வியாழன், டிசம்பர் 21

ஆவேசமான விமர்சனத்துடன் அடிபணியும் கீழ்மை எழுத்தாளர்களுக்குரியதல்ல - ஆதவன் தீட்சண்யா


சந்தியா பதிப்பகம் வெளியீட்டுள்ள எனது நேர்காணல்களின் முழுத்தொகுப்பான “நான் ஒரு மநுவிரோதி”க்கு எழுதிய முன்னுரை



ஓர் எழுத்தாளரிடம் எல்லாக் கேள்விகளையும் கேட்டுவிட வேண்டியதில்லை. ஏனெனில் அவர் ஓர் எழுத்தாளர், அவ்வளவே. கேட்கப்பட்டுவிட்டதே என்பதற்காக அவரும் எதையாவது சொல்லித் தொலைக்க வேண்டியதுமில்லை. ஏனெனில் அவர் ஓர் எழுத்தாளர், அவ்வளவே. ஆனால் எழுப்பப்பட்ட கேள்விகள் மீது தனக்கென கருத்தேதுமிருப்பின் அவர் மற்றெவரைப்போலவும் வெளிப்படுத்த உரிமையுடையவராகிறார். அதுவும் அதிகாரத்திற்கு எதிரான குரல்வளையை அறுக்கும் சகிப்பின்மை கோலோச்சும் போது, காலத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் புலனழுகியப் பிணங்களாக எழுத்தாளர்கள் தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்ள முடியாது. அச்சமும் பீதியும் அவமானமும் அறப்பிறழ்வுமாக பிழைத்திருப்பதை, தன்மதிப்புள்ள எந்தவொரு மனிதரையும் போலவே எழுத்தாளர்களும் வாழ்வென ஒப்புவதில்லை. ஆவேசமான விமர்சனத்துடன் அடிபணியும் கீழ்மை எழுத்தாளர்களுக்குரியதல்ல என்ற கருத்தை அப்பட்டமாக அறிவிக்கிறார்கள். 

தனது கருத்தை முன்வைக்கும் விதம் குறித்து ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்கிற நூலின் முன்னுரையில்  அண்ணல் அம்பேத்கர் இவ்வாறு கூறுகிறார்: “முதலாவதாக, எங்கெல்லாம் என் கருத்துகளை தெரிவித்திருக்கிறேனோ அங்கெல் லாம் அவற்றை காரணகாரியத்தோடு விளக்கியிருக்கிறேன். இரண்டாவதாக, அந்தக் கருத்துகள் எத்தகையனவாயினும் அவை பாரபட்சத்தோடு தெரிவிக்கப்பட்டவையல்ல. அவை உண்மையில் ஆலோசனைகளே தவிர கருத்துகள் அல்ல. வேறுவிதமாகச் சொன்னால், நான் திறந்த மனமுடையவன், வறண்ட மனமுடையவனல்ல. திறந்த மனமுடையவன் எப்போதுமே பாராட்டுதலுக்குரியவன். இது உண்மையாயினும், அதேசமயம் ஒரு திறந்தமனம் வறண்ட மனமாகவும் இருக்கக்கூடும் என்பதை மறந்துவிடக்கூடாது. இத்தகைய ஒரு திறந்த மனம் ஒருவனை மகிழ்ச்சிகரமான நிலைமைக்கும் அதேபோழ்து அபாயகரமான நிலைமைக்கும் உள்ளாக்கலாம். வறண்ட மனதுடையவனைப் பேரிடர் எளிதாகச் சூழ்ந்துகொள்ளும். இத்தகையவன் எடைப்பாரமும் சுக்கானும் இல்லாத ஒரு கப்பலைப் போன்றவன். அது திசைவழி தெரியாது தத்தளிக்கும். அக்கப்பல் நீரில் மிதந்து செல்லமுடியும். ஆனால் திசை தெரியாது ஏதேனும் ஒரு பாறையில் மோதி கவிழ்ந்துவிடக் கூடும். வாசகருக்கு உதவும் நோக்கத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா முக்கியத்தகவல்களையும் அவர் முன்னால் வைத்திருக்கிறேன். எனது கருத்துகளை வாசகர் மீது திணிக்க எவ்வகையிலும் முயலவில்லை என்பதை அவர் நிச்சயம் உணர்வார்”. அண்ணலின் இந்த வழிகாட்டுதலை  உள்வாங்கி நான் சொன்ன பதில்கள் அனைத்தும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. 

எனது நேர்காணல்களில், “ரோடும் ரோடு சார்ந்தும்”, “தமிழன் என்பது வெட்டிப்பெருமை” ஆகியவற்றை “நான் ஒரு மநுவிரோதி” என்கிற நூலாக பூபாளம் புத்தகப்பண்ணை பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. இரண்டு பதிப்புகளைக் கண்ட அந்நூலின் பிரதிகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், தற்போது சந்தியா பதிப்பகம்  வெளியிடும் இந்நூலில், ‘நான் ஒரு மநுவிரோதி’யில் இடம் பெற்றிருந்தவை முதற்பகுதியாகவும் ஏனைய நேர்காணல்கள் காலவரிசைப்படி அடுத்தடுத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. ஒருசேர இவையனைத்தையும் படிக்கையில் எனது போதாமைகள் தவறான புரிதல்கள் தடுமாற்றங்கள் தவிப்புகள் தேடுதல்கள் கூறியதுகூறல் என்பனவற்றை கண்டுணர முடிகிறது. இவற்றினூடகத்தான் நான் இன்றைய கருத்து நிலையையும் எழுத்து நிலையையும் எட்டியிருக்கிறேன் என்பதை வெளிப்படையாக முன்வைக்கும் விதமாக, திருத்தம் ஏதுமின்றி  அவ்வவ்வாறே விட்டிருக்கிறேன். எல்லாவற்றின் மீதும் சரியான நிலைப்பாட்டை உருவாக்கிக்கொண்ட பிறகே நான் உதித்தேன் என்று பீற்றித் திரிய நாமென்ன அற்ப அவதாரங்களா-? நொடிதோறும் கற்றுணர்ந்து தன்னைத்தானே புதுக்கிக்கொள்ளும் மகத்தான மனித சுபாவம் என்னை வழிநடத்துகிறது. அதன்வழியே நான் அறிந்தவற்றை இந்நேர்காணல்களில் பகிர்ந்திருக்கிறேன். நேர்கண்ட தோழர்களும், அவற்றை வெளியிட்ட இதழ்களுமே இப்படியானதொரு தொகுப்பு நூல் வருவதற்கு ஆதாரமானவர்கள்.  நூல் வெளியாவது குறித்த மகிழ்ச்சியை சந்தியா பதிப்பகத்தார், முகப்போவியம் வரைந்தளித்த தோழர்.த.ராமலிங்கம் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன். 
ததும்பும் தோழமையோடு, 
ஆதவன் தீட்சண்யா, 
அண்ணல் அம்பேத்கர் நினைவு மற்றும் 
பாப்ரிமசூதி தகர்க்கப்பட்ட தினம் 06.12.2017, ஒசூர்.

நான் ஒரு மநுவிரோதி
207 பக்கங்கள், ரூ.195/

1 கருத்து:

  1. செயற்கைத் தமிழ் நடை. ஒருவன் விரைப்பாக சாலையில் நடந்து செல்வதைப் பார்க்கும் உணர்வு எனக்கு ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...