பரம்பரை நிறமூர்த்தங்களின் வழியே எழுத்தாளனாக பரிணாமம் அடைந்தமையை நிறுவ
பூர்வீகக் காரணங்களைச் சிலர் எடுத்தியம்புகின்றனர்.
இப்போக்கினைக் குறித்து...
நல்லவேளையாக
இதெல்லாம் பூர்வஜென்ம புண்ணியத்தால் வந்தது என்று சொல்லாமல் போனார்கள். வால்மீகி ராமாயணத்தை
எழுதினார். இவர்களது தர்க்கப்படி பார்த்தால், ஓர் இதிகாசத்தை யாத்தளிக்கும் ஆற்றலை
வால்மீகி தன் முன்னோரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். ஆனால் இவர்களே சொல்கிறார்கள்
அவர் ஒரு கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று. சரி, வால்மீகியின் சந்ததியினரில் யாராவது
ராமாயணம் அளவுக்கு இல்லையென்றாலும் குறைந்தபட்சம் ஒரு கீமாயணமாவது எழுதியிருக்கிறார்களா
என்றால் அதுவுமில்லை. (வால்மீகிக்கு தொடர்பற்ற தமிழ்நாட்டின் திருவாரூர் தங்கராசு தான்
அந்த கீமாயணத்தை எழுதவேண்டியிருந்தது.) வால்மீகியின் பரம்பரையினர் அவரளவுக்கு எழுதத்தான்
வரவில்லை, கொள்ளையடிக்கிற பூர்வீகத் தொழிலையாவது செய்து நுணுக்கங்கள் தேர்ந்து எங்கள்
நாட்டுக்கோ உங்கள் நாட்டுக்கோ பிரதமராகவோ ஜனாதிபதியாகவோ
ஆகியிருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. அவர்கள் இந்திய வடமாநிலங்களில் ஒரு தீண்டத்தகாத
சாதியினராக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளனர்.
கம்பன்
வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்றவர்கள் கம்பனின் குழந்தைகள் கவி பாடினார்களா என்பதை
தெரிவிக்கவில்லை. அம்பிகாபதிக்கோவை பாடிய அம்பிகாபதியை கம்பனின் மகன் என்று சொல்வாருண்டு.
ஆனால் இருவருக்குமிடையில் சில நூற்றாண்டுகள் இருக்கின்றன.
உரைநடை
வடிவம் காலத்தால் பிந்தியது. அச்சுஇயந்திரங்களின் கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து செய்தித்தாள்கள்
வெளிவரத் தொடங்கிய போது, வாசகர்களை ஈர்ப்பதற்காக வாய்மொழி மரபிலிருந்த தொல்கதைகளை சுருக்கியெழுதி
வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் வளர்ச்சியில்தான் சிறுகதை என்கிற வடிவம் உருவானது.
எனில் அந்த வடிவத்தில் எழுதுகிறவர்களுக்கான மரபணு அதுவரையிலும் உறைநிலையில் இருந்ததா?
இன்றைக்கு தமிழில் நாவல் எழுதிக் கொண்டிருப்பவர்களெல்லாம் ஆதியூர் அவதானி சரிதம் எழுதிய
வித்துவான் தூ.வி.சேஷையங்கார் அல்லது பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய மாயூரம் வேதநாயகம்
பிள்ளை ஆகிய இருவரில் ஒருவரது ரத்த வாரீசுகள் என்றால் எவ்வளவு அபத்தமோ அந்தளவு அபத்தமானதுதான்
நாங்கள் மரபணு மகிமையால் கருவிலே திருவுடையோராகி எழுதிக்கொண்டிருக்கிறோம் என்பதும்.
அசமனிலை அடையாளங்களைக் களைந்துவிட்டு பொதுமானுட தளத்தில் நின்று வாழ
விரும்புகின்ற போது.. எவ்வகையான சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள்?
