தந்த காலத்து தங்கராஜ்கள் நடத்துவார்கள் என்கிற ப்ராங்க்ளினின் நம்பிக்கையை உடனடியாய் புரிந்துகொள்ள முடியாதபடி போலிசார் பலரும் அதிகாரபோதையில் திளைத்திருக்கக்கூடும். போதை என்பது தெளியக்கூடியதுதானே? 

நன்றி: தீக்கதிர் நாளிதழ் 31.12.2021

புதன், ஏப்ரல் 14

பார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா

 2021 ஏப் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளன்று சென்னையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை நடத்திய “மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கம்” கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட  கட்டுரை




1. 2014 மே மாதம் பாஜக ஆட்சிக்கு வந்ததன் பின்னணியில் அதே ஆண்டு நவம்பரில் வேர்ல்டு இந்து பவுண்டேஷன் என்ற அமைப்பு உலக இந்து மாநாட்டை நடத்துகிறது. இம்மாநாட்டின் பகுதியாக நடத்தப்பட்ட ‘இந்து கல்வி மாநாட்டின்” உரைகள் இந்தியக் கல்விப்புலத்தை இந்துப்  பண்பாட்டில் தோய்ந்த கல்விப்புலமாக மாற்றியமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்துவதாய் இருந்தன.

2. 2015 அக்டோபர் 31 அன்று தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவை உருவாக்கிட டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் குழுவை ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. 2016 ஏப்ரல் 30 ஆம் நாள் இக்குழுவினால் அரசிடம் தரப்பட்ட அறிக்கையின் முதல் பக்கத்திலிருந்தே இந்துத்துவக் குப்பைகளைக் காணமுடிந்தது. இந்தியாவின் பண்டைய கல்வி முறை வேத அமைப்பிலிருந்து உதித்தெழுந்தது என்று ஆரம்பித்து பல மாநிலங்களுக்கும் மொழிகளுக்கும் உலகைக் காணும் சன்னலாக சமஸ்கிருத அறிவு   இருக்கிறது  என்று புளுகுவது வரை போனது. பண்பாட்டின் ஒரு கூறாகத்தான் மதம் உள்ளது என்பதை திரித்து மதம்தான் பண்பாடாக இருப்பது போல காட்டுவதற்கான முயற்சியும் அதில் இருந்தது.      

3. 2015ஆம் ஆண்டு முதல் இந்திய ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம்  ஏக் பாரத் சிரேஷ்ட பாரத்  என்றொரு திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பிரதமரின் சிந்தனைக் குழந்தைகளாக ஏற்கனவே பிறந்த ஏகப்பட்ட இந்தியாக்களின் கதி என்னவென்று யாரும் அறியவியலாத நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் 140வது பிறந்தநாள் நிறைவுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு அவரால் பெற்றெடுக்கப்பட்ட மற்றுமொரு இந்தியா தான் இந்த ஏக் பாரத் சிரேஷ்ட பாரத். இந்தியல்லாத பிற மொழியினருக்கு இந்தத் திட்டத்தின் பெயருக்கு அர்த்தம் என்னவென்று விளக்குவதற்குக்கூட எந்த முயற்சியும் மேற்கொள்ளத் தேவையில்லை என்று கருதியிருப்பார்கள் போல. இவ்வளவு எகத்தாளமா என்கிற எரிச்சலுடன் கூகுளில் தேடிப் படித்தால்தான்  ஒரே இந்தியா சிறந்த இந்தியா என்று அதன் பொருள் விளங்குகிறது. எதிலே சிறந்த இந்தியா என்று கேட்பதற்கும் முன்பாக ஒரே இந்தியா என்பதன் பொருள் என்னவென்று பார்க்க வேண்டியுள்ளது.

நாட்டின் வெவ்வேறு இரு மாநிலங்களை இணையாகச் சேர்த்து அவற்றுக்குள் பரஸ்பர புரிதலையும் இணக்கத்தையும் உருவாக்குவதற்காக அவ்விரு மாநிலங்களின் மாணவர்கள் ஒருவருக்கொருவர் தமது மொழி இலக்கியம் வரலாறு கலை இலக்கியம் பண்பாடு குறித்து மற்றவருடன் பரிமாறிக்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமெனக் கூறப்படுகிறது. இதனடிப்படையில் தமிழகமும் ஜம்மு காஷ்மீரும் ஓரிணையாக்கப் பட்டுள்ளன. மாறுபட்ட பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் நாம் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்கிற உணர்வை இது உருவாக்கும் என்று இத்திட்டம் கூறிக் கொள்கிறது. ஜம்மு காஷ்மீர் ஒரே மாநிலமாக நீடிப்பதைப் பொறுத்துக் கொள்ளாமல் சிதறடிக்கும் ஒன்றிய அரசு குமரி முதல் இமயம் வரை ஒரே நாடு என்ற உணர்வை ஊட்டப்போவதாக சொல்வது கேலிக்குரியது. தொடர்ச்சியான நிலப்பரப்பின் எதிரெதிர் முனைகளில் வாழ்கிற இவ்விரு மாநிலங்களின் மாணவர்களும் இந்தியர்கள் என்ற முறையில் பகிர்ந்துகொள்ளப் போகும் பொதுமைகள் எவையென்று இத்திட்டம் தெளிவுபடுத்தவில்லை. அதேவேளையில் அவர்களை தமது இனத்தின் தனித்த அடையாளங்களை இழக்கச்செய்வதற்கும் இந்துத்துவாவினர் கட்டமைக்க விரும்பும் ஒற்றை தேசம் ஒற்றைப் பண்பாடு என்கிற அடையாளத்தை ஏற்கச்செய்வதற்குமான பல உட்சுழிகளைக் கொண்டுள்ளது இத்திட்டம்.    

4. 2016 ஆம் ஆண்டு இறுதியில் ஒன்றிய அரசின் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் “12000 வருட இந்தியப் பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிணாமத்தை முழுமையாக ஆய்வு செய்வதற்கான வல்லுனர் குழு” ஒன்றை அமைக்கிறார். 40 கோடி ரூபாய் அரசு நிதியுதவியுடன் 12 பேர் கொண்டதாக அமைக்கப்பட்ட இக்குழு தன் ஆயுட்காலம் 2017 நவம்பர் 11 அன்று முடிவடைவதற்குள்ளாக சிலதடவைகள் கூடியிருப்பதாக தெரிய வருகிறது. என்ன பேசப்பட்டது என்கிற விவரம் பொதுவெளியில் பகிரப்படவில்லை. 

2018 மார்ச் 6 ஆம் நாள் ராய்டர்ஸ் இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரை வழியாகத்தான் இப்படியொரு குழு அமைக்கப்பட்டிருக்கும் செய்தியே வெளியே தெரிய வந்தது. ஆனாலும் பரவலாகவில்லை. ராய்டர்ஸிடம் இந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஐவர் தெரிவித்த கருத்துகளின்படி, ஆரியர்கள் எங்கிருந்தும் இந்தியாவிற்குள் வந்தவர்களல்ல- அவர்கள் இம்மண்ணின் பூர்வகுடிகள், சமஸ்கிருதம் இந்தியாவிலேயே உருவான மொழி, வேதங்களின் பிறப்பிடம் இந்தியாவே, வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவற்றில் உள்ள கருத்துகள் கற்பிதமானவையல்ல - உண்மையே என்று இந்துத்துவவாதிகள் சொல்லிக் கொண்டிருக்கும் பொய்களை ஆய்வுமொழியில் எழுதித்தருவதுதான் இந்த வல்லுனர் குழுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆய்வு வரம்பு என்பதை அறியமுடிகிறது. இந்தக்குழு கொடுக்கும் அறிக்கையை இந்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளப் போகிறதென அறிவித்த அப்போதைய அமைச்சர், அந்த அறிக்கையின் அடிப்படையில் பாடநூல்களை மாற்றியெழுதிட கல்வி அமைச்சகத்திடம் தான் வலியுறுத்தப்போவதாகவும் அறிவித்தார். அப்போதைய ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரோ பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தற்போது கற்பிக்கப்படும் வரலாற்றை கேள்விக்கேட்கும் தைரியமுள்ள முதல் அரசு எங்களுடையதே எனப் பீற்றிக்கொண்டதுடன், பண்பாட்டுத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்படவிருக்கும் அறிக்கை கல்வித்துறையில் தீவிரமாக அமலாக்கப்படும், பாடநூல்கள் மாற்றியெழுதப்படும் என்று தெரிவித்தார். 

