சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 3

தீட்டலங்காரம் - ஆதவன் தீட்சண்யா

படுத்த சற்றைக்கெல்லாம் அலண்டு தூங்கிப் போனாள் திவ்யா. பிறந்தநாள் கொண்டாட்டத்தின்  களிப்பு இன்னமும் அவள் முகத்தில் பூரித்திருந்தது. அவளென்றால் உயிருருகப் பழகும் அவளது 12சி வகுப்புப் பிள்ளைகளும் உறவுக்காரப் பொண்டுகளும் பையன்களும் பூசிய வண்ணப் பொடிகளும் ஜிகினாத்தாள்களும் மேலெல்லாம் சிதறி மின்னிக் கிடந்தன. யாரோ முகத்தில் தீத்திவிட்ட கேக் க்ரீமை கூட கழுவாமல் அப்படியே விட்டிருந்தாள். 

“ஊரு கண்ணு உறவுக்கண்ணு எல்லாம் எம்மகமேல தான். சுத்திப் போடலாம்னு வந்தா லைட்டைக்கூட அமர்த்தாம எப்படி தூங்குது பாரு” என்று பொய்க்கோபம் காட்டி கணவனிடம் மெப்பாக ஞாயம் மேவினாள் மங்கா. மனைவியின் புகாரில் இருக்கும் பெருமிதத்தைக் கண்டுகொண்ட சித்தண்ணன் தன் பங்கிற்கு ஏதும் சொல்லாமல் இருப்பானா? 

“ஆரம் எப்படி ஜொலிக்குது பாரு.. இதவிட சிறுசா செஞ்சிருந்தா மூக்குத்தி எடுப்பாவே இருந்திருக்காது. ஜிமிக்கிய மட்டுமாச்சும் கழட்டி வச்சிருக்கலாமில்ல… படுக்கையில அழுந்தி நசுங்கிறாதா… இன்னொரு பவுன் சேர்த்திருந்தா கொஞ்சம் கெட்டியா இருந்திருக்கும்… அந்த தங்காசாரியும் நீயும் இதே போதும்னு தடுத்துட்டீங்க” என்று மகளின் மேனியை அலங்கரிக்கும் நகையெல்லாம் தன் பங்காக்கும் என்று அவன் பெருமை காட்டிக்கொண்டான். “எல்லாத்தயும் உருக்கிச் சேர்த்ததை இன்னின்ன உருப்படிக்கு இத்தனை பவுனுன்னு அந்தாளு சொன்னப்ப நீயும்தானே  சரிசரின்னு தலையாட்டுன… இப்ப என்னமோ என்மேல பழிபோடுற…” என்று கணவனை கடிந்து கொண்டாள். “சரிவிடு, வெயிட்டா இருந்தாலும் வலிக்குதுன்னு மவ சிணுங்குவா” என்று சமாதானம் செய்தான் சித்தண்ணன்.  

இவர்களது பேச்செதற்கும் அசராமல் திவ்யா தூங்கிக்கொண்டிருந்தாள். பாவம் பிள்ளைக்கு அலுப்புபோல என்று லைட்டை அணைத்துவிட்டு வெளியே வந்தார்கள். காகிதத்தட்டுகள், தேநீர்க்கோப்பைகள், பரிசுப்பொருட்கள், பிரித்தெறியப்பட்ட உறைகள், அறுந்துத் தொங்கிய தோரணங்கள், பலூன்கள் என நடுக்கூடம் முழுக்க அலங்கோலமாகக் கிடந்தன. சிந்திக்கிடந்த கேக், இனிப்புப்பட்சணங்களது துகள்களின் மேல் ஈக்களும் எறும்புகளும் மொய்த்திருந்தன. எல்லாவற்றையும் பெருக்கி ஓரந்தள்ளிவிட்டு அவர்கள் படுக்கப் போகும்போது நேரம் பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.

‘திவ்யா முழிச்சுப் பாரேன்’ என்று யாரோ எழுப்பியதற்கு அரைத்தூக்கத்திலேயே என்ன என்றாள். ‘எங்களைப் போக விடேன்’ என்று கிசுகிசுப்பை அவள் முதலில் கனவில் கேட்கும் குரல் என்றுதான் நினைத்தாள். ஆனால் அந்தக்குரல் இரைஞ்சுதலைப் போல ஆரம்பித்து எச்சரிக்கை போல இடைவிடாமல் கேட்கவுமேதான் அவள் கண்விழித்தாள். தான் மட்டுமே இருக்கும் இந்த அறைக்குள் கேட்பது யாருடைய குரல்? “உன் காதுகளையே கடிச்சுத் தின்கிற கோபமிருக்கு எங்களுக்கு” என்கிற அந்தக் குரல் அவளது ஜிமிக்கி ஒன்றிலிருந்து வந்தது. “என்னால கழுத்தை நெரிச்சு இப்பவே உன்னை கொல்ல முடியும்” என்றது கழுத்தாரம். “நான் நினைச்சா திருகாணிய கழட்டி மூக்குக்குள்ள தள்ளி மூச்சையே நிறுத்திப்புடுவேன்” என்றது மூக்குத்தி. “லேசா இறுக்கினேன்னு வையி, அவ்வளவுதான் உன் ரத்த ஓட்டமே நின்னுடும்” என்றது மோதிரம். “ஏய், போறப்போ எங்களையும் கூட்டிட்டுப் போங்க. இல்லன்னா இருக்கிற ஆத்திரத்துல இவ வயித்த  குத்திக் கிழிச்சிருவம்” என்று சாமியறை வாசற்படியில்  நிறுத்தப்பட்டிருந்த வெள்ளி குத்துவிளக்குகள் ரெண்டும் கத்தின. “உங்கப்பன் பண்ணின தப்புக்கு உன்னை தண்டிக்கக்கூடாதுன்னு தான் விட்டிருக்கோம். யோசிச்சு நல்ல முடிவா எடு” -நகைகள் ஒருசேர விடுத்த இந்த எச்சரிக்கையில் இருந்த மூர்க்கம் திவ்யாவை  பதற்றமாக்கியது. 

தான் அணிந்திருக்கும் நகைகள் தன்னிடமே பேசுவதும் அது தனக்கே கேட்பதும் சாத்தியமா? ஒருவேளை இது அதீதமான கற்பனையா? யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? இந்த நகைகளுக்கு அப்பன் பண்ணின கெடுதல் என்ன? கெடுதல் பண்ணலேன்னா நகைகள் ஏன் இப்படி புகாரிட்டு மிரட்டணும்? என்று பலவாறாக யோசித்தாள் திவ்யா. “உங்கம்மா காலையில பீரோவுலிருந்து எடுக்குறப்பவே துள்ளி குதிச்சு ஓடியிருப்போம். சரி, பிறந்தநாளும் அதுவுமா நீ சங்கடப்படக்கூடாதுன்னு தான் இந்நேரம் வரைக்கும் பொறுத்திருந்தோம். இப்பதான் முடிஞ்சிருச்சில்ல, கழத்திவிடு” என்றன. 

“நாங்க உங்கள வாங்கிட்டு வந்தப்புறம் இதுதானே உங்க வீடு” என்று அவள் இன்னதுக்கு பதிலென்று இல்லாமல் பொதுப்படையாகச் சொன்னாள். “சரி, எங்கே வாங்குனீங்கன்னு சொல்லு?” என்று நகைகள் கேட்டதற்கு பதிலின்றி திவ்யா திணறினாள். “காலையில் எங்கப்பம்மாக்கிட்ட கேட்டுச் சொல்றேன்” என்று அப்போதைக்கு அமைதிப்படுத்தப் பார்த்தாள். “விடிஞ்சதும் உங்கம்மா எங்களையெல்லாம் கழத்தி வாங்கி பீரோ லாக்கர்ல வச்சு பூட்டிப்புடுவா. அப்புறம் மறுபடியும் அடைஞ்சிக் கிடக்க வேண்டியதுதான்” என்று சலித்துக்கொண்டன. “இப்போ கழத்தினதும் நீங்க போயிட்டா எங்கப்பம்மாவுக்கு நான் என்ன சொல்லுவேன்?” என்று ஒரேயடியாக மறுத்துவிட்டாள் திவ்யா. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் தப்பிக்க முடியாதென்பதை அறிந்திருந்த நகைகளோ, “உனக்குச் சொந்தமில்லாத எங்களை அணிந்திருப்பது உனக்கு உறுத்தவில்லையா” என்று கேட்டன. அந்தக் கேள்வியால் அவள் தடுமாறுவதைக் கண்ட நகைகள் அவளது கவனத்திற்குத் தப்பிப்போன கடந்தகாலச் சம்பவங்களை நினைவூட்டத் தொடங்கின.   

***

பொதுவாக மழைமோட காலத்தில் அடைமழை பெய்யும் நாட்களில் ஐந்து பீரியடுடன் பள்ளிக்கூடம் முடிவதுண்டு. அன்றைக்கு பொட்டுத்தூறலில்லை, வெறுமனே வானம் மூட்டமாகத்தான் இருந்தது. அதற்கே ஐந்து பீரியடா என்கிற ஆச்சரியம் பிள்ளைகளுக்கு. “வழியில் விளையாடாம, பராக்கு பார்க்காம நேரம் பொழுதோட வீட்டுக்குப் போய்ச் சேரணும்” என்று ஆசிரியர்கள் விடுக்கும் எச்சரிக்கையை என்றைக்கு பிள்ளைகள் கேட்டிருக்கிறார்கள்? அப்படி கேட்டால் அவர்கள் பிள்ளைகளா? திவ்யாவும் அவளது சேக்காளிகளும் வம்பாடிக்கொண்டு வரும் வழியில் ஏழெட்டு போலிஸ்காரர்கள் நிற்பதைக் கண்டார்கள். இதென்ன புதுவழக்கம் என்பதுபோல அவர்களை முறைத்துப் பார்த்துக்கொண்டே ஒதுங்கி ஊர்ப்பாதைக்குள் திரும்பினார்கள். அம்மா மட்டும்தான் இருந்தாள் வீட்டில். வந்ததும் உங்கொப்பனைக் காணலன்னு தேடாத. ஒருவேலையா வெளியப் போயிருக்கு. உனக்கு நொறுவாய் வாங்கிட்டு இப்ப வந்துடும் என்றாள் அம்மா. 

“அப்போ உங்கப்பாவுக்காக வாசலைப் பார்த்து நீ உட்கார்ந்திருந்தாய். ஆனால் உங்கப்பா அன்னிக்கு ராத்திரிதான் வீட்டுக்கு வந்தார். இடைப்பட்ட நேரத்தில் எங்கே போயிருந்தார்?” என்றது மூக்குத்தி. “தெரியலியே” என்றாள். “சரி, கவனி”. 

சித்தண்ணன், மாதையன், இடும்பன், முனிமாதன், வளத்தி கோயிந்தன் ஐவரும்தான் முன்வரிசையில் நகர்கிறார்கள். மந்திக்குளம், பெரியமன்னவேடு, கட்டனேரி, அரியாம்பள்ளி, வேடம்பட்டி இன்னும் வடக்கே ஆராங்கோட்டை, முட்டுக்காடு, எம்.நாவலூர் என்று பக்கம்பராந்திரி ஊர்களிலிருந்தெல்லாம் வந்திருந்த இளந்தாரிகள் எழுவதெண்பது பேர் அவர்களைப் பின்தொடர்கிறார்கள். அந்த நிலப்பரப்பை அறிந்தவன்போல் சித்தண்ணன்தான் அவர்களை வழிநடத்துகிறான். உலக்கை, இரும்புக்குழாய், கடப்பாரை, சம்மட்டி, கொந்தாளம், பிக்காசு, பெட்ரோல் கேன், கேஸ் கட்டிங் மிஷின் என்று ஒவ்வொருவரும் ஏதாவதொன்றை ஏந்தியிருந்தார்கள். “அய்யோ அப்பா உன் முகமா இது… ஏன் இப்படி விகாரமா இருக்கு… அவங்களோட போகாதப்பா, வந்துடுப்பா” என்று திவ்யா கத்தினாள். “நீ பார்க்கிறது அவங்களோட கடந்தகாலத்தை. கடந்தகாலத்தில் இருக்கிற அவங்களுக்கு நிகழ்காலத்திலிருக்கிற உன்னோட கூப்பாடு கேட்காது, கவனி” என்றது ஜிமிக்கி. ஆங்காரமான கூச்சலையும் ஆபாசமான வசைகளையும் எழுப்பிச் செல்லும் அவர்கள் நிகழ்காலத்திற்கே வந்தாலும் என் கூப்பாடு எப்படி கேட்கும் என்று தன்னையே கேட்டுக்கொண்டாள் திவ்யா. 

சித்தண்ணன் கும்பல் நுழையும்போது அந்தக் காலனியில் கதவிருந்த வீடுகள் அனைத்துமே பூட்டிக் கிடந்தன. வேப்பமரமொன்றின் அடியில் கிடந்த கட்டிலில் ஒடுங்கிச் சுருண்டிருந்த  ஒரு கிழவியைத்தவிர அங்கொரு குஞ்சுகுளுவான் கூட இல்லை. ‘வூட்டுக்கு ஒருத்தனையாவது பொளந்துகட்டணும்’ என்று வந்தால் தப்பித்துவிட்டார்களே என்கிற ஆத்திரத்திலும், நல்லவேளையாக ஒருத்தரும் இல்லை என்கிற சந்தோசத்திலும் அந்த பட்டப்பகலில் அவர்கள் அடுத்தடுத்து நடத்தும் அட்டூழியங்களுக்கு போலிசும் துணை.    

பூட்டப்பட்டிருந்த வீடுகளின் கதவுகளை அவளது அப்பாவும் அவனது கூட்டாளிகளும் பெயர்த்தெடுக்கிறார்கள். வீட்டுக்குள் டிவி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின், ப்ரிட்ஜ், புத்தக அலமாரி, கம்ப்யூட்டர், வெஸ்டர்ன் டாய்லெட் என்று இருப்பதைப் பார்த்ததும் அவர்களது கண்கள் சிவக்கின்றன. “இவங்களுக்கு வந்த சொகுசப் பாத்தியா? இதெல்லாம் நம்ம வூடுகள்லகூட இல்லியே” என்கிறான் குமைச்சலோடு ஒருவன். “பண்டபாத்திரம் எதுவும் இங்க மிஞ்சக்கூடாது, வேணும்கிறத எடுத்துக்கிட்டு மிச்சத்த அடிச்சு நொறுக்குங்க” என்று ஆணையிடுகிறான் இன்னொருவன். “எல்லாம் இன்னியோட முடிஞ்சது… ஒருத்தன் வாலாட்டினா ஊரையே அழிப்பாங்கன்ற பயம் வரணும். அப்பதான் இனியொருத்தனும் நம்ம பொண்ணுங்கள ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்” என்று கொக்கரித்தபடியே மற்றொருவன் தவசதானியங்களின் மேல் மூத்திரம் பெய்கிறான். அவன் எதிரில் இருப்பதாக நினைத்து கூசிப்போன திவ்யா “த்தூ வெட்கங்கெட்ட மிருகமே” என்று திட்டுகிறாள். “எந்த மிருகம் இப்படியான அட்டூழியங்களைச் செய்கிறது?” என்று கழுத்தாரம் கேட்டதற்கு திவ்யாவிடம் பதிலில்லை. 

பீரோக்களை நெம்பித் திறந்து கேஸ் கட்டிங்கில் திறக்கிறார்கள் லாக்கர்களை. துணிமணிகளைத் தாறுமாறாக இழுத்தெறிந்து நடுவீட்டில் போட்டு தீவைக்கிறார்கள். தீயில் வீசப்பட்ட படிப்புச் சான்றிதழ்கள், ரேசன் அட்டை, ஆதார், கேஸ் புக் எல்லாம் தீய்ந்து கருகுகின்றன. தன்னைவிட ஐந்தாறு வயது குறைந்த மாணாக்கன் ஒருவன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புத்தகப்பையையும் சீருடையையும் எடுத்து நெருப்புக்குள் வீசும்போது திவ்யா தன்னுடல் பொசுங்குவது போல் துடித்துப் போனாள். பாடப்புத்தகங்களும் சீருடைகளும் இல்லாமல் அந்த வீடுகளின் பிள்ளைகள் நாளை எப்படி பள்ளிக்கூடம் போவார்கள் என்கிற யோசனை இல்லாத இவனெல்லாம் படித்து என்னத்த கிழிக்கப்போறான் என்கிற கவலை பீடிக்கிறது திவ்யாவை. அவளது மனவோட்டம் அறிந்த குத்துவிளக்கு சொன்னது: “அவன் படித்து எதையும் கிழிச்சிடக் கூடாதுன்னுதான் உங்கப்பா மாதிரியான ஆட்கள் அவனை இப்படி கிரிமினலாக்குறாங்க” 

அவர்களுக்கு இன்னும் வெகாளம் அடங்கவில்லை.  அழைப்புக்காக நெடுஞ்சாலையில் போலிஸ் வேன் அருகில் காக்கவைத்திருந்த ஜேசிபியை வருவிக்கிறார்கள். அது வீடுகளின் கூரைகளையும் வாரைகளையும் பிய்த்தெறிகிறது. முட்டிச்சாய்க்கிறது சுவர்களை. இவனுங்களுக்கு சாமி ஒரு கேடா என்று தீப்பாஞ்சியம்மன் கோவிலையும் தகர்க்கிறது. காலனியின் 126 வீடுகளுக்குமான நீர்த்தேக்கத்தொட்டியைத் தாங்கி நிற்கும் தூணை அடித்துச் சரிக்கிறது. தலை சிதறிச் செத்தவனின் ரத்தம்போல் வீணில் பாய்கிறது நீர். மேஸ்திரி பொன்னனின் ஈரடுக்கு வீட்டுவாசலில் வாகனங்களையெல்லாம் இழுத்துப் போட்டு நெருப்பு வைக்கிறார்கள். பெட்ரோல் டேங்க் வெடித்து வீட்டுக்குள் தீப்பிழம்பு விழுந்தெரிகிறது. வீட்டுக்குள்ளிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கும்போல, இடியொத்த பெருஞ்சத்தத்தால் அந்த வட்டாரமே கிடுகிடுங்குகிறது. அடர்ந்திருண்ட கரும்புகையின் உள்ளேயிருந்து அவளது அப்பனும் அவனது கூட்டாளிகளும் வெற்றிப் பெருமிதத்தோடு வெளியே வருகிறார்கள். “அவங்கள நூறு வருசத்துக்குப் பின்னாடி தூக்கி வீசியிருக்கோம். எழுந்து வர்றதுக்கு இந்த ஜென்மம் போதாது.. மறுபடி தலையெடுக்க மண்ணள்ளித் திங்கனும்…” என்று  எகத்தாளமாக பேசிக்கொண்டு வரும் அவர்களைப் பார்ப்பதற்கு அஞ்சி திவ்யா கண்களை இறுக்கமாக மூடிக்கொள்கிறாள். 

“கண்களை அகலத் திறந்து பார்க்கவேண்டிய இந்நேரத்தில் மற்றவர்களைப்போல கண்ணை மூடிக்கொள்ளும் தவறை நீயும் செய்யாதே திவ்யா. போரில் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாகரிகத்தின் சிதிலங்கள் போல அந்தக் காலனி இருப்பதைப் பார். கொலை வெறியேறிய உனது அப்பன்களிடமிருந்து தப்பி உயிர் பிழைக்க பாம்பும் தேளும் மேயும் முட்புதர்களிலும் கரும்புக்காடுகளிலும் பதுங்கிக் கிடந்து வெளியே வந்த அந்த மக்களுக்கு உடுத்தியிருந்த துணியத்தவிர மிஞ்சினது என்ன என்று பார்க்கமாட்டாயா? வீடுவாசல் அற்றவர்களாக்கப்பட்ட அவர்களது குழந்தைகள் இந்த ஐப்பசிக்குளிரில் வெட்டவெளியில் எப்படி வெடவெடத்து நடுங்குகிறார்கள் என்பதை காணமறுக்கும் அளவுக்கு உன் மனம் கல்லா  இரும்பா…?”  -நெத்திச்சுட்டியும் மோதிரமும் எழுப்பின இந்தக் கேள்விகளுக்குப் பதிலற்றுப்போன திவ்யா கண்களை இறுக மூடியிருந்தாள்.  

“திவ்யா கண்ணைத் திற” என்று அப்பா உலுக்கியதில் கண்விழித்த திவ்யா எங்கே அந்த எரியும் வீடுகளும் குளிரில் நடுங்கும் குழந்தைகளும் என்று தேடினாள். “நிகழ்காலத்துக்கு வா திவ்யா” என்று கிசுகிசுத்தது தோடு. அவள் நிதானத்துக்கு வர கொஞ்சம் நேரமெடுத்தது. எதிரே இருந்த பெற்றவர்களைப் பார்க்கப் பிடிக்காதவளாக அவள் தான் அணிந்திருந்த நகைகளை விறுவிறுவென கழற்றத் தொடங்கினாள். “ஏன் தங்கம் எழுந்தும் எழாம இவ்வளவு அவசரமா நகைகளைக் கழட்டுற?” என்ற அம்மாவிடம், “இந்த நகைகள் எனக்கு வேணாம்” என்றாள். “ஏம்மா இதுகளுக்கு என்ன குறைச்சல்? நல்லாத்தானேம்மா இருக்கு!” என்ற சித்தண்ணனை அவள் அற்பமாகப் பார்த்தாள். “ஊராமூட்டு நகைன்னா நல்லாத்தாம்பா இருக்கும்” என்றாள். “என்னது ஊராமூட்டு நகையா? நம்மளுதுமா” என்றான். “நம்மக்கிட்ட இருக்கிறதாலயே நம்மோடதுன்னு ஆயிடாதுப்பா.”

எதை மனதில் வைத்து மகள் இப்படி பேசுகிறாள் என்று புரியாத சித்தண்ணன், “இது உனக்கே உனக்குன்னு அளவு கொடுத்து செஞ்சதுமா. தங்காசாரிக்கிட்ட நீதானேம்மா அன்னிக்கு அளவு கொடுத்த” என்றான். “ஆமா அளவு கொடுத்தேன். காலனி வூடுகள்ள நீங்க களவாண்டு வந்த நகைகள உருக்கித்தான் எனக்கு நகை செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சிருந்தா அன்னிக்கே மறுத்திருபேன்…” 

“அதொன்னும் திருட்டு இல்ல. அவங்கக்கிட்ட பலவந்தமா வசூலிச்ச அபராதம்.” 

அப்பனின் பேச்சால் அருவருப்படைந்த திவ்யா “இதெல்லாம் எத்தினி வருசத்து உழைப்பு அவங்களுக்கு? ச்சே… திருப்பிக் கொடுத்துட்டு வாங்கப்பா” என்று சீறினாள். “உனக்கு பிடிக்கலன்னா விடு. திருப்பிக் கொடுக்கவெல்லாம் முடியாது” என்று சொன்ன அப்பனின் குரலில் இருந்த இளக்காரம் அவளை கொந்தளிக்கச் செய்தது. “குருவியாட்டம் அவங்க சிறுகச்சிறுகச் சேர்த்தையெல்லாம் இப்படி கொள்ளையடிச்சு கொண்டாந்து புழங்குறீங்களே இதிலெல்லாம் தீட்டு இல்லையா உங்களுக்கு?” என்று வீசியடித்தாள் நகைகளை. 

சித்தண்ணனும் மங்காவும் வாயடைத்து நின்றார்கள். நகைகளும் குத்துவிளக்குகளும் நகரத்தொடங்கின.

