எமர்ஜென்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எமர்ஜென்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 30

விஜயகாந்த் அவர்களே, கவனமாய் வாய் திறக்கவும்... ஆதவன் தீட்சண்யா

வாசல் வெளியீடான "ஆகாயத்தில் எறிந்த கல்" தொகுப்பில் உள்ள இக்கட்டுரை 2008 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. 





விஜயகாந்த் அவர்களே, 

தாங்கள் கட்சி ஆரம்பித்த பொழுது, ‘தயவுசெய்து விஜயகாந்தை முழுநேர அரசியல்வாதியாக ஒத்துக்கொள்ளுங்கள், அப்படியாவது தமிழ் சினிமா பிழைத்துப் போகட்டும்’ என்று எஸ்எம்எஸ் ஒன்று தமிழ்நாட்டில் உலாவந்ததை தாங்கள் அறிவீர்கள். நீங்கள் கட்சி ஆரம்பித்த விசயத்தை ஒரு தொலைக்காட்சி தனது விளையாட்டுச் செய்திகளின் கீழ் வகைப்படுத்தி சொன்னதாக ஒரு கிண்டல் இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது. ஒரு முதலாளியாக இருந்து பெரும் மூலதனத்தில் கல்லூரியும், கல்யாண மண்டபமும் கட்டியது போன்றுதான் இப்போது ஒரு கட்சியையும் நீங்கள் தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு. நான் அப்படியெல்லாம் தங்களை குறைத்து மதிப்பிடவில்லை.

தமிழகத்தை ஆண்ட / ஆள்கிற கட்சிகளின் மீது அதிருப்தி கொண்டுள்ள மக்களில் ஒரு பகுதியினர் தங்களின் தலைமையின் கீழ் அணிதிரண்டிருக்கும் எதார்த்தத்தைக் கண்ட பிறகு பலரும் தங்களைப் பற்றிய கருத்துகளை மாற்றிக் கொண்டுள்ளனர். மக்கள் உங்கள் பின்னே அணிதிரள்வதற்கான காரணங்கள் எதுவாக இருந்தபோதிலும், நீங்கள் இன்று தமிழ்நாட்டில் ஒரு அரசியல் சக்தி என்பது புறக்கணிக்க முடியாத உண்மை. ஆனால், கல்லூரியின் தாளாளாராகவும் கல்யாண மண்டப உரிமையாளராகவும் உங்களது மனம்போன போக்கில் பேசித் திரிவதைப் போல, ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்களுக்குத் தோன்றியதையெல்லாம் பேசத் துணியாதீர்கள் என்று சொல்லவே இந்த திறந்த மடலை எழுத வேண்டியுள்ளது.

2008 செப்டம்பர் 14 ஆம் நாள் தங்களது கட்சியின் இளைஞர் அமைப்புக்கான கொடியை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தங்களது இளைஞர் அமைப்பின் கொடியில் இரண்டு ஆண்கள் மட்டுமே இருந்ததைக் கண்டபோது, இளைஞர் என்ற சொல் பேண்ட் சட்டை போட்ட ஆண்களை மட்டுமே குறிக்கக் கூடியதா- வேட்டி/ கோவணம் கட்டுகிறவர்களில் உள்ள இளவயதினர் இந்த இளைஞர் என்ற விளிப்புக்குள் வரமாட்டார்களா என்ற கேள்வி எனக்கு வந்து தொலைத்தது. அரசியல் என்பது ஆண்கள் மேய்ந்து திரியும் அநாமத்துக் காடு என்கிற மனநிலை தங்களுக்கிருப்பதையும் இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஒரு ஒப்புக்குக்கூட பெண்ணையும் சமமாய் பொதுவெளியில் இணைத்துப் பார்க்கும் மனநிலை உங்களுக்கு வாய்க்காமல் போனதற்கான காரணங்களை நுணுகி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. ஒரு சராசரி ஆண் என்கிற இயல்பான மனப்பதிவைத் தாண்டுவது சினிமாவில் அடிக்கிற ஜம்ப் போல அத்தனை எளிதானதல்ல.

அது உங்கள் கொடி, அதில் என்னமும் போட்டுக் கொள்ளுங்கள். அதற்கப்புறம் நீங்கள் திருவாய் மலர்ந்தருளிய விசயங்கள் தான் என் கவனத்தை ஈர்த்தவை. முதல்நாள் புதுதில்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு பற்றி கருத்து தெரிவிக்க வந்த நீங்கள், நாட்டின் உளவுத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதாகக் கூறினீர்கள். அது உண்மைதான். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பிறகே தனது அசகாயசூரத்தனங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிற உளவுத்துறையும் இதர காவல்துறைப் பிரிவுகளும் அப்படியான பயங்கரத்தை தடுப்பதற்கு ஏன் முயற்சிப்பதில்லை என்ற கேள்வி எனக்கும் இருக்கிறது. கார்கிலில் நடந்த ஊடுருவலைக்கூட ஆடுமேய்க்கும் மலைகிராமத்து சிறுவன் ஒருவன்தான் கண்டறிந்து கூறினான் என்பது போன்ற சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அதற்கப்புறம் நீங்கள் பரிந்துரைத்த தீர்வு இருக்கிறதே அதுதான் அபத்தம். அதாவது நீங்கள் கட்சி ஆரம்பித்ததை விளையாட்டுச் செய்திகளில் தெரிவித்ததை நியாயப்படுத்தும் தன்மை கொண்டது.

பல சினிமாக்களில் தீவிர தேசபக்த காவல் அதிகாரியாக நடித்து தீவிரவாதிகளை பின்னி பெடலெடுத்திருக்கும் தங்களிடமோ அல்லது அதே வகைப்பட்ட படங்களில் தங்களைப் போலவே திரையில் தோன்றுகிற அர்ஜூன் போன்ற அல்பைகளிடமோ அந்த உளவுத்துறையை ஒப்படைக்குமாறு நீங்கள் கேட்டிருந்தால்கூட தப்பில்லை. ஒரு எக்ஸ்பீரியன்ஸ்டு ஆளு கேக்குறாருப்பா என்று தமாஷாக போயிருக்கலாம்... ஆனால் உங்களது பரிந்துரை, இந்திரா காந்தியம்மா கொண்டுவந்த எமர்ஜென்சி மறுபடியும் இங்கே வந்தால்தான் எல்லாம் சரியாகும் என்பதுதான். திருவாளர் விஜயகாந்த் அவர்களே எமர்ஜென்சி என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? மற்றவர்களைப் போல தெளிந்து தான் பேசுகிறீர்களா என்று நான் கேட்கமாட்டேன், தெரிந்துதான் பேசுகிறீர்களா?

எமர்ஜென்சி வந்தால் உளவுத்துறை சரியாகிவிடும் என்கிற உங்கள் கணக்கும்கூட பொய்தான். எமர்ஜென்சியில் உளவுத்துறையின் வேலை நாட்டையோ மக்களையோ பாதுகாப்பதாய் இருக்கவில்லை. இந்திராகாந்தியின் எதேச்சதிகாரத்தை யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்று வேவு பார்க்கிற வேலையில்தான் அது ஈடுபட்டிருந்தது. உளவுத்துறை செயலற்றிருந்தால் அதற்குண்டான வழியைப் பார்க்காமல் இந்திய மக்கள் மறக்க நினைக்கிற எமர்ஜென்சி என்கிற அந்த கொடுங்கனவை ஏன் மறுபடியும் பரிந்துரைக்கிறீர்?

பிரிட்டிஷ் ரூல்தான் கரெக்ட் என்றும், மிலிட்டரி ரூல் வந்தால்தான் எல்லாம் சரியாகும் என்றும் பேசித்திரிகிற அபத்தக்களஞ்சியங்கள் பலரை ஏற்கனவே இந்தச் சமூகம் கண்டு காரியுமிழ்ந்திருக்கிறது என்பதை தாங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காலனியாதிக்கத்தின் கொடுமைகளையும் மிலிட்டரி ஆட்சியின் சர்வாதிகாரங்களையும் பற்றிய அரசியல் மற்றும் வரலாற்றுப் புரிதலற்றதான இப்பரிந்துரைகளுக்கு சற்றும் குறையாததுதான் எமர்ஜென்சியைப் பற்றிய தங்களது புளகாங்கிதமும்.

1971ஆம் ஆண்டு தேர்தல். ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் இந்திராகாந்தி. பிரதமரின் தனிச்செயலாளராக இருந்த யஷ்பால் கபூர் என்கிற அரசு ஊழியர், அரசுப்பணியிலிருந்து விலகுவதற்கு முன்பாகவே, இந்திராவின் தேர்தல் முகவராக பணியாற்ற இசைவு தெரிவித்திருக்கிறார். ஆனால் 13.1.1971 அன்றுதான் பணிவிலகல் கடிதத்தை தந்திருக்கிறார். அதாவது, தேர்தல் முகவராகப் பணியாற்ற அவர் சம்மதம் தெரிவித்த தேதியில் அவர் ஓர் அரசு ஊழியராய் இருந்திருக்கிறார். அரசு ஊழியரான அவரை தன் தேர்தல் பணிக்கு பயன்படுத்தியதன் மூலம் இந்திரா காந்தி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் விதிகளுக்கு எதிராக செயல்பட்டிருப்பதாகவும், ஆகவே அவர் வெற்றிபெற்றது செல்லாதென அறிவிக்கக் கோரியும் இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ்நாராயணன் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் இந்திராவுக்கென்று அமைக்கப்பட்ட மேடைகள் உ.பி. அரசின் பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டதையும் ஒரு குற்றச்சாட்டாக ராஜ்நாராயணன் சேர்த்திருந்தார்.

வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 123, விதி 7ன் படி இந்திராவின் நடவடிக்கைகள் தேர்தல் முறைகேடுகள் என்பதால் அவர் ரேபரேலியில் வெற்றி பெற்றது செல்லாதெனவும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டதற்காக அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாதென தடைவிதித்தும் 1975 ஜூன் 12ஆம் நாள் தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பின்படி ரேபரேலிக்கு மறுதேர்தல் நடத்தவேண்டும். ஆனால் இந்திராகாந்தி அங்கு மட்டுமல்ல நாட்டின் வேறெந்தத் தொகுதியிலும் ஆறாண்டுகளுக்கு போட்டியிட முடியாது. சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ஒவ்வொரு படத்திலும் நீங்கள் உதிர்க்கும் வசனமெல்லாம் சாமான்யர்களுக்குத்தான் மிஸ்டர் விஜயகாந்த்- பதவியையும் அதிகாரத்தையும் இழக்கத் துணியாத இந்திரா காந்திக்கு அல்ல. எனவே அவர் இத்தீர்ப்புக்கு தடைவிதிக்குமாறு 20.6.1975 அன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றத்தில் அப்போது விடுமுறைக்கால நீதிபதியாயிருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், இந்திரா காந்தி மக்களவை உறுப்பினராய் நீடிக்கலாமெனவும் ஆனால் அவை நடவடிக்கைகளில் ஈடுபடவோ வாக்களிக்கவோ உறுப்பினர் என்பதற்கான ஊதியம் பெறவோ உரிமையில்லை எனவும் 25.6.1975 மாலை 3 மணிக்கு தீர்ப்பளித்தார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்று இந்திரா பதவி விலக வேண்டும் என்று நாடெங்கும் எதிர்ப்பலை கிளம்பியது. ஜூன் 25ஆம் தேதி தில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் பேரணி நாடு தழுவிய சத்தியாக்கிரக இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தது. தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை நாட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடியாய் சித்தரித்து தீர்ப்பு வெளியான ஒரு சில மணிகளிலேயே நெருக்கடி நிலையை அறிவிக்கத் துணிந்தார் இந்திரா. இதற்காக அமைச்சரவையைக் கூட கூட்டாமல், தன் கைப்பொம்மையாயும்- ஆகவே குடியரசுத் தலைவராயுமிருந்த ஃபக்ருதின் அலி அகமதிடம் 25 ஆம் தேதி பின்னிரவில் கையொப்பம் பெற்று 1975 ஜூன் 26 அதிகாலை முதல் இந்தியாவில் நெருக்கடி நிலையை அறிவித்தார் இந்திரா. சட்டத்திற்குட்பட்டு தான் இனியும் பதவியில் நீடிக்க முடியாது என்பதை அலகாபாத் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தெளிவாக அறிவித்துவிட்ட நிலையில் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக இந்திராவும் அவரது செல்லமகன் சஞ்சய் காந்தியும் அல்லக்கைகளும் தேர்ந்தெடுத்த இழிவான- எதேச்சதிகார பாதைதான் எமர்ஜென்சி.

எமர்ஜென்சி வந்த வரலாறு இதுவாயிருக்க, அது ஏதோ ரயிலையும் பஸ்சையும் சரியான நேரத்தில் ஓட வைப்பதற்காக வந்தது போல நீங்கள் புகழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது? பைத்தியக்காரன் கிழித்தது கோவணத்துக்கு ஆச்சுது என்பதுபோல ஆயிரம் அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்ட எமர்ஜென்சி காலத்தில் தவிர்க்கமுடியாமல் ஏற்பட்ட சிறுசிறு நன்மைகளைக் காட்டி, இதுதான் எமர்ஜென்சி என்று சித்தரிக்க முயற்சிப்பதா? சரி, வந்த வழிதான் இப்படி என்றால் அது செய்த காரியங்கள்தான் நியாயத்தின்பாற்பட்டதா?

ஜூன் 25 பின்னிரவு தொடங்கி 26 அதிகாலைக்குள்ளாக ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய், மதுதந்தவதே, ஜோதிர்மாய் பாசு, வாஜ்பாய், அத்வானி, முலயாம் சிங், லாலு என நாடு முழுவதும் 677 தலைவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த கைது விவகாரமோ நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்ட விஷயமோ ஊடகங்கள் வழியாக மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாதென்பதற்காக பெரும்பாலான செய்தித்தாள் நிறுவனங்கள் செயல்பட்டு வந்த பகதுர் ஷா சபர் மார்க் பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. தில்லியில் 34 அச்சகங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. செய்தித்தாள்களை கடைகளுக்கு விநியோகிக்கும் ஏழாயிரம் பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.

அடுத்து வந்த நாட்களில் கருத்துச் சுதந்திரம் கடும் அச்சுறுத்தலுக்குள்ளானது. பத்திரிகைகள் கடும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. மத்திய அரசின் தணிக்கை அதிகாரிகள் மனம்போன போக்கில் செய்திகளை நீக்கவும் திருத்தவும் அதிகாரம் பெற்றிருந்தனர். எதிர்த்து எழுதும் பத்திரிகைகளுக்கு அரசின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. நெருக்கடி நிலையை எதிர்த்த இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பஞ்சாபில் உருது இதழ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப், அமெரிக்காவின் நியூஸ்வீக் ஆகிய இதழ்களின் செய்தியாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். கருத்துரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு 1966ல் உருவாக்கப்பட்ட பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா கலைக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டிலிருந்த வானொலியும் தொலைக்காட்சியும் இந்திராவின் ஜால்ராக்களாக மாறிவிட்டிருந்தன.

ஜனநாயகத்தின் மற்றொரு தூணென கொண்டாடப்படுகிற நீதித்துறையும் தப்பவில்லை. அதிகாரத்திற்கும் முறைகேடுகளுக்கும் துணைபோகாதிருக்கும் ஜக்மோகன்லால் சின்ஹாக்களும் வி.ஆர்.கிருஷ்ணய்யர்களும் இருக்கிற நீதித் துறை இந்திராவைப் பொறுத்தவரை அநீதித்துறையே. எனவே அதை வெறுக்கவும் தன் கட்டுப்பாட்டின் கீழ் அத்துறையை வீழ்த்தவும் இந்திராவுக்கு நூறு நியாயங்களிருந்தன. அதன்பொருட்டு அவர் நீதிமன்றங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் ஏராளமான சட்டத் திருத்தங்களை கொண்டுவந்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த மனசாட்சியோடு செயல்பட்ட நீதிபதிகள் கடும் அச்சுறுத்தலுக்காளாயினர். மொத்தத்தில் சட்டத்திற்கு மேலாக தன்னை நிறுவிக்கொண்டார் இந்திரா.

மிசா, இந்திய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நாடு முழுவதும் 1,11,000 பேர் சிறையிலடைக்கப்பட்டிருந்ததாக பத்திரிகையாளர் வி.கிருஷ்ணா ஆனந்த் தெரிவிக்கிறார். இவர்களில் 39 எம்.பி.களும் அடக்கம். 1976 ஜனவரி 31 அன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. இக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் தொழுநோயாளிகளோடு சேர்த்து தங்க வைக்கப்பட்டனர். 24மணிநேரமும் லாக்அப்பிலேயே வைத்திருப்பது, கடுமையாகத் தாக்குவது, மருத்துவ உதவியை மறுப்பது, குறைந்தளவே உணவளிப்பது, உணவில் வேப்பெண்ணையை கலந்து தருவது, தாகத்திற்கு தண்ணீர் கேட்டால் வாய்க்குள் சிறைக்காவலர்கள் சிறுநீர் கழிப்பது என காலனியாட்சியிலும் காணாத சித்திரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இப்படியான கைதுகளும் சித்திரவதைகளும் எதிர்க்கட்சியினருக்கு மட்டுமல்ல, எந்தவொரு இயக்கத்திலும் தொடர்பு கொண்டிராத எளிய மக்களுக்கும் நேர்ந்த கொடுமைகள் என்பதற்கு உதாரணம்தான் கேரள மாணவர் ராஜன், மங்களூர் மாணவர் உதயசங்கர் ஆகியோரின் மரணம். கடும் சித்திரவதை காரணமாக கன்னட நடிகை சிநேகலதா, திமுக தலைவர்கள் சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் ராபின் கலிதா, போன்றவர்கள் அகால மரணமடைந்தனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தின் பூமிய்யா, கிஸ்தே கவுடு ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். காவல்துறையின் வரம்பற்ற அதிகாரம் மக்களின் உயிர் குடிக்கும் எமனாய் இந்த மண்ணை ஆக்ரமித்திருந்தது.

அறுபதுகோடி வயிறு நிறைந்திட இருபதம்சத் திட்டம் வந்ததம்மா என்ற பாட்டு ஊரெங்கும் ஒலித்துக் கொண்டிருக்க, எளிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் கொஞ்சநஞ்சமா? துர்க்மான் கேட் போன்ற பகுதிகளில் இஸ்லாமியர் மீது நடந்த தாக்குதல்களை மறக்க முடியுமா? இறை நம்பிக்கையின் காரணமாக இஸ்லாமியர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள மறுக்கின்றனர் என்று இந்துத்துவவாதிகள் சொல்கிற அதே பொய்யை சொல்லிக் கொண்டு, திருமணமாகாத இஸ்லாமிய இளைஞர்களையும் தூக்கிப்போய் இனவிருத்தி நரம்பை அறுத்துவீசிய சஞ்சய்காந்தி என்ற ஒரு கொடுமைக்காரன் இனியொருமுறை இந்த மண்ணுக்குத் தேவையில்லை.

அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அனைத்து உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன. உயிர் வாழ்தலும்கூட அரசின் கருணையின்பாற்பட்டதாய் மாற்றப்பட்டிருந்தது. ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது. பேச்சைக் குறைப்பீர் உழைப்பை பெருக்குவீர் எனச் சொல்லி உழைக்கும் மக்களின் எல்லா கோரிக்கைகளும் பின்தள்ளப்பட்டன. தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டன. அமெரிக்க விமான நிலையத்தில் அண்டர்வேருடன் நிற்க வைக்கப்பட்ட போதும் அவமானப்படாத அளவுக்கு தோல் தடித்துப்போன இன்றைய ஜார்ஜ் பெர்னாண்டஸ் ரோஷத்தோடும் போர்க்குணத்தோடும் வாழ்ந்த காலம் அது. ரயில்வே தொழிலாளர்களின் ஆற்றல்மிக்கத் தலைவராய் அப்போதிருந்த அவரை கேட்டுப் பாருங்கள், தொழிலாளிகள் மீது நடந்த ஒடுக்குமுறைகளின் வன்மையை அவர் கூறக்கூடும்.

இப்படி இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் கொடுமைகளை எழுதிப் போகுமளவுக்கு இந்திய சமூகத்தை ஆட்டிப் படைத்ததாய் இருந்த எமர்ஜென்சி காலத்தில் உளவுத்துறை ஒழுங்காய் செயல்பட்டது என்று எந்த ஆதாரத்தின்மீது நின்று சொன்னீர்கள் விஜயகாந்த்? அப்போது எந்த குண்டுவெடிப்புச் சதியை அது முன்கூட்டியே உளவறிந்து தடுத்தது? இன்னும் சொன்னால் இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, சித்தார்த்த சங்கர் ரே, பன்சிலால், ஆர்.கே.தவான் போன்ற தான்தோன்றிகளின் கூட்டம்தான் இந்த சமூகத்தின்மீது பேரழிவை உண்டாக்கும் எமர்ஜென்சி என்ற குண்டை வீசியது. இந்த கும்பலின் அட்டூழியங்களுக்கு எதிரான தலைவர்களையும் அமைப்புகளையும் கண்காணிக்கவும் உளவு சொல்லவும் பணிக்கப்பட்டிருந்த உளவுத்துறை, அந்த வேலையையும் செய்யாமல் சஞ்சய்காந்தியின் பைஜாமாவுக்கு நாடா கோர்த்துக் கொண்டிருந்த விசயத்தை நாடறியும். மாருதி கார் ஊழல் மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட அந்த சஞ்சய் காந்தியின் விரலசைப்புக்கு பணிந்து போகுமளவுக்கு உளவுத்துறை துணிச்சலற்றுக் கிடந்தது.

அவசரநிலை எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், உயிர்ச்சேதம் விளைவிக்காத டம்மி குண்டுகளை ரயில்பாதைகளின் நெடுகவும் வெடிக்க வைத்து அரசை எச்சரித்தார்கள். இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் ஒன்றைக்கூட, அப்போது மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக தாங்கள் பாராட்டும் உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லை தெரியுமா? குண்டுசத்தம் கேட்டபின் குறட்டையிலிருந்து விழித்துக்கொண்ட அந்த உளவுத்துறை பரோடா டைனமைட் வழக்கு என்ற ஒன்றை நடத்தியது. அதிலும் இன்னார்தான் குற்றவாளி என்று நிரூபிக்கவில்லை.

உளவுத்துறையால் இந்திய மக்களுக்கு விளைந்த நன்மை என்று ஏதேனும் இருக்குமானால், அது, சட்டத்தையெல்லாம் வளைத்து ஐந்தாண்டுக்கொரு முறை தேர்தல் என்பதை ஆறாண்டுகாலமாக மாற்றிக்கொண்ட இந்திராவிடம் தவறான அறிக்கை கொடுத்து அவரை ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தத் தூண்டியதுதான். இப்போது தேர்தல் நடத்தினால் ஜெயித்துவிடுவீர்கள் என்று இந்த உளவுத்துறை கொடுத்த அறிக்கையை நம்பித்தான் எமர்ஜென்சியை விலக்கிக்கொண்டு இந்திரா தேர்தலை நடத்தி மண்ணைக் கவ்வினார் என்பதையாவது தாங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கருணாநிதி மீதான தனிப்பட்ட விரோதகுரோதங்களுக்காக சிவப்பு/வெளுப்பு எம்.ஜி.ஆர். எமர்ஜென்சியை ஆதரித்த தவறைச் செய்தார். ஆனால் கறுப்பு/பழுப்பு எம்.ஜி.ஆராக வர்ணிக்கப்படும் தாங்கள் அத்தவறை செய்யக்கூடாது. எமர்ஜென்சியைக் கொண்டுவந்ததற்காக இந்திய மக்கள் தனக்கு வழங்கிய தண்டனையை வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார் இந்திரா. இத்தகைய வரலாற்றை இனியொருபோதும் செய்யமாட்டேன் என்று அவரே தெண்டனிட்டு மன்னிப்புக் கோரிய நிலையில், எமர்ஜென்சி வந்தால் தான் எல்லாம் சரியாகும் என்று உங்களைப் போன்றவர்கள் கூறுவது சரிதானா விஜயகாந்த் அவர்களே? எமர்ஜென்சி வந்தால் இப்படி மனம்போன போக்கில் நீங்கள் பேசுவதற்கான சுதந்திரம்கூட மறுக்கப்பட்டுவிடும் என்பதை நினைவில் வையுங்கள். 

வடிவேல் வழக்கில் ஜாமீன் கோரமாட்டேன், சிறைக்கு சென்று மீண்டு வருவேன் என்று இப்போதுபோல் முழங்கவும் முடியாது. ஏனென்றால் எமர்ஜென்சியில் சிறைகள் உயிரெடுக்கும் வதைக்கொட்டில்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் (எல்லாக்காலத்திலும் கூட). சின்னக்கவுண்டரில் சுகன்யா வைத்த மொய்விருந்தை நினைத்துக்கொண்டு வேப்பெண்ணை கலந்த சோற்றைக்கூட சாப்பிட்டுவிடலாம் தான். ஆனால் தாகத்துக்கு என்ன செய்வது? யார் வாயில் பெய்யலாம் என்று மூத்திரப்பை கடுக்க சிறைக்காவலர்கள் காத்திருக்கும் இக்காலத்தில் வாயை மூடிக் கொண்டிருப்பதோ அல்லது கவனமாய் திறப்பதோ பாதுகாப்பானது என்பதை அறியுங்கள் கேப்டன்.


சனி, நவம்பர் 24

ஒசூரெனப்படுவது யாதெனின் : 9 - ஆதவன் தீட்சண்யா


தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்து சம்பளம் வாங்கினோமா... கிம்பளம் தேத்தினோமா  என்பதிலேயே குறியாக இருப்பதுதான் ஒரு அரசு ஊழியருக்கான இலக்கணமாகச் சொல்லப் படுகிறது. வேலையில் சேர்ந்ததற்காக அரசாங்கத்திடம் இருந்து சம்பளத்தையும் வேலை செய்வதற்காக மக்களிடம் இருந்து நேரடியாகக் கிம்பளத்தையும் பெறுகிற சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்கிறவர்கள் இங்கு ஆகச்சிறந்த அரசு ஊழியராகிறார். லஞ்சம் பெறாதவர் யோக்கியர் என்று சொல்லப்பட்டு வந்ததுபோய், 'கை நீட்டிக் காசுவாங்கிட்டா கச்சிதமாக வேலையை முடித்துக் கொடுக்கக்கூடிய அளவுக்கு அவர் பக்கா ஜென்டில்மேன், யோக்கியர்...’ என்று சொல்லும் அளவுக்கு மக்களின் மனநிலையை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை இத்தகைய அரசு ஊழியர்களுக்குத்தான் உண்டு.

கடுகடுவென முகம்கொண்ட பத்துபேரில் எட்டுபேர் அரசு ஊழியர்களாகத்தான் இருப்பார்கள். தன்னிடம் வருகிற சனத்திடம் லேசாகச் சிரித்தால்கூட அதையே ஒரு சலுகையாகக் கருதிக்கொண்டு கொடுக்கிற லஞ்சத்தைக் குறைத்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில்  கடுகடுவென முகத்தைக் காட்டத்தொடங்கிப் பின் அப்படியே இறுகி, அதையே நிரந்தர முகமாகப் பெற்றவர்கள். லட்சக்கணக்கான கோடி ரூபாய்களில் பொதுச்சொத்தைக் கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களோடு மிக நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள இவர்கள் கைசுத்தம் வாய்ச்சுத்தம் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவீனம். ஆனால், 'கோன் எவ்வாறோ குடிமக்கள் அவ்வாறே’ என்று ஆட்சியாளர்களைக் குற்றம் சாட்டிவிட்டு யாரும் தப்பிவிட முடியாது.குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்களோ அதற்கேற்றவாறே ஆட்சியாளர்கள் அமைகிறார்கள். ஆட்சியாளர்களைப் பொறுத்தே அவர்களுக்குக் கீழே ஊழியர்கள் அமைகிறார்கள்.

லஞ்சம் வாங்காமலிருந்து பிழைக்கத்தெரியாதவர், சம்பாதிக்கத் துப்பில்லாதவர், கூறுபாடு தெரியாதவர், ஊரோடு ஒத்துப்போகாத தனிப்பிண்டம், வைக்கப்போர் நாய் என்றெல்லாம் பல பெயர்களால் அவமதிக்கப்படுவதைக்காட்டிலும் லஞ்சப்பேர்வழி என்கிற ஒரேயரு அவப்பெயர் கௌரவமானதுதான் என்கிற முடிவுக்கு ஒருவர் வந்து சேர்வதற்கு அவருடைய தனிப்பட்ட குணக்கேடு மட்டுமே காரணமல்ல, இந்தச் சமூக அமைப்பும்தான். எப்படி சம்பாதித்தார் என்பதை விடவும் எவ்வளவு சம்பாதித்திருக்கிறார் என்பதைவைத்தே ஒருவருக்கு மதிப்பையும் மரியாதையையும் வழங்குவதாக இருக்கும் இந்தச் சமூகத்தில் மதிப்பிழந்து நிற்கிற தைரியம் யாருக்குத்தான் வரும்?  லஞ்சம் கொடுப்பவராகவோ பெறுகிறவராகவோ உளவியல்ரீதியாகவும் நடைமுறையிலும் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு தனிநபரும் சீரழிந்திருக்கிற ஒரு சமூகத்துக்கு எவ்வகையான ஆட்சியாளர்களும் அரசு ஊழியர்களும் தேவையோ அவ்வகையில் வாய்த்திருக்கிறார்கள். இங்குள்ள அதிகபட்ச வாய்ப்பே என்னவென்றால் லஞ்சம் வாங்காதவராக வேண்டுமானால் நீங்கள் தாக்குப்பிடிக்கலாம்... கொடுக்காமல் உங்களால் வாழமுடியாது என்பதுதான்.மக்களையும் நாட்டின் வளங்களையும் கொள்ளை யடிப்பதற்காகவும் இங்குள்ள ஏற்றத்தாழ்வுகளை பாதுகாப்பதற்காகவும் மட்டுமே காலனியவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு அரசு அமைப்பை காலத்திற்கேற்ற வகையில் மாற்றியமைக்காத குற்றத்திற்காக, இந்தச் சமூகத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையாக லஞ்சமும் ஊழலும் தொடரத்தான் செய்யும். அன்னா ஹசாரேயும் அர்விந்த் கெஜ்ரிவாலும் சோப்புநுரையை ஊதிக்கொண்டிருக்கிறார்கள்.  

ஆனால், இப்படித் தானுண்டு தன் வேலையுண்டு என்றில்லாமல், இராப்பகலும் ஊர் சுற்றிக்கொண்டு, அரசியல் கலை இலக்கியம் என்று பேசிக்கொண்டு, தொழிற்ச்சங்கம், போராட்டம் என்று அலைகிற அரசு ஊழியர்கள் ஊருக்கு பத்துப் பேராவது இருந்தார்கள். ஒடுக்குமுறை இயந்திரமான அரசின் ஒரு பகுதியாக இருக்கிற அரசு ஊழியர்களை ஒடுக்கப்பட்டவர்களாகக் கருதமுடியுமா, முடியாதா என்பதைத் தாண்டி, அவர்களை அணிதிரட்டி அரசியல் போதமேற்றி பெருந்திரளான சாமான்ய மக்களுக்கு அனுசரணையானவர்களாக மாற்றிவிட முடியாதா... கண்ணியமான வாழ்வை மேற்கொள்வதற்கான ஊதியத்தைப் பெற்றுத் தந்த பிறகாவது அவர்கள் மக்களைப் பிராண்டாமல் கைசுத்தத்தோடு வேலைபார்க்கமாட்டார்களா என்கிற நப்பாசையில் பொழுதுக்கும் சங்கம் போராட்டம் என்று அலைகிற பத்துப்பேரை நீங்கள் எல்லா ஊரிலும் பார்க்கமுடியும். நாளடைவில், இந்த நோக்கங்கள் பின்னுக்குப்போய் சங்கம் வைப்பதும், தலைவர்களாக இருப்பதும், சங்கமே இல்லாமல்போனாலும் தலைவர்களாக இருப்பதும்  முன்னுக்கு வந்துவிடும் ஆபத்துகளும் உண்டு. எது எப்படியோ ஊருக்கு பத்துபேர் இருந்தார்கள். அப்படி ஒசூருக்குள்ளும் பத்துபேர் இருந்தோமென்றால் எங்களுக்குத் தலைவர் ஏ.சி.மைக்கேல். அவரது டி.வி.எஸ். சாம்ப் வண்டியை ஒசூரின் பொதுஜன வாகனம் என்று சொல்லும் அளவுக்கு அதை யார் வேண்டுமானாலும் ஓட்டி பழகிக்கொண்டிருப்பார்கள்.  

ஒசூர் ஐ.டி.ஐ-ல் பணியாற்றிய மைக்கேல் தமிழ்நாட்டின் அரசு ஊழியர் இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவர். இப்பகுதியில் பரந்த மக்கள் தொடர்பும் செல்வாக்கும் பெற்றவர். எளிய குடும்பங்களில் இருந்து ஐ.டி.ஐ. படிக்க வந்த அனேகரை ஒசூர் தொழிற்சாலைகளில் புகுத்திவிட்டவர். எந்தவொரு அலுவலகத்திலும் தொழிற்சாலையிலும் தெருவிலும் அவரை அறிந்தவர்கள் இருந்தார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஒசூர் வட்டாரத் தலைவராகவும் இருந்தார். எந்த ஒரு அலுவலகத்திலாவது ஏதேனும் பிரச்னை என்று வந்துவிட்டால் அவரும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் ஆஜராகிவிடுவார்கள். இவர்களைப் போலவே இந்தியன் வங்கியில் ரகுபதி, ராஜா, சிவா, இன்சூரன்சில் கே.ஆர்.சக்ரவரத்தி, சேக்கிழார், பாபு, அஞ்சல் துறையில் மோகன்ராவ், கே.வி.நாகராஜன், ராஜநளா, தந்தி அலுவலகத்தில் ஜார்ஜ், இ.கணேசன், சக்திவேல், தொலைபேசி நிலையத்தில் ரத்தினவேல், ஐ.சுப்பிரமணி, சங்கரன், நான் என்று ஒரு பெரிய பட்டாளம் அங்கங்கே தயாராகி இதே வேலையாக அலைந்துகொண்டிருந்தது.  இந்தச் சூழலில்தான் 'சும்மா ஆடுற சாமிக்கு சூடம் காட்டினது போல...’ 1988-ல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் மாநிலம் தழுவிய போராட்டம் வெடித்தது.  முனிராஜ், மீனாட்சிசுந்தரம், கணேசன், புருசோத்தமன், சீனிவாசலு, சந்திரசேகர், சௌந்தர், சீதாராமன் என எங்களது பட்டாளம் விரிவடைந்தது. ஆனால், பெண்கள் யாரையும் இணைத்துக்கொண்டு செயல்படாத வெறும் ஆண் பட்டாளம்.  

மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரிய அந்த 1988-ம் வருடத்திய போராட்டம் ஒசூர் பகுதியில் அனைத்து மத்திய மாநில பொதுத் துறை ஊழியர்களின் கூட்டுப்போராட்டம் போல்நடந்தது. தொலைபேசி ஊழியர்களாகிய எங்களுடைய கே.ஜி.போஸ் இல்லம்தான் அந்தப் போராட்டக்குழுவின் அறிவிக்கப்படாத அலுவலகமாக இயங்கியது. எந்நேரமும் திமுதிமுவென கூட்டத்தால் பரபரத்துக்கிடந்த அந்த இல்லத்தில்தான், பொய்வழக்கின்பேரில் தேடப்பட்டுவந்த டியூக் பொன்ராஜ் போன்ற மாவட்டத் தலைவர்கள் சிலர் கைதுக்குச் சிக்காமல் நீதிமன்றத்தில் சரணடையும்வரை தலைமறைவாக இருந்தார்கள்.

'ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் எதுக்கு?’ என்று கேட்ட இந்த தமிழ்நாட்டில் அப்போது கவர்னர் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. ஆபாசத்தையும், வன்முறையையும், விலையேற்றத்தையும், வேலையின்மையையும், கள்ளச் சந்தையையும், கடத்தலையும், பதுக்கலையும் தடுப்பதற்குச் சுண்டுவிரலைக்கூட அசைக்காத கவர்னர் அலெக்சாண்டர், தொழிலாளர்களோ அரசு ஊழியர்களோ போராடினால் இரும்புக்கரம்கொண்டு அடக்குவோம் என்று கொக்கரித்தார். கொடிய அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருந்தார்.  கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற எங்கள்மீது குதிரைப் படையை ஏவிவிட்டார்.  கவர்னரின் ஆணையை ஏற்று தாக்குதல் நடத்திய போலிஸ்காரர்களுக்கும் சேர்த்து அந்தப் போராட்டம்தான் கணிசமான ஊதிய உயர்வைப் பெற்றுத்தந்தது.

