ஒசூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒசூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 16

விதைகளை ஊன்றிவைத்தால் சூழல் தேவையானதை வளர்த்தெடுத்துக் கொள்ளும் - ஆதவன் தீட்சண்யா

புகைப்படம்: ஆண்டிப்பட்டி முருகன்



புதிய புத்தகம் பேசுது 2022 ஜூலை இதழுக்காக 

தோழர் ஆயிஷா இரா.நடராசன் என்னிடம் நடத்திய நேர்காணல். 

·      தற்போதைய இலக்கியச்சூழலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15ஆவது மாநில மாநாடு நடைபெறுவதன்  முக்கியத்துவத்தைச் சொல்லுங்கள்?  

1975 ஜூலை 12,13 தேதிகளில் தமுஎகச முதல் மாநில மாநாடு மதுரையில் நடந்தபோது அவசரநிலை அமலிலிருந்தது. 15ஆவது மாநாடு நடைபெறவிருக்கும் இவ்வேளையில் நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமலிலிருக்கிறது. அறிவிக்கப்படாததாய் இருப்பதாலேயே இப்போதைய அவசரநிலையை விலக்கிக்கொள்ள வேண்டிய நெருக்கடி ஆட்சியாளர்களுக்கு இல்லை.  

முன்னெப்போதும் இல்லாதளவுக்கு தனிமனித வாழ்வில் அரசின் நேரடித் தலையீடும் கண்காணிப்பும் அதிகரித்துள்ளது. அரசியல் சாசனத்தின் வழியே குடிமக்கள் தமக்கு உறுதி செய்துகொண்ட உரிமைகள் பலவற்றையும் அரசிடம் இழக்கும் காலமாகவும் இது இருக்கிறது. தன் உடல்மீதுகூட அவர்கள் முழு உரிமை கோரமுடியாது. அரசு குடிமக்களை குற்றவாளிகளாகப் பார்ப்பதும், அவர்களது இயல்புரிமைகளை மறுப்பதும், எதிர்த்தால் வன்முறைகளை ஏவுவதுமாக மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. உணவு, உடை, வசிப்பிடம், கல்வி, கலைஇலக்கிய நாட்டம், வழிபாடு, கொண்டாட்டங்கள் என அனைத்திலும் ஆட்சியாளர்களின் விருப்பம் எதுவோ அதுவே குடிமக்களின் தேர்வாகவும் இருக்க வேண்டுமென்கிற நிர்ப்பந்தம் வலுக்கிறது. எவரிடமிருந்து ஆளும் அதிகாரத்தை இவ்வரசு பெற்றிருக்கிறதோ அவர்கள் மீதே தன் குரூரபலம் முழுவதையும் பிரயோகிக்கும் இக்கொடுங்காலத்தில் சுயசிந்தனையும், சுதந்திரமான வெளிப்பாட்டுணர்வும், அச்சமற்ற வாழ்வுக்கான பேரவாவும் கூருணர்வுமுள்ள எழுத்தாளர்களும் கலைஞர்களும் செய்ய வேண்டியது என்ன என்பதுமே மாநாட்டின் முதன்மை விவாதம். கடந்த மாநாட்டிற்குப் பிறகான இக்காலக்கட்டத்தில் கலைஇலக்கிய பண்பாட்டுத்தளத்தில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள், அவற்றில் தமுஎகசவின் பங்களிப்பு மற்றும் நிலைப்பாடு ஆகியவை பற்றிய மதிப்பீட்டையும் மாநாடு மேற்கொள்ளும். 

·    “புதுவிசை” காலாண்டிதழ் ஒரு கலாச்சார இலக்கிய இயக்கமாகவே உணரப்பட்டது. அதை தொடங்கி நடத்திய  அனுபவங்களைச் சொல்லுங்கள்.  உங்களது நோக்கம் எந்தளவிற்கு நிறைவேறியது?  

நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதிக்கக் கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குவது, சமகால கருத்துலகில் தலையிடுவது, கலைஇலக்கிய ஆக்கங்களின் புதிய போக்குகளுக்கு இடமளிப்பது, பண்பாட்டுத் தளத்தில் உலகளாவிய அளவில் நடக்கும் உரையாடல்களை நமது சூழலிலும் நிகழ்த்துவது என்கிற நோக்கில் நூறுநூறு பத்திரிகைகள் தேவை. அதிலொரு பகுதியை புதுவிசை நிறைவேற்றியுள்ளது.  

பெரும்பாலும் ஒசூர் நண்பர்களின் நிதிநல்கையில் மட்டுமே 48 இதழ்களை கொண்டுவர முடிந்ததை இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.  எங்களது குழுவினரின் உழைப்பு அதற்குரிய விளைவுகளை உருவாக்கியுள்ளது. ஆனால் திருப்தியடைய ஒன்றுமில்லை. ஏற்கனவே  இரண்டுலட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பிருந்தாலும், இன்னொரு சுற்று வந்து பார்க்கலாம் என்கிற துடிப்பு மங்கவில்லை, பார்ப்போம்.   

·         புறப்பாடு, பூஜ்யத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி, மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் உட்பட உங்கள் கவிதைத்தொகுதிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. தற்கால கவிதை உலகம் எப்படி இருக்கிறது?  

அதிகாரத்தின் கண்காணிப்பு தீவிரமாகியிருக்கும் நிலையில் அதிகாரத்தைப் பற்றிய உண்மைகளைப் பேசும் கவிதை முன்னிலும் பூடகமாகவும் யூகிக்க முடியாத வலிமையுடனும் தமது இலக்கைத் தாக்கி வாசகர்களை செயலுக்குத் தூண்டுகிறது. அதேநேரத்தில் அதிகாரத்தை விமர்சிப்பதால் ஏற்படவிருக்கும் விளவுகளுக்கு அஞ்சும் கவிதை, அச்சமற்று இருப்பதுபோல காட்டிக்கொள்வதற்காக பெருங்குரலெடுத்து தொந்தரவில்லாத பாடுபொருள்களை முன்வைத்து இதுதான் இக்காலத்தின் கவிதை என்பதுபோல பாவனை செய்வதுடன், வாசகர்களையும் தனது மட்டத்திற்கு கீழிழுத்துப் போடுகிறது. முகத்தை உக்கிரமாக வைத்துக்கொண்டு கைகளை அங்கீகாரப்பிச்சைக்கு விரிக்கும் இத்தகைய கவிஞர்கள் மலிந்து கிடந்தாலும் பிரசுரம், பரிசு, விருது, இலக்கியப் பயணங்கள் என எதையும் எதிர்பாராமல் வாழ்வின் பாடுகளைச் சொல்லும் கவிதைகளின் தொடர் வருகை தமிழ்க்கவிதைக்கு மேலும் காத்திரமேற்றுகிறது.

“இருப்பிடம் வரைதல் போட்டியில் 

முதலில் முடித்தது நான்தான்

வரைவதற்கு என்னிடம் இருந்தது

ஒற்றைச் செங்கற்சுவர் மட்டுமே” என்று ஓர் ஈழ ஏதிலி தன் வாழ்வை எழுதுவதற்கெல்லாம் இப்போது இங்கே வாய்க்கிறது.    

·  லிபரல்பாளையத்துக் கதைகள், கடுங்காலத்தின் கதைகள், நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள், கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும் என்று தொடர்ந்து, கதையுலகில் புதியபுதிய கலகவெளிகளை உருவாக்கிய கதைக்காரன் ஆதவன் தீட்சண்யாவின் புதிய முயற்சிகள்?  

சமூக அமைப்பின் மீதும் அதை வழிநடத்தும் அதிகாரத்துவத்தின் மீதும் யாதொரு புகாருமற்று, எல்லா ஒழுங்கீனங்களுக்கும் குற்றங்களுக்கும் பாகுபாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் தனிமனிதர்களைப் பொறுப்பாக்கி நெக்குருக எழுதுவதும் அதை கண்ணீர் மல்க கதைப்பதும் இங்கொரு வணிகமாகப் போய்விட்டது. முப்பதாண்டுகால உலகமயமாக்கமும் எட்டாண்டுகால இந்துத்துவாக்கமும் சமூக அமைப்பிலும்   வாழ்முறையிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள், ஆளுமைச் சிதைவுகள், அறவீழ்ச்சிகள், நுகர்வியம், வாழ்க்கைத்தரத்தில் அரிமானம், சூழலழிப்பு என்று நம்முடைய சமகாலத்தை துள்ளத்துடிக்க எழுதுவதே எனது நேர்வாக இருக்கிறது. அப்படியல்லாத ஊளைக்கதைகளை எழுதிக்குவிப்போர் பட்டியலில் எனது பெயர் இல்லாதது சற்றே கர்வத்தைத் தருகிறது.  

·   மீசை என்பது  வெறும் மயிர் நாவல், நந்தஜோதி பீம்தாஸ் தனுஷ்கோடியில்  இருந்து இலங்கை சென்று சாதிவெறி சமூக அவலங்களை அனுபவித்து, கப்பல்  ஏறி, உலக நாடுகளைச்  சுற்றி, மீசை என்பது எங்கெங்கெல்லாம் எப்படியான  அதிகார அடையாளமாக இருக்கிறது எனக் காட்டுகிறது.  இடுப்புக்கு கீழே மீசை  வளர்க்கும் விஷயத்தை  இன்று நினைத்தாலும் வலியிலிருந்து மீள முடிவதில்லை. நாவல் தளத்தில் உங்களது அடுத்தடுத்த முயற்சி  என்ன?  

உலகத்துக்கே மனிதமாண்பை போதிக்கும் யோக்கியதை இருப்பதாக பீற்றிக் கொள்ளும் பிரிட்டன், இந்தியாவை ஆண்டபோது தனது படையினரின் பாலுறவுத்தேவைகளுக்காக ஒவ்வொரு ஆயிரம்பேருக்கும் 10-12 பாலியல் தொழிலாளிகள் வீதம் பணியமர்த்தியுள்ளது. தொழில் செய்வதற்கு பணம்கட்டி உரிமம் பெறும் பெண்களை பகிர்ந்தனுப்புவதற்கான மேற்பார்வையாளர், இதிலேதும் சண்டை வந்தால் தீர்ப்பதற்கு ரகசிய நீதிமன்றங்கள், மருத்துவப் பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் ரகசிய மருத்துவமனைகள் (லாக் ஹாஸ்பிடல்) என கண்டோன்மென்ட்டுகளில் நடந்த அட்டூழியங்களை மையப்படுத்தி ஒரு நாவலை காலவரம்பின்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.  

·  உங்களது  எழுத்தளவுக்கு உரைகளும்  கவனம் பெற்றவை. உங்கள்  உரையின் அடிப்படை எவை?  தமுஎகச குரலாக அவற்றை  முன்வைப்பத்தில் எத்தகைய சவால்கள்  உள்ளன? 

காலனிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகளில் நடந்துவந்த  விடுதலைப் போர்களுக்கு உதவும் வகையில் இரண்டாவது போர்முனையை – அதாவது பண்பாட்டுப் போராட்டத்தை முற்போக்குச் சிந்தனையாளர்கள் தொடங்கியுள்ளனர். பேனாவை, தூரிகையை வாளாக, துப்பாக்கியாக உருவகித்துச் செயல்பட்டார்களாம். பார்ப்பனியமும் கார்ப்பரேட்டியமும் இணைந்து இந்தியச்சமூகத்தை அடிமைப்படுத்திவரும் இன்றைய பார்ப்பரேட்டியச் சூழலில் இங்குள்ள முற்போக்காளர்கள் அந்த இரண்டாவது போர்முனையை நமது தனித்தன்மைகளுக்கேற்ப தொடங்கியாக வேண்டும் என்பதை கலைஇலக்கிய நிகழ்வுகளில் வலியுறுத்துகிறேன். நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவாக காட்டிக் கொண்டு ஆளும் வர்க்கம் எப்படி தன்னை மிகவும் நவீனமாக பலப்படுத்திக்கொண்டு நாட்டை ஒரு பெருஞ்சந்தையாக ஒருங்கிணைத்துச் சுரண்டுகிறது என்பதையும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான காலத்து முதலாளியத்திலிருந்து இன்றைய முதலாளியம் வரைக்குமாக ஆய்ந்தறிந்து தோழர் எஸ்.வி.ஆர். போன்றவர்கள் முன்வைக்கும் புதிய விவாதங்களிலிருந்து பெறும் புரிதலையும் அரசியலரங்குகளில் பகிர்கிறேன். இந்தப் பேச்சுகளில் சாதியொழிப்பையும், சமூகநீதியையும் உள்ளிணைத்தே முன்வைக்கிறேன். இவை தமுஎகசவின் மைய நோக்கங்களுடன் இசைவிணக்கம் கொண்டவையே. 

·   தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியிலும் பொறுப்பு வகிக்கிறீர்கள். அதுசார்ந்த அனுபவங்களைச் சொல்லுங்கள். ஆணவக்கொலைகள் இன்றும் தொடர்கின்றனவே. தமிழக அரசுக்கு உங்களது கோரிக்கை என்ன?  

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் நேரடிப் போராட்டங்களுக்கு கருத்தியல் தளத்தில் வலுசேர்க்கும் சிலவேலைகளைச் செய்வதுண்டு. அவ்வகையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் எழுதுவதும் பேசுவதும் வன்கொடுமைக்களங்களுக்குச் செல்வதுமே எனது செயல்பாடுகள். புதுக்கூரைப்பேட்டைக்கும் உத்தபுரத்துக்கும் பரமக்குடிக்கும் நத்தத்திற்கும் பாப்பாப்பட்டி கீரிப்பட்டிக்கும் சென்று சாதியத்தின் மூர்க்கத்தை அதன் நேரடி வடிவத்தில் கண்டுவந்து பதைபதைப்பு அடங்காமல் பலநாட்கள் தவித்திருக்கிறேன். குஜராத்தில் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜிக்னேஷ் மேவானி மேற்கொண்ட நடைப்பயணத்தில் இங்கிருந்து சில தோழர்களுடன் அங்கு சென்று பங்கெடுத்து திரும்பியபோதும்கூட இதேவகையான கொந்தளிப்புக்குள் சிக்கி தத்தளித்தேன். சாதிய வன்கொடுமைகள் அடுத்தடுத்து ஏவப்படும்போது திணறிப்போய் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு என் முன்னால் எந்தக் கொடுமையும் நடக்கவில்லை என்பதுபோல என்னை நானே ஏமாற்றிக்கொண்டு மரத்துப்போன மனதோடு கிடந்துவிட்டு பின் ஆற்றமாட்டாமல் அழுதோய்ந்த நாட்களுமுண்டு. ஆனால் அதிலிருந்து மீள்வதற்கான உள்வலுவை அம்பேத்கர், பெரியாரின் எழுத்துகளும் கம்யூனிஸ்ட்களின் களச்செயல்பாடுகளுமே வழங்கின.  

வயதுவந்த பெண்ணும் ஆணும் தனது வாழ்க்கைத்துணையைச் சுதந்திரமாக தெரிவுசெய்யும் உரிமையை மறுப்பதிலிருந்தே ஆணவக்கொலைகள் நடக்கின்றன. பலநாடுகளில் மத, இன வெறியில்  ரத்தத்தூய்மையை வலியுறுத்தி இக்கொலைகள் நடக்கிறதென்றால் இந்தியாவில் சாதியின் பெயரால் நடக்கின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு 120-150 பேர் கொல்லப்படுகிறார்கள். நடப்பிலுள்ள குற்றவியல் சட்டங்களின் மூலம் இக்கொலைகளைத் தடுப்பதிலும் தண்டிப்பதிலுமுள்ள இடர்பாடுகளை கவனத்தில் கொண்டு, மாநில அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடைப்பயணம் மேற்கொண்டது. உச்ச நீதிமன்றமும் தனிச்சட்டத்தின் தேவையை பலவாறாக வலியுறுத்தியும் கூட ராஜஸ்தானில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு  தாமதமின்றி தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்.  

· ஓசூர் புத்தகத்திருவிழா உங்களது தலைசிறந்த  பங்களிப்புகளில் ஒன்று. பலரை ஒன்றிணைத்து முதல் புத்தகத் திருவிழாவை வழிநடத்தியவர் நீங்கள். ஓசூர் புத்தகக்காட்சி  இன்று தொடரும் விதத்தில் உங்கள் நோக்கம் நிறைவேறியதாக கருதுகிறீர்களா?  

இப்போது நிலநிர்வாக ஆணையராக உள்ள திரு.எஸ்.நாகராஜன் அப்போது ஒசூரின் சாராட்சியர். நிர்வாக வரம்பின் எல்லைவரை சென்று முன்னுதாரணமான பணிகளை அவர் செய்ததை கவனித்துதான் ‘புத்தகக் கண்காட்சி’ யோசனையை தெரிவித்தேன். உடனே ஏற்றுக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நிகழ்வாக மாறுமளவுக்கு நிர்வாகம் முழுவதையும் ஈடுபடுத்தினார். கலைஇலக்கிய விழாக்களுக்கு ஆயிரக்கணக்கானவர்களை அணிதிரட்டிய தமுஎகச அனுபவம் உள்ளூர் சமூகத்தைத் திரட்டுவதற்கு உதவியது. எனது முன்னெடுப்புகள் யாவற்றுக்கும் துணையிருக்கும் நண்பர் பி.எம்.சி.குமார் இந்த முயற்சிக்கும் பேராதரவளித்தார். அதன் தொடர்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பலரையும் இணைத்துக்கொண்டு தொடர்ந்து நடத்திவருவது பாராட்டத்தக்கது. விதைகளை ஊன்றி வைத்தால் சூழல் தேவையானதை வளர்த்தெடுத்துக் கொள்ளும் தானே! 

  ·         “தனித்துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை” முழக்கத்தின் பின்னணி?  

செம்மலர் இதழில் வரவிருக்கும் எனது கட்டுரையின் பின்வரும் பகுதி இக்கேள்விக்கு உரிய பதிலாக அமையும்: இந்தியப் பெருநிலப்பரப்பில் வாழும் 130கோடிக்கும் மேலான மக்களாகிய நாம் இயற்கைநேர்வு மற்றும் வாழ்முறைகளால் பல்வேறு மொழிவழி இனங்களாக வாழ்ந்து வருகிறோம். பிறப்பு முதல் இறப்பு வரையிலும் (சில விடயங்களில் இறப்புக்குப் பின்னும்கூட) தனிமனிதர்களின் வாழ்வை நெறிப்படுத்தி நடத்துகின்ற இவ்வாழ்முறைகளின் தொகுப்புதான் பண்பாடு எனப்படுகிறது. பண்பாடு நாடு முழுதும் ஒருபடித்தானதாக இல்லை. ஒவ்வொரு இனமும் தனக்கான தனித்த உணவு, உடை, இருப்பிட அமைவு, வாழ்க்கைவட்டச் சடங்குகள், தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், கலை இலக்கியம், கல்வி ஆகிய பண்பாட்டுக்கூறுகளை வரலாற்றுரீதியாக பெற்றுள்ளன. சாதி, மதம், பொருளாதாரம் ஆகியவை பண்பாட்டை இடைவெட்டிச் சென்றபோதும் அவற்றுக்கப்பாலும் ஓரினத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்ள பொதுவான பண்பாட்டம்சங்கள் இருக்கவே செய்கின்றன. இதேரீதியில் ஒவ்வொரு இனமும் தனக்குள்ள தனித்துவமான பண்பாட்டை பேணிக்கொண்டே இதர இனங்களுடன் தமக்குள்ள பொதுமைப்பண்புகளைக் கண்டடைந்து அவற்றுடன் ஒப்புரவாக வாழ்ந்துவருகின்றன.   

ஓர் இனத்தின் வேறுபட்ட பண்பாட்டை அதன் தனித்துவமாக கருதி சமமாக ஏற்றுக் கொள்வதற்கு மாறாக அதனை இதர பண்பாடுகளுக்கு எதிரானதாகவோ கீழானதாகவோ உயர்வானதாகவோ சித்தரிக்க ஒன்றிய அரசும் அதனை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் முயற்சித்து வருகின்றன. இதன் மேலதிக தீவிரத்தில், தேசிய இனங்கள் என்பதையே மறுத்து இந்திய இனம் என்கிற செயற்கையான அடையாளத்தைச் சுமத்தி அந்த இந்திய இனத்தின் பண்பாடானது ஆரியப்பண்பாடே என்று நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது”. இதனாலேயே “தனித்துவம் நமது உரிமை பன்மைத்துவம் நமது வலிமை” என்கிற முழக்கத்துடன் தமுஎகச 15ஆவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.. 

·         தமுஎகச பொதுச்செயலாளராக இக்காலத்தின் பணிகள்? 

கூட்டுமுடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு என்பதற்கும் அப்பால் விவாதங்களுக்கும் செயல்பாட்டுக்குமான நிகழ்ச்சிநிரலை முன்வைப்பதற்கும் கருத்தொற்றுமையை உருவாக்கிச் செயல்பட வைப்பதிலும் என் பெரும்பகுதி நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன். பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாலும், நானிருந்து செய்தாக வேண்டிய சொந்தவேலைகள் எதுவும் இப்போதைக்கு எனக்கு இல்லாதிருந்ததாலும் இது சாத்தியமாயிற்று. கருத்துரிமைக்கு கடும் அச்சுறுத்தல் உருவாவதை முன்னறிவித்து “கருத்துரிமை போற்றுதும்” கூடுகை, தேசிய கல்விக்கொள்கைக்கு எதிரான கருத்துருவாக்கத்தில் முன்னோடியாக “கல்வி உரிமை மாநாடு”, “பெண் எழுத்தும் வாழ்வும்” முகாம், பொதுமுடக்கக் காலத்திலும் இணையவழியில் நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள், இணையவழியில் திரைப்பள்ளி (இப்போது நேரடியாக நடக்கிறது), அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான இணையவழி நாடகப்பள்ளி, நாட்டுப்புறக் கலைஞர்கள் வாழ்வாதாரக் கோரிக்கை மாநாடுகள், நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான உதவிகள் என்று இக்காலத்தில் இடையறாத வேலைகள் நடந்துள்ளன. மேலெழுந்த பிரச்னைகள் அனைத்திலும் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.    

அமைப்பினரின் கலைஇலக்கியச் செயல்பாட்டு மட்டத்தை உயர்த்துவது, கலைஇலக்கிய நாட்டமுள்ள எவரொருவரையும் தவறவிடக்கூடாது என்பதற்காக “வீடுதோறும் உறுப்பினர், வீதிதோறும் கிளை” என்று அமைப்பினை விரிவுபடுத்துவது, எமது அமைப்புடன் நெருங்கிவரத் தயங்கும் கலை இலக்கியவாதிகளுடனும் பண்பாட்டு ஊழியர்களுடனும் தோழமை பேணுவது, தமிழகத்தின் வினைத்திறன்மிக்க கலைஇலக்கிய அமைப்பு என்னும் நற்பெயரை திடப்படுத்துவது என இனிவரும் காலத்துப் பணிகள் எம்மை அழைக்கின்றன.           


புதன், மார்ச் 3

ஒசூரின் குடிநீரும் தோழர் ஜீவானந்தமும் - ஆதவன் தீட்சண்யா

 


ஏரியில் ஆளுயரத்திற்கு பொங்கும் நுரை, ரசாயனக் கழிவுகளால் தீப்பிடித்தெரியும் ஏரி என்றெல்லாம் அவ்வப்போது ஊடகங்களில் பரபரப்பாக காட்டப்படும் வரத்தூர் ஏரி பெங்களூரின் கழிவுநீர்க்குட்டை போலாகிவிட்டது. இந்த வரத்தூர் ஏரியின் உபரி நீரானது, ஒசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் வந்து கலந்து மாசடையச் செய்கிறது. 1990களில் ஒசூர் குடிநீர் தேவையை ஈடுகட்ட நகராட்சி நிர்வாகம் இந்த கெலவரப்பள்ளி அணையின்  தண்ணீரை 14 வடிமுறைகளால் சுத்திகரித்து நகருக்குள் விநியோகிக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் அத்தகைய சுத்திகரிப்புக்குப் பிறகும் அந்த நீர் சகிக்கமுடியாத நாற்றத்துடனும் வேறேதோ திரவம் போன்ற நிறத்திலும் ஒவ்வொரு வீட்டின் குழாயிலும் வந்து ஊற்றியது.

குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஒரு தோழரின் உதவியுடன் நான், போப்பு, விநாயகம், சி.முருகேசன் உள்ளிட்ட தோழர்கள் அந்த அணைக்கு நேரில் சென்று பார்வையிட்டோம். சுத்திகரிப்பின் படிநிலைகளைப் பார்த்துவிட்டு, சுத்திகரிப்பின் முடிவில் தேக்கிவைக்கப்பட்ட மிகப்பெரும் உயர்நிலைத் தொட்டியினையும் மேலேறிப் பார்த்துவிட்டு இந்தத் தண்ணீரையா குடிக்கிறோம் என்கிற குமட்டலோடும் உளைச்சலோடும் ஒசூர் திரும்பினோம். தமுஎகச, டி.ஒய்.எப்.ஐ, மத்திய மாநில பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றின் சார்பில் நகராட்சி ஆணையரைச் சந்தித்து ஒசூர் மக்களின் உடல்நலனைக் காக்கும் பொருட்டு அந்தத் தண்ணீரை குடிநீராக விநியோகிக்க வேண்டாம் என்று முறையிட்டோம். அந்தத் தண்ணீர் ஒசூரில் குடிநீராக விநியோகிக்கப்படவேயில்லை என்றும் தொழிற்பேட்டையின் இதர பயன்பாடுகளுக்காக மட்டுமே  தரப்படுவதாகவும் சொல்லிக் கொண்டிருந்த அந்த ஆணையர் இப்படி ஏதேனும் புகார் வந்தால் சமாளிப்பதற்காகவே சில தொழிற்சாலை நிர்வாகங்களிடமிருந்து “குடிக்கத்தக்க நீர்தான்” என்று நற்சான்று வாங்கி வைத்திருந்தார். (ஆனால் நற்சான்று தந்த இந்நிறுவனங்கள் அந்த நீரை தோட்டம் மற்றும் தொழில்சார்  தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தின, குடிப்பதற்கு அல்ல)

தமுஎகச நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைப்பதற்காக தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்களை தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருந்தபோது இந்தத் தண்ணீர் விசயத்தையும் தெரிவித்தேன். அவர் தந்த ஆலோசனைப்படிதான் நானும் மத்திய சுங்கவரித்துறை மணிமோகனும் பெங்களூரில் உள்ள ஆய்வகம் ஒன்றில் அந்த நீரினை பரிசோதனைக்கு அனுப்பி ஆய்வறிக்கையைப் பெற்றோம்.

அடுத்துவந்த ஞாயிற்றுக்கிழமை ஒசூர் ஆந்திர சமிதியில் கூட்டம். தோழர் ஜீவானந்தம் உலகளாவிய சுற்றுச்சூழல் சீர்கேடுகளை விவரித்துவிட்டு உள்ளூர் பிரச்னைக்கு வந்தார். கெலவரப்பள்ளியிலிருந்து ஒசூர் மக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்படும் நீர் எந்தளவிற்கு மாசடைந்துள்ளது, அதைக் குடிப்பதனால் உடல்நலனுக்கு ஏற்படக்கூடிய கேடுகள் என்னென்ன என்று ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி அவர் பேசிய போதுதான் எத்தகைய நஞ்சை நாங்கள் அன்றாடம் குடித்துவருகிறோம் என்பதை உணர்ந்தோம். “சுத்தமான குடிநீரை கோருவது நமது அடிப்படை உரிமை; அதை வழங்கவேண்டியது அரசின் பொறுப்பு. அந்தப் பொறுப்பினை நிறைவேற்றத் தவறிய நகராட்சி நிர்வாகத்தை எதிர்த்து ஒசூர் மக்கள் போராட வேண்டும். அதற்கு தமிழ்நாடு பசுமை இயக்கம் உறுதுணையாக இருக்கும்” என்று அவர் தந்த உத்வேகத்தில் இம்முறை நகராட்சி ஆணையரைச் சந்தித்து முறையிடுவதற்கு பதிலாக எச்சரித்தோம். அதன்பிறகே கெலவரப்பள்ளி அணையின் மாசடைந்த நீருக்குப் பதிலாக மாற்று நீராதாரத்திலிருந்து ஓரளவுக்கு மாசு குறைந்த குடிநீர் விநியோகம் ஒசூரில் தொடங்கியது என்கிற செய்தியை தோழர் ஜீவா காலமாகிவிட்ட இன்றைய தினத்தில் சொல்வது அவருக்கான அஞ்சலியாக இருக்கும்.

 


புதன், டிசம்பர் 5

மருந்துச்சீட்டே நோயை குணப்படுத்திவிடாது - ஆதவன் தீட்சண்யா


PC;newdelhivoice
சாதியை விட காதல் முக்கியமா, காதலைவிட சாதி முக்கியமா என்கிற தலைப்பிலான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். எனக்குரிய நேரத்துக்கும் முன்பாகவே அரங்கிற்குள் சென்றுவிட்ட நான் படப்பிடிப்பையும் விவாதத்தின் போக்கையும் கவனிப்பதற்காக காட்சி சட்டகத்துக்கு வெளியே பார்வையாளர் பகுதி என்பது போன்றிருந்த ஓரிடத்தில் அமர்ந்துகொண்டேன். நிகழ்வின் பங்கேற்பாளர்களுடன் வந்திருந்த பலரும்கூட அங்குதான் அமர்ந்திருந்தார்கள். மேடையில் இருதரப்பாரும் சமமான எண்ணிக்கையில் இருந்தாலும், ஒலி/ஒளிப்பதிவுக்குள் வராத இப்பகுதியில், சாதியே முக்கியம் என்கிற தரப்பினருக்கு ஆதரவானவர்கள் பெரும்பான்மையினராகவும், காதலே முக்கியம் என்னும் தரப்பாருக்கு ஆதரவானர்கள் மிகச்சொற்பமாகவும் இருந்தனர். இது ஒருவகையில் சமூகத்தின் அசலான நிலையை விளக்குவதற்குரிய மாதிரித்தோற்றம் போல எனக்கு தோன்றியது.

பொதுவாக நம் கவனம் மேடைகளிலேயே குவிந்துவிடுகிறது. இங்கும் அதுதான் நடந்தது. காமிராவுக்கு முன்பாக பேசுகிறோம்- அது பொதுவெளியில் ஒளிபரப்பாவிருக்கிறது என்று தெரிந்தே ‘நாங்கள் விடுக்கிற எச்சரிக்கையையும் மீறி எங்கள் சாதிப் பெண்களிடம் பழகினால் கொல்லத்தான் செய்வோம்’ என்று பகிரங்கமாக பேசிவிட்ட ஒரு இளைஞரைப் பற்றியே ஆவேசமான விமர்சனங்கள் வந்தன. விளைவுகள் என்னவெனத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படையாக பேசிவிட்ட அவரை உடனேயே குற்றவாளியாக பார்ப்பதற்கு நம் கண்கள் பழகிவிட்டிருக்கின்றன. ஆனால் தன் சாதிக்காக கொலை செய்யவும் தயங்கமாட்டேன் என்று கொக்கரிக்குமளவுக்கு அந்த இளைஞரின் மனசில் நஞ்சும் வன்மமும் பாய்ச்சியவர்கள் யார்? அவர்கள் காமிராவுக்கு வெளியே இருந்தார்கள். படப்பிடிப்புக்கு தொந்தரவில்லாமல் ஓர் ஓரத்தில் பார்வையாளர்கள் என்பவர்களாக எனது அருகாமையில் அமர்ந்திருந்தார்கள்.

பார்வையாளர்கள் எனப்படுவோர் உண்மையில் பார்வையாளர்களல்ல, அவர்கள்தான் சமூகத்தின் உளவியலை சட்டெனக் காட்டிவிடுபவர்கள் என்பதை நான் உணர்ந்த தருணமது. அவர்களது கருத்துகள் மேடையில் சொல்லப்பட்டதைவிடவும் வெளிப்படையாகவும், சமூகத்தின் உள்ளோட்டத்தை காட்டவல்லதாகவும் இருந்தன. அவர்கள் தங்களது வார்ப்பில் ஒரு கொலையாளி மேடையில் உருத்திரண்டு வெளிப்படுவதை ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். அதேவேளையில், சாதியைவிட காதலே முக்கியம் என்று சிலர் வாதிட்ட போது அவர்கள் எதிரடியாக வசவுகளையும் பொறுமலையும் உடல்மொழியில் பரிகாசத்தையும் வெளிப்படுத்தினார்கள். தங்களது சாதிக்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்று அவர்கள் தமக்குள் சன்னக்குரலில் கடுமையாக பேசிக்கொண்டார்கள். சட்டத்தின் பார்வையில் குற்றம் என்பதற்காக தமது சாதியின் / குடும்பத்தின் தூய்மையை - கௌரவத்தைக் காப்பதற்காக கொலை செய்வதை நிறுத்திக்கொள்ள முடியாது என்று அவர்கள் உறுதிபட நம்புகிறார்கள். நாடெங்கும் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றொழித்து வரும் இந்த நம்பிக்கைதான் ஒசூர் சூடுகொண்டப்பள்ளி நந்தீஷ் - சுவாதி காதல் தம்பதியரையும் இப்போது கொன்றிருக்கிறது.

***

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் சிவனசமுத்திரம் வழியாக பாய்கிறது சிம்ஷா ஆறு. அதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்மின் திட்டத்தின் மதகுக்கு அருகில் 13.11.18 அன்று 25 மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத - கைகால் கட்டப்பட்ட- ஊறி நொதித்த நிலையிலான ஆண் ஒருவர் சடலமாக மிதப்பதாக பெலகாவல்லி காவல் நிலையத்திற்கு தகவல் வருகிறது. இதேபோல, ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு சற்று தள்ளி 15 ஆம் தேதி 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலமும் கைகால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. சடலமாக கிடந்த ஆணின் உடலில் காணப்பட்ட நீலநிற பனியனில் அம்பேத்கர் படமும் ‘ஜெய்பீம் - சூடகானப்பள்ளி’ என்கிற ஆங்கில வாசகமும் அச்சிடப்பட்டிருப்பதை துப்பாக வைத்துக்கொண்டு தேடத்தொடங்கிய பெலகாவல்லி காவல்நிலையத்தினர் வந்து சேர்ந்த இடம் ஒசூர் சூடுகொண்டப்பள்ளி.

சூடுகொண்டப்பள்ளி, ஒசூர் வட்டத்தின் உள்ளொடுங்கிய சிற்றூர்களில் ஒன்று. இங்கு சாதிவாரியாக வன்னியர்கள் 40, ஆதிதிராவிடர் 18, நாயுடு 15, குரும்பர் 15, அருந்ததியர் 1 என்கிற எண்ணிக்கையிலான குடும்பங்கள் வசிக்கின்றன. பட்டியல் சாதியினர் யாருக்கும் குறிப்பிடும்படியாக நிலம் இல்லை. எனவே அவர்கள் வாழ்வாதாரத்திற்காக பிற சாதியினரின் நிலங்களில் வேளாண் கூலிகளாக பணியாற்றிவருகின்றனர். இளைஞர்கள் அருகாமை நகரமான ஒசூருக்கு வந்து வேலை செய்து திரும்புகின்றனர். ஆதிதிராவிடர்களான திம்மக்கா - நாராணயப்பா தம்பதியரின் மகனான நந்தீஷ் (23) அவர்களில் ஒருவர்.  இதே ஊரைச் சேர்ந்தவர் சீனிவாஸ். வன்னியரான இவர் தன் சொந்த சாதிக்கு வெளியே போய் நாயுடு சாதியைச் சேர்ந்த சின்னம்மாவை திருமணம் செய்துகொண்டவர். இவர்களது சாதிக்கலப்பில் பிறந்த பெண் சுவாதி (21).

கிருஷ்ணகிரி கல்லூரியில் படித்துவந்த சுவாதியும் நந்திஷூம் நான்காண்டுகளாக காதலித்துவந்ததை அறிந்த சுவாதியின் பெற்றோர் நந்திஷையும் அவரது குடும்பத்தாரையும் இதன் பொருட்டு மிரட்டி தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த நந்திஷ் சுவாதியிடமிருந்து விலகிச் சென்றிருக்கிறார். ஆனால் சுவாதி உறுதியாக இருந்து வீட்டை விட்டு வெளியேறி வந்த நிலையில் இருவரும் 2018 ஆகஸ்டில் கோயிலில் மணம் செய்துகொண்டனர். பிறகு சூளகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்திருக்கின்றனர். 

பொதுவாக இவ்வாறான சூழலில் தங்கள் பெண் காணாமல் போய்விட்டதாகவோ, யாரோ கடத்திப் போய்விட்டதாகவோ சாதியாதிக்கவாதிகள் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பது வழக்கம். உள்ளூர் காவல் நிலையங்கள் பெரும்பாலானவற்றில் இவர்களுக்கு தொடர்பும் செல்வாக்கும் இருக்குமாதலால் காவல் துறையினர் இந்தப் புகாரின் பேரில் பெண்ணையும் அவளது காதலன் / கணவனை  தேடிப் பிடித்து விடுவார்கள். பிறகு காவல்துறையினரே பெண்ணை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்ளும்படி பையனை மிரட்டி பணியவைப்பார்கள். சில நேரங்களில் நீதிமன்றமே கூட இப்படியான வேலையைச் செய்வதுண்டு. இவ்வாறு பிரித்து  அழைத்துச் செல்லப்படும் பெண் நாளடைவில் என்னவாகிறாள் என்று யாரும் கவனிப்பதில்லை. தீராத ‘வயிற்றுவலியால்’ அவதிப்பட்டு வந்த இளம்பெண் தற்கொலை என்று வரும் செய்தியானது ஏற்கனவே கொல்லப்பட்ட அவளது காதலின் தொடர்ச்சிதான் என்று அடையாளம் காணப்படுவதில்லை. (அரிதாக, சில புகார்களில் காவல்துறையும் நீதிமன்றமும் சாதிக்கலப்பு தம்பதியரை காப்பாற்றும் பொறுப்பை மேற்கொள்கின்றன.)

சுவாதியின் குடும்பத்தார் இப்படியான புகார் எதையும் தரவில்லை. இதன் பொருள் அவளது காதல் மணத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதல்ல. அல்லது தொலையட்டும் இத்தோடு என்று தலைமுழுகிவிட்டனர் என்பதுமல்ல. கமுக்கமாக இருந்து தீர்த்துக்கட்டுவது என்கிற கொடூர முடிவுக்கு ஏற்கனவே வந்துவிட்டதால் தான் அவர்கள் புகார் கொடுத்து வெளியுலகத்தின் கவனத்தை ஈர்க்கவேண்டாமென இருந்திருக்கிறார்கள் என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலம் அறியமுடிகிறது. சில ஊடகங்களில் சொல்லப்படுவது போல நந்திஷ் சுவாதி இருவரையும் தற்செயலாக பார்த்ததும் அந்நேரத்தில் மூண்ட ஆத்திரத்தில் கூட்டிப்போய் அவர்கள் கொலை செய்துவிடவில்லை. எங்கே வைத்து கொல்வது, சடலங்களை எங்கே கொண்டு போய் மறைப்பது, காணாப்பிணமாகவோ அனாமதேயமாகவோ மாற்றுவதற்கு செய்யவேண்டியது என்ன என்பது போன்ற விசயங்களை மிகத் தெளிவாக முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டையும் ஊரையும் விட்டு வெளியேறிப் போய் ஒசூரில் வசித்துவந்த மகளையும் அவளது கணவனையும் பின்தொடர்ந்து கண்காணித்தபடியே இருந்திருக்கிறார்கள்.

தோதான தருணமெனக் கருதி நந்திஷ் சுவாதி தம்பதியரை 10.11.18 இரவு கடத்தியிருக்கிறார்கள். சாதிக்கலப்பு நடந்ததால் ஏற்பட்ட தீட்டினை பரிகாரச்சடங்கு செய்து கழித்துவிட்டு வீட்டுக்கு அழைத்துக்கொள்வதாகக் கூறி நயவஞ்சகமாக அழைத்துப் போனார்கள் என்றொரு தகவல் இருக்கிறது. ஒருவேளை அப்படி சொன்னதை இந்தத் தம்பதியர் நம்பி வண்டியில் ஏறிக் கொண்டார்களா அல்லது பலவந்தமாக ஏற்றப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. ஆனால் தாங்கள் கடத்தப்பட்டிருக்கும் தகவலை 11.11.18 அதிகாலை 2.14 மணிக்கு தனது கடை முதலாளிக்கு நந்தீஷ் ‘அண்ணா, கிட்னாப் ணா, கனகபுரா’ என்கிற குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளார். அந்நேரம் வரைக்கும் அவரது கையில் செல்போன் பறிக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறது என யூகிக்கமுடிகிறது.

அகாலத்தில் வந்த அந்தச் செய்தியை அப்போதே பார்த்து நடவடிக்கை எடுத்திருந்தால்கூட இவர்களை காப்பாற்றியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. ஏனென்றால், ஒசூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லாமல் அவர்களது வாகனம், போக்குவரத்தும் ஆள் நடமாட்டமும் அதிகமில்லாத கனகபுரா வழியில் சென்றிருக்கிறது. அடிக்கடி சென்று பரிச்சயப்பட்டவர்களால் மட்டுமே அந்த வழியில் அந்நேரத்திற்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்பதால் கனகபுரா மார்க்கம் என்பதும்கூட முன்கூட்டியே தெரிவு செய்யப்பட்டதுதான் என்கிற முடிவுக்கு வரமுடியும்.  நந்தீஷ்  அனுப்பிய குறுஞ்செய்தியின் அடிப்படையில் அவரது முதலாளியும் நந்தீஷின் தம்பி சங்கரும் அவர்களை 11.11.18 காலையிலிருந்தே பல இடங்களிலும் தேடியதோடு காவல் நிலையத்திலும் தெரிவித்திருக்கிறார்கள். பின்பு எழுத்துப்பூர்வமாக புகாரும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே - 11.11.18 அன்று விடிவதற்குள்ளாகவே நந்திஷ் சுவாதி தம்பதியரை சுவாதியின் குடும்பத்தினர் கொன்று முடித்திருக்கின்றனர் என்பது பிற்பாடுதான் தெரியவந்தது.

***

சிவனசமுத்திரம் அருவியையடுத்த பவர் ஹவுஸ் மதகடியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் நந்திஷ் - சுவாதி தம்பதியர் தான் என்று கண்டறியப்பட்டது,  இதன் தொடர்பில் சுவாதியின் தந்தை சீனிவாஸ் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டது, தலைமறைவாக உள்ள இன்னும் நால்வரை காவல்துறை தேடிவருவது உள்ளிட்ட செய்திகள் 16.11.18 பிற்பகலில் ஊடகங்கள் வழியே பரவத் தொடங்கின. சடலங்களின் கதியைக் காட்டும் புகைப்படங்கள் கொலையாளிகளின் குரூரத்தைக் காட்ட போதுமானதாக இருந்தன.

சாதிமறுப்பு திருமணத்தை ஏற்க மறுத்து செய்யப்பட்ட இக்கொலைகளைக் கண்டித்து பல்வேறு அமைப்புகள் களத்திற்கு வந்தன. அன்று மாலையே விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒசூரில் மறியலில் ஈடுபட்டது. மறுநாள் 17.11.18 காலையில் சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், அ.இ.ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.சுகந்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் பிரவீன் குமார்,  நீலம் பண்பாட்டு மையம் சார்பில் திரை இயக்குநர் பா.ரஞ்சித், தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, சாதியொழிப்புச் செயற்பாட்டாளர் கௌசல்யா, ஜெய்பீம் பேரவையினர் உள்ளிட்டோர் நந்தீஷின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு அஞ்சலி செலுத்தினர். நந்திஷ் குடும்பத்திற்கு பாதுகாப்பு, 1 கோடி ரூபாய் நிவாரண நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ஆணவப்படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை, வழக்கை தமிழகத்திற்கு மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை செய்தியாளர் சந்திப்பில் கே.பாலகிருஷ்ணன் முன்வைத்தார்.

பின்னர் மேற்சொன்ன அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரும் இணைந்த குழு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சென்று ஒசூர் வருவாய் கோட்டாட்சியரிடம் இதே கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக முன்வைத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும், இக்கொலைகள் சாதியாணவப் படுகொலைகளே என்று சொல்வதற்கான முகாந்திரம் இருப்பதால் அந்தக் கோணத்திலேயே விசாரணை நடத்துவதற்கு காவல்துறை அறிவுறுத்தப்படுவதாகவும் கோட்டாட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆணவப்படுகொலையே நடப்பதில்லை என்று துணைமுதல்வரே கூறிவந்த நிலையில் இப்படியொரு எழுத்துப்பூர்வ உறுதிமொழியைப் போராட்டக்களத்தில் பெற முடிந்ததை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

***

ஒசூர் பகுதியில் இப்படியொரு ஆணவப்படுகொலை நடந்திருப்பது இதுவே முதல்தடவை என்பது போல உள்ளூரில் ஒரு கருத்து நிலவுகிறது. ஒருவேளை, கடைசியாக அணிந்திருந்த ‘ஜெய்பீம்- சூடகானப்பள்ளி’ என்கிற நீலநிற பனியனுடன் நந்திஷின் உடல் கிடைத்திருக்காவிட்டால் இருவரும்  அனாமதேயப் பிணம் என்று கர்நாடகத்தில் எரிக்கப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டிருக்கும். காணாமல் போனவர்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்கிற புகார் தமிழகத்தில் நிலுவையில் தூசிமண்டி கிடந்திருக்கும். ஊராருக்கு பயந்து எங்கோ கண்காணாத தொலைவுக்கு ஓடிப்போய் விட்டார்கள் போல என்று நந்தீஷின் குடும்பத்தாரும்கூட தமக்குத்தாமே சமாதானம் சொல்லிக் கொள்ளும் நிலை உருவாகி இருக்கும். ஆனால் அந்த பனியன் எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து ஒசூர் பகுதியில் சாதியின் கொடூரத்தை அம்பலப்படுத்திவிட்டது.

சிம்ஷா ஆற்றில்  சிவனசமுத்திரம் அருவிக்கும் பவர் ஹவுசுக்கும் இடைப்பட்ட - முதலைகள் நடமாட்டம் மிகுந்த ஒரு பகுதியில் சடலங்களை வீசுவது என்கிற இந்த இடத்தேர்வு சில கேள்விகளை எழுப்புகிறது. அதாவது, எங்கோ ஒசூரில் உள்ளொடுங்கிய ஒரு சிற்றூரில் இருக்கிற சுவாதியின் குடும்பத்தினருக்கு இந்த இடம் தோதானது என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் இந்த இடம் பற்றி நன்கு பரிச்சயமான, கொலை செய்து பிணங்களை எறிவதற்கு உகந்த இடம் என்பதை அறிந்த சிலரது உதவியின்றி இந்தக் கொலைகளைச் செய்திருக்க முடியாது. எனில் அவர்கள் யார்? கைதாகியுள்ள எழுவரில் அவர்களும் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் இன்னும் விசாரணை வளையத்திற்குள் வரவேயில்லையா? இன்னின்னரால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று தனது உறவினர்கள் 22 பேரின் பெயர்களை குறிப்பிட்டு சுவாதி எழுதிய கடிதம் ஒன்று அவளது நாட்குறிப்பில் இருந்ததாக கூறப்படுவதை போலிசார் கவனம் கொண்டிருக்கிறார்களா? மைசூரில் இருக்கும் சுவாதியின் உறவினர்கள் ஆறுபேருக்கு இந்தக் கொலையில் தொடர்பிருக்கலாம் என நந்தீஷின் தம்பி சங்கர் எழுப்பிய வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நடக்கிறதா? அடுத்த சிலதினங்களுக்குள்ளாகவே நந்தீஷ் -சுவாதியின் சடலங்கள் கரையொதுங்கிய அதேயிடத்தில் ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் பிணம் கரையொதுங்கியது. கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதி கே.வி.எம்.தொட்டியைச் சேர்ந்த ஜோதி என்கிற அந்தப்பெண்ணை அவளது பெற்றோர், தாத்தா, பாட்டி, மாமா ஆகியோர் கடத்தி கொன்று அந்த இடத்தில் வீசியதாக சொல்லப்படுகிறது.  சுவாதியும் ஜோதியும் கொல்லப்பட்ட விதத்தில் காணப்படும் ஒப்புமைகள் தற்செயலானதுதானா?

ஒரு தொழிற்பேட்டையாகவும் பெங்களூரு என்கிற பெருநகரத்தின் ஒருபகுதி போலவும் ஒசூர் மாறிக் கொண்டிருந்தாலும் இங்கு சாதியச் செயல்பாடுகள் முனைப்பாகவே இருக்கின்றன. குடும்ப விழாக்கள் என்கிற பெயரில் பல்வேறு சாதிச்சங்கங்களின் அணிதிரட்சி நடக்கின்றன. நகரத்தின் சொத்துகள், தொழில்கள், வணிகம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தும் சாதிகள் சமூக அந்தஸ்திலும் அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவதை ஒசூரில் மட்டும் எப்படி தவிர்த்துவிடமுடியும்? அதேபோல கிராமப்புறங்களில் நிலவுடைமையில் நிலவும் பாரபட்சம் சாதிய பாரபட்சத்துடன் பின்னிப்பிணைந்ததாக இருக்கிறது. சூடுகொண்டப்பள்ளியும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு தலித்துகள் சாதிரீதியான ஒடுக்குமுறைகளையும் பல்வேறு விதமான தீண்டாமைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியில்தான் நந்திஷ்-சுவாதி படுகொலையைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒசூரின் சுற்றுவட்டாரங்களில் சமீபத்தில் மட்டுமே 7 படுகொலைகள் சாதிரீதியாக நடந்திருக்கின்றன என்று தோழர் திருமாவளவன் 20.11.18 அன்று ஒசூர் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்ததையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.  

ராஜலஷ்மி, சௌம்யா படுகொலைகள் குறித்த படபடப்பு அடங்குவதற்குள் நந்தீஷ் - சுவாதி படுகொலை. கஜா புயல் என்கிற பேரிடர் உண்டாக்கியுள்ள துயரத்தின் அழுத்தத்தில் இந்தப் படுகொலைகள் மீது உரிய கவனம் குவியாமல் திசைதப்பிய நிலையில் இதோ இப்போது நெல்லை வெள்ளாங்குழியில் மற்றுமொரு ஆணவக்கொலை. இசக்கி சங்கர் என்கிற கோனார் சாதி இளைஞர் அகமுடையார் சாதிப் பெண்ணை காதலித்ததற்காக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். மறுநாள்  அதிகாலையில் அந்தப்பெண் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இசக்கி சங்கரை கொன்றதாக அந்தப் பெண்ணின் 16 வயது தம்பியும் அவனது வயதையொத்த நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்துவிட்டு எதுவும் நடவாதது போல பள்ளிக்கூடம் சென்று வகுப்பறையில் இயல்பாக இருக்குமளவுக்கு இந்த சிறார்களின் மனம் குற்றத்தன்மைக்கு பழகியது எப்படி? நந்தீஷ்- சுவாதி கொலையில் தொடர்புடையவர்களின் தோற்றத்தைப் பார்த்து ‘இவ்வளவு பூஞ்சையான இவர்களா இப்படி கொடூரமாக கொலை செய்தார்கள்?’ என்று கேட்டதைப் போலவே இந்தக் கேள்வியும் அர்த்தமற்றது. சாதி யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கிவிடும். இவ்வளவு சிறிய வயதில்  தென்மாவட்டங்களில் வேறு சில சாதிரீதியான கொலைகளிலும் இவ்வாறு 18 வயதுக்குட்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்வது? மைனர்கள் கொலைக்குற்றத்தில் ஈடுபடுகிறார்களா அல்லது வேறு நோக்கங்களுக்காக இவ்வாறு ஈடுபட்டதாக காட்டப்படுகிறார்களா?


வேறு சாதியில் மணம் புரிந்துகொண்ட சீனிவாஸ், தன் மகள் ஒரு தலித்துக்கு வாழ்க்கைத் துணையாவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவளை கொல்கிறார். 16 வயது தம்பி தன்னை விட 9 வயது மூத்த அக்கா தங்கள் சாதிவரம்பை மீறி அவமானத்தை தேடித்தந்துவிட்டதாக கூறி அவளது காதலனை  கொல்கிறான். இந்த சாதி உளவியலை காவல்துறையும் நீதிமன்றங்களும் சட்டரீதியாக அணுகி என்ன செய்துவிட முடியும்? சமத்துவம் சாதியொழிப்பில் நம்பிக்கையுள்ள இயக்கங்கள் தலித்துகளை அணிதிரட்டுவதில் காட்டுவதைவிடவும் பன்மடங்குத் தீவிரத்தோடு இந்த சாதியவாதிகளிடம் தனிமனித அளவிலும் குடும்ப அளவிலும் தலையிட்டு அணுக்கமாக உரையாடாமல் என்ன மாற்றம் இங்கு வந்துவிடும்? பார்ப்பனீயத்தின் அடியாள்படையாக மாறிவிட்டிருக்கிற இடைநிலைச் சாதியினரை சாதிய உணர்விலிருந்து மீட்டு ஜனநாயகப் பண்புள்ளவர்களாக, பிறரோடு கலந்து வாழும் மனிதச்சுபாவமுள்ளவர்களாக மாற்றுவதற்கு அவர்களிடையே பணியாற்றும் திட்டம் ஒன்று உடனடித் தேவையாக இருக்கிறது. வேலைத்திட்டம் என்பது வேலை செய்வதற்குரிய திட்டம் என்கிற புரிதல் அதினிலும் கூடுதலாக தேவைப்படுகிறது.

நன்றி: செம்மலர், டிசம்பர் 2018

சனி, மார்ச் 18

ஒசூர் : தன் சதையைத் தானே அறுத்துத் தின்னும் அவலம் - ஆதவன் தீட்சண்யா

"ஒசூர் எனப்படுவது யாதெனின்" தொடர், scroll.in என்ற இணைய இதழில் வெளியான எனது நேர்காணல் (http://scroll.in/article/815373/interview-there-is-no-political-idea-this-is-what-happens-when-a-society-has-been-sedated) ஆகியவற்றால் உந்தப்பட்ட பத்திரிகையாள நண்பர் ஒருவர் தான் பணியாற்றும் நாளிதழுக்காக என்னிடம் எடுத்த நேர்காணல் இது. மிக நீண்ண்ண்ண்ண்ட பரிசீலனைக்குப் பிறகு இதை வெளியிடவியலாது என்கிற தகவல் அவருக்கு சொல்லப்பட்டதை  மிகுந்த சங்கடத்துடனும் வருத்தத்துடனும் பகிந்துகொண்டார்.  அதனாலென்ன, நீங்கள் வாசியுங்கள்...
1.     ஒசூர் எந்தக் காலகட்டத்தில் எந்தச் சூழலில் தொழில் நகரமாக மாறியது? ஒசூர் மக்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி கூறுங்கள்?

ஒசூர் என்பது குறிப்பிட்ட ஓர் ஊரின் பெயராக குறுகாமல் நிலவியல்தன்மை, தட்பவெப்பம், வாழ்நிலை மற்றும் பண்பாட்டு ஒருமையால் பிணைந்துள்ள ஒரு வட்டாரத்தின் பொதுப்பெயராக விரிந்துள்ளது. தற்போதைய ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய முன்று வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய இந்நிலப்பரப்பு கடல்மட்டத்திலிருந்து 3300 அடி முதல் 4500 அடி வரையான உயரத்தில் அமைந்த மலைப்பகுதி. மிதமான வெப்பமும் கடுங்குளிரும் கணிசமான மழைப்பொழிவும்  எங்கு பார்த்தாலும் ஏரிகள் நிறைந்த நீர்வளமும் கொண்ட பகுதி இது. பல்வேறு தமிழக மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்துவந்திருந்த போதிலும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியின் பெரும்பாலான மக்கள் தெலுங்கு அல்லது கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள். புதிய ஊர் என்பதை குறிக்கும் ஒச ஊரு என்கிற கன்னடச்சொற்களே ஒசூர் என மருவியது. 

திப்புவின் ஆளுகையில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை கைப்பற்றிய பிரிட்டிஷார், தங்கள் நாட்டின் தட்பவெப்பமே நிலவும் இப்பகுதிக்கு லிட்டில் இங்கிலாந்து எனச் செல்லப் பெயரிட்டு கொண்டாடினர். அப்போதைய சேலம் மாவட்டத்தின் தலைநகராக ஒசூர் மாற்றப்பட்டதற்கும் இதுவே காரணம். தங்களது உணவுத்தேவைக்கான புன்செய் தானியங்கள், மலர்வகைகள், மல்பரி ஆகியவற்றை பாரம்பரியமாக விளைவித்துவந்த இப்பகுதி மக்கள் காலப்போக்கில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கேரட் பீட்ருட் பீன்ஸ் காலிஃபிளவர் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிச் சாகுபடிக்கு மாறினர். 1824 ஆம் ஆண்டு ஒசூர் மத்திகிரியில் தொடங்கப்பட்ட குதிரைப்பண்ணை பிறகு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பண்ணைகளில் ஒன்றாக மாறி உள்ளூர் மக்களில் பலருக்கும்  வேலை வாய்ப்பளித்து வந்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்தொட்டு இப்பகுதியில் பணியாற்றுவதற்கென்று  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பலரும் தங்களது பணிக்காலத்தின் முதற்கட்டத்தை இங்கேதான் தொடங்கவேண்டியிருந்தது. தாங்கள் பிறந்து வளர்ந்த சூழலிலிருந்து தட்பவெப்பம், மொழி, பண்பாட்டுச்சூழல், வாழ்க்கைத்தரம் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட இப்பகுதியில் பணியாற்றுவதை கடும் தண்டனையாகவே இவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். இங்கிருந்து மாற்றலாகிப் போனால் போதும் என்கிற கவலையால் பீடித்திருந்த இவர்களில் பலரும் உள்ளூர் சமூகத்தோடு ஒன்றாமலே இருந்திருக்கிறார்கள்.

***

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கென 1971ல் உருவாக்கப்பட்ட சிப்காட் நிறுவனம், ராணிப்பேட்டைக்கு அடுத்தபடியாக தனது இரண்டாவது தொழிற்பேட்டையை ஒசூரில் 1974 ஆம் ஆண்டு 1236 ஏக்கரில்  தொடங்கியது. (பிறகு 1980ல் 457 ஏக்கர், 1997ல் 179 ஏக்கர், 2004ல் 239 ஏக்கர் என விரிவடைந்தது.) மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான தருமபுரி மாவட்டத்தை வளர்ச்சியோட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கை இதுவென சொல்லிக் கொள்ளப்பட்டாலும் பெங்களூருக்கு அருகாமை என்பதே ஒசூர் தேர்வானதற்கு முக்கிய காரணம். உள்கட்டமைப்பு வேலைகள் நிறைவடைந்து அடுத்துவந்த சில ஆண்டுகளில் ஒசூர் நகரத்திலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேரிகை ஆகிய ஊர்களுக்கான சாலைகளின் இருமருங்கிலும் ‘குண்டூசி முதல் குட்டி விமானம் வரை’ செய்வதற்கான நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உருவாகின. ஆயினும் இவற்றில் ஒன்றுகூட உள்ளூர் மக்களின் உழைப்பையும் ஆற்றலையும் உள்வாங்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தன்மையையோ நோக்கத்தையோ கொண்டிருக்கவில்லை. மாவட்டத்தின் அப்போதைய சராசரி எழுத்தறிவே 29 சதவீதம் என்றிருந்த நிலையில் அதன் கட்டக்கடைசியான ஒசூர் பகுதியிலிருந்து இந்த நவீனத் தொழிற்சாலைகளுக்கு தேவைப்பட்ட கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதியோடு தயார்நிலையில் யாரிருப்பார்கள்? தங்களது மண்ணை விழுங்கி உருப்பெற்றுள்ள இத்தொழிற்பேட்டை தங்களுக்கானவை அல்ல என்கிற கடும்பாடத்தை உள்ளூர் மக்கள் எடுத்தயெடுப்பிலேயே விளங்கிக்கொண்டார்கள். தோட்டக்காரர், துப்புரவுப் பணியாளர் அல்லது காவலர் போன்ற கடைநிலை ஊழியங்கள்தான் அவர்களில் சிலருக்கு கிடைத்தன.  

2.  ஓசூர் தொழில்மயமானபோது, அங்கு தொழிலாளர்களாக புலம்பெயர்ந்தவர்கள் நிலை எப்படி இருந்தது? பிறகு அங்கே மாறிய சமூக, சாதிய சூழ்நிலைகள் பற்றி சொல்லுங்கள்?

எவ்வளவுதான் அதிநவீன இயந்திரமாயினும் மனிதக்கரங்கள் தான் அவற்றை தொட்டு உயிர்ப்பிக்கின்றன என்கிற பார்வை இங்கு மங்கலாகக்கூட அரசாங்கத்திற்கு கிடையாது. அதனால்தான், தொழிற்சாலைகளை அமைத்துக்கொள்ளத் தேவையான மூலதனம், இடம், தண்ணீர், மின்சாரம், சாலை, போக்குவரத்து, வரிவிலக்கு, சட்டப்பாதுகாப்பு என அனைத்தையும் முதலாளிகளுக்கு வழங்கிவிட்டு, அவற்றில் பணியாற்ற வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் அடிப்படைத்தேவைகள் குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டாமல் ஒதுங்கிக்கொண்டது.  நாடு முழுவதுமிருந்து இங்கு வந்து குமிந்த தொழிலாளர்கள் தங்குமிடம் கழிப்பறை தண்ணீர் உணவு என்று ஒவ்வொன்றுக்கும் அலைய வேண்டியிருந்தது. முதலாவதாக, இங்கு நிலவிய தட்பவெப்பம் அவர்களில் பலருக்கும் புதிது. ஜூனில் தொடங்கி நவம்பர் வரையிலும் மழை. டிசம்பர் முதல் பிப்ரவரி கடைசிவரை பனி. அதிகாலையில் பகல் வேலைக்கு (டே ஷிஃப்ட்) கிளம்பினாலும் இரவுப்பணிக்குப் போய் திரும்புவதாயிருந்தாலும் வருடத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாட்களில் குளிரால் நடுங்க வேண்டியிருந்தது. 1984ல் நான் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் அலுவலகத்தின் அறைகளில் மின்சார சூடேற்றி (ஹீட்டர்) பகலிலும் கனன்றுகொண்டிருக்கும். வீட்டிலும் வெளியிலும் குளிர்கால ஆடைகளோடு நடமாட வேண்டியிருந்தது. ஏப்ரல் மே மாதங்களில் கூட மின்விசிறியின் தேவை உணரப்படாத காலமது. வெயிலடிக்கும், ஆனால் உறைக்காது, வியர்வையே வராது. எளிதில் களைப்படைய - ஆனால் ஒருவிதமான மந்தத்தன்மையை உருவாக்குவதாக இருந்தது இந்தத் தட்பவெப்பம். 

அடுத்தது, இவர்கள் அவ்வளவு பேரையும் தங்கவைத்துக் கொள்ளும் அளவுக்கான எண்ணிக்கையில் இப்பகுதியில் வீடுகள் இல்லை. ஒசூர் பகுதி மக்கள் தமக்கென கட்டி வாழ்ந்துவந்த பூர்வீக வீடுகளில் ஒரு பகுதியை ஒதுக்கி தொழிலாளர்களுக்கு வாடகைக்கு கொடுத்தார்கள். தேவையின் தீவிரத்தை ஒருவாறு யூகித்துக்கொண்ட சிலர் வாடகைக்கு விடுவதற்கென்றே அவசரடியாக வீடு போன்றவற்றை கட்டினார்கள். தொழிலாளர்களில் பலரும் படித்து முடித்தக் கையோடு வேலைக்கு கிளம்பி வந்தவர்கள். அவர்களுக்கு தனியாக அறையோ வீடோ தேவைப்படவில்லை அல்லது கிடைக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க அவ்வாறு எடுத்து தங்குமளவுக்கு அப்போது அவர்களது வருமானமில்லை. எனவே அவர்கள் சின்னஞ்சிறு அறையைக் கூட நாலைந்து பேராக பகிர்ந்துகொண்டார்கள். வீடு என்றால் பத்து பதினைந்து பேர் வரை கூட நிறைந்திருப்பார்கள்.

சாதி மதம் வட்டாரம் என்பதெல்லாம் அவரவர்களுக்குள் இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அவை அவர்கள் பிறரோடு கலந்து ஓரிடத்தில் வாழ்வதற்கு தடையாக இருக்கவில்லை. முன்பின் தெரியாத ஊரில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்துகொள்ளும் பக்குவத்திற்கு அவர்கள் அனிச்சையாக வந்த சேர்ந்தார்கள். பணி நேரத்தில் சில ஆலைகள் உணவு வழங்கினாலும் ஒருவேளையாவது வெளியில் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம், ஆனால் போதுமான உணவகங்கள் கிடையாது. நிரந்தரமாக கடையில் சாப்பிடுவதற்கு அவர்களது வருமானமும் ஒத்துழைக்கவில்லை. எனவே கூட்டாக சமைத்து உண்டார்கள். சாப்பாட்டில் அவர்கள் எதையும் விலக்கிவைத்ததில்லை. சம்பளம் வாங்கும் வாரத்தில் ஆட்டுக்கறியில் தொடங்கி கோழி மீன் பன்றி என்றாகி மாதக்கடைசியில் மாட்டிறைச்சி வாங்கி சமைத்துண்பது என்பதாக இருந்தது அவர்களது தெரிவு.

வாழிடம் பணியிடம் சார்ந்து தொழிலாளிகளிடம் முகிழ்த்துவந்த உணர்வு வர்க்க உணர்வாக மாறவேண்டிய கட்டாயத்தை தொழிற்சாலை நிர்வாகங்கள் உருவாக்கிவந்தன. புதிதாக தொடங்கப்பட்டவை என்று முதல் பத்தாண்டுகளுக்கு வரிமான வரி கட்டுவதிலிருந்தும், பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களை கடைபிடிப்பதிலிருந்தும் தொழிற்சாலைகள்  விலக்கு பெற்றிருந்தன. இதனால் வேலை நேரம், ஊதிய மாற்றம், போனஸ், மருத்துவச் சிகிச்சை, விபத்துக் காப்பீடு, பணி நிரந்தரம், விடுமுறை, வாராந்திர ஓய்வு போன்றவற்றை நிர்வாகங்கள் மறுத்துவந்தன. சலுகைக்காலம் முடிந்தப்பின்னும் கூட நிர்வாகங்கள் இந்த நிலையை நீட்டித்து வந்தன. சங்கம் வைப்பதற்கும்கூட அனுமதிக்காத போக்கு. குறைந்தக்கூலியில் அதிக உழைப்பைப் பெற்றுவிட வேண்டும் என்கிற லாபவெறிக்கும், செலுத்திய உழைப்புக்கு நியாமானதொரு ஊதியத்தைப் பெற்றுவிட வேண்டும் என்கிற இயல்பெண்ணத்திற்கும் இடையேயான மோதல் பல்வேறு தொழிற்சாலைகளில் அமைதியின்மையை உருவாக்கியது. மக்கள்தொகைப் பெருக்கம், கடும் வாடகை, விலைவாசி, உழைப்புச்சுரண்டல், குறைந்தக் கூலி  என்பதான பல்முனைத் தாக்குதலை எதிர்த்துப் போராடும்படியான நெருக்கடிக்குள் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர்.

அரசு ஊழியர்களைப் போல மாற்றல் வாங்கிக்கொண்டு வேறெங்கும் போய்விடுவதற்கான வாய்ப்பேதும் தொழிலாளர்களுக்கு இல்லை. இங்குதான் இனி வாழ்க்கை என்றான பிறகு இடர்ப்பாடுகளையும் குறைபாடுகளையும் பெரிதுபடுத்தி புகாரிட்டுக்கொண்டிருப்பதை விட, இப்பகுதியை வாழத் தகுந்ததாக மாற்றிக்கொள்வது அவசியமாயிருந்தது. அடுத்துவந்த ஆண்டுகளில் தொழிலாளர்கள் நடத்தியப் போராட்டங்கள் அவர்களது சொந்தவாழ்க்கையில் மட்டுமல்லாது ஒசூர் பகுதியிலும் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்கின.

18-20 வயதில் வேலைக்குச் சேர்ந்து கூட்டாக ஓரிடத்தைப் பகிர்ந்துகொண்ட தொழிலாளர்கள் அடுத்துவந்த சில ஆண்டுகளில் திருமணத்தை நோக்கி நகர்ந்த போது தனித்தனி வீடுகள் தேவைப்பட்டன. அவர்களுக்கு வாடகைக்கு விடவும் விற்கவும் புதிதுபுதிதாக குடியிருப்புப் பகுதிகள் உருவாகின. பூர்வீகத்திலிருந்த சொத்து எதையேனும் விற்றோ அல்லது கடன்பட்டோ இங்கு சொந்த வீடுகளைக் கட்டினார்கள். தொடக்க ஆண்டுகளில் அரிதாக ஒன்றிரண்டு நிறுவனங்களில் மட்டுமே சில பெண்கள் வேலைக்கு அமர்த்திக்கொள்ளப்பட்டார்கள். திருமணமாகி இங்கு வந்தப் பெண்களில் ஒருபகுதியினர் குடும்பச்செலவுக்கு ஒத்தாசை என்கிற அளவில் தத்தமது கல்விக்கேற்ப சிறு குறு தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். அதுவரை ஆண்களின் தொழிற்பேட்டை என்றிருந்த ஒசூரின் முகம் இருபாலருக்குமானதாக மாறத்தொடங்கியது. தொழிலாளர்கள் தமது வருமானத்தை சுண்டுவிசையாக வைத்து மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், திரையரங்குகள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், வாகன விற்பனை நிலையங்கள் போன்றவற்றை இங்கு வரவைத்தார்கள். அதுவரை இப்பகுதிக்கு பெரிதும் அறிமுகமாகியிருக்காத தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொழுதுபோக்குகள், கலைவடிவங்கள், தெய்வங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், உணவுவகைகள் ஆகியவற்றை கொண்டுவந்து சேர்த்தவர்களும் தொழிலாளர்கள்தான். 


தனிப்பையன்களாக இருந்தவரையிலும் யாவரோடும் கலந்துண்டு வாழ்ந்த தொழிலாளர்களை திருமணம் மீண்டும் அவரவரது சொந்த சாதிக்குள் கொண்டு போய் திணித்தது. ஒண்ணும் மண்ணுமாய் உருண்டுபுரண்ட நட்பும் தோழமையும் முடிவுக்கு வந்தன. பொது இடங்களில் அல்லது பணித்தளத்தில் மட்டுமே  சந்தித்துக்கொள்கிறவர்களாக நண்பர்கள் மாறினர். எத்தனை பேர் வந்தாலும் ஏற்று இடமளிக்கும் விசாலத்தை சின்னஞ்சிறு அறைகள் கொண்டிருக்க, பென்னம்பெரிய தனித்த வீடுகளோ சொந்த சாதி மட்டுமே புழங்கும் இடமாக சுருங்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியில் தான் வெவ்வேறு தொழிற்சாலைகளில் சிதறுண்டிருக்கும் தத்தமது சாதியினரை அடையாளம் கண்டு ஒருங்கிணைக்கும் சாதிய அமைப்புகள் உருவாகின. ஒவ்வொருவருக்குள்ளும் உருவாகிவந்த தொழிலாளி என்கிற நவீன அடையாளத்தை சாதியம் என்கிற நச்சுணர்வு காத்திருந்து காவு கொண்டது. இதே காலக்கட்டத்தில் நாடு தழுவிய அளவில் அஞ்சத்தக்கவிதமாக வளர்ந்தவந்த மதவாதத்தில் கரைவதற்கு அது தொழிலாளர்களை தகவமைத்தது.

3. 90களில் உலகமயமாதலின் தாக்கம் ஒசூரை எப்படி பாதித்தது?

தொழில் நகரம் என்கிற அடையாளத்தை உலகமயமும் புதிய தொழிற்கொள்கையும் போக்கடித்தன.

* பெங்களூருக்கு அருகாமை, இதமான பருவநிலை, ஏறுமுகமான நிலமதிப்பு ஆகியவற்றுக்காக இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கறுப்புப்பணத்தால் வாங்கி கம்பிவேலிக்குள் அடைக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் சொந்தமண் மீதிருந்த பாத்யதையை முற்றுமுழுதாக இழக்கத் தொடங்கினர்.

* கட்டற்றச் சந்தை உலகளாவிய வாய்ப்புகளை நல்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனவலு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைக்கு ஒசூர் நிறுவனங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. விற்பனைத்தேக்கம், உற்பத்திக்குறைப்பு, ஆட்குறைப்பு, கதவடைப்பு, ஆலைமூடல் என நெருக்கடி மூண்டது. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இயந்திரங்களைக் கொண்ட தொழிற்சாலைகளை திறந்துப் போட்டுவிட்டு தலைமறைவாகும் நிலை ஏற்பட்டது. புதிய தொழிற்பேட்டைக்குரிய சலுகைக்காலம் முடிவடைந்தபடியால் இதேபோன்ற சலுகை கிடைக்கின்ற வேறு இடத்துக்கு சில நிறுவனங்கள் ஓடிப்போயின. கடனையும் லாபத்தையும் வேறு துறைகளுக்கு திருப்பிவிட்டு நஷ்டக்கணக்கு காட்டிவந்த நிறுவனங்களும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டன.     

* பல உற்பத்திப்பிரிவுகளை மூடிவிட்டு ‘அவுட் சோர்சிங்’ முறைக்கு சென்றதால் அந்தந்த ஆலைமட்டத்தில் ஆட்குறைப்பு நடந்தது.

* வீட்டு உபயோகப் பொருட்களும் அதிக ஓடுதிறன் கொண்ட வாகனங்களும் இறக்குமதியாகப் போவதாய் கிளம்பிய வதந்திக்கே உள்ளூர் வியாபாரமும் தொழிலும் சுருண்டு விழுந்தன. ‘இந்தியர்களின் உடல்வாகு, மனோநிலை, சாலைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சுதேசி பைக்குகளையே வாங்குங்கள்’ என்று அநாமதேய துண்டறிக்கை மூலம் கெஞ்சும் நிலைக்கு தொழிற்சாலைகள் கீழிறங்கின. 

 4. சிறுதொழில் நிறுவனங்களின் நிலை என்னவாகியது?

* உதிரி பாகங்களை உள்ளூர் சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்தே அதுகாறும் கொள்முதல் செய்துவந்த பெருநிறுவனங்கள் ‘திறந்தச்சந்தையில் தரமிக்கப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதாய்’ அறிவித்தன. இதனால் உற்பத்திச்செலவை விடவும் குறைந்த விலைக்கு கொடுத்தாவது பெருநிறுவனங்களின் ஆர்டரைப் பெறவேண்டியிருந்தது. அதற்குரிய தொகை இழுத்தடித்தே கொடுக்கப்பட்டதால் கடனும் வட்டியும் சிறு-குறு தொழில் முனைவோரை நெறித்து தொழிலை நடத்தவிடாமல் விரட்டின. கடன்தொல்லையால் நடந்த தற்கொலைகளும் காணாமல் போதலும் உலகமயத்திற்கென கொடுக்கப்பட்ட பலிகள்தான்.

5. தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கம் பற்றி சொல்லுங்கள்?

* குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற பெரும் செலவினங்களை எதிர்கொள்ளும் வயதில் தொழிலாளிகள் வேலையிழந்தனர். சிலர் சொந்த ஊருக்குத் திரும்பினர்.  சிலர் இடம்பெயர்ந்து எங்கோ சென்று மறைந்தார்கள். முன்பு சீருடை அணிந்து மிடுக்காக தொழிற்சாலைக்கு சென்றுவந்த பலர் தள்ளுவண்டி வியாபாரம், நடைபாதைக் கடை, சைக்கிளில் தேநீர் விற்பது, நிலத்தரகு என முன்பின் அறிந்திராத தொழில்களில் உதிரிகளாகி அலைந்தார்கள். ஆட்குறைப்பின் மூலம் வெளித்தள்ளப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் அதே நிறுவனத்தில் குறைந்தக்கூலிக்கு தற்காலிகங்களாகினர். தற்காலிகங்களைக் காட்டி நிரந்தரத் தொழிலாளர்களின்  உரிமைகள் மறுக்கப்பட்டன.

* கடைவீதிகள் வெறிச்சோடிப் போயின. ‘வாடகைக்கு’ ‘விற்பனைக்கு’ என்கிற அட்டைகள் தொங்கும் வீடுகள் பெருகின. சொத்துகள் கைமாறின. வெளியேறுகிறவர்களுக்கான ஒருவழிப்பாதையானது ஒசூர். 

6. தொழிற்சங்கங்கள் சிறப்பாக செயல்பட்ட பொற்காலச்சூழல் ஒசூரில் இருந்துள்ளது. அதில் எப்படியான மாற்றங்கள் ஏற்பட்டன?

உலகமயத் தாக்குதலால் தொழிற்சங்கங்கள் பேதலித்துப் போயின. ஆட்குறைப்பை தடுக்கவியலாமல் எண்ணிக்கை குறித்த பேரங்களில் அவை ஈடுபட்டன. வேலையில் நீடிப்பவர்கள், வேலை இழந்தவர்கள், வேலையிழந்து தற்காலிகமாக வந்தவர்கள் எனத் தொழிலாளர்கள் சிதைக்கப்படுவதை தொழிற்சங்கங்களால் தடுக்க முடியவில்லை. சுமங்கலித் திட்டம் போன்றவற்றால் நிரந்தரமாக தற்காலிகமாக்கப்பட்டோரை திரட்டும் வழியறியாது அவர்கள் சுரண்டப்படுவதை அனுமதிக்கும் நிலைக்குச் சென்றன.

தொழிலாளர்களின் ஊதியம், வருங்கால வைப்புநிதியைக் கூட தராமல் தொழிற்சாலைகளை மூடிவிட்டு நிர்வாகங்கள் ஓடிப்போயின. இயந்திரங்களை எடுத்துப் போகவாவது நிர்வாகத்தினர் வருவார்கள், பிடித்துக்கொள்ளலாம் என்று மூடப்பட்ட ஒரு பஞ்சாலையின் வாயிலில் கொட்டைகைப் போட்டு காத்திருந்த தொழிலாளர்கள் ஒருகட்டத்தில் பொழுதைப்போக்க சீட்டாடத் தொடங்கினார்கள். மாதக்கணக்காகியும் யாருமே வராத நிலையில் அவர்கள் சீட்டாடுவதற்காகவே அங்கு  கூடுகிறவர்களாக மாறினர். மரபான போராட்டங்களில் நம்பிக்கையிழந்த சிலர் செல்போன் கோபுரங்களில் ஏறி தீக்குளிக்கவும், சாலை மறியல் செய்யவும் தலைப்பட்டனர்.
 
7. இதிலிருந்து ஒசூர் மீளவேயில்லையா?

பேரழிவின் முதல் அலை ஓய்வதற்குள் உலகப் பொருளாதார நெருக்கடியும் மின்வெட்டும் அடுத்தடுத்த அலைகளாகி வீழ்த்தின. நெருக்கடியால் பாதிக்கப்படாத நிறுவனங்கள்கூட வாரத்தில் நான்குநாள் ஓய்வு என்கிற தந்திரத்தைக் கையாண்டன. மனஉளைச்சலிலும் அச்சத்திலும் தொழிலாளர்கள் தூக்கமிழந்து அகாலங்களில் உலாத்தத் தொடங்கினர். தொழிற்சங்க நிர்வாகிகள் முறைவைத்து ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு அவர்களை வீடுகளுக்கு கொண்டு சேர்த்தனர்.  

பசியாற ஏதுமற்ற நிலையில் தன் சதையைத் தானே அறுத்துத் தின்னும் அவலமாக ஒசூர் பகுதி மறுபடியும் தன்னிடம் மிச்சமிருந்த நிலப்பரப்பை விற்றுக்கொள்ளத் தொடங்கியது. இம்முறை பெரும் கட்டுமான நிறுவனங்கள் வந்திறங்கின. பெங்களூரின் மென்பொருள் பணியாளர்கள் ஒசூரில் பெருமளவு குடியேறி தூங்கியெழுந்துப் போகத் தொடங்கினர்.

8. இன்றைய தொழிற்பேட்டை எப்படியுள்ளது?

மூடிக்கிடப்பவற்றையும் சேர்த்து 2015 டிசம்பர் வரை 811 தொழிற்சாலைகள் பதிவு செய்துகொண்டுள்ளன. 5000 தொழிலாளர்கள் பணியாற்றுவதாக கணக்குக் காட்டும் ஒரு வாகனத் தொழிற்சாலையில் 647 பேர் மட்டுமே நிரந்தரம். பிறவற்றிலும் இதே நிலைதான். எனில் ஒசூர்பகுதி தொழிலாளர்கள் எனக் காட்டப்படும் 90195 பேரில் 85 சதமானவர்கள் தற்காலிகங்களே. பதிவுபெற்ற 900 ஒப்பந்ததாரர்களால் ‘சப்ளை’ செய்யப்படும் இவர்களில் பெரும்பாலோர் முறையான படிப்போ பயிற்சியோ அற்ற வடமாநில இளைஞர்கள். சட்டத்திற்குட்பட்ட கொத்தடிமைகளாக இறக்கிவிடப்பட்டுள்ள இவர்கள்தான் இன்றைக்கு  ஒசூரின் இயங்குச்சக்தி. நடைபாதை வியாபாரத்தில் இந்தியும் ஒரு பரிவர்த்தனை மொழியாக மாறியிருப்பதன் மூலம் இவர்களுக்கான ஒசூர் ஒன்று இங்கு உருவாகிவிட்டதை உணர முடிகிறது.

9. ஒசூரின் வளர்ச்சி?

‘இங்கு ஜூனிலிருந்து நவம்பர் வரையிலும் மழை. டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பனி. வருடத்தின் பெரும்பகுதி குளிர்காலம்தான். எங்கள் அலுவலகத்தின் அறைகளில் மின்சார சூடேற்றி பகலிலும் கனன்றுகொண்டிருக்கும். கோடை வெயில்கூட உறைக்காது வியர்க்காது’ என்பதெல்லாம் பழங்கதை. மழைமோடத்தின் குளிரில் நடுங்கவேண்டிய இந்த ஐப்பசியில் அதிகபட்ச வேகத்தில் சுழலும் மின்விசிறியின் கீழே அமர்ந்துதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதே இப்போதைய ஒசூர். 

ஊரை குளுமையில் ஆழ்த்திய ஏரிகளைத் தூர்த்தது யார்? ஆயிரம் அடிக்கு கீழேயும் நிலத்தடி நீர் ஏன் கிடைப்பதில்லை? தொல்லியல் சான்றுகள் நிறைந்த மலைகள் வரலாற்றுப் பிரக்ஞையற்று யாருக்காக பாளம்பாளமாக வெட்டப்படுகின்றன? குடும்ப உறவுகளுக்கிடையே வன்முறையும்  கொலையும் அதிகரித்துவருவதில் நிலத்தின் பங்குண்டா? நிலக்கொள்ளையர்கள் ஊரையே கட்டுப்படுத்தும் அதிகாரம் பொருந்தியவர்களாக மாறுவது எங்ஙனம்? அடுத்த பத்தாண்டுகளில் ஒசூர் எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்கிற அமைப்புகளோ ஆளுமைகளோ இல்லாமல் போனது ஏன்? ஒசூர் பகுதியை தமது வாழிடமாக தேர்ந்துள்ள வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலமுள்ள மக்களை ஒரு சமூகமாக ஒன்றிணைக்கும் சாத்தியமுண்டா? கற்பிதங்களின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் சாதிய மதவாத அமைப்புகளின் செல்வாக்கை தடுத்திடத்  தேவையான அணுகுமுறை என்ன?  என்கிற கேள்விகளை எழுப்பிக்கொள்ளவும் சக்தியற்று ஒசூர் திணறிக்கொண்டிருக்கிறது. உழைப்புச்சக்தியை விற்று கண்ணியமாக வாழ்வதற்கான வழிகள் அடைபட்டுவரும் ஒரு சமூகம் சந்திக்க வேண்டிய வீழ்ச்சியைத்தான் ஒசூரும் இப்போது சந்தித்துவருகிறது என்பது சமாதானமல்ல, உண்மை.


24.10.16



வியாழன், ஜூன் 9

அன்பைப் பிரதியெடுத்தனுப்பும் ஆண்ட்டோ - ஆதவன் தீட்சண்யா



புகைப்படம்: thamizhstudio.com
ஒசூரில் சம்பு, சிவகுமார், பழ.பாலசுந்தரம், பா.வெங்கடேசன் ஆகியோரது முன்னெடுப்பில் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி தீவிரமாக இயங்கி வந்த காலமது. காத்மண்டுவிலிருந்து இயங்கும் Himal Association அமைப்பின் Travelling Film South Asia- என்கிற தலைப்பிலான ஆவணப்பட விழாவை 2005 ஆம் ஆண்டு குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி சார்பில் ஒசூரில் நடத்தினோம். எப்படியோ தகவல் கேள்விப்பட்டு விழாவுக்கு வந்து அன்றைக்கு அறிமுகமானவர் தான் தோழர் ஆண்ட்டோ. 

பத்தாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, நேரிலோ போனிலோ எப்போதும் சினிமா சினிமா என்று சினிமாவை மையமிட்டதாகவே இருக்கும் அவரது உரையாடல். அவரது சேகரிப்பில் வேறெங்கும் கிட்டாத அரிதான படங்கள் ஆயிரக்கணக்கில். திரைப்படச் சங்கங்களுக்கும் திரைத்துறை ஆளுமைகளுக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கும் தனது சேகரத்திலிருந்து குறுவட்டுகளையும் அடர்வட்டுகளையும் அனுப்பிக்கொண்டே இருப்பார். கவனிக்கத்தக்க திரைப்படமோ ஆவணப்படமோ உலகத்தின் எந்த மொழியில் வெளியாகியிருந்தாலும் அதுகுறித்த முழுவிவரங்களையும் அறிந்துகொண்டு தரவிறக்கம் செய்து “குஞ்சு பொறித்து” தனது தோழமை வட்டத்தில் உள்ளவர்களுக்கு சொந்தச் செலவில் அனுப்பி பார்க்க வைப்பதில்  சோர்விலா ஆர்வமுடையவர்.  

புதிதாக படம் ஏதும் கிடைத்துவிட்டால் பொக்கிஷம் கிட்டினாற்போன்ற உற்சாகத்தோடு போனில் அழைப்பார். இன்றைக்கு காலையில் சென்னையிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது எண்ணிலிருந்து வந்திருந்த ஓர் அழைப்பை தவறவிட்டிருந்தேன். பிறகு நான் அழைத்தேன். தோழமை கசியும் அவரது குரல் இதோ இன்னும் ஓரிரு நொடிகளில் என் காதில் ஒலிக்கப்போகிறது, ஏதேனுமொரு புதிய படத்தைப் பார்த்த காணின்பத்தை பகிரப்போகிறார் என்று காத்திருந்தேன். அவருக்கு பதிலாக பேசிய அவரது மகள் சொன்னார் "அப்பா இன்று காலை இறந்துவிட்டார்" என்று. ஏதும் தவறான எண்ணுக்கு அழைத்து விட்டோமா என்று அழைப்பை துண்டித்துவிட்டு சற்றுநேரம் கழித்து மீண்டும் அழைத்தேன். தோழர் ஆண்ட்டோ இனி இல்லை என்கிற உண்மையை அவர்கள் உறுதிப்படுத்தியேவிட்டார்கள்.

ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் இருக்கிறேன் என்று பிரகடனம் செய்வதைவிடவும் அவர்களில் ஒருவராக கரைந்து வாழ்வதே நேர்மையானது. தோழர் ஆண்டனி மைக்கேல் என்கிற ஆண்ட்டோ  அவ்வாறே வாழ்ந்தார் என்பதற்கு அவரது இயக்கத்தில் வெளியான ஆவணப்படங்களே போதுமான சாட்சியங்களாய் இருக்கின்றன.  புதிரை வண்ணார் சமூகம் பற்றி “எச்சம் மிச்சம்”  என்கிற ஆவணப்படத்தை எடுத்தது போலவே இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய மலையகத்தமிழர் குறித்த படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்கிற அவரது முயற்சியை தடுத்து நிறுத்திவிட்டது மரணம். நின்று போன அந்த முயற்சியை நம்மில் யாரேனுமொருவர் நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என்று போலியாக சூளுரைப்பதற்கு கூசும் மனம் இம்மட்டில் எழுதுவதை நிறுத்திக் கொள்கிறது. 

தோழர். ஆண்ட்டோவின் நேர்காணலை வாசிக்க:  http://thamizhstudio.com/creators_28.php  

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...