சனி, ஜூன் 10

மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னமும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை – ஆதவன் தீட்சண்யா

நகரின் சந்தடிமிக்க சதுக்கம். அங்கு சேவல் சண்டை தொடங்கவிருப்பதாக அறிவிப்பு ஒலிக்கிறது. அந்த தென்னமெரிக்க நாட்டினர் சேவல் சண்டையை வெறித்தனமாக ரசிப்பவர்கள். பெருங்கூட்டம் திரள்கிறது. சண்டை தொடங்குகிறது. ஆரம்பத்தில் இரு அணிகளாக பிரிந்திருந்த பார்வையாளர்கள் ஆக்ரோஷமாகவும் சாதுர்யமாகவும் சண்டையிடும் சேவலின் ஆதரவாளர்களாகிவடுகிறார்கள். இந்தச் சேவலின் மூர்க்கமான தாக்குதலை எதிர்கொள்ளும் வலுவும் நுட்பமுமற்ற மற்றொரு சேவல் துவண்டு விழுகிறது. தோற்றுக் கிடக்கும் அந்தச் சேவலை தலைக்கு மேலே தூக்கிக் காட்டும் நடுவர், அதுவே வென்றதாக அறிவிக்கிறார்.

இது அநியாயம் என்கிற கண்டனக்குரலுடன் மக்கள் நடுவரை நோக்கிப் பாய்கிறார்கள். அப்போது நடுவர் கேட்கிறார்: ‘‘தோற்றுப்போன சேவலை வெற்றிபெற்றதாக அறிவித்ததற்கு இப்படி கொந்தளிக்கிறீர்களே, தேர்தலில் தோற்றுப்போன  ஆளுங்கட்சி வெற்றிபெற்றதாக அறிவித்துக்கொண்டு இன்னமும் ஆட்சியில் நீடிப்பதை ஏன் எதிர்க்க மறுக்கிறீர்கள்? இந்த மோசடிக்கு  தேர்தல் ஆணையமும், நீதித்துறையும் உடந்தையாய் இருப்பது சரியா?’’.

மக்களுக்கு அப்போதுதான் புரிகிறது, அந்தச் சேவல் சண்டை ரசிப்பதற்காக நடத்தப்படவில்லை என்பது. நடுவரின் கேள்விகள் அவர்களை உலுக்குகின்றன. பிறகுதான் தெரிகிறது, குறிப்பிட்ட அதேநேரத்தில் அன்றைக்கு இப்படியான சேவல் சண்டை நாடு முழுவதும் நடத்தப்பட்டிருப்பது. ஆளுங்கட்சியின் தடைகளை  உடைத்துக்கொண்டு மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்கவும் ஜனநாயகத்தை மீட்கவும் எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட உத்தி அது. வெகுமக்களிடையே பரவியுள்ள சேவல் சண்டையை தங்களது அரசியல் போராட்டத்தின் ஒருபகுதியாக மாற்றியதன் மூலம் மக்கள் எழுச்சியை அங்கு உருவாக்க முடிந்திருக்கிறது. ஒரு நாடகத்தின் வீச்செல்லைக்கும் இதை உதாரணமாகக் கொள்ளமுடியும். நாட்டார் வழக்காறுகள் குறித்த நூலொன்றில் படித்த இச்செய்தி நம்நாட்டில் நடப்பிலிருக்கும் மரபான போராட்ட வடிவங்கள் குறித்த விமர்சனமாகவும், மரபிலிருந்து எடுத்தாள்வது என்றால் யாருடைய - எந்த மரபை எடுத்தாள்வது என்பதற்கான விளக்கமாகவும்  இருக்கிறது.  

***
ஆதிக்கத்தை தக்கவைக்கவும் விரிவுபடுத்தவும் மீட்கவும் நடத்தப்படும் ரகளைகள் ஒருபோதும் போராட்டமாகாது. போராட்டம் என்பது, சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத்தளங்களில் உரிமை மறுப்பு / பறிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியவர்கள் மேற்கொள்ளும் எதிர் நடவடிக்கையாகும். இருப்பதிலிருந்து மேம்பட்ட சுயமரியாதையுள்ள வாழ்வுக்கான மனிதவிழைவே போராட்டத்தின் உள்ளுறை. நபர்களுக்கிடையிலான முரண்பாடு தொடங்கி நாட்டின் தலைமையுடனான முரண்பாடு வரையாக போராட்டத்திற்கான காரணங்கள் அமைகின்றன. அதாவது சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் உள்ள மனிதக்குழுக்களும் தத்தமது நியாயங்களுக்காக போராட வேண்டியிருக்கிறது. எனில், அவர்களது நியாயங்களை ஏற்றுக்கொண்டு பிரச்னைக்கு தீர்வு கண்டால்தான் மேற்கொண்டு சுமூகமாக இயங்கமுடியும் என்கிற நெருக்கடியை எதிராளிக்கு உருவாக்குகிற ஆற்றல் பொருந்திய வடிவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் போராட வேண்டியுள்ளது. ஆனால் நடப்பிலுள்ள போராட்ட வடிவங்கள் உண்மையில் அவ்வாறான ஆற்றல் பொருந்தியவையா?  

பொதுவாக, பிரச்னைகள் கண்டுணரப்படுகையில் தீர்வுக்கான வேண்டுகோள் எழுத்து மூலமாகவோ நேரடியாகவோ வைக்கப்படுகிறது. வேண்டுகோள் நிறைவேறாத  நிலையில் பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் (கோரிக்கைகளை முழங்குவது), தர்ணா (நாள்முழுக்க முழங்குவது- உரையாற்றுவது), பட்டினி, பேரணி, பொதுக்கூட்டம் போன்ற கவனஈர்ப்பு இயக்கங்கள் கைக்கொள்ளப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தம்மை வருத்திக்கொண்டு நடத்தும் இவ்வியக்கங்கள் குறைந்தபட்சம் மூன்று நோக்கங்களைக் கொண்டுள்ளன. 1.கோரிக்கைகளோடு தொடர்புடையோரை திரட்டிக்கொள்வது 2.கோரிக்கைகளோடு தொடர்பற்றோரிடமும் அவற்றின் நியாயத்தை உணர்த்தி ஆதரவைப் பெறுவது 3. எதிராளியின் மனசாட்சியையும் அறவுணர்ச்சியையும் தூண்டி தீர்வு நோக்கி நகர்த்துவது. மறியல், வேலை நிறுத்தம், கடையடைப்பு, முழு அடைப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்  போராட்ட வடிவங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது. ஆனால் அவ்வளவு எளிதில் பணியாத அதிகாரம்  சட்டத்திற்குட்பட்ட இந்த இயக்கங்களையும்கூட சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் நசுக்கி தனது பிடியை நீட்டிக்க முயற்சிக்கிறது. 

***

மதராசில்  உள்ளூர் குழப்பங்கள் ஏற்பட்டன. சாயக்காரர்கள் என்று அழைக்கப்படும் உள்நாட்டு முரட்டுத்துணிகளுக்குச் சாயம் போடுபவர்கள் மத்தியில் வரிகள் விஷயமாக ஒரு வேலைநிறுத்தம் ஏற்பட்டது. அவர்கள் அனைவருமே கம்பனியின் எல்லையைத் தாண்டி செயின்ட் தோமுக்கு சென்றுவிட்டனர்.  தங்களுடன் சேர மறுத்த கம்பனியின் எல்லா உள்ளூர் ஊழியர்களையும் கொலை செய்வதாக அச்சுறுத்தினர். நகரத்திற்கள் வரும் எல்லாப் பொருட்களையும் உணவுகளையும் வராது தடுத்தவிட்டனர். கவர்னரும் கவுன்சிலும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தனர். அவர்கள் நூறு போர்ச்சுகீசிய கருப்பர்களை சாயக்காரர்களைக் கண்காணிப்பதற்காகவும் மற்றவர்களை தவறான பாதையில் போய்விடாமல் தடுப்பதற்காகவும் நியமித்தனர். கலகக்காரர்களின் மனைவி மக்கள் கருப்பர் நகரத்திலுள்ள அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றி கோயிலுக்குள் விரட்டப்பட்டனர். கடைசியாக கலகக்காரர்கள் பத்து நாட்களுக்குள் சரணடையாவிட்டால் கம்பெனியின் எல்லைக்குள் இருக்கும் அவர்களது வீடுகள் சாமான்கள் சொத்துகள் எல்லாம் பறிமுதல் செய்யப்படும் என தண்டோரா  மூலம் அறிவிக்கப்பட்டது. அதற்கு எட்டுநாட்களுக்குப் பிறகு கலகத்தலைவர்கள் செயின்ட் தோமில் கைது செய்யப்பட்டு கம்பெனியின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டனர். உடனடியாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்...’’

பிரிட்டிஷ் இந்தியாவில் ஆரம்பகால ஆவணங்கள்என்ற தனது நூலில் 1683 நவம்பர் 12 ஆம் நாளில் ஜெ.டால்பாய்ஸ் வீலர் எழுதிய இக்குறிப்பு அன்றைய நிலையின் கொடிய சித்திரத்தை காட்டுகிறது. இன்றைக்கு உச்சபட்ச போராட்டம் எனப்படும் வேலைநிறுத்தம்தான் தொடக்கத்தில் முதற்கட்டப் போராட்டமாக - அதுவும் சென்னையில் நடந்திருக்கிறது என்பதற்கான சான்று இது. துறைமுகங்கள், பெருந்தோட்டங்கள், கனிமச்சுரங்கங்கள், ரயில்வே, சணல் ஆலைகள் போன்றவை பெருமளவில் தொடங்கப்பட்ட 1800களுக்குப் பிறகே  இந்தியாவில் வேலைநிறுத்தங்கள் நடந்ததாக சொல்லப்படுவதை இச்சான்று மறுக்கிறது. கொடும்பஞ்சக் காலத்தில் சென்னை ஐஸ்ஹவுஸில் நடந்த வேலைநிறுத்தமே முதலாவது என்றும், அது தலித்துகளால் நடத்தப்பட்டதால் இடதுசாரிகளால் பின்தள்ளப்பட்டதாகவும் திரித்து சிலர் போலி அனுதாபம் காட்டுவதற்கும் எதிரான சான்றும்கூட. மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட உழைப்பாளர்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் உடைமைவர்க்கப் பார்வை அன்றைக்கே தொடங்கிவிட்டது என்பதையும் காட்டித் தருகிறது.

அமைப்புரீதியாக தொழிலாளர்கள் அணிதிரளாத காலத்தில், ஆவேசமுற்ற சிலர் காலனியவாதிகளைத் தாக்குவது, கொல்வது,  உடைமைகளை கொள்ளையடிப்பது, பங்களாக்களையும் தானியக்கிடங்குகளையும் தொழிற்கூடங்களையும் தீயிட்டுக் கொளுத்துவது போன்றவற்றில் தனியாகவும் கூட்டாகவும் ஈடுபட்டிருக்கிறார்கள். கிரிஸ்டினா வில்சன் எழுதிய பிட்டர் பெர்ரி (1957) நாவலில் (தமிழில்: கசந்த கோப்பி- சடகோபன்) இத்தகைய தொடக்கநிலைப் போராட்டக்கூறுகளைக் காணமுடியும். எலிபென்ட் வாக் (1954) என்ற  ஹாலிவுட் படத்தில்,  இயற்கைச் சமநிலையைக் குலைத்து இலங்கையில் உருவான பெருந்தோட்டங்களுக்கு எதிரான  யானைகளின் போராட்டமும், அங்கு  தியாகராஜ பாகவதரின் ‘பூமியில் மானுட ஜென்மமெடுத்தே’ என்ற  பாடலை இசைக்கும் கூலித்தொழிலாளர்களின் குமுறலும் ஒன்றிணைகின்றன.

இன்றைக்கு சேவைத்துறைகள் எனப்படும் அரசுத்துறைகள் காலனியர்களின் வணிகம் மற்றும் உற்பத்தித்துறையை நிர்வகிக்கவும் ஆளுகைப்பரப்பை விரிவுபடுத்தவும்  உருவாக்கப்பட்டவையே. ஆயினும் அங்கு மனிதத்தன்மையற்ற பணிநிலைமையே இருந்தது என்பதற்கு 1764ஆம் ஆண்டு முதலாவது அலுவலகத்துடன் தொடங்கிய அஞ்சல்துறையே உதாரணம். தொழிலாளிகள் கையேந்தும் பிச்சைக்காரர்கள் அல்ல என்கிற மகத்தான முழக்கத்தை பின்னாளில் எழுப்பிய பாபு தாரபாதா, 1904 ஆம் ஆண்டு கல்கத்தா தலைமை அஞ்சலக நிர்வாகத்திற்கு கொடுத்த மனு அங்கு ஊழியர்களுக்கு குடிதண்ணீர்கூட வைக்கப்படாததை தெரிவிக்கிறது.

***
காலனியாதிக்கச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக உழைப்பாளிகள் தமது பணிக்களங்களில் உருவாக்கிய போராட்ட வடிவங்களைத்தான் சுதந்திரத்திற்கான இயக்கங்கள் கைக்கொண்டன. நிலைமைக்குத் தக்கவாறு ஆயுதத்தாக்குதல் உள்ளிட்டவையும் சேர்ந்தே நாட்டின் சுதந்திரம் எட்டப்பட்டது. அன்னிய ஆட்சியை எதிர்த்து உருவான அதே போராட்ட வடிவங்கள் சுதந்திரமடைந்துவிட்ட காலகட்டத்திற்கும் பொருந்துமா என்பது மதிப்பார்ந்த கேள்வியே.

சுதந்திரத்தின் பேரால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை உள்வாங்கிக் கொண்ட புதிய போராட்ட வடிவங்கள் மக்களிடையே உருவாகவே இல்லை. காரணம் அரசியல் தலைமையும், காலனிய நலன்களுக்காக மக்கள்விரோதப் பார்வையுடன் பயிற்றுவிக்கப்பட்ட நீதி பரிபாலனம் நிர்வாகம் காவல் உள்ளிட்ட அரசு இயந்திரமுமே. வணிகர்கள், தொழில் முதலாளிகள், சொத்துடமையாளர்கள் வளர்ச்சிக்காக குடிமக்களை ஒடுக்கிய அந்நியராட்சியிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை இவை வெளிப்படுத்தத் தவறிய நிலையில் குடிமக்களும் அதே பழைய வடிவங்களிலேயே தமது போராட்டங்களைத் தொடர வேண்டியதாகிப் போனது.

அன்னியராட்சியில் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பேரணி போன்ற கவன ஈர்ப்பு வடிவங்களுக்குக்கூட அனுமதி மறுக்கப்படுவதால், அவற்றையே வீரியமான வடிவங்களாக கருதிக்கொள்ளும் நிலை உருவாக்கப்படுகிறது. மறுபுறமோ கடும் பொருளிழப்புகளை உருவாக்கும் வேலைநிறுத்தத்தை மாதக்கணக்கில் செய்தாலும் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தி சோர்வடையச் செய்யப்படுகிறது. விரக்தியுறும் மக்கள்  கழுதையிடம் மனு கொடுப்பது, நிர்வாணமாவது, சிறுநீர் குடிப்பது, தூக்கில் தொங்குவது, லட்சக்கணக்கானோர் கூடுவது, செல்போன் டவரில் ஏறுவது என்று தம்மைத்தாமே வருத்திக்கொள்ளும் மரபான மனநிலையை நூதனம் என்று வெளிப்படுத்தி வருகின்றனர்.

கார்ப்பரேட் நலன்களுக்காக நாட்டின் இயற்கை வளங்களும் மனிதவள ஆற்றலும் பொதுக்கட்டமைப்பும் திருப்பவிடப்படும் காலகட்டமிது. எல்லாவித சமூகநலப் பொறுப்புகளிலிருந்தும் முன்மாதிரி முதலாளி என்கிற நிலையிலிருந்தும் வெகுவேகமாக பின்வாங்கி வெளியேறும் அரசு, கார்ப்ரேட் நலன்களுக்கு உகந்த  சட்ட ஒழுங்கைப் பராமரிக்கும் காவலாளிப் பாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொள்வதில் மும்முரம் காட்டுகிறது. கார்ப்ரேட்டுகளின் சுரண்டலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளூர் முதலாளிகள் உட்பட யாவரையும் போராடும் கட்டாயத்திற்கு தள்ளிவிடுகிறது.  வல்லாயுதங்களை ஏந்திய பயங்கரவாதியாய் மாறிவிட்ட அரசானது, மரபான - தம்மைத்தாமே வருத்திக் கொள்ளும் போராட்ட வடிவங்களைக் கைவிட்டு மக்கள் நேருக்கு நேர் தன்னோடு மோத வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

அரசோடு போராடிக்கொண்டிருப்பதற்காக மக்கள் பிறக்கவில்லை. கண்ணியமான  மனிதவாழ்வை எட்டுவதே அவர்களது விருப்பம். ஆனால் அரசோ குடிமக்களுக்கு தத்தமது உடலின் மீதுகூட முழுவுரிமை இல்லை என்கிறது. அவர்களை அடிமைகளாகவும் குற்றவாளிகளாகவும் எதிரிகளாகவும் பாவித்து கீழ்மைப்படுத்துகிறது. இத்தகைய அநீதிக்கெதிராகவும் மனித மாண்புகளுக்காகவும் போராடத் துணியும் அறவுணர்வின் தேவை குறித்த பரப்புரை இயக்கமே இக்காலத்திற்குரிய போராட்ட வடிவமாக இருக்கக்கூடும். இந்தப் பரப்புரை மேடையிலிருந்து தெருமுனையிலிருந்து பாதுகாப்பான அரங்குகளிலிருந்து விடுக்கும் அறைகூவலாக அல்லாமல் குடிமக்கள் ஒவ்வொருவரது மனதிலும் ஊடுருவி நடத்தப்படுவதாக இருக்கவேண்டும். ஏனெனில் மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னமும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை.

நன்றி: விகடன் தடம், ஜூன் 2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...