வியாழன், அக்டோபர் 25

ஒசூரெனப்படுவது யாதெனின் : 6 - ஆதவன் தீட்சண்யா

எங்கு உழைப்பைச் செலுத்துகிறோமோ அங்கிருந்தே நாம் வாழ்வதற்கான ஆதாரங்களை திரட்டிக்கொள்ள வேண்டும் என்பது தொழிற்சங்க வாதமல்ல, இயற்கையின் நீதி. ஆனால், இந்த இயற்கை நீதியை நிலைநிறுத்தத்தான் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் போராட வேண்டியிருக்கிறது. ஒசூரிலும் போராடினார்கள். அவர்கள் நடத்திய போராட்டங்களால்தான் ஒசூர் தொழிற்பேட்டை நிலைநிறுத்தப்பட்டது. தமது போராட்டங்களின் வழியே தொழிலாளர்கள் அடைந்த ஆதாயங்களை உட்கொண்டுதான் ஒசூரின் ஒவ்வொரு அங்குலமும் புதுப்பொலிவை எய்தியது.
''ரு தனி மனிதரின் வாழ்வில் அவரது வசிப்பிடம் வகிக்கும் பாத்திரம் மிக முக்கியமானது. அவருக்கு வாய்க்கும் புழங்கு எல்லையின் குறுக்கம் அல்லது நீட்டமானது அவரது சிந்தனை முறையையும் செயற் களங்களையும் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக அமைகிறது. இது வெறுமனே இடம் பற்றிய பிரச்னையல்ல, ஒருவரது சூழல் எவற்றாலும் யாராலும் நிரப்பப்பட்டிருக்கிறது அல்லது வெற்றிடமாய் விடப்பட்டிருக்கிறது என்பதோடு தொடர்புடையது. ஐம்பதாவது வயதை இன்னும் சில மாதங்களில் தொடவிருக்கும் நான், எனது வாழ்நாளின் சரிபாதிக்கும் மேலான காலத்தை ஒசூர் என்னும் பொதுப் பெயரில் சுட்டப்படும் இந்தத் தனித்துவமான நிலப்பரப்பில்தான் கழித்திருக்கிறேன்.

சென்னை, கோவை, கன்னியாகுமரி நகரங்களை பெங்களூருடன் இணைக்கிற தேசிய நெடுஞ்சாலையில் வருகிறவர்கள், ஒண்ணுக்கடிக்க இறங்கும் இடம் என்று இழிவுபடுத்தப்பட்ட காலத்தில் இருந்து அந்த நகரங்களுக்கு இணையாக விரிவு பெற்றுள்ள இன்றைய நாள் வரை அதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இளம்பிராயம் முழுவதையும் ஒரு ஒண்டிக்கொட்டாய்க்குள் கழித்துவிட்டு வந்திருந்த எனக்கு இந்த நகரமும் அதன் சுற்றுப்புற ஊர்களும் வழங்கிய இடம் என்ன என்று பரிசீலிப்பதற்கு இதுபோதுமான கால அளவுதான்.

தேன்கனிக்கோட்டையில் இருந்ததைப்போலவே ஒசூர் அண்ணா நகரிலும் அப்போது ஒரு பேச்சிலர் பாரடைஸ் இருந்தது. வந்தாரை எல்லாம் வரவேற்று உபசரிக்கும் அளவுக்கு விசாலம்கொண்ட ஒரு பெரிய ஓட்டு வீடு அது. மிடிகிரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்குச் சொந்தமான அந்த வீடு 10 வருடங்களுக்கும் மேலாகத் தொலைபேசி ஊழியர்களிடம் இருந்துவந்தது. புதிதாக வருகிறவர்கள் எல்லோருக்குமே அந்த வீடுதான் அடைக்கலமாய் இருந்தது. சுற்றுவட்டார ஊர்களில் பணியாற்றும் ஊழியர்கள் கடைசி பஸ்ஸை தவறவிடும் இரவுகளில் உரிமையோடு தங்கும் இடமும் அதுதான். தண்ணீர் இல்லாத வீடு அது. தெருக்குழாய் ஒன்றில் எப்போதாவது தண்ணீர்வரும். ஆனால், அங்கிருந்த அடிபிடியில் பங்கெடுக்கக் கூசிய பசங்க தொலைபேசி நிலையத்துக்கு வந்து குளித்துவிட்டு ஆளுக்கொரு குடம் தண்ணீரைச் சமையலுக்கு எடுத்துப்போவார்கள். விருந்தாளிக்கும் இதுதான் நியமம். கிருஷ்ணவேணி என்கிற பாட்டி பெரிய தேக்ஸா வைத்து மூன்று வேளையும் சமைத்துப் போட்டுக்கொண்டு இருந்தார்.