நன்றி: ஆனந்தவிகடன் 03.02.21

ஓவியங்கள்: அரஸ்

சனி, மார்ச் 3

சாதியற்ற தமிழர் காவியற்ற தமிழகம் - ஆதவன் தீட்சண்யா


தமுஎகச புதுவை மாநாட்டு கருத்தரங்கிற்கான விவாதக்குறிப்பு

ஒரேயொரு சாதி என்று எப்போதும் இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. சாதியென்றால் குறைந்தபட்சம் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கவேண்டும். அப்போதுதான் கீழ்ச்சாதி, மேல்சாதி என படிநிலைப்படுத்த முடியும். சாதியம் கிடைமட்டத்தில் ஆனதல்ல. அது, செங்குத்து வரிசையிலானது. 

தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் சாதிகளின் எண்ணிக்கை நிலவரம்
பிற்படுத்தப்பட்டோர் (பி.சி) - 143,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) - 41,
சீர்மரபினர்(டி.என்.சி) - 68,
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் - 7
பட்டியல் சாதியினர் (எஸ்.சி) - 76,
பட்டியல் பழங்குடியினர் ( எஸ்.டி) - 36

இந்த 371 சாதிகள் மட்டுமல்லாது முன்னேறிய சாதிகள் என்கிற வகைமைக்குள் அடங்கினவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் சற்றேறக்குறைய 400 சாதிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பலபத்து உட்சாதிகளாகவும் பிளவுண்டிருக்கின்றன. இவற்றில் எந்தவொரு சாதியும் இன்னொரு சாதியை தனக்கு சமமாக ஏற்பதில்லை. இந்தப் போக்கு உட்சாதிகளுக்கு இடையிலும் வலுவாக இயங்குகிறது.  பட்டியல் சாதியினரும், பட்டியல் பழங்குடியினரும் சாதிய கட்டமைப்புக்குள் ஒருபோதும் இல்லாதவர்கள் என்ற போதிலும் தொடர்ந்து சாதியச்சமூகத்திற்குள் இருந்துவருவதால் அவர்களும் தம்மை சாதியாகவே குறுக்கிக்கொண்டுவிட்டனர்.

சாதியமானது, இங்கு மனிதர்களையும் அவர்களது வாழ்விடங்களையும் இயற்கை வளங்களையும் பொதுச்சொத்துகளையும் பழக்கவழக்கங்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் சகலவிதமான உரிமைகளையும் கடமைகளையும் பாரபட்சமாக  பிரித்துள்ளது. அன்றாட வாழ்வில் மனிதசுபாவத்துடன் ஒருவர் மேற்கொள்ளும்  அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிப்பதாகவும் கட்டுப்படுத்திச் செலுத்துவதாகவும் சாதியமே இருக்கிறது.

சாதி என்பது இன்னதுதானென்று திட்டவட்டமாக ஒரு பருப்பொருளைக் காட்டுவதுபோல காட்ட முடியாது. அது தனிமனித அளவில் ஓர் உணர்வுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதிக்குழுவின் அங்கத்தினர் என்ற முறையில் சாதியானது ஓர் உணர்வு என்பதற்கும் அப்பால் போய் ஒவ்வொரு தனிமனிதருக்குமான கடமைகளையும் உரிமைகளையும் திட்டவட்டமான பாரபட்சத்துடன்  வரையறுக்கிறது.   இந்த பாரபட்சம்தான் இங்கு ஒருவர் எந்த வர்க்கத்தில் இருக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. வர்க்கம் உள்ளிட்டவை மாறும் தன்மை கொண்ட அடையாளங்கள். மாறும் அடையாளங்களில் ஒருவரது நிலை எத்தகையதாக மாறினாலும் அவரது சமூக அந்தஸ்து மாறா அடையாளமான சாதியை வைத்தே  வழங்கப்படும். சாதியம் வகுத்தளித்த வர்க்கத்திலிருந்து ஒருவர் உயர்வதோ தாழ்வதோ அவரது சமூக அந்தஸ்தை பெரிதும் பாதிப்பதில்லை. அதாவது அவரது சாதி என்கிற கூட்டு அடையாளத்திற்குள்ள அந்தஸ்தையே அவர் தனிநபராக பகிர்ந்துகொள்ள வேண்டியவராகிறார். பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுவிடுகிற அடிநிலைச்சாதி தனிநபர்கள் மீது தீண்டாமையின் கடுமைதான் குறைகிறதேயன்றி அவரது சாதிக்குரிய சமூக அந்தஸ்து என்னவோ அதுவே அவருக்கு வழங்கப்படுவதை இதற்கு உதாரணமாக கூறலாம்.

ஒவ்வொரு சாதியினரும் தாங்கள் தனித்தவமானவர்கள் புதினதமானவர்கள் என்று நிறுவுவதற்காக தங்களது சாதியின் தோற்றம் பற்றிய அனேக புனைவுகளை இட்டுக்கட்டியுள்ளனர்.  இதன் மறுதலையாக இப்புனைவுகள் பிறசாதியினர் பற்றிய இழிவான பார்வையைக் கொண்டிருக்கின்றன. பிறசாதியின் ரத்தம் தன் சாதிக்குள் கலந்து தீட்டுப்பட்டுவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு சாதியுமே முனைப்புடன் இருக்கிறது. இதற்காக வகுக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுத்திட்டங்களை வாழ்நெறியாக வரித்துக்கொண்டு வாழும் அடிப்படை அலகாக இங்கு குடும்பம் என்கிற அமைப்பு இருக்கிறது. ஒரே சாதியைச் சார்ந்த ரத்த உறவுகளின் தொகுப்பாக குடும்பம் உள்ளது. இந்த குடும்பங்களின் தொகுப்பாக சாதி உள்ளது. 

தன் சாதிக்குள் பிறசாதி ரத்தம் கலப்பதை - அங்கித்தினர்களின் வாழ்க்கைத் துணையாக பிற சாதியினர் வருவதை தடுப்பதில் குடும்பமே முதன்மையான பாத்திரத்தை வகிக்கிறது.  இதன்பொருட்டு ஒவ்வொரு சாதியும் வகுத்துள்ள கட்டுப்பாடுகள் பலவும் பெண்களை ஒடுக்கும் தன்மையுடையவை. ஒடுக்குமுறை என்பதை வன்முறையாக மட்டும் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. உள்ளங்கையில் வைத்து அல்லது கண்ணின் கருமணி போல காக்கும் அன்பு பாசம் ஆகியவற்றாலான வளர்ப்பினூடாகவும் ஒடுக்குமுறை நிகழ்கிறது. கிழித்தக் கோட்டை தாண்டாத பிள்ளையாக வளர்ப்பதென்பது, சாதிக்கோட்டினை தாண்டாமல் சொந்த சாதிக்குள்ளேயே வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்க பயிற்றுவிப்பது என்பதுதான். சாதி என்பது ஒருவர் யாரை திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது செய்துகொள்ளக்கூடாது என்பதற்கான எல்லை என்று இதனாலேயே கூறப்படுகிறது. சாதியற்ற சமூகத்தை விரும்புகிற எவரொருவரும் இந்த எல்லையை உடைத்தாக வேண்டியுள்ளது.

அகில இந்திய அளவில் 5சதவீத திருமணங்கள் மட்டுமே சொந்த சாதிக்கு வெளியே நடக்கின்றன. சாதிகளுக்கிடையில் மணக்கலப்பு நடக்கும் மாநிலங்களில் தமிழகம் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆணோ பெண்ணோ யாரேனுமொருவர் தலித்தாக இருந்து மணக்கலப்பு நடப்பது இங்கு அரிதினும் அரிதானது. அப்படியே நடந்தாலும் அந்த திருமணங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றன. அதன்பொருட்டு தலித்துகள் கூட்டாக தண்டிக்கப்படுகின்றனர். அவர்களது சொத்துகள் சூறையாடப்படுகின்றன.  

சராசரியாக ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்கொடுமையை சாதியத்தின் பேரால் தலித்துகள் மீது நடத்தும் இந்தியர்களிலிருந்து தமிழர்கள் எவ்வகையிலும் வேறுபட்டவர்களல்லர். தமிழகம், புதுவை மட்டுமல்ல, புலம்பெயர்ந்து சென்ற நாடுகளிலும்கூட தமிழர்கள் சாதியத்தை வலுவாக கைக்கொண்டுள்ளனர். எனவே சாதியற்ற தமிழர் என்ற முழக்கத்தை எவ்வாறு மெய்ப்படுத்துவது என்று இம்மாநாடு விவாதிக்க வேண்டியுள்ளது.

சங்ககாலத்திலோ அல்லது சமீபகாலம் வரையிலோ தமிழர்களிடையே சாதியில்லை என்று நிறுவுவதன் மூலம் சமகாலத்தில் சாதியத்தை ஒழித்துவிட முடியுமா?

தொழில் அடிப்படையில் சாதி உருவானது என்றொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. எனில் தொழில்மயமாக்கல் முழுவீச்சில் நடக்கும் போது சாதியம் ஒழிந்துவிடும் என்று கூறுவது முரணில்லையா?

நிலப்பிரபுத்துவம் ஒழியும் போது சாதியம் ஒழிந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது. நிலப்பிரபுத்துவம் முற்றாக ஒழிக்கப்பட்ட நாடுகளுக்கு குடிபெயர்ந்து பல நூற்றாண்டைக் கடந்த இந்தியர்கள் / தமிழர்களிடையே சாதியம் இன்றும் நிலவுவது ஏன்?

சாதியம் தன்னை தக்கவைத்துக்கொள்வதற்காக அகமணமுறையை கைக்கொண்டுள்ளது. அகமணமுறை அந்தந்த சாதிக்குரியவர்களை மறுவுற்பத்தி செய்து கொடுக்கிறது. எனில், தமிழர்களை சாதியற்றவர்களாக ஆக்குவதற்குரிய அடிப்படை வேலையாக அகமணமுறையை ஒழித்துக்கட்டுவதற்கு நம்மிடம் உள்ள வேலைத்திட்டம் என்ன?

சாதியம் சூழ இருக்கும் தமிழர்களை மட்டும் தனியாக துண்டித்து எடுத்து சாதியற்றவர்களாக்குவதற்குரிய சாத்தியங்கள் என்னென்ன?

சாதியத்தின் உச்சியில் பார்ப்பனர்களை இருத்தி அவர்களைப் பேணுவற்காக சமூகத்தின் உழைப்பு ஆற்றல் வளங்கள் அனைத்தையும் திருப்பிவிடுவதுதான் பார்ப்பனீயம். இந்த நோக்கத்திற்காக தனிமனித வாழ்வையும் சமூகத்தையும் சமூகம் உருவாக்கிக்கொண்டுள்ள அரசு உள்ளிட்ட நிறுவனங்களையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற சட்டத்தொகுப்புதான் மநுஸ்மிருதி. மநுஸ்மிருதியின் அடிப்படையில் சமூகத்தை கட்டுப்படுத்தும் போக்கிற்கு எதிராக உருவான சமூகநீதிக்கான போராட்டம் ஒருகட்டத்தில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பார்ப்பனர்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. இந்தப் போராட்டம் பார்ப்பனரல்லாதாரின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசாங்கங்கள் உருவாவதற்கும் இட்டுச்சென்றது. ஆயினும் சமூக அமைப்பு முழுவதிலும், தனிமனித அளவிலும் புரையோடிய பார்ப்பனீயச் செல்வாக்கு அப்படியே நீடித்தது. பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை கேள்விக்குட்படுத்தாத, அவர்களது வாழ்முறையே மேலானது என்கிற, அவர்களைப் போல வாழ முயற்சிக்கிற பண்பாட்டு அடிமைத்தனத்தைப் பரப்பும் முயற்சி தடையின்றி நடந்தது. இந்த பண்பாட்டு அடிமைத்தனத்தின்  மீதுதான் பார்ப்பனீயம் இந்துத்துவம் என்னும்   புதிய பெயரில் கட்டமைக்கப்படுகிறது.

பரந்த இந்த நாடு வெவ்வேறு பண்பாட்டு தனித்துவங்களைக் கொண்ட சமூகங்களைக் கொண்டது என்கிற பன்முகத்தன்மையை ஏற்கமறுக்கும் இந்துத்துவம் ஒற்றைத்துவத்தை முன்வைக்கிறது. அந்த ஒற்றைத்துவம் பார்ப்பனீய கண்ணோட்டத்திலானது. அது பார்ப்பனர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் மநுஸ்மிருதிக்கு தனது விசுவாசத்தைக் காட்டுவதாக இருக்கிறது. அதனாலேயே இந்துத்துவம் அரசியல் சட்டம் முன்வைக்கும் 1=1 என்கிற சமத்துவத்தை ஏற்றுக்கொள்வதில்லை. சமஸ்கிருத திணிப்பு, மாட்டுக்கறிக்குத் தடை, வேதவழிப்பட்ட சடங்குகளையும் யாகங்களையும் மீண்டும் நிகழ்த்துவது, பார்ப்பனர்களின் உணவை, வழிபாட்டுமுறையை, தெய்வத்தை, கலையை இந்திய அடையாளமாக முன்னிறுத்துவது, ஆரியர்கள் இந்தியாவின் பூர்வக்குடிகளென வரலாற்றைத் திரிப்பது, பாடப்புத்தகங்களை தமது நோக்கங்களுக்கேற்ப எழுதுவது, இந்துவல்லாத பிற மதத்தவரை அன்னியராகச் சித்தரிப்பது, பெண்களை ஆணுக்கு அடங்கியவர்களாக காட்டுவது, சாதியம், அகமண முறை தேவை என நியாயப்படுத்துவது என இந்துத்துவம் பார்ப்பனீயத்தை முன்னிறுத்துகிறது. பார்ப்பனீய மதிப்பீடுகளை ஏற்க மறுப்பவர்கள் மீது சட்டப்பூர்வமாகவும் சட்டப்பூர்வமற்ற முறையிலும் தாக்குதல் தொடுக்க இந்துத்துவம் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி களமிறக்கியுள்ளது. சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதாக வெளித்தோற்றத்தைக் காட்டிக்கொண்டு தனது பயங்கரவாதச் செயல்களை அது நடத்திவருகிறது.

வரும் 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஒருவேளை பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டாலும் கூட இப்போதுவரை காவி பயங்கரவாதிகளாகிய இந்துத்வாவினர் சமூகத்தில் பரப்பியுள்ள நச்சை செயலிழக்கச் செய்ய நீண்டகாலம் பிடிக்கும். அந்தளவுக்கு வெகுமக்களின் யோசிப்புமுறையிலும் செயல்பாட்டிலும் குறுக்கிட்டு வருகிறார்கள். குடிமக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக தலையிடுவதாகவும் அவர்களது செயல்பாடுகளை கண்காணிப்பதாகவும் அரசை மாற்றுவதில் காவிகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்று நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். தங்களுக்கு கட்டுப்பட்டதாக இருந்து நாட்டை நிர்வகிப்பதாக அல்லாமல் தங்களை ஒடுக்குவதாக அரசு இருக்கிறது என்பதை மக்கள் பீதியுடன் உணரும் காலமாக இது இருக்கிறது. குடிமக்களின் உயிர்வாழும் உரிமை உள்ளிட்ட அனைத்தும் அரசின் கருணையின்பாற்பட்டது என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், ஊடகங்கள், வங்கிகள் என்று அனைத்து நிறுவனங்களையும் அதனதன் சுயேச்சைத்தன்மையை இழக்கச்செய்து ஆளுங்கட்சி தனது நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுள்ளது.

அரசின் அன்றாட தாக்குதலிலிருந்து காப்பாற்றிக்கொள்வது பற்றி மக்களின் கவனம் முழுவதையும் திசைதிருப்பியுள்ள காவிகள், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு திருப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்களது அமைப்புகளை நடத்துவதற்கு தேவையான நிதியாதாரத்தையும் ஊடகபலத்தையும் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்றுவருகிற காவிகள் அதற்கு பிரதியுபகாரமாக இதைச் செய்கிறார்கள் என்று இதை குறுக்கிவிடக்கூடாது. கார்ப்பரேட்டுகளும் காவிகளும் இனம் பிரித்துக் காட்டமுடியாதவாறு ஊடிக்கலந்திருக்கிறார்கள்.

சாதியடுக்கின் உச்சத்திலுள்ள பார்ப்பனர் உள்ளிட்ட சிறுபிரிவினர் தான் இங்கு பெரும் நிலவுடைமையாளர்களாக இருக்கின்றனர். அவர்களிலிருந்து ஒரு பகுதியினர்தான் நவீன முதலாளிகளாகவும் உருவெடுத்தனர். அரசு இயந்திரத்தில் கொள்கை முடிவெடுப்பவர்களாகவும் அவர்களே இருந்தனர், இருக்கின்றனர். இந்த பெருநிலப்பரப்பை சந்தையாக மாற்றி சுரண்டுவதற்கு அவர்களுக்கு ஒருகாலத்தில் மதச்சார்பற்ற இந்தியாவும் ஜனநாயகத்தோற்றம் கொண்ட அரசும் தேவைப்பட்டது. இந்த நாட்டின் இயற்கை வளங்களையும் உழைப்புச்சக்தியையும் பொதுச்சொத்துக்களையும் கொள்ளையடிப்பதற்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டுவிடாதவாறு பிளவுபடுத்துவதற்கும் மீறி போராடினால் ஒடுக்கவும் ஒரு பிரிவினைவாத சர்வாதிகார அரசு அவர்களுக்கு இப்போதைய தேவையாய் இருக்கிறது.

இந்த நிலையில் காவியற்ற தமிழகம் என்கிற முழக்கத்தின் நடைமுறைச் சாத்தியங்களை ஒருபடித்தான செய்முறை குறிப்பு போல என்னால் வழங்கிவிட முடியவில்லை. ஆனால் அந்தந்த வட்டாரம் சார்ந்து காவிகள் நடத்திவரும் அமைப்புகள், அந்த அமைப்புகளின் பயங்கரவாத நடவடிக்கைகள், அவை மக்களிடையே பரப்பிவரும் நச்சுக்கருத்துகள்,  கார்ப்பரேட் செயல்பாடுகள் பற்றியும் அதற்கெதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய மக்கள் இயக்கங்கள் பற்றியும் ஒரு விவாதத்தை தீவிரமாக நடத்திட இந்த முழக்கம் உதவும் என்று நம்புகிறேன்.

மாநாடு சிறக்க வாழ்த்துகள்.

தோழமையுடன்
- ஆதவன் தீட்சண்யா
25.02.2018




வியாழன், மே 18

சுய விலக்கம் - ஆதவன் தீட்சண்யா

நகரத்தின் மோஸ்தருக்குள் முற்றாய் பொருந்திவிட்ட என்னை அத்தனை சுளுவாய் அடையாளம் கண்டுவிடமுடியாது எனக்கே தெரியுமன்றாலும் அறுந்த செருப்பை தெருவோர காப்ளரிடம் தான் தைத்துக்கொள்கிறேன் வீட்டுக்கே வந்து டோபி துணியெடுத்துப் போகிறான் முன்னொரு காலத்து என் அம்மா போல நீயமரும் இருக்கையிலேயே எனக்கும் சவரம் சலூனில் பரம்பரையின் அழுக்கு அண்டிவிடக்கூடாதென்று நகங்களைக்கூட நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன் அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன் புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான் பீப் என்றால் என்னவென்றே தெரியாது என் பிள்ளைகளுக்கு ரிசர்வேசனுக்கெதிரான உங்களின் உரையாடலின் போதும் "நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்..." என்கிற போதும் யாரையோ வைவதாய் பாவனை கொள்கிறேன் பதைக்கும் மனமடக்கி "உங்கம்மாளப் போட்டு பறையன் சக்கிலிப் போக..." என்ற வசவுகளின் போது அதுக்கும் கூட உங்களுக்கு நாங்க தான் வேணுமா என்றும் சாவு வீடுகளில் வதக்வதக்கென்று யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால் எங்கப்பனாட்டம் உன்னால அடிச்சி ஆடமுடியுமா என்றும் கேட்கத்துள்ளும் நாக்கை எத்தனைசிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா இருப்பினும், தடயங்களை அழிக்காமல் உள்நுழைந்தத் திருடனைப்போல் என்றாவதொரு நாள் எப்படியேனும் பிடிபட்டு அவமானப்படும் அச்சத்தில் உங்களோடு ஒட்டாமல் ஓட்டுக்குள் ஒடுங்கும் என் புத்தியிலிருந்து நீங்கள் என்னை கண்டுபிடிக்கக்கூடும்...

வெள்ளி, ஜூலை 15

அங்கீகாரம்... தீட்டு... பறையர்... -ஆதவன் தீட்சண்யா

2013 நவம்பர் 'தோர்ச்ச' மாத இதழில் வெளி்யான மலையாள எழுத்தாளர் தோமஸ் ஜோசப்புடைய நேர்காணலின் தமிழாக்கம் நியூ செஞ்சுரியின் 'உங்கள் நூலகம்' ஜூலை 2016 இதழில் வெளியாகியுள்ளது. கலை இலக்கியம் தொடர்பான முக்கிய உரையாடல். ஆனால் அது இப்படி முடிகிறது: 

" .... இங்கே இலக்கியத்தின் அதிகாரிகள், சற்று விலகி நின்று எழுதுகிறவர்களின் படைப்புகளை அபத்த இலக்கியம் என்று தீட்டு சொல்லி விலக்கி வைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கவிதையோடு ஒப்பிடும்போது கதை இலக்கியத்தில் அதிகாரப்பூர்வமான ஒரு ஒளிவட்டம் இன்று மிக முக்கியம். தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் வேலை செய்யும் எழுத்தாளர்கள் மீது ஊடகங்களின் பாசம் முடிந்தவரை பொழியும்போது, கதையை வழக்கமான பாணிகளிலிருந்து விடுவிக்கப் பாடுபடும் எழுத்தாளன் இலக்கியத்தின் பூந்தோட்டத்துக்கு வெளியே அகிறான். அவனுக்கு அங்கீகாரங்களின் இனிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் பிறகு கதையின் எதிர்காலம் எங்கே சென்று நிற்கும் என்று சொல்லமுடியாத நிலை வருகிறது. ஒருக்கால், இன்று கொண்டாடப்படும் கதாசிரியனை காலம் பின் தள்ளுமென்றும், இன்றைய கதை இலக்கியத்தின் பறையர்கள் நாளையக் கதையின் ராஜாக்களாக மாறுவார்கள் என்றும் நம்பலாம்." 

அங்கீகாரமின்றி விலக்கிவைக்கப்படுகிறவர்களைச் சுட்ட " பறையர்" என்கிற சொல்தான் ஒரு எழுத்தாளரிடமும் இருக்கிறதா? மொழிபெயர்த்தவருக்கும் இதழாசிரியருக்கும் கூட இது உறுத்தவில்லையா? ஒருவேளை நான் தான் சொற்களைப் பிடித்து தொங்குகிறேனா...

ஓர் எழுத்தாளரின் சொற்கிடங்கு எவ்வளவு அடர்ந்து செறிந்திருந்தாலும் அவரது கருத்தியலே அதிலிருந்து பொருத்தமான சொல்லை தெரிவு செய்கிறது போலும்.

சனி, டிசம்பர் 24

சிட்டிசன்களும் நெட்டிசன்களும் -ஆதவன் தீட்சண்யா

கடவுளின் கண்களென அந்தரத்தில் சுழலும்
செயற்கைக்கோளுக்குக் கீழே
நிற குண மாறுபாடுகளற்ற
இரு சரிநிகர் புள்ளிகள் நாம்

நிலவொளியின் குளுமை கூட்டி
நேற்றிரவு அருந்திய பானத்தின் வாடையையும்
துல்லியமாய் படமெடுக்கும் அதன்கீழ்
எதுவொன்றையும் மறைக்க முடியாதவர்களாயுமாகி
பதற்றமாய் அலுவலகம் கிளம்பும் நம்மைப்
பின்தொடரும் கடவுளுக்கு
தயாரித்தளிக்கிறோம் புதிய கண்களை

யாரோ புதைத்த கண்ணிவெடிகள்
செவ்வாய் கிரகத்துப் பனிப்பொழிவு
மகாசமுத்திரங்களில் மையங்கொண்டெழும் புயற்சின்னங்கள்
ஜீவநதிகளில் உயிர்குடிக்கும் நீர்ச்சுழிகளென
கடவுளின் புதிய கண்களுக்கு எதுவும் தப்பாதபோது
எம்மாத்திரம் நாமென்று
கணினியின் எலிப்பொறி மீதேறி
உள்ளங்கைக்குள் கிராமமாய் சுருங்கிச் சுழலும்
ஹைடெக் உலகின் பிரஜைகளாகிறோம்

என்னம்மாவின் பாதத்து பித்தவெடிபோல
பூமியின்மீது விரிசலோடிக்கிடக்கும்
தேசங்களின் எல்லைக்கோடுகளை அழித்து
கிராபிக்ஸ் நுட்பங்களால்
வலைதளங்களில் உலவவிடுகிறோம்
புதிய வரைபடங்களை

பணிமுடிந்த பின்னிரவில்
கழுத்துப்பட்டையை நெகிழ்த்தி தளர்த்தியபடி
உனக்கும் எனக்கும்
கோக்கும் பீட்ஸாவும் தட்டுப்பாடின்றி கிடைக்கும் நிம்மதியில்
கண்முடி மெல்லச்சாவதை
இமெயில் எஸ்எம்எஸ் வழியாக
யாவருக்கும் அறிவிக்கிறோம்

எல்லாக்குற்றங்களையும் கண்காணிக்கும்
கடவுளின் கண் பார்த்திருக்க
உன்னையும் என்னையும் புதைக்கின்றனர்
அவரவர் சாதி சுடுகாட்டில்.

திங்கள், நவம்பர் 28

ரியல் - எஸ்டேட் பிரச்னை - ஆதவன் தீட்சண்யா

பங்குனி சித்திரை
புளியடிக்கும் காலம்
சல்லிசு விலையில்
வருசத்துக்கே வாங்கிவிடுவார் அப்பா

அறுவடைக்காலத்தில் மலிவாய்
அவரை துவரை நெல் பிடிப்பார்
ஏழெட்டு மூட்டை

சேலம் பாசஞ்சர் பயணமென்றால்
கூடைக்காரியிடம்
நாலுதட்டம் காய் வாங்காமல்
வீடு திரும்பமாட்டார்
மார்க்கெட்டில்
ஒரு நாளுக்காகும் காசில்
ஒரு வாரத்துக்கே கிடைப்பதாய் ஒப்பீடு தவறாது

ஒரு மைல் நடந்தால்
ஒரு ரூபாய் மலிவென்றால்
அப்படியொரு பரிவர்த்தனைக்கே
பழகியிருந்த எங்கள் அப்பா
காந்திபுரம்
அண்ணாநகர்
காமராசர் காலனியைப் போலவே
ஊரிலிருந்து ஒன்பது காதத் தொலைவில்
உருவாகும் புதுநகரில்
ஒரு சென்ட் ஒரு லட்சமென வாங்கினார்

பஸ்ஸ்டாண்டுக்கு கூப்பிடு தூரத்தில்
அம்பேத்கர் காலனியில்
அடிமாட்டு விலைக்கு மலிந்திருக்கும் மனை வாங்க
நாதியில்லை யாருக்கும்

சாதியிருக்கிறது
மண்ணுக்கும்.




http://india.poetryinternational.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=21009













ஞாயிறு, அக்டோபர் 23

விஷத்தை முறிக்கும் வைத்தியத்தை பாம்பிடமே கேட்டறிய முடியாது - ஆதவன் தீட்சண்யா

 1.
“என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று - பிராமணியம். இரண்டு- முதலாளித்துவம்”  என்று 1938 பிப்ரவரி 12,13 தேதிகளில் மன்மத் நகரில் நடைபெற்ற கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வேயில் பணிபுரிந்த ஒடுக்கப்பட்ட தொழிலாளர் மாநாட்டின் தலைமையுரையில் அம்பேத்கர் விடுத்த இந்த அறைகூவல் இன்றளவும் மிகுந்த பொருத்தப்பாட்டுடன் நிலைத்திருக்கிறது (அ.தொ.நூ.37 பக்- 227). இதன்பொருள் தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணி திரட்டுவதில் அக்கறையுள்ளவர்கள் அம்பேத்கரின் இந்த அறைகூவலுக்கு இன்னும் செவிசாய்க்கவில்லை என்பதே.

அம்பேத்கர் முதன்மைப்படுத்திக் காட்டும் இரு பகைமைச் சக்திகளும் வெவ்வேறானவை என்று புரிந்துகொள்ளத் தேவையில்லை. பிராமணியமும் முதலாளித்துவமும் ஒன்றை யொன்று தாங்கி வளர்க்கும் உரமாகவும் களையாகவும் இருக்கின்றன என்பதை அம்பேத்கர் அனேக சந்தர்ப்பங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறார். ஆகக்கொடிய சுரண்டல் சக்தியான முதலாளித்துவத்திற்கு இணையாக அவரால் முன்னிலைப்படுத்தப்படும் பிராமணியம் என்பதுதான் என்ன?

இன்னும் யானை தன்னியல்பில்தான் இருக்கிறது, வியாக்கியானம் செய்கிறவர்கள் தான் குறைந்தபாடில்லை என்பதைப்போல பிராமணியம் என்றால் என்னவென்று அனேக விளக்கங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இவ்வகையான வியாக்கியானங்களில் பெரும்பாலானவை ‘பிராமணர்களையும் பிராமணியத்தையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது’ என்ற அறிவுரையுடனோ, ‘பிராமணர்களை எதிர்க்கவில்லை, பிராமணியத்தைத்தான் எதிர்க்கிறோம்’ என்ற வாக்குமூலத்துடனோதான் முற்றுப் பெறுகின்றன. பிராமணர்களுக்கு வெளியே/ பிராமணர்களின் முன்னெடுப்பின்றி பிராமணியம் என்பது தன்னந்தனி சுயம்புவாக உருவாகிவிட்டதா என்கிற அடிப்படையானக் கேள்வியை எழுப்பிக் கொள்வதிலுள்ள மனத்தடைகளின் வெளிப்பாடாகவே இவற்றைக் காண வேண்டியுள்ளது. ஆனால் பிராமணர்களுக்கும் பிராமணியத்திற்கும் யாதொரு தொடர்புமில்லையெனும் பட்சத்தில் அதை செட்டியாரியம் அல்லது முதலியாரியம் என்றல்லாமல் பிராமணியம் என்றே சுட்டுவதன் காரணம் தான் என்னவென்கிற ஒரு மொக்கையான கேள்வியையாவது இவ்விடத்தில் எழுப்பிக்கொண்டால் போதுமானது.

விஷத்தை முறிக்கும் வைத்தியத்தை பாம்பிடமே கேட்டறிய முடியாது என்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில் பிராமணியம் என்பதற்கு சோ ராமசாமி போன்றோர் சொல்லிக் கொண்டிருக்கும் விளக்கங்களைப் புறந்தள்ளி  வரலாற்றுக்குள் புக வேண்டியிருக்கிறது. வரலாற்றின் பக்கங்களிலிருந்து அவரவர் தேவைக்கேற்ற வரிகளை மேற்கோள் காட்டி ஆய்வாளர் களாகிவிடும் தந்திரங்கள் மலிந்து கிடக்கும் இந்நாளில் வரலாற்றை முறையாகப் படிக்கும் ஒரு மாணவனின் ஆர்வத்தோடும் கற்பிக்கும் ஆசிரியரது மேதைமையோடும் அங்கே அம்பேத்கர் நமக்காக காத்திருக்கிறார்.

2.
உலக வரலாறுகளை கற்றறிந்த அனுபவத்திலிருந்து, சமூக வாழ்வில் அதன் உறுப்பினர்களிடையே நிலவும் உறவானது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்று அம்பேத்கர் முன்மொழிந்தார். சமூகத்தின் எல்லாத்தளங்களிலும் ஒதுக்கியும் ஒடுக்கியும் வைக்கப்பட்டிருந்த தீண்டத்தகாத மக்களில் ஒருவராகிய அவரிடமிருந்து இவற்றுக்கும் குறைவானதொரு முன்மொழிதலை எதிர்பார்ப்பது அநீதியானதாகும். வேறெவரைக் காட்டிலும் அவரையொத்த தீண்டத்தகாத மக்களுக்கே இம்மூன்று கோட்பாடுகளும் உடனடித் தேவை என்றே பலரும்  புரிந்துகொண்டிருந்தச் சூழலில் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்குமே இவை தேவை என்று அம்பேத்கரால் பரிந்துரைக்கப்பட்டன.

சுதந்திரத்தை சிவில் உரிமை, அரசியல் உரிமை என்று  இரண்டாக வகைப்படுத்தும் அம்பேத்கர்  1) சுதந்திரமாக இயங்கும் உரிமை 2) பேச்சுரிமை  - கருத்துச்சுதந்திரம் 3) செயலுரிமை ஆகியவற்றை சிவில் உரிமையென்றும், சட்டமியற்றுவதில் பங்கு கொள்வதற்கும் அரசாங்கத்தை மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் தனிமனிதருக்குள்ள உரிமையை அரசியல் சுதந்திரம் என்றும் விளக்கிச் செல்கிறார் (அ.தொ.6,பக்-135). ‘துரதிருஷ்டவசமாகச் சமத்துவம் என்னும் சொல்லுக்குப் பதில் வேறொரு சொல் இல்லை. சமத்துவம் என்றால் அளவு, தொகை, எண், தரம், மதிப்பு, தன்மையில் ஒன்றுபோலிருத்தல் என்றாகிறது...’ எனத் தொடங்கும் பேராசிரியர் பியர்டின் கருத்தை விரிவாக மேற்கோளிடுகிற அம்பேத்கர் (அ.தொ.6, பக்-132), ‘ குணாம்சத்திலும் இயற்கைத்திறனிலும் எவ்வளவு வேறுபட்டாலும் மானிடர் என்ற முறையில் அனைத்து மனிதர்களும் மரியாதைக்குரியவர்கள் (அ.தொ.6, பக்-145) என்று ஒப்புக் கொள்வதையே சமத்துவம் என்று தன் சொந்தமொழியில் வரையறுக்கிறார். அதேபோன்று ‘ஒரு தனிமனிதன் மற்றவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தி உடன் வாழ் மனிதருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் மனநிலையே சகோதரத்துவம்’ (அ.தொ.6,பக்-134) என்ற தெளிவையும் தந்திருக்கிறார்.

ஆனால் இந்தியச்சமூகம் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற கோட்பாடுகளுக்கு எதிர்த்திசையில் வெகுதூரம் சென்றுவிட்டதாய் இருந்தது. இந்தக் கோட்பாடுகளை உள் வாங்கி வளர்வதற்கு இசைவான நல்லம்சங்கள் எல்லாவற்றையும் அது எப்போதோ தலை முழுகிவிட்டிருந்தது. ஆகவே இனி இந்தச் சமூகத்தை ஒன்றுமே செய்துவிட முடியாது, அது அதன்போக்கில் போய்த்தொலையட்டும் என்று விட்டுவிட அம்பேத்கர் தயாரில்லை. அதன் கெடும்போக்கிற்கு எதிரே மறித்து நின்று அதை மாற்றியமைப்பதென்று துணிந்த அறிவுக்கும் செயலுக்காகவும் தான் அவர் புரட்சியாளர் என்று மதிக்கப் பெறுகிறார். அதனாலேயே அவர் இந்தியச் சமூகத்தில் தொடர்ந்து அவமதிப்புக்கும் ஆளாகி வருகிறார்

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றை ஏற்கவியலாத இந்தியச்சமூகம் எதன்மீது கட்டப்பட்டிருக்கிறது என்று ஆயப்புகுந்த அம்பேத்கர் அது சமத்துவமின்மை என்பதன் மீதே கட்டப்பட்டிருக்கிறது என்று அறிவித்தார். அது ஒருபோதும்  தன் சமூகத்தினர் அனைவரையும் சமமாக பாவிப்பதில்லை. எல்லா நிலைகளிலும் ஏற்றத்தாழ்வு, பாரபட்சம், புறக்கணிப்பு, ஒடுக்குமுறை ஆகிய பாகுபாடுகளையே கடைபிடிப்பதாய் இருக்கிறது. இந்த சமத்துவமின்மை ஒவ்வொரு இந்தியரையும் வழிநடத்துவதோடு பின்தொடர்ந்து கண்காணிப்பதாயும் இருக்கிறதென்றும் இந்த கருத்தாக்கத்தின் மூலபலம் பிராமணியத்துக்குள் தங்கியிருக்கிறது என்றும் அம்பலப்படுத்தினார். பிராமணியம் என்பதை புனிதப்படுத்தி அதுகாறும் சொல்லப் பட்டுவந்த விளக்கங்களைப் புறந்தள்ளி “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயிர்ப்புகளின் எதிர்மறைதான் பிராமணியம்” (அ.தொ.நூ.37, பக்-228 ) என்ற முடிவுக்கு அவரை இட்டுச் சென்ற காரணங்கள் எதுவும் இன்றளவும் மாறிவிடவில்லை என்பதாலேயே அவர் கூற்று மிகுந்த பொருத்தப்பாடு கொண்டதாகிறது.

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய உயிர்ப்புகளின் எதிர்மறையாக பிராமணியம் திடுமென ஒருநாளில் உருவாகிவிடவில்லை. அது ஆரியர்கள் இந்தியப் பரப்புக்குள் வந்தேறியக் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. ஆரியர் ஆரியரல்லாதார் என்ற இந்த முதல்நிலைப்பாகுபாடு இறுக்கமானதாய் இருக்கவில்லை. ஆரியர் என்பார் முற்றுமுழுக்க ஒரே இனத்தவர் அல்ல. ஆரியப் பண்பாட்டையும் வேதத்தின் முதன்மையையும் ஏற்றுக் கொள்கிறவர்களை விராத்திய ஸ்தோமா என்ற சடங்கின் மூலம் ஆரியராக்கி தம்முடன் இணைத்துக்கொண்டுள்ளனர். பிறகு வேதத்தின் முதன்மையை ஏற்றுக்கொண்டவர்களை நான்கு வர்ணங்களாகப் பிரித்தார்கள்.  ஏற்க மறுத்தவர்களை அவர்ணர்கள் என்று ஊருக்கு வெளியே ஒதுக்கிவைத்தார்கள். ஊர், சேரி என்ற வாழிடப் பாகுபாட்டின் தொடக்கம் அங்கே இருக்கிறது.

வேட்டையாடியும் மேய்ச்சல் நிலம் தேடியும் நாடோடிகளாக வந்தேறிய ஆரியர்கள் ஓரிடம் தங்கி நிலைபெற்றச் சமூகமாக வாழத்தொடங்கியபோது சமூகத்தின் வளர்ச்சிநிலைக்கேற்ற ஒரு வேலைப்பிரிவினையை செய்ய வேண்டியிருந்ததாகவும், அதனாலேயே புரோகிதத் தொழிலுக்கு பிராமணர், போர்த் தொழிலுக்கு  சத்திரியர், வேளாண்மைக்கும் வியாபாரத்திற்கும் வைசியர், இந்த மூன்று வருணத்தாருக்கும் சேவை செய்ய சூத்திரர் என்று பிரித்ததாகவும் வர்ணப்பாகுபாட்டை நியாயப்படுத்தும் பார்வை இங்கே பிரபலமானதுதான். வெறும் வேலைப்பிரிவினையாய் இருந்திருக்குமேயானால் நான்கு வருணங்களும் கிடைமட்டத்தில் சமமாக அருகருகாக அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும், ஆனால் அவ்வாறின்றி நெட்டுகுத்தாக ஒன்றின்கீழ் ஒன்றாக அடுக்கிய தன் மூலம் வர்ணப்பாகுபாடானது முதலில் தொழிலாளர்களைப் பிரித்துவிட்டு அதன்பிறகே தொழில்களைப் பிரித்தது என்பதுதான் அம்பேத்கரியப் பார்வை. எனவேதான் இங்கு தொழில்களை மாற்றிக்கொண்டாலும் வருணத்தின்வழியான சாதியை மாற்றிக்கொள்ள முடியாதநிலை நீடிக்கிறது. இந்த நான்கு வர்ணத்தவரில் ஒவ்வொரு தனிநபரும் கடைபிடிக்க வேண்டிய நான்கு ஆசிரமதருமங்களும் ( பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்)  வகுத்தளிக்கப் பட்டன. வருணவிதிகளையும் ஆசிரமவிதிகளையும் ஒழுகி வாழ்வது கட்டாயமாக்கப்பட்டது. மீறுவோரைத் தண்டித்து  வருணாசிரம தருமத்தைக் காப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பானது.

சப்தரிஷி என்ற குழு பிராமணர்களையும் மநு என்ற அதிகாரியின் தலைமையிலான மன்வந்திரக்குழு சத்திரியர்களையும் வைசியர்களையும் தேர்வு செய்தது போக எஞ்சியவர்கள் சூத்திரர்களாக்கப்பட்டனர். இதன்படி ஒரு குடும்பத்திற்குள்ளேயேகூட நான்கு வர்ணத்தவரும் இருக்கும் நிலை உருவானது. இந்த வர்ணப்பாகுபாடு நிரந்தரமானதாக இருந்திருக்கவில்லை. நான்காண்டுகளுக்கு ஒருமுறை ( ஒரு யுகம் ) மாறக்கூடிய நெகிழ்ச்சியுடையதாயிருந்தது. அடுத்தடுத்து வந்த தேர்வுகளில் ஒரு வர்ணத்தவர் வேறொரு வர்ணத்தவராகும் வாய்ப்பிருந்தது. (அ.தொ.நூ.7 பக்- 188 &189 ). வர்ண அடுக்கில் மேல்நோக்கு வரிசையில் செல்லச்செல்ல உரிமைகளும் சலுகைகளும் கிடைத்தன. கீழ்முகச்சரிவில் கடமைகள் அதிகரித்தன. எனவே கடமைகளின் அழுத்தத்தையும் பளுவையும் தாங்கமுடியாத கீழ் வர்ணத்தவர் மேல்நிலையாக்கம் செய்துகொள்ளவும், உரிமைகளிலும் சலுகைகளிலும் திளைத்த மேல்வர்ணத்தவர் தங்களது நிலையை தக்கவைத்துக் கொள்வதிலும் இடையறாத முனைப்பு கொண்டிருந்தனர். ( இந்தப் போக்கு இன்றுவரை நீடிக்கிறது).

இந்தப்பிரிப்பு முறைக்கு பதிலாக உபநயன முறை வந்தபோது, குழந்தைகள் குருகுலத்திற்குச் சென்று  12 ஆண்டுகாலம் கல்வி பெற்றனர். முடிவில் அவரவர் தகுதி திறமை அடிப்படையில் குருவானவர் (ஆசாரியார்- ஆசாரங்களைக் கற்றறிந்தவர்) பட்டமளிப்பு விழா போல உபநயனச் சடங்கு நடத்தி வர்ணங்களைப் பிரித்து அந்தந்த வர்ணத்துக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களைச் செய்யுமாறு பணித்து அனுப்பி வைத்தார். இந்த முறையில் ஒருவனது வர்ணம் அவனது வாழ்நாள் முழுக்க மாறாதிருந்தது.  எனவே தகுதி திறமையின் அடிப்படையில் தமக்கும் கீழான வர்ணத்திற்குள் தமது பிள்ளைகள் மாட்டிக்கொள்ளக்கூடாது  என்ற ரத்தப்பாசத்தால் உந்தப்பட்ட பிராமணர்கள் இந்தமுறையை மாற்றியமைத்தனர். அந்த மாற்றம் சுமதி பார்கவா என்ற மநு எழுதிய மநுஸ்மிருதியால் சட்ட அந்தஸ்தும் பெற்றது. அதாவது வர்ணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை குருவிடமிருந்து பறித்து தந்தையிடம் ஒப்படைத்தார் மநு. இதன்படி ஒருவரது வர்ணம் பரம்பரைக்கும் தொடர்வதாக மாறியது. ஒரு பிராமணர் எவ்வளவு தகுதியும் திறமையும் குறைவான போதும் அவர் சமூகத்தின் உயர் அந்தஸ்தில் இருத்தப்பட்டார். இந்த உபநயனம்தான் இன்றளவும் பூணூல் மாற்றும் சடங்காக   நடத்தப்படுகிறது.

இப்போது குடும்பம் என்பது ஒரே வர்ணத்தவரை மட்டுமே கொண்டதாயிருந்தது. வர்ணத் தூய்மை வலியுறுத்தப்பட்டது. கலந்துண்பது ஆசாரக்கேடாக அறிவிக்கப்பட்டது. அதுவரை வர்ணங்களுக்கிடையே இருந்த கலப்புமணம் தடைசெய்யப்பட்டது. ‘அகமண வழக்கம் பிராமணர்களிடம் பிறந்தது. பின்னர் ஏனைய பிராமணர் அல்லாத உட்பிரிவினரும் அல்லது வர்க்கத்தினரும் முழுவிருப்பத்தோடு தொடங்கியதால் அவர்களும் அகமண வழக்கத்தினராயினர். இந்த வகை பிறரைப் பார்த்து அவர்களைப்போல வாழும் தொற்றுநோய் பழக்கம் அனைத்து உட்பிரிவினரையும் வர்க்கத்தாரையும் பிடித்துக்கொண்டதால் கலந்து பழகி வாழ்ந்தவர்கள் பாகுபாடுகளை வளர்த்துக்கொண்டு வாழ்ந்து தனித்தனி சாதிகளாயினர்.’ என்ற அம்பேத்கரின் கூற்றிலிருந்து (அ.தொ.நூ1,பக்-27) சாதியின் தோற்றத்திற்கு பிராமணர்களே வழிவகுத்ததை அறிய முடியும். ‘அகமணமுறையை அதாவது ஒரேசாதிக்குள் மணவுறவுகளை வைத்துக்கொள்வது சாதியைப் படைப்பதற்கு இணையானது’ (அ.தொ.நூ1,பக்-12) என்று அவர் மேலும் சொல்லிச்சென்ற விளக்கத்தின்படி பார்த்தால் சாதியுணர்வைக் கடந்துவிட்டதாக நம்புகிற பலரும்கூட சொந்த சாதிக்குள்ளேயே மணவுறவை உழப்பிக்கொள்வதன் மூலம்  பிராமணக் கருத்தியலைப் பற்றிக்கொண்டு தத்தமது சாதியை மறுவுற்பத்தி செய்து வலுப்படுத்துகிறவர்களாகவே இருக்கின்றனர் என்கிற உண்மை புலப்படும்.

