தோள்சீலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோள்சீலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 14

ஆடைக்கட்டுப்பாட்டாளர் வருகிறார் - ஆதவன் தீட்சண்யா

போனி டெய்லும் பொடக்கழுத்தும் 

பெண்ணின் தோற்றத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமாகத்தான் ஒரு சமூகத்தின் ஒழுக்கத்தைக் காக்கமுடியும் என்கிற கற்பிதத்தைப் பரப்பும்  பழமைவாதிகள் உலகெங்கும் நகைக்கத் தக்க கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். துப்பட்டா போடுங்க தோழி என்பது மாதிரியான அட்வைஸ் கோஷ்டிகள் ஜப்பானிலும் இருக்கிறார்கள்.  அங்கு இப்போது வந்துள்ள  குதர்க்கமான ஒரு தடையறிவிப்பு: குதிரைவால் சடை ( போனி டெய்ல்) போடுவதால் வெளித்தெரியும் மாணவிகளின் புறங்கழுத்துப் பகுதி மாணவர்களின் கவனத்தைச் சிதறடித்து பாலிச்சையைத் தூண்டி விடுகிறதாம். இதனால் மாணவிகளுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைத் தடுக்கும்பொருட்டு, மாணவிகள் இனி குதிரைவால் சடையுடன் கல்வி வளாகத்திற்கு வரக்கூடாது என அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது. பெண்களை எப்படி பார்க்கவேண்டும் என்று ஆண்களைப் பயிற்றுவிக்கிற ஏற்பாடு அங்கும் இல்லை போல. 

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் ஊடக பயிற்சி முகாமை 11.03.2022 அன்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் துவக்கிவைத்து உரையாற்றியிருக்கிறார். அவர் தனது பேச்சில் “…நாகரீக உடைகள் உடுத்துவதில் கவனம் வேண்டும். மற்றவர்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் உடை அணியக்கூடாது. உடையில் கட்டுப்பாடு என்பது இருக்க வேண்டும். நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று செய்வதற்கு சுதந்திரம் இருக்கிறது என்பதுபோல், மற்றவர்களுக்கும் அதே சுதந்திரம் உள்ளது என்பதை உணரவேண்டும்… நன்றாக படிக்க வேண்டும், சாதனை செய்வேன், மேலும் வளர்ச்சி அடைவேன் என்பதுதான் உரிமையே தவிர, என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை…” என்றெல்லாம் அறிவுரையை வாரி இறைத்துள்ளார். 

ஹிஜாப் தடைக்கு எதிராக வலுவடைந்த கருத்துகளால் எரிச்சலுற்று அதற்கு மறைமுகமாக பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு  பேசக் கிளம்பி மனதிற்குள்ளிருக்கும் மநுவியாதி இப்படி வெளியே தெரிந்துவிட்டதா? எந்நிலையிலும் யாதொரு விசயத்திலும் மனிதர்களுக்குள் சமத்துவத்தை ஏற்காத மநுஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவக் கருத்தியலின் அடிமையாய் இவ்வளவு காலமும் இருந்து அதற்கு வெகுமானமாக ஆளுநர் பதவியைப் பெற்றுள்ள தமிழிசை இவ்வாறு பேசாமல் போனால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும்.  பெண் கல்விக்காகவும் பொதுவாழ்வில் பெண்கள் பங்கெடுப்பதற்காகவும், பாலினச் சமத்துவத்திற்காகவும் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய இயக்கங்களது தொடர் போராட்டங்களின் பலனை அனுபவித்துக் கொண்டே அதற்கு நேரெதிர் கருத்தியலைத் தாங்குகிறார் தமிழிசை.   

மேலோட்டமாகப் பார்த்தால் பெண்களின் நலன்களைக் குறித்த அக்கறையில் இருந்து சொல்லப்பட்டதாக தோன்றும் தமிழிசையின் இக்கருத்துகளில் அப்பட்டமான பிற்போக்குவாதமே பொதிந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கி தீர்ப்பெழுதும் கபடம். பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், தொந்தரவுகள், சீண்டல்கள் எல்லாவற்றுக்கும் அவர்களையே பொறுப்பாக்குவதுமாகும். பெண்களின் உடைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்கிற இந்த வாதம், பெண்களிடம் அத்துமீறி நடக்கும் ஆண்களை அவர்களது குற்றங்களிலிருந்து விடுவிப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. அதற்கும் மேலோடிச் சென்று அழகு, அருவறுப்பு, அழகு, கண்ணியம், ஆபாசம் போன்ற அருவமானவற்றுக்குள் இங்குள்ள மத, சாதியக் கண்ணோட்டதை ஏற்றி அதன்படி பெண்ணுக்குள்ள இடத்தை மறுவுறுதி செய்வதற்கும் முனைகிறது. 

நாகரீக உடைகள் பற்றி பெண்கள் கவனமாய் இருக்கவேண்டும் என்று ஒவ்வாமையை வெளிப்படுத்தும் தமிழிசை, அவர் பெரிதும் உயர்த்திப் பிடிக்கும் இந்துப் பண்பாடு, பெண்களுக்கு எவ்வகையான ஆடையை கண்ணியமெனக் கருதி வழங்கிவந்திருக்கிறது என்கிற வரலாற்றை சற்றே திரும்பிப் பார்ப்போமா? 

வாழ்வின் எல்லா நிலைகளிலும் தலையிட்ட வர்ண ஆதிக்கம்  ஆடை விசயத்திலும் குரூரமான பாகுபாட்டை நிலைநாட்டியது. சூத்திர மற்றும் அவர்ண ஆண்கள் முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டக்கூடாது, தோளிலே துண்டு போட்டுக்கொள்ளக்கூடாது, தலைப்பாகை அணியக் கூடாது, புத்தாடை அணியாமல் பிணத்தின் மீது போர்த்திய கந்தைகளையே உடுத்தவேண்டும், பஞ்சக்கச்சத்தை தார்ப்பாய்ச்சி கட்டக் கூடாது என்பதாக  நீள்கிறது  இக்கட்டுப்பாடுகள். செருப்பணியக்கூடாது என்கிற தடையை, ஒருவேளை கழற்றியடித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தினால் விதித்திருக்கலாம். ஆனால் ஆடை விசயத்தில் எதற்கு இத்தனை கட்டுப்பாடுகள்? ஆண்களையே இந்தப்பாடு படுத்திய வர்ண விதிகள், வர்ணம் சாதிகளாய் சிதைந்த காலத்திலும் பெண்களை என்ன பாடு பாடுத்தியிருக்கும் என்பதை “தோள்சீலைப் போராட்டம்” நமக்கு உணர்த்துகிறது. 

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆதிக்கச்சாதியினராகிய நம்பூதிரிகளும் நாயர்களும் சாதியடுக்கில் தமக்குக் கீழிருந்த சாதிகளின் பெண்கள் இடுப்புக்கு மேல் உடுத்த தடைவிதித்திருந்தனர். இந்நிலையில் கிருத்தவத்திற்கு மதம் மாறிய நாடார் பெண்கள், தங்களுக்கும் நம்பூதி நாயர், வெள்ளாளப் பெண்களைப் போல மேலாடை (தமிழிசையின் பார்வையில் இது நாகரீக உடை) உடுத்தும் உரிமையைக் கோரியுள்ளனர். இதன் தொடர்ச்சியில் கிருத்துவராக மதம் மாறிய நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று அங்கு கர்னல் மன்றோ 1812ஆம் ஆண்டு ஓர் உத்தரவை பிறப்பித்திருக்கிறார். ஆனால் இந்த உத்தரவை ஏற்க மறுத்து ஆதிக்கச்சாதியின் ஆண்களும் பெண்களும் நடத்திய கடும் தாக்குதல்களாலும் அவமதிப்புகளாலும் கொந்தளிப்புக்குள்ளான அடிநிலைச் சாதிப் பெண்கள் 1822ஆம் ஆண்டு தொடங்கிய போராட்டம் 1859 ஜூலை 26ஆம் நாள் தன் இலக்கை எட்டியது. இந்தப் போராட்ட வரலாற்றைத்தான் தமிழிசை தாங்கிப்பிடிக்கும் ஒன்றிய அரசு பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டிருக்கிறது. 

மாராப்பு இல்லாமல் தம்மைப் பார்க்கும் ஆதிக்கச்சாதியினரின் வக்கிரத்தை அடிநிலைச் சாதிப்பெண்கள் 19ஆம் நூற்றாண்டிலேயே அடித்துநொறுக்கி “நவீன ஆடை” அணியத் தொடங்கிவிட்டனர். ஆனால் ஆதிக்கச்சாதிகளில் ஒன்றான நாயர் சாதியின் பெண்கள் கோவிற்சடங்குகளில் மேலாடை இன்றி பங்கேற்கும் அவலம் 20ஆம் நூற்றாண்டின் நடுக்காலம் வரை தொடர்ந்தது. நாயர் பெண்கள், கேரளத்தின் திருச்சூர் அருகேயுள்ள வேலூர் மணிமலர்க்காவு தேவி கோவிலின் திருவிழாவில் விளக்கும் மலர்களும் தாங்கிய “தாலம்” ஏந்திவந்து புரோகிதர்களாகிய நம்பூதிரிகள் முன்பு சடங்குகள் செய்து முடித்துத் திரும்பும்வரை மேலாடை அணியக்கூடாது.

நாயர் பெண்கள் மீதான இந்த 'அனாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மேலாடை அணிவதற்கான உரிமையை அவர்களுக்கு பெற்றுத்தந்தவர்கள் நாயரல்லாத-அடிநிலைச்சாதிப் பெண்களே. ஒடுக்கப்பட்ட ஈழவச்சாதியில் பிறந்தவரும் கம்யூனிஸ்டுமான வேலத்து லெஷ்மிக்குட்டி, வெள்ளரோட்டில்  மீனாட்சி (இவரும் பின்னாளில் கம்யூனிஸ்டானார்), போன்றோரின் முன்னெடுப்பில் 1956ஆம் ஆண்டு நாயரல்லாத  பெண்கள் 23 பேர், தெய்வநிந்தனையாவது வெங்காயமாவது என்று ரவிக்கையணிந்து தாலம் ஏந்தி அதுவரை தாங்கள் அனுமதிக்கப்படாத அந்தக் கோவிலுக்குள் நுழைந்தனர்.  நூற்றாண்டுகளாக தொடர்ந்த அந்த அனாச்சாரம்  ஒழித்துக்கட்டப்பட்டதை  “வேலூர் மாறு மறைக்கல் சமரம்” என வரலாறு நினைவில் வைத்திருப்பதை தமிழிசை அறிவாரா? தோள்சீலைப் போராட்டத்தின் இருநூறாவது ஆண்டில், மீண்டும் உடைக்கட்டுப்பாடு பற்றி பேசுவது வரலாற்றுக்கு இழைக்கும் அவமானம்.
 

அரை நிர்வாணமாகவே இருக்கும் அவலத்தை முறியடித்து இந்தியப் பெண்கள் தங்களது உடலமைப்புக்கும் ரசனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற உடைகளை அணிவதற்கான இந்த நெடியப் போராட்டத்திற்கு உறுதுணையாய் இருந்தவர்களின் பட்டியல் மிக நீண்டது. ஆனால் தமிழிசையால் உயர்த்திப் பிடிக்கப்படும் இந்துத்துவவாதிகளின் ஒரு பெயரும் அதிலில்லை. 

‘எனது உடை எனது உரிமை’ என்கிற முழக்கத்தைக் கேட்கமாட்டேன் என தமிழிசை தனது செவிகளையும் மனதையும் அடைத்துவைத்திருக்கலாம். ஆனால் அவரேகூட இந்த முழக்கம் அடைந்துவரும் வெற்றிக்கு ஒரு சாட்சியம் தான்.     

நன்றி: தீக்கதிர் நாளிதழ், 14.03.2022


ஞாயிறு, ஏப்ரல் 2

படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல... - ஆதவன் தீட்சண்யா

எனது கோப்பில் இல்லாத கட்டுரைகளை இணையத்தில் தேடியபோது கிடைத்தது இக்கட்டுரை. சுந்தர ராமசாமியின் "பிள்ளை கெடுத்தாள் விளை" சிறுகதை பற்றி 2005ல் எழுதப்பட்டது.
படைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும். நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும் என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’- ஒரு கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது. அது வரலாற்றையும் சொல்லவில்லை, புனைவாகவும் இல்லை. கதையின் சாரமான செய்தியிலும் புதுமையொன்றுமில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஏற்கனவே சங்கராச்சாரி அருளியதன் மறுவுருவாக்கமே. தாயம்மாளின் கதையைச் சொல்பவன் தங்கக்கண். தங்கக்கண் கதையைச் சொல்கிறான் செல்லதுரை. தங்கக்கண்ணின் முன்னோர் வாழ்ந்த மாடக்குழியும் தாயம்மாளின் மாங்குளமும் ( மாங்குழி என்கிறார் முதலில்) தான் கதை நடக்கும் ஊர்கள். கதை 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்குகிறது. அன்று தங்கக்கண்ணின் முன்னோர்களான ஆண்களின் உடை கௌபீனம். ‘பொட்டையா, போடாதே மேல்சீலை’. மேல்சீலை உடுத்த அனுமதியற்ற சாதிகளின் படிநிலையில் மேலே நாடார்களும் கீழே தலித்களும் இருந்தனர். எனவே மேல்சீலை உடுத்த அனுமதியற்ற தாழ்ந்த சாதிப்பெண் என்று தாயம்மாளை அறிமுகப்படுத்தும் தங்கக்கண் நாடார் என்றும் தாயம்மாள் தலித் என்றும் தெளிவாகிறது.
19ம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே நாடார் பெண்களும் (26.07.1859 ), தாழ்த்தப்பட்ட பெண்களும் (01.07.1865) தோள்சீலை அணிந்து கொள்ளும் உரிமையை அடைந்து விட்டனர். ஆனால் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாதிரியார் வரும்போது தாயம்மாளின் உறவுப்பெண்கள் மார்பை மறைத்துக்கொள்ள அவஸ்தையுறுகிறார்கள் என்கிறது கதை. அய்யா வைகுண்டரும் அய்யங்காளியும் வரலாற்றைத் திருத்தும் சுந்தரராமசாமியை மன்னிப்பார்களாக.
தாழ்ந்த சாதியென்று தெரிந்தும் தாயம்மாளின் கல்வியறிவை மதித்து தங்கள் ஊரின் பள்ளிக்கு அவளை தலைமையாசிரியையாக நியமித்து அப்போதே முன்னூறு ரூபாய் ஊதியம் வழங்குகின்றனராம் மாடக்குழி மகான்கள். சுதந்திரத்திற்கு பின் வந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறும் இங்கிலிசில் பேசி பிரச்சாரம் செய்யுமாறும் கட்சிகள் அவளை மொய்க்கின்றனவாம். (இன்றுவரை பாப்பாப்பட்டியிலும் கீரிப்பட்டியிலும் வேட்புமனு கூட தாக்கல் செய்யமுடியவில்லை.) இந்தளவுக்கு அவளைக் கொண்டாடி ஊரார் தரும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவில்லை தாயம்மாள். அடித்தள மக்களின் மேலெழும்பும் முயற்சிகளை ‘நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்’ என்று இளக்காரம் பேசி மறுக்கும் திக்கசாதியின் மனோபாவம் தான் கதையின் அடியோட்டம்.
அவளளவு படித்த ஆம்பளையே இல்லை அவளது சாதியில். கல்யாணமில்லை. அதற்காக காமத்தை அடக்கிக் கொள்ளமுடியுமா? தன்னிடம் டியூசன் படிக்கும் நாலாங்கிளாஸ் பையனை சூறையாடுகிறாளாம். மரணப்படுக்கையிலிருக்கும் போதும் ஒழுக்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ளவர்கள் வாழும் ஊர், இந்த ஒழுக்கக்கேட்டை தாங்கிக் கொள்ளுமா? பிரம்பாலடித்து உதட்டைக் கிழிக்கிறது. ஆளாளுக்கு அடித்து துவைக்கின்றனர். பெருகி வழியும் அவளது ரத்தம் தொட்டு அவள்மீது கதை எழுதுகிறார் சுந்தரராமசாமி. ஹா அற்புதம் என்கின்றனர் அவரது வாசிப்படிமைகள்.
முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமளவுக்கு வயதேறிய தாயம்மாள் அதன்பின் ஊரை விட்டோடி ஐம்பத்துமூன்று வருடங்கள் கழித்து ஊர்திரும்பிச் சாகிறாள். காலக்கணக்கின் துல்லியம் கிட்டத்தட்ட 2005 என்று சமகாலத்தை எட்டுகிறது. ஆனால், தாயம்மாள் செத்து 16 நாள் கடந்த பின் அவளது கதையைச் சொல்லும் சூறாவளி தினசரியின் பிரதம நிருபர் தங்கக்கண்ணுக்கு தற்போதைய மாதச்சம்பளம் நாற்பது ரூபாயாம். கள்ளக்கணக்கெழுதி நாளொன்றுக்கு ஒருரூபாயை இசுக்கிவிடப் பார்க்கும் அவன் 1942 இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப்போராட்டத் தியாகி என்கிறார் கதாசூடாமணி சுந்தரராமசாமி. தான் எழுதுவதில் குற்றம்காண யாரிருக்கிறார்கள் என்று காலம் இடம் வரலாற்றுத் தரவுகளை குளறுபடியாக பொறுப்பின்றி கையாள்வது மமதையின் உச்சம்.
‘பலான’ விசயத்தில் ஆள் கொஞ்சம் வீக் தெரியுமோ என்ற தகவலை, உண்மையா என்று சோதிக்காமலே ஒரு குற்றச்சாட்டாக பதிவுசெய்துகொள்வது பொதுஉளவியல். ஜீவா, பெரியார், பாப்லோ நெருடாவை இழிவுபடுத்த காலச்சுவடு கையாண்ட அருவருக்கத்தக்க இந்த அணுகுமுறையைத்தான் தாயம்மா மீதும் பிரயோகித்துள்ளார் சுந்தரராமசாமி. திருமணம்- ஆண்துணை- உடலின்பம் என்று சராசரியாக வாழப் பணியாத பெண்களை மிரட்டி வசக்கி தொழுவத்தில் கட்டும் கலாச்சார காவலாளியாகவும் கூட ஆலத்தி பிடிக்கிறார். பிற மதத்தாரால்தான் நம்நாட்டுப் பெண்களின் கலாச்சாரம் பாழ்பட்டது என்று இந்துத்வவாதிகள் சொல்வதையே - பாதிரியார் பேச்சைக் கேட்டு படிக்கப்போய்த்தான் அவளுக்கு இவ்வளவு கேடுகளும் வந்துசேர்ந்தது என்று சுந்தரராமசாமியும் சொல்வதாய் கருதவும் இக்கதை இடமளிக்கிறது.
தம்மை உயர்வானவர்களாய் நிறுவிட மற்றாரை இழித்துரைக்கும் மலினமான தந்திரத்தை சுந்தரராமசாமியோ காலச்சுவடோ திடுமென்று இக்கதையில் மட்டுமே கையாளவில்லை. பிம்பங்களை கட்டுடைப்பதாகவும் காத்திரமான விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை தமிழ்ச்சமூகம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் வியாக்கியானம் கூறி திராவிட, பொதுவுடமை இயக்கங்களையும் ஆளுமைகளையும் இழிவுபடுத்துவது தொடர்கிறது. தம்மையன்றி வேறெவருக்கும் இலக்கியம் வரலாறு பண்பாடு எதுவும் தெரியாது என்று காலச்சுவடு குழுவால் ரவுண்டுகட்டி மட்டந்தட்டப்பட்ட படைப்பாளிகள் அனேகர். எதைவேண்டுமாயினும் எழுதுவதே கருத்துச்சுதந்திரமாம். ஆனால் இவர்களைப் பற்றி ஒருவார்த்தை சொன்னாலும் மானநஷ்ட வழக்கு தான். விபரங்களுக்கு வெங்கட் சாமிநாதனை அணுகவும். படைப்பின் வன்முறை என்று ஒப்பாரிவைத்து ஊர்உலகமெல்லாம் கையெழுத்தியக்கம் நடத்துவார்கள்.
செருப்பு போட்டிருப்பவனுக்குத் தான் அது எங்கே கடிக்கிறது என்று தெரியும். தங்கக்கண் நாடாருக்குள் பதுங்கிக்கொண்டு சுந்தரராமசாமி எங்கே கடிக்கிறார் என்பது சுரணையுள்ளவர்களுக்கு தெரிகிறது. (மரத்துப் போனவர்களைப் பற்றி பேசாதீர்கள், ப்ளீஸ்). அத்துமீறலை படைப்புச் சுதந்திரமெனக்கூறி தப்பித்துக்கொள்ள யாருக்கும் உரிமையில்லை. இப்படியெல்லாம் அபாண்டமாய் எழுதுவது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமென்று உடனிருக்கும் உற்ற நண்பர்கள் சுந்த ரராமசாமிக்கு அறிவுறுத்தி பகிரங்கமாக மன்னிப்பு கோரச் செய்யலாம். கதையை வெளியிட்ட காலச்சுவடுக்கும் வேறு கதிமார்க்கமில்லை.
நன்றி: பதிவுகள் மே 2005; இதழ் 65.

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...