நிலத்தை உழும் தலையாய வேலை தடைபட்டுவிடக்கூடாதல்லவா? - ஆதவன் தீட்சண்யாஎஞ்சிய சொல்- முன்னுரைகளும் விமர்சனங்களும் 
சந்தியா பதிப்பகம் இன்று வெளியிட்டுள்ள எனது நூல்
முகப்போவியம்: கார்த்தி

ஒருவரது நூலுக்கு மற்றவரது முன்னுரை எந்தளவுக்கு அவசியம் என்று உள்ளறுக்கும் கேள்வியுடனேயே கடந்த பத்தாண்டுகளாக நண்பர்களது நூல்கள் சிலவற்றுக்கு நான் எழுதி வந்துள்ள முன்னுரைகளே இந்நூலின் முதற்பகுதி. எனது முன்னுரையால் அந்த நூலுக்கோ அந்த எழுத்தாளருக்கோ வாய்த்த புதுநன்மைகள் என்னென்ன என்று என்னால் துல்லியமாக உணர முடியவில்லை. அவர்களும் சொல்லிக்கொண்டதில்லை. ஆனாலும் வருடத்திற்கு ஒன்றிரண்டு நூல்களுக்கு எழுதுவதும், ஐந்தாறு நூல்களுக்கு எழுத மறுப்பதும் நின்றபாடில்லை. 

எழுதக் கொடுத்துவிட்டார்களே என்பதற்காக கூடக்குறைய எதுவும் கூறிவிட வேண்டியதில்லை என்று நானாக ஒரு வரம்புக்குள் நின்று எழுதி வந்திருக்கிறேன். நூல் ஒரு தினுசில் இருக்க, நானொரு பாங்கில் எதையேனும் இட்டுக்கட்டி முன்னுரையாக எழுதி வாசகர்களுக்கு தேவையற்ற எதிர்பார்ப்பை உருவாக்கிவிடக்கூடாது என்பதும் கவனத்திலிருந்தது. ஒருவேளை முன்னுரை அவசியம்தான் என்கிற பட்சத்தில் அது, வாசகரை ஒரு முன்தீர்மானத்திற்குள் தள்ளிவிடுவதாக அல்லாமல், தன் சொந்தக்கண்ணால் வாசித்து அவர் சுயமாக ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்வதற்கு ஒத்தாசை என்கிற அளவில் மட்டுமே இருந்துவிட வேண்டும் என்கிற தன்னொழுங்கை முடிந்தமட்டிலும் கைக்கொண்டிருக்கிறறேன். வாசகருக்கு, அவருக்கும் முன்பாகவே குறிப்பிட்ட அந்நூலை வாசித்த தகுதியாம்சத்தில் அதுகுறித்த நம்பகமான சிற்சில அம்சங்களை கோடுகாட்டி, நூலின் முதல் வரியைப் படிப்பதற்கு அவரை அழைத்துப்போய் விட்டுவிட்டு ஓசையின்றி வெளியேறிப் போய்விடுவதற்குமப்பால் முன்னுரையின் வழியே கூறுவதற்கு வேறேதும் இல்லை. நூலாசிரியருக்கும் வாசகருக்கும் நடுவில் நின்றுகொண்டிருக்காமல் அவர்களை மேலும் நெருங்கச் செய்வதோடு, நூலின் உள்ளடக்கத்திற்கு தொடர்பற்று துருத்திக்கொண்டு இருக்காமலும், அதனொரு பகுதி போலவே கரைந்துருகாமலும் ஒட்டஒழுகி இவற்றை எழுதியிருக்கிறேன் என்பதை இப்போது தொகுத்துப் படிக்கையில் உணர்கிறேன். 

***

அச்சாவதற்கு முன்பு ஒரு நூலைப்பற்றி ஏதேனும் எழுதிச் சேர்த்துவிட்டால் அது முன்னுரை / அறிமுகவுரை / அணிந்துரை, அச்சான பிறகு எழுதினால் அது விமர்சனம் என்று இங்கு நிலவும் கேலியை முழுமையாக புறக்கணித்துவிட முடியாது. முன்னுரையில் எழுத்தாளர் தரப்புபோல (தரப்பாகவே அல்ல) வாசகரிடம் கோடுகாட்டி நகர வேண்டியிருக்கிறதென்றால், விமர்சனத்தில் அப்பட்டமாக வாசகர் தரப்பாகவே மாறவேண்டியிருக்கிறது. வாழ்வைப் பற்றிய விமர்சனம்தான் இலக்கியம் என்றால் அந்த இலக்கியம் எவ்வாறு வாழ்வைப் பேசியிருக்கிறது என்று பரிசீலிப்பதையே நான் விமர்சனமாக புரிந்துகொண்டிருக்கிறேன். இந்தப் பரிசீலனை எந்தக் கண்ணோட்டத்திலிருந்து மேற்கொள்ளப் படுகிறது என்பது அவரவர் சார்ந்தது. எனது வாழ்நிலை, வாசிப்பு, அரசியல் அக்கறைகள் வழியாக கட்டமைக்கப்பட்டுள்ள எனது கண்ணோட்டம் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதனூடாக நான் படித்த நூல்கள், பார்த்த படங்கள் மற்றும் நாடகங்களில் சிலவற்றைப் பற்றி அவ்வப்போது எழுதியவை இந்நூலின் இரண்டாம் பகுதியில் இடம் பெற்றுள்ளன. 

“நிலத்தை உழும் குதிரைகளைத் தொல்லை செய்யும் பெரிய ஈக்களைப் போன்றவர்கள்தாம் விமர்சகர்கள். குதிரை வேலை செய்கிறது, அதன் தசைநார்கள் வயலின் தந்திகளைப்போல விறைப்பாய் உள்ளன. திடீரென்று ஈ குதிரையின் பிட்டத்தில் வந்தமர்கிறது, குதிரையின் தோல் சிலிர்க்கிறது, அது தனது வாலைச் சுழற்றுகிறது. ஈ எதற்காக இப்படி ரீங்காரத்துடன் சுற்றிவருகிறது? எதற்காக என்று அதற்கே தெரியாமலும் இருக்கக்கூடும். ஓயாமல் துறுதுறுத்துக் கொண்டிருப்பதைத் தனது இயல்பாகக் கொண்டுள்ள அது, தனது இருப்பைத் தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகிறது-. ‘நானும்கூட உயிரோடு இருக்கிறேன், தெரியுமா?’ என்று அது கூறுவதுபோல் தோன்றுகிறது. ‘பார், எனக்கு ரீங்காரமிடத் தெரியும். என்னால் ரீங்காரமிடப்படாதது ஏதுமில்லை”* என்று விமர்சகர்கள் பற்றி கோர்க்கியிடம் செகாவ் வைத்த விமர்சனம் இவ்விடத்தில் இப்போது நினைவுக்கு வருகிறது. எனக்குள் அந்த ஈ பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கிறதா என்பதை அறிந்து விரட்டுவதற்கு இந்தத் தொகுப்பு உதவும் என்று நம்புகிறேன். பிட்டத்தைக் கடிக்க வரும் ஈக்களை குதிரைகள் வாலைச் சுழற்றி விரட்டியடிக்கத்தான் வேண்டியிருக்கிறது. நிலத்தை உழும் தலையாய வேலை தடைபட்டுவிடக்கூடாதல்லவா?
***

இந்த நூல் கடந்த ஆண்டே வெளியாகியிருக்க வேண்டும். உங்களது நூல் ஒன்றை நான் தொகுக்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டு இதை வாங்கிய அன்புத்தோழன் இரா.செல்வன், உடல் நலம் குன்றிய நிலையிலும் அதற்கான பணியில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார். இறுதிநாட்களில் இதை தலைமாட்டிலேயே வைத்துக்கொண்டு இன்னும் வேலையை முடிக்க முடியவில்லையே என்கிற ஆற்றாமையை தனது இணையர் சித்திரைமதியிடம் வெளிப்படுத்தியபடியே இருந்திருக்கிறார். இந்த நூலுக்கான பொருத்தமான முன்னுரையொன்றை தன் இறுதிநொடி வரை மனதுக்குள் எழுதிப் பார்த்த அவரை காலம் சட்டென பறித்துக் கொண்டது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நூல் வெளியாவதை ஓராண்டுக்கு தள்ளிவைத்து இப்போது வெளியிடுகிறேன். அவரால் தழுவிக்கொள்ளப்படாத எனது முதற்புத்தகம் இது. 

23.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக