செவ்வாய், செப்டம்பர் 8

பா.ம.க ஆட்சி: அப்படியொரு கேடு 22016ல் கூட நடந்துவிடாது - புதுவிசை 44வது இதழ்



வ்வொரு வகுப்புக்கலவரம் நடந்து முடியும்  போதும் பா.ஜ.க.வின் வாக்குபலம் 0.8 சதவீதம்  கூடுகிறது என்கின்றனர் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் (Do parties matter for ethnic violence? Evidence from India). வெவ்வேறு கட்சிகளில் இருப்பவர்களையும் கட்சி சாராதவர்களையும் வகுப்புவாதத்திற்குள் இழுத்துப்போட்டு வாக்காளர்களாக மாற்றிக் கொள்வதற்கு உகந்ததான கலவர கால மனநிலையை நிரந்தரமாகப் பேணுவதற்குரிய திட்டங்களோடு சங் பரிவார பயங்கரவாத அமைப்புகள் களத்தில் உள்ளன. பா.ஜ.க. மத பயங்கரவாதத்தைக் கைக்கொண்டுள்ளது என்றால், அதன் தமிழகக் கூட்டாளியான பா.ம.க.வோ சாதிய பயங்கரவாதத்தைக் கைக்கொண்டுள்ளது. மதச் சிறுபான்மையினரால் இந்துக்களுக்கு ஆபத்து என்கிற பொய்யைப் பரப்பி இந்து என்கிற பெரும்பான்மை உணர்வுக்குள் வெகுமக்களை மூழ்கடிக்கும் சங் பரிவாரத்தின் அதே உத்தியில் தலித்துகளால் மற்றவர்களுக்கு ஆபத்து என்று ராமதாஸ் கிளப்பிவிட்ட பீதி சமூகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்மத்தை ஆழப்படுத்தியி ருக்கிறது. ஆனால் பிறசாதியினர் அனைவருக்கும் மீட்பராக தன்னைக் காட்டிக்கொள்ளும் அவரது இழிமுயற்சி வெற்றிபெறவில்லை. எனவே சங் பரிவார பாணியில், வெவ்வேறு கட்சிகளில் இருக்கிற வன்னிய மக்களை தமது வாக்காளர்களாக திரட்டிக்கொள்வதற்காக தர்மபுரி, மரக்காணம், சேஷசமுத்திரம் என்று தலித்துகளுக்கு எதிரான வன்முறையை பா.ம.க. கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பா.ம.க. தலைமையினால் தூண்டிவிடப்பட்டு தலித்துகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்  தமது இயல்பான வாழ்க்கையை இழந்தலையும் அவலத்திற்கு ஆளாகிவருகின்றனர்.  

வன்னியமக்களின் ஏகப்பிரதிநிதியாக தம்மைக் காட்டிக்கொண்டு பெருங்கட்சிகளோடு கொழுத்த பேரத்தை நடத்தி இதுவரை ஆதாயம் கண்டுவந்த ராமதாஸ், பிரதமர் வேட்பாளர் என்று பா.ஜ.க.வால் அறிவிக்கப்பட்ட மோடி அதில் வெற்றியும் பெற்றுவிட்டதைக் கண்டு உற்சாகமாகி 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளர் என்று தன் மகனை அறிவித்திருக்கிறார். அறிவிக்கப்பட்ட மாத்திரத்திலேயே ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போன்ற நினைப்பில் அவர்கள் வெளிப்படுத்திவரும் மிதப்பையும் ஆணவத்தையும் அடாவடிப் பேச்சுகளையும் பார்த்து வெறுப்படைந்துள்ள தமிழக மக்கள் அப்படியொரு கேடு 2016ல் அல்ல, 22016ல் கூட நடந்துவிடாமல் தடுத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஆய்வு நேர்மை,  உண்மை விளம்பல் ஆகியவற்றுக்கான விலை அதற்குரியவர்களின் உயிர்தான் என்கிற அச்சுறுத்தலை உருவாக்குவதன் மூலம் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சாதியத்தையும் பத்தாம்பசலித்தனமான கட்டுக் கதைகளையும் மூடநம்பிக்கைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் தக்கவைத்துக்கொள்ள முடியுமென சங்பரிவார பயங்கரவாதிகள் நம்புகின்றனர். அதன்பொருட்டு அவர்கள் அறிவுஜீவிகளையும் ஆய்வாளர்களையும் பகுத்தறிவாளர்களையும் அடுத்தடுத்து கொன்று குவித்து வருகிறார்கள். நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம்.கல்பர்கி என இப்பட்டியலை நீட்டிப்பதற்காக இந்தப் பயங்கரவாதிகள் நாடெங்கிலும் கொலைவெறியோடு அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

சாதியத்திற்கும் பார்ப்பனீய ஒடுக்குமுறைகளுக்கும்  எதிராக பசவண்ணரால் உருவாக்கப் பட்ட வீரசைவம் நாளடைவில் அதுவே ஒரு சாதியாகி இந்துமதத்தால் உள்வாங்கப்பட்ட கொடுமையையும், அது கடைபிடிக்கும் தீண்டாமைகளையும், தலைவிரித்தாடும் மூட நம்பிக்கைகளையும் காவி பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்திவந்த கல்பர்கி கொல்லப்பட்டுவிட்டார். இவ்வாறான கொலைகளின் மூலம் தங்களது கருத்தியல் எதிரிகளை தீர்த்துக்கட்டுகிறவர்கள் அறிவுத்துறையினரை அச்சத்திற்கு ஆட்படுத்தி சுயதணிக்கைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு தூண்டுவதிலும் வெற்றிபெற முடியுமென நம்புகிறார்கள். கல்பர்கியின் கொலையைக் கொண்டாடிக் களிக்கும் காவி பயங்கரவாதிகள்,  அடுத்து கொல்லப்படவிருப்பவர் பேராசிரியர் பகவான் என பகிரங்கமாக அறிவிக்குமளவுக்கு அச்சமற்றுத் திரிகிறார்கள். ஆனால் இந்த கொக்கரிப்புகளுக்கு அஞ்சாத பகவான், சமூகத்தை முற்போக்கான வழியில் கொண்டு செலுத்தும்  கடப்பாட்டுடன் போராடியவர்கள் வரலாறு நெடுகிலும் உலகெங்கிலும் உச்சரித்த சொற்களை ஒரு பிரகடனம் போல் முழங்கியிருக்கிறார்: “உங்களால் எங்களைத்தான் கொல்லமுடியுமே தவிர எங்களது சிந்தனைகளை அல்ல”. பகவானின் முழக்கத்தை அதே துணிவுடன் வழிமொழிவதும் கல்பர்கி கருத்துலகில் நடத்திவந்த போராட்டத்தைத் தொடர்வதும் பரவலாக்குவதும்தான் சாதிய மற்றும் காவி பயங்கரவாதிகளுக்கு பொருத்தமான பதிலடி என்றே புதுவிசையும் நம்புகிறது. ஆனால் கருத்தியல் போராளிகள் கொல்லப்படும் போதெல்லாம் நாம் இவ்வாறாக எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகள் ஏதாவது விளைவுகளை உருவாக்கியிருக்கிறதா என்று பரிசீலிக்கவும் கோருகிறது. 

- ஆசிரியர் குழு 


கட்டுரை

விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங்பரிவாரத்திற்காக
நிகழ்த்திய பயங்கரவாதங்கள்
- லீனா கீதா ரெகுநாத் தமிழில்: செ.நடேசன் 


விடலையும் குடும்பனும் - பூமணியின் அஞ்ஞாடி
- டி. தருமராஜ்

விக்டர் ஹாரா : மக்களுக்காக இசைத்த கிதார்
- எஸ்.வி. ராஜதுரை

மலம் அள்ளாத ராக்கெட் - ந,கோபி

மார்க்சீயமும் தமிழ் உணர்வும் - ப.கு. ராஜன்

கவிதை : ஆதவன் தீட்சண்யா

சிறுகதை

பொம்மி - அதியன்

கதாபாத்திரம் சொன்ன எழுத்தாளரின் கதை
- உதயசங்கர்

கூடிழந்த பறவைகளின் சாபம் - அ. கரீம்

முன்னட்டை வடிவமைப்பு: கார்த்தி




1 கருத்து:

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...