அயோத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அயோத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 17

பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் - சுஜாதா சிவஞானம் நூலுக்கான முன்னுரை - ஆதவன் தீட்சண்யா

“திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற முடியவில்லையே என்ற விரக்தி பெரும்பான்மை சமுதாய மக்களின் மனதில் இருக்கிறது. பிரதமர் வந்தப் பிறகாவது தீபம் ஏற்றப்படுமா என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. அதனால் பிரதமர் திருப்பரங்குன்றம் கோயில் செல்ல வாய்ப்பு இருக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் நாலுகோடி நயினார் நாகேந்திரன் கூறியதாக ஒரு செய்தியை புதிய தலைமுறை தொலைக்காட்சி 06.02.2026 அன்று வெளியிட்டுள்ளது. “பிரதமர் மோடி மதுரை வரு​வதற்கு முன்​பாக திருப்​பரங்​குன்​றத்​தில் தீபத் தூணில் தீபம் ஏற்​றி, நீதி​மன்​றத் தீர்ப்பை அரசு நிறைவேற்ற வேண்​டும்” என்று அவர் சொன்னதாக இந்து தமிழ்திசை நாளிதழும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த அங்கலாய்ப்பை மேலோட்டமாகப் படிக்கிற எவருக்கும் திருப்பரங்குன்றத்தில் ஒரு தீபம்கூட ஏற்றமுடியாத அவல நிலையில் முருகபக்தர்கள் இருப்பது போலவும், பிரதமர் வந்து தான் அதை தீர்க்கவேண்டியுள்ளது அல்லது அவர் வந்தால் தீர்ந்துவிடும் என்பது போலவும் தோன்றக்கூடும். ஆனால் நா.கோ.ந. நாகேந்திரன் அவிழ்த்துவிடுவதைப் போன்ற அநீதி எதுவும் அங்கு நிகழ்ந்துவிடவில்லை என்பதையும் அவர் தனது அரசியல் நோக்கங்களுக்காக பரப்பிவரும் அப்பட்டமான அவதூறே இதுவென்பதையும் புரிந்துகொள்ள சமீபத்தில் தமிழில் வெளியாகியுள்ள சில எழுத்தாவணங்கள் உதவுகின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கின்ற / சங்பரிவாரத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டுள்ள ஊடகங்களால் திருப்பரங்குன்றம் பிரச்சினை தேசிய முக்கியத்துவதும் வாய்ந்தது போல சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றத்தில் என்னதான் நடக்கிறது என்கிற உண்மையை தேசிய அளவில் கொண்டுசேர்ப்பது அவசியமாகிறது. கேரவன் ஆங்கில இதழில் சுஜாதா சிவஞானம் எழுதியுள்ள Starting Fires at Thirupparankundram: Judicial overreach and Sangh mobilisation bring Ayodhya to Tamil Nadu கட்டுரை   இத்தேவையை பெரிதும் நிறைவுசெய்கிறது. 

வரலாற்றாவணங்களுடனும் நேரடி கள ஆய்வுகளின் வழியே கண்டறிந்த உண்மைகளைக் கொண்டும் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையை முன்முடிவுகளற்றுப் படிக்கும் எவரொருவரும் மதுரைப்பகுதி -குறிப்பாக திருப்பரங்குன்றம் அந்தக் குன்றைப்போலவே மத நல்லிணக்க மாண்பிலும் சகிப்புத்தன்மையிலும் உயர்ந்து நிற்பதையும் அதை உடைத்து நொறுக்க சங்பரிவாரத்தினர் மேற்கொண்டுவரும் இழிமுயற்சிகளையும் உணரமுடியும். 

தனிப்பட்ட எந்தவொரு தெய்வத்துக்கோ மதத்தவருக்கோ என்றில்லாமல் பன்மதங்களும் பகிர்ந்துகொண்டு சேர்ந்தியங்கும் தலமாக அந்த மலை மாறிவந்த விதம், மக்களின் பண்பாட்டு வாழ்வில் பன்மதங்களுக்கும் சமமான இடம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் தொட்டு இன்றுவரைக்கும் மலைக்கு உரிமை கோரும் பல்வேறு வழக்குகள் – தீர்ப்புகள், அரசுகளின் தலையீடுகள், இவற்றைப் பற்றி மக்களின் கருத்துகள் ஆகியவற்றின் வழியே முழுமையானதொரு ஆவணமாக வெளிவந்துள்ள இக்கட்டுரை இப்போது தமிழுக்கு வருவது அவசியமாகிறது. 

கடவுள் நம்பிக்கையுள்ள மக்களிடம் அவர்களது வழிபாட்டுரிமைக்கு ஆபத்து என்று பீதியூட்டி வாக்குவங்கியாக மாற்றி அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது, அரசியலதிகாரத்தைக் கொண்டு தமது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலைச் செயல்படுத்துவது என்னும் சங்பரிவாரத்தின் திட்டம் அவர்களுக்கு ஓரளவுக்கு பலனளித்துள்ள நிலையில் தான் தமிழ்நாட்டை அயோத்தியாக்குவோம் என்று கொக்கரிக்கின்றனர். அயோத்தி பாப்ரி மசூதியை சர்ச்சைக்குரிய இடமென்றாக்கி, அதைத் தகர்த்து அந்த இடத்தைக் கைப்பற்றி ராமர் கோயிலைக் கட்டிமுடிக்க முடிப்பதுவரையான சங்பரிவாரத்தின் உத்திகள், அவர்கள் இப்போது திருப்பரங்குன்றத்தில் செய்துவரும் அட்டூழியங்களுடன் வெகுவாகப் பொருந்திப்போகிறது. அயோத்தியில் நிறைவேறிய இந்தச் சதியில் கடப்பாரை ஏந்திய கரசேவகர்கள் முதல் கடவுளிடம் கேட்டு தீர்ப்பெழுதும் நீதிபதிகள் வரை ஒருபுள்ளியில் இணைந்திருந்தார்கள் என்பதை கவனப்படுத்துவதன் வழியே, திருப்பரங்குன்றத்தைக் கலவரபூமியாக்கி கைப்பற்றத் துடிக்கும் சங்பரிவாரத்தின் முயற்சிகளுடன் பாரபட்சமான அணுகுமுறைகள், பரபரப்பான விசாரணைகள், பதைபதைப்புடன் வழங்கப்படும் துரிதமான தீர்ப்புகள் வழியே அரசு நிர்வாகமும் நீதித்துறையும் கைகோத்திருப்பதை சுஜாதா அம்பலப்படுத்துகிறார். ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுக, பாஜகவுக்கு இயல்பான கூட்டாளியாக இருந்துவருவதன் தொடர்ச்சியில் தான் இப்போது அக்கட்சி தேர்தலுக்கும் அப்பால் திருப்பரங்குன்றத்தில் சங்பரிவாரத்தின் நிகழ்ச்சிநிரலில் செயல்படுவதையும் இக்கட்டுரை உணர்த்துகிறது. 

வதந்திகளாலும் பொய்களாலும் மக்களை மூழ்கடித்து தமிழ்நாட்டின் மத நல்லிணக்கப் பாரம்பரியம், சிறுபான்மையினரின் நலன்களைக் காப்பதில் அக்கறை, பகுத்தறிவுக் கண்ணோட்டம் ஆகியவற்றை அழித்தொழிக்கப் பார்க்கிறது என்கிற அபாயமணி திருப்பரங்குன்றத்தில் ஒலிக்கிறது. அது தமிழ்மக்களின் மனங்களில் எதிரொலித்தாக நாம் செய்தாக வேண்டிய பணிகளுக்கு இக்குறுநூல் வலுசேர்க்கும்.


பிரிவினைக்கான இடமல்ல திருப்பரங்குன்றம் - சுஜாதா சிவஞானம்

தமிழில்: எலெக்ட்ரா

பயணி வெளியீடு

 


திங்கள், ஜனவரி 22

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்


ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புதிய ராம் மந்திர் விரிவாக்கத்திற்காக ஆகஸ்ட் 2020 இல் இடிக்கப்பட்டது. படம்: The Wire

இராமன் அயோத்தியில் பிறந்ததாக சொல்லகிறார்கள். அயோத்தியில் அவர் விளையாடினார், இளைஞராக இருந்தபோது சுற்றித் திரிந்தார், இங்கிருந்து தான் வனவாசம் சென்றார், பிறகு திரும்ப வந்து நாட்டை ஆண்டார்... அவரின் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நினைவுபடுத்தும் வகையில் அயோத்தியில் பல கோயில்கள் உள்ளன. அவர் விளையாடிய இடத்தில் குலேலா மந்திர். அவர் படித்த இடத்தில் வசிட்ட மந்திர். அவர் ஆட்சி புரிந்ததாக சொல்லப்படும் இடத்திலும் ஒரு கோயில் உள்ளது. அவர் உணவு உட்கொண்ட இடம் சீதையின் சமையலறை என்று அழைக்கப்படுகிறது. பரதன் தங்கிய இடத்தில் ஒரு கோயில். அனுமனுக்கு கோயில்... சுமித்திரைக்கு, தசரதனுக்கு... இப்படி 400, 500 ஆண்டுகால கோயில்கள் நகரெங்கும். இந்த கோயில்கள் அனைத்தும் முஸ்லிம்களால், முகலாயர்களால் இந்துஸ்தானம் ஆளப்பட்டக் காலக்கட்டத்தில் அமைக்கப்பட்டவை.

என்ன விநோதம் இது? முஸ்லிம்கள் எப்படி கோயில்களை கட்ட அனுமதித்தனர்? அவர்கள் கோயில்களை அழித்ததாக அல்லவா சொல்கிறார்கள்! அவர்களின் கண்களுக்கு முன் இத்தனை கோயில்கள் கட்டப்பட்ட போது அவர்கள் சும்மா இருந்தார்களா? ஏதும் செய்யவில்லையா? என்னமாதிரியான ஆட்சியாளர்கள் அவர்கள் - கோயில்கள் கட்ட இடம் கொடுத்துக்கொண்டே இருந்தார்களே... அது பொய்யான செய்தியாகதான் இருக்கவேண்டும். குலேலா மந்திர் முஸ்லிம் மன்னன் கொடுத்த இடத்தில் உள்ளது என்பது பொய்யாகத்தான் இருக்கவேண்டும்.  திகம்பர அக்காடாவில் உள்ள ஏடுகள் அவர்கள் 500 பீகா அளவிலான நிலத்தை வழங்கினார்கள் என்று குறிப்பிடுகின்றன. அதுவும் பொய்யோ என்னவோ? நிம்ரோ அக்காடா உள்ள இடம் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு நவாப் சிராஜ் உத் தவுலாவால் வழங்கப்பட்டது என்ற செய்தி எப்படி உண்மையாக இருக்கமுடியும்? பாபர், அவர் கட்டியதாக சொல்லப்படும் மசூதி - இவை மட்டுமே உண்மை.

அப்படி என்றால் இராமாயணம் பாடிய துளசிதாசரும் உண்மையைச் சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது. பாபர், கோயிலை இடித்து மசூதி கட்டிய ஆண்டு 1528 தான் என்பார்கள். அந்த ஆண்டு துளசி உயிருடன் இருந்தார். அவர் பிறந்தது 1511இல். இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அவர் அதைப் பற்றி குறிப்பிட்டிருப்பார் தானே?. பாபர் இராமன் பிறந்த இடத்தை அழித்ததாக சொல்லப்படும் காலக்கட்டத்தில்தான், "நான் யாசித்து உண்ணுகிறேன், மசூதியில் படுத்து உறங்குகிறேன்" என்று துளசி பாடினார். இதற்குப் பிறகே இராமசரித்திரமனஸ் காவியத்தை எழுதினார். இராமருக்கான கோயில் இடிக்கப்பட்டு, அதன் சிதிலங்களின் மீது மசூதி எழுப்பப்பட்ட நிகழ்வு அவருக்கு ஏன் வருத்தம் அளிக்கவில்லை? அவர் இது குறித்து எங்காவது எழுதியிருக்க வேண்டுமே? ஏன் செய்யவில்லை?

அயோத்தியில் உண்மை, பொய் ஆகிய சொற்களுக்கும் பொருள் இல்லாமல் போய்விட்டது.

5 தலைமுறைகளாக முஸ்லிம்கள் இங்கு பூந்தோட்டங்களை வளர்த்துள்ளனர். இந்தப் பூக்கள் கோயில்களில் - கடவுளருக்காக, இராமனுக்காக... யாருக்குத் தெரியும், எப்போதிலிருந்து என்று! ஆனால் காலங்காலமாக முஸ்லிம்கள் சன்னியாசிகளுக்கு, அடியார்களுக்கு, இராமனின் பக்தர்களுக்கு செருப்புகளைத் தைத்துக் கொடுத்துள்ளனர்.

சுந்தர பவனம் கோயிலை 40 ஆண்டுகளாக முஸ்லிம்கள்தான் பராமரித்து வந்தனர். 1949ஆம் ஆண்டு முன்னு மியான் இந்தப் பொறுப்பை ஏற்றார். டிசம்பர் 23, 1992 வரையில் தனது கடமையை நிறைவேற்றினார். கோயிலுக்குப் போதுமான பக்தர்கள் வராத சமயங்களில், வழிபாட்டு பாடல்கள் பாடப்பட்ட போது அங்குள்ள தாளவாத்தியங்களை இசைக்கத் தயங்காத அவர், அயோத்தியில் எது பொய், எது உண்மை என்பது குறித்து யோசித்திருப்பாரோ?

அயோத்தியில் அகர்வால் சமுதாயத்தினர் கோயில் கட்ட முற்பட்ட போது அவர்கள் கொணர்ந்த செங்கற்கள் ஒவ்வொன்றிலும் 786 எண் பொறிக்கப்பட்டிருந்தது. அவற்றை வழங்கியவர் ராஜா ஹூசைன் அலி கான். இந்த உண்மையை என்னவென்று சொல்வது? அகர்வால் மக்களுக்கு என்ன பித்து பிடித்திருந்ததா? அல்லது ஹூசைன் அலி கான்தான் சித்தம் தப்பியிருந்தாரா? ஒரு கோயில் கட்ட அவர் ஏன் செங்கற்களை இலவசமாக வழங்கினார்?

வழிபாட்டில் இணைந்த கரங்களை இந்து, முஸ்லிம் என்று பிரிக்க இயலாது, அவர்கள் அனைவருமே கடவுளை வழிபட வந்தவர்கள். 786 என்ற அந்த எண் இந்தக் கோயிலை அனைவருக்குமானதாக ஆக்கியது.

டிசம்பர் 6, 1992 மட்டும்தான் உண்மையா?

டிசம்பர் 6, 1992க்குப் பிறகு அயோத்தியின்  கோயில்கள் அனைத்தும் அரசின் கட்டுபாட்டுக்குள் வந்தன. அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. கோயில்களில் தீபாராதனை செய்ய இயலாமல் போனது. மக்கள் கோயில்களுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்டனர். 

பாபர் மசூதியின் மீது ஏறி இராமனை தமது கைப்பிடிக்குள் கொண்டுவர விரும்பியவர்களின் ஆணவத்தைப் பார்த்து மூடிய கதவுகளுக்கு பின்னால் இருந்த கடவுளர்கள் அவர்களைச் சபித்தார்களா?

அயோத்தியின் பழைய கோயில்களில் இரத்தவாடை அடிக்கிறதோ? இராமனின் பெயரில், பாரதத்தின் பெயரில் சிந்தப்பட்ட இரத்த வாடை அடிக்கிறதோ?

ஒரு நகரம் ஒரு பிரச்சனையாக உருமாற்றப்பட்ட கதைதான் அயோத்தி,

ஒரு நாகரிகத்தின் மரணம் பற்றிய கதைதான் அயோத்தி.



இந்தி மொழியாக்கம் - நிவேதிதா மேனன்.
ஆங்கிலம் வழித் தமிழில் - வ. கீதா

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...