தடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 20

இடதுசாரிகளின் முன்னேற்றம் - ஆதவன் தீட்சண்யா


மதவாதம் - மதவாததுக்கு எதிரான மனநிலை பெருகிவரும் இந்தச் சூழலில், இடதுசாரிகள் தீவிரமாக இயங்கியிருக்க வேண்டும்; வலுவானவர்களாக மாறியிருக்க வேண்டும். ஆனால், இரண்டிலும் நம்பிக்கை தென்படவில்லையே?


பதற்றமும் பகையுணர்ச்சியும் மிக்கதாக சமூகத்தை பிளவுபடுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதற்குரிய உதவிகளை சங்பரிவாரத்திற்கு -தனது வர்க்கநலனுக்காக- வழங்கிவரும் கார்ப்பரேட்டியம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததை தன் சொந்த வெற்றியாக பார்க்கிறது. அது, நாட்டின் வளங்களையும் பொதுச்சொத்துக்களையும் மக்களின் உழைப்புச்சக்தியையும் தங்குதடையின்றி சுரண்டிக் கொழுக்க பாதுகாப்பளிக்கும் அடியாள்படையாக சங்பரிவாரத்தையும் மத்திய அரசையும் பயன்படுத்துகிறது.

காவி பயங்கரவாதமும் கார்ப்பரேட் பயங்கரவாதமும் ஒன்றெனக்கூடிய இந்திய வகைப்பட்ட பாசிச அரசானது, குடிமக்களின் தனிப்பட்ட வாழ்வு, நாட்டின் மாண்புகள், சமூகம் தன்னை நிர்வகித்துக் கொள்வதற்கென வரலாற்றுப்போக்கிலும் அரசியல் சாசனப்படியும் உருவாக்கிக்கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் நேரடியாக தலையிட்டு கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. மாணவர்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எனச்  சமூகத்தின் வெவ்வேறு அடுக்கிலுள்ளவர்களும் தெருவுக்கு வருமளவுக்கு மக்களுக்கும் அரசுக்குமான முரண் முற்றிக்கொண்டிருக்கிறது. மக்களின் எந்தவொரு போராட்டமும் ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றது. உயிர்ப்பலி இல்லாத நாளே இல்லை. நேற்று பசுகுண்டர்களால் இருவர் கொல்லப்பட்டனர் என்றால், இதை எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையிலோ ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்களத்தில்  பதினோரு பேர் அரசால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் மக்கள் தம் போர்க்குணத்தால் நாட்டை கொந்தளிக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

நாடெங்கும் நாளுக்குநாள் பெருகிவரும் போராட்டங்களில் பலவும் இடதுசாரிகளால் தலைமை தாங்கப்படாதிருக்கலாம். ஆனால் ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராக உயிர்த்தியாகம் செய்தேனும் போராடவேண்டுமென அவர்கள் வளர்த்தெடுத்துவரும் கருத்தியலே அப்போராட்டங்களின் உள்ளுயிராக இயங்கிவருகிறது. ஆகவே, இடதுசாரிகளின் முன்னேற்றம், வலதுசாரிகளால் சிதைக்கப்படும் மக்கள் ஒற்றுமையை வர்க்கப்போராட்டங்களால் நேர்செய்வதற்கான செயல்பாட்டினாலேயே மதிப்பிடப்பட வேண்டுமேயல்லாது தேர்தல் முடிவுகளை மனமேற்கொண்டு அல்ல.

விகடன் தடம் / ஜூன் 2018


செவ்வாய், பிப்ரவரி 20

கண்ணிலி - ஆதவன் தீட்சண்யா



காலம்
என் கவிதையின் மீது
ஒருதுளி ரத்தத்தை
பொட்டெனச் சிந்தியது முதலில்
இதுவும் ஓர் அலங்காரமெனச் சிலிர்த்தபடி
ரத்தத்தின் மேலேயே 
நான் எழுதிக்கொண்டிருக்கையில் 
எங்கிருந்தாவது  பதைபதைக்க ஓடிவரும் அது
கவிதையின் நிறமே மாறிப்போகுமளவுக்கு
ரத்தத்தை ஊற்றிப்போகத் தொடங்கியது
உனக்கேது இவ்வளவு ரத்தம் என்றால்
பதிலிறுக்காது தலைதெறிக்க ஓடிவிடும் காலம்
ஒருநாள்
பூமியே பொத்தலாகிப் பெருகிய ரத்தத்தை 
என் கவிதைக்குள் திருப்பிவிட்டது
வாழ்ந்திருக்க வேண்டியவர்களை
அவர்களின் ரத்தத்திலிருந்தே
உயிர்த்தெழுப்பும் பரிதவிப்பற்று 
இழியத்தொடங்குகிறது என் கவிதை
அழிபாடுகளுக்குப் பின்னான 
அரசாங்கத்தின் அறிக்கையென.

நன்றி: விகடன் தடம், 2018 பிப்ரவரி 

சனி, ஜூன் 10

மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னமும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை – ஆதவன் தீட்சண்யா

நகரின் சந்தடிமிக்க சதுக்கம். அங்கு சேவல் சண்டை தொடங்கவிருப்பதாக அறிவிப்பு ஒலிக்கிறது. அந்த தென்னமெரிக்க நாட்டினர் சேவல் சண்டையை வெறித்தனமாக ரசிப்பவர்கள். பெருங்கூட்டம் திரள்கிறது. சண்டை தொடங்குகிறது. ஆரம்பத்தில் இரு அணிகளாக பிரிந்திருந்த பார்வையாளர்கள் ஆக்ரோஷமாகவும் சாதுர்யமாகவும் சண்டையிடும் சேவலின் ஆதரவாளர்களாகிவடுகிறார்கள். இந்தச் சேவலின் மூர்க்கமான தாக்குதலை எதிர்கொள்ளும் வலுவும் நுட்பமுமற்ற மற்றொரு சேவல் துவண்டு விழுகிறது. தோற்றுக் கிடக்கும் அந்தச் சேவலை தலைக்கு மேலே தூக்கிக் காட்டும் நடுவர், அதுவே வென்றதாக அறிவிக்கிறார்.

இது அநியாயம் என்கிற கண்டனக்குரலுடன் மக்கள் நடுவரை நோக்கிப் பாய்கிறார்கள். அப்போது நடுவர் கேட்கிறார்: ‘‘தோற்றுப்போன சேவலை வெற்றிபெற்றதாக அறிவித்ததற்கு இப்படி கொந்தளிக்கிறீர்களே, தேர்தலில் தோற்றுப்போன  ஆளுங்கட்சி வெற்றிபெற்றதாக அறிவித்துக்கொண்டு இன்னமும் ஆட்சியில் நீடிப்பதை ஏன் எதிர்க்க மறுக்கிறீர்கள்? இந்த மோசடிக்கு  தேர்தல் ஆணையமும், நீதித்துறையும் உடந்தையாய் இருப்பது சரியா?’’.

மக்களுக்கு அப்போதுதான் புரிகிறது, அந்தச் சேவல் சண்டை ரசிப்பதற்காக நடத்தப்படவில்லை என்பது. நடுவரின் கேள்விகள் அவர்களை உலுக்குகின்றன. பிறகுதான் தெரிகிறது, குறிப்பிட்ட அதேநேரத்தில் அன்றைக்கு இப்படியான சேவல் சண்டை நாடு முழுவதும் நடத்தப்பட்டிருப்பது. ஆளுங்கட்சியின் தடைகளை  உடைத்துக்கொண்டு மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்கவும் ஜனநாயகத்தை மீட்கவும் எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட உத்தி அது. வெகுமக்களிடையே பரவியுள்ள சேவல் சண்டையை தங்களது அரசியல் போராட்டத்தின் ஒருபகுதியாக மாற்றியதன் மூலம் மக்கள் எழுச்சியை அங்கு உருவாக்க முடிந்திருக்கிறது. ஒரு நாடகத்தின் வீச்செல்லைக்கும் இதை உதாரணமாகக் கொள்ளமுடியும். நாட்டார் வழக்காறுகள் குறித்த நூலொன்றில் படித்த இச்செய்தி நம்நாட்டில் நடப்பிலிருக்கும் மரபான போராட்ட வடிவங்கள் குறித்த விமர்சனமாகவும், மரபிலிருந்து எடுத்தாள்வது என்றால் யாருடைய - எந்த மரபை எடுத்தாள்வது என்பதற்கான விளக்கமாகவும்  இருக்கிறது.  

***
ஆதிக்கத்தை தக்கவைக்கவும் விரிவுபடுத்தவும் மீட்கவும் நடத்தப்படும் ரகளைகள் ஒருபோதும் போராட்டமாகாது. போராட்டம் என்பது, சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் உரிமை மறுப்பு / பறிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியவர்கள் மேற்கொள்ளும் எதிர் நடவடிக்கையாகும். இருப்பதிலிருந்து மேம்பட்ட சுயமரியாதையுள்ள வாழ்வுக்கான மனிதவிழைவே போராட்டத்தின் உள்ளுறை. நபர்களுக்கிடையிலான முரண்பாடு தொடங்கி நாட்டின் தலைமையுடனான முரண்பாடு வரையாக போராட்டத்திற்கான காரணங்கள் அமைகின்றன. அதாவது சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் உள்ள மனிதக்குழுக்களும் தத்தமது நியாயங்களுக்காக போராட வேண்டியிருக்கிறது. எனில், அவர்களது நியாயங்களை ஏற்றுக்கொண்டு பிரச்னைக்கு தீர்வு கண்டால்தான் மேற்கொண்டு சுமூகமாக இயங்கமுடியும் என்கிற நெருக்கடியை எதிராளிக்கு உருவாக்குகிற ஆற்றல் பொருந்திய வடிவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் போராட வேண்டியுள்ளது. ஆனால் நடப்பிலுள்ள போராட்ட வடிவங்கள் உண்மையில் அவ்வாறான ஆற்றல் பொருந்தியவையா?  

பொதுவாக, பிரச்னைகள் கண்டுணரப்படுகையில் தீர்வுக்கான வேண்டுகோள் எழுத்து மூலமாகவோ நேரடியாகவோ வைக்கப்படுகிறது. வேண்டுகோள் நிறைவேறாத  நிலையில் பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் (கோரிக்கைகளை முழங்குவது), தர்ணா (நாள்முழுக்க முழங்குவது- உரையாற்றுவது), பட்டினி, பேரணி, பொதுக்கூட்டம் போன்ற கவனஈர்ப்பு இயக்கங்கள் கைக்கொள்ளப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தம்மை வருத்திக்கொண்டு நடத்தும் இவ்வியக்கங்கள் குறைந்தபட்சம் மூன்று நோக்கங்களைக் கொண்டுள்ளன. 1.கோரிக்கைகளோடு தொடர்புடையோரை திரட்டிக்கொள்வது 2.கோரிக்கைகளோடு தொடர்பற்றோரிடமும் அவற்றின் நியாயத்தை உணர்த்தி ஆதரவைப் பெறுவது 3. எதிராளியின் மனசாட்சியையும் அறவுணர்ச்சியையும் தூண்டி தீர்வு நோக்கி நகர்த்துவது. மறியல், வேலை நிறுத்தம், கடையடைப்பு, முழு அடைப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்  போராட்ட வடிவங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது. ஆனால் அவ்வளவு எளிதில் பணியாத அதிகாரம்  சட்டத்திற்குட்பட்ட இந்த இயக்கங்களையும்கூட சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் நசுக்கி தனது பிடியை நீட்டிக்க முயற்சிக்கிறது. 

***

‘மதராசில்  உள்ளூர் குழப்பங்கள் ஏற்பட்டன. சாயக்காரர்கள் என்று அழைக்கப்படும் உள்நாட்டு முரட்டுத்துணிகளுக்குச் சாயம் போடுபவர்கள் மத்தியில் வரிகள் விஷயமாக ஒரு வேலைநிறுத்தம் ஏற்பட்டது. அவர்கள் அனைவருமே கம்பனியின் எல்லையைத் தாண்டி செயின்ட் தோமுக்கு சென்றுவிட்டனர்.  தங்களுடன் சேர மறுத்த கம்பனியின் எல்லா உள்ளூர் ஊழியர்களையும் கொலை செய்வதாக அச்சுறுத்தினர். நகரத்திற்கள் வரும் எல்லாப் பொருட்களையும் உணவுகளையும் வராது தடுத்தவிட்டனர். கவர்னரும் கவுன்சிலும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தனர். அவர்கள் நூறு போர்ச்சுகீசிய கருப்பர்களை சாயக்காரர்களைக் கண்காணிப்பதற்காகவும் மற்றவர்களை தவறான பாதையில் போய்விடாமல் தடுப்பதற்காகவும் நியமித்தனர். கலகக்காரர்களின் மனைவி மக்கள் கருப்பர் நகரத்திலுள்ள அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றி கோயிலுக்குள் விரட்டப்பட்டனர். கடைசியாக கலகக்காரர்கள் பத்து நாட்களுக்குள் சரணடையாவிட்டால் கம்பெனியின் எல்லைக்குள் இருக்கும் அவர்களது வீடுகள் சாமான்கள் சொத்துகள் எல்லாம் பறிமுதல் செய்யப்படும் என தண்டோரா  மூலம் அறிவிக்கப்பட்டது. அதற்கு எட்டுநாட்களுக்குப் பிறகு கலகத்தலைவர்கள் செயின்ட் தோமில் கைது செய்யப்பட்டு கம்பெனியின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டனர். உடனடியாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்...’’

‘பிரிட்டிஷ் இந்தியாவில் ஆரம்பகால ஆவணங்கள்’ என்ற தனது நூலில் 1683 நவம்பர் 12 ஆம் நாளில் ஜெ.டால்பாய்ஸ் வீலர் எழுதிய இக்குறிப்பு அன்றைய நிலையின் கொடிய சித்திரத்தை காட்டுகிறது. இன்றைக்கு உச்சபட்ச போராட்டம் எனப்படும் வேலைநிறுத்தம்தான் தொடக்கத்தில் முதற்கட்டப் போராட்டமாக - அதுவும் சென்னையில் நடந்திருக்கிறது என்பதற்கான சான்று இது. துறைமுகங்கள், பெருந்தோட்டங்கள், கனிமச்சுரங்கங்கள், ரயில்வே, சணல் ஆலைகள் போன்றவை பெருமளவில் தொடங்கப்பட்ட 1800களுக்குப் பிறகே  இந்தியாவில் வேலைநிறுத்தங்கள் நடந்ததாக சொல்லப்படுவதை இச்சான்று மறுக்கிறது. கொடும்பஞ்சக் காலத்தில் சென்னை ஐஸ்ஹவுஸில் நடந்த வேலைநிறுத்தமே முதலாவது என்றும், அது தலித்துகளால் நடத்தப்பட்டதால் இடதுசாரிகளால் பின்தள்ளப்பட்டதாகவும் திரித்து சிலர் போலி அனுதாபம் காட்டுவதற்கும் எதிரான சான்றும்கூட. மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட உழைப்பாளர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் உடைமைவர்க்கப் பார்வை அன்றைக்கே தொடங்கிவிட்டது என்பதையும் காட்டித் தருகிறது.

அமைப்புரீதியாக தொழிலாளர்கள் அணிதிரளாத காலத்தில், ஆவேசமுற்ற சிலர் காலனியவாதிகளைத் தாக்குவது, கொல்வது,  உடைமைகளை கொள்ளையடிப்பது, பங்களாக்களையும் தானியக்கிடங்குகளையும் தொழிற்கூடங்களையும் தீயிட்டுக் கொளுத்துவது போன்றவற்றில் தனியாகவும் கூட்டாகவும் ஈடுபட்டிருக்கிறார்கள். கிரிஸ்டினா வில்சன் எழுதிய பிட்டர் பெர்ரி (1957) நாவலில் (தமிழில்: கசந்த கோப்பி- சடகோபன்) இத்தகைய தொடக்கநிலைப் போராட்டக்கூறுகளைக் காணமுடியும். எலிபென்ட் வாக் (1954) என்ற  ஹாலிவுட் படத்தில்,  இயற்கைச் சமநிலையைக் குலைத்து இலங்கையில் உருவான பெருந்தோட்டங்களுக்கு எதிரான  யானைகளின் போராட்டமும், அங்கு  தியாகராஜ பாகவதரின் ‘பூமியில் மானுட ஜென்மமெடுத்தே’ என்ற  பாடலை இசைக்கும் கூலித்தொழிலாளர்களின் குமுறலும் ஒன்றிணைகின்றன.

இன்றைக்கு சேவைத்துறைகள் எனப்படும் அரசுத்துறைகள் காலனியர்களின் வணிகம் மற்றும் உற்பத்தித்துறையை நிர்வகிக்கவும் ஆளுகைப்பரப்பை விரிவுபடுத்தவும்  உருவாக்கப்பட்டவையே. ஆயினும் அங்கு மனிதத்தன்மையற்ற பணிநிலைமையே இருந்தது என்பதற்கு 1764ஆம் ஆண்டு முதலாவது அலுவலகத்துடன் தொடங்கிய அஞ்சல்துறையே உதாரணம். தொழிலாளிகள் கையேந்தும் பிச்சைக்காரர்கள் அல்ல என்கிற மகத்தான முழக்கத்தை பின்னாளில் எழுப்பிய பாபு தாரபாதா, 1904 ஆம் ஆண்டு கல்கத்தா தலைமை அஞ்சலக நிர்வாகத்திற்கு கொடுத்த மனு அங்கு ஊழியர்களுக்கு குடிதண்ணீர்கூட வைக்கப்படாததை தெரிவிக்கிறது.

***
காலனியாதிக்கச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக உழைப்பாளிகள் தமது பணிக்களங்களில் உருவாக்கிய போராட்ட வடிவங்களைத்தான் சுதந்திரத்திற்கான இயக்கங்கள் கைக்கொண்டன. நிலைமைக்குத் தக்கவாறு ஆயுதத்தாக்குதல் உள்ளிட்டவையும் சேர்ந்தே நாட்டின் சுதந்திரம் எட்டப்பட்டது. அன்னிய ஆட்சியை எதிர்த்து உருவான அதே போராட்ட வடிவங்கள் சுதந்திரமடைந்துவிட்ட காலகட்டத்திற்கும் பொருந்துமா என்பது மதிப்பார்ந்த கேள்வியே.

சுதந்திரத்தின் பேரால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை உள்வாங்கிக் கொண்ட புதிய போராட்ட வடிவங்கள் மக்களிடையே உருவாகவே இல்லை. காரணம் அரசியல் தலைமையும், காலனிய நலன்களுக்காக மக்கள்விரோதப் பார்வையுடன் பயிற்றுவிக்கப்பட்ட நீதி பரிபாலனம் நிர்வாகம் காவல் உள்ளிட்ட அரசு இயந்திரமுமே. வணிகர்கள், தொழில் முதலாளிகள், சொத்துடமையாளர்கள் வளர்ச்சிக்காக குடிமக்களை ஒடுக்கிய அந்நியராட்சியிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை இவை வெளிப்படுத்தத் தவறிய நிலையில் குடிமக்களும் அதே பழைய வடிவங்களிலேயே தமது போராட்டங்களைத் தொடர வேண்டியதாகிப் போனது.

அன்னியராட்சியில் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பேரணி போன்ற கவன ஈர்ப்பு வடிவங்களுக்குக்கூட அனுமதி மறுக்கப்படுவதால், அவற்றையே வீரியமான வடிவங்களாக கருதிக்கொள்ளும் நிலை உருவாக்கப்படுகிறது. மறுபுறமோ கடும் பொருளிழப்புகளை உருவாக்கும் வேலைநிறுத்தத்தை மாதக்கணக்கில் செய்தாலும் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தி சோர்வடையச் செய்யப்படுகிறது. விரக்தியுறும் மக்கள்  கழுதையிடம் மனு கொடுப்பது, நிர்வாணமாவது, சிறுநீர் குடிப்பது, தூக்கில் தொங்குவது, லட்சக்கணக்கானோர் கூடுவது, செல்போன் டவரில் ஏறுவது என்று தம்மைத்தாமே வருத்திக்கொள்ளும் மரபான மனநிலையை நூதனம் என்று வெளிப்படுத்தி வருகின்றனர்.

கார்ப்பரேட் நலன்களுக்காக நாட்டின் இயற்கை வளங்களும் மனிதவள ஆற்றலும் பொதுக்கட்டமைப்பும் திருப்பவிடப்படும் காலகட்டமிது. எல்லாவித சமூகநலப் பொறுப்புகளிலிருந்தும் முன்மாதிரி முதலாளி என்கிற நிலையிலிருந்தும் வெகுவேகமாக பின்வாங்கி வெளியேறும் அரசு, கார்ப்ரேட் நலன்களுக்கு உகந்த  சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் காவலாளிப் பாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொள்வதில் மும்முரம் காட்டுகிறது. கார்ப்ரேட்டுகளின் சுரண்டலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளூர் முதலாளிகள் உட்பட யாவரையும் போராடும் கட்டாயத்திற்கு தள்ளிவிடுகிறது.  வல்லாயுதங்களை ஏந்திய பயங்கரவாதியாய் மாறிவிட்ட அரசானது, மரபான - தம்மைத்தாமே வருத்திக் கொள்ளும் போராட்ட வடிவங்களைக் கைவிட்டு மக்கள் நேருக்கு நேர் தன்னோடு மோத வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

அரசோடு போராடிக்கொண்டிருப்பதற்காக மக்கள் பிறக்கவில்லை. கண்ணியமான  மனிதவாழ்வை எட்டுவதே அவர்களது விருப்பம். ஆனால் அரசோ குடிமக்களுக்கு தத்தமது உடலின் மீதுகூட முழுவுரிமை இல்லை என்கிறது. அவர்களை அடிமைகளாகவும் குற்றவாளிகளாகவும் எதிரிகளாகவும் பாவித்து கீழ்மைப்படுத்துகிறது. இத்தகைய அநீதிக்கெதிராகவும் மனித மாண்புகளுக்காகவும் போராடத் துணியும் அறவுணர்வின் தேவை குறித்த பரப்புரை இயக்கமே இக்காலத்திற்குரிய போராட்ட வடிவமாக இருக்கக்கூடும். இந்தப் பரப்புரை மேடையிலிருந்து தெருமுனையிலிருந்து பாதுகாப்பான அரங்குகளிலிருந்து விடுக்கும் அறைகூவலாக அல்லாமல் குடிமக்கள் ஒவ்வொருவரது மனதிலும் ஊடுருவி நடத்தப்படுவதாக இருக்கவேண்டும். ஏனெனில் மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னமும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை.

நன்றி: விகடன் தடம், ஜூன் 2017


வியாழன், ஆகஸ்ட் 4

டாக்டரை கலெக்டராக்கும் ரசவாதி அல்லது கதைத்திருடன் - ஆதவன் தீட்சண்யா


புதுவிசை இதழில் வெளியிடுமாறு சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.லட்சுமணபெருமாள் "தனது" (ஆமாம், தனது) கதையொன்றை அனுப்பியிருந்தார். துப்புரவுத் தொழிலாளியான தலித் ஒருவர் (வேறு யார்?) படித்து மருத்துவராகிவிடுவார். அவர் தலித்தல்லாத பெண்ணொருத்தியை திருமணம் செய்துகொள்வார். தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய தாயை உடன் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று அவரை ஊரிலிருந்து அழைத்து வந்துவிடுவார் மருத்துவர். அவரது மனைவிக்கு இதில் ஒப்புதலில்லை. தனது குழந்தைகள் ஒரு துப்புரவுத் தொழிலாளியான பாட்டியிடம் நெருங்குவது அவளுக்கு அசூயையாகப்படுகிறது. போதாதற்கு, அந்தக் கிழவியும் சும்மா அடக்கஒடுக்கமாக இருக்காமல் தனது மகனின் பகுமானத்திற்கு அவமானம் தேடித்தரும்படியாகவே நடந்து கொள்கிறார். அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கவனிப்பாரற்று கிடக்கும் நோய்வாய்ப்பட்ட ஒரு முதியவரைக் கண்டு தாளாமல், அவரை குளிப்பாட்டி சுத்தம் செய்து அந்த  இடத்தையும் துப்புரவாக்கிவிடுகிறாள். இது மற்றவர்களின் கேலிகிண்டலுக்குரியதாகிறது. ஒரு கட்டத்தில், நானும் பிள்ளைகளும் இந்த வீட்டில் இருக்கவேண்டுமானால், உங்கம்மாவை வெளியேற்று என்று புருசனிடம் மல்லுக்கு நிற்கிறாள் மனைவி. வேறுவழியின்றி, நேர்ச்சைக்குப் போகவேண்டும் என்று நீ கூறிக்கொண்டிருக்கும் கோவிலுக்குப் போய வரலாம் வா என்று அம்மாவை காரில் கூட்டிப்போகும் மருத்துவர் கண்காணாத இடமொன்றில் அவளை இறக்கிவிட்டு விட்டு இருளில் மறைந்து வீடு திரும்பிவிடுவார்.

சொல்லொணா அவமானங்களுக்கிடையே வளர்த்து ஆளாக்கிய தன் மகனை பிறர் முன்னால் கூனிக்குறுகச் செய்யும்  விதமாக ஒரு தாய் செய்வாளா, அப்படி ஆளாக்கிய தாயை போக்கடிக்க மகன் துணிவானா என்கிற சென்டிமென்ட் கேள்விகள் ஒருபுறமிருக்கட்டும். ஒரு புது இடத்தில் தன்னை மறைத்துக்கொள்வதிலேயே பெரிதும் முனைப்பு கொண்டியங்கும் உளவியல் நெருக்கடிக்குள் தலித்துகள் தள்ளப்பட்டிருப்பதை இக்கதை கவனம் கொள்ளவில்லை. அதனாலேயே ஒரு மருத்துவனின் தாய் என்கிற என்கிற நாசுக்கு நிலையைக் காப்பாற்றிக்கொள்ள தெரியாமல் தனக்குள் இருக்கிற துப்புரவுத்தொழிலாளியை அவ்வப்போது வெளியிட்டபடி இருக்கிறாள். முதியவர் மீதான அவளது மனிதாபிமான நடவடிக்கை துப்புரவுத் தொழிலாளியின் இயல்பான தொழில் மற்றும் சாதிப்புத்தியாக புரிந்துகொள்ளப்படும் கெடுவாய்ப்பு கதைக்குள் இருக்கிறது. எந்த இடத்திற்கு / நிலைக்குப் போனாலும் தங்களது சாதிப்புத்தியை காட்டிவிடுவார்கள் என்கிற பொதுப்புத்தியே கதைக்குள் இயங்குகிறது. தலித்துகள் படித்து வளர்ந்துவிட்டால் பெற்ற தாயைக்கூட அனாதையாக்கிவிடுவார்கள் என்கிற தொனியும் இருக்கிறது- எனவே உங்கள் கதையை மீண்டும் ஒருமுறை நீங்களே வாசித்துப் பாருங்கள். ஏதும் திருத்தியெழுத வேண்டும் எனத் தோன்றினால் திருத்தி அனுப்புங்கள் -  என்கிற குறிப்பொன்றை லட்சுமண பெருமாளுடன் பகிர்ந்து கொண்டோம். பிறகு தொடர்புகொண்டு கேட்டபோது கொஞ்சம் அவகாசம் தேவை என்றார். சரி அனுப்பும்போது பார்த்துக்கொள்ளலாமென விட்டுவிட்டோம், மறந்தும் போனது. ( பிற்பாடு இக்கதை ‘புறத்தாக்கம்’ என்ற பெயரில் யுகமாயினி முதல் இதழில் வெளியானது. திருத்தி எழுதினாரா அப்படியே வெளியிட்டாரா என்று தெரியவில்லை.)

இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழின் ஒரே ஒரு உளறுவாயன் நூறுநாற்காலிகள் என்றொரு கதையை எழுதியிருப்பதாகவும், தமிழில் தலித் இலக்கியமே அதிலிருந்துதான் முளைப்பு விட்டிருப்பதாகவும் அதுக்குள்ளேயே வளர்ந்து வானோங்கி நிற்பதாகவும், இனி யாரும் தலித் இலக்கியம் என்று எதையும் எழுதி கிழிக்கத் தேவையில்லை என்றும் ஒரு பேச்சு காதில் விழுந்தது. அடடே, தவிட்டுப் பானைக்குள்ளிருந்து தானியம் எப்படி வந்திருக்க முடியும் என்கிற ஆச்சர்யத்தோடு தேடிப் பிடித்து அந்த அதியற்புத குறுநெடு நுண்விரிகதையை வாசித்தேன். ஆஹா, இந்தக் கதையை நாம் ஏற்கனவே எங்கோ வாசித்திருக்கிறோமே என்று பொறி தட்டியது. பிறகுதான் பிடிபட்டது, இது லட்சுமணபெருமாள் எழுதிய கதையென்பது. ஆமாம் கதை அவருடையதுதான். லட்சுமணபெருமாளின் கதையில் வரும் அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லாரும் நூறு நாற்காலிகளிலும் அப்படியப்படியே இருக்க டாக்டர் மட்டும் கலெக்டராகிவிட்டிருந்தார்.  


திருடித் தின்னும் மாங்காய்க்கு மட்டுமல்ல, திருடி எழுதும் கதைக்கும் கூட ருசி கொஞ்சம் அதிகம் போல, அறம் முறம்னு ஒரே அதகளமாகிவிட்டது. எச்சிலை திருடித் தின்றவன் விட்ட ஏப்பத்திலும் இன்னொன்றிலும் இலக்கியத்தின் மெய்யான வாசனையை முகர்ந்தறியும் வல்லமை பெற்ற உளறுவாயனின் வாசகர்கள் அந்தக் கதையை ஆஹா ஒஹோன்னு புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். லட்சுமண பெருமாள் கதையில் டாக்டராக முடக்கிப் போடப்பட்ட தலித்தை, எப்படியாவது கலெக்டராக முன்னேற்றிவிடவேண்டும் என்கிற அக்கறையில்தான் அந்தக் கதை திருடப்பட்டது என்றொரு விளக்கத்தை உளறுவாயனோ உளறுவாயனின் ஆதரவாளர்களோ சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழிசை குறித்த இன்னொருவரது கட்டுரையைத் திருடி சொல்புதிதில் வெளியிட்டுக் கொண்டதற்கான பஞ்சாயத்தே இன்னமும் தீராமலிருக்கிறது. 

(விகடன் தடம் இதழ் 3ல் என்மீது உளறுவாயன் கக்கிய வன்மத்திற்கு எதிர்வினையாக இதை எழுதியிருக்கிறேனோ என்று சிலர் கேட்கக்கூடும். இது எதிர்வினை அல்ல, முதல் வினை. நூறு நாற்காலிகள் கதையைப் படித்ததிலிருந்து இதை  சொல்லி வருகிறேன். விநாயக முருகனின் வலம் நாவல் குறித்த நிகழ்விலும் கூறினேன். தனது திருட்டு அம்பலப்பட்டுப் போன ஆத்திரத்தில் இருந்த உளறுவாயன்தான் என் மீதான எதிர்வினைக்கு தடம் நேர்காணலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.)

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...