புதிய சூழலை விளங்கிக்கொள்வது, அதனோடு பொருந்திக்கொள்வது, மாற்றங்களுக்கு உட்படுவதற்கு தன்னையே அனுமதிப்பது என்கிற அணுகுமுறை புழு பூச்சிகளிடம்கூட இயல்பாகக் காணப்படுகிறது. அதனிலும் மேம்பட்டதொரு அணுகுமுறையை வெளிப்படுத்தும் அவசியம் மனிதர்களுக்கு இருக்கிறது. சூழலுக்கு இசைவாக மாறிக்கொள்ள முடிகிறவர்கள் தமக்கிசைவாகச் சூழலை மாற்றிக்கொள்ளும் சூட்சுமங்களை அறிகிறார்கள். ஊரோடும் உள்ளூர் மக்களோடும் உறவாடி ஒன்ற முடிந்தவர்கள் இந்த ஊரையும் இந்தப் பகுதி மக்களையும் புதிய சொந்தங்களாகப் பெற்றார்கள். அப்படியான நல்வாய்ப்புகளைப் பெற்றவர்களில் நானும் ஒருவன். ஆனாலும் இந்த வட்டாரச் சமூகத்தை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டு இருக்கிறேன் என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் இருந்துவருகிறது.
'எங்க ஊருக்கு
நீங்கள் வந்துதான் ஆகவேண்டும் என்று எங்களில்
யாரையும் ஒசூர் பகுதி
மக்கள் வெத்தலைப்பாக்கு வைத்து வரவேற்கவில்லை. நாங்களாகத்தான் எங்களது உழைப்பைவிற்று வாழ்வதற்காகக் கிளம்பி வந்துவிட்டிருந்தோம் இந்த ஊருக்கு. சாவது எங்கே என்பது
யாருக்கும் தெரிந்திருக்காவிட்டாலும் வாழ்வது இங்குதான் என்பது தெளிவாகிவிட்டது. எனவே 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு
போலாகுமா?’ என்று ஊர்ப்
புராணம் பாடும் மனநிலையில் இருந்து உடனடியாக விடுபட்டு ஒசூர்வாசியாகத் தகவமைந்து கொள்வதுதான் இங்கு வந்தேறிய
என் போன்றவர்களுக்குத் தேவையாய் இருந்தது. ஒரு கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான வாழ்வாதாரங்களை வழங்கி தனக்குள்ளேயே இருத்திக்கொள்வதற்கு எந்த வழிவகையையும் ஏற்படுத்தித் தராத சொந்த
ஊர் மகிமைகள் கற்பிதமானவை. தம்மோடு பிறந்து வளர்ந்தவர்கள் தம்மைவிட்டு வெளியேறிப்போவதைத் தடுத்தாட்கொள்ள எதையுமே கொடுப்பதற்கோ இழப்பதற்கோ தயாரில்லாத சொந்த ஊர்க்காரர்களைவிடவும் ஒசூர்பகுதி மக்கள் பலவகையிலும் மேலானவர்கள். ஒசூர் தொழிற்பேட்டைக்காகவும் இங்குவந்து சேர்ந்த மக்களுக்காகவும் இவர்கள் இழந்திருப்பது கொஞ்சநஞ்சமல்ல.
தமக்குத் தேவையான தவச தானியங்களையும்
காய்கனிகளையும் விளைவித்து உண்டு பன்னெடுங்காலமாய் வாழ்ந்துவந்த தமது பூர்வீக
மண்ணை இழந்தார்கள். காடுகளும், மலைகளும், ஏரிகளும் சூழ இயற்கையின்
ஒரு பகுதிபோல வாழ்ந்த வாழ்க்கையை இழந்தார்கள். இயற்கையின் கொடையாகப் பெற்றிருந்த சுத்தமான காற்றையும் மாசுபடாத நீரையும் இழந்தார்கள். கோடையிலும்கூட விசிறி தேவைப்படாத அளவுக்கு இந்தப் பரப்பில் ஊறியிருந்த குளிர்மையை இழந்தார்கள். வாழ்வதற்கான ஆதாரமென போற்றிக் கொண்டாடிய நிலத்தைப் பணமதிப்புள்ள பெருஞ்சரக்காக கீழ்மைப்படுத்தும் நிலைக்குத் தாழ்ந்தார்கள். நிலவியல் அமைப்பினால் மொழி, பண்பாட்டு ரீதியாகப் பெற்றிருந்த தனித்தன்மையை இழந்தார்கள். திடுமெனப் பெருத்த அயலார்க் கூட்டத்தால் ஏற்பட்ட சலனங்களால் இயல்பு குலைந்த இவர்கள் சமநிலைக்குத் திரும்பும் வாய்ப்பு இன்றுவரை ஏற்படவேயில்லை. தாம் பிறந்துவளர்ந்த தமக்கே தமக்கென இருந்த நிலப்பரப்பில் தங்களைச் சிறுபான்மையினராக உணரத்தலைப்பட்ட இவர்களுடைய மனவோட்டங்கள் இன்னும் எங்கும் பதிவு செய்யப்படாமல்
இருக்கின்றது. இவ்வளவையும் இழந்த உள்ளூர்ச் சமூகத்துக்கு வந்தேறிய சமூகம் என்னதான் கொடுத்தது, இவர்களுக்கும் அவர்களுக்குமான உறவும் ஊடாட்டமும் எவ்வாறாக அமைந்திருக்கிறது என்பதும்கூட இதுவரை பேசாப்பொருள்தான்.
'இந்த ஊர்ல
ஒழுங்கா வண்டி ஓட்டிட்டா
உலகத்துல எந்த ஊர்லேயும்
வண்டி ஓட்டிறலாம்... த்தூத்தேறிக்க... ஊரா இது’
என்கிற புகாரோடுதான் ஒவ்வொரு ஊரிலும் வண்டியோட்டிகள் இருப்பார்கள். இவ்வளவு அலுப்பும் சலிப்பும் இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் வண்டி ஓட்டுவதையும் நிறுத்துவதில்லை, அந்த ஊரைவிட்டுப்
போவதும் இல்லை. இவர்களைப்போலத்தான் ஒசூர் தேன்கனிக்கோட்டை
பகுதிக்கு வந்துசேர்ந்தவர்களில் ஒரு சிறுவீதத்தினரது மனநிலையும். இங்கு வந்தாகிவிட்டது.
இனி இங்குதான் இருந்தாகப் போகிறோம் என்றெல்லாம் அறிந்திருந்தாலும் எப்போதும் இந்தப் பகுதிமீது ஒரு திருப்தி
இன்மையை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். செல்லமாகத் திட்டுவதுபோலவும் சிலர் இதை
வெளிப்படுத்துவது உண்டு.
புதிய சூழலை
விளங்கிக்கொள்வது, அதனோடு பொருந்திக்கொள்வது, மாற்றங்களுக்கு உட்படுவதற்கு தன்னையே அனுமதிப்பது என்கிற அணுகுமுறை புழு பூச்சிகளிடம்கூட
இயல்பாகக் காணப்படுகிறது. அதனிலும் மேம்பட்டதொரு அணுகுமுறையை வெளிப்படுத்தும் அவசியம் மனிதர்களுக்கு இருக்கிறது. சூழலுக்கு இசைவாக மாறிக்கொள்ள முடிகிறவர்கள் தமக்கிசைவாகச் சூழலை மாற்றிக்கொள்ளும் சூட்சுமங்களை அறிகிறார்கள்.
ஊரோடும் உள்ளூர் மக்களோடும் உறவாடி ஒன்ற முடிந்தவர்கள் இந்த ஊரையும் இந்தப் பகுதி மக்களையும்
புதிய சொந்தங்களாகப் பெற்றார்கள். அப்படியான நல்வாய்ப்புகளைப் பெற்றவர்களில் நானும் ஒருவன். ஆனாலும் இந்த வட்டாரச்
சமூகத்தை எந்த அளவுக்குப்
புரிந்துகொண்டு இருக்கிறேன் என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் இருந்துவருகிறது.
ஒசூர் வட்டாரத்தின்
தனிச் சிறப்பையும் வரலாற்றையும் தொகுத்துச் சொல்லும் ஆழ்ந்தகன்ற ஞானத்தோடு பத்திரிகையாளர் (ஈநாடு) ராமச்சந்திரன் போன்றோர் இங்கிருக்கிறார்கள். தங்களது மண்ணே தங்களிடம்
இல்லாமல் போய்விட்டபிறகு, அதன் பெருமையைப்பேசி என்ன ஆகப்போகிறது என்கிற ஆதங்கத்தினாலோ என்னவோ எவ்வளவோ வற்புறுத்தியும் அவர், தான்
அறிந்திருப்பவற்றை எழுத மறுக்கிறார்.
அவரிடம் கேட்டுப்பெற்ற தகவல்களைத் தாங்களே கண்டறிந்தது போன்று தங்களது ஆய்வேடுகளில் எழுதிக்கொண்டு அவரது பெயரைச்
சிலர் இருட்டடிப்பு செய்ததினால் ஏற்பட்ட விரக்திகூட காரணமாக இருக்கலாம். ஆனாலும் என்றாவது ஒருநாள் அவர் எழுதக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இதேபோல, நிலவுடைமைச் சார்ந்த உறவுகளாலும் மதிப்பீடுகளாலும் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகத்தில்
நவீனத் தொழில்கள் என்னவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்று அறிவதற்கு
ஒசூரை மையப்படுத்தி ஆய்வுகள் செய்யப்படவேண்டியது அவசியமாகிறது. நண்பர் பெ.குமார் எனக்கு கொடுத்து உதவிய (Factories and families: a study of a
growth pole in South India (J.J.F. Heins, E.N. Meijer, K.W. Kuipers ) என்கிற புத்தகம் அவ்வகையில் ஒரு தொடக்கம்
எனச் சொல்லலாம். எனினும் அது ஒரு
தொடக்க நூலுக்கே உரிய தன்மைகளுடன் இருக்கிறது. உலகமயமாக்கலால் ஒசூர் தொழிற்பேட்டையும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியும் அடைந்துள்ள மாற்றங்கள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை காந்தி கிராம பல்கலைக் கழகம் தனது Global and
local இதழில் வெளியிட்டுள்ளது. ஆனால், அது உலகமயமாக்கல் என்கிற வரம்பு எல்லைக்குள் நின்றுவிட்டது. இவற்றைத்தவிர தொழிற்பேட்டைக்கு முன்னும் பின்னுமான இந்தப் பகுதியின் நிலைபற்றி வேறெந்த ஆய்வும் வந்திருப்பதாகத் தெரியவில்லை. 40-ம் ஆண்டினைத்
தொடவிருக்கும் ஒசூர் தொழில்மயமாக்கத்தின்
விளைவுகளைப்பற்றி ஆய்வு செய்யவேண்டும்
என்கிற எண்ணம் நம் அறிவுலகத்துக்கு ஏன் தோன்றவில்லை என்பது எனக்கு வியப்பையே தருகிறது.
