மநுஸ்மிருதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மநுஸ்மிருதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, நவம்பர் 6

ஆண்பால் பெண்பால் அன்பால் - ஆதவன் தீட்சண்யா

இருபாலினரையும் குறிப்பிடும்போது எல்லாம் `ஆண், பெண்' என்றுதான் நமக்குச் சொல்ல வருகிறதே தவிர, `பெண், ஆண்' எனச் சொல்ல வராது. ஆணுக்குப் பிறகுதான் பெண், ஆண்தான் முதல் பாலினம் என்பதே இயல்பு என மனதார நம்புகிறோம். ‘எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை’ என்பதும்கூட, ஒருவகையில் பெண் அடையவேண்டிய இலக்கு ஆண்தான் என்றே சுட்டுகிறது. ஆண் என்கிற முழுமையை நோக்கி அவள் நகர்ந்தாக வேண்டும் என்கின்றன மத இலக்கியங்கள். இந்தச் சமூகத்தின் பொது உளவியலுக்குள் தங்கியுள்ள இவ்வாறான கருத்துக்களை உள்வாங்கி வளர்பவர்களே நம்மில் பலரும்.


பள்ளி ஒன்றில் தங்கிப் படிக்கும் எனது நண்பரின் மகனையும் மகளையும் பார்க்கப் போயிருந்தோம். அடுத்தடுத்த வகுப்பறையில் படிக்கும் அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முடியாதாம். அக்கா-தம்பிதான் என்றாலும் அந்த வளாகத்தைப் பொறுத்தவரை அவர்கள் வெவ்வேறு பாலினத்தவர். எனவே, பேசினால் பிரம்படியோடு அபராதமும் விதிக்கப்படுமாம். `நேருக்குநேர் பார்த்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டேன். `ஆசிரியர்கள் யாரும் கவனிக்காதபட்சத்தில் சிரித்துக்கொள்வோம். இல்லையேல், பிறரது கவனத்தை ஈர்க்காதபடி சைகையால் ஏதேனும் விசாரித்துக் கொள்வோம். மற்றபடி பேசிக்கொள்ள முடியாது' என்றார்கள். அந்தப் பள்ளிக்கூடம் மட்டும் அல்ல, பல தனியார் கல்லூரிகள்கூட ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற பெயரில் இவ்வாறான தடைகளையும் தண்டனைகளையும் அபராதங்களையும் கடைப்பிடிக்கின்றன. 

`பெண்கள், சபலபுத்தி கொண்டவர்கள். தந்தை, சகோதரன், மகன் யாராக இருந்தாலும் அவளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்ற மநுஸ்மிருதியின் துர்போதனையை இன்றளவும் கடைப்பிடிக்கும் கேவலம் கல்வி நிலையங்களிலேயே நீடிக்கிறது என்றால், அதற்கு பெற்றோர்களும் கல்வித் துறையும் அரசும் உடந்தை என்றுதானே பொருள்! 

ஒரு பெண்ணும் ஆணும் பேசிக்கொண்டாலே அடுத்த காட்சியில் அவர்களை படுக்கையறைக்குள் தள்ளிவிட்டு, `பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக்கொள்ளும்தானே!' என்கிற தமிழ் சினிமாவின் பழங்கஞ்சிப் பார்வைக்குள்தான் இந்தச் சமூகம் மொத்தமும் ஊறி நொதித்துக் கொண்டிருக்கிறது.


சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, கணவன்மார்களைத் தாக்குவதில் எகிப்தியப் பெண்கள் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளதாகத் தெரிவித்தது. கடந்த சில ஆண்டு களாக பெண்கள் மீது தொடர்ந்து அதிகரித்து வந்த வன்கொடுமைகளைச் சகித்துக்கொள்ள முடியாமல், கணவன்மார்களின் அராஜகத்துக் கான எதிர்வினையே இந்தத் தாக்குதல் என்பதை இந்த ஆய்வுகள் வசதியாக மறந்துவிடுகின்றன. 

காற்றின் சலசலப்புக்குக்கூடக் கலங்கிவிடும் மெல்லிதயம் படைத்தவர்களாக அல்லது அதிகாரம் எவ்வளவு நுண்ணியதாக வெளிப் பட்டாலும் அதை எதிர்க்கக் கூடியவர்களாகக் காட்டிக்கொள்ளும் பலர், மனைவியை உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் தாக்கித் துன்புறுத்து வதில் தம்மிடம் எந்த முரணையும் காண்பது இல்லை. காரணம், மனைவியை அடித்து உதைப் பதை அவர் தனது உரிமையாகக் கருதுகிறார். ‘ஆம்பளைன்னுகூட பார்க்காம சரிக்குச் சரி எதுத்துப் பேசிக்கிட்டே இருந்தா, நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்கிறது? அதான், பொட்டச்சிக்கு இவ்வளவு வாயான்னு போட்டேன் நாலு’ என்று தன் செயலை நியாயப்படுத்துகிறார். 

குடும்பத்துக்குள்ளும் பொதுவெளியிலும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்வதிலும் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டாத நாம், பெண்களைத் தாக்குவதிலும் கொல்வதிலும் தீவிர வெறியோடு இருக்கிறோம். இதே நிலை நீடிக்குமானால், இன்றைக்கு இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 944 பெண்கள் என்று உள்ள விகிதம், இனி வரும் காலங்களில் அஞ்சத்தக்க வகையில் மோசம் அடையக்கூடும். 


இன்றைக்கும் `ஜல்லிக்காரிச்சி' என்றே ஊர்க்காரர்களால் நினைவுகூரப்படும் எனது தாத்தம்மா (அப்பா வழிப் பாட்டி) மாரிமுத்தம்மாள், நூறு பேருக்கும் குறையாத ‘கேங்’குடன் ஜல்லி உடைக்கவும், அதைக்கொண்டு தார்ச்சாலை போடவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றி அலைந்தவர். 

இன்றைய தங்க நாற்கரச் சாலைகளுக்கு அடியில் மறைந்துகிடக்கும் பழஞ்சாலைகளில் அவரது உழைப்பும் புதைந்திருக்கிறது. காடு, மலை, ரோட்டோரம் என வேலைக்காடுகளில் கேங் ஆட்கள் முகாம் அடிக்கும்போது, தனக்கும் அங்கு ஒரு ‘சாளை’ (கொட்டகை) அமைத்து தங்கிக்கொள்வது அவர் வழக்கம். பள்ளிக்கூட விடுமுறை நாள் ஒன்றில், மஞ்சவாடிக் கணவாய் வேலைக்காட்டில் அவரைப் பார்க்கப் போனேன். அன்றிரவு அவரோடே சாளையில் தங்கியபோது, `பயமா இல்லையாம்மா?' என்று கேட்டேன். `எதுக்குப் பயப்படணும்?' என்று திருப்பிக் கேட்டார். ஆமாம், அவர் எதற்கும் பயப்பட்டு நான் பார்த்தது இல்லை.

கொத்துக்காரி என்கிற கித்தாப்பில் அதட்டி வேலைவாங்கிவிட்டு, உடல் நோகாமல் அதிகாரம் செய்யக்கூடியவராக அவர் ஒருபோதும் இருந்ததே இல்லை. வேலைக்கு ஆட்களைத் திரட்டுவது, முன்பணம் கொடுத்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது, கல் உடைப்பதற்கான குன்றுகளைத் தெரிவுசெய்வது, பாறைகளைப் பிளக்க கருவிகளையும் கரிமருந்தையும் கையாள்வது, கொட்லான் பிடித்து ஜல்லி உடைப்பது, மால் வைத்து மட்டம் பிடித்து ஜல்லிக்குட்டானை அளப்பது, பதமாகத் தார்  காய்ச்சுவது, கலவையின் திடத்தைச் சோதிப்பது என, சாலை போடும் வேலையின் அத்தனை நுட்பங்களையும் அவர் அறிந்துவைத்திருந்தார். 

அனைத்தையும் அறிந்திருந்த அவர், நேரடி உழைப்பிலும் பங்கெடுப்பவராக இருந்தார். வாரச்சந்தை நாட்களில் வேலையாட்களிடம் பட்டுவாடா செய்வதற்கான பெருந்தொகையை பெல்ட் மாதிரி நீளமான ஒரு பையில் வைத்து இடுப்பைச் சுற்றிக் கட்டி, அதன் மீதே சீலை கட்டுவார். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கான்ட்ராக்டர் என யாரிடமும் அச்சத்துடனோ, தயக்கத்துடனோ பேசக்கூடியவர் அல்ல. 

கல் உடைத்தும் கலவையைத் தூக்கியும் தார்ச்சூட்டில் வெந்தும் தான் ஈட்டிய சொந்த சம்பாத்தியத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி என் தந்தைக்குக் கொடுத்திருந்தார். வெற்றிலை, புகையிலை காரமும் தார் நெடியும் கலந்த வாசனையோடு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சாலையோரங்களில் கழித்த அவர், பின்னாளில் அந்த வேலையைக் கைவிட்டுவிட்ட பிறகும்கூட அதே மிடுக்கோடு உழைத்து வாழ்ந்து மறைந்தார். 

என் தாத்தம்மாவை நினைவுகூரும் எவர் ஒருவரும் அவரை, ‘ஆம்பிளையாட்டம் உழைக்கக் கூடியவள். பத்து ஆம்பளைங்களுக்குச் சமமானவள். நெஞ்சை நிமிர்த்தி ஆம்பளையாட்டம் நடக்கிற தைரியசாலி. வீராதிவீரன்கூட அவகிட்ட நாலடி தள்ளிதான் நிற்கணும்’ என்று ஆண்களோடு ஒப்பிட்டுத்தான் சொல்வார்களே தவிர, அவர் தன் சுயத்தில் தேர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தார் எனச் சொல்லி நான் கேட்டது இல்லை. 

தாத்தம்மா யாரையாவது முன்மாதிரியாகக் கொண்டிருந்தார் என்றால், அது அவருடைய தாயார். ஏனென்றால், ஆண்களை முன்மாதிரியாகக் கொண்டு ஆண் போலவே வாழவேண்டும் என்பது அல்ல அவரது தெரிவு. அவரைப்போலவே இன்னும் பல பெண்கள் தாம் தேர்ந்துகொண்ட வாழ்க்கையை சமரசம் இன்றி தன்மதிப்போடு வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். ஆனால், அவர்களை ‘விதிவிலக்குகள்’ என முத்திரை குத்தி, சமூகத்துக்கு வெளியே நிறுத்திவிடும் தந்திரத்தைக் கையாள்கிறோம். 


ஒரு பெண் கிளம்பிப் போய் மாப்பிள்ளையைப் பார்த்து முடிவெடுக்கும் நிலை, இப்போது போலவே 1993-ம் ஆண்டிலும் இல்லை. எனவே, நான்தான் அரூருக்குப் போய் மீனாவைப் பார்த்து இறுதிப்படுத்தினேன். அந்த நாளில் இருந்தே மீனாவை நான் ‘அவள்’ என்றும், மீனா என்னை ‘அவர்’ என்றும் சொல்லப் பழகி இருந்தோம். திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து நான் வேலை பார்க்கும் ஓசூருக்குக் கிளம்பி வந்தோம். சோற்றை வடித்து தக்காளியை வதக்கிக் கொட்டினால் தக்காளிச் சோறு ரெடி என்கிற அளவில் எனக்கு சமையல் தெரியும். மீனாவின் சமையல் அறிவும் மோசம் எனச் சொல்ல முடியாது. வெந்நீர் வைக்கவும் முட்டையை வேகவைக்கவும் தெரிந்திருந்தது. எனவே, பரஸ்பரக் கருணையின் அடிப்படையில் சமைக்கும் முடிவை இருவருமே கைவிட்டோம். முதல் இரண்டு நாட்கள் கடைச் சாப்பாடு. அதைவிட அப்படி ஒன்றும் மோசமாகச் சமைத்துவிட மாட்டோம் என்ற நம்பிக்கையில் சமைக்கத் தொடங்கினோம். மிகக் குறுகிய காலத்திலேயே `உன் கைப்பக்குவமே தனி ருசி!' எனப் பாராட்டத்தக்க அளவுக்கு அவர் மிகத் தேர்ந்த சமையலராக மாறியிருக்க, நானோ வெறும் டீ, காபி மாஸ்டராக ஆகியிருக்கிறேன். 

