விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மார்ச் 22

தெற்கு தேய்கிறது வடக்கு மேய்கிறது - ஆதவன் தீட்சண்யா

ஒன்றிய பாஜக அரசின் எந்தவொரு முடிவும் செயலும் நாட்டின் வளர்ச்சிக்கும் ஜனநாயகத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானதாக மட்டுமன்றி அந்தக் கட்சியின் ஆதாயங்களுக்காக பெருமளவு முறைகேடானதாகவும்  இருக்கும் என்பதற்கு பெரிய ஆய்வுகள் தேவையில்லை. அது கடந்தகாலத்தில் கொண்டுவந்த நீட், பணமதிப்பிழப்பு, தேர்தல் பத்திரம், குடியுரிமைத் திருத்தச்சட்டம், வேளாண் திருத்தச்சட்டம், தொழிலுறவுச் சட்டம், அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கம், ஜி.எஸ்.டி, தேசிய கல்விக்கொள்கை, இந்திய குற்றவியல் சட்டத்திருத்தம் என ஏராளமான சான்றுகள் அதற்குப் போதுமானதாக உள்ளன. அந்த அனுபவத்திலிருந்தே - அதாவது நாட்டுக்கு நன்மைபயக்கும் எதுவொன்றையும் பாஜக செய்துவிடாது என்கிற பட்டறிவிலிருந்தே - அது செயல்படுத்த முனையும் “தொகுதி மறுவரையறை” என்பதை எடுத்தயெடுப்பில் நாட்டுநலனுக்கு எதிரானது என்று சொல்லிவிட முடியும்தான். ஆனால் அதற்கும் அப்பால் சென்று தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. 

**

தொகுதி எல்லை வரையறுப்பும் தேர்தலும்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தாங்கும் இரட்டைத்தூண்கள் என்று போற்றப்படுவதன் பொருள், தொகுதி வரையறுப்பின் பேரில் நடைபெறும் தேர்தலே மக்களின் சரியான பிரதிநிதித்துவமாக இருக்கமுடியும் என்பதாகும். சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ செல்லும் ஒவ்வொரு பிரதிநிதியும் சமமான மக்கள்தொகை கொண்ட தொகுதியின் பிரதிநிதியாகச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போதே ஒவ்வொருவரது வாக்கும் சமமதிப்புடையதாகிறது என்பதை கணக்கில் கொண்டே ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகும்  அதனடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையையும் எல்லையையும் மறுவரையறை செய்வதுடன், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான தொகுதிகளை அடையாளப்படுத்தவும் வேண்டும் என்று பணிக்கிறது அரசியல் சாசனம். 

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதற்கு முன்னோட்டமாக, 1952ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் எல்லை நிர்ணய ஆணையம், 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 494 என வரையறுத்தது. 1963ஆம் ஆண்டு இரண்டாவது ஆணையம், 1961 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தொகுதிகளின் எண்ணிக்கையை 522 ஆக உயர்த்தியது. 1973ஆம் ஆண்டில் மூன்றாவது ஆணையம் இந்த எண்ணிக்கையை 543 என உயர்த்தியது. இதனிடையே 1952ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு விகிதம் சமநிலையில் இல்லாததை பரிசீலித்த இந்திரா காந்தி அரசாங்கம், அடுத்த 25ஆண்டுகளில் சமநிலையை எட்டவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து 2001 மக்கள்தொகை கணக்கெடுப்புவரை மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுவரையறையை (42ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்,1976 மூலம்) நிறுத்திவைத்தது. 

1976-2000 வரையான 25 ஆண்டுகளில் தமிழ்நாடு, கேரளா ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தை பெருமளவு கட்டுப்படுத்தயிருந்தன. ஆனால் வடமாநிலங்களிலோ எதிர்மாறான நிலை. மக்கள்தொகைப் பெருக்க விகிதம் இவ்வாறு தொடர்ந்து சமநிலையில் இல்லாத சூழலில், 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தங்களது தொகுதிகள் குறையும் ஆபத்து இருப்பதை நன்குணர்ந்த தென்மாநிலங்கள், தொகுதி மறுவரையறை ஆணையம் (2002) அமைக்கப்படுவதற்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் வேறு வழியின்றி, தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் எல்லைகளை மட்டும் சீரமைப்பதாக அந்த ஆணையத்தின் பணியை மட்டுப்படுத்திய அப்போதைய வாஜ்பாய் அரசு (84ஆவது அரசியல் சட்டத்திருத்தம், 2002 மூலமாக) மேலும் 25ஆண்டுகளுக்கு அதாவது 2026ஆம் ஆண்டுவரை தொகுதி மறுவரையறை செய்வதை நிறுத்திவைத்தது. அதனால், நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையும்  விகிதாச்சாரமும் மாற்றமின்றி தொடர்கின்றன.    

**

2026ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டுமாயின், அது 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடக்க வேண்டும். ஆனால், மோடியின் ஒன்றிய அரசோ கொரானா பொதுமுடக்கத்தைக் காரணங்காட்டி 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் முடக்கிவிட்டது. பிறப்பு – இருப்பு விகிதத்திற்கிடையேயான வேறுபாட்டை வைத்து கொரானாவினால் செத்தவர்கள் எவ்வளவு பேர் என்கிற உண்மை விவரம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதனாலேயே கணக்கெடுப்பை முடக்கியிருக்கலாம் என்றொரு குற்றச்சாட்டும் நிலவுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் அவ்வளவு ஏன் கொரானாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனா கூட மக்கள்தொகை கணக்கெடுப்பை  இதேகாலத்தில் தடையின்றி நடத்திவிட்ட நிலையில் உலகத்துக்கே வழிகாட்டும் விஸ்வகுரு மோடியின் அரசு ஏன் நடத்தவில்லை? இதே பொதுமுடக்கக் காலத்தின் கெடுபிடிகளைத் தளர்த்தி பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களை நடத்திமுடித்த மோடி அரசு, பொதுமுடக்கம் முடிந்த பிறகாவது மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்கலாமே? அவ்வாறெல்லாம் செய்யாமல் இப்போது 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யலாம் என்கிறது. இதிலென்ன பிரச்னை? 

**

ஒரு நாட்டை நிர்வகிக்கவும் மக்கள்தொகை பரவலாக்கம், வசிப்பிடம், கல்வி, மருத்துவம், உற்பத்தி, விநியோகம் சார்ந்த திட்டமிடுதலுக்காகவும் அந்நாட்டின் மக்களைப் பற்றிய அனைத்துவிவரங்களும் அரசிடம் இருக்கவேண்டும் என்கிற கண்ணோட்டம் சேமநல அரசுகள் உருவான காலந்தொட்டே உலகெங்கும் இருந்துவருகிறது. “பொருளாதார, சமூகப்பிரச்னைகளை திறமையாக கையாண்டு தீர்வு காண்பதற்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயனுள்ள விதமாக அரசை நடத்திச் செல்வதற்கும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அந்தச் சான்றுகளைத் திரட்டித்தரும் அறிவியல்பூர்வமான நடவடிக்கையே மக்கள்தொகை கணக்கெடுப்பு” என்கிறது ஐநா மன்றம். 

இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாட்சி முதன்முதலில் 1872ஆம் ஆண்டு வெளியிட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம் சுமார் ஆறாண்டுகாலம் திரட்டிய தகவல்களின் தொகுப்பாகும். அப்போதிருந்து 2011ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகளுக்கொரு முறை என இதுவரை 15முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்துள்ளது. இரண்டாம் உலகப்போர், இந்திய - சீன எல்லை மோதல், வங்கதேச விடுதலைப்போர் ஆகியவற்றினால் இடையூறுகள் ஏற்பட்ட நிலையிலும்கூட 1941, 1961, 1971 ஆம் ஆண்டுகளில் கணக்கெடுப்பு தடைபடாமல் நடந்துள்ளது. 

மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பின் இணை இயக்குநராக பணியாற்றிய A.W.மகாத்மே “இந்தக் கணக்கெடுப்புகள் நகர்ப்புற கிராமப்புற பாகுபாடுகள், பாலினம், வயது, திருமணநிலை, மதம், மொழி, கல்வியறிவு, கல்விநிலை, தொழில், இடப்பெயர்வு, வீட்டு நிலைமைகள் போன்றவை பற்றிய தகவல்களைச் சேகரித்துள்ளன. 1872 முதல் 1931 வரை, மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு நபரிடமும் அவர் ஏதேனும் உடல் அல்லது மனக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று விசாரித்திருக்கிறது. 1941 முதல் 1971 வரை, இந்தக்கேள்வி  மக்கள்தொகை கணக்கெடுப்பு வினாத்தாளிலிருந்து முற்றிலும் விலக்கப்பட்டது. 1981 மக்கள்தொகை கணக்கெடுப்பில், இக்கேள்வியை குறிப்பிட்டளவில் விசாரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வீடுகளைப் பட்டியலிடும் கட்டத்தில், ஒரு வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர், உறுப்பினர்களில் யாராவது முற்றிலும் பார்வையற்றவர்களா, அல்லது முற்றிலும் ஊனமுற்றவர்களா, அப்படியானால் எத்தனை பேர் என்று கூடுதல் கேள்வி கேட்கப்பட்டது” என்கிறார். இவற்றுக்கும் அப்பால், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்தவும், தொகுதி மறுவரையறைக்கும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இப்போதேனும் வழங்குவதற்காகவும் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை. ஆனால் அப்படியான அறிவியல்பூர்வமான தரவுகள் எதுவும் மோடி அரசுக்குத் தேவைப்படவில்லை. 

“புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றியோ, விவசாயிகள் தற்கொலை பற்றியோ, கோவிட் இறப்புகள் பற்றியோ, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்தோ எந்தவொரு சரியான தரவையும் தராத இந்த National Democratic Alliance அரசை No Data Alliance அரசு என்றழைப்பதே பொருத்தமாக இருக்கும்” என்று எதிர்கட்சிகளின் கேலிக்கு ஆளாகியிருந்தது மோடி அரசு. உண்மையில் அரசிடம் தரவுகள் இல்லாமலில்லை. தரவுகளிலிருந்து தெரியவரும் உண்மைகள் அரசின் தவறான கொள்கைகளை அம்பலப்படுத்துவதாக இருந்ததால் திட்டமிட்டே அவற்றை மறைத்தும் திரித்தும் முறைகேடுகள் செய்வதற்கு உகந்தளவில் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதே அணுகுமுறைதான் மக்கள்தொகை பற்றி எந்த மேம்படுத்தப்பட்ட தரவுகளையும் வெளியிடாமல் 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யலாம் என்கிறது. 

மக்கள்தொகைப் பெருக்கம், பிறப்பு - இறப்பு விகிதம், சராசரி வாழ்நாள், மக்கள்தொகை அடர்த்தி, பரவலாக்கம், வீட்டுடமை, இடப்பெயர்வு உள்ளிட்ட தரவுகளில் 2001ஆம் ஆண்டு நிலவிய சமமற்ற நிலை 2011ஆம் ஆண்டில் பெரிதாக மாறியிருக்க வாய்ப்பில்லாதபோது, 2001 கணக்கெடுப்பை தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாக  கொள்ளக்கூடாது என்கிற தென்மாநிலங்களின் நிலைப்பாடு  2011 கணக்கெடுப்புக்கும் பொருந்தும். 

மறுவரையறையினால் நாடாளுமன்றத்தொகுதிகளின் எண்ணிக்கை ஒருவேளை மாற்றியமைக்கப்படவில்லை என்றால் மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 9 தொகுதிகள் குறையும். அதாவது நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7% என்ற நிலையிலிருந்து 5.5% என குறையும். ஒருவேளை மக்கள்தொகைப்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 753 என மாற்றியமைக்கப்படுமானால் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகள் 41 என்றாகும். இது முந்தைய இடங்களைவிட இரண்டு இடங்கள் கூடுதல் என்றாலும் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் தற்போதுள்ள 7% என்பதிலிருந்து 5.4% என்கிற நிலைக்குச் சரியும். தமிழ்நாட்டைப் போலவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம், பஞ்சாப்  ஆகிய மாநிலங்களுக்கும் இதேகதிதான். ஆனால் மேற்சொன்ன இரண்டு விதங்களில் எதுவொன்றின்படி மறுவரையறை செய்தாலும் உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்கள் கூடுதலான இடங்களையும் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தையும் பெறுகின்றன. சமனற்ற இந்நிலைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் எழுப்பும் கேள்விகளுக்கு ஒன்றிய ஆட்சியாளர்களும் பாஜகவினரும் முன்னுக்குப்பின் முரணாக குயுக்தியுடன் பதிலளித்து குழப்பிவருகின்றனர். 

