நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 6

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

 

கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160

இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு கொண்டிருக்க வேண்டாமென்று காபி போட்டுக் கொண்டு எழுதப் போகலாமென எழுந்தேன். ஞாயிறன்று சேலம் நிகழ்வில் பரிசளிக்கப்பட்ட புத்தகப்பொதி பீப்பாய் மீது கிடந்தது. தோழர்கள் எவ்வளவு அன்பாக கொடுத்தார்கள், நாம் இன்னும் பிரிக்காமல் கூட வைத்திருக்கிறோமே என்று பிரித்தால் ரபீக் ராஜாவின் ஆடலும் பாடலும், அரிசங்கரின் கரப்பான். அரிசங்கர் எழுத்தின் மீதிருந்த ஈர்ப்பில் கரப்பானை எடுத்தேன். அது அவருடைய மொழியினாலா கதையினாலா என்ன மாயமோ  விறுவிறுவென ஓடி ஆறுமணிக்கு முடிந்துவிட்டது. எழுதினால் இப்படி படிப்பவரை உள்ளிழுத்துக் கொள்ளும்படியாக, ஒருமூச்சில் படித்துமுடித்துவிடும் படியாக  எழுதவேண்டும் என்பது பொது விதியா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு அப்படி தோன்றியது. படிக்கும் போதே தொந்திரவு செய்து உங்களது இயல்பைக் குலைக்க வேண்டும் என்பது உள்ளடக்கம் சார்ந்தது, படிப்பதையே தொந்தரவாக்கிவிடுவது  மொழி சார்ந்தது. அரிசங்கர் பாய்ச்சலாக கதைசொல்கிறார்.   

இந்தக் கரப்பான், இந்திய உச்சநீதிமன்றத்தால் சுட்டப்பட்டு, அதனால் அறச்சீற்றத்துடன் பொங்கியெழுந்து ஆட்சியாளர்களை நிலைகுலையவைத்த கரப்பான் அல்ல. அல்லது, காப்காவின் உருமாற்றத்திலிருந்து ஊர்ந்துவந்து உங்களது மூளையைக் கொறிக்கிற கரப்பானுமல்ல. இது, தகுதியுள்ளது எந்தச் சூழலிலும் பிழைத்துக் கொள்ளும் என்பதற்கு அடிக்கடி உதாரணம் காட்டப்படும் கரப்பான்.  அப்படியான அது எங்குதான் இருக்கிறது என்று தேடுவதைவிடவும் அது எங்குதான் இல்லை என்கிற முடிவுக்கு வந்துவிடுவதே சரியாக இருக்கும். ஆமாம், அது எங்கும் நிறைந்திருப்பதாக நம்பப்படும் கடவுளைவிடவும் மெய்யானது. கதவிடுக்கிலும் இருக்கும் காபிக் கோப்பையிலும் மிதக்கும் என்று அறியப்பட்ட விதங்களில் அல்லாமல் உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் ஓர் உணர்வாக நம்பிக்கையாக அது ஊர்ந்துகொண்டிருக்கிறது.

பிழைத்திருப்பதற்காக எதைச் செய்வதும் நியாயம் என்கிற மனிதத் தர்க்கம் இந்த பூமியின் ஏனைய உயிரினங்களை அழித்திருக்கிறது. சுற்றுச்சுழலை அழித்திருக்கிறது. சக மனிதர்களை அழித்திருக்கிறது. மிச்சமிருப்பது என்னவென்று தேடி கடைசியில் தன்னையே அழித்துக்கொள்கிறது. அந்த அழிவின் விளிம்பில் தள்ளாடும்போதும் ஆணவம் அழியாமல் இதுவரை தன்னால் வெற்றி கொள்ளப்பட்டவற்றின் அதாவது அழிக்கப்பட்டவற்றின் பெயர்களை “துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள்” என்று வகைப்படுத்தி பட்டியல் தயாரிக்கும் போது மூன்றிலுமே முதலும் கடைசியுமாக தன் பெயரே இருப்பதைப் பார்த்து அஞ்சுகிறது. தனது அருகில் உயிருள்ள எதுவுமே இல்லாமல் தனிமைப்பட்டுக் கிடக்கும் மனிதனைப் பார்த்து அவனைச்  சுற்றிலுமுள்ள சடப்பொருட்கள் சிரிக்கின்றன. அந்தச் சிரிப்பைத் தாள முடியாமல் தடுக்கமுடியாமல் தத்தளிக்கும் சுனில் வேறு யாருமல்ல, நானும் நீங்களும் அவர்களும்தான். 

வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்வது - உருவாக்கிக் கொள்வது, தகவமைத்துக் கொள்வது, எந்தவொரு சூழலுக்குள்ளும் பொருந்துதல் என்கிற வியாக்கியானங்களுடன் வாழும் எந்தவொரு மனிதரும் சுனில்தான். சரியாகச் சொல்வதெனில் இந்த நாவலில் வரும் ஒவ்வொருவரும் சுனிலின் ஒரு பகுதி அல்லது மற்ற அனைவரின் கூட்டுருதான் சுனில். கார்ப்பரேட் உலகத்திற்குள் இருப்பதாக காட்டப்படும் அவன் கரப்பானைப்போல எங்கும் ஊர்ந்தலைகிறான். எனக்கென்னவோ இந்தக் குணத்தை மனிதனிடமிருந்து தான்  அந்த கரப்பான் பெற்றிருக்கக்கூடும் என்று நாவலைப் படித்தப்பின் தோன்றுகிறது. 

நாவலில் வரும் பெண்கள் சுனில்களுக்கு எதிர்த்திசையில் இயங்குகிறார்கள். அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் சுனில்களை கொல்வதில்லை, வாழ்வதற்கு உதவப் பார்க்கிறார்கள். மறுக்கும்போது அவர்களாக சாவைத் தேடிக் கொள்ள அனுமதித்துவிட்டுக் காத்திருக்கிறார்கள். நீங்கள் எப்படிப்பட்ட பெண்ணோடு இருக்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது.