கிராமப்புறங்களின் மீது நிலவுடையாளர்களின் ஆதிக்கம் மிகக் கடுமையாக
கட்டமைக்கப்பட்டு இருந்த பகுதிகளில் இதுவும் ஒன்றெனச் சொல்லலாம். சாதிரீதியாகவும் பொருளாதாரம் மற்றும் உடைமைரீதியாகவும் மேம்பட்ட நிலையில் இருந்த இந்த நிலவுடைமையாளர்கள்தான்
ஒசூர் நகரத்தின் மையமான இடங்களை வாங்கியோ வளைத்தோ வைத்திருந்தனர். இப்போதும்கூட ஒசூரின் விலைமதிப்பு கூடிய பெரிய கட்டடங்களும்
காலியிடங்களும் இவர்களின் வசம்தான் இருக்கின்றன. ஒசூர் தொழிற்பேட்டையானதன் பின்னணியில் வாடகை, நில விற்பனை மற்றும் வணிகம் மூலமாக பெருத்த ஆதாயம் அடைந்தவர்கள் இவர்கள்தான். துண்டுதுக்காணி நிலம் வைத்திருந்தவர்களும் விற்குமளவுக்கு உபரியாக நிலம் இல்லாதவர்களும் இந்த திடீர் மாற்றத்துக்கு ஈடுகொடுக்கமாட்டாமல் நிலங்களை இழந்து ஒசூருக்கும் அருகாமையில் இருந்த பெங்களூருக்கும் உதிரிப்பாட்டாளிகளாக இடம் பெயர்ந்தோடினர்.
எப்போதுமே இந்தப் பகுதி மக்கள்
அகில இந்தியக் கட்சிகளுக்கு மட்டுமே ஆதரவளிக்கக்கூடியவர்கள் என்று சொல்லப்பட்டுவருவது
எந்தளவுக்கு அரசியல்ரீதியானது என்று தேடிப்பார்த்தால் சில விஷயங்கள் பிடிபடுகின்றன. அது ராஜாஜி
போன்றவர்கள் இந்தப் பகுதியில் பிறந்ததினாலோ காந்தி போன்றவர்கள் சுதந்திரப் போராட்டக்காலத்தில் இங்குவந்து சென்றதினாலோ உருவான நிலையல்ல. கிராமப்புற சமூகங்களின்மீது செல்வாக்கு செலுத்தியவர்கள் தங்களது நலன்களுக்கு உகந்தவகையிலான சாதி மற்றும்
அரசியல் தொடர்புகளை அருகாமையில் இருந்த கர்நாடகத்துடன் பேணிவந்திருப்பதுதான் இதற்குக் காரணம். மத்தியிலும் கர்நாடகத்திலும் காங்கிரஸ் ஆளும் கட்சியாக
இருந்தபோது ஒசூர், தளி தொகுதிகளை காங்கிரஸ் கோட்டையாகவும், ஜனதா, மற்றும் ஜனதாதளம் ஆளும் கட்சியானபோது
ஜனதாதளத்தின் கோட்டையாகவும் மாற்றிக்காட்டி இவர்கள் தொடர்ந்து அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டு அதற்குரிய பலன்களையும் நலன்களையும் பெற்றுவந்தார்கள். 1980-களின் நடுக்கூறு
வரையிலும்கூட இதுதான் நிலை. பின்னர் பா.ஜ.க.
ஒரு அரசியல் சக்தியாக வலுப்பெற்று வந்த நிலையில் இந்தப் பகுதி ஆதிக்கச்சக்திகளும்
அதிகார விரும்பிகளும் அந்தக் கட்சிக்குத் தாவி, அது வளர்வதற்குச்
சாதகமான சூழல்களை இங்கு உருவாக்கிக் கொடுத்தார்கள். இத்தகைய ஆதிக்கவாதிகளுக்கு எதிராக அன்றைக்கு தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் ஏதாவதொரு கட்சி போராடியது என்றால் அது இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சிதான். இன்றைய லகுமையா, ராமச்சந்திரன் போன்றவர்களைவைத்து அந்தக் கட்சியின் அன்றைய பங்களிப்பை நிராகரித்துவிட முடியாது.
ஒசூர் தொழிற்பேட்டைக்கு தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் இருந்து, வந்துசேர்ந்த தொழிலாளர்கள் தங்களோடு தி.மு.க.,
அ.தி.மு.க. போன்ற கட்சிகளையும்
கொண்டுவந்து சேர்த்தார்கள். இவர்களே பெரும்பான்மையான வாக்காளர்களாக மாறியபோதும், இந்தத் தொழிலாளர்களில் பலரும் தி.மு.க, அ.தி.மு.க. போன்ற
கட்சிகளின் ஆதரவாளர்களாக இருந்தபோதும் கூட்டணி,
தொகுதிப் பங்கீட்டில் இத்தொகுதிகளை 'பழைய பாரம்பர்யத்தை’க் காட்டி ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்தவர்களே தட்டிச் சென்றார்கள். எனவே, தமது
செல்வாக்கு மண்டலத்தில் இருந்த உள்ளூர் மக்களைத் தொடர்ந்தும் அவர்களால் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடிந்திருக்கிறது. என்னதான் மாற்றி மாற்றி ஆளுங்கட்சியாக இருந்தாலும் தி.மு.க-வோ அ.தி.மு.க-வோ இந்த உள்ளூர்
மக்களிடையே இன்றளவும் வேரூன்றாமல் இருப்பதற்கு வேறெதுவும் விசேட காரணங்கள்
உண்டாவென அறிய வேண்டியுள்ளது.
நாளாவட்டத்தில் அகில இந்தியக் கட்சிகள் தனிப்பெரும் செல்வாக்கை இழந்து மத்தியில் மாநிலக் கட்சிகள் பலம் பெற்றுவந்த
போக்கினைக் கணிக்க முடிந்த உள்ளூர் அதிகார விரும்பிகளில் ஒரு பகுதியினர் அகில இந்தியக் கட்சிகளைத் துறந்து மாநிலக் கட்சிகளுக்குள் புகுந்தார்கள். ஆளுங்கட்சியின் ஒரு பகுதியாக ஏதோவொரு வகையில் இருப்பதனால் கிடைக்கும் அதிகாரம் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள்,
கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகிகள், நலவாரிய உறுப்பினர்கள், ஆலோசனைக் குழுக்களின் பிரதிநிதிகள் என்று ஆளுங்கட்சியினராக இருப்பதன்மூலம் கிடைக்கும் ஆதாயங்களைக் காட்டித்தான் இந்தக் கட்சிகள் ஒரு சிறு பகுதியினரை
ஈர்த்துள்ளன. மற்றபடி இன்றைக்கும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் வெளியூர்க்காரர்களின் கட்சிகள்தான். சி.பி.ஐ.எம். போன்ற
கட்சிகளுக்கும்கூட இதேநிலைதான். தொழிலாளர்கள் மத்தியில் இருந்து உருவான சிறு பகுதியினர்தான் அதில் அங்கம் வகிக்கிறார்களே தவிர உள்ளூர்
மக்களை ஈர்க்கமுடியாத பலவீனத்தோடுதான் இருக்கிறது.
ஆனால், பன்மொழிப் பேசக்கூடிய, பல்வேறு பண்பாட்டு பின்புலங்களைக் கொண்ட மக்கள்
கூடிவாழும் ஒரு நகரமாக
உருவெடுத்துவிட்ட ஒசூரில், அவரவர் தனித்தன்மையைப்
பேணிக் கொண்டே ஒசூர் மக்கள்
என்ற அடிப்படையில் ஒருங்கிணைக்கவும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்குமான தன்மைகொண்ட அமைப்புகளின் தேவையை முதன்முதலாக உணர்ந்தவர்கள் தொழிலாளர்கள்தான். தங்களது கோரிக்கைகளையும் அதன்பேரிலான தொழிற்சங்க நடவடிக்கைகளின் நியாயங்களையும் உள்ளூர் சமூகத்திடம் முறையிட்டு ஆதரவு திரட்டும் பொருட்டு துண்டறிக்கைகளையும் சுவரொட்டிகளையும் தமிழிலும் தெலுங்கிலும் அச்சிட்டு வெளியிட்டதன்மூலம் அவர்கள் ஒரு நன்மரபை தொடங்கிவைத்தார்கள். அவர்களது ஊர்வலங்களின் முழக்கங்களும்கூட பன்மொழிகளில் எழுப்பப்பட்டன. அசோக் லேலண்ட் முத்து, போப்பு, விநாயகம், இன்டிகார்ப் முருகேஷ் போன்றவர்களின் முன்முயற்சியில் இங்கு தொடங்கப்பட்ட
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய மொட்டைமாடி கவியரங்கங்களில் சின்னையா போன்றவர்கள் தெலுங்கில் பாடியதைக் கேட்டிருக்கிறேன்.
ஆனாலும் என்ன, 1984-லிருந்து உள்ளூர்வாசிகள் எவ்வளவோ பேர் எனக்கு உற்ற நண்பர்களாயிருந்தும்கூட தெலுங்கிலோ கன்னடத்திலோ நான் பேசப் பழகாமல்
இருந்துவிட்டேன் என்று சொன்னால்
சிரிப்பீர்கள். ஆனால், அதுதான் உண்மை. ஒரு மொழியைப் பயில்வதில் என்னிடம் உள்ள முனைப்பின்மைதான் காரணமா? மொழி ரீதியானப்
பிரிவினையைக்கூட கடக்க முனையாத
நான் எந்த அளவுக்கு
அவர்களோடு ஒன்றி இருந்திருக்கமுடியும்?
தமிழர்களோடு உரையாடுவதற்காக 'ஆமாவா?’ என்பது மாதிரியான சொற்களை உள்ளடக்கிய ஒரு தமிழை
உள்ளூர் மக்கள் உருவாக்கி இருக்கும்போது அவர்களோடு உரையாடுவதற்காகக் கொச்சையான அளவிலாவது அவர்களது மொழியை ஏன் கற்காமல் போனோம்? என்பது மாதிரியான கேள்விகளுக்கு இன்றுவரையிலும் நான் பதில்
அறியவில்லை. நக்னமுனியின் கவிதைகளையும் விடியல் பதிப்பகம் வெளியிட்ட தற்கால தெலுங்குக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பையும் படித்தபோது தெலுங்கைப் பயின்றிருந்தால் மூலமொழியில் இந்தக் கவிதைகளை அதன் வீரியத்தோடேயே
வாசித்திருக்கலாமே என்று கவலைப்பட்டேன்.
இதேபோல சித்தலிங்கய்யா, தேவனூரு மகாதேவா, அர்விந்த மாளஹத்தி, லங்கேஷ், யு.அர்.அனந்தமூர்த்தி போன்றவர்களது எழுத்துகளின் மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தபோது கன்னடத்தைக் கற்காமல் போனோமே என்கிற கவலை வாட்டியது. பெங்களூருக்குப் போகும்போதெல்லாம் மொழி தெரியாமல் திண்டாடும்போது இந்தக் கவலை, அவமானம் என்கிற நிலையை எட்டிவிடுகிறது. நண்பர் ரங்கநாத் கன்னடத்தில் மொழிபெயர்த்த எனது கவிதை
வெளியாகியிருந்த லங்கேஷ் வார இதழை (17.10.12) தோழர். சீனிவாசன் கடந்தவாரம் கொடுத்துவிட்டுப் போனார். இன்னும் தடவித்தடவிப் பார்க்கிறேன், ஓரெழுத்தும் தெரியவில்லை. 'எண்ணும் எழுத்தும்’ கண்ணெனத் தகும் என்று
வள்ளுவம் சொன்னதன் பொருள் இப்போது கூடுதலான அர்த்தத்துடன் விளங்குகிறது.
( சொல்வேன்...)
நன்றி: http://en.vikatan.com
நன்றி: http://en.vikatan.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக