செவ்வாய், அக்டோபர் 28

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்: தோற்றமும் செயல்பாடும் - ஆதவன் தீட்சண்யா

தோழர் கண.குறிஞ்சி அவர்கள் வெளியிட்டுவரும் "புதுமலர்" காலாண்டிதழின் 2025 அக்டோபர் - டிசம்பர் இதழில் வெளிவந்துள்ள நேர்காணல்.




தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியதன் பின்னணியை விவரிக்கவும். 

எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி 1970ஆம் ஆண்டு தொடங்கிய “செம்மலர்” இலக்கிய இதழை ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வசம் ஒப்படைத்திருக்கிறார்.  செம்மலரில் வெளிவரும் ஆக்கங்கள் பற்றி விவாதித்து செழுமைப்படுத்தும் நோக்கில் அதில் எழுதி வந்த 35 எழுத்தாளர்களின் சந்திப்பு ஒன்று இதழாசிரியர் கே.முத்தையா ஏற்பாட்டில் 1974 நவம்பர் 23, 24 தேதிகளில் மதுரையில் நடந்திருக்கிறது. அக்கூட்டத்தில் கட்சியின் தலைவர்களான என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியம், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகிய தோழர்களும் பங்கேற்றுள்ளனர். முற்போக்கு எழுத்தாளர்களுக்கென சங்கம் ஒன்றை அமைக்கலாமென்ற தோழர் என்.சங்கரய்யாவின் முன்மொழிவு அக்கூட்டத்தில் ஏற்கப்பட்டது. இவர்களுடன் 1969ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி சென்னையில் தோழர் ச.செந்தில்நாதன், டி.செல்வராஜ், தி.க.சிவசங்கரன், கந்தர்வன், கார்க்கி உள்ளிட்டோரது முன்னெடுப்பில் தொடங்கப்பட்டிருந்த மக்கள் எழுத்தாளர் சங்கமும் இணைவது என்கிற முடிவு 05.01.1975 அன்று எட்டப்பட்டது.  

1975 ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுவிட்டது. அரசியல் சாசனம் குடிமக்களுக்கு உறுதிப்படுத்தியிருந்த கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. ஊடகங்கள் கடும் தணிக்கைக்கு ஆளாகின. நாடு முழுவதும் மக்களுக்கான ஜனநாயகவெளிகள் சுருங்கிக் கொண்டிருந்தன. எனினும் அந்நேரத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருந்ததால் ஓரளவுக்கு சுதந்திரமாக இயங்கமுடிந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு 1975 ஜூலை 12, 13 தேதிகளில் மதுரையில் அமைப்பு மாநாட்டை நடத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. 

0 தமுஎச-வின் தொடக்ககாலப் பணிகள்

1976 ஜனவரி 31 அன்று திமுக அரசு பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இங்கும் நெருக்கடி முற்றியது. தமுஎச எழுத்தாளர்கள் உரிமைப் பறிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான குரலை கருத்தரங்கங்கள், கவியரங்கங்கள் வழியே அந்நாட்களில்  தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளனர்.   பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரை முப்பெரும் ஆளுமைகளாக ஏற்று நடத்தப்பட்ட விழாக்கள் பரவலாக கவனம் பெற்றுள்ளன. 1976 அக்டோபர் 1,2,3 தேதிகளில் நாமக்கல்லில் தமுஎச நடத்திய முதல் இலக்கிய முகாமில் எழுத்தாளர்களும் விமர்சகர்களுமாக மாநிலம் முழுவதிலுமிருந்து 170பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். மலையாளத்திலிருந்து பி.கோவிந்தப்பிள்ளை, கன்னடத்திலிருந்து டி.ஆர்.நாகராஜ், கவிஞர் சித்தலிங்கய்யா போன்றோர் கருத்தாளர்களாக பங்கேற்ற இம்முகாம் தனது ஊழியர்களை கருத்தியல்ரீதியாக வளப்படுத்த வேண்டுமென தமுஎச திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட முயற்சி எனலாம். இதேநோக்கில் 1982ஆம் ஆண்டு மதுரையில் 19 தலைப்புகளை முன்வைத்து 5 நாட்கள் மாநில அளவிலான இலக்கிய முகாம் நடத்தப்பட்டுள்ளது. 

மாநிலமெங்கும் இயங்கிக்கொண்டிருந்த நாடகக்குழுக்களை ஒருங்கிணைக்கவும் அவற்றின் ஆக்கங்களை ஒரே இடத்தில் நிகழ்த்திப் பார்க்கவுமாக, 1979 மே 25,26,27 தேதிகளில் தஞ்சையிலும், 1984 செப்டம்பர்  22,23,24 தேதிகளில் சென்னையிலும் தமுஎச நடத்திய நாடகவிழாக்களின் தாக்கம் அரங்கச் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்கதாகும். நாடகவியலாளர்கள் எஸ்.வி.சகஸ்ரநாமம், கோமல் சுவாமிநாதன் ஆகியோரை நெறிஞர்களாகக் கொண்டு தமுஎச 1986 செப்டம்பரில் மதுரையில் ஐந்துநாட்கள் நடத்திய  நாடகப்பயிற்சி முகாம், நாடகத்தின் வகைமைகளையும் நுட்பங்களையும் கற்றுத்தந்தது. அம்முகாமில் பங்கெடுத்த 139 பேரில் நானும் ஒருவன்.   

இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன், கே.ஏ.குணசேகரன் ஆகியோரது வழிநடத்தலில் 1989 ஜனவரியில் ஐந்துநாட்கள் கோவையில் நடத்தப்பட்ட முகாம் இசைக்குழுக்களைச் செழுமைப்படுத்திட உதவியது. இதன் தொடர்ச்சியில் ஒசூரிலும் ஒரு முகாம் நடந்தது.

கலை இலக்கியக் கோட்பாடுகள், வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், சமகாலப் போக்குகள், கருத்துலகத்தில் நடைபெற்றுவரும் விவாதங்கள் ஆகியவற்றில் பங்கெடுப்பதில் தமுஎச  பெரிதும் நாட்டம் கொண்டுள்ளது. இதன்பொருட்டு தமிழிலும், பிற மொழிகளிலும் மதிப்புமிக்க பங்களிப்புச் செய்த-  இலங்கை பேரா.க.சிவத்தம்பி உள்ளிட்ட ஆளுமைகள் பலரையும் அமைப்பின் மாநாடுகளிலும் நிகழ்வுகளிலும் பயிலரங்குகளிலும் கருத்தாளர்களாக பங்கேற்கச் செய்யும் ஏற்பாடு தமுஎசவின் தொடக்கம் முதலே இருக்கிறது. 

0 முதல்வர் எம்ஜிஆர் கொண்டுவந்த திரைப்படத் தணிக்கை மசோதாவை எதிர்த்த தமுஎசவின் போராட்டமும் வெற்றியும்..

அரசியலதிகாரத்தைப் பிடிப்பதற்கு திரைப்படங்களை ஒரு வழியாகக் கண்டிருந்த எம்.ஜி.ஆர், அந்த திரைப்படங்களின் சுதந்திரத்தையே பறிக்கும் நோக்கில் அப்படியொரு சட்ட முன்வரைவைக் கொண்டு வந்ததற்கு பின்புலத் தூண்டுதலாய் இருந்தது 29.03.1987 தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் வெளியான ஒரு நகைச்சுவைத்துணுக்கும் அதற்கு விவேகானந்தன் என்பவர் வரைந்த கேலிச்சித்திரமும். ஒரு பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்துள்ள பலரையும் காட்டி “இதிலே எம்எல்ஏ யாரு? மந்திரி யாரு?” என்று பொதுமக்களில் ஒருவர் கேட்க, “பிக்பாக்கெட்காரர் மாதிரி இருக்கிறவரு எம்எல்ஏ, கொள்ளைக்காரர் மாதிரி இருக்கறவரு மந்திரி” என்று இன்னொருவர் பதிலளிப்பதாக வரையப்பட்ட அந்த கேலிச்சித்திரத்தை ஆனந்தவிகடன் அட்டைப்படமாக வெளியானது. எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு ஊழலில் ஊறித் திளைத்திருந்ததை இப்படி அப்பட்டமாகக்  காட்டியது ஆட்சியாளர்களுக்குப் பொறுக்கவில்லை. இதற்காக ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியம் அடுத்துவரும் இதழில் மன்னிப்புக் கேட்கவேண்டும், இல்லையென்றால் மூன்றுமாத காலம் கடுங்காவல் தண்டனை என்று சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் கெடு விதித்தார். ஆனால் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் ஓர் ஊடகத்திற்குள்ள கடமையைச் செய்ததற்காக மன்னிப்புக் கோரமுடியாது என்கிற நிலைப்பாட்டை விகடன் அடுத்துவந்த இதழின் தலையங்கத்தில் அறிவித்துவிட்ட நிலையில் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியம் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து தமுஎச மாநில மையம் அறிக்கை வெளியிட்டது. மாநிலம் முழுக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது. சென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் தமுஎச நடத்திய கண்டனக்கூட்டங்களில் தீபம் நா.பார்த்தசாரதி போன்ற மூத்த எழுத்தாளர்கள் பங்கேற்றனர். மக்களிடையே எழுந்த எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கிய எம்ஜிஆர் அரசு வேறுவழியின்றி விகடன் ஆசிரியரை இரண்டே நாளில் விடுதலை செய்தது. ஆனாலும் கருத்துச்சுதந்திரத்தைப் பறிக்கும் அரசின் மூர்க்கம் தணியவில்லை. அச்சு ஊடகத் துறையை அச்சுறுத்தி பணியவைக்க முடியவில்லை என்கிற ஆத்திரத்திலும் அகங்காரத்திலும் எம்ஜிஆரின் கவனம், தான் உருவெடுத்து வளர்ந்த திரைத்துறை மீதே பாய்ந்தது.  மத்திய தணிக்கைக் குழுவிடம் தணிக்கைச்சான்று பெற்று வெளியாகும் ஒரு படம், எம்எல்ஏக்களையோ அமைச்சர்களையோ அவமதிப்பதாக சட்டமன்ற சபாநாயகர் கருதும்பட்சத்தில் அந்தப் படத்திற்கு தடைவிதிப்பதுடன் அதன் இயக்குநர் உள்ளிட்டோரை கைதுசெய்யலாம் என்பதுதான் அந்த மசோதா. 

தங்களது கலைச்செயல்பாட்டின் மீது எம்ஜிஆர் தொடுத்த தாக்குதலை எதிர்க்க திரைத்துறையினரே  தயங்கிக்கிடந்த நேரத்தில் தமுஎச கண்டன அறிக்கை வெளியிட்டதுடன் 1987 ஜூலை 12 அன்று “திரைப்படக் கலைப் பாதுகாப்பு மாநாட்டை” நடத்தியது. பூனைக்கு மட்டுமல்ல அல்ல, புலிக்கும் மணிகட்டும் தீரமிக்கது தமுஎச என்று தெரிந்தவுடன் திரைத்துறையின் முக்கிய ஆளுமைகள் பலரும் மாநாட்டில் பங்கெடுத்தார்கள். அதன் தொடர்ச்சியில் சென்னை உட்பட 24 நகரங்களில் நடந்த உண்ணாநிலைப் போராட்டத்திலும் அவர்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். அந்த சட்ட முன்வரைவு  சட்டமாக்கப்படாமலே திரும்பப்பெறப்பட்டதற்கு தமுஎச ஒருங்கிணைத்தப் போராட்டமே காரணம். 

0 சனாதன சக்திகள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது தாக்குதல் தொடுத்த பொழுது தமுஎகச-வின் கருத்துரிமைக்கான ஆதரவுப் போராட்டம் பற்றி விளக்கவும்.

