ஞாயிறு, ஏப்ரல் 2

படைப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் ஒன்றல்ல... - ஆதவன் தீட்சண்யா

எனது கோப்பில் இல்லாத கட்டுரைகளை இணையத்தில் தேடியபோது கிடைத்தது இக்கட்டுரை. சுந்தர ராமசாமியின் "பிள்ளை கெடுத்தாள் விளை" சிறுகதை பற்றி 2005ல் எழுதப்பட்டது.
படைப்பில் பிரச்சாரம் முதன்மையுறுமாயின் கலைநோக்கம் சிதைந்துவிடும். நாலெழுத்து படித்து பொதுவெளியில் புழங்க வரும் தலித்பெண்ணை இகழவேண்டும் என்ற சுந்தரராமசாமியின் பிரச்சாரத்தினால் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’- ஒரு கதையாக உருவாகாமல் மூளிப்பட்டுள்ளது. அது வரலாற்றையும் சொல்லவில்லை, புனைவாகவும் இல்லை. கதையின் சாரமான செய்தியிலும் புதுமையொன்றுமில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று ஏற்கனவே சங்கராச்சாரி அருளியதன் மறுவுருவாக்கமே. தாயம்மாளின் கதையைச் சொல்பவன் தங்கக்கண். தங்கக்கண் கதையைச் சொல்கிறான் செல்லதுரை. தங்கக்கண்ணின் முன்னோர் வாழ்ந்த மாடக்குழியும் தாயம்மாளின் மாங்குளமும் ( மாங்குழி என்கிறார் முதலில்) தான் கதை நடக்கும் ஊர்கள். கதை 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்குகிறது. அன்று தங்கக்கண்ணின் முன்னோர்களான ஆண்களின் உடை கௌபீனம். ‘பொட்டையா, போடாதே மேல்சீலை’. மேல்சீலை உடுத்த அனுமதியற்ற சாதிகளின் படிநிலையில் மேலே நாடார்களும் கீழே தலித்களும் இருந்தனர். எனவே மேல்சீலை உடுத்த அனுமதியற்ற தாழ்ந்த சாதிப்பெண் என்று தாயம்மாளை அறிமுகப்படுத்தும் தங்கக்கண் நாடார் என்றும் தாயம்மாள் தலித் என்றும் தெளிவாகிறது.
19ம் நூற்றாண்டின் பின்பகுதியிலேயே நாடார் பெண்களும் (26.07.1859 ), தாழ்த்தப்பட்ட பெண்களும் (01.07.1865) தோள்சீலை அணிந்து கொள்ளும் உரிமையை அடைந்து விட்டனர். ஆனால் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாதிரியார் வரும்போது தாயம்மாளின் உறவுப்பெண்கள் மார்பை மறைத்துக்கொள்ள அவஸ்தையுறுகிறார்கள் என்கிறது கதை. அய்யா வைகுண்டரும் அய்யங்காளியும் வரலாற்றைத் திருத்தும் சுந்தரராமசாமியை மன்னிப்பார்களாக.
தாழ்ந்த சாதியென்று தெரிந்தும் தாயம்மாளின் கல்வியறிவை மதித்து தங்கள் ஊரின் பள்ளிக்கு அவளை தலைமையாசிரியையாக நியமித்து அப்போதே முன்னூறு ரூபாய் ஊதியம் வழங்குகின்றனராம் மாடக்குழி மகான்கள். சுதந்திரத்திற்கு பின் வந்த முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறும் இங்கிலிசில் பேசி பிரச்சாரம் செய்யுமாறும் கட்சிகள் அவளை மொய்க்கின்றனவாம். (இன்றுவரை பாப்பாப்பட்டியிலும் கீரிப்பட்டியிலும் வேட்புமனு கூட தாக்கல் செய்யமுடியவில்லை.) இந்தளவுக்கு அவளைக் கொண்டாடி ஊரார் தரும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளவில்லை தாயம்மாள். அடித்தள மக்களின் மேலெழும்பும் முயற்சிகளை ‘நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்’ என்று இளக்காரம் பேசி மறுக்கும் திக்கசாதியின் மனோபாவம் தான் கதையின் அடியோட்டம்.
அவளளவு படித்த ஆம்பளையே இல்லை அவளது சாதியில். கல்யாணமில்லை. அதற்காக காமத்தை அடக்கிக் கொள்ளமுடியுமா? தன்னிடம் டியூசன் படிக்கும் நாலாங்கிளாஸ் பையனை சூறையாடுகிறாளாம். மரணப்படுக்கையிலிருக்கும் போதும் ஒழுக்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ளவர்கள் வாழும் ஊர், இந்த ஒழுக்கக்கேட்டை தாங்கிக் கொள்ளுமா? பிரம்பாலடித்து உதட்டைக் கிழிக்கிறது. ஆளாளுக்கு அடித்து துவைக்கின்றனர். பெருகி வழியும் அவளது ரத்தம் தொட்டு அவள்மீது கதை எழுதுகிறார் சுந்தரராமசாமி. ஹா அற்புதம் என்கின்றனர் அவரது வாசிப்படிமைகள்.
முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமளவுக்கு வயதேறிய தாயம்மாள் அதன்பின் ஊரை விட்டோடி ஐம்பத்துமூன்று வருடங்கள் கழித்து ஊர்திரும்பிச் சாகிறாள். காலக்கணக்கின் துல்லியம் கிட்டத்தட்ட 2005 என்று சமகாலத்தை எட்டுகிறது. ஆனால், தாயம்மாள் செத்து 16 நாள் கடந்த பின் அவளது கதையைச் சொல்லும் சூறாவளி தினசரியின் பிரதம நிருபர் தங்கக்கண்ணுக்கு தற்போதைய மாதச்சம்பளம் நாற்பது ரூபாயாம். கள்ளக்கணக்கெழுதி நாளொன்றுக்கு ஒருரூபாயை இசுக்கிவிடப் பார்க்கும் அவன் 1942 இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப்போராட்டத் தியாகி என்கிறார் கதாசூடாமணி சுந்தரராமசாமி. தான் எழுதுவதில் குற்றம்காண யாரிருக்கிறார்கள் என்று காலம் இடம் வரலாற்றுத் தரவுகளை குளறுபடியாக பொறுப்பின்றி கையாள்வது மமதையின் உச்சம்.
‘பலான’ விசயத்தில் ஆள் கொஞ்சம் வீக் தெரியுமோ என்ற தகவலை, உண்மையா என்று சோதிக்காமலே ஒரு குற்றச்சாட்டாக பதிவுசெய்துகொள்வது பொதுஉளவியல். ஜீவா, பெரியார், பாப்லோ நெருடாவை இழிவுபடுத்த காலச்சுவடு கையாண்ட அருவருக்கத்தக்க இந்த அணுகுமுறையைத்தான் தாயம்மா மீதும் பிரயோகித்துள்ளார் சுந்தரராமசாமி. திருமணம்- ஆண்துணை- உடலின்பம் என்று சராசரியாக வாழப் பணியாத பெண்களை மிரட்டி வசக்கி தொழுவத்தில் கட்டும் கலாச்சார காவலாளியாகவும் கூட ஆலத்தி பிடிக்கிறார். பிற மதத்தாரால்தான் நம்நாட்டுப் பெண்களின் கலாச்சாரம் பாழ்பட்டது என்று இந்துத்வவாதிகள் சொல்வதையே - பாதிரியார் பேச்சைக் கேட்டு படிக்கப்போய்த்தான் அவளுக்கு இவ்வளவு கேடுகளும் வந்துசேர்ந்தது என்று சுந்தரராமசாமியும் சொல்வதாய் கருதவும் இக்கதை இடமளிக்கிறது.
தம்மை உயர்வானவர்களாய் நிறுவிட மற்றாரை இழித்துரைக்கும் மலினமான தந்திரத்தை சுந்தரராமசாமியோ காலச்சுவடோ திடுமென்று இக்கதையில் மட்டுமே கையாளவில்லை. பிம்பங்களை கட்டுடைப்பதாகவும் காத்திரமான விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை தமிழ்ச்சமூகம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் வியாக்கியானம் கூறி திராவிட, பொதுவுடமை இயக்கங்களையும் ஆளுமைகளையும் இழிவுபடுத்துவது தொடர்கிறது. தம்மையன்றி வேறெவருக்கும் இலக்கியம் வரலாறு பண்பாடு எதுவும் தெரியாது என்று காலச்சுவடு குழுவால் ரவுண்டுகட்டி மட்டந்தட்டப்பட்ட படைப்பாளிகள் அனேகர். எதைவேண்டுமாயினும் எழுதுவதே கருத்துச்சுதந்திரமாம். ஆனால் இவர்களைப் பற்றி ஒருவார்த்தை சொன்னாலும் மானநஷ்ட வழக்கு தான். விபரங்களுக்கு வெங்கட் சாமிநாதனை அணுகவும். படைப்பின் வன்முறை என்று ஒப்பாரிவைத்து ஊர்உலகமெல்லாம் கையெழுத்தியக்கம் நடத்துவார்கள்.
செருப்பு போட்டிருப்பவனுக்குத் தான் அது எங்கே கடிக்கிறது என்று தெரியும். தங்கக்கண் நாடாருக்குள் பதுங்கிக்கொண்டு சுந்தரராமசாமி எங்கே கடிக்கிறார் என்பது சுரணையுள்ளவர்களுக்கு தெரிகிறது. (மரத்துப் போனவர்களைப் பற்றி பேசாதீர்கள், ப்ளீஸ்). அத்துமீறலை படைப்புச் சுதந்திரமெனக்கூறி தப்பித்துக்கொள்ள யாருக்கும் உரிமையில்லை. இப்படியெல்லாம் அபாண்டமாய் எழுதுவது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமென்று உடனிருக்கும் உற்ற நண்பர்கள் சுந்த ரராமசாமிக்கு அறிவுறுத்தி பகிரங்கமாக மன்னிப்பு கோரச் செய்யலாம். கதையை வெளியிட்ட காலச்சுவடுக்கும் வேறு கதிமார்க்கமில்லை.
நன்றி: பதிவுகள் மே 2005; இதழ் 65.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...