சமைக்கும் வேலையில் இருந்து பின்வாங்கிக் கொண்டதைப்போலவே துணி துவைப்பது, வீட்டைத் துப்புரப்படுத்துவது, குழந்தையைப் பார்த்துக்கொள்வது போன்ற வேலைகளையும் மீனாவிடம் தள்ளிவிடுவதற்கு நான் பெரிதாக ஏதும் மெனக்கெடவில்லை. ஆண், அதுவும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆண் என்கிற அடையாளம் இவை அனைத்தையும் எனக்கு எளிதாக சாதித்துக் கொடுத்திருக்கிறது. (வறட்சி மிகுந்த மாநிலங்களில் நெடுந்தூரம் அலைந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவதற்காகவே ‘தண்ணீர் மனைவிகள்’ என்ற பெயரில் பலரைத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இருக்கிறது.) 

வேலை நேர நிர்ணயம் இல்லாமல், ஓய்வொழிச்சல் இல்லாமல் மீனா செய்து கொண்டிருக்கும் நச்சரிப்பான இந்த வீட்டு வேலைகளுக்கு ஊதியம் நிர்ணயிப்பதாக இருந்தால்? நிச்சயம் அது எனது ஊதியத்தை விட கூடுதலாகத்தான் இருக்கும். ஆனாலும் அவர் வீட்டில் சும்மாதான் இருக்கிறார் என்கிற நினைப்பில் இருந்து நான் முற்றாக விடுபட்டுவிட்டதாகச் சொல்விவிட முடியாது. ஏனென்றால், சம்பளம் என்று ஈட்டித்தராத எந்த வேலையையும் `வேலை' என்று மதிப்பதற்கான பழக்கமோ, பயிற்சியோ நமக்கு இல்லை. என்னுடைய அரசியல்ரீதியான பிரக்ஞை மட்டும்தான் மீனாவை சமமாகப் பார்க்க வைக்கிறதே தவிர, இயல்பில் ஒரு சராசரி ஆணாகவே மிஞ்சுகிறேன். 

பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்த்ததற்காகவே `பள்ளிக்கூடத்தாள்' என்ற செல்லப்பெயர் பெற்ற என் அம்மாவும், பட்டதாரியான என் இணையரும் `பெண்' என்ற வகையில் ஒரே மாதிரியான வாழ்க்கையைத்தான் பெற்றிருக்கிறார்கள். எனக்குள்ளும் என் தந்தைக்குள்ளும் இயங்குவது ஒரே ஆண்தான் என்றால், காலமாற்றம், தலைமுறை இடைவெளி, கல்வி, அரசியல் புரிதல் என்பனவற்றுக்குப் பொருள்தான் என்ன? 


1849-ம் ஆண்டில் பிரசவம் பார்ப்பவராக பணியாற்றும் ஜீன் டெராயின் என்கிற பெண், பிரெஞ்சு நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடுகிறார். ஆண்களில் பலரும் அவரைக் கேலி செய்கின்றனர். ‘ஒரு பெண் சட்டசபை உறுப்பினராக இருப்பது என்பது, குழந்தைகளுக்குப் பாலூட்டும் வேலையில் ஒரு ஆண் இருப்பதற்கு சமமாகும்’ என்கிற விநோதமான வாதத்தை முன்வைத்து, அவரது வேட்புமனுவை நிராகரிக்கிறார் பியர் ஜோசப் ப்ரூதான் என்பவர். 

அவருக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஜீன் டெராயின் ‘இந்த வர்ணனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களால்தான் பிரசவிக்க முடியும். எங்கள் உடல்வாகு அப்படி. ஆனால், ஆண் உடலில் எந்தப் பகுதி நாடாளு மன்ற உறுப்பினராவதற்குத் தேவைப்படுகிறது என்று பியர் ஜோசப் எனக்குச் சொல்லட்டும்’ என்று கேட்டிருக்கிறார். உடலையும் உறுப்பையும் வைத்து சகஜீவியின் ஆளுமையையும் உரிமைகளையும் மதிப்பிடுவதற்கு எதிராக ஜீன் டெராயின் போன்றோர் எழுப்பிவந்த இப்படியான கேள்விகள்தான் இன்றைக்கு உள்ளாட்சி தொடங்கி குடியரசுத் தலைவர் வரையிலான பொறுப்புகளை பெண்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. ஆனால், கண்டம் கடந்து காலம் கடந்து இன்னமும் பல பியர் ஜோசப்கள் ‘நின்னுக்கிட்டே சுவர் மேல ஒண்ணுக்கு அடிக்க என்னால் முடியும். உன்னால் முடியுமா?’ என்று நாயிடம் கேட்கவேண்டிய கேள்வியைத் தவறாக பெண்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


லிவிங்ஸ்மைல் வித்யா ஒருமுறை ‘மாற்றுப் பாலினத்தவரை `மூன்றாம் பாலினத்தவர்' எனக் குறிப்பிடுகிறீர்களே, முதல் பாலினம் யார் என்று முடிவுசெய்துவிட்டீர்களா?’ என்று எழுப்பிய வன்மையான கேள்வி, இந்தச் சமூகத்துக்கு உறைக்கவே இல்லை. `பெண் பின்னமானவள், ஆண் என்கிற முழுமையை நோக்கி அவள் நகர்ந்தாக வேண்டும்' என்கின்றன மத இலக்கியங்கள். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பதன் மூலம் பெண்ணானவள் மீட்டர்கணக்கில் வளர்ந்தாலும் பயன் இல்லை என்றாகிறது. இந்தச் சமூகத்தின் பொது உளவியலுக்குள் தங்கியுள்ள இவ்வாறான கருத்துக்களை உள்வாங்கி வளர்பவர்களே நம்மில் பலரும். 

நமக்கான ஆண், பெண் முன்மாதிரிகளை நாம் குடும்பத்தில் இருந்தே பெறுகிறோம். எனில், குடும்ப அமைப்பு எப்படி இருக்கிறது? அரிதான ஒன்றிரண்டைத் தவிர, பெரும்பாலான குடும்பங்களில் தம்பதியர் சம வயதினர் இல்லை. அவர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஐந்து வருட வயது வித்தியாசம் பேணப்படுகிறது. கர்ப்பம், பிரசவம், பாலூட்டல் போன்ற ‘தாய்மைச் செயல்பாடுகளால்’ உடற்கட்டு குலைந்து, கணவனைவிட மூத்தவள் போன்ற தோற்றத்தைப் பெறாமல் இருப்பதற்கு ஆணைவிட பெண் இளையவளாக இருத்தல் அவசியம் என வியாக்கியானம் சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, மனைவியைவிட மூத்தவன் என்ற நினைப்பே ஆணுக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. 

அடிப்படையிலேயே குடும்பம் என்பது, ஆணின் சௌகர்யம் சார்ந்ததாக - ஆணை மையப்படுத்தியதாக இருக்கிறது. இது ஏதோ புராண காலத்து விஷயம் என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. வயதான பெற்றோரை விட்டுப் பிரிந்து `தனிக்குடித்தனம் போகலாம்' என, கணவனை வற்புறுத்துவது குரூரமானது என்றும், அத்தகைய மனைவியை விவாகரத்து செய்ய கணவனுக்கு உரிமை உள்ளது என்றும் கொந்தளிக்கும் நமது நீதிமன்றங்கள், இதுகாறும் நம் நாட்டுப் பெண்கள் தம் பெற்றோரைப் பிரிந்துதான் வேறு ஒரு குடும்பத்தில் வாழ்நாள் முழுக்க இருந்து மடிவது தொடர்பாகவோ, அவளது பெற்றோரும் முதுமையில் தனிமையில் ஆதரவின்றி அல்லாடுவது குறித்தோ வாய் திறக்காமல் இருப்பதற்கு, இந்த ஆண் மையச் சிந்தனைதான் காரணம். 

மனைவியை ஒருமையிலோ, கண்ணியக் குறைவாகவோ விளிப்பது, கடுஞ்சொற்களால் திட்டுவது, தாக்கி வன்முறைக்கு ஆட்படுத்துவது, வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வது, ஓயாத வீட்டுவேலைகளைச் சுமத்துவது, குழந்தை வளர்ப்பு, முதியோர் நலம் பேணல், நோயாளி களைப் பராமரித்தல், தண்ணீர் எரிபொருள் சேகரிப்பு, சமையல் ஆகியவற்றை அவளது தனிப்பொறுப்பாக மாற்றுவது, அவளுக்கு என தனித்த ஆர்வங்களும் தேவைகளும் செலவுகளும் பொழுதுபோக்கும் இருப்பதை ஏற்க மறுப்பது, அவளது கையில் பணப்புழக்கம் இல்லாமல் தடுப்பது, அவளது வருமானத்தை அபகரித்துக் கொள்வது, எந்தவொரு விஷயத்திலும் அவளிடம் கலக்காமலே தன்னிச்சையாக முடிவு எடுப்பது, அவளாக முன்வந்து சொல்லும் யோசனைகளையும் இளக்காரத்துடன் நிராகரிப்பது என ஆணின் கை ஓங்கியுள்ள குடும்பங்களே இங்கு மிகுந்துள்ளன. இந்த ஆதிக்கத்தை அதட்டி உருட்டி மட்டுமே செய்ய வேண்டிய தேவையின்றி, அன்பின் பேராலும் ஓர் ஆணால் நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது. இத்தகைய சூழலுக்குள் வளரும் குழந்தைகள் எந்தவிதத் தனித்த போதனையோ பயிற்சியோ இன்றி, தத்தமக்கான இடத்தைக் கண்டடைகின்றனர். 

பெண் என்பவள், இரண்டாம்பட்சமானவள்; குடும்பச் சொத்தில் பங்குபெற உரிமையற்றவள்; ஆணின் விருப்பத்துக்கு அடங்கி நடக்க வேண்டியவள் என்பதை இன்றைய குழந்தைகள் வெகு இயல்பாக உள்வாங்கிக் கொள்கின்றன. 

இந்த நிலையை மேலும் மேலும் இறுக்கிப் பிணைக்கும் வகையில் வீட்டுக்குள் அவர்களது புழங்கிடம், உடை, உணவு, கல்வி, நட்புவட்டம், நடமாட்ட நேரம், பங்கெடுக்கும் நிகழ்வுகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை குடும்பம் தீர்மானிக்கிறது. அவர்கள் வளர்ந்து உருவாக்கும் அடுத்த தலைமுறை குடும்பங்கள், முன்சொன்ன குடும்பத்தின் நகல்களாக தன்னியல்பாகவே மாறிவிடுகின்றன. விதிவிலக்காக சற்றே ஜனநாயகத்தன்மையுடனும் சமத்துவப் பார்வையுடனும் நடந்துகொள்ள முயற்சிக்கும் ஆண்கள்கூட `பொண்டாட்டிதாசன்' என்பதான ஏளனத்துக்கு அஞ்சும் மானஸ்தர்களாகி, தம்முடைய இயல்பான நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

`உங்க வீட்டில் சிதம்பரமா... மதுரையா?' எனக் கேலியாகக் கேட்கும் வழக்கம் எல்லாம், 
`நீ ஆம்பளையா... இல்லையா?' என முண்டா தட்டச் சீண்டிவிடுவதுதான். ஆண் தன் நிலையில் இருந்து சற்றே விலகினாலும், ஆளை மயக்கி, முந்தானையில் முடிந்தவள், குடும்பத்தைப் பிரிப்பவள் போன்ற அவதூறுகளுக்கு பெண்கள் ஆளாக்கப்படுவதை இதன் தொடர்ச்சியில் வைத்தே விளங்கிக்கொள்ளவேண்டியுள்ளது. 

குடும்பத்துக்கு வெளியேகூட ஆணைவிட பெண் தாழ்வானவள், பலம் குன்றியவள், தீட்டானவள், ஆணைச் சார்ந்தே காலம் தள்ளவேண்டியவள், ஆணின் போகத்துக்காகவே படைக்கப்பட்டவள், பெற்றோர் பார்த்து எவ்வளவு குணக்கேடான ஒருவனைக் கட்டி வைத்தாலும் மனம் கோணாது ஏற்றுக்கொண்டு அவன் வழியாக (கவனம், அவன் வழியாக) குழந்தைகளைப் பெற்று, வளர்த்து வாழ்ந்துவிட்டு, பூ பொட்டுடன் போய்ச் சேர்வதுதான் ஒரு பெண்ணின் வாழ்க்கை லட்சியம் என்ற போதனையை, குழந்தைகள் இடைவிடாது பெறு கிறார்கள். கல்விக்கூடங்கள், பாடத்திட்டங்கள், வழிபாட்டுத் தலங்கள், மதங்கள், சடங்குகள், போக்குவரத்து வாகனங்கள், பணியிடங்கள், ஊடகங்கள், கலை இலக்கியம், அரசுத் திட்டங்கள், விளம்பரங்கள் போன்றவை இந்த போதனையை செவ்வனே செய்து பெண் மீதான ஆணின் உரிமையை நிலைநிறுத்துகின்றன. ஏனென்றால், இந்தத் தளங்களில் இயங்கும் நான் உள்பட பலரும் இதே கருத்தியலால் பீடிக்கப்பட்டவர்கள் தான். 

இருபாலரும் தம்மைப் பற்றியும் பிறரைப் பற்றியும் கொண்டிருக்கும் பார்வையும் அதன் பேரிலான நடத்தையும் தனிப்பட்ட மனிதர்களின் குணாதியசங்கள் அல்ல. இன்றைய சமூக அமைப்பு வடிவமைக்கும் கருத்துக்களையே அவர்கள் தமது சொந்தக் கருத்துபோல பாவித்துக் கடைப்பிடிக்கிறார்கள். 


எல்லா வகைகளிலும் ஏற்றத்தாழ்வைப் பேணும் சமூகத்தில், இதன் அடிப்படை அலகான குடும்பத்துக்குள் மட்டும் சமத்துவம் நிலவும் என எதிர்பார்க்க முடியாது. சொந்த சாதிக்குள் மணம் முடித்து ரத்தத் தூய்மையையும், சாதிப் புனிதத்தையும் காப்பாற்றுவதே மானமுள்ள குடும்பத்தின் கடமை என்றாகிவிட்ட சூழலில், அதன் முழுப்பொறுப்பும் பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதன் பொருட்டு அவள் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும்படுகிறாள். 
அவளை நோக்கி காதலோடு பூங்கொத்தை நீட்டும் `பிற சாதிக்காரன்', தனக்குத்தானே மலர்வளையம் வைத்துக்கொள்ளும் நிலைக்குச் சாய்க்கப்படுகிறான். 

பெண் என்பவள், தன்னளவில் சுதந்திரமானவள். ஆணின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவள் பிறக்கவில்லை. தான் விரும்பியபடி வாழ்வதற்கான முழு உரிமையும் அவளுக்கு உண்டு. ஆணோடு ஒப்பிட்டுக் கொள்ளும் அவசியம் ஏதும் இன்றி, தனக்கான தேவைகளைத்தானே தீர்மானிக்கவும் தேடிக்கொள்ளவும் சக்தி உள்ளவள். இந்தக் கட்டுரை உள்பட எதுவொன்றையும் கிளுகிளுப்பாக்கும் கச்சாப்பொருள் அல்ல `அவள்' - என்பதான கருத்தியலை, குடும்பமும் சமூகமும் கடுமையாக எதிர்கொள்கின்றன. 

நாமும் அதே குடும்பத்துக்குள்ளும் சமூகத்துக்குள்ளும்தான் இருக்கிறோம் என்ற உண்மை, இப்போது ஏன் நினைவுக்கு வந்துதொலைக்க வேண்டும்?

- ஆனந்த விகடன் 2.11.2016


வியாழன், டிசம்பர் 25

மறுபடியும் கொளுத்துவோம் மநுஸ்மிருதியை - ஆதவன் தீட்சண்யா



 டிசம்பர் 25: 
மநுஸ்மிருதி எரிப்பு நாள், 
வெண்மணியில் தோழர்கள் 
எரிக்கப்பட்ட  நாள்
‘‘மநுஸ்மிருதியிலும் இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள விசயங்கள் நாகரீகமற்றவையாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இக்கூட்டம் அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தக் கண்டனத்துக்கு அறிகுறியாக அவற்றை தீயிட்டுக் கொளுத்த தீர்மானிக்கிறது’’ என்று மகாராஷ்டிரா மாநிலம் மஹத் நகரில் கூடிய சத்யாகிரகிகளின் மாநாடு அம்பேத்கர் தலைமையில்  மநுஸ்மிருதியை எரித்த நாள் 1927 டிசம்பர் 25.

மஹத் நகரின் சௌதார் குளம் சாதிஇந்துக்களும் எல்லாச்சாதியினரின் விலங்குகளும் புழங்குவதற்குரியது. தலித்துகளுக்கோ புழங்குரிமை இல்லை. இத்தடையை நீக்குவதென 1924ல் நகரசபை எடுத்த முடிவை நிறைவேற்ற சாதி இந்துக்கள் விடவில்லை. 1927 மார்ச் 19,20ல் மஹத்தில் கூடிய மாநாட்டில் பங்கேற்ற தலித்துகளும் தலித்தல்லாதார் சிலரும் இரண்டாம்நாள் காலை அம்பேத்கர் தலைமையில் அந்தக் குளத்தில் நீரருந்தி நூற்றாண்டுக்காலத் தடையை உடைத்தனர். ஆத்திரமடைந்த சாதிஇந்துக்கள், தலித்துகள் அடுத்ததாக வீரேஸ்வர் கோயிலுக்குள்ளும் நுழையப் போவதாக வதந்தியைக் கிளப்பி வன்முறையை ஏவினர். ‘எமக்குள்ள இயல்பான உரிமைகளை நிலைநாட்டவே இந்தக் குளத்தில் இறங்கினோம். மற்றபடி இந்தத் தண்ணீர் அசாதாரண சிறப்பினை உடையதென நாங்கள் கருதவில்லை’ என்றார் அம்பேத்கர். சாதி இந்துக்களோ 108 கலயங்களில் பால் தயிர் மாட்டு மூத்திரம் சாணக்கழிசலை குளத்தில் ஊற்றி பரிகாரித்து தீட்டு கழித்தனர்.

இதனிடையே மஹத் நகரசபை தலித்துகளை குளத்தில் புழங்கவிடும் முந்தைய தீர்மானத்தை 1927 ஆகஸ்ட் 4ல் ரத்து செய்தது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்த தலித்துகள் அங்கொரு சத்தியாகிரகத்தை 1927 டிசம்பர் 25, 26 தேதிகளில் நடத்துவதென தீர்மானித்தனர். மஹத் சத்தியாக்கிரகம் வெறும் தண்ணீருக்கானது அல்ல என்பதை உணர்ந்த சாதி இந்துக்கள் நீதிமன்றத் தடையாணை பெற்றனர். இடம், தண்ணீர், மளிகைப்பொருட்களை வழங்க மறுத்தனர். ஆனால் ஃபதேகான் என்பவரது இடத்தில் திட்டமிட்டபடி மாநாடு தொடங்கியது. ‘இருண்டகாலத்தில் இயற்றப்பட்ட சாஸ்திரங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் நாம் கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லை’ என்கிற அம்பேத்கரின் பயிலுரையால் மக்கள் ஆவேசமுற்றனர். சகஸ்திரபுத்தே என்கிற பார்ப்பனர், சூத்திரர்களுக்கான நியதிகள் குறித்து மநுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளதை படித்துக் காட்டி அம்பேத்கரின் கருத்துக்கு வலு சேர்த்தார். இந்தப் பின்னணியிலேயே மநுஸ்மிருதி எரிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளில் முன்னின்ற தோழர் ராம்சந்திர பாபாஜி மோரே பின்னாளில் தீரமிக்க மார்க்சிஸ்ட்டாக வாழ்ந்தவர். இறுதிவரையிலும் அம்பேத்கருடன் மாறாத்தோழமை கொண்டிருந்தவர்.

மநுஸ்மிருதியை கொளுத்தி சாம்பலை கடலில் கரைத்துவிட வேண்டும் என்கிற முதல் கலகக்குரல் 17.10.1927ல் காட்பாடியில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டில் திரு.எம்.சி.ராஜாவிடமிருந்து வெடித்தது. மஹத்துக்கும் முன்னதாகவே 4.12.1927ல் குடியாத்தத்தில் கூடிய சுயமரியாதைக்காரர் மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர் மநுஸ்மிருதியைக் கொளுத்தினார். மஹத் மாநாட்டின் மீது இந்நிகழ்வுகள் தாக்கம் செலுத்தினவா, இந்த எதிர்வினைகள் 1927ல் முனைப்படைந்தது ஏன் என்பவை ஆய்வுக்குரியவை.

மஹத்தில் மநுஸ்மிருதி எரிக்கப்பட்டதால் நாடே அதிர்ந்தது. காலவழிக்கொழிந்துப் போன மநுஸ்மிருதியை எரித்திருக்க வேண்டுமா என்ற தந்திரமான கேள்விக்கு, இந்த அங்கலாய்ப்பே அதன்  இருப்பை உணர்த்துகிறது என்றார் அம்பேத்கர். இந்த எரிப்பினால் என்ன கிடைத்தது என்ற கேள்விக்கு ‘அன்னியத்துணி எரிப்பினால் காந்திக்கு எது கிடைத்ததோ அதுவே...’ என்றார். நிம்மதியிழந்த பார்ப்பன பத்திரிகைகளால் பீமாசுரன் என்று இகழப்பட்ட அம்பேத்கர் சொன்னார்: மநுஸ்மிருதி எரிப்பு முற்றிலும் திட்டமிடப்பட்ட நிகழ்வே. நூற்றாண்டுகளாக எங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியின் சின்னமாக மநுஸ்மிருதியைக் கருதியதாலேயே எரித்தோம். அதன் போதனையின் காரணமாகவே நாங்கள் கொத்தியெடுக்கும் கோரக்கொடுமைக்கு, வன்னெஞ்ச வறுமைக்கு உள்ளாகியுள்ளோம். எனவே அதற்கு எதிராக வரிந்துகட்டினோம். உயிர்களை பணயம் வைத்துப் போராட்டத்தில் இறங்கினோம், நினைத்ததைச் செய்துமுடித்தோம்...

விலங்குகளை பலியிடும் யாகங்களை நடத்தி தட்சணையாக பொருள் ஈட்டுவதே வேதமதம். அதை எதிர்த்தெழுந்த பௌத்தம் அசோகரால் மகதத்தின் அரச  மதமாக்கப்பட்டதால் உயிர்ப்பலி தடுக்கப்பட்டது. அரசுரீதியான ஆதரவுகளை இழந்த பார்ப்பனர்கள் 140 ஆண்டுகள் புரோகிதத்தையும் வருமானத்தையும் அந்தஸ்தையும் இழந்தனர். அசோகமித்திரன், பத்ரி சேஷாத்திரி மொழியில் ‘ஒடுக்கப்பட்டனர்’. உயிர்ப்பலியிலும் சோம யாகத்திலும்  நம்பிக்கையுள்ள சாமவேதி பார்ப்பனனாகிய புஷ்யமித்திர சுங்கன் அசோகரது வழிவந்த பிருகத்ரதனைக் கொன்று கி.மு.185ல் ஆட்சியைக் கைப்பற்றினான். ஒவ்வொரு பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலைவைத்து கொல்வதாயிருந்தது அவனது பௌத்த வெறுப்பு. பார்ப்பனீயத்தின் வெற்றியாக அம்பேத்கரால் சுட்டப்படும் இவனது ஆட்சிக்காலத்தில் சுமதி பார்கவா என்பவரால் கி.மு. 170- கி.மு.150க்குள் எழுதப்பட்டதே மநுஸ்மிருதி.

பூமியின் கடவுள்களாக பார்ப்பனர்களை விதந்துரைத்த மநுஸ்மிருதி மற்றவர்களை கீழ்நிலைப்படுத்தியது. யாகங்களால் ஆயுளை நீட்டிக்கவும் ஆட்சியை விஸ்தரிக்கவும் முடியும் என்கிற கட்டுக்கதைகளுக்கு இரையான சத்திரிய மன்னர்களால் அது நாடெங்கும் பரவியது. இத்தனைக்கும் அது சத்திரியர்களை, பரசுராமனால் கொல்லப்பட்டவர்களின் விதவைகள் பார்ப்பனர்களுடன் கூடியதால் முறையற்று பிறந்தவர்களென இழிவுபடுத்தியது. பட்டத்து மகிஷியைக் கன்னிகழிப்பதையும் அது பார்ப்பனர்களின் உரிமையாக்கியது. பெண்கள் அனைவரையும் சூத்திரர்களையும் ‘உயிர் வாழ்தலுக்கும் சுதந்திரத்துக்கும் மகிழ்ச்சியை நாடும் வாழ்விற்கும் உரிமையற்றவர்களாக’ மநுஸ்மிருதி மாற்றியதை அம்பலப்படுத்திய அம்பேத்கர் அதை கொளுத்துவதற்கு தலைமையேற்றது பொருத்தமானதுதான். 

ஒரு குறீயீட்டுரீதியான எதிர்ப்பாக மநுஸ்மிருதியை எரித்தப் போராட்டத்தை குடிமக்கள் யாவரும் சமம் என்கிற ஓர் அரசியல் சட்டத்தை உருவாக்கித் தருவதுவரை அம்பேத்கர் முன்னெடுத்தார். அதேவேளையில் மநுஸ்மிருதிக்கு எதிராக கனன்றெரியும் நெருப்பின் உக்கிரத்தில்தான் இந்த சமத்துவத்தை எட்டமுடியும் என்று எச்சரித்தும் வந்தார். அம்பேத்கர் கொளுத்திவிட்டுப் போன அந்தத் தீப்பந்தத்தை தொடர்ந்து ஏந்தாதன் கொடிய விளைவை நாம் அதே டிசம்பர் 25, 1968ல் வெண்மணியில் கண்டோம். ஆமாம், வஞ்சம் வைத்து காத்திருந்த மநுவாதச்சிந்தனை நம்மில் 44 பேரை எரித்து பழிதீர்த்துக்கொண்டது.
***
ஆர்.எஸ்.எஸ் மநுஸ்மிருதியை பகவான் மநு அருளியச்  சட்டமெனப் போற்றுகிறது. அதேவேளையில்  அரவணைத்து நெறிக்கும் தந்திரத்தோடு அது மநுஸ்மிருதியை கொளுத்திய அம்பேத்கரை வணங்குவதாகவும் பசப்புகிறது. பட்டியல் சாதிகளின் பெயருக்கு முன்னே இந்து என்கிற சொல்லைச் சேர்க்கும் அது, தலித்துகள் இந்துக்களல்ல என நிறுவிய அம்பேத்கரை அவமதிக்கிறது. இந்த மோசடியை ஜோடிப்பதற்கான நூல்களைப் புளுகியுள்ள பிஜய் சங்கர் சாஸ்திரி, முற்காலத்தில் பிராமண சத்திரிய உயர் சாதியினரான இவர்கள் இஸ்லாமியராக மாற மறுத்ததால் வந்தேறிகளால் மலமள்ளும் இழிநிலைக்குத் தாழ்த்தப்பட்டனர் என்று திரிக்கிறார். மட்டுமல்லாது, மநுஸ்மிருதியை உயர் சாதியினரின் புனிதநூலென அம்பேத்கரே சொல்லியிருப்பதால் முன்னாள் உயர்சாதியினரான தலித்துகளும் மநுஸ்மிருதியை ஏற்கவேண்டும் என்றும் வாதிடுகிறார்.

இப்படி உண்மைகளைக் கொல்லும் பொய்யர்களின் காலத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். ஏற்கனவே ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் மநுவுக்கு சிலைவைத்த அவர்கள், தொன்மையான சட்ட வல்லுனர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க உச்சநீதிமன்ற வளாகத்தில் மநுவுக்கும் சிலைவைக்கக் கோரும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். சமூகத்தை மீண்டும் மநுஸ்மிருதிக்குள் மூழ்கடித்துக் கொல்வதற்கான யுத்தத்திற்கு உகந்தகாலம் இதுவென்ற ஆணவம் அவர்களிடம் கொப்பளிக்கிறது. தற்காத்துக்கொள்ளவும் முன்னேறித் தாக்கவும் நமக்கான நெருப்பு மஹத்திலும் வெண்மணியிலும் இன்னமும் கனன்று கொண்டேயிருக்கிறது.

ஆதாரங்கள்:
அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்: 7, 35

குடிஅரசு: 30.10.1927, 11.12.1927

Comrade R B More: A Red Star In Blue Sky- Satyendra More,Subodh More-  People's Democracy, March 16, 23, 2003

http://www.telegraphindia.com/1140907/jsp/nation/story_18808727.jsp#.VJfPmcFrhA

http://worldhindunews.com/2014111235768/%E2%80%8Bpetition-to-add-a-statue-of-manu-to-u-s-supreme-court-building/

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள பார்ப்பனர் என்ற சொல்லை பிராமணர் என்று திருத்தி (?) இன்றைய தீக்கதிர் வெளியிட்டுள்ளது. அதற்கு நன்றி சொல்வதா என்று குழப்பமாக உள்ளது.



 

சனி, பிப்ரவரி 18

எங்கும் பரவும் மநுவிரோதிகள் - ஆதவன் தீட்சண்யா

1927டிசம்பர் 25 அன்று மநுஸ்மிருதியை அம்பேத்கர் எரித்தபோது  வர்ணாசிரமத்தின் வாரீசுகள் அவரை பீமாசுரன் என்றும் மநுவிரோதன் என்றும் வசைபாடினர். தனது கருத்தியல் எதிராளிகளின் மனநிலையை சமன்குலைத்து சிதறடித்த அந்த இணையற்ற கலகக்காரனோடு ஒருமை கொள்ளும் முகமாகவே நான் ஒரு மநுவிரோதன் என்று என்னை பெருமிதம் பொங்க அறிவித்துக் கொண்டேன். சாதி மறுப்பாளர் என்று தன்னை மனப்பூர்வமாய் நம்பிக்கொள்கிற ஒவ்வொருவரும் இப்படி தம்மைத்தாமே அறிவித்துக்கொள்ள முன்வர வேண்டும் என்ற விழைவும் இதில் அடங்கியிருக்கிறது.

பெரிய பெரிய தலைவர்களெல்லாம் சும்மா இருக்கும்போது இவனென்ன பெரிய இவனாட்டம் ‘நான் ஒரு மநுவிரோதன்’ என்று பிரகடனம் செய்து கொள்கிறான் என்று தலைப்பைப் பார்த்ததுமே முனகத் தொடங்கியவர்களிடம் மெத்தப் பணிவோடு ஒன்றை கேட்க வேண்டியிருக்கிறது- பெரிய பெரிய தலைவர்களெல்லாம் ஏன் சும்மா இருக்கிறார்கள்? அல்லது சும்மா இருப்பதால் பெரியபெரிய தலைவர்களாய் இருக்கிறார்களா என்பதே அது. தவிரவும் அவர்களெல்லாம் தம்மை அவ்வாறு முழுமனதோடு அறிவித்துக் கொண்டால் இந்த சமூகம் என்னவாய் உருமாற்றம் கொள்ளும் என்று இத்துனூண்டு  கற்பனை செய்துதான் பாருங்களேன்...

மநுஸ்மிருதியால் இன்றளவும் ஆதாயம் அடைந்துகொண்டிருக்கிற சாதியினரைத் தவிர மற்றெல்லோரும் அதை எதிர்ப்பதற்குரிய எல்லா நியாயங்களையும் கொண்டிருக்கின்றனர். பார்ப்பனச் சாதியில் பிறந்திருந்தாலும் கூட தம்மைத்தாமே சிந்தனை மற்றும் செயல்ரீதியாக சாதிநீக்கம் செய்து கொண்டவர்களுக்கும்கூட  இந்த நியாயம் இருப்பதாகவே நம்புகிறேன். எனவே தம்மை மநுவிரோதி என்று அறிவித்துக் கொள்ளாதவர்களை மநுவின் சினேகிதர் என்றோ மநுவுக்கே.. (சரி, வேண்டாம் விடுங்கள்... ஆதவன் கடாமுடான்னு பேசறார் என்ற குற்றச்சாட்டில் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டும்? ) என்றோ குறுக்கிப் பார்க்கும் நோக்கம் எதுவும் நமக்கில்லையாயினும், அவ்வாறு தம்மை மநுவிரோதி என்று அறிக்கையிட்டுக் கொள்வதில் ஒருவருக்குள்ள தடைதான் என்ன என்று கேட்க விரும்புகிறேன்.
மநுவை எதிர்ப்பதென்பது, இங்கு நிலவும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு ஒடுக்குமுறை அமைப்பை எதிர்ப்பதற்கும் புரட்சிகரமாய் மாற்றியமைக்கவுமான ஒரு நெடியப் போராட்டத்தின் தொடக்கமே. உஞ்சவிருத்தி செய்து வயிற்றைக் கழுவும் நிலைக்கு தனது பொருளாதார நிலை- வர்க்கநிலை- தாழ்ந்து கிடக்கும் போதும் தனது சமூக அந்தஸ்தில் பின்னம் ஏதும் ஏற்படாமல் பாதுகாத்த மநுவைக் கொண்டாட ஒரு பார்ப்பனருக்கு நியாயம் இருக்கிறது.  எனில், பெரும் கல்வியாளராகவும் செல்வந்தராகவும் சொத்துடமையாளராகவுமாகி தனது வர்க்க நிலையை பார்ப்பனரல்லாத ஒருவர் உயர்த்திக்கொண்டுவிட்டப் பின்னும்கூட, அவரது பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்ட சாதியிழிவைத் சுமந்து திரிந்தாக வேண்டிய அவலத்தை உருவாக்கிய மநுவை அவர் எதிர்ப்பதுதானே சுயமரியாதையின் அடையாளம்?
பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், சுயமரியாதை போன்ற சொற்களைக் கண்ட மாத்திரத்தில் தி.க.வாடை வீசுகிறது என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொள்கிறவர்கள், வசக்கி தொழுவத்தில் கட்ட முடியாத ஒரு முரட்டுப்பிராணியைக் குறித்த கவலையை வெளிப்படுத்தும் பாவனையோடு ‘ஆதவனிடம் நிறைய டீவியேஷன் இருக்கிறது’ என்று அபிப்ராயம் தெரிவிக்க கிளம்பியுள்ளனர். ஒட்டுமொத்த மனிதகுலமும் சுயமரியாதையோடு வாழும் உன்னத சமூகத்தை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் சகலத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற மார்க்சீயத்தின் வழிகாட்டுதலே, ஒருவர் தம்மை மநுவிரோதி என்றோ மநுவின் பரமஜென்ம விரோதி என்றோ அறிவித்துக் கொள்ளத் தூண்டுகிறது.

எனது ஆண்குறியை வெட்டிக் கொண்டாலும் வெட்டிக்கொள்வேனே தவிர எனது பூணூலை அறுத்துக் கொள்ளமாட்டேன் என்று ஒரு மௌனியால் பகிரங்கமாக தனது சாதியகங்காரத்தை வெளிப்படுத்த முடியுமென்றால், உயிர்நிலையான ஆண்குறியை விடவும் பெரிதென கொண்டாடுகிற அந்த பூணூலை அவருக்கு வழங்கிய மநுவை எதிர்ப்பதைத் தவிர பார்ப்பனரல்லாத பிறசாதியாருக்கு வேறு என்னதான் மார்க்கமிருக்கிறது? எனவே இப்போது, மெல்ல உதடு பிரித்து ஒருமுறை  உங்களுக்கு நீங்களே ரகசியமாகவேனும் ‘நான் ஒரு மநுவிரோதி’ என்று சொல்லிப் பாருங்கள் . அவ்வாறு உச்சரிக்கும்போது நாக்கு அழுகி விழுந்துவிடும் என்று அஞ்சுகிறவர்கள் சற்றே ஓரமாக உட்கார்ந்து தமக்குத்தாமே வாக்கரிசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2
நேர்காணல் மீதான விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. விமர்சனம் என்ற பொதுத்தலைப்பின் கீழ் வகைப்படுத்த முடியாத வசவுகளும் குமைச்சல்களும்கூட இதில் அடக்கம்தான். வாழ்வின் பல்வேறு தளங்களை ஊடறுத்துச் செல்வதாய் கேள்விகளும், அக்கேள்விகள் குறித்த எனது புரிந்துணர்வின் வழிகாட்டுதலில் அமைந்த பதில்களுமாய் நேர்காணல் அமைந்திருக்க, அவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் ஒரு மநுவிரோதன் என்ற தலைப்பினாலேயே தொந்தரவுக்குள்ளாகி, முதல் பக்கத்திற்குள் கூட புக முடியாமல் அட்டையையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை மநு எப்போதோ வாழ்ந்து மடிந்த யாரோ அல்ல, இன்றளவும் மனிதகுலத்தின் ஆகச் சிறந்த அனைத்தையும் அவர்களுக்கு மட்டுமே வாரி வழங்கிக் கொண்டிருக்கிற வள்ளல். எனவே மநுவின் விரோதிகளை தமது சொந்த எதிரிகளாய் வரித்துக் கொண்டு பகைமூட்டம் கொள்ளும் குணம் இயல்பாகவே வந்துவிடுகிறது. ஆனாலும் மநுவை ஆதரித்து வெளிப்படையாய் பேசமுடியாத கடும் மன அழுத்தத்தால், தமது கைகால் நகங்களை ரத்தம் பீறுமளவுக்கு கடித்துக் கொண்டிருக்கிற- கண்டதும் காய்தல் அல்லது கடுப்பாங்காய்ச்சல்- என்ற  இந்த புதுவகை வியாதிக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது பரிதாபம்தான்.

நேர்காணலின் பேசுபொருள்கள் பலவும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தபோதும் சாதி வர்க்கம் குறித்த எனது கருத்துக்கள் மட்டுமே விவாதத்திற்குரியதாய் மேலெழுந்துள்ளன. சாதியத்தை ஏன் எதிர்க்க வேண்டும் அல்லது கைவிட வேண்டும் என்பது குறித்த வரலாற்றுப்பூர்வமான தெளிவை எட்டியவர்கள் எனது கருத்துக்களை ஏற்கவும் உடன்நின்று விவாதிக்கவும் தலைப்பட்டுள்ளனர். பிறப்பால் எந்த சாதியினராக இருந்தபோதிலும் தனது உள்ளுணர்வு நிலையில் தங்கியிருக்கும் சாதியக்கூறுகளைக்கூட எதிர்த்து தமக்குள்ளே போராடிக் கொண்டிருக்கிற- அதுகுறித்து வெளிப்படையாய் விவாதிக்கிற பலரை நானறிவேன். சாதியப் பெருமிதத்தை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கோடு தமக்கு கற்றுத்தரப்பட்ட நடையுடை பாவனைகள், உணவுப்பழக்கவழக்கம், வழிபாடு, நம்பிக்கை, தெய்வங்கள், திருவிழாக்கள், வாழ்க்கை வட்டச் சடங்குகள்  எல்லாவற்றையும் சொந்தவாழ்வில் கைவிடுவதற்காக தமக்குள் போராடிக் கொண்டிருக்கின்ற அவர்கள் எனது கருத்தை மேலும் செழுமைப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளனர். சாதி கடந்ததொரு சமூகத்திற்கான விருப்பத்தை அவர்களோடு பகிர்ந்துகொள்வதில் நமக்கு எவ்வித மனத்தடையும் ஏற்படவில்லை.

ஆனால் தமது சொந்தவாழ்வில் எந்தக் கட்டத்திலும் சாதியை கைவிடாமலே, ஆனால் கைவிட்டதான பாவனையை வெளிக்காட்டிக் கொண்டிருப்பவர்கள், தமது குட்டு வெளிப்பட்டுவிட்ட அவமானத்தில் பெரிதும் மனத்தொந்தரவுக்காளாகியுள்ளனர். தாங்கள் சாதியைக் கைவிட்டு வெகுகாலமாகிவிட்டப் பின்பும் தங்களது அந்தரங்கத்தையும் நேர்மையையும் ஆதவன் சந்தேகிப்பது சரியா என்று புகார் தெரிவிக்கிறார்கள். ‘சொந்த சாதியிலேயே கல்யாணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக எனக்கு சாதியுணர்வு இருப்பதாக எப்படி சொல்லமுடியும்?’, ‘ஆதிதிராவிடர் அல்லது அருந்ததியர் காலனியில் நான் வசிக்கப்போகவில்லை என்பதற்காக நான் தீண்டாமை பார்க்கிறேன் என்று கூறமுடியுமா?’, ‘அசைவ உணவு சாப்பிடாதது ஒரு குற்றமா?’, ‘மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டவுடனே ஒருவர் சாதிமறுப்பாளர் ஆகிவிட முடியுமா?’, ‘பழக்கமில்லாத ஒரு பண்டத்தை சாப்பிட்டாக வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகமில்லையா?... மனதுக்கு ஒம்பாததை உண்ணுமாறு வற்புறுத்துவதில் பாசிசத்தின் கூறு பல்லிளிக்கிறது...’ - என்றெல்லாம் இவர்கள் எழுப்பும் பலவாறான வாதங்களின் வழியே தாங்கள் இன்னும் சாதியின் பிடிக்குள் சிக்கியிருப்பதைத்தான் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

உணவைப் பற்றி பேசும்போது பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு சென்றுவிடுகின்றனர். வளர்ப்புமுறை, குடும்பச் சூழல், பழக்கவழக்கம், அது இதுவென்று முன்வைக்கும் சால்ஜாப்புகள் ஏராளம். தர்மம்- அதர்மம், நீதி-அநீதி என்பதில் ‘அ’ ஒட்டுடன் வருபவை எல்லாமே கீழானவை என்று அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் சைவம்- அசைவம் என்பது என்னவாக உள்வாங்கப்படுகிறது என்று பிரகதீஸ்வரன் மேடைகளில் எழுப்பும் கேள்வியின் நியாயத்தை எப்போது உணரப்போகிறோம்? ஒருவரது உணவு சைவமா அசைவமா என்பதை சாதியைத் தவிர வேறெது தீர்மானிக்கிறது? (ஜீரணக்கோளாறு போன்ற உடல்உபாதைகளை முன்னிட்டு தாவரவுணவுக்கு மாறியவர்கள் இந்த ஆட்டத்தில் சேர்த்தியில்லை).  

வெவ்வேறு வகையான உணவுப் பழக்கவழக்கங்கள் இருப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால் ஒருசாரார் மற்றொரு சாராரின் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து என்ன மதிப்பீடு கொண்டிருக்கிறார்கள் என்பது  முக்கியம். இன்னொருவரை இழிவாக- தீட்டாக- அசூயையாக பார்க்குமாறு வலியுறுத்தும் சாதியம் அடுத்தவரது உணவையும் அவ்வாறே பார்க்குமாறு வலியுறுத்துகிறது என்பதுதானே உண்மை? கறி தின்கிறவர் பருப்பு சாம்பாரின் நாற்றம் தாங்காமல் தனக்கு குமட்டிக் கொண்டு வருவதாகச் சொன்னால் அது இயல்பானதுதானே என்று ஒத்துக்கொள்ள முடியாதவர்கள், கறி தின்னும் பழக்கம் இல்லாத ஒருவர் கறியைப் பார்த்ததும் குமட்டிக்கொண்டு எடுப்பது வாந்தியா சாதியா என்று ஏன் சந்தேகிப்பதில்லை? ‘மதியம் மாட்டுக்கறி விருந்து’ என்று மாநாட்டு அழைப்பிதழில் அச்சடித்து தனது தொண்டர்களைத் திரட்டியது தென்சென்னை தமுஎச. மற்ற அமைப்புகளுக்கெல்லாம் என்னவானது? கறி என்றதும் ஆடு, கோழி, மீன் மட்டுமே நினைவுக்கு வருவதும் மாட்டுக்கறி என்பதே நினைவுக்கு வராத செலக்டீவ் அம்னீசியாவால் பீடிக்கப்படுவதையும் எதன்பேரால் நியாயப் படுத்த முடியும்? இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய தலித்துகளின் உணவை- கறியை இழிவானதென்று பொதுஇடங்களிலும் தனிவாழ்விலும் ஒதுக்கிவைக்குமாறு சாதியம் கற்றுக்கொடுத்ததை மண்டை நிறைய நிரப்பிக்கொண்டு- அதை நியாயப்படுத்த ‘ஆதவன் எல்லாவற்றையும் க்ரூடாக பார்க்கிறான்’ என்று பழிபோடுவது எப்படி சரியாகும்? ‘இப்படி நுணுகி நுணுகி ஒவ்வொன்றிலும் சாதி பார்த்தால் என்னத்துக்கு ஆகும்?’ என்று அலுத்துக்கொள்ளும் கேள்விகள் ஆபத்தானவை. ஏற்கனவே எல்லாம் சாதியாகத்தான் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளும் நேர்மையின்றி, நாம் க்ரூடாய் பார்ப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். க்ரூடாய் இருக்கலாம், குருடாய் இருப்பதுதான் சிக்கல் என்று சொற்சிலம்பம் ஆட இது பொருத்தமான தருணமல்ல.

எந்தவொரு கறிக்கடையில் நுழைந்தாலும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, கோழிக்கறி, பன்றிக்கறி, மீன் -என எல்லாமே அடுத்தடுத்து நேர்த்தியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் மக்கள் எவ்வித அசூயை உணர்வுமின்றி எல்லா வற்றையுமே உண்பதையும் லண்டனில் கண்டபோது எனக்கு நம்மூர் கறி அரசியல் தான் நினைவுக்கு வந்து அலைக்கழித்தது. அங்கே மாட்டுக்கறி தான் விலை அதிகம். ஒரு கிலோ 6 பவுண்ட். மற்றவையெல்லாம் அதைவிட கீழ்தான். விருந்தாளியை மகிழ்விக்கும் பிரியத்தில் தோழர்கள் அழைத்துப்போன பெரிய உணவுவிடுதிகளில் பிரமிப்பூட்டும் வண்ணங்களிலும் வடிவங்களிலும் தொங்க விடப்பட்டிருந்த மாட்டுக்கறியை ஆவல் பொங்க பார்த்துக்கொண்டே யிருந்தேன். இங்காவது நல்ல மதிப்போடு இருக்கிறாயே... ரொம்ப சந்தோஷம் என்று அங்கே தொங்கிக் கொண்டிருந்த கறிக்கொத்துகளைப் பார்த்து மனசார வாழ்த்தினேன். அங்கே உயர்வாக மதிக்கப்படக்கூடிய ஒன்று இங்கே கீழ்மைப்பட்டிருப்பதற்கு காரணம் சாதியும், அதை நியாயப்படுத்தும் இந்துமதப் புரட்டுக் கதைகளும்தான். பழக்கவழக்கத்தின் பெயரால் சாதியையும் இந்துமதத்தையும் காப்பாற்றுகிறவராக இருக்கிற ஒருவர் எப்படி சாதியைத் துறந்தவராக- மதச் சார்பற்றவராக- பொது மனிதாயப் பண்புகளை போற்றுகிறவராக தன்னை அறிவித்துக் கொள்ள முடியும்?  ஆகவே மறுபடி சொல்கிறோம்- சாதியைக் கைவிடுவதென்பது முறி எழுதி கைச்சாத்து வைத்ததும் முடிந்துபோகிற விசயம் இல்லை.

எப்போதோ எழுதப்பட்ட மநுஸ்மிருதியை தூசுதட்டி இப்போது எதற்காக எதிர்க்க வேண்டும் என்கிறவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். மநுஸ்மிருதி உருவான காலம் அதன் சூழல் ஆகியவற்றுக்குள் இருத்திப் பார்த்தால் அத்தகைய கோட்பாடுகள் உருவானதற்கான நியாயத்தை உணரமுடியும் என்றும்கூட இவர்கள் வாதிடுவதுண்டு. இன்னும் ஒருபடி மேலே போய்,  அன்றைய தேவையை முன்னிட்டு உருவான மநுஸ்மிருதி, இன்றைக்கும் பொருந்தும் என்று சொல்வது முட்டாள்தனம் என்று மிகவும் முற்போக்கு போல வாய்வேஷமும்கூட கட்டுவார்கள். இன்றைக்கு பொருந்தாது என்ற வாதத்திற்குள் ஒளிந்துகொண்டு, அன்றைக்கு பொருத்தமாயிருந்தது என்ற நிறுவ முயற்சிக்கிற இவர்கள் உண்மையில் மநுவைவிடவும் ஆபத்தானவர்கள். மநுஸ்மிருதி எந்தகாலத்திற்கும் தேவையற்றது- நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை தெரிந்துகொள்ள இவர்கள் வேறெவரின் தத்துவ விளக்க நூல்களை படிக்காவிட்டாலும் கூட, திருலோக சீதாராராம் அல்லது இராமாநுஜாசாரியார் மொழிபெயர்ப்பிலான மநுதரும சாஸ்திரத்தையாவது படித்துத் தொலைக்கட்டும் என்று இவ்விடத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. அதன்பிறகாவது, மநுஸ்மிருதி செத்தப்பாம்பல்ல, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கொத்தி சமூகத்தையே நீலம்பாரிக்கச் செய்துகொண்டிருக்கிற நச்சுப்பாம்பு என்ற தெளிவு கிட்டும்.

தவிரவும் மநுவை தூசுதட்டி எடுக்கவேண்டிய அவசியம் ஒன்றும் நமக்கு ஏற்படவில்லை. ஏனென்றால் அது இன்றளவும் தன் கொடியபலத்தோடு இந்திய சமூகத்தை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க நடைமுறையில் நூறுநூறு உதாரணங்களைக் காட்ட முடியும். மநுவுக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலைவைத்தவர்களைப் பார்த்தோ, மநுஸ்மிருதியை தன் உயிரினும் மேலாய் மதிப்பதாகச் சொன்ன காஞ்சி சங்கரர்களைப் பார்த்தோ ‘ஏனிப்படி தூசு தட்டி எடுக்கிறீர்கள்’ என்று கேட்காதவர்கள் நம்மைப் பார்த்து இப்படி குற்றம்சாட்ட என்ன நியாயமிருக்கிறது? ஒருவேளை அவர்களெல்லாம் அவாள்ஸாய் இருப்பதனால் குற்றம்சாட்ட அஞ்சுகிறீர்களோ என்று நாம் கேட்டால், பார்ப்பனீய எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பாய் குறுகிவிட்டது பார்த்தீர்களா என்று சொற்சிலம்பம் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள்.
    
இந்த ஆதவன் என்ன சொல்லிவிட்டிருக்கப் போகிறான் என்று முன்முடிவான இளக்காரத்தோடு புத்தகத்தைப் படித்தவர்களையும் நானறிவேன். ‘நீங்கல்லாம் மாடு மேய்க்கத்தான் லாயக்கு, இங்க வந்து ஏன் கழுத்தறுக்கிறீங்க’ என்று பள்ளிக்கூடங்களில் தலித் மாணவர்களைப் பற்றி ஒரு ஆசிரியருக்குள்ள அதே இளக்காரத்தின் மறுபதிப்புதான் இவர்களிடமும் இருக்கிறது. இது ஒருவகையான கெட்டித் தட்டிப்போன சாதியப் பார்வைதான். இவர்களைப் பொறுத்தவரை படிப்பது, இலக்கியத்தில் ஆர்வம் கொள்வது, பேட்டி கொடுப்பதெல்லாம் தலித்துகளின் எல்லை தாண்டிய பயங்கரவாதம். திறந்த மனதோடு நேர்காணலை அணுக இவர்களது முன்முடிவுகள் அனுமதிக்காததால் எனது வார்த்தைகளுக்கு அவர்கள் விரும்பும் பொருளை வருவிக்க பெருமுயற்சி செய்துகொண்டிருக்கின்றனர்.

ஒரு தலித், தன் சொந்தத்துயரை, தன் சமூகத்தின் பாடுகளை சொல்லத் தொடங்கியதுமே அதை சாதியக்குரலாக அடையாளம் காட்டி, தனிமைப்படுத்தத் துணியும் அமைப்புகள்- தலைவர்கள்- தத்துவார்த்த ஆசான்கள், பார்ப்பனர் என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தாமல் கவனமாக பிராமணர் என்று தங்களது அமைப்புகளை சொல்லப்பழகியிருப்பதன் பின்னே சாதியம் ஒளிந்திருக்க விவ்லையா என்ற கேள்வியை எப்போதுதான் எழுப்பப் போகிறோம்? ஒரு தலித் தன் அவலத்தை எவ்வளவு உரக்கச் சொல்லலாம் என்பதைக்கூட நாங்கள்தான் வரையறுத்து இறுதிப்படுத்துவோம் என்று தலித்தல்லாதவர்கள் கூறுவார் களேயானால் அதையும் மேற்சாதி திமிர்த்தனம் என்று குற்றம் சாட்டுவதில் என்ன தவறிருக்க முடியும்? ஒரு தலித்தின் ஓலத்தைக் கேட்டால் கிழிந்துபோய் விடுமளவுக்கு மென்மையான காதுச்சவ்வு கொண்டவர்கள் எங்காவது ஓரமாக உட்கார்ந்து ‘குழலூதும் கண்ணனுக்கு...’ என்று எதையாவது கேட்டுத் தொலைக்கு மாறு வேண்டப்படுகிறார்கள். எல்லாம் கரெக்ட்தானப்பா, இருந்தாலும் கொஞ்சம் அடக்கி வாசி என்ற குரலுக்குள்ளும் இதே வஞ்சகம்தான் மறைந்திருக்கிறது.

3
சாதியொழிப்புப் போராட்டத்தை வர்க்கப்போராட்டத்திற்கு கீழ்ப்படுத்துவ தாயும், சாதியொழிப்புப் போராட்டத்திற்கு கூடுதல் அழுத்தம் தந்து வர்க்கப் போராட்டத்தின் கூர்முனையை மழுங்கச் செய்வதாயும் ‘ஒருபொருட் குறித்த இருவித குற்றச்சாட்டுகள்’ வந்துகொண்டிருக்கின்றன. அதாவது, இரண்டும் வெவ்வேறா னவை என்ற பிசகான முடிவிலிருந்து இந்த கருத்துகள் வெளிப்படுகின்றன. இந்திய சமூக மாற்றத்திற்கான புரட்சியின் உள்ளடக்கம் வர்ண, வர்க்க ஒடுக்குமுறைகளை எதிர்த்தே நடைபெறும் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இவர்களுக்குள்ள மனத்தடையே இவ்வித குற்றச்சாட்டுகளின் அடிப்படை.