ஒசூருக்கு மாற்றலில் வருவதற்கு முன்பாகவே அந்த வீட்டில் தங்கியிருந்த இளங்கோ, பாலன், கிருஷ்ணமூர்த்தி, மணவாளன், ரமேஷ், முருகன், தியாகி ரவி, சுப்பிரமணியம், ரத்தினவேல் ஆகிய அனைவருமே எனக்கு அறிமுகமாகி இருந்தனர். நாங்கள் அனைவருமே ஒரே தொழிற் சங்கத்தில் கே.ஜி.போஸ் அணியின் அங்கத்தினர்களாக இருந்தோம். எனவே ஒசூருக்கு மாற்றலாகி வந்தபோது நானும் அவர்களுடனே தங்குவதில் சிக்கலேதும் இல்லாமல் போனது. அவர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்களுக்குச் சற்றேறக்குறைய என் வயதுதான். தவிர, அவர்களும் என்னைப்போலவே மணிக்கூலியாக இருந்தவர்கள்/ இருப்பவர்கள்.

நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதாக அலட்டிக்கொண்டு இந்திராகாந்தி கொண்டுவந்திருந்த ஆளெடுப்புத் தடைச்சட்டம் தொடர்ந்து அமலில் இருந்த காலமது (அவரது மகன், மருமகள், பேரக்குழந்தைகள் காலம்வரை நீடிக்கிறது. ஆட்சிகள் மாறினாலும் இந்தத் தடைச்சட்டம் மாறவில்லை. 'தேர்தல் சின்னம் ஆயிரமிருக்கும் சவரக் கத்திதான் ரொம்பப் பொருத்தம்’ என்கிற நவகவியின் பாடல் வரி நினைவுக்குவருகிறது). எனவே மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ற விகிதத்தில் ஆட்கள் நியமிக்கப்படாமல் அரசு அலுவலகங்கள் வேலைப் பளுவால் திணறிக்கொண்டிருந்தன. அரசால் வழங்கப்பட்டுவந்த சேவைகளின் தரத்தில் அரிமானம் ஏற்பட்டு மக்களிடையே வெறுப்பு உருவாகக் காரணமாகியது. மறுபக்கம் படித்தும் வேலையில்லாத இளைஞர் பட்டாளம் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வந்தது.

செயற்கையாக உருவாக்கிய இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, நிரந்தரமாக நடைபெறவேண்டிய வேலைகளுக்குத் தற்காலிக அடிப்படையில் ஆட்களை நியமனம் செய்து சுரண்டுவதற்கு அரசாங்கம் கண்டுபிடித்த உத்திகளுள் ஒன்றுதான் இந்த மணிக்கூலி முறை. இத்தனை நாட்கள் தற்காலிகமாக வேலை செய்தால் நிரந்தரம் செய்யவேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புகளை எல்லாம் கடாசி எறிந்துவிட்டது அரசாங்கம். ஆனாலும் உச்ச நீதிமன்றம் மௌனம் காக்கிறது. சுமங்கலித் திட்டம் போன்ற கொடிய சுரண்டல் வடிவங்கள் உருவானதற்கும், நீடிப்பதற்கும் இந்த மௌனம்தான் காரணம்.

கான்ட்ராக்ட், அப்ரண்டீஸ், காஷூவல், ட்ரெய்னி என்று விதவிதமாக உழைப்புச் சுரண்டலை நடத்திவந்த அரசாங்கம், தபால் தந்தித் துறையில் கடைபிடித்த வடிவம் ஆர்.டி.பி. என்கிற மணிக்கூலி முறை. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்புகளில் அதிகபட்ச மதிப்பெண் எடுத்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைத் தேர்வு செய்த அரசாங்கம் எங்களை மணிக்கூலிகளாக வைத்து பல வருடங்கள் சுரண்டிவிட்டு பிறகு பணி நிரந்தரம் வழங்கியது. இந்த உள் விவகாரம் தெரியாமல் அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரசாங்க உத்தியோகம் என்று வந்து மாட்டிக்கொண்டோம்.  

மணிக்கூலிகளாகிய எங்களுக்கு மாதச்சம்பளம் இவ்வளவு என்கிற நிர்ணயம் எதுவும் கிடையாது. யாராவது விடுமுறை எடுத்துக்கொண்டால் அவர்களது வேலையை எங்களுக்குக் கொடுப்பார்கள். அதற்காக, அலுவலக வாயிலில் காத்துக் கிடக்க வேண்டும். தினமும் வேலை கிடைக்கும் என்கிற உத்திரவாதம் கிடையாது. சில நாட்களில் 12 மணி நேரத்திற்கும் மேலாகவும்கூட பார்க்க வேண்டிவரும். ஆனால், எட்டுமணி நேரமே கணக்கில் எடுக்கப்படும். மணிக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு மாதமொருமுறை கூலி தருவார்கள். வார ஓய்வு கிடையாது, வேறு சலுகைகளோ உரிமைகளோ கிடையாது. எங்களைப்போலவே லைன் வேலைகளில் கேங் மஸ்தூர்களும் அஞ்சல் பகுதியில் ஈ.டி.க்கள் என்கிற புறநிலை ஊழியர்களும் அல்லல்பட்டு வந்தார்கள். வேலையில்லாமல் அல்லாடுவதற்கு இதுவாச்சும் கிடைச்சுதே என்று எங்களுக்கு நாங்களே சொல்லிக்கொள்ளும் சமாதானம்தான் அரசாங்கத்தின் பலமாக இருந்தது. ஒரு அரசாங்கம் எவ்வளவு பெரியது? ஆனால், அது எங்களைப்போன்ற எளிய மனிதர்களை இரக்கமின்றிச் சுரண்டுவதற்காகத் தனது வலிய அதிகாரங்களைப் பயன்படுத்தியது.

அரசாங்கம், ஒரு முன்மாதிரியான முதலாளியாக (மாடல் எம்ப்ளாயர்) இருந்து தனது தொழிலாளர்களைக் கண்ணியமாக நடத்தும் என்று சுதந்திரப் போராட்டக் காலத்தில் தரப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக, இப்படி மோசமான பல முன்னுதாரணங்களை இந்த நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதாய் அரசாங்கமே இருக்கும்போது, ஒசூர் தொழிற்பேட்டையின் முதலாளிகள் மட்டும் நியாயவான்களாகவா இருந்திருக்கப் போகிறார்கள் என்று நீங்கள் யூகிப்பது சரிதான். அவர்கள் பத்துக் கைகளால் உழைத்துவிட்டு வருகிற தொழிலாளிக்கு, ஒரு கையளவுக்குக் கொடுப்பதற்கும் மனம் அற்றவர்களாக இருந்தார்கள். 80 லட்சம் ரூபாய் செலவில் கோயிலுக்குத் தங்கக் கதவு காணிக்கை செலுத்தும் விஜய் மல்லையா தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்குச் சம்பளம் தராமல் உதட்டைப் பிதுக்குவதுபோலத்தான் ஒசூர் தொழிற்பேட்டையின் பெரும்பாலான முதலாளிகள் இருந்தார்கள்.

ஒசூரின் தொழிற்பேட்டை என்பது ஒசூரிலிருந்து பெங்களூர், பாகலூர், பேரிகை, தளி, கெலமங்கலம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை ஒட்டிய பெரும்பரப்பில் விரிந்துள்ளது. நில உரிமைகள் தொடர்பான விழிப்பு உணர்வு வளரப்பெறாத 1970-களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மலிவான விலை கொடுத்தும் சட்டங்களைக் காட்டி மிரட்டியும் தொழிற்பேட்டைக்காகக் கையகப்படுத்திய அரசு இந்த மண்ணின் பூர்வகுடிகளை நிலமற்றவர்களாக்கியது. அவர்களது நிலத்தில் உருவான தொழிற்பேட்டையை அவர்களுக்கு அன்னியமாக்கியது. இந்தப் பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தப்போவதாகக் கூறிக்கொண்டு துவக்கப்பட்ட இந்தத் தொழிற்பேட்டையில் அவர்களது அறிவையும், உழைப்பையும், ஆற்றல்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒரு தொழிற்சாலைகூட இன்றுவரை இங்கு வரவேயில்லை. உள்ளுர் சமூகத்தை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டுத்தான் 'வளர்ச்சித் திட்டங்கள்’ எப்போதும் நிறைவேற்றப்படுகின்றன என்பதற்கு ஒசூர் தொழிற்பேட்டையும் விதிவிலக்கல்ல.

மக்களது வரிப்பணத்தைச் செலவிட்டு மின்சாரம், சாலை, நீராதாரம் ஆகிய உள் கட்டுமானங்களுடன் உருவாக்கப்பட்டிருந்த தொழிற்பேட்டையில் இடத்தையும், மக்களிடமிருந்து அரசு திரட்டியிருந்த வங்கிச் சேமிப்புகளிலிருந்து கடனையும், மானியத்தையும் பெற்றுக்கொண்டு ஒசூரில் தொடங்கப்பட்டத் தொழிற்சாலைகள் பல்வேறு வரிவிலக்குகளையும் பெற்றிருந்தன.

வரி விடுமுறையைப்போலவே குறிப்பிட்ட காலம்வரை கடன் தவணையைச் செலுத்தாமல் இருக்கவும் விடுமுறை தரப்பட்டிருந்தது. இவ்வளவு இனாம்களும் சலுகைகளும் போதாது என்று, முதல் ஐந்தாண்டுகளுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்கள் எதையும் அமல்படுத்தாமல் இருப்பதற்கான ஏற்பாட்டையும் அரசாங்கம் செய்து கொடுத்திருந்தது. வெறும் கட்டடங்களாகவும் இயந்திரங்களாகவும் நிறுவப்பட்டு உயிரற்றுக் கிடந்த தொழிற்சாலைகள் தொழிலாளிகளின் கைபட்ட பிறகே உயிர்பெற்றன. யார் எத்தனை கோடிகளை முதலீடு செய்து எவ்வளவு பெரிய தொழிற்சாலையைக் கட்டியிருந்தாலும் தொழிலாளர்கள் தம் அறிவையும் உழைப்பையும்கொண்டு உற்பத்தியில் இறங்கும்போதுதான் அதற்கொரு பயன் மதிப்பு உருவாகிறது. ஆனால், இந்த எளிய உண்மையை யார்தான் ஒத்துக்கொள்கிறார்கள்?

உள்ளுர் சமூகத்தை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டுத் தான் 'வளர்ச்சித் திட்டங்கள்’ எப்போதும் நிறைவேற்றப் படுகின்றன என்பதற்கு ஒசூர் தொழிற்பேட்டையும் விதிவிலக்கல்ல.

எல்லாச்சாலைகளும் ஒசூர் நோக்கி என்பதுபோல இருந்த காலகட்டம் அது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து குவிந்தார்கள். தொழிற்பேட்டையை உருவாக்கிய அரசாங்கமோ, தொழிற்சாலைகளை நிறுவிய முதலாளிகளோ இங்கு வந்து குவிந்த தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு எந்த விதத்திலும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தயாரில்லை. திடுமெனப் பெருகிய மக்கள் தொகைக்கு ஏற்ற வீடுகளோ வேறு அடிப்படைக் கட்டமைப்புகளோ ஒசூருக்குள் இல்லை. ஏற்கெனவே இருந்த ஒரு சின்னஞ்சிறு நகரத்தை எவ்வளவு பேர் பங்கிட்டுக் கொள்ளமுடியும்? தமக்கென்று ஒசூரின் பூர்வக்குடிகள் பாதுகாத்து வைத்திருந்த வளங்களை வந்தேறிய தொழிலாளிகளோடு பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட உரசல் ஏதோவொரு வகையில் இன்றளவும் நீடிக்கிறது. (இந்த உளவியல் குறித்து 'தங்கத்திருவோட்டில் தவிட்டுப் பணியாரம்’ என்கிற கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன்)  

ஐ.டி.ஐ-யோ டிப்ளமோவோ முடித்துவிட்டு 17,18 வயதில் வேலைக்குச் சேர்ந்த அந்த முதல் தலைமுறைத் தொழிலாளர்கள், வரி கட்டாமலும் தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தாமலும் இருப்பதற்கான காலக்கெடு முடியும்போது திருமண வயதினை எட்டி இருந்தார்கள். ஆனால், அவர்களுக்குப் பணிநிரந்தம், ஊதிய உயர்வு, இன்னபிற சட்டப்பூர்வ உரிமைகளை வழங்கிட தொழிற்சாலை நிர்வாகங்கள் மறுத்துவந்ததால் மண வாழ்க்கைக்குள் நுழையத் தயங்கினர். மணம் முடித்தவர்கள் குடும்பச்செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். தன்னொத்த தொழிலாளர்களோடு ஏதாவதொரு அறையில் தங்கி வாடகையைப் பகிர்ந்துகொண்டு காலத்தை ஓட்டிவந்த அவர்கள் குடும்பஸ்தரானதும் தனியாக வீடு பிடிக்கவேண்டி இருந்தது. கடும்போட்டியினால் உயர்ந்துகொண்டிருந்த முன்பணத்தையும் வாடகையையும் கொடுப்பது அவர்களது சக்திக்கு மீறியதாய் இருந்தது. குடும்பத்திற்குள்ளேயே அவமானப்பட்டு குன்றிப்போகும் அவல நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.

தனிக்கட்டைகளாக வந்து சேர்ந்திருந்த முதல் தலைமுறைத் தொழிலாளர்களைக்கொண்டு உருவாகி வளர்ந்த தொழிற்பேட்டை,  தொழிலாளர் வாழ்வில் அந்தந்த காலத்துக்கு ஏற்ற மாற்றங்களையும், வளர்ச்சிகளையும், தேவைகளையும் வழங்குவதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. எனவே ஒசூர், தொழிற்பேட்டை தொழிலாளர்களின் போராட்டக் களமாக மாறியது. வாலிபத்தின் ஆற்றல்மிக்க காலத்தை ஒசூர் தொழில்வளர்ச்சிக்கு ஈந்துவிட்ட அந்தத் தொழிலாளர்கள் எஞ்சிய காலத்தையும் இங்கேயேதான் கழிக்க வேண்டியிருந்தது. ஆனால், இயல்பாகத் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் போராட்டங்களுக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.

எங்கு உழைப்பைச் செலுத்துகிறோமோ அங்கிருந்தே நாம் வாழ்வதற்கான ஆதாரங்களை திரட்டிக்கொள்ளவேண்டும் என்பது தொழிற்சங்க வாதமல்ல, இயற்கையின் நீதி. ஆனால், இந்த இயற்கை நீதியை நிலைநிறுத்தத்தான் உலகம் முழுவதும் தொழிலாளர்கள் போராட வேண்டியிருக்கிறது. ஒசூரிலும் போராடினார்கள். அவர்கள் நடத்திய போராட்டங்களால்தான் ஒசூர் தொழிற்பேட்டை நிலைநிறுத்தப்பட்டது. தமது போராட்டங்களின் வழியே தொழிலாளர்கள் அடைந்த ஆதாயங்களை உட்கொண்டுதான் ஒசூரின் ஒவ்வொரு அங்குலமும் புதுப்பொலிவை எய்தியது. தொழிலாளர்களின் வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்தான் ஒசூரின் பணப்புழக்கமாகவும் பொருளாதாரமாகவும் அளவிடப்பட்டது. அவர்கள் கட்டிய வீடுகளால்தான் ஒசூரின் பரப்பளவு விரிந்தது, நிலமதிப்பும் கூடியது. அவர்களது குழந்தைகளுக்காகத்தான் இங்குக் கல்விச்சாலைகள் வந்தன. மருத்துவமனைகளும், உணவு விடுதிகளும், பல்பொருள் அங்காடிகளும், வங்கிகளும் இன்னபிற கடைகண்ணிகளும் அவர்களை நம்பியே திறக்கப்பட்டன. வண்டி வாகனப் போக்குவரத்துகளின் பெருக்கமும் அவர்களை முன்னிட்டுத்தான்.

ஒசூர் என்ற நகரத்தின் வரைபடத்திலும் குணநலன்களிலும் ஏற்பட்ட மாற்றங்களின் மையமாகத் தொழிலாளரது போராட்டங்கள் இருந்தன என்றால் அந்தப் போராட்டங்களின் மையமாக '45, சாந்திநகர்’ இருந்தது. அது ஒசூர் பகுதி தொழிற்சங்க இயக்கத்தின் முகவரி. இங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் பிறகு காமராசர் காலனிக்கு வீடுமாறிப் போய்விட்டாலும் '45, சாந்திநகர்’ குழுவாகவே அவர்கள் சுட்டப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள். ஒசூரை ஒரு தொழிலாளர் நகரமாய் குணரீதியாக உருமாற்றி அமைத்ததில் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள் பெருமைமிக்க பங்கினை ஆற்றியிருக்கிறார்கள். தங்களது ஆலையோடு ஒடுங்கிப்போகாமல் அவர்கள் பல்வேறு ஆலைகளில் தொழிற்சங்கங்களை உருவாக்கி, வழிநடத்தி அந்தத் தொழிலாளர்களின் வாழ்நிலை மேம்படுவதற்காக உழைத்திருக்கிறார்கள். சக்திவேல் என்கிற தங்கள் தோழனைப் பலிகொடுத்தாலும் 'போராடினால் வெல்ல முடியும்’ என்ற நம்பிக்கையை உருவாக்கினார்கள். இது வாழத்தகுந்த இடம்தான் என்று தமது போர்க்குணத்தால் நிரூபித்துக் காட்டியதன் மூலம் இங்கு நிகழ்ந்த எல்லா மாற்றங்களுக்கும் உள்ளுறையாக இருந்தார்கள்.

தொழிற்சங்கவாதிகளாகச் சுருங்கிப்போகாமல் சுவரெழுத்துக்காரர்களாகவும் பேச்சாளர்களாகவும் ஆவேசமாக கோஷமிடுகிறவர்களாகவும் தீக்கதிர், செம்மலர், சிந்தா, தேசாபிமானி, சி.ஐ.டி.யு. செய்தி போன்ற பத்திரிகைகளை விற்பவர்களாகவும், கையெழுத்துப் பத்திரிகை வெளியிடுகிறவர்களாகவும் மொட்டை மாடிகளில் கவியரங்கங்களையும் அரசியல் விவாதங்களையும் நடத்துகிறவர்களாகவும் பன்முக ஆற்றல்களோடு இயங்கி நகரத்தை உயிர்ப்போடு வைத்திருந்த இந்தத் தோழர்களுடன் உணர்வுபூர்வமாக ஒன்றியதிலிருந்துதான் எனது ஒசூர் வாழ்க்கையைப் பேசவேண்டி இருக்கும்.

( பேசுவேன்...)

நன்றி: en.vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...