2026 ஜூன் 14 அன்று கோவையில் தமுஎகச நடத்தும் "ஆதவன் தீட்சண்யா படைப்புலகம்" நிகழ்வில் வெளியாகவிருக்கும் எனது சிறுகதைத்தொகுப்புகளுக்கான முன்னுரை.
நான் இதுவரை எழுதியுள்ள ஐம்பத்தெட்டுச் சிறுகதைகளையும் தொகுத்து இரண்டு பாகங்களாக வெளியிடுகிறது சந்தியா பதிப்பகம். வாய்க்கும்போது இன்னும் எழுதுவேன் என்கிற சம்பிரதாய உறுதிமொழி எதையும் இப்போது வழங்குவதற்கு நான் தயாரில்லை. ஏனென்றால் எமக்குத் தொழில் எழுத்து மட்டுமேயல்ல. பிறகு, எழுதுவது தவமோ வரமோ பிரசவமோ பிள்ளை வளர்ப்போ அல்ல, அது இயல்பான மனிதச்செயல்பாடுகளில் ஒன்று என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும் தானே!
நூற்றாண்டைக் கடந்துவிட்ட தமிழ்ச்சிறுகதையின் வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டுமென்று எனக்கு கிஞ்சித்தும் எண்ணமில்லை. அதுவாக எனக்குரிய இடத்தைக் கொடுத்து இணைத்துக் கொள்வதன்றி வரலாற்றுக்கு வேறு வழியுமில்லை. (செருக்கு / அகந்தை/ தலைக்கனம்/ சுயதம்பட்டம் என்பதாக இவ்வரியை யாரும் புரிந்துகொண்டுவிடுவார்களோ என்கிற பதற்றமின்றிதான் எழுதுகிறேன்).
இலக்கிய உலகத்தில் என் கதைகளைப் பற்றி அப்படியொன்றும் நல்லபிப்ராயம் இல்லை. இதனினும் நனிசிறந்த வெகுமதி ஏதுளது? கதைகளை எழுதிக்கொண்டிருப்போம், அபிப்ராயங்கள் குடோன்களிலேயே இருக்கட்டும்.
என் கதைகளின் வரைபடம் சீராக இல்லையென்பதை இப்போது ஒருசேர படித்தபோது அறிந்து கொண்டேன். தனிமனித அனுபவம் தொடங்கி ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டனுபவங்கள் வரையாக அது எங்கெங்கோ எப்படியெப்படியோ காலநேரங்கடந்து பங்குசந்தைக் குறியீடு போல ஏறியிறங்கிப் பாய்கிறது. அதன் வாகு அப்படி அமைந்திருப்பதற்கு திட்டவட்டமான காரணங்கள் உண்டு. அந்நேரத்து மனநிலை எழுதுவதற்கான கருப்பொருளைத் தெரிவுசெய்கிறது. அதற்கான உழைப்புக்கும் முனைப்புக்கும் உண்டானதொரு கதை கிடைக்கிறது. அதனதனை அவ்வவ்வாறே படிக்கவும் கிழிக்கவும் மதிக்கவும் மிதிக்கவும் நம் அரசியல் சாசனம் வழங்கியுள்ளதைவிடவும் கூடுதலான சுதந்திரம் உங்களுக்கு உள்ளது.
உலகமயமாக்கலையும் மதமயமாக்கலையும் இயல்பானவையெனக் கருதி ஏற்றொழுகும் இக்காலத்தின் மீதான புகார்களால் அலைக்கழிக்கப்படுபவன் நான். இடையறாத மனத்தொந்தரவில் கவனம் சிதறி ஒன்றிலும் நிலைகொள்ளாமல் ஓடித்தாவுகிறவன். நான் ஒரு நுகர்வாளன், நுகர்வுப்பண்டமாயும் ஆக்கப்பட்டவன். என் மொழி, சிந்தனை, செயல் எல்லாமே செலாவணியாகாதவையோ என்று அவ்வப்போது எழும் அய்யத்தால் திகைத்து நிற்பவன். நஞ்சைப் போல என் எதிராளிகள் பரவுவதைக் காணப்பொறுக்காத சினத்தில் முறிமருந்தாக என் கதைகளைச் செலுத்துகிறேன். மருந்தென்றான பிறகு பாரபட்சம் கூடாது, யாவருக்கும் ஒரு சொட்டுண்டு. உங்களது பெயரெழுதியச் சொட்டு எதுவெனக் கண்டறியுங்கள்.
எல்லாவற்றையும் பகடியாக்கிவிடுவதாய் ஒரு பழி என் கதைகள் மீது படிந்துள்ளது. முக்கால நடப்புகளும் பகடியாகத்தான் இருக்கின்றன. கண்டறிந்துக் காட்டுவது எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குற்றம்? பணமதிப்பிழப்பு பற்றி நான் கதையெழுதி ஒன்பதாண்டுகளுக்குப் பின் அது இங்கு நடந்தது. காசுக்கு மாற்றாக கொடுக்கப்பட்ட சளி மிட்டாயை காசாக ஏற்கும்படி மக்கள் கலகம் செய்யும் காலம் வருமென்று அதில் எழுதியிருந்தேன். இதோ இப்போது அப்படியொரு பேரங்காடியில் செருப்பை வைத்துக்கொண்டு மளிகைப்பொருட்களைத் தருமாறு நானாபடேகர் சண்டையிடும் காணொலி ஒன்று வந்துள்ளது. எங்கும் எதிலும் புஷ்மயமென எழுதிய கதையில் டிரம்ப் என பெயரை மட்டும் மாற்றிக்கொண்டால் இபோதும் பொருந்துவதாகத்தான் ஆட்சியாளர்களின் வல்லுசு இருக்கிறது. வாக்கு வணிகம், கார்ப்பரேட்டுகள் தொடங்கும் கட்சிகள், கட்சிகளே கார்ப்பரேட்டுகளாவது, தேர்தலையே நடத்தாமல் வாக்கு எண்ணிக்கையை நடத்தும் மோசடியை ஊடகத்தின் துணைகொண்டு நிறைவேற்றுவது என அத்தனையும் பகடியாக இருக்கும்போது நான் தனியாக உங்கள் கக்கத்தில் கைவிட்டு கிச்சிகிச்சு மூட்டணுமாக்கும்! உலக நடப்புகளை அப்டேட்டாக அறிந்துகொள்வதிலேயே ஆயுள் பரியந்தம் கிடந்துவிட்டு ஒருத்தருக்கும் பயனற்றுப் போன நியூஸ் தாத்தாவாக நாம் ஒவ்வொருவரும் இருப்பதை நான் எழுதினால் ஏன் ஆத்திரம்? நான் உருவாக்கிய லிபரல்பாளையம் இப்போது காமியதேசமாக, புல்டோஸர் ராஜ்ஜியமாக உருமாறிக் கொண்டிருப்பதை எழுதாமல் வேறு என்ன வெங்…, சரி வேண்டாம் விடுங்கள், முன்னுரையிலேயே எதற்கு இத்தனை பஞ்சாயத்து!
தனிமனிதராக நாம் ஒவ்வொருவரும் நல்லறம் மிக்கவர்கள் என்றும் பாலின/ சாதிய/ மத/ வர்க்கரீதியான குழுவாகத் திரளும்போது அறம்பிறழ்ந்துவிடுவதாகவும், இதன் மறுதலையாக, கூட்டு அடையாளங்களில் குணச்சித்தர நடிகராகவும் தனிமனித அளவில் குணக்கேடராகவும் இருப்பதான கூற்றுமுண்டு. இரண்டுமே மாயை, சாராம்சத்தில் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பதையும், தனிமனிதராகவும் கூட்டு அடையாளங்களுக்குள்ளும் நாம் சகமனிதர்கள் மீது மதிப்பற்றவர்களாக இருக்கிறோம் என்பதையும் கதைகளை எழுதும்போது தீவிரமாக உணர்கிறேன்.
எனது மொழி ஓர் எருமைக்கோ கழுதைக்கோ அல்லது வேறேதேனும் உயிரினத்துக்கோ தெரிந்திருக்குமானால் நான் அவற்றோடு உரையாடிவிட்டுப் போய்விடுவேன். உங்களுக்கும்கூட அப்படியொரு விருப்பமும் தேடலும் உள்ளூர இருக்கக்கூடும். ஆனால் என்ன பண்ணித் தொலைக்க, இப்போதைக்கு நாம்தான் பேசிக்கொள்ள வேண்டியுள்ளது. அதனால் தான் எனது கதைகள் பாசாங்கானவற்றை ஒதுக்கி பயனுள்ள அதியுண்மைகளைப் பேசவேண்டுமென விரும்புகிறேன். அப்படி பேசுவதால் உங்களது ஆணிய, சாதிய, மதவாத, பொருளாதிக்க மனம் நோகுமானால் தெரிவியுங்கள், வலியின் டிகிரியை கூட்டவேண்டியுள்ளது.
----
முகப்போவியங்கள்: கார்த்தி
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை: ஒரு தொகுதி: ரூ.500/-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக