புலியூர் முருகேசனின் மூக்குத்தி காசி நாவலுக்கு
‘நம்பிக்கை தரும்
விதமாக வளரும் அடுத்தத் தலைமுறை இளம் எழுத்தாளர் என யாரை அடையாளம் காட்டுகிறீர்கள்
என்று மூத்த எழுத்தாளர் ஒருவரிடம் கேட்கப்பட்டதாம்.
அதற்கு அவரால் பரிந்துரைக்கப்பட்ட, வளரும் இளம் தலைமுறை எழுத்தாளரோ அப்போதே அறுபது வயதை தொட்டவராயிருந்தாராம்.
சரி, அந்த ‘இளம்’ தலைமுறை எழுத்தாளர் அந்தளவுக்கு எழுதிக்
குவித்தவரா / கிழித்தவரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பின் எப்படி இந்தப் பரிந்துரை?
இவ்வளவு பேர் எழுதிக்கொண்டிருக்கும் தமிழிலக்கியக்களத்தில் அவர் கண்ணுக்கு எப்படி இவர்
மட்டுமே சட்டெனத் தெரிந்தார்? இருவரும் ஒரே சாதியினர் என்பதற்கும் அப்பால் வேறொரு காரணமும்
இதற்குள் இல்லை என்று சொன்னால் வலிந்து காரணம் கற்பிப்பதாக நம்மீதே பழிவிழும். இங்கு
பட்டியல்கள் பரிந்துரைகள் பாராட்டுகள் விருதுகள் விமர்சனங்கள் ஆகியவற்றை தீர்மானிப்பதில்
சாதியச் சாய்மானம் பெரும்பங்கு வகிக்கிறது என்பதற்கான ஒருசோற்றுப் பதம் இது. எழுத்தாளர்,
பதிப்பாளர், வாசகர், விமர்சகர் ஆகியோரை இணைப்பதாக படைப்பொருமை தான் இருக்க வேண்டுமேயன்றி
வேறு அம்சங்கள் அல்ல. புலியூர் முருகேசனின்
இந்த நாவல் பற்றி இங்கு நான் எழுதவந்ததும் அதன் பொருட்டே.
மூக்குத்தி காசி ஒரு டீ மாஸ்டர். உடனே நீங்கள் அவரை ஓ.பி.எஸ் அல்லது மோடியுடன்
தொடர்புபடுத்தி வேறுவிதமான அபிப்பிராயங்களுக்கு சென்றுவிட வேண்டியதில்லை. அவர் அதிகாரத்தை கைப்பற்ற
இந்த எளிய தோற்றத்தையும் பயன்படுத்தும் தந்திரக்காரரல்ல. மூக்குத்தி காசி ஒரு தேர்ந்த இலக்கிய வாசகர். அதனொரு
பகுதியாகவோ நீட்சியாகவோ அவ்வப்போது எழுதுகிறவரும்கூட. சமகாலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்களோடு
நட்பைப் பேணுவதிலும் அவர்களை போஷிப்பதிலும் தனது சம்பாத்தியம் முழுவதையும் முழுவிருப்பத்தோடு
இழக்கக் கூடியவர். இலக்கியம் சார்ந்து இப்படியான உதாரகுணத்துடன் திகழும் ஒருவரை இளிச்சவாயன்
என்றெண்ணி சுரண்டுகிற எழுத்தாளர்கள் எங்குதானில்லை? எழுத்திலும் தனிப்பட்ட வாழ்விலும்
எதிரெதிர் மதிப்பீடுகளை வைத்திருப்பவர்களின் போலித்தனத்தையும் அதை நியாயப்படுத்தும்
வியாக்கியானங்களையும் அவர் அம்பலப்படுத்தும் போது நமக்குள்ளும் அத்தகைய போக்குகள் கூடக்குறைய
இருப்பதை ரகசியமாகவேனும் உணர்கிறோம்.
ஆணுருவில் இருக்கும் தனக்குள் மாறுபட்ட
பால்நிலைகள் இயங்குவதை உணரும் மூக்குத்தி காசி,
அந்த நிலைமாற்றங்களுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுப்பவராகிறார். அதன்பொருட்டான
மகிழ்வையும் இடர்ப்பாடுகளையும் ஒன்றேபோல் எதிர்கொள்ளும் அவர் ஒரு மாற்று பாலினத்தவரை
இயல்பாக ஏற்பதில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனத்தடைகளை கேள்விக்குள்ளாக்குகிறார்.
தொடர்ந்த வாசிப்பும் பயணமும் அரசியல்
தொடர்புகளும் சமகால நடப்புகளையும் வரலாற்றையும் பார்க்கும் அவரது கண்ணோட்டத்தை மாற்றியமைக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மவுனமான பார்வையாளராக இருந்துவிடக்கூடாது என்கிற பதைப்பு அவரை போபாலுக்கும்
குஜராத்துக்கும் விரட்டுகிறது. விஷவாயுவால்
பாதிக்கப்பட்டு கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நீதி கிட்டாது அல்லலுற்றுக்கிடப்போரை
ஒரு குழந்தையாக பாவித்து தன்னையே பாலாக புகட்டும் பேருள்ளம் அவருக்கு வாய்க்கிறது.
மதவெறுப்பையும் சகிப்பின்மையினையும் பரப்பி குஜராத்தை கொலைக்களமாக்கியவர்களை பின்தொடர்ந்து
பலிகொள்கிறார். அந்தவகையில் இந்நாவல், எழுத்தாளர் எழுத்திற்கும் அப்பால் ஒரு சமூகஉயிரியாக
நீடிப்பதற்கென செயல்பட வேண்டிய களங்களை இனம்
காட்டுவதற்காகவே எழுதப்பட்டதாகவும் தோன்றுகிறது. அல்லது இலக்கில் கவனம் குவிக்கப்போவதாக
சொல்லிக்கொண்டு சுற்றிட நிகழ்வுகள் மீது பாரமுகமாய் இருந்துவிடக்கூடாது என்று சொல்வதாகும்
படுகிறது.
நாவல் என்பதன் கட்டமைப்பு ஏற்கெனவே இறுதிப்படுத்தப்பட்டதல்ல,
அப்படியேயாயினும் ஏற்க வேண்டியதுமில்லை என்பது புலியூர் முருகேசனின் பார்வையாக இருக்கிறது.
அதனால் அவர் சாத்தியமானவரை நெகிழ்த்தியும் உடைத்தும் இதை எழுதிப் பார்த்திருக்கிறார்.
மூக்குத்தி காசியை கதை நெடுகிலும் கூட்டிவரும் அவர் கதையை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு
தொடர் புள்ளிகளினூடே நகர்த்தாமல் துண்டுதுண்டாக வெட்டிப்போட்டு நாமே ஒரு கதையை தொகுத்துப்
பார்த்துக்கொள்ளும்படியாக விட்டுவிடுகிறார். இது ஒருவேளை மூக்குத்தி காசிக்கு அருகாக
நம்மை பொருத்திக் கொள்வதற்கென விடப்பட்ட இடைவெளியாகவும் இருக்கலாம்.
ததும்பும் தோழமையுடன்,
ஆதவன் தீட்சண்யா
உடுமலை சங்கர் வன்கொலை மீதான தீர்ப்புநாள்,
12.12.2017
ஒசூர்
அருமை
பதிலளிநீக்கு