நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 20

பாரத்மாதா கீ ஜே... மற்றும் ஜெ... ஆதவன் தீட்சண்யா

வியாழனில் நேர்ப்பட்ட விண்வெளி வீரனொருவன்
எந்த கிரகமென்றான் ஆங்கிலத்தில்
பூமியென்றதும் பொங்கவிட்டான் அன்பை

நாட்டின் பெயரைச் சொன்னதும்
நாமிருவரும் ஒரேதாயின் புதல்வர்கள் என்றான் இந்தியில்
பாராயணம்போல்
தனக்குள்ளே முணங்கிக்கொண்டான்
ஸம்ஸ்கிருதத்திலும்

மாநிலத்தை அறிந்ததும்
ஹோ... நானும் பச்சைத்தமிழன்தான்
ஊரெதுவென்று நெருங்கினான் வாஞ்சையோடு

ஒரே ஊர்க்காரர்களாயிருந்தும்
இத்தனைக்காலமும் சந்திக்காததற்கு   அங்கலாய்த்தபடியே
கீழ்ஸ்தாயில்
வீடு ஊரிலா சேரியிலா என்று
அவனிழுத்த முரட்டுக்கோட்டுக்கு அப்புறத்தே
அம்பேத்கர் நகரென்ற பதிலோடு நானிருக்க
உரையாடும் பொதுவிசயம் ஒன்றுமில்லாமற் போனது அவனுக்கு
ஊரென்ற ஒன்று
எனக்கும் சொந்தமாய் இல்லாதிருப்பதைப்போலவே.

திங்கள், நவம்பர் 7

அபகாரியின் சரிதம் - ஆதவன் தீட்சண்யா

அபயமெனக் கேட்டிருந்தால்
தசையறுத்து புசிக்கக் கொடுத்திருப்போம்
ஆனால்
ஒரு அகதிக்குரிய நேர்மையை
ஒருபோதும் கைக்கொண்டதில்லை அவர்கள்

நட்சத்திரஒளி பொழியும் இரவுகளின்மீது இருள்கவித்து
கன்றுகாலிகளையும் தவசங்களையும் களவாடிப்போனதை
வயிற்றுப்பிழைப்புக்கான திருட்டென மன்னித்திருக்கையில்
ஆயுதமுனையில் அடிமைகளாக்கி
வியர்வையின் ஆவிமேவிய எமது மண்ணை
அவர்கள் அபகரித்த வரலாற்றை திசைகளறியும்

பால்குடிமறவா எமது பெண்சிசுக்களின் மார்பிலும்
பதிந்தன அவர்களது பற்குறிகள்
விஷமாகிக் கலந்த அவர்களின் ரத்தத்தால்
சீழ்கட்டி இன்றும் அழுகும் நாளங்கள்
எல்லாவகையிலும் களங்கமாக்கிய பின்
தூய்மைபேசி ஒதுக்கினர் எம்மை

உழைப்பின் நரம்புகள் புடைத்துக் கொழுத்த
எமது ஏர்க்காளைகளை
யாகங்களில் பொசுக்கித்தின்றுவிட்டு
எம்மையேப் பூட்டினர் நுகத்தில்
நஞ்சேறியப் பாம்பென நெளியும் புரிநூல் தரித்து
நாடெங்கும் நத்திப் பரவிய பின்
துகள்களாய் தூக்கிவந்து கரையான் கட்டியப் புற்று
பாம்புப் புற்றென ஆனதுபோல்
இப்போது சொல்கின்றனர்
அவர்களுடையதாம் இந்நாடு.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...