ஒசூர் சார் ஆட்சியர் அலுவலக நூலகத்தில் இருக்கின்ற சேலம் கெஜட்டியர் ( லாஃப்னு மேனுவல், கால்நடைப் பண்ணை மற்றும் வனத் துறையின் திட்ட வரைவறிக்கைகள்) சர்வே ஆஃப் இந்தியாவின் அறிக்கை ஆகியவற்றை மேற்கோள் காட்டி இந்தப் போராட்டக் குழுவின் சார்பில்  தயாரித்தளித்த கோரிக்கை மனுவின்பேரில்தான் ஒசூர் தேன்கனிக்கோட்டை வட்டங்கள் மலைப் பிரதேசமாகஅறிவிக்கப்பட்டன. இங்கு பணியாற்றும் மாநில அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இன்றைக்கும் மாதாமாதம் தங்களுடைய சம்பளத்தோடு மலைவாழ்படியையும் பெற்றுவருகிறார்கள். பல தனியார் நிறுவன தொழிலாளர்களும் மலைவாழ்படி பெறுவதற்கு வழிபிறந்தது.

போராட்டக்களத்தில் உருவான ஒற்றுமையை வடிவப்படுத்தும் முகமாக மத்திய மாநில பொதுத் துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினை உருவாக்கினோம். ஏ.சி.மைக்கேல், தலைவர். நான் பொதுச்செயலாளர். வெவ்வேறு துறைகளைச் சார்ந்த 74 சங்கங்கள் அங்கம் வகித்த பேரமைப்பாக அது உருவெடுத்திருந்தது. மாநில அரசின் ஆணையைக்காட்டி  எல்.ஐ.சி., பொதுக் காப்பீட்டுத் துறை ஊழியர்களும் மலைவாழ்படியைப்பெற ஒருங்கிணைப்புக்குழு துணைநின்றது.  இந்த மலைவாழ்படி அமலுக்குவந்து பலமாதங்களானபின்பும் போலிசுக்கு வழங்கப்படாமலிருந்தது. என்னதான் ஆகாயத்தில் இருந்து குதித்த நினைப்பு போலிசுக்கு இருந்தாலும் அவர்களும் அரசு ஊழியர்கள்தானே என்று ஒரு நோட்டீசில் குறிப்பிட்டபிறகே அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒருவேளை போலிஸ்காரர்கள் ஏதாவது சங்கத்தை உருவாக்கி ஒருங்கிணைப்புக் குழுவில் புகார் செய்திருக்கிறார்களோ என்று காவல் துறை அதிகாரிகளுக்கு வந்த சந்தேகம்  கடைசிவரை தீரவேயில்லை.  

இதில் ஒரு கொடுமை என்னவென்றால், நான் வேலை பார்க்கிற தொலைபேசி ஊழியர்களுக்கோ அல்லது தபால், தந்தி, ரயில்வே, சுங்கம், பட்டுவாரியம் உள்ளிட்ட பிற மத்திய அரசு ஊழியர்களுக்கோ இந்த மலைவாழ்படியை இன்றுவரை பெறமுடியாமல் போனதுதான். மாநில அரசுக்கு இது மலைப் பகுதி, மத்திய அரசின் அளவீட்டில் இது தரைப் பகுதி. அதுபோலவே மாநில அரசு தனது ஊழியர்களுக்கு வருடத்தில் நான்கு மாதங்களுக்கு குளிர்காலப் படியினை வழங்கி வருகிறது. ஆனால், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு தடித்ததோல் இருப்பதாகக் கருதியோ என்னவோ அதையும் மறுத்துவிட்டது.  நான், மணிமோகன், கோவிந்தராஜ், மோகன்ராவ் ஆகியோர் செய்த முறையீட்டின் பேரில் மத்திய தீர்ப்பாயம் சாதகமான தீர்ப்பை வழங்கியிருந்தபோதும் காம்போஸிட் ஹில் அவலவன்ஸ் என்கிற குழப்படியான அளவீட்டைக் காட்டி இன்றுவரை மத்திய அரசு மறுத்துவருகிறது. நானும் தொழிற்சங்கப் பணியிலிருந்து படிப்படியாக விடுவித்துக்கொண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பக்கம் நகர்ந்துவிட்ட பின்பு அந்தக் கோரிக்கை கேட்பாரற்றதாகிப்போனது.

***
தேன்கனிக்கோட்டையில் பணியாற்றும்போதிருந்தே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்தது. பின்னாளில் பட்டிமன்ற பேச்சாளராகத் தொலைக்காட்சிகளின் வழியே அறியப்பட்ட கவிஞர் வெண்மணி 1980-களில் திருவண்ணாமலையில் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது தலைமையில் ஓசூரின் மொட்டைமாடிகளில் அவ்வப்போது நடந்த கவியரங்கங்களில் பங்கெடுத்திருக்கிறேன். 'கனவின் விலை ஒரு ரூபாய்’, 'சின்ன விடுதலை’ போன்ற கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள மேலூர் மாவேந்தன் இதேகாலத்தில் ஒசூர் மின்வாரிய அலுவலகத்துக்கு மாற்றலாகி வந்திருந்தார். அவர் ஆங்கிலத்திலும் கவிதை எழுதக்கூடியவர். கவிதைகள்பற்றி அவருடனான உரையாடல் தொடக்கநிலையில் இருந்த எங்களுக்கெல்லாம் பேருதவியாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

கவியரங்கம் என்பதோடு நில்லாமல் அவ்வப்போது மேலெழுந்துவந்த விஷயங்கள் பற்றிய விவாதம், கருத்தரங்கம் அல்லது சொற்பொழிவு என்று நாங்கள் நடத்திய நிகழ்ச்சிகளின் தன்மை மாறியபோது மொட்டைமாடிகளைவிட்டு கீழே இறங்கி மக்கள் நடமாடும் தெருக்களுக்கு வந்திருந்தோம். தாலுகாபீஸ்  ரோட்டில் காமராஜ் காலனிக்கு அருகில் மேடையமைத்து நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு எங்களது நடவடிக்கைகளை விரிவுபடுத்தினோம். பிரதான சாலையின் ஓரத்தில் மேடையமைத்து கலை இலக்கியம் பற்றிப் பேசுவதைப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகக்கருதி புகார் சொல்லிப் புலம்பும் நகரத்து மனநிலை, ஒசூர் மக்களைப் பீடிக்காதிருந்த காலமது.  அந்த வழியாக வரும் யாராக இருந்தாலும் கொஞ்நேரம் நின்று நிகழ்ச்சியைப் பார்க்காமல் கடந்துவிடமாட்டார்கள். நிகழ்ச்சியே சரியில்லை என்றாலும், பார்த்துவிட்டு விமர்சனம் செய்கிற பக்குவம் எப்படியோ அந்த சனங்களிடம் அன்றைக்கு இருந்தது.

சென்னை கலைக்குழுவின் தாக்கத்தால் ஒசூர் தொழிலாளர்களால் தொடங்கப்பட்ட ஒசூர் கலைக் குழு, 'அஞ்சறைப்பெட்டி’, 'பெண்’ போன்ற நாடகங்களை இப்பகுதியில் நடத்திவந்தது. தொழிற்சங்கங்களில் பணியாற்றிவந்த தோழர்களின் குடும்பங்களில் இருந்து சித்ரா பொன்னுசாமி, ஜெயந்தி, கீதா சேகர் போன்ற தோழியர்கள் நடிக்க வந்திருந்தார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் குமணனாக வேடமிட்டு நடித்திருந்த 'மாபெரும் தகுதி’யைவைத்து நானும் அஞ்சறைப் பெட்டியில் நடித்துவந்தேன். கோமல் சுவாமிநாதன் ஒருங்கிணைப்பில் மதுரையில் நடந்த ஐந்துநாள் நாடக முகாமில் பங்கேற்று திரும்பியபிறகு நான் என்னை ஒரு நாடகக்காரனாகவும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் 'தலைவர் மரணம்’, 'மாப்பிள்ளைக்கடை’ போன்ற நாடகங்களுக்குப் பிறகு, வேறு எதிலும் நடிக்காமல் இருந்து கலைத் துறையைக் காப்பாற்றுவது என்று அமைதியடைந்து விட்டேன். அறிவியல் இயக்க கலைப் பயணத்தில் பங்கெடுத்து பிரளயன் மேற்பார்வையில் முறையாக பயிற்சியெடுத்து நடிப்பனுபவம் பெற்றிருந்த போப்பு, லட்சுமி, அன்புமணி, தேவா போன்றவர்கள் தொடர்ந்து மேடையேறிவந்தார்கள். பெண் நாடகத்தில் விநாயகம் பேசும் 'பஜ்ஜி குடு... சொஜ்ஜி குடு...’ என்ற வசனத்தை வைத்து 'ஏம்பா, சொஜ்ஜின்னா என்னாப்பா...’ என்று ஓட்டுவோம்.

மக்களுக்காக நடத்துகிற நிகழ்ச்சிகளுக்கு மக்களே நிதி கொடுப்பார்கள் என்று தைரியமாக எவ்விதக் கூச்சமுமின்றி தெருவில் இறங்கி உண்டியல் குலுக்கி நிதி சேர்ப்போம். குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்கிற உமாபதி, இரவி, தாடி செல்வம், முரளி, பிரான்சிஸ், தங்கப்பாண்டி, சுபாஷ், கோபால், அஸ்கர்கான், செல்லப்பாண்டி, தமிழ்ச்செல்வம், ராஜா, பெரியசாமி, பாண்டிக்கண்ணன், பவித்ரம் குமார் (இவரை உபத்ரவம் குமார் என்றும் செல்லமாக அழைப்பதுண்டு) போன்ற தோழர்கள் ஒருவீடு பாக்கியில்லாமல் துண்டுப்பிரசுரம் கொடுத்து நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்துவிட்டு நிதியும் கேட்பார்கள், மக்களும் தங்களிடமிருப்பதை இல்லையெனாது கொடுப்பவர்களாக இருந்தார்கள். இதேபோலத்தான் ஒவ்வொரு ஆலையின் வாயிலிலும் கடைவீதியிலும் வசூலிப்பார்கள். எல்.முருகன் இதில் சமர்த்தர். சரியானதென்று நம்பும் விஷயங்களுக்கு உதவுகிறவர்களாகத்தான் மக்கள் எப்போதும் இருக்கிறார்கள். 'தேவையான கருத்துகளை முன்வைக்கிற நிகழ்ச்சிகளை நடத்துறீங்க.. தொடர்ந்து செய்யுங்க...’ என்று ஆடிட்டர் முத்துக்காளை கொடுத்த நூறுரூபாய்த்தாள் இன்றைக்கும் என் கண்ணுக்குள் இருக்கிறது. அதுதான் நாங்கள் அதுவரை பெற்றதிலேயே பெரியதொகை.

மக்களின் பங்களிப்போடு நடத்தப்படுகிற நிகழ்ச்சிகள் மக்களுக்கு பொறுப்புகூறும் கடப்பாட்டையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் உணர்ந்திருக்காவிட்டாலும் அவ்வாறுதான் நடந்துகொண்டோம். நிகழ்ச்சிக்கு வசூலாகும் தொகை எவ்வளவு, செலவுபோக கையிருப்பு எவ்வளவு, அதை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்றெல்லாம் நாங்கள் அறிவித்ததற்குக் காரணம், நாங்கள் யோக்கியமானவர்கள் என்று பீற்றுவதற்காக அல்ல. தாங்கள் கொடுத்த நிதி முறையாக செலவாகியிருக்கிறதா என்று அறிகிற உரிமை மக்களுக்கு இருக்கிறது என்பதால்தான். இத்தனைக்கும் அவர்களில் பலரும் கொடுத்ததென்னவோ அதிகப்படியாக ஐந்து ரூபாயாக இருக்கும். ஆனாலும் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதே எங்களுக்கு முக்கியமாக இருந்தது.

திருநெல்வேலியில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில மாநாட்டுக்குச் சென்றபோது அங்கு எளிமையாகவும்  வித்தியாசமாகவும் செய்யப்பட்டிருந்த விளம்பரங்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. நோட்டுப் புத்தகங்களுக்கு மேலுறையாகப் போடுகிற பழுப்புத்தாளை சுவற்றில்ஒட்டி அதன்மீது விதவிதமான போஸ்டர் கலர்களில் எழுதியிருந்தார் ஓவியர் கிருஷி. அடடா, இப்படி ஒரு பேப்பரை ஒட்டி இன்ஸ்டன்ட்டாக சுவரைத் தயார் பண்ணிக்கொள்ளத் தெரியாமல் இவ்வளவு நாளும் வெள்ளையடித்துக்கொண்டிருந்தோமே என்று என் அறியாமையின்மீது எனக்கே கோபம்வந்தது. அவரது கையெழுத்தும் சற்றே ஒயிலாக ஒரு புதுச்சாயலுடன் இருந்தது. அது தமிழை மலையாளத்தில் அல்லது மலையாளத்தை தமிழில் எழுதியதுபோன்ற மயக்கத்தை தருவதாயிருந்தது. எனக்குள் இருந்த சுவரெழுத்துக்காரன் விழித்தெழுந்து 'ஜிங்குஜிங்கு’ என்று உள்ளுக்குள் ஆடினான். பிறகென்ன, ஒசூர் திரும்பியதும் ஒரு சுவரையும் மிச்சம்வைக்காமல் விளையாடிவிடவேண்டியதுதான் என்று தீர்மானித்துக்கொண்டேன். அப்படியே நடந்தும் தொலைத்தது. போதாக்குறைக்கு திருவண்ணாமலை கருணாவும் சேர்ந்துகொண்டபிறகு, தமிழின் பாடு தகிங்கினத்தோம் ஆனது. பெரிய சுவற்றுக்கு பேப்பர் ஒட்டி அதன் ஓரத்தில் ரெண்டேவரி எழுதி மிச்ச இடத்தைக் காலியாக விடுவது, அடர் வண்ணத் தாள்களை ஒட்டி வெளிர் வண்ணங்களில் எழுதுவது, படம்போல எதையாவது கிறுக்கிப் பக்கத்தில் எழுதுவது என்று வடிவமைப்பில் தன் கில்லாடித்தனங்களைக் காட்டுகிறவராயிருந்த கருணாவின் கையெழுத்தும் கவர்ந்திழுக்கும் தன்மைகொண்டது. கிருஷியின் எழுத்தையும் அச்செழுத்தையும் குழைத்த மாதிரியான வடிவங்களைக்கொண்டது. வண்ணங்களைத் தேர்வு செய்வதிலும் உரிய இடத்தில் அளவாகப் பயன்படுத்துவதிலும் கைக்கொள்ள வேண்டிய நுணுக்கங்களை நான் கருணாவுடன் வேலை செய்யும்போதுதான் கற்றுக்கொண்டேன். கருணாவின் எழுத்து வடிவத்தையும் மருதுவின் எழுத்து வடிவத்தையும் குழைத்த மாதிரியான ஒரு சாயல்கொண்ட எழுத்து எனக்கு அமைந்தது. தமிழ் மொழியின் வரிவடிவத்தைச் சிதைக்கின்ற அழிவு வேலையை உடனே நிறுத்த வேண்டும் என்று ஒசூர் தமிழாசிரியர் கழகம் கண்டனத் தீர்மானம் போட்டபிறகும் நாங்கள் ஓயவில்லை. தமிழைத் தமிழாகவே எழுதுங்களேன்என்று தேனி.ரா.பாண்டியன், கருமலைத் தமிழன் போன்ற தமிழன்பர்கள் உரிமையோடு கேட்டுக்கொண்டார்கள். ஆனாலுமென்ன, சேட்டை தொடர்ந்தது.

எமர்ஜென்சி காலத்து இருபதம்சத்திட்டத்தை விளக்கும் மிகப்பெரிய போர்டு ஒன்று காந்தி சிலை முக்கில் இருந்தது அப்போது. எமர்ஜென்சி கொண்டுவந்த இந்திராகாந்தியே அது தப்புனு மாப்பு கேட்டு மன்றாடிய பிறகு, இன்னும் இந்த போர்டுக்கு இங்கென்ன வேலை என்று அதில் கைவைக்கத் தொடங்கினோம். அது எல்லோர்கண்ணிலும்படும் வாகான இடத்தில் இருந்ததும் மற்றொரு காரணம். ஊரடங்கிய பிற்பாடு முஸ்தபா பேப்பர் மார்ட்டின் கூரைமீதுஏறி அந்த போர்டில் கலர் பேப்பர்களைத் தாறமாறாகக் கிழித்துக் கிட்டத்தட்ட 'கொலாஜ்’ மாதிரி ஒட்டி நிகழ்ச்சிபற்றி எழுதுவதற்குக் குறைந்தபட்சம் 20 பேராவது ஜமாகட்டி போவோம். எல்.முருகன், நாய் மணி, கென்னடி, இங்கிலிஷ் எலெக்டிரிகல்ஸ் ராமன் போன்ற தோழர்கள் இல்லாமல் அப்படியரு ஜமாவேகூடாது. நைட் ஷிஃப்ட் முடித்து வருகிற தொழிலாளர்கள்  நாங்கள் எழுதிக்கொண்டிருக்கும் அழகையும் எங்களுக்குள் பேசிக்கொள்கிற கேலி கிண்டல்களையும் ரசித்துக்கொண்டு கொஞ்சநேரமாவது நின்றுவிட்டுத்தான் போவார்கள்.  

ராத்திரியில் எழுதிவிட்டுப்போன நாங்களே பகலில் வந்து யாரோபோல அந்த இடத்தில் நின்றுகொண்டு போவோர் வருவோர் அந்த விளம்பரத்தைப்பற்றி என்ன கமென்ட் அடிக்கிறார்கள் என்பதைக் கேட்டுப் பரவசமடைவோம். அவர்கள் குறையாக ஏதாவது சொன்னால் உடனடியாக அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை என்றாலும் அடுத்தமுறை எழுதும்போது அந்தக் குறைகளை தவிர்த்துவிடுவோம். அந்த போர்டே இத்துப்போய் சரிந்துவிழும் வரையில் நாங்கள் அதைப் பயன்படுத்திவந்தோம். சுவர் விளம்பரம் செய்வது, தட்டி எழுதிக் கட்டுவது, நூற்றுக்கணக்கில் விதவிதமாகச் சுவரொட்டிகளைத் தயாரித்து நகரெங்கும் ஒட்டுவது என்று நிகழ்ச்சிக்காகத் தோழர்கள் ஒன்றுகூடி மேற்கொள்ளும் தயாரிப்புவேலைகளே கொண்டாட்டத்திற்குரியதாக இருக்கும். ஏதாவது, உயரமான இடத்தில்ஏறி பேனர் கட்டவேண்டிய தருணங்களில் ஒருவரை தோள்மீதுஏற்றி நிறுத்திக்கட்டி முடிக்கும்வரை தாங்கிப்பிடிக்கிற திண்மைகொண்ட பல தோழர்கள் இருந்தார்கள். அவர்களது திண்மை வெறும் உடலில் இல்லை. இதுபோன்ற இயக்க வேலைகளையும்கூட உலகமயமாக்கலின் தாக்கத்தால் அவுட்சோர்சிங்குக்கும் பீஸ்ரேட்டுக்கும் தள்ளிவிடும் இன்றைய தலைமுறைக்கு இந்தக் கொண்டாட்டங்களும் சந்தோஷங்களும் கிட்டுவதற்கு வாய்ப்பில்லை.

நாடகம், கிராமியப் பாடல்கள், ஆட்டங்கள், கவிதை வாசிப்பு, ஓவியக் கண்காட்சி, நூல் வெளியீடு, விமர்சன அரங்கு, விவாதங்கள், படைப்பாக்க முகாம்கள், கலை இரவுகள், திரைப்பட விழாக்கள் என்று நிகழ்வின் பன்முகப்பட்ட தன்மைகளும் உள்ளடக்கமும் ஒசூருக்குள் இருந்த படைப்பாக்கத்திறன் கொண்ட பலரோடும் எங்களுக்கு அறிமுகத்தை ஏற்படுத்திக்கொடுத்தன. புதிய நண்பர்களால் வட்டம் விரிவடைந்துகொண்டேயிருந்தது, அல்லது வட்டத்தை விரிவுபடுத்திக்கொள்ள புதியவர்களை நண்பர்களாகக் கண்டடையும் முயற்சி தொடர்ந்தது. 'பனியெனக் கவியும்...’ என்ற தலைப்பில் ஒசூர் பகுதிக் கவிஞர்கள் 48 பேரின் கவிதைத் தொகுப்பை வெளியிட்டதும்கூட இப்படியாகத்தான். பரந்த மக்கள்திரளுக்கான கலை இலக்கிய பொது நிகழ்வுகளையும்,  படைப்பார்வம் கொண்டவர்களுக்காகக் கவிதைப் பட்டறை, சிறுகதை முகாம், ஓவியப்பயிற்சி முகாம், கிராமியப் பாடல் முகாம் ஆகியவற்றையும் நடத்திக்கொண்டிருந்தோம்.  எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடக்கும் நிகழ்வுகள் ஒசூரின் குறிப்பிடத்தக்கவையாகக் கவனம்பெற்றன.

கிங்ஸ் சாதிக், பிரின்ட்டெக் சுந்தரமூர்த்தி, மீனு பிரின்ட்ஸ் அண்ணாமலை கமலா, சத்யா ஆர்ட்ஸ் நண்பர்கள், பர்ஃபெக்ட் கிராஃபிக்ஸ் செந்தில், புரொஃபசனல் கூரியர் செந்தில்,  எஸ்.குமார்ஸ், விஜயகுமார், பி.எம்.சி. குமார், அரங்க.துரைராஜ், டாக்டர்.சுதா போன்றவர்களின் அறிமுகம் கிட்டியபோது எங்களது நிகழ்வுகளுக்கு மேலும் புதிய பரிமாணங்கள் கிடைத்தன. சிறு தொழில் நிறுவனங்களை நடத்திவந்த வோல்டா கெபாசிட்டர்ஸ் இளங்கோவன், ஆர்னிகா சிவக்கொழுந்து, சம்பத், மேகநாதன், நம்பி, ஆறுமுகம், பாலகிருஷ்ணன், ஞானசேகரன் போன்றவர்களும் கூட எங்களுக்கு மனமுவந்து உதவிகளைச் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இவர்களெல்லாம் இருக்கும் தைரியத்தில் ஓரிரு வாரத்திற்குள் ஒரு லட்சரூபாய் திரட்டி நிகழ்ச்சிகளை நடத்தமுடியும் என்கிற நிலையை எட்டியிருந்தோம். இந்த நிலையை எழுத்தாளர் சங்கம் அடைவதில் பெரும்பங்கு வகித்தவர் ஆடிட்டர் பழ.பாலசுந்தரம். அவரை ஓர் ஆடிட்டர் என்பதைவிடவும் இனிமையான பாடகர், எழுத்தாளர், தொலைக்காட்சித் தொடர்களின் நடிகர் என்று சொல்வதே பொருத்தம்.  

எழுத்தாளர் சங்கத்திற்குக் கிடைத்திருந்த இத்தகைய பரவலான தொடர்புகள்தான் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள மிடிகிரிப்பள்ளி போராட்டத்தின் மையமாக இருந்தது. பெங்களூரின் கழிவுநீர்குட்டைபோல மாசுபட்டிருந்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து ஒசூருக்குக் குடிநீர் வழங்கப்பட்டபோது அது குடிப்பதற்கு உகந்த தண்ணீர் அல்ல என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்து தடுத்தபோது இதெல்லாம் ஒரு எழுத்தாளர் சங்கத்தின் வேலையா என்கிற கேள்வி வந்தது. எழுத்தாளர்கள் அந்தரத்திலிருந்து வந்தவர்களுமில்லை, அவர்கள் குடிப்பதற்கென்று தனியாக ஆகாய கங்கையிலிருந்து தண்ணீர் வருவதுமில்லை, நாங்களும் இந்தத் தண்ணீரைத்தான் குடிக்கவேண்டியிருக்கிறது, ஆகவே தடுக்கிறோம் என்று சொன்னோம்.

சுற்றுச்சூழல் சார்ந்த கருத்தியலைப் பரப்பவும் சுற்றுச்சூழலைப் பேணவும் ஒசூரின் ஒவ்வொரு பகுதி குடியிருப்போர் சங்கத்தையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட 'ஈரம்’ என்ற அமைப்பு, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ராஜசேகரின் ஒத்துழைப்போடு நகரம் முழுவதும் நட்டுவைத்த 5,000-க்கும் மேற்பட்ட மரங்களில் சில 100 மரங்களாவது இன்றைக்கு வளர்ந்தோங்கி நிற்கின்றன. 'ஈரம் அமைப்பிலிருந்து வந்திருக்கிறார்கள், டி.வி-யை நிறுத்திவிட்டு உடனே தெருமுக்கிற்கு வந்து அவர்கள் சொல்லும் கருத்துகளைக் கேட்குமாறும் மரக் கன்றுகளை வாங்கிப்போகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று கோயில் மைக்கில் அர்ச்சகர் அறிவிப்பு செய்யுமளவுக்கு ஈரத்தின் தேவை உணரப்பட்டிருந்தது. நான் வசிக்கும் தொலைபேசி நிலைய ஊழியர் குடியிருப்பை மறைக்குமளவுக்கு  சோலைபோல வளர்ந்திருக்கின்ற அவ்வளவு மரங்களும் ஈரத்தின் சார்பில் பெரியசாமியும் பழனிச்சாமியும் நானும்வைத்தவை. ஒசூர் ஏரியைத் தூர்வாருவது, ஏரிக்கு நீர் கொண்டுவந்து சேர்க்கும் கால்வாய்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிச் செப்பனிடுவது, எங்கும் மண்டிக்கிடக்கும் பார்த்தீனியத்தை அழிக்கும் மாற்றுச்செடிகளை வளர்ப்பது என்றெல்லாம் தனது செயல்திட்டங்களைக் கொண்டிருந்த 'ஈரம்’ காய்ந்துபோனது குறித்த வருத்தம் எனக்குள் இப்போதுமிருக்கிறது. வெவ்வேறு கருத்தோட்டம் உள்ளவர்கள் இணைந்து செயல்படுவதற்கான அப்படியான பொதுமேடைகளுக்கான தேவை இப்போது அதிகரித்திருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதிக்கிறதென்றால் அதைப்பற்றி ரெண்டு கதையோ கவிதையோ எழுதிவிட்டுப்போகாமல் இப்படி வேலைகளை இழுத்துப்போட்டுக்கொள்வது தேவைதானா? இப்படியான வேலைகள் நமது படைப்புத்திறனை அரித்துவிடாதா என்றெல்லாம் நாங்கள் யாரும் குழப்பிக்கொள்ளவில்லை.  எழுதுவதும் வாசிப்பதும் தனிநபர் செயல்பாடு. 24 மணிநேரத்தில் எழுதாமலும் வாசிக்காமலும் இருக்கிற நேரத்தில் கொஞ்சத்தைத்தான் வாழும் சமூகத்திற்காகச் செலவிடுவது அப்படியன்றும் பெரிய பொதுநலச் சேவையுமில்லை. அது முழுக்கமுழுக்க தன்னலத்தையும் உள்ளடக்கியது. ஒரு வேலைக்கு எதிராக, இன்னொரு வேலையை முன்னிறுத்தி எந்த வேலையும் செய்யாமலிருக்கிற தந்திரங்களை நாங்கள் கைக்கொள்ளாமல் இருக்கப்போய்தான் ஈரம், குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி போன்ற அமைப்புகளை உருவாக்கிச் செயல்பட முடிந்தது. இந்த அமைப்புகளைத் தொடங்குவதற்கு நாங்கள் முன்முயற்சி எடுத்திருந்தாலும் பின்னாளில் அந்தந்தத் தளம் சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வந்து அவற்றை நடத்தினார்கள். எழுத்தாளர் பா.வெங்கடேசன் போன்றவர்கள் எங்களது செயல்பாடுகளோடு இணைந்துநின்ற புள்ளி இதுதான் என்று நினைக்கிறேன்.

ஆனால், உலகமயமாக்கலின் வழியே புதிய பொருளாதாரக்கொள்கையும் புதிய தொழிற் கொள்கையும் ஒசூர் தொழிற்பேட்டை மீது நிகழ்த்திய தொடர்தாக்குதல்கள் இங்கு பொதுத் தளங்களில் இயங்கிவந்த எழுத்தாளர் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளையும்கூட விட்டுவைக்கவில்லை. ஆலைமூடல், கதவடைப்பு, வேலையிழப்பு, ஊதியவெட்டு, சலுகை பறிப்பு என்று அடுத்தடுத்து வந்த தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து ஒவ்வொரு நாளைக் கடத்துவதுமே பெரும் சவாலாகவும் உளைச்சல் மிகுந்ததாகவும் மாறிப்போனது. முன்னுதாரணம் மிக்க பல உரிமைகளை ஈட்டிய தொழிற்பேட்டையின் முதல் தலைமுறைத்  தொழிலாளர்கள் குடும்பஸ்தர்களாகி அவர்களது குழந்தைகள் உயர்கல்வி அல்லது திருமணம் போன்ற பருவத்தை எட்டும்வயதில் இப்படியரு இன்னலுக்கு ஆட்பட்டு நிலைகுலைந்துபோனார்கள். இது இல்லாவிட்டால், இன்னொரு வேலை என்று முடிவெடுக்க முடியாத அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாய் இருந்த அவர்களிடையே தற்கொலை மனோபாவமும் மனப் பிறழ்வுகளும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான வழியறியாது தொழிற்சங்கங்கள் திகைத்துநின்றன. சட்டவழிப்பட்ட போராட்டங்கள்மீது நம்பிக்கை இழந்த தொழிலாளர்கள் செல்போன் டவர்களின் மீதுஏறி தீக்குளிப்புப் போராட்டதை நடத்துமளவுக்கு விரக்தியடைந்திருந்தார்கள். எதிர்காலத்தைப் பற்றியல்ல, அடுத்தவேளை சோற்றைப்பற்றி எழுந்த அன்றைய நிச்சயமற்றத்தன்மை அவர்களை விவரிக்கமுடியாத வகைகளில் சிதைத்துக்கொண்டிருந்தது. அரசாங்கத்தின் கொள்கைகள் மிக நேரடியாக ஒவ்வொரு தனிமனித வாழ்விலும் அவர்களது சாப்பாட்டுத்தட்டிலும் கைவைப்பதை உணரமுடிந்தது. உறக்கத்திலிருப்பவர்களின் கழுத்தை அறுப்பதுபோன்ற கொடுஞ்செய்திகள் ஒவ்வொருநாளும் அரசாங்கத்தின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டபோதெல்லாம் சாவுமட்டம் உயர்ந்துகொண்டேயிருந்தது. ஆனால், அவையெல்லாம் அரசாங்கத்தின் கொலைக்கணக்கில் சேர்க்கப்படாமல் தனிமனிதரின் விதிமுடிவென பொய்க்கணக்குக் காட்டப்பட்டது.

எந்த வம்புதும்பிலாவது ஈடுபட்டு இருக்கும் வேலையைத் தொலைத்துவிடக்கூடாது என்கிற கவனம் அவர்களை அவர்களுக்குள்ளேயே ஒடுக்கிப் பின் அவர்களை அவர்களுக்குள்ளேயே புதைத்தும்விட்டது. நடமாடுகிறவர்களிலும் எத்தனைபேர் உயிரோடு இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்கும்போதுதான் நானேகூட இறந்து போயிருப்பது தெரியவரும். அந்தளவுக்கு நம்பிக்கைகளிலும் செயல்பாடுகளிலும் குணநலன்களிலும் கடுமையான அரிமானங்களைக்கொண்டுவந்து சேர்த்த காலத்தில் நாங்கள்சிக்கிக்கொண்டோம். வேலையைத் தக்கவைத்துக் கொள்வது, கையிலிருக்கும் காசை பத்திரப்படுத்திக்கொள்வது, இப்படியான இக்கட்டிலிருந்து தப்பிக்க  இந்த வேலையையே நம்பிக்கொண்டிராமல்  ஏதாச்சும் சைடு பிசினஸ் செய்யக் கிளம்பியது, தனக்கும் தன் குடும்பத்திற்கும் வெளியே நடக்கிற எந்த ஒரு நிகழ்விலும் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருப்பது, பொருளியல் ஆதாயமில்லாத பொதுவேலைகளில் பங்கெடுப்பதை வீண்வேலையாகக் கருதுவது பிறகு அப்படியான தனது நிலைபாட்டை நியாயப்படுத்திக்கொள்கிற கருத்தியல்களை பேசுகிறவர்களாக வலிந்து மாறுவது என்று ஒசூர்வாசிகளின் உளவியலைத் தனக்குகந்த வகையில் கட்டமைப்பதில் உலகமயம் மூர்க்கமாக வெற்றிகண்டபோது நாங்கள் அதை எதிர்கொண்டவிதம் அவமானகரமானது. 'இருண்டகாலத்திலும் பாடலா, ஆம் இருளைப் பற்றிய பாடல்...’ என்பதெல்லாம் பழைய வசனங்கள் போல தெரிந்தன. உலகமயமாக்கலுக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தை முன்னெடுத்துத் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய வேலைகளைச் செய்வதற்கு முன்னெப்போதையும்விட தீவிரமாகச் செயலாற்றியிருக்கவேண்டிய நாங்களும் சோர்ந்துதான் கிடந்தோம் என்பதைச் சொல்லத்தான் வேண்டும். ஆனால், இந்தச் சோர்வு ஒரேயடியாக அப்பட்டமாக வெளிப்படாமல் உள்ளிருந்து அரித்துத்தின்று எங்களை முடக்கியே போட்டுவிட்டது. இருப்பதுபோல் காட்டிக்கொண்டு இல்லாமல் போகிற பலவீனத்தை நோக்கி நாங்கள் நடத்திவந்த அமைப்புகள் தொய்ந்து கொண்டிருந்தன. (பெரியசாமியும், சிவக்குமாரும், சம்புவும்  வந்து 'புதுவிசை’யைத் தப்பிக்கவைத்தார்கள்).  

பல ஆலைகள் அடுத்தடுத்து மூடப்பட்டன. கேட்பாரற்று அநாமத்தாக திறந்து கிடந்த ஆலைகளை மூடப்பட்ட ஆலை என்று சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. தொழிற்பேட்டையின் இடையிடையே புல்லும் புதரும் மண்டிய வளாகங்கள் பெருகின. இயந்திரங்களைத் தூக்கிக்கொண்டு போகவாச்சும் யாராவது வந்தால், கொடுத்த கடனை திருப்பிக்கேட்கலாம் என்று மூடிய ஆலைகளின் வாயிலில் வங்கிக்காரர்களும், எங்களுக்குச் சேரவேண்டிய பி.எப். பணத்தையாவது கொடு என்று கேட்க தொழிலாளர்களும் மாதக்கணக்கில் காத்துக்கிடந்தார்கள். ப்ச்... எதுவும் நடக்கவில்லை. ஒசூர், ஒருவழிப்பாதையைக் கொண்டதாகிப்போனது. வேலையிழந்த தொழிலாளர்கள் வெளியேறிப் போய்க்கொண்டிருந்தார்கள். ஊர்த்திரும்ப முடியாதவர்களும் விரும்பாதவர்களும் கவிஞர்.வையம்பட்டி முத்துச்சாமிபோல தள்ளுவண்டி வியாபாரியாக, ஓட்டல் தொழிலாளியாக,  டீக்கடைக்காராக, பீஸ்ரேட் தையல்காரராக ஏதேதோ அவதாரமெடுத்து வாழ்வை நகர்த்திக்கொண்டிருப்பதை அருகிருந்து காணும் துயரம் கொடியது.

புதிதாகத் தொழிலாளர்கள் யாரும் ஒசூருக்குள் வரவில்லை. தப்பித்தவறி வந்தவர்களும் தற்காலிக, ஒப்பந்த, பயிற்சிக்கால, சுமங்கலித்திட்ட தொழிலாளர்களாக வந்தார்கள். அன்றாடமே கேள்விக்குறியாய் இருந்த அவர்கள் பணித்தலங்களுக்கு வெளியேநடக்கும் எந்த அமைப்பிலும் அங்கம் வகிக்க முடியாதவர்களாகச் சுருக்கப்பட்டிருந்தார்கள். இந்தச் சுருக்கம் ஒசூரில் இயங்கிவந்த எல்லா அமைப்புகளிலும் செயல்பாடுகளிலும் தேக்கத்தை உண்டுபண்ணியது. தேங்கும் நீரில் துர்வாடையும் கொசுவும் தலைப்பிரட்டைகளும்தானே உற்பத்தியாகும்? ஒசூரின் நிலையும் அப்போது அதுதான்.''

( சொல்கிறேன்...)

நன்றி: என்விகடன்.காம்

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...