வர்ணத்திலிருந்தது போலவே சாதியமைப்பிலும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் பிராமணர்களுக்கே முதலிடத்தைத் தந்தது மநுஸ்மிருதி. பிராமணர்கள் புனிதம்/ தீட்டு அடிப்படையில் தங்களை ஒரு மூடுண்ட சமூகமாக மாற்றிக்கொண்டதன் மூலம் அவர்கள் பிராமணரல்லாதார் என்ற பிரிவையும் உருவாக்கிவிட்டனர். பிராமணரல்லாதாரின் சுதந்திரமும் உரிமைகளும் பிராமணர்களுக்கு கீழ்ப்பட்டதாயிருந்தது. எனினும் அதை எதிர்த்து அணிதிரள முடியாதபடி அவர்கள் ஏராளமான சாதிகளாகவும் சாதிகளுக்குள் பல உட்சாதிகளாகவும் பிளவுண்டு ஒவ்வொரு உட்சாதியும் பிராமணர்களைப் போலவே மூடுண்ட குழுக்களாகிப் போயினர்.  சமூகத்தின் உச்சியில் வைத்துக் கொண்டாடப்பட்ட பிராமணர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களைப் போலவே அவர்களுக்கு அடுத்தடுத்த நிலையிலிருந்த சாதிகள் பிறசாதிகளை தமக்கு சமதையாக ஏற்க மறுத்தன. நீர், நிலம், காற்று என்று எதையும் தன்னோடு பொதுவில் பகிர்ந்து கொள்ளும் சமதையான தகுதி இன்னொரு சாதிக்கு இல்லை என்று மறுப்பதன் மூலமே ஒவ்வொரு சாதியும் தனது தனித்து வத்தை நிறுவமுயன்றன. ஆகவே பிராமணர்- பிராமணரல் லாதார் என்ற நிலையில் தொடங்கும் சமத்துவமின்மை ஒவ்வொரு சாதியும் பிறசாதிகளுடனும், சாதிகளுக்குள் நிலவும் சமமின்மை உட்சாதிகளுக்குள்ளும் பரவியிருப்பதை பன்மப் படிநிலை ஏற்றத்தாழ்வு என்று குறிப்பிடுகிறார் அம்பேத்கர்.

இவ்வாறாக தம்மோடு கூடிவாழவும் கலந்துண்ணவும் பகிர்ந்து கொள்ளவும் இன்னொருவருக்குத் தகுதியில்லை என்கிற பிராமணர்களின் கருத்து ஒட்டுமொத்த சமூகத்திலும் ஊடுருவி அதன் சிந்தனையையும் செயல்பாட்டையும் முடக்கி வைத்திருப்பதனால்தான் பிராமணியத்தை சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய உயிர்ப்புகளின் எதிர்மறை என்றழைத்தார் அம்பேத்கர். எனவே பிராமணியத்தால் முடக்கி வைக்கப்பட்ட இந்தச் சமூகத்தை புனர்நிர்மாணம் செய்வதே தொழிலாளிவர்க்கத்தின் முதற்கடமை என்று கூறிய அவர் இதன் பொருட்டே ‘...நமது இலக்கு இந்த கூலி அடிமைத்தனம் என்னும் கருத்தோட்டத்திலிருந்து விடுபட்டு விடுதலைக் கோட்பாட்டை அடைவதாக இருக்க வேண்டும். அதாவது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய இலக்குகளை நோக்கி தொழிற்சங்க இயக்கத்தை வழிநடத்த வேண்டும்...’ என்றும் வலியுறுத்த வேண்டியிருந்தது ( அ.தொ.நூ.37, பக்- 239). அதாவது பிராமணியத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்துப்போராட வேண்டும் என்று தனது உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட விசயத்திற்கே மீண்டும் வந்து சேர்கிறார். 

3.
ஆரியர்களின் வேதங்கள் முன்வைத்த யாகங்கள் உள்ளிட்ட சடங்குகளை நிகழ்த்துகிறவர்களாக பிராமணர்களே இருந்தனர். தட்சணைத் தருமளவுக்கு வசதியுள்ளவர்களுக்கே யாகங்களைச் செய்தனர். அந்தவகையில் மன்னர்களும் பெருஞ்செல்வந்தர்களுமே அவர்களது இலக்குகளாய் இருந்தனர். யாகங்களில் மனிதர்களைப் பலியிடும் வழக்கத்தைக் கொண்டிருந்த இவர்கள், மனிதவுயிரை பலிகொடுக்கத் தயாரில்லாதவர்களிடம் மனிதருக்கு ஈடாக ஆடுமாடுகளையும் குதிரைகளையும் பலியிடத் தூண்டினர். வேளாண்மைக்குத் தேவையான கால்நடைகளை யாகத்தில் பொசுக்கித் தின்று கொண்டே பெருமளவிலான பணம், பொன், நிலம் ஆகியவற்றை தானமாகவும் பெற்று பிராமணர்கள் சொத்துடமையாளர்களாகவும் வளர்ந்தனர். இந்த பிராமணச் சுரண்டலின் மூர்க்கம்கூடிய காலத்தில் தோன்றிய பௌத்தம் உயிர்ப்பலிகளையும் யாகம் உள்ளிட்ட வேதச்சடங்குகளையும் எதிர்த்தது. பௌத்தத்தால் ஈர்க்கப்பட்ட மன்னர்களது ஆளுகையின் கீழ் பிராமணர்கள் செல்வாக்கிழக்க நேர்ந்தது. (தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியிலும்கூட அவ்வாறே நேர்ந்தது). இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டுமானால் பௌத்தத்தை வீழ்த்த வேண்டும் என்பதே பிராமணர்களின் ஆதிக்கவெறியால் பௌத்தமன்னன் பிருகத்ரதனைக் கொன்று புஷ்யமித்ர சுங்கன் என்ற பிராமணன் சுங்கவம்ச ஆட்சியை நிறுவினான்.

புத்தமதம் அரசமதம் என்ற அந்தஸ்தை இழந்தது. புஷ்ய மித்திரன் ஒவ்வொரு புத்த பிக்குவின் தலைக்கும் நூறு பொற் காசுகள் விலையாக வைத்தான். ( அ.தொ.நூ.7, பக்- 163). (தமிழகத்தில் நடந்த கழுவேற்றத்தையும் இவ்விடத்தில் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.) உயிர்ப்பயத்தால் பௌத்தத்தை கைவிட்டவர்களை இணைத்துக்கொண்டும் பற்றி நின்றவர்களை ஒதுக்கிவைத்தும் அன்றைக்கு பிராமண மதம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.

புஷ்யமித்திர சுங்கனின் ஆட்சிக்காலம் தொடங்கி சமூகத்தின் மீது பிராமணர்களின் பிடி இறுகியது. அவர்கள் முன்னிலும் வலுவாக தமது மேலாதிக்கத்தை நிறுவினர். இதற்கான மூளை வங்கியாக மநுஸ்மிருதி என்ற சட்டத்தொகுப்பு செயல்பட்டது. வடக்கே இருந்து தெற்கேயும் பரவி தமது கருத்தியல் ஆதிக்கத்தின் கீழ் இந்தியப்பரப்பை ஒருநாளில் பிராமணர்கள் கொண்டுவந்துவிடவில்லை. ஆனாலும் அப்படியான நிலையை உருவாக்கி விட்டனர் என்பதே உண்மை. பேரளவிலான மாற்றங்கள் இன்றி இந்தநிலை இன்றளவும் தொடர்கிறது. 
  
4.

எல்லாச் சாதிகளிலிருந்தும் எல்லா வர்க்கத்தினரும் வந்து விட்டார்கள் என்ற குடுகுடுப்பை ஜோசியத்தை ஆய்வுகளின் வழியே பெறப்பட்ட ஆதாரங்கள் பொய்ப்பிக்கின்றன (பார்க்க- சாதியும் வர்க்கமும். ப.கு.ராஜன், புதுவிசை- 21). இந்தியச் சாதியடுக்கின் உச்சத்தில் இருத்தப்பட்ட பிராமணர்களிலிருந்தும் அவர்களுக்கு அடுத்தநிலையிலான சாதியினரிலிருந்துமே இந்தியாவின் நவீனச் சொத்துடமை வர்க்கம் பரிணாமம் பெற்றுள்ளது. பிராமணியக் கருத்தியல் செல்வாக்கு அவர்களுக்கு இத்தகைய வாய்ப்பினை வழங்குவதில் பெரும்பங்கு வகித்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் 10 சதத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலுள்ள இம்மூன்று பிரிவினரும் நாட்டின் வளங்களில் பெரும்பகுதியை உடமையாகக் கொண்டுள்ளனர். நிலம், தொழில், வணிகம், உயர்கல்வி, உயர் பதவி, அரசியலதிகாரம் என்று எல்லாவற்றையும் அவர்கள் தமது எண்ணிக்கைக்கு மீறிய விகிதாச்சாரத்தில் பெற்றுள்ளதோடு விசயம் முடிந்துவிடவில்லை. அவர்கள் இத்தகைய வளங்களை சூத்திரர்களோடும் தலித்துகளோடும் மதச்சிறு பான்மையினரோடும்  பகிர்ந்து கொள்ளத் தயாரற்ற மனநிலை யோடும் இருக்கின்றனர். நாட்டின் பெரும்பான்மை மக்களான சூத்திரச்சாதியினரையும் (இன்றைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) தலித்துகளையும் சொத்து வைத்துக்கொள்ளவும் கல்வி பெறவும் உரிமையற்றவர்களாக ஒடுக்கியும் ஒதுக்கியும் வைத்துவிட்டே பிராமண, சத்திரிய, வைசியச் சாதியினர் இந்த  மோசடியான வளர்ச்சியை எட்டியிருக்கிறார்கள். ( இந்த மூன்று பிரிவிலும் இருக்கிற அனைவருமே சொத்துடமை வர்க்கமாக மாறிவிட்டார்களா என்று குதர்க்கவாதம் பேசுவோர் அவர்களில் எத்தனை வீதமானவர்கள் சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் கீழான வாழ்வை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிப்பது அவசியம்.) 

எனவே இந்தியாவில் சொத்துடமை வர்க்கம் நிறுவியுள்ள கூலியடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுவதென்பது வருணகாலம் தொட்டு நீடிக்கும் பிராமண மேலாதிக்கத்தை  எதிர்த்துப் போராடுவதுதான். இதன்பொருள் இங்குள்ள முதலாளித்துவம் சாதியத்தை ஒழித்துக்கட்டி அதன் சாம்பல்மேட்டில் உயிர்த்தெழுந்ததல்ல என்பதும் அது தன்னளவில் சாதியமாகவே இருக்கிறது என்பதும்தான். அதன் கையிலிருக்கும் உற்பத்திச் சாதனங்கள் தகுதி திறமை உழைப்பினால் அதற்கு கிட்டியவை அல்ல.அவை வெறுமனே பிறப்பை- சாதியை அடிப்படை யாகக் கொண்டு சட்டரீதியான மோசடிச் சலுகைகளின் வழியே பெறப்பட்டவை.

5.

பிராமணியத்தை/ முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட வேண்டிய இந்திய உழைப்பாளி வர்க்கம் என்பதன் உள்ளடக்கம் எது என்கிற விசயத்திற்கு வருவோம். உடல் உழைப்பைத் தீட்டு என்று அறிவித்ததன் மூலம் பிராமணர்கள் ஏற்கனவே தங்களை விவசாயி/தொழிலாளர் என்ற நிலையிலிருந்து வெளியே வைத்துக்கொண்டனர். எனவே பிராமணர்களில் தொழிலாளிகளே இல்லையா என்ற வாதத்திற்கு அவசியமற்றுப் போய்விட்டது. அவர்களும் அவர்களையடுத்த சாதியினரும் அரசாங்க ஊழியங்களையும் கைப்பற்றி நடுத்தர வர்க்கத்தினர் என்று சற்றே கீழிறங்கி வந்துள்ளனர். மற்றபடி பிச்சையெடுத்து பிழைக்க நேர்ந்தாலும் தங்களது சாதியாச்சாரங்களுக்குப் புறம்பான தொழில்களைச் செய்ய முன்வருவதில்லை. (இந்தப்பகுதியினரிலிருந்து சிறுபகுதியினர் தொழிலாளி வர்க்கத்தினது விடுதலையின் நியாயத்தை ஆதரித்து கருத்தியல் ஒருமைப்பாடு கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அவர்களும் தமது சாதிமேன்மையை துறக்க முன்வருவார்களா என்பது சந்தேகமே).

எனவே இங்கு தொழிலாளர் என்ற தலைப்பின் கீழுள்ள பெரும்பாலானோர் சூத்திரச் சாதியினரும் தலித்துகளும்தான். சூத்திரர்கள் வருண/சாதி அமைப்புக்குட்பட்டவர்கள். தலித்து களோ சாதியமைப்பை எதிர்த்து உருவாகிச் செயல்பட்ட பௌத்தமரபினர். பௌத்தம் வீழ்த்தப்பட்டதால் நொறுக்கப்பட்டு ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள். நாளடைவில் தலித்துகளுக்குள்ளும் சாதியம் பரவி அவர்களை உட்சாதிகளாக சிதைந்துவிட்டது பெரும்கேடுதான்.

எப்படியாயினும் பிராமணியப் பார்வையில் தலித்துகளைப் போலவே சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்கள்தான். ‘ஒரு சூத்திரன் தரும் உணவானது விந்து அல்லது சிறுநீரைப் போன்றது’ என்ற மநுவின் வாசகத்திலிருந்து சூத்திரர்கள் மீது எந்தளவுக்குத் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை உணர முடியும் (சரவணபவன் சாம்பாரும் அது தானா?). சூத்திரர்களில் பெரும்பாலானவர்களின் வாழ்நிலை இன்றளவும் உடலுழைப்பு சார்ந்ததாகத்தான் இருக்கிறது.  இவர்கள் மீதான தீண்டாமையும் அதனடிப்படையிலான புறக்கணிப்பும் இழிவானப் பார்வையும் பிராமணர் உள்ளிட்ட ஆதிக்கச் சாதியினரிடம் இருக்கத்தான் செய்கிறது என்பதை இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ரகளைகளின்போது காணமுடிகிறது.

இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையினரான இந்த சூத்திரர்கள் வருண/ சாதியமைப்பின் கொடிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியவர்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடி தம்மை சாதியத்தின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்க வேண்டும். இயற்கைவளங்கள், பொதுச்சொத்துக்கள், வழி பாட்டுத்தலங்கள், கல்விக்கூடங்கள் எல்லாவற்றிலும் சாதியத் தின் பெயரால் தமக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களில் இவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் வரலாற்றுரீதியாகவே இவர்கள் சாதியத்திற்குள்ளேயே கிடந்து உழல்கின்றனர். எண்ணிக்கைரீதியான தமது பலத்தினால் அடைந்திருக்க வேண்டிய வெற்றிகளை கருத்தியல் பலவீனத்தால் தோற்கடித்துக் கொண்டுள்ளனர். சாதியடுக்கில் தம்மைவிட மேல் நிலையில் இருப்பவர்களைப் பார்த்து அவர்களைப்போலவே பயின்றொழுகி ஒரு ‘பெரியசாதியாகிவிட வேண்டும்’ என்கிற எத்தனிப்பே இவர்களிடம் மேலோங்கியுள்ளது. இதன் பொருட்டு அவர்கள் சாதியத்தின் பாதுகாவலர்களாகவும் சாதியத்தின் அடுக்கு குலைவதாகத் தோன்றும் சமயங்களில் அதை வன்முறையால் தடுத்து நிலைநிறுத்தும் அடியாட்களாகவும் செயல்படுகின்றனர். பிராமணியம் நிறுவியுள்ள ஏற்றத்தாழ்வுகளையும் புறக்கணிப்புகளையும் பாரபட்சங்களையும் தீண்டாமையையும் ஒரு பிராமணனும் இல்லாத இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலும் நடைமுறைப்படுத்தி நிலைநிறுத்துகிறவர்களாக சூத்திரச்சாதியினரே செயல்படுகின்றனர்.

சாதியத்தால் ஒடுக்கப்பட்ட யாவருடனும் கருத்தியல் ஒற்றுமை காண்பதற்கு பதிலாக ஒடுக்கு முறையாளர்களின் அணுக்கப்பட்டியலுக்குள் இடம் பெறுவதற்காகவே ஒவ்வொரு சூத்திரச் சாதியும், அந்த சாதிகளுக்குள் இருக்கிற ஒவ்வொரு சூத்திரனும் செய்துவரும் முயற்சிகள் சாதியத்தின் இருப்பை உறுதிப் படுத்தியுள்ளது. விசுவாசமிக்க சேவகனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வேறுவேலை பார்க்கப்போய்விட்ட ஒரு எசமானனின் மனநிலையில் இன்றைக்கு பிராமணர்கள் இருக் கின்றனர். சூத்திரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலையை கச்சிதமாக நிறைவேற்றும் “வேலைக்கார கில்லாடிகளாக’’ சாதியைக் காப்பாற்றிக்கொண்டுள்ளனர்.

எனவே சுயமரியாதையுடனும் கண்ணியமாகவும் வாழ விரும் பும் எவரொருவரும் கருத்தியல் தளத்தில் பிராமணியத்தை யும் களத்திலே சூத்திரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டி யுள்ளது. பிராமணியம் ஒதுக்கித்தந்த வாழ்விடம், தொழில், பழக்கவழக்கங்கள், வாழ்வியற் சடங்குகள் ஆகியவற்றிலிருந்து விடுபடத் துடிக்கும் தலித்துகளை அடக்கியொடுக்கி திரும்பவும் சாதியச்சிறைக்குள் தள்ளிப் பூட்டும் இழிவான மன நிலையிலிருந்து சூத்திரர்கள் விடுபடாததாலேயே இந்தப் புதியகட்டம் உருவாகியுள்ளது.

தமது ஆக்கப்பூர்வமான ஆற்றல்கள் அனைத்தையும் சாதி ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமையைக் கடைபிடிக்கவே வீணடிப்பவர்களாக இருக்கும் இந்தச் சூத்திரச்சாதியினரும், சாதியத்திற்கு எதிராகப் போராடுவதால் மட்டுமே தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிற தலித்துகளும் ஒரே வர்க்கம் என்ற அடிப்படையில் அணி திரள்வது சாத்தியம்தானா? சாதியத்தின் எதிரெதிர் பக்கங்களில் நிறுத்தப்பட்டுள்ள இவ்விரு பிரிவினரும் சாதியப் பாகுபாட்டை அப்படியப்படியே வைத்துக்கொண்டு உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக எந்த அடிப்படையில் ஒன்றிணைய முடியும்? சமூக ஒடுக்குமுறையும் பொருளாதார ஒடுக்குமுறையும் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு சமூகத்தில் பொருளாதார விடுதலையை மட்டும் தனியே அடைந்துவிட முடியுமா?

சாதி, மதம் பாலினம் சார்ந்த ஒடுக்குமுறைகளை கைவிட வேண்டும் என்று பேசினால் சங்கத்தை விட்டுப் போய்விடு வார்கள் என்றஞ்சி வெறும் பொருளாதார விசயங்களை மட்டும் புள்ளிவிவரங்களோடு பொளந்துகட்டி உறுப்பினர் எண்ணிக்கையை தக்கவைத்துக்கொள்கிற சந்தர்ப்பவாதம் தற்காலிகமாக பலன் தரலாம். அத்தகைய அமைப்புகள் எவ்வளவு பலம் பொருந்தியதாய் இருந்தாலும்கூட உண்மையில் அவற்றால் பொருளாதாராக் கோரிக்கைகளைக்கூட வெல்ல முடியாது என்பதுதான் உண்மை. இவரும் தொழிலாளி, அவரும் தொழிலாளி, ஆகவே இருவரும் தொழிலாளி வர்க்கத்தினர் என்ற எளிய சூத்திரங்களை வைத்துக்கொண்டு  நடப்பது சங்கத்தொழிலாக வேண்டுமானால் இருக்கலாமே யன்றி தொழிற்சங்கமாக இருக்க முடியாது. சாதியடிப்படை யில் தொழிலாளர்களை சங்கத்தில் திரட்டுவதும் சாதிய ஒடுக்குதலை எதிர்க்காமலே சங்கத்திற்குள் தொழிலாளிகளைத் திரட்டி வைத்திருப்பதும் ஒரேவகைப்பட்ட விளைவுகளையே உருவாக்குகின்றன.

தொழிலாளி வர்க்கம் என்ற ஒன்று ஏற்கனவே உருவாகி முதலாளித்துவத்தை எதிர்த்தப் புரட்சிக்கு தயார்நிலையில் இருப்பதாகவும் சாதியொடுக்குமுறை போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதன் மூலம் அதன் போராட்ட இலக்கு திசைமாறிவிடும் என்று பதறுவதுமான பாவனைகளே இங்கு அதிகமாயுள்ளன. இந்தக் கற்பிதங்களின் காரணமாகத்தான் இந்தியாவில் தொழிலாளிகளை ஒரு வர்க்கமாக அணிதிரட்ட முடியாமல் தொழிற்சங்க இயக்கம் தத்தளிக்கிறது. வேலைத்தளங்களிலும் அதற்கு வெளியேயும் பிராமணக் கருத்தியல் செல்வாக்குடன் செயல்படுவதானது முதலாளித்துவத்திற்குத்தான் தேவையேயன்றி தொழிற்சங்க இயக்கத் திற்கோ உழைப்பாளி மக்களின் கட்சிகளுக்கோ அல்ல.

இங்கேதான் வெறும் பொருளதாரப் புரட்சி என்று சொல்லாமல் சமூகப்புரட்சி என்று மார்க்ஸ் சொன்னதையும் கூலியடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய இலக்குகளை நோக்கி நகர வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னதையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இப்படிப் பார்க்க வேண்டுவது, இருவரது சொற்களிலிருந்தும் வேண்டியதை எடுத்து ஒட்டுப்போட்டு விரும்பிய வடிவத்தை வலிந்து பெறுவதற்கல்ல. சமூக மாற்றம் என்பதிலும் அதை தொழிலாளிவர்க்கம் நிறைவேற்றும் என்பதிலும் மார்க்சும் அம்பேத்கரும் கருத்தொருமை கொண்டுள்ளனர்.

எனில் இருவரது சிந்தனைகளையும் ஏற்று செயலாற்றுவதில் அக்கறையுள்ளவர்கள் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாகத் திரள்வதில் தடையாகி மறிக்கிற சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடையாளம் காண்பதும் அதற்கு எதிராகப் போராடுவதும் அவசியமாகிறது. தொழிலாளர்களுக்கிடையே இருக்கும் இந்த உள்முரண்பாடுகளை தீர்ப்பதற்கு  தொழிற்சங்க இயக்கம் தனது ஆற்றலை பயன்படுத்தும் போதுதான் களத்திலும் கருத்திலும் வர்க்க அணிதிரட்சி சாத்தியமாகும்.

பின்குறிப்பு: பிராமணர் என்ற சொல் சாதியப்படிநிலையை வலியுறுத்துகிறது. எனவே பார்ப்பனர் என்ற சொல்லையே நான் பயன்படுத்துகிறேன். ஆனால் அம்பேத்கர் பிராமணியம் என்ற சொல்லை பாவித்திருப்பதால் இக்கட்டுரையில் அவ்வாறே பயன்படுத்தியிருக்கிறேன்.

உதவிய நூல்கள்:
அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுப்பு நூல்கள்: 1, 6,7,8, 37