இங்கு
வாழ்விடம் தொடங்கி புதைவிடம் வரை வாழ்வின் எல்லா தருணங்களும் பாலினம், சாதி, மதம்,
வர்க்கம், இனம் சார்ந்த பாகுபாடு நிலவுகிறது. ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லக்கூடியவையான
இந்தப் பாகுபாடுகளில் உங்களுக்குள்ள இடம் சார்ந்து தான் உங்களது சிந்தனையும் செயலும்
அமைகிறது. அதாவது நீங்கள் ஒரு சாய்மானத்துடன் தான் இங்க இருக்கமுடியும். எனில் பொது
மானிடத்தளம் என்று ஏதாவது இங்கிருக்கிறதா என்பதே விவாதத்திற்குரியதுதான். பொது என்கிற
பெயரில் போக்கு காட்டிக்கொண்டிருக்கின்ற எதுவொன்றின் மூடாக்கையும் விலக்கிப் பார்த்தோமானால்
அதனுள்ளே மேற்சொன்ன பாகுபாடுகளினால் ஆதாயம் அடைந்தவர்கள் பதுங்கியிருப்பதை அறியமுடியும்.
பதுங்கியிருக்கிற அவர்கள் பொது என்று இப்போதிருப்பது போலியானது, சார்புநிலை கொண்டது,
மனிதாயமற்றது, என்கிற புரிதலுடன் வெளியேவந்து, அவர்களால் விலக்கி வைக்கப்பட்டிருப்பவர்களுடன்
கலந்துறவாடி மனிதராக வாழ்வதற்கான முயற்சியை மேற்கொள்வதுதான் இங்கே தேவையானதாக இருக்கிறது.
அப்படியான ஒரு தொடர் நெருக்கடியை உரையாடல் உள்ளிட்ட இயன்ற வழிகளிலெல்லாம் அவர்களுக்கு
உருவாக்குவதுதான் விலக்கிவைக்கப்பட்ட ஒருவர் செய்யவேண்டிய தலையாயப்பணி என்பதே எனது
புரிதல். அதன் பொருட்டான எனது எழுத்துகளும் செயல்பாடுகளும் எல்லோருக்கும் உவப்பானதல்ல.
அவ்வாறு என்னை வெறுக்கவும் கண்டும் காணாமல் புறக்கணிக்கவும் அவர்கள் மெனக்கெடுவதில்
வெளிப்படும் பதற்றத்தை ரசித்தபடி நான் நகர்ந்துகொண்டிருக்கிறேன். அம்மட்டில் அவர்களுக்கு
ஒரு தொந்தரவாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியே. எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்வதற்கு
நானொன்றும் பல்குத்தும் குச்சியோ ஜோக்கர் சீட்டோ அல்ல தானே?
நம்முள்ளே ஒடுக்குமுறை ஒன்றினைப் பேணிப் பாதுகாத்தவாறே பிறிதொரு விடுதலை
நோக்கிப் பயணித்தல் ஏற்புடையதா? உதாரணமாக சாதிய நுண்ணடுக்குகளைத் தக்கவைத்தபடி பெண்விடுதலை
இனவிடுதலை சார்ந்த போராட்டங்களை முன்னெடுப்பது
ஒடுக்குமுறை
எப்போதும் ஒற்றையாக இருப்பதில்லை. இங்கொருவர் பல்வேறு அடையாளங்களையும் அதன் பொருட்டான
ஒடுக்குமுறைகளையும் சுமக்க வேண்டியராக இருக்கிறார். இந்த அடையாளங்களில் சிலவற்றை மாற்றிக்கொள்ள
முடியும். அதனூடாக சில ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடவும் முடியும். ஆனால் மாற்றீடு
செய்யப்பட முடியாத நிரந்தர அடையாளமாக சாதி இருக்கிறது. சாதியின் ஆதாரம் அகமணமுறை. அகமணமுறை
நீடிக்கும் வரையிலும்தான் சாதி தூய்மையானது. ஆகவே, மணவுறவு ஒரே சாதிக்குள் நிகழ்ந்து,
அந்த சாதியின் ரத்தம் (ரத்தமென்ன ரத்தம், விந்துதான்) அதே சாதிக்குள் கலந்து குழந்தையாகி
சாதியை மறுவுற்பத்தி செய்தாக வேண்டும். இதற்கு மாறாக வேறொரு சாதியின் விந்தினை ஏற்று
ஒரு பெண் கருவுறுவாளானால் சாதியின் கண்ணி அறுபட்டுவிடும். சாதியின் புனிதத்திற்கு களங்கம்
உண்டாக்கும் இந்த கலப்பினை தடுக்க வேண்டுமானால், வேறு சாதி ஆணால் அணுகமுடியாத நிலையில்
பெண்ணை கட்டுக்குள்/ கண்ணுக்குள்/ உள்ளங்கைக்குள் வைக்க வேண்டியுள்ளது. அதற்குரிய வளர்ப்புமுறையைப்
பேணும் குடும்பம்தான் இங்கு நல்லதொரு மானமுள்ள குடும்பம் என்ற மதிக்கப்படுகிறது. அதாவது
பெண் மீது எவ்வளவுக்கெவ்வளவு கட்டுப்பாடுகளை இறுக்கமுடியுமோ அவ்வளவுக்கவ்வளவு சாதியின்
தூயநிலை பாதுகாக்கப்படுகிறது. இதற்காக பெண் ஒரு தன்னுரிமை உள்ளவள் என்கிற சுதந்திர
நிலை மறுக்கப்பட்டு அவளை ஆணுக்குக் கீழ்படிகிற, ஆணைச் சார்ந்து வாழ்கிற ஓர் ஒட்டுண்ணியாக
திணையிறக்கம் செய்து ஒடுக்குகிறது சாதி. பல்வேறு வன்கொடுமைகளை உள்ளடக்கிய இந்த ஒடுக்குமுறை
கொலைவரைக்கும் செல்கிறது. சாதி என்கிற ஓர் ஒடுக்குமுறை, தன் தூய்மையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக
பெண்மீது பாலின ஒடுக்குமுறையையும் பொருளாதார ஒடுக்குமுறையையும் ஏககாலத்தில் நடத்துகிறது.
(இது மத / இன தூய்மைவாதத்திற்கும் பொருந்தும்.)
பாலினச்சமத்துவத்தையும்
பொருளாதாரச் சமத்துவத்தையும் ஆழப்புதைத்து அவற்றின்மீது அஸ்திவாரம் அமைத்து நிலைநிறுத்தப்பட்டுள்ள
குடும்பமும், குடும்பங்களின் தொகுப்பாக சாதியும், சாதிகளின் தொகுப்பாக சமூகமும் இருக்கும்
போது ஏதாவது ஒரு ஒடுக்குமுறையை மட்டும் தனித்து ஒழித்துவிடமுடியுமா? ஒடுக்குமுறையிலிருந்து
விடுதலை என்பது எல்லா நிலைகளிலுமான சமத்துவத்தைக் குறிக்கிறது. ‘‘துரதிஷ்டவசமாகச் சமத்துவம்
என்னும் சொல்லுக்குப் பதில் வேறோரு சொல் இல்லை. சமத்துவம் என்றால் அளவு, தொகை, எண்,
தரம், மதிப்பு, தன்மையில் ஒன்றுபோல இருத்தல்’’ என்று அண்ணல்
அம்பேத்கர் காட்டும் மேற்கோள் சமத்துவம் என்பதற்குரிய பொருத்தமான விளக்கமாகப்படுகிறது.
கலை இலக்கியம் அரசியல் முதலான துறைகளில் ஒருவர் பிரபலமடைந்து விட்டால்
அவரைப் புனிதராக நிறுவுகின்ற போக்கினைக் காண முடிகிறது. இச்சமூகச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சிலர்
தமது சொந்த உழைப்பால் பிரபலமடைகிறார்கள். (இங்கு உழைப்பு என்பதை அதன் நேர் அர்த்தத்திலும்
பரிமாணங்களிலும் நான் சொல்கிறேன்.) இவர்கள் ஆரவாரமின்றி தமது பணிகளைத் தொடர்கிறார்கள்.
இவர்களல்லாமல், நானாவித தகிடுதத்தங்கள் வழியாக பிரபலமானவர்களும் பிரபலமாகிறவர்களும்
தான் அநேகம். இவர்கள்தான் தங்கள் பிரபல்யத்தை ஒரு சரக்கு போல பாவித்து மார்க்கெட் செய்ய
அலைகிறார்கள். அதற்காக தம்மை அதிமானுடர்களாக சித்தரித்துக் கொள்கிற அற்பத்தனங்களில்
ஈடுபடுகிறார்கள். நாகரீகச்சமூகத்தின் உளவியலில் மங்கி மறைய வேண்டிய நாயக வழிபாட்டுணர்வையும்
அடிமை மனோபாவத்தையும் கிளறி மேலுக்கு கொண்டு வந்து அதனூடாக சிக்குபவர்களை தமது மார்க்கெட்டிங்
ஏஜென்ட்டுகளாக்குகிறார்கள். சொந்த ஒளியில்லாத
இந்த ஏஜென்ட்டுகள், தங்களது நாயகரின் இரவல் ஒளியிலாவது பிரகாசிக்க முயற்சிக்கிறார்கள்.
நாயகர் மீதிருப்பது ஒளியல்ல, ஜிகினாப்பொடி என்பதை உணர்ந்திராத அவர்கள் தொடர்ந்தும் அவரை திருநிலைப்படுத்துகிறார்கள். இது
சீரழிவுதான்.
"சிலர் எழுதிய தாள்கள் மலம் துடைக்கவும் தகுதியற்றதாக அருவருப்பூட்டும். ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட
கூகி அங்கு மலம் துடைக்கும் தாளில் ஒரு நாவல் எழுதி முடித்திருக்கிறார்" என சிறுகதைத்
தொகுப்பு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். கூகி வா தியாங்கோவின் எழுத்துக்கள் குறித்து
பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒரு
நாட்டின் நிலப்பரப்பை கைப்பற்றிக்கொள்வதோடு ஏகாதிபத்தியம் நின்றுவிடுவதில்லை. என்றென்றைக்குமாக
தனது ஆதிக்கத்தை ஏற்று கீழ்ப்படியும் விதமாக அது அங்குள்ள மக்களின் மனங்களை தகவமைக்கிறது.
ஒருவேளை அந்நாட்டை விட்டு வெளியேறிப் போய்விட நேர்ந்தாலும்கூட அம்மக்கள் ஏகாதிபத்திற்கு
தமது விசுவாசத்தை தொடர்ந்து தெரிவிக்கும் நிலையை அது உருவாக்குகிறது. பாரம்பரியம் மிக்க
தமது பண்பாட்டு வளமைகளுக்கும் ஏகாதிபத்தியம் திணிக்கும் அடிமைப்பண்பாட்டிற்கும் இடையே
ஊசலாடிக் களைக்கும் இரட்டை மனநிலை கொண்டவர்களாக அம்மக்களின் ஆளுமையை காலானியாட்சி சிதைக்கிறது.
இதற்காக அது கல்வியையும் ஆங்கிலத்தையும் ஆயுதங்களாக பயன்படுத்துவதை ‘ஏகாதிபத்தியத்தின்
காலனீய கட்டத்தில் கொல்வதற்கும் சுகப்படுத்துவதற்கும் ஒரே கலையைப் பயன்படுத்தும் வழிமுறைகள்’ என்கிறார் கூகி. இதை
மேலும் விளக்குவதற்காக ‘‘கருப்புக்கண்டத்தில் நாம் அவர்களது உண்மையான சக்தி பீரங்கிகளில்
இல்லை. அதைத் தொடர்ந்த வழிமுறைகளில் இருந்தன என்பதைப் புரிந்துகொண்டோம். பீரங்கிகளுக்குப்
பின்னால், புதிய பள்ளிகள் இருந்தன. அப்பள்ளி பீரங்கியிலிருந்து போரிடும் ஆயுதத்தின்
வலுவைப் பெற்றது. ஆனால் பீரங்கியைவிட நிரந்தரமான வெற்றியை ஈட்டித்தந்தது. பீரங்கி உடலைப்
பணிய வைக்கிறது. பள்ளி ஆன்மாவைப் பணிய வைக்கிறது’’- எனும்
செயிக் ஹமிதௌ கானேயின் வரிகளை மேற்காள் காட்டுகிறார் கூகி. யுனெஸ்கோவில் வாசித்த ‘தேசிய
பண்பாட்டை நோக்கி’ என்ற கட்டுரையில் ‘காலப்போக்கில் மக்கள்
உருவாக்கிய மதிப்பீடுகளைச் சுமப்பது மொழிதான்’ என்றும் வேறொரு
சந்தர்ப்பத்தில் தமது மொழியை பண்பாட்டுக்களம்
என்றும் கொண்டாடும் கூகி, ஏகாதிபத்தியத்தின் மொழியை ஆன்மாவை ஈர்த்துக் கைது செய்யும்
மிக முக்கிய ஊடகம் என்று விமர்சிக்கிறார்.
வலிமையும்
கொடூர மனமும் கொண்ட ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் வெற்றிபெற
முடியும் என்கிற நம்பிக்கையையும் தங்களது தாய்மொழியான ‘கிகூயூ’வின்
வாய்மொழிக்கதைகளில் இருந்து பெற்றதாக அவர் கூறுவது கவனிக்கத்தக்கது. ‘கிகூயூவில் சொல்லப்பட்ட
பெரும்பாலான கதைளில் மையப்பாத்திரங்களாக மிருகங்களே இருந்தன. அவற்றில் முயல்தான் எங்கள்
கதாநாயகன். உருவத்தில் சிறிய, பலவீனமான முயலுக்கு இருந்த புத்தி கூர்மையும் குயுக்திகளும்
எங்களுக்குப் பிடித்திருந்தன. சிங்கம், சிறுத்தை, கழுதைப்புலி போன்ற கொடூரமான மிருகங்களை
எதிர்த்துப் போராடிய முயலோடு நாங்கள் எங்களை அடையாளப்படுத்திக் கொண்டோம். முயலின் வெற்றிகள்
எமது வெற்றிகளாயின. வலுவானவர்களை வெல்லமுடியும் எனக் கற்றுக்கொண்டோம்...’’
ஏகாதிபத்தியம்
திணித்த பண்பாட்டினாலும் மொழியாலும் இடையீடு செய்யப்பட்ட கென்ய மனதை மீட்டுருவாக்கம்
செய்வதற்கு இலக்கியத்தை ஒரு வழியாக காணும் அவர் சிறுகதை, நாடகம், கட்டுரை, நாவல் ஆகிய
வடிவங்களில் இயங்குகிறார். கலை இலக்கியத்தின் அன்னிய வடிவங்களை ஆப்பிரிக்க மயமாக்குவதற்கான
தொடர் ஆய்வின் ஒரு கட்டத்தில்தான் அவர் தன் தாய்மொழியான கிகூயூவில் சிலுவையில் தொங்கும்
சாத்தான் நாவலை எழுதுகிறார். சிறையின் அறை எண் 16இல் இருந்து அந்த நாவல் எழுதிய அனுபவத்தை அவர் இப்படி சொல்கிறார்.
‘முதல் சிக்கல் காகிதமும் பேனாவும். அதிகாரிகளுக்கு ஒப்புதல் வாக்கமூலமோ, வேண்டுகோள்
மனுவோ எழுதுவதாகக் கூறிப் பேனாவைப் பெற முடியும். இரண்டு அல்லது மூன்று காகிதங்களும்
பெறவலாம். ஆனால் நாவல் எழுதுவதற்கான காகிதக்கட்டு எப்படி கிடைக்கும்? எனவே நான் கழிவறையில்
உள்ள துடைப்புத்தாளைப் பயன்படுத்தினேன். இதை நான் சொன்ன போது பலர் சிரித்தார்கள். பலர்
வினாக்குறிகளோடு நோக்கினர். ஆனால் அந்தத் தாளில் எழுதுவதில் எந்த மூடுமந்திரமும் இல்லை.
கமீதி சிறையில் அவை கைதிகளுக்கு தண்டனை அளிப்பதற்கானவை. எனவே கரடுமுரடான இருந்தன. உடலுக்கு
ஊறு விளைவிக்கக்கூடிய துடைப்புத்தாள்கள், பேனாவுக்கு வசதியாக இருந்தன.’ உனக்கெல்லாம்
கட்டுக்கட்டாக காகிதமும் விதவிதமான பேனாக்களும் கிடைத்தும் நீ என்ன எழுதியிருக்கிறாய்,
எழுதியிருக்க வேண்டிய அளவுக்கு எழுதியிருக்கிறாயா என்று கூகி என்னை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டே இருப்பதாக
இந்த வரிகள் நினைவுக்கு வரும்போதெல்லாம் துணுக்குறுவேன்.