** 

நமது தொல்கதைகளில் மனிதர்களைப் பற்றி மற்ற உயிரினங்களும் சடப்பொருட்களும் பேசுவதைக் கண்டிருக்கிறோம். எனது ‘தீட்டலங்காரம்’ என்ற கதையில் சாதிக் கலவரத்தில் திருடிக் கொண்டுவரப்பட்ட நகைகள் அதை அணிந்திருக்கும் சிறுமியிடம் உண்மையைப் பேசின. இந்தத் தொல்மரபை கரப்பானில் அற்புதமாக கையாண்டுள்ளார் அரிசங்கர். சுனிலின் புழங்குப்பொருட்கள் வழியே அவனுக்கு வெளியேயிருந்து அவனது கதையைச் சொல்லவைக்கிறார். அதேவேளையில் சமகால தகவல் தொடர்பு ஊடகமான வாட்ஸ்அப் குழுக்களுக்குள் நடக்கும் உரையாடலையும் கதையின் பகுதியாக்குகிறார்.  

மனிதவாழ்வின் ஆகப்பெரிய இலக்கு இன்னொரு மனிதரின் அன்பைப் பெறுவதுதான். இதை உணராமல் ஆதிக்கம், வெறுப்பு, செருக்கு, சுரண்டல் என்று சுயமோகத்தில் அலைகிற இந்த மனதை ஒருநிலைப்படுத்துவதன் அவசியத்தை கரப்பான் வழியே யோசிக்கவைத்துள்ள அரிசங்கருக்கு எனது அன்பு.


சனி, ஜனவரி 6

மூக்குத்தி காசியை மூக்குத்தி காசிகளுக்கு மூக்குத்தி காசி அறிமுகம் செய்வித்தல்...

புலியூர் முருகேசனின் மூக்குத்தி காசி நாவலுக்கு 
நான் எழுதிய அணிந்துரை 


‘நம்பிக்கை தரும் விதமாக வளரும் அடுத்தத் தலைமுறை இளம் எழுத்தாளர் என யாரை அடையாளம் காட்டுகிறீர்கள் என்று  மூத்த எழுத்தாளர் ஒருவரிடம் கேட்கப்பட்டதாம். அதற்கு அவரால் பரிந்துரைக்கப்பட்ட, வளரும் இளம் தலைமுறை  எழுத்தாளரோ அப்போதே அறுபது வயதை தொட்டவராயிருந்தாராம். சரி, அந்த ‘இளம்’ தலைமுறை எழுத்தாளர் அந்தளவுக்கு எழுதிக் குவித்தவரா / கிழித்தவரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பின் எப்படி இந்தப் பரிந்துரை? இவ்வளவு பேர் எழுதிக்கொண்டிருக்கும் தமிழிலக்கியக்களத்தில் அவர் கண்ணுக்கு எப்படி இவர் மட்டுமே சட்டெனத் தெரிந்தார்? இருவரும் ஒரே சாதியினர் என்பதற்கும் அப்பால் வேறொரு காரணமும் இதற்குள் இல்லை என்று சொன்னால் வலிந்து காரணம் கற்பிப்பதாக நம்மீதே பழிவிழும். இங்கு பட்டியல்கள் பரிந்துரைகள் பாராட்டுகள் விருதுகள் விமர்சனங்கள் ஆகியவற்றை தீர்மானிப்பதில் சாதியச் சாய்மானம் பெரும்பங்கு வகிக்கிறது என்பதற்கான ஒருசோற்றுப் பதம் இது. எழுத்தாளர், பதிப்பாளர், வாசகர், விமர்சகர் ஆகியோரை இணைப்பதாக படைப்பொருமை தான் இருக்க வேண்டுமேயன்றி வேறு அம்சங்கள் அல்ல.  புலியூர் முருகேசனின் இந்த நாவல் பற்றி இங்கு நான் எழுதவந்ததும் அதன் பொருட்டே. 

மூக்குத்தி காசி ஒரு  டீ  மாஸ்டர். உடனே நீங்கள் அவரை ஓ.பி.எஸ் அல்லது மோடியுடன் தொடர்புபடுத்தி வேறுவிதமான அபிப்பிராயங்களுக்கு சென்றுவிட வேண்டியதில்லை. அவர் அதிகாரத்தை கைப்பற்ற இந்த எளிய தோற்றத்தையும் பயன்படுத்தும் தந்திரக்காரரல்ல.  மூக்குத்தி காசி ஒரு தேர்ந்த இலக்கிய வாசகர். அதனொரு பகுதியாகவோ நீட்சியாகவோ அவ்வப்போது எழுதுகிறவரும்கூட. சமகாலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்களோடு நட்பைப் பேணுவதிலும் அவர்களை போஷிப்பதிலும் தனது சம்பாத்தியம் முழுவதையும் முழுவிருப்பத்தோடு இழக்கக் கூடியவர். இலக்கியம் சார்ந்து இப்படியான உதாரகுணத்துடன் திகழும் ஒருவரை இளிச்சவாயன் என்றெண்ணி சுரண்டுகிற எழுத்தாளர்கள் எங்குதானில்லை? எழுத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் எதிரெதிர் மதிப்பீடுகளை வைத்திருப்பவர்களின் போலித்தனத்தையும் அதை நியாயப்படுத்தும் வியாக்கியானங்களையும் அவர் அம்பலப்படுத்தும் போது நமக்குள்ளும் அத்தகைய போக்குகள் கூடக்குறைய இருப்பதை ரகசியமாகவேனும் உணர்கிறோம்.

ஆணுருவில் இருக்கும் தனக்குள் மாறுபட்ட பால்நிலைகள் இயங்குவதை உணரும் மூக்குத்தி காசி,  அந்த நிலைமாற்றங்களுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுப்பவராகிறார். அதன்பொருட்டான மகிழ்வையும் இடர்ப்பாடுகளையும் ஒன்றேபோல் எதிர்கொள்ளும் அவர் ஒரு மாற்று பாலினத்தவரை இயல்பாக ஏற்பதில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனத்தடைகளை கேள்விக்குள்ளாக்குகிறார்.   

தொடர்ந்த வாசிப்பும் பயணமும் அரசியல் தொடர்புகளும் சமகால நடப்புகளையும் வரலாற்றையும் பார்க்கும் அவரது கண்ணோட்டத்தை மாற்றியமைக்கின்றன. எல்லாவற்றுக்கும் மவுனமான பார்வையாளராக இருந்துவிடக்கூடாது என்கிற பதைப்பு அவரை போபாலுக்கும் குஜராத்துக்கும் விரட்டுகிறது.  விஷவாயுவால் பாதிக்கப்பட்டு கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நீதி கிட்டாது அல்லலுற்றுக்கிடப்போரை ஒரு குழந்தையாக பாவித்து தன்னையே பாலாக புகட்டும் பேருள்ளம் அவருக்கு வாய்க்கிறது. மதவெறுப்பையும் சகிப்பின்மையினையும் பரப்பி குஜராத்தை கொலைக்களமாக்கியவர்களை பின்தொடர்ந்து பலிகொள்கிறார். அந்தவகையில் இந்நாவல், எழுத்தாளர் எழுத்திற்கும் அப்பால் ஒரு சமூகஉயிரியாக நீடிப்பதற்கென செயல்பட வேண்டிய களங்களை  இனம் காட்டுவதற்காகவே எழுதப்பட்டதாகவும் தோன்றுகிறது. அல்லது இலக்கில் கவனம் குவிக்கப்போவதாக சொல்லிக்கொண்டு சுற்றிட நிகழ்வுகள் மீது பாரமுகமாய் இருந்துவிடக்கூடாது என்று சொல்வதாகும் படுகிறது.

