...தமிழ்நாட்டை பஞ்சாப், காஷ்மீர் போன்ற கலவரப்பகுதிகளாக மாற்ற வேண்டும் என்னும் கருத்தை நான் ‘இந்து இந்தி இந்தியா' நூலில் கூறியிருப்பதாக ஜெயமோகன் கூறுவதன் நோக்கம் என்ன?. அதாவது ‘அரசு விரோத சதி சட்டம்', சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்', ‘தேசப் பாதுகாப்புச் சட்டம்' என்பன போன்ற கொடூரமான சட்டங்கள் என் மீது பாயட்டும் என்னும் விருப்பத்தின் அடிப்படையிலா? அல்லது பாயும் என்று காட்டி அச்சுறுத்த முயற்சிக்கிறாரா?
‘ஆளும் வர்க்கங்களின் கருத்துகளே ஆதிக்கம் செலுத்தும் கருத்துகளாக உள்ளன' என்பது மார்க்ஸியம் சுட்டிக்காட்டும் உண்மைகளிலொன்று. அந்த ஆதிக்கக்கருத்துகளைப் படைப்பவர்களையும் பரப்புபவர்களையும் எதிர்கொள்வது கடினமானது. அப்படியே எதிர்கொண்டாலும், அவர்களின் அவதூறுகளுக்கும் கருத்துத் திரித்தல்களுக்கும் முகம் கொடுத்தாக வேண்டும். இது நீண்ட போராட்டம்.
அண்மைக்காலமாக என் மீதும் எனது எழுத்துகள் மீதும் விமர்சனம் என்னும் பெயரில், எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்ந்து செய்துவருகின்ற அவதூறுகளை சட்டப்படி எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்னும் நிலைக்குத் தள்ளப்பட்ட நான் அவர்மீது ஒரு குற்ற வழக்குத் தொடர்ந்துள்ளேன். என்னைப் பற்றி அவர் கூறியுள்ள அவதூறுகள் என நான் தொடுத்துள்ள வழக்கில் கூறியுள்ளவற்றில் முக்கியமானவை கீழ்வருமாறு:
1.எஸ்,வி,ராஜதுரையின் நூல்களைப் படிக்கும் வாசகர்களைப் பிரமிக்க வைக்கும் அளவுக்கு ஃபோர்டு ஃபவுண்டேஷன் போன்ற அன்னிய நிதி நிறுவனங்களிடமிருந்து அவர் பணம் பெற்றுள்ளார்.
2.விடியல் பதிப்பகம் முன்விலைத் திட்டத்தின் கீழ் வெளியிட்ட ‘பெரியார்: சுயமரியதைசமதர்மம்' நூல் அன்னிய நிதி உதவியுடனேயே வெளியிடப்பட்டது என்பதை ஜெயமோகன் கடந்த பதினாறு ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வந்துள்ளார்.
3.வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும் எழுதிய Towards a Non Brahmin Millennium:From Iyoothee Thass to Periyar என்னும் ஆங்கில நூல், கிறிஸ்துவ மத்த்தைப் பரப்புகிறதும்,இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சீரழிக்கும் ஏகாதிபத்திய நோக்கத்தைக் கொண்டதும், இந்தியப் பன்பாடு, இந்திய தேசியம் ஆகியவற்றை அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதுமான டபிள்யு ஏ சி சி என்னும் அன்னிய நிறுவனத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு வாங்கிய நிதியைக் கொண்டே வெளியிடப்பட்டது.
4. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மைய கெளரவப் பேராசிரியராக எஸ்.வி.ராஜதுரை பணியாற்றிய போது அங்கு அவர் பெற்ற பணத்தின் நிதி மூலங்கள் ஆராயப்பட வேண்டியவை.
5.1980களிலிருந்து இன்றுவரை எஸ்.வி.ராஜதுரையின் பொருளாதார வசதி பன்மடங்கு உயர்ந்துள்ளது.
6.'உயிர் எழுத்து' பத்திரிகை ஆசிரியர் சுதீர் செந்திலும் எஸ்.வி.ராஜது¨ர்யும் தமிழ் தேசிய அமைப்புகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி ஜெயமோகனை வசைபாடச் சொன்னார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக ‘ஜூனியர் விகடன்', எனது வழக்குரைஞரும் நானும் தெரிவித்த கருத்துகளை 4.11.2012 இதழில் வெளியிட்டது. அதற்கு எதிர்வினையாக ஜெயமோகன் கூறிய கருத்துகளை ‘ஜூனியர் விகடன்' வெளியிடுவதற்கு முன், சம்பந்தப்பட்ட நிருபர் எனது விளக்கங்களை கைபேசி வழியாகக் கேட்டார். (எனது வழக்குரைஞரும் நானும் கூறிய விடயங்கள் ‘ஜூனியர் விகட'னில் அச்சேறிய பிறகே அவற்றைப் படித்து ஜெயமோகன் எதிர்வினை ஆற்றினார்.) ஆனால் அவர் எழுதிய எதிர்வினை (பதில்) முழுவதும் எனக்குத் தெரிவிக்கப்படாமல், ‘ஜுனியர் விகடனி'ன் நிருபரொருவர் தனக்கு முக்கியமானவை எனக் கருதிய சில விடயங்கள் குறித்து மட்டுமே சில கேள்விகளை என்னிடம் கேட்டார். அவற்றுக்கு மட்டுமே என்னால் பதில் கொடுக்க முடிந்தது. ஜெயமோகனின் எதிர்வினையும் நான் கொடுத்த விளக்கங்களும் ‘ஜூனியர் விகடன்' 7.11.2012 இதழில் வெளியாகியுள்ளன.
இந்தியத் தேசத் தலைவர்களையும் இந்தியப் பண்பாட்டையும் குறித்த இழிவான எண்ணங்களை இளைஞர்களின் மனத்தில் விதைப்பதற்கான தேசவிரோதக் கருத்துகள் அடங்கிய நூல்களை நான் 1980களிலிருந்து எழுதி வருவதாகவும், இந்த நடவடிக்கைகளுக்காகவே எனக்கு அன்னிய நிதி தரப்படுகிறது என்பதும் அவரது வாதம். அவர் எழுதுகிறார்:
1. “... இடதுசாரியாக அறியப்பட்ட எஸ்.வி.ராஜதுரை எண்பதுகளில் சட்டென்று இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலை எழுதிக் குவிக்க அவர் பெறும் அன்னிய நிதியே காரணம் என அவரது முன்னாள் தோழர்களே ‘புதிய ஜனநாயகம்' போன்ற இதழ்களில் குற்றம்சாட்டி விரிவாக எழுதியிருக்கிறார்கள்”.
1980களில் ‘புதிய ஜனநாயகம்', அன்னிய நிதி பெறுகின்ற ஓர் அமைப்புடன் எனக்கிருந்த தொடர்பு குறித்த கட்டுரைகள் ஒன்றிரண்டை வெளியிட்டு என்னைக் கடுமையாக விமர்சித்தது. அவை குறித்து, நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தோழர் (புலவர்) கலியபெருமாள் அவர்களைக் குறித்த கட்டுரையொன்றில் ஒளிவுமறைவின்றி பதிவு செய்துள்ளேன். நான் எழுதிய மூலக் கட்டுரையில் ‘தேவையற்றவை' என்று தோழர் கலியபெருமாளின் குடும்பத்தார் நீக்கிய சில பகுதிகளையும் இணைத்து, முழுமைப்படுத்தப்பட்ட கட்டுரையை எனது அண்மைய கட்டுரைத் தொகுப்பான ‘ சாட்சி சொல்ல ஒரு மரம்' என்னும் நூலில் (விடியல் பதிப்பகம், கோவை) சேர்த்துள்ளேன். அக்கட்டுரையைப் படிக்கிற நடுநிலையான வாசகர்கள், ஒருவேளை நான் தவறு செய்திருந்தால் எனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்காமல்- ‘நோயாளியைக் காப்பாற்ற நோயைக் குணப்படுத்துக' என்னும் மாவோவின் மூதுரைக்கு மாறாக, ‘நோயைக் காப்பாற்ற நோயாளியைக் கொன்றுவிடும்' வேலையைத்தான் என் விசயத்தில் ‘புதிய ஜனநாயகம்' பத்திரிகை செய்திருந்தது என்பதை அறிந்து கொள்வார்கள். எனது விளக்கங்களுக்குப் பிறகும் சரிசெய்யப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்த ‘புதிய ஜனநாயகத்'தின் கருத்து, ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பிறகு ‘புதிய ஜனநாயகம்' தோழர்களின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமான ஜெயமோகன் தனது இழிவான நோக்கங்களுக்கு எடுத்தாளத்தான் பயன்பட்டிருக்கிறது.
‘புதிய
ஜனநாயகத்'துடன் ஜெயமோகன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் உள்ள ஆபத்தை
புதிய ஜனநாயகத்தினர் உணர்ந்து அதற்குத் தக்க எதிர்வினை
புரிந்திருக்கவேண்டும். ஒருவேளை என்னை யார் திட்டினாலும் ரசிக்கும்
மனநிலைக்கு அவர்கள் ஆட்பட்டிருக்கும் பட்சத்தில் தங்களது மவுனத்தை
தொடரட்டும்.
1980களுக்கும் 2010களுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ‘புதிய ஜனநாயகம்' தோழர்களுக்கு சொந்தமான ‘கீழைக்காற்று பதிப்பகம்', நான் எழுதிய நூல்கள் சிலவற்றை விற்பனை செய்துள்ளது. நானும் இன்குலாபும் மொழியாக்கம் செய்த ‘மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை' என்னும் நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த நூல்கள் இந்தியாவின் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர இயக்கங்களுக்கு ஏதோவொரு வகையில் பயன்படும் என்பதாலேயே அவற்றை விற்பனை செய்யவும் பதிப்பக்கவும் செய்திருக்கிறதே தவிர, வணிக நோக்கத்திலல்ல என்றே கருதுகிறேன். ‘இல்லை, வணிக நோக்கத்துக்குத்தான் என்று அவர்கள் கூறுவார்களேயானால், ஒரு ‘ஏகாதிபத்திய ஏஜண்டுக்கு'அவர்கள் உதவியிருக்கிறார்கள் என்றுதான் பொருள்.
இப்போது ஜெயமோகன் ‘ஜூனியர் விகடனில் (7.11.2012) எழுதியிருப்பதைப் மீண்டும் பார்ப்போம்: “...இடதுசாரியாக அறியப்பட்ட எஸ்.வி.ராஜதுரை எண்பதுகளில் சட்டென்று இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலை எழுதிக் குவிக்க அவர் பெறும் அன்னிய நிதியே காரணம் என அவரது முன்னாள் தோழர்களே ‘புதிய ஜனநாயகம்' போன்ற இதழ்களில் குற்றம்சாட்டி விரிவாக எழுதியிருக்கிறார்கள்”.
அதாவது ‘புதிய ஜனநாயகம்' தோழர்களாலும் பொதுவாக இந்திய இடதுசாரி மரபைச் சேர்ந்தவர்களாலும் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற கருத்துகளைக் கொண்டுள்ள ‘இந்து இந்தி இந்தியா' என்னும் ‘தேசவிரோத' நூலை அன்னிய நிதியைக் கொண்டே நான் எழுதியிருக்கிறேன் என்று ‘புதிய ஜனநாயகம்' கூறியிருந்ததாக ஜெயமோகன் சொல்கிறார்! நான் அவர் மீது தொடுத்துள்ள வழக்கை எதிர்கொள்ள நீதிமன்றம் வருகையில் அவர் தரப்பு சாட்சிகளாக ‘புதிய ஜனநாயகம்' தோழர்களையும் அழைத்து வருவாரா?
1982-83இல் எனது அரசியல், மனித உரிமைச் செயல்பாடுகளின் காரணமாக காவல்துறையினரின் இடைவிடாத தொல்லைகளுக்கு ஆளாகி வந்த நான், எனது உயிருக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்ளவே, டெல்லியிலுள்ள Centre for the Study of Developng Societies என்னும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சித் திட்டத்தில் ஆராய்ச்சி உதவியாளனாக வேலைக்குச் சேர்ந்தேன். இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரிதும் மதிக்கப்படும் கல்விமான்களும் ஆராய்ச்சியாளர்களுமான பேராசிரியர் ரஜ்னி கோத்தாரி, அஸிஸ் நந்தி, கிளாட் ஆல்வாரிஸ் ஆகியோர் (இவர்கள் மூவருமே அடிப்படையில் காந்தியவாதிகள்) அந்த நிறுவனத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்கள். எனவே அவர்களுக்கு இருந்த சமூகத்தகுதி எனது உயிருக்குப் பாதுகாப்புத் தர உதவும் என டெல்லியிலிருந்த இடதுசாரிப் பேராசிரியரும் காலஞ்சென்ற மனித உரிமைப் போராளியும் நக்ஸ்லைட் இயக்கத்திலி£ருந்ததற்காக அவசர நிலைக் காலத்தில் ஒன்றரையாண்டுகள் சிறையிலிருந்தவருமான சுப்பாராவ் அவர்களும் காலஞ்சென்ற மோகன்ராம, முகுந்தன்மேனன் போன்ற இடதுசாரிப் பத்திரிகையாளர்கள் சிலரும் கூறிய ஆலோசனையின்படியே அந்த நிறுவனம் தந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். அந்த நிறுவனம் மத்திய அரசாங்கத்தின் அமைப்பான Indian Council of Social Scinece Research என்பதன் நிதி உதவியைக் கொண்டு நிறுவப்பட்டது என்பது மட்டும் எனக்கு முதலில் தெரிந்திருந்ததே அன்றி அதன் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கிறது என்பது நான் வேலைக்குச் சேர்ந்த பிறகே தெரிந்தது. அப்படித் தெரிந்த பிறகும்கூட அங்கு வேலை செய்வதை தவறான காரியமாகக் கருதவில்லை. ஏனெனில் எனது கருத்துகள் எதனையும் சமரசம் செய்து கொள்வதற்கான நிர்பந்தம் ஏதும் இருக்கவில்லை என்பதுடன் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற அறிஞர்கள், சமூகத்தொண்டர்கள் ஆகியோரின் அறிமுகமும் அவர்களுடனான கருத்துப் பரிமாறல்களும் எனக்குக் கிடைத்தன. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் போதுதான் தமிழகத்தில் நடந்துவந்த ‘போலி என்கவுண்டர்க”ளுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நானும் பேராசிரியர் ரஜ்னி கோத்தாரியும் தொடுத்தோம். எம்.என்.ராயின் சீடரும் இந்தியாவின் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியுமான காலஞ்சென்ற வி.எம்.தார்க்குண்டே எங்கள் வழக்குரைஞராக இருந்தார். ஏறத்தாழ இரண்டாண்டுக்காலம் அந்த நிறுவனத்தில் வேலை செய்த போது மாதமொன்றுக்கு எனக்கு ஊதியமாக ரூ1200/- தரப்பட்டது. டெல்லிக்கும் சென்னைக்குமாக இரு மாதங்களுக்கு ஒருமுறை நான் செய்ய வேண்டியிருந்த பயணத்துக்கே அந்தத் தொகை போதுமானதாக இருக்கவில்லை. இதற்கிடையில், அரசியல்ரீதியான கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த சில தரப்பினர் (புதிய ஜனநாயகம் தோழர்கள் மட்டுமல்ல, வேறு சிலரும்} 'அன்னிய நிதி' என்னும் விடயத்தை முதன்மைப்படுத்தி வந்ததால், நான் சம்பந்தப்பட்டிருந்த ஆராய்ச்சித் திட்டத்திற்கு அன்னிய நிதி உதவி பெறுவதை நிறுத்திவிடுவதென பேராசிரியர் ரஜ்னி கோத்தாரி உள்ளிட்ட அனைவரும் ஒருமனதாக 1983 அக்டோபர் மாதம் முடிவு செய்தோம். இந்த விவரங்களை மேற்சொன்ன நிறுவனத்திடமிருந்தே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
மேற்சொன்ன நிறுவனத்தில் நான் எழுதிய ஒரே ஒரு ஆய்வு நூல் (அதுவும் இன்றுவரை முறைப்படி அச்சிடப்படவில்லை) சாஸ்திரி ராமச்சந்திரன் என்னும் முக்கியமான பத்திரிகையாளர் ஒருவருடன் இணைந்து எழுதிய ‘Agriculture Labourers in Tamil Nadu' என்னும் சிறிய ஆய்வு நூலாகும். இது உச்ச நீதிமன்றத்தில் நானும் பேராசிரியர் ரஜ்னி கோத்தாரியும் தொடுத்த ரிட் மனுவின் பகுதியாக அமைந்தது. அந்த நூலில், நக்சலைட் இயக்கம் உருவானதற்கான பொருளாதார, சாதியக் காரணிகளையும் அவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக அரசு வன்முறையைப் பயன்படுத்தியதையும் குறிப்பிட்டிருந்தோம்.
நக்சலைட் இயககத்திலிருந்த ‘மக்கள் யுத்தக் குழு'வுக்கும் ‘புதிய ஜனநாயகம்' தோழர்களுக்குமிடையிலான சித்தாந்தப் போராட்டத்தில் நான் பலிகடா ஆக்கப்பட்டு இருதரப்பினராலும் அன்னியப்படுத்தப்பட்ட கசப்பான அனுபவத்திற்குப் பிறகு, அதாவது 1984க்குப் பிறகு எந்தவொரு அரசியல் இயக்கத்திலோ, அமைப்பிலோ இணைந்து பணியாற்றும் எண்ணமோ, ஆர்வமோ என்னிடமிருந்து முற்றிலும் அகன்றுவிட்டது. எந்தக் கட்சியிலும் அமைப்பிலும் சேராத சுதந்திரமான இடதுசாரி அறிவுஜீவியாக இருப்பதில் உள்ள அனுகூலங்கள், நிரானுகூலங்கள் இரண்டையும் அறிவேன். அதனால்தான் இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் எதிராக அமைந்த இந்திய தேசிய இயக்கம்; அதன் முக்கியத் தலைவர்களான காந்தி, நேரு; அவர்கள் உருவாக்கிய அரசமைப்பு; அது கடைப்பிடிக்கும் மதச்சார்பான, முதலாளியச் சார்பான பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை விமர்சித்து நான் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதிவருவதாலேயே ஜெயமோகன் போன்றவர்கள் ‘அன்னிய நிதி' என்னும் பூதத்தைக் காட்டி என்னை ‘தேசவிரோதியாக' சித்தரிக்கும் போது, இடதுசாரி