நீ எங்கள் பக்கம் இல்லையென்றால், பின்லேடன் பக்கம்தான் என்கிற ஜார்ஜ் புஷ்சைப் போல இங்கும் சிலர் கேலிக்கூத்தான ஒரு வகைப்பிரிப்பை செய்து கொண்டுள்ளனர். ஒருவர் பெரியாரிஸ்டாகவோ அம்பேத்கரிஸ்டாகவோ மார்க்சிஸ்டாகவோ தான் இருக்கமுடியுமே தவிர மூவரது சிந்தனைகளையும் உள் வாங்கிச் செயல்படுகிறவராக இருக்கவே முடியாது என்றும் அவ்வாறு செயல்படத் துணிகிறவர்கள் ‘அதிலொரு கால் இதிலொரு கால் வைத்திருக்கும் ரெண்டாங் கெட்டான்கள்’ என்றும் இவர்கள் அறிவிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே இம்மூவரது சிந்தனைகளுக்குள்ளும் இருக்கும் பொதுமைப்பண்புகளை உள்வாங்கிச் செயல்படுவது தத்தமது தனித்தன்மையை இழக்கச்செய்துவிடும் என்ற பதற்றத்திலிருந்து அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் எதிரெதிராய் களமிறக்கும் இந்த வித்தைக்காரர்கள் மைதானம் முழுக்க நிரம்பியிருக்கிறார்கள். ஆட்டத்தை இனிமேல்தான் நாம் கவனமாய் தொடர வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்ககாலம்தொட்டே மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை கண்டடைவதற்கான தேடல் தொடங்கிவிட்டதை பல்வேறு ஆவணங்கள் வழியே உறுதிப்படுத்த முடியும். திட்டவட்டமானச் சூழலில் திட்டவட்டமான பிரயோகம் என்ற உட்செரிப்பும் இளக்கமும் விரிந்து கொடுக்கும் வலுவும் கொண்ட மார்க்சீயம் என்ற அறிவியலை, திடீர் ரசப்பொடிக்கான செயல்முறைக் குறிப்புபோல புரிந்துகொண்டுள்ளக்கூடாது என்ற தவிப்பிலிருந்து தொடங்கிய இத்தேடலை பின்நவீனத்துவத்தின் புதிய கண்டு பிடிப்புபோல சிலர் கொண்டாடுவதும், ஆகவே பின்நவீனத்துவ எதிர்ப்புப் போராளிகள் சிலர் எதிர் நடவடிக்கைகளில் இறங்கி மார்க்சீயத்தின் தூயவடிவத்தை பாதுகாப்பதான பெரும் பொறுப்பு தன்தோளில் சுமத்தப்பட்டிருப்பதான கற்பிதத்தில் அபத்தமாய் கட்டுரை எழுதுவதுமாகிய கேலிக்கூத்துகள் ஓய்ந்தபாடில்லை. மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்பதை மார்க்சீயத்தை குறைத்து மதிப்பிடுவதாய்- வீரியத்தைக் குறைப்பதாய்- திரிபாய்- பார்க்கிற மனவியாதியிலிருந்துதான் சாதி யொடுக்குமுறை பற்றிய விவாதங்களை வர்க்கப்போராட்டத்திற்கு எதிரானவை களாக கண்டு பதறி ‘தத்துவப் போராட்டத்திற்கு’ களமிறங்குகின்றனர் சிலர். இதன் மறுதலையாக, மார்க்சீயம் போதாமைகளோடு இருப்பதாக கற்பிதம் செய்து கொண்டு, அந்த போதாமையை இட்டுநிரப்பும் இடைப்பொருட்களாக  தலித்தியம், பெண்ணியம், சூழலியம் ஆகியவற்றை பரிந்துரைக்கும் போக்கும் நீடிக்கிறது.  

ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலையைப் பற்றி பேசுவது, ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலையைப் பற்றியதாகாது என்ற ‘தனி’ தலித்திய குரலுக்கும், ஒடுக்கப்பட்ட சாதியினரின் விடுதலை பற்றி பேசுவது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலைக்கு குந்தகமானது என்ற ‘வறண்ட’ பாட்டாளி வர்க்கக் குரலுக்கும் இடையேயான இடைவெளியை, அம்பேத்கரையும் பெரியாரையும் மார்க்சையும் ஊன்றிப் பயில்வதின் மூலம் கடக்கமுடியும் என்றே நம்புகிறேன். ஊன்றிப் பயில்வது என்பதை அடிக்கோடிட்டு வலியுறுத்துகிறேன். அவ்வாறு பயில்வதன் மூலம், தலித் அணிதிரட்சியை வெறும் சாதிய அடையாளமாகவும்,  மார்க்சீய இயக்கங்களை பொருளாதாரவாதத்திற்குள் சிக்கிக்கொண்டு தத்தளிப்பவை யாகவும் குறுக்கிப் பார்ப்பதிலிருந்து விடுபட முடியும். சாதியத்தை எதிர்த்துப் போராடுவதானது, உழைக்கும் மக்கள் ஒரு வர்க்கமாக அணிசேர்வதை மறிக்கிற ஒரு பெருந்தடையை தகர்த்தெறியும் போராட்டம்தான் என்று புரிந்து கொள்கிற போதுதான் அம்பேத்கரையும் பெரியாரையும் வெற்று சீர்திருத்தவாதிகளாக தகுதியிறக்கம் செய்கிற அல்லது மார்க்சியம் போதாமையுடன் உள்ளது என்று தீர்ப்பளிக்கிற அதிமேதாவிகள் நிஜமேதாவிகளாகி தரையிறங்க முடியும் என்று ஆசீர்வதிக்கிறோம்.  (ஆமாய்யா, இப்படி சொல்றது அகங்காரம் தான். இப்ப என்னான்ற...? )

மார்க்சியம் அம்பேத்கரியம் பெரியாரியம் ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்வது என்பதை, எல்லாம் கலந்து நூறு கிராம் மிக்சர் வாங்கும் ஜனகராஜ் காமெடியாக குறுக்கியும் குதர்க்கமாயும் புரிந்துகொள்ளத் தேவையில்லை. உழைக்கும் அடித்தட்டு மக்கள் மீதான சகல சுரண்டல்களையும் எதிர்ப்பதிலும் முடிவுக்கு கொண்டு வருவதிலும் அக்கறை கொண்ட தத்துவங்கள் என்ற அடிப்படையில் அவற்றுக்கிடையேயுள்ள பொதுப்பண்புகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது புரிதலேயன்றி, மூன்றும் ஒன்றுதான் என்பதல்ல. அவற்றுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பகைமுரண்கள் அல்ல என்றும் இவ்விடத்தில் சொல்ல வேண்டியுள்ளது.  

4
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் இரண்டாவது தலித் மாநாட்டில் பங்கேற்க நான் இலண்டன் சென்றிருந்தததையொட்டி இந்நூலின் வெளியீட்டு விழா அங்கே நடந்தது. மாநாட்டிலும் விழாவிலும் பங்கேற்றவர்களில் அநேகமானவர்கள் ஐரோப்பிய நாடுகளைப் புகலிடமாகக் கொண்டவர்கள். இலங்கைச் சமூகத்திலிருந்து வெளியேறி அந்தந்த நாடுகளில் குடியுரிமையும்கூட பெற்றிருக்கிறார்கள். உற்றார் உறவினர் ஆஸ்திபாஸ்தி அத்தனையையும் விட்டுவிட்டு வர முடிந்த இலங்கைத் தமிழர்களால் தத்தமது சாதியை விட்டுத் தொலைக்க முடியவில்லை என்ற துயரத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். புகலிடத்திற்கேற்றாற்போல சாதிய புறக்கணிப்புகளும் தீண்டாமையும் ஒடுக்கு முறையும் புதுவடிவம் பெற்று நீடித்திருப்பதை அவர்கள் அம்பலப்படுத்தினர். இலங்கையின் சமூக அமைப்பிலிருந்து முற்றாக வேறுபட்டு முதலாளித்துவ அமைப்பின் உச்சத்தை எட்டியிருக்கிற ஐரோப்பிய சமூகத்தில் சாதியம் நீடிப்பதற்கான தேவை என்ன வந்தது? அதேநேரத்தில் இந்திய வம்சாவளியினராய் இருந்தபோதிலும் இந்தியச் சமூகத்துடனான உறவுகளை முறித்துக்கொண்ட பிஜியர்களிடம் சாதி முனைப்பாக இல்லையென்றும் அவர்களிடம் சாதிப்பெயர் குடும்பப்பெயராக மட்டுமே  தங்கியுள்ளதென்றும் ஆய்வாளர்கள் சொல்வதையும் இவ்விடத்தில் சேர்த்தே பரிசீலிக்க வேண்டியுள்ளது. பிஜியின் நிலவுறவுகளில் பேரளவிலான மாற்றங்கள் எதுவும் ரகசியமாக நடந்துவிடாத நிலையில் அங்கு சாதி எப்படி மங்கியது என்ற படிப்பினை நமக்குத் தேவையாகிறது.
 
அடிக்கட்டுமானமா மேல்கட்டுமானமா என்று பிரித்துணர முடியாதபடி சவ்வூடிக் கிடக்கிற சாதியமைப்பை, மேல்கட்டுமானம்தான் என்று திட்டவட்டமாக வரையறுத்துக்கொண்டு, ஆகவே அடிக்கட்டுமானம் மாறிவிட்டால் மேல்கட்டு மானம் தானேயழிந்துவிடும் என்று குடுகுடுப்பையடிக்கிற யாந்திரீக கோடாங்கிகள், வெண்டைக்காயைத் தூக்கி விளக்கெண்ணெய்யில் போட்டு வதக்கியதைப்போல ஏதேனுமொரு வியாக்கியானத்தை இதற்கும் தரக்கூடும். நமது அக்கறை அதுபற்றியதல்ல. அடிக்கட்டுமானம் மாறியதுமே, முந்தைய சமூக அமைப்பின் மேற்கட்டுமானம் தகர்ந்துவிடாது நீடிக்கவே செய்யும் என்றும் அதை எதிர்த்தப் போராட்டத்தையும் தொடர வேண்டியிருக்கும் என்றும் மார்க்சீய மூலவர்கள் சொன்னதை நாம் மறந்துவிடக் கூடாது என்பதே. சொடக்கென்று சுவிட்ச் போட்டு, அதை மாற்றினால் இதுவும் மாறிவிடும் என்று  சமூக மாற்றத்தை எளிமைப்படுத்திப் பார்க்கும் போக்குகளை நிராகரிப்பதில்தான் புரட்சிகர இயக்கத்தின் இயங்காற்றல் தங்கியிருக்கிறது என்ற உண்மையைத்தான் நாம் பின்தொடர வேண்டியிருக்கிறது.  

சாதியானது அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா என்று துல்லியமாக பிரித்தறிவதில் நீடிக்கும் தத்துவார்த்தக் குழப்பத்தால்தான் புரட்சியை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதைப் போலவும், அதை சரியாக பிரித்தறிந்துவிட்டால் மறுகணமே புரட்சியை நடத்தி முடித்துவிடலாம் என்பது போலவுமான பாவனைகளின் பேரில் இங்கு சிலர் விவாதித்துக் கொண்டுள்ளனர். இவர்களது விவாத அறைக்கு வெளியே முடிவைத் தெரிந்து கொள்வதற்காக சாதியொடுக்கு முறையாளர்களும், உழைப்பைச் சுரண்டுகிறவர்களும் விடுமுறை எடுத்துக் கொண்டு பொறுமையோடு காத்திருப்பதைப் போன்ற கற்பிதத்திற்குள் மூழ்கி ‘நாங்கள் முடிவெடுக்கும் வரை எதுவும் நடக்காது என்பது போன்ற   இறுமாப்பில் விவாதித்துக் கிடக்கின்றனர். ஐயா அறிவுசால் பெரியவர்களே, உமது அறிவின் ஆழ நீள அகலங்களை அளந்து காட்டும் வித்தைகளை கைவிட்டு எதார்த்தத்துக்கு திரும்புங்கள். நடப்பில், தினசரி வாழ்வில், ஒவ்வொரு கணத்தையும் தீண்டாமை புறக்கணிப்பு ஒடுக்குமுறை அவமானத்தால் குன்றிக் கொண்டிருக்கும் தலித்து களின் துயரம் கண்டு வெடிக்கிற இதயமும் அந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற வைராக்கியமும் போர்க்குணமும் கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம், மரணத்தின் வாதையில் எழுகிற ஓலம் எத்தனை டெசிபல் கொண்டது என்று சாவதானமாக விவாதிக்கிற - எதற்கும் பதற்றமடையாத உங்களைப் போன்ற ஆய்வாளப் பெருந்தகைகள் முன்வைக்கும் எல்லா வறட்டுச் சூத்திரங்களையும் நிராகரிக்கிறது.

தலித்துகள் பல்வேறு முதலாளித்துவக் கட்சிகளிலும் சிதறிக் கிடக்கிறார்கள். அங்கெல்லாம் அவர்களது நிலைமை என்ன? முடிவெடுக்கும் அதிகாரமுள்ள பொறுப்புகளுக்கு தலித்துகளால் வர முடிகிறதா? அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய பிரதிநிதித்துவம் கோருகிற போது, இடஒதுக்கீட்டுக்காக போராடுகிற கட்சிகள்கூட கட்சிக்குள் இடஒதுக்கீடா என்று கலக்கமடைவதைப் பார்க்கமுடிகிறது. தலித்துகளை கவனக்கமுடிகிறது. தலித்துகளை கவனமாய் தவிர்த்துவிட்டு பிற சாதிகள் மட்டும் தலைமைப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்வது இடஒதுக்கீடு தானே என்று கேட்டால் அப்போது தலைமைப் பண்புகள் பற்றியும் தலைவர்களாக வளர்ந்தெழுவது பற்றியும் இயக்கத்திற்கான உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் பற்றியும் வாதிடப்படுகிறது. தானே தக்கிமுக்கி  தன்னை வளர்த்துக் கொள்கிற யாரும் தலைமைப்பொறுப்புக்கு உயரலாம் என்று வியாக்கியானம் சொல்வார்கள். ஆப்ரகாம் லிங்கனைப் பார்... ஒரு கறுப்பனாய் பிறந்து அமெரிக்க அதிபராக வில்லையா என்பார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளியின் பிள்ளையான ஸ்டாலின் ரஷ்யாவை ஆளவில்லையா என்பார்கள். இந்தியாவை செருப்பு வேண்டுமானால் ஆளமுடியுமே தவிர செருப்பு தைக்கிறவன் ஆளமுடியாதபடி சாதி தடுக்கிறது என்பதை மறைக்கிறார்கள். இது நெடுங்காலமாய் கேட்டு புளித்துப்போன தகுதி- திறமை என்கிற கட்டுக்கதையின் இன்னொரு வடிவம்தான்.

தவிரவும் இந்த உழைப்பு அர்ப்பணிப்பு தியாகம் என்பதற்கான அர்த்தங்கள் இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. மக்களுக்காகப் போராடுவதோ அதற்காக சிறைசெல்வதோ அரசின் அல்லது ஆதிக்கசக்திகளின் அடக்குமுறை களை தாங்கிக்கொள்வதோ இந்த முதலாளித்துவ கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. எனவே இவற்றுக்கு தலைவர்கள் தேவையில்லை. கட்சியை நடத்துகிற நிர்வாகிகள் அல்லது மேலாளர்கள் போதும். ஏதேனும் மாநாடு பொதுக்கூட்டம்  போட்டு அடுத்தத் தேர்தல்வரை கட்சியின் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந் தால் போதுமானது. இந்த மாநாடு அல்லது கூட்டத்தில் பங்கேற்பதுதான் தலைமை யின் பணி என்றால் அதை தலித்துகளும் செவ்வனே நிறைவேற்றுவார்கள்தானே? ரயிலில் முன்பதிவு கிடைக்காமல் பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்ததும், பயணத்தில் சரியாக தூங்க முடியாததும்கூட தலைவர்களின் தியாகமாக கற்பிதம் செய்யப்படு மானால் அந்த தியாகத்தை தலித்துகளாலும் செய்யமுடியும்தானே?. பிரச்னை களுக்கு தீர்வை எட்டும் நோக்கத்தை கொண்டிராமல் வெறுமனே எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு போராட்டத்தில் கலந்துகொள்வதுதான் உழைப்பு அர்ப்பணிப்பு என்றால் அதை தலித்துகளும் செய்வதில் தடையென்ன இருக்கிறது? அப்படி யிருந்தும் இந்தக் கட்சிகளில் எஸ்.சி., எஸ்.டி பிரிவுகளில் தவிர தலித்துகளுக்கு வேறெங்கும் பொறுப்புகள் தரப்படாததில் சாதி ஒளிந்திருக்கிறதா அல்லது ஏன் தரப்படவில்லை என்று கேள்வியெழுப்புவதில் சாதி வெளிப்படுகிறதா?

தரையிலே நீச்சலடித்துப் பழகச் சொல்லி தண்ணிக்குள் கடைசிவரை இறக்கிவிடாத - அல்லது இறக்கிவிட்டாலும் மூச்சுத்திணறி சாக வைக்கிற முதலாளித்துவ கட்சிகளின் தந்திரத்தைப் புரிந்துகொள்கிற தலித்துகள் இடதுசாரி இயக்கங்களில் அணிதிரளத் தொடங்குகின்றனர். உழைக்கும் மக்களை அணிதிரட்டி வர்க்க போதமூட்டி நிலவும் சுரண்டல் அமைப்பை என்றென்றைக்கும் இல்லாததாய் ஒழித்துக்கட்டி புரட்சிகரமாய் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட மார்க்சீய இயக்கங்கள் மற்றெவரைக் காட்டிலும் தலித்துகளுக்கே மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. எனவேதான் தலித்துகளுக்கென்று தலித்து களாலேயே நடத்தப்படும் இயக்கங்களில் இருப்பதை விடவும் இடதுசாரி இயக்கங்களில் தலித்துகள் கணிசமாக அணிதிரள்கின்றனர். தலித்துகள் கணிசமாக அணிதிரண்டிருக்கிறார்கள் என்பதற்காக அல்லாது, பன்முகச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒரு சமூகத்திரள் சுயமரியாதையோடு வாழ்வதற்கான முன்தேவைகளை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இடதுசாரி இயக்கங் களின் உடனடி மற்றும் தொலைநோக்குத் திட்டங்களிலும் செயல்பாட்டிலும் சாதி யொழிப்பு முன்னுரிமைப் பெற்று வருகிறது. இடதுசாரி இயக்கங்களை வெறும் பொருளாதாரவாதத்திற்குள் அமிழ்த்திவைத்து திணறடிக்க விரும்புகிறவர்கள், ‘நூறுசத புரட்சிக்கு’ குறைவான எல்லா நடவடிக்கைகளையும் திரிபாக தப்பர்த்தம் கொண்டு தலித்துகளுக்கான இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களால் அமைதியற்றுப் போயுள்ளனர். அவர்கள் மேலும் அமைதியிழந்து நிம்மதி கெட்டு சீரழிவதை கைவிட்டு, இடதுசாரி இயக்கங்களின் தத்துவம் மற்றும் செயல்பாடு களை பின்தொடந்து வரும் நல்லறிவை வழங்குமாறு எல்லாம் வல்ல மார்க்சிடம் பிரார்த்திப்போமாக.
  
சென்னை வெளியீட்டுவிழாவில் பகத்சிங் குறித்து புனிதபாண்டியன் தெரிவித்தக் கருத்துக்கு பதில் சொல்லாதது, பாரதியார் குறித்து இறுதித் தீர்ப்பை வாசிக்காதது ஆகிய மகாகுற்றங்களுக்காக தங்களது குடோனிலிருக்கும் ‘ஒரிஜினல் புரட்சியாளர்’ சான்றிதழை மார்க்சிஸ்டுகளுக்கு வழங்கமுடியாது என்று அறிவித்துள்ள கெட்டிச்சிவப்பர்களுக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. தோழர் புனிதபாண்டியன் ஒப்பிட்டுத்தான் பேசினாரேயன்றி பகத்சிங்கை இழிவுபடுத்துவது அவரது நோக்கமாக இருக்குமென்று நான் கருதவில்லை. அவர் பொறுப்பில் வெளியாகும் தலித்முரசின் 2008 மார்ச் இதழ் பகத்சிங்கின் நினைவுநாளை உரியமுறையில் கவனப்படுத்தியிருப்பது இதற்கொரு சான்று.  

பாரதியின் கவிதைகள்மீது எனக்கு மயக்கமெதுவும் இல்லையென்றாலும் கூரிய விமர்சனமும் இல்லாமல்தான் இருந்தேன். திரும்பிய பக்கமெல்லாம் தேசியகவி, மகாகவி என்றெல்லாம் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பம் எனக்குள்ளும் செல்வாக்கு செலுத்தியிருக்கக்கூடும். ஆனால், அவரது கட்டுரைகளை படிக்கத் தொடங்கிய போது அந்த செல்வாக்கு சரியத் தொடங்கியது. பாரதி பற்றிய மதிமாறன் போன்றவர்களின் எழுத்துக்களை ஒருசேர தொகுத்துப் படிக்கநேர்ந்தபோது பாரதி பற்றிய மறுமதிப்பீட்டை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. ....கற்றனைத்தூறும் அறிவு என்பதுதானே இயல்பானது. இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் எனக்கெந்த தயக்கமும் இல்லை. மாற்றங்களை உள்ளும் புறமும் அனுமதித்துக் கொள்கிற திறந்தமனம் தேவை. ஆனால் சிலரோ தாய்வயிற்றில் இருக்கும்போதே பாரதியார் தொடங்கி வாஞ்சிநாதன் வரை எல்லாரைப் பற்றியும் ஆழ்ந்து கற்று அபிப்ராயங்களை உருவாக்கிக் கொண்ட பிறகே பிறந்தது போலவும், அதிலிருந்து இம்மியளவும் பிசகாது இருப்பதுபோலவும் தம்மைத்தாமே உயர்வுநவிற்சியாய் கற்பனை செய்துகொண்டு அனானிகளாக மெயில் அனுப்பி மாய்கிறார்கள். கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழத்தைத் தூக்கி மனையில் வை என்பதுபோல வாக்குமூலம் கேட்டுத் திரிகிற இவர்களை நினைத்தால், முதல்மரியாதை வீராச்சாமிதான் எனக்கு நினைவுக்கு வருகிறார்.

5
-இப்படி நான் ஒரு மநுவிரோதியை முன்வைத்து விவாதிப்பதற்கான தளங்கள் விரிந்துகொண்டேயிருக்கிற நிலையில் இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. ஒரு ஒற்றைச்சொல்லில் ஏன் ஒரேயொரு எழுத்தில்கூட தன்னை வெளிப்படுத்தும் சாதுர்யம் கொண்டதே அதிகாரம். மொழியை கவனமாக கையாள வேண்டும் என்ற பிரக்ஞைநிலையில்தான் நம்முடைய அரசியல் நிலைபாட்டில் வழுவாது நிற்கமுடிகிறது. ஆனால் பிரக்ஞைநிலையில் அல்லாமல் தன்னியல்பாக உள்ளுணர்வுநிலையிலேயே சுயஅதிகாரத்தை மறுப்பதற்கான தொடர் போராட்டத்தை எனக்குள் நடத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் ஒரு மநு விரோதன் என்ற தலைப்பில் உள்ள ஆண் என்கிற பால்நிலை அதிகாரத்தை நான் மிக தாமதமாகவே உணர்ந்தேன்.  எனவே இனி நான் ஒரு மநுவிரோதி என்றே இந்நூல் அறியப்படட்டும்.

தலித்திய பெரியாரிய மார்க்சீய இயக்கங்களின் பல்வேறு மட்டங்களில் நடைபெற்றுவரும் நுண்மையான அரசியல் விவாதங்களை பின்தொடர்கிறவன் என்ற முறையில் நான் இந்நூல் வழியே வெளிப்படுத்திய கருத்துக்கள் எதன்மீதான தீர்ப்பும் அல்ல. விவாதத்திற்கான முன்குறிப்புகள் என்ற நிலையைக்கூட அவை எட்டாதிருக்கலாம். ஆனாலும் நான் பேசியிருக்கிறேன். இப்போது உங்கள் முறை.

( பூபாளம் புத்தகப்பண்ணை வெளியிட்டுள்ள எனது நேர்காணல்களின் தொகுப்பான "நான் ஒரு மநுவிரோதி" என்ற நூலின் இரண்டாம் பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை. நேர்காணல் நாளை...)

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...