திங்கள், செப்டம்பர் 1

எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை - ஆதவன் தீட்சண்யா

குறிப்பிட்ட கொள்கையை முன்வைத்து அதன்பொருட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஈர்த்து தன்பக்கம் திரட்டிக்கொள்வதுதான் எந்தவொரு அரசியல் கட்சியின் விருப்பமாகவும் உள்ளது. ஆனால் வெளிப்படையான கொள்கையும் அதனை அடைவதற்கு துல்லியமான செயற்திட்டமும் இருந்தாலும்கூட அப்படி ஒட்டுமொத்த மக்களையும் திரட்டுவதில் கட்சிகள் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொள்கின்றன. எனவே, ஒட்டுமொத்தச் சமூகத்தையும் திரட்டுவதற்குப் பதிலாக, ஏற்கனவே வெவ்வேறு காரணங்களுக்காக சமூகக்குழுக்களை அணிதிரட்டியுள்ள கட்சிகளை  அடையாளம் கண்டு அவற்றை வளைத்துப் பிடித்து தமது ஆதரவுத்தளத்தை விரிவுபடுத்துவதை ஓர் உத்தியாக அரசியல் கட்சிகள் கைக்கொள்கின்றன. தேர்தல் கூட்டணிகள் இவ்வகையானவை. 

ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங் என்கிற ஆர்.எஸ்.எஸ் தேர்தலில் போட்டியிடும் அமைப்பல்ல. சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றின் எதிர்மறையான பார்ப்பனீயத்தின் கீழ் சமூகத்தை மறுகட்டுமானம் செய்யத் துடிக்கின்ற ஓர் அமைப்பாகும். அதாவது, அது சமூக நீதிக்காவும் சமத்துவத்திற்காகவுமான நெடிய போராட்டங்களினால் பார்ப்பனீயத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைச் சரிசெய்து முன்னிலும் இறுக்கமானதாக இந்தியச் சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிறது. இந்த நோக்கத்தை எட்டுவதற்கு அரசியல் அதிகாரமும் தேவை என்பதால் ஆர்.எஸ்.எஸ். முன்பு ஜனசங்கம் என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்தி வந்தது. பிறகு ஜனசங்கத்தை பாரதிய ஜனதா கட்சியாக்கியது. 

சுதந்திரப் போராட்டத்திலோ நாட்டின் மரியாதையை உயர்த்தும் நடவடிக்கைகளிலோ மக்களின் விருப்பார்வங்களை நிறைவேற்றுவதிலோ ஆக்கப்பூர்வமான பங்களிப்பு எதையும் செய்திராத ஆர்.எஸ்.எஸ். அழிவுப்பூர்வமானது என்றே மக்களின் நினைவில் பதிந்துள்ளது. எனவே  ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையைச் செயல்படுத்த அதிகாரம் வேண்டும் என்று வெளிப்படையாகச் சொன்னால் ஆதரவு கிடைக்காதென்பதால் இந்து என்கிற மத அடையாளத்தை முன்னிறுத்தி மக்களை அணிதிரட்டப் பார்க்கிறது பாஜக. இதன் மூலம் அது இந்துக்களல்லாத மதச் சிறுபான்மையினரை திட்டமிட்டே தனது ஆதரவுத்தளத்திற்கு வெளியே நிறுத்துகிறது. எனவே அதன் கொள்கை ஒட்டுமொத்த சமூகத்திற்குமானது அல்ல என்பதும் அது இந்துக்களை மட்டுமே திரட்ட முயற்சிக்கிறது என்பதும் வெளிப்படை. எனினும் இந்து என்கிற பெரும்பான்மை அடையாளத்துக்குள் தள்ளப்பட்டவர்கள் தமக்குள் ஒன்றுபடவியலாமல் முரண்படும் சாதியக்குழுக்களாக இருக்கின்றனர். 

இந்து என்கிற பொது அடையாளத்துக்குள் இருக்கும் உள்முரண்களைத் தீர்த்து வைப்பதற்கு பதிலாக அந்த முரண்களை அப்படியப்படியே பேணிக்கொண்டு ஒவ்வொரு குழுவுக்கும் வேண்டிய சிலவற்றை செய்துகொடுத்தோ அல்லது செய்வதாக வாக்குறுதியளித்தோ அவர்களை தனது ஆதரவாளர்களாக தனிப்பட்ட முறையில் இணைத்துக்கொள்ள பாஜக முயற்சிக்கிறது. அத்தோடும் நில்லாமல் அத்தகைய முரண்பாடுகளை முரண்பாடுகளாக கருதாமல் அவற்றை இந்துமதத்தின் தனித்துவம் என்று ஏற்கும்படியாக கூர்மைப்படுத்தவும் பாஜக முனைகிறது. இதற்காக அது அந்தந்த வட்டாரத்தின் சூழலுக்கேற்ப சாதி/ உட்சாதி/ வட்டாரம்/ தேசிய இனம் சார்ந்த பல்வேறு குழுக்களுடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தனது ஆதரவுத்தளத்தை விரிவுபடுத்துகிறது. இவ்வாறு விரிவுபடும் ஆதரவுத் தளத்தை தனது வாக்குவங்கியாக மடைமாற்றிக்கொள்ளும் முயற்சியை சமூகப் பொறியியல் என்கிறது பாஜக. மக்களின் மனவோட்டங்களைப் பகுத்தாய்ந்து பெறும் தரவுகளின் அடிப்படையில் அவர்களை அணுகுவதற்குரிய சமூகப்பொறியியலை உருவாக்குகிறது பாஜக. 

குறிப்பிட்ட சமூகக்குழுவைக் குறிவைத்து தொடர்புகொள்வது, அதற்குள் ஊடுருவுவது, அக்குழுவில் உள்ளவர்களை ஈர்ப்பதற்கான முழக்கங்களை உருவாக்குவது, அவர்களின் மதிப்பிற்குரிய ஆளுமைகள், நம்பிக்கைகள், சடங்குகள், பண்டிகைகள் ஆகியவற்றை மதிப்பதாக காட்டிக்கொள்வது, அந்தக் குழு இந்துமதத்தின் தவிர்க்கமுடியாத முக்கியத்துவம் கொண்ட பகுதி என்று சித்தரிப்பது, அதன் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை உட்செரித்து பார்ப்பனியத்தன்மையுடன் இணைப்பது ஆகிய உள்ளடி வேலைகள் மூலம் இந்தச் சமூகப் பொறியியல் இயங்குகிறது. நேரடியாகவும் ஊடகங்கள் மூலமாகவும் உயிரோட்டமான தொடர்பினை உருவாக்கி அதன் மூலம் அக்குழுவில் உள்ள மக்களது கருத்துலகத்தின் மீது செல்வாக்கு செலுத்தி அவர்களது முடிவெடுக்கும் மனோநிலையை தமக்குச் சாதகமாக மாற்றியமைப்பதற்கு உகந்த சமூகப் பொறியியலை ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலுடன் பாஜக கைக்கொள்கிறது. 

சமூகக்குழுக்களால் வழிபடப்படும் நாட்டார் தெய்வங்களை சிவன் பார்வதி விஷ்ணு லஷ்மி ஆகிய பெருந்தெய்வங்களின் அம்சங்களாக காட்டும் புனைகதைகளை உருவாக்கிப் பரப்புவது, ஒவ்வொரு சாதியக்குழுவும் வம்ச வரலாறு என நம்பும் கதையை / தோற்றக்கதையை உண்மையென அங்கீகரிப்பது அல்லது கதையை உருவாக்கிக் கொடுப்பது, கலை இலக்கியங்களையும் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளையும் இந்து மதத்தின் பங்களிப்பாக சித்தரிப்பது, இந்தியாவின் நெடிய வரலாற்றுக்குப் பெருமைமிக்கப் பங்களிப்புச் செய்தமைக்காக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஆளுமைகளை தம்மவர் என உரிமை கொண்டாடுவது, சாதியாக இருப்பதைப் பெருமிதமாக கருதவைப்பது, சாதியாக இருப்பதனால் கிடைக்கும் ஆதாயங்களை இந்து மத்தின் கொடையாகவும் பாதகங்களை அன்னியர்களின் ஊடுருவல்/ தாக்கமாக காட்டுவது, சமூகத்தின் ஒருதரப்பை ஆபத்தான அன்னியர்களெனச் சித்தரித்து அவர்களை எதிர்க்க வேண்டியவர்களெனக் காட்டுவது, படிநிலையையும் பாகுபாட்டையும் இயல்பானதாக பரப்புவது, சமத்துவம் என்னும் கருத்தாக்கத்தை சாதியமைப்பைச் சிதைக்கும் ஆபத்தாக முன்னிறுத்துவது என்று பீஹார், உ.பி, ம.பி, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா போன்ற வடமாநிலங்களில் கைக்கொண்டு ஓரளவு ஆதாயமீட்டிய சமூகப் பொறியியலை தமிழ்நாட்டிற்கேற்றாற் போல பாஜக பயன்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். திட்டம். 

தமிழ்ச்சமூகத்தின் பின்தங்கிய மனநிலையையும் பிற்போக்கான கண்ணோட்டத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற சக்திகளை, அமைப்புகளை, கட்சிகளை அதனதன் சீரழிவுத்தன்மைகளோடு ஒருங்கிணைத்து தலைமை தாங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவுத்தளத்தை விரிவுபடுத்திக் கொடுப்பது ஆர்.எஸ்.எஸ்.சின் உடனடி நோக்கமாக இருக்கலாம். ஆனால் தேர்தல், வாக்கு, அரசியல் அதிகாரம் என்பவற்றுக்கும் அப்பால் பார்ப்பனீயத்திற்கு விசுவாசமானதாக மனித மனங்களைத் தகவமைப்பதே அதன் மெய்யான இலக்கு. அதன்பொருட்டு குடியிருப்போர் நலன், கல்வி, சுற்றுச்சூழல், யோகா, குழந்தை வளர்ப்பு, மகளிர் நலன், கலை இலக்கியம், பண்பாடு, விளையாட்டு, பாரம்பரியம், மரபு, தொல்லியல் ஆய்வு, ஊடகம் சார்ந்தியங்கும் அமைப்புகளில் ஊடுருவி தன்வயப்படுத்தியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.   

தெருச்சண்டைகள் மதக்கலவரங்களில் தெரிவது மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அல்ல. அது உள்ளூர் சமூகத்தில் தவிர்க்கமுடியாத வகையில் மக்களுடன் பிணைப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கான பொறுமையுடன் இயங்குகின்ற, நேரடியாக அரசியல் பேசாமல் நடுநிலைத் தோற்றம் காட்டுகிற பல்வேறு புதிய நிழலமைப்புகளை பெரும் முதலீட்டில் களமிறக்கியுள்ளது. வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னுக்கிழுக்க ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்தச் சமூகப் பொறியியலை முறியடிக்க விரும்பும் சக்திகள், அதற்கேற்ற நுட்பமும் வலுவும் கொண்ட நிலைப்பாடுகளையும் செயல்பாடுகளையும் கைக்கொண்டாக வேண்டிய தருணமிது.

நன்றி: தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணியின் 5ஆவது மாநில மாநாட்டு மலர்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எதிர்பார்க்கும் வடிவத்தில் எதிரி இல்லை - ஆதவன் தீட்சண்யா

குறிப்பிட்ட கொள்கையை முன்வைத்து அதன்பொருட்டு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஈர்த்து தன்பக்கம் திரட்டிக்கொள்வதுதான் எந்தவொரு அரசியல் கட்சியின் விருப...