இயக்கங்களிலுள்ளவர்கள், இடதுசாரி மனப்பான்மை உள்ள எழுத்தாளர்கள், மனசாட்சிப்படி செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் சாகித்ய அகதமி பரிசு பெற்ற நண்பர்கள், பெரியார், அம்பேத்கர் மரபுக்குரிய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், கட்சிக்காரரின் எழுத்தை அவரது வழக்கை எடுத்துக்கொண்டு அதில் வெற்றி பெற வேண்டும் என அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் வழக்குரைஞரின் எழுத்துடன் அடையாளப்படுத்தி, ஜெயமோகன் என் மீது சுமத்தியுள்ள அவதூறுகள் ஒருபுறம் இருக்கட்டும், இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படுகிற மக்களின் விடுதலைக்கான ஓளிவிளக்குகளாக உள்ள மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரைக் காமுகர்களாக ஜெயமோகன் சித்தரித்த போது வாய் மூடி இருந்துவிட்டு இப்போது எழுத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அறம் குறித்து மாய அழுகை அழுகின்றவர்கள் எனக்காகக் குரல் கொடுக்கவில்லை. விதிவிலக்காக ஓரிரு எழுத்தாளர்கள் இருந்தனர் என்பதை நான் மகிழ்ச்சியோடு பதிவு செய்கிறேன். நான் வேலை பார்த்த நிறுவனம் நடத்திய கருத்தரங்குகள், சிறப்புக் கருத்துரைகள் ஆகியவற்றில் பங்கேற்றவர்களும் ஜெயமோகனால் புகழப்பட்டவர்களுமான கோவை ஞானி, எஸ்.என். நாகராஜன், வே.ஆனைமுத்து ஆகியோரும்கூட வாய் திறக்கவில்லை. அப்பழுக்கற்ற காந்தியவாதியும் சமூகத் தொண்டருமான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் மாத்திரமே சென்ற ஆகஸ்ட் மாதம் என்னிடம் சில ஆறுதல் வார்த்தைகள் கூறினார். அவர் நடத்தி வரும் தன்னார்வ அமைப்பும் ‘அன்னிய நிதி' உதவி பெறுகிறது என்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்! எனினும் எனக்கோ என் துணைவியாருக்கோ கையகல நிலம்கூட சொந்தமாக இல்லை என்பதையும், ஓய்வூதியத்தைக் கொண்டே எங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகிறோம் என்பதையும், சினிமா கதை வசனம் எழுதிப் பணம் பண்ணும் ஆற்றலோ தேவையோ எங்களுக்கு இல்லை என்பதையும் அறிந்த சாமானியக் குடிமக்கள் தரும் ஆதரவையும் அனுதாபத்தையும் மட்டும் கொண்டு ஒரு சமூகக் கடமையாகக் கருதி ஜெயமோகனின் அவதூறுகளை சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன்.
ஜெயமோகன், ‘ஜூனியர் விகடனி'ல் கூறியுள்ளது போல, எனது ‘இந்து இந்தி இந்தியா' என்னும் நூல், மேற்சொன்ன நிறுவனத்தில் நான் வேலை செய்த போது எழுதப்பட்டது அல்ல. அந்த நிறுவனத்திலிருந்து நான் விலகிய பின்னரே எனது எழுத்துகள் மீண்டும் தொடங்கின. ஜெயமோகனால் ‘தேசவிரோத நூல்' என்று (இதே கருத்தைத்தான் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்) சொல்லப்படும் ‘இந்து இந்தி இந்தியா'வின் பெரும்பகுதி தோழர் பெ.மணியரசன் நடத்திவரும் ‘தமிழர் கண்ணோட்டத்தில்' தொடர்கட்டுரையாக வெளிவந்தது. பின்னர் 1993ஆம் ஆண்டில் ‘மணிவாசகர் பதிப்பகத்தால்' நூலாக வெளியிடப்பட்டது. 1989களின் இறுதியில் மண்டல் குழு பரிந்துரைகளுக்கு எதிராக உயர்சாதி இந்துக்கள் நடத்திய போராட்டம், மண்டலுக்கு எதிராக சங் பரிவாரம் தொடங்கிய ‘கமண்டலப் போராட்டம்' (இது பாபர் மசூதி தகர்ப்பில் முடிந்தது) ஆகியவற்றின் பின்னணியில் இவற்றுக்கான மூலவேர்களைப் பற்றிய தேடலில் ஈடுபட்டேன். இந்திய தேசிய இயக்கத்திலேயே அதற்கான மூலவேர்கள் இருப்பதை நான் எடுத்துரைத்தேன். அப்போதுதான் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் சிந்தனைகளை ஆழக் கற்கத் தொடங்கினேன். அவர்களது படைப்புகளைப் படிக்கப் படிக்க அவர்கள் பற்றிய எனது புரிதல் தொடர்ந்து மாற்றமும் ஆழமும் அடைந்து வருகின்றது.
இந்திய மக்களின் முதன்மை எதிரிகள் ‘மதச்சார்பற்ற' காங்கிரசும் மதவாத பாஜக-சங் பரிவாரமும் என்னும் கருத்தையும், இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தையும் வலியுறுத்தும் எனது ‘இந்து இந்தி இந்தியா' நூலில், பொருளாதார, தேசிய இன ஏற்றத்தாழ்வற்ற ஒரு புதிய இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்னும் கருத்தைக் கூறியிருந்தேன். இந்தியா என்னும் தேசத்தை பிரிட்டிஷார்தான் முதலில் உருவாக்கினார் என்பதாலோ, அதை சுரண்டும் வர்க்கங்களும் ஆதிக்கச்சாதிகளும் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளப் பயன்படுத்துகிறார்கள் என்பதாலோ அந்த சட்டகத்தை அப்படியே தூக்கியெறிய வேண்டியதில்லை; அதை புதிய இந்தியாவாக உருமாற்ற முடியும் என்பது எனது கருத்து. இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாத தமிழ் தேசிய இயக்கத் தோழர்கள் சிலர் ‘பார்ப்பன-பனியா இந்திய தேசியத்தை' நான் உயர்த்திப் பிடிப்பதாக என்னை விமர்சிக்கின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டை பஞ்சாப், காஷ்மீர் போன்ற கலவரப்பகுதிகளாக மாற்ற வேண்டும் என்னும் கருத்தை நான் ‘இந்து இந்தி இந்தியா' நூலில் கூறியிருப்பதாக ஜெயமோகன் கூறுவதன் நோக்கம் என்ன?. அதாவது ‘அரசு விரோத சதி சட்டம்', சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்', ‘தேசப் பாதுகாப்புச் சட்டம்' என்பன போன்ற கொடூரமான சட்டங்கள் என் மீது பாயட்டும் என்னும் விருப்பத்தின் அடிப்படையிலா? அல்லது பாயும் என்று காட்டி அச்சுறுத்த முயற்சிக்கிறாரா?
கிறிஸ்துவ அறிஞர்கள் மீது ஜெயமோகனுக்குள்ள கோபம் அப்பட்டமான சங் பரிவார் கோபம். அவர் எழுதுகிறார் “... அன்னிய நிதி பெறும் கிளாட் ஆல்வாரிஸ் போன்றவர்களின் நிறுவனங்களில் அவர் (எஸ்.வி.ராஜதுரை) பணியாற்றி இருக்கிறார். அவற்றை அவரே அச்சில் சொல்லி இருக்கிறார். அவற்றையும் கருத்தில் கொண்டு எஸ்.வி.ராஜதுரையின் தேசவிரோதக் கருத்துகளையும் தேசியத் தலைவர்களின் மீதான அவதூறையும் பரிசீலிக்க வேண்டும் என்பதை முன்வைத்தேன்”
தேசியத் தலைவர்கள் என்று அவர் இங்கு குறிப்பிடுவது காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோரைத்தான். இதில் அவர் செய்துள்ள விஷமம், ‘இந்து இந்தி இந்தியா' நூலில் காந்தி, நேரு ஆகியோருடன் சேர்த்து அம்பேத்கரையும் இழிவுபடுத்தியுள்ளேன் என்னும் அப்பட்டமான பச்சைப்பொய்யை அம்பேதக்ரை இழிவுபடுத்தி ஒரு நூலையே எழுதியுள்ள அவர் கூறியுள்ளதுதான். மார்க்ஸியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றைத் தத்துவ வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டுள்ள, தலித் பிரச்சனைகள் குறித்தும் அம்பேத்கரியம் குறித்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ள என்னை அம்பேத்கரை இழிவுபடுத்துவனாகப் பொய்யுரைக்கிறார் ஜெயமோகன். “தனது 54ஆம் வயதில் ஒரு இளம் பிராமண மாதுவை ஏன் அம்பேத்கர் திருமணம் செய்து கொண்டார்?” என்னும் ஆபாசமான கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன்பு ‘தினமணி' கட்டுரையில் எழுப்பியவர்தான் இந்த ஜெயமோகன்.
காந்தி, நேரு ஆகியோரை இழிவுபடுத்தியுள்ளதன் மூலம் தேசத் துரோகியாகிவிட்டேனாம். அப்படியானால் அம்பேத்கர், பெரியார், சுபாஸ் சந்திர போஸ் தொட்டு ‘புதிய ஜனநாயகம்' வரை இன்னும் ஏராளமானோரை ‘தேசத் துரேகிகள்' பட்டியலில் ஜெயமோகன் சேர்க்க வேண்டுமல்லவா? ஜெயமோகனின் அளவுகோல்படி பார்த்தால் நேதாஜி சார்பாக காந்திக்கும் நேருவுக்கும் எதிராகக் குரல் கொடுத்த முத்துராமலிங்கத்தேவர் கூட இந்தப் பட்டியலில் சேர்ந்து விடுவார். ஆனால் அப்படிச் சொல்லிவிட்டு மதுரையைத் தாண்டி நாகர்கோவிலுக்கு செல்லமுடியாது என்பதை தெரிந்துகொண்டோ என்னவோ அவரை சும்மா விட்டுவிட்டார் போலும்.
இந்து மதவெறிக் கண்ணோட்டத்திலிருந்து காந்தியையும் நேருவையும் கடுமையாக விமர்சித்த கோல்வால்கர், சாவர்க்கர், கோட்ஸே ஆகியோரைப் பற்றிய ‘கசப்பான' உண்மைகளும் எனது நூலில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளன. ஜெயமோகனின் அளவுகோலைப் பிரயோகித்தால் இவர்கள் கொடூரமான தேசவிரோதிகள். ஆனால், இவர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட ஜெயமோகனின் எதிர்வினையில் இல்லை? ஏன்?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் இந்துத்துவ, சங் பரிவார அமைப்புகளின் ‘தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்'தான் வெளிநாட்டு நிதிஉதவியை மிக அதிக அளவில் பெறுகின்றன என்பதை உறுதி செய்யப்பட்ட அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. அவற்றைப் பற்றி ஜெயமோகன் செய்துள்ள ஆராய்ச்சிகள் என்ன? இந்த அமைப்புகளெல்லாம் தேசவிரோதச் சக்திகளா, தேசபக்த சக்திகளா? அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலுள்ளவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டும் ஏகாதிபத்தியக் கொள்ளைக்காரர்களுடன் இணைந்தும் நம் நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் அம்பானி, ஜிண்டால் போன்றவர்கள் தேசபகதர்களா? தேசவிரோதிகளா?
இனி, கிளாட் ஆல்வாரிஸ் குறித்து ஜெயமோகனின் கூற்றில் உள்ள ஒரு விவரப் பிழையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவரது நிறுவனத்தில் நான் வேலை செய்ததாக நான் எங்கும் எழுதவில்லை. அவரது பரிந்துரைப்படி நான் வேலைக்குச் சேர்ந்தது, மேலே கூறியது போல் பேராசிரியர் ரஜ்னி கோத்தாரியால் நிறுவப்பட்ட ‘Centre for the Study of Developing Socities' என்னும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் குறித்த தகவல்களை(1980களில் கிடைத்தவற்றைக் காட்டிலும் எளிதாகவும், உண்மைகளைத் திரிக்காமலும்) தெரிந்து கொள்ள ‘விக்கிபீடியா'வைப் பார்த்தாலே போதும். இந்தியாவிலுள்ள பல கல்விசார் (academic)/ ஆராய்ச்சி நிறுவனங்களைப் போலவே இந்த நிறுவனத்திற்கு மத்திய அரசங்கத்தின் அமைப்பான Indian Council of Social Science Research என்பதும் நிதி வழங்குகிறது. இந்த நிறுவனங்கள் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி உதவியையும் மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் பெறுகின்றன என்பதும் உண்மைதான். ஜெயமோகனின் தர்க்கத்தை அடியொற்றிச் சென்றால், எனக்கு வேலை வழங்கிய மேற்சொன்ன நிறுவனமும் அதற்கு நிதி உதவி வழங்கி வந்துள்ளவற்றில் ஒன்றான மத்திய அரசாங்கமும் ‘தேசவிரோத சக்திகள்தான்'. (அப்படிப்பட்ட தேசவிரோத மத்திய அரசாங்கத்திடம் இவ்வளவுகாலமும் மாதச்சம்பளம் வாங்கிக் கொண்டிருந்ததற்காக ஜெயமோகன் தன்னையேகூட தேசவிரோத சக்தியாக அறிவித்துக்கொண்டால் நலம்.)
