தொழிற்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழிற்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், டிசம்பர் 10

அடுத்த கதை...? - ஆதவன் தீட்சண்யா



உங்களில் ஒருவரும் அறிந்திராத ஜக்லால் என்கிற இளந்தொழிலாளியை நானறிவேன். அறிவேன் என்றால் ஆதியோடந்தமாக அல்ல, முதலும் கடைசியுமாக ஒருமுறை பார்த்தது தான். அப்போதிருந்தே அவன் எனக்குள் தீராத தொந்தரவாகி எழுதத் தகுந்த கருப்பொருளாக உருப்பெற்று வந்திருக்கிறான். என்றாலும் அப்படி எழுதுவற்கு அவனைப் இன்னும் மேலதிகமாய் அறியவேண்டியிருந்தது. ஆனால் அது அப்படியொன்றும் எளிதெனத்  தெரியவில்லை.

அவனோடு ஒன்றாக வேலை பார்த்து, ஒரே ஷெட்டிலும் பின்பொரு லைன்வீட்டிலும் தங்கியிருந்த தொழிலாளர்கள் சிலர் இருப்பதாக தெரியவந்ததும் அவர்களிடம் விசாரிக்கப் போயிருந்தேன். பொதுவாக போலிஸோ, இதற்கு முன்பு வேலை பார்த்த கம்பனிக்காரர்களோ தான் ஏதாவது புகாரின் பேரில் இப்படி பையன்களை தேடிவருவார்களாம். அவர்கள் எல்லோரையும் நடுங்க வைத்த அச்சத்தின் கூட்டுக்குரல் போல ஒருவன் “ஏதும் பிரச்னையா சார்” என்றான். “அதெல்லாமில்லை, இந்த ஐ.டி.கார்டு வழியில கிடைச்சது. யாருதுன்னு விசாரித்து கொடுத்துட்டுப் போகலாம்னு... ”

“டைனமிக் மேன்பவர் சப்ளையர்ஸ்” என்கிற வேலையாள் ஒப்பந்த நிறுவனத்தின் முத்திரை பொறித்த அடையாள அட்டை அது. அதிலிருந்த ஆணின் புகைப்படத்தை உற்றுப்பார்த்த அவர்களில் சிலர் இப்படி ஒருவனை பார்த்ததாகவே நினைவில்லை என்றார்கள். ஆனால் அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஜக்லால் என்கிற பெயரில் ஒருவன் முன்பு எப்போதோ இங்கு தங்கியிருந்ததாகவும், ஜக்லால் என்று தன்னை யார் அழைத்தாலும் வேறு யாரையோ விளிப்பதாக மலங்கமலங்க வேடிக்கைப் பார்த்தபடி கடப்பான் என்றும் தாங்கள் கேள்விப்பட்டதை நினைவுகூர்ந்தார்கள். “ஏன், அவன் பேர் ஜக்லால்தானே” என்றேன். “இருக்காது” என்றான் ஒரு தொழிலாளி.

பொதுவாகவே எந்த ஒப்பந்ததாரனும் வேலையாட்களின் உண்மையான பெயரை அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் பதியவிடுவதில்லை. வேலை நிரந்தரமோ பணியிட அசம்பாவிதங்களில் பாதிப்புக்குள்ளாகிற போது நஷ்டஈடோ கேட்டு யாரும் சட்டச்சிக்கல் செய்தால் லகுவாக தப்பித்துக் கொள்ளவே இப்படி போலியான பெயர்களில் அவர்களைப் பதிவு செய்கிறார்கள். தொழிலாளர் நலத்துறையும் இந்த மோசடிக்கு உடந்தை. மீறி கேட்டால் “கவர்மென்ட் பாலிசியே அப்படிதான், மூடிக்கிட்டு வேலையப் பாருன்னு மிரட்டினால் நாங்கள் என்ன செய்யமுடியும்” என்று புலம்பினார்கள். பதிவேட்டின்படி தங்களுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதையே நினைவில் வைத்துக்கொள்ளாத பலரும் அங்கிருந்தனர். தவிரவும், இங்கு பெயருக்கென ஏதும் தேவையிருக்கிறதா என்று என்னையே கேட்டார்கள்.

ஜக்லால் பற்றி தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசமுயன்றது வீண்வேலைதான். அவர்களைப் பொறுத்தவரை, தங்களுக்கும் இந்த வேலையாட்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று உதட்டைப் பிதுக்கியதே பெரிய விசயமாக இருந்தது. வேலையாட்களை விநியோகிக்கிற ‘டைனமிக் மேன்பவர் சப்ளையர்ஸ்’ நிறுவனத்துக்கும் தங்களுக்கும்தான் ஒப்பந்தமேயொழிய எந்தவொரு வேலையாளுடனும் நிர்வாகம் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்வதில்லை என்கிற பதிலைப் பெறுவதற்கே நான் நாலைந்து தடவை அங்கு அலைய வேண்டியதாயிற்று. 

தொழிற்பேட்டைக்குச் செல்லும் பிரதானச்சாலையின் வலப்புறத்தில் வாடகைக்கட்டடம் ஒன்றில் இயங்கிவரும் ‘டைனமிக் மேன்பவர் சப்ளையர்ஸ்’ என்கிற நிறுவனமே ஒரு தொழிற்சாலையைப் போல பரந்துவிரிந்ததாக இருந்தது. ஆமாம், அதை ஒரு தொழிற்சாலை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அங்கு தொழிலாளர்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள். பின்பு எல்லா இயந்திரங்களையும் உயிர்ப்பித்து உற்பத்திகளையும் செய்து குவிப்பதற்காக தொழிற்பேட்டையின் பலபாகங்களுக்கும் பிரித்தனுப்பப்படுகிறார்கள்.

அவ்வாறு இம்மாதம் 13ம் தேதி ஜிக்மா பார்மா என்கிற தொழிற்சாலைக்கு பிரித்தனுப்பப்பட்டவர்களில் ஒருவனான இந்த ஜக்லால் பற்றி விசாரிப்பதற்காக நான் ‘டைனமிக் மேன்பவர் சப்ளையர்ஸ்’ அலுவலகத்திற்குப் போனபோது ஒரு வடஇந்திய கிராமத்திற்குள் நுழைந்துவிட்டது போலிருந்தது எனக்கு. திரும்பிய பக்கமெல்லாம் வடஇந்திய முகங்கள். ‘வட இந்தியர்’ என்பதைவிடவும் ‘தென்னிந்தியரல்லாதார்’ என்பதே பொருத்தமான பொதுப்பெயராக இருக்கமுடியும். அதனுள்ளே மேற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்களும் கணிசமாய் இருந்தார்கள். தொழிற்பேட்டைக்கு அருகாமையிலிருந்த பெருநகரத்திற்கு ரயில்முலம் நள்ளிரவில் வந்துசேர்ந்த அவர்கள் பிளாட்பாரத்திலேயே படுத்திருந்து விட்டு அதிகாலையில் பஸ்பிடித்து இங்கு கூட்டமாக வந்து இறங்கியிருந்தார்கள். ஜக்லாலும் இப்படித்தான் வந்திறங்கியிருக்கக்கூடும்.

பசப்பலான வார்த்தைகளைக் கூறி கங்காணிகள் மூலம் வஞ்சகமாகத் திரட்டி வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட காலனியாட்சிக்கால கொத்தடிமைக்கூலிகளின் மங்கிய சித்திரத்தை நினைவூட்டும் விதமாக இருந்த அவர்களில் அனேகருக்கும் பதினாறிலிருந்து இருபதுக்குள்தான் வயதிருக்கும். தலை காய்ந்த, மெலிந்த, கண்கள் ஒடுங்கிய, ஏதோவொரு புகையிலை வஸ்துவை வாயிலிட்டு குதப்பியபடி காணப்பட்ட அவர்கள் எல்லோர்மீதும் நீண்டபயணத்தின் அலுப்பும் சலிப்பும் ரயிலின் வீச்சமும் கவிந்திருந்தன. தங்களது பயணம் இன்னும் முடியவில்லை என்பது போல அவர்கள் ஒருவிதமான ஆயத்த நிலையிலேயே இருப்பதாக எனக்குத் தெரிந்தார்கள். எப்போது வேண்டுமாயினும் எங்காவது கிளம்பிப்போக வேண்டியிருக்கும். பஸ், ரயில் என ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறிமாறி இங்கு வந்து இப்போதைக்கு இறங்கியிருக்கிறார்கள். குந்தியிருந்த அவர்களில் ஜக்லாலின் குடும்பத்தினர் வேறெவராவதும்கூட இருக்கக்கூடும்.

சப்ளையர்ஸின் மேலாளன் அவ்வளவொன்றும் நல்முகமாக என்னை வரவேற்கவில்லை. சட்டென என்னை அடையாளம் கண்டுகொண்டுவிட்ட அவன் அதைக் காட்டிக்கொள்ளாமல் எதிரில் உட்காரவைத்துவிட்டு, ஆனால் என்னோடு பேசுவதை தவிர்ப்பதற்காகவோ தள்ளிப்போடவோ, புதிதாக வந்திருப்பவர்களுக்கான கட்டளைகளை அறிவுரைபோல பிறப்பிக்கத் தொடங்கினான். நான் வித்தியாசமாக கருதிவிடக்கூடாதென்றோ என்னவோ அவனது குரலில் செயற்கையானதொரு கனிவு சேர்ந்திருந்தது. அது அழுகிய பழமொன்றின் அழுகாத சிறுபாகம் போன்ற காட்சியாகத் தோன்றி குமட்டியது எனக்கு. இந்தியில் மிகவும் சரளமான அவனது பேச்சு ஓரக்கண்ணால் என்னைப் பார்க்கும் போதெல்லாம் தடுமாறியது. நான் கேட்கப்போகும் கேள்விகள் என்று அவனாக சிலவற்றை யூகித்துக்கொண்டு அவற்றுக்கான பதில்போல பேசிக்கொண்டிருந்தான். “பணம் இன்னிக்கு வரும் நாளைக்குப் போகும், உடம்பும் உசுரும்தான் முக்கியம். அது இருந்திட்டா எப்ப வேணும்னாலும் எவ்ளோ வேணும்னாலும் சம்பாதிச்சிக்கலாம். ஷேப்டிதான் பர்ஸ்ட். உங்க ஒவ்வொருத்தர் குடும்பத்துக்கும் பதில் சொல்வது என் பொறுப்பா இருக்கு, புரியுதா?”

ஆனால் அவன் சொல்லிக்கொண்டதைப்போல அப்படியொன்றும் பாதுகாப்பாக வேலை செய்வதற்கென அவர்கள் இங்கு கொண்டு வரப்படவில்லை என்பதற்கு ஜக்லால்தான் பொருத்தமான சாட்சி. அங்கச்சேதமும் உயிரிழப்பும் எப்போதும் நிகழலாம் என்கிற கெடுநிலையில் பணிசெய்யவே அவர்கள் அழைத்துவரப்படுகின்றனர். முறையான படிப்போ பயிற்சியோ இல்லாமல் கண்பார்த்தால் கை செய்யும் என்கிற நம்பிக்கையில் ஆபத்தான பல வேலைகளை அவர்கள் அன்றாடம் செய்து மடிந்தார்கள். 

ஜக்லால் என்றொருவன் தங்களது ஆள்பட்டியலில் இல்லவே இல்லை எனச் சாதித்தான் மேலாளன். பெரியபெரிய பதிவேடுகளைக் காட்டி தன் வாதத்தை நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். பிறகு கணினியில் தீவிரமாக எதையோ தேடுவதுபோல போக்குக் காட்டினான். சட்டைப்பையில் வைத்திருந்த துண்டுச்சீட்டுகளையெல்லாம் எடுத்து மேசையின் மீது பரப்பி ஒவ்வொன்றாக உற்றுப்பார்த்து கசக்கிப் போட்டான். சுபாவத்துக்கு ஒம்பாத பொறுமையுடன் அவனது சேட்டைகளைக் கவனித்துக்கொண்டிருந்த நான் ஒருகட்டத்தில் இடைமறித்து “என்னிடம் உள்ள ஆதாரத்தை வேண்டுமானால் தரட்டுமா” என்றேன். “வெளியே போய் பேசுவோமே” என்றான் அவன்.

“வெளியே என்றால் எங்கே?”
“எங்க ஓனரோட ஃபார்ம் அவுசுக்குப் போவமா?”
“ஓ... எங்கே... ”
....
“ரொம்ப தூரமாச்சே... ”
“சரி, இங்கே பார்டர்ல எங்காச்சும்...?”
“ம். ”

ஆளோட்டம் அருகிப் போயிருக்கும் அந்த இடத்தை நான்தான் தேர்வு செய்து அவனை அழைத்து வந்திருந்தேன். அவன் சொல்லும் இடத்திற்கு நம்பிப் போகலாமா என்கிற சஞ்சலத்தில் நானாக முந்திக்கொண்டு சொன்ன இந்த இடத்தை அவன் எவ்வித யோசனையுமின்றி உடனே ஒப்புக்கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஜக்லால் தொடர்பாகப் பேச நான் எங்கு கூப்பிட்டாலும் வந்துவிடச் சித்தமாக அவன் இருந்தான் போல. ஆனால் எனக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பதாக நான் நினைத்துவிடக்கூடாது என்பதற்காக சற்றே அசட்டையான தொனியில் இருந்தது அவனது பேச்சு.

உள்ளூரில் ஆள் தட்டுப்பாடு, வடமாநிலங்களில் இருந்து ஆட்களைத் திரட்டும் உத்திகள், அதிலுள்ள இடர்ப்பாடுகள், அழைத்து வருவதிலும் வேலைக்கு அமர்த்துவதிலும் பணியிடங்களில் சுமூகநிலையைப் பேணுவதிலும் கையாளும் முறைகள், எதிர்பாராத செலவினங்கள், முறைகேடுகளை மறைப்பதற்கு கொடுக்கப்படும் லஞ்சம் என்று அவன் பெரிய முறைப்பாட்டு பட்டியலை என்முன்னே விரித்துவைத்தான். அவன் சொன்ன இவ்வளவு விசயங்களில் எனக்கு தேவைப்பட்டதோ நான் எதிர்பார்த்ததோ ஒரு சொல்லுமில்லை. ஒருகட்டத்தில், கூடுதலாகப் பேசுகிறோமோ என்று அவனுக்கே தோன்றியிருக்கும்போல, சட்டென நிறுத்திக்கொண்டான். “அய்யோ நீங்க ஏதோ கேட்க வந்ததை மறந்துட்டு நான் என்னோட கோடுகொடுமையை சொல்லிக்கிட்டிருக்கேன்” என்று என் முகத்தைப் பார்த்தான். “சொல்லுங்க சார், என்னமோ லால்னு ஒரு பையனைப் பத்தி ஏதோ கேட்டீங்கில்ல... ”

“என்னமோ லாலா, ஜக்லால்...”

“சார், நீங்களே பாத்தீங்கில்ல, அன்னாடம் வண்டிவண்டியா வந்து இறங்குற இத்தனைப் பேர்ல எந்தப் பையனை ஞாபகம் வச்சுக்க முடியும்?”

“கொஞ்சம் வெளிப்படையா பேசுங்க, ஞாபகம் வச்சுக்காம அதுக்குள்ள மறந்துபோகும் அளவுக்கானவனா ஜக்லால்? ”

“என்னை வெளிப்படையா பேசச்சொல்லிட்டு நீங்கதான் சார் மூடுமந்திரமா பேசுறீங்க. எந்த

“ஜக்லால்... எந்த ஸ்பாட்ல வேலை பார்த்தவன்? ”
“ஜிக்மா பார்மா...”

“அந்தக் கம்பனிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல சார். ”
“தெரியும், அந்தக் கம்பனி பேர்ல நீங்க ஆள் அனுப்புறதில்ல. ஆனால் அதே காம்பவுண்டுக்குள்ள  மைக்ரோ பார்மசூட்டிகல்ஸ்னு வெறும் போர்டு தொங்குதே, அந்தக் கம்பனி பேருக்கு ஆட்களை அனுப்புறீங்க. ஆனால் வேலை இந்தக் கம்பனியில.”

அவன் பதிலேதும் பேசாமல் இருந்தான். பிறகு, “எந்தப் பேர்ல இன்டென்ட் கேட்குறாங்களோ அந்தக் கம்பனிக்கு நாங்க ஆட்களை அனுப்புறோம் சார். நீங்க சொல்ற இந்த உள்விசயமெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது சார்.”

“ஆனால் அன்னிக்கு ஆஸ்பத்ரில...?”

“சார், மெடிகல் கேஸ் ஏதாச்சும்னா கவனின்னு ஹெட்டாபீஸ்லருந்து தகவல் வரும். அப்படி
எதுக்காவது வந்திருப்பேன்...”

“மத்தபடி உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லேன்றீங்களா?”

ஆமாம் என்பதே அனாவசியம் என்பதுபோல அவன் வேறுபக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். பதற்றம் நிறைந்த அவனது முகத்தை நான் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவும் கூட அவன் அப்படி திரும்பி நின்றிருந்திருக்கலாம். நேருக்குநேர் முகத்தைப் பார்க்கத் தவிர்க்கும் இந்தத் தருணம்தான் சரியானது என்று தோன்றியது. “சரி, அந்தப் பையன் பற்றி இதுவரைக்கும் நான் எழுதியிருப்பதை படிச்சுப் பார்க்கிறீங்களா, உங்களுக்கு ஒருவேளை ஞாபகம் வரும்” என்று அவனிடம் தாள்களை நீட்டினேன். என்பக்கமாக திரும்பிய அவன் என் முகத்தைப் பார்க்காமலே கண்தாழ்த்தி அவற்றை வாங்கிக்கொண்டான்.

***

அதுவொரு ஞாயிற்றுக்கிழமை. தொழிற்பேட்டையின் வாரவிடுமுறை. ஆள்நடமாட்டம் மந்தமான  பிற்பகல்வேளை. பார்டருக்குப் போய் தண்ணியடித்துவிட்டு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி காயங்களுடன் தூக்கிவரப்பட்ட இருவரைத் தவிர வேறு நோயாளிகள் யாரும் இல்லை. அவர்களுக்கான சிகிச்சையை முடித்து வீட்டுக்கு கிளம்பும் வேளையில்தான் அந்த ஆம்புலன்ஸ் வந்தது. யாருடைய கவனத்தையும் ஈர்த்துவிடக்கூடாது என்கிற கவனத்தில் சைரன் சத்தமின்றி பூனையைப்போல வந்து நின்ற அந்த வண்டியிலிருந்து பாலிதீன் உறைகள் இரண்டு இறக்கப்பட்டன. ஒன்றில், மனித உடலின் எந்தப்பகுதி என்று சொல்லிவிட முடியாதபடி கொத்தி கூறு போட்டது போல சதைக்குவியல். இடுப்புவரை துண்டிக்கப்பட்ட இரண்டு கால்கள் மற்றொன்றில். இடுப்பு வரையிலும் இதில் இருந்ததனால் முந்தைய உறையில் இருந்தது கால்களைத் தவிர்த்த எஞ்சிய பகுதி என யூகிக்க முடிந்தது. மருத்துவரும் நானும் இன்னபிற பணியாளர்களும் இந்தக் கொடூரமான காட்சியைக் கண்டதனால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தத்தளித்தோம். எப்படி ஆயிற்று என்பது போல மருத்துவர் உடன் வந்த ஆட்களையும் காவல் ஆய்வாளரையும் பார்த்தார்.

காவல் ஆய்வாளரை சரிக்கட்டி கூட்டிவந்திருப்பார்கள் போல, அவர் மருத்துவரை தனியே அழைத்தார் பேசி முடித்துக்கொள்ள. மருத்துவர்தான் என்னையும் உடனழைத்துப் போனார். போஸ்ட் மார்ட்டம், ரிப்போர்ட் அதுஇதுவென என் தயவு தேவை என்பதால் ஆய்வாளன் நான் உடனிருப்பதை ஒன்றும் சொல்லவில்லை. “ஜிக்மா பார்மாவுக்குள் ஆக்சிடென்ட். மருந்து மாத்திரை செய்ற ரா மெட்டீரியல் பெரியபெரிய கட்டியா வருமாம். அதை சீவி அரைச்சு மாவாக்குற மிஷினுக்குள்ள விழுந்திருக்கான். இன்டிமேஷன் வந்ததுமே ஸ்பாட்டுக்குப்  போயிட்டேன். வாரி வழிச்சு எடுத்துக்கிட்டு வர இவ்ளோ நேரமாயிடுச்சு.”

தான் சொன்னதை மருத்துவர் நம்பவில்லை என்று நினைத்தோ என்னவோ அந்தாள் மேற்கொண்டும் சொன்னார். விபத்து நடக்கும்போது உடனிருந்து பார்த்தது போன்ற தோரணையில் இருந்தது அவரின் விவரணை. “இந்தப் பையன் யார்னு பிளாண்ட்டுல யாருக்குமே தெரியல. வேறெங்கோ இருந்து ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் இங்க வந்திருக்கான்.  அதிலும் இன்னிக்கு சிக்கிக்கிட்ட மிஷின்ல ரெண்டு நாளாகத்தான் வேலை பார்த்திருக்கிறான். கலவை கலக்குற மிக்ஷர் மாதிரியான மிஷின், அதுக்குள்ள ஆறு பிளேடு. ரெண்டு பெரிய கொப்பரைக் கிண்ணங்கள ஒன்னுமேல இன்னொன்னை பொருத்தி மூடினா எப்படி இருக்கும்? அந்த மாதிரி இருக்கு. ஓடிக்கிட்டிருந்த மிஷின் திடீர்னு எதனாலயோ நின்னுப் போயிருக்கு. இந்த முட்டாப்பய சூபர்வசைர் யார்க்கிட்டயாவது சொல்லியிருந்தா தப்பிச்சிருப்பான். இவன் கவனமில்லாம தானே திறந்து கீழ் கிண்ணத்து மேல கவுந்து நல்லா அழுத்திக்கிட்டு உள்ளுக்குள்ள குனிஞ்சு எதையோ நோண்டியிருக்கான். உடம்பு எடை அழுத்தினதாலயா இல்ல வேற என்ன காரணமோ, தடைபட்டிருந்த மிஷின் சுத்த ஆரம்பிச்சிருக்கு. பிடிமானமில்லாம படார்னு அடிச்சு மூடியிருக்கு மேல் கிண்ணம். அந்த வேகத்துல உடம்பு முழுக்க துண்டாகி உள்ளுக்குள்ள சிக்கிருச்சு. கால்பகுதி மட்டும் துண்டாகி வெளிய விழுந்திருக்கு. வித்தியாசமான சத்தம் கேட்டு மத்த ஆளுங்க ஓடிவந்து மிஷினை நிறுத்துறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிப் போச்சு. அவ்வளவு பெரிய மருந்துக்கட்டியவே தூள்தூளா சீவிக் கொட்டுற பிளேடுக்கு மனுச உடம்பு சிக்கினால் என்னத்துக்காகும் டாக்டர்? எல்லாம் விதி...”

“இதில் அவன் விதின்னு என்ன இருக்கு? மற்ற எல்லாரும் செய்த விதிமீறல்கள்தான் அவனை கொன்னிருக்கு”. மருத்துவர் இப்படி சொல்வாரென எதிர்பார்க்காத ஆய்வாளர் சற்றே தடுமாறிப் போனார். “நமக்கென்ன டாக்டர், பி.எம். முடிச்சமா பாடியை கொடுத்தமான்னு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான். மற்றதையெல்லாம் நாம் பேசி என்ன ஆகப் போவுது?”என்றார் சுதாரிப்புடன்.

“குடும்பத்துக்கு தகவல் போயிருக்கா?

“அவனோட அண்ணன் வந்திருக்கார். போஸ்ட்மார்ட்டம் முடிச்சுக் கொடுத்தா ஊருக்கு கொண்டு போயிருவார்.”

“இன்னிக்கு சண்டே. இந்நேரத்துக்கு மேல் பி.எம். செய்ய முடியாதுனு உங்களுக்குத் தெரியாதா? அதுவுமில்லாம ஆள் வேணுமில்ல? காலையில முதல் கேஸா எடுத்துக்குவம்...”

“பி.எம். செய்ய அதுல என்ன இருக்கு டாக்டர்? அதான் ஏற்கனெவே கொத்துக்கறியாட்டம் கூறு போட்டு வகுந்துதானே இருக்கு? ”

“அதுக்காக நீங்க சொன்ன கதையை அப்படியே பி.எம். ரிப்போர்ட்டா எழுதி கொடுக்கவா?”

சற்றைக்கெல்லாம் யார் யாரிடமிருந்தெல்லாமோ மருத்துவருக்கு போன். வழக்கத்திற்கு மாறான நேரத்தில் போஸ்ட்மார்ட்டம் முடிந்தது.

இறந்துபோனவனின் அண்ணன் என்று கையெழுத்திட்டு சடலத்தை வாங்கிக்கொண்டவன் உண்மையில் அண்ணன் இல்லை என்கிற சந்தேகம் என்னைப் போலவே மருத்துவருக்கும் இருந்தது. அடுத்தவாரத்தில் ஒருவேலையாக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நான் சென்றிருந்தபோது, வலதுகை பெருவிரல் துண்டான ஒரு இளம் தொழிலாளியின் சித்தப்பனாக அங்கு அவனை அழைத்து வந்திருந்தான். என்ன ஜோடனை இது என்று நான் உள்ளுக்குள் பொறுமிக்கொண்டிருக்கும் போதே அங்கிருந்த பணியாள், “இவனுக்கு இதே வேலை... இத்தனை பசங்கள இப்படி மொண்டி மூக்கரையா மூளிக்கோலம் பண்ணி தொரத்திவிடுற பாவம் இவனை சும்மா உடாது சார். இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது” என்று சபித்தார். அந்த பணியாள் மூலமாகத்தான் இவன், டைனமிக் மேன்பவர் சப்ளையர்ஸ் மேலாளன் என்பது எனக்கு தெரியவந்தது.

***

அவனுக்கு இப்போது நான் யார் என்பது தெரிந்திருந்தது. இனி மறைக்கமுடியாது என்பதான தொனியில், “சார் நீங்க எழுதியிருக்கிறதெல்லாம் உண்மைதான். இப்ப உங்களுக்கு என்ன வேணும்? ”

“அந்த பாடிய என்ன செஞ்சீங்க?”

“இங்கயே எரிச்சிட்டோம்.”
“அந்தப் பையன் குடும்பத்துக்கு தகவல் தந்தீங்களா? ”

“இல்லை. அவன் குடும்பம் பீகார்ல இருக்கு. பீகார்லயும் நேபாள் பார்டர்ல ஜோக்பானிங்கிற ஊருக்குப் பக்கத்தில் என்னமோ ஒரு வில்லேஜ். நேரடியா ரயில்கூட கிடையாதாம் சார்,  பெங்களூரு ஏஜன்ட்கிட்ட கேட்டோம். உடனே தகவல் கொடுத்தால் கூட வந்து சேர நாலுநாள் ஆகுமாம். அப்படியே தகவல் கொடுத்து பெத்தவங்க வந்தால் எதை அவங்கக்கிட்ட காட்டுறது? என்னன்னு அந்த சதைக்கூழை ஒப்படைக்கிறது? ”

“அதுக்காக தகவல்கூட தரமாட்டீங்களா... பிள்ளைய காணலன்னு அவங்க தேடி வரமாட்டாங்களா?”

“மாட்டாங்க சார். சம்பள வாரத்துல பணம் வர்றதை வச்சு பையன் எங்கயோ இருக்கான்றது அவங்க நம்பிக்கை.”

“இப்ப அவன் குடும்பத்துக்கு பணம் நின்னிருச்சில்லையா?”

“அதுக்காக செத்துப் போயிருப்பான்னு நினைச்சுக்குவாங்களா சார்? சம்பளம் வந்திருக்காது இல்லன்னா அவன் செலவுக்கே போதாத சம்பாத்தியமா இருக்கும்னு சமாதானம் ஆயிடுவாங்க.  இங்க இருக்குற அவங்க கூட்டத்துக்குள்ளயே கல்யாணம் முடிக்கிற பசங்கள்ல பலரும் குடும்பச்செலவை சமாளிக்க முடியாம ஊருக்குப் பணம் அனுப்புறதை நிறுத்திடுவானுங்க. வீட்டாள்களும் சிரமத்தைப் புரிஞ்சிக்கிட்டு பாவம் குடும்பஸ்தனாயிட்டான், அவன் பாடே திண்டாட்டம்னு விட்டுருவாங்க.”

“நீங்க சொல்ற லாஜிக் சரி போல தெரியுது. ஆனா வருசக்கணக்கா பிள்ளை ஊருக்கு திரும்பலேன்னா தேடி வரமாட்டாங்களா?”

“எங்கேன்னு தேடுவாங்க? ஏஜன்டுங்க கேரளாவுல வேலைன்னு ஆள் சேர்ப்பாங்க. ஆனா கர்நாடகாவுக்கோ தமிழ்நாட்டுக்கோ தான் அனுப்பிவைப்பாங்க. உள்ளூர்லயும் அப்பப்ப இந்த மாதிரி இடம் மாத்திப் போடறதும் உண்டு. வேலை செய்யுமிடம் நிரந்தரம் இல்லேன்னா முகவரியும் நிரந்தரமா இருக்காதில்லையா? திரும்பி வந்தால் பிள்ளைன்னு தானே இத்தனாயிரம் மைலுக்கு அப்பால துணிஞ்சு அனுப்புறாங்க...”

“அதைத்தான் நானும் சொல்றேன். பிள்ளைய பத்திரமா திருப்பி அனுப்புவீங்கன்னு நம்பித்தானே இத்தனாயிரம் மைலுக்கு அப்பால அனுப்புறாங்க...”

“நீங்க என்ன சார், நாங்கென்னமோ அவனைக் கூட்டியாந்ததே கொல்றதுக்குத்தான்ற மாதிரி வாதாடுறீங்க... ”

“நான் அப்படிதான் நம்புறேன். பயிற்சி கிடையாது பாதுகாப்பு கிடையாது. ஆபத்தான வேலை மலிவான கூலி..”

“ஆமா சார், அந்தக் கூலிக்கும் அங்கே வழியில்லாம தான் இங்கே வர்றாங்க... ”
“அதுக்காக கொன்னு காணாப்பொணமா ஆக்கிருவீங்களோ... ”

“கூட்டியாந்த அத்தனை பேரையும் நாங்க கொன்னுட்ட மாதிரி எதுக்கு இப்படி டென்சனாகுறீங்க? ஒன்னு ரெண்டு இப்படி தவறுறது சகஜம்தான்... உங்க ஆஸ்பத்திரில வைத்தியம் பார்க்க வர்றவங்கள்ல சிலபேர் செத்துப்போறதில்லையா..”

***
ஒரு உயிரைக் காப்பாற்ற ஆனமட்டும் போராடிப் பார்த்தும் கைமீறிப் போகிற நோயாளியின் சாவும், உழைத்து வாழ்வதற்கு வந்த ஜக்பால் மாதிரியான இளைஞர்களை இவர்கள் அரைத்துக் கூழாக்குவதும் ஒன்றா? ஜக்லாலின் சாவுக்கு நீதி கேட்கும் வலுவான ஆதாரமொன்று என் கையில் சிக்கியிருப்பது அறியாமல் இவன் என்னவெல்லாம் பேசிவிட்டான்? துண்டாகி விழுந்து ரத்தத்தில் சொதசொதவென ஊறிக்கிடந்த ஜக்லாலின் இடுப்புக்குக்கீழான பகுதியிலிருந்த உடைகளைக் கத்தரித்து களையும் போது அவனது காற்சட்டைப் பையில் கிடந்த இந்த அடையாள அட்டை ஒன்று போதாதா இந்த குற்றத்தை அம்பலப்படுத்த? இது எப்படி என் கைக்கு வந்திருக்கும் என்று திடுக்கிட்டுப் போகும் அவனது முகத்தைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவேசத்துடன் இந்த அடையாள அட்டையை அவன் முன்னே தூக்கிப் போட்டேன். அவனானால் வெகு குத்தலான தொனியில் “இதை வச்சிக்கிட்டுதான் இவ்ளோ தூரம் வந்தீங்களா? அவனை ஆஸ்பத்ரிக்கு தூக்கி வர்றப்ப இந்தக் கார்டை அவன் பாக்கெட்டில் போட்டுவிட்டதே நான்தான்” என்றான்.

வசமாக மாட்டிக்கொண்டதால் அவன் இப்படி ஏதோ சொல்லி தப்பிக்கப் பார்க்கிறான் என்று தோன்றியது. அவனோ உங்க கதையை விட நிஜத்தில் தான் ட்விஸ்ட் அதிகம் கதாசிரியரே என்றபடி தன் தோள்பையிலிருந்து ஐந்தாறு அடையாள அட்டைகளை எடுத்து என் முன்னே போட்டான். எல்லாவற்றிலும் ஜக்லாலின் படம், ஆனால் ஒவ்வொன்றிலும் வேறுவேறு பெயர். இன்னொரு உறையிலிருந்து சில கார்டுகளை எடுத்து பரப்பினான். அவற்றில் வேறொருவர் படம், ஆனால் இதேபோல வெவ்வேறு பெயர்கள். குழம்பிப்போன எனது முகவோட்டத்தை ரசித்தபடி அவன் “எப்பவோ எங்கோ செத்துப்போன இவனுங்க படத்தை வச்சு தயாரிச்ச இந்த கார்டுகள இப்ப இப்படி சாகுறவங்களோட அடையாள அட்டையா காட்டினால் கதை முடிந்தது. நீங்கதான் உங்க கதையை முடிக்கமுடியாம ஜவ்வா இழுக்குறீங்க” என்றான் எகத்தாளமாக. என் திணறலைக் காட்டிக் கொள்ளாமல், “போலிசுக்கு போனால் என்னாகும் தெரியுமா” என்றேன். “இப்படி ஏதாச்சும் சிக்கல் வந்தால் பொருத்தமான வசனம் எழுதி கதையை முடிக்கிறதே அவங்கதான். போங்க சார் போய் ஆஸ்பத்ரி டூட்டிய பாருங்க இல்லேன்னா வேற ஏதாச்சும் கதை எழுதுங்க” என்று அவன் கிளம்பினான்.

செத்த பின்னும் அடையாள அட்டையாக இருந்து இவர்களுக்காக உழைக்கும் அந்த அனாமதேயங்களைப் பற்றி ஒரு கதையை எழுதும் யோசனையுடன் நான் அங்கேயே அமர்ந்திருக்கிறேன் வெகுநேரமாய்.

நன்றி: ஆனந்த விகடன், 2019 டிசம்பர் 11
ஓவியங்கள்: ஷியாம் சங்கர்


சனி, மார்ச் 18

ஒசூர் : தன் சதையைத் தானே அறுத்துத் தின்னும் அவலம் - ஆதவன் தீட்சண்யா

"ஒசூர் எனப்படுவது யாதெனின்" தொடர், scroll.in என்ற இணைய இதழில் வெளியான எனது நேர்காணல் (http://scroll.in/article/815373/interview-there-is-no-political-idea-this-is-what-happens-when-a-society-has-been-sedated) ஆகியவற்றால் உந்தப்பட்ட பத்திரிகையாள நண்பர் ஒருவர் தான் பணியாற்றும் நாளிதழுக்காக என்னிடம் எடுத்த நேர்காணல் இது. மிக நீண்ண்ண்ண்ண்ட பரிசீலனைக்குப் பிறகு இதை வெளியிடவியலாது என்கிற தகவல் அவருக்கு சொல்லப்பட்டதை  மிகுந்த சங்கடத்துடனும் வருத்தத்துடனும் பகிந்துகொண்டார்.  அதனாலென்ன, நீங்கள் வாசியுங்கள்...
1.     ஒசூர் எந்தக் காலகட்டத்தில் எந்தச் சூழலில் தொழில் நகரமாக மாறியது? ஒசூர் மக்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி கூறுங்கள்?

ஒசூர் என்பது குறிப்பிட்ட ஓர் ஊரின் பெயராக குறுகாமல் நிலவியல்தன்மை, தட்பவெப்பம், வாழ்நிலை மற்றும் பண்பாட்டு ஒருமையால் பிணைந்துள்ள ஒரு வட்டாரத்தின் பொதுப்பெயராக விரிந்துள்ளது. தற்போதைய ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய முன்று வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய இந்நிலப்பரப்பு கடல்மட்டத்திலிருந்து 3300 அடி முதல் 4500 அடி வரையான உயரத்தில் அமைந்த மலைப்பகுதி. மிதமான வெப்பமும் கடுங்குளிரும் கணிசமான மழைப்பொழிவும்  எங்கு பார்த்தாலும் ஏரிகள் நிறைந்த நீர்வளமும் கொண்ட பகுதி இது. பல்வேறு தமிழக மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்துவந்திருந்த போதிலும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியின் பெரும்பாலான மக்கள் தெலுங்கு அல்லது கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள். புதிய ஊர் என்பதை குறிக்கும் ஒச ஊரு என்கிற கன்னடச்சொற்களே ஒசூர் என மருவியது. 

திப்புவின் ஆளுகையில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை கைப்பற்றிய பிரிட்டிஷார், தங்கள் நாட்டின் தட்பவெப்பமே நிலவும் இப்பகுதிக்கு லிட்டில் இங்கிலாந்து எனச் செல்லப் பெயரிட்டு கொண்டாடினர். அப்போதைய சேலம் மாவட்டத்தின் தலைநகராக ஒசூர் மாற்றப்பட்டதற்கும் இதுவே காரணம். தங்களது உணவுத்தேவைக்கான புன்செய் தானியங்கள், மலர்வகைகள், மல்பரி ஆகியவற்றை பாரம்பரியமாக விளைவித்துவந்த இப்பகுதி மக்கள் காலப்போக்கில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கேரட் பீட்ருட் பீன்ஸ் காலிஃபிளவர் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிச் சாகுபடிக்கு மாறினர். 1824 ஆம் ஆண்டு ஒசூர் மத்திகிரியில் தொடங்கப்பட்ட குதிரைப்பண்ணை பிறகு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பண்ணைகளில் ஒன்றாக மாறி உள்ளூர் மக்களில் பலருக்கும்  வேலை வாய்ப்பளித்து வந்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்தொட்டு இப்பகுதியில் பணியாற்றுவதற்கென்று  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலரும் தங்களது பணிக்காலத்தின் முதற்கட்டத்தை இங்கேதான் தொடங்கவேண்டியிருந்தது. தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலிலிருந்து தட்பவெப்பம், மொழி, பண்பாட்டுச்சூழல், வாழ்க்கைத்தரம் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட இப்பகுதியில் பணியாற்றுவதை கடும் தண்டனையாகவே இவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். இங்கிருந்து மாற்றலாகிப் போனால் போதும் என்கிற கவலையால் பீடித்திருந்த இவர்களில் பலரும் உள்ளூர் சமூகத்தோடு ஒன்றாமலே இருந்திருக்கிறார்கள்.

***

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கென 1971ல் உருவாக்கப்பட்ட சிப்காட் நிறுவனம், ராணிப்பேட்டைக்கு அடுத்தபடியாக தனது இரண்டாவது தொழிற்பேட்டையை ஒசூரில் 1974 ஆம் ஆண்டு 1236 ஏக்கரில்  தொடங்கியது. (பிறகு 1980ல் 457 ஏக்கர், 1997ல் 179 ஏக்கர், 2004ல் 239 ஏக்கர் என விரிவடைந்தது.) மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சியோட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கை இதுவென சொல்லிக் கொள்ளப்பட்டாலும் பெங்களூருக்கு அருகாமை என்பதே ஒசூர் தேர்வானதற்கு முக்கிய காரணம். உள்கட்டமைப்பு வேலைகள் நிறைவடைந்து அடுத்துவந்த சில ஆண்டுகளில் ஒசூர் நகரத்திலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை ஆகிய ஊர்களுக்கான சாலைகளின் இருமருங்கிலும் ‘குண்டூசி முதல் குட்டி விமானம் வரை’ செய்வதற்கான நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உருவாகின. ஆயினும் இவற்றில் ஒன்றுகூட உள்ளூர் மக்களின் உழைப்பையும் ஆற்றலையும் உள்வாங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தன்மையையோ நோக்கத்தையோ கொண்டிருக்கவில்லை. மாவட்டத்தின் அப்போதைய சராசரி எழுத்தறிவே 29 சதவீதம் என்றிருந்த நிலையில் அதன் கட்டக்கடைசியான ஒசூர் பகுதியிலிருந்து இந்த நவீனத் தொழிற்சாலைகளுக்கு தேவைப்பட்ட கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதியோடு தயார்நிலையில் யாரிருப்பார்கள்? தங்களது மண்ணை விழுங்கி உருப்பெற்றுள்ள இத்தொழிற்பேட்டை தங்களுக்கானவை அல்ல என்கிற கடும்பாடத்தை உள்ளூர் மக்கள் எடுத்தயெடுப்பிலேயே விளங்கிக்கொண்டார்கள். தோட்டக்காரர், துப்புரவுப் பணியாளர் அல்லது காவலர் போன்ற கடைநிலை ஊழியங்கள்தான் அவர்களில் சிலருக்கு கிடைத்தன.  

2.  ஓசூர் தொழில்மயமானபோது, அங்கு தொழிலாளர்களாக புலம்பெயர்ந்தவர்கள் நிலை எப்படி இருந்தது? பிறகு அங்கே மாறிய சமூக, சாதிய சூழ்நிலைகள் பற்றி சொல்லுங்கள்?

எவ்வளவுதான் அதிநவீன இயந்திரமாயினும் மனிதக்கரங்கள் தான் அவற்றை தொட்டு உயிர்ப்பிக்கின்றன என்கிற பார்வை இங்கு மங்கலாகக்கூட அரசாங்கத்திற்கு கிடையாது. அதனால்தான், தொழிற்சாலைகளை அமைத்துக்கொள்ளத் தேவையான மூலதனம், இடம், தண்ணீர், மின்சாரம், சாலை, போக்குவரத்து, வரிவிலக்கு, சட்டப்பாதுகாப்பு என அனைத்தையும் முதலாளிகளுக்கு வழங்கிவிட்டு, அவற்றில் பணியாற்ற வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அடிப்படைத்தேவைகள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டாமல் ஒதுங்கிக்கொண்டது.  நாடு முழுவதுமிருந்து இங்கு வந்து குமிந்த தொழிலாளர்கள் தங்குமிடம் கழிப்பறை தண்ணீர் உணவு என்று ஒவ்வொன்றுக்கும் அலைய வேண்டியிருந்தது. முதலாவதாக, இங்கு நிலவிய தட்பவெப்பம் அவர்களில் பலருக்கும் புதிது. ஜூனில் தொடங்கி நவம்பர் வரையிலும் மழை. டிசம்பர் முதல் பிப்ரவரி கடைசிவரை பனி. அதிகாலையில் பகல் வேலைக்கு (டே ஷிஃப்ட்) கிளம்பினாலும் இரவுப்பணிக்குப் போய் திரும்புவதாயிருந்தாலும் வருடத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாட்களில் குளிரால் நடுங்க வேண்டியிருந்தது. 1984ல் நான் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் அலுவலகத்தின் அறைகளில் மின்சார சூடேற்றி (ஹீட்டர்) பகலிலும் கனன்றுகொண்டிருக்கும். வீட்டிலும் வெளியிலும் குளிர்கால ஆடைகளோடு நடமாட வேண்டியிருந்தது. ஏப்ரல் மே மாதங்களில் கூட மின்விசிறியின் தேவை உணரப்படாத காலமது. வெயிலடிக்கும், ஆனால் உறைக்காது, வியர்வையே வராது. எளிதில் களைப்படைய - ஆனால் ஒருவிதமான மந்தத்தன்மையை உருவாக்குவதாக இருந்தது இந்தத் தட்பவெப்பம். 

அடுத்தது, இவர்கள் அவ்வளவு பேரையும் தங்கவைத்துக் கொள்ளும் அளவுக்கான எண்ணிக்கையில் இப்பகுதியில் வீடுகள் இல்லை. ஒசூர் பகுதி மக்கள் தமக்கென கட்டி வாழ்ந்துவந்த பூர்வீக வீடுகளில் ஒரு பகுதியை ஒதுக்கி தொழிலாளர்களுக்கு வாடகைக்கு கொடுத்தார்கள். தேவையின் தீவிரத்தை ஒருவாறு யூகித்துக்கொண்ட சிலர் வாடகைக்கு விடுவதற்கென்றே அவசரடியாக வீடு போன்றவற்றை கட்டினார்கள். தொழிலாளர்களில் பலரும் படித்து முடித்தக் கையோடு வேலைக்கு கிளம்பி வந்தவர்கள். அவர்களுக்கு தனியாக அறையோ வீடோ தேவைப்படவில்லை அல்லது கிடைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க அவ்வாறு எடுத்து தங்குமளவுக்கு அப்போது அவர்களது வருமானமில்லை. எனவே அவர்கள் சின்னஞ்சிறு அறையைக் கூட நாலைந்து பேராக பகிர்ந்துகொண்டார்கள். வீடு என்றால் பத்து பதினைந்து பேர் வரை கூட நிறைந்திருப்பார்கள்.

சாதி மதம் வட்டாரம் என்பதெல்லாம் அவரவர்களுக்குள் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அவை அவர்கள் பிறரோடு கலந்து ஓரிடத்தில் வாழ்வதற்கு தடையாக இருக்கவில்லை. முன்பின் தெரியாத ஊரில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்துகொள்ளும் பக்குவத்திற்கு அவர்கள் அனிச்சையாக வந்த சேர்ந்தார்கள். பணி நேரத்தில் சில ஆலைகள் உணவு வழங்கினாலும் ஒருவேளையாவது வெளியில் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம், ஆனால் போதுமான உணவகங்கள் கிடையாது. நிரந்தரமாக கடையில் சாப்பிடுவதற்கு அவர்களது வருமானமும் ஒத்துழைக்கவில்லை. எனவே கூட்டாக சமைத்து உண்டார்கள். சாப்பாட்டில் அவர்கள் எதையும் விலக்கிவைத்ததில்லை. சம்பளம் வாங்கும் வாரத்தில் ஆட்டுக்கறியில் தொடங்கி கோழி மீன் பன்றி என்றாகி மாதக்கடைசியில் மாட்டிறைச்சி வாங்கி சமைத்துண்பது என்பதாக இருந்தது அவர்களது தெரிவு.

வாழிடம் பணியிடம் சார்ந்து தொழிலாளிகளிடம் முகிழ்த்துவந்த உணர்வு வர்க்க உணர்வாக மாறவேண்டிய கட்டாயத்தை தொழிற்சாலை நிர்வாகங்கள் உருவாக்கிவந்தன. புதிதாக தொடங்கப்பட்டவை என்று முதல் பத்தாண்டுகளுக்கு வரிமான வரி கட்டுவதிலிருந்தும், பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை கடைபிடிப்பதிலிருந்தும் தொழிற்சாலைகள்  விலக்கு பெற்றிருந்தன. இதனால் வேலை நேரம், ஊதிய மாற்றம், போனஸ், மருத்துவச் சிகிச்சை, விபத்துக் காப்பீடு, பணி நிரந்தரம், விடுமுறை, வாராந்திர ஓய்வு போன்றவற்றை நிர்வாகங்கள் மறுத்துவந்தன. சலுகைக்காலம் முடிந்தப்பின்னும் கூட நிர்வாகங்கள் இந்த நிலையை நீட்டித்து வந்தன. சங்கம் வைப்பதற்கும்கூட அனுமதிக்காத போக்கு. குறைந்தக்கூலியில் அதிக உழைப்பைப் பெற்றுவிட வேண்டும் என்கிற லாபவெறிக்கும், செலுத்திய உழைப்புக்கு நியாமானதொரு ஊதியத்தைப் பெற்றுவிட வேண்டும் என்கிற இயல்பெண்ணத்திற்கும் இடையேயான மோதல் பல்வேறு தொழிற்சாலைகளில் அமைதியின்மையை உருவாக்கியது. மக்கள்தொகைப் பெருக்கம், கடும் வாடகை, விலைவாசி, உழைப்புச்சுரண்டல், குறைந்தக் கூலி  என்பதான பல்முனைத் தாக்குதலை எதிர்த்துப் போராடும்படியான நெருக்கடிக்குள் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.

அரசு ஊழியர்களைப் போல மாற்றல் வாங்கிக்கொண்டு வேறெங்கும் போய்விடுவதற்கான வாய்ப்பேதும் தொழிலாளர்களுக்கு இல்லை. இங்குதான் இனி வாழ்க்கை என்றான பிறகு இடர்ப்பாடுகளையும் குறைபாடுகளையும் பெரிதுபடுத்தி புகாரிட்டுக்கொண்டிருப்பதை விட, இப்பகுதியை வாழத் தகுந்ததாக மாற்றிக்கொள்வது அவசியமாயிருந்தது. அடுத்துவந்த ஆண்டுகளில் தொழிலாளர்கள் நடத்தியப் போராட்டங்கள் அவர்களது சொந்தவாழ்க்கையில் மட்டுமல்லாது ஒசூர் பகுதியிலும் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்கின.

18-20 வயதில் வேலைக்குச் சேர்ந்து கூட்டாக ஓரிடத்தைப் பகிர்ந்துகொண்ட தொழிலாளர்கள் அடுத்துவந்த சில ஆண்டுகளில் திருமணத்தை நோக்கி நகர்ந்த போது தனித்தனி வீடுகள் தேவைப்பட்டன. அவர்களுக்கு வாடகைக்கு விடவும் விற்கவும் புதிதுபுதிதாக குடியிருப்புப் பகுதிகள் உருவாகின. பூர்வீகத்திலிருந்த சொத்து எதையேனும் விற்றோ அல்லது கடன்பட்டோ இங்கு சொந்த வீடுகளைக் கட்டினார்கள். தொடக்க ஆண்டுகளில் அரிதாக ஒன்றிரண்டு நிறுவனங்களில் மட்டுமே சில பெண்கள் வேலைக்கு அமர்த்திக்கொள்ளப்பட்டார்கள். திருமணமாகி இங்கு வந்தப் பெண்களில் ஒருபகுதியினர் குடும்பச்செலவுக்கு ஒத்தாசை என்கிற அளவில் தத்தமது கல்விக்கேற்ப சிறு குறு தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். அதுவரை ஆண்களின் தொழிற்பேட்டை என்றிருந்த ஒசூரின் முகம் இருபாலருக்குமானதாக மாறத்தொடங்கியது. தொழிலாளர்கள் தமது வருமானத்தை சுண்டுவிசையாக வைத்து மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், திரையரங்குகள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், வாகன விற்பனை நிலையங்கள் போன்றவற்றை இங்கு வரவைத்தார்கள். அதுவரை இப்பகுதிக்கு பெரிதும் அறிமுகமாகியிருக்காத தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொழுதுபோக்குகள், கலைவடிவங்கள், தெய்வங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், உணவுவகைகள் ஆகியவற்றை கொண்டுவந்து சேர்த்தவர்களும் தொழிலாளர்கள்தான். 


தனிப்பையன்களாக இருந்தவரையிலும் யாவரோடும் கலந்துண்டு வாழ்ந்த தொழிலாளர்களை திருமணம் மீண்டும் அவரவரது சொந்த சாதிக்குள் கொண்டு போய் திணித்தது. ஒண்ணும் மண்ணுமாய் உருண்டுபுரண்ட நட்பும் தோழமையும் முடிவுக்கு வந்தன. பொது இடங்களில் அல்லது பணித்தளத்தில் மட்டுமே  சந்தித்துக்கொள்கிறவர்களாக நண்பர்கள் மாறினர். எத்தனை பேர் வந்தாலும் ஏற்று இடமளிக்கும் விசாலத்தை சின்னஞ்சிறு அறைகள் கொண்டிருக்க, பென்னம்பெரிய தனித்த வீடுகளோ சொந்த சாதி மட்டுமே புழங்கும் இடமாக சுருங்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் தான் வெவ்வேறு தொழிற்சாலைகளில் சிதறுண்டிருக்கும் தத்தமது சாதியினரை அடையாளம் கண்டு ஒருங்கிணைக்கும் சாதிய அமைப்புகள் உருவாகின. ஒவ்வொருவருக்குள்ளும் உருவாகிவந்த தொழிலாளி என்கிற நவீன அடையாளத்தை சாதியம் என்கிற நச்சுணர்வு காத்திருந்து காவு கொண்டது. இதே காலக்கட்டத்தில் நாடு தழுவிய அளவில் அஞ்சத்தக்கவிதமாக வளர்ந்தவந்த மதவாதத்தில் கரைவதற்கு அது தொழிலாளர்களை தகவமைத்தது.

3. 90களில் உலகமயமாதலின் தாக்கம் ஒசூரை எப்படி பாதித்தது?

தொழில் நகரம் என்கிற அடையாளத்தை உலகமயமும் புதிய தொழிற்கொள்கையும் போக்கடித்தன.

* பெங்களூருக்கு அருகாமை, இதமான பருவநிலை, ஏறுமுகமான நிலமதிப்பு ஆகியவற்றுக்காக இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கறுப்புப்பணத்தால் வாங்கி கம்பிவேலிக்குள் அடைக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் சொந்தமண் மீதிருந்த பாத்யதையை முற்றுமுழுதாக இழக்கத் தொடங்கினர்.

* கட்டற்றச் சந்தை உலகளாவிய வாய்ப்புகளை நல்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனவலு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைக்கு ஒசூர் நிறுவனங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. விற்பனைத்தேக்கம், உற்பத்திக்குறைப்பு, ஆட்குறைப்பு, கதவடைப்பு, ஆலைமூடல் என நெருக்கடி மூண்டது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இயந்திரங்களைக் கொண்ட தொழிற்சாலைகளை திறந்துப் போட்டுவிட்டு தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது. புதிய தொழிற்பேட்டைக்குரிய சலுகைக்காலம் முடிவடைந்தபடியால் இதேபோன்ற சலுகை கிடைக்கின்ற வேறு இடத்துக்கு சில நிறுவனங்கள் ஓடிப்போயின. கடனையும் லாபத்தையும் வேறு துறைகளுக்கு திருப்பிவிட்டு நஷ்டக்கணக்கு காட்டிவந்த நிறுவனங்களும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டன.     

* பல உற்பத்திப்பிரிவுகளை மூடிவிட்டு ‘அவுட் சோர்சிங்’ முறைக்கு சென்றதால் அந்தந்த ஆலைமட்டத்தில் ஆட்குறைப்பு நடந்தது.

* வீட்டு உபயோகப் பொருட்களும் அதிக ஓடுதிறன் கொண்ட வாகனங்களும் இறக்குமதியாகப் போவதாய் கிளம்பிய வதந்திக்கே உள்ளூர் வியாபாரமும் தொழிலும் சுருண்டு விழுந்தன. ‘இந்தியர்களின் உடல்வாகு, மனோநிலை, சாலைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சுதேசி பைக்குகளையே வாங்குங்கள்’ என்று அநாமதேய துண்டறிக்கை மூலம் கெஞ்சும் நிலைக்கு தொழிற்சாலைகள் கீழிறங்கின. 

 4. சிறுதொழில் நிறுவனங்களின் நிலை என்னவாகியது?

* உதிரி பாகங்களை உள்ளூர் சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்தே அதுகாறும் கொள்முதல் செய்துவந்த பெருநிறுவனங்கள் ‘திறந்தச்சந்தையில் தரமிக்கப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதாய்’ அறிவித்தன. இதனால் உற்பத்திச்செலவை விடவும் குறைந்த விலைக்கு கொடுத்தாவது பெருநிறுவனங்களின் ஆர்டரைப் பெறவேண்டியிருந்தது. அதற்குரிய தொகை இழுத்தடித்தே கொடுக்கப்பட்டதால் கடனும் வட்டியும் சிறு-குறு தொழில் முனைவோரை நெறித்து தொழிலை நடத்தவிடாமல் விரட்டின. கடன்தொல்லையால் நடந்த தற்கொலைகளும் காணாமல் போதலும் உலகமயத்திற்கென கொடுக்கப்பட்ட பலிகள்தான்.

5. தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கம் பற்றி சொல்லுங்கள்?

* குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற பெரும் செலவினங்களை எதிர்கொள்ளும் வயதில் தொழிலாளிகள் வேலையிழந்தனர். சிலர் சொந்த ஊருக்குத் திரும்பினர்.  சிலர் இடம்பெயர்ந்து எங்கோ சென்று மறைந்தார்கள். முன்பு சீருடை அணிந்து மிடுக்காக தொழிற்சாலைக்கு சென்றுவந்த பலர் தள்ளுவண்டி வியாபாரம், நடைபாதைக் கடை, சைக்கிளில் தேநீர் விற்பது, நிலத்தரகு என முன்பின் அறிந்திராத தொழில்களில் உதிரிகளாகி அலைந்தார்கள். ஆட்குறைப்பின் மூலம் வெளித்தள்ளப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் அதே நிறுவனத்தில் குறைந்தக்கூலிக்கு தற்காலிகங்களாகினர். தற்காலிகங்களைக் காட்டி நிரந்தரத் தொழிலாளர்களின்  உரிமைகள் மறுக்கப்பட்டன.

* கடைவீதிகள் வெறிச்சோடிப் போயின. ‘வாடகைக்கு’ ‘விற்பனைக்கு’ என்கிற அட்டைகள் தொங்கும் வீடுகள் பெருகின. சொத்துகள் கைமாறின. வெளியேறுகிறவர்களுக்கான ஒருவழிப்பாதையானது ஒசூர். 

6. தொழிற்சங்கங்கள் சிறப்பாக செயல்பட்ட பொற்காலச்சூழல் ஒசூரில் இருந்துள்ளது. அதில் எப்படியான மாற்றங்கள் ஏற்பட்டன?

உலகமயத் தாக்குதலால் தொழிற்சங்கங்கள் பேதலித்துப் போயின. ஆட்குறைப்பை தடுக்கவியலாமல் எண்ணிக்கை குறித்த பேரங்களில் அவை ஈடுபட்டன. வேலையில் நீடிப்பவர்கள், வேலை இழந்தவர்கள், வேலையிழந்து தற்காலிகமாக வந்தவர்கள் எனத் தொழிலாளர்கள் சிதைக்கப்படுவதை தொழிற்சங்கங்களால் தடுக்க முடியவில்லை. சுமங்கலித் திட்டம் போன்றவற்றால் நிரந்தரமாக தற்காலிகமாக்கப்பட்டோரை திரட்டும் வழியறியாது அவர்கள் சுரண்டப்படுவதை அனுமதிக்கும் நிலைக்குச் சென்றன.

தொழிலாளர்களின் ஊதியம், வருங்கால வைப்புநிதியைக் கூட தராமல் தொழிற்சாலைகளை மூடிவிட்டு நிர்வாகங்கள் ஓடிப்போயின. இயந்திரங்களை எடுத்துப் போகவாவது நிர்வாகத்தினர் வருவார்கள், பிடித்துக்கொள்ளலாம் என்று மூடப்பட்ட ஒரு பஞ்சாலையின் வாயிலில் கொட்டைகைப் போட்டு காத்திருந்த தொழிலாளர்கள் ஒருகட்டத்தில் பொழுதைப்போக்க சீட்டாடத் தொடங்கினார்கள். மாதக்கணக்காகியும் யாருமே வராத நிலையில் அவர்கள் சீட்டாடுவதற்காகவே அங்கு  கூடுகிறவர்களாக மாறினர். மரபான போராட்டங்களில் நம்பிக்கையிழந்த சிலர் செல்போன் கோபுரங்களில் ஏறி தீக்குளிக்கவும், சாலை மறியல் செய்யவும் தலைப்பட்டனர்.
 
7. இதிலிருந்து ஒசூர் மீளவேயில்லையா?

பேரழிவின் முதல் அலை ஓய்வதற்குள் உலகப் பொருளாதார நெருக்கடியும் மின்வெட்டும் அடுத்தடுத்த அலைகளாகி வீழ்த்தின. நெருக்கடியால் பாதிக்கப்படாத நிறுவனங்கள்கூட வாரத்தில் நான்குநாள் ஓய்வு என்கிற தந்திரத்தைக் கையாண்டன. மனஉளைச்சலிலும் அச்சத்திலும் தொழிலாளர்கள் தூக்கமிழந்து அகாலங்களில் உலாத்தத் தொடங்கினர். தொழிற்சங்க நிர்வாகிகள் முறைவைத்து ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு அவர்களை வீடுகளுக்கு கொண்டு சேர்த்தனர்.  

பசியாற ஏதுமற்ற நிலையில் தன் சதையைத் தானே அறுத்துத் தின்னும் அவலமாக ஒசூர் பகுதி மறுபடியும் தன்னிடம் மிச்சமிருந்த நிலப்பரப்பை விற்றுக்கொள்ளத் தொடங்கியது. இம்முறை பெரும் கட்டுமான நிறுவனங்கள் வந்திறங்கின. பெங்களூரின் மென்பொருள் பணியாளர்கள் ஒசூரில் பெருமளவு குடியேறி தூங்கியெழுந்துப் போகத் தொடங்கினர்.

8. இன்றைய தொழிற்பேட்டை எப்படியுள்ளது?

மூடிக்கிடப்பவற்றையும் சேர்த்து 2015 டிசம்பர் வரை 811 தொழிற்சாலைகள் பதிவு செய்துகொண்டுள்ளன. 5000 தொழிலாளர்கள் பணியாற்றுவதாக கணக்குக் காட்டும் ஒரு வாகனத் தொழிற்சாலையில் 647 பேர் மட்டுமே நிரந்தரம். பிறவற்றிலும் இதே நிலைதான். எனில் ஒசூர்பகுதி தொழிலாளர்கள் எனக் காட்டப்படும் 90195 பேரில் 85 சதமானவர்கள் தற்காலிகங்களே. பதிவுபெற்ற 900 ஒப்பந்ததாரர்களால் ‘சப்ளை’ செய்யப்படும் இவர்களில் பெரும்பாலோர் முறையான படிப்போ பயிற்சியோ அற்ற வடமாநில இளைஞர்கள். சட்டத்திற்குட்பட்ட கொத்தடிமைகளாக இறக்கிவிடப்பட்டுள்ள இவர்கள்தான் இன்றைக்கு  ஒசூரின் இயங்குச்சக்தி. நடைபாதை வியாபாரத்தில் இந்தியும் ஒரு பரிவர்த்தனை மொழியாக மாறியிருப்பதன் மூலம் இவர்களுக்கான ஒசூர் ஒன்று இங்கு உருவாகிவிட்டதை உணர முடிகிறது.

9. ஒசூரின் வளர்ச்சி?

‘இங்கு ஜூனிலிருந்து நவம்பர் வரையிலும் மழை. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனி. வருடத்தின் பெரும்பகுதி குளிர்காலம்தான். எங்கள் அலுவலகத்தின் அறைகளில் மின்சார சூடேற்றி பகலிலும் கனன்றுகொண்டிருக்கும். கோடை வெயில்கூட உறைக்காது வியர்க்காது’ என்பதெல்லாம் பழங்கதை. மழைமோடத்தின் குளிரில் நடுங்கவேண்டிய இந்த ஐப்பசியில் அதிகபட்ச வேகத்தில் சுழலும் மின்விசிறியின் கீழே அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதே இப்போதைய ஒசூர். 

ஊரை குளுமையில் ஆழ்த்திய ஏரிகளைத் தூர்த்தது யார்? ஆயிரம் அடிக்கு கீழேயும் நிலத்தடி நீர் ஏன் கிடைப்பதில்லை? தொல்லியல் சான்றுகள் நிறைந்த மலைகள் வரலாற்றுப் பிரக்ஞையற்று யாருக்காக பாளம்பாளமாக வெட்டப்படுகின்றன? குடும்ப உறவுகளுக்கிடையே வன்முறையும்  கொலையும் அதிகரித்துவருவதில் நிலத்தின் பங்குண்டா? நிலக்கொள்ளையர்கள் ஊரையே கட்டுப்படுத்தும் அதிகாரம் பொருந்தியவர்களாக மாறுவது எங்ஙனம்? அடுத்த பத்தாண்டுகளில் ஒசூர் எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்கிற அமைப்புகளோ ஆளுமைகளோ இல்லாமல் போனது ஏன்? ஒசூர் பகுதியை தமது வாழிடமாக தேர்ந்துள்ள வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலமுள்ள மக்களை ஒரு சமூகமாக ஒன்றிணைக்கும் சாத்தியமுண்டா? கற்பிதங்களின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் சாதிய மதவாத அமைப்புகளின் செல்வாக்கை தடுத்திடத்  தேவையான அணுகுமுறை என்ன?  என்கிற கேள்விகளை எழுப்பிக்கொள்ளவும் சக்தியற்று ஒசூர் திணறிக்கொண்டிருக்கிறது. உழைப்புச்சக்தியை விற்று கண்ணியமாக வாழ்வதற்கான வழிகள் அடைபட்டுவரும் ஒரு சமூகம் சந்திக்க வேண்டிய வீழ்ச்சியைத்தான் ஒசூரும் இப்போது சந்தித்துவருகிறது என்பது சமாதானமல்ல, உண்மை.


24.10.16



வியாழன், அக்டோபர் 25

ஒசூரெனப்படுவது யாதெனின் : 6 - ஆதவன் தீட்சண்யா

எங்கு உழைப்பைச் செலுத்துகிறோமோ அங்கிருந்தே நாம் வாழ்வதற்கான ஆதாரங்களை திரட்டிக்கொள்ள வேண்டும் என்பது தொழிற்சங்க வாதமல்ல, இயற்கையின் நீதி. ஆனால், இந்த இயற்கை நீதியை நிலைநிறுத்தத்தான் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் போராட வேண்டியிருக்கிறது. ஒசூரிலும் போராடினார்கள். அவர்கள் நடத்திய போராட்டங்களால்தான் ஒசூர் தொழிற்பேட்டை நிலைநிறுத்தப்பட்டது. தமது போராட்டங்களின் வழியே தொழிலாளர்கள் அடைந்த ஆதாயங்களை உட்கொண்டுதான் ஒசூரின் ஒவ்வொரு அங்குலமும் புதுப்பொலிவை எய்தியது.
''ஒரு தனி மனிதரின் வாழ்வில் அவரது வசிப்பிடம் வகிக்கும் பாத்திரம் மிக முக்கியமானது. அவருக்கு வாய்க்கும் புழங்கு எல்லையின் குறுக்கம் அல்லது நீட்டமானது அவரது சிந்தனை முறையையும் செயற் களங்களையும் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக அமைகிறது. இது வெறுமனே இடம் பற்றிய பிரச்னையல்ல, ஒருவரது சூழல் எவற்றாலும் யாராலும் நிரப்பப்பட்டிருக்கிறது அல்லது வெற்றிடமாய் விடப்பட்டிருக்கிறது என்பதோடு தொடர்புடையது. ஐம்பதாவது வயதை இன்னும் சில மாதங்களில் தொடவிருக்கும் நான், எனது வாழ்நாளின் சரிபாதிக்கும் மேலான காலத்தை ஒசூர் என்னும் பொதுப் பெயரில் சுட்டப்படும் இந்தத் தனித்துவமான நிலப்பரப்பில்தான் கழித்திருக்கிறேன்.

சென்னை, கோவை, கன்னியாகுமரி நகரங்களை பெங்களூருடன் இணைக்கிற தேசிய நெடுஞ்சாலையில் வருகிறவர்கள், ஒண்ணுக்கடிக்க இறங்கும் இடம் என்று இழிவுபடுத்தப்பட்ட காலத்தில் இருந்து அந்த நகரங்களுக்கு இணையாக விரிவு பெற்றுள்ள இன்றைய நாள் வரை அதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இளம்பிராயம் முழுவதையும் ஒரு ஒண்டிக்கொட்டாய்க்குள் கழித்துவிட்டு வந்திருந்த எனக்கு இந்த நகரமும் அதன் சுற்றுப்புற ஊர்களும் வழங்கிய இடம் என்ன என்று பரிசீலிப்பதற்கு இதுபோதுமான கால அளவுதான்.

தேன்கனிக்கோட்டையில் இருந்ததைப்போலவே ஒசூர் அண்ணா நகரிலும் அப்போது ஒரு பேச்சிலர் பாரடைஸ் இருந்தது. வந்தாரை எல்லாம் வரவேற்று உபசரிக்கும் அளவுக்கு விசாலம்கொண்ட ஒரு பெரிய ஓட்டு வீடு அது. மிடிகிரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்குச் சொந்தமான அந்த வீடு 10 வருடங்களுக்கும் மேலாகத் தொலைபேசி ஊழியர்களிடம் இருந்துவந்தது. புதிதாக வருகிறவர்கள் எல்லோருக்குமே அந்த வீடுதான் அடைக்கலமாய் இருந்தது. சுற்றுவட்டார ஊர்களில் பணியாற்றும் ஊழியர்கள் கடைசி பஸ்ஸை தவறவிடும் இரவுகளில் உரிமையோடு தங்கும் இடமும் அதுதான். தண்ணீர் இல்லாத வீடு அது. தெருக்குழாய் ஒன்றில் எப்போதாவது தண்ணீர்வரும். ஆனால், அங்கிருந்த அடிபிடியில் பங்கெடுக்கக் கூசிய பசங்க தொலைபேசி நிலையத்துக்கு வந்து குளித்துவிட்டு ஆளுக்கொரு குடம் தண்ணீரைச் சமையலுக்கு எடுத்துப்போவார்கள். விருந்தாளிக்கும் இதுதான் நியமம். கிருஷ்ணவேணி என்கிற பாட்டி பெரிய தேக்ஸா வைத்து மூன்று வேளையும் சமைத்துப் போட்டுக்கொண்டு இருந்தார்.

ஒசூருக்கு மாற்றலில் வருவதற்கு முன்பாகவே அந்த வீட்டில் தங்கியிருந்த இளங்கோ, பாலன், கிருஷ்ணமூர்த்தி, மணவாளன், ரமேஷ், முருகன், தியாகி ரவி, சுப்பிரமணியம், ரத்தினவேல் ஆகிய அனைவருமே எனக்கு அறிமுகமாகி இருந்தனர். நாங்கள் அனைவருமே ஒரே தொழிற் சங்கத்தில் கே.ஜி.போஸ் அணியின் அங்கத்தினர்களாக இருந்தோம். எனவே ஒசூருக்கு மாற்றலாகி வந்தபோது நானும் அவர்களுடனே தங்குவதில் சிக்கலேதும் இல்லாமல் போனது. அவர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்களுக்குச் சற்றேறக்குறைய என் வயதுதான். தவிர, அவர்களும் என்னைப்போலவே மணிக்கூலியாக இருந்தவர்கள்/ இருப்பவர்கள்.

நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதாக அலட்டிக்கொண்டு இந்திராகாந்தி கொண்டுவந்திருந்த ஆளெடுப்புத் தடைச்சட்டம் தொடர்ந்து அமலில் இருந்த காலமது (அவரது மகன், மருமகள், பேரக்குழந்தைகள் காலம்வரை நீடிக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்தத் தடைச்சட்டம் மாறவில்லை. 'தேர்தல் சின்னம் ஆயிரமிருக்கும் சவரக் கத்திதான் ரொம்பப் பொருத்தம்’ என்கிற நவகவியின் பாடல் வரி நினைவுக்குவருகிறது). எனவே மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ற விகிதத்தில் ஆட்கள் நியமிக்கப்படாமல் அரசு அலுவலகங்கள் வேலைப் பளுவால் திணறிக்கொண்டிருந்தன. அரசால் வழங்கப்பட்டுவந்த சேவைகளின் தரத்தில் அரிமானம் ஏற்பட்டு மக்களிடையே வெறுப்பு உருவாகக் காரணமாகியது. மறுபக்கம் படித்தும் வேலையில்லாத இளைஞர் பட்டாளம் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வந்தது.

செயற்கையாக உருவாக்கிய இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நிரந்தரமாக நடைபெறவேண்டிய வேலைகளுக்குத் தற்காலிக அடிப்படையில் ஆட்களை நியமனம் செய்து சுரண்டுவதற்கு அரசாங்கம் கண்டுபிடித்த உத்திகளுள் ஒன்றுதான் இந்த மணிக்கூலி முறை. இத்தனை நாட்கள் தற்காலிகமாக வேலை செய்தால் நிரந்தரம் செய்யவேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புகளை எல்லாம் கடாசி எறிந்துவிட்டது அரசாங்கம். ஆனாலும் உச்ச நீதிமன்றம் மௌனம் காக்கிறது. சுமங்கலித் திட்டம் போன்ற கொடிய சுரண்டல் வடிவங்கள் உருவானதற்கும், நீடிப்பதற்கும் இந்த மௌனம்தான் காரணம்.

கான்ட்ராக்ட், அப்ரண்டீஸ், காஷூவல், ட்ரெய்னி என்று விதவிதமாக உழைப்புச் சுரண்டலை நடத்திவந்த அரசாங்கம், தபால் தந்தித் துறையில் கடைபிடித்த வடிவம் ஆர்.டி.பி. என்கிற மணிக்கூலி முறை. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்புகளில் அதிகபட்ச மதிப்பெண் எடுத்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைத் தேர்வு செய்த அரசாங்கம் எங்களை மணிக்கூலிகளாக வைத்து பல வருடங்கள் சுரண்டிவிட்டு பிறகு பணி நிரந்தரம் வழங்கியது. இந்த உள் விவகாரம் தெரியாமல் அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரசாங்க உத்தியோகம் என்று வந்து மாட்டிக்கொண்டோம்.  

மணிக்கூலிகளாகிய எங்களுக்கு மாதச்சம்பளம் இவ்வளவு என்கிற நிர்ணயம் எதுவும் கிடையாது. யாராவது விடுமுறை எடுத்துக்கொண்டால் அவர்களது வேலையை எங்களுக்குக் கொடுப்பார்கள். அதற்காக, அலுவலக வாயிலில் காத்துக் கிடக்க வேண்டும். தினமும் வேலை கிடைக்கும் என்கிற உத்திரவாதம் கிடையாது. சில நாட்களில் 12 மணி நேரத்திற்கும் மேலாகவும்கூட பார்க்க வேண்டிவரும். ஆனால், எட்டுமணி நேரமே கணக்கில் எடுக்கப்படும். மணிக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு மாதமொருமுறை கூலி தருவார்கள். வார ஓய்வு கிடையாது, வேறு சலுகைகளோ உரிமைகளோ கிடையாது. எங்களைப்போலவே லைன் வேலைகளில் கேங் மஸ்தூர்களும் அஞ்சல் பகுதியில் ஈ.டி.க்கள் என்கிற புறநிலை ஊழியர்களும் அல்லல்பட்டு வந்தார்கள். வேலையில்லாமல் அல்லாடுவதற்கு இதுவாச்சும் கிடைச்சுதே என்று எங்களுக்கு நாங்களே சொல்லிக்கொள்ளும் சமாதானம்தான் அரசாங்கத்தின் பலமாக இருந்தது. ஒரு அரசாங்கம் எவ்வளவு பெரியது? ஆனால், அது எங்களைப்போன்ற எளிய மனிதர்களை இரக்கமின்றிச் சுரண்டுவதற்காகத் தனது வலிய அதிகாரங்களைப் பயன்படுத்தியது.

அரசாங்கம், ஒரு முன்மாதிரியான முதலாளியாக (மாடல் எம்ப்ளாயர்) இருந்து தனது தொழிலாளர்களைக் கண்ணியமாக நடத்தும் என்று சுதந்திரப் போராட்டக் காலத்தில் தரப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக, இப்படி மோசமான பல முன்னுதாரணங்களை இந்த நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதாய் அரசாங்கமே இருக்கும்போது, ஒசூர் தொழிற்பேட்டையின் முதலாளிகள் மட்டும் நியாயவான்களாகவா இருந்திருக்கப் போகிறார்கள் என்று நீங்கள் யூகிப்பது சரிதான். அவர்கள் பத்துக் கைகளால் உழைத்துவிட்டு வருகிற தொழிலாளிக்கு, ஒரு கையளவுக்குக் கொடுப்பதற்கும் மனம் அற்றவர்களாக இருந்தார்கள். 80 லட்சம் ரூபாய் செலவில் கோயிலுக்குத் தங்கக் கதவு காணிக்கை செலுத்தும் விஜய் மல்லையா தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்குச் சம்பளம் தராமல் உதட்டைப் பிதுக்குவதுபோலத்தான் ஒசூர் தொழிற்பேட்டையின் பெரும்பாலான முதலாளிகள் இருந்தார்கள்.

ஒசூரின் தொழிற்பேட்டை என்பது ஒசூரிலிருந்து பெங்களூர், பாகலூர், பேரிகை, தளி, கெலமங்கலம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை ஒட்டிய பெரும்பரப்பில் விரிந்துள்ளது. நில உரிமைகள் தொடர்பான விழிப்பு உணர்வு வளரப்பெறாத 1970-களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மலிவான விலை கொடுத்தும் சட்டங்களைக் காட்டி மிரட்டியும் தொழிற்பேட்டைக்காகக் கையகப்படுத்திய அரசு இந்த மண்ணின் பூர்வகுடிகளை நிலமற்றவர்களாக்கியது. அவர்களது நிலத்தில் உருவான தொழிற்பேட்டையை அவர்களுக்கு அன்னியமாக்கியது. இந்தப் பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தப்போவதாகக் கூறிக்கொண்டு துவக்கப்பட்ட இந்தத் தொழிற்பேட்டையில் அவர்களது அறிவையும், உழைப்பையும், ஆற்றல்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு தொழிற்சாலைகூட இன்றுவரை இங்கு வரவேயில்லை. உள்ளுர் சமூகத்தை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டுத்தான் 'வளர்ச்சித் திட்டங்கள்’ எப்போதும் நிறைவேற்றப்படுகின்றன என்பதற்கு ஒசூர் தொழிற்பேட்டையும் விதிவிலக்கல்ல.

மக்களது வரிப்பணத்தைச் செலவிட்டு மின்சாரம், சாலை, நீராதாரம் ஆகிய உள் கட்டுமானங்களுடன் உருவாக்கப்பட்டிருந்த தொழிற்பேட்டையில் இடத்தையும், மக்களிடமிருந்து அரசு திரட்டியிருந்த வங்கிச் சேமிப்புகளிலிருந்து கடனையும், மானியத்தையும் பெற்றுக்கொண்டு ஒசூரில் தொடங்கப்பட்டத் தொழிற்சாலைகள் பல்வேறு வரிவிலக்குகளையும் பெற்றிருந்தன.

வரி விடுமுறையைப்போலவே குறிப்பிட்ட காலம்வரை கடன் தவணையைச் செலுத்தாமல் இருக்கவும் விடுமுறை தரப்பட்டிருந்தது. இவ்வளவு இனாம்களும் சலுகைகளும் போதாது என்று, முதல் ஐந்தாண்டுகளுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்கள் எதையும் அமல்படுத்தாமல் இருப்பதற்கான ஏற்பாட்டையும் அரசாங்கம் செய்து கொடுத்திருந்தது. வெறும் கட்டடங்களாகவும் இயந்திரங்களாகவும் நிறுவப்பட்டு உயிரற்றுக் கிடந்த தொழிற்சாலைகள் தொழிலாளிகளின் கைபட்ட பிறகே உயிர்பெற்றன. யார் எத்தனை கோடிகளை முதலீடு செய்து எவ்வளவு பெரிய தொழிற்சாலையைக் கட்டியிருந்தாலும் தொழிலாளர்கள் தம் அறிவையும் உழைப்பையும்கொண்டு உற்பத்தியில் இறங்கும்போதுதான் அதற்கொரு பயன் மதிப்பு உருவாகிறது. ஆனால், இந்த எளிய உண்மையை யார்தான் ஒத்துக்கொள்கிறார்கள்?

உள்ளுர் சமூகத்தை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டுத் தான் 'வளர்ச்சித் திட்டங்கள்’ எப்போதும் நிறைவேற்றப் படுகின்றன என்பதற்கு ஒசூர் தொழிற்பேட்டையும் விதிவிலக்கல்ல.

எல்லாச்சாலைகளும் ஒசூர் நோக்கி என்பதுபோல இருந்த காலகட்டம் அது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து குவிந்தார்கள். தொழிற்பேட்டையை உருவாக்கிய அரசாங்கமோ, தொழிற்சாலைகளை நிறுவிய முதலாளிகளோ இங்கு வந்து குவிந்த தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு எந்த விதத்திலும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாரில்லை. திடுமெனப் பெருகிய மக்கள் தொகைக்கு ஏற்ற வீடுகளோ வேறு அடிப்படைக் கட்டமைப்புகளோ ஒசூருக்குள் இல்லை. ஏற்கெனவே இருந்த ஒரு சின்னஞ்சிறு நகரத்தை எவ்வளவு பேர் பங்கிட்டுக் கொள்ளமுடியும்? தமக்கென்று ஒசூரின் பூர்வக்குடிகள் பாதுகாத்து வைத்திருந்த வளங்களை வந்தேறிய தொழிலாளிகளோடு பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட உரசல் ஏதோவொரு வகையில் இன்றளவும் நீடிக்கிறது. (இந்த உளவியல் குறித்து 'தங்கத்திருவோட்டில் தவிட்டுப் பணியாரம்’ என்கிற கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன்)  

ஐ.டி.ஐ-யோ டிப்ளமோவோ முடித்துவிட்டு 17,18 வயதில் வேலைக்குச் சேர்ந்த அந்த முதல் தலைமுறைத் தொழிலாளர்கள், வரி கட்டாமலும் தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தாமலும் இருப்பதற்கான காலக்கெடு முடியும்போது திருமண வயதினை எட்டி இருந்தார்கள். ஆனால், அவர்களுக்குப் பணிநிரந்தம், ஊதிய உயர்வு, இன்னபிற சட்டப்பூர்வ உரிமைகளை வழங்கிட தொழிற்சாலை நிர்வாகங்கள் மறுத்துவந்ததால் மண வாழ்க்கைக்குள் நுழையத் தயங்கினர். மணம் முடித்தவர்கள் குடும்பச்செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். தன்னொத்த தொழிலாளர்களோடு ஏதாவதொரு அறையில் தங்கி வாடகையைப் பகிர்ந்துகொண்டு காலத்தை ஓட்டிவந்த அவர்கள் குடும்பஸ்தரானதும் தனியாக வீடு பிடிக்கவேண்டி இருந்தது. கடும்போட்டியினால் உயர்ந்துகொண்டிருந்த முன்பணத்தையும் வாடகையையும் கொடுப்பது அவர்களது சக்திக்கு மீறியதாய் இருந்தது. குடும்பத்திற்குள்ளேயே அவமானப்பட்டு குன்றிப்போகும் அவல நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.

தனிக்கட்டைகளாக வந்து சேர்ந்திருந்த முதல் தலைமுறைத் தொழிலாளர்களைக்கொண்டு உருவாகி வளர்ந்த தொழிற்பேட்டை,  தொழிலாளர் வாழ்வில் அந்தந்த காலத்துக்கு ஏற்ற மாற்றங்களையும், வளர்ச்சிகளையும், தேவைகளையும் வழங்குவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. எனவே ஒசூர், தொழிற்பேட்டை தொழிலாளர்களின் போராட்டக் களமாக மாறியது. வாலிபத்தின் ஆற்றல்மிக்க காலத்தை ஒசூர் தொழில்வளர்ச்சிக்கு ஈந்துவிட்ட அந்தத் தொழிலாளர்கள் எஞ்சிய காலத்தையும் இங்கேயேதான் கழிக்க வேண்டியிருந்தது. ஆனால், இயல்பாகத் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் போராட்டங்களுக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.

எங்கு உழைப்பைச் செலுத்துகிறோமோ அங்கிருந்தே நாம் வாழ்வதற்கான ஆதாரங்களை திரட்டிக்கொள்ளவேண்டும் என்பது தொழிற்சங்க வாதமல்ல, இயற்கையின் நீதி. ஆனால், இந்த இயற்கை நீதியை நிலைநிறுத்தத்தான் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் போராட வேண்டியிருக்கிறது. ஒசூரிலும் போராடினார்கள். அவர்கள் நடத்திய போராட்டங்களால்தான் ஒசூர் தொழிற்பேட்டை நிலைநிறுத்தப்பட்டது. தமது போராட்டங்களின் வழியே தொழிலாளர்கள் அடைந்த ஆதாயங்களை உட்கொண்டுதான் ஒசூரின் ஒவ்வொரு அங்குலமும் புதுப்பொலிவை எய்தியது. தொழிலாளர்களின் வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்தான் ஒசூரின் பணப்புழக்கமாகவும் பொருளாதாரமாகவும் அளவிடப்பட்டது. அவர்கள் கட்டிய வீடுகளால்தான் ஒசூரின் பரப்பளவு விரிந்தது, நிலமதிப்பும் கூடியது. அவர்களது குழந்தைகளுக்காகத்தான் இங்குக் கல்விச்சாலைகள் வந்தன. மருத்துவமனைகளும், உணவு விடுதிகளும், பல்பொருள் அங்காடிகளும், வங்கிகளும் இன்னபிற கடைகண்ணிகளும் அவர்களை நம்பியே திறக்கப்பட்டன. வண்டி வாகனப் போக்குவரத்துகளின் பெருக்கமும் அவர்களை முன்னிட்டுத்தான்.

ஒசூர் என்ற நகரத்தின் வரைபடத்திலும் குணநலன்களிலும் ஏற்பட்ட மாற்றங்களின் மையமாகத் தொழிலாளரது போராட்டங்கள் இருந்தன என்றால் அந்தப் போராட்டங்களின் மையமாக '45, சாந்திநகர்’ இருந்தது. அது ஒசூர் பகுதி தொழிற்சங்க இயக்கத்தின் முகவரி. இங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் பிறகு காமராசர் காலனிக்கு வீடுமாறிப் போய்விட்டாலும் '45, சாந்திநகர்’ குழுவாகவே அவர்கள் சுட்டப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள். ஒசூரை ஒரு தொழிலாளர் நகரமாய் குணரீதியாக உருமாற்றி அமைத்ததில் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் பெருமைமிக்க பங்கினை ஆற்றியிருக்கிறார்கள். தங்களது ஆலையோடு ஒடுங்கிப்போகாமல் அவர்கள் பல்வேறு ஆலைகளில் தொழிற்சங்கங்களை உருவாக்கி, வழிநடத்தி அந்தத் தொழிலாளர்களின் வாழ்நிலை மேம்படுவதற்காக உழைத்திருக்கிறார்கள். சக்திவேல் என்கிற தங்கள் தோழனைப் பலிகொடுத்தாலும் 'போராடினால் வெல்ல முடியும்’ என்ற நம்பிக்கையை உருவாக்கினார்கள். இது வாழத்தகுந்த இடம்தான் என்று தமது போர்க்குணத்தால் நிரூபித்துக் காட்டியதன் மூலம் இங்கு நிகழ்ந்த எல்லா மாற்றங்களுக்கும் உள்ளுறையாக இருந்தார்கள்.

தொழிற்சங்கவாதிகளாகச் சுருங்கிப்போகாமல் சுவரெழுத்துக்காரர்களாகவும் பேச்சாளர்களாகவும் ஆவேசமாக கோஷமிடுகிறவர்களாகவும் தீக்கதிர், செம்மலர், சிந்தா, தேசாபிமானி, சி.ஐ.டி.யு. செய்தி போன்ற பத்திரிகைகளை விற்பவர்களாகவும், கையெழுத்துப் பத்திரிகை வெளியிடுகிறவர்களாகவும் மொட்டை மாடிகளில் கவியரங்கங்களையும் அரசியல் விவாதங்களையும் நடத்துகிறவர்களாகவும் பன்முக ஆற்றல்களோடு இயங்கி நகரத்தை உயிர்ப்போடு வைத்திருந்த இந்தத் தோழர்களுடன் உணர்வுபூர்வமாக ஒன்றியதிலிருந்துதான் எனது ஒசூர் வாழ்க்கையைப் பேசவேண்டி இருக்கும்.

( பேசுவேன்...)

நன்றி: en.vikatan.com

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...