நாவல் என்பதன் கட்டமைப்பு ஏற்கெனவே இறுதிப்படுத்தப்பட்டதல்ல, அப்படியேயாயினும் ஏற்க வேண்டியதுமில்லை என்பது புலியூர் முருகேசனின் பார்வையாக இருக்கிறது. அதனால் அவர் சாத்தியமானவரை நெகிழ்த்தியும் உடைத்தும் இதை எழுதிப் பார்த்திருக்கிறார். மூக்குத்தி காசியை கதை நெடுகிலும் கூட்டிவரும் அவர் கதையை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தொடர் புள்ளிகளினூடே நகர்த்தாமல் துண்டுதுண்டாக வெட்டிப்போட்டு நாமே ஒரு கதையை தொகுத்துப் பார்த்துக்கொள்ளும்படியாக விட்டுவிடுகிறார். இது ஒருவேளை மூக்குத்தி காசிக்கு அருகாக நம்மை பொருத்திக் கொள்வதற்கென விடப்பட்ட இடைவெளியாகவும் இருக்கலாம்.

ததும்பும் தோழமையுடன்,
ஆதவன் தீட்சண்யா
உடுமலை சங்கர் வன்கொலை மீதான தீர்ப்புநாள், 12.12.2017
ஒசூர்



திங்கள், ஏப்ரல் 25

கதிர்காமம் போய்ச் சேராத காவடிகள் - ஆதவன் தீட்சண்யா



மணல்வீடு இலக்கிய வட்டம் 24.04.2014 அன்று சேலத்தில் நடத்திய விமர்சன அரங்கில் சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் குறித்து வாசிக்கப்பட்ட  கட்டுரை

1970 ஆம் வருடத்திய இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில்  தமிழரசு மற்றும் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகள் படுதோல்வியடைந்தன.

உயர் கல்வியில் பின்தங்கிய பிரதேசத்தவருக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதன் பெயரால் இலங்கை அரசு ‘தரப்படுத்துதல்’ திட்டத்தை கொண்டுவந்தது. இலங்கை ஆட்சியாளர்களின் நோக்கம் எதுவாக இருப்பினும், சமூக நீதியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட ஒரு முதலடி இது. அதேவேளையில் வரலாற்றுரீதியாக, குறிப்பாக பிரிட்டிஷார் காலத்திலிருந்தே பிற சாதியினரை ஒடுக்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் கூடுதல் பிரதிநிதித்துவம் பெற்று வந்திருக்கிற யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடியினரது ஏகபோகத்தை பாதிப்பதாகவும் அமைந்தது. அவர்கள் தமக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பை ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான பாதிப்பதாக முன்னிறுத்தினர். பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு பிறபகுதி மாணவர்களை விட தாங்கள் கூடுதல் கட் ஆப் மதிப்பெண் பெற வேண்டிய நிலையை உருவாக்கியுள்ள தரப்படுத்துதலை எதிர்த்த மாணவர் போராட்டம் அங்கு தீவிரமடைந்தது. இது, இடஒதுக்கீட்டை எதிர்த்து இந்தியாவில் உயர் சாதியினர் இன்றளவும் நடத்திவரும் போராட்டத்தோடு பெரிதும் ஒத்துப்போகும் தன்மைகொண்டது. 

1976 மே 15ம் தேதி தமிழர் ஐக்கிய முன்னணியின் மாநாடு வட்டுக்கோட்டையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் மூளை என்று முன்பு வர்ணிக்கப்பட்டவரும் 1960களின் பிற்பகுதியில் அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழர் சுயாட்சிக் கழகத்தை தொடங்கி நடத்தியவருமான வி.நவரத்தினம் என்பவரால் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட தமிழீழம் என்கிற கருத்தாக்கம் உள்வாங்கப் பட்டு வட்டுக்கோட்டை மாநாட்டில்  தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தமிழர் ஐக்கிய முன்னணியின் சார்பில் 1974 செப்டம்பர் 1ம் நாள் காமன்வெல்த் பாராளுமன்றவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மனுவிலேயே இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான தொடக்கநிலைக் கூறுகளை காண முடிந்தது.

ஆட்சிமொழியாக சிங்களத்தை மட்டுமே ஆக்கியது, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் எண்ணக்கையை குறைத்தது, தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்தியது, உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்துவதில் ஏற்பட்ட இடர்ப்பாடுகள்- ஒன்பது பேரின் உயிரிழப்புகள், அவ்வப்போது நடத்தப்பட்டு வந்த இனக்கலவரங்கள் என இலங்கை ஆட்சியாளர்களிடையே சிங்கள பேரினவாதம் திரண்டுவந்தது. அது ஓர் இனம் என்ற வகையில் தமிழர்களுக்குரிய பல்வேறு ஜனநாயக உரிமைகளையும் பண்பாட்டு தனித்துவத்தையும் ஏற்க மறுத்தது. இந்த நிலைமைகளும், தரப்படுத்துதலுக்கு எதிரான வெள்ளாள மேட்டுக்குடியின் கொந்தளிப்பான குமைச்சலும் 1977 ஆம் வருடத்திய பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அமோக வெற்றியைத் தந்தன. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரிகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் கிடக்கையும் இதிலடங்கும். இவ்வெற்றியானது தனிஈழத்திற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு கிடைத்த ஒப்புதலாக முன்னிறுத்தப்பட்டது. தமிழர்கள் நாட்டைத் துண்டாடப் பார்க்கிறார்கள் என்று ஏற்கனவே சிங்களவர்களிடம் முளைவிட்டிருந்த பிரச்சாரம் ஒரு வெறியாக கிளப்பிடப்பட்டது. அவர்களது வெறிக்கு எளிய இலக்காக முதலில் சிக்கியவர்கள் மலையகத்தவர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள்.

யாழ்ப்பாணத்தவர்கள் கேட்கும் தனி ஈழம் இந்த இந்திய வம்சாவளித் தமிழர்களையும் உள்ளடக்கியதில்லை. ஆனாலும் சிங்களவர்கள் மலையகத் தமிழர்கள் மீது கொடிய வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். தமிழீழத்திற்கான ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கும் ராணுவத்துக்கும்/ சிங்களவர்களுக்கும் இடையே எங்கு கலவரம் மூண்டாலும் அதற்கான தண்டனையை இந்திய வம்சாவளித்தமிழர்களுக்கு சிங்களவர்கள் வழங்கினர். அவர்களது வன்முறைக்கு காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரம் துணை நின்றது. பிறந்த வளர்ந்து பாடுபட்டு உருவாக்கிய மலையகத்திலிருந்து வேறெங்காவது தப்பியோடினால் தான் குறைந்தபட்சம் உயிரையாவது தற்காத்துக்கொள்ள முடியும் என்கிற உளவியல் முற்றுகைக்கு இந்த மலையகத் தமிழர்கள் ஆட்பட்டனர். எனவே அவர்களில் சிலர் மலையகத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இடம்பெயரத் தொடங்குகிறார்கள். ஆதிரை நாவல் மிகச் சரியாக இந்த இடத்தில் தொடங்குகிறது. ஆனால் அது தனி ஈழக் கோரிக்கை உருவான இந்த வரலாற்றுப் பின்புலத்திற்குள் நுழையாமல் ( நுழைய வேண்டிய தேவையை இந்த நாவலின் அமைப்பு கோரவுமில்லை) அதற்கான ஆயுதப் போராட்டத்தின் பல்வேறு கட்டங்கள், அவை நடந்த விதம், போரினூடாக மக்களது பாடுகள், ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களினதும் போராளிகளினதும் நிலை என்பது வரையாக நீண்டு முடிகிறது. 

‘ஒண்டரை லட்சம் சனங்களையும் நாற்பதாயிதரம் பொடியன்களையும்’ கொன்று தனிஈழத்திற்கான ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை இலங்கை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்தது. வெறும் எண்களாக சுருக்கிச் சொல்லப்படும் இந்த மக்களை எவ்விதமான துன்பதுயரங்களுக்கு ஆட்படுத்தி இலங்கை அரசாங்கம் கொன்றொழித்தது என்பதை கொல்லப்பட்டவர்களின் சார்பான நிலையிலிருந்து சொல்கிறது ஆதிரை. ஒதியமலையில் ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களில் ஒருவரான நடராசனின் பிணத்தை பார்ப்பதிலிருந்து லெட்சுமணனை தடுத்துவிட முதலில் நினைக்கிற அத்தார் பிறகு வெறியும் வன்மமும்  மேவ ‘அவன் பார்க்க வேணும். இந்தக் கோலத்தை அவன் காண வேணும். தமிழன் எண்ட பெயரைத் துரத்தி வருகிற அழிவையும் பேயாட்டதையும் அவன் அறிய வேணும்...’ என்று பார்க்கவிடுகிறான். இந்த நாவலின் முதன்மை நோக்கமும் கூட அதுதான். நடராசனின் பிணத்தை பார்க்கச் செய்வதனால் லெட்சுமணனிடம் எதிர்பார்க்கப்படும் மனமாற்றத்தை தனது வாசகர்களிடமும் எதிர்பார்க்கிறது நாவல். அதற்காகவே அது ஒவ்வொரு தனிச்சாவுகளையும் கூட்டுக்கொலைகளையும் கொப்பளிக்கும் ரத்தத்தின் சூட்டோடும் தெறித்த சதைத்துண்டத்தின் பிசுபிசுப்போடும் நமக்கு காட்டத் துடிக்கிறது.

தனி ஈழக் கோரிக்கை, அதற்கான ஆயுதம் தாங்கியப் போராட்டம், போராட்டத்தில் ஆயுதம் ஏந்திய பல்வேறு குழுக்கள், குழுக்களுக்கிடையே பகை, குழுக்களுக்குள்ளேயே நிலவிய கருத்து மாறுபாடுகள், விசுவாசிகள், துரோகிகள், பிற போராளிக்குழுக்கள் பலவற்றையும் அழித்து விடுதலைப்புலிகள் ஏகத்துவம் பெறுதல், புலிகளின் குணநலன்கள், ஆயுதபலம், சாகசங்கள், தியாகங்கள், புலிகள் நடத்திய தனி அரசாங்கத்தின் கீழ் மக்களது அன்றாட வாழ்க்கை, பேச்சுவார்த்தைகள், சமாதான உடன்படிக்கைகள், உடன்படிக்கை என்று சொல்லிக்கொண்டே நடந்த மோதல்களும் மீறல்களும், இந்தப் போராட்டத்தையும் போராளிக்குழுக்களையும் குறித்து சமூகத்தின் வெவ்வேறு நிலைகளில் இருந்த வெகுமக்களின் கருத்து ஆகியவற்றை வகைமாதிரியான கதாபாத்திரங்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட நிகழ்வுகளின் வழியே நாவல் முன்வைக்கிறது.