காலனியாதிக்கத்தின்
கீழ் கென்யா என்னவானது, அதிலிருந்து மீள்வதற்கு தாங்கள் செய்த செய்து கொண்டிக்கிற பணிகள்
எத்தகையவை, என்பதை விவரிக்கும் கூகியின் ஒவ்வொரு
சொல்லும் காலனியாதிக்கத்தின் கீழிருந்த இந்தியா இலங்கை உள்ளிட்ட எந்தவொரு நாட்டிற்கும் அப்படியே பொருந்தும். அந்தளவிற்கு
மனவொருமை கொள்ள வைக்கும் எழுத்து அவருடையது. அவருடனான உரையாடலும் அத்தகையதே என்பதை
கடந்த ஆண்டு பிப்ரவரியில் பெங்களூரில் சந்தித்தபோது உணர்ந்தேன். “நாம் கனவு காண உறங்குபவரல்ல; உலகை மாற்றக் கனவு
காண்பவர்கள்” என்கிற அவரது கூற்றில் உள்ள “நாம்” என்பதற்குள் பொருத்திக் கொள்வதெப்படி
என்கிற கேள்வி இடையறாது என்னை குடைந்துகொண்டே
இருக்கிறது.
"கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்" என்ற சிறுகதை
மீ டிகிரி கொதிநிலை ஒன்றை அங்கதத்தோடு சுவறச்
செய்கிறது. அக்கதையை வாசித்த பின்பு பலநாட்கள்
அதன் அதிர்விலிருந்து விடுபட முடியவில்லை. எழுதிய தருணத்தில் உங்கள் மனநிலையை
அறியலாமா?
இந்த
நாடே ஒரு திறந்தவெளி கழிப்பறையாக நாறிக்கொண்டிருக்கிறது. இங்கு சுத்தம், சுகாதாரம்
என்பவை தனிநபர், குடும்பம், அரசு ஆகியவற்றின் கூட்டுப்பொறுப்பாக அல்லாமல் துப்புரவுப்
பணியாளர்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் போர் தொடர்பான தோல்கருவிகளை
உற்பத்தி செய்யவல்லவர்களான அருந்ததியர் உள்ளிட்ட பட்டியல் சாதியினர் இந்தப் பணிகளுக்குள்
பலவந்தமாக தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் பணி சார்ந்த நோவுகளாலும் விஷவாயு போன்றவற்றின் தாக்குதலாலும் நாட்டின்
ஏதாவதொரு பகுதியில் அன்றாடம் செத்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் ஒரு ராணுவச்சிப்பாய்
சாவது நாட்டைக் காப்பாற்றவதற்காக என்றால் இவர்கள் சாவது யாருக்காக? இவர்களது வாழ்வைப்போலவே
சாவும் சீந்துவாரற்றுப் போவதை எப்படி தாங்கிக்கொள்வது? நாட்டின் ஆரோக்கியத்திற்கான
முதன்மைப்பணிகளை ஆற்றி மக்களைக் காப்பாற்றும் இவர்கள் எவ்வித சமூக மதிப்பும் இன்றி
வறுமையில் உழன்று எவருக்காகவோ செத்தொழிவதா? இப்படியாக என்னை எப்போதும் அலைக்கழித்தக்
கேள்விகளின் அழுத்தத்தில்தான் அந்தக்கதை உருவாகியிருக்கக்கூடும். நடப்புலகின் விரும்பத்தகாத
எதார்த்தத்தை புனைவுலகத்தில் மாற்றிப் பார்க்கலாம்தானே? அப்படி எழுதிப் பார்த்ததுதான்
அந்தக் கதை.
"மீசை வணிகம்" போன்ற கவிதைகளில் கட்டிறுக்கமான மொழியாட்சியினையும்..
"பாரத் மாதா கீ ஜே " போன்ற கவிதைகளில் எளிமையான வெளிப்பட்டினையும் காண முடிகிறதே....
எழுதத்
தேர்ந்துகொள்ளும் பொருள் அதற்கிசைவான மொழியையும் இழுத்துவருகிறது. இதில் கருத்து சொல்ல
நான் யார்?
பா.ரஞ்சித். மகிழ்நன் என்போருடன் இணைந்து "காலா" திரைப்படத்திற்கு
வசனம் எழுதியிருந்தீர்கள். சமூகக் கோபத்தினைப்
பதிவு செய்யும் வகையான வெளியையும் சுதந்திரத்தையும்
"காலா" வழங்கியதா?
சமூகத்தின்
உயிராதாரமான நிலவுரிமையைப் பேசுவதற்காகத்தான் ரஞ்சித் காலா கதையை எழுதியிருந்தார். அந்தக் கதையை அதற்கான
தீவிரத்தோடு திரைமொழியில் சொல்வதற்கு தேவையான ஒவ்வொரு வசனத்தையும் விவாதித்து இறுதிப்படுத்தும்
ஜனநாயகத்தன்மையை அவர் கைக்கொண்டிருந்தார். எங்கள் மூவருக்கிடையிலும் ஏற்கனவே இருந்துவருகிற
தோழமையும் பரஸ்பர மரியாதையும் இந்த விவாதங்களை சமரசமின்றி நடத்துவதற்கான சுதந்திரத்தை
இயல்பானதாக மாற்றியிருந்தது. அந்தவகையில் அதுவொரு கூட்டுழைப்பு.
" பூகோள நியமத்தில்
ஊர்க்கோடியில் சுடுகாடிருக்கும்
நமக்கு இலங்கை போல " என்று எழுதியுள்ளீர்கள். எல்லா வகையான அதிகாரங்களையும்
வெறுப்பவர் நீங்கள்... எனவே ஆயுததாரிகளின்
செயற்பாடுகள் குறித்த உங்கள் எண்ணங்களை நன்கறிவோம். இங்குள்ள மக்களின் வாழ்க்கை பற்றிய
உங்கள் எதிர்பார்ப்புகளை தெரிந்து கொள்ளலாமா?
புறப்பாடு
என்கிற எனது முதல் தொகுதியிலுள்ள இந்தக் கவிதையில் வெளிப்படும் அதே துக்கமும் இயலாமையும்
தான் இன்றளவும் என் மனதில் நீங்காதுள்ளது. அது எந்தளவுக்கு ஆத்மார்த்தமானது? தெரியவில்லை,
ஆனால் பாவனையோ பாசாங்கோ அல்ல என்று நம்புகிறேன். உயிரிழப்பு, சிறைவாசம், சித்ரவதைகள்,
நோய், அங்கவீனம், இடப்பெயர்வு, புலப்பெயர்வு, வறுமை, அலைக்கழிப்பு என யுத்தத்தின் வாதைகளைத்
தாங்கிக்கொண்டு எஞ்சியுள்ள தமிழர்கள், போரின் பேரழிவுகளிலிருந்து தம்மை மீளக் கட்டமைத்துக்கொண்டு
கண்ணியமான வாழ்வுக்குத் திரும்பவேண்டும் என்று வெறுமனே ஆசையை வெளிப்படுத்துவதால் என்ன
பயன்? தமிழர்கள் மீது போர்க்குற்றங்களை நிகழ்த்திய இலங்கை அரசையும் இனவாதிகளையும் தண்டனைக்குள்ளாக்கும்
அரசியல் விருப்புறுதியும் அதன் பொருட்டான தொடர்செயல்பாடும் கொண்ட அமைப்புகள் இல்லாத
நிலையில் இப்படியான ஆசைகளுக்கு ஒரு பொருளுமில்லை. வடகிழக்குத் தமிழர்கள், தமிழ்பேசும்
முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், இனவாதத்தின் பிடியில் இன்னமும் சிக்காத சிங்களவர்கள்
ஆகியோரைக் கொண்ட ஜனநாயக இயக்கங்களை உருவாக்குவதற்கான களப்பணி ஆற்றுகிறவர்கள் யாரேனுமிருந்தால்
அவர்களுக்கு எனது ஒருமைப்பாட்டை தெரிவியுங்கள். மதவெறியையும், சாதிவெறியையும், பெண்ணடிமைத்தனத்தையும்,
மூட நம்பிக்கைகளையும் போலிப் பெருமிதங்களையும் பரப்பி இந்திய மக்களை வன்முறையால் பிளவுபடுத்திவரும்
இந்துத்துவவாதிகள் ஈழத்தமிழர்களையும் குறிவைத்து இறங்கியிருக்கிறார்கள். இந்த அபாயத்தை
எடுத்துரைத்து, மற்றுமோர் அழிவு நமக்கெதற்கு என்று தமிழ்ச்சமூகத்தை உஷார்ப்படுத்துகிற
எவரொருவரது கரங்களையும் தோழமையுடன் பற்றிக்கொள்கிறேன்.
- ஆதவன் தீட்சண்யா
ஒசூர்
25.03.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக