வேலைநேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலைநேரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 21

இந்தியா: தொழிலாளர்களின் கண்ணீர்ப் பள்ளத்தாக்கு அல்ல! - ஆதவன் தீட்சண்யா

 ‘‘சோளத்தை அரைக்கும் கரங்களை விடுவித்துவிடுங்கள்,
மாவரைக்கும் சிறுமியர் அமைதியாகத் தூங்கட்டும்,
இந்த நாள் முடிவுக்கு வருகிறதென்று அதிகாலைச் சேவல் வெறுமனே ஒப்புக்கு கூவட்டும்! சிறுமிகளின் வேலையைத் தேவதைகள் செய்யவேண்டுமென திமிதா உத்தரவிட்டுள்ளார். இப்போது இவர்களது கரங்கள் சக்கரங்களின் மீது மெதுவாகத் தாவிச் செல்லட்டும், அதனால் அதிரும் அச்சுக்கள் கம்பிகளைச் சுழற்றட்டும்.
சுழன்றரைக்கும் அரவைக்கல் பளுவைச் சுழற்றிவிடட்டும்.
நாம் நமது தந்தையர் வாழ்வை வாழ்வோம்.
வேலையிலிருந்து ஓய்வெடுப்போம்.
தேவதைக்கடவுள் நமக்கு அனுப்பியுள்ள பரிசுகளை மகிழ்ந்தனுபவிப்போம்..’’ 

- சோளம் அரைக்கும் நீராலை இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதுமே உழைப்பிலிருந்து சிறுமியரை விடுவிக்கும்படியும் வேலையிலிருந்து ஓய்வெடுக்கும்படியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆன்டிபரோஸ் என்ற கிரேக்கக்கவிஞனால் இப்படி எழுத முடிந்திருக்கிறது. எனில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு உச்சத்தில் இருக்கும் காலத்தில் வாழும் நாம் ஏன் இன்னமும் ஓய்வின்றியும் நீண்டநேரம் வேலை செய்ய வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்?  

**

‘‘அன்றாடம் 18 - 20 மணிநேரம் பணியாற்ற முடிந்தவர்கள் மட்டும் என்னோடு இருங்கள். முடியாதவர்கள் அவரவர் வழியைப் பார்த்துக்கொண்டு விலகிச் செல்லுங்கள்’’ என்று யோகி ஆதித்யநாத் 2017ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றதுமே வெளியிட்ட அறிவிப்பு ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. ஒரு தொழிலாளியோ ஊழியரோ தனது ஒவ்வொரு நாளிலும் இயல்பான மனிதவாழ்க்கையை வாழ்வதற்கு ஏற்றாற் போல அவரது அன்றாடம் அறிவியல்பூர்வமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டங்கள், சிந்திய ரத்தம், செய்த தியாகம், நடப்பிலுள்ள சட்டப் பாதுகாப்பு - இவை எதையும் பொருட்படுத்தாமல் அப்படியொரு அறிவிப்பை அவர் வெளியிட்டார். அவ்வாறு அவர் சொன்னதின் நடைமுறைச் சாத்தியம், தேவை பற்றியெல்லாம் விவாதிக்காமல் வேலைக்கலாச்சாரத்தை மீட்கவந்த தேவதூதன் என்று அவருக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தன ஊடகங்கள்.  கூருணர்வற்ற இந்தக் கொண்டாட்டங்களைப் பார்த்து கடுப்பாகி அப்போது ‘காமிய தேசத்தில் ஒருநாள்’ https://aadhavanvisai.blogspot.com/2017/08/blog-post_92.html என்ற கதையை எழுதினேன். வேலைக்கென 20 மணிநேரத்தை ஒதுக்கியதுபோக எஞ்சியிருக்கும் நான்கு மணி நேரத்தையும் நொடிவாரியாக பிரித்து அதன்படி வாழ்ந்தாக வேண்டுமென்று அரசினால் கண்காணிக்கப்படும் குடிமக்களைப் பற்றிய அந்தக்கதை இந்தியாவில் மெய்யாகிவிடுமோ என்று கவலையாக உள்ளது.

வேலைநாள் என்பது 18 முதல் 20 மணிநேரம் என்கிற இந்த அறிவிப்புக்கான உந்துதலை யோகி மோடியிடமிருந்து பெறுகிறார். மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதும் அவரை அதீத திறன்கள் கொண்ட மாமனிதர் அல்லது அவரே பின்னாளில் சொல்லிக்கொண்டது போன்ற அமானுஷ்யர் என்று பிம்பப்படுத்துவதற்காக பரப்பப்பட்ட பலவிதச் செய்திகளில் ஒன்று, நாட்டை முன்னேற்றுவதற்காக உழைக்கும் அவர் அன்றாடம் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார் என்பதாகும். அந்தச்சமயத்தில் வெளியான ஒரு பேட்டியில் (பிஸினஸ் ஸ்டேன்டர்டு, 24 நவம்பர் 2014) அப்போதைய ஒன்றிய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பிரதமர் தானும் தூங்குவதில்லை, தனது அமைச்சர்களையும் தூங்கவிடுவதில்லை என்று கூறினார். இந்தக்கட்டத்தில் தான் 18-20 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்கிற யோகியின் அறிவிப்பு வெளியானது. 

அடுத்தடுத்த ஆண்டுகளில் மோடியின் வேலைநேரம் அதிகமாகி தூக்கநேரம் குறைந்து கொண்டே வருவதாக செய்திகள் வெளியாகின. ஊடகவியலாளர்கள் யாருக்கும் பேட்டி தந்திராத மோடியை ஏஎன்ஐ நிறுவனத்துக்காக 2019 ஏப்ரல் 23 அன்று பேட்டிகண்ட பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ‘வெறும் மூன்றரை மணிநேரத் தூக்கம் உங்களுக்குப் போதுமானதா?’ என்று வியப்புடன் கேட்டதற்கு, அந்த வியப்பை வற்றவிடாத வேகத்தில் ‘இதையேதான் ஒபாமாவும் என்னிடம் கேட்டார்’ என்று மோடியும் கூசாமல் பதிலளித்தார். 2022 நிலவரப்படி மோடி அன்றாடம் வெறும் 2 மணிநேரம் மட்டுமே தூங்கி மீதி 22 மணி நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் நாட்டுக்காக உழைப்பதாக பாஜக மகாராஷ்ட்ர மாநிலத் தலைவர் சந்தரகாந்த் பாட்டீல் அதிரடியாக தெரிவித்தார் (என்டிடிவி, 21 மே 2022).  மோடியின் புகழ்பரப்ப கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தப் புனைகதைகளையெல்லாம் வெளியிடுகிற ஊடகங்கள் இதெல்லாம் சாத்தியமா, தேவையா என்று கேள்வியெழுப்பி அம்பலப்படுத்தத் துணியவில்லை. இப்படியாக, நாட்டுக்காக உழைப்பதென்றால் மோடியைப் போல வாரத்தில் ஏழுநாட்களும் இருபதுமணி நேரத்திற்கும் மேலாக ஒவ்வொரு நிமிடமும் உழைக்க வேண்டும், அது சாத்தியம் என்று கட்டமைக்கப்படும் மாயை, எழுபது வயதைத் தாண்டிய முதியவரான ஒரு பிரதமரே இப்படி உழைக்கும் போது உங்களுக்கென்ன கேடு என்கிற குத்தலான கேள்வியின் மூலம் ஒவ்வொரு உழைப்பாளி மீதும் உளவியல் தாக்குதலை நடத்துகிறது. மட்டுமன்றி, அது நாட்டின் சட்டப்பூர்வ வேலைநேரத்தை அதிகரித்துவிட வேண்டும் என்கிற சுரண்டல்வெறியை வெளிப்படுத்தும் அசட்டு தைரியத்தை இன்போசிஸ் நாராயணமூர்த்தி, எல்&டி சுப்ரமணியம் போன்ற தொழில் முதலாளிகளுக்கு வழங்குகிறது. 

அன்றாடம் 20 மணிநேரம் உழைக்கிற பிரதமர் உள்ள இந்தநாட்டில் அவரில் பாதியளவாவது நாட்டுமக்கள் உழைக்கவேண்டும் என்றெண்ணியோ என்னவோ எட்டு மணிநேரம் என்றுள்ள நாட்டின் சட்டப்பூர்வ வேலைநேரத்தை 10 மணி நேரமாக்கி வாரத்திற்கு 60 மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்று 2020ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தார் நாராயணமூர்த்தி. பிறகு பிரதமரே வாராந்திர ஓய்வு விடுப்பு எடுக்காமல் 140 மணிநேரம் உழைக்கிறபோது குடிமக்களுக்கு மட்டும் எதற்கு என்று நினைத்திருப்பார் போல, அதில் பாதியளவாக வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை பார்க்கவேண்டும் என்று 2023 அக்டோபரில் தனது கோரிக்கையை திருத்தினார். நாராயணமூர்த்தியின் இந்தக் கோரிக்கை அறிவியல்பூர்வமற்றது அபத்தமானது என்பதையும் தனது கோரிக்கைக்கு வலு சேர்ப்பதற்காக அவர் வைத்த வாதங்கள் உண்மைக்கு மாறானவை என்பதையும் அம்பலப்படுத்தும் ஏராளமான தரவுகளுடன் கண்டனங்கள் வந்தபோதும் அவர் ‘நல்லவர்களாலும், வெளிநாடுவாழ் இந்தியர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்ட’ தனது கோரிக்கையினை திரும்பப் பெறப் போவதில்லை என வீம்பாக அறிவித்தார்.  

தொழிலாளர்கள் அமெரிக்காவில் வாரத்திற்கு 36.4 மணிநேரமும், தென் கொரியாவில் 37.9 மணிநேரமும், ரஷ்யாவில் 37.6 மணிநேரமும், பிரிட்டனில் 36 மணி நேரமும் ஜெர்மனியில் 37 மணிநேரமும் வேலைசெய்துவரும் நிலையில் இந்தியர்கள் வாரத்திற்கு சராசரியாக 47.7 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இதன்மூலம் உலகின் அதிகப்படியான வேலைநேரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெறுவதாக  சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையொன்று தெரிவிக்கிறது. (முதல் நான்கு இடங்களில் இந்திய துணைக்கண்டத்தவர் பெரும்பான்மையாக புலம்பெயர் தொழிலாளர்களாக பணிபுரியும் காம்பியா, மங்கோலியா, மாலத்தீவு,  கதார் ஆகிய நாடுகள் உள்ளன.) இன்னொரு அறிக்கை 15-59 வயதுக்குட்பட்ட இந்திய நகர்ப்புறத் தொழிலாளர்கள் வேலை மற்றும் அதுசார்ந்து வாரத்திற்கு 60 மணி 47 நிமிடங்கள் அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 521 நிமிடங்களைச் செலவிடுவதாக தெரிவிக்கிறது. அதேவேளையில் வங்கதேசத்தைத் தவிர, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகக்குறைந்த சட்டப்பூர்வ ஊதியத்தைப் பெறுகிறவர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர் என்கிறது 2020-21 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஊதிய அறிக்கை. 

நாராயணமூர்த்தி உபதேசிப்பதற்கும் முன்பாகவே விவசாயிகள், வியாபாரிகள், சுயதொழில் முனைவோர், தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள், சேவைத்துறைகள் மற்றும் இணைய வர்த்தகம் போன்றவற்றைச் சார்ந்து ஒப்பந்தக்கூலிகளாக இயங்கும் தனிநபர்கள்/ குழுக்கள், பல்வேறு முறைசாரா துறைகளின் தொழிலாளர்கள் ஆகியோர் ஏற்கனவே 12 - 14 மணிநேரம் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களெல்லாம் நாராயணமூர்த்தி சொல்வதை விடவும் மிகக்கடினமாக உழைத்தும்கூட இவர்களது பொருளாதார நிலை உயரவில்லை. செயலி வழி இயங்கும் வாகனங்களின் ஓட்டுநர்கள் 14 மணிநேரம் பணியாற்றியும்கூட அவர்களது நாள் ஊதியம் 500 ரூபாயைத் தாண்டவில்லை என்றும், இணையவழி வர்த்தகப்பொருட்களையும் உணவுப் பண்டங்களையும் விநியோகிக்கும் ஊழியர்களும் சற்றேறக்குறைய இதேநிலையில்தான் அவதியுறுகின்றனர் என்றும் People’s Association in Grassroots Action and Movements, Indian Federation of App-based Transport Workers ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வுகளின் வழி அறியமுடிகிறது. நாட்டில் நிலவும் வேலையின்மையையும் வறுமையையும் காட்டி இத்தொழில்களில் நிலவும் உழைப்புச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்டுவதற்காக, இந்தத் தொழில்களையும் தொழிலாளர் நலச்சட்டங்களின் வரம்புக்குள் கொண்டுவந்து இங்குள்ள தொழிலாளர்களுக்கும் 8 மணிநேர வேலை, கண்ணியமான பணியிடச்சூழல், பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்கிற குரல் எழத்தொடங்கும் இவ்வேளையில் ஒட்டுமொத்த தொழிலாளர்களது வாழ்வையும் காவுகேட்கிறார் நாராயணமூர்த்தி. 

