தமுஎகச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமுஎகச லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 3

முறிமருந்தாக… ஆதவன் தீட்சண்யா

2026 ஜூன் 14 அன்று கோவையில் தமுஎகச நடத்தும் "ஆதவன் தீட்சண்யா படைப்புலகம்" நிகழ்வில் வெளியாகவிருக்கும் எனது சிறுகதைத்தொகுப்புகளுக்கான முன்னுரை.





நான் இதுவரை எழுதியுள்ள ஐம்பத்தெட்டுச் சிறுகதைகளையும் தொகுத்து இரண்டு பாகங்களாக வெளியிடுகிறது சந்தியா பதிப்பகம். வாய்க்கும்போது இன்னும் எழுதுவேன் என்கிற சம்பிரதாய உறுதிமொழி எதையும் இப்போது வழங்குவதற்கு நான் தயாரில்லை. ஏனென்றால் எமக்குத் தொழில் எழுத்து மட்டுமேயல்ல. பிறகு, எழுதுவது தவமோ வரமோ பிரசவமோ பிள்ளை வளர்ப்போ அல்ல, அது இயல்பான மனிதச்செயல்பாடுகளில் ஒன்று என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும் தானே! 

நூற்றாண்டைக் கடந்துவிட்ட தமிழ்ச்சிறுகதையின் வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டுமென்று எனக்கு கிஞ்சித்தும் எண்ணமில்லை. அதுவாக எனக்குரிய இடத்தைக் கொடுத்து இணைத்துக் கொள்வதன்றி வரலாற்றுக்கு வேறு வழியுமில்லை. (செருக்கு / அகந்தை/ தலைக்கனம்/ சுயதம்பட்டம் என்பதாக இவ்வரியை யாரும் புரிந்துகொண்டுவிடுவார்களோ என்கிற பதற்றமின்றிதான் எழுதுகிறேன்). 

இலக்கிய உலகத்தில் என் கதைகளைப் பற்றி அப்படியொன்றும் நல்லபிப்ராயம் இல்லை. இதனினும் நனிசிறந்த வெகுமதி ஏதுளது? கதைகளை எழுதிக்கொண்டிருப்போம், அபிப்ராயங்கள் குடோன்களிலேயே இருக்கட்டும். 

என் கதைகளின் வரைபடம் சீராக இல்லையென்பதை இப்போது ஒருசேர படித்தபோது அறிந்து கொண்டேன். தனிமனித அனுபவம் தொடங்கி ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டனுபவங்கள் வரையாக அது எங்கெங்கோ எப்படியெப்படியோ காலநேரங்கடந்து பங்குசந்தைக் குறியீடு போல ஏறியிறங்கிப் பாய்கிறது. அதன் வாகு அப்படி அமைந்திருப்பதற்கு திட்டவட்டமான காரணங்கள் உண்டு. அந்நேரத்து மனநிலை எழுதுவதற்கான கருப்பொருளைத் தெரிவுசெய்கிறது. அதற்கான உழைப்புக்கும் முனைப்புக்கும் உண்டானதொரு கதை கிடைக்கிறது. அதனதனை அவ்வவ்வாறே படிக்கவும் கிழிக்கவும் மதிக்கவும் மிதிக்கவும் நம் அரசியல் சாசனம் வழங்கியுள்ளதைவிடவும் கூடுதலான சுதந்திரம் உங்களுக்கு உள்ளது. 

உலகமயமாக்கலையும் மதமயமாக்கலையும் இயல்பானவையெனக் கருதி ஏற்றொழுகும் இக்காலத்தின் மீதான புகார்களால் அலைக்கழிக்கப்படுபவன் நான். இடையறாத மனத்தொந்தரவில் கவனம் சிதறி ஒன்றிலும் நிலைகொள்ளாமல் ஓடித்தாவுகிறவன். நான் ஒரு நுகர்வாளன், நுகர்வுப்பண்டமாயும் ஆக்கப்பட்டவன். என் மொழி, சிந்தனை, செயல் எல்லாமே செலாவணியாகாதவையோ என்று அவ்வப்போது எழும் அய்யத்தால் திகைத்து நிற்பவன். நஞ்சைப் போல என் எதிராளிகள் பரவுவதைக் காணப்பொறுக்காத சினத்தில் முறிமருந்தாக என் கதைகளைச் செலுத்துகிறேன். மருந்தென்றான பிறகு பாரபட்சம் கூடாது, யாவருக்கும் ஒரு சொட்டுண்டு. உங்களது பெயரெழுதியச் சொட்டு எதுவெனக் கண்டறியுங்கள். 

எல்லாவற்றையும் பகடியாக்கிவிடுவதாய் ஒரு பழி என் கதைகள் மீது படிந்துள்ளது. முக்கால நடப்புகளும் பகடியாகத்தான் இருக்கின்றன. கண்டறிந்துக் காட்டுவது எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குற்றம்? பணமதிப்பிழப்பு பற்றி நான் கதையெழுதி ஒன்பதாண்டுகளுக்குப் பின் அது இங்கு நடந்தது. காசுக்கு மாற்றாக கொடுக்கப்பட்ட சளி மிட்டாயை காசாக ஏற்கும்படி மக்கள் கலகம் செய்யும் காலம் வருமென்று அதில் எழுதியிருந்தேன். இதோ இப்போது அப்படியொரு பேரங்காடியில் செருப்பை வைத்துக்கொண்டு மளிகைப்பொருட்களைத் தருமாறு நானாபடேகர் சண்டையிடும் காணொலி ஒன்று வந்துள்ளது. எங்கும் எதிலும் புஷ்மயமென எழுதிய கதையில் டிரம்ப் என பெயரை மட்டும் மாற்றிக்கொண்டால் இபோதும் பொருந்துவதாகத்தான் ஆட்சியாளர்களின் வல்லுசு இருக்கிறது. வாக்கு வணிகம், கார்ப்பரேட்டுகள் தொடங்கும் கட்சிகள், கட்சிகளே கார்ப்பரேட்டுகளாவது, தேர்தலையே நடத்தாமல் வாக்கு எண்ணிக்கையை நடத்தும் மோசடியை ஊடகத்தின் துணைகொண்டு நிறைவேற்றுவது என அத்தனையும் பகடியாக இருக்கும்போது நான் தனியாக உங்கள் கக்கத்தில் கைவிட்டு கிச்சிகிச்சு மூட்டணுமாக்கும்! உலக நடப்புகளை அப்டேட்டாக அறிந்துகொள்வதிலேயே ஆயுள் பரியந்தம் கிடந்துவிட்டு ஒருத்தருக்கும் பயனற்றுப் போன நியூஸ் தாத்தாவாக நாம் ஒவ்வொருவரும் இருப்பதை நான் எழுதினால் ஏன் ஆத்திரம்? நான் உருவாக்கிய லிபரல்பாளையம் இப்போது காமியதேசமாக, புல்டோஸர் ராஜ்ஜியமாக உருமாறிக் கொண்டிருப்பதை எழுதாமல் வேறு என்ன வெங்…, சரி வேண்டாம் விடுங்கள், முன்னுரையிலேயே எதற்கு இத்தனை பஞ்சாயத்து! 

தனிமனிதராக நாம் ஒவ்வொருவரும் நல்லறம் மிக்கவர்கள் என்றும் பாலின/ சாதிய/ மத/ வர்க்கரீதியான குழுவாகத் திரளும்போது அறம்பிறழ்ந்துவிடுவதாகவும், இதன் மறுதலையாக, கூட்டு அடையாளங்களில் குணச்சித்தர நடிகராகவும் தனிமனித அளவில் குணக்கேடராகவும் இருப்பதான கூற்றுமுண்டு. இரண்டுமே மாயை, சாராம்சத்தில் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பதையும், தனிமனிதராகவும் கூட்டு அடையாளங்களுக்குள்ளும் நாம் சகமனிதர்கள் மீது மதிப்பற்றவர்களாக இருக்கிறோம் என்பதையும் கதைகளை எழுதும்போது தீவிரமாக உணர்கிறேன்.  

எனது மொழி ஓர் எருமைக்கோ கழுதைக்கோ அல்லது வேறேதேனும் உயிரினத்துக்கோ தெரிந்திருக்குமானால் நான் அவற்றோடு உரையாடிவிட்டுப் போய்விடுவேன். உங்களுக்கும்கூட அப்படியொரு விருப்பமும் தேடலும் உள்ளூர இருக்கக்கூடும். ஆனால் என்ன பண்ணித் தொலைக்க, இப்போதைக்கு நாம்தான் பேசிக்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் தான் எனது கதைகள் பாசாங்கானவற்றை ஒதுக்கி பயனுள்ள அதியுண்மைகளைப் பேசவேண்டுமென விரும்புகிறேன். அப்படி பேசுவதால் உங்களது ஆணிய, சாதிய, மதவாத, பொருளாதிக்க மனம் நோகுமானால் தெரிவியுங்கள், வலியின் டிகிரியை கூட்டவேண்டியுள்ளது. 

----

முகப்போவியங்கள்: கார்த்தி

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

விலை: ஒரு தொகுதி: ரூ.500/-




 

 

 

 

 

 


வெள்ளி, டிசம்பர் 12

ஒண்டிக்கொட்டாய் வாழ்விலிருந்து... ஆதவன் தீட்சண்யா

இனிய உதயம் 2025 செப்டம்பர் இதழுக்கு நான் வழங்கிய நேர்காணல்.
நேர்கண்டவர்: புதுகை முருகுபாரதி 


அலமேலுபுரம் ஒண்டிக்கொட்டாயில் இருந்த சிறுவயதுக் காலம் பற்றி? 

சேலம் மாவட்டம் ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி என்கிற ஊரிலிருந்து 60கி.மீ. தொலைவிலுள்ள அலமேலுபுரத்திற்கு நாங்கள் 1968ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தோம். பத்துபதினைந்து குடும்பங்களே வசித்துவந்த அலமேலுபுரத்துக்குள் அல்லாமல், நாங்கள் சேலம் – அரூர் நெடுஞ்சாலையில் சரியாக 40ஆவது கிலோமீட்டரில் எங்கள் தாத்தம்மா மாரிமுத்தம்மாள் (தந்தைவழிப் பாட்டி) வாங்கியிருந்த காட்டிலேயே (நிலத்தில்) கொட்டாய் (கூரைவீடு) போட்டுக்கொண்டு குடியேறினோம். காட்டில் தனித்திருக்கும் கொட்டாயை “ஒண்டிக்கொட்டாய்” என்போம். 

அப்பா மாரியப்பன் திமுககாரர். அண்ணா முதற்கொண்டு உயர்மட்டத் தலைவர்களுடன் அறிமுகமும் எம்.ஜி.ஆருடன் நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்தவர். செட்டிப்பட்டியில் திமுகவை முதன்முதலில் தொடங்கியவர். 1967 தேர்தலில் ஓமலூர் தனித்தொகுதியில் போட்டியிடுவதற்கு அவருக்கு எம்.ஜி.ஆரின் பரிந்துரை இருந்தது. “படித்தவன் நமக்கு அடங்கி இருக்கமாட்டான்” என்று பொறுமிக்கொண்டிருந்த உள்ளூர் ஆதிக்கச்சாதி திமுக தலைவர் ஒருவர், எம்.ஜி.ஆர். துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகிப்போன சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அப்பாவுக்கான அந்த வாய்ப்பினைத் தட்டிப்பறித்து தனக்கு அடக்கமான ஒருவருக்கு கொடுத்துவிட்டார். ஆனாலும் அப்பாவுக்கு திமுக பற்று குறையவில்லை. இடம்பெயர்ந்து வந்த எங்களது ஒண்டிக்கொட்டாய் மீது திமுக கொடியைப் பறக்கவிட்டிருந்தார். உயரப் பறந்த அந்தக் கொடிதான் எங்கள் கொட்டாய்க்கு அடையாளம். அல்லது, எங்கள் கொட்டாய் தான் அங்கு அந்தக்கொடிக்கு அடையாளம் என்றும் சொல்லலாம். 

எதுவொன்றுக்கும் நாங்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த சாமியாபுரம் கூட்டுரோடு என்ற இடத்திற்குத்தான் செல்லவேண்டும். பேருந்து நிறுத்தமான அங்கு சில டீ கடைகளும் மளிகைக்கடைகளும் இருந்தன. நான் படித்த ஆரம்பப் பாடசாலையும் அங்குதானிருந்தது. 

புதிய இடத்தில் உறவினர்களோ தெரிந்தவர்களோ யாருமில்லை. செட்டிப்பட்டியிலிருந்து அப்பாவழிச் சொந்தங்களோ க.ஈச்சம்பாடியிலிருந்து அம்மாவழிச் சொந்தங்களோ வந்தால்தான் உண்டு. கூட்டுரோட்டில் இறங்கி வழி கேட்பவர்களுக்கு திமுக கொட்டாய் என்று சொல்லியனுப்புவார்கள். அப்படி எப்போதாவது வரும் உறவினர்களுக்காக எங்கள் கண்கள் எப்போதுமே அனிச்சையாக சாலையை ஏக்கத்துடன் பார்த்தபடியே இருக்கும். இரவானால் வாகனங்களின் வெளிச்சத்தில் சாலையில் நடமாட்டத்தைத்  துல்லியமாகப் பார்க்க முடியும். 

எங்களுக்கு அருகாமையிலிருந்த கொட்டாய்களில்  எஞ்சோட்டுச் சிறுவர்கள் யாருமில்லை. பள்ளிக்கூடம் இல்லாத நேரம் முழுவதும் விளையாடவோ பேசிமகிழவோ நண்பர்கள் இல்லாத பால்யம் என்னுடையது. விடுமுறைகளில் க.ஈச்சம்பாடிக்குச் செல்வது மகிழ்ச்சியானது. 

எனக்கு மாமன் முறையான மாதையன், எங்கள் வீட்டிலேயே தங்கி வேளாண் வேலைகளை கவனித்துவந்தார். தீவிர சிவாஜி ரசிகர். சைக்கிளில் ரெண்டாவதாட்டம் சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். விடுமுறை நாட்களில் மலையடிவாரக் காட்டில் மாடு மேய்க்க விறகெடுக்க வயலுக்கு தழையறுக்க என்று அழைத்துப்போய் அங்கு சுடலைப்பழம், சூரப்பழம், கெளாக்காய் பறித்துக் கொடுப்பார். பொன்வண்டு பிடித்து தீப்பெட்டியில் விட்டு வளர்க்கத் தருவார். சந்தனமரத்துப்பட்டையை வாயில் போட்டு மென்றுவிட்டு பாழியில் தேங்கித் தெளிந்திருக்கும் தண்ணீரைக் குடித்தால் லேசாக இனிக்கும். ஏற்றம் இறைப்பது, ஏர் பூட்டி ஓட்டுவது, பார் போடுவது, பறம்படிப்பது என பல வேலைகளையும் நான் விளையாட்டாகவே பழகியது அவரிடமும் ஈச்சம்பாடி மாமன்களிடமும் தான். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே, எங்கள் காட்டில் விளையும் தக்காளியை அதிகாலை 3மணிக்கு லாரி பிடித்து கொண்டுபோய் அயோத்தியாப்பட்டிணம் மார்க்கெட்டில் விற்று விட்டுத் திரும்பி பள்ளிக்கூடம் போகிறவனானேன். 

எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டதை (வெளியேறினார்?) எதிர்த்து திமுக கொடியை அப்பா இறக்கிவிட்டார். அவரும் அவரது நண்பர்களும் சோளக்கொல்லையில் மறைந்திருந்து அவ்வழியே வந்த டிடிசி பஸ்களின் மீது கல் வீசினார்கள். அவர்கள் சாமியாபுரத்தில் அதிமுகவின் முதல்கிளையைத் தொடங்கினார்கள். திண்டுக்கல் இடைத்தேர்தலில் கவிஞர் நா.காமராசனுடன் தங்கி வேலை பார்த்தார்கள். வெற்றிப் பெருமிதத்துடனும் மதுரை முத்துவின் ஆட்கள் கொடுத்த  சைக்கிள்செயின் காயங்களுடனும் திரும்பி வந்தார்கள். தென்னகம் பத்திரிகையில் வெளியான எம்.ஜி.ஆரின் அறிவிப்பைப் பார்த்து கட்சியின் கொடியை கையில் பச்சை குத்திக் கொண்டவர்களில் அப்பாவும் ஒருவர். கூட்டுரோட்டில் பொதுக்கூட்டம் பேசவந்த எம்.ஜி.ஆருக்கு என்னை மாலை போட வைத்தார் அப்பா. அடுத்தடுத்த காலங்களில் வந்த எம்.ஜி.சக்கரபாணி, ஜி.ஆர்.எட்மண்ட், எஸ்.டி.எஸ் எனப் பலரும் என்னிடம் மாலை வாங்கியவர்கள் தான். (நான் மனமார மாலையிட்டது வி.பி.சிங் அவர்களுக்குத்தான்). 

இதனிடையே ஒசூர் கூட்டுறவு சொசைட்டி கடனுதவியில் ரோட்டோரத்து வயலில் ஓட்டு வீடு கட்டி குடிபெயரும் தருவாயில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்துவிட்ட நான், அப்படியே தொலைத்தொடர்புத் துறையில் டெலிபோன் ஆபரேட்டர் வேலை கிடைத்து தேன்கனிக்கோட்டை ஓசூர் என்று போய்விட்டேன். இந்த வீட்டுடன் இப்போதுவரை எனக்கு ஏனோ உணர்வுப்பூர்வமானதொரு பிணைப்பு ஏற்படவேயில்லை. என் நினைவில் இன்னுமும் பழைய ஒண்டிக்கொட்டாய் தான் இருக்கிறது.

தங்களின் பெற்றோர் குறித்து..? 

அம்மா ரத்தினம்மாள் நிலபுலன்கள் உள்ள குடும்பத்தின் ஒரே மகள். செல்லமாக வளர்ந்தவர். ஊரிலிருந்து முதன்முதலாக பள்ளிக்கூடம் போன பெண் என்பதால் பள்ளிக்கூடத்தாள் என்றும் ஊரார் விளிப்பதுண்டு. எனக்கு விவரம் தெரிந்தமட்டிலும் பண்ணையம், தாத்தம்மா பார்த்து வந்த ரோடு வேலை, ஜல்லி வியாபாரம் மூலமாக எங்கள் குடும்பம் நல்ல நிலையில்தான் இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் தாத்தாம்மா வேலையை நிறுத்திக்கொண்டதும் குடும்பத்தின் பொருளாதார நிலை சடீரென மாறிப்போனது. ஏழு பிள்ளைகளையும் வளர்க்க எங்கம்மா பட்ட பாடு எழுதித் தீராதது. 

அப்பாவைப் பொறுத்தவரை தனது இளமைக்காலம் முழுவதும் அவரது அம்மா சம்பாதிப்பதை கைகுளிர செலவழித்துப் பழகியவர். மாரண்டஹள்ளியில் ஜில்லா போர்டு பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பிறகு ஒசூர் கால்நடைப்பண்ணையின் குந்துமாரனப்பள்ளி மையத்தில் வேலை பார்த்துள்ளார். “எங்கம்மாக்கிட்ட நூறுபேர் வேலை செய்றாங்க, உன்கிட்ட கைகட்டி நிப்பேன்னு நினைச்சியா?” என்று அதிகாரியை அறைந்துவிட்டு வேலையிலிருந்து நின்றுவிட்டார். 

ஓமலூரில் கை நழுவிப்போன எம்.எல்.ஏ. பொறுப்பை 1977இல் அரூரில் அடைவதற்கான சூழல் இருந்தது. அவர்தான் வேட்பாளர் என்று சில நாளிதழ்களில் பெயர்கூட வெளியானது. ஆனால் கூட்டணிக்கட்சியான சிபிஎம்முக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதில் அந்த வாய்ப்பையும் இழந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் திமுகவுக்கு திரும்பினார். எனது இலக்கிய, அரசியல் செயல்பாடுகளைப் புரிந்து ஆதரவளித்தவர். 

இளங்கலை கணிதம் படிக்குமளவு கணக்கின் மீது ஆர்வமா? 

ஆர்வமில்லை, கணிதம் படித்தால் வேலைவாய்ப்பு என்று அப்போதிருந்த கற்பிதத்தில் சேர்ந்ததுதான்.  

எஸ்.எம்.இரவிச்சந்தர், ஆதவன் எனும் புனைபெயரில் கவிதை எழுதத் தொடங்கியது எப்போது? 

தான் எழுதித்தரும் பெயர்கூட நீடிக்கப்போவதில்லை என்பதறியாத ஒருவர் எனக்கெழுதிய ஜாதகத்தில் எனது பெயர் சுந்தரலிங்கம் என்ற கார்த்திகேயன். ஆனால் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபோது எஸ்.எம். இரவிச்சந்தர். 1980களில் தகடூர் ஆதவன், ஒசூர் ஆதவன் என்றாகி 1996ல் தீட்சண்யா பிறந்ததும் ஆதவன்  தீட்சண்யாவானேன். 

படிக்கும்போதே தொலைபேசித் துறையில் தேர்வெழுதி பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றீர்கள். அப்போதைய மனநிலை  எப்படியிருந்தது? 

படிப்பின் இலக்கே ஒரு வேலையில் சேர்ந்துவிடுவதுதான் என்று பொதுப்புத்தியில் இருந்த கருத்துதான் எனக்கும் இருந்ததால் வாழ்வின் இலட்சியங்களில் ஒன்றை எட்டிவிட்டது போலிருந்தது. 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தது  எப்போது? 

ஒசூரில் 1984/1985ஆம் ஆண்டாக இருக்கலாம்.  

1996-இல் வெளியான ’புறத்திருந்து...’ முதல் கவிதை நூலுக்கும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நான்காவது கவிதை நூலான ‘மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்’ நூலுக்குமான மொழிநடையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து... 

சமூகப்பார்வை, வாழ்வனுபவம், படிப்பு, அரசியல் ஈடுபாடு இவையெல்லாம் சேர்ந்து எழுத்தின் உள்ளடக்கம் செறிவேறுகையில் அதன் சத்தும்சாரமும் குன்றாமல் வெளிப்படுத்திட மொழியும் திடப்படும். எனக்கும் அதுதான் நடந்தது.  

‘புது விசை’ கலாச்சாரக் காலாண்டிதழைத் தொடங்கிட என்ன காரணம்..? 

கருத்துலகில் இடதுசாரி கண்ணோட்டத்துடன் குறுக்கீடு செய்ய ஒரு பத்திரிகையைத் தொடங்கலாமென முன்மொழிந்தார் கவிஞர் கந்தர்வன். அந்த நோக்கத்திலிருந்து விலகாமல் 48 இதழ்களை அச்சில் கொண்டுவந்தோம். இடையில் தட்ஸ்தமிழ்.காம், கீற்று.காம் தளங்களில் இணைய இதழாகவும் வெளிவந்திருந்தது.  

தமுஎகச மாநாட்டில் பொதுச்செயலாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் நிர்வாகி நீங்கள்தான். இதற்கான உத்வேகத்தை  எங்கிருந்து பெற்றீர்கள்? 

அமைப்பின் கொள்கையை வடிவமைப்பது தொடங்கி, தலைமைப்பொறுப்புக்குப் போட்டியிடுவது வரையான உரிமை தமுஎகசவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டு. அத்தகைய ஜனநாயக முதிர்ச்சியுடன் அமைப்பு இயங்குவதை எனது போட்டியும் தேர்வும் உறுதிபடுத்தியது. 

கலை இலக்கிய பண்பாட்டுத்தளத்தில் தமுஎகச இன்னமும் ஆற்றவேண்டிய பணிகளாக எதைக் கருதுகிறீர்கள்? 

தமுஎகச உறுப்பினர்களின் கலைஇலக்கியச் செயல்பாடுகள் ஒருபடித்தானதல்ல. கலை இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் இயங்கும் அவர்கள் தாம் இயங்கும் துறையின் சமகால அடையாளங்களாக தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். அதற்கான படைப்புமனதுடன் உழைக்கிறவர்களாக அவர்கள் வளர்வதற்கு அமைப்பு கூடுதலாக செயலாற்ற  வேண்டியுள்ளது. பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர், திருநர், பால்புதுமையினர் ஆகியோரிலுள்ள எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் இனங்கண்டு திரட்டுவது அவசியமாகிறது. சமூகநீதி, சமத்துவம், மனித மாண்பு, தமிழ்மொழி, தமிழர் நலன் சார்ந்த புரிதலின் மட்டத்தை உயர்த்துவதற்கான பணி இடையறாமல் நடந்தாக வேண்டும்.  

தலித் இலக்கியம் என்று தனியே ஒரு வகை இலக்கியமாகச் சுட்டப்படுவது சரியான போக்குதானா..? 

மனித வாழ்வனுபவமும் அதையொட்டிய கற்பனையும் தான் இலக்கியம். அப்படியிருக்க மற்றவர்கள் கிறுக்குவதெல்லாம் இலக்கியம் என்றறியப்படுகையில், தலித்துகள் தமது வாழ்வனுபவத்தை எழுதுவது மட்டும் தனி முன்னொட்டுடன் ஒதுக்கிக்காட்டப்படுகிறது. தலித்துகள் யாரும் தாங்கள் தலித் இலக்கியத்தை எழுதப்போவதாக சொல்லிக்கொண்டு எழுதாத நிலையில் இந்த ஒதுக்கம் தலித் நீதிபதி, தலித் அரசியல்வாதி, தலித் டாக்டர் என்று சுட்டும் சாதி உளவியலின் நீட்சிதான். தலித்துகளின் எழுத்துக்களில் உட்பொதிந்துள்ள சாதிமறுப்பு, சாதியொழிப்பு, சமத்துவம், பார்ப்பனீய எதிர்ப்பு சார்ந்து எழுதுவதற்கும் படிப்பதற்கும் அஞ்சுகின்ற சாதிய மனங்களுக்கு இப்படியான உடனடி இனங்காட்டல் தேவைப்படுகிறது போலும். நான் 2015 முதல் “சாதி மறுப்பு இலக்கியம்” என்பது பற்றி பேசிவருகிறேன்: “சாதியத்திற்கு எதிரான உள்ளடக்கங்களைக் கொண்ட படைப்புகளை சாதி மறுப்பு கலை இலக்கியம் என்கிற பொது அடையாளத்தின்கீழ் வகைப்படுத்தும் பட்சத்தில் தலித்துகளும் தலித்தல்லாதவர்களும் குறிப்பிட்ட நோக்கத்தின் கீழ் அணிதிரண்டு செயலாற்றுவதற்கு வாய்ப்பு உருவாகும். சாதி ஒழிப்புக் கருத்தியலை ஏந்திச்சென்று பரந்த இச்சமூகத்தின் மீது வீசி வெடிக்கச் செய்கிற ஆற்றலும் நுட்பமும் தந்திரமும் இழைந்த ஆக்கங்களை உருவாக்குவதற்கு இப்படியானதோர் ஒருங்கிணைவு அவசியமாயிருக்கிறது”  (பார்க்க: சாதி மருப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள்- https://aadhavanvisai.blogspot.com/ 2016/07/ blog-post_9.html)

தங்களின் சிறுகதைகளில், கட்டுரைகளில் வெளிப்படும் சமூகக்கோபமும், வெளிப்படைத்தன்மையும் கவிதைகளில் இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்கிறீர்களா..? 

கவிதைகள் சீற்றமாகவும் கதைகள் பகடியாகவும் இருக்கின்றன என்போருமுண்டு. படிப்பவர்களுக்குரிய எல்லையற்ற மதிப்பீட்டுச் சுதந்திரத்தை ஏற்கவும் மறுக்கவும் நான் யார்? 

2014-இல் வெளியான தங்களது ‘மீசை என்பது வெறும் மயிர்’ ‘நாவலல்லாத நாவல்’ என்று சொல்லப்படுகிறதே..! 

இப்படியிருந்தால் தான் நாவல் என்று இலக்கணம் சொல்வதை விடவும் அபத்தம் வேறெதுவுமில்லை. நாவல் என்ற சொல்லே புதியது என்பதைத்தான் குறிக்கிறது. அப்படியிருக்க புனைவின் அதிகபட்ச சாத்தியங்களை எழுதிப் பார்த்தால் என்ன என்கிற முயற்சிதான் மீசை என்பது வெறும் மயிர்.

 இன்றைய ஒன்றிய அரசின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்..? 

ஆட்சியதிகாரத்தைச் சுவைப்பதற்காக வெட்கங்கெட்டு அலைகிற கும்பல் போல மேலுக்குத் தெரிந்தாலும் உண்மையில் ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ்.சின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்காக இயங்குகிறது. அது இந்தியச்சமூகம் பார்ப்பனீயத்திற்கு எதிராக அடைந்துள்ள வெற்றிகளை அழித்தொழிக்கும் வேலைத் திட்டத்துடன் ஏவப்பட்டுள்ளது. பார்ப்பனர், சமஸ்கிருதம், வேதங்கள் என ஆரிய மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கில்தான் அரசின் திட்டங்கள், செயல்பாடு நிலைப்பாடு அனைத்தும் உள்ளன. இந்தியச் சமூகத்தின் பன்மைத்துவத்தையும் அதை அங்கீகரிக்கிற அரசியல் சாசனத்தையும் ஒழித்துக்கட்ட நூறாண்டுகால வன்மத்துடன் களமிறங்கியுள்ளவர்களின் இந்த ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் களங்கம் என்றே கருதுகிறேன்.   

தொழில் வளர் நகரமான ஓசூரைப் பற்றி ‘ஓசூர் எனப்படுவது யாதெனின்...’ எனும் நூலை எழுதத் தூண்டியது எது? 

ஆனந்த விகடன் இணைய இதழில் “எனது ஊர்” என்கிற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதும்படி கேட்டபோது, என் வாழ்வின் பெரும்பகுதி ஒசூருடன் தொடர்புடையது, ஆகவே ஒசூரைப் பற்றி எழுதுகிறேன் என்று தொடங்கினேன். 

இன்றைய திராவிட மாடல் ஆட்சியில் கலை இலக்கியவாதிகளுக்கான உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா? 

தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்தவர்கள் என்ற வகையில் சாகித்ய அகாதமி விருதாளார்களுக்கு வீடு வழங்கி கெளரவப்படுத்துவது சரியானது. அதேவேளை, வறிய நிலையில் உள்ள எழுத்தாளர்களைக் கண்டறிந்து உதவும் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு வகுக்கவேண்டும். கேரளாவைப்போல இங்கு தமிழ் அகாதமி உருவாக்குவது அவசியம்.  

கவிஞர் தமிழ்ஒளி சிலைத்திறப்பு, அவரது எழுத்துகளைப் பரப்ப நிதி ஒதுக்கீடு, தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பிற மொழிகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடு, கலைஞர் நூலகம் என்று பாராட்டத்தக்க பல முன்னெடுப்புகள் உள்ளன. மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழாக்களை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று தமுஎகச தான் கோரியது. இப்போது அவ்வாறு நடப்பதை வரவேற்கிறேன். ஆனால், புத்தகத் திருவிழாக்களில் உள்ளூர் கலைஇலக்கியவாதிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிற குறை பரவலாக உள்ளது. பொது நிகழ்வுகளுக்காக இன்னின்னாரை அழைப்பது தொடங்கி, தங்கவைக்கப்படும் இடம், மதிப்பூதியம் வரையாக நிலவும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும். புத்தகத் திருவிழாக்களை நடத்தும் குழுக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றியமைக்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதற்கான வழிகாட்டுதலை அரசு வெளியிட வேண்டும். புத்தகத்திருவிழாக்கள், மாபெரும் தமிழ்க்கனவு, இலக்கியச் சங்கமங்கள் என பொதுநிதியில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் ‘செட் பிராப்பர்ட்டிகள்’ போல ஒரு சிலரே ஆக்ரமித்துள்ள நிலைமை ஏற்புடையதல்ல. அதிகாரிகளின் அணுக்கப்பட்டியலில் இருந்தால்தான் வாய்ப்பு என்னும் இழிநிலையில் மாற்றம் தேவை. 

அதிமுக ஆட்சிக்காலத்தில் முடக்கிவைக்கப்பட்டிருந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தை இப்போதைய அரசு மாற்றியமைத்துச் செயல்பட வைத்தது நல்ல விசயம். ஆனால் ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நிகழ்த்துக்கலைஞர்கள் உள்ள இம்மாநிலத்தில் அந்த வாரியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி அற்பமானது.  

கலை பண்பாட்டுத்துறைக்கு தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் கலை இலக்கிய அமைப்புகளோடு எந்தத் தொடர்புமில்லை. துறைசார்ந்த முன்னெடுப்புகள் தமுஎகச போன்ற அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டால் இணைந்து செயல்பட முடியும். 

திரைப்படங்களில் பங்களிப்பு செய்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் குறித்து... 

ரஞ்சித்தும், அதியனும் நேரடி அறிமுகத்துக்கும் முன்பாகவே என் எழுத்துகள் செயல்பாடுகள் மீது மரியாதை கொண்டவர்கள். அதியன் வழியாகத்தான் ரஞ்சித்துடன் நேரடி அறிமுகம் ஏற்பட்டது. அவரது அட்டைக்கத்தியும் மெட்ராஸூம் என்னை வெகுவாக ஈர்த்தப் படங்கள். புதுவிசையில் வெளியான அவரது தண்ணிக்கோழி சிறுகதை தமிழின் சிறுகதைகளில் முக்கியமானது. அந்தக் கதை தங்கலான் வரையாக ரஞ்சித்தின் எல்லாப் படங்களிலும் குறியீடாக வந்துகொண்டேயிருக்கிறது. 

அடுத்தப்படத்தின் கதைக்கருவுக்கான தேடலில் ஈடுபட்டிருந்த ரஞ்சித் 2015 தொடக்கத்தில் ஒருநாளிரவு நண்பர்களுடன் ஓசூர் வந்திருந்தார். தமிழ்நாட்டிற்கு வெளியே புலம்பெயர்ந்து போன தமிழர்களின் நலன் காக்கப் போராடிய ஒரு போராளியின் கதை என்கிற ஒற்றைவரி அவருக்குள் திடப்படாமல் ஓடிக்கொண்டிருந்தது. அதுபற்றி உரையாடும்போது சமீபத்திய மலேசியப்பயணங்களில் நான் கண்டுவந்த சில விசயங்களை ரஞ்சித்துடன் பகிர்ந்துகொண்டேன்.

ரப்பர் தோட்டங்கள், ஈயச்சுரங்கங்கள், துறைமுகங்களில் பணியாற்ற மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் தம்மீதான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நடத்தியப் போராட்டங்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், தலைமறைவாகி தப்பியவர்கள், காட்டு பெருமாள் போன்ற சாகச நாயகர்கள், செம்பனைத் தோட்டத்தின் வருகை, வேலையிழந்த தமிழர்கள் பெருநகரங்களுக்கு உதிரியாக வரும் அவலம், போதைப்பொருள் விற்பனை, என்கவுண்டர் சாவுகள், மை ஸ்கில் பள்ளி என்று விவரித்து மலேசியா அவருக்கான கதையைக் கொடுக்கும் என்று சொன்னேன். அடுத்த சில வாரங்களில் ரஞ்சித் மலேசியா சென்றார். இவற்றையெல்லாம் எனக்குக் காட்டிய தம்பி நவீனுக்குச் சொல்லி அவர் ரஞ்சித்தை எல்லா இடங்களுக்கும் கூட்டிப்போய் காட்டியதுடன் அங்கு தமிழர் வரலாறு வாழ்நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்திருந்தார். கபாலியில் ரஞ்சித்தின் பாய்ச்சலைக் கண்டு எனக்கு உள்ளூர அவ்வளவு மகிழ்ச்சி. ஒரு திரைப்படத்தில் ஏதேனுமொரு வகையில் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றால் அது கபாலி தான். 

காலா நிலவுரிமை சார்ந்த படமென்பதால் அதில் உடனிருக்குமாறு ரஞ்சித் அழைத்தார். அவருக்கு எந்தளவுக்கு நான் உதவியாக இருந்தேனென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தனது கலையுழைப்புக்கு கிடைத்த அங்கீகாரத்தை அவர் என்னோடும் மகிழ்நனோடும் உளப்பூர்வமாக பகிர்ந்துகொண்டார். தங்கலான் முதற்கட்ட ஆய்வுகளுக்காக கே.ஜி.எப். போன குழுவில் நானுமிருந்தேன். தங்கலான் பார்த்தபோது என் மனம் உருவகித்து வைத்திருந்த படம் அதுவல்ல என்று தோன்றியது. மலேசியா, மும்பை, கே.ஜி.எப். தமிழர்களின் வாழ்க்கைப்பின்புலத்தில் கபாலி, காலா, தங்கலான் எடுத்த ரஞ்சித், அந்த வரிசையில் இலங்கை மலையகத்தமிழர்கள் பற்றிய படமொன்றை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளேன். 

ரஞ்சித்தைப் போன்றதோர் ஆளுமை வருவதற்கு தமிழ்ச்சினிமாவிற்கு நூறாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவரது பன்முகப்பட்ட முன்னெடுப்புகளில் இயன்றவரை உடனிருக்கிறேன். அரசியல் ஒத்திசைவில்லாத விசயங்களைப் பரஸ்பரம் விமர்சித்துக்கொள்கிற உரிமையுடன் தோழமை தொடர்கிறது.

அதியன் அற்புதமானதொரு கவிஞர். உழைக்கும் வர்க்கச் சார்புநிலையிலிருந்து உலகத்தைப் பார்ப்பவர். சினிமாவை அதன் உட்பொருளில் உணர்ந்து கற்றவர். என்னால் பங்களிக்க முடிகிறதோ இல்லையோ அவர் படமெடுக்கிறபோது உடனிருக்க வேண்டுமென விரும்புகிறவர். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நான் பங்கெடுத்தது அப்படித்தான். “தண்டகாரண்யம்” அவரது இரண்டாவது படம். அதில் தொடக்கம் முதலே இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம்.  

பொன்விழா (1975-2025) கண்ட இலக்கிய அமைப்பான தமுஎகச, இன்றைய சூழலில் எதிர்கொள்ள வேண்டிய சவாலாக எதைக் கருதுகிறது? 

சமூகத்தில் மேலாதிக்கம் பெறவிரும்பும் பார்ப்பனீயச் சக்திகள் (சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றின் எதிர்மறை) அதற்காக மக்களை “நாம்”, “அவர்கள்” என்று பிளவுபடுத்துகிறார்கள். அதனிமித்தம் வெறுப்புக் கருத்தியலை ஊடகங்கள், கலை இலக்கியங்கள் வழியே பரப்புகிறார்கள். இதுகுறித்த எச்சரிக்கையை கலை இலக்கியச் சமூகத்தில் பரப்புவதற்கான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதுதான் இன்றைய முதன்மையான சவால். அன்புடனும் பரஸ்பர மரியாதையுடனும் பன்மைத்துவமாக இணங்கி வாழ்வதற்கான விருப்பத்தை மக்களிடையே உருவாக்கவல்ல கலை இலக்கிய ஆக்கங்களை உருவாக்குகிறவர்களாக தனது உறுப்பினர்கள் வளர உதவும் கடமையும் தமுஎகசவுக்கு உள்ளது. 

தற்காலத் தமிழிலக்கியப் போக்குகளில் நீங்கள் ஏற்பதை எதை? மறுப்பது  எதை? 

பாரம்பரியம் மரபு மீட்டுருவாக்கம் என்ற போர்வையில் கடந்த காலத்து முடையேறிய பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்துகின்ற, அதன்பேரிலான மதிப்பீடுகளை சமகாலத்தின் மீது கொண்டுவந்துக் கொட்டுகின்ற குப்பைவண்டிகளைத் தவிர மற்றெல்லா போக்குகளும் எனக்கு ஏற்புடையதே. 

நீங்கள் எழுத நினைத்து, இன்னமும் எழுதமுடியாமல் இருப்பது எதைப் பற்றி..? 

கலையமைதியுடன் வெளிப்படுத்தத் தேவையான தொடர் உழைப்பைத் தரமுடியுமானால் எதுவொன்றையும் எழுதமுடியும் என்றே கருதுகிறேன்.

இளைய தலைமுறை எழுத்தாளர்களில் தங்களுக்குப் பிடித்த எழுத்தாளரென்று யாரைச் சொல்வீர்கள்? 

கல்வியறிவுப் பரம்பல் எழுத்திலக்கியத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளது. தமது வாழ்வனுபவத்தை சொல்லியாகும் மனஅவசத்தால் நிறையபேர் எழுத வந்துள்ளனர். நஸீமா பர்வீன், அராபத், சு.வெங்குட்டுவன், அ.பிரகாஷ், ஜெ.அன்பு, சிவசித்து, விடுதலை சிகப்பி, அமுதாசெல்வி என்று கொண்டாடத்தக்க பெரும்பட்டியல் உள்ளது.   

‘இனிய உதயம்’ இதழ்... உங்களின் பார்வையில்... 

நக்கீரன் குழுமத்திலிருந்து இப்படியொரு இதழ் வெளிவருவதும், அதில் கலை இலக்கிய ஆக்கங்களுக்கும் ஆளுமைகளின் நேர்காணலுக்கும் இடமளிப்பது பாராட்டுக்குரியது. 

                                                                             


செவ்வாய், அக்டோபர் 28

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்: தோற்றமும் செயல்பாடும் - ஆதவன் தீட்சண்யா

தோழர் கண.குறிஞ்சி அவர்கள் வெளியிட்டுவரும் "புதுமலர்" காலாண்டிதழின் 2025 அக்டோபர் - டிசம்பர் இதழில் வெளிவந்துள்ள நேர்காணல்.




0 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியதன் பின்னணியை விவரிக்கவும். 

எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி 1970ஆம் ஆண்டு தொடங்கிய “செம்மலர்” இலக்கிய இதழை ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வசம் ஒப்படைத்திருக்கிறார்.  செம்மலரில் வெளிவரும் ஆக்கங்கள் பற்றி விவாதித்து செழுமைப்படுத்தும் நோக்கில் அதில் எழுதி வந்த 35 எழுத்தாளர்களின் சந்திப்பு ஒன்று இதழாசிரியர் கே.முத்தையா ஏற்பாட்டில் 1974 நவம்பர் 23, 24 தேதிகளில் மதுரையில் நடந்திருக்கிறது. அக்கூட்டத்தில் கட்சியின் தலைவர்களான என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்பிரமணியம், எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகிய தோழர்களும் பங்கேற்றுள்ளனர். முற்போக்கு எழுத்தாளர்களுக்கென சங்கம் ஒன்றை அமைக்கலாமென்ற தோழர் என்.சங்கரய்யாவின் முன்மொழிவு அக்கூட்டத்தில் ஏற்கப்பட்டது. இவர்களுடன் 1969ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி சென்னையில் தோழர் ச.செந்தில்நாதன், டி.செல்வராஜ், தி.க.சிவசங்கரன், கந்தர்வன், கார்க்கி உள்ளிட்டோரது முன்னெடுப்பில் தொடங்கப்பட்டிருந்த மக்கள் எழுத்தாளர் சங்கமும் இணைவது என்கிற முடிவு 05.01.1975 அன்று எட்டப்பட்டது.  

1975 ஜூன் 25 அன்று நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுவிட்டது. அரசியல் சாசனம் குடிமக்களுக்கு உறுதிப்படுத்தியிருந்த கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. ஊடகங்கள் கடும் தணிக்கைக்கு ஆளாகின. நாடு முழுவதும் மக்களுக்கான ஜனநாயகவெளிகள் சுருங்கிக் கொண்டிருந்தன. எனினும் அந்நேரத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருந்ததால் ஓரளவுக்கு சுதந்திரமாக இயங்கமுடிந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு 1975 ஜூலை 12, 13 தேதிகளில் மதுரையில் அமைப்பு மாநாட்டை நடத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. 

0 தமுஎச-வின் தொடக்ககாலப் பணிகள்

1976 ஜனவரி 31 அன்று திமுக அரசு பதவிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இங்கும் நெருக்கடி முற்றியது. தமுஎச எழுத்தாளர்கள் உரிமைப் பறிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான குரலை கருத்தரங்கங்கள், கவியரங்கங்கள் வழியே அந்நாட்களில்  தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளனர்.   பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரை முப்பெரும் ஆளுமைகளாக ஏற்று நடத்தப்பட்ட விழாக்கள் பரவலாக கவனம் பெற்றுள்ளன. 1976 அக்டோபர் 1,2,3 தேதிகளில் நாமக்கல்லில் தமுஎச நடத்திய முதல் இலக்கிய முகாமில் எழுத்தாளர்களும் விமர்சகர்களுமாக மாநிலம் முழுவதிலுமிருந்து 170பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். மலையாளத்திலிருந்து பி.கோவிந்தப்பிள்ளை, கன்னடத்திலிருந்து டி.ஆர்.நாகராஜ், கவிஞர் சித்தலிங்கய்யா போன்றோர் கருத்தாளர்களாக பங்கேற்ற இம்முகாம் தனது ஊழியர்களை கருத்தியல்ரீதியாக வளப்படுத்த வேண்டுமென தமுஎச திட்டமிட்ட முறையில் மேற்கொண்ட முயற்சி எனலாம். இதேநோக்கில் 1982ஆம் ஆண்டு மதுரையில் 19 தலைப்புகளை முன்வைத்து 5 நாட்கள் மாநில அளவிலான இலக்கிய முகாம் நடத்தப்பட்டுள்ளது. 

மாநிலமெங்கும் இயங்கிக்கொண்டிருந்த நாடகக்குழுக்களை ஒருங்கிணைக்கவும் அவற்றின் ஆக்கங்களை ஒரே இடத்தில் நிகழ்த்திப் பார்க்கவுமாக, 1979 மே 25,26,27 தேதிகளில் தஞ்சையிலும், 1984 செப்டம்பர்  22,23,24 தேதிகளில் சென்னையிலும் தமுஎச நடத்திய நாடகவிழாக்களின் தாக்கம் அரங்கச் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்கதாகும். நாடகவியலாளர்கள் எஸ்.வி.சகஸ்ரநாமம், கோமல் சுவாமிநாதன் ஆகியோரை நெறிஞர்களாகக் கொண்டு தமுஎச 1986 செப்டம்பரில் மதுரையில் ஐந்துநாட்கள் நடத்திய  நாடகப்பயிற்சி முகாம், நாடகத்தின் வகைமைகளையும் நுட்பங்களையும் கற்றுத்தந்தது. அம்முகாமில் பங்கெடுத்த 139 பேரில் நானும் ஒருவன்.   

இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசன், கே.ஏ.குணசேகரன் ஆகியோரது வழிநடத்தலில் 1989 ஜனவரியில் ஐந்துநாட்கள் கோவையில் நடத்தப்பட்ட முகாம் இசைக்குழுக்களைச் செழுமைப்படுத்திட உதவியது. இதன் தொடர்ச்சியில் ஒசூரிலும் ஒரு முகாம் நடந்தது.

கலை இலக்கியக் கோட்பாடுகள், வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், சமகாலப் போக்குகள், கருத்துலகத்தில் நடைபெற்றுவரும் விவாதங்கள் ஆகியவற்றில் பங்கெடுப்பதில் தமுஎச  பெரிதும் நாட்டம் கொண்டுள்ளது. இதன்பொருட்டு தமிழிலும், பிற மொழிகளிலும் மதிப்புமிக்க பங்களிப்புச் செய்த-  இலங்கை பேரா.க.சிவத்தம்பி உள்ளிட்ட ஆளுமைகள் பலரையும் அமைப்பின் மாநாடுகளிலும் நிகழ்வுகளிலும் பயிலரங்குகளிலும் கருத்தாளர்களாக பங்கேற்கச் செய்யும் ஏற்பாடு தமுஎசவின் தொடக்கம் முதலே இருக்கிறது. 

0 முதல்வர் எம்ஜிஆர் கொண்டுவந்த திரைப்படத் தணிக்கை மசோதாவை எதிர்த்த தமுஎசவின் போராட்டமும் வெற்றியும்..

அரசியலதிகாரத்தைப் பிடிப்பதற்கு திரைப்படங்களை ஒரு வழியாகக் கண்டிருந்த எம்.ஜி.ஆர், அந்த திரைப்படங்களின் சுதந்திரத்தையே பறிக்கும் நோக்கில் அப்படியொரு சட்ட முன்வரைவைக் கொண்டு வந்ததற்கு பின்புலத் தூண்டுதலாய் இருந்தது 29.03.1987 தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் வெளியான ஒரு நகைச்சுவைத்துணுக்கும் அதற்கு விவேகானந்தன் என்பவர் வரைந்த கேலிச்சித்திரமும். ஒரு பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்துள்ள பலரையும் காட்டி “இதிலே எம்எல்ஏ யாரு? மந்திரி யாரு?” என்று பொதுமக்களில் ஒருவர் கேட்க, “பிக்பாக்கெட்காரர் மாதிரி இருக்கிறவரு எம்எல்ஏ, கொள்ளைக்காரர் மாதிரி இருக்கறவரு மந்திரி” என்று இன்னொருவர் பதிலளிப்பதாக வரையப்பட்ட அந்த கேலிச்சித்திரத்தை ஆனந்தவிகடன் அட்டைப்படமாக வெளியானது. எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு ஊழலில் ஊறித் திளைத்திருந்ததை இப்படி அப்பட்டமாகக்  காட்டியது ஆட்சியாளர்களுக்குப் பொறுக்கவில்லை. இதற்காக ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியம் அடுத்துவரும் இதழில் மன்னிப்புக் கேட்கவேண்டும், இல்லையென்றால் மூன்றுமாத காலம் கடுங்காவல் தண்டனை என்று சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் கெடு விதித்தார். ஆனால் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் ஓர் ஊடகத்திற்குள்ள கடமையைச் செய்ததற்காக மன்னிப்புக் கோரமுடியாது என்கிற நிலைப்பாட்டை விகடன் அடுத்துவந்த இதழின் தலையங்கத்தில் அறிவித்துவிட்ட நிலையில் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியம் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து தமுஎச மாநில மையம் அறிக்கை வெளியிட்டது. மாநிலம் முழுக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது. சென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் தமுஎச நடத்திய கண்டனக்கூட்டங்களில் தீபம் நா.பார்த்தசாரதி போன்ற மூத்த எழுத்தாளர்கள் பங்கேற்றனர். மக்களிடையே எழுந்த எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கிய எம்ஜிஆர் அரசு வேறுவழியின்றி விகடன் ஆசிரியரை இரண்டே நாளில் விடுதலை செய்தது. ஆனாலும் கருத்துச்சுதந்திரத்தைப் பறிக்கும் அரசின் மூர்க்கம் தணியவில்லை. அச்சு ஊடகத் துறையை அச்சுறுத்தி பணியவைக்க முடியவில்லை என்கிற ஆத்திரத்திலும் அகங்காரத்திலும் எம்ஜிஆரின் கவனம், தான் உருவெடுத்து வளர்ந்த திரைத்துறை மீதே பாய்ந்தது.  மத்திய தணிக்கைக் குழுவிடம் தணிக்கைச்சான்று பெற்று வெளியாகும் ஒரு படம், எம்எல்ஏக்களையோ அமைச்சர்களையோ அவமதிப்பதாக சட்டமன்ற சபாநாயகர் கருதும்பட்சத்தில் அந்தப் படத்திற்கு தடைவிதிப்பதுடன் அதன் இயக்குநர் உள்ளிட்டோரை கைதுசெய்யலாம் என்பதுதான் அந்த மசோதா. 

தங்களது கலைச்செயல்பாட்டின் மீது எம்ஜிஆர் தொடுத்த தாக்குதலை எதிர்க்க திரைத்துறையினரே  தயங்கிக்கிடந்த நேரத்தில் தமுஎச கண்டன அறிக்கை வெளியிட்டதுடன் 1987 ஜூலை 12 அன்று “திரைப்படக் கலைப் பாதுகாப்பு மாநாட்டை” நடத்தியது. பூனைக்கு மட்டுமல்ல அல்ல, புலிக்கும் மணிகட்டும் தீரமிக்கது தமுஎச என்று தெரிந்தவுடன் திரைத்துறையின் முக்கிய ஆளுமைகள் பலரும் மாநாட்டில் பங்கெடுத்தார்கள். அதன் தொடர்ச்சியில் சென்னை உட்பட 24 நகரங்களில் நடந்த உண்ணாநிலைப் போராட்டத்திலும் அவர்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். அந்த சட்ட முன்வரைவு  சட்டமாக்கப்படாமலே திரும்பப்பெறப்பட்டதற்கு தமுஎச ஒருங்கிணைத்தப் போராட்டமே காரணம். 

0 சனாதன சக்திகள் எழுத்தாளர் பெருமாள்முருகன் மீது தாக்குதல் தொடுத்த பொழுது தமுஎகச-வின் கருத்துரிமைக்கான ஆதரவுப் போராட்டம் பற்றி விளக்கவும்.

சாதியமைப்புகளின் செயல்பாடுகளை முடுக்கிவிடும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் படியாகத்தான் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் தொடர்பான சர்ச்சை கிளப்பப்பட்டது. 2015 ஜனவரி 12 அன்று அமைதிப் பேச்சுவார்த்தை என பெருமாள் முருகனை தனது அலுவலகத்திற்கு வரைவழைத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர், அவரை உளவியல் முற்றுகைக்குட்படுத்தி ஐந்தம்ச  ஒப்பந்தம் ஒன்றுக்கு சம்மதிக்கவைத்தார். அதன் தொடர்ச்சியில்தான் பெருமாள்முருகன் தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக்கொள்ளும் அவலநிலை உருவானது. அவரது அறிவிப்பு கருத்துரிமையில் நம்பிக்கை கொண்ட பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. மாதொருபாகன் நூலினை உயர்த்திப்பிடித்தபடி சென்னை புத்தகக் கண்காட்சியில் உடனடியாகவே கண்டன இயக்கத்தை தமுஎகச நடத்தியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மாதொருபாகன் நூலின் மின்நூல் பிரதி பரவலாக பகிரப்பட்டது. அத்துடன் நில்லாமல், தமுஎகச இப்பிரச்னையை தோழர் ச.செந்தில்நாதன் மூலமாக சட்டரீதியாகவும் எதிர்கொண்டது. 

பெருமாள் முருகனிடம் பலவந்தமாக கையொப்பம் பெறப்பட்ட ஒப்பந்தம், அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(அ)படி சட்டவிரோதமானது, அந்த ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கும் படி தமுஎகச சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. 1215/2015 என்ற அவ்வழக்கின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கும்  அவதூறுக்குமான வேறுபாட்டை துலக்கப்படுத்தியதுடன் ஒரு கலைப்படைப்பு யாருடைய கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் என்கிற விளக்கத்தையும் கொடுத்துள்ளது. “இலக்கியம் - கலாச்சாரம் போன்ற விசயங்களைத் தீர்மானிப்பதற்கு அரசு, காவல்துறை அதிகாரிகள் சிற்ந்த நபர்களாக இருக்கமாட்டார்கள் என்றும், இத்தகைய விசயங்களை இந்தத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் ஞானத்திற்கம், தேவைப்பட்டால் நீதிமன்றங்களிடமும் விட்டுவிடுவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என்றே சொல்ல விழைகிறோம்”.. “இந்த நூலாசிரியர் பெருமாள் முருகன் பயத்தில் ஆழ்ந்துவிடக்கூடாது. அவர் இனி எழுத முடிவதோடு, தனது எழுத்தின் வீச்சை மேலம் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்.. தனக்குள் இருந்த எழுத்தாளர் இறந்துவிட்டார் என்ற அவரது சொந்த முடிவு இதற்கு பதிலாக இருக்கமுடியாது. அதுவும்கூட அவர் சுதந்திரமாக எடுத்த முடிவல்ல. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு சூழ்நிலையின் விளைவாகவே அத்தகைய முடிவு எடுக்கப்பட்டது..” என்று விவரிக்கும் தீர்ப்பு “அவர் எதில் சிறந்தவரோ, அதைச் செய்ய, அவருள் இருக்கும் எழுத்தாளர் புத்துயிர் பெறட்டும்” என்று முடியும். கருத்தியல் தளத்தில் செயல்படும் ஒவ்வொருவர் கையிலும் இந்தத் தீர்ப்பு இருக்கவேண்டும் எனக் கருதியே தமுஎகச தமிழ்ப்படுத்தி வெளியிட்டுள்ளது. 

0 தமுஎசவின் முக்கிய மாநாடுகள் மற்றும் அதன் தொடர் செயல்பாடுகள்

சமூகத்தில் முன்னுக்கு வருகின்ற பிரச்னைகளின் தீவிரத்தை கணக்கில் கொண்டு அவவ்வப்போது சிறப்பு மாநாடுகளை தமுஎகச நடத்திவருகிறது. அவ்வகையில், சூப்பர் சினிமா தணிக்கைச் சட்டத்திற்கு எதிரான திரைப்படக் கலை பாதுகாப்பு மாநாடு, தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு, நாட்டுப்புறக் கலைஞர்கள் சிறப்பு மாநாடு, தமிழர் உரிமை மாநாடு, மதமாற்றத் தடைச்சட்ட எதிர்ப்பு மாநாடு, கருத்துரிமைப் போற்றுதும் சிறப்பு மாநாடு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு- மொழியுரிமை பாதுகாப்பு மாநாடு, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கல்வி உரிமை மாநாடு, சனாதன ஒழிப்பு மாநாடு என தொடர்ந்து நடத்துகிறோம். இவையல்லாமல், பொதுமுடக்கக் காலத்தில் இணையவழியில் நூற்றுக்கணக்கான கருத்தரங்கங்களை பெருந்திரள் பங்கேற்புடன் நடத்திய அனுபவத்தில் இப்போதும் கூட தேவை கருதி அவ்வாறு நடத்துகிறோம். 

தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி மாநில அளவில் பல்வேறு இயக்கங்களை நடத்திய தமுஎகச, இக்கோரிக்கையின் மீதான அழுத்தத்தைக் கூட்டும்பொருட்டு, பெருந்திரளுடன் டெல்லிக்குப் போய் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்தப் பேரணியை நடத்தியது. 

சமூகம் நமக்குள் திணித்துள்ள பொதுப்புத்தியிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும்முகத்தான் அம்பேத்கரியம் அறிவோம் பயிலரங்கு, சங்க இலக்கியப் பயிலரங்கு, பாலினச் சமத்துவம் அறிதல் அரங்கு, சிறுபான்மையினர் வாழ்வியல் புரிந்துணர்வு முகாம், புனைவுலகும் புறவுலகும் முகாம், சிந்துவெளிப் பண்பாடு பயிற்சி முகாம் என தொடர்ந்து முகாம்களை நடத்தி தமுஎகச ஊழியர்களின் கருத்துலகத்தை காலப்பொருத்தமுள்ளதாக்குகிறோம். 

தமுஎகச எழுத்துமேசையிலோ புத்தகத்திற்குள்ளோ தலையைக் கவிழ்த்துக் கொண்டு சமூக நடப்புகளை கண்டும்காணாமல் இருப்பவர்களின் அமைப்பல்ல. மதுரை, விருதுநகர் மாவட்டங்களின் நான்கு ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவொட்டாமல் சாதியவாதிகள் தடுத்துவந்த நிலையில் அந்த ஊர்களுக்குப் போய் தேர்தலை நடத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு பரப்புரை செய்தோம். மதுரையில் போராட்டமும் நடத்தினோம். தென் மாவட்டங்களில் முனைப்படைந்து வந்த சாதிய மோதல்களுக்கெதிராக 6 நகரங்களில் நடத்திய பட்டினிப் போராட்டம், அந்நேரத்தில் நடந்த முக்கியமான தலையீடாகும். 

0 தமுஎச-வின் பெயர், அதன் இலச்சினை விரிவாக்கப். பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்துப் பதிவிடுக!

எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்குமானது என்கிற புரிதலுடன்தான் 1975ஆம் ஆண்டு தமுஎச தொடங்கப்பட்டது. எனினும் பெயரிலும்கூட அந்த உள்ளடக்கியத்தன்மை வெளிப்பட வேண்டும் என்கிற நோக்கில் 2008 ஆம் நடைபெற்ற 11ஆவது மாநில மாநாட்டில் அமைப்பின் பெயரில் கலைஞர்களையும் சேர்த்து “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்” என்றானது. 

0 பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய ஆளுமைகளை மக்களிடம் கொண்டு செல்லத் தமுஎகச ஆற்றிய பணிகள்.

சங்கம் தொடங்கிய காலத்தில் நெருக்கடிநிலை நிலவிய சூழலில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரது படைப்புகளை முன்வைத்து ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டக்குணம், விடுதலையுணர்வு, பகுத்தறிவு மற்றும் பொதுவுடமைக்கருத்துக்கள் ஆகியவற்றைப் பேசுவதற்குமான வாய்ப்பாக தோழர்கள் பயன்படுத்தியுள்ளனர். இம்மூவருக்குமான விழாக்கள் ஆண்டுதோறும் நடக்கின்றன. அமைப்பின் முன்னோடிகளாக இவர்களை ஏற்பது இயல்பாக நடந்தேறியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து உலகளாவியப் பார்வையால் தமிழில் முற்போக்கு இலக்கியத்திற்கு பெரும்பங்காற்றிய தோழர் தமிழ்ஒளியையும், சமூகத்தடைகளைத் தாண்டி நாட்டியக்கலையில் அருஞ்சாதனைகள் புரிந்த பாலசரஸ்தியையும் கடந்த மாநாட்டின்போது இணைத்து ஐம்பேராளுமைகள் என்றாக்கிக்கொண்டோம். 

 0 கவிஞர் தமிழ்ஒளி குறித்த தமுஎகச அமைப்பின் முன்னெடுப்புகள்...

தமிழ்ப் பண்பாடு, தமிழர் நலன், பகுத்தறிவு, பொதுவுடமை நோக்கிய சமூக மாற்றம் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து படைப்பிலக்கியத்திலும் கருத்தியல் தளத்திலும் களத்திலும் செயல்பட்டவர் தோழர் தமிழ்ஒளி. சாதிய ஒடுக்குமுறை, வேதப்பண்பாடு மற்றும் இந்தியின் ஆதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றுக்கெதிரான அவரது நிலைப்பாடுகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கி அதன் முதல் செயலாளராகவும் இருந்தவர் என்ற முறையில் அவர் தனது நண்பருக்கு எழுதிய கடிதம் ஒரு கொள்கையறிக்கைக்கு நிகரானது. எனவே அவர் பாரதி, பாரதிதாசன், வரிசையில் வைத்துப் போற்றப் பட வேண்டியவர். அவரது பிறந்த நாளையும் நினைவு நாளையும் அரசு நிகழ்வாக நடத்தவேண்டும் என்று புதுச்சேரி மாநில அரசை இணங்கவைத்து சாத்தியப்படுத்தியதில் புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு தீர்மானகரமான பங்குண்டு. தமிழ்ஒளியின் நூற்றாண்டு தொடங்குவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே நூற்றாண்டு விழாக்குழுவை அமைத்து அதனூடே தொடர்ச்சியாக அவரது படைப்புகளை வெகுமக்களிடையே கொண்டு செல்வதற்கு தமுஎகச தோழர்கள் உள்ளுறையாக இருந்தியங்கினர். தமிழ்ஒளி நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது, அவருக்கு தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சிலை வைப்பது, அவருடைய படைப்புகளை மாணவர்களிடையே பரப்புவதற்கு நிதி ஒதுக்கீடு என்கிற முடிவினை தமிழ்நாடு அரசு மேற்கொண்டதற்குப் பின்னே தமுஎகச உருவாக்கிய தாக்கமும் ஒரு காரணம்.   

0 நாட்டுப்புறக் கலைகளைப் பேணி வளர்ப்பதில் தமுஎகசவின் பங்களிப்புப் பற்றிக் குறிப்பிடுக!

தமுஎகச திருவண்ணாமலை தோழர்கள் உருவாக்கிய கலை இரவு என்கிற கொண்டாட்டம் பெரிதும் நாட்டுப்புறக்கலைகளையே மையப்படுத்தியிருந்தது. ஆயிரக்கணக்கான மக்களிடையே பெரும் மேடையில் நிகழ்த்திக்காட்டப்பட்ட இக்கலைவடிவங்களுக்கு மக்கள் காட்டிய ஈடுபாடும் ஆரவாரமும் அந்தக் கலைஞர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கின. கலை இரவு மாநிலம் முழுவதும் பரவியபோது அந்தந்த வட்டாரத்தின் வாழ்வியலோடு தொடர்புடைய நாட்டுப்புறக் கலைவடிவங்கள் கவனப்படுத்தப்பட்டன. தமுஎகச தவிர்த்து வேறுபல அமைப்புகளும் கலை இரவு வடிவத்தைக் கைக்கொண்டு நடத்துகிறார்கள். 

நாட்டுப்புறக் கலைஞர்கள் முழுநேரமாக இயங்கமுடிவதில்லை. அவர்கள் வாழ்வாதாரத்திற்காக வேளாண் கூலிகளாகவும் வேறுபல தொழில்களில் முறைசாரா தொழிலாளிகளாகவும் தான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியுள்ளது. வாழ்வாதாரம் சார்ந்த தீராக்கவலையுடன் மனநிறைவற்ற நிலையில் கலைப்பணியும் ஆற்றுகின்றனர். நாட்டுப்புறக் கலைஞர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தமுஎகச சிறப்பு மாநாடும் பேரணியும் நடத்தியதன் பேரில் திமுக அரசு நாட்டுப்புறக்லைஞர்கள் நலவாரியத்தை அமைத்தது. அடுத்துவந்த அதிமுக அரசு அந்த வாரியத்தைக் கூட்டாமலே முடக்கிப் போட்டது. கொரானா பொதுமுடக்கக் காலத்தில் நாட்டுப்புறக்கலைஞர்கள் எங்கும் நிகழ்ச்சி நடத்த வழியற்று வாழ்வாதாரம் இழந்திருந்த நிலையில் தமுஎகச மூலமாக மாநிலம் முழுக்க அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தோம்.  இணையவழியில் அவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு மாநாட்டில் அப்போதைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் பங்கேற்று சில வாக்குறுதிகளை அளித்தார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அதேபோல் நடத்திய மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று நம்பிக்கையளித்தார். நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் உயிர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அவர்களது தேவைகளை நிறைவு செய்யக் கூடிய நிலையில் வாரியம் இல்லை. வாரியத்திற்கு ஒதுக்கப்படும் சொற்ப நிதியை வைத்துக்கொண்டு மாநிலத்தில் உள்ள ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நிகழ்த்துக் கலைஞர்களுக்கு குண்டூசிகூட வழங்க முடியாது. நலவாரியத்தில் உறுப்பினராகச் சேர்வது முதற்கொண்டு ஐநூறு ஆயிரம் என்ற  அற்பத்தொகையை நிவாரணமாகப் பெறுவது வரைக்குமாக அவர்களை அலைக்கழிக்கும் அலுவலக நடைமுறைகளில் தீவிரமான மாற்றங்கள் தேவை. கலைஞர்களை இரவலர்கள் போல நடத்தும் நிலை சமூகத்தில் இருப்பது போலவே அரசுத்துறைகளிலும் இருப்பதை மாற்றுவதற்கு கலை பண்பாட்டுத் துறையும் வாரியமும் கலை இலக்கிய அமைப்புகளுடன் இணைந்துச் செயல்பட முன்வருவதுதான் இதற்கு ஓரளவுக்குத் தீர்வாக இருக்கமுடியும்.  

0 சாதி ஒழிப்பு மற்றும் மகளிர் விடுதலை குறித்த தமுஎகசவின் தொடர் செயல்பாடுகள்.

சாதியொழிப்பின் உடனடி சாத்தியங்கள் பற்றிய விவாதங்கள் ஒருபுறமிருக்க, அதற்கும் முன்னதாகவே ஒவ்வொரு தனிமனிதரும் தன்னளவில் சிந்தனை மற்றும் செயல்பூர்வமாக சாதியை மறுத்து வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதை தமுஎகச தோழர்கள் தவறவிட்டுவிடக்கூடாது. சாதியாதிக்க, மதவாத அமைப்புகளில் இணையக்கூடாது. சனாதன, சாதியக் கருத்துகள் எவ்வடிவில் வெளிப்பட்டாலும் எதிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் உறுப்பியம் வகிப்பது இந்நோக்கில்தான். இங்கே நிலவும் பாலினப்பாகுபாட்டிற்கும் ஒடுக்குமுறைக்கும் சாதியமே அடிப்படையாக இருக்கிறது. சாதியம் இங்குள்ள பொருளியல் உறவுகளுடனும் பின்னிப்பிணைந்திருக்கிறது. எனவே ஓர் ஒருங்கிணைந்தப் பார்வையும் போராட்டமும் தேவை. அது நடந்தால் இதெல்லாம் மாறிவிடும் என்று சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்காமல், தமுஎகச தோழர்கள் ஆணாதிக்கக் கண்ணோட்டம் துறந்தவர்களாகவும் பாலினச் சமத்துவம் பேணக்கூடியவர்களாகவும் பெண்களும் மாறும் பாலினத்தவரும் தமக்குரிய பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு துணைநிற்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்று அமைப்பு வலியுறுத்துகிறது. ஆனால் இந்த நிலைப்பாடுகளை தோழர்கள் அனைவரும் மனமார ஏற்றுச் செயல்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. அதற்காக அவர்கள் தம்மளவில் தயாராவதற்கான முயற்சியை இடைவிடாது நடத்த வேண்டியுள்ளது.

அமைப்பின் கிளை முதல் மாநிலம் வரை குறைந்தபட்சம் 20% நிர்வாகிகள் பெண்களாக இருக்க வேண்டும், பெண்கள் பங்கேற்கும் விதமாக அமைப்பின் நிகழ்ச்சிகளை வடிவமைக்க வேண்டும், பெண்கள் கலை இலக்கியச் செயல்பாடுகளில் தமக்குள்ள தடைகளைக் கடக்க  உதவுதல், பாலியல் தொந்தரவுகள் எவ்வடிவில் வெளிப்பட்டாலும் நடவடிக்கை என்பதில் அமைப்பு உறுதியாக இருக்கிறது.  

0 தமுஎகச-வின் விருதுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய விவரங்களைத் தொகுத்தளிக்கவும்.

எழுத்திலக்கியத்தின் பல்வேறு வகைமைகளில் வெளியாகும் நூல்களுக்கென 11 விருதுகள். நாடகச்சுடர், இசைச்சுடர், நுண்கலைச்சுடர், நாட்டுப்புறக் கலைச்சுடர், பெண் படைப்பாளுமை என ஐந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. 10 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுப் பட்டயம் ஒவ்வொரு விருதுக்கும் வழங்கப்படுகிறது. முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்புச் செய்த ஆளுமைக்கான விருது ஒருவருக்கு வழங்கப்படுகிறது. விருதுத்தொகை ஒரு இலட்சம் ரூபாய். ஆண்டுதோறும் ஒரு குறும்படத்திற்கும் ஒரு ஆவணப்படத்திற்கும் மூன்று திரைப்படங்களுக்கும் விருதளிக்கப்படுகிறது. இவ்விருதுகள் அனைத்தும், தமுஎகச மீது ஈடுபாடுள்ள தோழர்களால் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ள தொகையை வங்கியில் வைப்புநிதியாக வைத்து அதிலிருந்து வழங்கப்படுவதாகும். 

விருதுக்குரிய நூல்கள் படங்கள் ஆளுமைகள் பற்றிய கருத்தரங்கம் பகலிலும் மாலையில் கலை இரவு பொதுமேடையில் விருதளிப்பும் நடக்கும். விருதுபெற்ற நூல்கள் தமுஎகசவின் வாசிப்பு இயக்கம் மூலம் பரவலாகக் கொண்டுசெல்லப்படுகின்றன. 

0 தமுஎகச-வின் பொன்விழா ஆண்டின் செயல்திட்டம் பற்றித் தெளிவாக்கவும்.

வெறுப்பின் கொற்றம் வீழ்க, அன்பே அறமென எழுக என்கிற முழக்கத்துடன் அடுத்த மூன்றாண்டுகளுக்கு எமது கலை இலக்கிய, களச் செயல்பாடுகள் அமையும். தமுஎகச நிகழ்ச்சி நடக்காத நாளே தமிழ்நாட்டில் இல்லை என்கிற அளவுக்கு கருத்துலகத்தில் இயங்கிவரும் தமுஎகச காலத்தின் தேவையை நிறைவு செய்வதில் இன்னும் தீவிரமாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டியுள்ளது.

 

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...