தெருவிலே
போய்க் கொண்டிருக்கிற ஒரு நாயை யாராவது அடித்தால், வாயில்லாத ஜீவனை ஏன் அடிக்கிறாய்
என்று தடுக்கும் பலர் நமக்குள் உண்டு. அதேவேளையில் நமக்கு முன்னால் தெருவிலே ஒருவன்
அவன் மனைவியை இழுத்துப் போட்டு அடித்து துவைத்துக் கொண்டிருந்தான் என்றால் ‘அவன் பொண்டாட்டிய
அவன் அடிக்கிறான். அதைத் தடுக்க நாம் யார்?’ என்று ஒதுங்கிப் போய்விடுவோம். நாயை அடிக்கும்
போது மிருகாபிமானத்தை வெளிப்படுத்திய காருண்யவாதிகளாகிய நாம் ஒரு பெண் அடிபடும் ஒதுங்கிப்
போய்விடுவதற்கு பின்னேயுள்ள உளவியல் என்ன? கணவன் என்றால் மனைவியை அடிக்கலாம் என்கிற
கருத்து நம்மில் பலருக்கும் இயல்பாக இருப்பதே காரணம். அடித்தால் திருப்பி அடிக்காது
என்கிற தைரியத்தில்தான் நாம் குழந்தைகளை அடிக்கிறோம். அதேபோலத்தான் பெண்கள் புருசன்
அடித்தால் தாங்கிக் கொள்வார்களே தவிர திருப்பியடிக்கமாட்டார்கள் என்கிற தைரியத்தில்தான்
ஆண்கள் அடிப்பதை ஓர் உரிமைபோல கருதிவருகிறார்கள். இப்படி மனைவியை அடிப்பதில் கீழ்த்தட்டு
நடுத்தட்டு மேல்தட்டு என்கிற பாகுபாடுகள் இன்றி எல்லாமட்டத்து ஆண்களும் ஒன்றுபோல வெளிப்படுகிறார்கள்.
ஐபிஎஸ் அதிகாரியான தனது கணவர் தன்னை அடித்து சித்திரவதை செய்ததாக ஐஏஎஸ் பெண் அதிகாரி
ஒருவர் வெளிப்படையாக புகார் சொன்னார். படிப்பு பொறுப்பு அந்தஸ்து எல்லாவற்றுக்கும்
அப்பால் ஓர் ஆணவமிக்க ஆணாக வெளிப்படுவதில்தான்
நமது அகங்காரம் திருப்தியடைகிறது. பெண்கள் வெளிப்படையாக புகார் சொல்லலாம் என்கிற ஒரு
சுதந்திரமான நிலை உருவாகுமானால் நம்மில் பலரும் குடும்ப வன்முறையாளர்கள் என்கிற உண்மை
அம்பலமாகிவிடும். காலம் மாறிவிட்டது, சமத்துவம் வளர்ந்துவிட்டது பாகுபாடுகள் நீங்கவிட்டன
என்பது போன்ற வாதங்கள் எவ்வளவு போலியானவை என்பதும் தெரியவரும்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறையை நியாயப்படுத்தும்
பிற்போக்குத்தனமான கருத்து திரைப்படங்களில் அப்பட்டமாக திரும்பத்திரும்ப வெளிப்படுகிறது.
ஆடுமாடு கோழி கொக்கு புழு பூச்சி எதைச் சித்திரவதை செய்வதுபோல காட்டினாலும் அதை தணிக்கைக்குழு
வெட்டிவிடுகிறது. தணிக்கைக்குழுவைத் தாண்டிவந்துவிடும் பட்சத்தில் விலங்குகள் பாதுகாப்பு
சங்கம் போன்ற அமைப்புகள் தலையிட்டுத் தடுக்கின்றன. ஆனால் திரைப்படங்களில் காதலன் காதலியையோ
கணவன் மனைவியையோ அடிக்கும் காட்சிகள் எவ்வித உறுத்தலும் தடையுமின்றி தொடர்ந்து இடம்
பெற்றே வருகிறது. அடிப்பதைவிடவும் அருவருப்பானது பொண்ணுன்னா எப்படி இருக்கணும் என்று
நம்முடைய கதாநாயகர்கள் செய்துவருகிற உபதேசம். அவளை அடிச்சா என்ன தப்பு? அவளை திட்டினா
என்ன தப்பு? என்று படத்தின் கதாசிரியர் இயக்குநர் நடிகர்கள் தணிக்கைக் குழுவினர் தொடங்கி
பார்வையாளர் வரைக்கும் ஒரேபுள்ளியில் இணைகிறார்கள். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற
ஆணாதிக்க மனோபாவத்திற்கு நியாயம் வழங்கக்கூடிய இதுபோன்ற காட்சிகளை உள்வாங்கி வளர்கிற
இளந்தலைமுறையினரது கருத்துலகத்தையும் பாதிக்கிறது. குடும்ப வன்முறை என்பது நாகரீகமான
ஒரு சமூகத்திற்கான அடிப்படைகளை தகர்த்துவருகிறது என்பதால் இதுபோன்ற காட்சிகள் திரைப்படங்களில்
வெளியாவதற்கு நமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
இதனோடு
தொடர்புடைய மற்றொரு விசயம் போலிஸ் தொடர்பானது. காவல் நிலையச் சாவுகள், போலி என்கவுண்டர்கள்,
சித்தரவதைகள், பாலியல் தொந்தரவுகள், லஞ்சம், ஊழல், வன்முறை, பொய்வழக்கு, குற்றச்செயல்களில்
ஈடுபாடு என்று காவல்துறை மீது புகார் வராத
நாளே இல்லை என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. மணல் கொள்ளையைத் தடுக்கப் போராடியவர்கள்,
காடுகளை அழிப்பதற்கு எதிராகப் போராடியவர்கள், கல்விக்கட்டணத்தை குறைக்கப் போராடியவர்கள்,
பெருகிவரும் கொலைக்குற்றங்களை தடுக்க வேண்டும் என்று போராடியவர்கள் என்று பலரையும்
கடுமையாகத் தாக்குவதன் மூலம் காவல்துறை யாருக்கு சேவகம் செய்துவருகிறது என்கிற கேள்வி
வலுவாக எழுந்து வருகிறது. வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவ மாணவிகள், மூத்த குடிமக்கள்,
பெண்கள் என்று எந்தத் தரப்பு எவ்வளவு சாத்வீகமாகப் போராடினாலும் அவர்கள் மீது வன்முறையைக்
கைளாள்வது காவல்துறையின் வாடிக்கையாகிவருகிறது. குடிமக்களின் ஜனநாயகரீதியான எதிர்ப்பியக்கங்களை
கொடூரமாக கையாண்டு ஒடுக்குவதற்கு அது தயங்குவதேயில்லை. காவல்துறையின் அத்துமீறல்களை
கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் எதையும் மதிப்பதில்லை.
காவல்துறையின் இத்தகைய மனிதஉரிமை மீறல்களுக்கு பொதுவெளியில் நியாயம் வழங்குவதைப்போன்ற
கதாபாத்திரங்களை திரைப்படங்கள் உருவாக்குகின்றன. வெகுஜன ஊடகம் எனப்படுகிற சினிமா குடிமக்களின்
பக்கம் நிற்காமல் போலிஸ் இல்ல பொறுக்கி என்பவர்களின் காக்கியுடுப்பில் ஒரு பொத்தானாக
மாறுவது அவமானம்.
- ஹலோ விகடன்
- ஹலோ விகடன்
சிறப்பு
பதிலளிநீக்குஅடித்தால் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்பதை தவிர்த்து அப்படி அடிப்பதனால் அவர்களுக்கு கிடைக்கும் சந்தோசத்திற்கு உளவியல் ரீதியான காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா?
பதிலளிநீக்கு//எவ்வளவு சாத்வீகமாகப் போராடினாலும் அவர்கள் மீது வன்முறையைக் கைளாள்வது காவல்துறையின் வாடிக்கையாகிவருகிறது//
பதிலளிநீக்குஇதில் எனக்கொரு சந்தேகம். காவல்துறையையும் சேர்த்து சம்பள உயர்வு போன்றவைகளுக்காகப் போரிடும்போது கூட இவர்கள் "நேர்மையாக" போராட்டக்காரர்களை புரட்டி எடுக்கும் இவர்களது "நேர்மை" எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஆனால் எப்படி இவர்கள் கடமையாற்றுவதும் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.