மக்கள்தொகையில் மட்டுமன்றி  மனிதவள மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் மாநிலங்களின் பங்களிப்பையும் உள்ளடக்கி பிரதிநிதித்துவம் வழங்குவது பற்றியெல்லாம் வெளியாகும் முன்வைப்புகளை மோடியின் ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை முன்கூட்டியே கட்டிவிட்டதன் மூலம்,  உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து மாநிலங்களுக்கிடையே சமனற்ற நிலையை உருவாக்கி மோதவிடுவதில் தான் அது அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கூட்டாட்சி, நாடாளுமன்ற ஜனநாயகம், நாட்டின் பன்மைத்துவம், குடிமக்களுக்கிடையே சமமதிப்பு, சமூகநீதி ஆகியவற்றில் அக்கறையுள்ளவர்கள் பிரதிநிதித்துவத்தில் சமத்துவம் என்கிற நிலையை உருவாக்கும் விதமாக தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டுமென ஒன்றிய அரசை நோக்கி குரலெழுப்புவது அவசியம்.

நன்றி: விகடன்.காம் 2025 மார்ச் 14

புதன், பிப்ரவரி 3

தீட்டலங்காரம் - ஆதவன் தீட்சண்யா

படுத்த சற்றைக்கெல்லாம் அலண்டு தூங்கிப் போனாள் திவ்யா. பிறந்தநாள் கொண்டாட்டத்தின்  களிப்பு இன்னமும் அவள் முகத்தில் பூரித்திருந்தது. அவளென்றால் உயிருருகப் பழகும் அவளது 12சி வகுப்புப் பிள்ளைகளும் உறவுக்காரப் பொண்டுகளும் பையன்களும் பூசிய வண்ணப் பொடிகளும் ஜிகினாத்தாள்களும் மேலெல்லாம் சிதறி மின்னிக் கிடந்தன. யாரோ முகத்தில் தீத்திவிட்ட கேக் க்ரீமை கூட கழுவாமல் அப்படியே விட்டிருந்தாள். 

“ஊரு கண்ணு உறவுக்கண்ணு எல்லாம் எம்மகமேல தான். சுத்திப் போடலாம்னு வந்தா லைட்டைக்கூட அமர்த்தாம எப்படி தூங்குது பாரு” என்று பொய்க்கோபம் காட்டி கணவனிடம் மெப்பாக ஞாயம் மேவினாள் மங்கா. மனைவியின் புகாரில் இருக்கும் பெருமிதத்தைக் கண்டுகொண்ட சித்தண்ணன் தன் பங்கிற்கு ஏதும் சொல்லாமல் இருப்பானா? 

“ஆரம் எப்படி ஜொலிக்குது பாரு.. இதவிட சிறுசா செஞ்சிருந்தா மூக்குத்தி எடுப்பாவே இருந்திருக்காது. ஜிமிக்கிய மட்டுமாச்சும் கழட்டி வச்சிருக்கலாமில்ல… படுக்கையில அழுந்தி நசுங்கிறாதா… இன்னொரு பவுன் சேர்த்திருந்தா கொஞ்சம் கெட்டியா இருந்திருக்கும்… அந்த தங்காசாரியும் நீயும் இதே போதும்னு தடுத்துட்டீங்க” என்று மகளின் மேனியை அலங்கரிக்கும் நகையெல்லாம் தன் பங்காக்கும் என்று அவன் பெருமை காட்டிக்கொண்டான். “எல்லாத்தயும் உருக்கிச் சேர்த்ததை இன்னின்ன உருப்படிக்கு இத்தனை பவுனுன்னு அந்தாளு சொன்னப்ப நீயும்தானே  சரிசரின்னு தலையாட்டுன… இப்ப என்னமோ என்மேல பழிபோடுற…” என்று கணவனை கடிந்து கொண்டாள். “சரிவிடு, வெயிட்டா இருந்தாலும் வலிக்குதுன்னு மவ சிணுங்குவா” என்று சமாதானம் செய்தான் சித்தண்ணன்.  

இவர்களது பேச்செதற்கும் அசராமல் திவ்யா தூங்கிக்கொண்டிருந்தாள். பாவம் பிள்ளைக்கு அலுப்புபோல என்று லைட்டை அணைத்துவிட்டு வெளியே வந்தார்கள். காகிதத்தட்டுகள், தேநீர்க்கோப்பைகள், பரிசுப்பொருட்கள், பிரித்தெறியப்பட்ட உறைகள், அறுந்துத் தொங்கிய தோரணங்கள், பலூன்கள் என நடுக்கூடம் முழுக்க அலங்கோலமாகக் கிடந்தன. சிந்திக்கிடந்த கேக், இனிப்புப்பட்சணங்களது துகள்களின் மேல் ஈக்களும் எறும்புகளும் மொய்த்திருந்தன. எல்லாவற்றையும் பெருக்கி ஓரந்தள்ளிவிட்டு அவர்கள் படுக்கப் போகும்போது நேரம் பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.

‘திவ்யா முழிச்சுப் பாரேன்’ என்று யாரோ எழுப்பியதற்கு அரைத்தூக்கத்திலேயே என்ன என்றாள். ‘எங்களைப் போக விடேன்’ என்று கிசுகிசுப்பை அவள் முதலில் கனவில் கேட்கும் குரல் என்றுதான் நினைத்தாள். ஆனால் அந்தக்குரல் இரைஞ்சுதலைப் போல ஆரம்பித்து எச்சரிக்கை போல இடைவிடாமல் கேட்கவுமேதான் அவள் கண்விழித்தாள். தான் மட்டுமே இருக்கும் இந்த அறைக்குள் கேட்பது யாருடைய குரல்? “உன் காதுகளையே கடிச்சுத் தின்கிற கோபமிருக்கு எங்களுக்கு” என்கிற அந்தக் குரல் அவளது ஜிமிக்கி ஒன்றிலிருந்து வந்தது. “என்னால கழுத்தை நெரிச்சு இப்பவே உன்னை கொல்ல முடியும்” என்றது கழுத்தாரம். “நான் நினைச்சா திருகாணிய கழட்டி மூக்குக்குள்ள தள்ளி மூச்சையே நிறுத்திப்புடுவேன்” என்றது மூக்குத்தி. “லேசா இறுக்கினேன்னு வையி, அவ்வளவுதான் உன் ரத்த ஓட்டமே நின்னுடும்” என்றது மோதிரம். “ஏய், போறப்போ எங்களையும் கூட்டிட்டுப் போங்க. இல்லன்னா இருக்கிற ஆத்திரத்துல இவ வயித்த  குத்திக் கிழிச்சிருவம்” என்று சாமியறை வாசற்படியில்  நிறுத்தப்பட்டிருந்த வெள்ளி குத்துவிளக்குகள் ரெண்டும் கத்தின. “உங்கப்பன் பண்ணின தப்புக்கு உன்னை தண்டிக்கக்கூடாதுன்னு தான் விட்டிருக்கோம். யோசிச்சு நல்ல முடிவா எடு” -நகைகள் ஒருசேர விடுத்த இந்த எச்சரிக்கையில் இருந்த மூர்க்கம் திவ்யாவை  பதற்றமாக்கியது. 

தான் அணிந்திருக்கும் நகைகள் தன்னிடமே பேசுவதும் அது தனக்கே கேட்பதும் சாத்தியமா? ஒருவேளை இது அதீதமான கற்பனையா? யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? இந்த நகைகளுக்கு அப்பன் பண்ணின கெடுதல் என்ன? கெடுதல் பண்ணலேன்னா நகைகள் ஏன் இப்படி புகாரிட்டு மிரட்டணும்? என்று பலவாறாக யோசித்தாள் திவ்யா. “உங்கம்மா காலையில பீரோவுலிருந்து எடுக்குறப்பவே துள்ளி குதிச்சு ஓடியிருப்போம். சரி, பிறந்தநாளும் அதுவுமா நீ சங்கடப்படக்கூடாதுன்னு தான் இந்நேரம் வரைக்கும் பொறுத்திருந்தோம். இப்பதான் முடிஞ்சிருச்சில்ல, கழத்திவிடு” என்றன. 

“நாங்க உங்கள வாங்கிட்டு வந்தப்புறம் இதுதானே உங்க வீடு” என்று அவள் இன்னதுக்கு பதிலென்று இல்லாமல் பொதுப்படையாகச் சொன்னாள். “சரி, எங்கே வாங்குனீங்கன்னு சொல்லு?” என்று நகைகள் கேட்டதற்கு பதிலின்றி திவ்யா திணறினாள். “காலையில் எங்கப்பம்மாக்கிட்ட கேட்டுச் சொல்றேன்” என்று அப்போதைக்கு அமைதிப்படுத்தப் பார்த்தாள். “விடிஞ்சதும் உங்கம்மா எங்களையெல்லாம் கழத்தி வாங்கி பீரோ லாக்கர்ல வச்சு பூட்டிப்புடுவா. அப்புறம் மறுபடியும் அடைஞ்சிக் கிடக்க வேண்டியதுதான்” என்று சலித்துக்கொண்டன. “இப்போ கழத்தினதும் நீங்க போயிட்டா எங்கப்பம்மாவுக்கு நான் என்ன சொல்லுவேன்?” என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாள் திவ்யா. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் தப்பிக்க முடியாதென்பதை அறிந்திருந்த நகைகளோ, “உனக்குச் சொந்தமில்லாத எங்களை அணிந்திருப்பது உனக்கு உறுத்தவில்லையா” என்று கேட்டன. அந்தக் கேள்வியால் அவள் தடுமாறுவதைக் கண்ட நகைகள் அவளது கவனத்திற்குத் தப்பிப்போன கடந்தகாலச் சம்பவங்களை நினைவூட்டத் தொடங்கின.   

***

பொதுவாக மழைமோட காலத்தில் அடைமழை பெய்யும் நாட்களில் ஐந்து பீரியடுடன் பள்ளிக்கூடம் முடிவதுண்டு. அன்றைக்கு பொட்டுத்தூறலில்லை, வெறுமனே வானம் மூட்டமாகத்தான் இருந்தது. அதற்கே ஐந்து பீரியடா என்கிற ஆச்சரியம் பிள்ளைகளுக்கு. “வழியில் விளையாடாம, பராக்கு பார்க்காம நேரம் பொழுதோட வீட்டுக்குப் போய்ச் சேரணும்” என்று ஆசிரியர்கள் விடுக்கும் எச்சரிக்கையை என்றைக்கு பிள்ளைகள் கேட்டிருக்கிறார்கள்? அப்படி கேட்டால் அவர்கள் பிள்ளைகளா? திவ்யாவும் அவளது சேக்காளிகளும் வம்பாடிக்கொண்டு வரும் வழியில் ஏழெட்டு போலிஸ்காரர்கள் நிற்பதைக் கண்டார்கள். இதென்ன புதுவழக்கம் என்பதுபோல அவர்களை முறைத்துப் பார்த்துக்கொண்டே ஒதுங்கி ஊர்ப்பாதைக்குள் திரும்பினார்கள். அம்மா மட்டும்தான் இருந்தாள் வீட்டில். வந்ததும் உங்கொப்பனைக் காணலன்னு தேடாத. ஒருவேலையா வெளியப் போயிருக்கு. உனக்கு நொறுவாய் வாங்கிட்டு இப்ப வந்துடும் என்றாள் அம்மா. 

“அப்போ உங்கப்பாவுக்காக வாசலைப் பார்த்து நீ உட்கார்ந்திருந்தாய். ஆனால் உங்கப்பா அன்னிக்கு ராத்திரிதான் வீட்டுக்கு வந்தார். இடைப்பட்ட நேரத்தில் எங்கே போயிருந்தார்?” என்றது மூக்குத்தி. “தெரியலியே” என்றாள். “சரி, கவனி”. 

சித்தண்ணன், மாதையன், இடும்பன், முனிமாதன், வளத்தி கோயிந்தன் ஐவரும்தான் முன்வரிசையில் நகர்கிறார்கள். மந்திக்குளம், பெரியமன்னவேடு, கட்டனேரி, அரியாம்பள்ளி, வேடம்பட்டி இன்னும் வடக்கே ஆராங்கோட்டை, முட்டுக்காடு, எம்.நாவலூர் என்று பக்கம்பராந்திரி ஊர்களிலிருந்தெல்லாம் வந்திருந்த இளந்தாரிகள் எழுவதெண்பது பேர் அவர்களைப் பின்தொடர்கிறார்கள். அந்த நிலப்பரப்பை அறிந்தவன்போல் சித்தண்ணன்தான் அவர்களை வழிநடத்துகிறான். உலக்கை, இரும்புக்குழாய், கடப்பாரை, சம்மட்டி, கொந்தாளம், பிக்காசு, பெட்ரோல் கேன், கேஸ் கட்டிங் மிஷின் என்று ஒவ்வொருவரும் ஏதாவதொன்றை ஏந்தியிருந்தார்கள். “அய்யோ அப்பா உன் முகமா இது… ஏன் இப்படி விகாரமா இருக்கு… அவங்களோட போகாதப்பா, வந்துடுப்பா” என்று திவ்யா கத்தினாள். “நீ பார்க்கிறது அவங்களோட கடந்தகாலத்தை. கடந்தகாலத்தில் இருக்கிற அவங்களுக்கு நிகழ்காலத்திலிருக்கிற உன்னோட கூப்பாடு கேட்காது, கவனி” என்றது ஜிமிக்கி. ஆங்காரமான கூச்சலையும் ஆபாசமான வசைகளையும் எழுப்பிச் செல்லும் அவர்கள் நிகழ்காலத்திற்கே வந்தாலும் என் கூப்பாடு எப்படி கேட்கும் என்று தன்னையே கேட்டுக்கொண்டாள் திவ்யா. 

சித்தண்ணன் கும்பல் நுழையும்போது அந்தக் காலனியில் கதவிருந்த வீடுகள் அனைத்துமே பூட்டிக் கிடந்தன. வேப்பமரமொன்றின் அடியில் கிடந்த கட்டிலில் ஒடுங்கிச் சுருண்டிருந்த  ஒரு கிழவியைத்தவிர அங்கொரு குஞ்சுகுளுவான் கூட இல்லை. ‘வூட்டுக்கு ஒருத்தனையாவது பொளந்துகட்டணும்’ என்று வந்தால் தப்பித்துவிட்டார்களே என்கிற ஆத்திரத்திலும், நல்லவேளையாக ஒருத்தரும் இல்லை என்கிற சந்தோசத்திலும் அந்த பட்டப்பகலில் அவர்கள் அடுத்தடுத்து நடத்தும் அட்டூழியங்களுக்கு போலிசும் துணை.    

பூட்டப்பட்டிருந்த வீடுகளின் கதவுகளை அவளது அப்பாவும் அவனது கூட்டாளிகளும் பெயர்த்தெடுக்கிறார்கள். வீட்டுக்குள் டிவி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ், புத்தக அலமாரி, கம்ப்யூட்டர், வெஸ்டர்ன் டாய்லெட் என்று இருப்பதைப் பார்த்ததும் அவர்களது கண்கள் சிவக்கின்றன. “இவங்களுக்கு வந்த சொகுசப் பாத்தியா? இதெல்லாம் நம்ம வூடுகள்லகூட இல்லியே” என்கிறான் குமைச்சலோடு ஒருவன். “பண்டபாத்திரம் எதுவும் இங்க மிஞ்சக்கூடாது, வேணும்கிறத எடுத்துக்கிட்டு மிச்சத்த அடிச்சு நொறுக்குங்க” என்று ஆணையிடுகிறான் இன்னொருவன். “எல்லாம் இன்னியோட முடிஞ்சது… ஒருத்தன் வாலாட்டினா ஊரையே அழிப்பாங்கன்ற பயம் வரணும். அப்பதான் இனியொருத்தனும் நம்ம பொண்ணுங்கள ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கொக்கரித்தபடியே மற்றொருவன் தவசதானியங்களின் மேல் மூத்திரம் பெய்கிறான். அவன் எதிரில் இருப்பதாக நினைத்து கூசிப்போன திவ்யா “த்தூ வெட்கங்கெட்ட மிருகமே” என்று திட்டுகிறாள். “எந்த மிருகம் இப்படியான அட்டூழியங்களைச் செய்கிறது?” என்று கழுத்தாரம் கேட்டதற்கு திவ்யாவிடம் பதிலில்லை. 

பீரோக்களை நெம்பித் திறந்து கேஸ் கட்டிங்கில் திறக்கிறார்கள் லாக்கர்களை. துணிமணிகளைத் தாறுமாறாக இழுத்தெறிந்து நடுவீட்டில் போட்டு தீவைக்கிறார்கள். தீயில் வீசப்பட்ட படிப்புச் சான்றிதழ்கள், ரேசன் அட்டை, ஆதார், கேஸ் புக் எல்லாம் தீய்ந்து கருகுகின்றன. தன்னைவிட ஐந்தாறு வயது குறைந்த மாணாக்கன் ஒருவன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புத்தகப்பையையும் சீருடையையும் எடுத்து நெருப்புக்குள் வீசும்போது திவ்யா தன்னுடல் பொசுங்குவது போல் துடித்துப் போனாள். பாடப்புத்தகங்களும் சீருடைகளும் இல்லாமல் அந்த வீடுகளின் பிள்ளைகள் நாளை எப்படி பள்ளிக்கூடம் போவார்கள் என்கிற யோசனை இல்லாத இவனெல்லாம் படித்து என்னத்த கிழிக்கப்போறான் என்கிற கவலை பீடிக்கிறது திவ்யாவை. அவளது மனவோட்டம் அறிந்த குத்துவிளக்கு சொன்னது: “அவன் படித்து எதையும் கிழிச்சிடக் கூடாதுன்னுதான் உங்கப்பா மாதிரியான ஆட்கள் அவனை இப்படி கிரிமினலாக்குறாங்க” 

அவர்களுக்கு இன்னும் வெகாளம் அடங்கவில்லை.  அழைப்புக்காக நெடுஞ்சாலையில் போலிஸ் வேன் அருகில் காக்கவைத்திருந்த ஜேசிபியை வருவிக்கிறார்கள். அது வீடுகளின் கூரைகளையும் வாரைகளையும் பிய்த்தெறிகிறது. முட்டிச்சாய்க்கிறது சுவர்களை. இவனுங்களுக்கு சாமி ஒரு கேடா என்று தீப்பாஞ்சியம்மன் கோவிலையும் தகர்க்கிறது. காலனியின் 126 வீடுகளுக்குமான நீர்த்தேக்கத்தொட்டியைத் தாங்கி நிற்கும் தூணை அடித்துச் சரிக்கிறது. தலை சிதறிச் செத்தவனின் ரத்தம்போல் வீணில் பாய்கிறது நீர். மேஸ்திரி பொன்னனின் ஈரடுக்கு வீட்டுவாசலில் வாகனங்களையெல்லாம் இழுத்துப் போட்டு நெருப்பு வைக்கிறார்கள். பெட்ரோல் டேங்க் வெடித்து வீட்டுக்குள் தீப்பிழம்பு விழுந்தெரிகிறது. வீட்டுக்குள்ளிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கும்போல, இடியொத்த பெருஞ்சத்தத்தால் அந்த வட்டாரமே கிடுகிடுங்குகிறது. அடர்ந்திருண்ட கரும்புகையின் உள்ளேயிருந்து அவளது அப்பனும் அவனது கூட்டாளிகளும் வெற்றிப் பெருமிதத்தோடு வெளியே வருகிறார்கள். “அவங்கள நூறு வருசத்துக்குப் பின்னாடி தூக்கி வீசியிருக்கோம். எழுந்து வர்றதுக்கு இந்த ஜென்மம் போதாது.. மறுபடி தலையெடுக்க மண்ணள்ளித் திங்கனும்…” என்று  எகத்தாளமாக பேசிக்கொண்டு வரும் அவர்களைப் பார்ப்பதற்கு அஞ்சி திவ்யா கண்களை இறுக்கமாக மூடிக்கொள்கிறாள். 

“கண்களை அகலத் திறந்து பார்க்கவேண்டிய இந்நேரத்தில் மற்றவர்களைப்போல கண்ணை மூடிக்கொள்ளும் தவறை நீயும் செய்யாதே திவ்யா. போரில் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாகரிகத்தின் சிதிலங்கள் போல அந்தக் காலனி இருப்பதைப் பார். கொலை வெறியேறிய உனது அப்பன்களிடமிருந்து தப்பி உயிர் பிழைக்க பாம்பும் தேளும் மேயும் முட்புதர்களிலும் கரும்புக்காடுகளிலும் பதுங்கிக் கிடந்து வெளியே வந்த அந்த மக்களுக்கு உடுத்தியிருந்த துணியத்தவிர மிஞ்சினது என்ன என்று பார்க்கமாட்டாயா? வீடுவாசல் அற்றவர்களாக்கப்பட்ட அவர்களது குழந்தைகள் இந்த ஐப்பசிக்குளிரில் வெட்டவெளியில் எப்படி வெடவெடத்து நடுங்குகிறார்கள் என்பதை காணமறுக்கும் அளவுக்கு உன் மனம் கல்லா  இரும்பா…?”  -நெத்திச்சுட்டியும் மோதிரமும் எழுப்பின இந்தக் கேள்விகளுக்குப் பதிலற்றுப்போன திவ்யா கண்களை இறுக மூடியிருந்தாள்.  

“திவ்யா கண்ணைத் திற” என்று அப்பா உலுக்கியதில் கண்விழித்த திவ்யா எங்கே அந்த எரியும் வீடுகளும் குளிரில் நடுங்கும் குழந்தைகளும் என்று தேடினாள். “நிகழ்காலத்துக்கு வா திவ்யா” என்று கிசுகிசுத்தது தோடு. அவள் நிதானத்துக்கு வர கொஞ்சம் நேரமெடுத்தது. எதிரே இருந்த பெற்றவர்களைப் பார்க்கப் பிடிக்காதவளாக அவள் தான் அணிந்திருந்த நகைகளை விறுவிறுவென கழற்றத் தொடங்கினாள். “ஏன் தங்கம் எழுந்தும் எழாம இவ்வளவு அவசரமா நகைகளைக் கழட்டுற?” என்ற அம்மாவிடம், “இந்த நகைகள் எனக்கு வேணாம்” என்றாள். “ஏம்மா இதுகளுக்கு என்ன குறைச்சல்? நல்லாத்தானேம்மா இருக்கு!” என்ற சித்தண்ணனை அவள் அற்பமாகப் பார்த்தாள். “ஊராமூட்டு நகைன்னா நல்லாத்தாம்பா இருக்கும்” என்றாள். “என்னது ஊராமூட்டு நகையா? நம்மளுதுமா” என்றான். “நம்மக்கிட்ட இருக்கிறதாலயே நம்மோடதுன்னு ஆயிடாதுப்பா.”

எதை மனதில் வைத்து மகள் இப்படி பேசுகிறாள் என்று புரியாத சித்தண்ணன், “இது உனக்கே உனக்குன்னு அளவு கொடுத்து செஞ்சதுமா. தங்காசாரிக்கிட்ட நீதானேம்மா அன்னிக்கு அளவு கொடுத்த” என்றான். “ஆமா அளவு கொடுத்தேன். காலனி வூடுகள்ள நீங்க களவாண்டு வந்த நகைகள உருக்கித்தான் எனக்கு நகை செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சிருந்தா அன்னிக்கே மறுத்திருபேன்…” 

“அதொன்னும் திருட்டு இல்ல. அவங்கக்கிட்ட பலவந்தமா வசூலிச்ச அபராதம்.” 

அப்பனின் பேச்சால் அருவருப்படைந்த திவ்யா “இதெல்லாம் எத்தினி வருசத்து உழைப்பு அவங்களுக்கு? ச்சே… திருப்பிக் கொடுத்துட்டு வாங்கப்பா” என்று சீறினாள். “உனக்கு பிடிக்கலன்னா விடு. திருப்பிக் கொடுக்கவெல்லாம் முடியாது” என்று சொன்ன அப்பனின் குரலில் இருந்த இளக்காரம் அவளை கொந்தளிக்கச் செய்தது. “குருவியாட்டம் அவங்க சிறுகச்சிறுகச் சேர்த்தையெல்லாம் இப்படி கொள்ளையடிச்சு கொண்டாந்து புழங்குறீங்களே இதிலெல்லாம் தீட்டு இல்லையா உங்களுக்கு?” என்று வீசியடித்தாள் நகைகளை. 

சித்தண்ணனும் மங்காவும் வாயடைத்து நின்றார்கள். நகைகளும் குத்துவிளக்குகளும் நகரத்தொடங்கின.

நன்றி: ஆனந்தவிகடன் 03.02.21

ஓவியங்கள்: அரஸ்

ஞாயிறு, செப்டம்பர் 6

அனகராதி - ஆதவன் தீட்சண்யா

ஷியாம் சங்கர்
உறக்கத்திலிருப்பவளை எழுப்ப அம்மாதான் தண்ணீர் தெளிக்கிறாள் என்பதான நினைப்பில் சுதாரித்து கண்விழித்தவள் மீது அருவியெனப் பொழியத் தொடங்கியது மழை. நனைவதன் பதற்றத்தில் எழுந்து நின்றவளுக்கு இருளன்றி ஏதும் புலப்படவில்லை. அவள் இங்கே முதன்முதலாக கண்விழித்த அந்த நேரம் இரவாக இருந்தது. எத்திசையில் நகர்ந்தால் யாதிருக்குமோ என்கிற அறியாநிலையில் நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள். பெருக்கெடுத்தோடும் வெள்ளம் அவளது காலடி மண்ணை அரித்தபடியே ஓடியது. அவளது கால்களோ வேர்போல இறங்கின பூமிக்குள். என்மீது விரும்பிப்பெய்கிற இந்த மழை எனக்கு தீம்பேதும் செய்துவிடாது என்று நின்றிருந்த அவ்விடத்திலேயே சம்மணம் இட்டமர்ந்து மழைக்குள்ளேயே கண்ணயர்ந்தாள்.

இதுவரை கேட்டிராத பறவைகளும் விலங்குகளும் பூச்சிகளும் எழுப்பிய வினோத ஒலிக்கலவையில் கண் திறந்தவள், நீண்டுயரும் நெடுஞ்சிகரங்களால் விண்தொடும் இந்த மலைத்தொடரைத்தான் முதலில் கண்டாள். இருந்த ஒரு சிறுகுன்றும் குவாரிக்காரர்களால் காணாமலாக்கப்பட்ட ஊரினளான அவள் இப்போது இந்த நீள்நெடு மலைத்தொடரின் வனப்பில் தோய்ந்து திளைத்துக்கொண்டிருந்தாள். எந்த மலைத்தொடர் இது? ஆல்ப்ஸ்... ஆன்டிஸ்... இந்துகுஷ்... ஹிமாலயாஸ்... காகஸஸ்...? எதுவென அடையாளம் காணவியலாத அவள் அதற்கு “பெயர் வேண்டா மலை” எனப் பெயர் சூட்டினாள். இதன் அடிவாரத்தில் ஒளியை உருக்கி ஊற்றினாற்போல தகதகத்தோடிடும் இந்த ஆறு எதுவாக இருக்கும் என்பதையும்கூட அவள் அறிய முடியாதவளாயிருந்தாள். தனக்குத் தெரிந்திருந்த ஆறுகளின் பெயர் ஒவ்வொன்றையும் நினைவுபடுத்தி அதுவாக இருக்குமா இதுவாக இருக்குமா என்று யோசித்தவள் மீட்பாறு என்று சற்று முன்தான் அதற்கு பெயரிட்டு முடித்தாள். 

அவளைப் பொறுத்தவரை மீட்பாறு என்பதுதான் எல்லாவகையிலும் அதற்கு பொருத்தமான பெயர். அந்தப் பெயரைச் சொல்லிக்காட்டுவதற்கு அங்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று இனிதான் அவள் தேடிப் பார்க்கவேண்டும். மனித சஞ்சாரம் இருப்பதற்கான சுவடேதும் தென்படாத இங்கே யாரும் எதிர்வரப் போவதில்லை என்று தனக்கே சொல்லிக்கொண்டாள். அதெப்படி ஆறென்று இருந்தால் அங்கே மனிதக்கூட்டம் இருக்கத்தானே செய்யும்? ஒருவேளை, முதன்முதலாக இந்த ஆற்றிலிறங்கிய மனுசி தானாக இருந்தால்? அந்த நினைப்பே அவளுக்குள் பெருஞ்சிலிர்ப்பாகியது. தானொருத்தி மட்டுமே நீந்திக் களிப்பதற்கா இவ்வளவு பெரிய ஆறு என்கிற பரவசத்திற்கும் இவ்வளவு பெரிய ஆற்றில் தான் மட்டும் தன்னந்தனியாக நீந்தி எப்படி களிப்படைய முடியும் என்கிற கேள்விக்குமிடையே அவள் தத்தளித்தாள்.

கடலென அகன்றோடும் ஆற்றின் கரையேறி இளைப்பாறுவதும் இளைப்பாறுவதிலேயே களைப்படைந்தவள் போல மீண்டும் ஆற்றுக்குள் பாய்ந்து மீன்களுடன் விளையாடுவதுமாக இருந்தாள். இதென்ன படித்துறையா, ஒரே இடத்தில் நீந்தி கரையேற? இப்படி எண்ணியதிலிருந்து எங்கு வேண்டுமானாலும் இறங்கி ஆற்றின் போக்கில் போய் ஏதோவொரு இடத்தில் கரையேறினாள். இப்படி நெடுந்தூரத்தைக் கடக்கும் அவள் ஆற்றோட்டத்திற்கு எதிர்த்திசையில் மணல்புதைய நடந்து புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வதை இந்நாட்களில் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். பிறகு, இது என்ன நான் பிறந்து வளர்ந்த இடமா, இங்கு என் சொந்தபந்தங்கள் யாரும் இருக்கிறார்களா, ஒருவேளை தன்னைப்போலவே வேறு யாரேனும் உயிர்பிழைத்து இங்கே வரக்கூடும் என்று என் ஆழ்மனம் உள்ளூர எதிர்பார்க்கிறதா, எதற்காக திரும்பத்திரும்ப இதேயிடத்திற்கு வருகிறேன் என்று கேட்டுக்கொண்டாள். அதனால்தான் அவள் இப்போது சிலநாட்களாக எங்கே கரையேறத் தோன்றுகிறதோ அங்கே கரையேறி கால்போன போக்கில் நடக்கிறாள். கண்ணயரத் தோன்றினால் அங்கே இருக்கும் ஏதேனுமொரு பாறையிடுக்கிலோ மரக்கிளையிலோ படுத்துறங்கி விழிக்கிறாள். எட்டு இரவுகளும் ஏழு பகல்களுமான இக்காலம் இவ்விதமாகத்தான் இங்கு கழிகிறது அவளுக்கு. 

நேரம் பொழுது பாராது ஆற்றிலேயே ஊறிக் கிடந்தாலும் இன்னும் தன்மீது துருவேறிய இரும்பின் வீச்சம் நீங்காதிருப்பதாகவே அவள் நினைத்துக்கொண்டாள். அவ்வப்போது அந்த வீச்சம் அழுகிய பிணங்களின் வாடையோடும் பெருக்கெடுத்தோடும் கழிவுகளின் நாற்றத்தோடும் சேர்ந்து அவளது மூக்கை குப்பென அடைத்து சுவாசத்தை திணறடித்தது. இந்த வீச்சம் தன் தேகத்தில் படிந்திருக்கிறதா, அன்றி நினைவிலிருந்து மேலெழும்பி வீசுகிறதா என்கிற முடிவுக்கு அவளால் வரமுடியவில்லை. கரையணைத்த கானகத்தை நிறைத்திருக்கும் கனிகளைத் தின்று பசியாறிட விழையும்போதெல்லாம் இந்த வீச்சம் அடர்ந்து குமட்டியது. ஆற்றோரத்தை அலங்கரிக்கப் பூத்திருக்கும் மலர்களிலிருந்தும் பசுந்தாவரங்களிலிருந்தும் உலர்ந்த மரப்பட்டைகளிலிருந்தும் வீசும் மணத்தை மீறி என்றென்றைக்கும் இந்த வீச்சம் தன்மீது படிந்தேதான் இருக்கும்போல என்றெண்ணும்போதே அவளுக்கு துக்கம் பெருகியது. மனிதவாடையே பட்டிராத இந்த மலையும் காடும் ஆறும் தன்மீதிருந்து பரவும் இந்த வீச்சத்தால் மாசடைந்துவிடுமோ என்றெண்ணி மருகினாள். கருவிலிருக்கும் தன் குழந்தையின் மீதும் இந்த வீச்சம் படர்ந்துவிடுமோ என்கிற அச்சத்தில் வயிற்றைத் தடவிக் கொண்டேயிருந்தாள். இந்த அச்சம் பெருகும் போதெல்லாம் அவள் ஆற்றுக்குள்ளிருக்கும் நேரம் கூடியது. 

கிளம்பி  ஆறுநாட்களாகிய பின்னும் இன்னும் ஐந்துநாட்கள் பின்தங்காமல் நடந்தால்தான் தன் சொந்த ஊரான கோக்ரஜ்பூரை அடையமுடியும் என்கிற பரிதவிப்பில் நடந்துகொண்டிருந்த அஸ்லிமா பீவி என்கிற பெண் ஆசிய நெடுஞ்சாலை நாற்பத்தெட்டில் பிரசவித்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. உழைத்து வாழ்வதற்கென தேர்ந்து வந்தடைந்திருந்த பெருநகரங்கள் கைவிட்ட நிலையில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த தமது சொந்த ஊர்களுக்கு நடந்துகொண்டிருந்த அஸ்லிமா பீவியைப் போன்ற எத்தனையோ கர்ப்பிணிகள் மேம்பாலத்தடியிலும் தண்டவாளத்தின் மீதும் கொப்பளிக்கும் தார்ச்சாலைகளிலும் வெட்டவெளியில் தாதிகளின் துணையின்றி பிள்ளைகளை ஈன்றெடுத்தார்கள். கைக்குச் சிக்கிய கூரியகற்களால் தொப்புள்கொடியைத் துண்டித்துக்கொண்ட அந்த பச்சையுடம்புக்காரிகள் ஈரம் பிசுபிசுக்கும் சிசுவை தோளில் போட்டுக்கொண்டு நடையைத் தொடர்ந்த அவலக்காட்சிகள் அவளது மனத்திரையில் ஓடின. பேறுகாலத்திற்குரிய பிரத்யேக கவனிப்பு ஏதுமின்றி நடந்த அந்தப் பிரசவங்களில் ஒன்றென ஆகிவிடாமல், இந்த மீட்பாற்றின் கரையில் தனக்கு பிரசவம் நடக்கவிருப்பது பெரும்பேறெனக் கருதினாள். 

கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்ட நாளில் அவள் இன்னதென்று பிரித்தறிய முடியாத உணர்வுக்கலவைக்குள் சிக்கித் தவித்தாள். அவன்தான் தோளில் சாய்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் ஆனால் எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருப்பவன் போல நீண்டநேரமாக அவளது தலையை வருடிக்கொடுத்தபடி இருந்தான். காலடியில் குறுகுறுக்கும் அலையைப் போல வாஞ்சையூறிய அவனது விரல்கள் கூந்தலுக்குள் அளைவதால் கிளர்ந்த நெகிழ்ச்சியிலும் நிம்மதியுணர்விலும் நிலைதிரும்பிய அவள் அதை தன் ஆவிசேர் முத்தங்களால் உணர்த்தினாள். தனக்கும் மட்டில்லாத மகிழ்ச்சியே,  ஆனால் அச்சமும் சேர்ந்தே வளர்கிறது என்று அவள் ரகசியம் கூறியபோது பயப்படாதே, தைரியமாயிரு, நான் உடனிருக்கிறேன் என்றவன் இப்போது சிறையில் இருக்கிறான். 

பயப்படாதே, தைரியமாயிரு, நான் உடனிருக்கிறேன். நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவை என்று தடைசெய்யப்பட்ட அனகராதியிலுள்ள இச்சொற்களை அவன் அன்றைக்கு என் பொருட்டு தன்னிலை மறந்து சொல்லாமல் இருந்திருந்தால் சுதந்திரமாக வெளியில் இருந்திருப்பானே என்கிற அங்கலாய்ப்பு தீராதிருந்தது. கைதாகாமல் வெளியில் இருப்பதுவே சுதந்திரமாகிவிடுமா என்கிற கேள்வியும் அதனுள் சேர்ந்திருந்தது. 

இணையரை ஆற்றுப்படுத்த அந்தரங்கமாக பகிரப்பட்டச் சொற்களை உளவறிந்து இப்படி அரசியல் நோக்கம் கற்பிப்பது சரியல்ல என்று தன்பக்கத்து நியாயத்தைச் சொல்லவே அவன் 14ஆண்டுகள் சிறைக்குள் உழன்றிருக்கவேண்டும், அதற்குப் பிறகுதான் பிணையே கிடைக்கும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்கிற நியதியை நிரபராதம் நிரூபிக்கப்படும் வரை குற்றவாளியே என மாற்றியுள்ள ஓர் அரசின் கீழ் அவன் தனக்கான நீதியை எங்ஙனம் பெறமுடியும் என்று கேள்வி அவளை வாட்டியது. கரையேறி மரமொன்றின் அடித்தூரில் சோர்வுடன் சாய்ந்துகொண்டாள். ஒருவேளை ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து இடையில் வெளியே வந்தானென்றால் என்னை எங்கேயென்று தேடுவான்? அவன் தேடியலையும் முன்பாக நானே அவனுக்கு முன்னால் போய் நின்றுவிட வேண்டும். ஆமாம், நான் சென்றுவிடத்தான் வேண்டும்... அய்யோ, எத்திசையில் இருக்கிறது எனது நாடும் ஊரும்? 

வேண்டாம், அங்கே போக நினைக்காதே. அங்கு தேடப்படும் தேசவிரோதிகள் பட்டியலில் உன் பெயரும் இருக்கிறது. தப்பியோடிய குற்றமும் சேர்ந்துள்ளதை மறவாதே. நாட்டின் எந்த மூலையில் கால்வைத்தாலும் உன்னைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. நிலத்திலும் வான்வெளியிலும் அங்குலத்திற்கொரு காமிரா  கண்காணித்துக் கொண்டிருகிறது. கவனம்  வை, ஒற்றர்கள் அந்தரத்தில் பதுங்கி உளவறிகிறார்கள். கர்ப்பிணிகள் பலரை சிறைப்படுத்துவதையும் சிறைப்பட்ட பெண்டிரை கர்ப்பிணிகளாக்குவதையும் தமது பராக்கிரமமென முண்டா தட்டும் படையினரிடம் சிக்கிச் சீரழியப் போகிறாயா? அரசியலற்ற அபத்த யோசனைகளால் உன்னோடு சேர்த்து உன் பிள்ளையின் உயிரையும் போக்கடித்துக் கொள்ளாதே. எந்த நிலையில் இங்கே வந்து சேர்ந்தாய் என்பதை அதற்குள்ளேயே மறந்து போனாயா? அய்யோ எப்படி மறப்பேன்? அவர்களிடமிருந்து தப்பிக்க நான் பட்ட துயரங்கள் பற்றிய நினைப்பு செத்தாலும் பிணத்தோடு சேர்ந்திருக்குமே என்று அரற்றினாள். 

முன்னிரவில் இழுத்துச்செல்லப்பட்ட அவனிடம் முதற்கட்ட விசாரணையை முடித்த தேசிய சிறை நிரப்பல் துறையின் அதிகாரிகள் மறுநாள் அதிகாலை மூன்றுமணிக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் குடியிருப்பிலிருந்த இவளது வீட்டின் மதிலேறி குதித்து கதவைத் தட்டினர். கதவு தட்டப்படும் விதத்திலேயே யாரென யூகித்துவிட்ட அவளோ விடிகிற வரைக்கும் கதவைத் திறப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தாள். ஒரு கட்டத்தில் அவர்கள் கதவை உடைக்கத் தொடங்கினர். பெருஞ்சத்தத்தால் உறக்கம் கலைந்து எழுந்துவந்து ஏன் இப்படி அகாலத்தில் தொல்லை தருகிறீர்கள் என்று கேட்ட அக்கம்பக்கத்தவர்களை அவர்கள் பெல்லட் குண்டுகளால் சுட்டு விரட்டத் தொடங்கினர். குண்டடிபட்டவர்களின் கதறல் ஒலியால் பதறிப்போன அவள், தன்பொருட்டு பிறர் தாக்கப்படுவதை தடுத்துவிடும் பதைப்பில் கதவைத் திறந்து வெளியே வரும்போது மணி நான்கு. அவளையும், அரசாங்கப்பணியைச் செய்யவிடாமல் தடுத்ததாக ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட அக்கம்பக்கத்தவர் நாற்பத்தியாறு பேரையும்  தேசிய சிறை நிரப்பல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.  

நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பவை என்று தடைசெய்யப்பட்ட அனகராதியிலுள்ள சொற்களில் மூன்றை காதால் கேட்ட குற்றத்திற்காக ஆன்ட்டி நேஷனல் அபாலிசன் ஆக்ட்டின் கீழ் அவளுக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை. அதே குற்றத்தை கருவிலிருக்கும் போதே செய்துள்ள அவளது குழந்தையைக் கலைக்க ஆன்ட்டி நேஷனல் அபார்ஷன் சென்டருக்கு இழுத்துச் செல்லும் வழியில்தான் அவள் தப்பித்தாள். 

நாடடங்கின் காரணமாக வாகனப்போக்குவரத்து முடங்கியுள்ளதால் அவள் வெளியூருக்கு தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என்று கணித்த தேசிய சிறை நிரப்பல் துறையினர் அவளது நண்பர்களின் வீடுகளை நோக்கி விரைந்துகொண்டிருந்தபோது அவள் பிரதான சாலைகளைத் தவிர்த்து கவனத்தை ஈர்க்காத இண்டுயிடுக்குகளுக்குள் நுழைந்தாள். ஓட்டமும் நடையுமாக இலக்கின்றி விரைந்துகொண்டிருந்தவள் சடக்கென ஒரு திருப்பத்தில் ரயில்பாதையைக் கண்டாள். ரயிலோட்டமின்றி கைவிடப்பட்ட 13ஆவது பிளாட்பாரம் முடியும் அந்த இடம் புதர் மண்டிக் கிடந்தது. பகல் நெடுக பசியோடும் தாகத்தோடும் அங்கேயே பதுங்கியிருந்த அவளுக்குள் ஏதாவதொரு பாதுகாப்பான இடத்திற்கு போய்விட வேண்டும் என்கிற பதைப்பு கூடிக்கொண்டேயிருந்தது. தண்டவாளங்களை குறுக்கே கடந்து எதிர்த்திசை ஏகினால் நகரத்தின் மறுபகுதிக்குள் நுழைந்துவிடலாம். தங்களது நட்புவட்டத்தினரில் தேசிய சிறை நிரப்பல் துறையினரின் கவனத்திற்கு சட்டென வராதவர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று யோசித்தபடி இருட்டுவதற்காக காத்திருந்தாள். ஒன்றிரண்டு கூட்ஸ்வண்டிகள் ஓடின நேரம் போக ரயில் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. 

மாலை சுமார் ஐந்து மணியிருக்கும். ரயில் நிலையத்தின் ஒலிபெருக்கி திடீரென கரகரத்தது. புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு ஏற்றிக்கொண்டு இந்த மார்க்கத்தில் வந்து கொண்டிருக்கும் சிறப்பு ரயிலொன்று தண்ணீர் பிடிப்பதற்காக 11ஆவது பிளாட்பாரத்தில் சில நிமிடங்கள் நிற்கப்போவதாகவும் வழக்கமான வண்டி என்று நினைத்து யாரும் ஏறிவிட வேண்டாம் என்றும் அறிவிப்பு வந்தது. 

அறிவிப்பையடுத்த நிமிடங்களில் அந்த பிளாட்பாரத்தில் பொதியேற்றிய கைவண்டிகளுடன் ஆட்களின் நடமாட்டம் தெரிந்தது. வந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். அவர்கள் அன்னக்கூடைகளிலும் அட்டைப் பெட்டிகளிலும் உணவுப்பொட்டலங்களையும் தண்ணீர் பாட்டில்களையும் பரபரவென பகிர்ந்தெடுத்துக்கொண்டு பிளாட்பாரத்தின் இருமுனைகள் வரை குறிப்பிட்ட இடைவெளி விட்டு நிற்கத் தொடங்கினார்கள். அவர்களைப் போலவே இன்னொரு பகுதியினர் பிளாட்பாரத்திலிருந்து குதித்து தண்டவாளங்களைத் தாண்டி தண்ணீர் பைப்புகளை ஒட்டி நிற்கத் தொடங்கினார்கள். அவர்கள் அவளுக்கு வெகுஅருகாமையில் இருந்தனர். பொறிதெறிப்பாய் கிளம்பியோடி அவர்களுடன் கலந்து நின்றுவிட்டாள். வெறுங்கையோடு ஏன் நிற்கிறீர்கள் என்று அவளது கையிலும் ஒரு அட்டைப்பெட்டியை கொடுத்த இளைஞனொருவன் கவனமாக வண்டி நின்னதுக்கப்புறம் சன்னலில் எட்டி கொடுங்க சிஸ்டர் என்று சொல்லிவிட்டு நகர்வதற்கும் ரயில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. 

வண்டி நிற்பதற்கும் முன்பாகவே வெளியே குதித்த சிலர் தங்களிடமிருந்த காலி பாட்டில்களில் தண்ணீர் பிடிக்க ஓடினார்கள். குழந்தைகளுக்கு பால் வாங்க கடையேதும் இருக்குமா எனத் தேடினார்கள். உணவுப்பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும் தங்களுக்கும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையிழந்த பயணிகளில் சிலர் சன்னல்வழியாக கைகளை நீட்டிக்கொண்டு காத்திராமல் பாய்ந்தடித்து இறங்கினார்கள். அவர்களை கட்டுப்படுத்தி ஒவ்வொருவருக்கும் கொடுப்பது பெரும்பாடாக இருந்தது. வண்டி அடுத்து எங்கே நிற்கும், யார் என்ன கொடுப்பார்கள் என்கிற உத்திரவாதம் ஏதுமில்லாத நிலையில் கிடைப்பதை கைப்பற்றும் ஆவேசத்தை அவர்களிடம் கண்டாள். தனக்கொரு பொட்டலத்தையும் தண்ணீர் பாட்டிலையும் மீதம் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று முன்பிருந்த எண்ணத்தைக் கைவிட்டு எல்லாவற்றையும் சன்னலோரம் இருந்த குழந்தைகளுக்கு எட்டியெட்டி கொடுத்து முடித்தாள். உன் வயிற்றிலுள்ள குழந்தைக்கு என்ன கொடுப்பாய் என்று யாரோ அவளைக் கேட்பது போலிருக்கவே திரும்பிப் பார்த்தாள். அதே இளைஞன் பொட்டலங்களால் நிரம்பியதொரு கட்டைப்பையை கையில் கொடுத்துவிட்டு வண்டி கிளம்பப்போகிறது பாருங்கள் சிஸ்டர், விடுபட்டவர்களுக்கு சீக்கிரம் கொடுத்து முடியுங்கள் என்று சொல்லி நகர்ந்தான். அந்தவொரு நொடியில் என்ன நினைத்தாளோ சட்டென ரயிலில் ஏறிவிட்டாள்.

பாவம் இந்தப் பெண், நமக்கு பொட்டலங்களைக் கொடுக்கும் மும்முரத்தில் வண்டி கிளம்புவதையே மறந்து இப்படி வந்து சிக்கிக்கொண்டாளே என்று அந்தப் பெட்டியிலிருந்த பயணிகள் அங்கலாய்த்ததைப் பார்த்து அவளுக்கு அந்த நிலையிலும் உள்ளூர நகைப்போடியது. கவலைப்படாதீர்கள், அடுத்து வண்டி எங்கே நின்றாலும் நான் இறங்கி ஊர் திரும்பிக் கொள்கிறேன் என்று சமாதானம் சொன்ன அவளுக்கு அவர்கள் அமர்வதற்கான ஓர் இடத்தையும் கொடுத்தார்கள். அவளது உண்மையான திட்டமும்கூட அதுவாகத்தான் இருந்தது. ஆனால் அந்த இரவிலும் அடுத்துவந்த பகலிலும் எங்குமே நிற்காமல் ஓடிய வண்டி அடுத்த இரவுக்குள் பாய்ந்தது. வேர் ஈஸ் மை ட்ரெய்னில் சோதித்துப் பார்த்த இளையான் ஒருவன், அவ்வளவுதான் இதேவேகத்தில் வண்டி போனால் விடியலில் நாம் இறங்க வேண்டிய ஜங்ஷன் வந்துவிடும் என்றான் உற்சாகமாக. 

