ஞாயிறு, ஜூலை 1

தூர்ந்த மனங்களை தோண்டும் வேலை - ஆதவன் தீட்சண்யா


ரு குழந்தை, பெண் பற்றிய முதலாவது  சித்திரத்தை தனது குடும்பத்திற்குள் காண்கிறது. அந்தச் சித்திரத்தின் வெவ்வேறு பரிமாணங்களைக் கண்டு வளரும் அக்குழந்தை, அதன்வழியே பெண்ணைப் பற்றிய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்கிறது. அக்கண்ணோட்டமானது, மனிதகுலத்தின் முதல் ஒடுக்குமுறையான பாலின ஒடுக்குமுறையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வது அல்லது முரண்பட்டு மறுப்பது என்கிற இருநிலைகளுக்கிடையே ஊசலாடி ஒருநிலையை அடைகிறது. அதாவது, பாலின சமத்துவம் குறித்த கருத்தாக்கம் குடும்பத்தின் விவாதப்பொருளாக இல்லாத அல்லது வெகு அரிதாகவே உள்ள இச்சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வையும் அதன் பேரிலான ஒடுக்குமுறையையும் ஏற்பதற்கான சாத்தியமே இங்கு மிகுதியாக உள்ளது. 

மூடிய கதவுகளுக்குப் பின்னே இயங்கும் குடும்பம் என்கிற நிறுவனத்திலும் ஒளிவுமறைவற்ற வெட்டவெளி என்கிற சமூகத்திலும் தனது மூத்தோரால் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை குழந்தைப்பருவம் முதலே ஒருவர் கண்டுவந்திருப்பினும் அது பாரபட்சமானது, நீதியானதல்ல என்று உணர்வதில்லை. காரணம், பெண் அவ்வாறு இருப்பதுதான் இயல்பு, ஒழுக்கம்  என்பதை குடும்பம், தெரு, வழிபாட்டுக்கூடங்கள், மதம், கலை இலக்கியம், கட்சிகள், அரசு, நீதி, ஊடகங்கள் போன்றவை சாத்தியமான விதங்களிலெல்லாம் பரப்பி வருகின்றன. அவ்வாறான போதனைகள் ஒரு திணிப்பைப் போன்றல்லாமல், இயல்பாக அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் இணைக்கப்பட்டதாக இருப்பதால் நொடிதோறும் திடமேறி காலங்கள் தாண்டியும் பாலினக் கண்ணோட்டத்தை தகவமைக்கின்றன.

பெண்ணின் தோற்றம் பற்றிய அறிவியல்பூர்வமான விளக்கத்தை விடவும் அவள் ஆணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவள் என்கிற மதமயக் கண்ணோட்டமே செல்வாக்குடன் விளங்குவதால், பெண் ஆணுக்குள் அடங்கியவள் என்றே எப்போதும் பார்க்கப்படுகிறாள். பெண் பாவகரமானவள், சபலபுத்தி உள்ளவள், சந்தேக சுபாவி, குடும்பம் மற்றும் கணவனுக்கு துரோகம் செய்வதில் நாட்டமுள்ளவள், அவள் தன்னளவில் சுயேச்சையானவளல்ல, எதுவொன்றுக்கும் ஆணைச் சார்ந்தவள், ஆகவே ஆணுக்கு உடைமையானவள், ஆணின் காமஇச்சையை தணித்தாகும் பொறுப்பிலுள்ளவள், விருப்புவெறுப்புக்கேற்ப அவளை நடத்தும் உரிமை ஆணுக்கு இருக்கிறது என்பதாக மநுஸ்மிருதி போன்ற மதக் கோட்பாடுகளால் முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் நம் மனங்களை வழிநடத்துகின்றன. இதற்கிணையாகவே ஆக்கிரமிப்பும் அபகரிப்பும் ஆட்கொள்ளலும் வன்முறையும் ஆணின் இயல்புகளாக பயிற்றி வளர்க்கப்படுவதால் அவனது எல்லா அத்துமீறல்களுக்கும் ஒரு சமூக ஒப்புதல் கிடைக்கிறது. பெண்ணுடல் மீது ஆண் நடத்தும் வல்லாங்கு (வன்புணர்வு) உள்ளிட்ட வன்முறைகள் சட்டத்தின் பார்வையில் வேண்டுமானால் குற்றமாக இருக்கின்றதேயன்றி சமூகத்தின் பார்வையில் ஆணின் உரிமையாக, இயல்பான சுபாவமாக, ஆண்மையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுவதற்கும் இத்தகைய சூழலே காரணமாகிறது.

குடும்பத்தினராலும் குடும்பத்திற்கு வெளியேயுள்ள எவராலும் எதன்பொருட்டும் தாக்கப்படும் இலக்காக பெண் இருக்கிறாள். தனிநபர் குரோதம் தொடங்கி சாதி/ மதம்/ நாடு/ இனம்/ அடிப்படையிலான மோதல் வரையிலும் பெண்ணுடல் ஒரு வதைக்களமாகிறது. பிறப்புறுப்பை சிதைப்பது, கூட்டாக வல்லாங்கு செய்வது, கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, தோற்றத்தை விகாரமாக்குவது, மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவமானப்படுத்துவது, கொல்வது எனப் பெண்ணுடல்மீது நேரடியாக நடக்கும் தாக்குதலானது அவளை நிலைகுலையச் செய்கிறது. வலியும் அவமானமும் இயலாமையும் கீழ்ப்படிதலும் ஏற்படுத்தும் தாழ்வுணர்ச்சியினால் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிப்போகிறாள். தாக்குதல் உடல்மீது நடப்பினும் குன்றிப்போவதென்னவோ ஆளுமைதான். இந்த நேரடி வன்முறைக்கு சற்றும் குறையாத துன்புறுத்துதலையும் பாதிப்பையும் உருவாக்கவல்லதாக, பெண்ணின் இருப்பை கேலிக்குள்ளாக்குவது, இரண்டாம்பட்சமானவள் என்று சிறுமைப்படுத்துவது, நடத்தைப் பற்றி அவதூறுகளை பரப்புவது, ஆபாசமாக பேசுவது என நீள்கிறது வாய்மொழி வன்முறை. தன்னை தாக்குகிற ஆணை அதைவிட மூர்க்கமாக திருப்பித் தாக்குகிற வலு பெண்ணுக்கும் இருந்துவந்துள்ள போதிலும், அவ்வாறு தாக்காமல் தாங்கிக் கொள்ளும்படியாக அவளை உளவியல்ரீதியாக கட்டுப்படுத்தும் பணியை பண்பாட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

***
பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றிருப்பதாக தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பிட்ட மதம் சார்ந்த பெண்ணின் பிணத்தையும்கூட வன்புணர்வோம் என்று கொக்கரிப்பவர்களால் ஆளப்படும் இந்நாடு இந்த அவமானகரமான இடத்திற்கு வந்து சேர்ந்திருப்பதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. மாற்றுமதத்தின் பெண்களை கூட்டாக வல்லாங்கு செய்து அதைப் படம்பிடித்து ஊர்தோறும் ஒளிபரப்பி தமது மதத்தின் ஆண்மையை நிரூபித்தவர்களும், ஆன்மீகப்பேரொளியை அருளுவதாய் பெண்களை வரவழைத்து ஆசிரமங்களுக்குள் கொன்று புதைத்த பாபாக்களும் யோகிகளும், பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி வல்லாங்கு செய்யும் பாதிரிமார்களும், பெண்களைத் தூக்கி வந்து வல்லாங்கு செய்துவிட்டு பிறப்புறுப்பில் லத்திக்கம்பைச் செருகி சித்திரவதை செய்யும் காவல்துறையினரும், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுக்காளாகும் கவர்னர்களும் உள்ளதொரு நாடு அதன் தகுதிக்குரிய இடத்தைத்தான் பெற்றிருக்கிறது. ஆண்களின் பாலுணர்வு வக்கிரங்களுக்கு பச்சிளம் சிசு முதல் மூதாட்டிகள் வரையான பெண் மட்டுமல்ல, பெண்ணின் பிணமும் தப்ப முடியவில்லை. கல்விக்கூடம், வழிபாட்டுக்கூடம், மருத்துவமனை, காவல்நிலையம், அலுவலகம், போக்குவரத்து வாகனம் வரை எந்தவொரு இடமும் பெண்ணுக்கு பாதுகாப்பானதாக இல்லை. எனினும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு அரைகுறை ஆடை, திகட்டும் அலங்காரம், வெளிநடமாட்டம், சகவாசக்கேடு உள்ளிட்ட அவர்களின் நடத்தையே காரணம் என்று பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் மோசடியை அமைச்சர்கள் முதல் ஆசிரம ஓனர்கள் வரை வெகுஜோராக நடத்துகிறார்கள். அரைகுறை ஆடைதான் வல்லாங்குக்கு தூண்டுகிறது என்றால், இடுப்பில் ஒரு துண்டுத்துனியன்றி வேறெதுவும் அணியாத குருக்களும் சாதுக்களும் ஆதீனங்களும் ஏன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை? ஆகவே இங்கு பிரச்னையின் மூலம் பெண்ணின் புறத்தோற்றமல்ல, ஆணின் உளவியலே. ஆனால் இப்படியான இழிநிலைக்கு நாடு திடுமென இன்றைய அதிகாலை வந்து சேர்ந்துவிடவில்லை. இன்டர்நெட்டும் மேற்கத்தியப் பண்பாடும் இங்கு வருவதற்கு நெடுங்காலத்திற்கும் முன்பிருந்தே பெண்களை இந்தியச்சமூகம் இவ்வாறாகத்தான் நடத்தி வந்திருக்கிறது. இந்தியச்சமூகம் என்பது உங்களுக்கும் எனக்கும் வெளியில் இருப்பதல்ல.

இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் மேற்சொன்ன இடர்ப்பாடுகளையும் தாண்டியது தலித் பெண்களின் நிலை. பெண்ணென்ற வகையில் ஓர் ஆணாதிக்கச் சமூகத்தின் பாலினப் பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் அதேவேளையில் அவர்கள் சாதியத்தின் பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தலித்தாக  தீண்டாமையின் வன்கொடுமைகளுக்கு ஆளாகிக்கொண்டே, தலித் பெண்ணாக தீண்டுதல் என்கிற வன்கொடுமைக்கும் அவர்கள் ஆட்படுகிறார்கள். “தீட்டு – புனிதம்” கற்பிதங்களின் பேரில் தொட்டால் தோஷம் பார்த்தால் பாவம் என்று தலித்துகளை ஒதுக்கிவைக்கும் சாதியர்கள், நாளொன்றுக்கு சராசரியாக மூன்று தலித் பெண்களை வல்லாங்கு செய்கின்றனர். தலித்துகள் மீது சராசரியாக ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கு ஒருமுறை நிகழ்த்தப்பட்டுவந்த வன்கொடுமை கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து சராசரியாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்கிற நிலையை எட்டியுள்ளது. எந்தவொரு வன்கொடுமையினையும் போலவே இந்த சாதிய வன்கொடுமையிலும் பெரிதும் பாதிக்கப்படுவோர் பெண்களே என்று தனித்துச் சுட்டவேண்டியதில்லை.  ஓர் ஆணாக பெண்ணை வன்கொடுமை செய்வதற்கும் ஒரு சாதியராக தலித் பெண்ணை வன்கொடுமை செய்வதற்கும் பின்னேயுள்ள உளவியல் வெவ்வேறானதோ, ஒன்றுக்கொன்று முரணானதுமோ அல்ல. இரண்டுக்குமே அடிப்படை ஆதிக்க மனோபாவம்தான்.

வன்கொடுமைகளின் தனித்துவமான வடிவங்களைக்  கண்டறிந்து அவற்றை தடுப்பதற்குரிய சட்டங்களை கடுமையாக்குவதும் சட்ட அமலாக்கத்தை உறுதி செய்வதும் இந்த ஆதிக்க மனோபாவத்தை ஒரு கட்டுக்குள் நிறுத்தும் என்பது உண்மைதான். ஆனால் முற்றாக மறைவதற்கு பதில் ஒளிந்துகொள்கிற வேறு வடிவங்களில் ஆதிக்கம் தன்னை மறுவார்ப்பு செய்துகொள்ளும். எனில், தனிமனித அளவிலும் சமூகவெளியிலும் நிலவும் இந்த ஆதிக்க மனோபாவத்தை சமத்துவம் என்கிற நீதியான சிந்தனையால் மாற்றீடு செய்வதற்கான பணிகளை கூடுதலாகவும் பண்பாட்டுத்தளத்தில் ஆற்றவேண்டியுள்ளது. அதன்பொருட்டு சமத்துவம் என்பது ஓர் அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல அதுவொரு வாழ்முறையும்கூட என்பதற்கான போராட்டத்தை  தன்னளவிலும் பெருஞ்சமூகத்திலும்  பலங்கொண்ட மட்டும் நடத்தவேண்டியுள்ளது.  பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாட்டை நடத்துவதன் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இப்போராட்டத்தின் பாதையில் தனது பேரடியைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது.  

- பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாட்டுச் சிறப்பிதழ், தீக்கதிர்-வண்ணக்கதிர், 01.07.2018





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...