கிளாட் ஆல்வாரிஸைப் பற்றித் தெரிந்து கொள்ள ‘விக்கிபீடியா'வையே மீண்டும் பாருங்கள். இன்றும் உயிருடன் உள்ளவர்களைப் பற்றிய தவறான தகவல்களைத் தணிக்கை செய்து ‘விக்கிபீடியா'பதிவு செய்கிறது. அது தரும் தகவல்கள் இவை: புகழ்பெற்ற அறிஞரான டாக்ட்ர் கிளாட் ஆல்வாரிஸ் மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனத்துறையின் கீழுள்ள கோவா கடற்கரையோர மண்டல மேலாண்மை மையத்தின் உறுப்பினராக உள்ளார். (member of the Goa Coastal Zone Management Authority of the Ministry of Environment and Forests (MoEF). சுற்றுச்சூழலுக்குக் கேடு விளவிக்கும் கழிவுப் பொருள்களை அகற்றுவதைக் கண்காணிப்பது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார் (He is also a member of the Supreme Court Monitoring Committee (SCMC) on Hazardous Wastes constituted by the Supreme Court of India). இந்தப் பொறுப்புகள் ஏதோ மத்திய அரசாங்கத்தின், நீதிமன்றத்தில் தயவால் கிடைத்தவையல்ல. சுற்றுச்சூழல் கேடுகளுக்கு எதிராக அவர் பல்லாண்டுகள் தொடர்ந்து நடத்திய சட்டரீதீயான போராட்டங்களின் விளைவாக அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளாகும்.
நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில்தான் குஜராத்தின் கடற்கரையோரப் பகுதிகள் இந்திய, வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களால் (இவற்றில் ‘இலக்கிய விழாக்கள்' நடத்துபவர்களும் அடக்கம்) நச்சுத்தன்மையாக்கப்பட்டு வருகின்றன. பெருங்கேடுகளை உண்டாக்கும் நச்சுக்கழிவுப்பொருள்களால் கடற்கரையோரப் பகுதிகள் நச்சுத்தன்மை பெற்று பல்லாயிரக்கணக்கானோர் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். அந்த மக்களுக்கு ஆதரவாக காந்தியவாதியாக நின்று போராடி வருபவர் கிளாட் ஆல்வாரிஸ். அவருக்குத் துணையாக நிற்பவர் மிக வசதியான குடும்பத்தில் பிறந்த அவரது துணைவியாரும் அவரது மூத்த மகனும். தற்போது கோவாவையும் உள்ளிட்ட மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகளுக்கு எதிராகப் போராடும் பல்வேறு அமைப்புகளுக்கு ஓயாது உதவி வருகிறவர்கள். கிளாட் ஆல்வாரிஸ் எழுதிய ‘Homo Faber' என்னும் நூல், மேலை நாட்டு அறிவியல், தொழில்நுட்பம் ஆகியன குறித்த ஆழமான விமர்சனங்களை முன்வைக்கிறது.இந்த நூல் மாசேதுங்கின் நண்பரும் உலகப் புகழ்பெற்ற அறிவியலாளருமான ஜோசஃப் நீதாமால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
இது ஒருபுறமிருக்க, ‘புதிய ஜனநாயகம்' தோழர்களால் 1980களில் கடுமையாக வசைபாடப்பட்ட இதே கிளாட் ஆல்வாரிஸ்தான் தமிழகத்தில் நக்சலைட் புரட்சியாளர்கள் ‘போலி என்கவுண்டரில்' கொல்லப்ட்டு வந்த கொடுமையையும் ஆந்திரப் புரட்சியாளர்கள் போலிசாரால் கடத்திச் செல்லப்பட்டு வந்ததையும் இந்தியா முழுமைக்கும் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்', ‘இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேடுகளில் எழுதிய கட்டுரைகள் மூலமாகத் தெரியப்படுத்தி வந்தார். தமிழகத்தில் நடந்து வந்த ‘என்கவுண்டர்க்ளை'ப் பற்றிய உண்மை அறியும் குழுவுடன் வந்திருந்த அவர், திருப்பத்தூரில் தேவாரத்தின் போலிஸ் படையால் தாக்கப்பட்டார்.
அவரது அறிவுசார்ந்த கொடைகளில் மிக முக்கியமானது, கோடிக்கணக்கான டாலர் அன்னிய நிதி உதவிகளுடன் செயல்பட்டுவரும் காஞ்சி பரமாச்சாரியாரின் ஆசி வழங்கப்பட்டவருமான எம்.எஸ்.சாமிநாதன் பவுண்டேஷனின் நிறுவனரும் தாவரவியல் அறிவியலாளருமான எம்.எஸ். சாமிநாதன் இந்தியாவின் உணவுப் பயிரான நெல்லுக்கு நம் நாட்டில் இருந்த நூற்றுக்கணக்கான விதை ரகங்களை ஒழித்துக் கட்டியதையும், அவருக்கு முன் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தவரும் இந்தியாவின் மரபுச் சொத்தான விதை ரகங்களைப் பாதுகாத்து வந்தவருமான டாக்டர் ரிச்சரியாவின் (இவர் இந்தியக் கிறிஸ்துவர்) தேசபக்தப் பணிகளை ஒழித்துக் கட்டிவிட்டு, மேற்கு நாட்டு கார்ப்பரேட்டுகளின் இராசயன உரத்தை சார்ந்தே வளரக்கூடிய ஒற்றை ரக நெல் சாகுபடியை ஊக்குவித்ததையும் அம்பலப்படுத்தி கிளாட் ஆல்வாரிஸ் 1980களில் எழுதிய ‘The Great Grain Robbery' என்னும் புகழ்பெற்ற கட்டுரையாகும்.அது அப்போது வெளிவந்து கொண்டிருந்த The Illustrated Weekly of India' வார ஏட்டில் வெளிவந்தது.
காங்கிரஸ் ஆட்சியிலிருந்தாலும், பாஜக ஆட்சியிலிருந்தாலும் திமுக ஆட்சியிலிருந்தாலும் அஇஅதிமுக ஆட்சியிலிருந்தாலும் ‘ஹிந்து' ராம் போன்றவர்கள் தரும் விளம்பரத்துடன் சமூகத்தில் மிக உயர்ந்த மனிதராக உலவி வரும் எம்.எஸ்.சாமிநாதன்தான் இன்று இந்தியாவில் உள்ள வறுமை பற்றிப் பேசிவருகிறார். மார்க்ஸியம், மாவோ, புரட்சி என்று பேசுபவர்கள் ஒருபுறமிருக்கட்டும், காந்தியம் என்றும் இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம், தொழில்கள் என்றும் பேசிவருபவர்களின் உள்ளத்தில் நேர்மை இருக்குமானால், எம்.எஸ்.சாமிநாதன் போன்றவர்களை அம்பலப்படுத்த வேண்டும்; அல்லது குறைந்தபட்சம் கிளாட் ஆல்வாரிஸை அவதூறு செய்யாமலாவது இருக்க வேண்டும்.
பேராசிரியர் ரஜ்னி கோத்தாரி, 'புதிய ஜனநாயகம்' தோழர்களால் மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சியினராலும் விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்திரா காந்தி படுகொலையை அடுத்து டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டும், அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டும், சீக்கியப் பெண்கள் படுகொலை செய்யப்பட்டும் வந்த நான்கு நாள்களில் கலவரப் பகுதிகளுக்கு உமா சக்ரவர்த்தி, ரொமிலா தாப்பர், சுவாமி அக்னிவேஷ் போன்ற பல்வேறு அறிஞர்களுடனும் மனித உரிமைப் போராளிகளுடனும் சென்று வந்து ‘குற்றவாளிகள் யார்?” (Who are the Guilty?) என்னும் உண்மையறியும் அறிக்கையை அப்போது பியுசிஎல் தேசியத் தலைவராக இருந்த பேராசிரியர் ரஜ்னி கோத்தாரி, பியுடிஆர் என்னும் அமைப்புடன் இணைந்து வெளிக்கொணர்ந்தார். சீக்கியர்கள் மீதான வன்முறை குறித்து மத்திய அரசாங்கம் அமைத்த விசாரணைக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய ஆவணங்களில் இதுவுமொன்று (அந்த விசாரணைக் கமிஷன் ஒரு கண் துடைப்பு நாடகமே என்பது வேறு விடயம்). இந்த ஆவனத்தைத் தயாரித்ததற்காக பேராசிரியர் ரஜ்னி கோத்தாரியும் பிறரும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களாலும் அவர்களது கூட்டணியில் இருந்தவர்களாலும் ‘ஏகாதிபத்திய ஏஜண்டுகள்'என அவதூறு செய்யப்பட்டனர். வன்கொடுமைக்கு ஆளான சீக்கியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இன்றுவரை ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக விடாது நீதிமன்றத்தில் போராடி வருகிறவர்கள் பேராசிரியர் ரஜ்னி கோத்தாரி தலைமைப் பொறுப்பு வகித்த மனித உரிமை அமைப்பும் வேறு சில மனித உரிமை அமைப்புகளுமேயன்றி சீக்கியர்களின் வாக்கு வங்கியைப் பயன்படுத்திக் கொண்ட பாஜகவோ, அகாலி தளமோ, இடதுசாரிகளோ அல்ல.
அதேபோல,2001இல் நடந்த நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நீதிக்கும் நியாயத்துக்கும் புறம்பாகக் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பேராசிரியர் ஜீலானியை விடுதலை செய்வதற்கான இயக்கத்திற்குத் தலைமை தாங்கியதாலேயே பேராசிரியர் ரஜ்னி கோத்தாரி பாஜக-சங் பரிவாரத்தின் கடுஞ்சினத்திற்கு ஆளானார். (ஜீலானியின் விடுதலைக்கும் அப்சல் குருவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கும் போராடி வருபவர்களில் முக்கியமானவர் நந்திதா ஹக்ஸர். பிறப்பால் காஷ்மீரிப் பிராமண பண்டிதரான இவரது தந்தை நேருவின் நெருக்கமான நண்பராக இருந்தவர்)
ஆக, இந்தியாவில் ஒடுக்கும், சுரண்டும் ஆதிக்க சக்திகள் பேராசிரியர் ரஜ்னி கோத்தாரி, கிளாட் ஆல்வாரிஸ் போன்ற அறிஞர்கள் முதல் மிக சாமானியனான எஸ்.வி.ராஜதுரை வரை பல்வேறு நபர்களைக் குறிவைத்துத் தாக்குவது அவர்கள் ‘அன்னிய நிதி' பெறுகிறவர்கள் என்பதாலல்ல; அவர்களின் கருத்துகளும் செயல்பாடுகளும் இந்த ஆதிக்க சக்திகளுக்கு இடைஞ்சலாக இருக்கின்றன என்பதால்தான்.
இந்தியாவில் கூடங்குளம் போராட்டம் போன்ற மக்கள் போராட்டங்களை (இவற்றில் பெரும்பாலனவற்றை நடத்துகிறவர்கள் இடதுசாரிகள் உள்ளிட்ட எந்த அரசியல் இயக்கத்தையும் சேராதவர்கள். (இத்தகைய போராட்டங்களை ஏன் கட்சி சாராதவர்களாலேயே நடத்த முடிகின்றது, இடதுசாரிகளால் அதிகபட்சம் அவற்றில் போய் ‘ஒட்டிக்கொள்ள' மட்டுமே முடிகின்றது என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று) அந்தப் போராட்டத்தை இழிவுபடுத்துவதற்கும் அவற்றை ஒடுக்குவதற்கும் காங்கிரசும் பாஜகவும் பயன்படுத்துகிற சித்தாந்த ஆயுதங்களிலொன்று,அந்தப் போராட்டங்கள் கிறிஸ்துவ நிதி உதவியுடன்,அன்னிய நிதி உதவியுடன் நடத்தப்படுகின்றன என்று கொச்சைப்படுத்துவதாகும். இத்தகைய சித்தாந்தத் தாக்குதல்கள் இந்தியாவின் இயற்கை வளங்களை அம்பானி,டாட்டா, ஜிண்டால் போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களால் கொள்ளையடிப்பதற்கு எதிராக மண்ணின் மைந்தர்கள் நடத்தும் போராட்டங்களைச் சிறுமைப்படுத்துவதற்கும் ஒழித்துக்கட்டுவதற்கும் காங்கிரஸ், பாஜக,அவர்களது அரசியல் கூட்டாளிகள் ஆகியோரால் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு எதிராக. இந்திய தேசத்தின் பண்பாடு, பெருமை ஆகியவற்றில் பெரும் அக்கறை தனக்கு உள்ளதாகக் கூறும் ஜெயமோகன் சுண்டுவிரலைக்கூட அசைக்கமாட்டார்.
தோழர் வ.கீதாவும் நானும் எழுதிய ‘Towards a Non-Brahmin Movement: From Iyothee Thass to Periyar' என்னும் நூல் ஜெயமோகனின் தாக்குதல்களின் குவிமையமாக உள்ளதற்குக் காரணம், அதில் இந்திய தேசத்திற்கும் தேசியத் தலைவர்களுக்கும் எதிரான கருத்துகள் இருக்கின்றன என்பது அல்ல என்றும் பார்ப்பனிய வருணதர்மத்திற்கு எதிரான கருத்துகள் அவற்றில் உள்ளதுதான் என்றும் கருதுகிறேன். “ நாத்திகரான ஈ.வெ.ரா.வைப் பற்றி எழுத ஏன் ஒரு கிறித்துவ நிறுவனம் உதவ வேண்டும்?' என்னு கேள்வியை ‘ஜூனியர் விகடனில்' மிக சாமர்த்தியமாகக் கட்டமைத்துள்ளார்- அந்த நூலின் கணிசமான பகுதி அயோத்திதாசரையும் அவரது சமகால தலித் சிந்தனையாளர்களையும் பற்றியது என்பதை (இந்தப் புத்தகத்தின் தலைப்பே இதைச் சுட்டிக் காட்டுகிறது) நன்கு அறிந்தும்கூட.
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள, எந்த வேலை வாய்ப்போ,வருமானமோ இல்லாதிருந்த எனக்கும் வ.கீதாவுக்கும் நிதி உதவி செய்தவர்களின் நீண்ட பட்டியலை எங்கள் நூலிலேயே தந்துள்ளோம். அப்படியிருந்தும் ‘கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதையும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சீர்குலைப்பதையும், இந்திய தேசியப் பண்பாட்டை அழிக்கவும் வேலை செய்து கொண்டிருக்கிற ஒரு அமைப்பின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பெற்ற நிதியைக் கொண்டே வெளியிடப்பட்ட ஒரு நூல்' என்று ஜெயமோகன் தனது வளைத்தளத்தில் எழுதியுள்ளார். கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் ‘ஜூனியர் விகடனி'லும் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் கடுமையானவை.
உமா சக்ரவர்த்தி, சேகர் பந்தொபாத்யாய, சுமித் சர்க்கார், தானிகா சர்க்கார், கிறிஸ்தோஃபர் ஜாபெர்லெ போன்ற உலகப் புகழ்பெற்ற வரலாற்றறிஞர்களால் பாராட்டப்பட்ட இந்தப் புத்தகத்திலுள்ள சில பத்திகள் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நீதிநாயகம் ஏ.பி.ஷாவாலும் நீதிநாயகம் கே. சந்துருவாலும் இரண்டு தீர்ப்புகளை வலுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆக, அவர்களும் தேசவிரோதிகள் என்று ஜெயமோகன் கூறுவாரா?
அதேபோல, 1980களுக்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் எஸ்.வி.ராஜதுரையின் பொருளாதார வசதி பெருகியுள்ளது என்றும் கூறியுள்ளார். ஜெயமோகன் எழுத்தாளர் மட்டுமல்ல, வருமான வரித் து¨றையிலும் உளவுத் துறையிலும் பணியாற்றுகிறாரோ என்றுதான் நான் கருத வேண்டியுள்ளது. அதே போல, நானும் சுதீர் செந்திலும் ஜெயமோகனை வசைபாடச் சொல்லி தமிழ் தேசிய அமைப்புகளுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பினோம் என்று அவர் கூறுகையில் போலிஸ் துறையின் மின்னணுக் குற்றப் பிரிவில் (ecrime branch) ஜெயமோகன் வேலை செய்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சரி, இப்போதாவது சொல்லுங்கள் ஜெயமோகன், உண்மையில் நீங்கள் இங்கு என்ன வேலைதான் பார்க்கிறீர்கள்?
பொதுவெளியில் எந்தப் பாதுகாப்பும் அற்ற தோழர் வ.கீதா ‘நடத்தி வரும் தன்னார்வ அமைப்பைப் பற்றி பொது விவாதம் நடத்த வேண்டும்' என்று எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறு கூறிவிட்டு ‘அறவியல்வாதி'யாகத் தன்னை ஜெயமோகன் முன் நிறுத்திக் கொள்வது எத்தகைய ஆபாசம் என்பதை எனது வழக்குரைஞர் அனுப்பிய ‘வக்கீல் நோட்டீஸை'யும் எனது எழுத்துக்களையும் ஒன்றாகக் கருதி மாய அழுகை அழுகும் ‘அறிவுஜீவிகள்' அறிந்து கொள்ளாததில் வியப்பில்லை.
- கிளாட் ஆல்வாரிஸ் 1980களில் எழுதிய ‘The Great Grain Robbery' என்னும் புகழ்பெற்ற கட்டுரை -
பதிலளிநீக்குஇது ‘The Great Gene Robbery' என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சரி பார்க்கவும்.
ஜெயமோகனின் மீது அவரின் அவதூறுகளுக்காக சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு எஸ்.வி.ராஜதுரைக்கு எல்லா வகையான நியாயங்களும் இருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த ஆதாரத்தையும் வெளியிடாமல் அவன் சொல்கிறான்; இவன் சொல்கிறான் என்று இந்துத்துவத்தை விமர்சிப்பவர்களின் மீது எல்லாம் சேற்றை வாரிப் பூசுகிற ஜெயமோகன் சட்டத்திற்கு முன் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். ஆனாலும் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் வக்கீல் நோட்டீஸிலுள்ள வார்த்தைகளின் கடுமையையும் கவனத்தில் கொண்டிருக்கலாம்; கேனையன் மாதிரி வார்த்தைகள் வருவதைத் தவிர்த்திருக்கலாம். அது தேவையில்லாமல் ஜெயமோகனுக்கு அந்த வக்கீல் நோட்டீஸையே பொது வெளியில் ஒளிரவிட்டு நீலிக் கண்ணீர் வடிப்பதற்கு ஒரு வாய்ப்பைத் தந்து விட்டது என்பது தான் வருத்தத்திற்கு உரியது.
பதிலளிநீக்குஎஸ்.வி.ராஜதுரை அவரின் வழக்கில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
எஸ்வி ராஜதுரை போன்ற பெரியவர்களுக்கு துணையாக நங்கள் இருக்குறோம்.ஜெயமோகன் போன்ற பாசிச வாதிகளுக்கு அஞ்சாமல் உங்கள் பணிகளை தொடருங்கள்
பதிலளிநீக்குஇந்து,இந்தி இந்தியா நூல் மறுபதிப்பு வெளிவரவேண்டும் நான் படித்து விட்டேன் இருப்பினும் தேவைப்படுகிறது .......வரும் 2013 சென்னை புத்தகச் சந்தையில் கிடைக்குமா?
நீக்கு‘இந்து இந்தி இந்தியா'நூல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் நூல் 1947க்குமுன் நடந்ததை கண்முன்னே கொண்டுவந்த நூல். எதிர்ப்புகளே நூலுக்கு விளம்பரமாகட்டும்
நீக்கு