ஞாயிறு, அக்டோபர் 23

விஷத்தை முறிக்கும் வைத்தியத்தை பாம்பிடமே கேட்டறிய முடியாது - ஆதவன் தீட்சண்யா

 1.
என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று - பிராமணியம். இரண்டு- முதலாளித்துவம்  என்று 1938 பிப்ரவரி 12,13 தேதிகளில் மன்மத் நகரில் நடைபெற்ற கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வேயில் பணிபுரிந்த ஒடுக்கப்பட்ட தொழிலாளர் மாநாட்டின் தலைமையுரையில் அம்பேத்கர் விடுத்த இந்த அறைகூவல் இன்றளவும் மிகுந்த பொருத்தப்பாட்டுடன் நிலைத்திருக்கிறது (.தொ.நூ.37 பக்- 227). இதன்பொருள் தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணி திரட்டுவதில் அக்கறையுள்ளவர்கள் அம்பேத்கரின் இந்த அறைகூவலுக்கு இன்னும் செவிசாய்க்கவில்லை என்பதே.

அம்பேத்கர் முதன்மைப்படுத்திக் காட்டும் இரு பகைமைச் சக்திகளும் வெவ்வேறானவை என்று புரிந்துகொள்ளத் தேவையில்லை. பிராமணியமும் முதலாளித்துவமும் ஒன்றை யொன்று தாங்கி வளர்க்கும் உரமாகவும் களையாகவும் இருக்கின்றன என்பதை அம்பேத்கர் அனேக சந்தர்ப்பங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறார். ஆகக்கொடிய சுரண்டல் சக்தியான முதலாளித்துவத்திற்கு இணையாக அவரால் முன்னிலைப்படுத்தப்படும் பிராமணியம் என்பதுதான் என்ன?

இன்னும் யானை தன்னியல்பில்தான் இருக்கிறது, வியாக்கியானம் செய்கிறவர்கள் தான் குறைந்தபாடில்லை என்பதைப்போல பிராமணியம் என்றால் என்னவென்று அனேக விளக்கங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. இவ்வகையான வியாக்கியானங்களில் பெரும்பாலானவைபிராமணர்களையும் பிராமணியத்தையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாதுஎன்ற அறிவுரையுடனோ, ‘பிராமணர்களை எதிர்க்கவில்லை, பிராமணியத்தைத்தான் எதிர்க்கிறோம்என்ற வாக்குமூலத்துடனோதான் முற்றுப் பெறுகின்றன. பிராமணர்களுக்கு வெளியே/ பிராமணர்களின் முன்னெடுப்பின்றி பிராமணியம் என்பது தன்னந்தனி சுயம்புவாக உருவாகிவிட்டதா என்கிற அடிப்படையானக் கேள்வியை எழுப்பிக் கொள்வதிலுள்ள மனத்தடைகளின் வெளிப்பாடாகவே இவற்றைக் காண வேண்டியுள்ளது. ஆனால் பிராமணர்களுக்கும் பிராமணியத்திற்கும் யாதொரு தொடர்புமில்லையெனும் பட்சத்தில் அதை செட்டியாரியம் அல்லது முதலியாரியம் என்றல்லாமல் பிராமணியம் என்றே சுட்டுவதன் காரணம் தான் என்னவென்கிற ஒரு மொக்கையான கேள்வியையாவது இவ்விடத்தில் எழுப்பிக்கொண்டால் போதுமானது.

விஷத்தை முறிக்கும் வைத்தியத்தை பாம்பிடமே கேட்டறிய முடியாது என்பது உண்மையாயிருக்கும் பட்சத்தில் பிராமணியம் என்பதற்கு சோ ராமசாமி போன்றோர் சொல்லிக் கொண்டிருக்கும் விளக்கங்களைப் புறந்தள்ளி  வரலாற்றுக்குள் புக வேண்டியிருக்கிறது. வரலாற்றின் பக்கங்களிலிருந்து அவரவர் தேவைக்கேற்ற வரிகளை மேற்கோள் காட்டி ஆய்வாளர் களாகிவிடும் தந்திரங்கள் மலிந்து கிடக்கும் இந்நாளில் வரலாற்றை முறையாகப் படிக்கும் ஒரு மாணவனின் ஆர்வத்தோடும் கற்பிக்கும் ஆசிரியரது மேதைமையோடும் அங்கே அம்பேத்கர் நமக்காக காத்திருக்கிறார்.

2.
உலக வரலாறுகளை கற்றறிந்த அனுபவத்திலிருந்து, சமூக வாழ்வில் அதன் உறுப்பினர்களிடையே நிலவும் உறவானது சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்று அம்பேத்கர் முன்மொழிந்தார். சமூகத்தின் எல்லாத்தளங்களிலும் ஒதுக்கியும் ஒடுக்கியும் வைக்கப்பட்டிருந்த தீண்டத்தகாத மக்களில் ஒருவராகிய அவரிடமிருந்து இவற்றுக்கும் குறைவானதொரு முன்மொழிதலை எதிர்பார்ப்பது அநீதியானதாகும். வேறெவரைக் காட்டிலும் அவரையொத்த தீண்டத்தகாத மக்களுக்கே இம்மூன்று கோட்பாடுகளும் உடனடித் தேவை என்றே பலரும்  புரிந்துகொண்டிருந்தச் சூழலில் ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்குமே இவை தேவை என்று அம்பேத்கரால் பரிந்துரைக்கப்பட்டன.

சுதந்திரத்தை சிவில் உரிமை, அரசியல் உரிமை என்று  இரண்டாக வகைப்படுத்தும் அம்பேத்கர்  1) சுதந்திரமாக இயங்கும் உரிமை 2) பேச்சுரிமை  - கருத்துச்சுதந்திரம் 3) செயலுரிமை ஆகியவற்றை சிவில் உரிமையென்றும், சட்டமியற்றுவதில் பங்கு கொள்வதற்கும் அரசாங்கத்தை மாற்றுவதற்கும் உருவாக்குவதற்கும் தனிமனிதருக்குள்ள உரிமையை அரசியல் சுதந்திரம் என்றும் விளக்கிச் செல்கிறார் (.தொ.6,பக்-135). ‘துரதிருஷ்டவசமாகச் சமத்துவம் என்னும் சொல்லுக்குப் பதில் வேறொரு சொல் இல்லை. சமத்துவம் என்றால் அளவு, தொகை, எண், தரம், மதிப்பு, தன்மையில் ஒன்றுபோலிருத்தல் என்றாகிறது...’ எனத் தொடங்கும் பேராசிரியர் பியர்டின் கருத்தை விரிவாக மேற்கோளிடுகிற அம்பேத்கர் (.தொ.6, பக்-132), ‘ குணாம்சத்திலும் இயற்கைத்திறனிலும் எவ்வளவு வேறுபட்டாலும் மானிடர் என்ற முறையில் அனைத்து மனிதர்களும் மரியாதைக்குரியவர்கள் (.தொ.6, பக்-145) என்று ஒப்புக் கொள்வதையே சமத்துவம் என்று தன் சொந்தமொழியில் வரையறுக்கிறார். அதேபோன்றுஒரு தனிமனிதன் மற்றவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்தி உடன் வாழ் மனிதருடன் ஒன்றுபட்டு வாழ விரும்பும் மனநிலையே சகோதரத்துவம்’ (.தொ.6,பக்-134) என்ற தெளிவையும் தந்திருக்கிறார்.

ஆனால் இந்தியச்சமூகம் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற கோட்பாடுகளுக்கு எதிர்த்திசையில் வெகுதூரம் சென்றுவிட்டதாய் இருந்தது. இந்தக் கோட்பாடுகளை உள் வாங்கி வளர்வதற்கு இசைவான நல்லம்சங்கள் எல்லாவற்றையும் அது எப்போதோ தலை முழுகிவிட்டிருந்தது. ஆகவே இனி இந்தச் சமூகத்தை ஒன்றுமே செய்துவிட முடியாது, அது அதன்போக்கில் போய்த்தொலையட்டும் என்று விட்டுவிட அம்பேத்கர் தயாரில்லை. அதன் கெடும்போக்கிற்கு எதிரே மறித்து நின்று அதை மாற்றியமைப்பதென்று துணிந்த அறிவுக்கும் செயலுக்காகவும் தான் அவர் புரட்சியாளர் என்று மதிக்கப் பெறுகிறார். அதனாலேயே அவர் இந்தியச் சமூகத்தில் தொடர்ந்து அவமதிப்புக்கும் ஆளாகி வருகிறார்

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பவற்றை ஏற்கவியலாத இந்தியச்சமூகம் எதன்மீது கட்டப்பட்டிருக்கிறது என்று ஆயப்புகுந்த அம்பேத்கர் அது சமத்துவமின்மை என்பதன் மீதே கட்டப்பட்டிருக்கிறது என்று அறிவித்தார். அது ஒருபோதும்  தன் சமூகத்தினர் அனைவரையும் சமமாக பாவிப்பதில்லை. எல்லா நிலைகளிலும் ஏற்றத்தாழ்வு, பாரபட்சம், புறக்கணிப்பு, ஒடுக்குமுறை ஆகிய பாகுபாடுகளையே கடைபிடிப்பதாய் இருக்கிறது. இந்த சமத்துவமின்மை ஒவ்வொரு இந்தியரையும் வழிநடத்துவதோடு பின்தொடர்ந்து கண்காணிப்பதாயும் இருக்கிறதென்றும் இந்த கருத்தாக்கத்தின் மூலபலம் பிராமணியத்துக்குள் தங்கியிருக்கிறது என்றும் அம்பலப்படுத்தினார். பிராமணியம் என்பதை புனிதப்படுத்தி அதுகாறும் சொல்லப் பட்டுவந்த விளக்கங்களைப் புறந்தள்ளிசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயிர்ப்புகளின் எதிர்மறைதான் பிராமணியம்” (.தொ.நூ.37, பக்-228 ) என்ற முடிவுக்கு அவரை இட்டுச் சென்ற காரணங்கள் எதுவும் இன்றளவும் மாறிவிடவில்லை என்பதாலேயே அவர் கூற்று மிகுந்த பொருத்தப்பாடு கொண்டதாகிறது.

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய உயிர்ப்புகளின் எதிர்மறையாக பிராமணியம் திடுமென ஒருநாளில் உருவாகிவிடவில்லை. அது ஆரியர்கள் இந்தியப் பரப்புக்குள் வந்தேறியக் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. ஆரியர் ஆரியரல்லாதார் என்ற இந்த முதல்நிலைப்பாகுபாடு இறுக்கமானதாய் இருக்கவில்லை. ஆரியர் என்பார் முற்றுமுழுக்க ஒரே இனத்தவர் அல்ல. ஆரியப் பண்பாட்டையும் வேதத்தின் முதன்மையையும் ஏற்றுக் கொள்கிறவர்களை விராத்திய ஸ்தோமா என்ற சடங்கின் மூலம் ஆரியராக்கி தம்முடன் இணைத்துக்கொண்டுள்ளனர். பிறகு வேதத்தின் முதன்மையை ஏற்றுக்கொண்டவர்களை நான்கு வர்ணங்களாகப் பிரித்தார்கள்.  ஏற்க மறுத்தவர்களை அவர்ணர்கள் என்று ஊருக்கு வெளியே ஒதுக்கிவைத்தார்கள். ஊர், சேரி என்ற வாழிடப் பாகுபாட்டின் தொடக்கம் அங்கே இருக்கிறது.

வேட்டையாடியும் மேய்ச்சல் நிலம் தேடியும் நாடோடிகளாக வந்தேறிய ஆரியர்கள் ஓரிடம் தங்கி நிலைபெற்றச் சமூகமாக வாழத்தொடங்கியபோது சமூகத்தின் வளர்ச்சிநிலைக்கேற்ற ஒரு வேலைப்பிரிவினையை செய்ய வேண்டியிருந்ததாகவும், அதனாலேயே புரோகிதத் தொழிலுக்கு பிராமணர், போர்த் தொழிலுக்கு  சத்திரியர், வேளாண்மைக்கும் வியாபாரத்திற்கும் வைசியர், இந்த மூன்று வருணத்தாருக்கும் சேவை செய்ய சூத்திரர் என்று பிரித்ததாகவும் வர்ணப்பாகுபாட்டை நியாயப்படுத்தும் பார்வை இங்கே பிரபலமானதுதான். வெறும் வேலைப்பிரிவினையாய் இருந்திருக்குமேயானால் நான்கு வருணங்களும் கிடைமட்டத்தில் சமமாக அருகருகாக அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும், ஆனால் அவ்வாறின்றி நெட்டுகுத்தாக ஒன்றின்கீழ் ஒன்றாக அடுக்கிய தன் மூலம் வர்ணப்பாகுபாடானது முதலில் தொழிலாளர்களைப் பிரித்துவிட்டு அதன்பிறகே தொழில்களைப் பிரித்தது என்பதுதான் அம்பேத்கரியப் பார்வை. எனவேதான் இங்கு தொழில்களை மாற்றிக்கொண்டாலும் வருணத்தின்வழியான சாதியை மாற்றிக்கொள்ள முடியாதநிலை நீடிக்கிறது. இந்த நான்கு வர்ணத்தவரில் ஒவ்வொரு தனிநபரும் கடைபிடிக்க வேண்டிய நான்கு ஆசிரமதருமங்களும் ( பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்)  வகுத்தளிக்கப் பட்டன. வருணவிதிகளையும் ஆசிரமவிதிகளையும் ஒழுகி வாழ்வது கட்டாயமாக்கப்பட்டது. மீறுவோரைத் தண்டித்து  வருணாசிரம தருமத்தைக் காப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பானது.

சப்தரிஷி என்ற குழு பிராமணர்களையும் மநு என்ற அதிகாரியின் தலைமையிலான மன்வந்திரக்குழு சத்திரியர்களையும் வைசியர்களையும் தேர்வு செய்தது போக எஞ்சியவர்கள் சூத்திரர்களாக்கப்பட்டனர். இதன்படி ஒரு குடும்பத்திற்குள்ளேயேகூட நான்கு வர்ணத்தவரும் இருக்கும் நிலை உருவானது. இந்த வர்ணப்பாகுபாடு நிரந்தரமானதாக இருந்திருக்கவில்லை. நான்காண்டுகளுக்கு ஒருமுறை ( ஒரு யுகம் ) மாறக்கூடிய நெகிழ்ச்சியுடையதாயிருந்தது. அடுத்தடுத்து வந்த தேர்வுகளில் ஒரு வர்ணத்தவர் வேறொரு வர்ணத்தவராகும் வாய்ப்பிருந்தது. (.தொ.நூ.7 பக்- 188 &189 ). வர்ண அடுக்கில் மேல்நோக்கு வரிசையில் செல்லச்செல்ல உரிமைகளும் சலுகைகளும் கிடைத்தன. கீழ்முகச்சரிவில் கடமைகள் அதிகரித்தன. எனவே கடமைகளின் அழுத்தத்தையும் பளுவையும் தாங்கமுடியாத கீழ் வர்ணத்தவர் மேல்நிலையாக்கம் செய்துகொள்ளவும், உரிமைகளிலும் சலுகைகளிலும் திளைத்த மேல்வர்ணத்தவர் தங்களது நிலையை தக்கவைத்துக் கொள்வதிலும் இடையறாத முனைப்பு கொண்டிருந்தனர். ( இந்தப் போக்கு இன்றுவரை நீடிக்கிறது).

இந்தப்பிரிப்பு முறைக்கு பதிலாக உபநயன முறை வந்தபோது, குழந்தைகள் குருகுலத்திற்குச் சென்று  12 ஆண்டுகாலம் கல்வி பெற்றனர். முடிவில் அவரவர் தகுதி திறமை அடிப்படையில் குருவானவர் (ஆசாரியார்- ஆசாரங்களைக் கற்றறிந்தவர்) பட்டமளிப்பு விழா போல உபநயனச் சடங்கு நடத்தி வர்ணங்களைப் பிரித்து அந்தந்த வர்ணத்துக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களைச் செய்யுமாறு பணித்து அனுப்பி வைத்தார். இந்த முறையில் ஒருவனது வர்ணம் அவனது வாழ்நாள் முழுக்க மாறாதிருந்தது.  எனவே தகுதி திறமையின் அடிப்படையில் தமக்கும் கீழான வர்ணத்திற்குள் தமது பிள்ளைகள் மாட்டிக்கொள்ளக்கூடாது  என்ற ரத்தப்பாசத்தால் உந்தப்பட்ட பிராமணர்கள் இந்தமுறையை மாற்றியமைத்தனர். அந்த மாற்றம் சுமதி பார்கவா என்ற மநு எழுதிய மநுஸ்மிருதியால் சட்ட அந்தஸ்தும் பெற்றது. அதாவது வர்ணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை குருவிடமிருந்து பறித்து தந்தையிடம் ஒப்படைத்தார் மநு. இதன்படி ஒருவரது வர்ணம் பரம்பரைக்கும் தொடர்வதாக மாறியது. ஒரு பிராமணர் எவ்வளவு தகுதியும் திறமையும் குறைவான போதும் அவர் சமூகத்தின் உயர் அந்தஸ்தில் இருத்தப்பட்டார். இந்த உபநயனம்தான் இன்றளவும் பூணூல் மாற்றும் சடங்காக   நடத்தப்படுகிறது.

இப்போது குடும்பம் என்பது ஒரே வர்ணத்தவரை மட்டுமே கொண்டதாயிருந்தது. வர்ணத் தூய்மை வலியுறுத்தப்பட்டது. கலந்துண்பது ஆசாரக்கேடாக அறிவிக்கப்பட்டது. அதுவரை வர்ணங்களுக்கிடையே இருந்த கலப்புமணம் தடைசெய்யப்பட்டது. ‘அகமண வழக்கம் பிராமணர்களிடம் பிறந்தது. பின்னர் ஏனைய பிராமணர் அல்லாத உட்பிரிவினரும் அல்லது வர்க்கத்தினரும் முழுவிருப்பத்தோடு தொடங்கியதால் அவர்களும் அகமண வழக்கத்தினராயினர். இந்த வகை பிறரைப் பார்த்து அவர்களைப்போல வாழும் தொற்றுநோய் பழக்கம் அனைத்து உட்பிரிவினரையும் வர்க்கத்தாரையும் பிடித்துக்கொண்டதால் கலந்து பழகி வாழ்ந்தவர்கள் பாகுபாடுகளை வளர்த்துக்கொண்டு வாழ்ந்து தனித்தனி சாதிகளாயினர்.’ என்ற அம்பேத்கரின் கூற்றிலிருந்து (.தொ.நூ1,பக்-27) சாதியின் தோற்றத்திற்கு பிராமணர்களே வழிவகுத்ததை அறிய முடியும். ‘அகமணமுறையை அதாவது ஒரேசாதிக்குள் மணவுறவுகளை வைத்துக்கொள்வது சாதியைப் படைப்பதற்கு இணையானது’ (.தொ.நூ1,பக்-12) என்று அவர் மேலும் சொல்லிச்சென்ற விளக்கத்தின்படி பார்த்தால் சாதியுணர்வைக் கடந்துவிட்டதாக நம்புகிற பலரும்கூட சொந்த சாதிக்குள்ளேயே மணவுறவை உழப்பிக்கொள்வதன் மூலம்  பிராமணக் கருத்தியலைப் பற்றிக்கொண்டு தத்தமது சாதியை மறுவுற்பத்தி செய்து வலுப்படுத்துகிறவர்களாகவே இருக்கின்றனர் என்கிற உண்மை புலப்படும்.

வர்ணத்திலிருந்தது போலவே சாதியமைப்பிலும் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் பிராமணர்களுக்கே முதலிடத்தைத் தந்தது மநுஸ்மிருதி. பிராமணர்கள் புனிதம்/ தீட்டு அடிப்படையில் தங்களை ஒரு மூடுண்ட சமூகமாக மாற்றிக்கொண்டதன் மூலம் அவர்கள் பிராமணரல்லாதார் என்ற பிரிவையும் உருவாக்கிவிட்டனர். பிராமணரல்லாதாரின் சுதந்திரமும் உரிமைகளும் பிராமணர்களுக்கு கீழ்ப்பட்டதாயிருந்தது. எனினும் அதை எதிர்த்து அணிதிரள முடியாதபடி அவர்கள் ஏராளமான சாதிகளாகவும் சாதிகளுக்குள் பல உட்சாதிகளாகவும் பிளவுண்டு ஒவ்வொரு உட்சாதியும் பிராமணர்களைப் போலவே மூடுண்ட குழுக்களாகிப் போயினர்.  சமூகத்தின் உச்சியில் வைத்துக் கொண்டாடப்பட்ட பிராமணர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களைப் போலவே அவர்களுக்கு அடுத்தடுத்த நிலையிலிருந்த சாதிகள் பிறசாதிகளை தமக்கு சமதையாக ஏற்க மறுத்தன. நீர், நிலம், காற்று என்று எதையும் தன்னோடு பொதுவில் பகிர்ந்து கொள்ளும் சமதையான தகுதி இன்னொரு சாதிக்கு இல்லை என்று மறுப்பதன் மூலமே ஒவ்வொரு சாதியும் தனது தனித்து வத்தை நிறுவமுயன்றன. ஆகவே பிராமணர்- பிராமணரல் லாதார் என்ற நிலையில் தொடங்கும் சமத்துவமின்மை ஒவ்வொரு சாதியும் பிறசாதிகளுடனும், சாதிகளுக்குள் நிலவும் சமமின்மை உட்சாதிகளுக்குள்ளும் பரவியிருப்பதை பன்மப் படிநிலை ஏற்றத்தாழ்வு என்று குறிப்பிடுகிறார் அம்பேத்கர்.

இவ்வாறாக தம்மோடு கூடிவாழவும் கலந்துண்ணவும் பகிர்ந்து கொள்ளவும் இன்னொருவருக்குத் தகுதியில்லை என்கிற பிராமணர்களின் கருத்து ஒட்டுமொத்த சமூகத்திலும் ஊடுருவி அதன் சிந்தனையையும் செயல்பாட்டையும் முடக்கி வைத்திருப்பதனால்தான் பிராமணியத்தை சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய உயிர்ப்புகளின் எதிர்மறை என்றழைத்தார் அம்பேத்கர். எனவே பிராமணியத்தால் முடக்கி வைக்கப்பட்ட இந்தச் சமூகத்தை புனர்நிர்மாணம் செய்வதே தொழிலாளிவர்க்கத்தின் முதற்கடமை என்று கூறிய அவர் இதன் பொருட்டே ‘...நமது இலக்கு இந்த கூலி அடிமைத்தனம் என்னும் கருத்தோட்டத்திலிருந்து விடுபட்டு விடுதலைக் கோட்பாட்டை அடைவதாக இருக்க வேண்டும். அதாவது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய இலக்குகளை நோக்கி தொழிற்சங்க இயக்கத்தை வழிநடத்த வேண்டும்...’ என்றும் வலியுறுத்த வேண்டியிருந்தது ( .தொ.நூ.37, பக்- 239). அதாவது பிராமணியத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்த்துப்போராட வேண்டும் என்று தனது உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட விசயத்திற்கே மீண்டும் வந்து சேர்கிறார். 

3.
ஆரியர்களின் வேதங்கள் முன்வைத்த யாகங்கள் உள்ளிட்ட சடங்குகளை நிகழ்த்துகிறவர்களாக பிராமணர்களே இருந்தனர். தட்சணைத் தருமளவுக்கு வசதியுள்ளவர்களுக்கே யாகங்களைச் செய்தனர். அந்தவகையில் மன்னர்களும் பெருஞ்செல்வந்தர்களுமே அவர்களது இலக்குகளாய் இருந்தனர். யாகங்களில் மனிதர்களைப் பலியிடும் வழக்கத்தைக் கொண்டிருந்த இவர்கள், மனிதவுயிரை பலிகொடுக்கத் தயாரில்லாதவர்களிடம் மனிதருக்கு ஈடாக ஆடுமாடுகளையும் குதிரைகளையும் பலியிடத் தூண்டினர். வேளாண்மைக்குத் தேவையான கால்நடைகளை யாகத்தில் பொசுக்கித் தின்று கொண்டே பெருமளவிலான பணம், பொன், நிலம் ஆகியவற்றை தானமாகவும் பெற்று பிராமணர்கள் சொத்துடமையாளர்களாகவும் வளர்ந்தனர். இந்த பிராமணச் சுரண்டலின் மூர்க்கம்கூடிய காலத்தில் தோன்றிய பௌத்தம் உயிர்ப்பலிகளையும் யாகம் உள்ளிட்ட வேதச்சடங்குகளையும் எதிர்த்தது. பௌத்தத்தால் ஈர்க்கப்பட்ட மன்னர்களது ஆளுகையின் கீழ் பிராமணர்கள் செல்வாக்கிழக்க நேர்ந்தது. (தமிழகத்தில் களப்பிரர் ஆட்சியிலும்கூட அவ்வாறே நேர்ந்தது). இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டுமானால் பௌத்தத்தை வீழ்த்த வேண்டும் என்பதே பிராமணர்களின் ஆதிக்கவெறியால் பௌத்தமன்னன் பிருகத்ரதனைக் கொன்று புஷ்யமித்ர சுங்கன் என்ற பிராமணன் சுங்கவம்ச ஆட்சியை நிறுவினான்.

புத்தமதம் அரசமதம் என்ற அந்தஸ்தை இழந்தது. புஷ்ய மித்திரன் ஒவ்வொரு புத்த பிக்குவின் தலைக்கும் நூறு பொற் காசுகள் விலையாக வைத்தான். ( .தொ.நூ.7, பக்- 163). (தமிழகத்தில் நடந்த கழுவேற்றத்தையும் இவ்விடத்தில் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.) உயிர்ப்பயத்தால் பௌத்தத்தை கைவிட்டவர்களை இணைத்துக்கொண்டும் பற்றி நின்றவர்களை ஒதுக்கிவைத்தும் அன்றைக்கு பிராமண மதம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.

புஷ்யமித்திர சுங்கனின் ஆட்சிக்காலம் தொடங்கி சமூகத்தின் மீது பிராமணர்களின் பிடி இறுகியது. அவர்கள் முன்னிலும் வலுவாக தமது மேலாதிக்கத்தை நிறுவினர். இதற்கான மூளை வங்கியாக மநுஸ்மிருதி என்ற சட்டத்தொகுப்பு செயல்பட்டது. வடக்கே இருந்து தெற்கேயும் பரவி தமது கருத்தியல் ஆதிக்கத்தின் கீழ் இந்தியப்பரப்பை ஒருநாளில் பிராமணர்கள் கொண்டுவந்துவிடவில்லை. ஆனாலும் அப்படியான நிலையை உருவாக்கி விட்டனர் என்பதே உண்மை. பேரளவிலான மாற்றங்கள் இன்றி இந்தநிலை இன்றளவும் தொடர்கிறது. 
  
4.

எல்லாச் சாதிகளிலிருந்தும் எல்லா வர்க்கத்தினரும் வந்து விட்டார்கள் என்ற குடுகுடுப்பை ஜோசியத்தை ஆய்வுகளின் வழியே பெறப்பட்ட ஆதாரங்கள் பொய்ப்பிக்கின்றன (பார்க்க- சாதியும் வர்க்கமும். .கு.ராஜன், புதுவிசை- 21). இந்தியச் சாதியடுக்கின் உச்சத்தில் இருத்தப்பட்ட பிராமணர்களிலிருந்தும் அவர்களுக்கு அடுத்தநிலையிலான சாதியினரிலிருந்துமே இந்தியாவின் நவீனச் சொத்துடமை வர்க்கம் பரிணாமம் பெற்றுள்ளது. பிராமணியக் கருத்தியல் செல்வாக்கு அவர்களுக்கு இத்தகைய வாய்ப்பினை வழங்குவதில் பெரும்பங்கு வகித்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் 10 சதத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலுள்ள இம்மூன்று பிரிவினரும் நாட்டின் வளங்களில் பெரும்பகுதியை உடமையாகக் கொண்டுள்ளனர். நிலம், தொழில், வணிகம், உயர்கல்வி, உயர் பதவி, அரசியலதிகாரம் என்று எல்லாவற்றையும் அவர்கள் தமது எண்ணிக்கைக்கு மீறிய விகிதாச்சாரத்தில் பெற்றுள்ளதோடு விசயம் முடிந்துவிடவில்லை. அவர்கள் இத்தகைய வளங்களை சூத்திரர்களோடும் தலித்துகளோடும் மதச்சிறு பான்மையினரோடும்  பகிர்ந்து கொள்ளத் தயாரற்ற மனநிலை யோடும் இருக்கின்றனர். நாட்டின் பெரும்பான்மை மக்களான சூத்திரச்சாதியினரையும் (இன்றைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) தலித்துகளையும் சொத்து வைத்துக்கொள்ளவும் கல்வி பெறவும் உரிமையற்றவர்களாக ஒடுக்கியும் ஒதுக்கியும் வைத்துவிட்டே பிராமண, சத்திரிய, வைசியச் சாதியினர் இந்த  மோசடியான வளர்ச்சியை எட்டியிருக்கிறார்கள். ( இந்த மூன்று பிரிவிலும் இருக்கிற அனைவருமே சொத்துடமை வர்க்கமாக மாறிவிட்டார்களா என்று குதர்க்கவாதம் பேசுவோர் அவர்களில் எத்தனை வீதமானவர்கள் சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் கீழான வாழ்வை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிப்பது அவசியம்.) 

எனவே இந்தியாவில் சொத்துடமை வர்க்கம் நிறுவியுள்ள கூலியடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுவதென்பது வருணகாலம் தொட்டு நீடிக்கும் பிராமண மேலாதிக்கத்தை  எதிர்த்துப் போராடுவதுதான். இதன்பொருள் இங்குள்ள முதலாளித்துவம் சாதியத்தை ஒழித்துக்கட்டி அதன் சாம்பல்மேட்டில் உயிர்த்தெழுந்ததல்ல என்பதும் அது தன்னளவில் சாதியமாகவே இருக்கிறது என்பதும்தான். அதன் கையிலிருக்கும் உற்பத்திச் சாதனங்கள் தகுதி திறமை உழைப்பினால் அதற்கு கிட்டியவை அல்ல.அவை வெறுமனே பிறப்பை- சாதியை அடிப்படை யாகக் கொண்டு சட்டரீதியான மோசடிச் சலுகைகளின் வழியே பெறப்பட்டவை.

5.

பிராமணியத்தை/ முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட வேண்டிய இந்திய உழைப்பாளி வர்க்கம் என்பதன் உள்ளடக்கம் எது என்கிற விசயத்திற்கு வருவோம். உடல் உழைப்பைத் தீட்டு என்று அறிவித்ததன் மூலம் பிராமணர்கள் ஏற்கனவே தங்களை விவசாயி/தொழிலாளர் என்ற நிலையிலிருந்து வெளியே வைத்துக்கொண்டனர். எனவே பிராமணர்களில் தொழிலாளிகளே இல்லையா என்ற வாதத்திற்கு அவசியமற்றுப் போய்விட்டது. அவர்களும் அவர்களையடுத்த சாதியினரும் அரசாங்க ஊழியங்களையும் கைப்பற்றி நடுத்தர வர்க்கத்தினர் என்று சற்றே கீழிறங்கி வந்துள்ளனர். மற்றபடி பிச்சையெடுத்து பிழைக்க நேர்ந்தாலும் தங்களது சாதியாச்சாரங்களுக்குப் புறம்பான தொழில்களைச் செய்ய முன்வருவதில்லை. (இந்தப்பகுதியினரிலிருந்து சிறுபகுதியினர் தொழிலாளி வர்க்கத்தினது விடுதலையின் நியாயத்தை ஆதரித்து கருத்தியல் ஒருமைப்பாடு கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அவர்களும் தமது சாதிமேன்மையை துறக்க முன்வருவார்களா என்பது சந்தேகமே).

எனவே இங்கு தொழிலாளர் என்ற தலைப்பின் கீழுள்ள பெரும்பாலானோர் சூத்திரச் சாதியினரும் தலித்துகளும்தான். சூத்திரர்கள் வருண/சாதி அமைப்புக்குட்பட்டவர்கள். தலித்து களோ சாதியமைப்பை எதிர்த்து உருவாகிச் செயல்பட்ட பௌத்தமரபினர். பௌத்தம் வீழ்த்தப்பட்டதால் நொறுக்கப்பட்டு ஊருக்கு வெளியே ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள். நாளடைவில் தலித்துகளுக்குள்ளும் சாதியம் பரவி அவர்களை உட்சாதிகளாக சிதைந்துவிட்டது பெரும்கேடுதான்.

எப்படியாயினும் பிராமணியப் பார்வையில் தலித்துகளைப் போலவே சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்கள்தான். ‘ஒரு சூத்திரன் தரும் உணவானது விந்து அல்லது சிறுநீரைப் போன்றதுஎன்ற மநுவின் வாசகத்திலிருந்து சூத்திரர்கள் மீது எந்தளவுக்குத் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை உணர முடியும் (சரவணபவன் சாம்பாரும் அது தானா?). சூத்திரர்களில் பெரும்பாலானவர்களின் வாழ்நிலை இன்றளவும் உடலுழைப்பு சார்ந்ததாகத்தான் இருக்கிறது.  இவர்கள் மீதான தீண்டாமையும் அதனடிப்படையிலான புறக்கணிப்பும் இழிவானப் பார்வையும் பிராமணர் உள்ளிட்ட ஆதிக்கச் சாதியினரிடம் இருக்கத்தான் செய்கிறது என்பதை இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ரகளைகளின்போது காணமுடிகிறது.

இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையினரான இந்த சூத்திரர்கள் வருண/ சாதியமைப்பின் கொடிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியவர்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அவர்கள் பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடி தம்மை சாதியத்தின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்க வேண்டும். இயற்கைவளங்கள், பொதுச்சொத்துக்கள், வழி பாட்டுத்தலங்கள், கல்விக்கூடங்கள் எல்லாவற்றிலும் சாதியத் தின் பெயரால் தமக்கு மறுக்கப்பட்டிருந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களில் இவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் வரலாற்றுரீதியாகவே இவர்கள் சாதியத்திற்குள்ளேயே கிடந்து உழல்கின்றனர். எண்ணிக்கைரீதியான தமது பலத்தினால் அடைந்திருக்க வேண்டிய வெற்றிகளை கருத்தியல் பலவீனத்தால் தோற்கடித்துக் கொண்டுள்ளனர். சாதியடுக்கில் தம்மைவிட மேல் நிலையில் இருப்பவர்களைப் பார்த்து அவர்களைப்போலவே பயின்றொழுகி ஒருபெரியசாதியாகிவிட வேண்டும்என்கிற எத்தனிப்பே இவர்களிடம் மேலோங்கியுள்ளது. இதன் பொருட்டு அவர்கள் சாதியத்தின் பாதுகாவலர்களாகவும் சாதியத்தின் அடுக்கு குலைவதாகத் தோன்றும் சமயங்களில் அதை வன்முறையால் தடுத்து நிலைநிறுத்தும் அடியாட்களாகவும் செயல்படுகின்றனர். பிராமணியம் நிறுவியுள்ள ஏற்றத்தாழ்வுகளையும் புறக்கணிப்புகளையும் பாரபட்சங்களையும் தீண்டாமையையும் ஒரு பிராமணனும் இல்லாத இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலும் நடைமுறைப்படுத்தி நிலைநிறுத்துகிறவர்களாக சூத்திரச்சாதியினரே செயல்படுகின்றனர்.

சாதியத்தால் ஒடுக்கப்பட்ட யாவருடனும் கருத்தியல் ஒற்றுமை காண்பதற்கு பதிலாக ஒடுக்கு முறையாளர்களின் அணுக்கப்பட்டியலுக்குள் இடம் பெறுவதற்காகவே ஒவ்வொரு சூத்திரச் சாதியும், அந்த சாதிகளுக்குள் இருக்கிற ஒவ்வொரு சூத்திரனும் செய்துவரும் முயற்சிகள் சாதியத்தின் இருப்பை உறுதிப் படுத்தியுள்ளது. விசுவாசமிக்க சேவகனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வேறுவேலை பார்க்கப்போய்விட்ட ஒரு எசமானனின் மனநிலையில் இன்றைக்கு பிராமணர்கள் இருக் கின்றனர். சூத்திரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலையை கச்சிதமாக நிறைவேற்றும்வேலைக்கார கில்லாடிகளாக’’ சாதியைக் காப்பாற்றிக்கொண்டுள்ளனர்.

எனவே சுயமரியாதையுடனும் கண்ணியமாகவும் வாழ விரும் பும் எவரொருவரும் கருத்தியல் தளத்தில் பிராமணியத்தை யும் களத்திலே சூத்திரர்களையும் எதிர்த்துப் போராட வேண்டி யுள்ளது. பிராமணியம் ஒதுக்கித்தந்த வாழ்விடம், தொழில், பழக்கவழக்கங்கள், வாழ்வியற் சடங்குகள் ஆகியவற்றிலிருந்து விடுபடத் துடிக்கும் தலித்துகளை அடக்கியொடுக்கி திரும்பவும் சாதியச்சிறைக்குள் தள்ளிப் பூட்டும் இழிவான மன நிலையிலிருந்து சூத்திரர்கள் விடுபடாததாலேயே இந்தப் புதியகட்டம் உருவாகியுள்ளது.

தமது ஆக்கப்பூர்வமான ஆற்றல்கள் அனைத்தையும் சாதி ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமையைக் கடைபிடிக்கவே வீணடிப்பவர்களாக இருக்கும் இந்தச் சூத்திரச்சாதியினரும், சாதியத்திற்கு எதிராகப் போராடுவதால் மட்டுமே தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிற தலித்துகளும் ஒரே வர்க்கம் என்ற அடிப்படையில் அணி திரள்வது சாத்தியம்தானா? சாதியத்தின் எதிரெதிர் பக்கங்களில் நிறுத்தப்பட்டுள்ள இவ்விரு பிரிவினரும் சாதியப் பாகுபாட்டை அப்படியப்படியே வைத்துக்கொண்டு உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக எந்த அடிப்படையில் ஒன்றிணைய முடியும்? சமூக ஒடுக்குமுறையும் பொருளாதார ஒடுக்குமுறையும் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு சமூகத்தில் பொருளாதார விடுதலையை மட்டும் தனியே அடைந்துவிட முடியுமா?

சாதி, மதம் பாலினம் சார்ந்த ஒடுக்குமுறைகளை கைவிட வேண்டும் என்று பேசினால் சங்கத்தை விட்டுப் போய்விடு வார்கள் என்றஞ்சி வெறும் பொருளாதார விசயங்களை மட்டும் புள்ளிவிவரங்களோடு பொளந்துகட்டி உறுப்பினர் எண்ணிக்கையை தக்கவைத்துக்கொள்கிற சந்தர்ப்பவாதம் தற்காலிகமாக பலன் தரலாம். அத்தகைய அமைப்புகள் எவ்வளவு பலம் பொருந்தியதாய் இருந்தாலும்கூட உண்மையில் அவற்றால் பொருளாதாராக் கோரிக்கைகளைக்கூட வெல்ல முடியாது என்பதுதான் உண்மை. இவரும் தொழிலாளி, அவரும் தொழிலாளி, ஆகவே இருவரும் தொழிலாளி வர்க்கத்தினர் என்ற எளிய சூத்திரங்களை வைத்துக்கொண்டு  நடப்பது சங்கத்தொழிலாக வேண்டுமானால் இருக்கலாமே யன்றி தொழிற்சங்கமாக இருக்க முடியாது. சாதியடிப்படை யில் தொழிலாளர்களை சங்கத்தில் திரட்டுவதும் சாதிய ஒடுக்குதலை எதிர்க்காமலே சங்கத்திற்குள் தொழிலாளிகளைத் திரட்டி வைத்திருப்பதும் ஒரேவகைப்பட்ட விளைவுகளையே உருவாக்குகின்றன.

தொழிலாளி வர்க்கம் என்ற ஒன்று ஏற்கனவே உருவாகி முதலாளித்துவத்தை எதிர்த்தப் புரட்சிக்கு தயார்நிலையில் இருப்பதாகவும் சாதியொடுக்குமுறை போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதன் மூலம் அதன் போராட்ட இலக்கு திசைமாறிவிடும் என்று பதறுவதுமான பாவனைகளே இங்கு அதிகமாயுள்ளன. இந்தக் கற்பிதங்களின் காரணமாகத்தான் இந்தியாவில் தொழிலாளிகளை ஒரு வர்க்கமாக அணிதிரட்ட முடியாமல் தொழிற்சங்க இயக்கம் தத்தளிக்கிறது. வேலைத்தளங்களிலும் அதற்கு வெளியேயும் பிராமணக் கருத்தியல் செல்வாக்குடன் செயல்படுவதானது முதலாளித்துவத்திற்குத்தான் தேவையேயன்றி தொழிற்சங்க இயக்கத் திற்கோ உழைப்பாளி மக்களின் கட்சிகளுக்கோ அல்ல.

இங்கேதான் வெறும் பொருளதாரப் புரட்சி என்று சொல்லாமல் சமூகப்புரட்சி என்று மார்க்ஸ் சொன்னதையும் கூலியடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய இலக்குகளை நோக்கி நகர வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னதையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இப்படிப் பார்க்க வேண்டுவது, இருவரது சொற்களிலிருந்தும் வேண்டியதை எடுத்து ஒட்டுப்போட்டு விரும்பிய வடிவத்தை வலிந்து பெறுவதற்கல்ல. சமூக மாற்றம் என்பதிலும் அதை தொழிலாளிவர்க்கம் நிறைவேற்றும் என்பதிலும் மார்க்சும் அம்பேத்கரும் கருத்தொருமை கொண்டுள்ளனர்.

எனில் இருவரது சிந்தனைகளையும் ஏற்று செயலாற்றுவதில் அக்கறையுள்ளவர்கள் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாகத் திரள்வதில் தடையாகி மறிக்கிற சாதிய ஏற்றத்தாழ்வுகளை அடையாளம் காண்பதும் அதற்கு எதிராகப் போராடுவதும் அவசியமாகிறது. தொழிலாளர்களுக்கிடையே இருக்கும் இந்த உள்முரண்பாடுகளை தீர்ப்பதற்கு  தொழிற்சங்க இயக்கம் தனது ஆற்றலை பயன்படுத்தும் போதுதான் களத்திலும் கருத்திலும் வர்க்க அணிதிரட்சி சாத்தியமாகும்.

பின்குறிப்பு: பிராமணர் என்ற சொல் சாதியப்படிநிலையை வலியுறுத்துகிறது. எனவே பார்ப்பனர் என்ற சொல்லையே நான் பயன்படுத்துகிறேன். ஆனால் அம்பேத்கர் பிராமணியம் என்ற சொல்லை பாவித்திருப்பதால் இக்கட்டுரையில் அவ்வாறே பயன்படுத்தியிருக்கிறேன்.

உதவிய நூல்கள்:
அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுப்பு நூல்கள்: 1, 6,7,8, 37

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...