இடதுசாரிகளின் முன்னேற்றம் - ஆதவன் தீட்சண்யா


மதவாதம் - மதவாததுக்கு எதிரான மனநிலை பெருகிவரும் இந்தச் சூழலில், இடதுசாரிகள் தீவிரமாக இயங்கியிருக்க வேண்டும்; வலுவானவர்களாக மாறியிருக்க வேண்டும். ஆனால், இரண்டிலும் நம்பிக்கை தென்படவில்லையே?


பதற்றமும் பகையுணர்ச்சியும் மிக்கதாக சமூகத்தை பிளவுபடுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதற்குரிய உதவிகளை சங்பரிவாரத்திற்கு -தனது வர்க்கநலனுக்காக- வழங்கிவரும் கார்ப்பரேட்டியம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததை தன் சொந்த வெற்றியாக பார்க்கிறது. அது, நாட்டின் வளங்களையும் பொதுச்சொத்துக்களையும் மக்களின் உழைப்புச்சக்தியையும் தங்குதடையின்றி சுரண்டிக் கொழுக்க பாதுகாப்பளிக்கும் அடியாள்படையாக சங்பரிவாரத்தையும் மத்திய அரசையும் பயன்படுத்துகிறது.

காவி பயங்கரவாதமும் கார்ப்பரேட் பயங்கரவாதமும் ஒன்றெனக்கூடிய இந்திய வகைப்பட்ட பாசிச அரசானது, குடிமக்களின் தனிப்பட்ட வாழ்வு, நாட்டின் மாண்புகள், சமூகம் தன்னை நிர்வகித்துக் கொள்வதற்கென வரலாற்றுப்போக்கிலும் அரசியல் சாசனப்படியும் உருவாக்கிக்கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் நேரடியாக தலையிட்டு கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. மாணவர்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எனச்  சமூகத்தின் வெவ்வேறு அடுக்கிலுள்ளவர்களும் தெருவுக்கு வருமளவுக்கு மக்களுக்கும் அரசுக்குமான முரண் முற்றிக்கொண்டிருக்கிறது. மக்களின் எந்தவொரு போராட்டமும் ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றது. உயிர்ப்பலி இல்லாத நாளே இல்லை. நேற்று பசுகுண்டர்களால் இருவர் கொல்லப்பட்டனர் என்றால், இதை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலோ ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்களத்தில்  பதினோரு பேர் அரசால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் மக்கள் தம் போர்க்குணத்தால் நாட்டை கொந்தளிக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நாடெங்கும் நாளுக்குநாள் பெருகிவரும் போராட்டங்களில் பலவும் இடதுசாரிகளால் தலைமை தாங்கப்படாதிருக்கலாம். ஆனால் ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராக உயிர்த்தியாகம் செய்தேனும் போராடவேண்டுமென அவர்கள் வளர்த்தெடுத்துவரும் கருத்தியலே அப்போராட்டங்களின் உள்ளுயிராக இயங்கிவருகிறது. ஆகவே, இடதுசாரிகளின் முன்னேற்றம், வலதுசாரிகளால் சிதைக்கப்படும் மக்கள் ஒற்றுமையை வர்க்கப்போராட்டங்களால் நேர்செய்வதற்கான செயல்பாட்டினாலேயே மதிப்பிடப்பட வேண்டுமேயல்லாது தேர்தல் முடிவுகளை மனமேற்கொண்டு அல்ல.

விகடன் தடம் / ஜூன் 2018


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக