புதன், மார்ச் 3

ஒசூரின் குடிநீரும் தோழர் ஜீவானந்தமும் - ஆதவன் தீட்சண்யா

 


ஏரியில் ஆளுயரத்திற்கு பொங்கும் நுரை, ரசாயனக் கழிவுகளால் தீப்பிடித்தெரியும் ஏரி என்றெல்லாம் அவ்வப்போது ஊடகங்களில் பரபரப்பாக காட்டப்படும் வரத்தூர் ஏரி பெங்களூரின் கழிவுநீர்க்குட்டை போலாகிவிட்டது. இந்த வரத்தூர் ஏரியின் உபரி நீரானது, ஒசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் வந்து கலந்து மாசடையச் செய்கிறது. 1990களில் ஒசூர் குடிநீர் தேவையை ஈடுகட்ட நகராட்சி நிர்வாகம் இந்த கெலவரப்பள்ளி அணையின்  தண்ணீரை 14 வடிமுறைகளால் சுத்திகரித்து நகருக்குள் விநியோகிக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் அத்தகைய சுத்திகரிப்புக்குப் பிறகும் அந்த நீர் சகிக்கமுடியாத நாற்றத்துடனும் வேறேதோ திரவம் போன்ற நிறத்திலும் ஒவ்வொரு வீட்டின் குழாயிலும் வந்து ஊற்றியது.

குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் ஒரு தோழரின் உதவியுடன் நான், போப்பு, விநாயகம், சி.முருகேசன் உள்ளிட்ட தோழர்கள் அந்த அணைக்கு நேரில் சென்று பார்வையிட்டோம். சுத்திகரிப்பின் படிநிலைகளைப் பார்த்துவிட்டு, சுத்திகரிப்பின் முடிவில் தேக்கிவைக்கப்பட்ட மிகப்பெரும் உயர்நிலைத் தொட்டியினையும் மேலேறிப் பார்த்துவிட்டு இந்தத் தண்ணீரையா குடிக்கிறோம் என்கிற குமட்டலோடும் உளைச்சலோடும் ஒசூர் திரும்பினோம். தமுஎகச, டி.ஒய்.எப்.ஐ, மத்திய மாநில பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆகியவற்றின் சார்பில் நகராட்சி ஆணையரைச் சந்தித்து ஒசூர் மக்களின் உடல்நலனைக் காக்கும் பொருட்டு அந்தத் தண்ணீரை குடிநீராக விநியோகிக்க வேண்டாம் என்று முறையிட்டோம். அந்தத் தண்ணீர் ஒசூரில் குடிநீராக விநியோகிக்கப்படவேயில்லை என்றும் தொழிற்பேட்டையின் இதர பயன்பாடுகளுக்காக மட்டுமே  தரப்படுவதாகவும் சொல்லிக் கொண்டிருந்த அந்த ஆணையர் இப்படி ஏதேனும் புகார் வந்தால் சமாளிப்பதற்காகவே சில தொழிற்சாலை நிர்வாகங்களிடமிருந்து “குடிக்கத்தக்க நீர்தான்” என்று நற்சான்று வாங்கி வைத்திருந்தார். (ஆனால் நற்சான்று தந்த இந்நிறுவனங்கள் அந்த நீரை தோட்டம் மற்றும் தொழில்சார்  தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தின, குடிப்பதற்கு அல்ல)

தமுஎகச நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைப்பதற்காக தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்களை தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருந்தபோது இந்தத் தண்ணீர் விசயத்தையும் தெரிவித்தேன். அவர் தந்த ஆலோசனைப்படிதான் நானும் மத்திய சுங்கவரித்துறை மணிமோகனும் பெங்களூரில் உள்ள ஆய்வகம் ஒன்றில் அந்த நீரினை பரிசோதனைக்கு அனுப்பி ஆய்வறிக்கையைப் பெற்றோம்.

அடுத்துவந்த ஞாயிற்றுக்கிழமை ஒசூர் ஆந்திர சமிதியில் கூட்டம். தோழர் ஜீவானந்தம் உலகளாவிய சுற்றுச்சூழல் சீர்கேடுகளை விவரித்துவிட்டு உள்ளூர் பிரச்னைக்கு வந்தார். கெலவரப்பள்ளியிலிருந்து ஒசூர் மக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்படும் நீர் எந்தளவிற்கு மாசடைந்துள்ளது, அதைக் குடிப்பதனால் உடல்நலனுக்கு ஏற்படக்கூடிய கேடுகள் என்னென்ன என்று ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி அவர் பேசிய போதுதான் எத்தகைய நஞ்சை நாங்கள் அன்றாடம் குடித்துவருகிறோம் என்பதை உணர்ந்தோம். “சுத்தமான குடிநீரை கோருவது நமது அடிப்படை உரிமை; அதை வழங்கவேண்டியது அரசின் பொறுப்பு. அந்தப் பொறுப்பினை நிறைவேற்றத் தவறிய நகராட்சி நிர்வாகத்தை எதிர்த்து ஒசூர் மக்கள் போராட வேண்டும். அதற்கு தமிழ்நாடு பசுமை இயக்கம் உறுதுணையாக இருக்கும்” என்று அவர் தந்த உத்வேகத்தில் இம்முறை நகராட்சி ஆணையரைச் சந்தித்து முறையிடுவதற்கு பதிலாக எச்சரித்தோம். அதன்பிறகே கெலவரப்பள்ளி அணையின் மாசடைந்த நீருக்குப் பதிலாக மாற்று நீராதாரத்திலிருந்து ஓரளவுக்கு மாசு குறைந்த குடிநீர் விநியோகம் ஒசூரில் தொடங்கியது என்கிற செய்தியை தோழர் ஜீவா காலமாகிவிட்ட இன்றைய தினத்தில் சொல்வது அவருக்கான அஞ்சலியாக இருக்கும்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொதுநலன் கருதி பிரசுரிக்கப்படாத கதை - ஆதவன் தீட்சண்யா

  முன்குறிப்பு 1: கதை என்றால் அதற்கொரு நாயகனோ நாயகியோ தேவை எனக் கருதுவீர்களேயானால் அப்பாத்திரங்களுக்கு நிறைபொருத்தம் தாங்களே. உங்களது பெயரைய...