சாதியமைப்புகளின் செயல்பாடுகளை முடுக்கிவிடும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் படியாகத்தான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் தொடர்பான சர்ச்சை கிளப்பப்பட்டது. 2015 ஜனவரி 12 அன்று அமைதிப் பேச்சுவார்த்தை என பெருமாள் முருகனை தனது அலுவலகத்திற்கு வரைவழைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர், அவரை உளவியல் முற்றுகைக்குட்படுத்தி ஐந்தம்ச  ஒப்பந்தம் ஒன்றுக்கு சம்மதிக்கவைத்தார். அதன் தொடர்ச்சியில்தான் பெருமாள்முருகன் தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக்கொள்ளும் அவலநிலை உருவானது. அவரது அறிவிப்பு கருத்துரிமையில் நம்பிக்கை கொண்ட பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. மாதொருபாகன் நூலினை உயர்த்திப்பிடித்தபடி சென்னை புத்தகக் கண்காட்சியில் உடனடியாகவே கண்டன இயக்கத்தை தமுஎகச நடத்தியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மாதொருபாகன் நூலின் மின்நூல் பிரதி பரவலாக பகிரப்பட்டது. அத்துடன் நில்லாமல், தமுஎகச இப்பிரச்னையை தோழர் ச.செந்தில்நாதன் மூலமாக சட்டரீதியாகவும் எதிர்கொண்டது. 

பெருமாள் முருகனிடம் பலவந்தமாக கையொப்பம் பெறப்பட்ட ஒப்பந்தம், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(அ)படி சட்டவிரோதமானது, அந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கும் படி தமுஎகச சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. 1215/2015 என்ற அவ்வழக்கின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும்  அவதூறுக்குமான வேறுபாட்டை துலக்கப்படுத்தியதுடன் ஒரு கலைப்படைப்பு யாருடைய கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் என்கிற விளக்கத்தையும் கொடுத்துள்ளது. “இலக்கியம் - கலாச்சாரம் போன்ற விசயங்களைத் தீர்மானிப்பதற்கு அரசு, காவல்துறை அதிகாரிகள் சிற்ந்த நபர்களாக இருக்கமாட்டார்கள் என்றும், இத்தகைய விசயங்களை இந்தத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் ஞானத்திற்கம், தேவைப்பட்டால் நீதிமன்றங்களிடமும் விட்டுவிடுவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என்றே சொல்ல விழைகிறோம்”.. “இந்த நூலாசிரியர் பெருமாள் முருகன் பயத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது. அவர் இனி எழுத முடிவதோடு, தனது எழுத்தின் வீச்சை மேலம் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.. தனக்குள் இருந்த எழுத்தாளர் இறந்துவிட்டார் என்ற அவரது சொந்த முடிவு இதற்கு பதிலாக இருக்கமுடியாது. அதுவும்கூட அவர் சுதந்திரமாக எடுத்த முடிவல்ல. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு சூழ்நிலையின் விளைவாகவே அத்தகைய முடிவு எடுக்கப்பட்டது..” என்று விவரிக்கும் தீர்ப்பு “அவர் எதில் சிறந்தவரோ, அதைச் செய்ய, அவருள் இருக்கும் எழுத்தாளர் புத்துயிர் பெறட்டும்” என்று முடியும். கருத்தியல் தளத்தில் செயல்படும் ஒவ்வொருவர் கையிலும் இந்தத் தீர்ப்பு இருக்கவேண்டும் எனக் கருதியே தமுஎகச தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளது. 

0 தமுஎசவின் முக்கிய மாநாடுகள் மற்றும் அதன் தொடர் செயல்பாடுகள்

சமூகத்தில் முன்னுக்கு வருகின்ற பிரச்னைகளின் தீவிரத்தை கணக்கில் கொண்டு அவவ்வப்போது சிறப்பு மாநாடுகளை தமுஎகச நடத்திவருகிறது. அவ்வகையில், சூப்பர் சினிமா தணிக்கைச் சட்டத்திற்கு எதிரான திரைப்படக் கலை பாதுகாப்பு மாநாடு, தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு, நாட்டுப்புறக் கலைஞர்கள் சிறப்பு மாநாடு, தமிழர் உரிமை மாநாடு, மதமாற்றத் தடைச்சட்ட எதிர்ப்பு மாநாடு, கருத்துரிமைப் போற்றுதும் சிறப்பு மாநாடு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு- மொழியுரிமை பாதுகாப்பு மாநாடு, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கல்வி உரிமை மாநாடு, சனாதன ஒழிப்பு மாநாடு என தொடர்ந்து நடத்துகிறோம். இவையல்லாமல், பொதுமுடக்கக் காலத்தில் இணையவழியில் நூற்றுக்கணக்கான கருத்தரங்கங்களை பெருந்திரள் பங்கேற்புடன் நடத்திய அனுபவத்தில் இப்போதும் கூட தேவை கருதி அவ்வாறு நடத்துகிறோம். 

தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி மாநில அளவில் பல்வேறு இயக்கங்களை நடத்திய தமுஎகச, இக்கோரிக்கையின் மீதான அழுத்தத்தைக் கூட்டும்பொருட்டு, பெருந்திரளுடன் டெல்லிக்குப் போய் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்தப் பேரணியை நடத்தியது. 

சமூகம் நமக்குள் திணித்துள்ள பொதுப்புத்தியிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும்முகத்தான் அம்பேத்கரியம் அறிவோம் பயிலரங்கு, சங்க இலக்கியப் பயிலரங்கு, பாலினச் சமத்துவம் அறிதல் அரங்கு, சிறுபான்மையினர் வாழ்வியல் புரிந்துணர்வு முகாம், புனைவுலகும் புறவுலகும் முகாம், சிந்துவெளிப் பண்பாடு பயிற்சி முகாம் என தொடர்ந்து முகாம்களை நடத்தி தமுஎகச ஊழியர்களின் கருத்துலகத்தை காலப்பொருத்தமுள்ளதாக்குகிறோம். 

தமுஎகச எழுத்துமேசையிலோ புத்தகத்திற்குள்ளோ தலையைக் கவிழ்த்துக் கொண்டு சமூக நடப்புகளை கண்டும்காணாமல் இருப்பவர்களின் அமைப்பல்ல. மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் நான்கு ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவொட்டாமல் சாதியவாதிகள் தடுத்துவந்த நிலையில் அந்த ஊர்களுக்குப் போய் தேர்தலை நடத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு பரப்புரை செய்தோம். மதுரையில் போராட்டமும் நடத்தினோம். தென் மாவட்டங்களில் முனைப்படைந்து வந்த சாதிய மோதல்களுக்கெதிராக 6 நகரங்களில் நடத்திய பட்டினிப் போராட்டம், அந்நேரத்தில் நடந்த முக்கியமான தலையீடாகும். 

0 தமுஎச-வின் பெயர், அதன் இலச்சினை விரிவாக்கப். பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்துப் பதிவிடுக!

எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்குமானது என்கிற புரிதலுடன்தான் 1975ஆம் ஆண்டு தமுஎச தொடங்கப்பட்டது. எனினும் பெயரிலும்கூட அந்த உள்ளடக்கியத்தன்மை வெளிப்பட வேண்டும் என்கிற நோக்கில் 2008 ஆம் நடைபெற்ற 11ஆவது மாநில மாநாட்டில் அமைப்பின் பெயரில் கலைஞர்களையும் சேர்த்து “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்” என்றானது. 

0 பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய ஆளுமைகளை மக்களிடம் கொண்டு செல்லத் தமுஎகச ஆற்றிய பணிகள்.

சங்கம் தொடங்கிய காலத்தில் நெருக்கடிநிலை நிலவிய சூழலில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரது படைப்புகளை முன்வைத்து ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டக்குணம், விடுதலையுணர்வு, பகுத்தறிவு மற்றும் பொதுவுடமைக்கருத்துக்கள் ஆகியவற்றைப் பேசுவதற்குமான வாய்ப்பாக தோழர்கள் பயன்படுத்தியுள்ளனர். இம்மூவருக்குமான விழாக்கள் ஆண்டுதோறும் நடக்கின்றன. அமைப்பின் முன்னோடிகளாக இவர்களை ஏற்பது இயல்பாக நடந்தேறியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து உலகளாவியப் பார்வையால் தமிழில் முற்போக்கு இலக்கியத்திற்கு பெரும்பங்காற்றிய தோழர் தமிழ்ஒளியையும், சமூகத்தடைகளைத் தாண்டி நாட்டியக்கலையில் அருஞ்சாதனைகள் புரிந்த பாலசரஸ்தியையும் கடந்த மாநாட்டின்போது இணைத்து ஐம்பேராளுமைகள் என்றாக்கிக்கொண்டோம். 

 0 கவிஞர் தமிழ்ஒளி குறித்த தமுஎகச அமைப்பின் முன்னெடுப்புகள்...

தமிழ்ப் பண்பாடு, தமிழர் நலன், பகுத்தறிவு, பொதுவுடமை நோக்கிய சமூக மாற்றம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து படைப்பிலக்கியத்திலும் கருத்தியல் தளத்திலும் களத்திலும் செயல்பட்டவர் தோழர் தமிழ்ஒளி. சாதிய ஒடுக்குமுறை, வேதப்பண்பாடு மற்றும் இந்தியின் ஆதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றுக்கெதிரான அவரது நிலைப்பாடுகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கி அதன் முதல் செயலாளராகவும் இருந்தவர் என்ற முறையில் அவர் தனது நண்பருக்கு எழுதிய கடிதம் ஒரு கொள்கையறிக்கைக்கு நிகரானது. எனவே அவர் பாரதி, பாரதிதாசன், வரிசையில் வைத்துப் போற்றப் பட வேண்டியவர். அவரது பிறந்த நாளையும் நினைவு நாளையும் அரசு நிகழ்வாக நடத்தவேண்டும் என்று புதுச்சேரி மாநில அரசை இணங்கவைத்து சாத்தியப்படுத்தியதில் புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு தீர்மானகரமான பங்குண்டு. தமிழ்ஒளியின் நூற்றாண்டு தொடங்குவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே நூற்றாண்டு விழாக்குழுவை அமைத்து அதனூடே தொடர்ச்சியாக அவரது படைப்புகளை வெகுமக்களிடையே கொண்டு செல்வதற்கு தமுஎகச தோழர்கள் உள்ளுறையாக இருந்தியங்கினர். தமிழ்ஒளி நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது, அவருக்கு தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிலை வைப்பது, அவருடைய படைப்புகளை மாணவர்களிடையே பரப்புவதற்கு நிதி ஒதுக்கீடு என்கிற முடிவினை தமிழ்நாடு அரசு மேற்கொண்டதற்குப் பின்னே தமுஎகச உருவாக்கிய தாக்கமும் ஒரு காரணம்.   

0 நாட்டுப்புறக் கலைகளைப் பேணி வளர்ப்பதில் தமுஎகசவின் பங்களிப்புப் பற்றிக் குறிப்பிடுக!

தமுஎகச திருவண்ணாமலை தோழர்கள் உருவாக்கிய கலை இரவு என்கிற கொண்டாட்டம் பெரிதும் நாட்டுப்புறக்கலைகளையே மையப்படுத்தியிருந்தது. ஆயிரக்கணக்கான மக்களிடையே பெரும் மேடையில் நிகழ்த்திக்காட்டப்பட்ட இக்கலைவடிவங்களுக்கு மக்கள் காட்டிய ஈடுபாடும் ஆரவாரமும் அந்தக் கலைஞர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கின. கலை இரவு மாநிலம் முழுவதும் பரவியபோது அந்தந்த வட்டாரத்தின் வாழ்வியலோடு தொடர்புடைய நாட்டுப்புறக் கலைவடிவங்கள் கவனப்படுத்தப்பட்டன. தமுஎகச தவிர்த்து வேறுபல அமைப்புகளும் கலை இரவு வடிவத்தைக் கைக்கொண்டு நடத்துகிறார்கள். 

நாட்டுப்புறக் கலைஞர்கள் முழுநேரமாக இயங்கமுடிவதில்லை. அவர்கள் வாழ்வாதாரத்திற்காக வேளாண் கூலிகளாகவும் வேறுபல தொழில்களில் முறைசாரா தொழிலாளிகளாகவும் தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது. வாழ்வாதாரம் சார்ந்த தீராக்கவலையுடன் மனநிறைவற்ற நிலையில் கலைப்பணியும் ஆற்றுகின்றனர். நாட்டுப்புறக் கலைஞர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தமுஎகச சிறப்பு மாநாடும் பேரணியும் நடத்தியதன் பேரில் திமுக அரசு நாட்டுப்புறக்லைஞர்கள் நலவாரியத்தை அமைத்தது. அடுத்துவந்த அதிமுக அரசு அந்த வாரியத்தைக் கூட்டாமலே முடக்கிப் போட்டது. கொரானா பொதுமுடக்கக் காலத்தில் நாட்டுப்புறக்கலைஞர்கள் எங்கும் நிகழ்ச்சி நடத்த வழியற்று வாழ்வாதாரம் இழந்திருந்த நிலையில் தமுஎகச மூலமாக மாநிலம் முழுக்க அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தோம்.  இணையவழியில் அவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மாநாட்டில் அப்போதைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் பங்கேற்று சில வாக்குறுதிகளை அளித்தார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அதேபோல் நடத்திய மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று நம்பிக்கையளித்தார். நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் உயிர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அவர்களது தேவைகளை நிறைவு செய்யக் கூடிய நிலையில் வாரியம் இல்லை. வாரியத்திற்கு ஒதுக்கப்படும் சொற்ப நிதியை வைத்துக்கொண்டு மாநிலத்தில் உள்ள ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நிகழ்த்துக் கலைஞர்களுக்கு குண்டூசிகூட வழங்க முடியாது. நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர்வது முதற்கொண்டு ஐநூறு ஆயிரம் என்ற  அற்பத்தொகையை நிவாரணமாகப் பெறுவது வரைக்குமாக அவர்களை அலைக்கழிக்கும் அலுவலக நடைமுறைகளில் தீவிரமான மாற்றங்கள் தேவை. கலைஞர்களை இரவலர்கள் போல நடத்தும் நிலை சமூகத்தில் இருப்பது போலவே அரசுத்துறைகளிலும் இருப்பதை மாற்றுவதற்கு கலை பண்பாட்டுத் துறையும் வாரியமும் கலை இலக்கிய அமைப்புகளுடன் இணைந்துச் செயல்பட முன்வருவதுதான் இதற்கு ஓரளவுக்குத் தீர்வாக இருக்கமுடியும்.  

0 சாதி ஒழிப்பு மற்றும் மகளிர் விடுதலை குறித்த தமுஎகசவின் தொடர் செயல்பாடுகள்.

சாதியொழிப்பின் உடனடி சாத்தியங்கள் பற்றிய விவாதங்கள் ஒருபுறமிருக்க, அதற்கும் முன்னதாகவே ஒவ்வொரு தனிமனிதரும் தன்னளவில் சிந்தனை மற்றும் செயல்பூர்வமாக சாதியை மறுத்து வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதை தமுஎகச தோழர்கள் தவறவிட்டுவிடக்கூடாது. சாதியாதிக்க, மதவாத அமைப்புகளில் இணையக்கூடாது. சனாதன, சாதியக் கருத்துகள் எவ்வடிவில் வெளிப்பட்டாலும் எதிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் உறுப்பியம் வகிப்பது இந்நோக்கில்தான். இங்கே நிலவும் பாலினப்பாகுபாட்டிற்கும் ஒடுக்குமுறைக்கும் சாதியமே அடிப்படையாக இருக்கிறது. சாதியம் இங்குள்ள பொருளியல் உறவுகளுடனும் பின்னிப்பிணைந்திருக்கிறது. எனவே ஓர் ஒருங்கிணைந்தப் பார்வையும் போராட்டமும் தேவை. அது நடந்தால் இதெல்லாம் மாறிவிடும் என்று சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்காமல், தமுஎகச தோழர்கள் ஆணாதிக்கக் கண்ணோட்டம் துறந்தவர்களாகவும் பாலினச் சமத்துவம் பேணக்கூடியவர்களாகவும் பெண்களும் மாறும் பாலினத்தவரும் தமக்குரிய பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு துணைநிற்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்று அமைப்பு வலியுறுத்துகிறது. ஆனால் இந்த நிலைப்பாடுகளை தோழர்கள் அனைவரும் மனமார ஏற்றுச் செயல்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. அதற்காக அவர்கள் தம்மளவில் தயாராவதற்கான முயற்சியை இடைவிடாது நடத்த வேண்டியுள்ளது.

அமைப்பின் கிளை முதல் மாநிலம் வரை குறைந்தபட்சம் 20% நிர்வாகிகள் பெண்களாக இருக்க வேண்டும், பெண்கள் பங்கேற்கும் விதமாக அமைப்பின் நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும், பெண்கள் கலை இலக்கியச் செயல்பாடுகளில் தமக்குள்ள தடைகளைக் கடக்க  உதவுதல், பாலியல் தொந்தரவுகள் எவ்வடிவில் வெளிப்பட்டாலும் நடவடிக்கை என்பதில் அமைப்பு உறுதியாக இருக்கிறது.  

0 தமுஎகச-வின் விருதுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய விவரங்களைத் தொகுத்தளிக்கவும்.

எழுத்திலக்கியத்தின் பல்வேறு வகைமைகளில் வெளியாகும் நூல்களுக்கென 11 விருதுகள். நாடகச்சுடர், இசைச்சுடர், நுண்கலைச்சுடர், நாட்டுப்புறக் கலைச்சுடர், பெண் படைப்பாளுமை என ஐந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. 10 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுப் பட்டயம் ஒவ்வொரு விருதுக்கும் வழங்கப்படுகிறது. முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்புச் செய்த ஆளுமைக்கான விருது ஒருவருக்கு வழங்கப்படுகிறது. விருதுத்தொகை ஒரு இலட்சம் ரூபாய். ஆண்டுதோறும் ஒரு குறும்படத்திற்கும் ஒரு ஆவணப்படத்திற்கும் மூன்று திரைப்படங்களுக்கும் விருதளிக்கப்படுகிறது. இவ்விருதுகள் அனைத்தும், தமுஎகச மீது ஈடுபாடுள்ள தோழர்களால் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ள தொகையை வங்கியில் வைப்புநிதியாக வைத்து அதிலிருந்து வழங்கப்படுவதாகும். 

விருதுக்குரிய நூல்கள் படங்கள் ஆளுமைகள் பற்றிய கருத்தரங்கம் பகலிலும் மாலையில் கலை இரவு பொதுமேடையில் விருதளிப்பும் நடக்கும். விருதுபெற்ற நூல்கள் தமுஎகசவின் வாசிப்பு இயக்கம் மூலம் பரவலாகக் கொண்டுசெல்லப்படுகின்றன. 

0 தமுஎகச-வின் பொன்விழா ஆண்டின் செயல்திட்டம் பற்றித் தெளிவாக்கவும்.

வெறுப்பின் கொற்றம் வீழ்க, அன்பே அறமென எழுக என்கிற முழக்கத்துடன் அடுத்த மூன்றாண்டுகளுக்கு எமது கலை இலக்கிய, களச் செயல்பாடுகள் அமையும். தமுஎகச நிகழ்ச்சி நடக்காத நாளே தமிழ்நாட்டில் இல்லை என்கிற அளவுக்கு கருத்துலகத்தில் இயங்கிவரும் தமுஎகச காலத்தின் தேவையை நிறைவு செய்வதில் இன்னும் தீவிரமாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டியுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்: தோற்றமும் செயல்பாடும் - ஆதவன் தீட்சண்யா

தோழர் கண.குறிஞ்சி அவர்கள் வெளியிட்டுவரும் "புதுமலர்" காலாண்டிதழின் 2025 அக்டோபர் - டிசம்பர் இதழில் வெளிவந்துள்ள நேர்காணல். 0  தமிழ...