கடினமாக உழைத்தால் வாழ்க்கை மேம்படும் என்கிற பசப்பலுக்கு எதிர்நிலையாக தொழிலாளர்களது வாழ்வனுபவம் கொடியதாக இருக்கும் இந்த நிலையில்தான் மேலும் கடினமாக வாரத்திற்கு 90 மணிநேரம் உழைக்குமாறு அறைகூவல் விடுத்திருக்கிறார் எல்&டி தலைவர் சுப்ரமணியன். அதாவது வாரத்தின் ஏழுநாட்களும் நாளொன்றுக்கு சுமார் 13மணிநேரம் வேலை செய்யவேண்டுமென்றார். ஆறுநாள் வேலைசெய்தால் ஓய்வுக்கென ஊதியத்துடன் ஒருநாள் ஒதுக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியாத சுப்பிரமணியன், ஞாயிற்றுக்கிழமைகளில் அப்படி எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று பொரிந்துத் தள்ளியிருக்கிறார். 

இந்தியப் பெண்கள் பிறப்பெடுப்பதே ஞாயிற்றுக்கிழமைகளில் புருசனுக்கு முகத்தைக் காட்டிக் கொண்டிருப்பதற்காகத்தான் என்பதான சுப்பிரமணியனின் பின்தங்கிய இந்த வக்கிரப் பார்வைக்கு மாறானதாக இருக்கிறது உண்மை நிலவரம். 15 வயதுக்கு மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்களில் 32.8 சதவீதத்தினர் பெண்கள் என்கிறது ஒன்றிய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள Female Labour Utilization in India என்னும் அறிக்கை. பொருளீட்டுதல் மட்டுமன்றி, புருசனுக்கு முகத்தைக் காட்டிக்கொண்டிருப்பதை விடவும் வீட்டைப் பராமரித்தல், உணவுத்தயாரித்தல், குழந்தை வளர்ப்பு, முதியோரை பேணுதல் என்று ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட ஒவ்வொருநாளும் வேறுபல முக்கிய கடமைகள் பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன என்பதை சுப்ரமணியனின் ஆணாதிக்க மனம் பார்க்க மறுக்கிறது. சரி, அப்படி ஒரு ஆண்/ பெண் தொழிலாளி தன் இணையரின் முகத்தையே பார்த்து சொக்கிப்போய் ரசித்துக் கொண்டிருந்தால்தான் இந்த சுப்பிரமணிக்கு என்ன நோக்காடு வந்தது? அன்பும் காதலுமான ஒரு வாழ்க்கைக்காகத்தான் மக்கள் உழைக்கிறார்களேயன்றி உழைப்பதற்காக பிறக்கவுமில்லை, வாழவுமில்லை.  இயந்திரங்களுக்கே கூட ஓய்வு தேவைப்படும்போது மனிதர்களை இயந்திரங்களைவிடவும் கீழ்நிலைக்குத்தள்ளி இந்த நாராயணமூர்த்திகளும் சுப்பிரமணியன்களும் எட்ட விரும்பும் இலக்கும் வளர்ச்சியும் யாருக்கானவை? 

‘‘பனிரெண்டு மணிநேர வேலை மிகையானது, அதைப் பதினோரு மணி நேரமாகக் குறைக்க வேண்டும், மேலும் சனிக்கிழமை வேலை இரண்டுமணியோடு முடிந்துவிட வேண்டும்... கடந்த நான்காண்டுகளாக எங்கள் நிறுவனங்களில் நாங்கள் அவற்றை முயற்சி செய்தோம், அவை நன்றாகப் பயனளிப்பதை அறிகிறோம். சராசரி உற்பத்தி வீழ்ச்சியடைவற்குப் பதிலாக உயர்ந்துள்ளது’’ என்று 1860ஆம் ஆண்டில் ஒரு முதலாளிக்கு இருந்த தெளிவு இந்த 21ஆம் நூற்றாண்டின் இந்திய முதலாளிகளுக்கு இல்லாமல் போய்விட்டது. 

‘வேலை செய்யாமல் சோம்பலாக இருப்பதை ஒழிக்கும் பொருட்டும், பெருமிதம் மற்றும் விடுதலை உணர்வைத் திசைதிருப்புவதற்கும், ஏழைகளை ‘‘சிறந்த தொழிலகங்களில்’’ அடைக்க வேண்டும் என்று தொழிற்துறை குறித்த கட்டுரைகளின் ஆசிரியர் முன்மொழிகிறார். அந்தத் தொழிலகங்கள் பயங்கரமானவையாக இருக்கவேண்டும், அங்கு நாள் ஒன்றுக்குப் பதினான்கு மணிநேரம் வேலை வாங்கப்பட வேண்டும், உணவுக்காக கழித்தது போக, முழு பனிரெண்டு மணிநேரம் மீதமாக வேண்டும். நாள் ஒன்றுக்குப் பனிரெண்டு மணிநேர வேலை, அதுதான் 18ஆம் நூற்றாண்டு மனிதாபிமானிகள் மற்றும் நியாயவாதிகளின் இலட்சியமாக இருந்தது. இந்தத் தீவிர மனிதாபிமானிகளைவிட நாம் எவ்வளவு தூரம் பின்தங்கியிருக்கிறோம் பாருங்கள்!’ என்று 19ஆம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் எழுதிய பால் லபார்க் ( பிரான்ஸ் கம்யூனிஸ்ட் மற்றும் கார்ல் மார்க்ஸின் மருமகன்), இந்த பூமி தொழிலாளர்களின் கண்ணீர் பள்ளத்தாக்காக இருப்பதை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்றார். அது உலகின் பலபாகங்களில் ஓரளவுக்கு சாத்தியமுமானது. ஆனால் இந்திய முதலாளிகளும் ஆட்சியாளர்களும் இந்த நாட்டை தொழிலாளர்களின் கண்ணீர் பள்ளத்தாக்காகவே வைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டுள்ளனர்.  

முதலாளிய ஆதரவாளர்கள் நடப்புக்காலத்தை ஐந்தாம் தலைமுறை தொழிற்புரட்சிக்காலம் என்ற அலங்காரமாக சொல்லிக்கொண்டாலும் இந்திய முதலாளிகள் 18ஆம் நூற்றாண்டுக்குரிய - முதலாம் இரண்டாம் தொழிற்புரட்சிக் காலத்திய ஈவிரக்கமற்ற சுரண்டல் உரிமையையே விரும்புகிறார்கள். அதற்கிசைவாக ஆட்சியாளர்களை ஆட்டுவித்து தொழில் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களைத் திருத்துகிறார்கள். 18, 19ஆம் நூற்றாண்டுகளில்  இருந்ததைப் போன்ற - சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்த்தறியவே இயலாதபடி தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் கூட்ட வேண்டுமெனக் கொக்கரிக்கிறார்கள். 

உலகளாவிய அளவில், 2016ஆம் ஆண்டு வாரத்திற்கு 55 மணிநேரம் வேலைசெய்த தொழிலாளர்களில் 3,98,000 பேர் பக்கவாதத்தாலும் 3,47,000 பேர் இருதயநோய் பாதிப்பினாலும் மாண்டுபோனார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கொடுத்த எச்சரிக்கையிலிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ள மறுத்து வேலைநேரத்தை இரட்டிப்பாக்க வேண்டுமெனும் கொடூரமான யோசனைகளை முன்வைக்கிறார்கள். எட்டுமணி நேர வேலை நாளுக்காக உலகெங்கும் போராடியவர்களின் தியாகத்தையும், இங்கு அந்த உரிமைக்கு வழியமைத்த அண்ணல் அம்பேத்கரின் பங்களிப்பையும் உதாசீனம் செய்யும் அவர்கள், அதிகப்படியான நேரம் வேலை செய்வதால் உண்டாகும் உடல்நலக்கேடு, உளவியல் பிரச்னைகள் காரணமாக நாட்டின் குடிமக்களில் பெரும்பகுதியினரை இயல்பான மனிதவாழ்வுக்கு தகுதியற்றவர்களாக மாற்றுவதற்கும் துணிந்திருக்கிறார்கள். 

வேலையையும் எஞ்சிய தனிப்பட்ட வாழ்வையும் (Work-Life Balance) ஒன்றுக்கொன்று முரணில்லாத வகையில் அமைத்துக்கொள்வதற்கான தொழிலாளர் உரிமை பற்றிய விவாதங்கள் உலகெங்கும் நடந்துவரும் காலமிது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இசைவான விகிதத்தில் வேலைநேரமும் வேலைநாட்களும் குறைக்கப்பட்டு தொழிலாளர்களது வாழ்க்கைத் தரம்  சமகாலத் தன்மையுடையதாய் மேம்பட வேண்டும் என்ற இலக்கையும் உள்ளடக்கியது இவ்விவாதம். வாழ்வின் அனைத்து இன்பங்களையும் துய்ப்பதற்கான கற்பனையும் விருப்பமும் வாய்ப்பும் சுதந்திரமும் தொழிலாளர்களுக்கு உண்டு. அதற்கிசைவாகவே எட்டு மணிநேரம் வாழ்வாதாரத்திற்காகவும் எட்டு மணிநேரம் வாழ்வதற்காகவும் எட்டு மணிநேரம் உறங்குவதற்காகவுமாக ஒவ்வொரு நாளையும் பகுத்துக்கொண்டுள்ளோம். இதில் நமது எந்தவொரு நொடியையும் யாரிடமும் இழக்கவும் கூடாது, இரவல்தரவும் முடியாது.

“ஓ! ஓய்வே,
வேலை என்னும் இந்த நீங்காத் துயரத்திலிருந்து மீள்வதற்குக் கருணை காட்டு!
ஓ! ஓய்வே,
கலைகளின் தாயே,
உயர்ந்த விழுமியங்களின் தாயே,
மனித இனத்தின் வலிகளுக்கு நீ தைலமாக இரு!” 

மேற்கோள்கள்:

·         உழைப்பை ஒழித்தல், பால் லபார்க் & பாப் பிளாக்

·        Seventy-Hour Working Week: A Reflection of Capital's Essence, R Karumalaiyan


நன்றி: விகடன்.காம், 2025 ஜனவரி 13

 

வெள்ளி, ஜூலை 14

மக்களின் சம்மதமே அரசின் அதிகார எல்லை - ஆதவன் தீட்சண்யா

 நீலம் ஆசிரிய குழுவினருடனான உரையாடலில் வந்த கேள்விகளும் நானளித்த பதில்களும்

1.   ஒரு சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டுவருவதற்கு முன் அது குறித்து கருத்துக் கேட்பதுதானே ஜனநாயகத்தன்மை. ஆனால், அப்படிச் செய்யாதது கூட்டணிக் கட்சியினர் உட்பட மக்கள் பிரதிநிதிகளை உதாசீனப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளலாமா?

ஒரு சட்டத்திருத்தம் நாளை முன்மொழியப்படுவதாக இருந்தால் அதுபற்றிய சுருக்கமான குறிப்பினை இன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குகிற பொதுவான  நடைமுறை 12மணிநேர வேலை நாள் சட்டத்திருத்த முன்வரைவு விசயத்திலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பை படித்துப் பார்த்து தெரிந்துகொண்டுதான் சிபிஐஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி முதலமைச்சரைச் சந்தித்து இந்தச் சட்டத்திருத்தத்தை முன்மொழிய வேண்டாம், பொருளாய்வுக்குழுவுக்கு அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு முதலமைச்சரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுப்பினர் வேல்முருகனும் முதல்வரிடம் கோரியிருக்கிறார். முதல்வர் உறுதியளித்தற்கு மாறாக சட்டத்திருத்தம் முன்மொழியப்பட்டதே கண்டனத்திற்குரியது. முன்மொழியப்பட்டுவிட்ட நிலையில் அந்தத் திருத்தத்தின் மீது விவாதம் தேவை என்று உறுப்பினர்கள் எழுப்பிய கோரிக்கையை நிராகரித்து குரல் வாக்கெடுப்பின் (ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க) மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி அவையில் தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக விவாதமே இன்றி சட்டங்களையோ திருத்தங்களையோ நிறைவேற்றுவதானது சட்டமன்ற ஜனநாயகத்திற்குப் புறம்பானது.

“அரசியல் சுதந்திரம் என்பது சட்டமியற்றுவதில் பங்கு கொள்வதர்கும் அரசாங்கத்தை மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் தனிமனிதருக்குள்ள சுதந்திரமாகும். வாழ்வுரிமை, சுதந்திரம், இன்பநாட்ட முயற்சி போன்ற மாற்றமுடியாத உரிமைகளை தனிமனிதருக்கு அளிப்பதற்காகவே அரசாங்கம் அமைக்கப்படுகிறது. எவருடைய உரிமைகளைக் காப்பதற்காகவென்று அரசு அமைக்கப்பட்டிருக்கிறதோ  அவர்களிடமிருந்துதான் அரசு அதிகாரம் பெறுகிறது. எனவே ஆளப்படுவோரின் சம்மதத்தின் பேரிலேயே அரசாங்கத்தின் அதிகார எல்லையும் இருப்பும் இயங்கவேண்டும்…” என்று அண்ணல் அம்பேத்கர் சொல்லியிருப்பதை ஆட்சியாளர்கள் பின்பற்றும்பட்சத்தில் இந்தச் சட்டத்திருத்தம் பற்றி பொதுவிவாதத்தை நடத்தியிருப்பார்கள். குறைந்தபட்சம் கூட்டணிக்கட்சிகளுடனாவது பேசியிருப்பார்கள்.  

2.   எட்டு மணி நேர வேலைநாள் என்பதில் இருக்கும் அறிவியல் மற்றும் அரசியல் அடிப்படைகளைத் தெரிந்த திமுக அரசே தொழிலாளர் வர்க்கத்திற்குத் துரோகம் செய்துள்ளது. இந்நிலையில், பாஜகவுக்கும் திமுகவுக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிடப் போகிறது?

பாஜகவையும் திமுகவையும் சமன்படுத்திப் பார்க்க முடியாது, கூடாது. அதுவும் இதுவும் எதுவும் சரியில்லை என்று எல்லோரையும் குத்தம் சொல்லிக் கொண்டிருப்பதையே மகத்தான அரசியல்பணி என்று திரிகிறவர்கள் கிளப்பிவிடுகிற  இதுபோன்ற வாதங்களை நாம் நிராகரிக்க வேண்டும். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற அரசியல் செயல்திட்டமும் அதை அடைவதற்கான வழிமுறைகளும் கொண்டவர்கள் சொந்த மதிப்பீடுகளை கைக்கொள்ள வேண்டும். தூய்மைவாதம் பேசி எல்லோரையும் சனாதனிகளாகிய எதிரிகளின் பக்கம் தள்ளிவிடுவது நமது நோக்கங்களுக்கு ஊறு விளைவிப்பதாகும்.   

யோகி ஆதித்யநாத் பதவியேற்றதும் 20 மணிநேரம் வேலை பார்க்கும் ஊழியர்கள் மட்டுமே என்னுடைய அரசில் பணியாற்றலாம் என்று அறிவித்தபோது அதன் நடைமுறைச் சாத்தியம், அறிவியல்தன்மை போன்ற எதுவுமே விவாதத்திற்குள்ளாக்கப்படவில்லை.  ஊடகங்கள் அந்த அறிவிப்புக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருப்பதான  தோற்றத்தைக் கட்டமைக்க முயன்றன. (பார்க்க: காமிய தேசத்தில் ஒருநாள் என்கிற என்னுடைய சிறுகதை). இதே சட்டத்திருத்தத்தை  ஒன்றிய அரசும் பாஜக ஆளும் மாநிலங்கள் சிலவும் நிறைவேற்றிய போது அது இடதுசாரி தொழிற்சங்கங்கள் சிலவற்றின் பிரச்னையாக குறுக்கிப் பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் இந்தப் பிரச்னை பெரும் கொந்தளிப்பை உருவாக்கியதை வரவேற்கத்தகுந்த அரசியல் முதிர்ச்சியாகப் பார்க்கவேண்டும். இந்த முதிர்ச்சி ஏன் அந்த இந்த விசயத்தில் வெளிப்படவில்லை என்று நொட்டை சொல்லிக்கொண்டிருக்காமல் இதை பரவலாக – வளர்த்தெடுப்பது அவசியம். (திமுகவின் இணையச் செயல்பாட்டாளர்கள் சிலர் மொன்னை விசுவாசத்தைக் காட்ட செய்த முயற்சிகூட அவ்வளவாக எடுபடவில்லை).      

தமிழ்நாட்டில் எதிர்ப்பும் கண்டனமும் கிளம்பியதும் வறட்டு கெளரவம் பார்க்காமல் உடனடியாக அமைச்சர்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மே 2ஆம் தேதி நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்காக கூட காத்திருக்காமல் பேச்சுவார்த்தை நடந்த அன்றே சட்டத்திருத்தத்தின் மீதான மேல் நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஜனநாயகப்பண்பை கடந்த எட்டாண்டுகளில் பாஜக எந்த விசயத்திலாவது வெளிப்படுத்தியுள்ளதா? விமர்சனம் அல்லது மாற்றுக் கருத்து சொல்பவர்களை அர்பன் நக்சல், ஆண்ட்டி இந்தியன், தேசவிரோதி, இன்டலக்சுவல் ஜிகாத், அகடமிக் ஜிகாத் என்று அவதூறு செய்து வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, தேசிய பாதுகாப்புப்படை, சிபிஐ போன்ற தன் சட்டப்பூர்வ அடியாள் பட்டாளங்களையும் சட்டவிரோத அடியாள் பட்டாளமான சங்பரிவார கும்பலையும் ஏவி ஆளை நசுக்கும் பாஜக உலக நாடாளுமன்ற வரலாற்றுக்கு நேர்ந்த களங்கம். நேற்றுவரை அவர்களுக்கு இணக்கமாக இருந்த ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் மீதான ஒடுக்குமுறை புத்தம்புதிய சான்று. விவசாயிகளின் போராட்டத்திற்கு நிதியுதவி செய்ததை குற்றமாக கருதி, நூற்றாண்டுகால பாரம்பரியமுள்ள அஞ்சல் தொழிற்சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்துசெய்திருக்கிறது பாஜக அரசுடன் திமுக அரசை எப்படி சமன்செய்து ஒப்பிட முடியும்?       

 3.   ஒருநாளின் மூன்றில் ஒருபகுதியை வேலைக்கு ஒதுக்குகிறோம். அதிலேயே உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டல் எனப் பல ஒடுக்குமுறைகள் அரங்கேறுகின்றன. இந்நிலையில் ஒருநாளின் இரண்டில் ஒரு பகுதி வேலை என்ற நிலை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எத்தகைய விளைவுகளை உருவாக்கும்?

விலங்குகள் கூட தமது சக்திக்கு அப்பாற்பட்ட வேலைகளைச் செய்யவைக்கும் போது முரண்டு பிடித்து மறுத்துவிடுவதைப் பார்க்கிறோம். ஆனால் சூரியன் உதிப்பதையோ மறைவதையோ பார்க்கமுடியாதபடி தொழிலாளிகள் ஆலைகளுக்குள் அடைத்துவைக்கப்பட்டு அவர்களது ரத்தமும் வியர்வையும் உறிஞ்சிப்பட்டன.  தொடக்ககால  முதலாளித்துவத்தின் இந்தக் கொடூர குணம் இன்றளவும் நீடிக்கிறது. குறைந்தபட்சம் இடையறாத உழைப்பில் ஈடுபடுவதால் இழக்கும் ஆற்றலை திரும்பப் பெறுவதற்கான அவகாசத்தைக்கூட தொழிலாளிகளுக்கு வழங்க மறுப்பதன் மூலம் அவர்களை மனித நிலையிலிருந்து தாழ்த்தி இயந்திரநிலைக்குள் பொருத்த முனைகிறது முதலாளித்துவம். கடைநிலை ஊழியர் தொட்டு கணினித் தொழில்நுட்ப ஊழியர் வரை இந்தச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். இதனால் பணியிடத்திற்கு அப்பால் ஓர் உலகம் இருப்பதையே அறிய முடியாதவர்களாக அறிந்தும் துய்க்க முடியாதவர்களாக ஆளுமைக் குறுக்கத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கான தனிவிருப்பங்கள், குடும்பவாழ்வு, சமூக  ஒன்றுகூடல் போன்றவற்றில் பங்கெடுக்காமலும், அரசை மாற்றுவதிலும் உருவாக்குவதிலும் பங்கெடுக்காமலும் உள்ளொடுங்கியும்  ஒருகட்டத்தில் இவற்றில் நாட்டமற்றவர்களாகவும் மாறிப்போவார்கள். கிடைக்கும் சொற்பநேரத்தில் அசதியைப் போக்கிக் கொள்வதற்கான எளிய வழிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதே போதுமென்ற நிலை உருவாகும்.  

4.   வேலைக்கான ஊதியம் என்பதிலேயே இங்கு பாகுபாடு நிலவுகிறது. கடும் உழைப்பாளி, திறன் உழைப்பாளி என்று பிரிவினை வர்க்கப் படிநிலைகளை உருவாக்குகிறது. இந்நிலையில், 12 மணி நேர வேலை எம்மாதிரியான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும்?

ஒரு தொழில் நிறுவனத்தின் மொத்தத்  தொழிலாளர் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் தேவையற்றவர்கள் என்ற நிலை உருவாகும். மூன்று ஷிப்டுகளுக்கான தொழிலாளர்களில் எடுத்தயெடுப்பில் ஒரு ஷிப்ட் தொழிலாளிகள் தேவைப்படாதவர்களாக ஆக்கப்படுவார்கள். இவர்களை வெளியே அனுப்ப விருப்ப ஓய்வு என்கிற பெயரில் கட்டாய வெளியேற்றத்தை நிர்வாகங்கள் கைக்கொள்ளும்.  ஏற்கனவே உள்ள வேலையின்மையை இது மேலும் அதிகரிக்கச் செய்யும். வேலையின்மை அதிகரிக்கும்போது, உழைப்புச்சந்தையில் தொழிலாளர்கள் மலிவான விலைக்குக் கிடைப்பார்கள். இவர்களைக் காட்டி நிரந்தரத் தொழிலாளார்களின் ஊதியம் உள்ளிட்ட பணப்பயன்கள், உடல்/மனநலம் சார்ந்த உரிமைகள் பறிக்கப்படும். சமூகத்தின் பெரும்பகுதியாகிய உழைக்கும் மக்கள் மனநிறைவற்ற ஒரு வாழ்க்கை முறைக்குள் மேலும் தீவிரமாக தள்ளப்படுவார்கள்.

5.   இந்தியாவில் ஏற்கெனவே முறைசாரா தொழில்களிலும், தகவல் தொழிற்நுட்பத்துறையிலும் தொழிலாளர்கள் சற்றேறக்குறைய 12 மணிநேரம் வேலை பார்த்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும்.

தொழிலாளர் நல விதிகள், பணிப்பாதுகாப்பு, உழைப்புக்கேற்ற ஊதிய மாற்றம், லாபத்தில் பங்கு, கண்ணியமான பணியிடச் சூழல் போன்றவை முன்மாதிரியான முதலாளியாக இருக்க வேண்டிய அரசே நடத்தும் நிறுவனங்களில்கூட முறையாக அமலாவதில்லை. எனில் தனியார் நிறுவனங்களிலோ அல்லது எவ்வித கூட்டுபேரச் சக்தியுமற்ற முறைசாரா தொழில்களிலோ இவையெல்லாம் எப்படி கிடைக்கும்? நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழில்களில் உள்ளவர்கள் வெறும் 6 சதவீதத்தினர் மட்டுமே. எஞ்சிய 94% தொழிலாளர்கள் முறைசாரா தொழில்களில்தான் உள்ளனர். இவர்களை அணிதிரட்டுவதும், அணிதிரட்டப்படாத நிலையிலேயே கூட கண்ணியத்துடன் வாழ்வதற்கான சட்டப் பாதுகாப்பை உருவாக்குவதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் அவசியம்.   சட்டவிரோதமாக ஒரு துறையிலோ அல்லது நிறுவனத்திலோ 12 மணிநேரம் வேலைநாளாக இருக்கிறதென்றால் அங்கு 8 மணிநேர வேலைநாளை உறுதிசெய்வதுதான் அரசின் பொறுப்பாக இருக்கமுடியும். அதல்லாமல், ஒரு சுரண்டலை நியாயப்படுத்தி எல்லோரையும் அந்த விஷச்சூழலுக்குள் தள்ளக்கூடாது.   

பார்ப்பனீயம், முதலாளியம் என்கிற இரண்டு எதிரிகளையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்றும், தொழிலாளர்கள் தமது நலன்களைப் பாதுகாக்கும் ஓர் அரசை நிறுவிக்கொள்ளும் அளவுக்கு அரசியலில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்றும் அண்ணல் சொல்லிச் சென்ற வரிகளில் தான் இதற்கான தீர்வு இருப்பதாக கருதுகிறேன். அடைவதற்கோர் பொன்னுலகம் உண்டு என்று மார்க்ஸ் சொன்னதன் பொருளும் இதுதான். ஆனால் இந்த மேற்கோள்களை கொட்டை எழுத்தில் போடுவதாலோ தொண்டை நரம்பு புடைக்க ஆவேசமாக முழங்குவதாலோ எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. கற்பி, போராடு, ஒன்றுசேர் எனும் சொற்களின் உள்ளார்ந்த பொருளை விளங்கிக்கொண்டு செயல்படுவதில் தான் மாற்றத்தை இழுத்துவர முடியும்.

நீலம், 2023 ஜூன் இதழ்

திங்கள், ஏப்ரல் 24

சூரியனையே பார்க்கமுடியாதபடி செய்துவிடாதீர் - ஆதவன் தீட்சண்யா

தமிழ்நாட்டில் தனியார் தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களது வேலைநேரத்தை 8மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமாக மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை ஏப் 21 அன்று திமுக அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. அன்றைக்கு காலை சிபிஐஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி போன்ற தோழர்கள் முதலமைச்சரைச் சந்தித்து இந்தச் சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டாமென்றும், பொருளாய்வுக்குழுவுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதலமைச்சரும் சம்மதித்திருந்த நிலையில் இந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களிடமிருந்தும் தோழமைக்கட்சியினரிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்தச் சட்டத்திருத்தம் பற்றி இன்று தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப் போவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வந்து அரசுடன் கலந்துபேசியதை மட்டும் வைத்துக்கொண்டு சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிவிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசப்போவதாக அறிவித்திருப்பதானது மிகவும் காலந்தாழ்த்தி மேற்கொள்ளப்படும் பொருத்தமற்ற நடவடிக்கை. எதிர்ப்புக்கு செவிமடுக்கிற ஜனநாயகப்பண்பு இந்த அரசிடம் எந்தளவுக்கு உள்ளது என்பதற்கு இந்த அழைப்பை ஓர் அளவுகோலாக கருதமுடியாது. அது பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தது.  

 முதலீட்டாளர்களுக்கு அரசு கொட்டிக்கொடுக்கிற சலுகைகளையெல்லாம் இங்கிருக்கிற ஒரு எருமைக்குக் கொடுத்தால்கூட அது தொழிலதிபராகிவிடும். அதற்கு மேலும் முதலீட்டாளர்கள் இப்படியானதொரு சட்டத்திருத்தத்தை கோரியதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. வாயும் வயிறுமின்றி உடல்முழுக்க கை முளைத்தவர்களாக தொழிலாளர்கள் இருந்துவிட்டால் உற்பத்தியைப் பெருக்கி குமித்துவிடலாமே என்கிற அங்கலாய்ப்பு அவர்களுக்கு எப்போதுமே இருந்து வருவதுதான். நாளையே அப்படியொரு கோரிக்கையை வைத்தால், தொழிலாளிகளை ஆய்வுமேசையில் கிடத்தி அறுவைச்சிகிச்சையைத் தொடங்குமா அரசு?

எட்டு மணி நேர வேலைநாள் என்பதில் இருக்கும் அறிவியல் மற்றும் அரசியல் அடிப்படைகளைத் தெரிந்தே அதை தகர்த்ததன் மூலம் திமுக அரசு தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கே துரோகம் செய்துள்ளது. இதைச் சொன்னதுமே சீனாவில் இல்லையா என்கிற கேள்வி சாமர்த்தியமாக முன்வைக்கப்படுகிறது. சீன அரசு தொழிலாளர் விரோதப் பாதையில் செல்லுமானால் அதை அந்நாட்டின் தொழிலாளிகள் எதிர்ப்பார்கள். ஒருமைப்பாட்டுணர்வில் நாமும் எதிர்ப்போம். தொழில் வளர்ச்சிக்கும் தொழிலாளர் நலனுக்குமென சீனாவிலிருந்து பின்பற்றத்தக்க எத்தனையோ திட்டங்கள் இருக்கும்போது அங்கு தோல்வியடைந்த அல்லது விரட்டியடிக்கப்பட்ட ஒரு விசயத்தைத்தான் திமுக அரசு பின்பற்ற வேண்டுமா? (இந்த ஆண்டு அங்கு மேதினக் கொண்டாட்டத்திற்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது)   

996 வேலைநாள் – அதாவது காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை – 6 நாட்கள் - என்கிற கருத்தாக்கம் சீனாவில் அறிமுகமானது. இது, நாளொன்றுக்கு எட்டுமணி நேரம், அதிகப்படியாக வாரத்திற்கு 44 மணிநேரம் என்கிற சீனாவின் வேலைநாள் சட்டத்திற்கு விரோதமானது, தாராளவாதக் கொள்கையை நோக்கி சீன அரசு சரிகிறது என்று அறிமுக நிலையிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் இந்த 996 வேலைமுறையை ஏற்கவிரும்பும் நிறுவனம் அதன் தொழிலாளர் அமைப்புகளுடன் பேசி இந்த முடிவை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. 996 வேலைமுறையை ஏற்றுக்கொண்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பல்வேறு பணப்பயன்கள் உறுதிசெய்யப்பட்டிருந்த போதும் பணிச்சுமையின் காரணமாக கடும் மனச்சோர்வுக்கும் உடல்ரீதியான பல துன்பங்களுக்கும் ஆளாகிவந்தனர்.  நான் மிகவும் களைப்படைந்துவிட்டேன், சூரியவெளிச்சத்தை கடைசியாக எப்போது பார்த்தேன் என்று நினைவிலில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 996ஐசியூ.காம் போன்ற இணையதளங்கள் (996 வேலைநாள் என்பது தொழிலாளர்களை ஐ.சி.யூ. சிகிச்சைக்கு அனுப்புவதுடன்தான் முடிகிறது என்பதைச் சுட்டும்விதமாக இப்பெயர்) எதிர்ப்புணர்வுகளை ஒருங்கிணைத்தன. கடைசியில், தொழிலாளர்களின் உடல், மனநலப் பிரச்னைகளில் சமரசமில்லை என்று பாதுகாப்புச் சட்டங்களை தீவிரமாக செயல்படுத்தப் போவதாக சீன அரசு அறிவிக்கவேண்டிவந்தது. இந்தச் சூழலில்தான் அங்கிருந்த பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்துகொண்டு சீனாவின் 996 போல இங்கும் வேலைநாளை மாற்றும்படி கோருகிறார்கள். கார்ப்பரேட்டுகள் காலால் இட்ட வேலையை தலையால் செய்துமுடிக்கும் பாஜக அரசு ஆளைக் கொல்லும் இந்தத் திட்டத்தை நெகிழ்வான வேலைநாள் என்று வஞ்சகமாக ஏவியுள்ளது.      

இந்தியாவில் ஏற்கனவே முறைசாரா தொழில்களிலும், தகவல் தொழில்நுட்பத்துறையிலும் தொழிலாளர்கள் சற்றேறக்குறைய 12 மணிநேரம் வேலை பார்த்துவருகின்றனர். நாட்டின் சட்டப்பூர்வ வேலைநாளுக்கு விரோதமான இந்த உழைப்புச்சுரண்டல் பற்றிய பிரக்ஞையும் எதிர்ப்புணர்வும் போர்க்குணமும் அமைப்புரீதியாக திரளும் வாய்ப்பும் அற்றவர்களாக உள்ள இந்தத் தொழிலாளர்களுக்கு 12 மணிநேர வேலைநாளுக்கு கிளம்பியுள்ள எதிர்ப்பு பொருளற்றதாகவும் நகைப்புக்குரியதாகவும் தெரியக்கூடும். 8 மணி நேர வேலைநாள் என்பதன் வரலாற்றையோ அதற்கான தியாகத்தையோ அறியாதவர்களுக்கு அது தேவையற்றதாகக்கூட தோன்றலாம். நியோ நார்மல் என்கிற பெயரில் எல்லா ஒழுங்கீனங்களையும் விதிமீறல்களையும் நியாயப்படுத்திக் கொண்டு அதற்குள் சாதகமானதைத் தேடியடைந்து  சமாதானமடைகிற, பீயிலே பொறுக்கிய அரிசியில் பிரியாணி ஆக்கித் தின்பதை பெருமிதமிதமாய் பேசியலைகிறவர்களும் கூட மனிதர்கள்தான். அவர்களது உடல்/மனநலனுக்கும் இந்த 12 மணிநேர வேலைநாள் என்பது கெடுதலானதே. எட்டு மணி நேர வேலை, பணிப்பாதுகாப்பு, ஓய்வு போன்ற அடிப்படையான கோரிக்கைகள் இவர்களுக்கும் தேவையானவையே.

8மணிநேர வேலை என்பதே 8 மணிநேரத்துடன் முடிந்துபோவதில்லை. உணவுத் தயாரிப்பது, -பணியிடத்திற்கு சென்று திரும்புதல் உட்பட அதற்கான முன்தயாரிப்புக்கென கூடுதலாக சிலமணி நேரங்களை – உறக்கத்திற்கும் ஓய்வுக்குமென இருக்கும் தமது சொந்த நேரத்திலிருந்து செலவிட வேண்டியிருக்கிறது. ஒருவர் எட்டுமணி நேரம் உழைப்பதனால் இழக்கும் ஆற்றலைத் திரும்பப் பெறுவதில் ஓய்வும் உறக்கமும் முக்கிய பங்கு வகிப்பதை அறிவியல்பூர்வமாக உணர்ந்தே அவற்றுக்கென தனியாக நேரப்பங்கீடு செய்யப்பட்டது. ஆனால் நடைமுறை வாழ்வில் உறக்கம் என்பதே ஓய்வு என்று திரிக்கப்பட்டுவிட்டதால் உழைப்புக்கும் உறக்கத்திற்கும் அப்பால் இன்னொரு வாழ்வு இருப்பதையே அறியாதவர்களாக அல்லது அறிந்தும் துய்க்கும் வாய்ப்பற்றவர்களாக தொழிலாளர்கள் நிலையிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 12 மணிநேரம் வேலை என்பது 12 மணிநேரத்துடன் முடியக்கூடியதா? முதலீட்டாளர்களின் லாபவெறிக்கு ஒவ்வொரு தொழிலாளியின் சொந்த நேரத்திலிருந்தும் மேலும் நான்கு மணிநேரங்களை அபகரித்துக்கொடுக்கப் போவதாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது அவசியம்.

மூன்றாவது ஷிப்ட் என்பதே இல்லாமல் போகும் நிலையில் ஒரு ஷிப்டுக்குத் தேவையான தொழிலாளர்கள் பணியமர்த்தப்படாமலே போகும் நிலையில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கதி என்ன என்பது ஒருபுறமிருக்க, அந்த ஷிப்டுக்கென தற்போதுள்ள தொழிலாளர் எண்ணிக்கை குறையுமா நீடிக்குமா? இரண்டு ஷிப்டு தொழிலாளர்களைக் கொண்டே நிறுவனத்தை இயக்கிவிட முடியும் என்கிற வகையில் அரசின் செல்லப்பிள்ளைகளான முதலீட்டாளர்களுக்கு ஒரு லாபம். வாரத்தில் மூன்று நாட்கள் நிறுவனத்தை மூடிவைப்பதனால் அந்த நாட்களில் (உணவு, வாகனம், மின் கட்டணம், தண்ணீர், இயந்திரத் தேய்மானம் போன்ற  நடைமுறைச் செலவுகள் மிச்சம் என்கிற வகையில் மற்றொரு லாபம் என்பதும் உண்மைதான். ஆனால் வாராவாரம் மூன்றுநாட்களுக்கு ஆலையை மூடிவைக்கவா முதலீட்டாளர்கள் ஆலைகளைத் திறப்பார்கள்? அது அவர்களின் வர்க்க இயல்புக்கு ஏற்புடையதல்ல. எனில் அந்த மூன்று நாட்களிலும் வேறு வகையாக ஆலையை இயக்குவதற்கான திட்டம் அவர்களுக்கு இருக்கும். 12 மணிநேரம் அமலானால் அப்போது அந்தத் திட்டமும் தன் கோரமுகத்துடன் வெளிப்படக்கூடும். ஒருவேளை நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளர்களையும் எஞ்சிய மூன்றுநாட்களில் தற்காலிக/ ஒப்பந்த/ பயிற்சி/ தொழிலாளர்களையும் கொண்டு ஆலையை இயக்குவது அவர்களது திட்டமாக இருக்கலாம். வேலையின்மையைக் காட்டி தற்காலிகத் தொழிலாளர்களையும் அவர்களைக்காட்டி நிரந்தரத் தொழிலாளர்களையும் பணியவைத்துச் சுரண்டுவதில் இந்திய முதலாளிகள் ஏற்கனவே மோசமான பல முன்னுதாரணங்களை உருவாக்கியுள்ளதை மறந்துவிட வேண்டாம்.   

ஒவ்வொரு வாரமும் வேலையற்று இருக்கப்போகிற மூன்றுநாட்களையும் என்னவிதமான ஆக்கப் பணிகளில் தொழிலாளர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்கிற முன்கணிப்பு ஏதும் அரசுக்கு இருக்கிறதா? நான்குநாள் உழைப்பின் அலுப்பை சேர்த்துவைத்து மூன்றுநாட்களில் தீர்த்துக் கொள்வது சாத்தியமா? இவ்விசயத்தில் ஒசூர் தொழிற்பேட்டையின் அனுபவம் ஒன்றினை பகிர்வது பொருத்தமாக இருக்கும்.

 ***

கனப்படுப்பை ஏன் மூட்டவில்லை? 

வீட்டில் நிலக்கரி இல்லை.

ஏன் நிலக்கரி இல்லை?

நிலக்கரி வாங்க பணமில்லை

ஏன் பணமில்லை?

அப்பாவுக்கு வேலை இல்லை.

அப்பாவுக்கு ஏன் வேலையில்லை?

அவர் வேலை செய்யும் சுரங்கத்தில் அதிகப்படியான நிலக்கரி கையிருப்பில் இருக்கிறதாம்.

-குழந்தைக்கும் தாயுக்குமிடையே மார்க்ஸ் காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த உரையாடல் காலங்கள் தாண்டி 21ஆம் நூற்றாண்டுக்கும் பொருந்தக்கூடியதே. முதலாளிகள், தொழிலாளிகளை வதைத்து அதிகப்படியான உற்பத்தியைப் பெற்றுவிடுவார்கள். சந்தையின் தேவையை விடவும் கூடுதலாக கையிருப்பில் உள்ள சரக்கு தேங்கிவிடும் பட்சத்தில் அந்தச் சுமையைத் தொழிலாளிகள் மீது ஏற்றிவிடும் தந்திரமாக கதவடைப்பு செய்து உற்பத்தியை முடக்கிவிடுவார்கள். அம்மாதிரியான நேரங்களில் “ஆஹா, மூடிய ஆலையைத் திறக்கும் வரை வேலையே இல்லை… ஜாலியோ ஜாலி…” என்று எந்தத் தொழிலாளியும் கும்மாளம் போடுவதில்லை. உழைப்பிலிருந்து அந்நியமாக்கப்பட்ட அந்த நாட்களைக் கடப்பது பற்றிய அச்சம் அவர்களை நிலைகுலையச் செய்கிறது.

 ஒசூரில் கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்று, 2008-09ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார மந்தநிலை காரணமாக போதுமான விற்பனை இல்லை என்றும் கையிருப்பு தீரும்வரை உற்பத்தியை முடக்கி வைப்பதாகவும் கூறிக்கொண்டு வாரத்தில் மூன்றுநாட்கள் கதவடைப்பு செய்தது. தொடக்கத்தில் சொந்தவேலைகள் சிலவற்றை முடித்துக் கொள்ள இந்த விடுமுறை நாட்கள் தொழிலாளிகளுக்கு பயன்பட்டதென்னவோ உண்மை தான். ஆனால், அடுத்தடுத்த வாரங்களும் அதேநிலை என்றபோது தொழிலாளிகள் சேர்ந்தாற்போல மூன்று நாட்களை ஒவ்வொரு வாரமும் எவ்வாறு கழிப்பது என்று தடுமாறிப்போயினர். எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையும் வேலையின்றி வெறுமனே இருப்பதனால் தாறுமாறாக யோசிப்பதுமாக தொழிலாளர்கள் கடும் உளவியல் சிக்கலுக்கு ஆளாகினர். ஆலை வளாகத்திலேயே சில தற்கொலை முயற்சிகள் நடந்தன. சிறந்த தொழிலாளி என்று பணிக்காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட விருதுகள் சான்றிதழ் ஆகியவற்றை நிர்வாகத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டு தொடர்ந்து வேலை தருமாறு கதறியவர்களும் உண்டு. உறக்கமின்றி அகாலத்தில் வீட்டைவிட்டு வெளியேறி தெருக்களில் உலாத்துவது, மின்கம்பத்தை அல்லது ஓடும் சாக்கடையை வெகுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது என்றெல்லாம் சமனிலை இழந்த தொழிலாளர்களை   வீட்டுக்கு அழைத்துப்போய் படுக்க வைக்கும் பணியை தொழிற்சங்க ஊழியர்கள் இரவுதோறும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆலை நிரந்தரமாக இயங்கிய பின்னும்கூட இயல்புக்குத் திரும்ப அவர்களுக்கு காலம் தேவைப்பட்டது. (அந்த ஆண்டில் கையெழுத்தாக வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர் தரப்பை பலவீனப்படுத்த இந்த அச்சவுணர்வையும் நிச்சயமற்றத்தன்மையை நிர்வாகம் பயன்படுத்தப் பார்த்தது)

ஒரு தற்காலிக கதவடைப்பின் மூலம் வாராவாரம் வந்த மூன்றுநாள் விடுமுறையே தொழிலாளிகளின் ஆளுமையைச் சிதைக்குமென்றால் நிரந்தரமாகவே வாராவாரம் மூன்றுநாள் விடுமுறையில் அவர்கள் என்னவாகப் போகிறார்கள்? சும்மா இருக்கவொட்டாமல் வேறு இன்னுமொரு நிறுவனத்திற்கு தங்களை விற்றுக்கொள்ளும்படி அரசு விரட்டுகிறதா? அல்லது முதல் நான்குநாட்கள் நிரந்தரத் தொழிலாளியாகவும் அடுத்த நாட்களில் அத்துக்கூலியாகவும் வேலை பார்க்கும்படி நெட்டித்தள்ளுகிறதா? அப்படியும்தான் வேலை பார்த்து சம்பாதிக்கட்டுமே என்றும் கூட இன்றைய பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் சொல்லக்கூடும். ஆனால் சம்பாதித்துக் கொண்டேயிருந்தால் வாழ்வது எப்போது என்று தொழிலாளர்கள் நெடுங்காலமாய் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு விடையைத் தேடி கண்டையும் வரை வேலைநேரத்தை மாற்றமாட்டோம் என்கிற நிலைப்பாட்டை அமைச்சர்கள் இன்றைய கூட்டத்தில் அறிவிப்பது குடிமக்களுக்கும் ஆட்சிக்கும் நல்லது. இல்லையானால் சீனத் தொழிலாளி சொன்னதையே அமைச்சர்களுக்கும் முதல்வருக்கும் சொல்வோம்: சூரியனையே பார்க்க முடியாதபடி செய்துவிடாதீர். 

நாட்டையே நாம் ஆளவேண்டும் என்று சொல்லியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தங்கள் கட்சியின் சின்னம் என்பதற்காகவேனும் சூரியனை அன்றாடம் பார்க்கும்படியாக தொழிலாளிகளின் வேலைநேரம் மாற்றமின்றி நீடிப்பதை உறுதிசெய்யவேண்டும். அல்லது இன்னும் கூடுதல் நேரம் சூரியனைப் பார்க்கும்விதமாக வேலைநேரத்தை ஆறுமணிநேரமாகக் குறைத்து தன் தந்தையின் கனவை நனவாக்கவேண்டும். 

ஞாயிறு, ஆகஸ்ட் 13

காமிய தேசத்தில் ஒருநாள் - ஆதவன் தீட்சண்யா


அதிகாலை 2.31 மணி.
அதிகாரப்பூர்வமாக கண்விழிப்பதற்கான அலாரம் ஒலிப்பதற்கு இன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. விழித்ததுமே அவனுக்கு எழுந்த முதல் சந்தேகம், தூங்கினோமா என்பதுதான். இமைகளின் உட்புறத்தில் கங்கு மூட்டி தீய்ப்பதுபோல கண்களில் அப்படியொரு எரிவு. தூக்கத்தின் போதாமை, உடலெங்கும் அணுவணுவாய் நகரும் நோவாகி தன்னை பெரிதும் வதங்கச் செய்திருப்பதாக உணர்ந்தான்.

நள்ளிரவு 12 மணிக்கு வேலை முடிந்ததும் விர்ரென வண்டியை முறுக்கிக்கொண்டு வந்தும்கூட வீடு சேரும்போது இன்றைக்கும் 12.32மணி ஆகிவிட்டிருந்தது. நாடு முழுவதும் வேலை முடிவது அந்நேரம்தான் என்பதால் சாலைகளில் மிதமிஞ்சிய போக்குவரத்து நெரிசல். திருத்தியமைக்கப் பட்ட புதிய வேலைநேரம் அமலுக்கு வந்த கடந்த 18ஆம் தேதியிலிருந்து இதே அக்கப்போர் தான். வேலைக்கு வரும்போதும் திரும்பும் போதும் சாலையின் ஒவ்வொரு அங்குலத்திலும் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது. புகையும் அழுக்கும் படிந்த உடம்பை நசநசப்பு தீர கழுவிக்கொள்ளவும் முடியாத அசதி. தூளியில் உறங்கும் குழந்தையின் முகத்தைக்கூட பார்க்கத் தோன்றவில்லை. சாப்பிட்டு முடித்தக் கையோடு படுக்கையில் விழுகையில் மணி ஒன்றை தொட்டிருந்தது. உடலும் மனமும் இயல்புக்குத் திரும்பினால்தானே ஆழ்ந்த உறக்கத்திற்குள் செல்லமுடியும்? ஆனால் அதற்குள்ளாகவே நேரம் தீர்ந்து பதறியடித்துக் கொண்டு விழிக்க வேண்டியதாகிவிட்டது.

படுக்கைக்கு நேர்மேலே கூரையின் உட்புறத்தில் பதிக்கப்பட்டிருந்த டிஜிடல் கடியாரம் 2.31 மணி எனக் காட்டியது. மல்லாந்து படுத்திருந்தால் பார்க்கத் தோதானது அது. எந்தப்பக்கம் திரும்பினாலும் பார்ப்பதற்காக நாற்புறச் சுவர்களிலும் பதிக்கப்பட்டிருந்த கடியாரங்களும் அதே நேரத்தைத்தான் காட்டின.  அடுத்த 29வது நிமிடத்தில் அவை எழுப்பப்போகும் ஒலிக்காக அவன் காத்திருக்கத்தான் வேண்டும். அதிகப்படியான நேரம் தூங்குவதைப் போலவே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாக கண்விழிப்பதும் அரச நிந்தனை என்பதை அறியாதவனல்ல அவன். அந்தக் குற்றத்திற்குரிய அபராதத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் தப்பிக்கும் உபாயமாக, தான் இன்னமும் தூங்கிக்கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டான். மட்டுமன்றி, அவன் தானே தன்னை நம்புவதற்காக வேண்டுமேன்றே செயற்கையாக குறட்டைவிடவும் பழகியிருந்தான். ஆனால் தூங்கிவிடக்கூடாது என்பதில் கவனம் தோய்த்து அலாரத்திற்காக காத்திருந்தான்.  

கோமிய தேசியத்தின் முதல்வர் ஒருவர் அன்றாடம் 18-20 மணிநேரம் வேலை செய்ய முடியாத அரசு ஊழியர்கள் தாங்களாகவே பணியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உளறியதற்கு ஊடகங்களில் கிடைத்த பரவலான வரவேற்பை பார்த்து காமிய தேசத்தின் பிரதமர் உலகளந்தான் பரவசமாகிப் போனார். தேசத்தில் நிலவுகிற பொறுப்பற்ற பணிக்கலாச்சாரத்தின் மீது துல்லியத் தாக்குதல் ஒன்றை இங்கு நடத்த இதுவே உகந்த தருணம் என்று முதலாளிகள் சங்கமும் நச்சரிக்கத் தொடங்கியது. அதன்பேரில் அவர் அமைத்த தேசிய வேலைநேர சீரமைப்புக்குழுவின் பரிந்துரைப்படியே அதிகாலை 4மணி முதல் நள்ளிரவு 12 வரை நாடு முழுவதும் வேலை நேரமாகியது.

வேலைக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 4 மணி நேரத்தை நொடிவாரியாக பிரித்து திறமையாக பயன்படுத்தும் திட்டமொன்றை தேசிய ஓய்வுநேர மேலாண்மை வாரியம் வகுத்தளித்திருந்தது. அதன்படி அவன் இந்நேரம் தூங்கிக்கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் குறித்த நேரத்தில் விழித்துவிட வேண்டும் என்கிற நினைப்பின் அழுத்தம் அவனை தூங்கவொட்டாமல் செய்துவிடுகிறது. எவ்வாளவு நேரத்திற்கு தூங்கப்போனாலும் அதிகாலை 3 மணிக்கு எழுந்தேயாக வேண்டும். அப்படியானால்தான் தயாராகி 3.59 மணிக்கு அலுவலகத்தில் நுழைய முடியும். ஒரு நிமிட தாமதத்திற்கும் பாய்கிற ஒழுங்கு நடவடிக்கையை தவிர்ப்பதற்காகவே தூங்காமலே தூங்கியதான கற்பனையை அவன் நம்பிக் கொண்டிருந்தான். அன்றிலிருந்து உறங்கவே உறங்காத அவன் உறக்கத்திலிருந்து எழுந்துகொண்டதாக நம்பிக் கொண்டிருக்கிறான். வெளியில் சொன்னால் நல்ல கதை என்று கேலிதான் பேசுவார்கள். ஆனால் உண்மை அதுதான். தொடர்ந்து இருபது மணி நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்தே கிடப்பதால், இப்போதெல்லாம் அவன் படுத்திருக்கும் போதும்கூட, தான் உட்கார்ந்தே இருப்பதாக நினைத்துக்கொள்கிறான்.

முன்பாக இருந்தால் ஒலிக்கும் அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் இழுத்துப் போர்த்தி தூங்கி விடுவான். இப்போதோ அலாரம் அடிக்கத்தொடங்கிய முப்பதாவது நொடிக்குள் எழுந்தாக வேண்டும். இல்லாவிடில், கட்டிலோடு இணைக்கப்பட்டிருக்கும் மின்னதிர்க் கருவி தானாகவே இயங்க ஆரம்பித்துவிடும். சுரீலென அதிலிருந்து பாய்ந்த மின்சாரம் உடலின் ஒவ்வொரு அணுவையும் வெடுக்கென தாக்கும் வாதையை அவன் முதல்நாளே அனுபவித்திருக்கிறான். மறுபடி மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் எச்சரிக்கையோடு இருந்தான்.

அருகில் படுத்திருந்த அவனது மனைவி 1111 2222 3333 4444.1 கூட முன்பே விழித்து விட்டாள். ஆனால் இஷ்டப்பட்ட நேரத்திற்கு எழுந்துவிட முடியாதல்லவா. கடந்த ஞாயிறன்று நள்ளிரவு படுக்கைக்குச் செல்லும்முன் வெளியாகியிருந்த அரசாணையின் படி அவள் எழுவதற்கு அதிகாரப்பூர்வமாக இன்னும் 14 நிமிடங்கள் இருந்தன. பின்தூங்கி முன்னெழும் வழக்கத்தை பெண்கள்  கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்கிற அவ்வுத்தரவுப்படி அவள் தன் கணவன் 1111 2222 3333 4444 எழுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே எழுந்து சிசிடிவியில் முகம் காட்டவேண்டும். அந்த 15 நிமிடங்களுக்குள் செய்து முடித்தேயாக வேண்டிய வேலைகளை மனதுக்குள் ஒத்திகை பார்த்தபடி எழுவதற்கு தயாராக படுத்திருந்தாள். வேட்டுச்சத்தம் கேட்டதும் பாய்ந்தோடுவதற்கு மைதானத்தில் ஆயத்தமாயிருக்கும் ஒரு வீராங்கனையைப் போல அவள் தன்னை நினைத்துக்கொண்டாள்.

அதிகாலை 2.46 மணி.
அவளுக்கான அலாரம் பிங்க் நிற ஒளியுடன் ஒலிக்கத் தொடங்கியது. அவ்வளவுதான், அவள் விசை முடுக்கப்பட்ட ஓர் இயந்திரம்போல் பரபரவென தனது வேலைகளைத் தொடங்கினாள். துள்ளியெழுந்து கட்டிலை விட்டிறங்கிய அவள், கணவனது காலைத்தொட்டு வணங்குவதையும் தாலியைக் கண்ணில் ஒற்றிக்கொள்வதையும் செல்ஃபி எடுத்தாள். அந்த புகைப்படங்களை தேசிய பண்பாட்டு மீட்டெடுப்பு ஆணையத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிட்டு அவள் தேநீர் தயாரிக்க அடுக்களைக்குள் நுழைந்தாள்.

அதிகாலை 2.48 மணி.
பழக்கதோஷத்தில் அடுக்களைக்குள் போய்விட்ட அவளுக்கு சட்டென்று சுதேசி அமலாக்கம் மற்றும் கண்காணிப்புச் சங் வெளியிட்ட 64வது புதிய சட்டம்  நினைவுக்கு வந்தது. நல்ல வேளையாக அடுப்பை மூட்டாமல் இருந்ததால் தப்பித்தாள். ஒருவேளை அடுப்பை மூட்டியிருப்பாளேயானால்  சிசிடிவி அவளை சங் அதிகாரிகளிடம் கையும்களவுமாக காட்டிக் கொடுத்திருக்கும். அன்னிய பானமான தேநீரை தயாரித்தது, அருந்தத் தூண்டியது, அருந்தியது என அடுக்கடுக்கான தேசவிரோதக் குற்றங்களை இழைத்திருப்பாள். அவள் மட்டுமல்லாமல் குடித்த குற்றத்திற்காக அவளது கணவனும் தண்டனைக்கு ஆளாக நேரிட்டிருக்கும். சீனப் பொருட்களை சந்தையிலிருந்தும் சனங்களின் மனங்களிலிருந்தும் முற்றாக ஒழித்துக் கட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அரசாங்கம்  சீன பானமான தேநீரை தயாரிப்பதோ அருந்துவதோ அருந்துவதற்கு தூண்டுவதோ ஏழ்பிறப்பிலும் மரணதண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறது. (மறுபிறவியில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதால் அனைத்துச் சட்டங்களும் ஏழ்பிறப்புக்கும் சேர்த்தே நிறைவேற்றப்படுகின்றன). சட்டத்திற்கு புறம்பாக தேநீர் குடிப்பவர்களைக் கண்டறிந்து களையெடுப்பதற்காக ஒவ்வொரு நாளும் குடிமக்கள் தமது மலஜலத்தை ஆய்வகத்திற்கு அனுப்பி நிரூபித்துக்கொள்வது அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தை ஏமாற்றிவிடுகிறவர்கள்கூட ஆளுங்கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'மோப்ப சங்’கிடம் தப்பித்துவிட முடியாது. அவர்கள் நடத்தும் அதிரடி சோதனைகளின்போது சந்தேகத்திற்குரியவர்கள் என கடந்த ஒருவாரத்தில் மட்டும் 27 பேரை கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார்கள். இவ்வாறு கொல்லப்படுகிறவர்களின் எண்ணிக்கை கூடக்கூட சம்பந்தப்பட்ட சங்கிகளுக்கு அரசில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும் என்பதால் அவர்கள் மிகத் தீவிரமாக மோப்பம் பிடித்தார்கள்.

பெரும் இக்கட்டிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் தப்பிக்கவைத்த தனது சமயோசிதப் புத்தியை மெச்சிக்கொண்டபடியே பழைய பால்குண்டாவை எடுத்துக்கொண்டு பின்கட்டிலிருந்த தொழுவத்திற்கு ஓடியவள் 0085 6219 3941 4316 முதல் 0085 6219 3941 4320 வரை எண்ணுள்ள காளைகளை வணங்கி அவை பெய்யும் காமியத்திற்காக காத்திருந்தாள் (கோமியமல்ல, காமியம்). அந்தக் காளைகள் இவளது வீட்டிற்கு வந்து ஒருவாரம் ஆகிவிட்டிருந்த போதிலும் இன்னும் அவை இவளை இணக்கமற்றே பார்த்தன. காளைக்கறி உண்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதுமே இரவோடிரவாக விவசாயிகள் தமது காளைகளை ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்குள் விரட்டியடித்து விட்டார்கள். அப்படியான காளைகளில் ஐந்தை வளர்க்கும் பொறுப்பை அரசாங்கம் இவர்களது குடும்பத்திடம் ஒப்படைத்திருக்கிறது. காமியம் பெய்யும்வரை காத்திருந்து பிடித்துக்கொண்டு வந்து கணவனை எழுப்பினாள். வெறும் வயிற்றில் குடிக்கவேண்டிய ஆகாரமென அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காமியத்தை கணவனுக்கு பெரிய தம்ளரில் கொடுத்தது போக மீதியில் தான் கொஞ்சம் குடித்துவிட்டு மிச்சத்தை குழந்தைக்கு சங்கடையில் எடுத்துவைத்தாள். குழந்தைக்கு சட்டம் தெரியாதல்லவா, அதனால் அது புகட்டுகிற காமியத்தை குமட்டிகுமட்டி வெளியே துப்பியது. சிசிடிவியில் சிக்கிவிட்டால் குழந்தைக்கும் தங்களுக்கும் கடும் தண்டனை கிடைக்கும் என்பதால் அவள் குழந்தைக்குப் புகுட்டும்போது வீட்டுக்குள்ளேயே மறைவிடம் ஒன்றை உண்டாக்கியிருந்தாள். இவளுமே கூட காமியத்தில் உலைவைத்து காய்ச்சும் கஞ்சியை குடிக்க ஒம்பாமல் திணறிக்கொண்டுதானிருந்தாள்.

கணவனைப் போலவே இவளும் ஓர் அரசாங்க ஊழியர்தான். இவளுக்கு இது தலைச்சன் பிள்ளை.  பச்சையுடம்பு தேறி முன்புபோல வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கியிருந்தாள். 26 வாரங்கள் கொடுக்கப்பட்டிருந்த மகப்பேறு விடுப்பு முடிய நேற்றிரவு 11.59மணியோடு முடிந்தவிட்டது. உலகிலேயே கனடாவுக்கும் நார்வேவுக்கும் அடுத்தபடியாக அதிகமான நாட்களை மகப்பேறு விடுமுறையாக தருவது இந்த நாடுதான் என்பதில் இவளுக்கு சற்றே பெருமிதமிருந்தது. குழந்தையைப் பார்ப்பதற்கென்று வீட்டுக்கு வரும் சக ஊழியர்கள், நீ இல்லாமல் ஆபிஸ் ஆபிஸாகவே இல்லை சீக்கிரம்  வந்து சேர்... என்று அவளை கிளப்பிவிட்டுப் போனார்கள். இதோ முடியப்போகுது, வந்துவிடுகிறேன் என்று ஆசையோடு சொல்லி இவளும் அவர்களை அனுப்பி வைப்பாள். அலுவலகம் போகத் தொடங்குவதற்கு முன்பு குழந்தையை கவனித்துக்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் பலவற்றையும் செய்து கொண்டிருக்கும் போதே நாட்கள் கரைந்துவிட்டன. அவ்வளவுதான், விடிந்தால் காலையில் மீண்டும் வேலையில் சேரப்போகிறோம் என்கிற பரவசத்திலும் திரும்பி வரும்வரை குழந்தை எப்படி தாங்குமோ என்கிற கவலையிலுமாக தூக்கம் வராமல் புரண்டு கொண்டேயிருந்தாள். கணவனைப்போலவே அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் முன்பாகவே விழித்துவிட்டிருந்தாள். தனக்கான அலாரம் அடித்ததுமே எழுந்தவளுக்கு நிமிரக்கூட நேரமின்றி அடுத்தடுத்த வேலைகள் காத்திருந்தன. கணவனை தயார்படுத்தி அனுப்பிவிட்டு தானும் தயாராகி அலுவலகம் செல்ல வேண்டுமே என்கிற நினைப்பு அவளை அவ்வளவு வேகமாக இயக்கியது.

அதிகாலை 3.31 மணி.
மூன்று மணிக்கு எழுந்து மனைவி தந்த இளஞ்சூடான காமியத்தை மிடறுமிடறாக குடித்துவிட்டு கழிப்பறைக்குள் ஓடியவன் வெகுநேரமாக வெளியில் வரவேயில்லை. தூக்கமின்மை, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், தொடர்ந்து உட்கார்ந்தே இருப்பதால் வரும் முதுகுவலி, அடுத்தடுத்து வெளியாகும் அரசாங்க உத்தரவுகளால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அலைக்கழிந்துக் கொண்டிருந்தவனை புதிதாக மூலநோய் வந்து மேலும் படுத்தியெடுத்தது. அலுவலகத்தில் இருந்தாக வேண்டிய இருபது மணி நேரம் போக எஞ்சியுள்ள நான்கே மணி நேரத்தில் பெரும்பகுதியும் இப்படி கழிப்பறையிலேயே கழிகிறதே என்கிற கவலையும் அவனை வாட்டத் தொடங்கியது.

குளியல் என்கிற பெயரில் தண்ணீரில் முங்கியெழுந்து வந்த கணவன் 1111 2222 3333 4444 அவதியவதியாக வாயில் எதையோ பிட்டு போட்டுக்கொண்டு மத்தியானத்துக்கும் அந்திக்குமான சோத்துக் கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடும்போது மணி 3.31 ஆகிவிட்டிருந்தது. வீட்டிலிருந்து குறித்த நேரத்தில் அலுவலகம் கிளம்பிவிட்டதற்கு அடையாளமாய் வீட்டின் நுழைவாயிலில் பொருத்தப்பட்டிருக்கும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ரேகை பதித்துவிட்டு அவன் கிளம்பினான்.