அவளிடம் கனிவுடன் பேசிய மூதாட்டியொருத்தி ஊர் திரும்ப உனக்கு வண்டி கிடைக்கும் வரை எங்கள் கிராமத்திலேயே தங்கிக்கொள் மகளே என்றாள். என்னமோ நம்ம ஊர் ஜங்ஷனுக்கு அடுத்தத்தெருவில் இருப்பதைப்போல நீ விருந்தாளியை அழைக்கிறாய். அங்கே இறங்கி நாம் ஊர் போய்ச்சேர ஏதாச்சும் ஏற்பாடு இருக்கா இல்லே நடந்தே மாயணுமான்னு இறங்கினால் தான் தெரியும் என்று மற்றொருத்தி அலுத்துக்கொண்டாள். கேலியும் கிண்டலுமாக வெளித்தோற்றத்தில் தெரிந்த அவர்களது பேச்சுக்களில் ஊர் நெருங்கப்போவது குறித்த அச்சமே உட்பொருளாயிருந்தது. சொந்த ஊரில் இல்லாத வாழ்வாதாரம் தேடி தொலைதூரம் போய் இப்போது உயிராசையில் திரும்பும் தங்களைக் காப்பாற்ற ஊர் என்ன வைத்துள்ளது என்கிற கேள்வி திரும்பத்திரும்ப அங்கே சுழன்றடித்தது. அந்தக் கேள்வியிடமிருந்து தப்பியோட துடிப்பவன் போன்றிருந்த ஒருவன் இப்படியே ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருந்தால் இறங்க வேண்டிய நேரத்தில் தூங்கிக்கிட்டுதான் இருக்கப்போறோம் என்று எச்சரித்தான். வண்டி நம்ம ஜங்ஷனோட சரி. அடிச்சுப்பிடிச்சு இறங்கணும்கிற அவசரமில்லை என்று இன்னொருவன் இடக்காக சொன்னதை கட்டளைபோல ஏற்று ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அவர்களை ‘வண்டி நிற்கவேண்டிய நம்ம ஜங்ஷனைத் தாண்டி ஓடிக்கிட்டிருக்கு’ என்று வேர் ஈஸ் மை ட்ரெய்ன் இளையான் கூப்பாடிட்டு எழுப்பினான். 

‘சிக்னல் பிரச்னையாக இருக்கும். அடுத்த ஸ்டேசனில் நிப்பாட்டக்கூடும்’ என்று அவர்களாக சொல்லிக்கொண்ட சமாதானத்திற்கு மாறாக நிற்பதற்கான எந்த அறிகுறியுமற்று ஒவ்வொரு ஸ்டேஷனையும் பின்தள்ளி மின்னெலென விரைந்தோடிக் கொண்டிருந்தது வண்டி. இப்போது அவன் மேலும் பதற்றத்தோடு சொன்னான் ‘வண்டி இப்போ மேற்கு நோக்கி ஓடிக்கிட்டிருக்கு. இந்த மார்க்கத்தில் போவதற்கான தேவையே இல்லை’. சங்கிலிகளைப் பிடித்திழுத்தும் ரயில் நின்றபாடில்லை.  

ஓடிக்கொண்டேயிருக்கும் ரயிலில்  இருந்துவிடுவதுதான் தனக்கு பாதுகாப்பு என்று முதலில் நினைத்துக்கொண்டிருந்த அவளுக்கும்கூட நிலைமை ஏதோ விபரீதமாகிக் கொண்டிருப்பதாக தோன்றியது. கைவசமிருந்த உணவும் தண்ணீரும் நேற்றிரவு தீர்ந்தபோது, விடியலில் இறங்கிவிடப் போகிறோம் தானே என்றிருந்த தைரியம் இப்போது மறைந்துவிட்டிருந்தது. யாரிடமும் ஒரு பருக்கைச் சோறுமில்லை, ஒரு மிடறு நீருமில்லை. வெளியேயிருந்து தோலை தீய்ப்பது போல் வீசிய அனற்காற்று உடம்பில் மிச்சம்மீதியிருந்த நீர்ச்சத்தையும் உறிஞ்சிக் குடித்தது. தாகத்திலும் பசியிலும் சொடுங்கி ஒவ்வொருவராக வீழ்ந்தார்கள். வேறுவழியின்றி கழிப்பறைக் குழாய்களில் தண்ணீர் பிடித்து உயிர்த்தண்ணீராய் விட்டதில் ஓரிருவர் மீண்டாலும் அவளது பெட்டியில் மட்டும் ஒரே நாளில் ஆறு சாவுகள். அடுத்தடுத்தப் பெட்டிகளிலும் இதேகதிதான். பார்க்கப்பார்க்க கண்ணெதிரிலேயே செத்து விழுந்தார்கள். செத்தவர்களின் குடும்பத்தார் நெஞ்சே வெடிப்பதுபோல் வீறிட்டழும் ஒலி ரயிலின் தடதடப்பை மீறி கேட்டது. 

ரயிலின் துருவேறிய இரும்பின் வீச்சமும் தண்ணீர் நின்றுபோனதால் கழிவறையிலிருந்து கிளம்பிய துர்நாற்றமும் பிணங்களிலிருந்து கசியும் நிணநீரின் வாடையும் சேர்ந்து மிச்சமிருப்பவர்களை மூச்சிழுக்கவிடாமல் திணறடித்தது. அவளுக்கு 1921ஆம் ஆண்டின்  கூட்ஸ் வேகன் ட்ராஜிடி நினைவுக்கு வந்தது. பிரிட்டிஷ் காலனியாட்சியாளர்களால், காற்றும் வெளிச்சமும் இல்லாத கூட்ஸ் வேகனில் அடைத்து சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட சுதந்திரப்போராட்ட வீரர்களான அரசியல் கைதிகள் வழியிலேயே மூச்சுத்திணறி செத்தழுகிப் போன கொடூரங்களை இந்தியாவின் திரூர் ரயில் நிலையத்தில் சுவரோவியங்களாக பார்த்திருந்த அவள், அந்த கூட்ஸ் வண்டி நூறாண்டுகளாக பிணங்களைச் சுமந்தபடி இன்னமும் ஓடிக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டாள். 

பிணங்களின் விகாரங்களை காணவொம்பாத அருவருப்பில் ஒன்றுமில்லாத வயிற்றை எக்கியெக்கி வாந்தியெடுத்துக் கொண்டிருக்காமல் அவளது சொல்படி அவர்கள் ரயிலிலிருந்து பிணங்களை வெளியே வீசிக் கடந்தார்கள். இந்தியாவின் வால்பாறைக்கும் இலங்கையின் மலையகத்திற்கும் பெருந் தோட்டத்தொழிலுக்குச் சென்றவர்கள் செத்தவர்களையும் சீக்காளிகளையும் நாய்நரிகளுக்கு இரையாக மலைப்பாதையெங்கும் கிடத்திப்போன துயரக்காட்சி உயிர்த்தெழுந்தது அவள் மனக்கண்ணில். நாட்டின் மிகப்பெரிய திறந்தவெளிக் கழிப்பறை என்று இகழப்படும் ரயில்பாதை இனி நாட்டின் திறந்தவெளி பிணவறை என்கிற இகழ்ச்சிக்கும் ஆளாகட்டும் என்று சபித்தாள்.   

கிளம்பின நாளை கணக்கில் கொண்டால் உலகின் மிகநீண்ட ரயில்பாதையான ட்ரான்ஸ் சைபீரியன் தடத்தைக்கூட இந்நேரம் ஓடியடைந்திருக்க முடியும். ஆனால் இந்த வண்டி திட்டமிட்ட நாளைத் தாண்டி ஆறாவது நாளாகவும் ஓடிக்கொண்டேயிருந்தது. சிவப்பு விளக்கு எரியும் ஓடுபாதையிலும்கூட சமிக்ஞைகளை மீறி ஓடுவதைப் பார்த்தால் இந்த வண்டி ரயில்வே தகவல் வலையத்தின் கட்டுப்பாட்டை இழந்து நாட்டையும் கண்டத்தையும் தாண்டி பூமிக்கும் வெளியே ஓடிக்கொண்டிருக்கிறதோ என அவள் ஐயமுற்றாள். ஓடும் விசையிலேயே எரிபொருளை உற்பவித்துக்கொண்டு தண்டவாளம் பதிக்காத வெளியிலும் தனக்கான ஓடுபாதையை தானே பதித்துக்கொண்டு அது நிற்காமலே ஓடிக்கொண்டேதான் இருக்கப் போகிறது என்றும்கூட யோசித்தாள். இந்த வண்டி போகும் வேகத்திற்கு எதிரே இதேபோல தறிகெட்ட வண்டி ஏதேனும் வந்து மோதினால் என்ன கதியாகும் என்று நினைக்கவே நடுக்கமாயிருந்தது அவளுக்கு. செல்போன் சிக்னலும் நின்றுபோனதால் ரயில் இப்போது எந்த மார்க்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிவியலாதபடி வெளியுலகத் தொடர்புகளிலிருந்து முற்றிலுமாக நாம் துண்டிக்கப்பட்டுவிட்டோம் என்பதை மட்டும் அவள் பொதுவில் சொன்னாள். 

தேசிய சிறை நிரப்பல் துறையிடமிருந்து அவளையும் அவளது கருவையும் காப்பாற்றிய இந்த ரயிலே இப்போது மரண வாகனமாக மாறிவிட்டிருப்பதை அறிந்த பின்னும் அதற்குள்ளேயே உழல்வது அறிவீனம். வாழ்வதற்கான ஒளி மங்கி சாவின் பிரகாசம் கூடியொளிர்வதைக் கண்டாள். சாவதென்றான பின் மலத்தொட்டியும் பிணக்காடுமாகிப்போன இந்தத் துருப்பிடித்த இரும்புக் கொட்டடிக்குள் செத்தழுக வேண்டியதில்லை எனத் தீர்மானித்தவள் அந்த நொடியிலேயே ரயில் கடந்துகொண்டிருந்த ஓர் ஆற்றுக்குள் எகிறி குதித்தாள்.  

ஓரிடத்தில் நில்லாத ஆறு அவளை ஏந்திவந்து இங்கு கரையேற்றியிருக்கிறது. ஆற்றின் மகளான அவள், இந்தச் சுதந்திரவெளியில் தன் மகவை ஈன்றெடுக்கப் போகிறாள். ஆள்வதற்கு ஒருவருமற்ற இந்த இடமே அவர்கள் வாழ்வதற்குரிய மேன்மையுடையதாய் இருக்கிறது.

https://www.vikatan.com/arts/literature/aadhavan-dheetchanya-short-story 

நன்றி: ஆனந்த விகடன், 09.09.2020

ஞாயிறு, நவம்பர் 6

ஆண்பால் பெண்பால் அன்பால் - ஆதவன் தீட்சண்யா

இருபாலினரையும் குறிப்பிடும்போது எல்லாம் `ஆண், பெண்' என்றுதான் நமக்குச் சொல்ல வருகிறதே தவிர, `பெண், ஆண்' எனச் சொல்ல வராது. ஆணுக்குப் பிறகுதான் பெண், ஆண்தான் முதல் பாலினம் என்பதே இயல்பு என மனதார நம்புகிறோம். ‘எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை’ என்பதும்கூட, ஒருவகையில் பெண் அடையவேண்டிய இலக்கு ஆண்தான் என்றே சுட்டுகிறது. ஆண் என்கிற முழுமையை நோக்கி அவள் நகர்ந்தாக வேண்டும் என்கின்றன மத இலக்கியங்கள். இந்தச் சமூகத்தின் பொது உளவியலுக்குள் தங்கியுள்ள இவ்வாறான கருத்துக்களை உள்வாங்கி வளர்பவர்களே நம்மில் பலரும்.


பள்ளி ஒன்றில் தங்கிப் படிக்கும் எனது நண்பரின் மகனையும் மகளையும் பார்க்கப் போயிருந்தோம். அடுத்தடுத்த வகுப்பறையில் படிக்கும் அவர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முடியாதாம். அக்கா-தம்பிதான் என்றாலும் அந்த வளாகத்தைப் பொறுத்தவரை அவர்கள் வெவ்வேறு பாலினத்தவர். எனவே, பேசினால் பிரம்படியோடு அபராதமும் விதிக்கப்படுமாம். `நேருக்குநேர் பார்த்துக்கொண்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டேன். `ஆசிரியர்கள் யாரும் கவனிக்காதபட்சத்தில் சிரித்துக்கொள்வோம். இல்லையேல், பிறரது கவனத்தை ஈர்க்காதபடி சைகையால் ஏதேனும் விசாரித்துக் கொள்வோம். மற்றபடி பேசிக்கொள்ள முடியாது' என்றார்கள். அந்தப் பள்ளிக்கூடம் மட்டும் அல்ல, பல தனியார் கல்லூரிகள்கூட ஒழுக்கம், கட்டுப்பாடு என்ற பெயரில் இவ்வாறான தடைகளையும் தண்டனைகளையும் அபராதங்களையும் கடைப்பிடிக்கின்றன. 

`பெண்கள், சபலபுத்தி கொண்டவர்கள். தந்தை, சகோதரன், மகன் யாராக இருந்தாலும் அவளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்ற மநுஸ்மிருதியின் துர்போதனையை இன்றளவும் கடைப்பிடிக்கும் கேவலம் கல்வி நிலையங்களிலேயே நீடிக்கிறது என்றால், அதற்கு பெற்றோர்களும் கல்வித் துறையும் அரசும் உடந்தை என்றுதானே பொருள்! 