5. 2018 அக்டோபரில் அகில இந்திய தொழில்நுட்பல கல்விக்கழகம் (ஏஐசிடிஇ), பண்டைய இந்தியாவின் அறிவமைப்பு (Ancient Knowledge System) என்கிற படிப்பையும் அதற்கான பாடநூலாக பாரதிய வித்யாசார் என்கிற நூலையும் புகுத்தியது. போலி அறிவியலை முன்வைக்கும் கல்விக்குள் திணிக்கும் இம்முயற்சிக்கு எதிராக கல்வியாளர்களும் அறிவியலாளர்களும் இணையவழி கையெழுத்தியக்கம் நடத்திய போது, அவர்களைவிடவும் கூடுதலானவர்கள் தனது முடிவுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுக் கொடுத்திருப்பதாக கொக்கரித்தது ஏஐசிடிஇ. அதற்கும் முன்னதாகவேகூட அது அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை பாழடிக்கத்தொடங்கி விட்டதற்கு 2018 ஜனவரியில் வெளியிட்ட Model Curriculam for Undere Graduate Degree Courses in Engineering and Technology என்கிற ஆவணம் சான்றாக உள்ளது.  

6. மேற்சொல்லப்பட்டிருக்கும் பின்னணியில் தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிடப்படும் பண்பாடும் பாரம்பரியமும் யாருடையவை என்கிற கேள்வி எழுகிறது. இந்த நாடு பன்மைத்துவமான பண்பாட்டைக் கொண்டிருக்கிறது என்று விதந்தோதிக் கொண்டே அந்த பன்மைத்துவத்தை ஒழித்துக்கட்டுவதற்குண்டான கேடுகளைச் செய்து வருகிற இந்துத்துவர்களின் பாஜக அரசு, கல்விப்புலத்தில் மட்டும் பன்மைத்துவப் பண்பாட்டை பேணும்விதமாக நடந்து கொள்ளுமா என்கிற சந்தேகத்திலிருந்து இந்தக் கல்விக்கொள்கையை அணுகவேண்டும். ஆரியர்களின் - அவர்களது வழித்தோன்றல்களாக தம்மைக் கருதிக்கொண்டுள்ள பார்ப்பனர்களின் வேதப் பண்பாட்டையும் மேலாதிக்கத்தையும் அரசதிகாரத்தின் துணையோடு நிறுவத்துடிக்கும் இந்துத்துவவாதிகள் – அதே நோக்கங்களுக்காக இந்திய குடிமக்களை குழந்தைப்பருவம் தொட்டே பதப்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ள சட்டப்பூர்வ ஏற்பாடே இந்த தேசிய கல்விக்கொள்கை என்கிற முடிவுக்கு வருவதற்கு சில உதாரணங்கள் போதும்.   

தேசிய கல்விக்கொள்கையின்படி, ஒரு குழந்தை தனது வீட்டிலிருந்து எவ்வளவு அருகாமையில் பள்ளிக்கூடத்தைப் பெறவிருக்கிறது, அது எவ்வாறு பள்ளிக்கு சென்று திரும்பப்போகிறது என்கிற பிரச்னைகளையெல்லாம் கடந்து, மூன்றுவயதில் கற்றல் செயல்பாட்டிற்காக பள்ளிக்குள் தள்ளிவிடப்படும் குழந்தை அன்றாடம் எதை எப்படி கற்றுக்கொண்டு வீடு திரும்பப்போகிறது? பண்பாட்டின் அடிப்படைக்கூறுகளில் ஒன்று உணவு; எனில் அந்த மூவேளை உணவில் இருவேளை- காலை மற்றும் மதியத்தில் அரசே வழங்கப்போவதாக சொல்லப்படும் உணவு யாருடைய உணவாக இருக்கப் போகிறது?  தமிழர்களின் உணவில் பாரம்பரியமாக கலந்துள்ள வெங்காயம் பூண்டு இரண்டையும் தவிர்த்த உணவை ஏற்கனவே இஸ்கானின் அட்சயப் பாத்ரா தமிழகக் குழந்தைகளுக்கு வழங்கத் தொடங்கிவிட்டது. நான் வெங்காயம் பூண்டு சாப்பிடும் வழக்கமில்லாத குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று நிதியமைச்சர் நிர்மலா நாடாளுமன்றத்திலேயே தன் சாதி அகங்காரத்தை வெளிப்படுத்தினாரல்லவா– மக்கள் தொகையில் மிகக் குறும்பான்மையினரான ஆசாரப்பார்ப்பனர்களின் வெங்காயம் பூண்டு கலக்காத இத்தகைய உணவுதான் நாடு முழுவதற்கும் நம் குழந்தைகளுக்கு வழங்கப்படவிருக்கிறது என்பதற்கான முன்னோட்டமே இது. இந்த அந்நிய உணவுக்கும் சுவைக்கும் பெரும்பான்மையான குழந்தைகள் பழக்கப்படுத்தப்படவிருக்கின்றனர். குழந்தைகள் பள்ளியில் பழகிக்கொண்டுவரும் இந்த உணவும் சுவையும் அவர்களது வாழ்நாள் முழுக்க தொடரக்கூடியதாயும் குடும்பத்தின் மற்றையவர்கள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடியதாகவும் இருக்கப்போகிறது.   

தேசிய கல்விக்கொள்கை செயலாக்கத் திட்டத்தில் இந்திய மொழிகளை, கலைகளை, பண்பாட்டை ஊக்குவிப்பது குறித்த அத்தியாயத்திற்கான முன்குறிப்பில் வட்டார/ தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இப்போதைய நிலையிலேயே பெரும்பாலான தனியார் பள்ளிகள் எல்லா குழந்தைகளையும் காலைநேர பிரார்த்தனைப் பாடல் என்ற பெயரில் பஜனைப் பாடல்களையும் சமஸ்கிருத சுலோகங்களையும் பாடவைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா நிலையிலும் சமஸ்கிருதத்தையும் அதற்கடுத்த நிலையில் இந்தியையும் உயர்த்திப்பிடிக்கும் தேசிய கல்விக்கொள்கை ஒட்டுமொத்தமாக எல்லா பள்ளிகளின் குழந்தைகள் மீதும் காலைநேர கூடுகைப்பாடல் என்பதற்கும் அப்பால் பல்வேறு வழிகளில் இந்த அன்னிய மொழிகளை திணிக்கப்போகிறது. 

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 19569 மொழிகளும் கிளைமொழிகளும் பேசப்படும் இந்த நாட்டில் 10000 பேருக்கு மேல் பேசக்கூடிய மொழியென அடையாளம் காணப்பட்டவை 121 மட்டுமே. இவற்றிலும் 22 மொழிகள்தான் அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசும், அதன் திட்டங்களும் இந்த 22 மொழிகளையும்  ஒருபோதும் சமமாய் நடத்தப்போவதில்லை என்பதற்கு அன்றாடம் உதாரணங்கள் வந்தவண்ணம் உள்ளன. மகாதானபுரம் ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகையில் இருந்த ‘க’ நீக்கப்பட்டு ‘ஹ’ சேர்க்கப்பட்டதானது ஒன்றிய ஆட்சியாளர்கள் ஒவ்வொரு எழுத்தையும் குறிவைத்து வேலை செய்கிறார்கள் மாற்றத் துடிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

பள்ளிகளின் பெயரை மாற்றுவது, வகுப்பறைக்குள் மாணவர்கள் அமரும் இருக்கைகளுக்கு ஆளுங்கட்சியின் கொடிநிறத்தைப் பூசுவது, சமஸ்கிருதத்தில் மட்டுமே போட்டிகளை நடத்துவது, பாடநூல்களை திரித்து எழுதுவது, உண்மையான அறிவியலையும் வரலாற்றையும் பேசும் பாடங்களை நீக்குவது, ஆசிரியர் மாணவர் உறவை குரு-சிஷ்ய படிநிலையாக மாற்றுவது, ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்வுகளை நடத்துவது, உடற்பயிற்சி- மனப்பயிற்சிக்காக யோஹா என்கிற பெயர்களில் கல்விக்கூடங்களுக்குள்ளேயே சாஹா நடத்த முயற்சிப்பது என்று எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவவிடாமல் தமது கருத்தியலை கல்விப்புலத்தின் மீது இந்துத்துவவாதிகள் திணித்துவந்ததன் தொடர்ச்சியில்தான் தேசிய கல்விக்கொள்கை வந்துள்ளது. 

7. சாதியத்திற்கு முந்தைய வர்ணாசிரம நிலையை தற்காலத்திற்கேற்றாற்போல மீட்டுருவாக்கும் தமது முயற்சியில் கார்ப்பரேட்டுகளையும் கல்வி வியாபாரிகளையும் இந்துத்துவவாதிகள் தம்முடன் இணைத்துக்கொள்வதற்கு தேசிய கல்விக்கொள்கையில் வழிகண்டுள்ளனர். வர்ண நலனும் வர்த்தக நலனும் ஒன்றுக்குள் ஒன்றாக ஊடாடியிருக்கும் – பார்ப்பனீயமும் கார்ப்பரேட்டியமும் கலந்து பார்ப்பரேட்டியமாக மாறியுள்ள இக்காலத்தில் குடிமக்களுக்கு வழங்கப்படும் கல்வி அதற்கிசைந்தாற்போல் தான் இருக்கும். மக்களை மந்தையாகவும் தேசத்தை சந்தையாகவும் கட்டியமைக்க பண்பாடும் அதனங்கமான கல்வியும் தான் உகந்த களம் என்று அவர்கள் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடாகவே இக்கொள்கையை பல அடுக்கு வடிகட்டலுடன் வகுத்துள்ளார்கள். சந்தையின் மிக மலிவான பண்டமே உழைப்புதான். அந்த உழைப்பை விற்பவர்களாக பெரும்பகுதியினரையும், அந்தந்த காலத்திற்குரிய நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பவர்களாக, மேம்படுத்துகிறவர்களாக, கையாள்கிறவர்களாக சிறுதொகையினரையும் இக்கொள்கை வடிகட்டல்கள் வழியே உருவாக்கும் அதேநேரத்தில் கல்வி வளாகத்திற்குள் நுழைகிற ஒவ்வொருவரது - ஆசிரியர் உட்பட- கருத்துலகத்தையும் மூடத்தனங்களாலும் பழமைவாதங்களாலும் கற்பிதமான பெருமிதங்களாலும் நிரப்பிவைக்கும் விதமாக இக்கொள்கையும் அதை செயல்படுத்தும் திட்டங்களும் உள்ளன. 

குறிப்பிட்ட நிலப்பரப்பில் மொழியால் நடத்தையால் நம்பிக்கைகளால் இணைந்துள்ள மக்களை ஒரு பண்பாட்டுத்தொகுதி என்று கொள்வோமானால், அந்தப் பண்பாட்டுக்குரியவர்கள் தங்களுக்குகந்த கல்வியை வட்டாரம் சார்ந்ததாக தனித்தன்மையுடையாக உருவாக்கிக் கொள்வதும் அதன்வழியே உலகோடு தொடர்பாடுவதுமே சரி. ஆனால் இந்த தேசிய கல்விக் கொள்கை வட்டாரத் தன்மைகளையும் பல்வேறு இனங்களின் தனித்தன்மைகளையும் கணக்கில் கொள்ளாது ஒற்றைமயமாக்கத்திற்காக மத்தியிலிருந்து உருவாக்கப்பட்டு மாநிலங்கள் மீது திணிக்கப் படுகிறது. இக்கொள்கையை செயல்படுத்துவதற்குமப்பால் சென்றுவிடாதபடியான நெருக்கடியை மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உருவாக்கி வருவதை ஏற்க முடியாது.   

மாநில அரசுகள் தமது ஆளுகைப்பரப்பிலுள்ள மக்களின் சமூக அரசியல் பொருளியல் பண்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பையும் அதிகாரத்தையும் அரசியல் சாசனத்தின் வழியே பெற்றவை. அவ்வகையில் தம்மக்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாட்டின்  அரசு தனியாக கல்விக்கொள்கை ஒன்றை உருவாக்குவதே சரியாகும். அதற்கு கல்வியை மாநிலப்பட்டியலுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற குரலை மாநில அரசும் மக்களும் சேர்ந்தெழுப்ப  வேண்டிய காலமிது.  

8. இந்தியச்சமூகம் வரலாற்றுப்போக்கில் உருவாக்கிவந்துள்ள பண்பாட்டு நிறுவனங்களுக்கும் அரசியல் சாசனத்திற்கும் அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களால் இன்று நேர்ந்துவரும் அபாயம்தான் கல்வித்துறையின் மீதும் கவிந்துவருகிறது. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மையையும் சமூகப் பாத்திரத்தையும் இழந்து ஒன்றிய ஆளுங்கட்சியின் விருப்பார்வங்களை நிறைவேற்றித் தருகிற அடியாள்படையாக மாற்றப்பட்டு வரும் நிலையில் அதிலிருந்து கல்வியை மட்டும் தனித்தெடுத்து காப்பாற்றிவிட முடியுமா என்கிற கேள்வி அப்பாவித்தனமாக எழுப்பப்படுகிறது. ஆனால் இந்தக் கேள்விக்கான பதில், ஒட்டுமொத்த அபாயத்திற்கும் எதிரான போராட்டம் திரளும்வரை கல்விப்புலத்தின் தனித்துவத்திற்கான, மாநிலங்களின் உரிமைக்கான போராட்டங்கள் காலந்தாழ்த்தவோ காத்திருக்கவோ வேண்டியதில்லை என்பதுதான்.

 

 

 

 


வெள்ளி, பிப்ரவரி 14

பி.எஸ்.என்.எல்: துரோகத்தால் பலிகொடுக்கப்பட்ட துயர வரலாறு - ஆதவன் தீட்சண்யா




ஒரு மரம் வீழ்வதை மட்டுமே காண்கிறோம். அதன் வேர்களில் விஷம் வைத்தவர்களை நாமறியோம். பிஎஸ்என்எல் ஊழியர்கள் 78569 பேர் 2020 ஜனவரி 31 அன்று ஒருசேர விருப்ப ஓய்வில் வெளித்தள்ளப்பட்ட விசயம்கூட இவ்வாறாகவே அணுகப்படுகிறது. தாராளமயம் தனியார்மயம் உலகமயம் என்பவற்றால் 1990களில்  பாய்ச்சப்பட்ட விஷம் உள்ளிருந்து அரித்து இப்போது அதை வீழ்த்தத் தொடங்கியிருக்கிறது. ஆம், இவ்வளவு பெருந்தொகையான ஊழியர்களின் வெளியேற்றமானது அந்த வீழ்ச்சியின் தொடக்கக்காட்சிதான். முழுமையான வீழ்ச்சியின் அழிவுகளைக் காட்டும் துயரக்காட்சிகளைக் காண்பதற்கு நாம் இன்னும் சிலகாலம் காத்திருக்கவேண்டும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இன்றைய நிலைக்கு அதன் ஊழியர்களை பொறுப்பாக்கி நகர்வது எளிய வழி. ஆனால் அது உண்மையான காரணமல்ல. நாட்டின் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டும் இலாபநட்டக் கணக்கிற்குள் வைத்துப் பார்க்கக்கூடாத சேவையாகவும் அரசின் ஏகபோகத்தில் இருந்துவந்த தகவல் தொடர்புத்துறையில் தனியாரை அனுமதித்ததிலிருந்து இவ்வீழ்ச்சி தொடங்குகிறது. பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் கடனுக்காக கையேந்திய நமது அரசுகள் அந்நிறுவனங்களின் கட்டளைக்குப் பணிந்து இதுபோன்ற சேவைத்துறைகளை தனியாருக்கு திறந்துவிடும் நிலை உருவானது.

‘சேமநல அரசு’ என்கிற பாத்திரத்திலிருந்து விலகிக்கொண்டு தனியார் தொழில் நடத்துவதற்கு உகந்தவிதமான சட்டங்களை நிறைவேற்றி பராமரிக்கும் நிலைக்கு இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக பண்புரீதியில் மாறும் போக்கு 1980களின் நடுவே தொடங்கியது. சேவைத்துறையாக எதையும் நடத்த வேண்டியதில்லை. நஷ்டத்தில் இயங்குவதை மூடிவிடுவது, இலாபத்தில் இயங்குவதை தனியாருக்கு விற்றுவிடுவது என்கிற நிலை உருவானது. புதிய பொருளாதார கொள்கைக்குப் பின் தனியார் என்ற சொல் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்களையே குறித்தது. ஆனால் அதற்கொரு உள்நாட்டு முகத்தைக் கொடுப்பதற்காக இளைய பங்காளியாக சேர்த்துக்கொள்ளப் பட்ட இந்திய நிறுவனங்களில் சில இன்று பெருநிறுவனமாக வளர்ந்துள்ளன.  

பெரும் சொத்துகளையும் வாடிக்கையாளர்களையும் கொண்ட தொலைத்தொடர்புத் துறையை விற்பதற்கும் வாங்குவதற்கும் எளிதாக துண்டுத்துண்டாக்கும் முயற்சி பலவடிவங்களில் நடைபெற்று வந்துள்ளது. வருமானம் ஈட்டித்தரக்கூடிய டெல்லியையும், மும்பையையும் பிரித்தெடுத்து தனித்தனி மகாநகர் நிகம் டெலிகாம் லிட் உருவாக்கப்பட்டன. நாடு முழுவதுமுள்ள வருவாய் ஈட்டும் பகுதிகளைப் பிரித்து தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தின் முன்னோட்டமாக 1995ல், தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்கள் யு.எஸ்.வெஸ்ட்- பி.பி.எல் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டன. ‘சேவ் டெலிகாம் சேவ் இந்தியா’ என்கிற முழக்கத்துடன் தொழிற்சங்கங்கள் அன்று போராடி தடுத்திருக்காவிட்டால் தொலைத்தொடர்புத்துறை என்பதே இப்போது இருந்திருக்காது.

ஆனாலும் விரிவாக்கம், துரிதம், நவீனமாக்கல் என்கிற அலங்காரங்களோடு துறையின் பலவேலைகள் தனியாரிடம் கொடுக்கப்பட்டன. இந்த வேலை ஒப்பந்தங்களைப் பெறுவதில் கையூட்டும் ஊழலும் சாய்மானங்களும் பெரும் பங்காற்றின. டெலிகாம் அமைச்சராயிருந்த சுக்ராம் பணத்தால் தைத்த மெத்தையில் படுத்துறங்கும் அளவுக்கானது இம்முறைகேடு.

பெருநகரச் சேவைக்கு எம்.டி.என்.எல், இணையச்சேவைக்கு வி.எஸ்.என்.எல், நாட்டின் எஞ்சிய பகுதிகளில் சேவைகளை வழங்கிட பி.எஸ்.என்.எல். என அடுத்தடுத்து வந்த துண்டாடல் இன்னும் ஓயவில்லை. புதிதாக தொடங்கப்பட்ட பேஜர், மொபைல் போன்ற சேவைகளில் அரசின் இந்த நிறுவனங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அரசு ஆதரவுடன் நிலைபெற்றுள்ள இந்நிறுவனங்கள் தனியாருடன் போட்டியிட்டால் அது சமமான ஆடுகளமாக இருக்காது என அரசின் நிறுவனங்களை அரசே ஓரங்கட்டியது. இந்தப் புறக்கணிப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்றுதான் அரசு நிறுவனங்களால் இந்தச் சேவைக்குள் வரமுடிந்தது. இந்த பாரபட்சம் இன்றளவும் 4ஜி ஒதுக்கீடு மறுப்பாக நீடிக்கிறது.

தனியார் ஏகபோகத்தில் இருந்த மொபைல் சேவைக்குள் பி.எஸ்.என்.எல். நுழைந்ததானது வாடிக்கையாளர்களுக்குப் பேராதாயங்களைக் கொண்டுவந்தது. பி.எஸ்.என்.எல்.க்கு இணையாகவோ குறைவாகவோ கட்டணம் என்ற நிலைக்கு இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் தனியார் நிறுவனங்களுக்கு உருவானது. வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் ஈர்க்கவும் வெறும் கட்டணக்குறைப்பு போதாதென அவை தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. அப்படியான மேம்பட்ட தொழில்நுட்பத்திற்குள் செல்வதற்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அரசு அனுமதிக்கவில்லை. ஜியோ நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றிய பிரதமர், பி.எஸ்.என்.எல். மேம்பாட்டுக்காக எதுவும் பேச மறுக்கிறார். இம்மாதிரியான சில தனியார் நிறுவனங்களின் நலனுக்காக பி.எஸ்.என்.எல் சிறுகசிறுக பலிகொடுக்கப்படும் வஞ்சகத்தின் ஒரு கட்டம்தான் 78569 ஊழியர்களின் வெளியேற்றம்.

பெரும் மனித உழைப்பு தேவைப்பட்ட காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் கணிசமானோர் பின்னாளில் தொழில்நுட்பங்களினால் தேவையற்றவர்களான போதும் பொருத்தமான வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டனர். இவர்களில் பலரும் பணி ஓய்வு பெற்றுவந்த நிலையில் இந்த விருப்பு ஓய்வுத்திட்டம் வராமல் இருந்திருந்தாலும் இன்னும் சிலஆண்டுகளில் ஊழியர் எண்ணிக்கை தானாகவே இதேயளவுக்கு குறைந்திருக்கும். 

கடந்த சில ஆண்டுகளாகவே விரிவாக்கம், தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளுக்கான நிதியை ஒதுக்காத அரசு நாளடைவில் அன்றாட நடைமுறைச் செலவுகளுக்கான நிதியையும் நிறுத்திக்கொண்டது. அலுவலகங்களுக்கும் செல்போன் டவர்களுக்கும் மின்கட்டணம் செலுத்தக்கூட முடியாமல் நிறுவனம் திண்டாடியது. எரிபொருள், வாகன பராமரிப்பு, ஊழியர் குடியிருப்பு பராமரிப்பு என எல்லாம் நின்றுபோயின. காப்பீடு, கூட்டுறவுச்சங்கம், வங்கிக்கடன் ஆகியவற்றின் தவணைக்காக ஊழியர்களின் ஊதியத்தில்  பிடித்தம் செய்த தொகைகளைக்கூட அந்த நிறுவனங்களுக்கு வழங்காமல் வேறுதேவைகளுக்கு முறைகேடாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானது நிறுவனம்.

நிதியின்மை உள்ளிட்ட குளறுபடிகளால் சேவையின் தரம் குறைந்துள்ளது. மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது. காலாவதியாகிப் போன பழைய புதைவடக் கம்பிகளை, கருவிகளை வைத்துக்கொண்டு செலவின்றி பழுதுகளை சரிசெய்யச் சொல்வது, தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு நடைமுறைச் சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து நிர்ப்பந்திப்பது என கடுமையாகி வந்த பணிச்சூழலின் அழுத்தம் இவ்வளவு பேர் விருப்பு ஓய்வு கொடுப்பதற்கான காரணங்களில் ஒன்று. பணப்பலன்கள் இரண்டாம்பட்சம்.

பத்திருபது ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய நாளில் ஊதியம் வழங்காதிருந்த பி.எஸ்.என்.எல், இப்போது 10 மாதங்களாக ஊதியம் வழங்காதிருக்கிறது. உழைத்தும் பலனின்றி வாடும் அவர்களது அவலத்தை மாற்றவியலாத அவமானத்தில் குமையும் நிரந்தர ஊழியர்கள் தமக்கும் இந்த நிலை ஏற்படலாம் என்றஞ்சியது உண்மையாகிப்போனது. இவர்களுக்கும் நாள் கணக்கில் தள்ளிப்போன ஊதியம் படிப்படியாக மாதக்கணக்கில் தள்ளிப்போனது. டிசம்பர் 2019, ஜனவரி 2020 ஊதியம் விருப்பு ஓய்வில் வெளியேறியவர்கள் உள்ளிட்ட யாருக்கும்  இன்னும் வழங்கப்படவில்லை.

பி.எஸ்.என்.எல் மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பல் என்கிற அச்சத்தை உருவாக்கிக் கொண்டே அதை 69000 கோடி ரூபாயில் சீரமைக்கப் போவதாக சவடால் பேசியது. பி.எஸ்.என்.எல். சொத்துக்களில் ஒருபகுதியை விற்று 37500 கோடி, உறுதிப்பத்திரங்கள் விற்று 15000 கோடி, அரசின் பங்களிப்பாக 30000 கோடி ரூபாய் என இதற்கான நிதியைத் திரட்டப்போவதாக திட்டம். இத்திட்டத்தின் ஓரம்சமே 17160 கோடி ரூபாய் செலவிலான ‘விருப்ப ஓய்வு 2019’.

வெளியேறும்படியான உளவியல் நெருக்கடியை உருவாக்கி கட்டாய ஓய்வில் அனுப்புவதே விருப்ப ஓய்வின் உண்மையான பொருள். அதன்படி 50 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களில் 78569 பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களது பணியிடங்கள் திரும்ப நிரப்பப்படமாட்டாது. எனவே புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாது. நிறுவனத்தில் எஞ்சியுள்ளவர்களில் 8403பேர் இவ்வாண்டின் இறுதிக்குள்ளாக பணிமூப்பினால்  வெளியேறிவிடும் நிலையில் 66814 பேர் எஞ்சுவர். வெளியேறிவர்களை  விடவும் பணியில் நீடிப்பவர்களின் நிலை துன்பகரமானது. அவர்களது பணிச்சூழல்  முற்றிலும் வேறுவிதமாக மாறப்போகிறது. அனுபவம் வாய்ந்த ஊழியர்களும் அதிகாரிகளும் வெளியேறிவிட்ட நிலையில்  அவர்களது பணிகளையும் இவர்களே சேர்த்து செய்யவேண்டியிருக்கும். இடமாறுதலும், பணிச்சுமையும் மனஅழுத்தமும் கூடும்.

ஆளில்லாத இடங்கள் இனங்காணப்பட்டு தனியார் முகமைகளிடம் விடப்பட்டுள்ளன. ஆனால் இதெல்லாம் ஓர் இடைக்கால ஏற்பாடே. சேவையின் தரத்தை உயர்த்தப் போவதாகக் கூறிக்கொண்டு பல லட்சம் கோடி சொத்துள்ள இந்த மக்கள் நிறுவனத்தை கார்ப்பரேட்டுகளுக்கு சல்லிசான விலைக்கு கொடுப்பதே அரசின் இறுதி நோக்கம். டாடாவுக்கு வி.எஸ்.என்.எல். விற்கப்பட்டது போல, பல விமான நிலையங்களும் துறைமுகங்களும் அடானிக்கு விடப்பட்டதுபோல, ஏர் இந்தியாவும் ஓ.என்.ஜி.சி.யும் ஆயுள் காப்பீட்டுக் கழகமும் விற்கப்படவிருப்பது போல  பி.எஸ்.என்.எல் நிறுவனமும் யாருக்கேனும் விற்கப்படும். அரசை நடத்துவதற்கான வருவாயை ஈட்டுகின்ற இந்த மக்கள் சொத்துக்களை இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு விற்றுவிட்டு அரசை எப்படி நடத்துவீர்கள் ஆட்சியாளர்களே என்கிற கேள்வியை எழுப்பாதவரை இந்த ஊதாரிகள் விதைத் தவசத்தை   விற்று சூதாடுவார்கள். 

- ஜூனியர் விகடன், 16.02.2020

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...