பா.ம.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ம.க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 8

பா.ம.க ஆட்சி: அப்படியொரு கேடு 22016ல் கூட நடந்துவிடாது - புதுவிசை 44வது இதழ்



ஒவ்வொரு வகுப்புக்கலவரம் நடந்து முடியும்  போதும் பா.ஜ.க.வின் வாக்குபலம் 0.8 சதவீதம்  கூடுகிறது என்கின்றனர் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் (Do parties matter for ethnic violence? Evidence from India). வெவ்வேறு கட்சிகளில் இருப்பவர்களையும் கட்சி சாராதவர்களையும் வகுப்புவாதத்திற்குள் இழுத்துப்போட்டு வாக்காளர்களாக மாற்றிக் கொள்வதற்கு உகந்ததான கலவர கால மனநிலையை நிரந்தரமாகப் பேணுவதற்குரிய திட்டங்களோடு சங் பரிவார பயங்கரவாத அமைப்புகள் களத்தில் உள்ளன. பா.ஜ.க. மத பயங்கரவாதத்தைக் கைக்கொண்டுள்ளது என்றால், அதன் தமிழகக் கூட்டாளியான பா.ம.க.வோ சாதிய பயங்கரவாதத்தைக் கைக்கொண்டுள்ளது. மதச் சிறுபான்மையினரால் இந்துக்களுக்கு ஆபத்து என்கிற பொய்யைப் பரப்பி இந்து என்கிற பெரும்பான்மை உணர்வுக்குள் வெகுமக்களை மூழ்கடிக்கும் சங் பரிவாரத்தின் அதே உத்தியில் தலித்துகளால் மற்றவர்களுக்கு ஆபத்து என்று ராமதாஸ் கிளப்பிவிட்ட பீதி சமூகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்மத்தை ஆழப்படுத்தியி ருக்கிறது. ஆனால் பிறசாதியினர் அனைவருக்கும் மீட்பராக தன்னைக் காட்டிக்கொள்ளும் அவரது இழிமுயற்சி வெற்றிபெறவில்லை. எனவே சங் பரிவார பாணியில், வெவ்வேறு கட்சிகளில் இருக்கிற வன்னிய மக்களை தமது வாக்காளர்களாக திரட்டிக்கொள்வதற்காக தர்மபுரி, மரக்காணம், சேஷசமுத்திரம் என்று தலித்துகளுக்கு எதிரான வன்முறையை பா.ம.க. கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பா.ம.க. தலைமையினால் தூண்டிவிடப்பட்டு தலித்துகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்  தமது இயல்பான வாழ்க்கையை இழந்தலையும் அவலத்திற்கு ஆளாகிவருகின்றனர்.  

வன்னியமக்களின் ஏகப்பிரதிநிதியாக தம்மைக் காட்டிக்கொண்டு பெருங்கட்சிகளோடு கொழுத்த பேரத்தை நடத்தி இதுவரை ஆதாயம் கண்டுவந்த ராமதாஸ், பிரதமர் வேட்பாளர் என்று பா.ஜ.க.வால் அறிவிக்கப்பட்ட மோடி அதில் வெற்றியும் பெற்றுவிட்டதைக் கண்டு உற்சாகமாகி 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளர் என்று தன் மகனை அறிவித்திருக்கிறார். அறிவிக்கப்பட்ட மாத்திரத்திலேயே ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போன்ற நினைப்பில் அவர்கள் வெளிப்படுத்திவரும் மிதப்பையும் ஆணவத்தையும் அடாவடிப் பேச்சுகளையும் பார்த்து வெறுப்படைந்துள்ள தமிழக மக்கள் அப்படியொரு கேடு 2016ல் அல்ல, 22016ல் கூட நடந்துவிடாமல் தடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஆய்வு நேர்மை,  உண்மை விளம்பல் ஆகியவற்றுக்கான விலை அதற்குரியவர்களின் உயிர்தான் என்கிற அச்சுறுத்தலை உருவாக்குவதன் மூலம் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சாதியத்தையும் பத்தாம்பசலித்தனமான கட்டுக் கதைகளையும் மூடநம்பிக்கைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியுமென சங்பரிவார பயங்கரவாதிகள் நம்புகின்றனர். அதன்பொருட்டு அவர்கள் அறிவுஜீவிகளையும் ஆய்வாளர்களையும் பகுத்தறிவாளர்களையும் அடுத்தடுத்து கொன்று குவித்து வருகிறார்கள். நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்பர்கி என இப்பட்டியலை நீட்டிப்பதற்காக இந்தப் பயங்கரவாதிகள் நாடெங்கிலும் கொலைவெறியோடு அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

சாதியத்திற்கும் பார்ப்பனீய ஒடுக்குமுறைகளுக்கும்  எதிராக பசவண்ணரால் உருவாக்கப் பட்ட வீரசைவம் நாளடைவில் அதுவே ஒரு சாதியாகி இந்துமதத்தால் உள்வாங்கப்பட்ட கொடுமையையும், அது கடைபிடிக்கும் தீண்டாமைகளையும், தலைவிரித்தாடும் மூட நம்பிக்கைகளையும் காவி பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்திவந்த கல்பர்கி கொல்லப்பட்டுவிட்டார். இவ்வாறான கொலைகளின் மூலம் தங்களது கருத்தியல் எதிரிகளை தீர்த்துக்கட்டுகிறவர்கள் அறிவுத்துறையினரை அச்சத்திற்கு ஆட்படுத்தி சுயதணிக்கைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு தூண்டுவதிலும் வெற்றிபெற முடியுமென நம்புகிறார்கள். கல்பர்கியின் கொலையைக் கொண்டாடிக் களிக்கும் காவி பயங்கரவாதிகள்,  அடுத்து கொல்லப்படவிருப்பவர் பேராசிரியர் பகவான் என பகிரங்கமாக அறிவிக்குமளவுக்கு அச்சமற்றுத் திரிகிறார்கள். ஆனால் இந்த கொக்கரிப்புகளுக்கு அஞ்சாத பகவான், சமூகத்தை முற்போக்கான வழியில் கொண்டு செலுத்தும்  கடப்பாட்டுடன் போராடியவர்கள் வரலாறு நெடுகிலும் உலகெங்கிலும் உச்சரித்த சொற்களை ஒரு பிரகடனம் போல் முழங்கியிருக்கிறார்: “உங்களால் எங்களைத்தான் கொல்லமுடியுமே தவிர எங்களது சிந்தனைகளை அல்ல”. பகவானின் முழக்கத்தை அதே துணிவுடன் வழிமொழிவதும் கல்பர்கி கருத்துலகில் நடத்திவந்த போராட்டத்தைத் தொடர்வதும் பரவலாக்குவதும்தான் சாதிய மற்றும் காவி பயங்கரவாதிகளுக்கு பொருத்தமான பதிலடி என்றே புதுவிசையும் நம்புகிறது. ஆனால் கருத்தியல் போராளிகள் கொல்லப்படும் போதெல்லாம் நாம் இவ்வாறாக எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகள் ஏதாவது விளைவுகளை உருவாக்கியிருக்கிறதா என்று பரிசீலிக்கவும் கோருகிறது. 

- ஆசிரியர் குழு 


கட்டுரை

விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங்பரிவாரத்திற்காக
நிகழ்த்திய பயங்கரவாதங்கள்
- லீனா கீதா ரெகுநாத் தமிழில்: செ.நடேசன் 


விடலையும் குடும்பனும் - பூமணியின் அஞ்ஞாடி
- டி. தருமராஜ்

விக்டர் ஹாரா : மக்களுக்காக இசைத்த கிதார்
- எஸ்.வி. ராஜதுரை

மலம் அள்ளாத ராக்கெட் - ந,கோபி

மார்க்சீயமும் தமிழ் உணர்வும் - ப.கு. ராஜன்

கவிதை : ஆதவன் தீட்சண்யா

சிறுகதை

பொம்மி - அதியன்

கதாபாத்திரம் சொன்ன எழுத்தாளரின் கதை
- உதயசங்கர்

கூடிழந்த பறவைகளின் சாபம் - அ. கரீம்

முன்னட்டை வடிவமைப்பு: கார்த்தி




ஞாயிறு, ஜூலை 7

பாட்டாளி மர்டரர் கட்சி

இளவரசனின் மரணத்தைப்போலவே பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்ட விதமும் பல சந்தேகங்களை உள்ளடக்கியுள்ளது. எப்பேர்ப்பட்ட விண்ணாதிவிண்ணன் எத்தனைத் தடவை மறுக்கூராய்வு செய்து பார்த்தாலும் எப்படி சாவு நேர்ந்தது என்றுதான் சொல்ல முடியுமே தவிர யாரால் சாவு நேர்ந்தது என்று சொல்ல முடியாது. யாரால் எதற்காக எப்போது சாகடிக்கப்பட்டார் என்கிற உண்மைகளை அரசியல் விருப்புவெறுப்புக்கோ வேறுவகைச் சாய்மானங்களுக்கோ அழுத்தங்களுக்கோ பணிந்துபோகாத ஒரு புலனாய்வுக்குழுவினால் தான் வெளிக்கொண்டுவர முடியும். அப்படியொரு புலனாய்வுக்குழுவை தமிழ்ச்சினிமாவில் மட்டுமே காணமுடியும் என்பதால் நடப்புலகில் தேடி நியமிக்க முடியாது. ஆகவே சுமாராக தீய்க்கும் கொள்ளியால் சொறிந்து கொள்வதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை. ரயிலில் சுண்டல் விற்கிறவர்களிடம் தண்டல் வசூலிப்பதில் மட்டுமே தன் சாமர்த்தியத்தை காட்டிவருகிற ரயில்வே போலிசிடமிருந்த இளவரசன் மரண வழக்கை உள்ளூர் போலிசுக்கு மாற்றியுள்ள அரசு, அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை அதிகாரியாக இருந்து புலனாய்வு செய்வார் என நேற்று அறிவித்துள்ளது. ஒருவேளை மத்திய புலனாய்வுத் துறைக்கு இவ்வழக்கு மாற்றப்படுமானால், Congress Bearue of Investigation என்கிற இகழ்மொழியிலிருந்துதப்பிக்க அதற்கொரு வாய்ப்புள்ளது.
***
வன்னியப்பெண்ணை காதலிக்கிறவர்களுக்கும்  கல்யாணம் முடிக்கிறவர்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று காடுவெட்டி குருவும் மரம் வெட்டி மருத்துவரும் அறிவித்ததன் செயலாக்கமாகவே இளவரசனின் மரணத்தை கருதவேண்டியுள்ளது. இளவரசனின் மரணம் (இன்ப?) அதிர்ச்சியளிப்பதாக கூறிக்கொண்ட குட்டி ராமதாஸ் கூடவே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கணக்காக இந்த மரணத்திற்கும் தங்கள் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று அறிவித்துக்கொண்டார். அவர் எத்தனை பாசாங்கான மொழியில் பசப்பினாலும் திவ்யாவின் தந்தை திரு.நாகராஜ் அவர்களின் மரணம் தொடங்கி இளவரசனின் மரணம் வரையான  அவ்வளவு அழிமானங்களுக்கும் இழப்புகளுக்கும் காரணமானவர்களின் காலடித்தடங்கள் தைலாபுரம் தோட்டத்திலேயே முடிவடைகின்றன என்கிற உண்மையை மறைத்துவிடமுடியாது.

இளவரசனுடனான திவ்யாவின் காதலை தனிநபர் முடிவாக விட்டுவிடாமல் தங்களது சாதியின் மானத்தோடும் மண்ணாங்கட்டி வீரத்தோடும் தொடர்புபடுத்தி பா.ம.க ஏற்றிய வெறிக்கு முதல் பலி திவ்யாவின் தந்தை நாகராஜன். நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் குடியிருப்புகளை கொள்ளையழிக்க பா.ம.க.வுக்கு தேவைப்பட்ட பிணமாக அவர் மாற்றப்பட்டார். இந்த வன்கொடுமை மற்றும் கொள்ளையழிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை காப்பாற்றும் ஈனத்தனத்தில் பா.ம.க. மட்டுமே ஈடுபட்டது. தலித்துகளுக்கு எதிராக அனைத்து பிற்போக்கு பழமைவாத வெறியர்களையும் அணிதிரட்டுவதில் ராமதாசும் அவரது கட்சியினரும் காட்டிய ஈடுபாடு வன்மம் மிக்கது. திவ்யா - இளவரசன் தம்பதியருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்ட போது, இவர்களுக்கு ஆபத்து யாரால் நேரக்கூடும் என்பதை ஊருலகம் அறிந்தே இருந்தது. 

திவ்யா - இளவரசன் தம்பதியரை பிரித்தே தீர்வது என்று 2012 நவம்பரிலிருந்து பா.ம.க. செயல்படுத்தி வந்த  ஓரம்சத்திட்டம் இளவரசனின் மரணத்தோடு முற்றுப்பெற்றுள்ளது. இளவரசன் பிணமாக்கப்பட்டுவிட்ட நிலையில் இனி திவ்யாவே துணிந்தாலும் திவ்யாவின் தாயாரே சேர்த்துவைக்க ஆசைப்பட்டாலும் அதனால் பயனொன்றும் இல்லை. அதாவது பா.ம.க. மற்றும் வன்னிய மானத்திற்கு இனி எந்த பங்கமும் வரப்போவதில்லை. எனவே இவ்வளவு காலமும் திவ்யாவையும் அவரது தாயாரையும் நிழல்போல பின்தொடர்ந்து கட்டுப்படுத்தி வைத்திருந்த பா.ம.க.வினரும் அக்கட்சியின் வழக்கறிஞர்களும் இப்போது அவர்களை விட்டு ஒதுங்குவதுபோல காட்டத் தொடங்கியுள்ளனர். அதனடிப்படையில்தான் இப்போது தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.

நண்பன் என்று சொல்லிக்கொண்டு இளவரசனின் இறுதிநாட்களில் பாரதிபிரபு என்பவன் உடனிருந்ததும், அவனது அலைபேசி அழைப்பின் பேரில் வெளியே சென்ற இளவரசன் பிறகு பிணமாக கண்டெடுக்கப்பட்டதும், இளவரசனை வரவழைத்த அந்த திடீர் நண்பன் அதற்குப்பிறகு ஏன் காணாமல் போனான் என்பதும், இளவரசனின் சடலம் கிடத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து 100 மீட்டர் அருகாமையில் திவ்யாவின் பெரியம்மாவுடைய வீடு இருப்பதும் தற்செயலானவையல்ல. இளவரசனின் பிணம் இருந்த நிலையை வைத்து அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான சாத்தியங்கள் மிகமிக நுண்ணிய அளவில்கூட இல்லை என்றான நிலையிலேயே அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாகியுள்ளது. எனில் அவரை ஒரு தொல்லையாகவும் எதிரியாகவும் கருதிய பா.ம.க. தலைவர்கள்தான் அவரது உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது. ஆனால் நஷ்டஈட்டுக்கு ஆசைப்பட்டு தருமபுரியிலும் பாச்சாரப்பாளையத்திலும் மரக்காணத்திலும் தலித்துகள் தங்களது வீடுகளை தாங்களே கொளுத்திக்கொண்டார்கள்  என்று பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்ட அதே உத்தியில் இளவரசன் தன்னுயிரை தானே மாய்த்துக்கொண்டதாகச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

பா.மா.க தலைவர்கள் என்ன பசப்பினாலும் இளவரசனின் குடும்பத்தார் அவர்களையே குற்றம்சாட்டியுள்ளனர். ஊரார் கண்களும் அவர்களையே உற்றுநோக்குகின்றன. கடலில் மிதக்கிற பிணங்கள் எல்லாம் கப்பல் மோதி செத்தவர்களுடையது என்று சொல்வது எந்தளவிற்கு பொய்யோ அதேயளவு பொய்தான் ரயில்ரோட்டில் கிடக்கிற பிணங்கள் எல்லாம் ரயில் மோதி செத்தவர்களுடையது என்று சொல்வதும் என்பதை வெகுமக்கள் அறிந்தே வைத்துள்ளனர். எனவேதான் இளவரசன் பிணமாகக்கிடப்பதைக் கேள்விப்பட்டதும் அவர்கள் சடாரெனச் சொன்னார்கள்- இளவரசனை அடித்துக்கொன்று ரயில்ரோட்டில் கிடத்திவிட்டார்கள் என்று. இயல்பான தமது உள்ளுணர்விலிருந்தும் நடப்புலகத்தை அவதானிப்பதிலிருந்தும் எடுத்தயெடுப்பில் உண்மையைப் பேசிவிடுகிற வெகுமக்களுக்கு இது கொலையா தற்கொலையா என்கிற சந்தேகமோ குழப்பமோ எழவேயில்லை.


தன் சாவுக்கு யாரும் காரணமல்ல என்று இளவரசன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக ஃபிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்தலையை தானே இப்படி வெட்டிக்கொண்டு ஒருவர் தற்கொலை செய்துகொள்வது சாத்தியமா? பாதி தலையை மட்டும் ரயில் சிதைக்குமா? ரயிலைவிட வலுவானதா இளவரசனின் உடல்?
 கொலைப்பழியிலிருந்து தப்பிக்கும் விசயத்தில் பா.ம.க.வினரின் எண்ணம் பொய்த்துப் போனாலும்  வன்னியப்பெண்ணை மணம் முடிக்கத் துணிகிற யாருக்கும் இளவரசனுக்கு நேர்ந்த கதிதான் நேரும் என்கிற அச்சத்தை பொதுஉளவியலுக்குள் பதியவைப்பதில் வெற்றிபெற்றுள்ளனர். இந்தவகையில் இளவரசனின் மரணத்தோடு தாங்கள் தொடர்புபடுத்தி பார்க்கப்படவேண்டும் என்று உண்மையிலேயே அவர்கள் விரும்புகின்றனர். ( முகப்புத்தகம் போன்றவற்றை கருகடித்து தீய்க்கும் இந்த ‘அக்னிப்புத்திரர்கள்’ இளவரசனின் மரணத்தை கொண்டாடித் தீர்ப்பதும்கூட இந்த விருப்பத்தின் ஒருபகுதிதான்).

இளவரசனை ‘காணாப்பிணமாக’ போக்கடிப்பதற்கான சாத்தியங்களை வேண்டுமென்றே நழுவவிட்டு முழுப்பிணமாக ரயில்ரோட்டில் கிடத்தியதற்கு காரணம், ரயில்ரோட்டில் கிடத்தப்பட்டிருந்த பிணத்தின் பிரதியை ஒவ்வொருவரது மனதிலும் கிடத்துவதுதான். உள்ளிருந்து வாழும் அந்தப்பிணத்தின் பிரதி சாதியை மறுத்து காதலிக்கத் துணிகிற எவரொருவரையும் எச்சரித்து தடுத்துவிடும் என்று பா.ம.க. தலைவர்களும் வன்னிய  வெறியர்களும் நம்புகின்றனர். ஆனால் வாழத்துணிந்த மக்கள் பிணங்களைக் கண்டு அஞ்சுவதில்லை.

திங்கள், நவம்பர் 19

தருமபுரியில் தலித்துகள் மீதான வன்னியர் - பா.ம.க.வின் அழித்தொழிப்பு வன்கொடுமைகள் பற்றிய அறிக்கை

தருமபுரி மாவட்டம் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து - கிருஷ்ணாபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் கிராமங்கள் நவம்பர் 7ஆம் தேதி மாலை தொடங்கி முன்னிரவு வரையிலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட அப்பகுதி வன்னிய கிராமத்தினரால் கொள்ளையிடப்பட்டு கொளுத்தப்பட்டன. இத்தாக்குதல் தொடர்பாக உண்மை அறியும் களஆய்வு மேற்கொள்ள நவம்பர் 10-ஆம் தேதி கல்வியாளர்கள் - எழுத்தாளர்கள் - பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு நேரில் சென்றது. மூன்று கிராமங்களில் தாக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டையும் கண்ணுற்றதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்களையும், அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளையும், சில அரசு ஆவணங்களையும் கண்டு இக்குழு தயாரித்த அறிக்கை இது.

களஆய்வில் பங்கேற்றோர் :-
1.    முனைவர் சி. இலட்சுமணன் (Co-ordinator, Dalit Intellectual Collective)
2.    எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் (Intellectual Circle for Dalit Actions )
3.    எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா (ஆசிரியர், புதுவிசை)
4.    பேரா. கி. பார்த்திபராஜா
5.    கவிஞர் சுகிர்தராணி
6. எழுத்தாளர் யுவபாரதி மணிகண்டன் (தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு)
7.    பத்திரிகையாளர் ஜெய்கணேஷ்
8.    மருத்துவர் திராவிடன் அம்பேத்கர்
மற்றும் பெங்களுரு சுதந்திர மென்பொருள் இயக்கம் சார்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள்
9.    செந்தில்
10.  ரகுராம்
11.  சரத்
12.  ரமீஷ்

காரணமும் தாக்குதலும் :

நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் (23) என்ற தலித் இளைஞனும் செல்லங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா (21) என்ற வன்னியர் சாதிப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக உருவான பிரச்சினை, மூன்று தலித் கிராமங்களுக்கு எதிரான பெருந்தாக்குதலாக வடிவெடுத்திருக்கிறது. ‘தங்கள் சாதிப் பெண்ணைப் பறையன் காதலிக்கக் கூடாது’ என்று கடந்த ஜனவரி மாதத்திலேயே இளவரசன் வீட்டின் மீது வன்னியர்கள் தாக்குதல் தொடுத்தனர். தொடர் அச்சுறுத்தலையும் தாக்குதலையும் மீறி 14-10-2012ஆம் தேதி இளவரசனும் திவ்யாவும் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பிறகு தங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி சேலம் கோட்ட டி.ஐ.ஜி.யிடமும் தருமபுரி மாவட்ட காவல் துறையிலும் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், திவ்யா குடும்பத்தினர் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாத நிலையிலிருந்தனர். ஆனால் இப்பிரச்சினையில் திவ்யாவின் உறவினர்களும் அவர்களைச் சேர்ந்த வன்னியர்களும் தொடர்ந்து நெருக்கடி ஏற்படுத்திவந்தனர். அக்டோபர் 25-ஆம் தேதி முதலே இப்பகுதியில் இது தொடர்பாக பதற்றம் நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக 04-11-2012-ஆம் தேதி நாயக்கன்கொட்டாயில் தருமபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மதியழகன் தலைமையில் வன்னியர்களின் கூட்டம் கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பிற பா.ம.க. நிர்வாகிகளும், மாவட்ட வன்னியர் சங்கத்தினரும் நாயக்கன் கொட்டாயைச் சுற்றியிருந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்களும் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் ‘சாதி மீறித் திருமணம் செய்யும் போக்கை வளரவிடக்கூடாது, இதற்குத் தக்க பாடம் கற்பிக்கவேண்டும்’ என்று உணர்ச்சிவசமான பேச்சுகள் பேசப்பட்டன. பஞ்சாயத்து முடிவின் படி, ‘7-ஆம் தேதிக்குள் திவ்யாவைக் கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்கவேண்டும். இல்லையெனில் காலனியில் ஒரு வீடு கூட இருக்காது’ என்று நத்தம் காலனியைச் சேர்ந்த சேட்டு என்பவரிடம் கூறி அனுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு 7-ஆம் தேதி திவ்யாவின் குடும்பம் சார்பாக ஐந்து பேர் சென்று திவ்யாவைத் தங்களோடு வரும்படி கேட்டபோது, அவர் “நான் என் கணவரை விட்டு வரமாட்டேன். வந்தால் என்னைக் கொன்றுவிடுவீர்கள்” என்று கூறி வர மறுத்துவிட்டார். இதற்குப் பிறகே, முழுபோதையிலிருக்க வைக்கப்பட்டிருந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் அன்று மாலை இறந்துள்ளார்.

 மாலை 4 மணியளவில் நாகராஜின் பிணத்தைச் செல்லங்கொட்டாயிலிருந்து தருமபுரி - திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்குக் கொணர்ந்த வன்னியர்கள், தருமபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மதியழகன், வெள்ளாளப்பட்டி ராஜா, கொட்டாவூர் மாது ஆகியோர் தலைமையில், அப்பிணத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு பிரதான சாலையின் வடக்கே சீராம்பட்டியில் பெரிய புளியமரம் ஒன்று அறுத்து சாலையின் குறுக்கே போடப்பட்டது. அதே போல பிரதான சாலையின் தெற்கே எஸ்.கொட்டாவூரிலும் மரம் வெட்டி சாலை மறிக்கப்பட்டது. சாலைக்கு அருகே செங்கல் சூளைக்காக வெட்டிப் போடப்பட்டிருந்த பனைமரங்களையும் சாலையின் குறுக்கே போட்டு சாலையை முழுமையாக மறித்தனர். போலீசார் அம்மரங்களைத் தாண்டி வராமல் அங்கேயே நின்று கொண்டனர்.

இந்நிலையில்தான், திட்டமிட்டபடி ஆங்காங்கிருந்து வரத்தொடங்கியிருந்த வன்னியர்களும், மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர்களும் சேர்ந்து நத்தம் காலனியில் புகுந்து எல்லா வீடுகளையும் தாக்கத் தொடங்கினர். காலனியின் பெரும்பாலான ஆண்கள் வேலை காரணமாக வெளியூர்களில் இருந்தனர். ஊரிலிருந்த பெண்கள் உள்ளுரில் வேலைக்குச் சென்றிருந்தனர். குழந்தைகள் பள்ளிகளை விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம். நத்தம் காலனியைத் தாக்கி முடித்த பின்பு, அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள அண்ணா நகர், அங்கிருந்து உள்ளடங்கியுள்ள கிராமமான கொண்டம்பட்டி ஆகிய தலித் கிராமங்களுக்கும் வாகனங்களில் தேடிச் சென்று தாக்குதல் நடத்தினர். மாலை 4.30 மணிக்கு மேல் தொடங்கிய தாக்குதல் ஒவ்வொரு ஊராக, இரவு 9.30 மணி வரை நீடித்துள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களில் எல்லா வீடுகளும் தவறாமல் தாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டையும் மறுபடி செப்பனிட முடியாத அளவிற்குத் தீயிட்டு அழித்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம், நகைகள் மற்றும் சில உணவுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பிறகு பீரோ முழுமையாக உடைக்கப்பட்டிருக்கிறது அல்லது எரிக்கப்பட்டிருக்கிறது. கணிசமான வீடுகளிலிருந்த மோட்டார் சைக்கிள்கள், வாஷிங் மெஷின்கள் போன்றவையும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. எல்லா வீடுகளிலுமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர், ஆடுகள் போன்றவற்றை வன்னியர்கள் தாம் கொண்டுவந்திருந்த வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். 4 கார்கள் மற்றும் 72 பைக்குகள் எரிக்கப்பட்டுள்ளன. கடப்பாரை, தடி, வெயிட் லிஃப்டிங் இரும்புத் தண்டு, பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள், திறந்து விடப்பட்ட சில சிலிண்டர்கள் போன்றவை மூலம் தாக்குதலும் தீவைப்பும் நடந்துள்ளன. வன்னியர்கள் இத்தகைய தாக்குதலைச் சிறு எதிர்ப்பின்றி நடத்தியள்ளனர்.


தலித்துகளின் சமூக-பொருளாதார நிலையும் அதன் மீதான தாக்குதலும் :

தாக்குதல் நடந்த மூன்று ஊர்களிலுமுள்ள 98 சதவீதம் தலித்துகளுக்கு நிலம் இல்லை. இரண்டொருவர் தவிர வேறு எவருக்கும் அரசு வேலையோ நிரந்தர உத்தியோகமோ கிடையாது. கூலிகளாகவும் முறைசாரா தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஆண்கள் பெரும்பான்மையும் பெங்களுரில் கட்டிட வேலையிலும், சுமை தூக்கும் தொழிலாளர்களாகவும் கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற நகரங்களில் பிறவேலைகளும் செய்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த பணத்தில்தான் வீடு, ஓரளவு வீட்டுபயோகச் சாமான்களை ஈட்டியுள்ளனர். சாதி இந்துக்களின் சார்பின்றி தன்னிறைவுடன் சுயமாகப் பொருளாதார ரீதியாகச் சிறிதளவு முன்னேறியுள்ளனர். இந்நிலையில்தான் இக்கிராமங்களில் முழுக்க முழுக்க இந்த வீடுகளும் வீட்டுச் சாமான்களும் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. ஊரில் வெகு சில குடிசைகளைத் தவிர மற்றவை காங்கிரீட், மாடி மற்றும் ஓட்டு வீடுகள். இவற்றில் பெரும்பாலானவை அரசு உதவியோடு தம் பணத்தையும் கொண்டு கட்டிய வீடுகள். இத்தாக்குதலில் வன்னியர் தரப்பில் 2000 பேர் ஈடுபட்டதாக அம்மக்கள் தெரிவித்தனர். ஏராளமான பைக்குகளும் வேன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய இத்தாக்குதலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட வன்னியர் கிராமங்களின் பெயர்கள் நம் குழுவினரிடம் தரப்பட்டன.

அவை:
1.செல்லங்கொட்டாய் 2.வாணியன்கொட்டாய் 3.கதிர்நாயக்கனஹள்ளி 4.புளியம்பட்டி
5.மொளகானூர் 6.நாயக்கன்கொட்டாய் 7.வெள்ளாளப்பட்டி 8.கொண்டம்பட்டி 9.சீராம்பட்டி
10.கிருஷ்ணாபுரம் 11.வன்னியக்குளம் 12.திம்பம்பட்டி 13.கம்பைநல்லூர் 14.சவுக்குத்தோப்பு
15.கொல்லம்பட்டி 16.குப்பூர் 17.செங்கல்மேடு 18.மாரவாடி பழையூர் 19.செம்மாந்தகுப்பம்
20.குறும்பட்டி 21.கொட்டாவூர்  22.செட்டியூர் 23.சோலைக்கொட்டாய்

மொத்தத்தில் 7-ஆம் தேதி இத்தாக்குதலை முதலில் தொடங்கிவைத்தவர்களில் ஒருவரான முருகன் என்பவர் ஏற்கனவே தலித் பெண் ஒருவரைப் பாலியல் வன்முறை செய்து கொன்ற வழக்கில் தொடர்புடையவர். மற்றொருவர் வாணியன்கொட்டாயைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சீனிவாசன் ஆவார்.

ஏற்கனவே, தலித் மக்களோடு பழகுவதோடு, அவர்தம் வீடுகளுக்கு வந்து செல்லும் வன்னியர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று தலித் மக்கள் கூறும்போது சாதியின் ஆகிருதி எந்த பூச்சுகளாலும் மறைந்துவிடுவதில்லை என்பதையே அறியமுடிந்தது. ‘ஒண்ணா மண்ணா பழகினால் சாதி ஒன்றாகிவிடுமா?’ என்று கேட்டு தாக்கியதாக அழுதார் ஒரு பெண். ‘சேர்த்து வைச்சிருந்ததெல்லாம் வெந்துபோச்சு. இனி எங்களைத்தான் வேகவைக்கணும்’ என்று அழுதார் இன்னொரு பெண். மகளிர் சுயஉதவிக்குழு மூலம் திருமணம் மற்றும தீபாவளிப் பண்டிகைக்காக முன்பணமாக எடுக்கப்பட்ட 20,000 ரூபாயும், சிறு வியாபாரமாக இயங்கிவந்த கடை, மருந்து விற்பனைப் பிரதிநிதி ஒருவரின் ஒரு வார வசூல்நிதி போன்றவையும் கொள்ளையில் பறிபோனதை அறியமுடிந்தது. மொத்தத்தில் தலித்துகளின் பொருளாதார மேம்பாடு இத்தாக்குதலில் குறிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதே போன்று 31-08-1995இல் தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில் 300 தலித் குடியிருப்புகள் தாக்கப்பட்ட போதும், அம்மக்களின் பொருளாதாரத் தற்சார்பே குறிவைத்துத் தகர்க்கப்பட்டது. இத்தாக்குதலிலும் அதுவே நடந்துள்ளது. ஏறக்குறைய பத்து கொடியங்குளத்திற்கு இணையாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.

கண்டறிந்தவை :

1.    இப்பகுதியில் தலித்-வன்னியர் சாதிக் கலப்பு மணங்கள் மட்டுமின்றி, பிற சாதிக் கலப்பு மணங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளன. அவற்றிற்கு ஆதிக்கச் சாதித் தரப்பின் ஏற்பின்மையோ, அவ்வப்போதான எதிர்ப்போ மட்டுமே இருந்து வந்துள்ளன. மாறாக, இதுபோன்ற பெருந்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்லை. ஆனால், இந்த முறை இத்தகைய வன்முறை நடத்தப்பட்டதற்குப் பின்னணியாய் அரசியல் காரணம் இருந்திருக்கிறது. அதாவது, 2012 சித்திரா பௌர்ணமியன்று வன்னியர்களின் சாதி உணர்ச்சியை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் நடத்தப்படும் வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் முன்னிலையில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு “வன்னியர் பெண்களைக் காதலித்து மணக்கும் பிற சாதியினரை (தலித்துகளை) அடக்கவேண்டும். அவ்வாறு அடக்குபவர்களுக்குக் கட்சி துணை நிற்கும்” என்று பேசினார். இதுவரையிலும் சாதிக்கலப்பு மணத்திற்கு எதிராகப் புழுங்கிக் கொண்டிருந்த வன்னியர்களுக்கு குருவின் இப்பேச்சு, உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்திருக்கிறது. தருமபுரி தாக்குதலுக்கும் இப்பேச்சே முக்கியக் காரணமாய் இருந்திருக்கிறது.

2.    மேலும் நவம்பர் 4-ஆம் தேதி நாயக்கன்கொட்டாயில் திவ்யா-இளவரசன் திருமணத்திற்கு எதிராகக் கூடிய வன்னியர்களின் கூட்டத்திலும், 7-ஆம் தேதி 3 தலித் கிராமங்கள் மீதான தாக்குதலிலும் தாக்குதலுக்குப் பிறகு வன்னியர்களை வழக்குகளிலிருந்து காப்பாற்றவும், பா.ம.க. முன்னாள் எம்.பி., கட்சியின் முன்னணித் தலைவர்கள் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகளே ஈடுபட்டு வருகின்றனர் என்பதிலிருந்து இந்தப் பின்னணியை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். வன்னியர்களின் இந்த வெறிச் செயல்களுக்கு குருவின் இப்பேச்சு நேரடியாகவும் மறைமுகமாகவும் உளவியல் பலத்தைத் தந்திருக்கிறது. இளவரசன்-திவ்யா திருமணத்திற்கு மட்டுமல்ல, நாயக்கன்கொட்டாய் பகுதியில் கடந்த காலங்களில் இதுபோன்ற சாதிக் கலப்பு மணங்கள் மீதான கோபத்தைத் தீர்த்துக் கொள்ளவும் இந்தத் தருணத்தையே வன்னியர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

 3.    நத்தம் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு வெகு தொலைவிலிருந்த கொண்டம்பட்டியைத் தேடிச் சென்று தாக்கிய காரணம் எதுவென்றும் அறியமுடிந்தது. அதாவது, கடந்த ஆண்டு கொண்டம்பட்டியைச் சேர்ந்த நேதாஜி என்ற தலித் இளைஞர், வன்னியர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் குடியமர்ந்துவிட்டார். அப்போது நேதாஜி வீட்டை மட்டும் தாக்கிவிட்டுச் சென்ற வன்னியர் கூட்டம், இப்பொழுது இதுபோன்று திருமணம் நடந்த ஊர்களையெல்லாம் நினைவுபடுத்திச் சென்று தாக்கியிருக்கிறது. அந்த வகையில்தான் கொண்டம்பட்டி முழுஊரையும் துவம்சம் செய்திருக்கிறது. குறிப்பிட்ட ஒருவர் மீதான கோபத்திற்காக கூட்டு வன்முறையைத் தலித் சமூகம் எதிர்கொண்டிருக்கிறது. வயல்களில் தானியக் கதிர்களை எந்தப் பறவைகளும்; நெருங்கிவிடக்கூடாது என்று அச்சுறுத்துவதற்காக, ஒரு காகத்தைக் கொன்று வயலின் நடுவே கட்டித் தொங்கவிடுவார்கள் விவசாயிகள். அதுபோன்று தனித்தனியே அச்சுறுத்தி இதுபோன்ற காதல் மணங்களைத் தடுப்பதைவிட, ஒரு ஊரையே அழிப்பதன் மூலம், அதுபோன்ற எண்ணமே இனி தலித்துகளுக்கு எழக்கூடாது என்ற நோக்கத்தோடு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

4.    இத்தாக்குதல் திவ்யாவின் தந்தை நாகராஜ் இறந்ததை ஒட்டி நடந்த உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வு போன்று காட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாறாக, நாகராஜின் சாவை ஒரு சாக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப நாகராஜ் மரணத்திற்குத் தூண்டப்பட்டிருக்கலாம் என்று எங்கள் குழு கருதுகிறது. நாகராஜின் பிணத்தோடு மறியல் செய்யப்பட்டது என்பதுதான் உண்மையே தவிர, அவரது மரணம் தற்கொலைதானா என்று ஆராய வேண்டியுள்ளது. எனவே, நாகராஜின் பிரேதப் பரிசோதனை, அவர் இறப்பதற்கு முன்பு அவருக்குச் சொந்த சாதியினரால் தரப்பட்ட நெருக்கடிகள், அவமானங்கள் பற்றியெல்லாம் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். நவம்பர் 4-ஆம் தேதி வன்னியர்களின் கூட்டம் கூட்டப்பட்டு, நவம்பர் 7-ஆம் தேதிக்குள் திவ்யாவைக் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டுமென்று, தலித்துகளை நோக்கிக் கெடு விதிக்கப்பட்டது. நவம்பர் 7ஆம் தேதி திவ்யா வரமறுத்த நிலையிலும், நாகராஜின் மரணத்தினாலும் இத்தாக்குதல் திட்டமிடப்பட்டது. முதலில் நாகராஜின் மரணமே தற்கொலைதானா? என்று ஆராயவேண்டியிருக்கிறது. நவம்பர் 4-ஆம் தேதி வன்னியர்களின் கூட்டம் நடந்ததிலிருந்தே அவருக்கு மனரீதியான நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டன. அந்த நிலையில்தான் 7-ஆம் தேதி தன் மகள் திரும்பி வரமறுத்த நிலையில் அவர் இறந்திருக்கிறார். இந்த மரணம் ஊர்க்காரர்களின் நெருக்கடிகளுக்குப் பயந்து கூட நடந்திருக்கலாம். மேலும் அவர் கடைசி 4 நாட்களாகத் தொடர்ந்து குடிபோதையில் வைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை, அவர் இறந்திருக்காவிட்டாலும் கூட அன்று மாலை தாக்குதலுக்கு வாய்ப்பிருந்தது என்றே அந்த ஊர்க்காரர்களில் சிலர் நம்மிடம் தெரிவித்தனர். ஆனால், நாகராஜின் சாவு அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பாகிப் போனது. அதனால்தான் கடப்பரை உள்ளிட்ட ஆயுதங்கள், மூன்று கிராமங்களை எரிக்கக் கூடிய அளவிற்குப் பல லிட்டர் பெட்ரோல், தின்னர் முதலியவை சேகரிக்கப்பட்டு, அதற்கான ஜனத்திரட்சியும் அங்கே மையம் கொண்டது. நத்தம் காலனியில் மட்டும் 150 பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தாலொழிய இவ்வளவு பெட்ரோல், பாட்டில்கள், திரிகள், ஆயுதங்கள் கொண்டு இத்தகைய பெருந்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கமுடியாது. இரண்டொருவர் தாக்கப்பட்டதைத் தவிர்த்து, யாதொரு உயிர்ச்சேதமும் ஏற்படாவண்ணம் தலித்துகளின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

 5.    இத்தாக்குதலைத் தடுப்பதில் காவல்துறையும் அதன் உளவுப்பிரிவும் மாவட்ட நிர்வாகமும் பெரிய அளவில் தோல்வி அடைந்திருக்கின்றன. நாகராஜின் பிணத்தை வைத்துக்கொண்டு வன்னியர்கள் மறியல் செய்யும் போது, சாலையில் வெட்டிப்போட்ட மரத்தைத் தாண்டி போலீஸ் வராமல் நின்றுகொண்டது. சாலையில் மரங்களைப் போட்டிருந்தபோதே அங்கே 300 போலீஸ் வந்துவிட்ட போதிலும், அவற்றைத் தாண்டிவந்து, சில மணிநேரங்கள் நீடித்த தாக்குதலைத் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

6.    தருமபுரி மாவட்டத்தில் 1987-இல் பிசிஆர் சட்டத்தின் கீழ் ஒரு புகார் மற்றும் 1989 முதல் 2012 வரையில் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 291 புகார்கள்; என பதிவானவை மொத்தம் 292 புகார்கள்.  இவற்றில் காவல்துறையால் தள்ளுபடி செய்யப்பட்டவை 166 மற்றும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டவை 81 என்ற நிலையில் வெறும் 10 புகார்களில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். பதிவான புகார்களில் 3.3 சதவீதப் புகார்களில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர் என்ற புள்ளிவிவரம் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் மீதான காவல்துறையின் அக்கறையின்மைக்குச் சான்றாக அமைகிறது.

7.    இப்பகுதி முன்பு நக்சல்பாரிகள் இயக்கம் செயற்பட்ட பகுதி என்ற முறையில், கியூ பிரிவு போலீசாரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி என்ற முறையில் கடந்த ஒரு மாதமாகப் புகைந்து வந்துள்ள இப்பிரச்சியை அது அறியத் தவறியிருக்கிறது. மேலும், இப்பகுதியில் தொடர்ந்து 7 பேர் கொண்ட போலீஸ் காவல் இருந்துவந்தும் முன்கூட்டியே அறிந்து அத்தாக்குதலைத் தடுக்கத்தவறியிருக்கிறது காவல்துறை. ஏறக்குறைய 3 டிஎஸ்பி-க்களுடைய கவனத்தின்கீழ் இப்பகுதி இருந்தபோதிலும் இத்தாக்குதல் தடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8.    இரவு 9.30 மணிவரையிலும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு இரவு 11 மணியளவில் லாரி ஒன்றை எடுத்துவந்து அண்ணா நகர் தலித் குடியிருப்புகளிலிருந்த ஆடுகளை வன்னியர்கள் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, தாக்குதல் நடந்துமுடிந்த நெடுநேரம் வரையிலும் கூட காவல்துறை நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதையே அறியமுடிகிறது. மறுநாள் கைது செய்யப்பட்ட 92 பேரையும் கூட, வெளியூர் பணியிலிருந்து திரும்பிய மாவட்ட எஸ்.பி. அஸ்ராகர்க் வந்துதான் கைது செய்திருக்கிறார். அஸ்ரா கர்க்கின் பணியைப் பாதிக்கப்பட்ட மக்கள் நன்றியோடு நினைவு கூர்ந்ததைப் பார்க்கமுடிந்தது.

பரிந்துரைகள் :

1.    கற்பனைக்கெட்டாத தாக்குதல் என்ற வகையில் இக்கிராமங்களின் சேதங்களைப் பார்வையிடத் தமிழக முதலமைச்சர் அங்கு நேரடியாகச் செல்லவேண்டும். அவரது வருகையினால் அரசு எந்திரம் துரிதமாகச் செயல்படுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனரீதியான ஆறுதலும் கிடைக்கும்.

 2.    தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (1989) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு முழுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இச்சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுவதோடு, தாக்குதல் நடத்தியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

3.    அரசு உடனடியாக அதிவிரைவு தனிநீதிமன்றத்தை இம்மூன்று கிராமங்களில் ஏதேனுமொன்றில் அமைத்து, நீதிவிசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும். (உ-ம்) ஆந்திர மாநிலம் சுண்டூர்ப் படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிநீதிமன்றம்.

4.    2012 சித்திரா பௌர்ணமியன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னிய இளைஞர் மாநாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு கலப்புமணத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்திலான பேச்சே, இத்தகைய தாக்குதலுக்கு ஊக்கமளிக்கிறது. எனவே, காடுவெட்டி குரு மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

5.    கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும் அண்மைக் காலமாக இதே போன்று கலப்புமணத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. சடடத்திற்குப் புறம்பான இது போன்ற பேச்சுகளையும், அமைப்புகளையும் தடை செய்யவேண்டுமென்று கோருகிறோம்.

6.    கடும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள இம்மூன்று கிராமங்களையும் பேரிடர் அழிவாக அறிவித்து, புதிய வீடுகளை முழுமையான அளவில் கட்டித்தரவேண்டும். மறுகுடியமர்வு நடத்தப்படும்வரை அம்மக்களுக்கான மாற்று வாழிடத்தை அரசே உறுதி செய்து தரவேண்டும். சேதங்களை உரிய முறையில் மதிப்பிடும் வகையில், தகுதிவாய்ந்த இழப்பு மதிப்பீட்டுக் குழுவை நியமித்து, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

7.    தாக்குதலாலும் தீயினாலும் மாணவர்களின் சான்றிதழ்களும் மக்களின் குடும்ப அட்டை, சொத்துப்பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைத் தரும் வகையில் தனி அதிகாரிகளை அந்தந்த ஊர்களிலேயே அமர்த்தி வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

8.    பொருளாதார ரீதியான தாக்குதல் என்ற முறையில் சேத மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் இருக்குமென்று இக்குழு கருதுகிறது. அதனால் அரசு வழங்கியுள்ள ரூ.50,000/- போதுமானதல்ல. எனவே, வீட்டிற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதியும், நிலமும் வழங்கவேண்டும்.

 9.    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை இனங்கண்டு அவற்றைத் தலித் மக்களுக்கு வழங்கவேண்டும்.

10.   இத்தாக்குதலைத் தடுக்க மாவட்ட காவல்துறையும் நிர்வாகமும் தவறின என்ற முறையில் அவர்கள் மீது தனிவிசாரணை மேற்கொள்ளவேண்டும். மேலும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அடிப்படையில் கடமை செய்யத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

11. பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இப்பாதிப்புகளிலிருந்து உளவியல் ரீதியாக அவர்களை மீட்டெடுக்கும் வகையில், உரிய ஆற்றுப்படுத்தலுடன் கூடிய ஆலோசனைகளை வழங்கத் (Guidance and Counselling) தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

******
தொடர்புக்கு : 

1.   Dr.C.Lakshmanan, Co-ordinator, Dalit Intellectual Collective, Chennai /      lchinnaiyan@gmail.com / 9884527359

2.   Stalin Rajangam, Writer, Intellectual Circle for Dalit Actions, Madurai / stalinrajangam@gmail.com / 9994335339                                                                                               (புகைப்படங்கள்: சரத்)

புதன், நவம்பர் 14

தர்மபுரி 2012:கீழவெண்மணியை விட மோசமான வன்செயல் - ஆனந்த் டெல்டும்ப்டே / தமிழில்: எஸ்.வி.ராஜதுரை




எனது நண்பர் பேராசிரியர் சி.லட்சுமணன் இன்று (10.11.2012) தர்மபுரியிலிருந்து தொலைபேசியில் என்னை அழைத்து, தொண்டை அடைக்க, நா தழுதழுக்க நத்தம், அண்ணா நகர், கொண்டயம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் இருந்த பயங்கரமான நிலைமையைக் கூறினார். அங்கு 2012 நவம்பர் 7 அன்று வன்னிய சாதிக்கும்பலால் ஏறத்தாழ 300 தலித்துகளின் வீடுகளில் இருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.  அந்த வீடுகள்  தீ வைத்து எரிக்கப்பட்டன. அந்த வன்செயல் நடந்த இடத்திற்கு அப்போதுதான் சென்றடைந்த உண்மை அறியும் குழுவின் உறுப்பினராக இருந்தார் லட்சுமணன். இந்த வன்முறை நவம்பர் 8ஆம் தேதியன்று களப்பணியாளர் ஒருவர் அனுப்பிய குறுஞ்செய்தி மூலமும் அதன் பிறகு செய்தித்தாள்களில் வெளிவந்த அரைகுறைச் செய்திகள் மூலமும் எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அந்த சம்பவத்தை நினைத்தால் இப்போதும் எனக்குக் குலை நடுக்கம் ஏற்படுகிறது.

பறையர் வகுப்பைச் சேர்ந்த 23 வயது இளவரசனுக்கும் வன்னியர் சாதியைச் சேர்ந்த 20 வயது திவ்யாவுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த காதல் திருமணம்தான் இந்த சாதி வன்முறைக்கான உடனடிக் காரணம். பெண்ணின் பெற்றோர்கள் இது தொடர்பாகக் காவல்துறையினரை அணுகியிருந்தனர். காவல் துறையினர் மேற்சொன்ன இருவரது தரப்பினரையும் அழைத்து, அந்தத் திருமணம் சட்டப்படி சரியானது என்று சமாதானம் கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர். இதற்கிடையே மூன்று கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்கள் ஒரு வாரத்திற்கு முன் ஒரு கூட்டம் கூட்டி ‘கட்டைப் பஞ்சாயத்து' நடத்தி, சம்பந்தப்பட்ட தலித் குடும்பம் அந்தப் பெண்ணை (திவ்யாவை) தங்களிடம் புதன்கிழமை அன்று (7-11.2012) திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று உத்திரவு போட்டனர். ஆனால் திவ்யா அந்த உத்தரவுக்கு அடிபணிய மறுத்து, வாழ்ந்தால் இளவரசனுடன்தான் வாழ்வேன் என்று தெளிவாகக் கூறிவிட்டார். இந்த விஷயங்கள அனைத்தையும் தெரிந்திருந்த தர்மபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிபாளர் அஸ்ரா கார்க், கட்டைப் பஞ்சாயத்தில் கலந்து கொண்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருவதாகக் கூறினார். நவம்பர் 7ஆம் தேதியன்று திவ்யாவின் தந்தை ஜி.நாகராஜன் (வயது 48), நத்தம் தலித் காலனியிலிருந்து சிறிது தொலைவிலேயே உள்ள செல்லங்கொட்டாய் கிராமத்திலுள்ள தனது வீட்டில் திடீரென்று இறந்துவிட்டார். பறையர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பையனைத் தனது மகள் திருமணம் செய்து கொண்டதை ஜீரணம் செய்து கொள்ள முடியாததாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக வன்னியர்கள் கூறுகின்றனர். ஆனால் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு போலி முகாந்திரத்தை உருவாக்குவதற்காக வன்னியர்களே அவரைக் கொலை செய்திருக்கின்றனர் என்று தலித்துகள் கருதுகின்றனர்.  

பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் அவதாரமான வன்னியர் சங்கத்தின் தலைவராக உள்ள காடுவெட்டி குரு, கலப்புத் திருமணம் தடுக்கப்பட வேண்டும் என்று வன்னிய சாதிப் பொதுக்கூட்டமொன்றில் அண்மையில் விடுத்திருந்த அறிக்கை ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னும் மறையவில்லை. இந்தப் பொதுக்கூட்டம், என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் சரி தங்கள் வீட்டுப் பெண்கள் தலித் பையன்களைத் திருமணம் செய்து கொள்வதைத் தடுத்தே தீருவோம் என்று தமிழ்நாடு நெடுகிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினர் முடிவு எடுப்பதற்கான உள்உந்துதலாக அமைந்தது. கொங்கு வேளாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, கலப்புத் திருமணம் செய்து கொள்வதை எதிர்ப்பதற்காகத் தங்கள் சாதியினரைச் சேர்ந்தவர்களின் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகப் பத்திரிகை விளம்பரங்களின் மூலம் அறிவித்து, கலப்புத் திருமணத்திற்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கியது. இவை அனைத்தும் அரசுக்கு நன்றாகத் தெரியும். எனவே, மேற்சொன்ன மூன்று கிராமங்களில் நடந்த நிகழ்ச்சியை மிக அண்மைக்காலத்தில் நடந்த சாதியப் பலத்திரட்சி என்னும் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.
ஏறத்தாழ அதே நேரத்தில் 1500க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலொன்று நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகியவற்றிலிருந்த தலித் குடியிருப்புகளைத் தாக்கியது. அசம்பாவிதம் நேரலாம் என்று எதிர்பார்த்த அரசு நிர்வாகம், காவல் துறையினரை அந்த கிராமங்களில் நிறுத்தியிருந்தது என்றாலும், தாக்குதலை நடத்தியவர்கள் அவர்களைவிடப் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர் என்று மிக எளிதாக நிர்வாகத்தின் தரப்பில் சொல்லப்படுகிறது. தாக்குதலை நடத்தியவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்த ஏதேனும் முயற்சி செய்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை என்றாலும், தங்களது செயலின்மைக்கு அவர்கள் கூறும் இந்த வினோதமான தர்க்கம் கேள்விக்குட்படுத்தப் படவில்லை. இந்தத் தாக்குதலின் போது அவர்கள் காயமடைந்திருந்திருக்கும் பட்சத்தில் அவர்கள் செயல்படாமலிருந்ததற்கான சாத்தியப்பாடு இருந்திருக்கும். ஆனால் அவர்கள் மீது எந்தக் காயமும் படவில்லை. இப்படிப்பட்ட விளக்கத்தை முன்வைப்பதன் மூலம், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற இந்த நாட்டில் எத்தனை மக்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையில் காவல் துறையினர் இருக்க வேண்டும் என்று அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் போலும்.

தலித்துகள் கூறுவதுபோல, உண்மை என்னவென்றால், வன்முறைக் கும்பல் அவர்களது விலை உயர்ந்த பொருள்கள் கொள்ளையடிக்கவும் அவர்களது வீடுகளைக் கொளுத்தவும் செய்யும்போது வழக்கம் போலவே காவல்துறையினர் வாய் திறக்காமல் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான். அங்கு வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் மட்டுமே இருந்தனர். இளம் வயதினர் பெங்களூருவுக்கும் திருப்பூருக்கும் வேலைக்குச் சென்றிருந்தனர். தாக்குதல் நடக்கத் தொடங்கியதும் அந்த வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோரும் வயல்களுக்கும், காட்டுப்பகுதிகளுக்கும் அண்டைக் கிராமங்களுக்கும் தப்பி ஓடி விட்டனர்.  இந்தத் தாக்குதல் நடக்கும் என்பது காவல்துறைக்கு நன்கு தெரிந்திருந்தும்கூட, அது சரியாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. வன்முறையாளர்கள் பெரிய பெரிய மரங்களை வெட்டி நடுச்சாலைகளில் போட்டு, தீயணைப்புப்படையினர் அந்தக் கிராமங்களை உடனடியாகச் சென்றடையாதபடி தடுத்துவிட்டனர். ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த அழிவுவேலை இரவு 9.30 மணிக்கு மேல்தான் முடிவடைந்தது. அப்போது வீடுகள், உடைமைகள் எல்லாமே எரிந்து சாம்பலாகியிருந்தன. கூடுதலாக ஆயிரம் காவல்துறையினரை அந்தக் கிராமங்களுக்கு அனுப்பியும் தொன்னூறு பேருக்கு மேற்பட்டவர்களைக் கைது செய்தும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல் துறை கூறுகின்றது. மேலும் 210 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 300 பேர் மட்டுமே குற்றம் சாட்டப்படுமேயானால், தாக்குதல் நடந்த அன்று அங்கு இருந்த காவல்துறையினரின் எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் தாக்குதலை நடத்தியவர்கள் இருந்தார்கள் என்னும் கூற்றை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இழக்கப்பட்டுவிட்ட வீடுகள், உடைமைகள் ஆகியவற்றுக்கு இழப்பீடாக குடும்பமொன்றுக்கு ரூ 50,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர், இந்த வன்முறைக்குக் காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கவைக்குதவாத அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் இடதுசாரி இயக்கம் மிக வலுவாக இருந்த குக்கிராமங்களில்தான் இந்த வன்முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தர்மபுரி மாவட்டம் ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் நக்சலைட் இயக்கத்துக்கான தலைமையகமாக இருந்தது. நக்சலைட் இயக்கம் சரிவில் உள்ளதால், சாதியம் தனது விகாரமான தலையை இந்த மாவட்டத்தில் உயர்த்தியுள்ளது. வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் பொருளாதாரரீதியாக பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. ஆனால், வன்னியர்களின் தலைவர் எஸ்.ராமதாஸின் அறிவார்ந்த அறிக்கைகள், நடவடிக்கைகள் ஆகியவை ஒருபுறமிருந்தாலும், நச்சுத்தன்மை வாய்ந்த சாதிய ஆணவத்தின் துணிவு காரணமாக பலமுறை மோதல்கள் நடந்துள்ளன. அவரும், வட தமிழகத்தைச் சேர்ந்த தலித் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவனும் விடுத்த அறிக்கைகள், மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக, தென் தமிழகத்தை ஒப்பிடுகையில் தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குமிடையே சிறிது நல்லிணக்கம் இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், வன்னியர்களிடையே இருந்து பழைமைவாத, அப்பட்டமான சாதியச் சக்திகள் எழுச்சி பெற்றுள்ளது, சாதிகளிடையே ஏற்படுத்தப்படும் இத்தகைய ஒட்டுவேலைகள் சாதிய உணர்வின் மறைவைக் குறிப்பதாகாது என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இது சாதிய உணர்வை தற்காலிகமாக அடக்கி வைத்திருப்பதே தவிர வேறல்ல. இந்த நஞ்சுக்கான சரியான மருந்து ‘வர்க்கம்' என்னும் மாற்றுச் சொல்லாடலைக் கொண்டு சாதியை முற்றிலுமாக அழித்தொழிப்பதுதான். நல்லெண்ணம் படைத்த பலருக்கும்கூட இது கடினமான காரியமாகத் தோன்றலாம். ஆனால், இந்தப் பிரச்சனைக்கு வேறு எந்தத் தீர்வும் இருப்பதாகத் தெரியவில்லை.

சிபிஎம் கட்சியால் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' நல்ல பணிகளைச் செய்து கொண்டு வருகிறது. வலுவான தலித் கட்சி கூட செய்யாத வகையில் , அந்த முன்னணி தர்மபுரிக்குச் சென்று மிக நியாயமான கோரிக்கைகளை எழுப்பியுள்ளது. உண்மையில், பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு மறுவாழ்வு வழங்குவதுதான் முதன்மையான பிரச்சனை. தொலைக்காட்சிப் பெட்டிகள், மடிக்கணினிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை வெட்கக்கேடான முறையில் வழங்கும் முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ள ஆளும் கட்சிகள், ‘பட்டியலின சாதிகள், பட்டியலினப் பழங்குடிகள் மீதான வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டத்தை' முகாந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டு, குடும்பத்துக்கு ரூ 50000 என்னும் அற்பத்தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளன. உண்மையில் இந்தச் சட்டத்தைக் காட்டிலும் அதன் மீறல்களே கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த இழப்பீடும்கூட வன்கொடுமையை அனுபவித்தற்கான இழப்பீடேயன்றி, இழந்துபோன உடைமைகளுக்கான இழப்பீடு அல்ல. தலித்துகளைப் பாதுகாக்கத் தவறிய அரசு செய்ய வேண்டிய கடமை, அவர்கள் அனுபவித்த வேதனைக்கான இழப்பீட்டுடன் அவர்கள் இழந்துள்ள உடைமைகளுக்கான இழப்பீட்டை வழங்குவதாகும். எனவே, பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நல்ல வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும், தலித்துகள் ஒவ்வொரும் இழந்துள்ள உடைமைகள் முழுவதற்குமான இழப்பீடுகள் தரப்பட வேண்டும், அவர்களுக்குப் போதுமான போலிஸ் பாதுகாப்புத் தரப்பட வேண்டும், தீயில் எரிந்துபோன அவர்களது ( நிலப்பட்டா, கல்விச் சான்றிதழ் போன்ற) ஆவணங்கள் புதிதாக தயாரித்து வழங்கப்பட வேண்டும், தலித்துகளில் குழந்தைகளுக்கான கல்வி வசதி செய்யப்பட வேண்டும் என்று ‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி' முன்வைத்துள்ள கோரிக்கைகள் எல்லோராலும் மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆதரிக்கப்பட வேண்டியவையாகும். அந்த முன்னணி கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அமைப்பு என்பதால், அதனைச் சேர்ந்தவர்கள், தங்களது செயல்பாடுகளை மேலும் உயர்ந்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று, ஆக்கபூர்வமான சாதி-எதிர்ப்பு போராட்டங்களுடன் சேர்த்து, வர்க்க அடிப்படையில் மக்களை ஒன்றிணைப்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தும் ஆர்வம் தோன்றாமல் இருக்க முடியவில்லை.


தர்மபுரி நிகழ்ச்சியில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றாலும், நாற்பதாண்டுகளுக்கு முன் கீழ்வெண்மனியின் நடந்த நிகழ்ச்சியை இது நினைவூட்டுகிறது. அங்கு இதேபோன்ற தலித் கிராமத்தை நிலப்பிரபுக்களின் குண்டர்கள் தீவைத்து எரித்து 44 தலித்துகளைக் கொன்றனர். அந்த 44 பேரில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளுமே. சுதந்திரத்துக்குப் பிந்திய இந்தியாவில் தலித்துகள் மீதான வன்கொடுமைகளின் புதிய வகை என்று நான் கூறிவருவது இங்குதான் தொடங்கியது. அரைகுறையான நிலச்சீர்திருத்தம், பசுமைப்புரட்சி ஆகியவற்றுடன் நேருவிய சோசலிசம் எனக் கூறப்படும் ஆட்சி முறை பின்பற்றிவந்த முதலாளிய வளர்ச்சி உத்தியின் காரணமாக கிராமப்புறங்களின் மீது கவிழ்ந்த பொருளுற்பத்தி -வினியோக முறையைக் கொண்டுதான் இந்தப் புதிய வகை வன்கொடுமையைப் பகுத்தாய்வு செய்யவும், இதற்கான காரணியாக அந்தப் பொருளுற்பத்தி-வினியோக முறையைக் கொள்ளவும் முடியும். முந்தைய சூத்திர சாதிகளைச் (இன்றைய பிற்படுத்தப்பட்ட/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சேர்ந்த குடியானவர்களிடையே இருந்து பணக்கார விவசாயிகள் வர்க்கமொன்றை மேற்சொன்ன முதலாளிய வளர்ச்சி உத்தி உருவாக்கியது. இந்தப் பணக்கார விவசாயி வர்க்கம், மத்திய அரசாங்கத்திலுள்ள ஆளும் வர்க்கங்களின் முக்கியக் கூட்டாளியாகவும் அரசியல் அதிர்ச்சிகளிலிருந்து அவற்றைப் பாதுகாக்கும் சக்தியாகவும் அமைந்து, தலித்துகளை முற்றிலும் கூலி உழைப்பையே சார்ந்திருக்கின்ற, அதே வேளை முன்பிருந்த ஜஜ்மானி முறையால் உத்திரவாதம் செய்யப்பட்ட பாதுகாப்புகள் ஏதுமில்லாத பாட்டாளிவர்க்கமாக மாற்றியது. மேல்சாதி நிலப்பிரபுக்கள் மேலதிக பெரிய வாய்ப்பு வசதிகளைத் தேடி அண்டை நகர்ப்புறங்களுக்குக் குடியேறிச் சென்ற பிறகு, மேற்சொன்ன பணக்கார விவசாயி வர்க்கம் பார்ப்பனியத் தடியைக் கையில் எடுத்துக் கொண்டது. மிகத் துரிதமாகச் செல்வத்தையும் அதிகாரத்தையும் ஈட்டிய இந்த வர்க்கத்திடம் மரபான மேல்சாதிகளுக்கு இருந்த பண்பாட்டு நாசூக்குகள் இல்லை. ஆனால் அதனுடைய சாதிப் பிணைப்புகளின் காரணமாக எண்ணிக்கை பலம் இருந்தது. அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களான தலித்துகளுக்குமிடையே புதிய விவசாயப் பொருளாதாரம் ஏற்படுத்திய முரண்பாடுகள் பல சமயங்களில் சாதி அடையாளங்கள் மூலமாக வெளிப்பட்டு, விழாக்கோலம் பூணும் சாதி வன்கொடுமைகளாக விளைந்தன. கீழவெண்மணி இதன் தொடக்கம்; பின்னர் அதனைத் தொடர்ந்து அதே போன்ற வன்கொடுமைகள் நடக்கின்றன.

கீழவெண்மணி 44 ஏழை தலித்துகளைப் பலி கொண்டது. அப்போது, தலித்துகளுக்குத் தங்கள் உயிர்களைத் தவிர இழப்பதறகு ஏதும் இருக்கவில்லை. 2012இல், இரு தலைமுறைகளுக்குப் பிறகு, சமுதாயத்தின் நிலை அப்போது இருந்தது போன்றதாக இல்லை.1960களில் கிராமங்களில் ஒரு நிலப்பிரபுக்கோ, அவரது உற்றார் உறவினருக்கோ சொந்தமான, நன்கு கட்டப்பட்ட வீடுகள் ஒன்றிரண்டு இருந்திருக்கும். ஆனால் இன்றோ, அத்தகைய வீடுகள் கிராமங்களில் ஏராளமாக உள்ளன; அவற்றில் தலித்துகளுக்குச் சொந்தமான வீடுகளும்கூட இருக்கின்றன. ஆனால், இது அதிகரித்துவரும் சமத்துவத்தைக் குறிப்பன அல்ல; மாறாக, கல்வி பரவுதலின் காரணமாகவும், இன்னும் சொல்லப்போனால் தொலைக்காட்சிகளைப் பார்க்கும் வாய்ப்புகள் பெருகியுள்ளதன் காரணமாகவும் தலித்துகளின் பண்பாட்டு வளர்ச்சி மட்டம் உயர்ந்துள்ளதையே குறிக்கிறது. தலித்துகளுக்கும் மற்றவர்களுக்குமான இடைவெளி அதிகரித்திருக்கக்கூடும். ஆனால் இன்றைய தலித்துகள் தங்களது பெற்றோர்களைப் போலத் தங்களது அவலநிலையைப் பார்த்துக் கலக்கமடைவதில்லை. அவர்கள் தங்களது வாழ்வையும் தங்களது குழந்தைகளின் வாழ்வையும் மேம்படுத்தக் கடுமையான முயற்சிகள் செய்துள்ளனர். தர்மபுரியைச் சேர்ந்த பெரும்பாலான தலித்துகள் பெங்களூரில் கட்டட வேலைகளிலும் திருப்பூரில் வியர்வைக் கூடங்களிலும் கடுமையாக உழைத்துத் தங்கள் சேமிப்புகளை, தங்கள் கிராமங்களில் விட்டு வந்துள்ள குடும்பங்களுக்கு நல்ல வீடுகள் கட்டித் தருவதில் முதலீடு செய்துள்ளனர். அவர்களது வீடுகளும் அதிலுள்ள உடைமைகளும் அவர்களது வாழ்வின் புற வெளிப்பாடுகளாக உள்ளன; அவை அவர்களுடைய வாழ்க்கையினது மட்டுமின்றி அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையினதும் புற வெளிப்பாடுகளாகவும் உள்ளன. எனவே அவர்களது வீடுகளை அழிப்பது, எரிந்துபோன அவர்களது வீடுகளுக்குள்ளேயே தலித்துகள் அனைவரையும் அழித்தொழிப்பதற்கு நிகரானது. எனவேதான் அடங்க மறுக்கும் தலித்துகளுக்குப் ‘பாடம் புகட்ட' அவர்களது உயிர்களை விட அவர்களது உடைமைகள்தான் எளிதில் கைகொடுக்கின்றன. சாதி வன்கொடுமைகளுக்குப் பின்னால் உள்ள அடிப்படையான குறிக்கோள் இத்தகைய ‘பாடம் புகட்டல்'தான்.


இந்த அர்தத்தில் பார்த்தால், தர்மபுரி நிகழ்ச்சி கீழவெண்மனி நிகழ்ச்சியைவிட மோசமானதாகும். 1960களில் தலித் இயக்கம் என்பது உருவாகிக் கொண்டிருந்த இயக்கம் என்று கூறலாம். இன்றோ அது தன்னை அழித்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. இட ஒதுக்கீடு மூலம் தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் என்னும் தர்க்கம், அதன் தொடக்கப் புள்ளிக்கே மீண்டும் வந்துள்ளது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் கணிசமான தலித் பிரதிநிதிகள் இருக்கிறார்கள்; அரசாங்கக் கட்டமைப்பில் எல்லா மூலை முடுக்குகளுக்கும் சென்றுள்ள கணிசமான தலித் மத்தியதர வர்க்கதினர் இருக்கின்றனர். ஆனால், தலித் வெகுமக்களை விட்டுச் சென்றுள்ள இவர்களால் அந்த வெகுமக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இட ஒதுக்கீட்டின் மூலம் தலித்துகளுக்குப் பிரதிநிதித்துவம் என்பதற்கு நவ தாராளவாதம் ஏற்கனவே இரங்கற்பா பாடிவிட்டது. மக்களின் முன் உண்மையை அச்சமின்றி எடுத்து வைக்க வேண்டிய அறிவாளிகள் யதார்த்த நிலையை மக்கள் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அவர்களைக் குழப்புவதற்காக ‘கார்ட்டூன் சர்ச்சைகளி'ல் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கும் இதுபோன்ற பிற கேள்விகளுக்கும் விடைகள் கேட்டு தர்மபுரி உரக்கக் கூவுகிறது.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...