அவனைத் தொடர்ந்து அவளும் பரபரவென அலுவலகத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் போதுதான் அவளுக்கு அந்த வாட்ஸ்அப் செய்தி வந்தது. ராஜதுறவியர் தேசிய சபை பரிந்துரையின் பேரில் அரசாங்கம் அன்றைக்கு ஊரடங்கிய பின் நிறைவேற்றிய அவசரச் சட்டம் பற்றிய அச்செய்தி அவளை நிலைகுலையச் செய்தது. கணவனுக்கு பணிவிடை செய்வதையும் குடும்பம் மற்றும் குடும்பத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள காளைகளைப் பராமரிப்பதையும் மட்டுமே பெண்கள் தமது கடமையாகக் கொள்ளவேண்டும் என்கிற அந்த புதிய சட்டத்தின்படி இனி தன்னால் வேலைக்குப் போகவேமுடியாது என்கிற உண்மையை ஏற்கவியலாமல் அவள் தத்தளித்தாள். குழந்தை அழுவதும் கூட உறைக்காமல் பேதிலித்துக் கிடந்தாள்.

விற்கிற விலைவாசிக்கு ஈடுகொடுத்து பிழைப்பு நடத்த வேண்டுமானால் இருவரும் சம்பாதித்து தானாக வேண்டும் என்பதற்காக வேலையில் சேர்ந்தவளில்லை அவள். நினைவுக்கு எட்டியவரை அவளது சொந்தபந்தங்களில் அவள்தான் முதலில் படிக்கப்போனாள். அவளைப் பார்த்துதான் வேறுசிலரும் பெண்குழந்தைகளை படிக்க அனுப்பினார்கள். படித்தாலும் வீட்டோடு தான் கிடக்க வேண்டும் என்றாகிவிட்டால் பிறகு யார் பிள்ளைகளை படிக்க அனுப்புவார்கள் என்று யோசித்து தான் அவள் வேலையில் சேர்ந்தாள். கூலிநாழிக்குப் போய் பெற்றோர்கள் தமக்கு கொடுக்கும் கல்வியை பெண்கள் வீணடித்துவிடக் கூடாது என்பதில் பிடிவாதமாய் இருந்தாள்.  ஆண்களால் நிறைக்கப்பட்டிருக்கும் பொதுவெளிகளில் பெண்ணின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நமக்கு படிப்பும் வேலையும் அவசியம் என்று தன் நட்புவட்டத்து பெண்களிடம் ஓயாமல் சொல்லிவந்தாள்.

சம்பளம் கிடைக்கிறது என்பதற்கும் அப்பால் வீட்டைவிட்டு வெளியே வேலைக்குப் போய் வருவது அவளுக்கு பலவிதமான அனுகூலங்களைக் கொடுப்பதாக இருந்தது. குடும்பத்திற்கு வெளியேயும் நம்மை மதிக்கிற விரும்புகிற அன்பு செலுத்துகிற மனிதர்கள் இருப்பதை படிக்கிற காலத்திலிருந்தே அவள் கண்கூடாக பார்த்தவள்தானே? எனவே அவள் அலுவலகத்திலும் அப்படியானவர்களைக் கண்டறிந்தாள். அவர்களோடு எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது. சொந்தப் பிரச்னையொன்றை பேசிக்கொள்வதைப் போல நாட்டு நடப்புகளை விவாதிக்க முடிந்தது. வீடும் குடும்பமும் ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்தாத எந்தவொரு அவமானத்தையும் கண்ணியக்குறைவையும் பொதுவெளி ஏற்படுத்திவிடப் போவதில்லை என்று  அவளுக்குள் ஆழப்பட்டிருந்த கருத்தை இவனும் ஏற்றுக்கொண்டிருந்தான். தன்மதிப்போடு வாழ விரும்பும் பெண் திருமணத்துக்குப் பிறகும் வேலைக்குப் போவது அவசியம் என்பதில் இருவருக்கும் ஒருமித்திருந்தனர். ஆனால் இப்படியொரு அவசரச் சட்டம் வந்து தனது வேலையைப் பறித்து வீட்டோடு முடக்கிப்போடும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அதிகாலை மணி 4.
அலாரம் அடித்தபோது அய்யய்யோ இது நான் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டிய நேரமாச்சே என்றெண்ணி அவளது வேதனை பன்மடங்காகியது. வேலை பறிபோன விசயத்தை கணவனிடம் சொல்லலாமென்றால் அவன் இப்போதுதான் அலுவலகத்திற்குள் நுழைந்திருப்பான், காலையிலேயே அவனுக்கு மேலும் பதற்றம் எதற்கு என்று தனது அலுவலகத்தோழிகளை தொலைபேசியில் கூப்பிட்டாள். இவளைப்போலவே வேலையை இழந்துவிட்ட அங்கலாய்ப்பில் தான்  அவர்களுமிருந்தார்கள்.

சரி, இனி வீட்டிலிருந்து குழந்தையை வளர்க்கிற வேலையையாவது உருப்படியாய் செய்வோம் என்று தன்னைத்தானே அவள் தேற்றிக்கொண்டிருந்த வேளையில்தான் அடுத்தும் ஓர் அதிர்ச்சி உத்தரவு வெளியானது. உள்நாட்டு தேசிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அவளது மதத்தைச் சேர்ந்த பெண்கள் குறைந்தபட்சம் 10 குழந்தைகளை பெற்றெடுத்தாக வேண்டும் என்று ‘முற்றும் துறந்தோர் முன்னேற்றச் சங்’ நிறைவேற்றிய தீர்மானத்தின் படியானது அவ்வுத்தரவு. இன்னமும் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டியிருக்கிறது என்கிற நினைப்பே அவளுக்கு கடும் அச்சத்தையும் ஆயாசத்தையும் தந்தது. இந்தத் தீராத வாதையிலிருந்து விடுபடுவதற்காகவேனும் வேறு மதத்திற்கு தப்பியோடி விடலாமா என்று தோழியொருத்தி போனில் யோசனை கேட்டாள். இப்பவாவது பிள்ளை பெத்துக்க சொல்றாங்க, வேற மதத்துக்குப் போனா ஏதாச்சும் சாக்குப்போக்கு சொல்லி இவனுங்க அடிச்சே கொன்னுருவாங்க, இப்போதைக்கு பேசாம இரு, பிறகு யோசிப்போம் என்று இவள் வாயை அடக்கினாள். அது அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்ட பதிலாகவும் இருந்தது.

இரவு 12.14  மணி.
அலுவலகம் முடிந்து கணவன் 1111 2222 3333 4444 வரக்கூடிய நேரம். அவனுக்குரிய இரவுச் சாப்பாட்டை தயார் செய்தாள். தேசிய குடும்ப ஒழுங்காற்று ஆணையத்தின் விதி 311/34ன் படி வேலையிலிருந்து வீடு திரும்பும் கணவனுக்கு அருந்தக் கொடுக்கவேண்டிய புஷ்டிபானம் என்பதால் தொழுவத்திற்குப் போய் குவளை நிறைய சூடாக காமியம் பிடித்துவந்தாள். இன்னும் சில மணித்துளிகளில் வந்துவிடுவான். வெளி லைட்டை எரியவிட்டுக்கொண்டு கதவைத் திறந்து வாசற்படியில் தான் அமர்ந்திருந்த காட்சி ஐம்பதறுபது ஆண்டுகளுக்கு முன்பு கருப்புவெள்ளை சினிமாவில் கணவனை வரவேற்க காத்திருந்த மனைவியின் சாயலை ஒத்திருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அந்தக் குடியிருப்பிலிருந்த அனேக வீடுகளிலும்  பெண்கள் அவளைப் போலவே அலங்காரம் செய்து கொண்டு வாசற்படியில் காத்திருந்தார்கள். நூற்றாண்டுகளாக முயன்று ஈட்டிய முன்னேற்றங்கள் அனைத்தையும் ஒரேயொரு உத்தரவில் பறித்தெடுத்துவிட்ட இந்த அரசாங்கம் பெண்களை வெறும் மனைவியராக முடக்கிப் போட்டுவிட்டதே என்று அவளுக்கு பொறுமலாயிருந்தது. 

12.29 மணி.
அவளது கணவனின் வண்டி வரும் சத்தம் அவளுக்கு துல்லியமாகக் கேட்டது. ஆனால் அவனுக்கு பதிலாக வேறு யாரோ ஓராள் வந்திறங்கினான். இன்று பிற்பகல் 5.46 மணி 32 வினாடிக்கு தேசிய நடத்தைவிதிகள் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி அன்னிய ஆடவன் முன்னால் பெண்கள் நடமாடுவது சட்டரோதம் என்பதால் அவள் பதைபதைப்போடு வீட்டுக்குள் ஓடினாள். அந்த ஆடவனோ ஓடாதே நில் என்றான். அது அவளது கணவனின் குரல்தான். மிகவும் குழம்பிப் போனவளாய் அவசரமாக தலைக்கு முக்காடிட்டு முகத்தை மூடியபடி கதவுக்குப் பின்னே மறைந்து நின்று அவனை விளக்கொளியில் கவனித்தாள். அடக்கொடுமையே, அவளது கணவன் 1111 2222 3333 4444 தான். ஆனால் அவனது தோற்றத்தில் ஏன் இத்தனை மாறுபாடு? வீட்டுக்குள் வந்த அவன் ஏன் என்னை அடையாளம் தெரியலியா என்று நடுங்கும் குரலில் கேட்டான். எப்படி தெரியும்? காலையில் போன மாதிரியா வந்திருக்கே? உன் தலையை யார் இப்படி அலங்கோலம் பண்ணினது? என்று அவள் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தாள். அவனோ சொற்களை தொலைத்தவன் போல் பதிலேதும் சொல்லாமல் மனமும் முகமும் இறுகிப்போய் சுவற்றோடு சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். ஒயிலான சிகையலங்காரம் கொண்டிருந்த அவனது தலை கரண்டியெடுக்கப்பட்டு மொட்டையடித்து மூன்று நாட்களானாற்போல காட்சியளித்தது இப்போது. முதல்வர் தலையில் இருப்பதைவிடவும் நீளமாக முடிவளர்த்திருக்கும் ஆண்களை மடக்கிப் பிடித்து இப்படி சிரைத்து அனுப்புவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள ‘தேசிய சிகை சீர்திருத்தச் சங்‘கிடம் மாட்டிக்கொண்டதனால் ஏற்பட்ட பதற்றம் இன்னும் தணியவில்லை அவனுக்கு.

தனக்கு வேலை பறிபோன துக்கத்தை கணவனிடம் பகிர்வதற்காக காலையிலிருந்து காத்துக் கிடந்தவளுக்கு அவனிருந்த நிலைமையைப் பார்த்து வாயடைந்துப் போனது. அவனை ஆசுவாசப்படுத்தும் இரக்கம் பெருகியவளாகி தலையைக் கோதி தோள் தொட்டு எழுப்பி சாப்பிட அழைத்துப்போனாள். சினிமாவில் வருவதுபோல, அவன் முதல் கவளத்தை வாயிலிடப் போகும் போதுதான் பெரும் சத்தத்தோடு அந்த அரசாங்க வாகனம் வீட்டு வாசலில் வந்து நின்றது. காவல்துறையின் இலச்சினை பொறிக்கப்பட்ட அந்த வாகனத்திலிருந்து இறங்கிய ஒருவரும் போலிஸ் இல்லை. நெற்றியிலும் புஜத்திலும் ஆளுங்கட்சியின் கொடியை பட்டையாக கட்டியிருந்த அவர்கள் ‘கல்வி, கலைஇலக்கியம் மற்றும் கலாச்சார போலிஸ் - க.க.க.’ என்கிற உலோக வில்லையை சட்டைப்பையின் மேற்புறம் பதக்கம் போல குத்தியிருந்தார்கள். முறைப்படியான அனுமதியைக்கூட கோராமல் அழுக்கும் புழுதியும் படிந்த காலணிகளோடு வீட்டின் நடுக்கூடத்திற்குள் நுழைந்தவர்கள் தாறுமாறாக நாற்காலிகளை இழுத்துப்போட்டு அமர்ந்தார்கள். வந்தவர்களது தலைவனைப் போலிருந்தவன் உரத்தக் குரலில் வீட்டாள்களுக்கு கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கினான். உறக்கத்திலிருந்த குழந்தை 1111 2222 3333 4444.2, வழக்கத்திற்கு மாறான திடீர் சந்தடியால் விழித்துக் கொண்டு அழத் தொடங்கியது. அதுபற்றி சற்றும் துணுக்குறாத அவர்கள் அடுத்தடுத்த வீடுகளுக்குள் வரிசையாக நுழைந்து இதேவிதமாக கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டு போனார்கள்.

