வியாழன், ஜூலை 16
வெள்ளி, டிசம்பர் 12
ஒண்டிக்கொட்டாய் வாழ்விலிருந்து... ஆதவன் தீட்சண்யா
இனிய உதயம் 2025 செப்டம்பர் இதழுக்கு நான் வழங்கிய நேர்காணல்.நேர்கண்டவர்: புதுகை முருகுபாரதி
அலமேலுபுரம் ஒண்டிக்கொட்டாயில் இருந்த சிறுவயதுக் காலம் பற்றி?
சேலம் மாவட்டம் ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி என்கிற ஊரிலிருந்து 60கி.மீ. தொலைவிலுள்ள அலமேலுபுரத்திற்கு நாங்கள் 1968ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தோம். பத்துபதினைந்து குடும்பங்களே வசித்துவந்த அலமேலுபுரத்துக்குள் அல்லாமல், நாங்கள் சேலம் – அரூர் நெடுஞ்சாலையில் சரியாக 40ஆவது கிலோமீட்டரில் எங்கள் தாத்தம்மா மாரிமுத்தம்மாள் (தந்தைவழிப் பாட்டி) வாங்கியிருந்த காட்டிலேயே (நிலத்தில்) கொட்டாய் (கூரைவீடு) போட்டுக்கொண்டு குடியேறினோம். காட்டில் தனித்திருக்கும் கொட்டாயை “ஒண்டிக்கொட்டாய்” என்போம்.
அப்பா மாரியப்பன் திமுககாரர். அண்ணா முதற்கொண்டு உயர்மட்டத் தலைவர்களுடன் அறிமுகமும் எம்.ஜி.ஆருடன் நெருங்கிய தொடர்பும் கொண்டிருந்தவர். செட்டிப்பட்டியில் திமுகவை முதன்முதலில் தொடங்கியவர். 1967 தேர்தலில் ஓமலூர் தனித்தொகுதியில் போட்டியிடுவதற்கு அவருக்கு எம்.ஜி.ஆரின் பரிந்துரை இருந்தது. “படித்தவன் நமக்கு அடங்கி இருக்கமாட்டான்” என்று பொறுமிக்கொண்டிருந்த உள்ளூர் ஆதிக்கச்சாதி திமுக தலைவர் ஒருவர், எம்.ஜி.ஆர். துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகிப்போன சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, அப்பாவுக்கான அந்த வாய்ப்பினைத் தட்டிப்பறித்து தனக்கு அடக்கமான ஒருவருக்கு கொடுத்துவிட்டார். ஆனாலும் அப்பாவுக்கு திமுக பற்று குறையவில்லை. இடம்பெயர்ந்து வந்த எங்களது ஒண்டிக்கொட்டாய் மீது திமுக கொடியைப் பறக்கவிட்டிருந்தார். உயரப் பறந்த அந்தக் கொடிதான் எங்கள் கொட்டாய்க்கு அடையாளம். அல்லது, எங்கள் கொட்டாய் தான் அங்கு அந்தக்கொடிக்கு அடையாளம் என்றும் சொல்லலாம்.
எதுவொன்றுக்கும் நாங்கள் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த சாமியாபுரம் கூட்டுரோடு என்ற இடத்திற்குத்தான் செல்லவேண்டும். பேருந்து நிறுத்தமான அங்கு சில டீ கடைகளும் மளிகைக்கடைகளும் இருந்தன. நான் படித்த ஆரம்பப் பாடசாலையும் அங்குதானிருந்தது.
புதிய இடத்தில் உறவினர்களோ தெரிந்தவர்களோ யாருமில்லை. செட்டிப்பட்டியிலிருந்து அப்பாவழிச் சொந்தங்களோ க.ஈச்சம்பாடியிலிருந்து அம்மாவழிச் சொந்தங்களோ வந்தால்தான் உண்டு. கூட்டுரோட்டில் இறங்கி வழி கேட்பவர்களுக்கு திமுக கொட்டாய் என்று சொல்லியனுப்புவார்கள். அப்படி எப்போதாவது வரும் உறவினர்களுக்காக எங்கள் கண்கள் எப்போதுமே அனிச்சையாக சாலையை ஏக்கத்துடன் பார்த்தபடியே இருக்கும். இரவானால் வாகனங்களின் வெளிச்சத்தில் சாலையில் நடமாட்டத்தைத் துல்லியமாகப் பார்க்க முடியும்.
எங்களுக்கு அருகாமையிலிருந்த கொட்டாய்களில் எஞ்சோட்டுச் சிறுவர்கள் யாருமில்லை. பள்ளிக்கூடம் இல்லாத நேரம் முழுவதும் விளையாடவோ பேசிமகிழவோ நண்பர்கள் இல்லாத பால்யம் என்னுடையது. விடுமுறைகளில் க.ஈச்சம்பாடிக்குச் செல்வது மகிழ்ச்சியானது.
எனக்கு மாமன் முறையான மாதையன், எங்கள் வீட்டிலேயே தங்கி வேளாண் வேலைகளை கவனித்துவந்தார். தீவிர சிவாஜி ரசிகர். சைக்கிளில் ரெண்டாவதாட்டம் சினிமாவுக்கு அழைத்துச் செல்வார். விடுமுறை நாட்களில் மலையடிவாரக் காட்டில் மாடு மேய்க்க விறகெடுக்க வயலுக்கு தழையறுக்க என்று அழைத்துப்போய் அங்கு சுடலைப்பழம், சூரப்பழம், கெளாக்காய் பறித்துக் கொடுப்பார். பொன்வண்டு பிடித்து தீப்பெட்டியில் விட்டு வளர்க்கத் தருவார். சந்தனமரத்துப்பட்டையை வாயில் போட்டு மென்றுவிட்டு பாழியில் தேங்கித் தெளிந்திருக்கும் தண்ணீரைக் குடித்தால் லேசாக இனிக்கும். ஏற்றம் இறைப்பது, ஏர் பூட்டி ஓட்டுவது, பார் போடுவது, பறம்படிப்பது என பல வேலைகளையும் நான் விளையாட்டாகவே பழகியது அவரிடமும் ஈச்சம்பாடி மாமன்களிடமும் தான். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே, எங்கள் காட்டில் விளையும் தக்காளியை அதிகாலை 3மணிக்கு லாரி பிடித்து கொண்டுபோய் அயோத்தியாப்பட்டிணம் மார்க்கெட்டில் விற்று விட்டுத் திரும்பி பள்ளிக்கூடம் போகிறவனானேன்.
எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டதை (வெளியேறினார்?) எதிர்த்து திமுக கொடியை அப்பா இறக்கிவிட்டார். அவரும் அவரது நண்பர்களும் சோளக்கொல்லையில் மறைந்திருந்து அவ்வழியே வந்த டிடிசி பஸ்களின் மீது கல் வீசினார்கள். அவர்கள் சாமியாபுரத்தில் அதிமுகவின் முதல்கிளையைத் தொடங்கினார்கள். திண்டுக்கல் இடைத்தேர்தலில் கவிஞர் நா.காமராசனுடன் தங்கி வேலை பார்த்தார்கள். வெற்றிப் பெருமிதத்துடனும் மதுரை முத்துவின் ஆட்கள் கொடுத்த சைக்கிள்செயின் காயங்களுடனும் திரும்பி வந்தார்கள். தென்னகம் பத்திரிகையில் வெளியான எம்.ஜி.ஆரின் அறிவிப்பைப் பார்த்து கட்சியின் கொடியை கையில் பச்சை குத்திக் கொண்டவர்களில் அப்பாவும் ஒருவர். கூட்டுரோட்டில் பொதுக்கூட்டம் பேசவந்த எம்.ஜி.ஆருக்கு என்னை மாலை போட வைத்தார் அப்பா. அடுத்தடுத்த காலங்களில் வந்த எம்.ஜி.சக்கரபாணி, ஜி.ஆர்.எட்மண்ட், எஸ்.டி.எஸ் எனப் பலரும் என்னிடம் மாலை வாங்கியவர்கள் தான். (நான் மனமார மாலையிட்டது வி.பி.சிங் அவர்களுக்குத்தான்).
இதனிடையே ஒசூர் கூட்டுறவு சொசைட்டி கடனுதவியில் ரோட்டோரத்து வயலில்
ஓட்டு வீடு கட்டி குடிபெயரும் தருவாயில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் சேர்ந்துவிட்ட
நான், அப்படியே தொலைத்தொடர்புத் துறையில் டெலிபோன் ஆபரேட்டர் வேலை கிடைத்து தேன்கனிக்கோட்டை
ஓசூர் என்று போய்விட்டேன். இந்த வீட்டுடன் இப்போதுவரை எனக்கு ஏனோ உணர்வுப்பூர்வமானதொரு
பிணைப்பு ஏற்படவேயில்லை. என் நினைவில் இன்னுமும் பழைய ஒண்டிக்கொட்டாய் தான் இருக்கிறது.
தங்களின் பெற்றோர் குறித்து..?
அம்மா ரத்தினம்மாள் நிலபுலன்கள் உள்ள குடும்பத்தின் ஒரே மகள். செல்லமாக வளர்ந்தவர். ஊரிலிருந்து முதன்முதலாக பள்ளிக்கூடம் போன பெண் என்பதால் பள்ளிக்கூடத்தாள் என்றும் ஊரார் விளிப்பதுண்டு. எனக்கு விவரம் தெரிந்தமட்டிலும் பண்ணையம், தாத்தம்மா பார்த்து வந்த ரோடு வேலை, ஜல்லி வியாபாரம் மூலமாக எங்கள் குடும்பம் நல்ல நிலையில்தான் இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் தாத்தாம்மா வேலையை நிறுத்திக்கொண்டதும் குடும்பத்தின் பொருளாதார நிலை சடீரென மாறிப்போனது. ஏழு பிள்ளைகளையும் வளர்க்க எங்கம்மா பட்ட பாடு எழுதித் தீராதது.
அப்பாவைப் பொறுத்தவரை தனது இளமைக்காலம் முழுவதும் அவரது அம்மா சம்பாதிப்பதை கைகுளிர செலவழித்துப் பழகியவர். மாரண்டஹள்ளியில் ஜில்லா போர்டு பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். பிறகு ஒசூர் கால்நடைப்பண்ணையின் குந்துமாரனப்பள்ளி மையத்தில் வேலை பார்த்துள்ளார். “எங்கம்மாக்கிட்ட நூறுபேர் வேலை செய்றாங்க, உன்கிட்ட கைகட்டி நிப்பேன்னு நினைச்சியா?” என்று அதிகாரியை அறைந்துவிட்டு வேலையிலிருந்து நின்றுவிட்டார்.
ஓமலூரில் கை நழுவிப்போன எம்.எல்.ஏ. பொறுப்பை 1977இல் அரூரில் அடைவதற்கான சூழல் இருந்தது. அவர்தான் வேட்பாளர் என்று சில நாளிதழ்களில் பெயர்கூட வெளியானது. ஆனால் கூட்டணிக்கட்சியான சிபிஎம்முக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதில் அந்த வாய்ப்பையும் இழந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் திமுகவுக்கு திரும்பினார். எனது இலக்கிய, அரசியல் செயல்பாடுகளைப் புரிந்து ஆதரவளித்தவர்.
இளங்கலை கணிதம் படிக்குமளவு கணக்கின் மீது ஆர்வமா?
ஆர்வமில்லை, கணிதம் படித்தால் வேலைவாய்ப்பு என்று அப்போதிருந்த கற்பிதத்தில் சேர்ந்ததுதான்.
எஸ்.எம்.இரவிச்சந்தர், ஆதவன் எனும் புனைபெயரில் கவிதை எழுதத் தொடங்கியது எப்போது?
தான் எழுதித்தரும் பெயர்கூட நீடிக்கப்போவதில்லை என்பதறியாத ஒருவர் எனக்கெழுதிய ஜாதகத்தில் எனது பெயர் சுந்தரலிங்கம் என்ற கார்த்திகேயன். ஆனால் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபோது எஸ்.எம். இரவிச்சந்தர். 1980களில் தகடூர் ஆதவன், ஒசூர் ஆதவன் என்றாகி 1996ல் தீட்சண்யா பிறந்ததும் ஆதவன் தீட்சண்யாவானேன்.
படிக்கும்போதே தொலைபேசித் துறையில் தேர்வெழுதி பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றீர்கள். அப்போதைய மனநிலை எப்படியிருந்தது?
படிப்பின் இலக்கே ஒரு வேலையில் சேர்ந்துவிடுவதுதான் என்று பொதுப்புத்தியில் இருந்த கருத்துதான் எனக்கும் இருந்ததால் வாழ்வின் இலட்சியங்களில் ஒன்றை எட்டிவிட்டது போலிருந்தது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தது எப்போது?
ஒசூரில் 1984/1985ஆம் ஆண்டாக இருக்கலாம்.
1996-இல் வெளியான ’புறத்திருந்து...’ முதல் கவிதை நூலுக்கும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நான்காவது கவிதை நூலான ‘மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்’ நூலுக்குமான மொழிநடையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து...
சமூகப்பார்வை, வாழ்வனுபவம், படிப்பு, அரசியல் ஈடுபாடு இவையெல்லாம் சேர்ந்து எழுத்தின் உள்ளடக்கம் செறிவேறுகையில் அதன் சத்தும்சாரமும் குன்றாமல் வெளிப்படுத்திட மொழியும் திடப்படும். எனக்கும் அதுதான் நடந்தது.
‘புது விசை’ கலாச்சாரக் காலாண்டிதழைத் தொடங்கிட என்ன காரணம்..?
கருத்துலகில் இடதுசாரி கண்ணோட்டத்துடன் குறுக்கீடு செய்ய ஒரு பத்திரிகையைத் தொடங்கலாமென முன்மொழிந்தார் கவிஞர் கந்தர்வன். அந்த நோக்கத்திலிருந்து விலகாமல் 48 இதழ்களை அச்சில் கொண்டுவந்தோம். இடையில் தட்ஸ்தமிழ்.காம், கீற்று.காம் தளங்களில் இணைய இதழாகவும் வெளிவந்திருந்தது.
தமுஎகச மாநாட்டில் பொதுச்செயலாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதல் நிர்வாகி நீங்கள்தான். இதற்கான உத்வேகத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?
அமைப்பின் கொள்கையை வடிவமைப்பது தொடங்கி, தலைமைப்பொறுப்புக்குப் போட்டியிடுவது வரையான உரிமை தமுஎகசவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உண்டு. அத்தகைய ஜனநாயக முதிர்ச்சியுடன் அமைப்பு இயங்குவதை எனது போட்டியும் தேர்வும் உறுதிபடுத்தியது.
கலை இலக்கிய பண்பாட்டுத்தளத்தில் தமுஎகச இன்னமும் ஆற்றவேண்டிய பணிகளாக எதைக் கருதுகிறீர்கள்?
தமுஎகச உறுப்பினர்களின் கலைஇலக்கியச் செயல்பாடுகள் ஒருபடித்தானதல்ல. கலை இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் இயங்கும் அவர்கள் தாம் இயங்கும் துறையின் சமகால அடையாளங்களாக தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும். அதற்கான படைப்புமனதுடன் உழைக்கிறவர்களாக அவர்கள் வளர்வதற்கு அமைப்பு கூடுதலாக செயலாற்ற வேண்டியுள்ளது. பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர், திருநர், பால்புதுமையினர் ஆகியோரிலுள்ள எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் இனங்கண்டு திரட்டுவது அவசியமாகிறது. சமூகநீதி, சமத்துவம், மனித மாண்பு, தமிழ்மொழி, தமிழர் நலன் சார்ந்த புரிதலின் மட்டத்தை உயர்த்துவதற்கான பணி இடையறாமல் நடந்தாக வேண்டும்.
தலித் இலக்கியம் என்று தனியே ஒரு வகை இலக்கியமாகச் சுட்டப்படுவது சரியான போக்குதானா..?
தங்களின் சிறுகதைகளில், கட்டுரைகளில் வெளிப்படும் சமூகக்கோபமும், வெளிப்படைத்தன்மையும் கவிதைகளில் இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்கிறீர்களா..?
கவிதைகள் சீற்றமாகவும் கதைகள் பகடியாகவும் இருக்கின்றன என்போருமுண்டு. படிப்பவர்களுக்குரிய எல்லையற்ற மதிப்பீட்டுச் சுதந்திரத்தை ஏற்கவும் மறுக்கவும் நான் யார்?
2014-இல் வெளியான தங்களது ‘மீசை என்பது வெறும் மயிர்’ ‘நாவலல்லாத நாவல்’ என்று சொல்லப்படுகிறதே..!
இப்படியிருந்தால் தான் நாவல் என்று இலக்கணம் சொல்வதை விடவும் அபத்தம்
வேறெதுவுமில்லை. நாவல் என்ற சொல்லே புதியது என்பதைத்தான் குறிக்கிறது. அப்படியிருக்க
புனைவின் அதிகபட்ச சாத்தியங்களை எழுதிப் பார்த்தால் என்ன என்கிற முயற்சிதான் மீசை என்பது
வெறும் மயிர்.
ஆட்சியதிகாரத்தைச் சுவைப்பதற்காக வெட்கங்கெட்டு அலைகிற கும்பல் போல மேலுக்குத் தெரிந்தாலும் உண்மையில் ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ்.சின் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்காக இயங்குகிறது. அது இந்தியச்சமூகம் பார்ப்பனீயத்திற்கு எதிராக அடைந்துள்ள வெற்றிகளை அழித்தொழிக்கும் வேலைத் திட்டத்துடன் ஏவப்பட்டுள்ளது. பார்ப்பனர், சமஸ்கிருதம், வேதங்கள் என ஆரிய மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கில்தான் அரசின் திட்டங்கள், செயல்பாடு நிலைப்பாடு அனைத்தும் உள்ளன. இந்தியச் சமூகத்தின் பன்மைத்துவத்தையும் அதை அங்கீகரிக்கிற அரசியல் சாசனத்தையும் ஒழித்துக்கட்ட நூறாண்டுகால வன்மத்துடன் களமிறங்கியுள்ளவர்களின் இந்த ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் களங்கம் என்றே கருதுகிறேன்.
தொழில் வளர் நகரமான ஓசூரைப் பற்றி ‘ஓசூர் எனப்படுவது யாதெனின்...’ எனும் நூலை எழுதத் தூண்டியது எது?
ஆனந்த விகடன் இணைய இதழில் “எனது ஊர்” என்கிற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதும்படி கேட்டபோது, என் வாழ்வின் பெரும்பகுதி ஒசூருடன் தொடர்புடையது, ஆகவே ஒசூரைப் பற்றி எழுதுகிறேன் என்று தொடங்கினேன்.
இன்றைய திராவிட மாடல் ஆட்சியில் கலை இலக்கியவாதிகளுக்கான உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா?
தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்தவர்கள் என்ற வகையில் சாகித்ய அகாதமி விருதாளார்களுக்கு வீடு வழங்கி கெளரவப்படுத்துவது சரியானது. அதேவேளை, வறிய நிலையில் உள்ள எழுத்தாளர்களைக் கண்டறிந்து உதவும் திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு வகுக்கவேண்டும். கேரளாவைப்போல இங்கு தமிழ் அகாதமி உருவாக்குவது அவசியம்.
கவிஞர் தமிழ்ஒளி சிலைத்திறப்பு, அவரது எழுத்துகளைப் பரப்ப நிதி ஒதுக்கீடு, தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பிற மொழிகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடு, கலைஞர் நூலகம் என்று பாராட்டத்தக்க பல முன்னெடுப்புகள் உள்ளன. மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழாக்களை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று தமுஎகச தான் கோரியது. இப்போது அவ்வாறு நடப்பதை வரவேற்கிறேன். ஆனால், புத்தகத் திருவிழாக்களில் உள்ளூர் கலைஇலக்கியவாதிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிற குறை பரவலாக உள்ளது. பொது நிகழ்வுகளுக்காக இன்னின்னாரை அழைப்பது தொடங்கி, தங்கவைக்கப்படும் இடம், மதிப்பூதியம் வரையாக நிலவும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும். புத்தகத் திருவிழாக்களை நடத்தும் குழுக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றியமைக்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதற்கான வழிகாட்டுதலை அரசு வெளியிட வேண்டும். புத்தகத்திருவிழாக்கள், மாபெரும் தமிழ்க்கனவு, இலக்கியச் சங்கமங்கள் என பொதுநிதியில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் ‘செட் பிராப்பர்ட்டிகள்’ போல ஒரு சிலரே ஆக்ரமித்துள்ள நிலைமை ஏற்புடையதல்ல. அதிகாரிகளின் அணுக்கப்பட்டியலில் இருந்தால்தான் வாய்ப்பு என்னும் இழிநிலையில் மாற்றம் தேவை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் முடக்கிவைக்கப்பட்டிருந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தை இப்போதைய அரசு மாற்றியமைத்துச் செயல்பட வைத்தது நல்ல விசயம். ஆனால் ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நிகழ்த்துக்கலைஞர்கள் உள்ள இம்மாநிலத்தில் அந்த வாரியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி அற்பமானது.
கலை பண்பாட்டுத்துறைக்கு தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் கலை இலக்கிய அமைப்புகளோடு எந்தத் தொடர்புமில்லை. துறைசார்ந்த முன்னெடுப்புகள் தமுஎகச போன்ற அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டால் இணைந்து செயல்பட முடியும்.
திரைப்படங்களில் பங்களிப்பு செய்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் குறித்து...
ரஞ்சித்தும், அதியனும் நேரடி அறிமுகத்துக்கும் முன்பாகவே என் எழுத்துகள் செயல்பாடுகள் மீது மரியாதை கொண்டவர்கள். அதியன் வழியாகத்தான் ரஞ்சித்துடன் நேரடி அறிமுகம் ஏற்பட்டது. அவரது அட்டைக்கத்தியும் மெட்ராஸூம் என்னை வெகுவாக ஈர்த்தப் படங்கள். புதுவிசையில் வெளியான அவரது தண்ணிக்கோழி சிறுகதை தமிழின் சிறுகதைகளில் முக்கியமானது. அந்தக் கதை தங்கலான் வரையாக ரஞ்சித்தின் எல்லாப் படங்களிலும் குறியீடாக வந்துகொண்டேயிருக்கிறது.
அடுத்தப்படத்தின் கதைக்கருவுக்கான தேடலில் ஈடுபட்டிருந்த ரஞ்சித்
2015 தொடக்கத்தில் ஒருநாளிரவு நண்பர்களுடன் ஓசூர் வந்திருந்தார். தமிழ்நாட்டிற்கு வெளியே
புலம்பெயர்ந்து போன தமிழர்களின் நலன் காக்கப் போராடிய ஒரு போராளியின் கதை என்கிற ஒற்றைவரி
அவருக்குள் திடப்படாமல் ஓடிக்கொண்டிருந்தது. அதுபற்றி உரையாடும்போது சமீபத்திய மலேசியப்பயணங்களில்
நான் கண்டுவந்த சில விசயங்களை ரஞ்சித்துடன் பகிர்ந்துகொண்டேன்.
ரப்பர் தோட்டங்கள், ஈயச்சுரங்கங்கள், துறைமுகங்களில் பணியாற்ற மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் தம்மீதான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக நடத்தியப் போராட்டங்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், தலைமறைவாகி தப்பியவர்கள், காட்டு பெருமாள் போன்ற சாகச நாயகர்கள், செம்பனைத் தோட்டத்தின் வருகை, வேலையிழந்த தமிழர்கள் பெருநகரங்களுக்கு உதிரியாக வரும் அவலம், போதைப்பொருள் விற்பனை, என்கவுண்டர் சாவுகள், மை ஸ்கில் பள்ளி என்று விவரித்து மலேசியா அவருக்கான கதையைக் கொடுக்கும் என்று சொன்னேன். அடுத்த சில வாரங்களில் ரஞ்சித் மலேசியா சென்றார். இவற்றையெல்லாம் எனக்குக் காட்டிய தம்பி நவீனுக்குச் சொல்லி அவர் ரஞ்சித்தை எல்லா இடங்களுக்கும் கூட்டிப்போய் காட்டியதுடன் அங்கு தமிழர் வரலாறு வாழ்நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்திருந்தார். கபாலியில் ரஞ்சித்தின் பாய்ச்சலைக் கண்டு எனக்கு உள்ளூர அவ்வளவு மகிழ்ச்சி. ஒரு திரைப்படத்தில் ஏதேனுமொரு வகையில் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றால் அது கபாலி தான்.
காலா நிலவுரிமை சார்ந்த படமென்பதால் அதில் உடனிருக்குமாறு ரஞ்சித் அழைத்தார். அவருக்கு எந்தளவுக்கு நான் உதவியாக இருந்தேனென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தனது கலையுழைப்புக்கு கிடைத்த அங்கீகாரத்தை அவர் என்னோடும் மகிழ்நனோடும் உளப்பூர்வமாக பகிர்ந்துகொண்டார். தங்கலான் முதற்கட்ட ஆய்வுகளுக்காக கே.ஜி.எப். போன குழுவில் நானுமிருந்தேன். தங்கலான் பார்த்தபோது என் மனம் உருவகித்து வைத்திருந்த படம் அதுவல்ல என்று தோன்றியது. மலேசியா, மும்பை, கே.ஜி.எப். தமிழர்களின் வாழ்க்கைப்பின்புலத்தில் கபாலி, காலா, தங்கலான் எடுத்த ரஞ்சித், அந்த வரிசையில் இலங்கை மலையகத்தமிழர்கள் பற்றிய படமொன்றை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளேன்.
ரஞ்சித்தைப் போன்றதோர் ஆளுமை வருவதற்கு தமிழ்ச்சினிமாவிற்கு நூறாண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதனால்தான் அவரது பன்முகப்பட்ட முன்னெடுப்புகளில் இயன்றவரை உடனிருக்கிறேன். அரசியல் ஒத்திசைவில்லாத விசயங்களைப் பரஸ்பரம் விமர்சித்துக்கொள்கிற உரிமையுடன் தோழமை தொடர்கிறது.
அதியன் அற்புதமானதொரு கவிஞர். உழைக்கும் வர்க்கச் சார்புநிலையிலிருந்து உலகத்தைப் பார்ப்பவர். சினிமாவை அதன் உட்பொருளில் உணர்ந்து கற்றவர். என்னால் பங்களிக்க முடிகிறதோ இல்லையோ அவர் படமெடுக்கிறபோது உடனிருக்க வேண்டுமென விரும்புகிறவர். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நான் பங்கெடுத்தது அப்படித்தான். “தண்டகாரண்யம்” அவரது இரண்டாவது படம். அதில் தொடக்கம் முதலே இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம்.
பொன்விழா (1975-2025) கண்ட இலக்கிய அமைப்பான தமுஎகச, இன்றைய சூழலில் எதிர்கொள்ள வேண்டிய சவாலாக எதைக் கருதுகிறது?
சமூகத்தில் மேலாதிக்கம் பெறவிரும்பும் பார்ப்பனீயச் சக்திகள் (சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றின் எதிர்மறை) அதற்காக மக்களை “நாம்”, “அவர்கள்” என்று பிளவுபடுத்துகிறார்கள். அதனிமித்தம் வெறுப்புக் கருத்தியலை ஊடகங்கள், கலை இலக்கியங்கள் வழியே பரப்புகிறார்கள். இதுகுறித்த எச்சரிக்கையை கலை இலக்கியச் சமூகத்தில் பரப்புவதற்கான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதுதான் இன்றைய முதன்மையான சவால். அன்புடனும் பரஸ்பர மரியாதையுடனும் பன்மைத்துவமாக இணங்கி வாழ்வதற்கான விருப்பத்தை மக்களிடையே உருவாக்கவல்ல கலை இலக்கிய ஆக்கங்களை உருவாக்குகிறவர்களாக தனது உறுப்பினர்கள் வளர உதவும் கடமையும் தமுஎகசவுக்கு உள்ளது.
தற்காலத் தமிழிலக்கியப் போக்குகளில் நீங்கள் ஏற்பதை எதை? மறுப்பது எதை?
பாரம்பரியம் மரபு மீட்டுருவாக்கம் என்ற போர்வையில் கடந்த காலத்து முடையேறிய பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்துகின்ற, அதன்பேரிலான மதிப்பீடுகளை சமகாலத்தின் மீது கொண்டுவந்துக் கொட்டுகின்ற குப்பைவண்டிகளைத் தவிர மற்றெல்லா போக்குகளும் எனக்கு ஏற்புடையதே.
நீங்கள் எழுத நினைத்து, இன்னமும் எழுதமுடியாமல் இருப்பது எதைப் பற்றி..?
கலையமைதியுடன் வெளிப்படுத்தத் தேவையான தொடர் உழைப்பைத் தரமுடியுமானால் எதுவொன்றையும் எழுதமுடியும் என்றே கருதுகிறேன்.
இளைய தலைமுறை எழுத்தாளர்களில் தங்களுக்குப் பிடித்த எழுத்தாளரென்று யாரைச் சொல்வீர்கள்?
கல்வியறிவுப் பரம்பல் எழுத்திலக்கியத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளது. தமது வாழ்வனுபவத்தை சொல்லியாகும் மனஅவசத்தால் நிறையபேர் எழுத வந்துள்ளனர். நஸீமா பர்வீன், அராபத், சு.வெங்குட்டுவன், அ.பிரகாஷ், ஜெ.அன்பு, சிவசித்து, விடுதலை சிகப்பி, அமுதாசெல்வி என்று கொண்டாடத்தக்க பெரும்பட்டியல் உள்ளது.
‘இனிய உதயம்’ இதழ்... உங்களின் பார்வையில்...
நக்கீரன் குழுமத்திலிருந்து இப்படியொரு இதழ் வெளிவருவதும், அதில்
கலை இலக்கிய ஆக்கங்களுக்கும் ஆளுமைகளின் நேர்காணலுக்கும் இடமளிப்பது பாராட்டுக்குரியது.
வியாழன், ஜூலை 27
சனி, ஜூலை 16
விதைகளை ஊன்றிவைத்தால் சூழல் தேவையானதை வளர்த்தெடுத்துக் கொள்ளும் - ஆதவன் தீட்சண்யா
![]() |
| புகைப்படம்: ஆண்டிப்பட்டி முருகன் |
புதிய புத்தகம் பேசுது 2022 ஜூலை இதழுக்காக
தோழர் ஆயிஷா இரா.நடராசன் என்னிடம் நடத்திய நேர்காணல்.
· தற்போதைய இலக்கியச்சூழலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15ஆவது மாநில மாநாடு நடைபெறுவதன் முக்கியத்துவத்தைச் சொல்லுங்கள்?
1975 ஜூலை 12,13 தேதிகளில் தமுஎகச முதல் மாநில மாநாடு மதுரையில் நடந்தபோது அவசரநிலை அமலிலிருந்தது. 15ஆவது மாநாடு நடைபெறவிருக்கும் இவ்வேளையில் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமலிலிருக்கிறது. அறிவிக்கப்படாததாய் இருப்பதாலேயே இப்போதைய அவசரநிலையை விலக்கிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஆட்சியாளர்களுக்கு இல்லை.
முன்னெப்போதும் இல்லாதளவுக்கு
தனிமனித வாழ்வில் அரசின் நேரடித் தலையீடும் கண்காணிப்பும் அதிகரித்துள்ளது. அரசியல்
சாசனத்தின் வழியே குடிமக்கள் தமக்கு உறுதி செய்துகொண்ட உரிமைகள் பலவற்றையும் அரசிடம்
இழக்கும் காலமாகவும் இது இருக்கிறது. தன் உடல்மீதுகூட அவர்கள் முழு உரிமை கோரமுடியாது.
அரசு குடிமக்களை குற்றவாளிகளாகப் பார்ப்பதும், அவர்களது இயல்புரிமைகளை மறுப்பதும்,
எதிர்த்தால் வன்முறைகளை ஏவுவதுமாக மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. உணவு, உடை, வசிப்பிடம்,
கல்வி, கலைஇலக்கிய நாட்டம், வழிபாடு, கொண்டாட்டங்கள் என அனைத்திலும் ஆட்சியாளர்களின்
விருப்பம் எதுவோ அதுவே குடிமக்களின் தேர்வாகவும் இருக்க வேண்டுமென்கிற நிர்ப்பந்தம்
வலுக்கிறது. எவரிடமிருந்து ஆளும் அதிகாரத்தை இவ்வரசு பெற்றிருக்கிறதோ அவர்கள் மீதே
தன் குரூரபலம் முழுவதையும் பிரயோகிக்கும் இக்கொடுங்காலத்தில் சுயசிந்தனையும், சுதந்திரமான
வெளிப்பாட்டுணர்வும், அச்சமற்ற வாழ்வுக்கான பேரவாவும் கூருணர்வுமுள்ள எழுத்தாளர்களும்
கலைஞர்களும் செய்ய வேண்டியது என்ன என்பதுமே மாநாட்டின் முதன்மை விவாதம். கடந்த மாநாட்டிற்குப்
பிறகான இக்காலக்கட்டத்தில் கலைஇலக்கிய பண்பாட்டுத்தளத்தில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள்,
அவற்றில் தமுஎகசவின் பங்களிப்பு மற்றும் நிலைப்பாடு ஆகியவை பற்றிய மதிப்பீட்டையும்
மாநாடு மேற்கொள்ளும்.
· “புதுவிசை” காலாண்டிதழ் ஒரு கலாச்சார இலக்கிய இயக்கமாகவே உணரப்பட்டது. அதை தொடங்கி நடத்திய அனுபவங்களைச் சொல்லுங்கள். உங்களது நோக்கம் எந்தளவிற்கு நிறைவேறியது?
நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதிக்கக் கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குவது, சமகால கருத்துலகில் தலையிடுவது, கலைஇலக்கிய ஆக்கங்களின் புதிய போக்குகளுக்கு இடமளிப்பது, பண்பாட்டுத் தளத்தில் உலகளாவிய அளவில் நடக்கும் உரையாடல்களை நமது சூழலிலும் நிகழ்த்துவது என்கிற நோக்கில் நூறுநூறு பத்திரிகைகள் தேவை. அதிலொரு பகுதியை புதுவிசை நிறைவேற்றியுள்ளது.
பெரும்பாலும் ஒசூர் நண்பர்களின் நிதிநல்கையில் மட்டுமே 48 இதழ்களை கொண்டுவர முடிந்ததை இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. எங்களது குழுவினரின் உழைப்பு அதற்குரிய விளைவுகளை உருவாக்கியுள்ளது. ஆனால் திருப்தியடைய ஒன்றுமில்லை. ஏற்கனவே இரண்டுலட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பிருந்தாலும், இன்னொரு சுற்று வந்து பார்க்கலாம் என்கிற துடிப்பு மங்கவில்லை, பார்ப்போம்.
· புறப்பாடு, பூஜ்யத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி, மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் உட்பட உங்கள் கவிதைத்தொகுதிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. தற்கால கவிதை உலகம் எப்படி இருக்கிறது?
அதிகாரத்தின் கண்காணிப்பு
தீவிரமாகியிருக்கும் நிலையில் அதிகாரத்தைப் பற்றிய உண்மைகளைப் பேசும் கவிதை முன்னிலும்
பூடகமாகவும் யூகிக்க முடியாத வலிமையுடனும் தமது இலக்கைத் தாக்கி வாசகர்களை செயலுக்குத்
தூண்டுகிறது. அதேநேரத்தில் அதிகாரத்தை விமர்சிப்பதால் ஏற்படவிருக்கும் விளவுகளுக்கு
அஞ்சும் கவிதை, அச்சமற்று இருப்பதுபோல காட்டிக்கொள்வதற்காக பெருங்குரலெடுத்து தொந்தரவில்லாத
பாடுபொருள்களை முன்வைத்து இதுதான் இக்காலத்தின் கவிதை என்பதுபோல பாவனை செய்வதுடன்,
வாசகர்களையும் தனது மட்டத்திற்கு கீழிழுத்துப் போடுகிறது. முகத்தை உக்கிரமாக வைத்துக்கொண்டு
கைகளை அங்கீகாரப்பிச்சைக்கு விரிக்கும் இத்தகைய கவிஞர்கள் மலிந்து கிடந்தாலும் பிரசுரம்,
பரிசு, விருது, இலக்கியப் பயணங்கள் என எதையும் எதிர்பாராமல் வாழ்வின் பாடுகளைச் சொல்லும்
கவிதைகளின் தொடர் வருகை தமிழ்க்கவிதைக்கு மேலும் காத்திரமேற்றுகிறது.
“இருப்பிடம் வரைதல் போட்டியில்
முதலில் முடித்தது நான்தான்
வரைவதற்கு என்னிடம் இருந்தது
ஒற்றைச் செங்கற்சுவர் மட்டுமே” என்று ஓர் ஈழ ஏதிலி தன் வாழ்வை எழுதுவதற்கெல்லாம் இப்போது இங்கே வாய்க்கிறது.
· லிபரல்பாளையத்துக் கதைகள், கடுங்காலத்தின் கதைகள், நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள், கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும் என்று தொடர்ந்து, கதையுலகில் புதியபுதிய கலகவெளிகளை உருவாக்கிய கதைக்காரன் ஆதவன் தீட்சண்யாவின் புதிய முயற்சிகள்?
சமூக அமைப்பின் மீதும் அதை வழிநடத்தும் அதிகாரத்துவத்தின் மீதும் யாதொரு புகாருமற்று, எல்லா ஒழுங்கீனங்களுக்கும் குற்றங்களுக்கும் பாகுபாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் தனிமனிதர்களைப் பொறுப்பாக்கி நெக்குருக எழுதுவதும் அதை கண்ணீர் மல்க கதைப்பதும் இங்கொரு வணிகமாகப் போய்விட்டது. முப்பதாண்டுகால உலகமயமாக்கமும் எட்டாண்டுகால இந்துத்துவாக்கமும் சமூக அமைப்பிலும் வாழ்முறையிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள், ஆளுமைச் சிதைவுகள், அறவீழ்ச்சிகள், நுகர்வியம், வாழ்க்கைத்தரத்தில் அரிமானம், சூழலழிப்பு என்று நம்முடைய சமகாலத்தை துள்ளத்துடிக்க எழுதுவதே எனது நேர்வாக இருக்கிறது. அப்படியல்லாத ஊளைக்கதைகளை எழுதிக்குவிப்போர் பட்டியலில் எனது பெயர் இல்லாதது சற்றே கர்வத்தைத் தருகிறது.
· மீசை என்பது வெறும் மயிர் நாவல், நந்தஜோதி பீம்தாஸ் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை சென்று சாதிவெறி சமூக அவலங்களை அனுபவித்து, கப்பல் ஏறி, உலக நாடுகளைச் சுற்றி, மீசை என்பது எங்கெங்கெல்லாம் எப்படியான அதிகார அடையாளமாக இருக்கிறது எனக் காட்டுகிறது. இடுப்புக்கு கீழே மீசை வளர்க்கும் விஷயத்தை இன்று நினைத்தாலும் வலியிலிருந்து மீள முடிவதில்லை. நாவல் தளத்தில் உங்களது அடுத்தடுத்த முயற்சி என்ன?
உலகத்துக்கே மனிதமாண்பை போதிக்கும் யோக்கியதை இருப்பதாக பீற்றிக் கொள்ளும் பிரிட்டன், இந்தியாவை ஆண்டபோது தனது படையினரின் பாலுறவுத்தேவைகளுக்காக ஒவ்வொரு ஆயிரம்பேருக்கும் 10-12 பாலியல் தொழிலாளிகள் வீதம் பணியமர்த்தியுள்ளது. தொழில் செய்வதற்கு பணம்கட்டி உரிமம் பெறும் பெண்களை பகிர்ந்தனுப்புவதற்கான மேற்பார்வையாளர், இதிலேதும் சண்டை வந்தால் தீர்ப்பதற்கு ரகசிய நீதிமன்றங்கள், மருத்துவப் பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் ரகசிய மருத்துவமனைகள் (லாக் ஹாஸ்பிடல்) என கண்டோன்மென்ட்டுகளில் நடந்த அட்டூழியங்களை மையப்படுத்தி ஒரு நாவலை காலவரம்பின்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
· உங்களது எழுத்தளவுக்கு உரைகளும் கவனம் பெற்றவை. உங்கள் உரையின் அடிப்படை எவை? தமுஎகச குரலாக அவற்றை முன்வைப்பத்தில் எத்தகைய சவால்கள் உள்ளன?
காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகளில் நடந்துவந்த விடுதலைப் போர்களுக்கு உதவும் வகையில் இரண்டாவது போர்முனையை – அதாவது பண்பாட்டுப் போராட்டத்தை முற்போக்குச் சிந்தனையாளர்கள் தொடங்கியுள்ளனர். பேனாவை, தூரிகையை வாளாக, துப்பாக்கியாக உருவகித்துச் செயல்பட்டார்களாம். பார்ப்பனியமும் கார்ப்பரேட்டியமும் இணைந்து இந்தியச்சமூகத்தை அடிமைப்படுத்திவரும் இன்றைய பார்ப்பரேட்டியச் சூழலில் இங்குள்ள முற்போக்காளர்கள் அந்த இரண்டாவது போர்முனையை நமது தனித்தன்மைகளுக்கேற்ப தொடங்கியாக வேண்டும் என்பதை கலைஇலக்கிய நிகழ்வுகளில் வலியுறுத்துகிறேன். நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவாக காட்டிக் கொண்டு ஆளும் வர்க்கம் எப்படி தன்னை மிகவும் நவீனமாக பலப்படுத்திக்கொண்டு நாட்டை ஒரு பெருஞ்சந்தையாக ஒருங்கிணைத்துச் சுரண்டுகிறது என்பதையும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான காலத்து முதலாளியத்திலிருந்து இன்றைய முதலாளியம் வரைக்குமாக ஆய்ந்தறிந்து தோழர் எஸ்.வி.ஆர். போன்றவர்கள் முன்வைக்கும் புதிய விவாதங்களிலிருந்து பெறும் புரிதலையும் அரசியலரங்குகளில் பகிர்கிறேன். இந்தப் பேச்சுகளில் சாதியொழிப்பையும், சமூகநீதியையும் உள்ளிணைத்தே முன்வைக்கிறேன். இவை தமுஎகசவின் மைய நோக்கங்களுடன் இசைவிணக்கம் கொண்டவையே.
· தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலும் பொறுப்பு வகிக்கிறீர்கள். அதுசார்ந்த அனுபவங்களைச் சொல்லுங்கள். ஆணவக்கொலைகள் இன்றும் தொடர்கின்றனவே. தமிழக அரசுக்கு உங்களது கோரிக்கை என்ன?
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் நேரடிப் போராட்டங்களுக்கு கருத்தியல் தளத்தில் வலுசேர்க்கும் சிலவேலைகளைச் செய்வதுண்டு. அவ்வகையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் எழுதுவதும் பேசுவதும் வன்கொடுமைக்களங்களுக்குச் செல்வதுமே எனது செயல்பாடுகள். புதுக்கூரைப்பேட்டைக்கும் உத்தபுரத்துக்கும் பரமக்குடிக்கும் நத்தத்திற்கும் பாப்பாப்பட்டி கீரிப்பட்டிக்கும் சென்று சாதியத்தின் மூர்க்கத்தை அதன் நேரடி வடிவத்தில் கண்டுவந்து பதைபதைப்பு அடங்காமல் பலநாட்கள் தவித்திருக்கிறேன். குஜராத்தில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜிக்னேஷ் மேவானி மேற்கொண்ட நடைப்பயணத்தில் இங்கிருந்து சில தோழர்களுடன் அங்கு சென்று பங்கெடுத்து திரும்பியபோதும்கூட இதேவகையான கொந்தளிப்புக்குள் சிக்கி தத்தளித்தேன். சாதிய வன்கொடுமைகள் அடுத்தடுத்து ஏவப்படும்போது திணறிப்போய் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு என் முன்னால் எந்தக் கொடுமையும் நடக்கவில்லை என்பதுபோல என்னை நானே ஏமாற்றிக்கொண்டு மரத்துப்போன மனதோடு கிடந்துவிட்டு பின் ஆற்றமாட்டாமல் அழுதோய்ந்த நாட்களுமுண்டு. ஆனால் அதிலிருந்து மீள்வதற்கான உள்வலுவை அம்பேத்கர், பெரியாரின் எழுத்துகளும் கம்யூனிஸ்ட்களின் களச்செயல்பாடுகளுமே வழங்கின.
வயதுவந்த பெண்ணும் ஆணும் தனது வாழ்க்கைத்துணையைச் சுதந்திரமாக தெரிவுசெய்யும் உரிமையை மறுப்பதிலிருந்தே ஆணவக்கொலைகள் நடக்கின்றன. பலநாடுகளில் மத, இன வெறியில் ரத்தத்தூய்மையை வலியுறுத்தி இக்கொலைகள் நடக்கிறதென்றால் இந்தியாவில் சாதியின் பெயரால் நடக்கின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு 120-150 பேர் கொல்லப்படுகிறார்கள். நடப்பிலுள்ள குற்றவியல் சட்டங்களின் மூலம் இக்கொலைகளைத் தடுப்பதிலும் தண்டிப்பதிலுமுள்ள இடர்பாடுகளை கவனத்தில் கொண்டு, மாநில அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடைப்பயணம் மேற்கொண்டது. உச்ச நீதிமன்றமும் தனிச்சட்டத்தின் தேவையை பலவாறாக வலியுறுத்தியும் கூட ராஜஸ்தானில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தாமதமின்றி தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
· ஓசூர் புத்தகத்திருவிழா உங்களது தலைசிறந்த பங்களிப்புகளில் ஒன்று. பலரை ஒன்றிணைத்து முதல் புத்தகத் திருவிழாவை வழிநடத்தியவர் நீங்கள். ஓசூர் புத்தகக்காட்சி இன்று தொடரும் விதத்தில் உங்கள் நோக்கம் நிறைவேறியதாக கருதுகிறீர்களா?
இப்போது நிலநிர்வாக ஆணையராக
உள்ள திரு.எஸ்.நாகராஜன் அப்போது ஒசூரின் சாராட்சியர். நிர்வாக வரம்பின் எல்லைவரை சென்று
முன்னுதாரணமான பணிகளை அவர் செய்ததை கவனித்துதான் ‘புத்தகக் கண்காட்சி’ யோசனையை தெரிவித்தேன்.
உடனே ஏற்றுக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நிகழ்வாக மாறுமளவுக்கு நிர்வாகம்
முழுவதையும் ஈடுபடுத்தினார். கலைஇலக்கிய விழாக்களுக்கு ஆயிரக்கணக்கானவர்களை அணிதிரட்டிய
தமுஎகச அனுபவம் உள்ளூர் சமூகத்தைத் திரட்டுவதற்கு உதவியது. எனது முன்னெடுப்புகள் யாவற்றுக்கும்
துணையிருக்கும் நண்பர் பி.எம்.சி.குமார் இந்த முயற்சிக்கும் பேராதரவளித்தார். அதன்
தொடர்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பலரையும் இணைத்துக்கொண்டு தொடர்ந்து நடத்திவருவது
பாராட்டத்தக்கது. விதைகளை ஊன்றி வைத்தால் சூழல் தேவையானதை வளர்த்தெடுத்துக் கொள்ளும்
தானே!
செம்மலர் இதழில் வரவிருக்கும் எனது கட்டுரையின் பின்வரும் பகுதி இக்கேள்விக்கு உரிய பதிலாக அமையும்: இந்தியப் பெருநிலப்பரப்பில் வாழும் 130கோடிக்கும் மேலான மக்களாகிய நாம் இயற்கைநேர்வு மற்றும் வாழ்முறைகளால் பல்வேறு மொழிவழி இனங்களாக வாழ்ந்து வருகிறோம். பிறப்பு முதல் இறப்பு வரையிலும் (சில விடயங்களில் இறப்புக்குப் பின்னும்கூட) தனிமனிதர்களின் வாழ்வை நெறிப்படுத்தி நடத்துகின்ற இவ்வாழ்முறைகளின் தொகுப்புதான் பண்பாடு எனப்படுகிறது. பண்பாடு நாடு முழுதும் ஒருபடித்தானதாக இல்லை. ஒவ்வொரு இனமும் தனக்கான தனித்த உணவு, உடை, இருப்பிட அமைவு, வாழ்க்கைவட்டச் சடங்குகள், தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், கலை இலக்கியம், கல்வி ஆகிய பண்பாட்டுக்கூறுகளை வரலாற்றுரீதியாக பெற்றுள்ளன. சாதி, மதம், பொருளாதாரம் ஆகியவை பண்பாட்டை இடைவெட்டிச் சென்றபோதும் அவற்றுக்கப்பாலும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்ள பொதுவான பண்பாட்டம்சங்கள் இருக்கவே செய்கின்றன. இதேரீதியில் ஒவ்வொரு இனமும் தனக்குள்ள தனித்துவமான பண்பாட்டை பேணிக்கொண்டே இதர இனங்களுடன் தமக்குள்ள பொதுமைப்பண்புகளைக் கண்டடைந்து அவற்றுடன் ஒப்புரவாக வாழ்ந்துவருகின்றன.
ஓர் இனத்தின் வேறுபட்ட பண்பாட்டை அதன் தனித்துவமாக கருதி சமமாக ஏற்றுக் கொள்வதற்கு மாறாக அதனை இதர பண்பாடுகளுக்கு எதிரானதாகவோ கீழானதாகவோ உயர்வானதாகவோ சித்தரிக்க ஒன்றிய அரசும் அதனை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் முயற்சித்து வருகின்றன. இதன் மேலதிக தீவிரத்தில், தேசிய இனங்கள் என்பதையே மறுத்து இந்திய இனம் என்கிற செயற்கையான அடையாளத்தைச் சுமத்தி அந்த இந்திய இனத்தின் பண்பாடானது ஆரியப்பண்பாடே என்று நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது”. இதனாலேயே “தனித்துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை” என்கிற முழக்கத்துடன் தமுஎகச 15ஆவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது..
· தமுஎகச
பொதுச்செயலாளராக இக்காலத்தின் பணிகள்?
கூட்டுமுடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு என்பதற்கும் அப்பால் விவாதங்களுக்கும் செயல்பாட்டுக்குமான நிகழ்ச்சிநிரலை முன்வைப்பதற்கும் கருத்தொற்றுமையை உருவாக்கிச் செயல்பட வைப்பதிலும் என் பெரும்பகுதி நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாலும், நானிருந்து செய்தாக வேண்டிய சொந்தவேலைகள் எதுவும் இப்போதைக்கு எனக்கு இல்லாதிருந்ததாலும் இது சாத்தியமாயிற்று. கருத்துரிமைக்கு கடும் அச்சுறுத்தல் உருவாவதை முன்னறிவித்து “கருத்துரிமை போற்றுதும்” கூடுகை, தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரான கருத்துருவாக்கத்தில் முன்னோடியாக “கல்வி உரிமை மாநாடு”, “பெண் எழுத்தும் வாழ்வும்” முகாம், பொதுமுடக்கக் காலத்திலும் இணையவழியில் நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள், இணையவழியில் திரைப்பள்ளி (இப்போது நேரடியாக நடக்கிறது), அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி நாடகப்பள்ளி, நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரக் கோரிக்கை மாநாடுகள், நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான உதவிகள் என்று இக்காலத்தில் இடையறாத வேலைகள் நடந்துள்ளன. மேலெழுந்த பிரச்னைகள் அனைத்திலும் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
அமைப்பினரின் கலைஇலக்கியச்
செயல்பாட்டு மட்டத்தை உயர்த்துவது, கலைஇலக்கிய நாட்டமுள்ள எவரொருவரையும் தவறவிடக்கூடாது
என்பதற்காக “வீடுதோறும் உறுப்பினர், வீதிதோறும் கிளை” என்று அமைப்பினை
விரிவுபடுத்துவது, எமது அமைப்புடன் நெருங்கிவரத் தயங்கும் கலை இலக்கியவாதிகளுடனும்
பண்பாட்டு ஊழியர்களுடனும் தோழமை பேணுவது, தமிழகத்தின் வினைத்திறன்மிக்க கலைஇலக்கிய
அமைப்பு என்னும் நற்பெயரை திடப்படுத்துவது என இனிவரும் காலத்துப் பணிகள் எம்மை அழைக்கின்றன.
புதன், ஏப்ரல் 3
பீரங்கி உடலைப் பணிய வைக்கிறது. பள்ளி ஆன்மாவைப் பணிய வைக்கிறது - ஆதவன் தீட்சண்யா
வியாழன், டிசம்பர் 21
ஆவேசமான விமர்சனத்துடன் அடிபணியும் கீழ்மை எழுத்தாளர்களுக்குரியதல்ல - ஆதவன் தீட்சண்யா
சந்தியா பதிப்பகம் வெளியீட்டுள்ள எனது நேர்காணல்களின் முழுத்தொகுப்பான “நான் ஒரு மநுவிரோதி”க்கு எழுதிய முன்னுரை
துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா
கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...
-
புதுச்சேரியில் 14.10.2023 அன்று நடைபெற்ற மொழியியல் அறிஞர் த.பரசுராமன், தோழர்.இரா.நாகசுந்தரம் நினைவேந்தல் நிகழ்வில் “வாச்சாத்தி வன்கொடுமையும்...
-
‘‘.... ஒ ரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்...
-
கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...
