மார்க்சிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்க்சிஸ்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 7

நன்மாறனைப்போல் சாக, நன்மாறனைப் போல வாழ்ந்தாக வேண்டும் - ஆதவன் தீட்சண்யா




வாழ்வின் தொடக்கத்திலிருந்து மரணம் வரையிலும்
எண்ணற்ற குறுக்குச்சாலைச் சந்திப்புகள்
எந்தப் பாதை வித்தியாசமானதாயிருக்குமோ
அந்தப் பாதையில் நடப்பதற்கு நான் முற்படக்கூடும்…

- பஞ்சாப்பின் புரட்சிகர தலித் கவிஞன் சாந்த்ராம் உதாசி எழுதிய ‘என் மரணத்தின்போது அழாதீர்கள்’ என்ற பாடலின் இந்த இறுதிவரிகள்தான் தோழர் நன்மாறனின் வாழ்வுக்கும் சாவுக்கும் மிகப்பொருத்தமானவை. சமூகத்தில் நிலவிடும் ஏற்றத்தாழ்வுகளையும் அவற்றை நிலைநிறுத்துவதற்கான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து சமரசமற்றுப் போராடுவதற்கு இட்டுச் செல்லும் பாதை எதுவோ அதுவே தன் காலத்தின் வித்தியாசமான பாதை என்பதை உற்றுணர்ந்து அதையே தேர்ந்துகொண்டவர் நன்மாறன்.  

நாடு விடுதலையடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக, குஞ்சரத்தம்மாள் – வே.நடராசன் தம்பதியரின் மகனாகப் பிறந்த இராமலிங்கம் பின்னாளில் நன்மாறனாக மதிப்பையும் புகழையும் பெற்ற வரலாறானது தமிழ்ச்சமூகம் அடைந்துள்ள உயரங்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பில் வேர்கொண்டுள்ளது. தந்தையின் வழியே இளவயதிலேயே மார்க்சீயத்தை ஏற்றுக்கொண்ட நன்மாறன், வாழ்வாதாரத்திற்கு பார்த்துவந்த நடத்துனர் பணியை உதறிவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானவர். சொந்த வாழ்வை வளப்படுத்திக் கொள்வதா சமூகத்தின் மேம்பாட்டுக்கு உழைப்பதா என்கிற கேள்விக்கு, சமூகநிலை மேம்படும்போது சொந்தவாழ்வும் வளப்படும் என்கிற பதிலினை தனது அரசியல் தொலைநோக்கிலிருந்து அவர் கண்டடைந்தார்.  சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கட்சி ஆகியவற்றின் மூலம் பொதுவாழ்வில் தான் ஆற்றிவந்த களப்பணிகளின் நீட்சியாக பத்தாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகவும் செயலாற்றிய நன்மாறன், தனது 74வது வயதில் 28.10.2021 அன்று காலமாகிவிட்டார். 

நன்மாறனின் இறப்புச்செய்தி வெளியானதிலிருந்து சோர்வறியாத ஓர் அமைப்பாளராக, அரசியல் செயல்பாட்டாளராக, எவரும் மனத்தடையின்றி எளிதில் அணுகவாய்த்த தோழராக, மேடைப்பேச்சாளராக, எழுத்தாளராக, சட்டமன்றவாதியாக அவர் ஆற்றிய பணிகளையும் அவரோடு பழகிய அபூர்வ தருணங்களையும் பலரும் ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார்கள். பகிரப்படும் அச்செய்திகளுக்குள்ளிருந்து மேலெழும் நன்மாறனின் சித்திரமானது, அரசியலை பிழைப்புக்கான தொழிலாக கீழ்ப்படுத்தாமல், தான் நம்பும் கொள்கையின் வழியே சமூகத்தை அழைத்துச் செல்வதற்காக திடச்சித்தத்துடன் பணியாற்றும் நன்மாறன்களுக்காக இச்சமூகம் காத்திருக்கும் ஏக்கத்தை காட்டுவதாயிருக்கிறது. எளிமையும் பொதுவாழ்வில் நேர்மையும் அதிசய குணங்களல்ல; அவை மனித சுபாவம், கம்யூனிஸ்ட்களின் அடிப்படை குணம். கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பதானது, கம்யூனிஸ்டாய் வாழ்வதற்காகத்தான் என்பதற்கான விளக்கத்தை தன் வாழ்வின் வழியே நிறுவிச்சென்றுள்ளார் நன்மாறன். 

நன்மாறன் எத்தகைய மதிப்புமிக்க அப்பழுக்கற்ற வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதனை அவரது இறப்பு உலகறியச் செய்திருக்கிறது. அவருக்கு இறுதிமரியாதை செலுத்த தமிழ்நாட்டின் முதல்வரும், அமைச்சர்களும், மாநிலம் முழுவதுமிருந்து இயக்கத்தோழர்களும், மதுரையின் பல்வேறு சமூக அடுக்குகளின் மக்களும் சாரிசாரியாக வந்து குவிந்ததைப் பார்த்த பலரும் ‘சாவதென்றால் நன்மாறனைப் போல சாகவேண்டும்’ என்று பேசிக்கொண்டார்கள். நன்மாறனைப்போல் சாக, நன்மாறனைப் போல் வாழ்ந்தாக வேண்டும்.

ஒரே மூச்சில் உடனடியாகச் சாம்பலாகிவிட
நான் விரும்பவில்லை
எப்போதெல்லாம் சூரியன் அஸ்தமிக்கின்றானோ
அப்போது துண்டுதுண்டாக எனதுடலைத் தீயிட்டுக் கொளுத்துங்கள்

- என்ற உதாசியைப்போல நன்மாறனும், கொளுத்தப்படும் தனது சடலத்திலிருந்தும் சமூகத்திற்கான ஒளியும் வெம்மையும் கிடைத்துவிட வேண்டுமென்கிற என்ற கனவோடுதான் நேற்று எரிந்திருப்பார். 

 

 

ஞாயிறு, ஜூலை 1

தூர்ந்த மனங்களை தோண்டும் வேலை - ஆதவன் தீட்சண்யா


ஒரு குழந்தை, பெண் பற்றிய முதலாவது  சித்திரத்தை தனது குடும்பத்திற்குள் காண்கிறது. அந்தச் சித்திரத்தின் வெவ்வேறு பரிமாணங்களைக் கண்டு வளரும் அக்குழந்தை, அதன்வழியே பெண்ணைப் பற்றிய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்கிறது. அக்கண்ணோட்டமானது, மனிதகுலத்தின் முதல் ஒடுக்குமுறையான பாலின ஒடுக்குமுறையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வது அல்லது முரண்பட்டு மறுப்பது என்கிற இருநிலைகளுக்கிடையே ஊசலாடி ஒருநிலையை அடைகிறது. அதாவது, பாலின சமத்துவம் குறித்த கருத்தாக்கம் குடும்பத்தின் விவாதப்பொருளாக இல்லாத அல்லது வெகு அரிதாகவே உள்ள இச்சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வையும் அதன் பேரிலான ஒடுக்குமுறையையும் ஏற்பதற்கான சாத்தியமே இங்கு மிகுதியாக உள்ளது. 

மூடிய கதவுகளுக்குப் பின்னே இயங்கும் குடும்பம் என்கிற நிறுவனத்திலும் ஒளிவுமறைவற்ற வெட்டவெளி என்கிற சமூகத்திலும் தனது மூத்தோரால் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை குழந்தைப்பருவம் முதலே ஒருவர் கண்டுவந்திருப்பினும் அது பாரபட்சமானது, நீதியானதல்ல என்று உணர்வதில்லை. காரணம், பெண் அவ்வாறு இருப்பதுதான் இயல்பு, ஒழுக்கம்  என்பதை குடும்பம், தெரு, வழிபாட்டுக்கூடங்கள், மதம், கலை இலக்கியம், கட்சிகள், அரசு, நீதி, ஊடகங்கள் போன்றவை சாத்தியமான விதங்களிலெல்லாம் பரப்பி வருகின்றன. அவ்வாறான போதனைகள் ஒரு திணிப்பைப் போன்றல்லாமல், இயல்பாக அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் இணைக்கப்பட்டதாக இருப்பதால் நொடிதோறும் திடமேறி காலங்கள் தாண்டியும் பாலினக் கண்ணோட்டத்தை தகவமைக்கின்றன.

பெண்ணின் தோற்றம் பற்றிய அறிவியல்பூர்வமான விளக்கத்தை விடவும் அவள் ஆணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவள் என்கிற மதமயக் கண்ணோட்டமே செல்வாக்குடன் விளங்குவதால், பெண் ஆணுக்குள் அடங்கியவள் என்றே எப்போதும் பார்க்கப்படுகிறாள். பெண் பாவகரமானவள், சபலபுத்தி உள்ளவள், சந்தேக சுபாவி, குடும்பம் மற்றும் கணவனுக்கு துரோகம் செய்வதில் நாட்டமுள்ளவள், அவள் தன்னளவில் சுயேச்சையானவளல்ல, எதுவொன்றுக்கும் ஆணைச் சார்ந்தவள், ஆகவே ஆணுக்கு உடைமையானவள், ஆணின் காமஇச்சையை தணித்தாகும் பொறுப்பிலுள்ளவள், விருப்புவெறுப்புக்கேற்ப அவளை நடத்தும் உரிமை ஆணுக்கு இருக்கிறது என்பதாக மநுஸ்மிருதி போன்ற மதக் கோட்பாடுகளால் முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் நம் மனங்களை வழிநடத்துகின்றன. இதற்கிணையாகவே ஆக்கிரமிப்பும் அபகரிப்பும் ஆட்கொள்ளலும் வன்முறையும் ஆணின் இயல்புகளாக பயிற்றி வளர்க்கப்படுவதால் அவனது எல்லா அத்துமீறல்களுக்கும் ஒரு சமூக ஒப்புதல் கிடைக்கிறது. பெண்ணுடல் மீது ஆண் நடத்தும் வல்லாங்கு (வன்புணர்வு) உள்ளிட்ட வன்முறைகள் சட்டத்தின் பார்வையில் வேண்டுமானால் குற்றமாக இருக்கின்றதேயன்றி சமூகத்தின் பார்வையில் ஆணின் உரிமையாக, இயல்பான சுபாவமாக, ஆண்மையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுவதற்கும் இத்தகைய சூழலே காரணமாகிறது.

குடும்பத்தினராலும் குடும்பத்திற்கு வெளியேயுள்ள எவராலும் எதன்பொருட்டும் தாக்கப்படும் இலக்காக பெண் இருக்கிறாள். தனிநபர் குரோதம் தொடங்கி சாதி/ மதம்/ நாடு/ இனம்/ அடிப்படையிலான மோதல் வரையிலும் பெண்ணுடல் ஒரு வதைக்களமாகிறது. பிறப்புறுப்பை சிதைப்பது, கூட்டாக வல்லாங்கு செய்வது, கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, தோற்றத்தை விகாரமாக்குவது, மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவமானப்படுத்துவது, கொல்வது எனப் பெண்ணுடல்மீது நேரடியாக நடக்கும் தாக்குதலானது அவளை நிலைகுலையச் செய்கிறது. வலியும் அவமானமும் இயலாமையும் கீழ்ப்படிதலும் ஏற்படுத்தும் தாழ்வுணர்ச்சியினால் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிப்போகிறாள். தாக்குதல் உடல்மீது நடப்பினும் குன்றிப்போவதென்னவோ ஆளுமைதான். இந்த நேரடி வன்முறைக்கு சற்றும் குறையாத துன்புறுத்துதலையும் பாதிப்பையும் உருவாக்கவல்லதாக, பெண்ணின் இருப்பை கேலிக்குள்ளாக்குவது, இரண்டாம்பட்சமானவள் என்று சிறுமைப்படுத்துவது, நடத்தைப் பற்றி அவதூறுகளை பரப்புவது, ஆபாசமாக பேசுவது என நீள்கிறது வாய்மொழி வன்முறை. தன்னை தாக்குகிற ஆணை அதைவிட மூர்க்கமாக திருப்பித் தாக்குகிற வலு பெண்ணுக்கும் இருந்துவந்துள்ள போதிலும், அவ்வாறு தாக்காமல் தாங்கிக் கொள்ளும்படியாக அவளை உளவியல்ரீதியாக கட்டுப்படுத்தும் பணியை பண்பாட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

***
பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றிருப்பதாக தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பிட்ட மதம் சார்ந்த பெண்ணின் பிணத்தையும்கூட வன்புணர்வோம் என்று கொக்கரிப்பவர்களால் ஆளப்படும் இந்நாடு இந்த அவமானகரமான இடத்திற்கு வந்து சேர்ந்திருப்பதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. மாற்றுமதத்தின் பெண்களை கூட்டாக வல்லாங்கு செய்து அதைப் படம்பிடித்து ஊர்தோறும் ஒளிபரப்பி தமது மதத்தின் ஆண்மையை நிரூபித்தவர்களும், ஆன்மீகப்பேரொளியை அருளுவதாய் பெண்களை வரவழைத்து ஆசிரமங்களுக்குள் கொன்று புதைத்த பாபாக்களும் யோகிகளும், பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி வல்லாங்கு செய்யும் பாதிரிமார்களும், பெண்களைத் தூக்கி வந்து வல்லாங்கு செய்துவிட்டு பிறப்புறுப்பில் லத்திக்கம்பைச் செருகி சித்திரவதை செய்யும் காவல்துறையினரும், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுக்காளாகும் கவர்னர்களும் உள்ளதொரு நாடு அதன் தகுதிக்குரிய இடத்தைத்தான் பெற்றிருக்கிறது. ஆண்களின் பாலுணர்வு வக்கிரங்களுக்கு பச்சிளம் சிசு முதல் மூதாட்டிகள் வரையான பெண் மட்டுமல்ல, பெண்ணின் பிணமும் தப்ப முடியவில்லை. கல்விக்கூடம், வழிபாட்டுக்கூடம், மருத்துவமனை, காவல்நிலையம், அலுவலகம், போக்குவரத்து வாகனம் வரை எந்தவொரு இடமும் பெண்ணுக்கு பாதுகாப்பானதாக இல்லை. எனினும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு அரைகுறை ஆடை, திகட்டும் அலங்காரம், வெளிநடமாட்டம், சகவாசக்கேடு உள்ளிட்ட அவர்களின் நடத்தையே காரணம் என்று பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் மோசடியை அமைச்சர்கள் முதல் ஆசிரம ஓனர்கள் வரை வெகுஜோராக நடத்துகிறார்கள். அரைகுறை ஆடைதான் வல்லாங்குக்கு தூண்டுகிறது என்றால், இடுப்பில் ஒரு துண்டுத்துனியன்றி வேறெதுவும் அணியாத குருக்களும் சாதுக்களும் ஆதீனங்களும் ஏன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை? ஆகவே இங்கு பிரச்னையின் மூலம் பெண்ணின் புறத்தோற்றமல்ல, ஆணின் உளவியலே. ஆனால் இப்படியான இழிநிலைக்கு நாடு திடுமென இன்றைய அதிகாலை வந்து சேர்ந்துவிடவில்லை. இன்டர்நெட்டும் மேற்கத்தியப் பண்பாடும் இங்கு வருவதற்கு நெடுங்காலத்திற்கும் முன்பிருந்தே பெண்களை இந்தியச்சமூகம் இவ்வாறாகத்தான் நடத்தி வந்திருக்கிறது. இந்தியச்சமூகம் என்பது உங்களுக்கும் எனக்கும் வெளியில் இருப்பதல்ல.

இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் மேற்சொன்ன இடர்ப்பாடுகளையும் தாண்டியது தலித் பெண்களின் நிலை. பெண்ணென்ற வகையில் ஓர் ஆணாதிக்கச் சமூகத்தின் பாலினப் பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் அதேவேளையில் அவர்கள் சாதியத்தின் பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தலித்தாக  தீண்டாமையின் வன்கொடுமைகளுக்கு ஆளாகிக்கொண்டே, தலித் பெண்ணாக தீண்டுதல் என்கிற வன்கொடுமைக்கும் அவர்கள் ஆட்படுகிறார்கள். “தீட்டு – புனிதம்” கற்பிதங்களின் பேரில் தொட்டால் தோஷம் பார்த்தால் பாவம் என்று தலித்துகளை ஒதுக்கிவைக்கும் சாதியர்கள், நாளொன்றுக்கு சராசரியாக மூன்று தலித் பெண்களை வல்லாங்கு செய்கின்றனர். தலித்துகள் மீது சராசரியாக ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கு ஒருமுறை நிகழ்த்தப்பட்டுவந்த வன்கொடுமை கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து சராசரியாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்கிற நிலையை எட்டியுள்ளது. எந்தவொரு வன்கொடுமையினையும் போலவே இந்த சாதிய வன்கொடுமையிலும் பெரிதும் பாதிக்கப்படுவோர் பெண்களே என்று தனித்துச் சுட்டவேண்டியதில்லை.  ஓர் ஆணாக பெண்ணை வன்கொடுமை செய்வதற்கும் ஒரு சாதியராக தலித் பெண்ணை வன்கொடுமை செய்வதற்கும் பின்னேயுள்ள உளவியல் வெவ்வேறானதோ, ஒன்றுக்கொன்று முரணானதுமோ அல்ல. இரண்டுக்குமே அடிப்படை ஆதிக்க மனோபாவம்தான்.

வன்கொடுமைகளின் தனித்துவமான வடிவங்களைக்  கண்டறிந்து அவற்றை தடுப்பதற்குரிய சட்டங்களை கடுமையாக்குவதும் சட்ட அமலாக்கத்தை உறுதி செய்வதும் இந்த ஆதிக்க மனோபாவத்தை ஒரு கட்டுக்குள் நிறுத்தும் என்பது உண்மைதான். ஆனால் முற்றாக மறைவதற்கு பதில் ஒளிந்துகொள்கிற வேறு வடிவங்களில் ஆதிக்கம் தன்னை மறுவார்ப்பு செய்துகொள்ளும். எனில், தனிமனித அளவிலும் சமூகவெளியிலும் நிலவும் இந்த ஆதிக்க மனோபாவத்தை சமத்துவம் என்கிற நீதியான சிந்தனையால் மாற்றீடு செய்வதற்கான பணிகளை கூடுதலாகவும் பண்பாட்டுத்தளத்தில் ஆற்றவேண்டியுள்ளது. அதன்பொருட்டு சமத்துவம் என்பது ஓர் அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல அதுவொரு வாழ்முறையும்கூட என்பதற்கான போராட்டத்தை  தன்னளவிலும் பெருஞ்சமூகத்திலும்  பலங்கொண்ட மட்டும் நடத்தவேண்டியுள்ளது.  பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாட்டை நடத்துவதன் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இப்போராட்டத்தின் பாதையில் தனது பேரடியைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது.  

- பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாட்டுச் சிறப்பிதழ், தீக்கதிர்-வண்ணக்கதிர், 01.07.2018





வியாழன், அக்டோபர் 1

கௌரவக் கொலை தடுப்பு மசோதா - அ.சவுந்தரராசன் அவர்களால் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது


தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவை விதி எண் 123-ன் கீழ் “கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிகழ்த்தப்படும், கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா - 2015” சட்ட முன்வடிவை நடப்புக் கூட்டத்தில் அறிமுகம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் அ. சவுந்தரராசன் (29.9.2015) பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்ட மசோதா பேரவைச் செயலகத்தின் ஆய்வில் உள்ளது. அதன் நகல் இங்கு தரப்படுகிறது.  (நன்றி: தீக்கதிர் 01.10.2015)

சாதி, மத, இன வகுப்பு அடிப்படையில் உயர்வும், மேன்மையும் பாதிக்கப் பட்டதாக கருதி கௌரவம் பார்த்து கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், வகை செய்வதற்கான ஒரு சட்டம்.சமீப காலமாக “கௌரவம்” என்ற பெயரால் அதிக எண்ணிக்கையிலான கொலைகள், குற்றங்கள் ஒரு குடும்பம் அல்லது குறிப்பிட்ட சாதியினர் அல்லது சமூகத்தினரிடையே நடைபெறுகிறது.

“கௌரவம்” என்ற பெயரால் நடைபெறும் குற்றமானது மனரீதியான, உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறை மற்றும் பிற நிர்ப்பந்த நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக உள்ளது. இதுபோன்ற ஒவ்வொரு குற்றத்திலும் தன் விருப்பப்படி திருமணம் செய்வதற்கான உரிமையைப் பயன்படுத்தும் பெண்ணின் குடும்பம் அதிகமாக ஈடுபடுகிறது. இக்குடும்பம் சிலவேளைகளில் தாமாகவோ அல்லது பெரும்பாலும் தமது உறவினர்/நண்பர்கள் உதவியுடனோ அல்லது சாதிய அல்லது சமூகத்தினரை உள்ளடக்கிய பஞ்சாயத்து நடவடிக்கைகள் மூலமோ இக்கொலை மற்றும் குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில நிகழ்வுகளில், இதுபோன்ற கொலைகள் மற்றும் குற்றங்களில் “சாதிய” அல்லது சமூக பஞ்சாயத்தினரே முக்கியக் குற்றவாளிகளாக செயல்படுகின்றனர்.

இதுபோன்ற பஞ்சாயத்து அல்லது சாதிய அமைப்புகள் பல்வேறு வகையான கட்டாய அல்லது தண்டனை நடவடிக்கைகள் மூலம் பயத்தை உருவாக்கி அதன் மூலம் சுயவிருப்ப திருமணங்களை அல்லது உறவுகளை தடுத்து நிறுத்த விரும்புகின்றனர். இருப்பினும், இது போன்ற குற்றங்கள் “கௌரவம்” என்ற கருத்தோடு நடைபெற்று அதற்கு பலகாரணங்கள் கூறப்பட்டாலும், பொதுவாக பழக்கவழக்கம், சம்பிரதாயம், மரபுபோன்றவற்றால் நியாயப்படுத்தப் படுகின்றன. நம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், குறிப்பாக தன் உடலின் மீதான சுதந்திரம் மற்றும் யாருடன் இருக்க வேண்டும், வாழவேண்டும் என்ற உரிமையை இதுபோன்ற செயல்கள் மீறுகின்றன. பெற்றோர்களின் இச்செயல்கள் ஒரு பெண் / ஆண் தான்விரும்பும் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை தடுத்து அதன் விளைவாக அவள்/அவன் கருத்து சுதந் திரத்தை முடக்குகின்றன.

ஒரு திருமணம் நடைபெற சட்டப்படி முழு சம்மதம் முக்கியமான தேவை. இருப்பினும் “கௌரவம்” என்ற பெயரால் நடைபெறும் கொலை மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய சட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை. தவிர சாதிய மத அமைப்புகள் அல்லது சமூக பஞ்சாயத்துகளால் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும் கொடூர குற்றச்செயல்கள், அவற்றில் ஈடுபடும் பஞ்சாயத்துகளை / நபர்களை தண்டிக்க சட்டம் ஏதும் இல்லை. சில குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவுகளில்வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால், “கௌரவம்” என்ற பெயரால் நிகழ்த்தப்படும் சட்டத்திற்கு புறம்பான மொத்த கொடூரங்களையும் கணக்கில்கொண்டு தகுந்த தண்டனைகளை வழங்க இவை போதுமானதாக இல்லை. எனவே, ஒரு தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டிய கட்டாய சூழல் உரு வாகியுள்ளது.இந்திய குடியரசின் அறுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழக சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக.

குறுந்தலைப்பு மற்றும் தொடக்கம்
1. (அ) இச்சட்டம் கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015 என வழங்கப்பெறும்.(ஆ) இந்த மசோதா மாநில அரசால் அரசிதழில் அறிவிக்கை செய்யப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வரும்.
\
செயல்பரப்பு
 2. தமிழ்நாடு எல்லை முழுவதும்.

குற்றச் செயல்
3.அனைத்து இளம் வயது ஆண், பெண் இரு பாலருக்கும் தமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையும், தமது உடல் மீதானஉரிமையும் உண்டு. அவர்களுக்கு திருமண பந்தத்திலோ அல்லது எவ்விதத்திலோ தம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. இவ்வித உரிமைகளைத் தடுக்கும் எந்தவித துன்புறுத்தல்களும், வன்முறைகளும், செயல்களும் இந்தச் சட்டத்தின்கீழ் குற்றமாக கருதப்படும்.

தண்டனை
4. (அ) தனிநபர் அல்லது நபர் கள், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம், அல்லது அவர்களுடன் கூட்டாக சேர்ந்து செயல்படுபவராக இருக்கலாம், அல்லது அக்குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் அல்லது நபர்களின் வேண்டுகோளின் பேரிலோ அல்லது ஒரு அமைப்பிலுள்ள உறுப்பினர் அல்லது சாதி அல்லது பிரிவு அல்லது குழு அல்லது சமுதாய பஞ்சாயத்தின் (எந்த விதமான பெயரில் அழைக்கப்பட்டாலும்) பேரிலோ, பிரிவு 3ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை செயல்படுத்த விரும்பும் ஒரு பெண்ணையோ அவளது துணைவரையோ (அல்லது அவளோடு உறவாடும் நபர் அல்லது நபர்களையோ) கொலை செய்தால் இபிகோ பிரிவு 302ன் கீழ் கொலைக்குற்றமாக கருதப்பட்டு அதற்குரிய தண்டனை வழங்கப்படும்.(ஆ) பிரிவு 3 - இன் கீழ் தனது உரிமையை நிலை நாட்டிய தம்பதி மீதோ அல் லது அவர்களில் ஒருவர் மீதோ அல்லது அவரது குடும்பத்தினர் மீதோ அல்லது அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர் மீதோ நிகழ்த்தும் துன்புறுத்தல் அல்லது கொலை அல்லது எந்தவிதமான வன்முறையையும், புகழ்கிற அல்லது பகிரங்கமாக ஆதரிக்கிற எந்த ஒரு நபர் அல்லது நபர்கள் அல்லது ஒரு குழுவினர் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும், ரூபாய் ஒரு இலட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

விளக்கம் -1
இந்தப் பிரிவில் மரணத்தை உண்டாக்கும் செயல் உத்தரவிடப்பட்டபோது அங்கு இருந்த, சாதிய மற்றும் சமூக பஞ்சாயத்தில் பங்கேற்ற, அனைத்து உறுப்பினர்களும் கொலைக் குற்றம் செய்தவராகவே கருதப்படுவர். 5.தனிநபர் அல்லது நபர்கள், பாதிக்கப் பட்டவரின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம், அல்லது அவர்களுடன் கூட்டாகசேர்ந்து செயல்படுபவராக இருக்கலாம், அல்லது அக்குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் அல்லது நபர்களின் வேண்டு கோளின் பேரிலோ அல்லது ஒரு அமைப்பிலுள்ள உறுப்பினர் அல்லது சாதி அல்லது பிரிவு அல்லது குழு அல்லது வகுப்பு அல்லது சமுதாய பஞ்சாயத்தின் (எந்த விதமான பெயரில் அழைக்கப்பட்டாலும்) பேரிலோ, பிரிவு 3ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை செயல்படுத்த விரும்பும் ஒரு பெண்ணையோ அவளது துணைவரையோ (அல்லது அவளோடு உறவாடும் நபர் அல்லது நபர்களையோ) துன்புறுத்தினாலோ அல்லது அந்த உரிமைகளை செயல் படுத்துவதை தடுத்தாலோ குறைந்த பட்சம் 1 ஆண்டு தண்டனையும் அதிகபட் சம் 10 ஆண்டுகள் தண்டனையும் அபராத மும் வழங்கப்படும்.

விளக்கம் -2
இப்பிரிவில் துன்புறுத்தல் மற்றும் தடுத்தல் என்பதற்கு உடல் ரீதியிலான மற்றும் மன ரீதியிலான கீழ்க்காணும் நடவடிக்கைகள் உள்ளடக்கப்படும். 1. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை சகோதரன், சகோதரி என்று அறிவித்தல். 2. அவர்கள் வசிக்கும் கிராமம் அல்லது பகுதியிலிருந்து திருமணம் செய்துகொண்ட தம்பதி அல்லது அவர் குடும்பத்தினர் அல்லது உறவினர்களை வெளியேற்றுதல். 3.தம்பதி அல்லது அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை அபராதம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துதல்  4.தம்பதி அல்லது அவர்களது குடும் பத்தினர் அல்லது அவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் மீது சமூக தடை விதித்தல் அல்லது சமூக புறக்கணிப்பு செய்தல்.

5.தம்பதி அல்லது அவர்களது குடும்பத்தினர் அல்லது அவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் மீது பொருளாதார தடை விதித்தல் அல்லது பொருளாதார புறக்கணிப்பு செய்தல். 6.தம்பதி அல்லது அவர்களது குடும்பத்தினர் அல்லது அந்த ஆணின் குடும்பத்தினரின் நிலம் அல்லது சொத்து மீதான அவர்தம் உரிமையை மறுத்தல் அல்லது வெளியேற்றுதல். 7.தம்பதியையோ அல்லது அவர்களில் ஒருவரையோ பரஸ்பரம் சந்திக்க விடாமலும் அல்லது இணைந்து வாழவிடாமலும், நேரடியாக மிரட்டுவது அல்லது இதர தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி மிரட்டுவது, உடல்ரீதியான, மனரீதியான உளைச்சலை ஏற்படுத்துவது. 8.தம்பதியையோ அல்லது அவர்களில் ஒருவரையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ அல்லது அவர் களோடு தொடர்பில் உள்ள எவரையும் தண்டிப்பதாக மிரட்டுதல். 9.அந்தப் பெண் அல்லது அவரது துணைவர் அல்லது அவர்களோடு தொடர் பில் உள்ள எவருக்கும் துன்பம் அல்லது காயங்கள் ஏற்படுத்துதல் 10. அந்தப் பெண்ணிற்கோ அல்லது அவரது கணவருக்கோ வேறு ஒருவரை கட்டாய திருமணம் செய்து வைத்தல்குற்றம் நிரூபிக்கும் பொறுப்பு 6. பிரிவுகள் 4 (அ), (ஆ), மற்றும் 5-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட நபர்அல்லது நபர்கள், தங்கள் மீது சுமத்தப் பட்ட குற்றம் ஏற்புடையது அல்ல என்பதைநிரூபிக்கும் பொறுப்பு அவர்களையே சாரும்.

முன்தடுப்பு அதிகாரமும்தண்டனையும்
7.(அ) மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குற்றவியல் நடுவர் பிரிவுகள் 4 (அ), (ஆ) மற்றும் 5-இன் கீழ் குற்றங்கள் நடைபெறும் என்று கருதினாலோ அல்லது தகவல் பெற்றாலோ, ஒரு தடை உத்தரவின் மூலம் அத்தகைய குற்றச் செயல்களை செய்ய வாய்ப்பு உள்ளதாக கருதப்ப டும் நபர் அல்லது நபர்கள் சந்திப்பதற்கு தடை விதிக்கலாம்.(ஆ) உட்பிரிவு (அ)ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எவரொருவர் மீறினாலும் அவருக்கு 6 மாதத்திற்கு குறை யாத சிறைத்தண்டனையும், அதிகபட்சம் 2 வருடங்கள் வரை அபராதத்துடன் நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.

தம்பதியின் உறுதிமொழி
8. (அ) திருமணம் செய்து கொள்ள விரும்பும் எந்த இரு நபர்களோ அல்லது ஒருவரோடு ஒருவர் உறவில் உள்ள இருநபர்களோ தமது வயது மற்றும் சேர்ந்து வாழ விரும்பும் சம்மதத்தை வாய் மொழியாகவோ, எழுத்து மூலமோ ஒரு காவல் அதிகாரி அல்லது அரசு அதிகாரியிடம் தெரிவித்திட வேண்டும். அதை அவர்கள் அருகில்உள்ள காவல்நிலையத்திற்கு அறிவித்திடல் வேண்டும். அந்த தம்பதி மீது காவல் துறை அல்லது மற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.(ஆ) அவ்வாறு உட்பிரிவு (அ) இன் கீழ்உறுதிமொழி அளித்த தம்பதி மீது காவல்துறை அதிகாரிகளால் ஏதேனும் நடவடிக் கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குற்றமாகக் கருதப்பட்டு - ரூபாய் ஒரு லட்சம் அபராதத்துடன் கூடிய - 2 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும்.
கைது செய்தல்

9. இச்சட்டத்தின் கீழ் வரையறை செய்யப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் பிடியாணை இன்றி கைது செய்யப்படக்கூடியதும், பிணையில் விட முடியாததும், இசைந்து தீர்க்கவியலாததுமான குற்றமாக கருதப்படும்.

குற்றவாய்ப்பு தெரிந்தால் தெரிவிக்க வேண்டிய கடமைகள்
10. (அ) அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளும் இச்சட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். (ஆ) அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குற்றவியல் நடுவரால் குறிப்பிடப் படும் மற்ற அதிகாரிகளும், அப்பகுதியில் வசிப்பவர்களும் பிரிவுகள் 4 (அ), (ஆ) மற்றும் 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் நடைபெறப் போவதாக அறிந்தாலோ அல்லது அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலோ அது குறித்து அருகிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். (இ) உட்பிரிவுகள் 10 (அ) அல்லது (ஆ)-ஐ யார் மீறினாலும் அவர்களுக்கு 2 வருடங்கள் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மற்ற சட்டங்களுக்கு முரணல்ல11. இச்சட்டத்தின் பிரிவுகள் மற்றசட்டப்பிரிவுகளோடு இணைந்து இருக்குமே தவிர நடைமுறையில் உள்ள மற்ற சட்டங்களுக்கு முரணானவை அல்ல. நடைமுறை12. இச்சட்டத்தில் உள்ள நடைமுறைகள் அனைத்தும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973 இன் கீழ் உட்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

மேல்முறையீடு
13. (அ) இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தீர்ப்பு அல்லது உத்தரவுக்கான மேல்முறையீடு உயர்நீதிமன்றங்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும். (ஆ) இப்பிரிவின் கீழ் செய்யப்படும் ஒவ்வொரு மேல் முறையீடும் இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உத்தரவு அல்லது தீர்ப்புபெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்.(இ) மேலே குறிப்பிட்ட விஷயங் களைத் தவிர, எந்த ஒரு மேல்முறையீடோ அல்லது சீராய்வு மனுவோ வேறு எந்த நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட முடியாது. (ஈ) உட்பிரிவு (அ)-ன் கீழ் தாக்கல்செய்யப்படும் ஒரு மேல்முறையீட்டை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்.

விதிகள் உருவாக்கும் அதிகாரம்
14. (1) அரசு அறிவிக்கையின் வாயிலாக இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது எதனையும் நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம். 2. (அ) இந்தச் சட்டத்தின்படி செய்யப் பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும். மற்றும் அவை நாள் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடை முறைக்கு வரும். (ஆ). இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் நாள் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட் டிருந்தாலன்றி அவை வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடைமுறைக்கு வரும். 3. இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையொட்டி வரக்கூடிய கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லதுஅத்தகைய விதியோ அல்லது அறிவிக்கையோ அல்லது ஆணையோ செய்யப்படுதலாகாது அல்லது பிறப்பிக்கப்படுதல் கூடாது என சட்டமன்றப் பேரவை முடிவுசெய்யுமாயின் அதன்பின்பு அந்த விதியானது அந்த அறிவிக்கையானது அல்லது ஆணையானது அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே செல்திறம் பெறும் அல்லது நேர்விற்கேற்ப செல்திறம் பெறாது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது அழித்தறவு எதுவும் அந்த விதியின்படி அல்லது அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும். 4. இந்தச் சட்டத்தின் வகை முறையை செயல்படுத்துவதில் இடர்பாடு ஏதேனும் எழுமானால் அரசு ஆணைமூலமாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில் இடர்பாட்டை நீக்குவதற்குத் தேவையானவையென்றோ உகந்தவையென்றோ தனக்குத் தோன்றுகிற அத்தகைய வகை முறையைச் செய்யலாம். 

நோக்க - காரண விளக்கவுரை
தமிழகத்தில் மனம் ஒத்து சாதிமறுப்பு திருமணம் செய்ய விழைகிற தம்பதிகளை சாதி, மத, இன, வகுப்பு அடிப்படையில் உயர்வும், மேன்மையும் பாராட்டி கௌரவம் பார்த்து அத்தம்பதியினரை அச்சுறுத்து வது, துன்புறுத்துவது, வன்முறைக்கு உள்ளாக்குவது, கொலை செய்வது அதிகரித்து வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி ஒடுக்கலுக்கு இதிலும் உள்ளாகிறார்கள். அரசியல் சட்டப்படியான சமத்துவம் மறுக்கப்படுகிற இந்த வன்கொடுமை குற்றத்திற்கு எதிராக தனிச்சட்டம் தேவைப்படுகிறது. இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன தேவைக்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.


துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...