இரவு 12.43 மணி.
1111 2222 3333 4444 உள்ளிட்ட அந்தப் பகுதியின் குடிமக்கள் அனைவரும் தமக்கு விதித்திருந்த கெடுவுக்கும் முன்னதாகவே வீட்டிலிருந்த புத்தகங்களையும் துணிமணிகளையும் மூட்டையாக கட்டி சுமந்துகொண்டு மணிக்கூண்டு சதுக்கத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். க.க.க.போலிஸாரால் கவனமாக சோதனையிடப்பட்ட அம்மூட்டைகள் அனைத்தும் அங்கிருந்த தகனமேடை மீது மலை போல் குவிக்கப்பட்டன. குடிமக்கள் அணிந்திருந்த ஜீன்ஸ், டீசர்ட், பேண்ட், சட்டை, சார்ட்ஸ், ஜட்டி, பனியன் ஆகிய உடைகளையும் கழற்றி வாங்கிய க.க.க.போலிஸார் அவற்றையும் அந்த தகன மேடையில் எறிந்தார்கள். வெட்டவெளியில் இப்படி எங்களை நிர்வாணமாக நிறுத்தி அவமதிப்பதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று கேட்ட முதியவர் ஒருவரை க.க.க.போலிசார் நையப்புடைத்ததைப் பார்த்த மற்றவர்கள் தமக்குள்ளேயே ஒடுங்கி நின்றார்கள்.  உங்கள் உடம்பும் அரசாங்கத்திற்குரியது தான். அது அம்மணமாக இருக்கணுமா ஆடையோடு இருக்கணுமா என்பதை அரசாங்கம்தான் முடிவு செய்யும். எதிர்த்து கேள்வி கேட்டு இப்படி அடிவாங்கிச் சாகத் துணியாதீர்கள் என்று எச்சரித்தபடியே தாக்கினார்கள். எல்லோரது உடுப்பும் கழற்றியாகிவிட்டதை உறுதிபடுத்திக் கொண்ட  க.க.க. போலிஸின் தலைவர் தமது படையினரின் பெரும் ஆரவாரத்துக்கிடையே அந்த மூட்டைகளுக்கு தீவைத்தார்.

தாங்கள் ஆசையாசையாய் வாங்கிச் சேர்த்த துணிமணிகளும் புத்தகங்களும் சடசடத்து எரிவதை காணச்சாகியாத குடிமக்கள் தளுதளுக்கும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்தார்கள். ‘நமது தொன்மையான கலாச்சாரத்திற்குப் புறம்பான ஆடைகளை நானோ எனது குடும்பத்தவரோ இனி வாங்கவோ உடுத்தவோ மாட்டோம். இஸ்லாமியரிடமிருந்து பரவிய - துணியை மூட்டி உடுத்தும் (அங்குராக்) வழக்கத்தையும் கைவிடுகிறோம். நமது நம்பிக்கைகளை சந்தேகிக்கவும் கேள்வி கேட்கவும் தூண்டுகிற எந்தவொரு புத்தகத்தையும் வாங்குவதும் வாசிப்பதுமாகிய தேசவிரோதச் செயலில் ஒருபோதும் ஈடுபடமாட்டோம்’ என்று எரியும் தீ மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளுமாறு அவர்கள் கூட்டாக பணிக்கப்பட்டார்கள். உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு குடிமக்கள் எல்லோருக்கும் இரண்டு ஜதை மாற்றுடுப்பு கொடுக்கப்பட்டது. அதுவரையிலும் அம்மணமாய் கூனிக்குறுகி நின்றிருந்த அவர்கள், உடனடியாய் உடுத்துக் கொண்டார்கள். அரையில் கோவணம் தலையில் உருமால் என்று அவர்களும் இப்போது அவர்களது முதல்வருக்கு இணையான தேசிய உடைக்கு மாறியிருந்தார்கள்.

இரவு மணி 1.01.
தகன மேடையிலிருந்த வீடு திரும்பிய 1111 2222 3333 4444, அந்த நெருப்பில் தனது தசையே பொசுங்கிவிட்டது போலிருக்கிறது என்றான். அதே மனநிலையால் பீடிக்கப்பட்டு இறுகிப் போயிருந்த அவனது மனைவி 1111 2222 3333 4444.1 பதிலேதும் சொல்லாமல் அவனருகில் அமர்ந்துகொண்டாள். துக்கத்தோடு துக்கமாய் இதுவும் சேர்ந்துகொள்ளட்டும் என்று நினைத்து, தனக்கு வேலை பறிபோய்விட்ட விசயத்தையும், பெண்கள் பத்துக்குழந்தை  பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற புதிய உத்தரவு வெளியாகியிருப்பதையும் அவனுக்கு தெரிவித்தாள். இது காலையில் அலுவலகத்தில் நுழைந்ததுமே தனக்கு தெரிந்துவிட்ட தகவல்தான் என்று கூறிய அவன், அது தொடர்பான அரசாணையின் நகல் ஒன்றை வாட்ஸ் அப்பிலிருந்து எடுத்து அவளுக்கு படிக்கக் கொடுத்தான். பெண்களின் வேலை பறிக்கப்பட்டதற்கும் ஆண்களின் வேலைநேரம் இருபது மணி நேரமாக மாற்றப்பட்டதற்கும் உள்ள தொடர்பை அந்த அரசாணை வெளிப்படையாக தெரிவித்தது. ஏதோவொரு பெருந்திட்டத்தை நோக்கி மக்களை விரட்டிக்கொண்டு போவதற்காகத்தான் அரசாங்கம் இப்படியான ஆணைகளை அடுத்தடுத்து வெளியிடுகிறதா எனக் கேட்டாள். ஆமாம், அதற்காக தான் நமது ஒவ்வொரு நொடியையும் நகர்வையும் அரசாங்கம் கட்டுப்படுத்தி கண்காணிக்கிறது என்றான் அவன். மேற்கொண்டும் உரையாட அநேகமிருந்தாலும்  அதற்கான மனநிலையை இருவருமே இழந்திருந்தார்கள். உணவருந்தாமலே துக்கத்தில் சொடுங்கி தூக்கத்திற்குள் அவர்கள் விழத்தொடங்கிய வேளையில்தான்  கதவை யாரோ தட்டினார்கள்.

வந்திருந்தவர், இரவு ரோந்துப்பணியிலிருந்த போலிஸ்காரர். மனிதவள அபிவிருத்தியில் தேசிய இலக்கை எட்டுவதற்காக கலவியில் ஈடுபட்டிருக்க வேண்டிய இந்த நேரத்தில் இவர்களது வீட்டில் ஏன் எல்லா விளக்குகளும் எரிந்தபடியே இருக்கின்றன என விசாரிப்பதற்காக வந்திருந்தார். உடலும் மனமும் சோர்ந்துபோய் விட்டதால் தூங்கிவிட்டோம் என்றான் 1111 2222 3333 4444. எந்தவொரு நல்ல தேசபக்த குடிமகனும் இப்படியான பொறுப்பற்ற பதிலை கூறமாட்டான் என்று அந்த போலிஸ்காரர் சலித்துக்கொண்டார். சால்ஜாப்புகளை சொல்லி நேரத்தைக் கடத்தாதீர்கள். இதில் உங்கள் விருப்பு வெறுப்பு என்று ஒன்றும் கிடையாது. அரசாங்கத்திற்கு சொந்தமான உங்களின் உடல்கள் ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து நழுவி தண்டனைக்கு ஆளாகிவிடாதீர்கள் என்று எச்சரித்துவிட்டுப் போனார். 

நேரம் இரவு மணி 1.33.
காவலர் வெளியேறியதுமே வீட்டுக்குள் நுழைந்தவர், தன்னை ‘தேசிய பள்ளியறை பரிபாலன சேவா சமிதி’யைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். திடகாத்திரமும் ஆரோக்கியமும் வனப்பும் நிறமும் அறிவுக்கூர்மையும் உள்ளவர்களாக குழந்தைகளை பெற்றெடுக்க வைக்கும் ‘உத்தம சந்ததி’ திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக அவர் வந்திருந்தார். இத்திட்டத்தில் முன்னோடியென அறியப்பட்டிருந்த இந்தியாவின் ‘ஆரோக்கிய பாரதி’ அமைப்பிடம் பயிற்சி பெற்று திரும்பியிருந்த அவர் இதற்கென இங்கு அரசின் அங்கீகாரம் பெற்றவர். பஞ்சாங்கத்தின்படி இன்றைக்கு 1.41 மணிக்கு 1111 2222 3333 4444 தன் மனைவி 1111 2222 3333 4444.1உடன் கூடுவதற்கு உகந்த நேரம் என்று கூறிய அவர் அதற்கான முன்னேற்பாடுகளை உடனே தொடங்கும்படி ஆணையிட்டார். கலவி செய்வதற்கான கால அட்டவணையைக்கூட ஓர் அரசாங்கம் பிறப்பிக்குமா என்ற நினைப்பின்  அச்சத்தால் அவளது உடல் பலமுறை அதிர்ந்தடங்கியது. நட்டுநடு வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு ‘ம்... நான் பயிற்சி செய்து காட்டுவதைப்போல என் மேற்பார்வையில் கலவி செய்யுங்கள்’ என்று ஆணையிடுகிற ஒருவனை எதுவும் செய்ய முடியாமல் அவமானத்தில் குன்றிப்போகவா பிறந்தோம் என்கிற கேள்வியால் அந்தத் தம்பதியர் நிலைகுலைந்து கொண்டிருந்தார்கள்.

நேரம் அதிகாலை 3.31.
வீட்டை விட்டு கிளம்பியிருக்க வேண்டிய 1111 2222 3333 4444 அதற்கு அத்தாட்சியாய் வாசலில் உள்ள பயோ மெட்ரிக்கில் இன்னமும் ரேகை பதிக்கவில்லை.
நேரம் அதிகாலை 3மணி 41 நிமிடங்கள் 01 நொடிகள்.
அலுவலகத்திற்கு பாதிவழியில் வந்துகொண்டிருக்க வேண்டிய 1111 2222 3333 4444 அதற்கு அத்தாட்சியாய் ஏழாம் எண் சிசிடிவிக்கு இன்னமும் முகம் காட்டவில்லை.  
நேரம் அதிகாலை 3.59மணி.
அலுவலகத்தில் இந்நேரம் நுழைந்திருக்க வேண்டிய 1111 2222 3333 4444 அதற்கு அத்தாட்சியாய் பயோ மெட்ரிக்கில் இன்னமும் ரேகை பதிக்கவில்லை.
நேரம் அதிகாலை 4.05 மணி.
அலுவலகத்தின் முதல் வேலையை இந்நேரம் தொடங்கியதற்கு அத்தாட்சியாக நடுக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் காமியக்குடுவையை 1111 2222 3333 இன்னமும் காலி செய்யாமல் இருக்கிறார். தேசபக்தியை வெளிப்படுத்துவதில் 5 நிமிடங்கள் தாமதம்.
நேரம் அதிகாலை 4மணி 10நிமிடங்கள் 7 நொடிகள்.
1111 2222 3333 4444 இன்னமும் வேலைக்கு வராமலிருப்பது உறுதிசெய்யப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முன்னிட்டு அவரைத் தேடுவதற்கு உளவுப்படை முடுக்கிவிடப்படுகிறது.

நேரம் 5 மணி.
1111 2222 3333 4444 மற்றும் அவரது மனைவி 1111 2222 3333 4444.1 ஆகியோரது வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்திருக்கிறது போலிஸ்.

* உத்தம சந்தானத்திட்டத்தை பயிற்றுவிப்பதற்காக வந்திருந்த ‘தேசிய பள்ளியறை பரிபாலன சேவா சமிதி’யைச் சார்ந்த சந்நியாசி டிரிபிள்ஸ்ரீ குருஜியின் குறியை ஒட்ட அறுத்து காக்காவுக்கு வீசியது

* ‘அறிவியலுக்குப் புறம்பான, உலகத் தொழிலாளர் அமைப்பின் உடன்படிக்கைக்கு எதிரான புதிய வேலைநாளை ஒழித்துக்கட்டுவோம். அளப்பரிய தியாகத்தால் ஈட்டிய எட்டுமணி நேர வேலை எட்டுமணி நேர ஓய்வு எட்டுமணி நேர உறக்கம் ஆகிய உரிமைகளை மீட்டெடுப்போம், பெண்களை பிள்ளை பெறும் இயந்திரங்களாக, சம்பளமில்லா கூலிகளாக மாற்றும் பழமைவாதத்தை முறியடிப்போம்’- என்கிற சுவரொட்டிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் சட்டவிரோதமாக தயாரித்து நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தது.

* புதிய ஆட்சியின் மோசடித்திட்டங்களை விமர்சித்து டைரி எழுதியது
 - ஆகிய தேசவிரோதக் குற்றங்களுக்காக அவர்களிருவரும் ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொல்லப்படுவது தான் இந்தக் கதைக்கு இயல்பான முடிவாக இருக்கமுடியும். ஆனால் தடதடவென நெருங்கிவரும் பூட்ஸ் சத்தம் கேட்டு வீறிட்டழும் இந்தக் குழந்தையை என்ன செய்யலாம்?


***

நன்றி : விகடன் தடம் , ஆகஸ்ட் 2017

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...