தன் இருப்பைக் காட்டிக் கொண்டேயிருக்கும் சாதியம், பின்தங்கியப் பகுதியான வன்னிக்கு இடம் பெயர்ந்த நிலையைக்கூட குறைந்த கட் அப் மதிப்பெண்ணில் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முனையும் யாழ்ப்பாண வெள்ளாளத்துவ மனம்,  இயக்கத்தில் சேர்ந்துவிடும் முன்பாக அல்லது இயக்கத்தவரால் பிடித்துச் செல்லப்படுவதற்கு முன்பாக மொத்தச் சொத்தையும் அழித்தாவது தன் பிள்ளைகளை  வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல வைக்கும் மேட்டுக்குடியினரின் தந்திரம், கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவிப்பதற்காக செய்விக்கப்படும் இளம் வயது திருமணங்கள், பொய்க் கல்யாணம் செய்வித்து காட்டப்படும் போலி ஜோடிகள், பொய்க்கல்யாணம்தான் என்றாலும் அவனோடு படுத்திருக்க மாட்டாளா என்று பெண்ணை சந்தேகிக்கும் ஆண்வீட்டார், முஸ்லிம்களுடன் ஏற்பட்ட திருகல் நிலை- கட்டாய வெளியேற்றம், மலையகத் தமிழர்கள் குறித்த கீழான பார்வை - இப்படியாக  போர்ச்சூழலிலும் வெளிப்படும் மனித இழிவுகளை கவனத்தோடு பதிவு செய்கிறது ஆதிரை. அதேவேளையில் இவ்வளவு ஏறுமாறுகளுக்கும் இடையில் சனங்கள் ஒன்றையொன்று அனுசரித்து உயிர்வாழப் பதைக்கும் மனோநிலை வெளிப்படும் தருணங்களையும் கவனப்படுத்துகிறது.  தாக்குதலில் இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட அவகாசம் அற்றவர்களாக ஓடிய அவர்கள் ஒருகட்டத்தில் காயமடைந்தவர்களையும்கூட அப்படியே விட்டுவிட்டு ஓடும் அவலநிலைக்கு ஆளாவது குறித்த உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பிணங்களைத் கைவிடத் தொடங்கியவர்கள் கடைசியில் மனிதர்களையும் கைவிட்டு அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடு என்கிற நிலைக்கு ஆளான போதும் தாங்கள் வளர்த்த ஆடுமாடுகள், கோழிகள், மரம் செடிகொடிகள், குலதெய்வம் என்று எதுவொன்றைப் பற்றிய கவலையையும் அக்கறையையும் அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். 2009 அக்டோபரில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்கையில்  நெடுஞ்சாலையின் மருங்குகளில் ஆயிரக்கணக்கான மாடுகள் அநாதையாய் திரிந்ததைக் கண்ட போது எனக்கேற்பட்ட துக்கம் சொல்லி மாளாதது. இடம் பெயர்ந்து ஓடும் பதைப்பிலும் பெண்ணொருத்தி ‘விதியிருந்தால் மறுபடியும் சந்திப்போம்’ என்று தான் ஆசையாய் வளர்த்த மாடுகளை அவிழ்த்து காட்டுக்குள் ஓட்டிவிடும் துயரத்தை என்னவென்ற சொல்வது? தனக்கொரு குழந்தையில்லையே என்று காலம் முழுவதும் தீராக்கவலையில் உருகிக்கிடந்த சந்திரா, போரினால் குழந்தைகளுக்கு நேரும் இன்னல்களையும் உளவியல் சிதைவுகளையும் காணப் பொறுக்காமல் ‘என்ர வயித்தில்  உயிரொண்டும் சனிக்காதிருந்ததுக்கு நன்றியப்பா..’ என்று சொல்லும் நிலையைத்தான் போர் உருவாக்கியதா என்கிற கேள்வியையும் நாவல் எழுப்பிப் போகிறது.

கைக்கு சிக்கிய தமிழ் இளைஞர்களை பிடித்துவந்து சித்ரவதை செய்கிற ராணுவத்தினர் கடைசியில் புலிச்சீருடையை அணிவித்து சுட்டுக்கொல்வது ( வீரப்பனைப் பிடிப்பதாக காட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இப்படி பழங்குடி இளைஞர்களை தேவாரம் சுட்டுகொன்றதை சோளகர் தொட்டியில் காணலாம்),   இசை நிலா ஒளிநிலா என்று பெயர் வைத்திருப்பதைக்கூட உன்னிப்பாக கவனித்து ஒரு ராணுவத்தான் கேள்வியெழுப்பும் போது பெயரை மாற்றி விடுகிறோம் என்று பதைப்போடு தாய் சொல்வது, வீட்டில் தனக்கு வைத்த பெயரே தூயவன் தான், ஆனால் ஆமிக்காரன் நம்பமறுக்கிறான் என்று ஒருவன் பகடியாக சொல்வது, யாருடைய காயத்திலிருந்தோ பெயர்ந்து விழுந்திருந்த ரத்தம் தோய்ந்த பஞ்சை எடுத்து வெடியோசை கேட்காமலிருக்க குழந்தையின் காதில் அடைப்பது என்று சிறுசிறு காட்சிகள் வழியே நிலைமையின் தீவிரத்தை நம்மால் உணரமுடிகிறது. 

நடராசனின் பிணத்தை மூன்றாம் மனிதனாக ஓடிப்போய் பார்க்கிறவன், இந்திய அமைதிப் படையினரால் (?) கொல்லப்பட்ட சிங்கமலையின் பிணத்தை அவரது மகனென்ற முறையில் பார்க்கிறவன், தாய்தகப்பன் போல காத்துவளர்த்த சந்திரா-அத்தார் தம்பதியரிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறிப் போய் இயக்கத்தில் சேர்ந்துவிட்டவன், இறுதியில் ராணுவத்திடம் பிடிபட்டு விசாரணைக்கூடத்தில் சித்ரவதைக்கு ஆட்பட்ட போதும்  தனக்கொன்றும் தெரியாது என்று சாதிக்கிறவன் என வெவ்வேறு நிலைகளில் காட்டப்படும் லெட்சுமணன்- குறிப்பிட்ட காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் உளவியலில் ஏற்பட்டு வந்த மாற்றங்களின் குறியீடாக தெரிகிறான். அதாவது ஆயுதம் தாங்கிய இரு தரப்பாருக்கு இடையிலானதாக போரில் பாவம் இந்த ஆள் மாட்டிக்கொண்டாரே என்று விலகியிருந்து பரிதாபப்படுவது, போரினால் தானே பாதிக்கப்படும் பொழுது ஆவேசம் கொள்வது, பரிதாபம் அல்லது கோபத்தை விடவும் நேரடியாக தானே களமிறங்குவது, அதற்கான விளைவைச் சந்திப்பது என்கிற நிலைகளை அங்கு தமிழ்ச்சமூகம் எட்டியதன் குறியீடு. ( ‘தோட்டக்காட்டானுக்கு முல்லைத்தீவில் என்ன வேலை?’ என்கிற கேள்விக்கும், போரின் முடிவில் ராணுவத்திடம் பிடிபட்டவர்களில் கணிசமான தொகையில் மலையகத் தமிழர்களும் இடம் பெற்றது எங்ஙனம் என்பதற்கும் இவனது குடும்பத்தின் வழியாக விடை கிடைக்கிறது.) 

அமைதிப்படை என்கிற பெயரில் இந்திய ராணுவம் நிகழ்த்திய அத்துமீறல்கள், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் யாவும் நம்மை அவமானத்தில் ஆழ்த்துகின்றன. கன்டோன்மெண்ட் என்கிற பெயரிலான ராணுவ முகாமிடங்களில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 10 முதல் 15 பாலியல் தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக நியமித்து வல்லுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தின் எச்சில்பால் குடித்து வளர்ந்த இந்திய ராணுவம் இத்தகைய மனிதப்பண்பற்ற செயல்களை பிதுரார்ஜிதமாக பெற்றிருக்கிறது. நானும் இந்தியன் தான் என்று கதறுகிற எத்தனையோ சிங்கமலைகளை அது கொன்றிருக்கிறது. ‘பெத்தத் தாயைக் கெடுக்கச் சொல்லியாடா உங்களுக்குச் சொல்லித் தந்தாங்கள்... இத்திமரத்துக்காரி வைச்சிருந்து பழி தீர்ப்பாளடா’ என்று சபித்தவாறே இடதுமார்பில் கத்தியை பாய்த்துக் கொண்டு செத்துப்போன எத்தனையோ தாய்மார்களின் பிணங்களை பதக்கங்களாக குத்திக் கொண்டிருக்கிற பலர் அதில் இருக்கிறார்கள்.

ஆயுதக்குழுக்களை தனிமைப்படுத்துவதற்காக வெகுமக்கள் மீது ராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட கண்காணிப்புகளும் சித்ரவதைகளும் மனிதகுலம் இதுவரை காணாத கொடூரங்களின் பூமியாக தமிழர் நிலத்தை மாற்றிவிட்டது. போரின் முடிவில் பிடிபட்ட போராளிகளை இலங்கை அரசும் ராணுவமும் நடத்திய விதம் சர்வதேச கண்டனங்களைப் பெறுமளவுக்கு கீழ்த்தரமானவை, மனிதவிரோதமானவை. போருக்குப் பிந்தைய புனர்வாழ்வில் பங்கெடுப்பதாக சொல்லிக் கொண்டு வந்துள்ள தன்னார்வ அமைப்புகள், தனவந்தர்கள், கனவான்கள் ஆகியோரது செயல்பாடுகள் மேனாமினுக்கித்தனமானவை என்பதையும் யாருக்காக போராடினார்களோ அவர்கள் முன்னாள் போராளிகளை நடத்தும் விதம் குறித்த விமர்சனங்கள் நாவலுக்குள் பொருந்தி நிற்கும் வண்ணம் முன்வைக்கப்படுகிறது. முன்னாள் போராளி என்பதாலேயே  வெள்ளையனை காவலாளி வேலையில் வைத்துக்கொள்வதற்கு யாழ்ப்பாணத்தவர் மறுத்துவிடுவதும், கடைசியில் அவன் புதைக்கப்பட்ட மிதிவெடிகளை தோண்டியெடுத்து செயலிழக்கச் செய்யும் வேலையில் ஒரு என்.ஜி.ஓவிடம் சேர்வதும்,  முன்னாள் போராளிகளின் கைவிடப்பட்ட நிலையைக் காட்டுவதற்கு போதுமானதாயிருக்கிறது.

தான் பிறந்த சிற்றூரைத் தவிர வேறு திசைகளை அறியாத மக்களின் வாழ்வையும் சாவையும் எங்கோ இருக்கிற அமெரிக்காவும் பிரிட்டனும் சீனாவும் இந்தியாவும்  தீர்மானிக்கும் படியாய் விட்டுவிட்டு இயக்கத்தலைமை முள்ளிவாய்க்காலில் ஆயுதங்களை மௌனிக்கச் செய்துவிட்டது. கடைசி நேரத்தில் கட்டாய ஆள் சேர்ப்பு, குழந்தைகளைக் கூட பிடித்துப் போய் ஆயுதம் தரிக்க வைத்தது, ராணுவத்திடம் பிடிபடும் தருவாயில்கூட வெகுமக்களை விடுவிக்காமல் ஆயுதமுனையில் கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஆகியவற்றின் மூலம் இவ்வளவு கூடிய உயிரிழப்புகளுக்கும் சேதாரங்களுக்கும் இயக்கமும்கூட காரணமாக இருந்துவிட்டது என்று இதற்கு முன்பாக சிலர் முன்வைத்த விமர்சனங்களை இந்த நாவலும் வழிமொழிகிறது. ‘காய்ந்த கட்டாந்தரைக்கு தண்ணீர் பாய்ச்சியது’ போலாகிவிட்டதோ என்கிற கேள்வியை எழுப்பிக் கொண்டே, இத்தனைக்குப் பிறகும் இயக்கத்தை ஆதரிப்பதற்குரிய நியாயங்கள் தனக்கிருப்பதாக நாவலுக்குள்ளிருந்து சயந்தன் வாதிடுகிறார். இயக்கத்தின் பிழைகளை போராளிகளின் தியாகங்களையும் வெகுமக்களின் துயரங்களையும் காட்டி நேர்செய்வதற்கான முயற்சியோ என்று எண்ணும் வகையிலும் சில வாதங்களை இந்நாவல் முன்வைக்கிறது. நாவலில் ஓரிடத்தில் வருவது போல வரலாறென்பது யார் சொல்கிறாரோ அவரது நோக்கங்களையும் உலகக் கண்ணோட்டத்தையும் சார்ந்ததுதானே. வரலாற மட்டுமல்ல எதுவொன்றும் அவரவர் மனச்சாய்வுகளக்கு இயைந்தே எழுதவும் வாசிக்கவும் படுகிறது.

***
ஓரிடத்திலும் நிலைகொண்டு தலைசாய்க்கவொட்டாமல் துரத்தும் சாவுக்கு அஞ்சி ஓடிச் சலித்த மக்கள் இயலாமையின் முற்றிய கட்டத்தில் செத்தொழிந்தால்கூட பரவாயில்லை என்கிற மனநிலையை எய்திய போது போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உயிரோடிக்கிறோம் என்பதைத் தவிர வாழ்வதற்கு வேறு ஆதாரங்களே இன்றி கைவிடப்பட்ட அம்மக்கள் சோதிமலர் சொல்வது போல ‘எங்கட வாழ்க்கையை நாங்கள்தான் உருவாக்க வேணும்’ என்று நிற்கிறார்கள். வளர்பிறையின் ஜொலிக்கும் நட்சத்திரத்தின் குறியீடாக ஆதிரை என்று பெயர் சூட்டப்பட்டாலும் அந்தப் பாத்திரம் திடுமென வந்து தலைப்பாக மாறிவிட்டதேயொழிய அதற்குரிய ஆளுமையோடு வளராமல் முடிந்துவிட்டது. அல்லது தலைப்பிடப்படுமளவுக்கு ஆதிரை பற்றி எழுதப்படவில்லை. ஒருவேளை நாவலில் இடம் பெற்றுள்ள எல்லா பெண்களின் கூட்டுப்பெயராக அது உருவகித்துக் கொள்ளப்பட வேண்டுமாயிருப்பின் அதற்குரிய அழுத்தத்துடன் எழுதப்பட்டிருக்க வேண்டும். 

***
ஈழத்திற்குள்ளேயே இவ்வளவு காலமும் இருந்து எல்லாவிதத் துயரங்களையும் தாங்கிக் கழித்த மக்களுக்கு இந்த நாவலை வாசிப்பதற்கான மனநிலை வாய்க்குமா? தாங்கள் கடந்துவந்த துயரங்களை மீண்டும் நினைவூட்டுதானது தங்கள் மீது அவை மறுபடியும் நிகழ்த்தப்படுவதற்கு ஒப்பாகும் என்று அவர்கள் கருதக்கூடும். ஆனால் புலம் பெயர்ந்து போய் போரின் கொடுமையிலிருந்து ஓரளவேனும் தப்பித்துவிட்டவர்கள், ‘வேறு கண்ணீர் தேடும்’ ஊடகக்காரர்கள், போரின் துயரங்களை கச்சாப்பொருளாகக் கொண்டு கதை எழுதக் கிளம்பியவர்கள் அல்லது கருத்தரங்குகளில் கொட்டி முழக்கி கண்ணீரையும் கைத்தட்டலையும் பெறக்கூடியவர்கள், தெருச்சண்டையில் பங்கெடுத்த அனுபவம் கூட இல்லாவிடினும் தேசிய விடுதலைப் போரை நடத்தப்போவதாக சவடாலடிக்கிற தமிழகத்தவர்கள் போன்றோருக்கு இந்த நாவல் மிகுந்த உவப்பைத் தரலாம்.  ஒருவேளை இவர்களை கருத்தில் கொண்டே இந்த நாவல் விரித்து விரித்து இவ்வளவு பெரிதாக எழுதப்பட்டிருக்கிறதா?  

திகுதிகுவெனக் கொதிக்கும் வெக்கையொடு சொல்வதற்குண்டான இக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்தி அலுப்பூட்டக்கூடியவையாக சயந்தனின் வர்ணனைகளும் விவரிப்புகளும் உள்ளன. கதையின் மையப்பொருளுக்கு தேவைப்படுகின்ற விவரங்களுக்குப் பதிலாக தேவையற்ற விவரங்கள் பத்திபத்தியாக தகவல் குவிப்பாக நிரம்பிக் கிடக்கின்றன. படிக்காமலே புரட்டி கடந்துவிடலாமா என்றும்கூட சில இடங்களில் தோன்றியது. துயரம் மிகுந்த காட்சிகளை சுரீரென விரித்துச் செல்ல ‘கிராமத்தை இழுத்து கடலின் அடியில் அமிழ்த்தியதைப் போல’, ‘றப்பர் போல நிலம் அதிர்ந்து தணிந்தது’, ‘காலொடிந்த இரவு..’ என்றெல்லாம் எழுதமுடிந்த சயந்தன், ஒடுங்கும் சுபாவமுள்ள, பெண் சகவாசத்தை அறிந்தேயிராதவனாக காட்டும் லெட்சுமணன் ‘காமத்தின் உச்சத்தை தொட்டதைப் போல’ என்று கூறுவதாக எழுதுகிறார். இப்படியான பொருத்தமற்ற பல ஒப்பீடுகள் நாவல் முழுக்கவும் விரவிக் கிடக்கின்றன. ஊளைச்சதையை கழித்து உடம்பைக் கண்டுபிடிப்பது போன்று தான் இந்த தடித்தப் புத்தகத்திலிருந்து உள்ளிழைந்து நிற்கும் கதையை நாம் வருவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை இந்த பாதிப்பு, நாவலென்றால் தடிமனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற ‘தமிழினி மேனியாவால்’ ஏற்பட்டிருக்குமாயின் அதிலிருந்து சயந்தன் விடுபட வேண்டுமென்பது எனது விருப்பம்.  ஆறாவடுவை எழுதிய சயந்தனுக்கு அது சாத்தியம்தான்.





வியாழன், டிசம்பர் 11

மீசை என்பது வெறும் மயிர் - ஆதவன் தீட்சண்யா




நாடு திரும்பா எழுத்தாளர் வரிசை: நந்தஜோதி பீம்தாஸ்

மீசை என்பது வெறும் மயிர்
சந்திப்பு/ நேர்காணல்/ நாவல் சுருக்கம்
  - ஆதவன் தீட்சண்யா


 பக்கம்: 176, விலை: ரூ. 130 /-
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை - 600 083
தொலைபேசி : 044 24896979

‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலுக்கான முதற் பதிப்புரை

உலகெங்கும் மக்கள் தமது சொந்த வாழிடங்களை விட்டு பெயர்ந்தோடிக் கொண்டிருக்கிறார்கள். ஊர், நாடு, கண்டம் என்று அவர்கள் நீங்கிவருகிற நிலப்பரப்புகளின் பரந்த கடல்களையும் நெடிய மலைகளையும் பனி, மழை, வெயிலுக்கூடாக அவர்கள் இரவும் பகலுமாய் நடந்தே கடக்கின்றனர். பாலைவனங்களில் பொசுங்கிய பாதங்களில் கசியும் ரத்தம் கொண்டு அவர்கள் புதிய பெருவழிகளை வரைந்தபடி விரைகிறார்கள். உடலும் மனமும் சோர்ந்து வீழும் இடங்களில் அபயம் கேட்டு இரைஞ்சும் அவலம் இன்று குடிமைச் சமூகத்தின் பெருந்துயராகியுள்ளது.

பிறந்த மண்விட்டு குடிமக்கள் அகலும் சமூகச்சூழல் நிலவுவதை ஒரு அவமானமாகக் கருதாத அரசுகள் இன்றைய நாகரீகச் சமூகத்திற்கு ஏற்புடையதல்ல. மனிதகுலம் உயர்த்திப் பிடிக்கும் மாண்புகளை வெட்டிச்சாய்க்க வந்த கோடாரிகளென இவ்வரசுகள் நீடிக்கும் ஒவ்வொரு கணமும் உலகம் கடும் அச்சுறுத்தலைச் சந்திக்க வேண்டியுள்ளது. எந்தக் கூருணர்வும் இல்லாதவராலும்கூட வெறுக்கத்தக்கதாய் இழிவுற்றிருக்கும் இச்சமூகங்களில் சுயமரியாதையுடன் வாழவிரும்பும் ஒருவர் எதிர் கொள்ளும் இடர்ப்பாடுகள் அச்சமூட்டுகின்றன.

சகமனிதரோடு இணங்கி வாழ்வது குறித்த பன்னாட்டு பிரகடனங்களிலும் கூட்டறிக்கைகளிலும் கையொப்பமிட ஆர்வம் காட்டுகிற பலநாடுகள், அவற்றை தமது சொந்த மண்ணில் செயல் படுத்திட விருப்புறுதி கொண்டிருப்பதில்லை என்கிற கடும் குற்றச் சாட்டுகள் வெளிப்படையாகக் கிளம்பியுள்ளன. மொழி, இன, நிற, பாலின, பிரதேசப் பாகுபாடுகளுக்கு முடிவுகட்டும் தமது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளும் அரசுகள், இப்பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் மக்கள்திரளை அடக்கியொடுக்குவதன் மூலம் பிரச்னையின் ஒரு தரப்பாக மாறிவிடுகின்றன. இப்போக்கின் ஆகக்கேவலமான உதாரணம் இலங்கை என்றால் அதை விடவும்  தாழ்ந்திருக்கிறது இந்தியா.

வேறு கலாச்சாரம் கொண்டோர் அண்டை அயலாராக வசிப்பதை விரும்பாதவர்கள் பற்றிய பன்னாட்டு கணக்கெடுப்பு ஒன்றில் ஜோர்டானியருக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தை இந்தியர்கள் பெற்றிருக்கிறார்கள். அந்தளவுக்கு மற்றமை மீதான வெறுப்பையும்   சகிப்பின்மையையும் இந்தியர் கடைபிடிப்பதற்கான காரணம் அங்குள்ள சாதியமே. ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிற இந்தியாவின் சாதி முறையானது, அறியப்பட்டுள்ள பாகுபாடுகளின் வடிவங்களுக்குள் அடங்காத ஒன்றாக இருந்து அச்சுறுத்துகிறது. மொழி, இன, நிற, பாலின, பிரதேசப் பாகுபாடுகளுக்கு எவ்விதத்திலும் குறையாத இந்தச் சாதிப் பாகுபாடு மற்றும் அதன்பேரிலான கொடிய ஒடுக்கு முறை குறித்து சர்வதேச சமூகம் போதுமான அளவில் தலையீடு செய்யவில்லை என்பதே உண்மை.  இப்பாகுபாட்டை சர்வதேச அரங்கில் ஒரு விவாதப்பொருளாக முன்னிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடிப்பதில் அரசும் சாதியத்தின் ஆதரவாளர்களும் இணைந்து நிற்கும் தருணங்களே அதிகம்.

இனவெறிக்கெதிரான டர்பன் மாநாட்டுத் தீர்மானத்தில் சாதியைப்பற்றி ஒருவார்த்தையும் இடம்பெறாமல் தடுப்பதில் வெற்றியடைந்துவிட்ட இறுமாப்பிலிருக்கும் இந்தியாவின் ஆட்சியாளர்களது  நிம்மதியைக் குலைப்பவராக இருக்கிறார்  நந்தஜோதி பீம்தாஸ். சாதி இழிவுக்காளாகி அதன் காரணமாக தன் பதின்ம வயதில் பிறந்தமண்ணை விட்டு வெளியேறிய அவர் நாட்டை விட்டும் பின் அகன்றார். மீன்பிடி கப்பலொன்றின் சமையற்கட்டில் சிற்றாளாகச் சேர்ந்து பல நாடுகளுக்கும் சுற்றியலைந்த அவர் தனது பின்னிளமைக் காலத்தில் புனைவிலக்கியம் எழுதத்தொடங்கியவர். இந்தியாவுக்குள்ளிருந்து பட்ட அவமானங்களும் வெளியே நின்று பார்ப்பதால் கிடைக்கிற முழுப்பரிமாணமும் அவரது எழுத்தின் தனித்துவமாக இருக்கின்றன.

வல்லரசுக் கனவில் மிதக்கும் ஒருநாடு தன் சொந்தமக்களில் ஐந்திலொரு பங்கினரை என்னவாக நடத்துகிறது என்று குற்றப் பத்திரிகை தயாரிக்க இவரது எழுத்துக்களையே முதன்மை ஆதாரங்களாகக் கொள்ளலாம். நாடுகளுக்கிடையிலான போர்களில் கொல்லப் படுகிற அப்பாவி மக்களைக்காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையிலான தன் சொந்த மக்களை அன்றாடம்  கொன்று குவிக்கிற இந்தியாவின் அஹிம்சாவாதம் என்கிற போலித்தனம் மீதான கண்டனமாக விரியும் இவரது எழுத்துகள் மனிதவுரிமைக்கான போராட்டத்திற்கு உந்துவிசையாக இருக்கும் என நம்புகிறோம். தலைக்கு விலைவைத்து கொல்லப்பட்ட பௌத்தர்களின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டதால் கிடைத்திருக்கும் அஹிம்சை வேடத்தைக் கலைத்து இந்தியாவின் சுயரூபத்தை வெளிக்கொணரும் கடப்பாடு கொண்ட அவரது எழுத்துகள், இலக்கியத்தின் நோக்கம்தான் என்ன என்கிற கேள்விக்கு தகுமானமிக்க பதிலாகவும் விளங்குகின்றன.

நாடு திரும்பா எழுத்தாளர் வரிசை என்ற பொதுத் தலைப்பின் கீழ் புலம்பெயர் எழுத்தாளர்கள் பலரது ஆக்கங்களை வெளிக்கொணரும் எமது திட்டம் திரு.நந்தஜோதி பீம்தாஸ் அவர்களிடமிருந்து தொடங்குவதைப் பெருமையாகக் கருதுகிறோம். பீம்தாஸின் நூல்களை வெளியிட்டுவரும் ஈஜின் நிலவறை நூலகத்தின் வழிகாட்டுதலோடு, அவரது வேறுபல நூல்களையும் பதிப்பிக்கவிருக்கும் எமக்கு வாசகர்கள் துணைநிற்பார்கள் என நம்புகிறோம்.

- ஃப்யூமி கெஃப்ளர்
வெளியீட்டுப் பிரிவுச் செயலாளர், “Otherside”
                                                                    

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...