ஒரு பெண்ணும் ஆணும் பேசிக்கொண்டாலே அடுத்த காட்சியில் அவர்களை படுக்கையறைக்குள் தள்ளிவிட்டு, `பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக்கொள்ளும்தானே!' என்கிற தமிழ் சினிமாவின் பழங்கஞ்சிப் பார்வைக்குள்தான் இந்தச் சமூகம் மொத்தமும் ஊறி நொதித்துக் கொண்டிருக்கிறது.


சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, கணவன்மார்களைத் தாக்குவதில் எகிப்தியப் பெண்கள் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளதாகத் தெரிவித்தது. கடந்த சில ஆண்டு களாக பெண்கள் மீது தொடர்ந்து அதிகரித்து வந்த வன்கொடுமைகளைச் சகித்துக்கொள்ள முடியாமல், கணவன்மார்களின் அராஜகத்துக் கான எதிர்வினையே இந்தத் தாக்குதல் என்பதை இந்த ஆய்வுகள் வசதியாக மறந்துவிடுகின்றன. 

காற்றின் சலசலப்புக்குக்கூடக் கலங்கிவிடும் மெல்லிதயம் படைத்தவர்களாக அல்லது அதிகாரம் எவ்வளவு நுண்ணியதாக வெளிப் பட்டாலும் அதை எதிர்க்கக் கூடியவர்களாகக் காட்டிக்கொள்ளும் பலர், மனைவியை உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் தாக்கித் துன்புறுத்து வதில் தம்மிடம் எந்த முரணையும் காண்பது இல்லை. காரணம், மனைவியை அடித்து உதைப் பதை அவர் தனது உரிமையாகக் கருதுகிறார். ‘ஆம்பளைன்னுகூட பார்க்காம சரிக்குச் சரி எதுத்துப் பேசிக்கிட்டே இருந்தா, நானும் எவ்வளவுதான் பொறுமையா இருக்கிறது? அதான், பொட்டச்சிக்கு இவ்வளவு வாயான்னு போட்டேன் நாலு’ என்று தன் செயலை நியாயப்படுத்துகிறார். 

குடும்பத்துக்குள்ளும் பொதுவெளியிலும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்வதிலும் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டாத நாம், பெண்களைத் தாக்குவதிலும் கொல்வதிலும் தீவிர வெறியோடு இருக்கிறோம். இதே நிலை நீடிக்குமானால், இன்றைக்கு இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு 944 பெண்கள் என்று உள்ள விகிதம், இனி வரும் காலங்களில் அஞ்சத்தக்க வகையில் மோசம் அடையக்கூடும். 


இன்றைக்கும் `ஜல்லிக்காரிச்சி' என்றே ஊர்க்காரர்களால் நினைவுகூரப்படும் எனது தாத்தம்மா (அப்பா வழிப் பாட்டி) மாரிமுத்தம்மாள், நூறு பேருக்கும் குறையாத ‘கேங்’குடன் ஜல்லி உடைக்கவும், அதைக்கொண்டு தார்ச்சாலை போடவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றி அலைந்தவர். 

இன்றைய தங்க நாற்கரச் சாலைகளுக்கு அடியில் மறைந்துகிடக்கும் பழஞ்சாலைகளில் அவரது உழைப்பும் புதைந்திருக்கிறது. காடு, மலை, ரோட்டோரம் என வேலைக்காடுகளில் கேங் ஆட்கள் முகாம் அடிக்கும்போது, தனக்கும் அங்கு ஒரு ‘சாளை’ (கொட்டகை) அமைத்து தங்கிக்கொள்வது அவர் வழக்கம். பள்ளிக்கூட விடுமுறை நாள் ஒன்றில், மஞ்சவாடிக் கணவாய் வேலைக்காட்டில் அவரைப் பார்க்கப் போனேன். அன்றிரவு அவரோடே சாளையில் தங்கியபோது, `பயமா இல்லையாம்மா?' என்று கேட்டேன். `எதுக்குப் பயப்படணும்?' என்று திருப்பிக் கேட்டார். ஆமாம், அவர் எதற்கும் பயப்பட்டு நான் பார்த்தது இல்லை.

கொத்துக்காரி என்கிற கித்தாப்பில் அதட்டி வேலைவாங்கிவிட்டு, உடல் நோகாமல் அதிகாரம் செய்யக்கூடியவராக அவர் ஒருபோதும் இருந்ததே இல்லை. வேலைக்கு ஆட்களைத் திரட்டுவது, முன்பணம் கொடுத்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது, கல் உடைப்பதற்கான குன்றுகளைத் தெரிவுசெய்வது, பாறைகளைப் பிளக்க கருவிகளையும் கரிமருந்தையும் கையாள்வது, கொட்லான் பிடித்து ஜல்லி உடைப்பது, மால் வைத்து மட்டம் பிடித்து ஜல்லிக்குட்டானை அளப்பது, பதமாகத் தார்  காய்ச்சுவது, கலவையின் திடத்தைச் சோதிப்பது என, சாலை போடும் வேலையின் அத்தனை நுட்பங்களையும் அவர் அறிந்துவைத்திருந்தார். 

அனைத்தையும் அறிந்திருந்த அவர், நேரடி உழைப்பிலும் பங்கெடுப்பவராக இருந்தார். வாரச்சந்தை நாட்களில் வேலையாட்களிடம் பட்டுவாடா செய்வதற்கான பெருந்தொகையை பெல்ட் மாதிரி நீளமான ஒரு பையில் வைத்து இடுப்பைச் சுற்றிக் கட்டி, அதன் மீதே சீலை கட்டுவார். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கான்ட்ராக்டர் என யாரிடமும் அச்சத்துடனோ, தயக்கத்துடனோ பேசக்கூடியவர் அல்ல. 

கல் உடைத்தும் கலவையைத் தூக்கியும் தார்ச்சூட்டில் வெந்தும் தான் ஈட்டிய சொந்த சம்பாத்தியத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி என் தந்தைக்குக் கொடுத்திருந்தார். வெற்றிலை, புகையிலை காரமும் தார் நெடியும் கலந்த வாசனையோடு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை சாலையோரங்களில் கழித்த அவர், பின்னாளில் அந்த வேலையைக் கைவிட்டுவிட்ட பிறகும்கூட அதே மிடுக்கோடு உழைத்து வாழ்ந்து மறைந்தார். 

என் தாத்தம்மாவை நினைவுகூரும் எவர் ஒருவரும் அவரை, ‘ஆம்பிளையாட்டம் உழைக்கக் கூடியவள். பத்து ஆம்பளைங்களுக்குச் சமமானவள். நெஞ்சை நிமிர்த்தி ஆம்பளையாட்டம் நடக்கிற தைரியசாலி. வீராதிவீரன்கூட அவகிட்ட நாலடி தள்ளிதான் நிற்கணும்’ என்று ஆண்களோடு ஒப்பிட்டுத்தான் சொல்வார்களே தவிர, அவர் தன் சுயத்தில் தேர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தார் எனச் சொல்லி நான் கேட்டது இல்லை. 

தாத்தம்மா யாரையாவது முன்மாதிரியாகக் கொண்டிருந்தார் என்றால், அது அவருடைய தாயார். ஏனென்றால், ஆண்களை முன்மாதிரியாகக் கொண்டு ஆண் போலவே வாழவேண்டும் என்பது அல்ல அவரது தெரிவு. அவரைப்போலவே இன்னும் பல பெண்கள் தாம் தேர்ந்துகொண்ட வாழ்க்கையை சமரசம் இன்றி தன்மதிப்போடு வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். ஆனால், அவர்களை ‘விதிவிலக்குகள்’ என முத்திரை குத்தி, சமூகத்துக்கு வெளியே நிறுத்திவிடும் தந்திரத்தைக் கையாள்கிறோம். 


ஒரு பெண் கிளம்பிப் போய் மாப்பிள்ளையைப் பார்த்து முடிவெடுக்கும் நிலை, இப்போது போலவே 1993-ம் ஆண்டிலும் இல்லை. எனவே, நான்தான் அரூருக்குப் போய் மீனாவைப் பார்த்து இறுதிப்படுத்தினேன். அந்த நாளில் இருந்தே மீனாவை நான் ‘அவள்’ என்றும், மீனா என்னை ‘அவர்’ என்றும் சொல்லப் பழகி இருந்தோம். திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து நான் வேலை பார்க்கும் ஓசூருக்குக் கிளம்பி வந்தோம். சோற்றை வடித்து தக்காளியை வதக்கிக் கொட்டினால் தக்காளிச் சோறு ரெடி என்கிற அளவில் எனக்கு சமையல் தெரியும். மீனாவின் சமையல் அறிவும் மோசம் எனச் சொல்ல முடியாது. வெந்நீர் வைக்கவும் முட்டையை வேகவைக்கவும் தெரிந்திருந்தது. எனவே, பரஸ்பரக் கருணையின் அடிப்படையில் சமைக்கும் முடிவை இருவருமே கைவிட்டோம். முதல் இரண்டு நாட்கள் கடைச் சாப்பாடு. அதைவிட அப்படி ஒன்றும் மோசமாகச் சமைத்துவிட மாட்டோம் என்ற நம்பிக்கையில் சமைக்கத் தொடங்கினோம். மிகக் குறுகிய காலத்திலேயே `உன் கைப்பக்குவமே தனி ருசி!' எனப் பாராட்டத்தக்க அளவுக்கு அவர் மிகத் தேர்ந்த சமையலராக மாறியிருக்க, நானோ வெறும் டீ, காபி மாஸ்டராக ஆகியிருக்கிறேன். 

சமைக்கும் வேலையில் இருந்து பின்வாங்கிக் கொண்டதைப்போலவே துணி துவைப்பது, வீட்டைத் துப்புரப்படுத்துவது, குழந்தையைப் பார்த்துக்கொள்வது போன்ற வேலைகளையும் மீனாவிடம் தள்ளிவிடுவதற்கு நான் பெரிதாக ஏதும் மெனக்கெடவில்லை. ஆண், அதுவும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆண் என்கிற அடையாளம் இவை அனைத்தையும் எனக்கு எளிதாக சாதித்துக் கொடுத்திருக்கிறது. (வறட்சி மிகுந்த மாநிலங்களில் நெடுந்தூரம் அலைந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவதற்காகவே ‘தண்ணீர் மனைவிகள்’ என்ற பெயரில் பலரைத் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இருக்கிறது.) 

வேலை நேர நிர்ணயம் இல்லாமல், ஓய்வொழிச்சல் இல்லாமல் மீனா செய்து கொண்டிருக்கும் நச்சரிப்பான இந்த வீட்டு வேலைகளுக்கு ஊதியம் நிர்ணயிப்பதாக இருந்தால்? நிச்சயம் அது எனது ஊதியத்தை விட கூடுதலாகத்தான் இருக்கும். ஆனாலும் அவர் வீட்டில் சும்மாதான் இருக்கிறார் என்கிற நினைப்பில் இருந்து நான் முற்றாக விடுபட்டுவிட்டதாகச் சொல்விவிட முடியாது. ஏனென்றால், சம்பளம் என்று ஈட்டித்தராத எந்த வேலையையும் `வேலை' என்று மதிப்பதற்கான பழக்கமோ, பயிற்சியோ நமக்கு இல்லை. என்னுடைய அரசியல்ரீதியான பிரக்ஞை மட்டும்தான் மீனாவை சமமாகப் பார்க்க வைக்கிறதே தவிர, இயல்பில் ஒரு சராசரி ஆணாகவே மிஞ்சுகிறேன். 

பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்த்ததற்காகவே `பள்ளிக்கூடத்தாள்' என்ற செல்லப்பெயர் பெற்ற என் அம்மாவும், பட்டதாரியான என் இணையரும் `பெண்' என்ற வகையில் ஒரே மாதிரியான வாழ்க்கையைத்தான் பெற்றிருக்கிறார்கள். எனக்குள்ளும் என் தந்தைக்குள்ளும் இயங்குவது ஒரே ஆண்தான் என்றால், காலமாற்றம், தலைமுறை இடைவெளி, கல்வி, அரசியல் புரிதல் என்பனவற்றுக்குப் பொருள்தான் என்ன? 


1849-ம் ஆண்டில் பிரசவம் பார்ப்பவராக பணியாற்றும் ஜீன் டெராயின் என்கிற பெண், பிரெஞ்சு நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடுகிறார். ஆண்களில் பலரும் அவரைக் கேலி செய்கின்றனர். ‘ஒரு பெண் சட்டசபை உறுப்பினராக இருப்பது என்பது, குழந்தைகளுக்குப் பாலூட்டும் வேலையில் ஒரு ஆண் இருப்பதற்கு சமமாகும்’ என்கிற விநோதமான வாதத்தை முன்வைத்து, அவரது வேட்புமனுவை நிராகரிக்கிறார் பியர் ஜோசப் ப்ரூதான் என்பவர். 

அவருக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஜீன் டெராயின் ‘இந்த வர்ணனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். எங்களால்தான் பிரசவிக்க முடியும். எங்கள் உடல்வாகு அப்படி. ஆனால், ஆண் உடலில் எந்தப் பகுதி நாடாளு மன்ற உறுப்பினராவதற்குத் தேவைப்படுகிறது என்று பியர் ஜோசப் எனக்குச் சொல்லட்டும்’ என்று கேட்டிருக்கிறார். உடலையும் உறுப்பையும் வைத்து சகஜீவியின் ஆளுமையையும் உரிமைகளையும் மதிப்பிடுவதற்கு எதிராக ஜீன் டெராயின் போன்றோர் எழுப்பிவந்த இப்படியான கேள்விகள்தான் இன்றைக்கு உள்ளாட்சி தொடங்கி குடியரசுத் தலைவர் வரையிலான பொறுப்புகளை பெண்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. ஆனால், கண்டம் கடந்து காலம் கடந்து இன்னமும் பல பியர் ஜோசப்கள் ‘நின்னுக்கிட்டே சுவர் மேல ஒண்ணுக்கு அடிக்க என்னால் முடியும். உன்னால் முடியுமா?’ என்று நாயிடம் கேட்கவேண்டிய கேள்வியைத் தவறாக பெண்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


லிவிங்ஸ்மைல் வித்யா ஒருமுறை ‘மாற்றுப் பாலினத்தவரை `மூன்றாம் பாலினத்தவர்' எனக் குறிப்பிடுகிறீர்களே, முதல் பாலினம் யார் என்று முடிவுசெய்துவிட்டீர்களா?’ என்று எழுப்பிய வன்மையான கேள்வி, இந்தச் சமூகத்துக்கு உறைக்கவே இல்லை. `பெண் பின்னமானவள், ஆண் என்கிற முழுமையை நோக்கி அவள் நகர்ந்தாக வேண்டும்' என்கின்றன மத இலக்கியங்கள். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்பதன் மூலம் பெண்ணானவள் மீட்டர்கணக்கில் வளர்ந்தாலும் பயன் இல்லை என்றாகிறது. இந்தச் சமூகத்தின் பொது உளவியலுக்குள் தங்கியுள்ள இவ்வாறான கருத்துக்களை உள்வாங்கி வளர்பவர்களே நம்மில் பலரும். 

நமக்கான ஆண், பெண் முன்மாதிரிகளை நாம் குடும்பத்தில் இருந்தே பெறுகிறோம். எனில், குடும்ப அமைப்பு எப்படி இருக்கிறது? அரிதான ஒன்றிரண்டைத் தவிர, பெரும்பாலான குடும்பங்களில் தம்பதியர் சம வயதினர் இல்லை. அவர்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஐந்து வருட வயது வித்தியாசம் பேணப்படுகிறது. கர்ப்பம், பிரசவம், பாலூட்டல் போன்ற ‘தாய்மைச் செயல்பாடுகளால்’ உடற்கட்டு குலைந்து, கணவனைவிட மூத்தவள் போன்ற தோற்றத்தைப் பெறாமல் இருப்பதற்கு ஆணைவிட பெண் இளையவளாக இருத்தல் அவசியம் என வியாக்கியானம் சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, மனைவியைவிட மூத்தவன் என்ற நினைப்பே ஆணுக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. 

அடிப்படையிலேயே குடும்பம் என்பது, ஆணின் சௌகர்யம் சார்ந்ததாக - ஆணை மையப்படுத்தியதாக இருக்கிறது. இது ஏதோ புராண காலத்து விஷயம் என்பதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. வயதான பெற்றோரை விட்டுப் பிரிந்து `தனிக்குடித்தனம் போகலாம்' என, கணவனை வற்புறுத்துவது குரூரமானது என்றும், அத்தகைய மனைவியை விவாகரத்து செய்ய கணவனுக்கு உரிமை உள்ளது என்றும் கொந்தளிக்கும் நமது நீதிமன்றங்கள், இதுகாறும் நம் நாட்டுப் பெண்கள் தம் பெற்றோரைப் பிரிந்துதான் வேறு ஒரு குடும்பத்தில் வாழ்நாள் முழுக்க இருந்து மடிவது தொடர்பாகவோ, அவளது பெற்றோரும் முதுமையில் தனிமையில் ஆதரவின்றி அல்லாடுவது குறித்தோ வாய் திறக்காமல் இருப்பதற்கு, இந்த ஆண் மையச் சிந்தனைதான் காரணம். 

மனைவியை ஒருமையிலோ, கண்ணியக் குறைவாகவோ விளிப்பது, கடுஞ்சொற்களால் திட்டுவது, தாக்கி வன்முறைக்கு ஆட்படுத்துவது, வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வது, ஓயாத வீட்டுவேலைகளைச் சுமத்துவது, குழந்தை வளர்ப்பு, முதியோர் நலம் பேணல், நோயாளி களைப் பராமரித்தல், தண்ணீர் எரிபொருள் சேகரிப்பு, சமையல் ஆகியவற்றை அவளது தனிப்பொறுப்பாக மாற்றுவது, அவளுக்கு என தனித்த ஆர்வங்களும் தேவைகளும் செலவுகளும் பொழுதுபோக்கும் இருப்பதை ஏற்க மறுப்பது, அவளது கையில் பணப்புழக்கம் இல்லாமல் தடுப்பது, அவளது வருமானத்தை அபகரித்துக் கொள்வது, எந்தவொரு விஷயத்திலும் அவளிடம் கலக்காமலே தன்னிச்சையாக முடிவு எடுப்பது, அவளாக முன்வந்து சொல்லும் யோசனைகளையும் இளக்காரத்துடன் நிராகரிப்பது என ஆணின் கை ஓங்கியுள்ள குடும்பங்களே இங்கு மிகுந்துள்ளன. இந்த ஆதிக்கத்தை அதட்டி உருட்டி மட்டுமே செய்ய வேண்டிய தேவையின்றி, அன்பின் பேராலும் ஓர் ஆணால் நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது. இத்தகைய சூழலுக்குள் வளரும் குழந்தைகள் எந்தவிதத் தனித்த போதனையோ பயிற்சியோ இன்றி, தத்தமக்கான இடத்தைக் கண்டடைகின்றனர். 

பெண் என்பவள், இரண்டாம்பட்சமானவள்; குடும்பச் சொத்தில் பங்குபெற உரிமையற்றவள்; ஆணின் விருப்பத்துக்கு அடங்கி நடக்க வேண்டியவள் என்பதை இன்றைய குழந்தைகள் வெகு இயல்பாக உள்வாங்கிக் கொள்கின்றன. 

இந்த நிலையை மேலும் மேலும் இறுக்கிப் பிணைக்கும் வகையில் வீட்டுக்குள் அவர்களது புழங்கிடம், உடை, உணவு, கல்வி, நட்புவட்டம், நடமாட்ட நேரம், பங்கெடுக்கும் நிகழ்வுகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை குடும்பம் தீர்மானிக்கிறது. அவர்கள் வளர்ந்து உருவாக்கும் அடுத்த தலைமுறை குடும்பங்கள், முன்சொன்ன குடும்பத்தின் நகல்களாக தன்னியல்பாகவே மாறிவிடுகின்றன. விதிவிலக்காக சற்றே ஜனநாயகத்தன்மையுடனும் சமத்துவப் பார்வையுடனும் நடந்துகொள்ள முயற்சிக்கும் ஆண்கள்கூட `பொண்டாட்டிதாசன்' என்பதான ஏளனத்துக்கு அஞ்சும் மானஸ்தர்களாகி, தம்முடைய இயல்பான நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள்.

`உங்க வீட்டில் சிதம்பரமா... மதுரையா?' எனக் கேலியாகக் கேட்கும் வழக்கம் எல்லாம், 
`நீ ஆம்பளையா... இல்லையா?' என முண்டா தட்டச் சீண்டிவிடுவதுதான். ஆண் தன் நிலையில் இருந்து சற்றே விலகினாலும், ஆளை மயக்கி, முந்தானையில் முடிந்தவள், குடும்பத்தைப் பிரிப்பவள் போன்ற அவதூறுகளுக்கு பெண்கள் ஆளாக்கப்படுவதை இதன் தொடர்ச்சியில் வைத்தே விளங்கிக்கொள்ளவேண்டியுள்ளது. 

குடும்பத்துக்கு வெளியேகூட ஆணைவிட பெண் தாழ்வானவள், பலம் குன்றியவள், தீட்டானவள், ஆணைச் சார்ந்தே காலம் தள்ளவேண்டியவள், ஆணின் போகத்துக்காகவே படைக்கப்பட்டவள், பெற்றோர் பார்த்து எவ்வளவு குணக்கேடான ஒருவனைக் கட்டி வைத்தாலும் மனம் கோணாது ஏற்றுக்கொண்டு அவன் வழியாக (கவனம், அவன் வழியாக) குழந்தைகளைப் பெற்று, வளர்த்து வாழ்ந்துவிட்டு, பூ பொட்டுடன் போய்ச் சேர்வதுதான் ஒரு பெண்ணின் வாழ்க்கை லட்சியம் என்ற போதனையை, குழந்தைகள் இடைவிடாது பெறு கிறார்கள். கல்விக்கூடங்கள், பாடத்திட்டங்கள், வழிபாட்டுத் தலங்கள், மதங்கள், சடங்குகள், போக்குவரத்து வாகனங்கள், பணியிடங்கள், ஊடகங்கள், கலை இலக்கியம், அரசுத் திட்டங்கள், விளம்பரங்கள் போன்றவை இந்த போதனையை செவ்வனே செய்து பெண் மீதான ஆணின் உரிமையை நிலைநிறுத்துகின்றன. ஏனென்றால், இந்தத் தளங்களில் இயங்கும் நான் உள்பட பலரும் இதே கருத்தியலால் பீடிக்கப்பட்டவர்கள் தான். 

இருபாலரும் தம்மைப் பற்றியும் பிறரைப் பற்றியும் கொண்டிருக்கும் பார்வையும் அதன் பேரிலான நடத்தையும் தனிப்பட்ட மனிதர்களின் குணாதியசங்கள் அல்ல. இன்றைய சமூக அமைப்பு வடிவமைக்கும் கருத்துக்களையே அவர்கள் தமது சொந்தக் கருத்துபோல பாவித்துக் கடைப்பிடிக்கிறார்கள். 


எல்லா வகைகளிலும் ஏற்றத்தாழ்வைப் பேணும் சமூகத்தில், இதன் அடிப்படை அலகான குடும்பத்துக்குள் மட்டும் சமத்துவம் நிலவும் என எதிர்பார்க்க முடியாது. சொந்த சாதிக்குள் மணம் முடித்து ரத்தத் தூய்மையையும், சாதிப் புனிதத்தையும் காப்பாற்றுவதே மானமுள்ள குடும்பத்தின் கடமை என்றாகிவிட்ட சூழலில், அதன் முழுப்பொறுப்பும் பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதன் பொருட்டு அவள் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும்படுகிறாள். 
அவளை நோக்கி காதலோடு பூங்கொத்தை நீட்டும் `பிற சாதிக்காரன்', தனக்குத்தானே மலர்வளையம் வைத்துக்கொள்ளும் நிலைக்குச் சாய்க்கப்படுகிறான். 

பெண் என்பவள், தன்னளவில் சுதந்திரமானவள். ஆணின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவள் பிறக்கவில்லை. தான் விரும்பியபடி வாழ்வதற்கான முழு உரிமையும் அவளுக்கு உண்டு. ஆணோடு ஒப்பிட்டுக் கொள்ளும் அவசியம் ஏதும் இன்றி, தனக்கான தேவைகளைத்தானே தீர்மானிக்கவும் தேடிக்கொள்ளவும் சக்தி உள்ளவள். இந்தக் கட்டுரை உள்பட எதுவொன்றையும் கிளுகிளுப்பாக்கும் கச்சாப்பொருள் அல்ல `அவள்' - என்பதான கருத்தியலை, குடும்பமும் சமூகமும் கடுமையாக எதிர்கொள்கின்றன. 

நாமும் அதே குடும்பத்துக்குள்ளும் சமூகத்துக்குள்ளும்தான் இருக்கிறோம் என்ற உண்மை, இப்போது ஏன் நினைவுக்கு வந்துதொலைக்க வேண்டும்?

- ஆனந்த விகடன் 2.11.2016


துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...