மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 1

தூர்ந்த மனங்களை தோண்டும் வேலை - ஆதவன் தீட்சண்யா


ஒரு குழந்தை, பெண் பற்றிய முதலாவது  சித்திரத்தை தனது குடும்பத்திற்குள் காண்கிறது. அந்தச் சித்திரத்தின் வெவ்வேறு பரிமாணங்களைக் கண்டு வளரும் அக்குழந்தை, அதன்வழியே பெண்ணைப் பற்றிய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்கிறது. அக்கண்ணோட்டமானது, மனிதகுலத்தின் முதல் ஒடுக்குமுறையான பாலின ஒடுக்குமுறையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வது அல்லது முரண்பட்டு மறுப்பது என்கிற இருநிலைகளுக்கிடையே ஊசலாடி ஒருநிலையை அடைகிறது. அதாவது, பாலின சமத்துவம் குறித்த கருத்தாக்கம் குடும்பத்தின் விவாதப்பொருளாக இல்லாத அல்லது வெகு அரிதாகவே உள்ள இச்சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வையும் அதன் பேரிலான ஒடுக்குமுறையையும் ஏற்பதற்கான சாத்தியமே இங்கு மிகுதியாக உள்ளது. 

மூடிய கதவுகளுக்குப் பின்னே இயங்கும் குடும்பம் என்கிற நிறுவனத்திலும் ஒளிவுமறைவற்ற வெட்டவெளி என்கிற சமூகத்திலும் தனது மூத்தோரால் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள இடத்தை குழந்தைப்பருவம் முதலே ஒருவர் கண்டுவந்திருப்பினும் அது பாரபட்சமானது, நீதியானதல்ல என்று உணர்வதில்லை. காரணம், பெண் அவ்வாறு இருப்பதுதான் இயல்பு, ஒழுக்கம்  என்பதை குடும்பம், தெரு, வழிபாட்டுக்கூடங்கள், மதம், கலை இலக்கியம், கட்சிகள், அரசு, நீதி, ஊடகங்கள் போன்றவை சாத்தியமான விதங்களிலெல்லாம் பரப்பி வருகின்றன. அவ்வாறான போதனைகள் ஒரு திணிப்பைப் போன்றல்லாமல், இயல்பாக அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் இணைக்கப்பட்டதாக இருப்பதால் நொடிதோறும் திடமேறி காலங்கள் தாண்டியும் பாலினக் கண்ணோட்டத்தை தகவமைக்கின்றன.

பெண்ணின் தோற்றம் பற்றிய அறிவியல்பூர்வமான விளக்கத்தை விடவும் அவள் ஆணிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவள் என்கிற மதமயக் கண்ணோட்டமே செல்வாக்குடன் விளங்குவதால், பெண் ஆணுக்குள் அடங்கியவள் என்றே எப்போதும் பார்க்கப்படுகிறாள். பெண் பாவகரமானவள், சபலபுத்தி உள்ளவள், சந்தேக சுபாவி, குடும்பம் மற்றும் கணவனுக்கு துரோகம் செய்வதில் நாட்டமுள்ளவள், அவள் தன்னளவில் சுயேச்சையானவளல்ல, எதுவொன்றுக்கும் ஆணைச் சார்ந்தவள், ஆகவே ஆணுக்கு உடைமையானவள், ஆணின் காமஇச்சையை தணித்தாகும் பொறுப்பிலுள்ளவள், விருப்புவெறுப்புக்கேற்ப அவளை நடத்தும் உரிமை ஆணுக்கு இருக்கிறது என்பதாக மநுஸ்மிருதி போன்ற மதக் கோட்பாடுகளால் முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் நம் மனங்களை வழிநடத்துகின்றன. இதற்கிணையாகவே ஆக்கிரமிப்பும் அபகரிப்பும் ஆட்கொள்ளலும் வன்முறையும் ஆணின் இயல்புகளாக பயிற்றி வளர்க்கப்படுவதால் அவனது எல்லா அத்துமீறல்களுக்கும் ஒரு சமூக ஒப்புதல் கிடைக்கிறது. பெண்ணுடல் மீது ஆண் நடத்தும் வல்லாங்கு (வன்புணர்வு) உள்ளிட்ட வன்முறைகள் சட்டத்தின் பார்வையில் வேண்டுமானால் குற்றமாக இருக்கின்றதேயன்றி சமூகத்தின் பார்வையில் ஆணின் உரிமையாக, இயல்பான சுபாவமாக, ஆண்மையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுவதற்கும் இத்தகைய சூழலே காரணமாகிறது.

குடும்பத்தினராலும் குடும்பத்திற்கு வெளியேயுள்ள எவராலும் எதன்பொருட்டும் தாக்கப்படும் இலக்காக பெண் இருக்கிறாள். தனிநபர் குரோதம் தொடங்கி சாதி/ மதம்/ நாடு/ இனம்/ அடிப்படையிலான மோதல் வரையிலும் பெண்ணுடல் ஒரு வதைக்களமாகிறது. பிறப்புறுப்பை சிதைப்பது, கூட்டாக வல்லாங்கு செய்வது, கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, தோற்றத்தை விகாரமாக்குவது, மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவமானப்படுத்துவது, கொல்வது எனப் பெண்ணுடல்மீது நேரடியாக நடக்கும் தாக்குதலானது அவளை நிலைகுலையச் செய்கிறது. வலியும் அவமானமும் இயலாமையும் கீழ்ப்படிதலும் ஏற்படுத்தும் தாழ்வுணர்ச்சியினால் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிப்போகிறாள். தாக்குதல் உடல்மீது நடப்பினும் குன்றிப்போவதென்னவோ ஆளுமைதான். இந்த நேரடி வன்முறைக்கு சற்றும் குறையாத துன்புறுத்துதலையும் பாதிப்பையும் உருவாக்கவல்லதாக, பெண்ணின் இருப்பை கேலிக்குள்ளாக்குவது, இரண்டாம்பட்சமானவள் என்று சிறுமைப்படுத்துவது, நடத்தைப் பற்றி அவதூறுகளை பரப்புவது, ஆபாசமாக பேசுவது என நீள்கிறது வாய்மொழி வன்முறை. தன்னை தாக்குகிற ஆணை அதைவிட மூர்க்கமாக திருப்பித் தாக்குகிற வலு பெண்ணுக்கும் இருந்துவந்துள்ள போதிலும், அவ்வாறு தாக்காமல் தாங்கிக் கொள்ளும்படியாக அவளை உளவியல்ரீதியாக கட்டுப்படுத்தும் பணியை பண்பாட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

***
பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றிருப்பதாக தாம்ஸன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷனின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பிட்ட மதம் சார்ந்த பெண்ணின் பிணத்தையும்கூட வன்புணர்வோம் என்று கொக்கரிப்பவர்களால் ஆளப்படும் இந்நாடு இந்த அவமானகரமான இடத்திற்கு வந்து சேர்ந்திருப்பதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. மாற்றுமதத்தின் பெண்களை கூட்டாக வல்லாங்கு செய்து அதைப் படம்பிடித்து ஊர்தோறும் ஒளிபரப்பி தமது மதத்தின் ஆண்மையை நிரூபித்தவர்களும், ஆன்மீகப்பேரொளியை அருளுவதாய் பெண்களை வரவழைத்து ஆசிரமங்களுக்குள் கொன்று புதைத்த பாபாக்களும் யோகிகளும், பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி வல்லாங்கு செய்யும் பாதிரிமார்களும், பெண்களைத் தூக்கி வந்து வல்லாங்கு செய்துவிட்டு பிறப்புறுப்பில் லத்திக்கம்பைச் செருகி சித்திரவதை செய்யும் காவல்துறையினரும், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுக்காளாகும் கவர்னர்களும் உள்ளதொரு நாடு அதன் தகுதிக்குரிய இடத்தைத்தான் பெற்றிருக்கிறது. ஆண்களின் பாலுணர்வு வக்கிரங்களுக்கு பச்சிளம் சிசு முதல் மூதாட்டிகள் வரையான பெண் மட்டுமல்ல, பெண்ணின் பிணமும் தப்ப முடியவில்லை. கல்விக்கூடம், வழிபாட்டுக்கூடம், மருத்துவமனை, காவல்நிலையம், அலுவலகம், போக்குவரத்து வாகனம் வரை எந்தவொரு இடமும் பெண்ணுக்கு பாதுகாப்பானதாக இல்லை. எனினும் இத்தகைய வன்கொடுமைகளுக்கு அரைகுறை ஆடை, திகட்டும் அலங்காரம், வெளிநடமாட்டம், சகவாசக்கேடு உள்ளிட்ட அவர்களின் நடத்தையே காரணம் என்று பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் மோசடியை அமைச்சர்கள் முதல் ஆசிரம ஓனர்கள் வரை வெகுஜோராக நடத்துகிறார்கள். அரைகுறை ஆடைதான் வல்லாங்குக்கு தூண்டுகிறது என்றால், இடுப்பில் ஒரு துண்டுத்துனியன்றி வேறெதுவும் அணியாத குருக்களும் சாதுக்களும் ஆதீனங்களும் ஏன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை? ஆகவே இங்கு பிரச்னையின் மூலம் பெண்ணின் புறத்தோற்றமல்ல, ஆணின் உளவியலே. ஆனால் இப்படியான இழிநிலைக்கு நாடு திடுமென இன்றைய அதிகாலை வந்து சேர்ந்துவிடவில்லை. இன்டர்நெட்டும் மேற்கத்தியப் பண்பாடும் இங்கு வருவதற்கு நெடுங்காலத்திற்கும் முன்பிருந்தே பெண்களை இந்தியச்சமூகம் இவ்வாறாகத்தான் நடத்தி வந்திருக்கிறது. இந்தியச்சமூகம் என்பது உங்களுக்கும் எனக்கும் வெளியில் இருப்பதல்ல.

இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் மேற்சொன்ன இடர்ப்பாடுகளையும் தாண்டியது தலித் பெண்களின் நிலை. பெண்ணென்ற வகையில் ஓர் ஆணாதிக்கச் சமூகத்தின் பாலினப் பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் அதேவேளையில் அவர்கள் சாதியத்தின் பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தலித்தாக  தீண்டாமையின் வன்கொடுமைகளுக்கு ஆளாகிக்கொண்டே, தலித் பெண்ணாக தீண்டுதல் என்கிற வன்கொடுமைக்கும் அவர்கள் ஆட்படுகிறார்கள். “தீட்டு – புனிதம்” கற்பிதங்களின் பேரில் தொட்டால் தோஷம் பார்த்தால் பாவம் என்று தலித்துகளை ஒதுக்கிவைக்கும் சாதியர்கள், நாளொன்றுக்கு சராசரியாக மூன்று தலித் பெண்களை வல்லாங்கு செய்கின்றனர். தலித்துகள் மீது சராசரியாக ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கு ஒருமுறை நிகழ்த்தப்பட்டுவந்த வன்கொடுமை கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து சராசரியாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு வன்கொடுமை என்கிற நிலையை எட்டியுள்ளது. எந்தவொரு வன்கொடுமையினையும் போலவே இந்த சாதிய வன்கொடுமையிலும் பெரிதும் பாதிக்கப்படுவோர் பெண்களே என்று தனித்துச் சுட்டவேண்டியதில்லை.  ஓர் ஆணாக பெண்ணை வன்கொடுமை செய்வதற்கும் ஒரு சாதியராக தலித் பெண்ணை வன்கொடுமை செய்வதற்கும் பின்னேயுள்ள உளவியல் வெவ்வேறானதோ, ஒன்றுக்கொன்று முரணானதுமோ அல்ல. இரண்டுக்குமே அடிப்படை ஆதிக்க மனோபாவம்தான்.

வன்கொடுமைகளின் தனித்துவமான வடிவங்களைக்  கண்டறிந்து அவற்றை தடுப்பதற்குரிய சட்டங்களை கடுமையாக்குவதும் சட்ட அமலாக்கத்தை உறுதி செய்வதும் இந்த ஆதிக்க மனோபாவத்தை ஒரு கட்டுக்குள் நிறுத்தும் என்பது உண்மைதான். ஆனால் முற்றாக மறைவதற்கு பதில் ஒளிந்துகொள்கிற வேறு வடிவங்களில் ஆதிக்கம் தன்னை மறுவார்ப்பு செய்துகொள்ளும். எனில், தனிமனித அளவிலும் சமூகவெளியிலும் நிலவும் இந்த ஆதிக்க மனோபாவத்தை சமத்துவம் என்கிற நீதியான சிந்தனையால் மாற்றீடு செய்வதற்கான பணிகளை கூடுதலாகவும் பண்பாட்டுத்தளத்தில் ஆற்றவேண்டியுள்ளது. அதன்பொருட்டு சமத்துவம் என்பது ஓர் அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல அதுவொரு வாழ்முறையும்கூட என்பதற்கான போராட்டத்தை  தன்னளவிலும் பெருஞ்சமூகத்திலும்  பலங்கொண்ட மட்டும் நடத்தவேண்டியுள்ளது.  பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாட்டை நடத்துவதன் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இப்போராட்டத்தின் பாதையில் தனது பேரடியைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது.  

- பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநாட்டுச் சிறப்பிதழ், தீக்கதிர்-வண்ணக்கதிர், 01.07.2018





சனி, மார்ச் 3

சாதியற்ற தமிழர் காவியற்ற தமிழகம் - ஆதவன் தீட்சண்யா


தமுஎகச புதுவை மாநாட்டு கருத்தரங்கிற்கான விவாதக்குறிப்பு

ஒரேயொரு சாதி என்று எப்போதும் இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. சாதியென்றால் குறைந்தபட்சம் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கவேண்டும். அப்போதுதான் கீழ்ச்சாதி, மேல்சாதி என படிநிலைப்படுத்த முடியும். சாதியம் கிடைமட்டத்தில் ஆனதல்ல. அது, செங்குத்து வரிசையிலானது. 

தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் சாதிகளின் எண்ணிக்கை நிலவரம்
பிற்படுத்தப்பட்டோர் (பி.சி) - 143,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) - 41,
சீர்மரபினர்(டி.என்.சி) - 68,
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் - 7
பட்டியல் சாதியினர் (எஸ்.சி) - 76,
பட்டியல் பழங்குடியினர் ( எஸ்.டி) - 36

இந்த 371 சாதிகள் மட்டுமல்லாது முன்னேறிய சாதிகள் என்கிற வகைமைக்குள் அடங்கினவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் சற்றேறக்குறைய 400 சாதிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பலபத்து உட்சாதிகளாகவும் பிளவுண்டிருக்கின்றன. இவற்றில் எந்தவொரு சாதியும் இன்னொரு சாதியை தனக்கு சமமாக ஏற்பதில்லை. இந்தப் போக்கு உட்சாதிகளுக்கு இடையிலும் வலுவாக இயங்குகிறது.  பட்டியல் சாதியினரும், பட்டியல் பழங்குடியினரும் சாதிய கட்டமைப்புக்குள் ஒருபோதும் இல்லாதவர்கள் என்ற போதிலும் தொடர்ந்து சாதியச்சமூகத்திற்குள் இருந்துவருவதால் அவர்களும் தம்மை சாதியாகவே குறுக்கிக்கொண்டுவிட்டனர்.

சாதியமானது, இங்கு மனிதர்களையும் அவர்களது வாழ்விடங்களையும் இயற்கை வளங்களையும் பொதுச்சொத்துகளையும் பழக்கவழக்கங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் சகலவிதமான உரிமைகளையும் கடமைகளையும் பாரபட்சமாக  பிரித்துள்ளது. அன்றாட வாழ்வில் மனிதசுபாவத்துடன் ஒருவர் மேற்கொள்ளும்  அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிப்பதாகவும் கட்டுப்படுத்திச் செலுத்துவதாகவும் சாதியமே இருக்கிறது.

சாதி என்பது இன்னதுதானென்று திட்டவட்டமாக ஒரு பருப்பொருளைக் காட்டுவதுபோல காட்ட முடியாது. அது தனிமனித அளவில் ஓர் உணர்வுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதிக்குழுவின் அங்கத்தினர் என்ற முறையில் சாதியானது ஓர் உணர்வு என்பதற்கும் அப்பால் போய் ஒவ்வொரு தனிமனிதருக்குமான கடமைகளையும் உரிமைகளையும் திட்டவட்டமான பாரபட்சத்துடன்  வரையறுக்கிறது.   இந்த பாரபட்சம்தான் இங்கு ஒருவர் எந்த வர்க்கத்தில் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. வர்க்கம் உள்ளிட்டவை மாறும் தன்மை கொண்ட அடையாளங்கள். மாறும் அடையாளங்களில் ஒருவரது நிலை எத்தகையதாக மாறினாலும் அவரது சமூக அந்தஸ்து மாறா அடையாளமான சாதியை வைத்தே  வழங்கப்படும். சாதியம் வகுத்தளித்த வர்க்கத்திலிருந்து ஒருவர் உயர்வதோ தாழ்வதோ அவரது சமூக அந்தஸ்தை பெரிதும் பாதிப்பதில்லை. அதாவது அவரது சாதி என்கிற கூட்டு அடையாளத்திற்குள்ள அந்தஸ்தையே அவர் தனிநபராக பகிர்ந்துகொள்ள வேண்டியவராகிறார். பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுவிடுகிற அடிநிலைச்சாதி தனிநபர்கள் மீது தீண்டாமையின் கடுமைதான் குறைகிறதேயன்றி அவரது சாதிக்குரிய சமூக அந்தஸ்து என்னவோ அதுவே அவருக்கு வழங்கப்படுவதை இதற்கு உதாரணமாக கூறலாம்.

ஒவ்வொரு சாதியினரும் தாங்கள் தனித்தவமானவர்கள் புதினதமானவர்கள் என்று நிறுவுவதற்காக தங்களது சாதியின் தோற்றம் பற்றிய அனேக புனைவுகளை இட்டுக்கட்டியுள்ளனர்.  இதன் மறுதலையாக இப்புனைவுகள் பிறசாதியினர் பற்றிய இழிவான பார்வையைக் கொண்டிருக்கின்றன. பிறசாதியின் ரத்தம் தன் சாதிக்குள் கலந்து தீட்டுப்பட்டுவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு சாதியுமே முனைப்புடன் இருக்கிறது. இதற்காக வகுக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுத்திட்டங்களை வாழ்நெறியாக வரித்துக்கொண்டு வாழும் அடிப்படை அலகாக இங்கு குடும்பம் என்கிற அமைப்பு இருக்கிறது. ஒரே சாதியைச் சார்ந்த ரத்த உறவுகளின் தொகுப்பாக குடும்பம் உள்ளது. இந்த குடும்பங்களின் தொகுப்பாக சாதி உள்ளது. 

தன் சாதிக்குள் பிறசாதி ரத்தம் கலப்பதை - அங்கித்தினர்களின் வாழ்க்கைத் துணையாக பிற சாதியினர் வருவதை தடுப்பதில் குடும்பமே முதன்மையான பாத்திரத்தை வகிக்கிறது.  இதன்பொருட்டு ஒவ்வொரு சாதியும் வகுத்துள்ள கட்டுப்பாடுகள் பலவும் பெண்களை ஒடுக்கும் தன்மையுடையவை. ஒடுக்குமுறை என்பதை வன்முறையாக மட்டும் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. உள்ளங்கையில் வைத்து அல்லது கண்ணின் கருமணி போல காக்கும் அன்பு பாசம் ஆகியவற்றாலான வளர்ப்பினூடாகவும் ஒடுக்குமுறை நிகழ்கிறது. கிழித்தக் கோட்டை தாண்டாத பிள்ளையாக வளர்ப்பதென்பது, சாதிக்கோட்டினை தாண்டாமல் சொந்த சாதிக்குள்ளேயே வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்க பயிற்றுவிப்பது என்பதுதான். சாதி என்பது ஒருவர் யாரை திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது செய்துகொள்ளக்கூடாது என்பதற்கான எல்லை என்று இதனாலேயே கூறப்படுகிறது. சாதியற்ற சமூகத்தை விரும்புகிற எவரொருவரும் இந்த எல்லையை உடைத்தாக வேண்டியுள்ளது.

அகில இந்திய அளவில் 5சதவீத திருமணங்கள் மட்டுமே சொந்த சாதிக்கு வெளியே நடக்கின்றன. சாதிகளுக்கிடையில் மணக்கலப்பு நடக்கும் மாநிலங்களில் தமிழகம் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆணோ பெண்ணோ யாரேனுமொருவர் தலித்தாக இருந்து மணக்கலப்பு நடப்பது இங்கு அரிதினும் அரிதானது. அப்படியே நடந்தாலும் அந்த திருமணங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றன. அதன்பொருட்டு தலித்துகள் கூட்டாக தண்டிக்கப்படுகின்றனர். அவர்களது சொத்துகள் சூறையாடப்படுகின்றன.  

சராசரியாக ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்கொடுமையை சாதியத்தின் பேரால் தலித்துகள் மீது நடத்தும் இந்தியர்களிலிருந்து தமிழர்கள் எவ்வகையிலும் வேறுபட்டவர்களல்லர். தமிழகம், புதுவை மட்டுமல்ல, புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலும்கூட தமிழர்கள் சாதியத்தை வலுவாக கைக்கொண்டுள்ளனர். எனவே சாதியற்ற தமிழர் என்ற முழக்கத்தை எவ்வாறு மெய்ப்படுத்துவது என்று இம்மாநாடு விவாதிக்க வேண்டியுள்ளது.

சங்ககாலத்திலோ அல்லது சமீபகாலம் வரையிலோ தமிழர்களிடையே சாதியில்லை என்று நிறுவுவதன் மூலம் சமகாலத்தில் சாதியத்தை ஒழித்துவிட முடியுமா?

தொழில் அடிப்படையில் சாதி உருவானது என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. எனில் தொழில்மயமாக்கல் முழுவீச்சில் நடக்கும் போது சாதியம் ஒழிந்துவிடும் என்று கூறுவது முரணில்லையா?

நிலப்பிரபுத்துவம் ஒழியும் போது சாதியம் ஒழிந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. நிலப்பிரபுத்துவம் முற்றாக ஒழிக்கப்பட்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்து பல நூற்றாண்டைக் கடந்த இந்தியர்கள் / தமிழர்களிடையே சாதியம் இன்றும் நிலவுவது ஏன்?

சாதியம் தன்னை தக்கவைத்துக்கொள்வதற்காக அகமணமுறையை கைக்கொண்டுள்ளது. அகமணமுறை அந்தந்த சாதிக்குரியவர்களை மறுவுற்பத்தி செய்து கொடுக்கிறது. எனில், தமிழர்களை சாதியற்றவர்களாக ஆக்குவதற்குரிய அடிப்படை வேலையாக அகமணமுறையை ஒழித்துக்கட்டுவதற்கு நம்மிடம் உள்ள வேலைத்திட்டம் என்ன?

சாதியம் சூழ இருக்கும் தமிழர்களை மட்டும் தனியாக துண்டித்து எடுத்து சாதியற்றவர்களாக்குவதற்குரிய சாத்தியங்கள் என்னென்ன?

சாதியத்தின் உச்சியில் பார்ப்பனர்களை இருத்தி அவர்களைப் பேணுவற்காக சமூகத்தின் உழைப்பு ஆற்றல் வளங்கள் அனைத்தையும் திருப்பிவிடுவதுதான் பார்ப்பனீயம். இந்த நோக்கத்திற்காக தனிமனித வாழ்வையும் சமூகத்தையும் சமூகம் உருவாக்கிக்கொண்டுள்ள அரசு உள்ளிட்ட நிறுவனங்களையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற சட்டத்தொகுப்புதான் மநுஸ்மிருதி. மநுஸ்மிருதியின் அடிப்படையில் சமூகத்தை கட்டுப்படுத்தும் போக்கிற்கு எதிராக உருவான சமூகநீதிக்கான போராட்டம் ஒருகட்டத்தில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பார்ப்பனர்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. இந்தப் போராட்டம் பார்ப்பனரல்லாதாரின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசாங்கங்கள் உருவாவதற்கும் இட்டுச்சென்றது. ஆயினும் சமூக அமைப்பு முழுவதிலும், தனிமனித அளவிலும் புரையோடிய பார்ப்பனீயச் செல்வாக்கு அப்படியே நீடித்தது. பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை கேள்விக்குட்படுத்தாத, அவர்களது வாழ்முறையே மேலானது என்கிற, அவர்களைப் போல வாழ முயற்சிக்கிற பண்பாட்டு அடிமைத்தனத்தைப் பரப்பும் முயற்சி தடையின்றி நடந்தது. இந்த பண்பாட்டு அடிமைத்தனத்தின்  மீதுதான் பார்ப்பனீயம் இந்துத்துவம் என்னும்   புதிய பெயரில் கட்டமைக்கப்படுகிறது.

பரந்த இந்த நாடு வெவ்வேறு பண்பாட்டு தனித்துவங்களைக் கொண்ட சமூகங்களைக் கொண்டது என்கிற பன்முகத்தன்மையை ஏற்கமறுக்கும் இந்துத்துவம் ஒற்றைத்துவத்தை முன்வைக்கிறது. அந்த ஒற்றைத்துவம் பார்ப்பனீய கண்ணோட்டத்திலானது. அது பார்ப்பனர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் மநுஸ்மிருதிக்கு தனது விசுவாசத்தைக் காட்டுவதாக இருக்கிறது. அதனாலேயே இந்துத்துவம் அரசியல் சட்டம் முன்வைக்கும் 1=1 என்கிற சமத்துவத்தை ஏற்றுக்கொள்வதில்லை. சமஸ்கிருத திணிப்பு, மாட்டுக்கறிக்குத் தடை, வேதவழிப்பட்ட சடங்குகளையும் யாகங்களையும் மீண்டும் நிகழ்த்துவது, பார்ப்பனர்களின் உணவை, வழிபாட்டுமுறையை, தெய்வத்தை, கலையை இந்திய அடையாளமாக முன்னிறுத்துவது, ஆரியர்கள் இந்தியாவின் பூர்வக்குடிகளென வரலாற்றைத் திரிப்பது, பாடப்புத்தகங்களை தமது நோக்கங்களுக்கேற்ப எழுதுவது, இந்துவல்லாத பிற மதத்தவரை அன்னியராகச் சித்தரிப்பது, பெண்களை ஆணுக்கு அடங்கியவர்களாக காட்டுவது, சாதியம், அகமண முறை தேவை என நியாயப்படுத்துவது என இந்துத்துவம் பார்ப்பனீயத்தை முன்னிறுத்துகிறது. பார்ப்பனீய மதிப்பீடுகளை ஏற்க மறுப்பவர்கள் மீது சட்டப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமற்ற முறையிலும் தாக்குதல் தொடுக்க இந்துத்துவம் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி களமிறக்கியுள்ளது. சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதாக வெளித்தோற்றத்தைக் காட்டிக்கொண்டு தனது பயங்கரவாதச் செயல்களை அது நடத்திவருகிறது.

வரும் 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஒருவேளை பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டாலும் கூட இப்போதுவரை காவி பயங்கரவாதிகளாகிய இந்துத்வாவினர் சமூகத்தில் பரப்பியுள்ள நச்சை செயலிழக்கச் செய்ய நீண்டகாலம் பிடிக்கும். அந்தளவுக்கு வெகுமக்களின் யோசிப்புமுறையிலும் செயல்பாட்டிலும் குறுக்கிட்டு வருகிறார்கள். குடிமக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக தலையிடுவதாகவும் அவர்களது செயல்பாடுகளை கண்காணிப்பதாகவும் அரசை மாற்றுவதில் காவிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்று நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தங்களுக்கு கட்டுப்பட்டதாக இருந்து நாட்டை நிர்வகிப்பதாக அல்லாமல் தங்களை ஒடுக்குவதாக அரசு இருக்கிறது என்பதை மக்கள் பீதியுடன் உணரும் காலமாக இது இருக்கிறது. குடிமக்களின் உயிர்வாழும் உரிமை உள்ளிட்ட அனைத்தும் அரசின் கருணையின்பாற்பட்டது என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், ஊடகங்கள், வங்கிகள் என்று அனைத்து நிறுவனங்களையும் அதனதன் சுயேச்சைத்தன்மையை இழக்கச்செய்து ஆளுங்கட்சி தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுள்ளது.

அரசின் அன்றாட தாக்குதலிலிருந்து காப்பாற்றிக்கொள்வது பற்றி மக்களின் கவனம் முழுவதையும் திசைதிருப்பியுள்ள காவிகள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு திருப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்களது அமைப்புகளை நடத்துவதற்கு தேவையான நிதியாதாரத்தையும் ஊடகபலத்தையும் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்றுவருகிற காவிகள் அதற்கு பிரதியுபகாரமாக இதைச் செய்கிறார்கள் என்று இதை குறுக்கிவிடக்கூடாது. கார்ப்பரேட்டுகளும் காவிகளும் இனம் பிரித்துக் காட்டமுடியாதவாறு ஊடிக்கலந்திருக்கிறார்கள்.

சாதியடுக்கின் உச்சத்திலுள்ள பார்ப்பனர் உள்ளிட்ட சிறுபிரிவினர் தான் இங்கு பெரும் நிலவுடைமையாளர்களாக இருக்கின்றனர். அவர்களிலிருந்து ஒரு பகுதியினர்தான் நவீன முதலாளிகளாகவும் உருவெடுத்தனர். அரசு இயந்திரத்தில் கொள்கை முடிவெடுப்பவர்களாகவும் அவர்களே இருந்தனர், இருக்கின்றனர். இந்த பெருநிலப்பரப்பை சந்தையாக மாற்றி சுரண்டுவதற்கு அவர்களுக்கு ஒருகாலத்தில் மதச்சார்பற்ற இந்தியாவும் ஜனநாயகத்தோற்றம் கொண்ட அரசும் தேவைப்பட்டது. இந்த நாட்டின் இயற்கை வளங்களையும் உழைப்புச்சக்தியையும் பொதுச்சொத்துக்களையும் கொள்ளையடிப்பதற்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டுவிடாதவாறு பிளவுபடுத்துவதற்கும் மீறி போராடினால் ஒடுக்கவும் ஒரு பிரிவினைவாத சர்வாதிகார அரசு அவர்களுக்கு இப்போதைய தேவையாய் இருக்கிறது.

இந்த நிலையில் காவியற்ற தமிழகம் என்கிற முழக்கத்தின் நடைமுறைச் சாத்தியங்களை ஒருபடித்தான செய்முறை குறிப்பு போல என்னால் வழங்கிவிட முடியவில்லை. ஆனால் அந்தந்த வட்டாரம் சார்ந்து காவிகள் நடத்திவரும் அமைப்புகள், அந்த அமைப்புகளின் பயங்கரவாத நடவடிக்கைகள், அவை மக்களிடையே பரப்பிவரும் நச்சுக்கருத்துகள்,  கார்ப்பரேட் செயல்பாடுகள் பற்றியும் அதற்கெதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் இயக்கங்கள் பற்றியும் ஒரு விவாதத்தை தீவிரமாக நடத்திட இந்த முழக்கம் உதவும் என்று நம்புகிறேன்.

மாநாடு சிறக்க வாழ்த்துகள்.

தோழமையுடன்
- ஆதவன் தீட்சண்யா
25.02.2018




புதன், பிப்ரவரி 22

‘இறைவனது படைப்பிலேயே மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு இருக்கிறது.... ’ - ஆதவன் தீட்சண்யா

பாத்ரூமுக்குப் போய்விட்டு வந்தால் கூட உடனே அதை ஒரு பயணக்கட்டுரையாக எழுதிவிடும் சிலரைக்கண்டு நான் மலைத்துப்போவதுண்டு. கை ஈரம் காய்வதற்குள் அங்கு முக்கியது முணகியது மூக்கை நோண்டியது என்று எல்லாவற்றையும் விலாவாரியாக எழுதி பிரசுரித்துவிடுகிற அந்த சாமர்த்தியம் நமக்கு சுட்டுப்போட்டாலும் வராதுபோல என்று என்னை நானே நொந்து கொள்வதுண்டு.  சுட்டுப்போட்ட பிறகு வந்தால் என்ன வராதொழிந்தால் என்ன என்று சமாதானப்படுத்திக்கொண்டு எழுதாமலே விட்டுவிடுவதுண்டு. இப்படித்தான் இங்கிலாந்து, இலங்கை பயணங்கள் குறித்து எதுவுமே எழுதாமல் விட்டுத்தொலைத்தேன். என் பிரியத்திற்குரிய தோழி நந்தினி இருக்கப்போய் ஆனந்தவிகடனிலும், சூரியக்கதிரிலும் அந்தப் பயணங்களை மையப்படுத்தி இரண்டு பேட்டிகள் வந்தன. தோழர் பழனியப்பன் முயற்சியில் சண்டே இண்டியனில் ஒருபக்க பேட்டி வந்தது. மற்றபடி எழுதுவதற்கு அனேகம் இருந்தும் இன்றுவரை எழுதவேயில்லை.  இதேகதிதான் மலேசிய சிங்கப்பூர் பயணத்திற்கும் நேரப்போகிறது என்று நினைத்திருந்த வேளையில் நண்பர் பாலமுருகனும் தோழி.மாலா நாயுடுவும் புகைப்படங்களை வெளியிட்டு எழுதியாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கிவிட்டனர்.

முன்பொருமுறை தனது வலைப்பதிவு ஒன்றில் எனது எழுத்துகளைப் பற்றி நண்பர் நவீன் குறிப்பிட்டிருந்தார். அதற்குப்பிறகு நீண்டநாட்கள் கழித்தே நாங்கள் தொலைவழி நண்பர்களானோம். கடந்த ஆண்டு இங்கு வந்திருந்த அவரை சந்திக்க முடியாமலே போய்விட்டது பற்றிய உளைச்சல் ஒருபக்கம் இருந்தது. அவரிடம் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியூடாக நான் நடத்தியிருந்த நேர்காணல் வேறு இங்குமங்குமாக அல்லாடிக்கொண்டிருந்தது. (இந்நேர்காணலின் முதற்பகுதி இம்மாத அம்ருதாவில் வெளியாகியுள்ளது). இதனிடையே ‘இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை’ என்ற எனது சிறுகதையைப் படித்துவிட்டு பாலமுருகன் எனக்கு நண்பரானார். பிறகு அந்தக்கதை எழுதப்பட்ட விதம் குறித்து அவர் என்னிடம் நடத்திய நேர்காணல் வல்லினம்.காம் இணைய இதழில் வெளியானது. இருவரும் மலேசியாவுக்கு ஒருமுறை வந்துபோங்களேன் என்று அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு மின்னல்வேக பயணம் வந்திருந்த பாலமுருகன் ஒசூருக்கே வந்து அழைப்பு விடுத்துப்போனார்.

மலேசியாவின் மூத்த பத்திரிகையாளரும் பெரியாரில் தொண்டருமான முனைவர்.பெரு.தமிழ்மணி அவர்களின் முன்முயற்சியில் 2012 ஜனவரி 27-29 வரை கோலாலம்பூரில் பன்னாட்டு பகுத்தறிவு மாநாடு. தோழர்கள் வே.ஆனைமுத்து, சுபவீ, விடுதலை ராசேந்திரன், திருமாவளவன், ஓவியா, இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகர் வாகை சந்திரசேகர் என்று விரியும் இம்மாநாட்டு கருத்துரையாளர்கள் பட்டியலில் என்னையும் அ.மார்க்ஸையும் இடம்பெறச் செய்து வரவழைப்பதில் நவீனும் வல்லினம் குழுவும் தீவிர முயற்சி எடுத்திருந்தனர். எங்களையெல்லாம் சந்திப்பதற்கென்று இலங்கையிலிருந்து தோழர்.தேவாவும் (குழந்தைப்போராளி மற்றும் அனொனிமா மொழிபெயர்ப்பாளர்)  மலேசியாவுக்கு வந்துவிட்டிருந்தார்.

பெரும் தொண்டர்குழு அசரவைக்கும் ஏற்பாடுகளை செய்திருந்தது. மலேசியாவில் இவ்வளவு பேர் பகுத்தறிவின் வழி நின்று வாழ்கிறார்களா என்று வியந்துபோகுமளவுக்கு அரங்கு கொள்ளாத திரள். கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டவர்களே 600 பேர். அதைவிடவும் கூடுதல் எண்ணிக்கையில் பங்கேற்பு இருந்தது. மலேசியாவின் பல பகுதிகளிலிருந்தும் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வந்திருந்தனர். குறிப்பிடத்தக்க அளவில் பெண்களின் பங்கேற்பு இருந்ததை இங்கு சொல்லத்தான் வேண்டும்.

எல்லாம் ஒழுங்காக போய்க் கொண்டிருக்கிறதா என்பதைப்போல மேடையின் பின்னே கட்டப்பட்டிருந்த பதாகையிலிருந்து பெரியார் பார்த்துக்கொண்டிருந்தார். மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றிய அமைச்சர் டத்தோ பழனிவேலு இப்படி ஆரம்பித்தார்- ‘இறைவனது படைப்பிலேயே மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு இருக்கிறது.... ’.

இப்படி பேசியதற்காக அந்த அமைச்சரையோ  அல்லது இப்படியானவரை அழைத்தமைக்காக மாநாட்டு ஏற்றபாட்டளர்களையோ பேனரில் இருந்த பெரியார் தனது கைத்தடியால் கொட்டுவார் என்று எதிர்பார்த்தேன். தன்னை வைத்துக் கொண்டே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றவர்களையும் மஞ்சத்துண்டு மகாத்மியம் பேசுகிறவர்களையும் கொல்லூர் மூகாம்பிகையை கும்பிட்டவர்களையும் பார்த்து பழக்கப்பட்டிருந்த அவரோ என்னமும் உளறித்தொலையுங்கள் என்பதுபோலவோ, இதுக்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதுபோலவோ தெரிந்தார்.

( தொடரும்...)

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...